Feb 28, 2014

அருகில் வந்தால் வளைத்துவிட வேண்டும்

திங்கட்கிழமை காலையில் ஒரு செய்தி வந்திருந்தது. எங்கள் நிறுவனத்தில் இன்னொரு பதவி காலியாகியிருக்கிறது. முயற்சி செய்தால் வாங்கிவிடலாம் என்றார்கள். இப்படியொரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். ஆனால் ஐந்தாறு சுற்றுக்களாவது நேர்காணல் செய்வார்கள். தேறினால் புதிய வேலைக்கு மாற்றிவிடுவார்கள். சம்பள உயர்வும், ஒரு பதவி உயர்வும் இருக்கும். சம்பளம், பதவி உயர்வு என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். இப்படியே பதவி உயர்வுளை வாங்கி டைரக்டர் ஆக வேண்டும் அல்லது வைஸ் பிரசிடெண்ட் ஆக வேண்டும் என்றெல்லாம் கனவு இல்லை. பத்தோடு பதினொன்றாக கூட்டத்துக்குள் ஒளிந்தபடியே இன்னுமொரு பதினைந்து வருடங்களுக்கு கையில் ஒரு வேலையை வைத்திருந்தால் போதும். இது ஒத்துவரவில்லையென்றால் கல்லூரியில் ஆசிரியராகிவிடலாம். இப்படித்தான் இருந்தேன். இப்பொழுதிருக்கும் மேனேஜர் வெளிப்படையான மனிதர். உள்ளொன்று வைத்து புறமொன்றெல்லாம் பேச மாட்டார். அவர்தான் உசுப்பேற்றினார்.

வாய்ப்பு நெருங்கி வந்தால் விடக் கூடாது அல்லவா? விண்ணப்பித்துவிட்டேன்.

இதற்கு முன்பாக நேர்காணலுக்குச் சென்று கிட்டத்தட்ட ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன. 2008 ஆம் ஆண்டு அது. முன்பு பணியிலிருந்த நிறுவனத்தின் மூலமாக மலேசியா செல்வதற்கான வாய்ப்பு வந்தது. அதே நேரத்தில் அமெரிக்கா செல்வதற்கும் ஒரு வாய்ப்பு வந்திருந்தது. இரண்டுக்குமான நேர்காணல்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடந்தன. காலையில் முதல் சுற்று மதியம் அடுத்த நிறுவனத்தின் முதல் சுற்று. அடுத்த நாள் இரண்டாம் சுற்றுக்கள். இப்படி பிழிந்து கொண்டிருந்தார்கள். காண்ட்ராக்டராக இல்லாமல் நிரந்தர பணியாளர் என்பதால் நேர்காணல்கள் இத்தனை கடுமையாக இருந்தன என நினைக்கிறேன். அதைவிடவும் அப்பொழுது எனக்கு மொத்தமாகவே இரண்டு வருட அனுபவங்கள்தான் இருந்தது. அதை வைத்து ஒப்பேற்றியாக வேண்டியிருந்ததும் அழுத்தத்திறான ஒரு காரணம். ஒவ்வொரு நேர்காணல் முடிந்த பிறகு அமைதியாவதற்கு பதிலாக அடுத்த சுற்றையும் தாண்டிவிட வேண்டும் என்ற அழுத்தம்தான் உருவானது. அப்பொழுது ஹைதரபாத்தில் தனியாகக் கிடந்தேன். வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்ற வெறியேறிக் கிடந்தது. நேர்காணல்களுக்கிடையில் நேரம் கிடைத்த போதெல்லாம் படித்துக் கொண்டிருந்தேன். ப்ரஷர் அதிகமானால் முதுகுவலி வரும் என்பதை அறிந்த நாட்கள் அவை. இரண்டாம் நாள் மதியத்திலிருந்து கடுமையான முதுகுவலி வந்துவிட்டது. கழுதையின் முதுகில் பொதியை வைத்தது போல.

இந்த நேர்காணல்களுக்குப் பிறகு கடைசியில் மலேசியா வாய்ப்பு கிடைத்தது. முதலில் சுற்றுலா விசாவில் செல்வது, பிறகு ‘வொர்க் பர்மிட்’ வாங்கி அங்கேயே தங்கிவிடுவது போன்ற திட்டம் அது. உற்சாகமாக விமானம் ஏறியிருந்தேன். ஆனால் விதி தாறுமாறாக கபடி விளையாடிவிட்டது. எங்கள் நிறுவனம் சொதப்பியதில் இரண்டே மாதங்களில் திரும்பி வந்துவிட்டேன். அது ஒரு பெரிய கதை. தனியாகவே எழுதலாம். அதைவிடக் கொடுமை இந்தச் சமயத்தில்தான் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. பையன் வெளிநாட்டில் இருப்பதாக பெண் வீட்டில் சொல்லி வைத்திருந்தார்கள். இந்தச் சமயத்திலேயே நிச்சயமும் முடிந்துவிட்டது.  ‘வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத்தான் திருமணம் செய்து கொடுப்போம்’ என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்திருந்தால் நிலைமை கந்தரகோலம் ஆகியிருக்கும். நல்லவேளையாக அவர்களுக்கு அப்படியொரு ஆசை இருக்கவில்லை. அவர்கள் அதைப் பற்றி கேட்கவே இல்லை.

ஆனால் அப்படியிருந்தும் வேணியின் தம்பி ஒருவன் நெஞ்சாங்குழிக்குள் கத்தியை இறக்கிவிட்டான். ‘வெளிநாடெல்லாம் போறீங்கன்னு சொன்னாங்க மச்சான்?’ என்று நக்கலாகக் கேட்டுவிட்டான். திருமணம் முடிந்து பெண் வீட்டுக்கு முதன் முதலாகச் சென்ற பயணம் அது. காரில் எனக்கு இடதுபுறமாக அமர்ந்திருந்தான். என்னன்னவோ கனவுகளோடு சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில் எல்லாம் உடைந்து நொறுங்கி இந்த ஒரு வரி மட்டுமே மனதுக்குள் பதிந்து கிடக்கிறது. எனக்கும் வெளிநாடு அமையவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அவன் கேட்டது வருத்தத்தை இன்னமும் கூட்டியிருந்தது. அவனுக்கு அப்பொழுது பக்குவம் இல்லை என்று விட்டுவிடலாம்தான். ஆனால் மனதுக்கு அவ்வப்போது இறக்கப்படும் கூர்மையான கத்திகளால் கிழிபடுவது எந்தக் காலத்திற்கும் மறைவதேயில்லை. தீயினாற் சுட்ட- வள்ளுவனுக்குத் தெரியாத விஷயமா?

அந்த மலேசியப் பயணத்திற்கு பிறகு கடுமையான நேர்காணல்கள் எதையும் எதிர்கொள்ளவே இல்லை. 

இப்பொழுதுதான். இந்த நான்கு நாட்களாகத்தான். முதல் சுற்றில் நம்பிக்கையே இல்லை. ‘இந்த வேலைக்கு இவன் சரிப்பட்டுவிட மாட்டான்’ என்றுவிட்டுவிடுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் தாண்டியாகிவிட்டது. அடுத்த சுற்றில் எந்தத் துறையில் கேள்வி வரும் என்பதை அந்தச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லோரிடமும் சொல்லிவிட்டார்கள். கூகிளில் கிடைத்ததையெல்லாம் உருவேற்றி வைத்திருந்தேன். அமெரிக்காவில் இருந்து ஒரு ஆசாமி கேள்விகளைக் கேட்டார். எனக்கு அமெரிக்க உச்சரிப்பு புரிபடுவதேயில்லை. ஆங்கிலப்படங்களைக் கூட சப்-டைட்டில் இருந்தால் மட்டுமே பார்ப்பது வழக்கம். முக்கியமான ஸீன்களில் முகபாவனையை கோட்டைவிட்டுவிட்டு  ‘அட மிஸ் ஆகிடுச்சே’ என்று திரும்ப ஓட்டிப் பார்ப்பேன். இந்த முக்கியமான ஸீன் என்பதில் கண்டதையும் நினைத்துக் கொள்ள வேண்டாம். சோகமான ஸீன்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாம் சுற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். முதுகில் ஏற்றப்பட்ட பொதியில் இன்னும் துளி சுமையை ஏற்றியிருந்தார்கள். செவ்வாய்க்கிழமையே முதுகுவலி வந்திருந்தது. வீட்டில் யாருக்குமே இந்த நேர்காணல் பற்றிச் சொல்லவில்லை. அவர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். அது கூட பிரச்சினை இல்லை. கோட்டைவிட்டுவிட்டால் அம்மாவின் வாயிலிருந்து வந்துவிழும் முதல் வார்த்தை என்னவாக இருக்கும் தெரியுமா? ‘இந்த ப்லாக், புக் படிக்கிறதையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு கொஞ்சம் வேலையில் கவனமா இருந்திருந்தா நீ வாங்கியிருப்ப’ என்பார். அதற்காகவே வீட்டில் சொல்லவில்லை. 

