Mar 19, 2014

இதையெல்லாம் சொல்ல ஒரு இது வேண்டும்..

தமிழுக்காக நான் உருவாக்கிய சொற்களை கையாளாமல் இன்று எவருமே தமிழில் ஒரு நல்ல கட்டுரையை எழுதிவிட முடியாது என்று ஜெயமோகன் சொல்லியிருக்கிறாராம். இதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இனி வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை ஆசான் எழுதுவதைப் படிக்கவே செலவிட வேண்டும் போலிருக்கிறது. எப்போ படித்து? எப்போ எழுதி...ம்ம்ம்

மூச்சிரைக்க ஜெமோ பக்கத்திற்கு ஓடிப்பார்த்தால் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். அக்னிக்குண்டம் என்பதற்கு தமிழ்ச் சொல்லாக எரிகுளம் என்று கண்டுபிடித்ததை விளக்கியிருக்கிறார். விஷ்ணுபுரத்திலும், வெண்முரசிலும் இப்படி ஏகப்பட்ட சொற்களை உருவாக்கியிருக்கிறாராம். நல்ல விஷயம்தான். செய்யட்டும். யார் செய்கிறார்கள் இதையெல்லாம்? நம் அதிர்ஷ்டம்- இவர் வந்ததால் தமிழ் பிழைத்துக் கொண்டது. இல்லையென்றால் பாரதியின் பாடையோடு சேர்ந்து தமிழும் போயிருக்கும். இந்நேரம் நாமெல்லாம் ஆங்கிலத்திலேயே தமிழை எழுதிக் கொண்டு இருந்திருப்போம்.  

நல்லவேளையாக இழுத்துப் பிடித்து எரிகுளம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் மனுஷன். இனி நாமெல்லாம் குதிப்பதுதான் பாக்கி. ஆசானின் இந்த வரியைப் படித்துவிட்டு ஜெமோவுக்கு ‘தலைக்கனம்’ ஜாஸ்தி என்று எழுதத்தான் கை நீண்டது. எதற்கு வம்பு? இப்படியான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் போய்விடுவதுதான் நல்லது. இல்லையென்றால் போகிற போக்கில் ‘கருத்துலக விவாதத்துக்கான அறிவுத்தகுதி இல்லாதவர்கள், வெறுமே அரைகுறைவாசிப்பு மற்றும் செவிப்பழக்கம் கொண்டு செய்யும் வெட்டிவேலை அது’ என்று புற மண்டையிலேயே ஓங்கி அடிப்பார். என் அரைகுறைத் தமிழும் குமட்டிக் கொண்டு வெளியே வந்துவிடும். பிறகு சிகிழ்ச்சைக்கு ஓட வேண்டும்- எழுத்துப்பிழையெல்லாம் இல்லை- சிகிழ்ச்சையேதான்.

தேவையா எனக்கு? அதனால் தலைக்கனம் என்பதற்கு பதிலாக ஜெமோவுக்கு கெத்து ஜாஸ்தி என்று மாற்றி வாசித்துக் கொள்ளவும்.

அரைகுறைத் தமிழ் என்று சொன்னேன் அல்லவா? அதை வைத்துக் கொண்டு மகனுக்குத் தமிழ் எழுத்துரு சொல்லித் தரத் தொடங்கியிருக்கிறேன். கர்நாடகத்தில் இருப்பதால் நாம் தமிழ் சொல்லிக் கொடுத்தால்தான் உண்டும். இருபது வருடங்களுக்கு முன்பாக இங்கு ஏகப்பட்ட தமிழ்ப் பள்ளிகளும், தமிழ்க் கல்லூரிகளும் இருந்திருக்கின்றன. அரசியல் அழுத்தங்களாலும், பெற்றோர்களின் வரவேற்பின்மையினாலும் இப்பொழுது ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கின்றனவாம். அதுவும் எங்கள் வீட்டிலிருந்து வெகுதூரங்களில். அதனால் வாயில் நுழையாத பெயருடைய பள்ளியில் வரிசையில் நின்று இடம் வாங்கியிருக்கிறோம். 

