Mar 31, 2014

வாயை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா?

பத்து நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொண்டேன். நானாக எடுத்துக் கொண்ட விடுமுறைதான். மனம் நம்மையுமறியாமல் ஏதாவது ஒரு பக்கமாகச் சாயும் போது எல்லாவற்றையும் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைப்பதுதான் நல்லது. ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. சொறிந்து பழகியவன் கை சும்மா இருக்குமா? இங்கு ஃபேஸ்புக் இருக்கிறது, இணையத்தளங்கள் இருக்கின்றன. இதில் எல்லாவற்றிலும் இருந்தும் நம்மால் துண்டித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை துளி வந்தாலும் அலைபேசி கையில் இருக்கிறது. எப்படியாவது இந்த உலகம் நம்மைத் தூண்டிவிடுகிறது. இந்த உலகம் நம்மை ஏதாவதொரு விதத்தில் இழுத்துக் கொண்டேதான் இருக்கும். யாராவது எதையாவது சொல்லிக் கொண்டேதான்-அவர்கள் செய்கிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம்- ஆனால் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். நடுங்காமல், ஸ்திரத்தன்மை குலையாமல் பற்களைக் கடித்துக் கொண்டு தாண்டிப் போவதற்கு இன்னமும் பக்குவம் வேண்டும் போலிருக்கிறது.

எதிர்த்து வாதாடலாம்தான், உரையாடலாம்தான். ஆனால் எந்த விஷயம் இங்கே நூறு சதவீதம் வெளிப்படையாக இருக்கிறது? எந்தச் செய்தி பற்றி முழுமையாகத் தெரியும்? எல்லாமே அரைகுறைதான். ஊடகங்கள் வளர்த்த அறிவு இது. ஒரே செய்தி பற்றி பல விதங்களில் பேசும் நூற்றுக்கணக்கான ஊடகங்கள் பெருகிக் கிடக்கின்றன. நீங்கள் நம்பும் மனிதனை நான் மறுக்கலாம்; நான் மறுப்பதை இன்னொருவர் நம்பலாம். இப்படி உண்மை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமலே அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப விவாதங்களை நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறோம். இதில் பிரச்சினையே ‘நான் நம்புவதுதான் சரி’ என்று எல்லோருமே நிரூபிக்க முயல்கிறோம்.

எதை வைத்துக் கொண்டு உரையாடுவது?

நேற்று இரவு எங்கள் வீதியில் ஒரு தகராறு. எதிரில் இருக்கும் காலி இடத்தில் வீடு கட்டிக் கொண்டிருப்பவர் சாலையைத் தோண்டும் போது சிக்கிக் கொண்டார்- அதுவும் லோக்கல் கவுன்சிலரிடம். பெங்களூரில் மின்கம்பத்திலிருந்து வீட்டுக்கு ‘லைன்’ எடுத்தாலும், சாக்கடைக் குழாய் பதிப்பதென்றாலும் மண்ணுக்கு கீழாகத்தான் கொண்டு செல்ல வேண்டும். இப்படி மண்ணுக்குள் பதிப்பதென்றால் சாலையைத் தோண்ட வேண்டும் அல்லவா? அதற்கு மாநகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும். அனுமதி வாங்குவதொன்றும் பெரிய காரியமில்லை. ஆனால் வீட்டை வந்து பார்த்துவிட்டு வீட்டு மதிப்புக்கு ஏற்ப சதவீதக் கணக்கில் லஞ்சம் கேட்பார்கள். முப்பது அல்லது நாற்பதாயிரம் ரூபாய் வரைக்கும் சர்வசாதாரணாக செலவு ஆகும்.

இப்படி தண்டச் செலவு செய்வதற்கு யாருக்குத்தான் மனம் வரும்? பெரும்பாலானவர்கள் இரவோடு இரவாக தோண்டி மூடி விடுகிறார்கள். பிறகு யாராவது மாநகராட்சி ஆட்கள் வந்து விசாரித்தால் ஐந்தோ பத்தோ கொடுத்தால் பிஸ்கட்டைக் கவ்வுவது போல கவ்விக் கொண்டு ஓடிவிடுவார்கள். நாங்கள் வீடு கட்டிக் கொண்டிருந்த போது நல்லவேளையாக மண் சாலையாக இருந்தது. இதே போல இரவிலேயே காரியத்தை முடித்துவிட்டோம். அடுத்த சில நாட்களுக்கு ‘நான் கவுன்சிலரின் ஆள்’ என்று வந்து ஒருவர் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தார். புதுமனை புகுவிழாவின் போது கூட விடவில்லை. அவரைச் சமாளித்தது தனிக்கதை.

நேற்று மாட்டிக் கொண்டவருக்கு துரதிர்ஷ்டம். சமீபத்தில் எங்கள் தெருவின் மண் சாலை மீது தார் போட்டுவிட்டார்கள். அதைத்தான் தோண்டிக் கொண்டிருந்தார்கள். வீடு கட்டுபவர் வேலைக்குச் செல்கிறார். அவரது மாமனார்தான் கட்டட வேலையை மேற்பார்வையிடுகிறார். மாமனார் ஓய்வு பெற்ற மனிதர். முழு நரை விழுந்த மூத்தவர். மிக மென்மையாகப் பேசுவார். நேற்றும் அவர்தான் நின்று கொண்டிருந்தார். தமிழ் ஆட்கள்தான் சாலையை வெட்டிக் கொண்டிருந்தார்கள். 

இரவு பன்னிரெண்டைத் தொட்டிருந்தது. கவுன்சிலரின் எக்ஸ்.யூ.வி கார் வந்து நின்றது. ஆட்கள் தடபுடலாக இறங்கினார்கள். எங்கள் ஏரியாவில் பெண் கவுன்சிலர்தான். தெலுங்குக்காரப் பெண். “உனக்கெல்லாம் அறிவு இல்லையா?” என்றுதான் கன்னடத்தில் ஆரம்பித்தார். பெரியவர் கன்னடத்தில் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. பெரியவரும் தெலுங்குக்காரர்தான். ஏதோ ஒரு நாயுடு. அடுத்த கணத்திலிருந்து இருந்து இரண்டு பேரும் தெலுங்கிலேயே பேசிக் கொண்டார்கள். எனக்குத் தெலுங்கு நன்றாக புரியும். கன்னடம்தான் அரைகுறை.

“சோறுதானே தின்னீங்க?” என்று கவுன்சிலர் கேட்ட போது சில வீட்டுச் ஜன்னல்கள் திறந்தன. எந்தக் கதவும் திறக்கவில்லை- ஜன்னல்கள் மட்டும்தான். கவுன்சிலரின் கைத்தடி கூலியாட்களின் கடப்பாரை, மண்வெட்டியை பறித்து காரின் பின்புறமாக போட்டுக் கொண்டான். அந்தக் கவுன்சிலர் பெண்மணி கீழேயே இறங்கவில்லை. என்னதான் பதவியில் இருந்தாலும் அந்த மனிதரின் வயதுக்காவது கீழே இறங்கிப் பேசியிருக்கலாம். ம்ஹூம்.

பெரியவர், மேஸ்திரி ஆகியோரை தனது மொபைலில் படம் எடுத்துக் கொண்டார். பிறகு ‘மஞ்சு, இக்கட ரா’ என்று போனில் அழைத்தார். அடுத்த ஐந்து நிமிடங்களில் மஞ்சு வந்தான். மஞ்சுநாத். எங்களிடம் ஒருவன் வந்து அலம்பல் செய்தான் அல்லவா? அதே மஞ்சு. 

‘நேனு செப்புத்தானு க்கா’ என்றான். 

“மஞ்சு சொல்லியிருக்கான்ல. என்கிட்ட வந்து ஏன் அனுமதி வாங்கவில்லை” என்றார் கவுன்சிலர். பெரியவர் எதுவும் பேசவில்லை. பிறகு போலீஸூக்கும் போன் செய்தார். ரோந்து ஜீப் வந்தது. இறங்கியவர்கள் கவுன்சிலருக்கு பவ்யமாக சல்யூட் வைத்தார்கள்.

“இதுதான் நீங்க ட்யூட்டி பார்க்கிறதா? பாருங்க நடு ராத்திரியில் சாலையைத் தோண்டுகிறார்கள்” என்று சொல்லிவிட்டு “இவர்கள் மீது கேஸ் எழுதிக்குங்க” என்று கன்னடத்தில் உத்தரவிட்டார். அப்பொழுதும் அவர் வண்டியிலிருந்து கீழே இறங்கவில்லை. போலீஸ்காரர்கள் விவரங்களைக் குறித்துக் கொண்டிருந்தார்கள். 

“ரேப்பு யுகாதி காதா? பந்து” என்று சொல்லிவிட்டு செவ்வாய்க்கிழமை தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது நான் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றேன். அம்மா, அப்பா வீட்டிலிருந்தால் அனுமதிக்கமாட்டார்கள். ‘நமக்கெதுக்கு வெட்டி வம்பு’ என்று சொல்லிவிடுவார்கள். அவர்கள் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். கவுன்சிலரிடம் சிரித்தபடிதான் சொன்னேன். 

“இங்கே எல்லோருமே இப்படித்தாம்மா செய்யுறாங்க”. பெரியவர் செய்தது சரி என்று பேசுவது என் நோக்கம் இல்லை. ஆனால் அவரை மட்டும் இப்படி வதைக்க வேண்டியதில்லை என்பதைச் சொல்லத்தான் விரும்பினேன்.

மஞ்சும் சிரித்தபடியே “இவரும் இப்படித்தாம்மா செஞ்சாரு” என்றான். போலீஸ்காரர்கள் சிரித்தார்கள். இவர்கள் பன்மொழி வித்தகர்கள். என்னிடம் தமிழிலேயே பேசினார்கள். 

“உங்க ப்ளான் எடுத்துட்டு வாங்க” என்றார் கவுன்சிலர். சிக்கிக் கொண்டேன். சமாளித்தாக வேண்டும். அப்பா ஊரில் இல்லை. அவருக்குத்தான் தெரியும் என்றேன்.

கைத்தடி ஒருவன் என்னையும் படம் எடுத்துக் கொண்டான். செவ்வாய்க்கிழமை நானும் அவரைப் பார்கக்ச் செல்லவேண்டுமாம். எதிர்வீட்டுக்காரருக்கு ஒரு லட்சம் ஓட்டை விழும் என்றால் எனக்கு எப்படியும் சிறு புள்ளியாவது விழும் என்று தோன்றியது.

அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். “வாயை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா?” என்று கேட்டுவிட்டு உடனடியாக பெங்களுக்கு கிளம்பிவிட்டார். செவ்வாய்க்கிழமை அவரே கவுன்சிலரைப் பார்க்கச் செல்கிறாராம். எப்படியும் திட்டுவார். வாங்கிக் கட்டிக் கொள்ளும் பலத்தை சொக்கநாதசாமிதான் கொடுக்க வேண்டும்.

Mar 19, 2014

இதையெல்லாம் சொல்ல ஒரு இது வேண்டும்..

தமிழுக்காக நான் உருவாக்கிய சொற்களை கையாளாமல் இன்று எவருமே தமிழில் ஒரு நல்ல கட்டுரையை எழுதிவிட முடியாது என்று ஜெயமோகன் சொல்லியிருக்கிறாராம். இதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இனி வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை ஆசான் எழுதுவதைப் படிக்கவே செலவிட வேண்டும் போலிருக்கிறது. எப்போ படித்து? எப்போ எழுதி...ம்ம்ம்

மூச்சிரைக்க ஜெமோ பக்கத்திற்கு ஓடிப்பார்த்தால் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். அக்னிக்குண்டம் என்பதற்கு தமிழ்ச் சொல்லாக எரிகுளம் என்று கண்டுபிடித்ததை விளக்கியிருக்கிறார். விஷ்ணுபுரத்திலும், வெண்முரசிலும் இப்படி ஏகப்பட்ட சொற்களை உருவாக்கியிருக்கிறாராம். நல்ல விஷயம்தான். செய்யட்டும். யார் செய்கிறார்கள் இதையெல்லாம்? நம் அதிர்ஷ்டம்- இவர் வந்ததால் தமிழ் பிழைத்துக் கொண்டது. இல்லையென்றால் பாரதியின் பாடையோடு சேர்ந்து தமிழும் போயிருக்கும். இந்நேரம் நாமெல்லாம் ஆங்கிலத்திலேயே தமிழை எழுதிக் கொண்டு இருந்திருப்போம்.  

நல்லவேளையாக இழுத்துப் பிடித்து எரிகுளம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்திவிட்டார் மனுஷன். இனி நாமெல்லாம் குதிப்பதுதான் பாக்கி. ஆசானின் இந்த வரியைப் படித்துவிட்டு ஜெமோவுக்கு ‘தலைக்கனம்’ ஜாஸ்தி என்று எழுதத்தான் கை நீண்டது. எதற்கு வம்பு? இப்படியான விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் போய்விடுவதுதான் நல்லது. இல்லையென்றால் போகிற போக்கில் ‘கருத்துலக விவாதத்துக்கான அறிவுத்தகுதி இல்லாதவர்கள், வெறுமே அரைகுறைவாசிப்பு மற்றும் செவிப்பழக்கம் கொண்டு செய்யும் வெட்டிவேலை அது’ என்று புற மண்டையிலேயே ஓங்கி அடிப்பார். என் அரைகுறைத் தமிழும் குமட்டிக் கொண்டு வெளியே வந்துவிடும். பிறகு சிகிழ்ச்சைக்கு ஓட வேண்டும்- எழுத்துப்பிழையெல்லாம் இல்லை- சிகிழ்ச்சையேதான்.

தேவையா எனக்கு? அதனால் தலைக்கனம் என்பதற்கு பதிலாக ஜெமோவுக்கு கெத்து ஜாஸ்தி என்று மாற்றி வாசித்துக் கொள்ளவும்.

அரைகுறைத் தமிழ் என்று சொன்னேன் அல்லவா? அதை வைத்துக் கொண்டு மகனுக்குத் தமிழ் எழுத்துரு சொல்லித் தரத் தொடங்கியிருக்கிறேன். கர்நாடகத்தில் இருப்பதால் நாம் தமிழ் சொல்லிக் கொடுத்தால்தான் உண்டும். இருபது வருடங்களுக்கு முன்பாக இங்கு ஏகப்பட்ட தமிழ்ப் பள்ளிகளும், தமிழ்க் கல்லூரிகளும் இருந்திருக்கின்றன. அரசியல் அழுத்தங்களாலும், பெற்றோர்களின் வரவேற்பின்மையினாலும் இப்பொழுது ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கின்றனவாம். அதுவும் எங்கள் வீட்டிலிருந்து வெகுதூரங்களில். அதனால் வாயில் நுழையாத பெயருடைய பள்ளியில் வரிசையில் நின்று இடம் வாங்கியிருக்கிறோம். 

‘குருவியோட மூக்குக்கு இங்கிலீஷ்ல என்னங்கப்பா?’ என்றான். இப்படி திடீரென்று கேட்டால்? பிதுங்கப் பிதுங்க பார்த்தேன். ‘Beak' என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான். அவன் பதில் தெரியாமல்தான் கேட்கிறான் என்று நினைத்தேன். என் ஆங்கில அறிவை குப்பையில் கொட்டி வேடிக்கை பார்ப்பதற்காகக் கேட்டிருக்கிறான். அரை டிக்கெட். அவனுக்கு வெண்பா எழுதத் தெரிய வேண்டியதில்லை- ஆனால் எழுத்துக் கூட்டி புத்தகங்கள் வாசித்துவிடுமளவுக்கு கற்றுத் தந்துவிட்டால் போதும் என நினைக்கிறேன். 

ஆசானின் ‘எரிகுளம்’ என்ற சொல் நேற்றிரவிலிருந்து உள்ளுக்குள் பினாத்திக் கொண்டிருந்தது.

யோசித்துப் பார்த்தால் எழுத்துத் தமிழைவிடவும் நம் பேச்சு வழக்கு முக்கியமானது என்று தோன்றுகிறது. முன்னோர்களிடமிருந்து நாம் தெரிந்து வைத்திருக்கும் ஐம்பது சதவீதச் சொற்களையாவது அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட்டால் போதும். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் வட்டார வழக்கையும், பழஞ்சொற்களையும் துளித்துளியாக அழித்துக் கொண்டிருக்கிறோம். முதன் முதலாக கல்லூரி விடுதிக்குச் சென்ற போது ‘வட்டல் எடுத்துட்டு வர்றேன்’ என்றேன். உடனிருந்தவர்கள் சிரித்தார்கள். அதிலிருந்து என்னையுமறியாமல் ‘ப்ளேட் எடுத்துக்கிறேன்’. வட்டல் என்ற சொல்லே என்னிலிருந்து பிரிந்துவிட்டது. இது ஒரு சாம்பிள். உடனடியாக இதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் இப்படி நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். இப்படி ஒவ்வொரு இடத்திலும் அமத்தாவிடமிருந்தும் அப்பத்தாவிடமிருந்தும் வாங்கிய சொற்களை புதைத்துக் கொண்டிருக்கிறோம். அப்பாரும், அப்பிச்சியும் சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலுமா பேசிக் கொண்டிருந்தார்கள்? அக்னிக்குண்டம் என்பதை அவர்கள்தானே பூக்குழி என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அதை மறந்ததுவிட்டோம்.  எரிகுளம் என்று கேள்விப்படும் போது புளகாங்கிதம் அடைகிறோம்.