இன்று காலையில் நான்காவது மற்றும் இறுதிச் சுற்று நேர்காணலை முடித்தாகிவிட்டது. இன்னொரு சப்டைட்டில் ஆசாமிதான் வினாக்களைத் தொடுத்தார். கிட்டத்தட்ட சமாளித்தாகிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டால் மாலைக்குள் விவரத்தைச் சொல்லிவிடுவார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை? பெரிய ப்ரோமோஷன் இல்லையென்றாலும் ‘ஆடுவது அருங்கூத்தாக இருந்தாலும் காரியத்தில் கண்ணாக இருப்பேன்’ என்று வீட்டில் இருப்பவர்களின் வாயில் கான்க்ரீட்டை அப்பிவிடலாம். அது பிரச்சினை இல்லை. வந்தால் வருகிறது; வராவிட்டால் போகிறது. ஆனால் இந்த முதுகுதான் இன்னமும் வலிக்கிறது. அதற்குத்தான் ஒரு வழி தேட வேண்டும். பெங்களூரில் இன்று கார்டன் சிட்டி கல்லூரியில் தமிழ் திருவிழா நடக்கிறதாம். மனுஷ்ய புத்திரன் வருவதாகச் சொன்னார்கள். அவரைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லிவிட்டு வருகிறேன். 

Feb 24, 2014

யாரை நோக்கி கைநீட்டுவது?

சென்னையில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த உமா மகேஸ்வரி என்ற பெண் கொல்லப்பட்டது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரவு நேரத்தில் அலுவலகத்திலிருந்து வெளியேறி, பின் அறைக்குத் திரும்பாத பெண்ணின் அழுகிய உடலை பத்து நாட்களுக்குப் பிறகாக புதருக்குள் கண்டெடுத்திருக்கிறார்கள். கழுத்து, அடிவயிறு போன்ற இடங்களில் கத்திக் குத்து. கொடுமை. 

இந்தக் கொலைக்கு யாரைக் கை நீட்டுவது? வழக்கம் போல ஒரு பக்கம் அந்தப் பெண் ஏன் தனியாகச் சென்றாள் என்று கேட்பார்கள். இன்னொரு பக்கம் நிறுவனமும், காவல்துறையும் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பேசுவார்கள்.

ஆனால் உமாமகேஸ்வரியின் பெற்றோர்களுக்கு மகள் போனது போனதுதான்.

இப்பொழுதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதை மனிதாபிமானச் செயல் என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போகாமல் தடுப்பதற்காகவேண்டியாவது இத்தைகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. எட்டு மணிக்குப் பிறகாக அலுவலகத்தைவிட்டு வெளியேறும் பெண்களுக்கு வண்டி ஏற்பாடு செய்து கொடுக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பாக கார் டிரைவரே ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று வன்புணர்ந்த பிறகு இப்பொழுது ஒவ்வொரு வண்டியிலும் ஒரு செக்யூரிட்டியை அனுப்பி வைக்கிறார்கள். அப்படியும் நம் ஆட்களை நம்பமுடியாது- வாகன ஓட்டியும், பாதுகாவலனுமே இணைந்து இந்தக் காரியத்தைச் செய்துவிடக் கூடும் என்பதால் பெரும்பாலும் செக்யூரிட்டிகளை மாற்றி மாற்றி அனுப்புகிறார்கள். இன்று ஒரு வாகனத்தில் துணைக்கு செல்லும் பாதுகாவலன் நாளைக்கு இன்னொரு வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார். 

இன்னொரு பிரச்சினையாக பெண்களுக்கான வேலை நேரத்தை ஏன் இரவு வரை நீட்டிக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். வேலை நேரத்தை மாலை ஆறு மணியோடு முடிப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. பெரும்பாலான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பகல் நேரத்தோடு தங்கள் வேலை நேரம் ஒத்து வரும்படி அமைக்கிறார்கள். அப்படித்தான் வாடிக்கையாளர்களும் கோருகிறார்கள். ஐரோப்பாவில் வாடிக்கையாளர் இருப்பின், நமது பணி நேரம் இரண்டு மணி முதல் பதினோரு மணி வரை என்பதுதான் அவர்களின் வேலை நேரத்தோடு ஒத்துப் போகும். அதனால் அனைத்துப் பெண்களுக்கு காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரைதான் வேலை நேரம் என்று மாற்றியமைப்பதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். 

ஷிஃப்ட் நேரம் முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்தைவிட்டு உமாமகேஸ்வரி வெளியேறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இது மட்டும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் நிறுவனத்தை குற்றவாளி ஆக்கவே முடியாது. ஒன்று செய்திருக்கலாம்- ‘இரவு நேரத்தில் வீட்டில் விட வேண்டியது எங்கள் பொறுப்பு. நீங்கள் தனியாகச் செல்ல அனுமதிக்க முடியாது’ என்று உறுதிபடச் சொல்லியிருக்கலாம். 

இன்னமும் விசாரணையே முழுமையாக முடியாதபட்சத்தில் இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு கருத்துச் சொல்வது அதிகப்பிரசங்கித்தனம். உமாமகேஸ்வரி தவறு செய்தார் அல்லது நிறுவனம்தான் குற்றவாளி அல்லது காவல்துறைதான் பொறுப்பு என்று எதைச் சொன்னாலும் அது தவறாகிவிடக் கூடும்.

ஆனால் தவறு ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது; நம் ஒட்டுமொத்தச் சமூகத்திடமும் இருக்கிறது.

நமக்கு கிடைக்கும் சுதந்திரத்தையும், பணத்தையும் எல்லாவிதத்திலும் தவறாக பிரயோகிக்கத் தயாராக இருக்கிறோம். காதலர் தினம், புத்தாண்டு என எதையெல்லாம் வணிக மயமாக்க முடியுமோ அதையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் மிகத் திறமையாக வணிகமயமாக்கிக் கொண்டிருக்கின்றன. காதலர் தினத்தில் ரோஜாப் பூவின் விலை நூறு ரூபாயைத் தாண்டியது. கிஃப்ட் வாங்கவும், பூங்கொத்து வாங்குவதற்குமான கூட்டத்தை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில் பார்த்திருக்க வேண்டும். முந்தின நாளே இப்படியென்றால் காதலர் தினத்தன்று நிலைமை இன்னமும் மோசமடைந்திருந்தது. காபி டே போன்ற கடைகளில் உள்ளே அமர்வதற்கு இடமில்லாமல் ஏகப்பட்ட பேர்கள் வெளியே காத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. எதற்காக இப்படியொரு hype உருவாக்கப்பட வேண்டும்? இந்த தினங்களில் இருக்கும் commercialization ஐ புரிந்து கொள்ளாமல் நாமும் ‘காதலர் தினத்தைக் கொண்டாடுவோம்’ என்று உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். காதலைக் கொண்டாடுவதற்கும் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 

உண்மையில், தொழிநுட்பமயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலின் வேகத்திற்கு ஏற்ப நமது சமூகம் பக்குவப்பட்டதாக மாறவில்லை. அதுதான் பிரச்சினையின் அடிப்படை. இணையம், மொபைல் போன்றவை நமக்கு அளிக்கும் சுதந்திரம்- இதை சுதந்திரம் என்று நம்புகிறோம்; வணிகமயமாக்கலின் விளைவாக நம்மிடையே மலிந்து போயிருக்கும் கொண்டாட்ட மனநிலை போன்றவை மாற்றியமைக்கும் life style ஆகியவற்றை கிரகித்துக் கொள்ளும் அளவிற்கு நம்மிடையே பக்குவம் இல்லை. சுதந்திரம் என்பதில் எல்லை மீறல்களை அனுமதிக்கிறோம். கொண்டாட்ட மனநிலை என்பதில் அத்து மீறுகிறோம். இந்த வேகங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தாறுமாறாக குற்றங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடெல்லாம் எதுவும் கிடையாது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் Transition generationன் சாபக்கேடு இது.

நம்மை நாமே திருத்திக் கொள்ளாவிட்டாலும், சமூகத்தை பக்குவபடுத்தாவிட்டாலும் நிலைமை இன்னமும் மோசமாகிக் கொண்டுதான் போகும். போலீஸ்காரன் பாதுகாக்கவில்லை, நிறுவனம் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

இதை எழுதிவிட்டு திரும்ப வாசிக்கும் போது உமாமகேஸ்வரிதான் குற்றவாளி என்ற தொனி சேர்ந்துவிட்டது. அந்த ஜீவனை குற்றவாளியாக்குவது என் நோக்கமில்லை. அந்தப் பெண்ணுக்காகவும் அவளைவிட அதிகமாகவும் அவளது பெற்றோருக்காகவும் வருந்துகிறேன். ஆனால் இதுதான் மனதில் இருக்கிறது. இந்த எண்ணத்தை வேறு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.

Feb 23, 2014

போதும் போதும்

பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்கித் தரலாம் என்று எழுதிய போது எதிர்பார்த்ததை விடவும் சற்று கூடுதலாகவே பணம் சேர்ந்துவிட்டது. கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாய். இந்தத் தொகையில் ஆறு பள்ளிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கித் தரலாம் அல்லது தகுதியான பள்ளி என்று தோன்றினால் ஓரிரு பள்ளிகளுக்கு கூடுதலான தொகையை ஒதுக்கி மொத்த பள்ளிகளின் எண்ணிக்கையை ஐந்தாக மாற்றிக் கொள்ளலாம். இதை இன்னமும் உறுதியாக முடிவு செய்யவில்லை.

