Mar 14, 2014

ஞாநி தேர்தலில் நிற்கிறாராமே?

பெங்களூரில் ஆங்காங்கே பிரச்சாரம் துவங்கிவிட்டது. போஸ்டர், பேனர் எதுவும் இல்லை. ஆட்டோக்களில் கிளம்புகிறார்கள். ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டே தலையில் கொடி கட்டிய இளைஞர்கள் நடனமாடுகிறார்கள். கட்சிக்காரர்கள் கைகூப்பியபடியே செல்கிறார்கள். வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டால் இவர்களின் நரம்புகளில் இன்னமும் முறுக்கு கூடிவிடும். இங்கு பா.ஜ.கவுக்கும் காங்கிரஸூக்கும்தான் போட்டி என்றாலும் பல தொகுதிகளில் தேவகெளடாவின் ஜனதா தளம் பிரிக்கும் வாக்குகளும் முக்கியமானவைதான். இவர்கள் கர்நாடகத்தின் மூன்றாவது சக்தி.

அரசியலைப் பொறுத்த வரையில் மூன்றாவது ஆளை பெரிய ஆளாக வளர விடமாட்டார்கள் அல்லவா? பா.ஜ.க அல்லது காங்கிரஸ், திமுக அல்லது அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் அல்லது இடது சாரிகள். இப்படித்தான். மூன்றாவதாக ஒருவன் முளைத்தால் முதலில் இடம்பிடித்து வைத்திருக்கும் இரண்டு பேரும் சேர்ந்து மூன்றாமவனை காலி செய்துவிடுவார்கள். மீறி வர வேண்டுமானால் ஏற்கனவே இருக்கும் இரண்டு பேரில் ஒருவனை அழித்தால்தான் மூன்றாமவனுக்கு இடம்.

தேவகெளடாவின் மகன் குமாரசாமி இப்போதிருக்கும் மற்ற கன்னட அரசியல்வாதிகளைக் காட்டிலும் ஒரு பங்கு நல்லவர் என்று பிறர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எடியூரப்பாவுடன் செய்து கொண்ட ‘நீ ஆறுமாதம்; நான் ஆறுமாதம்’ ஒப்பந்தத்தை சொதப்பியதில், குட்டி ராதிகாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதில் உருவாக்கிக் கொண்ட பிம்பம் என அடி மேல் அடி வாங்கி இப்பொழுது வெறும் மூன்றாவது சக்தியாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

கர்நாடக விவகாரத்தைப் பற்றி எழுதுவதற்காக இதை ஆரம்பிக்கவில்லை.

எழுத்தாளர் ஞாநி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துவிட்டார். அநேகமாக பாராளுமன்றத் தேர்தலில் சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் போலிருக்கிறது. ஞாநியை பாராட்டுபவர்களுக்கும் வாழ்த்துபவர்களுக்கும் இணையாக சமூக ஊடகங்களில் கிண்டலடிப்பவர்களும் தாக்குபவர்களும் அதிகம். ‘எத்தனை லட்சங்கள் வாங்கினார், எத்தனை கோடிகள் வாங்கினார்’ என்று கூச்சமே இல்லாமல் எழுதுகிறார்கள். நோட்டுக்கு விழும் மனிதராக இருந்திருந்தால் அவர் எப்பொழுதே பெரும் கோடீஸ்வரராகியிருக்கக் கூடும். 

ஞாநியின் அரசியல் செயல்பாடுகள் இன்றுதான் ஆரம்பித்திருக்கின்றன என்று நம்பிக் கொண்டிருப்பவர்களின் விமர்சனங்கள் இவை. ஞாநிக்கு அரசியல் புதிதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசியல் களங்களில் மிகத் தீவிரமாக பணியாற்றியிருக்கிறார் என்பதுதான் உண்மை. ரிட்டையர்ட் ஆன காலத்தில் பதவிக்கு ஆசைப்படுகிறார், பணத்துக்காக அரசியலுக்கு வருகிறார் என்பதெல்லாம் வெறுமனே அவர் மீது புழுதி வாரி வீசுவதற்காக எழுதப்படும் வாசகங்கள். ஞாநி அப்படிப்பட்ட ஆள் இல்லை.

