Mar 17, 2014

யாரிடம் சொல்வது?

சில நிறுவனங்களில் வருடத்திற்கு ஒரு முறை ‘குடும்ப நாள்’ கொண்டாடுகிறார்கள். முன்பெல்லாம் நிறைய நிறுவனங்களில் இது உண்டு. இப்பொழுதுதான் Cost Cutting என்று கத்தியை போட்டுவிட்டார்கள். இப்படியெல்லாம் நிகழ்ச்சி நடத்தினால் தலைக்கு ஆயிரம் ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். குடும்பவிழா என்று ஆளாளுக்கு இரண்டு மூன்று பேரை அழைத்து வந்தால் நிறுவனத்தின் பாக்கெட்டில் ஒரு பொத்தல் விழுந்துவிடும்.

பொத்தல் என்பதெல்லாம் அதிகபட்சமான வார்த்தை. எந்த பெரிய நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது, பொத்தல் விழுவதற்கு? சென்ற வருடத்தில் ஆயிரம் கோடி ரூபாய் இலாபம் அடைந்திருந்தால் இந்த வருடம் தொள்ளாயிரத்து ஐம்பது கோடியாக அந்த லாபம் குறைந்திருக்கும். ஆனால் அதற்கே வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வார்கள். இந்த வருடம் சம்பளம் உயர்வு இல்லை என்பார்கள்; இலவச வாகன வசதி இல்லை என்பார்கள்; அதெல்லாம் தொலையட்டும் என்று விட்டுவிடலாம்- டாய்லெட்டில் இனிமேல் Tissue Paper இல்லை என்று அறிவிப்பார்கள். நல்ல குடி நாச்சி மாதிரி ‘ஐம்பது பாக்கெட் Tissue Paper' ஐ மிச்சம் செய்தால் ஒரு மரத்தை காப்பாற்றிவிடலாம் என்று அறிவிப்பு பலகை வேறு வைப்பார்கள். இயற்கையைக் காப்போம் என்று நாமும் கையை பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டு ஈரத்தை துடைத்துக் கொண்டு வெளியே வர வேண்டும். 

சுற்றுச்சூழல், இயற்கையைப் பேணல் என்பதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால் இதையெல்லாம் உருப்படியாகச் செய்கிறார்களா என்பதுதான் பிரச்சினை. எங்கள் பழைய நிறுவனம் இருந்த இடத்தைச் சுற்றியிருந்த இடம் நாறிக் கிடக்கும். எருமைகள் மேய்ந்தும் பன்றிகள் தூங்கியும் எப்பொழுது கச்சடாதான். எந்தப் புண்ணியவானுக்குத் தோன்றியதோ- இதையெல்லாம் சுத்தம் செய்துவிடலாம் என்று முடிவெடுத்தார்கள். நமக்கு அனுபவமும் திறமையும் இருக்காது அல்லவா? அதனால் இதற்கென்றே சில என்.ஜி.ஓக்கள் இருக்கின்றன. அவர்களிடம் நமது திட்டத்தைச் சொன்னால் வந்து பார்த்துவிட்டு ஒரு கணக்கு கொடுப்பார்கள்- பட்ஜெட். பெரும்பாலான என்.ஜி.ஓக்கள் இதையெல்லாம் வைத்துத்தான் பிழைப்பை ஓட்டுகின்றன என்பதால் சர்வசாதாரணமாகவே பல்லாயிரக்கணக்கில்தான் அந்த பட்ஜெட் இருக்கும். முப்பதாயிரம் ரூபாய் ஆகும் என்று சொல்லியிருந்தார்கள்.

இதெல்லாம்தான் ப்ரொபஷனலிஸம். அவர்கள் சொல்லும் தொகையை நிறுவனத்திலும் ஏற்றுக் கொண்டார்கள். 

வீதியைக் கூட்டுவதற்கு எதற்கு திறமையும் அனுபவமும்? கூலியாட்கள் நான்கு பேரை துணைக்கு அழைத்துக் கொண்டு வேலையைச் செய்தால் ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் கூலி என்றாலும் இரண்டாயிரம் ரூபாயில் சோலியை முடித்துவிடலாம். மண்வெட்டி, சட்டியெல்லாம் வாடகைக்கு எடுத்தால் அதற்கு ஒரு இரண்டாயிரம். மொத்தமாக நான்கு ஆயிரத்தில் முடித்திருக்கலாம். ம்ஹூம். என்.ஜி.ஓக்களை அழைத்து வந்து அவர்களுக்கு ஒரு பெருந்தொகையைக் கொடுத்து, அரக்கப்பரக்க சுத்தம் செய்து, சுற்றுச்சுவரில் பெய்ண்ட் அடித்து முடிக்கும் போது பக்கத்திலிருந்த சேரியிலிருந்து ஒரு மூதாட்டி ‘இதையெல்லாம் எதுக்குய்யா சுத்தம் பண்ணுறீங்க? பொழுது ஆவறதுக்குள்ள எருமையும், பன்றியும் சாணம் போடும்’ என்றார். 

பாட்டி சொன்னதைக் கேட்டு ஜெர்க் ஆனவர்கள், அந்த அபசகுணமான நிகழ்வுகள் நடப்பதற்குள் ஃபோட்டோ எடுத்து ‘என்னையும் பாரு என் வேலையையும் பாரு’ என்று நோட்டீஸ் போர்டில் போட்டுவிட்டார்கள். இதற்கு அவர்கள் சூட்டிய பெயர் ‘கம்யூனிட்டி சர்வீஸ்’. ஆனால் பாட்டி சொன்னது அச்சு பிசகாமல் அப்படியேதான் நடந்தது. அடுத்த நாள் அதே எருமை மாடுகள்; அதே பன்றிகள்.