இப்போதைக்கு மூன்று பள்ளிகள் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  இன்னமும் திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசவில்லை. நண்பர்களின் பரிந்துரை அடிப்படையில் அந்தப் பள்ளி பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அரசுப்பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்குவதற்கு ஏதேனும் அரசு அனுமதி பெற வேண்டுமா என்று தெரியவில்லை. அதையும் விசாரிக்க வேண்டியிருக்கிறது.
  1. தாய்த்தமிழ் பள்ளி, கோபி
  2. தாய்த்தமிழ் பள்ளி, திருப்பூர்
  3. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, துலுக்கமுத்தூர், திருப்பூர் மாவட்டம்

இவை தவிர தங்கள் பள்ளிக்கு புத்தகங்களை வழங்கக் கோரி இரண்டு மூன்று பள்ளிகளிடமிருந்து மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. சற்று பரிலீத்துதான் பள்ளிகளை முடிவு செய்ய வேண்டும். அதே போலத்தான் புத்தகங்களின் பட்டியலும் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. இந்த வேலைகளை இன்னும் ஒரிரு வாரங்களில் முடித்து மார்ச் மாத மத்தியில் புத்தகங்களை அனுப்பி வைத்துவிடலாம்.

பெறப்பட்ட தொகை விவரம் இது- 

திரு. சரத்                              ரூ. 5000
திரு. ஈஸ்வரன்                    ரூ. 1000
திரு. இளையதாசன்           ரூ.  2000
திரு. ராமன் வரதாச்சாரி    ரூ.  5000
திரு. தெய்வ.மெய்யப்பன்  ரூ. 1200
திரு. நடராஜன்                     ரூ.   500
திரு. அப்துல் மஜீத்              ரூ. 1500 

மூன்று பேர்கள் தங்களின் பெயர் வெளியே தெரியக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அவர்களில் ஒருவர் இருபதாயிரம் ரூபாயும், ஒருவர் பத்தாயிரமும் இன்னொருவர் ஐந்தாயிரமும் அனுப்பியிருக்கிறார்கள்.

இது போக லிண்ட்சே லோஹன் புத்தகத்திற்கான ராயல்டி தொகை ரூ.3500, எனது பங்களிப்பாக ரூ.4000. மேலும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஒரு தொகையை தந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆக மொத்தம் சற்றேறக்குறைய அறுபதாயிரம் ரூபாய்கள்.

இது எதிர்பார்த்த தொகையைத் தாண்டிவிட்டதால் சிலர் பணம் தருவதாகச் சொன்ன போதும் மறுத்துவிட வேண்டியிருந்தது. அவர்கள் மன்னித்துக் கொள்ளவும். இது பண விவகாரம் என்பதாலும், ஏற்கனவே தெரிவித்திருந்தபடி சற்று பயப்படுவதாலும்தான் மறுக்க வேண்டியதாகிவிட்டது. தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

இந்தச் செயலை முழுமையாக முடித்த பிறகு பள்ளிகளின் விவரம், வழங்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் ஆகியவற்றை அறிவித்துவிடுகிறேன்.

பணரீதியாகவும் மனரீதியாகவும் இந்தச் செயலை ஊக்குவித்த அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றிகள். 

Feb 22, 2014

பூனை கண்களை மூடிக் கொண்டால்....

ரேமண்ட் கார்வர்- இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஈரோட்டிலிருந்து தாமோதர் சந்துரு அழைத்து கார்வரின் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டத்தில் பேச முடியுமா என்று கேட்கும் வரை எனக்கு இந்தப் பெயர் தெரியாது. இந்தக் கேள்வியை அவர் கேட்ட போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. யார் என்றே தெரியாத ஒருவரின் புத்தகத்தைப் பற்றி பேசச் சொன்னால்?  ஆனால் பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போகாதல்லவா? எனக்குத்தான் ரேமண்ட் கார்வரைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் அவர் பெரிய ஆள்தான். கூகிளும் விக்கிப்பீடியாவும் அப்படித்தான் சொல்கின்றன. 

யதார்த்தவாதக் கதைகள் செத்துப் போய்விட்டதாக- இப்படி அவ்வப்போது யாராவது கிளம்புவார்கள்- அது செத்துப் போய்விட்டது; இது செத்துப் போய்விட்டது என்று- அப்படி யதார்த்தவாதம் செத்துப் போனதாக பேச்சு வந்த காலத்தில் ‘இதோ நான் இருக்கேன்’ என்று சிகரெட்டும் கையுமாக களமிறங்கி பேனாவைச் சுழற்றிய முக்கியமான ஆள் கார்வர்.

எழுத்து என்றாலே அது ராஜாக்களைப் பற்றியும், பிரபுக்களைப் பற்றியும், பணக்காரர்களைப் பற்றியும் மட்டும் மேட்டுக்குடிதனத்தோடு எழுத வேண்டும் என்ற கற்பனாவாதத்தை(இதை ரொமாண்டிசம் என்கிறார்கள்) தாண்டி ‘சாமானிய ஆட்களைப் பற்றியும் எழுதலாம்ய்யா’ என்று ஒரு கூட்டம் கிளம்பியது. அது யதார்த்தவாத (Realism) எழுத்து. பூச்சும் அரிதாரமும் இல்லாமல் இருப்பதை இருப்பது மாதிரியே நம்மைச் சுற்றிய விஷயங்களை யதார்த்தமாக எழுதுவது. ரியலிஸத்தில் கார்வர் இன்னுமொரு படி மேலே போயிருக்கிறார். அவருடைய எழுத்து டெர்ட்டி ரியலிஸம். பொறுக்கி, குடிகாரன், திருடன், கைவிடப்பட்ட பெண் இவர்களையெல்லாம் கதை மாந்தர்களாக வைத்து எழுதுவது.

ஜல்லியை நிறுத்திக் கொண்டு மேட்டருக்கு போய்விடலாம்.

கார்வரின் புத்தகம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இல்லை. தமிழில்தான். க.மோகனரங்கன், சூத்ரதாரி, செங்கதிர் மற்றும் விஜயராகவன் ஆகிய நான்கு பேர்கள் சேர்ந்து கார்வரின் பன்னிரெண்டு கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்தக் கதைகளைப் பற்றித்தான் கூட்டத்தில் பேச வேண்டும். 

கிட்டத்தட்ட வாசித்து முடித்தாகிவிட்டது. 

பன்னிரெண்டுமே நல்ல கதைகள்தான். மிக எளிமையான மொழி நடையாலான கதைகள் இவை. தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை ரேமண்ட் கார்வர் கதைகளாக்கிவிடுகிறார். ஊர் ஊராக பெட்டி படுக்கையோடு இடம் மாறிக் கொண்டிருக்கும் அம்மா, ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் தனது மனைவியை கவர்ச்சிகரமானவளாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் கணவன், வாழ்க்கையில் பிரியும் கணவனும் மனைவியும் தங்களின் குழந்தைக்காக அடித்துக் கொள்வது போன்ற கதைகள். வழவழா கொழகொழா இல்லாத கதைகள் இவை.

என்னதான் ‘க்ளாஸிக்’ என்றாலும் மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசிக்கும் போது அப்படியொன்றும் தாய்மொழியில் வாசிப்பது போல இருப்பதில்லை. துளி நெருடல் இருக்கும். இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்கு இல்லை. இருந்தாலும் கூட இது போன்ற புத்தகங்களை வாசிப்பது மிக அவசியம் என நினைக்கிறேன்.

அப்படி நினைப்பதற்கு ஒரு ப்ளாஷ்பேக் இருக்கிறது.

ஹைதராபாத்தில் இருந்த சமயம் பெரும்பாலான நாட்கள் சாரதி ஸ்டுடியோஸூக்கு ஓடிவிடுவேன். அங்குதான் பிலிம் கிளப் இயங்கிக் கொண்டிருந்தது. எஸ்.வி.ராமகிருஷ்ணன் அதில் உறுப்பினர். அவர் தயவில் அயல்மொழி படங்களை ஓசியில் பார்த்துக் கொண்டிருந்தேன். மற்ற மொழிப்படங்கள் என்றால் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டேன். ஆனால் பிரெஞ்ச், ஹங்கேரிப் படங்கள் என்றால் தவறவிட்டதில்லை. அந்தப்படங்களில் நிச்சயம் ஓரிரு ‘ஸீன்களாவது’ தேறிவிடும் என்பதைத் தவிர வேறு முக்கியமான காரணங்கள் இல்லை. 

ஆனால் எஸ்.வி.ஆர் விட மாட்டார். படம் முடிந்த பிறகு ‘என்ன பார்த்தே?’என்பார். அவர் கேட்பது வேறு அர்த்தத்தில். ஆனால் ஆரம்பத்தில் அவர் எந்த அர்த்தத்தில் கேட்கிறார் என்று புரியாது. அவருக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் வயது வித்தியாசம். எதைப் பார்த்ததாகச் சொல்வது? பிதுங்கப் பிதுங்க விழிப்பேன். அவராகவேதான் சொல்வார் ‘இந்த மாதிரி வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கும் போது அந்த நாட்டோட கல்ச்சரை தெரிஞ்சுக்கலாம். எல்லா நாடுகளுக்கும் போகவா போறோம்? இப்படியான படங்கள்தான் அதற்கான வாய்ப்பு’ என்று. பிரெஞ்சு, ஹங்கேரியில் எல்லாம் இதுதான் கல்ச்சர் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்ட காலம் அது. 

அயல்மொழிப்படங்கள் மட்டுமில்லை; அயல்மொழி புத்தகங்களும் கூட அதே மாதிரிதான். அந்த தேசத்தின் பண்பாடு, அந்த மக்களின் வாழ்வியல் முறை போன்றவற்றை மட்டுமில்லை- அந்த மொழியில் எழுத்தாளர்கள் நடத்தும் விளையாட்டுக்களை புரிந்து கொள்ளவும், நமது இலக்கியத்திற்கும் பிற மொழிகளின் இலக்கியத்திற்குமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளவும் கூட இந்தப் புத்தகங்கள் உதவுகின்றன. 