பெரிய காரியம் ஒன்றுமில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தோண்டிப்பார்த்தாலும் செத்துப் போன அல்லது செத்துக் கொண்டிருக்கும் ஓராயிரம் சொற்களையாவது பிடித்துவிட முடியும். அத்தனை இல்லையென்றாலும் ஆளுக்கு சராசரியாக நூறு சொற்களையாவது எடுத்துவிடலாம். பிறகு எதற்கு ஜெமோ உருவாக்கும் தமிழ்ச் சொற்களுக்காக தமிழ்க் கட்டுரைகள் தட்டு ஏந்தி நிற்க வேண்டும்?

இதை ஜெமோவை விமர்சிப்பதற்காக எழுதவில்லை. அவர் மீது அதிகப்படியான மரியாதை உண்டு. ஆனால் அவரது சொற்களை வைத்துதான் நல்ல கட்டுரையை எழுத வேண்டும் என்று சொல்வதெல்லாம் டூ மச். நல்ல அனுபவம் நிறைந்த எழுத்தாளன் தனது அமத்தா, அப்பிச்சிமார்களின் வார்த்தைகளிலிருந்தே அட்டகாசமான கட்டுரைகளை எழுதிவிட முடியும். சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிற எந்த எழுத்தாளனையும் விட நம் முன்னோர்கள்  ஒரு படி உயர்ந்த மொழியறிவு கொண்டவர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. உங்களுக்கு இருக்கிறதா?

Mar 18, 2014

சின்னச் சின்ன கடவுள்கள்

கடவுள் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவன் யாரையாவது இறைதூதர்களாக அவ்வப்போது அனுப்பிக் கொண்டேயிருப்பான். அப்படி அனுப்பட்ட சில இறைதூதர்கள் அவ்வப்போது நம் கண்களில் பட்டுவிடுவார்கள். பட்டுவிட்டால் நாம் புண்ணியவான்கள். ஏதாவதொருவிதத்தில் அவர்களுக்கு உதவி நாமும் புண்ணியம் தேடிக் கொள்ளலாம்.

அப்படித்தான் இந்த வாழை அமைப்பினரும். மினியேச்சரைஸ்டு கடவுளர்கள். 

வாழை அமைப்பினர் அடுத்த ஆண்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வரும் ஆண்டிற்கான வழிகாட்டிகளைத்(Mentor) தேர்ந்தெடுப்பதற்கான கலந்தாய்வு ஏப்ரல் மாதத்தில் பெங்களூரில் நடக்கிறது. சென்னையிலும் இதே போல நடக்கும் என்று நினைக்கிறேன். இந்தக் கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு வழிகாட்டிக்கும் ஒரு மாணவரை ஒதுக்குவார்கள். அடுத்த ஓராண்டுக்கு அந்த மாணவருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் என்றால் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிப்பவர்களோ அல்லது நகர்புற மாணவர்களோ இல்லை. தர்மபுரி மாவட்டத்தின் ஒரு மூலையில் கிடக்கும் ஏரியூர் என்ற கிராமத்துப் பள்ளியின் மாணவர்கள். அந்தப் பள்ளியிலும் கூட கண்ணில்படும் அத்தனை மாணவர்களையும் தேர்ந்தெடுப்பதில்லை. வசதி என்றால் என்னவென்றே தெரியாத குடும்பத்திலிருந்து வந்தவர்கள், அம்மாவும் அப்பாவும் ஆந்திராவிலோ அல்லது கர்நாடகத்திலோ குவாரிகளில் வேலை செய்து கொண்டிருக்க இங்கே தனித்து விடப்பட்டிருக்கும் குழந்தைகள், நசிந்து கிடக்கும் குடும்பங்கள், குடிகாரத் தந்தையினால் சீரழிந்து போன பிள்ளைகள், இன்றோ நாளையோ குடும்பச்சூழலால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள் என்று விளிம்பிலும் விளிம்பில் இருக்கும் பிள்ளைகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்த தேர்வு முறையைப் பார்ப்பதற்கு நீங்கள் வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வெயில் காந்தும் தருமபுரி மாவட்டத்தின் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து அந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாகச் சென்று தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தத் தடவை அவர்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கச் செல்லும் போது வாழை அமைப்பினரோடு சேர்ந்து சுற்றலாம் என்றிருக்கிறேன். 

இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் அந்த மாணவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்கு வழிகாட்டப்போகும் நல்ல இதயங்களைத் தேர்ந்தெடுக்கத்தான் இந்த கலந்தாய்வை நடத்துகிறார்கள். 

இந்த வழிகாட்டிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஏரியூரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் கூடுவார்கள். அங்கு அந்த மாணவர்களும் வந்திருப்பார்கள். சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் அந்த மாணவர்களோடு சேர்ந்து விளையாடி, படித்து, கற்பித்து என்று அவர்களை படிப்பைத் தாண்டியும் ஒரு மனிதனாக உருமாற்றுகிறார்கள்.

ஆகச் சிறந்த செயல் இது. 

எந்த விளம்பரமும் இல்லாமல் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் மீது வெளிச்சம் விழுவதைக் கூட விரும்பாத இவர்களைப் போன்றவர்களால்தான் இன்னமும் அவ்வப்போது மழை தூறுகிறது என நினைத்துக் கொள்வேன்.

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சிறுவர்களோடு நேரடியாக பேசுவது போக இந்தச் சிறுவர்களோடு அவ்வப்போது தொலைபேசி வழியாகவும் வழிகாட்டிகள் உரையாடுகிறார்கள். தொலைபேச வசதியில்லாதவர்களிடம் அஞ்சல் வழியில் தொடர்பில் இருக்கிறார்கள். அந்தப் பிஞ்சுக்கரங்கள் தங்களின் வழிகாட்டிகளுக்கு ‘அன்புள்ள அண்ணன்’ என்றோ அல்லது ‘அன்புள்ள அக்கா’ என்றோ தங்கள் வாழ்வின் முதல் கடிதத்தை எழுதுகிறார்கள்.

ஒரு நிகழ்ச்சியில் இந்த அமைப்பினரோடு இருந்திருக்கிறேன். நெகிழச் செய்துவிடுகிறார்கள். இவர்கள் செய்து கொண்டிருப்பது அத்தனை புனிதமான பணி. இன்றோ நாளையோ படிப்பை நிறுத்திவிட்டு குவாரி வேலைக்குச் சென்றுவிடக் கூடியவனை கல்லூரி வரைக்கும் இழுத்துவிடுகிறார்கள். பள்ளியை முழுகிவிட்டு வீட்டை கவனிக்கச் செல்லவிருக்கும் பெண்ணைத் தாங்கிப்பிடித்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிவிடுகிறார்கள்.

எழுத்தறிவிப்பவன் இறைவன் அல்லவா? இந்த அமைப்பினர் ஒவ்வொருவருமே இறைவன்தான். இதைச் வெற்றுப்புகழ்ச்சிக்காக எழுதவில்லை. ஒரு முறை இவர்களை நீங்கள் நேரில் பார்க்க வேண்டும். நம்பத் தொடங்குவீர்கள்.

இருக்கட்டும்.


இந்த ஆண்டிற்கான வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கும் கலந்தாய்வு பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நடக்கிறது. எப்படியும் ஐம்பது அல்லது அறுபது வழிகாட்டிகள் வாழைக்குத் தேவைப்படுவார்கள் என நினைக்கிறேன். வழிகாட்டியாகிறோமோ இல்லையா என்பது இரண்டாம்பட்சம். அவர்களுக்கு ஊக்கமளிப்பதற்காகவது தமிழ்ச்சங்கத்திற்குச் சென்றுவரலாம். ஏப்ரல் ஆறாம் நாள் நான் செல்லவிருக்கிறேன். நீங்களும் கலந்து கொள்ளுங்கள். பிற பெங்களூர் நண்பர்களிடம் இந்தத் தகவலைச் சேர்க்க முடியுமானால் ஒரு துளியூண்டு உதவியை இந்த தன்னலமற்ற அமைப்பினருக்கு நாம் செய்வது போல. முதல் பத்தியில் சொன்னது போல ‘புண்ணியம் தேடிக் கொள்ளுதல்’.

Mar 17, 2014

மலையை அசைக்கும் சுண்டெலி

அரவிந்த் கெஜ்ரிவாலின் சமீபத்திய நடவடிக்கைகளாலும், அவரால் உருவாக்கப்பட்ட தலைப்புச் செய்திகளினாலும் நரேந்திர மோடிக்கான மிகச் சரியான போட்டியாளராக இவர்தான் இருப்பார் என்கிற ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக ராகுலையும், காங்கிரஸையும் ஒதுக்கிவிட்டு மோடியா அல்லது கெஜ்ரிவாலா என்று பேசத் துவங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் இந்த ஓரங்கட்டுதலை எதிர்பார்த்திருக்காது என்றாலும் மோடிக்கான counter attack நிச்சயமாக காங்கிரஸை மகிழ்ச்சியடைச் செய்திருக்கும்.

பிரதமர் பதவிக்கான போட்டிக்கு கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மோடி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். குஜராத் அரசின் சாதனைகள் தேசிய நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்களாக நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன. ஊடகங்களில் மோடிதான் அடுத்த பிரதமர் என்பதான பேச்சு தொடர்ந்து இடம்பெறும்படி பார்த்துக் கொண்டார்கள். இணையத்தளங்களில் மோடிதான் நெம்பர்.1 ஆக இருந்தார். இப்படி சாமானிய மக்களுக்கே தெரியாமல் ‘மோடிதான் அடுத்தது’ என்ற எண்ணத்தை விதைத்திருந்தார்கள். 

என்னதான் இத்தகைய செயல்பாடுகளால் மோடியின் பெயர் பரவலாக்கப்பட்டிருந்தாலும், இதுவரையிலும் அவரது பாதையில் தடைக்கற்களை புரட்டிப்போடுவதற்கான எதிர்ப்பாளர் இல்லையென்றாலும் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை எண்ணான 272+ ஐ மோடி சுலபமாக அடைந்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. காங்கிரஸின் மீதான வெறுப்பு, மன்மோகன்சிங் ஆட்சியின் அவலங்கள், மாநிலக்கட்சிகளின் ஊழல்கள் மற்றும் காங்கிரஸின் உறுதியற்ற தலைமை ஆகியவற்றின் காரணமாக கிடைத்திருக்கக் கூடிய எதிர்ப்பு வாக்குகளின் மூலமாக 200+ என்ற எண்ணிக்கையை பா.ஜ.க தாண்டியிருக்கக் கூடும்.

ஆனால் இப்பொழுது அந்த எண்ணிக்கையிலும் கெஜ்ரிவால் ஒரு ஓட்டையை போட்டுவிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பா.ஜ.கவுக்கு சென்றிருந்தால் பா.ஜ 200+ அடைந்த்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பின் மீது போடுவதற்கு ஒரு பெரிய பாறாங்கல்லை குல்லாவுக்கு மேலாக தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை பா.ஜவோடு பங்கிட்டுக்கொள்ள பங்காளிகள் வந்துவிட்டார்கள். இதைத்தான் மோடி எதிர்ப்புக் கட்சிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. குறிப்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி, லாலு பிரசாத் யாதவ், திமுக அபிமானிகள் போன்றவர்கள். 

அரவிந்த் கெஜ்ரிவாலால் பிரதமர் ஆக முடியாது என்று இவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். இது கெஜ்ரிவாலுக்கும் தெரியும். ஆனாலும் அவரைக் கொண்டாடுவதற்கான காரணம், மோடியின் வளர்ச்சியைத் தடுக்க இவர்கள் யாராலும் முடியவில்லை என்பதுதான். ‘மோடிக்கு யாருமே தடையில்லை’ என்று உருவாக்கப்பட்டிருந்த ஒரு பிம்பத்தை நொறுக்குவதற்கு குண்டாந்தடியோடு ஒருவர் வருகிறார் என்றால் இவர்களுக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும். தடியைத் தூக்கிக் கொண்டு வருபவர் யானையாக இருந்தால் என்ன? சுண்டெலியாக இருந்தால் என்ன?

அரவிந்த் கெஜ்ரிவால் 272+ இடங்களில் முழுமையாக வென்று ஆட்சியைப் பிடித்துவிடுவார் என்றால் அவரை மனப்பூர்வமாக ஆதரிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அது நல்ல விஷயமும் கூட. ஆனால் அது நடக்காது என்பதுதான் நிதர்சனம். டெல்லியில் நடந்ததைப் போலவே- தொங்கு பாராளுமன்றத்தை- வெற்றிகரமாக உருவாக்கிவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் கெஜ்ரிவால் உருவாக்கிவிடுவார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜதான் தனிப்பெரும் கட்சியாக உருவாகியிருந்தது. ஆனால் அவர்களால் ஆட்சியமைக்க முடியவில்லை. அதே போன்றதொரு நிலைமை மத்தியிலும் வர வாய்ப்பிருக்கிறது. பா.ஜ. தனிப்பெரும் கட்சியாக வரக் கூடும். ஆனால் மெஜாரிட்டி இருக்காது. 200+ என்ற எண்ணிக்கை இருந்தால் ஆட்சியமைப்பதில் பா.ஜவுக்கு பெரிய சிரமம் இருக்காது. அதிமுக, சரத்பவாரின் தேசியவாதக் கட்சி போன்ற கட்சிகளை இணைத்து ஒட்டி ஆட்சியை அமைத்துவிட முடியும். ஆனால் கெஜ்ரிவால் மற்றும் அவரை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளினால் பா.ஜவின் இருபது முப்பது தொகுதிகளை காலி செய்யப்பட்டு பா.ஜ வென்ற மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 150-170 என்ற எண்ணிக்கையில் வந்து நின்றால்தான் பெரும் சிக்கல். 

பா.ஜவுக்கான அந்த அடியைத்தான் மோடி எதிர்ப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த எண்ணிக்கையை வைத்துக் கொண்டு பா.ஜவால் எதுவும் செய்ய இயலாது. பா.ஜ. ஒரு மதவாதகட்சி என்று ஒதுக்கிவிடுவார்கள். மோடியின் கனவில் ஒரு லாரி மண்ணைக் கொட்டிவிட்டு அடுத்த சாத்தியங்களுக்கான வாய்ப்பைத் தேடுவார்கள். மதச்சார்பற்ற சக்திகளின் கூட்டணி என்று உதிரிகள், இடதுசாரிகள், காங்கிரஸ் அனைத்தும் சேர்ந்து ஒரு ஆட்சியை உருவாக்குவார்கள். ‘ஓடுகிற வரைக்கும் ஓடட்டும்’ என்று காலத்தை நகர்த்துவார்கள். சரியான சமயம் கிடைக்கும் போது ஆட்சியைக் கலைத்துவிட்டு இன்னொரு தேர்தலைச் சந்திப்பார்கள். 

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு என தேர்தல் கமிஷன் கணக்குப் போட்டு வைத்திருக்கும் செலவு தொகை ரூ.3500 கோடி. இந்தத் தொகையில் பாதுகாப்புக்கான செலவு கணக்கில் வராது. அது போக அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் செய்யும் செலவும் இந்தக் கணக்கில் இல்லை. அதையெல்லாம் சேர்த்தால் குறைந்தபட்சம் நாற்பதாயிரம் கோடிகளாவது ஆகக் கூடும். பணம் இரண்டாம் பட்சம். இவர்கள் எதிர்பார்க்கும் அஸ்திவாரமற்ற ஆட்சிதான் பெரிய சிக்கலைக் கொண்டு வரும்.

ஸ்திரமற்ற ஆட்சியமைந்தால் நாட்டின் பொருளாதாரம் அடி வாங்கும், புதிய முதலீடுகள் தாமதப்படுத்தப்படும், பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் இருக்கும் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் சாதாரண மனிதனை அவனுமறியாமல் மூச்சுத் திணறச் செய்யும். இடைக்கால ஆட்சியாளர்கள் ‘இன்னைக்கோ நாளைக்கோ, சுருட்டும் வரை சுருட்டு’ என்றிருப்பார்கள். இதெல்லாம் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் நாம் எதிர்பார்க்க ஆரம்பிக்க வேண்டிய தருணம் இது. அப்படித்தான் இன்றைய அரசியல் நிகழ்வுகள் இருக்கின்றன.

