Mar 31, 2014

வாயை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா?

பத்து நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டேன். நானாக எடுத்துக் கொண்ட விடுமுறைதான். மனம் நம்மையுமறியாமல் ஏதாவது ஒரு பக்கமாகச் சாயும் போது எல்லாவற்றையும் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைப்பதுதான் நல்லது. ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. சொறிந்து பழகியவன் கை சும்மா இருக்குமா? இங்கு ஃபேஸ்புக் இருக்கிறது, இணையத்தளங்கள் இருக்கின்றன. இதில் எல்லாவற்றிலும் இருந்தும் நம்மால் துண்டித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை துளி வந்தாலும் அலைபேசி கையில் இருக்கிறது. எப்படியாவது இந்த உலகம் நம்மைத் தூண்டிவிடுகிறது. இந்த உலகம் நம்மை ஏதாவதொரு விதத்தில் இழுத்துக் கொண்டேதான் இருக்கும். யாராவது எதையாவது சொல்லிக் கொண்டேதான்-அவர்கள் செய்கிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம்- ஆனால் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். நடுங்காமல், ஸ்திரத்தன்மை குலையாமல் பற்களைக் கடித்துக் கொண்டு தாண்டிப் போவதற்கு இன்னமும் பக்குவம் வேண்டும் போலிருக்கிறது.

எதிர்த்து வாதாடலாம்தான், உரையாடலாம்தான். ஆனால் எந்த விஷயம் இங்கே நூறு சதவீதம் வெளிப்படையாக இருக்கிறது? எந்தச் செய்தி பற்றி முழுமையாகத் தெரியும்? எல்லாமே அரைகுறைதான். ஊடகங்கள் வளர்த்த அறிவு இது. ஒரே செய்தி பற்றி பல விதங்களில் பேசும் நூற்றுக்கணக்கான ஊடகங்கள் பெருகிக் கிடக்கின்றன. நீங்கள் நம்பும் மனிதனை நான் மறுக்கலாம்; நான் மறுப்பதை இன்னொருவர் நம்பலாம். இப்படி உண்மை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமலே அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப விவாதங்களை நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறோம். இதில் பிரச்சினையே ‘நான் நம்புவதுதான் சரி’ என்று எல்லோருமே நிரூபிக்க முயல்கிறோம்.

எதை வைத்துக் கொண்டு உரையாடுவது?

நேற்று இரவு எங்கள் வீதியில் ஒரு தகராறு. எதிரில் இருக்கும் காலி இடத்தில் வீடு கட்டிக் கொண்டிருப்பவர் சாலையைத் தோண்டும் போது சிக்கிக் கொண்டார்- அதுவும் லோக்கல் கவுன்சிலரிடம். பெங்களூரில் மின்கம்பத்திலிருந்து வீட்டுக்கு ‘லைன்’ எடுத்தாலும், சாக்கடைக் குழாய் பதிப்பதென்றாலும் மண்ணுக்கு கீழாகத்தான் கொண்டு செல்ல வேண்டும். இப்படி மண்ணுக்குள் பதிப்பதென்றால் சாலையைத் தோண்ட வேண்டும் அல்லவா? அதற்கு மாநகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும். அனுமதி வாங்குவதொன்றும் பெரிய காரியமில்லை. ஆனால் வீட்டை வந்து பார்த்துவிட்டு வீட்டு மதிப்புக்கு ஏற்ப சதவீதக் கணக்கில் லஞ்சம் கேட்பார்கள். முப்பது அல்லது நாற்பதாயிரம் ரூபாய் வரைக்கும் சர்வசாதாரணாக செலவு ஆகும்.

இப்படி தண்டச் செலவு செய்வதற்கு யாருக்குத்தான் மனம் வரும்? பெரும்பாலானவர்கள் இரவோடு இரவாக தோண்டி மூடி விடுகிறார்கள். பிறகு யாராவது மாநகராட்சி ஆட்கள் வந்து விசாரித்தால் ஐந்தோ பத்தோ கொடுத்தால் பிஸ்கட்டைக் கவ்வுவது போல கவ்விக் கொண்டு ஓடிவிடுவார்கள். நாங்கள் வீடு கட்டிக் கொண்டிருந்த போது நல்லவேளையாக மண் சாலையாக இருந்தது. இதே போல இரவிலேயே காரியத்தை முடித்துவிட்டோம். அடுத்த சில நாட்களுக்கு ‘நான் கவுன்சிலரின் ஆள்’ என்று வந்து ஒருவர் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தார். புதுமனை புகுவிழாவின் போது கூட விடவில்லை. அவரைச் சமாளித்தது தனிக்கதை.

நேற்று மாட்டிக் கொண்டவருக்கு துரதிர்ஷ்டம். சமீபத்தில் எங்கள் தெருவின் மண் சாலை மீது தார் போட்டுவிட்டார்கள். அதைத்தான் தோண்டிக் கொண்டிருந்தார்கள். வீடு கட்டுபவர் வேலைக்குச் செல்கிறார். அவரது மாமனார்தான் கட்டட வேலையை மேற்பார்வையிடுகிறார். மாமனார் ஓய்வு பெற்ற மனிதர். முழு நரை விழுந்த மூத்தவர். மிக மென்மையாகப் பேசுவார். நேற்றும் அவர்தான் நின்று கொண்டிருந்தார். தமிழ் ஆட்கள்தான் சாலையை வெட்டிக் கொண்டிருந்தார்கள். 