நமது அரசியல் சார்புகளையும், கட்சி சார்ந்த விருப்பங்களையும் ஒரு வினாடி ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ஞாநி போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை நிச்சயமாக வரவேற்போம் என நினைக்கிறேன். எந்தவொரு அரசியல்வாதியைவிடவும் ஞாநி ஒரு துளியாவது மேன்மையானவராக இருப்பார் என முழுமையாக நம்பலாம். அவரது கருத்துக்கள் நமக்கு எவ்வளவுதான் எதிர்ப்புடையவையாக இருந்தாலும் அவர் மிக நேர்மையான மனிதர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் தேவையில்லை. 

தனக்கு என்ன தோன்றுகிறதோ, தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேசக் கூடிய மிகச் சில கருத்தாளர்களில் ஞாநி மிக முக்கியமானவர். இங்கு யாருடைய கருத்தை அத்தனை பேரும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள்? ஒருவர் வெளிப்படையாகச் சொல்வதை நான்கு பேர் ஏற்றுக் கொண்டால் எட்டுப்பேர் எதிர்க்கத்தான் செய்வார்கள். ஞாநி பேசுவதை பதினாறு பேர்கள் எதிர்க்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அதற்காக அவர் எந்தக் காலத்திலும் ஒதுங்கிக் கொண்டது இல்லை என்பதுதான் முக்கியம்.

ஞாநி தனது மோடி எதிர்ப்பு பேச்சுகளுக்காகவும், கருணாநிதி எதிர்ப்பு அரசியலுக்காகவும்தான் தற்போது மிகத் தீவிரமான விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவை ஒரு பக்கம் கிடக்கட்டும். 

ஞாநி போன்ற உரத்த சிந்தனையாளர்கள், வெளிப்படையான கருத்தாளர்கள், தயக்கமில்லாமல் பொதுவெளியில் ஒரு விவாதத்தை உருவாக்குபவர்கள் தேர்தலில் பங்கேற்பது என்பது ஒரு முக்கியமான செயல். அடுத்து வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான விவாதம் என்றால் என்ன என்பதையும், பணமில்லாத வாக்குகள் சாத்தியம் என்பதையும் வெளிக்காட்டுவதற்கேனும் இத்தைகைய தேர்தல் பங்கேற்புகளை நாம் ஆதரிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பெரும் அரசியல் கட்சிகளின் பிரச்சார பலம், அவர்களிடம் இருக்கும் தொண்டர்கள் மற்றும் ஊடக பலத்திற்கு மத்தியில் இவரது தேர்தல் போராட்டம் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஞாநியின் வயது, அவரது உடல்நிலை, தேர்தலுக்கு இருக்கும் மிகக்குறைந்த கால அவகாசம், பாராளுமன்றத் தொகுதிக்காக பிரச்சாரம் செய்ய வேண்டிய பரந்த நிலப்பரப்பு ஆகியனவற்றையும், அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஸ்டண்ட்கள், ஆம் ஆத்மியின் சரிந்து கொண்டிருக்கு இமேஜ் போன்றவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தால் ஞாநி வெல்வது லேசுப்பட்ட காரியம் இல்லை. 

வெல்கிறார் அல்லது தோற்கிறார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். வெற்றி பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அரசியல் பலன்களுக்காகவும் அதிகார ஆதாயங்களுக்காகவும் பணம் கொழிக்கும் கட்சிகளை அண்டி நிற்காமல், எந்தவிதமான உள்கட்டமைப்பும் இல்லாத கட்சியில் சேர்ந்து களம் இறங்கும் ஞாநிக்கு நமது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்.