இதையெல்லாம் எழுதினால் மோடி ஆதரவாளன் என்று குத்துவார்கள். அப்படியில்லை- இன்றைய சூழலில் மோடி வரவில்லையென்றாலும் அதைப்பற்றிய விசனம் எதுவும் இல்லை- இவர்கள் குட்டையைக் குழப்பி அடுத்த சில ஆண்டுகளுக்கு தள்ளாடும் மத்திய அரசை அமைக்காமல் இருந்தால் போதும். ஒருவேளை  அப்படி நிலையற்ற அரசு அமைந்தால் அதன் விளைவையும் வலியையும் 2020 ஆம் ஆண்டில் உணரத் துவங்குவோம்.

யாரிடம் சொல்வது?

சில நிறுவனங்களில் வருடத்திற்கு ஒரு முறை ‘குடும்ப நாள்’ கொண்டாடுகிறார்கள். முன்பெல்லாம் நிறைய நிறுவனங்களில் இது உண்டு. இப்பொழுதுதான் Cost Cutting என்று கத்தியை போட்டுவிட்டார்கள். இப்படியெல்லாம் நிகழ்ச்சி நடத்தினால் தலைக்கு ஆயிரம் ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். குடும்பவிழா என்று ஆளாளுக்கு இரண்டு மூன்று பேரை அழைத்து வந்தால் நிறுவனத்தின் பாக்கெட்டில் ஒரு பொத்தல் விழுந்துவிடும்.

பொத்தல் என்பதெல்லாம் அதிகபட்சமான வார்த்தை. எந்த பெரிய நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது, பொத்தல் விழுவதற்கு? சென்ற வருடத்தில் ஆயிரம் கோடி ரூபாய் இலாபம் அடைந்திருந்தால் இந்த வருடம் தொள்ளாயிரத்து ஐம்பது கோடியாக அந்த லாபம் குறைந்திருக்கும். ஆனால் அதற்கே வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வார்கள். இந்த வருடம் சம்பளம் உயர்வு இல்லை என்பார்கள்; இலவச வாகன வசதி இல்லை என்பார்கள்; அதெல்லாம் தொலையட்டும் என்று விட்டுவிடலாம்- டாய்லெட்டில் இனிமேல் Tissue Paper இல்லை என்று அறிவிப்பார்கள். நல்ல குடி நாச்சி மாதிரி ‘ஐம்பது பாக்கெட் Tissue Paper' ஐ மிச்சம் செய்தால் ஒரு மரத்தை காப்பாற்றிவிடலாம் என்று அறிவிப்பு பலகை வேறு வைப்பார்கள். இயற்கையைக் காப்போம் என்று நாமும் கையை பேண்ட் பாக்கெட்டுக்குள் விட்டு ஈரத்தை துடைத்துக் கொண்டு வெளியே வர வேண்டும். 

சுற்றுச்சூழல், இயற்கையைப் பேணல் என்பதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால் இதையெல்லாம் உருப்படியாகச் செய்கிறார்களா என்பதுதான் பிரச்சினை. எங்கள் பழைய நிறுவனம் இருந்த இடத்தைச் சுற்றியிருந்த இடம் நாறிக் கிடக்கும். எருமைகள் மேய்ந்தும் பன்றிகள் தூங்கியும் எப்பொழுது கச்சடாதான். எந்தப் புண்ணியவானுக்குத் தோன்றியதோ- இதையெல்லாம் சுத்தம் செய்துவிடலாம் என்று முடிவெடுத்தார்கள். நமக்கு அனுபவமும் திறமையும் இருக்காது அல்லவா? அதனால் இதற்கென்றே சில என்.ஜி.ஓக்கள் இருக்கின்றன. அவர்களிடம் நமது திட்டத்தைச் சொன்னால் வந்து பார்த்துவிட்டு ஒரு கணக்கு கொடுப்பார்கள்- பட்ஜெட். பெரும்பாலான என்.ஜி.ஓக்கள் இதையெல்லாம் வைத்துத்தான் பிழைப்பை ஓட்டுகின்றன என்பதால் சர்வசாதாரணமாகவே பல்லாயிரக்கணக்கில்தான் அந்த பட்ஜெட் இருக்கும். முப்பதாயிரம் ரூபாய் ஆகும் என்று சொல்லியிருந்தார்கள்.

இதெல்லாம்தான் ப்ரொபஷனலிஸம். அவர்கள் சொல்லும் தொகையை நிறுவனத்திலும் ஏற்றுக் கொண்டார்கள். 

வீதியைக் கூட்டுவதற்கு எதற்கு திறமையும் அனுபவமும்? கூலியாட்கள் நான்கு பேரை துணைக்கு அழைத்துக் கொண்டு வேலையைச் செய்தால் ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் கூலி என்றாலும் இரண்டாயிரம் ரூபாயில் சோலியை முடித்துவிடலாம். மண்வெட்டி, சட்டியெல்லாம் வாடகைக்கு எடுத்தால் அதற்கு ஒரு இரண்டாயிரம். மொத்தமாக நான்கு ஆயிரத்தில் முடித்திருக்கலாம். ம்ஹூம். என்.ஜி.ஓக்களை அழைத்து வந்து அவர்களுக்கு ஒரு பெருந்தொகையைக் கொடுத்து, அரக்கப்பரக்க சுத்தம் செய்து, சுற்றுச்சுவரில் பெய்ண்ட் அடித்து முடிக்கும் போது பக்கத்திலிருந்த சேரியிலிருந்து ஒரு மூதாட்டி ‘இதையெல்லாம் எதுக்குய்யா சுத்தம் பண்ணுறீங்க? பொழுது ஆவறதுக்குள்ள எருமையும், பன்றியும் சாணம் போடும்’ என்றார். 

பாட்டி சொன்னதைக் கேட்டு ஜெர்க் ஆனவர்கள், அந்த அபசகுணமான நிகழ்வுகள் நடப்பதற்குள் ஃபோட்டோ எடுத்து ‘என்னையும் பாரு என் வேலையையும் பாரு’ என்று நோட்டீஸ் போர்டில் போட்டுவிட்டார்கள். இதற்கு அவர்கள் சூட்டிய பெயர் ‘கம்யூனிட்டி சர்வீஸ்’. ஆனால் பாட்டி சொன்னது அச்சு பிசகாமல் அப்படியேதான் நடந்தது. அடுத்த நாள் அதே எருமை மாடுகள்; அதே பன்றிகள்.

மூன்று மணி நேரத்தில் முப்பதாயிரத்தை என்.ஜி.ஓவின் கணக்குக்கு மாற்றியதுதான் கண்டபலன்.

கம்யூனிட்டி சர்வீஸ் என்று கார்பொரேட் நிறுவனங்கள் செய்வதெல்லாம் நல்லதுதான். ஆனால் அதையெல்லாம் ‘பெயருக்கு’ச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அவலம். 

சில நாட்களுக்கு முன்பு ஒரு கடையில் துணி எடுத்த போது ஒரு விண்ணப்பத்தில் பிறந்த நாளைக் குறிக்கச் சொன்னார்கள். அந்த நாளில் ஒரு மரக்கன்றை என் சார்பாக நடுவார்களாம். ‘எங்கே நடுவீர்கள்?’ என்றால் ‘எங்கள் நிறுவனம் தத்தெடுத்திருக்கும் கிராமத்தில்’ என்றார். ‘எந்த மாநிலத்தில் அந்த கிராமம் இருக்கிறது?’ என்று இயல்பாகத்தான் கேட்டேன். அவருக்கு பதில் தெரியவில்லை. யாரிடமோ விசாரித்தார். அவருக்கும் பதில் தெரியவில்லை. சிரித்துவிட்டு வந்துவிட்டேன். அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று சொல்லவில்லை. முழுமையாகச் செய்வார்கள் என்று நம்பிக்கையில்லை.  இதெல்லாம் வாடிக்கையாளர்களை கவரும் strategy. எங்களுக்கும் சமூக அக்கறை இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் கார்ப்ரேட்களின் எத்தனிப்பு. அவ்வளவுதான்.

சரி விடுங்கள். 

முதலாளிகளுக்கு மட்டும் எந்தக் காலத்திலும் லாபமே குறையக் கூடாது. இன்றைக்கு ஆயிரம் ரூபாய் இலாபம் என்றால் நாளைக்கு ஆயிரத்து நூறு ரூபாய் லாபம் வர வேண்டும் என்பார்கள். பத்து ரூபாய் லாபத்தில் குறைந்தாலும் - கவனியுங்கள், நட்டமில்லை; லாபத்தில் குறைவு- எங்கெல்லாம் வங்கு தெரிகிறதோ அங்கெல்லாம் கையை விடுவார்கள். அப்படித்தான் இப்பொழுது பல நிறுவனங்களில் 'குடும்ப நாள்' என்பதையெல்லாம் தலையைச் சுற்றி பொடக்காலியில் வீசிவிட்டார்கள்.

என் மனைவி பணிபுரியும் நிறுவனம் கொஞ்சம் வசதியானது. இயற்கை ஆர்வலர்களும் போலிருக்கிறது. ஒரு சமயம் வீட்டிற்கு மரக்கன்றுகள் கொடுத்திருந்தார்கள். சந்தோஷமாக இருந்தது. அவர்கள் இந்த வருடமும் ‘குடும்ப நாள்’ விழாவுக்காக அழைத்திருந்தார்கள். எப்பவும் அக்கரை பச்சையல்லவா? அதுவும் அந்த நிறுவனத்தில் நிறைய பெண்கள் வேறு வேலை செய்கிறார்கள். பச்சையை பக்கெட் பக்கெட்டாக ஊற்றியிருப்பார்கள் என்பதால் கமுக்கமாக கிளம்பிவிட்டேன். நினைத்த மாதிரியே விழா அருமையாக இருந்தது. 

பெரிய ஹோட்டல் ஒன்றின் புல்வெளியில்தான் ஏற்பாடு. அமர்களப்படுத்தியிருந்தார்கள். மிகப்பெரிய மேடை, அட்டகாசமான இசையமைப்பு, அத்தனை பேருக்கும் ஐந்து நட்சத்திர சாப்பாடு என்று எல்லாமே தூள். ஆனால் எல்லாமே நன்றாக இருந்தால் வேலைக்கு திருஷ்டி ஆகிவிடும் அல்லவா? 

அதனால் நிகழ்ச்சி முடியும் தருணத்தில் வாணவேடிக்கை காட்டினார்கள். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள். கலர் கலராக. அத்தனை நிறங்கள். அத்தனை வெளிச்சம். அத்தனை புகையும் கூட. மேலே முழுவதும் புகையாகத்தான் இருந்தது. குழந்தைகளுக்காக செய்வதாகச் சொன்னார்கள். குழந்தைகளை குஷிப்படுத்த வேறு வழியா இல்லை? லட்ச ரூபாயை செலவு செய்து பட்டாசுதான் கொளுத்த வேண்டுமா? பெங்களூரை வன்புணர்ச்சி செய்து அலங்கோலப்படுத்தியதே இந்த கார்பொரேட் நிறுவனங்கள்தான். வளர்ச்சி என்ற பெயரில் செய்த அட்டகாசங்களுக்காக ஏற்கனவே பெங்களூரை வெயில் தாளித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது இப்படியெல்லாம் வதைக்கிறார்கள். இந்த ஊரை அண்டியிருக்கும் கொஞ்ச நஞ்ச குருவிகளையும் சாவடிக்காமல் விடமாட்டார்கள் போலிருந்தது. யாரிடம் சொல்வது? 

அமைதியாக வந்துவிட்டேன். வெளியே வரும் போது ஜீன்ஸூம் டீசர்ட்டும் அணிந்த ஒரு அம்மிணி ‘ஃபங்ஷன் எப்படி இருந்துச்சு?’ என்றாள். பட்டாசுச் சத்தம், சாப்பாடு எல்லாமே மறந்துவிட்டது. ‘செம ஹாட்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். மனைவிக்கு காதில் விழாது என்ற நம்பிக்கைதான்.

Mar 15, 2014

தோட்டிகள் இன்னமும் இருக்கிறார்களா?

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறதா? தமிழகத்தில் ஒழித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது. பாம்பே டைப் கழிவறைகளில்- அதை பாம்பே டைப் என்றுதான் சொல்வார்கள்- வெளிப்புறமாக ஒரு தகரம் வைத்து மறைத்திருப்பார்கள். காலை நேரத்தில் பஞ்சாயத்து போர்டிலிருந்து ஆட்கள் வருவார்கள். அவர்கள் கையில் நுனியில் மடக்கப்பட்ட ஒரு தகரம் இருக்கும். நாகபாம்பு படம் எடுப்பது போன்ற தோற்றத்தில் அந்தத் தகரம் மடக்கப்பட்டிருக்கும். கழிவறையின் மறைப்புத் தகரத்தை தூக்கிவிட்டு தங்களிடமிருக்கும் பாம்புத் தகரத்தில் மலத்தை சுரண்டி எடுத்து வாளியில் போட்டுக் கொள்வார்கள். 

அந்தக் காலங்களில் அவர்களின் முகத்தைப் பார்ப்பது கூட அருவெருப்பான செயல் என்று சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் வரும் போதே வீதியில் துர்நாற்றம் வருவதான ஒரு பாவனையில் இருப்பார்கள். அதனால் அவர்கள் வரும் போது முகத்தைச் சுளித்தபடியே விளையாடிக் கொண்டிருக்கும் இடத்தை இடமாற்றுவது எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு வாடிக்கையாக இருந்தது. அவர்களின் முகம் கூட எதுவும் இப்பொழுது ஞாபகத்திற்கு வரவில்லை. அவர்களை ஏறெடுத்து பார்த்திருந்தால்தானே ஞாபகம் இருக்கும். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அவர்களின் பாம்புக்கரண்டியும், மலம் நிரம்பிய வாளிகளும்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இன்னொரு விஷயமும் ஞாபகம் இருக்கிறது. மழைக்காலங்கள். அத்தகைய கழிவறைகள் புழக்கத்தில் இருந்த காலத்தில் மழை வந்துவிட்டால் வீதியில் கால் வைக்க முடியாது. அதுவும் அடைமழைக்காலங்களில் வீட்டில் வெளியவே விடமாட்டார்கள். வீதிகள் அத்தனை அவலமாகக் இருக்கும். காலங்காலமாக ஊர்களைச் சுத்தம் செய்த அவர்கள் இப்பொழுது எங்கே போய்விட்டார்கள், அவர்களின் வாரிசுகள் என்னவாகியிருப்பார்கள் என்று ஒன்றும் தெரியவில்லை. எங்கள் ஊரில் ‘பன்னியாண்டி’களும் உண்டு. பன்றி மேய்ப்பவர்கள். சாக்கடைகளில் மேயும் பன்றிகள் உறங்குவதும் இவர்கள் உறங்குவதும் ஒரே குடிசையில்தான் இருக்கும். பாவப்பட்ட ஜென்மங்கள். அவர்கள்தான் கழிவறை சுத்தம் செய்பவர்களாக இருந்தார்கள் என்று மங்கலாக ஞாபகம் இருக்கிறது. 

ஊரில் இன்னமும் பன்றிகள்  இருக்கின்றன. நல்லவேளையாக பன்னியாண்டிகள் என்ற அடைமொழி யாருக்கும் இல்லை.

பொடியன்களாக இருக்கும் போது தலை கலைந்து கிடந்தாலோ, உடலில் அழுக்கு அப்பிக் கிடந்தாலோ அடி விழும் போதெல்லாம் ‘மேலும் காலும் பாரு..பன்னியாண்டிப்பசங்க மாதிரி’ என்றுதான் விழும். அது வீட்டில் அடி விழுந்தாலும் சரி; பள்ளியில் ஆசிரியரிடம் அடி விழுந்தாலும் சரி. ஒரே வசவுதான். பன்னியாண்டிப் பையன்கள் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள்; சுத்தமாக இருக்க மாட்டார்கள்; பன்றிகளோடு பன்றிகளாகத் திரிவார்கள்; மண்ணில் விளையாடுவது போலவே மலத்திலும் விளையாடுவார்கள். இப்படித்தான் சொல்லித் தந்தார்கள். நாங்களும் அப்படித்தான் நம்பியிருந்தோம்.