இரவு பன்னிரெண்டைத் தொட்டிருந்தது. கவுன்சிலரின் எக்ஸ்.யூ.வி கார் வந்து நின்றது. ஆட்கள் தடபுடலாக இறங்கினார்கள். எங்கள் ஏரியாவில் பெண் கவுன்சிலர்தான். தெலுங்குக்காரப் பெண். “உனக்கெல்லாம் அறிவு இல்லையா?” என்றுதான் கன்னடத்தில் ஆரம்பித்தார். பெரியவர் கன்னடத்தில் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. பெரியவரும் தெலுங்குக்காரர்தான். ஏதோ ஒரு நாயுடு. அடுத்த கணத்திலிருந்து இருந்து இரண்டு பேரும் தெலுங்கிலேயே பேசிக் கொண்டார்கள். எனக்குத் தெலுங்கு நன்றாக புரியும். கன்னடம்தான் அரைகுறை.

“சோறுதானே தின்னீங்க?” என்று கவுன்சிலர் கேட்ட போது சில வீட்டுச் ஜன்னல்கள் திறந்தன. எந்தக் கதவும் திறக்கவில்லை- ஜன்னல்கள் மட்டும்தான். கவுன்சிலரின் கைத்தடி கூலியாட்களின் கடப்பாரை, மண்வெட்டியை பறித்து காரின் பின்புறமாக போட்டுக் கொண்டான். அந்தக் கவுன்சிலர் பெண்மணி கீழேயே இறங்கவில்லை. என்னதான் பதவியில் இருந்தாலும் அந்த மனிதரின் வயதுக்காவது கீழே இறங்கிப் பேசியிருக்கலாம். ம்ஹூம்.

பெரியவர், மேஸ்திரி ஆகியோரை தனது மொபைலில் படம் எடுத்துக் கொண்டார். பிறகு ‘மஞ்சு, இக்கட ரா’ என்று போனில் அழைத்தார். அடுத்த ஐந்து நிமிடங்களில் மஞ்சு வந்தான். மஞ்சுநாத். எங்களிடம் ஒருவன் வந்து அலம்பல் செய்தான் அல்லவா? அதே மஞ்சு. 

‘நேனு செப்புத்தானு க்கா’ என்றான். 

“மஞ்சு சொல்லியிருக்கான்ல. என்கிட்ட வந்து ஏன் அனுமதி வாங்கவில்லை” என்றார் கவுன்சிலர். பெரியவர் எதுவும் பேசவில்லை. பிறகு போலீஸூக்கும் போன் செய்தார். ரோந்து ஜீப் வந்தது. இறங்கியவர்கள் கவுன்சிலருக்கு பவ்யமாக சல்யூட் வைத்தார்கள்.

“இதுதான் நீங்க ட்யூட்டி பார்க்கிறதா? பாருங்க நடு ராத்திரியில் சாலையைத் தோண்டுகிறார்கள்” என்று சொல்லிவிட்டு “இவர்கள் மீது கேஸ் எழுதிக்குங்க” என்று கன்னடத்தில் உத்தரவிட்டார். அப்பொழுதும் அவர் வண்டியிலிருந்து கீழே இறங்கவில்லை. போலீஸ்காரர்கள் விவரங்களைக் குறித்துக் கொண்டிருந்தார்கள். 

“ரேப்பு யுகாதி காதா? பந்து” என்று சொல்லிவிட்டு செவ்வாய்க்கிழமை தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது நான் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றேன். அம்மா, அப்பா வீட்டிலிருந்தால் அனுமதிக்கமாட்டார்கள். ‘நமக்கெதுக்கு வெட்டி வம்பு’ என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். கவுன்சிலரிடம் சிரித்தபடிதான் சொன்னேன். 

“இங்கே எல்லோருமே இப்படித்தாம்மா செய்யுறாங்க”. பெரியவர் செய்தது சரி என்று பேசுவது என் நோக்கம் இல்லை. ஆனால் அவரை மட்டும் இப்படி வதைக்க வேண்டியதில்லை என்பதைச் சொல்லத்தான் விரும்பினேன்.

மஞ்சும் சிரித்தபடியே “இவரும் இப்படித்தாம்மா செஞ்சாரு” என்றான். போலீஸ்காரர்கள் சிரித்தார்கள். இவர்கள் பன்மொழி வித்தகர்கள். என்னிடம் தமிழிலேயே பேசினார்கள். 

“உங்க ப்ளான் எடுத்துட்டு வாங்க” என்றார் கவுன்சிலர். சிக்கிக் கொண்டேன். சமாளித்தாக வேண்டும். அப்பா ஊரில் இல்லை. அவருக்குத்தான் தெரியும் என்றேன்.

கைத்தடி ஒருவன் என்னையும் படம் எடுத்துக் கொண்டான். செவ்வாய்க்கிழமை நானும் அவரைப் பார்கக்ச் செல்லவேண்டுமாம். எதிர்வீட்டுக்காரருக்கு ஒரு லட்சம் ஓட்டை விழும் என்றால் எனக்கு எப்படியும் சிறு புள்ளியாவது விழும் என்று தோன்றியது.

அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். “வாயை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா?” என்று கேட்டுவிட்டு உடனடியாக பெங்களுக்கு கிளம்பிவிட்டார். செவ்வாய்க்கிழமை அவரே கவுன்சிலரைப் பார்க்கச் செல்கிறாராம். எப்படியும் திட்டுவார். வாங்கிக் கட்டிக் கொள்ளும் பலத்தை சொக்கநாதசாமிதான் கொடுக்க வேண்டும்.