Mar 11, 2014

ஊரே அம்மணமாக சுற்றும் போது

அலுவலகத்தில் மதிய உணவை யாரோடும் சேர்ந்து சாப்பிடுவதில்லை என்ற அவப்பெயர் எனக்கு உண்டு. வீட்டிலும் அப்படித்தான். தனியாக அமர்ந்து கொட்டிக் கொள்வேன். உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் அதை மட்டுமே செய்ய வேண்டும் என நினைப்பேன். பள்ளிப்பருவத்திலிருந்தே பழகிய பழக்கம் இது. இப்பொழுது வினையாக போய்விட்டது. அதை வைத்தே திட்டுகிறார்கள். 

அலுவலகத்தில் கழண்டு கொள்வதற்கு இன்னொரு அனுபவமும் காரணமாக இருக்கிறது. 

முள்ளிவாய்க்கால் சம்பவம் உச்சகட்டத்தில் இருந்த போது யுத்த நிலவரங்களை அலுவலக கேண்டீனில் இருக்கும் டிவியில்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். கூடவே இன்னொரு தமிழ் பையனும், பீஹாரி ஒருவனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மண்டை பிளந்த நிலையில் பிரபாகரன் படத்தைக் சி.என்.என் - ஐ.பி.என்னில் காட்டிய போது ‘Let him die, mother fucker' என்றான் அந்த பீஹாரி. அதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தமிழ் பையன் ஏற்கனவே வெறியேறிக் கிடந்தான். பீஹாரி சொன்னது காதில் விழுந்ததும் ‘did you send your mother?' என்று கேட்டபடியே எச்சில் கையோடு ஓங்கி அறைந்தான். பீஹாரி நாற்காலியோடு சேர்ந்து கீழே விழுந்த்தான். அவனது தட்டில் இருந்த உணவு உடல் முழுவதும் கொட்டி ரசாபாசம் நிகழ்ந்துவிட்டது. இதெல்லாம் சில வினாடிகளில் முடிந்துவிட்டது. செக்யூரிட்டிகள் ஓடி வந்து மூன்று பேரின் பெயரையும் குறித்துக் கொண்டார்கள். அடுத்த நாள் விசாரணைக்கு அழைத்தார்கள். எனக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுத்தார்கள். 

நண்பர்களிடம் தீவிரமான விஷயங்களை விவாதிப்பது வேறு விஷயம். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கீழே இறங்கலாம். ஆனால் அலுவலகத்தில் அப்படி இருக்க முடியாது அல்லவா? ப்ரொபஷனலிஸம் என்ற பெயரில் சிக்கினால் சிதைத்துவிடுவார்கள். அதனால் பொதுவாகவே மொன்னையான விஷயங்களை பேசிக் கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. ஷில்பா ஷெட்டி பற்றியோ அல்லது அமிதாப்பச்சன் பற்றியோ எதையாவது பேசினால் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் நமது நேரம் கெட்டுக் கிடந்தால் வட இந்தியர்கள் தமிழர்களைப் பற்றி பேசுவார்கள். அதற்கு காது கொடுப்பதுதான் ரொம்பவும் சிரமம். வட இந்தியப் பத்திரிக்கைகள் மட்டுமில்லை- பெரும்பாலான வட இந்தியர்களுக்கும் தமிழர்கள் பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதுதான் கொடுமை. இருந்தாலும் பேசுவார்கள். கேட்டுக் கொள்ள வேண்டும். 

நண்பர் ஒருவர் ராணுவத்தில் இருக்கிறார். அவரது சீனியர்கள் அமைதிப்படையாகச் சென்று ஈழத்தில் தாங்கள் நிகழ்த்திய வீர பிரதாபங்களை வெளிப்படையாகவே பேசுவார்களாம்.  ‘என்ன சார் செய்ய முடியும்? பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். சீனியர்களாக போய்விட்டார்களே’ என்பார். அப்படித்தான் அலுவலகத்திலும். வேறு வழியில்லை.

ஈழம் பற்றிய பிரச்சினை என்று இல்லை- மீனவர்கள் பிரச்சினை, கூடங்குளம், தமிழர்களின் ஹிந்திப் புலமை, தமிழ்நாட்டின் அரசியல் என்று எதைப் பற்றி பேசினாலும் கிட்டத்தட்ட ஒரே மனநிலையில்தான் பேசுகிறார்கள். வட இந்தியா வரைக்கும் போக வேண்டியதில்லை. ஆந்திரா, கர்நாடகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தமிழ்நாடு பற்றிய தெளிவான பார்வை இல்லை என்பதுதான் உண்மை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. நமக்கு எத்தனை பேருக்கு தெலுங்கானா விவகாரம் பற்றி முழுமையாகத் தெரியும்? ஒரிசா, கர்நாடக சுரங்க முறைகேடுகள் பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம்? விதர்பா பிரச்சினையில் எவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறோம்?

நாம் இந்த நிலைமையில் இருந்து கொண்டு பிறகு எப்படி பெங்காலிக்கு ஈழம் பற்றியும், மராத்திக்கு பெரியார் அணைவிவகாரம் பற்றியும் தெரியவில்லை என்று புலம்ப முடியும்? அதனால் ‘நீ என் பிரச்சினை பற்றியும் நான் உன் பிரச்சினை பற்றியும் கேண்டீனில் பேச வேண்டாம்’ என்பதால்தான் இந்த கழண்டு கொள்ளல்.