அவர்களும் மனிதர்கள்தான் என்ற ஒரு எண்ணமே மனதில் இருந்ததில்லை. ஜந்துக்கள். அப்படித்தான் மனதுக்குள் பதிந்து போய் கிடந்திருக்கிறார்கள். இத்தனை வருடங்கள் கழித்து அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அதற்கு காரணமிருக்கிறது.  நேற்றுதான் ‘தோட்டியின் மகன்’ என்ற நாவலை வாசித்து மூடி வைத்தேன். மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்டு தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்திருக்கிறார். இந்நாவல் 1940 ஆம் ஆண்டுகளிலேயே எழுதப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட அப்பொழுதே -1950 வாக்கில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ‘சரஸ்வதி’ இதழில் தொடராகவும் வந்திருக்கிறது. 

பதினைந்து வருடங்களுக்கு முன்புதான் புத்தக வடிவம் ஆக்கப்பட்டிருக்கிறது. எழுதிய இத்தனை வருடங்களுக்குப் பிறகு படித்தாலும் புத்தம் புதியதாகவே இருக்கிறது. இன்னமும் ஐம்பது வருடங்கள் கழித்து வாசித்தாலும் அப்படியேதான் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி காலாகாலத்துக்கும் சாஸ்வதம் பெறுகிறது அல்லவா? இதைத்தான் க்ளாஸிக் என்கிறார்கள். இந்த நாவலை தாராளமாக க்ளாஸிக் என்று சொல்லிவிடலாம்.

ஒரு புத்தகத்தைப் பற்றி எழுதும் போது கதையைச் சொல்லிவிடாமல் இருப்பது நல்லது. அதனால் கதையெல்லாம் சொல்லவில்லை. கேரளாவின் ஆலப்புழை முனிசிபாலிட்டியில் அந்தக் காலத்தில் தோட்டிகளாக இருந்த குடும்பங்களைப் பற்றிய கதை இது. அந்தக் குழுவில் சுடலைமுத்து என்ற தோட்டியின் மகனும், அவனது மனைவியான வள்ளிக்குமான காதல், உறவு, அவர்களுக்குத் தங்கள் மகன் மீதான பாசம் ஆகியவற்றின் ஊடாக தோட்டிகளின் பிரச்சினைகள், மேல் வர்க்கத்தினரின் சுரண்டல்கள், அந்தக் காலத்தின் கொள்ளை நோய்கள் என எல்லாவற்றையும் துல்லியமாகவும் கச்சிதமாவும் நூற்றியருபது பக்கங்களில் எப்படி அடக்க முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இருபது வருடங்களுக்கு முன்பிருந்த பன்னியாண்டிகளும் தோட்டிகளுமே மிக மிகப் பாவப்பட்டவர்கள் என்றால் அறுபது வருடங்களுக்கு முந்தைய தோட்டிகளின் நிலை எப்படியிருந்திருக்கும் என்பதை இந்த நாவல் தத்ரூபமாக சித்திரப்படுத்தியிருக்கிறது. இது ஒரு துன்பியல் நாவல்தான். கசக்குவதே தெரியாமல் நமது மனதை கசக்கும் நாவல்.

டேனியலின் ‘எரியும் பனிக்காடு’ நாவலிலும் தேயிலைக் காடுகளில் பணிபுரிவதற்குத் தேவையான அடிமைகளை திருநெல்வேலிப்பக்கத்திலிருந்துதான் அழைத்துச் செல்வார்கள். இந்த நாவலிலும் ஆலப்புழைக்குத் தேவையான தோட்டிகளை நெல்லைச் சீமையிலிருந்துதான் அழைத்துச் செல்கிறார்கள். அந்தக் காலத்தில் நெல்லை ஏழைகள்தான் பாவப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் போலிருக்கிறது.

சு.ராவின் மொழிபெயர்ப்பை பற்றியும் சொல்லி விட வேண்டும். ஒரு கூர்மையான கத்தியை வெண்ணைக்கட்டியில் இழுப்பது மாதிரியாக கீறிக் கொண்டே போகிறது. ஏதோ ஒரு கட்டுரையில் மொழிபெயர்ப்பு பற்றியும் அதன் செம்மைப்படுத்துதல் பற்றியும் குறிப்பிடும் போது ‘நூறாவது தடவை வாசிக்கும்போது கூட ஏதாவது தவறு கண்ணில் படும்’ என்று சு.ரா எழுதியிருப்பதாக சமீபத்தில்தான் படித்தேன். எழுத்தைப் பொறுத்தவரையிலும் தனது ஒவ்வொரு செயலையும் மிகச் சிரத்தையுடன் செய்த மனிதர் சு.ரா. அதை இந்த நூலிலும் காட்டியிருக்கிறார் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

மொத்த புத்தகத்தையும் மூன்றரை மணிநேரத்தில் முடித்துவிடலாம். அப்படித்தான் நான் முடித்தேன். முடித்துவிட்டு விடிந்த பிறகு இன்னொரு முறையும் வாசித்துவிட்டேன். அவ்வளவு பிரமாதமான நாவல் இது.  

தோட்டியின் மகன் நாவலை ஆன்லைனில் வாங்கலாம்.

Mar 14, 2014

ஞாநி தேர்தலில் நிற்கிறாராமே?

பெங்களூரில் ஆங்காங்கே பிரச்சாரம் துவங்கிவிட்டது. போஸ்டர், பேனர் எதுவும் இல்லை. ஆட்டோக்களில் கிளம்புகிறார்கள். ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டே தலையில் கொடி கட்டிய இளைஞர்கள் நடனமாடுகிறார்கள். கட்சிக்காரர்கள் கைகூப்பியபடியே செல்கிறார்கள். வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டால் இவர்களின் நரம்புகளில் இன்னமும் முறுக்கு கூடிவிடும். இங்கு பா.ஜ.கவுக்கும் காங்கிரஸூக்கும்தான் போட்டி என்றாலும் பல தொகுதிகளில் தேவகெளடாவின் ஜனதா தளம் பிரிக்கும் வாக்குகளும் முக்கியமானவைதான். இவர்கள் கர்நாடகத்தின் மூன்றாவது சக்தி.

அரசியலைப் பொறுத்த வரையில் மூன்றாவது ஆளை பெரிய ஆளாக வளர விடமாட்டார்கள் அல்லவா? பா.ஜ.க அல்லது காங்கிரஸ், திமுக அல்லது அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் அல்லது இடது சாரிகள். இப்படித்தான். மூன்றாவதாக ஒருவன் முளைத்தால் முதலில் இடம்பிடித்து வைத்திருக்கும் இரண்டு பேரும் சேர்ந்து மூன்றாமவனை காலி செய்துவிடுவார்கள். மீறி வர வேண்டுமானால் ஏற்கனவே இருக்கும் இரண்டு பேரில் ஒருவனை அழித்தால்தான் மூன்றாமவனுக்கு இடம்.

தேவகெளடாவின் மகன் குமாரசாமி இப்போதிருக்கும் மற்ற கன்னட அரசியல்வாதிகளைக் காட்டிலும் ஒரு பங்கு நல்லவர் என்று பிறர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எடியூரப்பாவுடன் செய்து கொண்ட ‘நீ ஆறுமாதம்; நான் ஆறுமாதம்’ ஒப்பந்தத்தை சொதப்பியதில், குட்டி ராதிகாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதில் உருவாக்கிக் கொண்ட பிம்பம் என அடி மேல் அடி வாங்கி இப்பொழுது வெறும் மூன்றாவது சக்தியாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

கர்நாடக விவகாரத்தைப் பற்றி எழுதுவதற்காக இதை ஆரம்பிக்கவில்லை.

எழுத்தாளர் ஞாநி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துவிட்டார். அநேகமாக பாராளுமன்றத் தேர்தலில் சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் போலிருக்கிறது. ஞாநியை பாராட்டுபவர்களுக்கும் வாழ்த்துபவர்களுக்கும் இணையாக சமூக ஊடகங்களில் கிண்டலடிப்பவர்களும் தாக்குபவர்களும் அதிகம். ‘எத்தனை லட்சங்கள் வாங்கினார், எத்தனை கோடிகள் வாங்கினார்’ என்று கூச்சமே இல்லாமல் எழுதுகிறார்கள். நோட்டுக்கு விழும் மனிதராக இருந்திருந்தால் அவர் எப்பொழுதே பெரும் கோடீஸ்வரராகியிருக்கக் கூடும். 

ஞாநியின் அரசியல் செயல்பாடுகள் இன்றுதான் ஆரம்பித்திருக்கின்றன என்று நம்பிக் கொண்டிருப்பவர்களின் விமர்சனங்கள் இவை. ஞாநிக்கு அரசியல் புதிதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அரசியல் களங்களில் மிகத் தீவிரமாக பணியாற்றியிருக்கிறார் என்பதுதான் உண்மை. ரிட்டையர்ட் ஆன காலத்தில் பதவிக்கு ஆசைப்படுகிறார், பணத்துக்காக அரசியலுக்கு வருகிறார் என்பதெல்லாம் வெறுமனே அவர் மீது புழுதி வாரி வீசுவதற்காக எழுதப்படும் வாசகங்கள். ஞாநி அப்படிப்பட்ட ஆள் இல்லை.

நமது அரசியல் சார்புகளையும், கட்சி சார்ந்த விருப்பங்களையும் ஒரு வினாடி ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ஞாநி போன்றவர்கள் அரசியலுக்கு வருவதை நிச்சயமாக வரவேற்போம் என நினைக்கிறேன். எந்தவொரு அரசியல்வாதியைவிடவும் ஞாநி ஒரு துளியாவது மேன்மையானவராக இருப்பார் என முழுமையாக நம்பலாம். அவரது கருத்துக்கள் நமக்கு எவ்வளவுதான் எதிர்ப்புடையவையாக இருந்தாலும் அவர் மிக நேர்மையான மனிதர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் தேவையில்லை. 

தனக்கு என்ன தோன்றுகிறதோ, தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேசக் கூடிய மிகச் சில கருத்தாளர்களில் ஞாநி மிக முக்கியமானவர். இங்கு யாருடைய கருத்தை அத்தனை பேரும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள்? ஒருவர் வெளிப்படையாகச் சொல்வதை நான்கு பேர் ஏற்றுக் கொண்டால் எட்டுப்பேர் எதிர்க்கத்தான் செய்வார்கள். ஞாநி பேசுவதை பதினாறு பேர்கள் எதிர்க்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் அதற்காக அவர் எந்தக் காலத்திலும் ஒதுங்கிக் கொண்டது இல்லை என்பதுதான் முக்கியம்.

ஞாநி தனது மோடி எதிர்ப்பு பேச்சுகளுக்காகவும், கருணாநிதி எதிர்ப்பு அரசியலுக்காகவும்தான் தற்போது மிகத் தீவிரமான விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவை ஒரு பக்கம் கிடக்கட்டும். 

ஞாநி போன்ற உரத்த சிந்தனையாளர்கள், வெளிப்படையான கருத்தாளர்கள், தயக்கமில்லாமல் பொதுவெளியில் ஒரு விவாதத்தை உருவாக்குபவர்கள் தேர்தலில் பங்கேற்பது என்பது ஒரு முக்கியமான செயல். அடுத்து வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான விவாதம் என்றால் என்ன என்பதையும், பணமில்லாத வாக்குகள் சாத்தியம் என்பதையும் வெளிக்காட்டுவதற்கேனும் இத்தைகைய தேர்தல் பங்கேற்புகளை நாம் ஆதரிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பெரும் அரசியல் கட்சிகளின் பிரச்சார பலம், அவர்களிடம் இருக்கும் தொண்டர்கள் மற்றும் ஊடக பலத்திற்கு மத்தியில் இவரது தேர்தல் போராட்டம் சவால்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஞாநியின் வயது, அவரது உடல்நிலை, தேர்தலுக்கு இருக்கும் மிகக்குறைந்த கால அவகாசம், பாராளுமன்றத் தொகுதிக்காக பிரச்சாரம் செய்ய வேண்டிய பரந்த நிலப்பரப்பு ஆகியனவற்றையும், அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஸ்டண்ட்கள், ஆம் ஆத்மியின் சரிந்து கொண்டிருக்கு இமேஜ் போன்றவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தால் ஞாநி வெல்வது லேசுப்பட்ட காரியம் இல்லை. 

வெல்கிறார் அல்லது தோற்கிறார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். வெற்றி பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அரசியல் பலன்களுக்காகவும் அதிகார ஆதாயங்களுக்காகவும் பணம் கொழிக்கும் கட்சிகளை அண்டி நிற்காமல், எந்தவிதமான உள்கட்டமைப்பும் இல்லாத கட்சியில் சேர்ந்து களம் இறங்கும் ஞாநிக்கு நமது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம். 

Mar 13, 2014

எவ்வளவு சம்பளம் வேண்டும்?

ஊரில் ஒரு பையன் பொறியியல் படிப்பின் இறுதியாண்டில் இருக்கிறான். சுமாரான குடும்பம். இதுவரையிலும் கேம்பஸ் இண்டர்வியூ எதிலும் தேர்வாகவில்லை. ‘அடுத்து என்ன செய்யலாம்’ என்று விசாரித்தான். சரியான பதிலைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஐடி தவிர்த்து வேறு ஏதேனும் வேலை பற்றியும் யோசித்திருக்கிறான். ஆனால் சம்பளம் குறைவாக இருப்பதாகச் சொன்னான். அது வாஸ்தவம்தான். ஒப்பீட்டளவில் பிற துறைகளில் சம்பளம் குறைவாகத்தான் கொடுக்கிறார்கள்.

வேறு என்ன செய்வது?

எம்.டெக் படித்துக் கொண்டிருந்த போது ஐடி துறையில் வேலைக்குச் சேர்வதில்லை என்று இன்னும் சிலரோடு சேர்ந்து கங்கணம் கட்டியிருந்தேன். அந்தச் சமயத்தில் மென்பொருள் நிறுவனங்களில் ஆட்களுக்கு ஏகப்பட்ட தேவையிருந்தது. அள்ளியெடுத்தார்கள். ஒரே கல்லூரியில் டிசிஎஸ் எந்நூறு பேர்களை வேலைக்குத் தேர்ந்தெடுத்தால், சிடிஎஸ் தொள்ளாயிரத்துச் சொச்சம் பேர்களை தேர்ந்தெடுத்தது. விப்ரோ, ஹெச்.சி.எல் என்று எந்த நிறுவனமும் சளைக்கவில்லை. இறுதியாண்டு படிப்பு தொடங்கிய முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட அத்தனை மாணவர்களும் கையில் வேலையை வைத்திருந்தார்கள். நாங்கள் பத்து இருபது பேர் தழுங்கி போயிருந்தோம். அதுவும் கூட கங்கணத்தினால்தான். இல்லையென்றால் வத்தலோ, தொத்தலோ- ஒரு வேலை வாங்கியிருக்கலாம். அதன் பிறகு ஓரிரு மாதங்களுக்கு ஐடி சாராத நிறுவனங்களே (non-IT) வளாக நேர்முகத் தேர்வுக்கு வரவில்லை. கொஞ்சம் பயப்படத் தொடங்கினோம். ஒருவேளை, வேலை எதுவும் கிடைக்கவில்லையென்றால் போட்டித் தேர்வுகள் எழுதலாம் என்று தயாரிப்புகளில் ஈடுபடத் துவங்கிய போது கெட்ட நேரம் பீடித்துக் கொண்டது. ஹைதராபாத்திலிருந்து ஒரு நிறுவனம் வேலையில் ஆள் எடுக்க வந்திருந்தது. அது பெரிய நிறுவனம்தான். மின்மாற்றிகள் (Transformer) தயாரித்துக் கொண்டிருந்தார்கள். வருடத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு கோடிகளில் வர்த்தகம் நடைபெறும் நிறுவனம்.

ஆள் பிடிக்க வந்திருந்த இரண்டு பேரும் லாரல்-ஹார்டி போலிருந்தார்கள். எடுத்த உடனேயே எழுத்துத் தேர்வு. வெறும் பத்துப் பேர்கள்தான் எழுத்துத் தேர்வை எழுதினோம். எழுதிய அனைவருமே அடுத்த சுற்றுக்குத் தேர்வு பெற்றுவிட்டதாகச் சொன்னார்கள். அடுத்த சுற்று குழு விவாதம். அதிலும் அத்தனை பேரும் தேர்வு பெற்றுவிட்டதாகச் சொன்னார்கள். சிரமமே இல்லாமல் சுற்றுக்களை தாண்டிக் கொண்டிருக்கும் போதே விழித்திருக்க வேண்டும். ம்ஹூம். நேர்முகத் தேர்வில் வரிசையாக அழைத்தார்கள். 