‘வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு’ என்ற இந்தப் புத்தகமும் அதையேதான் செய்கிறது.

ரேமண்ட் கார்வரின் இந்தப் புத்தகம் பற்றித்தான் ஈரோட்டில் இன்று பேசுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன். நாஞ்சில்நாடன், பெருமாள் முருகன், மகுடேஸ்வரன் என்ற ஜாம்பவான்கள் வருகிறார்கள். சொதப்பாமல் இருக்க இந்த நள்ளிரவில் கார்வரின் விரல்களை மீண்டுமொருமுறை பிடித்துக் கொண்டு அமெரிக்காவை ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கிறேன். ஆமென்!


Feb 21, 2014

கன்னடத்தில்‘கூபே’ என்றால் கூகை என்று அர்த்தம்

கன்னடத்தில்‘கூபே’ என்றால் கூகை என்று அர்த்தம். ஆட்டோக்காரர், பஸ் கண்டக்டர், போக்குவரத்து ஒழுங்குக் காவலர் என்று யாராக இருந்தாலும் இந்த ஊரில் அடுத்தவனைத் திட்டுவதற்கு இந்தச் சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். சென்னையில் ‘ங்கோத்தா’ புழங்குவது போல. ஆனால் சென்னையில் அநியாயம். திட்டுவதற்கு மட்டுமில்லாமல் அதை மிக மிக சாதாரணமான சொல்லாக மாற்றிவிட்டார்கள். ‘ங்கோத்தா செம ஸ்பீடு...ங்கோத்தா போலீஸ்காரன் கை காட்டுனான்...ங்கோத்தா நிக்காம வந்துட்டேன்’ என்று ஒரு வரியை முடிப்பதற்குள் மூன்று முறை கூட சர்வசாதாரணமாகப் பயன்படுத்துகிறார்கள். மொழி மீதான ஆளுமை மிக்கவனாக இருந்தால் ஒரே வாக்கியத்தில் ஐந்து அல்லது ஆறு முறை கூடச் சொல்லிவிடுகிறார்கள்.

சென்னையில் ஒரு ஆட்டோக்காரரிடம்தான் இந்த வார்த்தையில் முதன்முறையாக திட்டு வாங்கினேன். சென்ட்ரலில் இறங்கி பேருந்துக்காக போய்க் கொண்டிருந்த போது ‘ஆட்டோ வேணுமா சார்?’ என்று பவ்யமாகத்தான் கேட்டார். நெற்றி நிறைய திருநீறும் ஆட்டோவுக்குள் ஊதுபத்தியுமாக ஆன்மிகம் சொட்டிக் கொண்டிருந்தது. எப்படியிருந்தாலும் ஆட்டோவில் போகப் போவதில்லை. ஆனால் ஒரு பொது அறிவுக்காக கேட்டு வைத்துக் கொள்ளலாம் என்று வாயைக் கொடுத்துவிட்டேன்.

‘வேளச்சேரி போகோணுங்கண்ணா...எத்தனை ஆகுமுங்க?’என்றேன்.

காலில் ரப்பர் செருப்பும், வாய் நிறைய கொங்குத்தமிழுமாக - வாய் மணத்தது என்று சொல்ல முடியாது- அதிகாலையில் இறங்கியிருந்தேன். நாறத்தானே செய்யும்? அது சென்னைக்கு தனியாக வரும் முதல் பயணம். அதற்கு முன்பாக ஒரேயொரு முறை அப்பாவும் நானும் பொறியியல் கவுன்சிலிங்குக்காக புளிச்சோறும் தக்காளிச்சோறும் கட்டிக் கொண்டு வந்திருந்தோம். ஒரே பகல்தான். காரியம் முடிந்ததும் கிளம்பிவிட்டோம். எம்.ஜி.ஆர் சமாதியைக் கூட பார்க்காத பயணம் அது. அதன் பிறகு இப்பொழுதுதான். சென்னை என் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கன்குடி மாரியம்மனை வேண்டிக்கொண்டு காலை கீழே வைத்திருந்தேன்.

‘முந்நூறு கொடு’ என்றார். உடனே சுதாரிச்சு ‘வேண்டாங்கண்ணா’ என்று சொல்லியிருந்தால் தப்பித்திருக்கலாம். 

‘மெட்ராஸ்ல ஏமாத்துவாங்களாமா கண்ணு..ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா வெலையைக் கொறச்சுக் கேளு’ என்று உசுப்பேற்றி ரெயில் ஏற்றி அனுப்பி வைத்திருந்தார்கள். அதே நினைப்பில் இருந்தேன். அந்த இடத்தை விட்டு நகர்வதான பாவனையில் ‘ஐம்பது ரூவாய்க்கு வருவீங்களாண்ணா?’ என்றேன்.

அந்த ஆளுக்கு உச்சி முடி நட்டுக் கொண்டது. இவன் எப்படியும் வரமாட்டான் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். ‘ங்கோத்தா கானங்காத்தால வந்துருக்கானுக பாரு சாவுகிராக்கி’என்றார். திருப்பி என்னவோ சொன்னேன். 

‘டேய் இங்கிருந்து வேளச்சேரிக்கு அம்பது ரூவாயா? சதாய்க்கிறியா? ங்கோத்தா’- கவனியுங்கள் இரண்டு முறை அந்தச் சொல்லைச் சொல்லிவிட்டார். 

‘என்னை என்ன வேணும்னாலும் பேசிக்குங்க...ஆத்தா அப்பன பேசுனீங்கன்னா நடக்கறதே வேறீங்கண்ணோவ்’ என்று எனக்கும் நட்டுக் கொண்டது- ஐ மீன், உச்சி முடி நட்டுக் கொண்டது.

‘என்னடா பண்ணுவ? ங்கோத்தா’ என்று அடிக்க வந்துவிட்டார். இன்னுமொருமுறை திட்டியாகிவிட்டது. இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் அப்பொழுது பொடியனாக இருந்தேன். சென்னையைப் பற்றியும் தெரியாது. ‘என்னடா இது இறங்கினதும் அதுவுமாக சண்டைக்கு வருகிறான்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்து நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டுவிட்டார். கையில் இருந்த பை கீழே விழுந்துவிட்டது. தடுமாறி சமாளித்துக் கொண்டேன்.

சமாளித்துக் கொண்டு என்ன பிரஜோஜனம்? அந்த மனிதனைத் திருப்பி அடிக்கவா முடியும். அந்தக் கிடா மனிதரை என்னால் அசைக்கக் கூட முடியாது என்று தெரியும். இன்னும் நான்கு ஆட்டோக்காரர்கள் சேர்ந்து கொண்டார்கள். எனக்கு அழுகை பொத்துக் கொண்டது. இந்த மாதிரி விஷயங்களில் பொசுக்கென்று கண்ணீர் வந்துவிடும். வேளச்சேரி வரைக்கும் நீ ஆட்டோவில்தான் வர வேண்டும் என்று கூட்டிச் சென்று முந்நூறு ரூபாயை பறித்துக் கொள்வார்கள் என்று நினைத்து பயம் வேறு ஒட்டிக் கொண்டது. அதைவிட முக்கியமான காரணம்- ங்கோத்தா என்று திட்டியது. இவன் யார் என்னைத் திட்டுவதற்கு? 

அழுவதைப் பார்த்ததும் ஒரு ஆட்டோக்காரருக்கு பரிதாபம் வந்திருக்கக் கூடும். அந்த கிடாயை அமைதியாகச் சொல்லிவிட்டு என்னை அனுப்பி வைத்துவிட்டார். தப்பித்தது ஆட்டோக்காரர் புண்ணியம் என்று ஓடி வந்துவிட்டேன். ஆனால் புதிய மனிதர்களின் முன்பாக அழுததை எந்தக் காலத்திலும் மறக்க முடிவதில்லை.

இது நடந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் ‘இதற்கெல்லாம் ஏன் அழுதேன்’ என்று தோன்றுகிறது. ஒரு ஈகோ சீண்டல்தான். இல்லையா? சம்பந்தமே இல்லாதவன் நம்மை பொதுவெளியில் திட்டுவது நம்மை கோபமடையச் செய்துவிடுகிறது. இயலுமெனில் எதிர்த்து திட்டுகிறோம்; இன்னும் இயலுமெனில் சண்டைக்குப் போகிறோம். இயலாதபட்சத்தில் உள்ளுக்குள் குமைந்து கொண்டு நகர்ந்துவிடுகிறோம். 

யாராவது நம்மை வசை பாடும் போது காதுகளைப் பொத்திக் கொள்வதோ அல்லது சிரித்தபடியோ அதைத் தாண்டுவதோ நம்மால் இயலாத காரியம் என்று நினைக்கிறேன். நம்மால் என்பது தமிழர்களை. பொதுவாகவே தமிழர்களைச் சீண்டிவிடுவது மிக எளிது. பேருந்தில் சற்று நகர்ந்து அமரச் சொன்னால் கூட முறைப்பவர்கள் அதிகம். திருப்பி ஒரு பார்வை பார்த்தால் சண்டை முட்டிக் கொள்ளும். சாலைகளில் தெரியாத்தனமாக பைக்கை முட்டிவிட்டால் கூட பொங்கிவிடுவார்கள். திருப்பி ஒரு வார்த்தையை நாம் உதிர்த்தால் பற்றிக் கொள்ளும். 