மூன்று மணி நேரத்தில் முப்பதாயிரத்தை என்.ஜி.ஓவின் கணக்குக்கு மாற்றியதுதான் கண்டபலன்.

கம்யூனிட்டி சர்வீஸ் என்று கார்பொரேட் நிறுவனங்கள் செய்வதெல்லாம் நல்லதுதான். ஆனால் அதையெல்லாம் ‘பெயருக்கு’ச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அவலம். 

சில நாட்களுக்கு முன்பு ஒரு கடையில் துணி எடுத்த போது ஒரு விண்ணப்பத்தில் பிறந்த நாளைக் குறிக்கச் சொன்னார்கள். அந்த நாளில் ஒரு மரக்கன்றை என் சார்பாக நடுவார்களாம். ‘எங்கே நடுவீர்கள்?’ என்றால் ‘எங்கள் நிறுவனம் தத்தெடுத்திருக்கும் கிராமத்தில்’ என்றார். ‘எந்த மாநிலத்தில் அந்த கிராமம் இருக்கிறது?’ என்று இயல்பாகத்தான் கேட்டேன். அவருக்கு பதில் தெரியவில்லை. யாரிடமோ விசாரித்தார். அவருக்கும் பதில் தெரியவில்லை. சிரித்துவிட்டு வந்துவிட்டேன். அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று சொல்லவில்லை. முழுமையாகச் செய்வார்கள் என்று நம்பிக்கையில்லை.  இதெல்லாம் வாடிக்கையாளர்களை கவரும் strategy. எங்களுக்கும் சமூக அக்கறை இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் கார்ப்ரேட்களின் எத்தனிப்பு. அவ்வளவுதான்.

சரி விடுங்கள். 

முதலாளிகளுக்கு மட்டும் எந்தக் காலத்திலும் லாபமே குறையக் கூடாது. இன்றைக்கு ஆயிரம் ரூபாய் இலாபம் என்றால் நாளைக்கு ஆயிரத்து நூறு ரூபாய் லாபம் வர வேண்டும் என்பார்கள். பத்து ரூபாய் லாபத்தில் குறைந்தாலும் - கவனியுங்கள், நட்டமில்லை; லாபத்தில் குறைவு- எங்கெல்லாம் வங்கு தெரிகிறதோ அங்கெல்லாம் கையை விடுவார்கள். அப்படித்தான் இப்பொழுது பல நிறுவனங்களில் 'குடும்ப நாள்' என்பதையெல்லாம் தலையைச் சுற்றி பொடக்காலியில் வீசிவிட்டார்கள்.

என் மனைவி பணிபுரியும் நிறுவனம் கொஞ்சம் வசதியானது. இயற்கை ஆர்வலர்களும் போலிருக்கிறது. ஒரு சமயம் வீட்டிற்கு மரக்கன்றுகள் கொடுத்திருந்தார்கள். சந்தோஷமாக இருந்தது. அவர்கள் இந்த வருடமும் ‘குடும்ப நாள்’ விழாவுக்காக அழைத்திருந்தார்கள். எப்பவும் அக்கரை பச்சையல்லவா? அதுவும் அந்த நிறுவனத்தில் நிறைய பெண்கள் வேறு வேலை செய்கிறார்கள். பச்சையை பக்கெட் பக்கெட்டாக ஊற்றியிருப்பார்கள் என்பதால் கமுக்கமாக கிளம்பிவிட்டேன். நினைத்த மாதிரியே விழா அருமையாக இருந்தது. 

பெரிய ஹோட்டல் ஒன்றின் புல்வெளியில்தான் ஏற்பாடு. அமர்களப்படுத்தியிருந்தார்கள். மிகப்பெரிய மேடை, அட்டகாசமான இசையமைப்பு, அத்தனை பேருக்கும் ஐந்து நட்சத்திர சாப்பாடு என்று எல்லாமே தூள். ஆனால் எல்லாமே நன்றாக இருந்தால் வேலைக்கு திருஷ்டி ஆகிவிடும் அல்லவா? 

அதனால் நிகழ்ச்சி முடியும் தருணத்தில் வாணவேடிக்கை காட்டினார்கள். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள். கலர் கலராக. அத்தனை நிறங்கள். அத்தனை வெளிச்சம். அத்தனை புகையும் கூட. மேலே முழுவதும் புகையாகத்தான் இருந்தது. குழந்தைகளுக்காக செய்வதாகச் சொன்னார்கள். குழந்தைகளை குஷிப்படுத்த வேறு வழியா இல்லை? லட்ச ரூபாயை செலவு செய்து பட்டாசுதான் கொளுத்த வேண்டுமா? பெங்களூரை வன்புணர்ச்சி செய்து அலங்கோலப்படுத்தியதே இந்த கார்பொரேட் நிறுவனங்கள்தான். வளர்ச்சி என்ற பெயரில் செய்த அட்டகாசங்களுக்காக ஏற்கனவே பெங்களூரை வெயில் தாளித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது இப்படியெல்லாம் வதைக்கிறார்கள். இந்த ஊரை அண்டியிருக்கும் கொஞ்ச நஞ்ச குருவிகளையும் சாவடிக்காமல் விடமாட்டார்கள் போலிருந்தது. யாரிடம் சொல்வது? 

அமைதியாக வந்துவிட்டேன். வெளியே வரும் போது ஜீன்ஸூம் டீசர்ட்டும் அணிந்த ஒரு அம்மிணி ‘ஃபங்ஷன் எப்படி இருந்துச்சு?’ என்றாள். பட்டாசுச் சத்தம், சாப்பாடு எல்லாமே மறந்துவிட்டது. ‘செம ஹாட்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். மனைவிக்கு காதில் விழாது என்ற நம்பிக்கைதான்.