‘குருவியோட மூக்குக்கு இங்கிலீஷ்ல என்னங்கப்பா?’ என்றான். இப்படி திடீரென்று கேட்டால்? பிதுங்கப் பிதுங்க பார்த்தேன். ‘Beak' என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான். அவன் பதில் தெரியாமல்தான் கேட்கிறான் என்று நினைத்தேன். என் ஆங்கில அறிவை குப்பையில் கொட்டி வேடிக்கை பார்ப்பதற்காகக் கேட்டிருக்கிறான். அரை டிக்கெட். அவனுக்கு வெண்பா எழுதத் தெரிய வேண்டியதில்லை- ஆனால் எழுத்துக் கூட்டி புத்தகங்கள் வாசித்துவிடுமளவுக்கு கற்றுத் தந்துவிட்டால் போதும் என நினைக்கிறேன். 

ஆசானின் ‘எரிகுளம்’ என்ற சொல் நேற்றிரவிலிருந்து உள்ளுக்குள் பினாத்திக் கொண்டிருந்தது.

யோசித்துப் பார்த்தால் எழுத்துத் தமிழைவிடவும் நம் பேச்சு வழக்கு முக்கியமானது என்று தோன்றுகிறது. முன்னோர்களிடமிருந்து நாம் தெரிந்து வைத்திருக்கும் ஐம்பது சதவீதச் சொற்களையாவது அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட்டால் போதும். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் வட்டார வழக்கையும், பழஞ்சொற்களையும் துளித்துளியாக அழித்துக் கொண்டிருக்கிறோம். முதன் முதலாக கல்லூரி விடுதிக்குச் சென்ற போது ‘வட்டல் எடுத்துட்டு வர்றேன்’ என்றேன். உடனிருந்தவர்கள் சிரித்தார்கள். அதிலிருந்து என்னையுமறியாமல் ‘ப்ளேட் எடுத்துக்கிறேன்’. வட்டல் என்ற சொல்லே என்னிலிருந்து பிரிந்துவிட்டது. இது ஒரு சாம்பிள். உடனடியாக இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் இப்படி நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். இப்படி ஒவ்வொரு இடத்திலும் அமத்தாவிடமிருந்தும் அப்பத்தாவிடமிருந்தும் வாங்கிய சொற்களை புதைத்துக் கொண்டிருக்கிறோம். அப்பாரும், அப்பிச்சியும் சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலுமா பேசிக் கொண்டிருந்தார்கள்? அக்னிக்குண்டம் என்பதை அவர்கள்தானே பூக்குழி என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அதை மறந்ததுவிட்டோம்.  எரிகுளம் என்று கேள்விப்படும் போது புளகாங்கிதம் அடைகிறோம்.

பெரிய காரியம் ஒன்றுமில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தோண்டிப்பார்த்தாலும் செத்துப் போன அல்லது செத்துக் கொண்டிருக்கும் ஓராயிரம் சொற்களையாவது பிடித்துவிட முடியும். அத்தனை இல்லையென்றாலும் ஆளுக்கு சராசரியாக நூறு சொற்களையாவது எடுத்துவிடலாம். பிறகு எதற்கு ஜெமோ உருவாக்கும் தமிழ்ச் சொற்களுக்காக தமிழ்க் கட்டுரைகள் தட்டு ஏந்தி நிற்க வேண்டும்?

இதை ஜெமோவை விமர்சிப்பதற்காக எழுதவில்லை. அவர் மீது அதிகப்படியான மரியாதை உண்டு. ஆனால் அவரது சொற்களை வைத்துதான் நல்ல கட்டுரையை எழுத வேண்டும் என்று சொல்வதெல்லாம் டூ மச். நல்ல அனுபவம் நிறைந்த எழுத்தாளன் தனது அமத்தா, அப்பிச்சிமார்களின் வார்த்தைகளிலிருந்தே அட்டகாசமான கட்டுரைகளை எழுதிவிட முடியும். சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிற எந்த எழுத்தாளனையும் விட நம் முன்னோர்கள்  ஒரு படி உயர்ந்த மொழியறிவு கொண்டவர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. உங்களுக்கு இருக்கிறதா?