Mar 18, 2014

சின்னச் சின்ன கடவுள்கள்

கடவுள் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவன் யாரையாவது இறைதூதர்களாக அவ்வப்போது அனுப்பிக் கொண்டேயிருப்பான். அப்படி அனுப்பட்ட சில இறைதூதர்கள் அவ்வப்போது நம் கண்களில் பட்டுவிடுவார்கள். பட்டுவிட்டால் நாம் புண்ணியவான்கள். ஏதாவதொருவிதத்தில் அவர்களுக்கு உதவி நாமும் புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.

அப்படித்தான் இந்த வாழை அமைப்பினரும். மினியேச்சரைஸ்டு கடவுளர்கள். 

வாழை அமைப்பினர் அடுத்த ஆண்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வரும் ஆண்டிற்கான வழிகாட்டிகளைத்(Mentor) தேர்ந்தெடுப்பதற்கான கலந்தாய்வு ஏப்ரல் மாதத்தில் பெங்களூரில் நடக்கிறது. சென்னையிலும் இதே போல நடக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு வழிகாட்டிக்கும் ஒரு மாணவரை ஒதுக்குவார்கள். அடுத்த ஓராண்டுக்கு அந்த மாணவருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் என்றால் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிப்பவர்களோ அல்லது நகர்புற மாணவர்களோ இல்லை. தர்மபுரி மாவட்டத்தின் ஒரு மூலையில் கிடக்கும் ஏரியூர் என்ற கிராமத்துப் பள்ளியின் மாணவர்கள். அந்தப் பள்ளியிலும் கூட கண்ணில்படும் அத்தனை மாணவர்களையும் தேர்ந்தெடுப்பதில்லை. வசதி என்றால் என்னவென்றே தெரியாத குடும்பத்திலிருந்து வந்தவர்கள், அம்மாவும் அப்பாவும் ஆந்திராவிலோ அல்லது கர்நாடகத்திலோ குவாரிகளில் வேலை செய்து கொண்டிருக்க இங்கே தனித்து விடப்பட்டிருக்கும் குழந்தைகள், நசிந்து கிடக்கும் குடும்பங்கள், குடிகாரத் தந்தையினால் சீரழிந்து போன பிள்ளைகள், இன்றோ நாளையோ குடும்பச்சூழலால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள் என்று விளிம்பிலும் விளிம்பில் இருக்கும் பிள்ளைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த தேர்வு முறையைப் பார்ப்பதற்கு நீங்கள் வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வெயில் காந்தும் தருமபுரி மாவட்டத்தின் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து அந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாகச் சென்று தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தத் தடவை அவர்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கச் செல்லும் போது வாழை அமைப்பினரோடு சேர்ந்து சுற்றலாம் என்றிருக்கிறேன். 

இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் அந்த மாணவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு வழிகாட்டப்போகும் நல்ல இதயங்களைத் தேர்ந்தெடுக்கத்தான் இந்த கலந்தாய்வை நடத்துகிறார்கள். 

இந்த வழிகாட்டிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஏரியூரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் கூடுவார்கள். அங்கு அந்த மாணவர்களும் வந்திருப்பார்கள். சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் அந்த மாணவர்களோடு சேர்ந்து விளையாடி, படித்து, கற்பித்து என்று அவர்களை படிப்பைத் தாண்டியும் ஒரு மனிதனாக உருமாற்றுகிறார்கள்.

ஆகச் சிறந்த செயல் இது. 

எந்த விளம்பரமும் இல்லாமல் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் மீது வெளிச்சம் விழுவதைக் கூட விரும்பாத இவர்களைப் போன்றவர்களால்தான் இன்னமும் அவ்வப்போது மழை தூறுகிறது என நினைத்துக் கொள்வேன்.

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சிறுவர்களோடு நேரடியாக பேசுவது போக இந்தச் சிறுவர்களோடு அவ்வப்போது தொலைபேசி வழியாகவும் வழிகாட்டிகள் உரையாடுகிறார்கள். தொலைபேச வசதியில்லாதவர்களிடம் அஞ்சல் வழியில் தொடர்பில் இருக்கிறார்கள். அந்தப் பிஞ்சுக்கரங்கள் தங்களின் வழிகாட்டிகளுக்கு ‘அன்புள்ள அண்ணன்’ என்றோ அல்லது ‘அன்புள்ள அக்கா’ என்றோ தங்கள் வாழ்வின் முதல் கடிதத்தை எழுதுகிறார்கள்.

ஒரு நிகழ்ச்சியில் இந்த அமைப்பினரோடு இருந்திருக்கிறேன். நெகிழச் செய்துவிடுகிறார்கள். இவர்கள் செய்து கொண்டிருப்பது அத்தனை புனிதமான பணி. இன்றோ நாளையோ படிப்பை நிறுத்திவிட்டு குவாரி வேலைக்குச் சென்றுவிடக் கூடியவனை கல்லூரி வரைக்கும் இழுத்துவிடுகிறார்கள். பள்ளியை முழுகிவிட்டு வீட்டை கவனிக்கச் செல்லவிருக்கும் பெண்ணைத் தாங்கிப்பிடித்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிவிடுகிறார்கள்.

எழுத்தறிவிப்பவன் இறைவன் அல்லவா? இந்த அமைப்பினர் ஒவ்வொருவருமே இறைவன்தான். இதைச் வெற்றுப்புகழ்ச்சிக்காக எழுதவில்லை. ஒரு முறை இவர்களை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும். நம்பத் தொடங்குவீர்கள்.

இருக்கட்டும்.


இந்த ஆண்டிற்கான வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கும் கலந்தாய்வு பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நடக்கிறது. எப்படியும் ஐம்பது அல்லது அறுபது வழிகாட்டிகள் வாழைக்குத் தேவைப்படுவார்கள் என நினைக்கிறேன். வழிகாட்டியாகிறோமோ இல்லையா என்பது இரண்டாம்பட்சம். அவர்களுக்கு ஊக்கமளிப்பதற்காகவது தமிழ்ச்சங்கத்திற்குச் சென்றுவரலாம். ஏப்ரல் ஆறாம் நாள் நான் செல்லவிருக்கிறேன். நீங்களும் கலந்து கொள்ளுங்கள். பிற பெங்களூர் நண்பர்களிடம் இந்தத் தகவலைச் சேர்க்க முடியுமானால் ஒரு துளியூண்டு உதவியை இந்த தன்னலமற்ற அமைப்பினருக்கு நாம் செய்வது போல. முதல் பத்தியில் சொன்னது போல ‘புண்ணியம் தேடிக் கொள்ளுதல்’.