“எவ்வளவு சம்பளம் வேண்டும்?” இதுதான் முதல் கேள்வியே. ஐடியில் வேலை வாங்கியிருந்தவன் ஒவ்வொருவனும் குறைந்தபட்சம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கப் போகிறான். இது எலெக்ட்ரிக்கல் நிறுவனம்; அதிகமாகக் கேட்டால் நம்மை வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் என்று பயந்து கொண்டே “பதினைந்தாயிரம் கொடுங்க சாமீ” என்றேன். அவ்வளவுதான் நேர்காணல் முடிந்துவிட்டது. அடுத்துப் போனவன் என்னைவிட பயந்தாங்கொள்ளி “பத்தாயிரம் கொடுங்க சாமீ...போதும்” என்றிருக்கிறான். அவனையும் அந்த ஒரு கேள்வியோடு அறையைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். கடைசியில் எங்கள் இரண்டு பேரையும் ஹைதராபாத் வரச்சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள். கலந்து கொண்ட பத்து பேரில் எங்கள் இருவரிடமும் அதிகமான மதிப்பெண்கள் இருந்ததால் நாங்கள் சிக்கிக் கொண்டோம். மற்ற எட்டு பேருக்கும் பயங்கரக் கடுப்பு- தேவையில்லாமல் ஒவ்வொரு சுற்றிலும் கலந்து கொள்ள வைத்துவிட்டார்கள் என்று. 

ஹைதராபாத்தில் சுந்தரத் தெலுங்கு இல்லை- கொச்சைத் தெலுங்குதான். ஆனால் ‘இப்புடு சூடு’ என்ற ரஜினியின் டயலாக் தவிர வேறு ஒரு வார்த்தையும் எனக்குத் தெலுங்கில் தெரியாது. பயந்துகொண்டுதான் சபரி எக்ஸ்பிரஸிலிருந்து இறங்கினேன். நிறுவனத்தைத் தேடிக் கண்டுபிடித்துச் செல்ல வேண்டிய வேலை இருக்கவில்லை. ரயில்வே ஸ்டேஷனுக்கே கார் அனுப்பியிருந்தார்கள். பெருமையாக இருந்தது. அதோடு நிறுத்திக் கொண்டார்களா? ஹைதராபாத்தின் புகழ்பெற்ற பிரியாணியான பாரடைஸ் பிரியாணி வாங்கிக் கொடுத்தார்கள். அவ்வளவுதான். இந்த இரண்டு செயல்களும் போதும். ‘வேலைக்குச் சேர்ந்தால் இங்கேதான் சேர வேண்டும்’ என்று முடிவெடுத்துக் கொண்டோம். 

எங்கள் ஆயாவின் கடைசிக்காலம் அது. ஊர் முழுக்க பெருமையடித்துத் திரிந்திருக்கிறார். ‘ஹைதராபாத் போறானாம்..இப்போ பாஞ்சாயிரம் சம்பளம்...அடுத்த வருஷத்துலருந்து முப்பதஞ்சாமா’- இதில் கடைசி வரி ஆயாவே சேர்த்துக் கொண்டது. உண்மையில் முதல் ஒரு வருடத்திற்கு பத்தாயிரம்தான் சம்பளம். அடுத்த வருடத்திலிருந்து பதினைந்தாயிரம் ஆக்கப்படும் என்றுதான் கடிதம் கொடுத்திருந்தார்கள். அதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வருத்தம்தான். பி.ஈ முடித்தவுடனே வேலைக்குச் சென்றிருந்தாலும் கூட இவ்வளவு சம்பளம் வாங்கியிருக்க முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் அதை அவர்கள் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

படிப்பு முடிந்தவுடன் பெட்டி படுக்கையெல்லாம் கட்டிக் கொண்டு இன்னொரு முறை ஹைதைக்கு கிளம்பிப் போனோம். முதல் நாள் அனைத்துச் சான்றிதழ்களையும் கொண்டு வரச் சொன்னார்கள். சுத்தபத்தமாக குளித்து நெற்றியில் ஒரு கீற்று திருநீறோடு சென்றிருந்தேன். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு பத்திரத்தை நீட்டினார்கள். ‘நான்கு வருடம் இதே நிறுவனத்தில் பணிபுரிவேன்’ என்பதற்கான உறுதிமொழி அது. இப்பொழுதுதான் முதல் அடி- அதுவும் பொடனியிலேயே விழுந்தது. ‘இப்படியெல்லாம் முன்பு சொல்லவே இல்லையே’ என்றோம். ‘இதுதான் நிறுவனத்தின் பாலிஸி. யாராக இருந்தாலும் இந்த உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும்’ என்றார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. கூட வந்திருந்தவன் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. கையெழுத்து போட்டுவிட்டான். அவனது அம்மா அப்பா அந்த ஊரில்தான் இருந்தார்கள். அதனால் அவனுக்கு பிரச்சினை இல்லை. எனக்குத்தான் நடுங்கியது. நான்கு வருடம் சிக்கிக் கொண்டால் தமிழ்நாட்டுக்கும் நமக்கும் தொடர்பே இல்லாமல் போய்விடுமோ என்று பயந்தேன்.  

‘உங்கள் வேலையே வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் போகவும் தைரியம் இல்லை. செலவு செய்து இவ்வளவு படிக்க வைத்துவிட்டார்கள்.  ‘வேலை இல்லை’ என்று எப்படி அம்மா அப்பா முகத்தில் முழிப்பது? அந்த பயத்திலேயே கையெழுத்திட்டுவிட்டேன். அவர்கள் சான்றிதழ்களையாவது திருப்பித் தந்திருக்கலாம். அதெப்படி தருவார்கள்? அதுதான் அவர்களுக்கு பிடி. வேலையை விட்டு வெளியேறும் போது சான்றிதழ்களை திரும்ப வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். விநாயகமுருகனின் துக்கம் தொண்டையை அடைப்பது பற்றி 2005 ஆம் ஆண்டே உணர்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட தருணம் அது.

அதன் பிறகுதான் அத்தனை அடிகளும் பொடனி அடியாகவே இருந்தன. முதல் மாதச் சம்பளம் 6500 ரூபாய்கள். இதயம் நின்றுவிடும் போலிருந்தது. சாப்பாட்டுச் செலவுக்கு, போக்குவரத்துச் செலவுக்கு, பி.எஃப் என பிடித்தம் போக அவ்வளவுதான் வருமாம். லாரல்-ஹார்டியில் ஹார்டி மட்டும் சிக்கிக் கொண்டார்.  “இவ்வளவுதான் தருவீர்கள் என்றால் வந்திருக்கவே மாட்டேன். வீட்டிற்கு எதை அனுப்புவது?” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அழுகை பொத்துக் கொண்டது. மனம் இறங்கியிருப்பார் போலிருக்கிறது. அடுத்த மாதத்தில் கூடுதலாக இரண்டாயிரம் சேர்த்துக் கொடுத்தார்கள். அப்பவும் அழுகைதான். ஆனால் எனக்குள்ளேயே அழுது கொண்டிருந்தேன்.

இந்தப் பணத்தில் வீட்டு வாடகை, காலை-இரவு உணவுச் செலவு என முக்கால்வாசி கரைந்துவிடும். ஒரு முறை ஊருக்கு வந்துவிட்டு போனால் மிச்சமும் காலி. வெறுப்பாக இருந்தது. அடுத்த இரண்டு வருடங்களுக்கு உடன் படித்தவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவர்களிடம் பேசினால் முதல் கேள்வி அல்லது இரண்டாவது கேள்வியாக என்ன வரும் என்று தெரியும். அந்தக் கேள்விக்கு பயந்தே பம்மிக் கொண்டிருந்தேன். அங்கு சம்பளம் மட்டும் பிரச்சினை இல்லை. அங்கு இருந்த சூழலும், வீட்டை விட்டு பிரிந்த துக்கமும், தொடர்புகளற்ற தனிமையும் பிழிந்து கொண்டிருந்தன. 

ஒரு வருடம் எட்டு மாதங்கள் கழிந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கிருந்து சொல்லாமல் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டேன். தொலைபேசியில் அழைத்தார்கள். பதில் சொல்லவில்லை. மூன்றாம் நாளே வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார்கள். அது நோட்டீஸ் இல்லை. மிரட்டல் கடிதம். காணாமல் போய்விட்டதாக காவல்துறையில் புகார் அளிப்போம் என்று சொல்லியிருந்தார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மா பயந்து போனார். மீண்டும் போய் அவர்களிடமே சேர்ந்து கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கோபியில் அப்புசாமி என்றொரு வக்கீல் இருந்தார். அவர்தான் ‘விடு தம்பி பார்த்துக்கலாம்’ என்று தேற்றினார். என்ன தைரியத்தில் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனாலும் பயம் உள்ளுக்குள் கிடந்து அலைகழித்துக் கொண்டிருந்தது. இரண்டு வாரங்கள் கழித்து இன்னொரு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். உள்ளூர் தபால்காரரிடம் சொல்லி ‘வீடு காலி செய்யப்பட்டிருக்கிறது’ என்று திருப்பி அனுப்பச் சொன்னோம். அவரும் உதவினார். அதோடு சரி. சனியன் தொலைந்தது. அதன் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. ஒரிஜினல் சான்றிதழ்கள் போனது போனதுதான்.

ஓரிரு வாரங்கள் கழித்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புது நிறுவனத்தில் சேர்ந்தேன். அப்படி சேர்ந்த புது நிறுவனம்தான் ஐடிதுறையில் கால் விடுவதற்கான முதல்படி.

இந்தக் கதையை முதல் பத்தியில் கேள்வி கேட்ட பையனுக்கு பதிலாகச் சொன்னேன். குழம்பாமல் இருப்பானா? 

‘அப்படீன்னா non-IT வேண்டாமாண்ணா?’ என்றான்.

‘நான் அப்படிச் சொன்னேனா முருகேசா?’ 

‘வேற என்ன அர்த்தம்?’

‘சேரலாம். non-IT நிறுவனங்களில் சேர்வதால் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் சேரும் போது நல்ல நிறுவனத்தில் சேர்கிறோமா? என்று விசாரிப்பது நெம்ப முக்கியம். வேலை கிடைக்கிறதே என்பதற்காக பொக்கனாத்தி கம்பெனிகளில் சிக்கிக் கொண்டால் அவ்வளவுதான். சோலி முடிந்துவிடும்’ என்றேன். அவனுக்கு புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ‘அப்புறம் பேசுகிறேன்’என்று துண்டித்துவிட்டான். மீண்டும் அழைப்பான் என்று நம்பிக்கையில்லை. ஒருவேளை அழைத்தால் non-IT நிறுவனங்களில் இருக்கும் நல்ல விஷயங்கள் பற்றிச் சொல்வதற்கு ஒரு கதை வைத்திருக்கிறேன்.

Mar 11, 2014

ஊரே அம்மணமாக சுற்றும் போது

அலுவலகத்தில் மதிய உணவை யாரோடும் சேர்ந்து சாப்பிடுவதில்லை என்ற அவப்பெயர் எனக்கு உண்டு. வீட்டிலும் அப்படித்தான். தனியாக அமர்ந்து கொட்டிக் கொள்வேன். உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் அதை மட்டுமே செய்ய வேண்டும் என நினைப்பேன். பள்ளிப்பருவத்திலிருந்தே பழகிய பழக்கம் இது. இப்பொழுது வினையாக போய்விட்டது. அதை வைத்தே திட்டுகிறார்கள். 

அலுவலகத்தில் கழண்டு கொள்வதற்கு இன்னொரு அனுபவமும் காரணமாக இருக்கிறது. 

முள்ளிவாய்க்கால் சம்பவம் உச்சகட்டத்தில் இருந்த போது யுத்த நிலவரங்களை அலுவலக கேண்டீனில் இருக்கும் டிவியில்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். கூடவே இன்னொரு தமிழ் பையனும், பீஹாரி ஒருவனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மண்டை பிளந்த நிலையில் பிரபாகரன் படத்தைக் சி.என்.என் - ஐ.பி.என்னில் காட்டிய போது ‘Let him die, mother fucker' என்றான் அந்த பீஹாரி. அதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தமிழ் பையன் ஏற்கனவே வெறியேறிக் கிடந்தான். பீஹாரி சொன்னது காதில் விழுந்ததும் ‘did you send your mother?' என்று கேட்டபடியே எச்சில் கையோடு ஓங்கி அறைந்தான். பீஹாரி நாற்காலியோடு சேர்ந்து கீழே விழுந்த்தான். அவனது தட்டில் இருந்த உணவு உடல் முழுவதும் கொட்டி ரசாபாசம் நிகழ்ந்துவிட்டது. இதெல்லாம் சில வினாடிகளில் முடிந்துவிட்டது. செக்யூரிட்டிகள் ஓடி வந்து மூன்று பேரின் பெயரையும் குறித்துக் கொண்டார்கள். அடுத்த நாள் விசாரணைக்கு அழைத்தார்கள். எனக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுத்தார்கள். 

நண்பர்களிடம் தீவிரமான விஷயங்களை விவாதிப்பது வேறு விஷயம். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கீழே இறங்கலாம். ஆனால் அலுவலகத்தில் அப்படி இருக்க முடியாது அல்லவா? ப்ரொபஷனலிஸம் என்ற பெயரில் சிக்கினால் சிதைத்துவிடுவார்கள். அதனால் பொதுவாகவே மொன்னையான விஷயங்களை பேசிக் கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. ஷில்பா ஷெட்டி பற்றியோ அல்லது அமிதாப்பச்சன் பற்றியோ எதையாவது பேசினால் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் நமது நேரம் கெட்டுக் கிடந்தால் வட இந்தியர்கள் தமிழர்களைப் பற்றி பேசுவார்கள். அதற்கு காது கொடுப்பதுதான் ரொம்பவும் சிரமம். வட இந்தியப் பத்திரிக்கைகள் மட்டுமில்லை- பெரும்பாலான வட இந்தியர்களுக்கும் தமிழர்கள் பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதுதான் கொடுமை. இருந்தாலும் பேசுவார்கள். கேட்டுக் கொள்ள வேண்டும். 

நண்பர் ஒருவர் ராணுவத்தில் இருக்கிறார். அவரது சீனியர்கள் அமைதிப்படையாகச் சென்று ஈழத்தில் தாங்கள் நிகழ்த்திய வீர பிரதாபங்களை வெளிப்படையாகவே பேசுவார்களாம்.  ‘என்ன சார் செய்ய முடியும்? பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். சீனியர்களாக போய்விட்டார்களே’ என்பார். அப்படித்தான் அலுவலகத்திலும். வேறு வழியில்லை.

ஈழம் பற்றிய பிரச்சினை என்று இல்லை- மீனவர்கள் பிரச்சினை, கூடங்குளம், தமிழர்களின் ஹிந்திப் புலமை, தமிழ்நாட்டின் அரசியல் என்று எதைப் பற்றி பேசினாலும் கிட்டத்தட்ட ஒரே மனநிலையில்தான் பேசுகிறார்கள். வட இந்தியா வரைக்கும் போக வேண்டியதில்லை. ஆந்திரா, கர்நாடகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தமிழ்நாடு பற்றிய தெளிவான பார்வை இல்லை என்பதுதான் உண்மை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. நமக்கு எத்தனை பேருக்கு தெலுங்கானா விவகாரம் பற்றி முழுமையாகத் தெரியும்? ஒரிசா, கர்நாடக சுரங்க முறைகேடுகள் பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம்? விதர்பா பிரச்சினையில் எவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறோம்?

நாம் இந்த நிலைமையில் இருந்து கொண்டு பிறகு எப்படி பெங்காலிக்கு ஈழம் பற்றியும், மராத்திக்கு பெரியார் அணைவிவகாரம் பற்றியும் தெரியவில்லை என்று புலம்ப முடியும்? அதனால் ‘நீ என் பிரச்சினை பற்றியும் நான் உன் பிரச்சினை பற்றியும் கேண்டீனில் பேச வேண்டாம்’ என்பதால்தான் இந்த கழண்டு கொள்ளல்.

அப்படியிருந்தும் விதி வலியது.

சென்றவாரத்தில் ஒரு நாள் சிக்கிக் கொண்டேன். மொத்தம் பன்னிரெண்டு பேருக்கு ஒரு தயாள பிரபு பிரியாணி வாங்கிக் கொடுத்தார். ட்ரீட். கடைக்கு ஆர்டர் கொடுத்தால் பிரியாணியை பொட்டலம் கட்டிக் கொண்டு வந்து அலுவலகத்திலேயே கொடுத்துவிடுகிறார்கள். ஃபிக்ஸட் பட்ஜெட். இதுவே பன்னிரெண்டு பேரையும் கடைக்கு அழைத்துச் சென்றால் ஒருவர் சில்லி சிக்கன் கேட்பார். இன்னொருவர் மட்டன் சுக்கா கேட்பார். பில் எகிறிவிடும் என்பதால் இந்த ‘ஹோம் டெலிவரி’ ட்ரீட்தான் இப்பொழுது அடிக்கடி நிகழ்கிறது. 