பெங்களூருக்கு வந்தபிறகு தெரியாத மனிதர்கள் என் ஈகோவைச் சீண்டுவதை அனுமதிப்பதேயில்லை.இது கன்னடக்காரர்களிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். அவர்களைச் சீண்டுவது சற்று கடினமான காரியம். கன்னடக்காரன் தவறு செய்தால் ‘கூபே’ என்று திட்டிப்பாருங்கள். பதிலுக்கு சிரிப்பார்கள். தமது தவறை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் முறை. ஆனால் பெங்களூரில் ரெட்டி சமூகத்தினர் அதிகம். கன்னடக்காரனாக இருக்கக் கூடும் என்று நினைத்து ரெட்டியை ‘கூபே’ என்று சொல்லி அடி வாங்கினால் கம்பெனி பொறுப்பாகாது. தவறு அவர்களுடையதாக இருந்தாலும் நாம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

தமிழனாக இருந்தால் திருப்பித்திட்டுவதோடு விட்டுவிடுவான். ரெட்டியாக இருந்தால் தனது வண்டியைக் குறுக்கே நிறுத்தி நம்மை கீழே இறக்கி கும்மிவிடுவார்கள். பீ கேர்புல்!

Feb 20, 2014

அவர்கள் வெளியே வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

“ராஜீவ் காந்தி கொலை என்பது இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல். எந்த அராசங்கமும் அல்லது கட்சியும் நமது தீவிரவாதத்திற்கு எதிரான சண்டையில் மென்மையாக நடந்து கொள்ளக் கூடாது” என்று பிரதமர் திருவாய் மலர்ந்திருக்கிறார். இனி ஒவ்வொருவருவராக வரிசையில் நின்று தடியெடுப்பார்கள். இந்த தேசத்தின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதாக ஒருவர் கருதுவார். இந்த தேசத்தின் பாதுகாப்பு அடமானம் வைக்கப்படுவதாக இன்னொருவர் கதறுவார். தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இப்பொழுதே ஹிந்து பத்திரிக்கையில் ‘அதெப்படி மாநில அரசு முடிவெடுக்கலாம்’ என்கிறார்கள். சிபிஐ என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் அமைப்பு. அது நடத்திய விசாரணையில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்களாம். நடுநிலையாளர்களைப் போலவே எழுதியிருக்கிறார்கள். வட இந்திய ஊடகங்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. கையில் மைக்குக்கு பதிலாக துப்பாக்கியைக் கொடுத்தால் நேராக வேலூர் சிறைச்சாலைக்கு வந்து ஏழு பேரையும் சுட்டுக் கொன்றுவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். தேசத்தின் மீதான அன்பு பெருகி வழிகிறது.

வட இந்தியர்களின் கமெண்ட்டுகளை இணையத்தில் வாசித்தால் கண்களில் ரத்தம் கசிகிறது. இந்த நாட்டில் வெறித்தனமான தேசபக்த உணர்ச்சியோடு இத்தனை மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை நினைக்கவே பெருமையாக இருக்கிறது. அவ்வளவு தூரம் போகாவிட்டால் என்ன? இங்கு இருக்கும் சில மனிதர்களைப் பாருங்கள். ராஜீவ் காந்தியோடு சேர்ந்து செத்துப் போன தமிழர்களுக்காக இதயம் வெடிக்கும் அளவுக்கு அழுகிறார்கள். ராஜீவ் காந்திக்காக இல்லாவிட்டாலும் உடன் செத்துப் போன தமிழர்களுக்காகவாவது ஏழு பேரையும் அம்மிக்கல்லுக்கு நடுவில் வைத்து நசுக்க வேண்டும் அல்லது கொதிக்கும் சுண்ணாம்புக் கால்வாயில் போட்டு சாவடித்துவிட வேண்டும் என்கிறார்கள்.

இத்தகைய கருத்துக்களைச் சொல்லும் தமிழ் நல விரும்பிகள்தான் தமிழக மீனவர்கள் நீலக்கடலில் சுடப்பட்ட போதெல்லாம் குடும்பத்தோடு பட்டினி கிடந்து தங்களை வருத்திக் கொண்டவர்கள் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவர்களுக்கு அத்தனை பாசம்- தமிழர்கள் மீது. முத்துக்குமரன் இறந்த போதும், இலங்கை முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போதும் தங்களைக் கொளுத்திக் கொள்வதற்காக கெரசின் டின்னோடு சுற்றித் திரிந்தவர்கள். அதனால்தான் ராஜீவ்காந்தியோடு செத்துப் போன தமிழர்களுக்கு பதிலாக இந்த ஏழு பேரைக் கொல்ல வேண்டும் என்கிறார்கள்.

இருக்கட்டும்.

ஒன்பது வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அந்த பேட்டரியில்தான் ராஜீவைக் கொன்ற வெடிகுண்டை தயாரித்தார்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். பேட்டரி செல் வாங்கியதற்கான பில் எதுவும் கையில் வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. பிரபாகரனிடம் கணக்கு காட்ட வேண்டுமல்லவா? ‘பேட்டரி செல் 2 ரூபாய்’ என்று பில் வாங்கி வைத்திருக்கக் கூடும். சிபிஐ சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நம்பிக் கொள்வோம். 

இவர்களைக் கொன்றுவிடுவதால் அல்லது தனிமைச் சிறையிலேயே அடைத்து வைப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? ஒருவேளை இவர்கள் தவறு செய்திருப்பவதாகவே இருந்தாலும் வெளியே வந்த பிறகு இன்னொரு தலைவருக்கு குறி வைக்கப்பார்கள் என்று நம்புகிறீர்களா? அல்லது இவர்களுக்கு தண்டனையளிப்பது அடுத்தவர்களுக்கான பாடமாக இருக்கும் என்றால் இனிமேல் தீவிரவாதிகள் பயந்து போய் தங்களது துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு சரணடைந்துவிடுவார்களா? எதுவுமே நடக்காது.

ஒரு மனிதனுக்கான அதிகபட்சத் தண்டனை என்பது அவனது வாழ்வின் பெரும்பகுதியை தனிமையில் கழிப்பதுதான். அதை இவர்கள் அதிகப்படியாகவே அனுபவித்துவிட்டார்கள். பத்தொன்பது வயதிலும் இருபது வயதிலும் சிறைச்சாலைக்குள் சென்றவர்கள் நாற்பது வயதிலும் ஐம்பது வயதிலும் வெளியே வர முயன்று கொண்டிருக்கிறார்கள். இளமை முழுவதும் சூரியனைப் பார்க்காத பகல்களால் கழிந்துவிட்டது. உடல் முறுக்கம் முழுவதும் விசாரணை என்ற பெயரில் இறங்கிய லத்திகளாலும் சிறையின் தனிமை தின்றதாலும் இளகிவிட்டது. இனியாவது வெளியே வரட்டுமே. நீங்களும் நானும் நம்பிக் கொண்டிருப்பது போல வெளியே வந்தவுடன் அவர்களுக்கு சாதாரண மனிதனைப் போல வாழ்க்கை அமைந்து விடப் போவதில்லை என்பதுதான் நிஜம். 

அவர்களைச் சாவடியுங்கள், அவர்களை தனிமையில் வாட்டுங்கள், அவர்களைக் கொல்லுங்கள் என்று நாம் உணர்ச்சிவசப்பட்டு கை நீட்ட வேண்டியதில்லை. உனது தந்தையைக் கொன்றிருந்தால் இப்படி விட்டுவிடச் சொல்வாயா என்று கேள்வி எழக் கூடும். அதே கேள்வியை சற்று மாற்றிக் கேட்கலாம். உங்களது மகனோ மகளோ இந்த நிலைமையில் இருந்தால் உங்களின் நிலைப்பாடு இதுவாகவேதான் இருக்குமா என்று. ஆனால் இந்த இரண்டு கேள்விகளுமே அபத்தமானவைதான். 

நமக்கான அரசியல், நமக்கான கோபங்கள் ஆகியவற்றை ஒதுக்கி விட்டு யோசித்துப் பார்த்தால் அவர்கள் வெறும் மனிதர்கள். கிட்டத்தட்ட அனைத்து எலும்புகளும் ஒடிக்கப்பட்ட, அத்தனை உணர்ச்சிகளும் சாகடிக்கப்பட்ட ஜீவன்கள். இன்னும் இருபது வருடங்களோ அல்லது முப்பது வருடங்களோ அதிகபட்சம் வாழ்வார்கள். எத்தனையோ குற்றவாளிகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பித்த அயோக்கியர்களாலும் சூழப்பட்டிருக்கிறோம். இந்த ஏழு பேரால்தான் நமது புனிதத்தன்மை கெட்டுவிடப் போகிறதா? 

இவர்களின் விடுதலை என்பது ஓட்டுக்கான அரசியல், தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவு, எதிரியை வீழ்த்தும் திட்டம் என்று என்ன காரணமாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். இத்தனை வருடங்களாக இன்று சாவேனா, நாளை சாவேனா என்று எதிர்பார்த்து இருட்டுக்குள் கிடந்திருக்கிறார்கள். கால் நூற்றாண்டு காலத்தை இழந்துவிட்டார்கள். இனியாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே! அவர்கள் வெளிவருவதற்குத் தேவையான மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- எதுவாக இருந்தாலும் தேர்தல் நடப்பதற்குள் ஏழு பேரும் வெளியே வந்துவிட்டால் விடுதலை அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம். தவறினால் அவ்வளவுதான். அடுத்த தேர்தல் வரைக்கும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது மட்டும் நிதர்சனம்.