அப்படியிருந்தும் விதி வலியது.

சென்றவாரத்தில் ஒரு நாள் சிக்கிக் கொண்டேன். மொத்தம் பன்னிரெண்டு பேருக்கு ஒரு தயாள பிரபு பிரியாணி வாங்கிக் கொடுத்தார். ட்ரீட். கடைக்கு ஆர்டர் கொடுத்தால் பிரியாணியை பொட்டலம் கட்டிக் கொண்டு வந்து அலுவலகத்திலேயே கொடுத்துவிடுகிறார்கள். ஃபிக்ஸட் பட்ஜெட். இதுவே பன்னிரெண்டு பேரையும் கடைக்கு அழைத்துச் சென்றால் ஒருவர் சில்லி சிக்கன் கேட்பார். இன்னொருவர் மட்டன் சுக்கா கேட்பார். பில் எகிறிவிடும் என்பதால் இந்த ‘ஹோம் டெலிவரி’ ட்ரீட்தான் இப்பொழுது அடிக்கடி நிகழ்கிறது. 

அது இருக்கட்டும்.

பன்னிரெண்டு பேரில் ஒருவர் ஆரம்பித்தார். அவர் பெங்காலி. அவர் மம்தா பற்றி பேசியிருக்கலாம். கொல்கத்தா பற்றி பேசியிருக்கலாம். அவருக்கு என்னவோ மூக்கில் அரிப்பு. அதையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாடு பற்றி பேசத் தொடங்கினார். ஏழு பேர் விடுதலையிலிருந்து தமிழர்களின் ஹிந்திப் புலமை வரை இழுத்துக் கொண்டேயிருந்தார். அங்கு நான் மட்டும்தான் தமிழ். கூட இருந்த பத்து பேரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி சமயங்களில் எனக்கு பேச்சு வராது. அதுவும் ஆங்கிலத்தில் என்றால் இன்னமும் சிரமம். தமிழிலிலே ஆங்கிலத்தில் பேச வேண்டியதாகிவிடும். அந்த பெங்காலிக்கு என் மீதுதான் கடுப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை எப்படி நிறுத்துவது என்றும் தெரியவில்லை. பிரியாணி உள்ளே செல்ல திணறிக் கொண்டிருந்தது. 

சரி பேசித் தொலையட்டும் என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். எல்லோரும் உணவை முடிக்கும் தருணத்தில் ‘டிசிஎஸ் உமாமகேஸ்வரி’ விவகாரத்திற்கு வந்தான். இந்த விஷயத்தில் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்ற ரீதியில் இழுத்துக் கொண்டிருந்தான். இது எப்படி இத்தனை நேரம் எனக்கு நினைவுக்கு வராமல் போனது என்று தெரியவில்லை. இந்தக் கொலையில் சிக்கிய நான்கு பேரும் மேற்குவங்கத்துக்காரர்கள்தானே. மாட்டினான் பெங்காலி. ‘நடந்தது என்னவோ தமிழ்நாட்டில்தான் ஆனால் நடத்தியது உங்கள் ஆட்கள்’ என்று சொல்லிவிட்டேன். அதுவரைக்கும் அவனுக்கு இந்த கைது விவகாரம் பற்றித் தெரியவில்லை.  ‘Is it? is it' என்று இரண்டு முறை கேட்டான். ‘Yes it is' என்றேன். இது அவனுக்கு போதுமான பதிலாக இருந்தது.  அடங்கிக் கொண்டான். 

நான்கு பேர் வன்புணர்ந்தார்கள் என்பதால் மொத்த பெங்காலிகளும் அப்படித்தான் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் வேறு வழி தெரியவில்லை. எத்தனை நேரம்தான் கூட்டத்திற்குள் வழிந்து கொண்டே இருப்பது? அதனால்தான் சாணியடித்துவிட்டேன்.

அதை விடுங்கள். 

உமா மகேஸ்வரி விவகாரம் என்ன ஆனது? உண்மையிலேயே அந்த நான்கு பையன்களும்தான் குற்றவாளிகளா? இல்லை விவகாரத்தை திசைதிருப்ப சிக்கிய நான்கு பேருக்கு விலங்கு பூட்டிவிட்டார்களா? பெண்களின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? ஏன் அந்தச் செய்தி பற்றிய ஃபாலோ-அப்  எதுவும் வரவில்லை?  

ஆனால் இதுதானே நமது வழக்கம்- புத்தகக் கண்காட்சி வரும் போது ‘நானும் எழுத்தாளன்’ என்று குதிப்போம். தேர்தல் வரும் போது ‘நானும் அரசியல்வாதி’ என்று அலப்பறை செய்வோம். ஒரு வன்புணர்வு நடக்கும் போது ‘நானும் போராளி’ என்று பெண்ணியம் பேசுவோம். அப்புறம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு கோச்சடையான் ட்ரெய்லர் பற்றி பேசிக் கொண்டிருப்போம். 

ஊரே அம்மணமாக சுற்றும் போது நமக்கு மட்டும் என்ன வந்தது? கோச்சடையான் ட்ரெய்லர் சூப்பர்தானே?