அது இருக்கட்டும்.

பன்னிரெண்டு பேரில் ஒருவர் ஆரம்பித்தார். அவர் பெங்காலி. அவர் மம்தா பற்றி பேசியிருக்கலாம். கொல்கத்தா பற்றி பேசியிருக்கலாம். அவருக்கு என்னவோ மூக்கில் அரிப்பு. அதையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாடு பற்றி பேசத் தொடங்கினார். ஏழு பேர் விடுதலையிலிருந்து தமிழர்களின் ஹிந்திப் புலமை வரை இழுத்துக் கொண்டேயிருந்தார். அங்கு நான் மட்டும்தான் தமிழ். கூட இருந்த பத்து பேரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி சமயங்களில் எனக்கு பேச்சு வராது. அதுவும் ஆங்கிலத்தில் என்றால் இன்னமும் சிரமம். தமிழிலிலே ஆங்கிலத்தில் பேச வேண்டியதாகிவிடும். அந்த பெங்காலிக்கு என் மீதுதான் கடுப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை எப்படி நிறுத்துவது என்றும் தெரியவில்லை. பிரியாணி உள்ளே செல்ல திணறிக் கொண்டிருந்தது. 

சரி பேசித் தொலையட்டும் என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். எல்லோரும் உணவை முடிக்கும் தருணத்தில் ‘டிசிஎஸ் உமாமகேஸ்வரி’ விவகாரத்திற்கு வந்தான். இந்த விஷயத்தில் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்ற ரீதியில் இழுத்துக் கொண்டிருந்தான். இது எப்படி இத்தனை நேரம் எனக்கு நினைவுக்கு வராமல் போனது என்று தெரியவில்லை. இந்தக் கொலையில் சிக்கிய நான்கு பேரும் மேற்குவங்கத்துக்காரர்கள்தானே. மாட்டினான் பெங்காலி. ‘நடந்தது என்னவோ தமிழ்நாட்டில்தான் ஆனால் நடத்தியது உங்கள் ஆட்கள்’ என்று சொல்லிவிட்டேன். அதுவரைக்கும் அவனுக்கு இந்த கைது விவகாரம் பற்றித் தெரியவில்லை.  ‘Is it? is it' என்று இரண்டு முறை கேட்டான். ‘Yes it is' என்றேன். இது அவனுக்கு போதுமான பதிலாக இருந்தது.  அடங்கிக் கொண்டான். 

நான்கு பேர் வன்புணர்ந்தார்கள் என்பதால் மொத்த பெங்காலிகளும் அப்படித்தான் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் வேறு வழி தெரியவில்லை. எத்தனை நேரம்தான் கூட்டத்திற்குள் வழிந்து கொண்டே இருப்பது? அதனால்தான் சாணியடித்துவிட்டேன்.

அதை விடுங்கள். 

உமா மகேஸ்வரி விவகாரம் என்ன ஆனது? உண்மையிலேயே அந்த நான்கு பையன்களும்தான் குற்றவாளிகளா? இல்லை விவகாரத்தை திசைதிருப்ப சிக்கிய நான்கு பேருக்கு விலங்கு பூட்டிவிட்டார்களா? பெண்களின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? ஏன் அந்தச் செய்தி பற்றிய ஃபாலோ-அப்  எதுவும் வரவில்லை?  

ஆனால் இதுதானே நமது வழக்கம்- புத்தகக் கண்காட்சி வரும் போது ‘நானும் எழுத்தாளன்’ என்று குதிப்போம். தேர்தல் வரும் போது ‘நானும் அரசியல்வாதி’ என்று அலப்பறை செய்வோம். ஒரு வன்புணர்வு நடக்கும் போது ‘நானும் போராளி’ என்று பெண்ணியம் பேசுவோம். அப்புறம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு கோச்சடையான் ட்ரெய்லர் பற்றி பேசிக் கொண்டிருப்போம். 

ஊரே அம்மணமாக சுற்றும் போது நமக்கு மட்டும் என்ன வந்தது? கோச்சடையான் ட்ரெய்லர் சூப்பர்தானே?

Mar 10, 2014

பொறியில் சிக்காத எலிகள்

வீட்டை ஒட்டி சாலையோரமாக ஒரு செடி பாத்தி வைத்திருக்கிறோம். பெரிய பாத்தி இல்லை. இருக்கும் இடத்தில் வரிசையாக நான்கைந்து செடிகளை வைக்கலாம். அவ்வளவுதான். குரோட்டன்ஸ் செடிகள் வைப்பதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் அப்பா ஊரிலிருந்து வந்த பிறகு குரோட்டன்ஸ் செடிகளை எல்லாம் அழித்துவிட்டு காய்கறிச் செடியாக வளர்த்துக் கொண்டிருக்கிறார். கத்தரிக்காய், தக்காளி என்று சில செடிகள் இருக்கின்றன. அந்தச் செடிகளுக்கு ஏகப்பட்ட பாங்கு செய்வார். பாங்கு என்றால் பராமரிப்பு/பாதுகாப்பு. அவருக்கு அதுதான் பொழுது போக்கு. பாத்தியைச் சுற்றி வேலி அமைப்பதிலிருந்து ஏரியிலிருந்து மண் எடுத்து வந்து நிரப்புவது, பால்காரர் வீட்டிலிருந்து ஆட்டு புலுக்கைளை அள்ளி வந்து கொட்டுவது, வெங்காயச் சருகு அது இது என்று போட்டு எப்படியோ செடிகளை படு செழிப்பாக்கிவிட்டார். கத்தரிக்காய் காய்த்ததிலிருந்து நாங்கள் ஒவ்வொருவரும் செடியை போய் பார்த்துவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். பார்க்காதவர்களை முறைத்துக் கொண்டிருந்தார். காய்களை பறிக்கவும் இல்லை. விதைக்காக அந்தக் காய்களை விட்டு வைத்திருந்தார். பழுத்த பிறகு பறித்துக் கொள்ளலாம் என்பது அவரது திட்டம்.

ஆனால் சாலையில் வளர்க்கும் செடிகளை வைத்து இத்தனை கனவு காண முடியுமா? கனவு நொறுங்கிப் போனது. வேறு யாரும் பறிக்கவில்லை. எலிகள்தான் வேலையைக் காட்டிவிட்டன. அப்பா படு டென்ஷனாகிவிட்டார். எலிகள் எங்களிடம் சேட்டை செய்வது இரண்டாவது முறை. இதற்கு முன்பாக வீட்டில் நிறுத்தியிருந்த கார் ஏசிக்குள் புகுந்து குட்டி போட்டுவிட்டது. அந்தக் குஞ்சுகளின் கெட்ட நேரம் ஏசிக்குள்ளேயே மண்டையை போட்டுவிட்டன. அந்தக் கெட்ட நேரம் எனது பர்ஸுக்கும் இடம் மாறி மொத்தமாக ஒன்பதாயிரம் ரூபாயை மொட்டையடித்துவிட்டது. விட்டகுறை தொட்டகுறையாக அவ்வப்போது துர்நாற்றம் வேறு. அதன் பிறகு வெகுநாட்களுக்கு ப்ளேக் வந்துவிடுமா, அந்த நோய் வந்துவிடுமா என கிலி கிளம்பிக் கொண்டிருந்தது.

அதெல்லாம் தொலையட்டும். 

இந்த முறை அப்பாவுக்கு பயங்கர கோபம். உரக்கடையில் ஐடியா கேட்டிருக்கிறார். தக்காளியில் ஊசி வழியாக விஷத்தைச் செலுத்தி பாத்திகளுக்குள் வீசிவிட்டால் எலிகள் தின்று செத்துவிடும் என்று கடையில் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டதும்தான் தாமதம். அப்பா வெலவெலத்து போய்விட்டார். இதே கான்செப்டைப் பயன்படுத்தி தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் பெரும் ரணகளம் ஆகிவிட்டது. அதுவும் மிகச் சமீபத்தில்.

அவர் விவசாயி- சுமாரான விவசாயம். தக்காளி, வாழை என்று காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கால் ஏக்கரில் தக்காளி விளைவித்தால் எலியோ, கோழியோ வந்து மொத்தமாக முடித்துவிடுகின்றன. பக்கத்து வீட்டுக்காரர்களிடமெல்லாம் கோழியைப் பிடித்து கட்டி வைக்கச் சொல்லியும் பயனில்லை. பொத்தல் பொத்தலாக இரவோடு இரவாக முடித்துவிடுகின்றன. மழையும் இல்லை புயலும் இல்லை- இருக்கிற தண்ணீரில் காலம் ஓட்டலாம் என்றால் நிலைமை இப்படி ஆகிவிடுகிறது.  ‘இன்று ராத்திரி விஷம் வைக்கப் போகிறேன் கோழிகளையெல்லாம் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு தக்காளியில் விஷம் ஏற்றியிருக்கிறார்.

உள்ளூர் உரக்கடையில்தான் இந்த ஐடியா கொடுத்திருக்கிறார்கள். கோழியாக இருந்தாலும் சரி; எலியாக இருந்தாலும் சரி- தக்காளியில் வாய் வைக்கும் என்பதால் அதுதான் best source of சங்கு என்று சொன்னார்களாம். இவரும் பண்ணையாள் ஒருவனும் ராத்திரியோடு ராத்திரியாக அரைகிலோ தக்காளியில் விஷம் ஏற்றி தோட்டம் முழுவதும் வீசிவிட்டார்கள். ‘சாவட்டும் சனியன்கள்’என்று வீட்டில் வந்து படுத்திருக்கிறார். விடிந்த போது பெரிய இடி வந்து இறங்கியிருக்கிறது. பண்ணையாள் ஓடி வந்து சொல்லியிருக்கிறான். வீசிய தக்காளியில் எலியும் சாகவில்லை; கோழியும் சாகவில்லை. மயில்கள் இறந்துவிட்டன. அதுவும் நான்கைந்து மயில்கள்.

சோலி சுத்தம். வனவிலங்கு தடுப்புச் சட்டம் பாய்ந்தால் கதை கந்தல். 

வெளியே வருவதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். முன்பெல்லாம் வனப்பகுதியோரமாக இருக்கும் தோட்டங்காடுகளில்தான் இந்தப் பிரச்சினை இருக்கும். மின்வேலி அமைத்து வைப்பார்கள். காட்டுப்பன்றி அல்லது யானை வந்து விழுந்துவிடும். நம் ஆட்களுக்குத்தான் பொறாமை என்பது பிறவிக்குணம் அல்லவா? பக்கத்து தோட்டத்துக்காரன் சிக்கிக் கொண்டான் என்று தெரிந்தால் அடுத்த வினாடி வனத்துறைக்கு தகவல் போய்விடும். அவர்கள் வந்து ஆளை அமுக்குவார்கள். தோட்டங்காட்டை விற்று வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும். அத்தனை செலவு ஆகும். செலவு என்ன செலவு? லஞ்சம்தான்.

இப்பொழுதெல்லாம் வனப்பகுதிகள் என்றில்லை- ஊர்ப்பகுதிகளிலேயே இந்தச் சட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பாக மயில்கள் கண்ணில்படுவதே பெரிய ஆச்சரியம். இப்பொழுது அப்படியில்லை. தாறுமாறாக பெருகிவிட்டன. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை விட மயில்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. காகங்களை விட மயில்கள் கூட்டமாக மேய்கின்றன. கூட்டம் கூட்டமாக விளைநிலங்களில் இறங்குகின்றன. ஒரு காட்டை காலி செய்துவிட்டு அடுத்த காட்டுக்குள் நுழைகின்றன.

விவசாயி தலையில் துண்டு போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

தக்காளி விவசாயிகளின் நிலைமைதான் பரிதாபம். ஒரே தக்காளியை முழுமையாகத் தின்றால் கூட தொலையட்டும் என்று விட்டுவிடுவார்கள். ஒவ்வொரு தக்காளியிலும் ஒரேயொரு கொத்து போட்டுவிட்டு அடுத்த தக்காளிக்கு போய்விடுகின்றன. கொத்து வாங்கிய அந்தத் தக்காளி எந்தவிதத்திலும் பிரயோஜனமாகாது. விவசாயிகள் என்னதான் செய்வார்கள் ? கடலை, வாழை, கத்தரிக்காய் என்று எந்த விவசாயமாக இருந்தாலும் இப்படித்தான். மக்காச்சோளத்தைக் கூட விட்டு வைப்பதில்லை.

வனப்பகுதியில் மயில்களை வேட்டையாடினால் தவறு என்று சொல்லலாம். ஊருக்குள் வந்து குடியானவனின் பிழைப்பில் மண் அள்ளிப் போடும் இந்த ஜீவன்களை என்ன செய்வது? கொன்றுவிடலாம் என்றால் சூழலியல் ஆர்வலர்கள் சண்டைக்கு வருவார்கள். ஏற்கனவே வறட்சி தாண்டவமாடுகிறது. இந்த நிலைமையில் இந்தக் கொடுமைகள் வேறு. மயில்களின் பிரச்சினைகளைப் பற்றி விவசாயிகளிடம் கேட்டுப்பாருங்கள். கதை கதையாகச் சொல்கிறார்கள்.

அந்த மயில்கள் இறந்து போன தகவல் தெரிந்த போது அந்த விவசாயி நிலைமையை பார்த்திருக்க வேண்டும். அவர் மட்டும் இதய நோயாளியாக இருந்தால் அப்படியே நெஞ்சைப் பிடித்துவிட்டு அமர்ந்திருப்பார். அத்தனை பயம். அத்தனை பதற்றம். அவரும் மயில்களைக் குறிவைக்கவில்லை. ‘நான் கோழிகளுக்கும் எலிகளுக்கும்தான் விஷத்தை வைத்தேன்’ என்று சொன்னால் வனத்துறையினர் விட்டுவிடுவார்களா? 

செத்த மயில்களை மொத்தமாக மூட்டை கட்டி கண் காணாத இடத்திற்கு தூக்கிச் சென்று சருகுகளையும் விறகுகளையும் போட்டு எரித்துவிட்டு நேராக பழனி சென்று மொட்டையடித்துவிட்டு வந்திருக்கிறார். என்ன இருந்தாலும் முருகனின் வாகனம் அல்லவா? மன்னிப்புக் கோரல். மாட்டிவிட்டுவிட வேண்டாம் என்ற கெஞ்சுதலும் கூட. முருகன் காப்பாற்றிவிட்டார் போலிருக்கிறது. ஒரு மாதம் ஆகிவிட்டது. சத்தத்தை காணவில்லை. இனிமேல் பிரச்சினை இருக்காது என்று நம்பலாம்.

உரக்கடைக்காரன் அதே ஐடியாவைச் சொன்னதும் அப்பாவுக்கு இந்த மயில் விவகாரம் ஞாபகம் வந்துவிட்டது. பெங்களூரில் மயிலும் இல்லை; குயிலும் இல்லை என்றாலும் அவருக்கு பயம். விஷமும் வேண்டாம் தக்காளியும் வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடி வந்துவிட்டாராம். இப்பொழுது பொறியை வைத்து எலிக்கு காத்திருக்கிறார். பொறிகளில் மாட்டுமளவுக்கு எலிகள் முட்டாள்களா என்ன? வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் கத்தரிக்காயிலும் தக்காளியிலும் வாய் வைத்துவிட்டுப் போகின்றன. இனி அப்பா பாத்திக்கு அருகில் பாய் போட்டு படுத்துக் கொண்டால்தான் உண்டு. போகிற போக்கை பார்த்தால் அப்படித்தான் செய்வார் போலிருக்கிறது.

Mar 9, 2014

இப்படியும் வெகுசில மனிதர்கள்

நிரலு என்ற ஒரு அமைப்பு பெங்களூரில் இருக்கிறது. அவ்வப்போது ‘மரவிழா’வை நடத்துகிறார்கள். நிரலு என்றால் நிழல் என்று அர்த்தம். பெயருக்கேற்றபடி மரங்கள், பசுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இவர்களின் அஜெண்டா. அவர்கள் இதைச் செய்வதில் அர்த்தம் இருக்கிறது. லட்சக்கணக்கான மரங்கள் நிறைந்திருந்த இந்த ஊரை கிட்டத்தட்ட மொட்டையடித்து மூளி ஆக்கிவிட்டார்கள். வெயில் காந்துகிறது. வருடத்தில் ஆறு மாதங்கள் இந்த ஊரில் மழை பெய்யும் என்பதெல்லாம் வரலாறு ஆகிவிட்டது. வருடத்தில் ஆறு மழை பெய்வதே கூட பெரிய விஷயம் ஆகிவிடும் போலிருக்கிறது. புழுதிகளாலும் புகையாலும் அழுக்குப்படிந்து அசிங்கமாகிக் கிடக்கிறது இந்த கார்டன் சிட்டி.