Feb 19, 2014

உங்களது அறியாமையை பார்த்துச் சிரிக்கிறேன்

உங்களது அறியாமையை பார்த்து சிரிக்கிறேன். ஒருவேளை நீங்கள் Product based நிறுவனத்தில் பணியாற்றியதே இல்லை என நினைக்கிறேன். நான் அப்படியான ஒரு நிறுவனத்திற்காக பணிபுரிகிறேன். ஒரு வருடம் ஆகிவிட்டது; எனக்கு எல்லாவிதமான சுதந்திரங்களும் இருக்கின்றன. கணக்கில்லா விடுமுறைகள், வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான அனுமதி, வரையறுக்கப்படாத பணி நேரம்- நான் அலுவலகத்திற்கு தாமதமாகச் சென்றாலோ அல்லது நேரத்திலேயே வீடு திரும்பினாலோ யாருமே கேள்வி கேட்பதில்லை. அதற்கான அனுமதி கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு மின்னஞ்சலை அனுப்பினால் போதும்- விடுமுறை கிடைத்துவிடும். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.

ஆமாம், தேவைப்படாதபட்சத்தில் நீங்கள் பணியிலிருந்து நீக்கப்படுவீர்கள். அரசாங்க அலுவலகங்களைப் போல வெட்டியாக அமர்ந்து பாதுகாப்பான வாழ்க்கையை அனுபவிக்க முடியாது. நீங்கள் உங்கள் வேலையில் முன்னேற வேண்டும். புதியதாக கற்றுக் கொண்டிருக்க வேண்டும். உழைக்க வேண்டியிருக்கிறது. ஒருபக்கம் வேலையிலிருந்து நீக்குகிறார்கள். இன்னொரு பக்கம் திறமையானவர்களை பிடித்து வைத்துக் கொள்ள சம்பளத்தை இரண்டு மடங்காக்கவும் தயங்குவதில்லை.

நான் சம்பள உயர்வு கேட்டேன். இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 75% உயர்த்திக் கொடுத்தார்கள். ஆறுமாதங்கள்தான் ஆகிறது. இன்னொரு சம்பள உயர்வு வரப் போகிறது. இவையெல்லாம் நாம் வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறோம் என்பதைப் பொறுத்ததுதான். நான் கணினியைக் காதலிக்கிறேன். கற்பதை விரும்புகிறேன். லினக்ஸ் பிடிக்கும். ப்ரோகிராம் எழுதுவது பிடித்திருக்கிறது. பிடித்ததைச் செய்கிறேன். சம்பாதிக்கிறேன். இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவராக இல்லையென்றால், உங்களுக்கு எது பொருத்தமானதாக இருக்கிறதோ அதைத் தேட வேண்டும். புகார் செய்து கொண்டிருக்கக் கூடாது.

எனக்கு இங்கு எல்லாவிதமான சுதந்திரமும் இருக்கிறது. அலுவலக நேரத்திலேயே கூட சில மணி நேரங்கள் உறங்குகிறேன். அலுவலக நேரத்திலேயே சினிமா பார்க்கிறேன். எங்கள் அலுவலகத்திலேயே மினி தியேட்டர் இருக்கிறது. ஒவ்வொரு மதிய நேரத்திலும் விளையாடுகிறேன். மாலை நேரங்களில் அலுவலகத்தின் ஜிம்முக்குச் செல்கிறேன். யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. வீடு போரடித்தால் அலுவலகத்திற்குச் செல்கிறேன். அலுவலகம் போரடித்தால் வீட்டிற்குச் செல்கிறேன். எதை விரும்பினாலும் எனது மேனஜரிடம் கேட்கிறேன்.எந்தத் தடையும் இல்லை. ஐடி நிறுவனத்திற்காக வேலை செய்வதை பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். ஏனென்றால் இங்குதான் எனது அத்தனை சுதந்திரங்களையும் அனுபவிக்க்கிறேன்.

நன்றி,
கோகுல்

அன்புள்ள கோகுல்,

உங்களின் கடிதம் சந்தோஷம் அளிப்பதாக இருக்கிறது. தனது வாழ்க்கையைக் கொண்டாடுவதாகச் சொல்லும் மனிதர்களைப் பார்ப்பதைவிட பெரிய சந்தோஷம் வேறு இருக்க முடியாது என நம்புகிறேன். இங்கு புலம்புவர்கள்தான் அதிகம். அது சரியில்லை; இது சரியில்லை என்று சொல்வதற்கு ஏதாவது ஒரு காரணம் சிக்கிக் கொள்ளும்.அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உங்களின் இந்த வாக்குமூலம் வித்தியாசமானது. அதற்காகவே இதை பொதுவெளியில் வெளியிட உங்கள் அனுமதி தேவை. (உங்கள் நிறுவனத்தின் பெயரை நீக்கியிருக்கிறேன்)

உங்களின் இந்தக் கடிதம் சம்பந்தமாக இரண்டு விஷயங்களைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

முதலாவது விஷயம், இந்தத் துறையில் அத்தனை பேருக்கும் உங்கள் நிறுவனம் வேலை கொடுப்பதில்லை. அதனால் பெரும்பாலானோருக்கு இந்த வசதிகள் வாய்ப்பதில்லை.

இரண்டாவது விஷயம், இது போன்ற பிரச்சினைகளில் உங்களைப் போன்ற ஐந்து சதவீதம் பேரின் சந்தோஷங்களையும் பிரதாபங்களையும் எழுதுவதையும் விடவும் அறுபது சதவீதம் பேரின் பிரச்சினைகளை எழுதுவதுதான் அவசியமானது என்று நினைக்கிறேன்.

இவை தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஒன்று சொல்ல வேண்டும். உங்களின் உற்சாகத்தையும், சம்பளக் கணக்கையும் பார்த்தால் நிச்சயமாக நீங்கள் வேலைக்குச் சேர்ந்து ஐந்து வருடங்கள் கூட ஆகியிருக்காது என்று கணித்துவிடலாம். 

எடுத்தவுடனேயே பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் இப்படித்தான் இருக்கும். இது ஒரு ஹனிமூன் காலம். சொல்கிறேன் என்று தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்- முதல் ஐந்து வருடங்களுக்கு அப்படித்தான் தெரியும். நமது நிறுவனம்தான் பெஸ்ட்; நமது வேலைதான் பெஸ்ட்; நமது சம்பளம்தான் பெஸ்ட். இப்படி எல்லாமே ‘பெஸ்ட்’. உலகமே கிட்டத்தட்ட காலடியில் கிடப்பது போலத்தான். 

இந்த சொகுசும், அதீதமான பெருமிதமும்தான் ஒருவனது வாழ்க்கை முறையை மாற்றுகிறது. கைகளில் நிறைய பணம் புழங்கும். திருமணம் ஆகியிருக்காது. கேள்வி கேட்க அருகாமையில் யாரும் இருக்க மாட்டார்கள். நண்பர்கள் பெருகியிருப்பார்கள். ரெஸ்டாரண்ட்கள், ஊர் சுற்றல்கள், மால், காஸ்ட்லி ஆடைகள் என்று ஆளை புரட்டிப் போடும். இனி எந்தக்காலத்திலும் கீழே விழப்போவதில்லை என்ற எண்ணம் வந்து மண்டையில் ஏறிக் கொள்ளும்.

‘ஆளே மாறிட்டாண்டா’ என்கிறார்கள் அல்லவா? அதைக் கண்கூடாக பார்க்கலாம்.

இந்த ‘ஆளே மாறிட்டாண்டா’தான் பிற துறைகளில் இருப்பவர்களுக்கு எரிச்சல் உண்டாக்குகிறது. அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பீற்றிக் கொண்டு திரிவோம்.

நம் வாழ்க்கை முறையை புரட்டிப் போடும் இத்தகைய வசதிகளும் வாய்ப்புகளும் ஒருவிதமான பொறிதான். நம்மையும் அறியாமல் சிக்கிக் கொள்வோம். சீக்கிரம் வெளியில் வரவே முடியாத பொறி அது. சுதந்திரம் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது எப்பொழுதும் சுதந்திரமாகவே இருப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

உங்களுக்கு இப்பொழுது இருக்கும் இதே மனநிலை வேலைக்குச் சேர்ந்து பத்து வருடங்கள் கழித்தும் இருந்தால் அதை வரம் என்று தாராளமாகச் சொல்லிவிடலாம். உங்களுக்கு அத்தகைய வரம் கிடைக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள். ஆனால் அதற்கு முன்பாக ‘உன் அறியாமையைப் பார்த்துச் சிரிக்கிறேன்’ என்றெல்லாம் சொல்வது சரியானதில்லை என்று புரிந்து கொள்ளுங்கள்.

மிக்க அன்புடன்,
மணிகண்டன்

குடிகாரன்

ஞாயிற்றுக்கிழமை சேலம் போக வேண்டியிருந்தது. கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்கள் அழைத்திருந்தார்கள். பெருமாள் முருகனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா ஞாயிறுதான் நடைபெற்றது. அமெரிக்காவில் இருக்கும் சில இலக்கிய வாசகர்கள் பல வருடங்களாக இந்த விருந்தை வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் மூன்று படைப்பாளிகள் நடுவர்களாக இருந்து இந்த விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வருடம் பெருமாள் முருகனுக்கு. அநேகமாக விருதைப் பெற்றுக் கொள்பவர் விரும்பும் ஊரில்தான் விழா நடக்குமாம். இந்த முறை சேலத்தில்.