இந்தச் சூழலில்தான் இருநூறு பேர்கள் உறுப்பினராக இருக்கும் நிரலு இது போன்ற செயல்களைச் செய்து வருகிறது. நான்கைந்து வாரங்களுக்கு முன்பாக கப்பன் பூங்காவில் மரவிழாவை நடத்தினார்கள். காலை பத்து மணிக்கே சென்றுவிட்டேன். பெரும்பாலும் இளைஞர்களாக நிறைந்திருந்தார்கள். குழந்தைகளுக்கான நிகழ்வுகள்தான் அதிகமாக இருந்தன. சிறுவர்களை அமரச் செய்து ஒருவர் கதை சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொருபக்கம் கார்ட்டூன் படங்கள். வேறொரு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள். உண்மையில் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. ஒரு தாத்தா அமர்ந்திருந்தார். அவர் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டேன்.

அவர் உடுப்பி பக்கம் ஏதோ ஒரு ஊரைச் சேர்ந்தவர். அறுபது வயதுக்கு மேலாக இருக்கும். பெங்களூருக்கு ஏதோ ஒரு காரியமாக வந்திருந்தவர் இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு வந்துவிட்டார். இடையிடையே பேச்சுக் கொடுத்து நண்பர்கள் ஆகிவிட்டோம். கொஞ்ச நாட்கள் அரசாங்க வேலையில் இருந்தாராம். பிறகு வேலையை விட்டுவிட்டார். இப்பொழுது ஊர் ஊராகச் சென்று மரம் வைப்பதுதான் அவரது வேலை. எத்தனை மரங்கள் நட்டிருப்பீர்கள்? என்று கேட்டால் அவரிடம் துல்லியமான பதில் இல்லை. பல்லாயிரக்கணக்கில் இருக்கும் என்றார். எந்த நிறுவனத்திலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தனிமனிதனாக எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராமல்தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்.

திருமணம் செய்து கொள்ளவில்லை. ‘குடும்பம் குழந்தை இல்லை; போகும் போது இவங்க எல்லாம் எனக்காக அழுவாங்கல்ல? அதுவும் யாருக்குமே தெரியாமல்’ என்று கேட்டுவிட்டு சிரித்தார். அதன் பிறகு நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. பேசவில்லை. பிறகு கிளம்பும் போது ‘எதுக்காக இங்க வந்தீங்க?’ என்றார். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு ஏரி இருக்கிறது. அந்த ஏரியில் லாரி கழுவி, மோலி மோலியாக துணி துவைத்து என நாறடிக்கிறார்கள். ஒரு ஏரி இருந்தால் அந்தச் சுற்றுவட்டாரத்திற்கே நிலத்தடி நீருக்கு பிரச்சினை இல்லை என்பார்கள். இந்த ஏரியைப் பொறுத்த வரையில் அது சாத்தியமே இல்லை. ஏரியின் அடிப்பாகம் முழுவதும் எண்ணெய் பிசுக்கு ஏறி இறுகிய மண். ஒரு சொட்டுத் தண்ணீரை நிலத்திற்கு கொடுக்காத கஞ்சப்பயலாக இந்த ஏரியை மாற்றிவிட்டது- மாற்றிவிட்டார்கள்.

எங்கள் லே-அவுட்டில் ஒரு சங்கம் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வீடும் கோவில் கட்ட பணம் கொடுக்க வேண்டும் என்று பேசுவார்கள்; எந்தத் தெருவில் விளக்கு எரியவில்லை என்று கணக்கு எடுப்பார்கள். அந்தத் தெருவில் சங்கத்து ஆள் யாராவது இருந்தால் சோடியம் விளக்கு அமைத்துத் தருவார்கள். மற்றவர்கள் என்றால் ட்யூப்லைட்தான். ஏரி பற்றியெல்லாம் பேசினால் ஒரு மார்க்கமாக பார்ப்பார்கள். இந்தச் சங்கம் எனக்கு ஒத்துவராது என்று கூட்டங்களுக்கு தம்பியை அனுப்பி வைத்துவிடுவேன். அவனும் கர்மசிரத்தையாக அவர்களுக்கு ஒத்து ஊதிவிடுவான்.

இந்த ஏரிக்கு ஏதாவது செய்ய முடியுமா என்பதற்காகத் தான் நிரலு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சொன்னதையெல்லாம் பெரியவர் கேட்டுக் கொண்டார். இந்த மாதிரி ஏரிகள் இருந்தால் மூங்கில் விதைகளை விதைத்துவிடுவதுதான் முதல் நல்ல காரியம் என்றார். மூங்கில் விதைகளை ஈரமண்ணுக்குள் புதைத்து அதை இறுகவைத்து தருவார்களாம். அதை மழை காலத்தில் நிலத்தில் போட்டுவிட்டால் போதும். மழை, மண்ணைக் கரைத்துவிட மூங்கில் விதை உயிர்பிடித்துக் கொள்ளும். ஒரே மாதத்தில் ஐந்து அடி வரைக்கும் வளரும் என்பதால் ஏரி மாதிரியான இடங்களில் வளர்ப்பதற்கு தோதான மரம் மூங்கில்தான் என்றார். அவர் அனுபவத்திற்கு சரியாகத்தான் இருக்கும். ஆனால் நிரலுக்காரர்களிடம் மூங்கில் விதை இல்லை. பெரியவர் எனது முகவரியைக் குறித்துக் கொண்டார்.

“உங்க ஃபோன் நெம்பர் கொடுங்க” என்றேன். 

“அதெல்லாம் வெச்சுக்கிறது இல்லை தம்பி. கால் போன போக்கில் போகிறேன். நானும் அடுத்தவங்களுக்குத் தொந்தரவு இல்லை. எனக்கும் யாரும் தொந்தரவு இல்லை” என்றார்.

இன்று காலையில் அலுவலகத்தில் வேலை இருந்தது. ஞாயிறுதான் என்றாலும் வரச் சொல்லியிருந்தார்கள். கிளம்பிக் கொண்டிருந்த போது பெரியவர் வீட்டைத் தேடி வந்துவிட்டார். துளி கூட எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. கசங்கிய சட்டை, பேண்ட் அணிந்திருந்த அவர் கையில் இரண்டு பைகள் வைத்திருந்தார். எனது மகனுக்காக ரொட்டி பாக்கெட் வாங்கி வந்திருப்பதாக சிரித்துக் கொண்டே சொன்னார். அவரை உள்ளே வரச் சொல்லி பேசிக் கொண்டிருந்த போது இரண்டு பைகள் நிறைய மூங்கில் விதைகள். அதில் ஒரு பையை இங்கு கொடுத்துவிட்டுச் செல்வதற்காக வந்திருக்கிறார்.

இந்தப் பருவத்தில் மழை இல்லை அல்லவா? அதனால் இப்பொழுது விதைப்பது சரி இல்லையாம். ஐந்தாறு விதைகளை மட்டும் விதைத்துவிட்டு அப்பாவிடம் இடத்தை காட்டிவிடுவதாகச் சொன்னார். தினமும் இரண்டு வேளை நீர் ஊற்றினால் போதும். அநேகமாக முளைத்துவிடும். இந்த ஐந்து சாம்பிள் விதைகளும் முளைத்துவிட்டால் அத்தனை விதைகளையும் இதே முறையில் விதைத்துவிடலாம் இல்லையெனில் மழைக்காலம் வரைக்கும் காத்திருக்க வேண்டும் என்றார். அலுவலகத்திற்கு நேரம் ஆகிக் கொண்டிருந்தது. மதியத்திற்குள் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

அலுவலகம் செல்லும் வரைக்கும் அவருடைய நினைப்பாகவே இருந்தது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். பத்து நிமிடம் பேசியவனை நம்பி கை நிறைய மூங்கில் விதைகளைச் சேகரித்துக் கொண்டு வீடு தேடி வருகிறார். மதியத்திற்கு மேலாக அப்பாவை அலைபேசியில் அழைத்தேன். அப்பாவும் அவரும் ஏரிக்கரையில் ஐந்தாறு விதைகளை விதைத்திருக்கிறார்கள். வேலையை முடித்தவுடன் கிளம்பிவிட்டாராம். மதியம் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்னொரு பையை வேறொரிடத்தில் சேர்க்க வேண்டுமாம். என்னைப் போலவே வேறு யாராவது அவரிடத்தில் பேசியிருக்கக் கூடும். அரை மணிநேரத்தில் கிளம்பிவிட்டாராம். ஒரு காபி தவிர வேறு எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை.  

‘பணம்?’ என்று அப்பா தயங்கியபடி கேட்டிருக்கிறார். சிரித்துக் கொண்டே கையில் ஒரு துண்டுச்சீட்டை தந்துவிட்டு போனதாகச் சொன்னார். தெளிவான ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். ஒரே வரிதான்.  “பூமியை வதைக்கிறோம்; அவள் கதறிக்கொண்டிருக்கிறாள்”.

அவரை இனிமேல் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. அவராக விருப்பப்பட்டு வந்தால் உண்டு. இல்லையென்றால் அவரது மரங்கள்தான் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும்- இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்காவது.

Mar 8, 2014

பட்டியல் தயார்

பள்ளிகளுக்கு வழங்குவதற்கான புத்தகங்களின் உத்தேசமான பட்டியல் இது. இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் தலா ஏழு பிரதிகள் கிடைக்கின்றனவா என்று விசாரிக்க வேண்டும். ஏழு பள்ளிகளுக்கு- முன்பு ஆறு பள்ளிகளுக்கான பணம் கைவசம் இருந்தது. இப்பொழுது ஏழாவது பள்ளி ஒன்றிற்கு தேவையான பத்தாயிரம் ரூபாயைத் தானே முழுமையாகத் தந்துவிடுவதாக ஆஸ்திரேலியாவிலிருக்கும் திரு.ராகவன் தெரிவித்ததால் பட்டியலில் ஒரு பள்ளி சேர்ந்து கொண்டது. ஏழு பள்ளிகளுக்கு எழுபதாயிரம் ரூபாய்.

புத்தகங்களுக்கான பரிந்துரைகள் நிறைய வந்திருந்தன. பட்டியல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த உதவி இல்லையென்றால் இன்னமும் சிரமம் ஆகியிருக்கும். இந்தப் பட்டியலைத் தயாரிக்கவே இரண்டு நாட்கள் தேவையாக இருந்தது. இதுவும் உத்தேசப்பட்டியல்தான். ஏதேனும் மாறுதல் தேவை என்றிருந்தால் மாற்றிக் கொள்ளலாம். தெரியப்படுத்துங்கள்.

இவை போக எழுத்தாளர் சொக்கன் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா பத்து வெவ்வேறு புத்தகங்களை வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.

பட்டியல்:

அவசியமான புத்தகங்கள்:
1. க்ரியா தமிழ் அகராதி                                             - ரூ. 540
2. ஆக்ஸ்ஃபோர்ட் Advanced learner's Dictionary           - ரூ. 625
3. ஆக்ஸ்ஃபோர்ட் Learner's Pocket Dictinorary(2 Qty)  - ரூ. 250
4. திருக்குறள்(கெட்டி அட்டை பதிப்பு)                   - ரூ. 100
5. சத்திய சோதனை                                                   - ரூ. 50
6. பாரதியார் கவிதைகள்(கெட்டி அட்டை)           - ரூ. 250
7. பாரதிதாசன் கவிதைகள்                                      - ரூ. 230

இலக்கியம்:
1. சிலப்பதிகாரம்                                                   - ரூ. 40 (Prodigy)
2. மணிமேகலை                                                  - ரூ. 40 (Prodigy)
3. தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசன் - ரூ. 125

சஞ்சிகைகள் சந்தா:
1.  துளிர் இதழ் சந்தா(ஆயுள் சந்தா- 10 வருடங்கள்)      -  ரூ.1000
2.  மனோரமா- Tell me why (2 வருடங்கள் சந்தா)              -  ரூ. 450

சிறார் புத்தகங்கள்:
1. பூக்குட்டி - சுஜாதா  - ரூ. 40 (திருமகள் நிலையம்)
2. ஐராபாசீ- வேலுசரவணன் - ரூ. 75 (உயிர்மை)
3. கால் முளைத்த கதைகள்- எஸ்.ராமகிருஷ்ணன் - ரூ. 130 (உயிர்மை)
4. கிறுகிறுவானம் - எஸ்.ராமகிருஷ்ணன் -ரூ. 35 (பாரதி புத்தகாலயம்)
5. ஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம்- யூமா வாசுகி - ரூ. 80 (பாரதி )
6. வானவில் பறவையின் கதை - யூமா வாசுகி - ரூ. 55 (பாரதி புத்தகாலையம்)
7. தாத்தா பாட்டி சொன்ன கதைகள் - கழனியூரன் - ரூ. 60 (பாரதி புத்தகாலயம்)
8. முல்லாவின் வேடிக்கைக் கதைகள் - மல்லை முத்தையா - ரூ. 80 (NCBH)
9. ஏழுதலை நகரம் -எஸ்.ராமகிருஷ்ணன் - ரூ. 100 (விகடன்)
10. ஆலிஸின் அற்புத உலகம் -எஸ்.ராமகிருஷ்ணன் - ரூ. 120 (வம்சி)
11. வாத்துராஜா - விஷ்ணுபுரம் சரவணன் - ரூ. 50 (பாரதி புத்தாலயம்)
12. மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள்- ரூ. 35 (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
13. வளையல்கள் அடித்த லூட்டி-விழியன் - ரூ. 25 (பாரதி புத்தகாலயம்)
14. அலாவுதீனும் அற்புத விளக்கும்-ரூ. 60 (நர்மதா பதிப்பகம்)
15. மரத்தின் அழைப்பு- யூமா வாசுகி - ரூ. 90 (பாரதி புத்தகாலயம்)
16. சர்க்கஸ்.காம்- இரா.நடராசன் - ரூ. 40 (பாரதி புத்தகாலயம்)
17. தங்கமீன் கதைகள் - ரூ. 65 (விகடன்)
18. விக்கிரமாதித்தன் கதைகள் - ரூ. 150 (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
19. தெனாலிராமன் கதைகள்(முழுவதும்)-பி.எஸ்.ஆச்சார்யா - ரூ. 90 (நர்மதா) 
20. மாகடிகாரம்-விழியன் -ரூ. 30 (பாரதி புத்தகாலயம்)
21. சிரிக்காத மனமும் சிரிக்கும்-பாக்கியம் ராமசாமி - ரூ. 60 (வானதி பதிப்பகம்)
22. சிறுவர் நாடோடிக் கதைகள் - கி.ராஜநாராயணன் - ரூ. 55 (அன்னம்)
23. குட்டி இளவரசன் - ரூ. 100 (க்ரியா)
24. திருக்குறள் கதைகள் - சாவி -ரூ. 50 (மங்கை வெளியீடு)
25. காசுக்கள்ளன் - எஸ்.ராமகிருஷ்ணன் - ரூ. 35 (பாரதி புத்தகாலயம்)
26. மாயாஜாலக் கதைகள்- மல்லை முத்தையா - ரூ. 110 (தாமரை )
27. பீர்பால் தந்திரக் கதைகள் - மல்லை முத்தையா - ரூ. 80 (NCBH)
28. அமர்சித்ரா கதை (21 புத்தகங்கள்) - ரூ. 735
29. எனக்கு ஏன் கனவு வருது - எஸ்.ராமகிருஷ்ணன் - ரூ.25 (பாரதி) 
30. பஞ்சதந்திரக் கதைகள் - ரூ.40 (Prodigy)
31. நகைச்சுவைக் கதம்பம் -ரூ. 55
32. சிரித்தாலே இனிக்கும் - ரூ. 40
33. சிரித்து மகிழ பரமார்த்த குரு கதைகள் - ரூ. 70 (நர்மதா)
34. ஈசாப் கதைகள் - ரூ. 140
35. உலக நாடோடிக்கதைகள் - எஸ்.ஏ.பெருமாள் -ரூ. 60
36. காந்தி தாத்தா கதைகள் - ரூ.65 (விகடன்)

காமிக்ஸ்:
1. லக்கி ஸ்பெஷல் -1           - ரூ. 100
2. சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் - ரூ. 100

பொது:
1. மேஜிக் செய்வது எப்படி - ரூ. 40 (மணிமேகலை)
2. நாலுவரி நோட்டு            - ரூ. 125

ஆளுமைகள்:  (Prodigy வெளியீடு)
1. கல்வித்தந்தை காமராஜர்             - ரூ. 65
2. வீரபாண்டிய கட்டபொம்மன்        - ரூ. 40
3. விவேகானந்தர்                                - ரூ. 40
4. எடிசன்                                                - ரூ. 30
5. மகாத்மாகாந்தி                                 - ரூ. 40
6. சுபாஷ் சந்திரபோஸ்                       - ரூ. 30
7. அப்துல்கலாம் (தமிழ் காமிக்ஸ்)  - ரூ. 35
8. தேசத்தலைவர்கள்                         - ரூ. 55 (பதிப்பகம் தெரியவில்லை)

அறிவியல்-கணிதம்
1. அணு: அதிசயம்-அற்புதம்-அபாயம்-என்.ராம்துரை              -ரூ.115 (கிழக்கு)
2. செயற்கைக்கோள் எப்படி இயங்குகிறது? -என்.ராமதுரை  - ரூ.40 (கிழக்கு)
3. வேதியியலைப் பற்றி 107 கதைகள் - கு.கணேசன்               - ரூ.160 (தாமரை )
4. டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?-சொக்கன்                     - ரூ. 30 (Prodigy)
5. விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதை -இரா.நடராசன்            - ரூ. 60
6. நம்பர் பூதம் - இரா.நடராசன்                                                       -ரூ. 80 (பாரதி)
7. கிரகணங்களில் நிழல் விளையாட்டு- வெங்கடேஸ்வரன் - ரூ. 40 (பாரதி)
8. கணிதத்தின் கதை - இரா.நடராசன்                                           - ரூ. 70 (பாரதி)
9. செய்து பாருங்கள்- விஞ்ஞானி ஆகலாம்                                - ரூ. 75

சூழலியல்:
1. அதோ அந்தப் பறவை போல- ச.முகமது அலி - ரூ. 125 (தடாகம்)
2. சிட்டுக்குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்-ஆதி.வள்ளியப்பன் - ரூ. 70 (தடாகம்)
3. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக- தியோடர் பாஸ்கரன் - ரூ. 120 (உயிர்மை)
4. வனங்களின் வினோதங்கள்-லதானந்த் - ரூ. 70 (விகடன்)
5. பூவுலகின் கடைசிக் காலம்- கிருஷ்ணா டாவின்ஸி - ரூ. 50 (பாரதி புத்தகாலயம்)
6. அறிமுகக் கையேடு: பறவைகள் - ரூ. 250 (க்ரியா)

தேர்வுகள்: (Prodigy வெளியீடு)
1. நூற்றுக்கு நூறு: எக்ஸாம் டிப்ஸ் 1                     - ரூ. 30
2. நீங்கள்தான் வின்னர்: எக்ஸாம் டிப்ஸ் 2           - ரூ. 30
3. நீங்கள்தான் முதல் ரேங்க்: எக்ஸாம் டிப்ஸ் 3  - ரூ. 30
4. எளிதாகக் கற்கலாம் பெருக்கல் வாய்ப்பாடு    - ரூ. 50

பொது அறிவு புத்தகங்கள்: 
1. நோபல் பரிசு                                              - ரூ. 30 (Prodigy)
2. ஒலிம்பிக்                                                    - ரூ. 30 (Prodigy)
3. உலக அதிசயங்கள்                                   - ரூ. 40 (Prodigy)
4. உலகம் எப்படி தோன்றியது?                  - ரூ. 30 (Prodigy)
5. உயிர்கள் எப்படி தோன்றின?                  - ரூ. 40 (Prodigy)
6. கையளவு களஞ்சியம்                              - ரூ. 90 (விகடன்)
7. விலங்குகள் 1000 தகவல்கள்                  - ரூ. 75
8. பல்துறை தகவல்கள் 1000                       - ரூ. 110
9. விளையாட்டுத்துறை 1000 தகவல்கள் - ரூ. 60
10. இந்தியா முக்கியத் தகவல்கள்             - ரூ. 50
11. விண்வெளி 1000 வினாவிடை              - ரூ. 130 (பாரதி புத்தகாலயம்)
உணவு: (நலம் வெளியீடு)
1. நலம் தரும் வைட்டமின்கள்       - ரூ. 150
2. கீரைகள்                                            - ரூ. 185
3. 200 மூலிகைகள் 2001 குறிப்புகள் - ரூ. 155

பண்பாடு:
1. சனங்களின் சாமிகளின் கதைகள் - அ.கா.பெருமாள் - ரூ. 40 (United Writers)
2. வாழ்விழந்து வரும் கிராமிய இசைக்கருவிகள்-வெ.நீலகண்டன் - ரூ. 90 (பிளாக்ஹோல் மீடியா)

ஆங்கிலம்: (அனைத்தும் National Book Trust வெளியீடு)
1. Journey through the Universe                             - ரூ. 30
2. Mir Space Station                                              - ரூ. 50
3. Inventions that Changed the world - Part 1          - ரூ. 25
4. Inventions that Changed the world - Part 2          - ரூ. 25
5. Ramu and the Robot                                         - ரூ. 40
6. Children who made it big                                   - ரூ. 45
7. Stories from Bapu's life                                     - ரூ. 30
8. Gautama Buddha                                              - ரூ. 25
9. Subramaniya Bharathi                                       - ரூ. 8
10.The story of Blood                                          - ரூ. 25
11.Pollution                                                         - ரூ. 25
12.Water                                                             - ரூ. 25
13.Adventures of a Wildlife warden                       - ரூ. 16
14.The bird of mind                                             - ரூ. 30
15.The snakes around us                                      - ரூ. 25
16.The world of Trees                                         - ரூ. 55
17.Watching Birds                                               - ரூ. 30
18.Festivals of India                                            - ரூ. 40

Mar 7, 2014

யார் காரணம்?

"பனைமரமே கருகுது தென்னைமரம் எப்படித் தாங்கும்?" பதிவை வாசித்தேன். இந்த விவசாயி-மழை-பஞ்சம்-வாழ்க்கை பிரச்சினை பற்றி என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தற்போது நான் சென்னையில் பணியாற்றினாலும் அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை, அண்ணன், நெருங்கிய உறவினர்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பொறியியல் கல்வியினால் விவசாயத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். என் மனைவி மகப்பேற்றுக்காக  அவளுடைய சொந்த ஊரான சூலூரில் இருப்பதால் நான் ஒவ்வொரு வாரக்கடைசியிலும் சென்னையில் இருந்து சூலூருக்கும் என் சொந்த ஊரான செஞ்சேரிமலை என்னும் கிராமத்துக்கும் சென்று வந்து கொண்டு இருக்கிறேன். ஊருக்கு செல்லும் போதெல்லாம் என்னால் முடிந்த விவசாய வேலைகளை செய்வேன். அதில் எனக்கு நல்ல ஆர்வமுண்டு. 

எங்கள் கொங்கு மண்டலத்தை வாட்டி வரும் முக்கியமான பிரச்னை மழையின்மை. சென்ற 10 வருடங்களாக நல்ல மழையில்லை. இதுவரைக்கும் இருப்பதை வைத்து எப்படியோ ஒட்டி விட்டோம். என் அப்பா இந்த விஜய வருடத்தில் நல்ல மழை பெய்யும் என்று பஞ்சாங்க பலனைப் பார்த்து விட்டு சொன்னார். எனக்கும் இந்த அலுவலக வாழ்க்கை சலிப்பை உண்டாக்கியிருந்தது. வேறு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் சென்ற ஆண்டின் பாதியில் வந்தது. அதையும் இதையும் செய்து மாட்டிக்கொள்ளாமல் முதல் இரண்டு வருடம் விவசாயம் செய்து வரவு செலவு அனுபவத்தையும் கொஞ்சம் ஊர் பழக்கவழக்கத்தையும் தெரிந்து கொண்டு பின்னர் ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்தேன்.

"அதுதான் மழை கொட்டும் என்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறார்களே. விவசாயம் செய்து பொருளீட்டி தொழில் தொடங்கி விக்கிரமன் படம் போல ஒரே பாட்டில் பெரும் வியாபார காந்தம் ஆகிவிடலாம்" என்று கணக்கு போட்டேன். முதல் வேலையாக மேலாளர் வேலையை விட்டுவிட்டு ஊருக்கே போய்விட்டேன்.  நான் போனது செப்டம்பரில். அக்டோபர் பிறந்தது முதல் வானத்தை பார்க்க ஆரம்பித்தேன். வானம் வைத்தது ஆப்பு. மழையைக் காணோம்.

ஊரில் பார்த்தவர்களெல்லாம் " ஏன்டா இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்த?" என்று கேட்க ஆரம்பித்தார்கள். எனக்கும் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு விட்டோமோ என்று பயமாகி விட்டது. அதிர்ஷ்ட வசமாக நான் முன்பு ஒரு முறை வேலை செய்த நிறுவனத்தில் இருந்து " வருகிறாயா?" என்று கேட்டார்கள். ஓடோடி வந்து விட்டேன். இது என் கதை.

நான் எப்படியோ தப்பி விட்டேன். என் குடும்பத்தையும் காப்பாற்றி விடுவேன். ஆனால் விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் எத்தனையோ குடும்பங்கள் என்ன செய்யும் என்று எண்ணும் போது பயமாக இருக்கிறது. 10 ஏக்கர் தென்னந்தோப்பு இருந்தால் வருடத்தில் 5 லட்சம் லாபம் பார்க்கலாம். ஆனால் அந்த 10 ஏக்கர் தோப்பை காப்பற்ற 10 லட்சம் ரூபாய்க்கு போர் போட்டும் 3 லட்ச ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி ஊற்றிய பிறகும் கூட காப்பாற்ற முடியாமல் மரத்தை காய விட்ட விவசாயிகளை கேள்விப் படுகிறேன்.

எங்கள் பகுதியில் பரம்பிக்குளம் கால்வாய் வருகிறது. ஆயக்கட்டுத் தீர்வை செலுத்தி அந்தக் காலத்தில் உரிமை பெற்றவர்களுக்கு அந்த தண்ணீர் பாயும். பலர் ஆனால் அந்த தண்ணீர் எட்டாத எங்களைப் போன்றவர்கள் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்து தான் எங்கள் மரங்களை காப்பாற்றி வருகிறோம். இதுவும் கூட இன்னும் ஒரு மாத காலம் தான். அணையில் தண்ணீர் தீர்ந்து விட்டது என்கிறார்கள். அதற்கு பிறகு என்ன என்பது அந்த வருண பகவானுக்கே வெளிச்சம். மழை வந்தால் மட்டுமே தப்புவோம். இல்லை என்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை குளிர்ச்சியாகக் காட்சியளித்த தென்னை மரங்கள் வைகாசி மாதத்தில் மொட்டையாகிவிடும் என்பதில் எனக்கு கொஞ்சமும் சந்தேகமில்லை.

இந்த நிலைக்கு யாரைச் சொல்லி நோவது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒரு வகையில் விவசாயிகளும், பல வகைகளில் அரசாங்கமுமே இதற்கு காரணம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவுக்கு தென்னை மரங்கள் எங்கள் பகுதியில் இருந்ததில்லை. அப்போது விவசாயம் என்றால் காய்கறி, மஞ்சள், பயறு வகைகள் மற்றும் நெல். அதாவது தண்ணீர் நிறைய இருந்தால் நெல்லும் மஞ்சளும். தண்ணீர் இல்லை என்றால் பயறும் காய்கறியும். தண்ணீர் செலவு என்பது குறைவாக இருந்தது. ஏனென்றால் விவசாயம் செய்திருந்தால் மட்டுமே தண்ணீர் தேவை. அறுவடை முடிந்து அடுத்து பயிர் செய்யும் வரை தண்ணீர் தேவை இல்லை. போர்வேல் என்பதே கிடையாது. வெறும் கிணறு மட்டுமே. நாங்களெல்லாம் கிணற்று மேட்டிலிருந்து கிணற்றுக்குள் குதித்து நீச்சல் பழகினோம்.

இப்படிப்பட்ட விவசாயத்திற்கு தண்ணீர் குறைவு. ஆனால் ஆள் செலவு அதிகம். அப்போது வேலை செய்ய ஆட்கள் இருந்தார்கள். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல கூலி ஆட்கள் குறைய ஆரம்பித்தார்கள். நூல் மில்களும் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளும் வேன் அனுப்பி கூலித்தொழிலாளர்களைக் கவர்ந்து கொண்டார்கள். கூலித்தொழிலாளர்களும் " வேன் வருது. நிழல்ல வேலை. எவன் போய் இந்த வெயில்ல காட்ல வேலை செய்யறது?" என்று ஆர்வமாக ஆலைகள் பக்கம் ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

பார்த்தார்கள் விவசாயிகள். எந்த விவசாயத்திற்கு ஆள் குறைவாக பிடிக்கும் என்று. அகப்பட்டது தென்னை மரம். பிடித்து ஊன்றி தள்ளி விட்டார்கள். கொஞ்சம் நஞ்சமில்லை. வெறும் இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கூட அதையும் தோப்பாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்த்தார்கள். கொஞ்சம் கூட வெறும் நிலம் வைத்திருக்காம இருப்பதையெல்லாம் தோப்பாக மாற்றி வைத்திருப்பவர்கள் மட்டுமே எங்கள் பகுதியில் அநேகம் பேர்.

உங்களுக்கே தெரிந்திருக்கும். தென்னைக்கு எவ்வளவு நீர் தேவை என்று. அதுவும் கொஞ்சம் நாட்கள் கூட இடைவெளி விட முடியாது. மழை பெய்தால் தவிர தண்ணீரை ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த நிலைமையில் மழை குறைய ஆரம்பித்தது. போர் வண்டிகள் தென்பட ஆரம்பித்தன. கடந்த பத்து வருடங்களில் நிலத்தை சல்லடையாக்கி விட்டார்கள். மரத்துக்கு ஒரு போர் போடுவது மட்டும் தான் பாக்கி. அந்த அளவுக்கு போர்வெல்கள் எங்கள் பகுதியில் உண்டு. 60 அடி கிணற்றில் தண்ணீர் ஊறியது போய் 500 அடி தாண்டி 800 அடியைத் தொட்டு இப்போது 1300 அடி போடுகிறார்கள். போர்வெல் போட 1.5 லட்சம். அதில் தண்ணீர் எடுக்க மேலும் 1.5 லட்சம் செலவாகும். போகிற வேகத்தில் இன்னும் சில ஆண்டுகளில் போர்வெல்லில் பெட்ரோலோ எரிமலை குழம்போ வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

பிறகு வந்தது மின்சாரப் பஞ்சம். நம் அரசாங்கம் ஒரு மின் திட்டத்தை கூட செயல்படுத்தாமல் ஹூண்டாய், போர்டு, நிஸ்ஸான் என்று பல நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை அளிக்கிறார்கள். ஆனால் மின்சாரத்தை எங்கிருந்து கொடுப்பது? இருக்கவே இருக்கிறார்கள் விவசாயிகள் என்னும் இளிச்சவாயர்கள். இங்கே பிடுங்கி அங்கே கொடுத்து விட்டார்கள். நான் சிறுவனாக இருந்த போது 14 மணி நேரம் மும்முனை மின்சாரமும் 10 மணி நேரம் இருமுனை மின்சாரமும் வரும். பல பகுதிகளில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் இருக்கும். இப்போது கோடைகாலங்களில் ஒரு நாளில் 3 மணி நேரம் மும்முனை மின்சாரமும், 10 மணி நேரம் இருமுனை மின்சாரமும் வருகின்றன. மற்ற நேரங்களில் மின்கம்பிகள் மட்டுமே  இருக்கும். மின்சாரம் இருக்காது. ஆக கோடைகாலங்களில் உங்கள் போர்வெல்லில் தண்ணீர் இருந்தாலுமே ஓட்ட முடியாது.

இந்த கோடை காலத்தை எப்படி ஓட்டப் போகிறோம் என்பதை நினைத்தாலே நெஞ்சம் கலங்குகிறது. எங்கள் தோப்புகளை வெறும் மொட்டை மரங்களாக கற்பனை செய்து பார்த்தாலே கண்ணீர் வருகிறது. அரசாங்கமோ இந்த பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கி விட்டது. நீங்களே சொல்லுங்கள். இந்த பிரச்சினைக்கு யார் காரணம். வருணனா?? விவசாயிகளா? இல்லை அரசாங்கமா??

சு.கெளரிசங்கர்.
sangar.eee@gmail.com
                                                           ***

கெளரிசங்கரின் இந்தக் கடிதம் முக்கியமானதாகப்படுகிறது. கேரளாவை ஒட்டிய கோவை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளையும் அதன் அடிப்படையான காரணங்களையும் அலசுகிறார். சுவாரசியமாகவும் இருக்கிறது. அவரிடம் அனுமதி கேட்காமலே பிரசுரிக்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்னும் நம்பிக்கையில்.