சேலத்தில் விழா நடைபெறுவதாக அறிவித்தவுடனே கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். அந்த ஊரின் மீதான பிரியம் அப்படி. சேலத்தில் இருந்த நான்கு வருடங்களும் அந்த நகரத்தை மனதுக்கு நெருக்கமானதாக மாற்றியிருக்கிறது. மற்ற எல்லா ஊர்களையும் போலவே பதினைந்து வருடங்களில் சேலம் தாறுமாறாக மாறியிருக்கிறது. இருந்தாலும் ஊரின் உயிர் அப்படியேதான் இருக்கிறது. ஒவ்வொரு ஊருக்கும் உயிர் உள்ளது அல்லவா? அந்த உயிரின் காரணமாகவே ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நுண்மையான சுவாரஸியம் உண்டு. எந்த ஊரும் தனது சுவாரஸியத்தை நமக்கு அவ்வளவு சீக்கிரம் காட்டிவிடாது. தனது ஒவ்வொரு மூலையிலும் பாதங்களை அலையவிடுபவனுக்கே தனது ரகசியங்களின் புதிர்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கின்றன. அதை மெல்ல மெல்லப் பருக வேண்டும். 

நகரங்களின் பகலை விட இரவு எந்தவிதத்திலும் மட்டமானது இல்லை. விளக்கு வெளிச்சமும், குளிர்ந்த காற்றும், குப்பை பொறுக்கும் எளிய மனிதர்களும், தீடிரென்று விரையும் வாகனங்களும், டீ விற்கும் சைக்கிள்காரரும், வீதியைப் பெருக்குபவர்களும், கண்ட்ரோல் ரூம் ஓசையைத் துப்பும் வாக்கி-டாக்கியோடு அலையும் போலீஸ் வாகனமும், வெளியில் காட்டிக் கொள்ளாத பயத்தோடு வேகமாக நகரும் மனிதர்களும், உறங்காமல் திரியும் நாய்களும், ஓரமாக நின்று சைகை செய்யும் பெண்களும்- அது ஒரு மாய உலகம்.

சேலத்தை வெகுநாட்கள் அப்படி பார்த்திருக்கிறேன். நள்ளிரவுகளில் பல கிலோமீட்டர்கள் நடந்திருக்கிறேன். அதுவும் இரவு நேரத்திலேயே. இரவுக்காட்சிகள் முடிந்த பிறகு பழைய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு நடந்து வந்த பாதையின் நினைவுகள் வரும் போதெல்லாம் சேலம் பற்றிய கற்பனைகள் விரிந்துவிடும். இனி திரும்பவே முடியாத கற்பனைகள் அவை. அதன் காரணமாகவோ என்னவோ சேலத்தோடு நெருங்கிய உறவு இருப்பதாக அவ்வப்போது தோன்றும். அந்த நெருக்கத்தின் காரணமாகவே சேலம் என்றவுடன் வருவதாக முடிவு செய்து கொண்டேன்.

இன்னொரு காரணம் பெருமாள் முருகன். அவரது எழுத்துக்கு இருக்கும் வசீகரம். கிட்டத்தட்ட அடிமையாக்கி வைத்திருக்கிறார். 

இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்த மாதிரியான இலக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது முந்தின நாள் இரவே போய்விடுவது நல்லது. அறையில் தீர்த்தவாரி நடக்கும். போதை ஏற ஏற நிறையப் பேசுவார்கள். நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. காது கொடுத்தால் போதும். ஒருவர் கவிதையைப் பற்றி பேசுவார். இன்னொருவர் நாவலைப் பற்றிப் பேசுவார். இன்னொருவர் யாரையாவது திட்டுவார். போதை மனத்தடைகளை உடைத்திருக்கும் என்பதால் மனதுக்குள் இருப்பதையெல்லாம் கொட்டிவிடுவார்கள். அமைதியாக அமர்ந்திருந்தாலோ அல்லது அவ்வபோது எதையாவது கேள்வி கேட்டாலோ போதும்- ஏகப்பட்ட விவரங்களை மூளையில் கட்டிக் கொள்ளலாம். 

அப்படித்தான் நம்பிச் சென்றிருந்தேன். 

சேலத்தை அடையும் போது இரவு மணி பதினொன்றாகிவிட்டது. விடுதி அறையை தேடிக் கண்டுபிடித்த போது கிட்டத்தட்ட பேச்சு முடிந்திருந்தது. முடிந்திருந்தது என்று சொல்ல முடியாது. முடித்து வைத்துவிட்டார் ஒரு மனிதர். அவரை இதற்கு முன்பாக எங்கும் பார்த்ததில்லை. யாருடன் வந்திருந்தார் என்றும் தெரியவில்லை. குடிக்கிறார். குடிக்கிறார். குடித்துக் கொண்டேயிருக்கிறார். ஏறிய போதையின் காரணமாக வேறு யாரையும் பேசவிடவில்லை. பேசவிடவில்லையென்றாலும் பரவாயில்லை. தானாவது உருப்படியாக பேச வேண்டும். அதுவும் இல்லை. எரிச்சலாக இருந்தது. 

எத்தனை நேரம்தான் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? மற்றவர்கள் ஒவ்வொருவராக அறையைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அறையில் இருந்த ஓரிரு நண்பர்களும் உறங்கிவிட்டார்கள்.  சிக்கிக் கொண்டவன் நான்தான். தெளிவாக இருப்பவன் ஒருவன் நிறைந்த போதையில் இருப்பவனிடம் சிக்கிக் கொள்வதைப் போன்ற அவஸ்தை வேறு எதுவும் இல்லை. எழுந்து ஒரு நடை போய் வருவதற்கும் வாய்ப்பு இல்லை. அந்த விடுதியின் வெளிக்கதவை பூட்டி வைத்திருந்தார்கள். நொந்துவிட்டேன். திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தார். எத்தனை நேரம்தான் கேட்பது? காதில் துளி ரத்தம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தது. 

தூங்குவது போல நடித்தாலும் விடுவதாகத் தெரியவில்லை. கால்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டு ‘தூங்கிட்டியா? உன் கூட பேச வேண்டும்’ என்கிறார். ‘ஆமாங்க தூங்கிட்டேன்’ என்றால் ‘இதை மட்டும் கேளு’ என்கிறார். முகத்தை அஷ்டகோணலாக மாற்றினாலும் அவருக்கு அது பற்றிய கவலை இல்லை. எதையாவது முழங்கிக் கொண்டிருந்தார். பதில் சொல்லவில்லையென்றால் சண்டைக்கு வருகிறார். 

அரிவாளை எடுத்து கழுத்தை ஒரே போடாக போட்டால் ஒரு நிமிட வலிதான் .போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால் குரல்வளை மீது காலை வைத்து ஒரு ஆக்‌ஷா ப்ளேட்டினால் அறுத்தால் எப்படித்தான் வலியை பொறுத்துக் கொள்வது. அதுவும் முனை மழுங்கிய ப்ளேடு. கழுத்தை தனியாக அறுத்து எடுத்துவிட்டார். நாக்கு வெளியே தொங்கியபடியிருந்த எனது கோர முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஜென்மத்திற்கும் என் மீது பரிதாபப்படுவீர்கள்.

இரவு தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பது பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.வழக்கமாகவே இரண்டு மணி ஆகிவிடும். முழு இரவும் தூங்காமல் கூட விழித்திருக்கிறேன். ஆனால் இந்த டார்ச்சரோடு விழித்துக் கொண்டிருப்பதுதான் நோகடித்திருந்தது. 

விடுதலை அடையும் போது மணி மூன்றரை ஆகியிருந்தது. ‘போதுமடா சாமீ’ என்று குப்புறப் படுத்துக் கொண்டேன். அத்தனை போதையில் படுத்தாலும் அவர் ஆறுமணிக்கு எழுந்துவிட்டார். 

விதி வலியது. வாய் கூட கொப்புளிக்கவில்லை. பாட்டில் மூடியைத் திறந்துவிட்டார். அடுத்த தாக்குதல் ஆரம்பமானது. 

குடிப்பது தவறு என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் இத்தகையவர்கள் அநியாயத்துக்கு குடிக்கிறார்கள். இவர்கள் குடித்துவிட்டு உளற ஆரம்பிக்கும் போது ‘உரையாடலாம்’ என்று நினைப்பவர்கள் கூட பாதியில் கிளம்பிவிடுகிறார்கள். இப்படி குடிப்பதால் எதைச் சாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெருமாள் முருகனிடம் பேசுவதற்காக நிறைய தயாரிப்புகளைச் செய்திருந்தேன். அவரது ‘சாதியும் நானும்’ பற்றி பேசுவதற்கு ஒரு குறிப்பேட்டில் நிறைய எழுதி வைத்திருந்தேன். அவரது நாவல்கள், சிறுகதைகளைப் பற்றியெல்லாம் பேசியிருக்கலாம். எதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. வெளி ரங்கராஜனிடமும் இதுவரை பேசியதில்லை. அவரோடும் சிபிச்செல்வனோடும் பேசியிருக்கலாம். இசை வந்திருந்தார். பெரியசாமி இருந்தார். வே.பாபு இருந்தார். அத்தனை பேரையும் இவர் ஒருவரே விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டார்.

ஆனால் ஒருவிதத்தில் எனக்கு உதவியிருக்கிறார். எவ்வளவு பெரிய இலக்கியக் கூட்டமாக இருந்தாலும் குடிப்பவர்களுடன் இரவு நேரங்களில் தங்குவதைத் தவிர்த்துவிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். இந்த ஒரு அனுபவமே போதும். இப்படியானவர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாக இனி என்னால் முடியாது.

(இது இரவு அனுபவம் மட்டும்தான். மற்றபடி கூட்டம் மிக அருமையாக நடந்தது. அது பற்றி தனியாக எழுத வேண்டும். கூட்டத்தை நடத்திய நண்பர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளும்; பாராட்டுகளும்)

Feb 14, 2014

ஐடித் துறையில் உரிமையும் சுதந்திரமும் இருக்குதானே?

ஐடி துறையில் உரிமையும் சுதந்திரமும் இருக்கிறதுதானே? இல்லாமல் என்ன? தாறுமாறாக இருக்கிறது. 

மேனஜரை பெயர் சொல்லி அழைக்கலாம். அவரோடு ஒரே டேபிளில் அமர்ந்து மதிய உணவு உண்ணலாம். அவருடன் ‘தம்’ அடிக்கப் போகலாம். ஆனால் மற்ற துறைகளில் இதெல்லாம் முடியுமா? மேனஜர் வந்தாலே எழுந்து நிற்க வேண்டும். பேச்சுக்கு பேச்சு ‘சார்’ போட வேண்டும். அவர் காலால் தட்டிவிடும் வேலையை நாம் தலையால் செய்து முடிக்க வேண்டும் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்தான்.

வெளியில் சொல்வதற்கு வேண்டுமானால் இது பந்தாவாக இருக்கும். ஆனால் உண்மைதான் பல்லிளித்துக் கொண்டு நிற்கும்.

என்ன சுதந்திரம் இருக்கிறது?

இதோ வங்கியில் பணிபுரிபவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தை முடித்தால் பிஎஸ்என்எல் காரர்கள் ஆரம்பிப்பார்கள். அவர்கள் முடித்தால் வேறு யாராவது. இப்படி போராட்டங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும். மரபுசாரா தொழிலாளர்கள் கூட எப்படியோ ஒன்றிணைந்துவிடுகிறார்கள். பாலுக்கு விலை இல்லை என்று பால் வியாபாரிகள் பாலைக் கீழே கொட்டி போராடுகிறார்கள். ஆட்டோ கட்டணத்தை உயர்த்தச் சொல்லி டிரைவர்கள் நகரை ஸ்தம்பிக்கச் செய்கிறார்கள். இதெல்லாம் முடியாத தொழிலாளர்கள் குறைந்தபட்சம் தொழிற்சாலையின் நுழைவாயிலில் நின்று தர்ணா செய்வார்கள்.

ஐ.டியில் இதையெல்லாம் செய்ய முடியுமா? போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம். குறைந்தபட்சம் அடிப்படையான கோரிக்கைகளை பொதுவில் முன் வைக்க முடியுமா? பொதுவில் கூட வேண்டாம். மேனேஜரிடம் சொல்வதற்கு எத்தனை பேருக்கு தைரியம் இருக்கிறது? இங்கு எதுவுமே சாத்தியமில்லை. வருகிறோம். வேலையைச் செய்கிறோம். கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொள்கிறோம். வேலையை விட்டு போகச் சொன்னால் கிளம்பிவிடுகிறோம். அவ்வளவுதான். கோரிக்கையும் கிடையாது கீரிக்கையும் கிடையாது.

பிற துறைகளில் வருடாந்திர போனஸ் குறைந்தால் கேள்வி கேட்பார்கள். சம்பள உயர்வு இல்லையென்றால் கேள்வி கேட்பார்கள். வேலை அதிகமாகக் கொடுத்தால் மறுப்பார்கள். இதில் ஒன்றையாவது இங்கு செய்ய முடியுமா என்ன? ம்ஹூம். எதற்குமே சாத்தியமில்லை.

சென்ற வாரத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆட்களை வீட்டுக்கு அனுப்பிய விவகாரம் செய்தித்தாள்களில் வெளிவந்தது. அதை Man slaughter என்றார்கள். blood bath என்றார்கள். அதன் பிறகு? அவ்வளவுதான். இதோடு விவகாரம் முடிந்துவிடும். இனிமேல் அதைப் பற்றி வெளியே பேச மாட்டார்கள். இப்படியான வேலைக் குறைப்பை ‘திடுதிப்’ என்று வேறு துறைகளில் செய்ய முடியுமா? யூனியன், போராட்டம் என்று மொத்த நிறுவனமும் ஸ்தம்பித்துவிடும். ஆனால் ஐடித்துறையைப் பொறுத்தவரைக்கும் ‘என் வேலையானது எனக்கும் என் குடும்பத்திற்கும் முக்கியம்’என்ற கான்செப்ட்தான். என் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி அறுந்துவிடாமல் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வேன். 

ஐடி துறை நிறுவனங்கள் தனது நிறுவன ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்பட்டும். அவர்களின் நிறுவனம்; அவர்களின் முடிவு. அதைப் பற்றி பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்பாகத் தெரிவித்தால் கூட மனதளவில் தயாராகிக் கொள்ளலாம். அப்படியா செய்கிறார்கள். அலுவலகத்திற்குள் வந்தவனை அழைத்து அடுத்த பத்து நிமிடங்களில் வீட்டுக்கு அனுப்புவது ஆட்டை வெட்டுவது போல் அல்லவா? தொண்ணூறு சதவீதம் பேர் அப்படியே நொறுங்கிப் போகிறார்கள். அடுத்த மாத வாடகை, குடும்பச் செலவு, குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு என அத்தனையும் பூதாகரமாக வந்து அழுத்தத் தொடங்கும். இருண்டு போய்விடுகிறார்கள்.

இதையெல்லாம் இங்கு யாராவது கேட்க முடியுமா என்ன? மூச்சு விட முடியாது. 

அதைத்தான் சென்ற முறை எழுதியிருந்தேன். வேலையைவிட்டு அனுப்பப்பட்ட ஒருவன் ஹெச்.ஆரை அடித்தான் என்றும் அதன் மூலம் தனது குறைந்தபட்ச எதிர்ப்பை நிறுவனத்திற்கு காட்டியிருந்தான் என்றும். அதற்கே இன்னமும் ட்விட்டரில் என்னைத் தாளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார். நல்லவேளையாக நான் ட்விட்டர் பக்கம் போவதில்லை. ஹெச்.ஆர் என்ன செய்வான்? அவன் பாவம்தான். மேலே இருக்கும் ஆட்களின் கட்டளையை நிறைவேற்றுகிறான். ஆனால் வேலையிலிருந்து அனுப்பப்படும்போது தனது எதிர்ப்புணர்வை காட்டுவதற்கு வேறு எந்த வழியுமே இல்லாதவன் அதைச் செய்தான் என்பதற்காக எழுதியிருந்தேன். அது ஒரு exceptional case. கிட்டத்தட்ட அத்தனை பேரும் தலையைக் குத்திக் கொண்டும் கண்களைக் கசக்கிக் கொண்டும்தான் வெளியேறுவார்கள். இவன் செய்த காரியத்தை பெருமைக்காகச் சொன்னதாக தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

வேலையை விட்டு அனுப்புவது இருக்கட்டும் விடுங்கள்.

விடுப்பு கொடுக்க எத்தனை அலுவலகங்களில் தயங்குகிறார்கள் தெரியுமா? விடுப்புக் கொடுக்காத மேனேஜரைக் குறை சொல்லவில்லை. அவருக்கு டார்கெட் வைத்துவிடுகிறார்கள். ‘உன்னிடம் இருக்கும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் இந்த வாரம் வேலை செய்திருக்க வேண்டும்’ என்கிறார்கள். அவர் என்ன செய்வார்? மீறி விடுப்புக் கொடுத்தால் அவர் தலையில் கை வைப்பார்கள். மிக நைச்சியமாக வேலை நேரத்தை அதிகரிக்கிறார்கள். மாலை நேரத்தில் சூரியன் மறைவதற்குள் வீடு செல்பவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் மாதத்தில் ஒரு நாள் கூட அதற்கான வாய்ப்பு இல்லாதவர்கள்தான் அதிகம். மீறி வீட்டுக்குச் சென்றாலும் அங்கே பெட்டியைத் திறந்து வேலை செய்பவர்கள்தான் கணிசமாக இருக்கிறார்கள்.

‘உங்களுக்குத்தான் சம்பளம் கொட்டிக் கொடுக்கிறார்களே என்று கேட்கக் கூடும்’. ஆமாம். கொட்டிக் கொடுத்தார்கள்- ஒரு காலத்தில். இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மார்ச் மாதம் வந்தால் போதும். ‘நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது’ என்று பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள். ‘இந்த வருடம் அநேகமாக சம்பள உயர்வு இருக்காது; அல்லது மிகக் குறைந்த அளவில் இருக்கும்’ என்ற நினைப்பை நம்மிடையே உருவாக்கிவிடுவார்கள். நாம் தயாராகிக் கொள்வோம். கடந்த நான்கைந்து வருடங்களில் நல்ல சம்பள உயர்வு என்று பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

வேலை, சம்பளம் என்பதெல்லாம் கூட இரண்டாம் பட்சம். அதைவிடச் சிக்கல் ஒன்று உருவாகியிருக்கிறது. நாமக்கல் பள்ளிகள் மட்டும் இல்லை- ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை கிட்டத்தட்ட ப்ராய்லர் கோழியைப் போலவே ஆக்கிவைத்துவிட்டன. இந்தத் துறையை விட்டு வெளியேறுவதற்கான அத்தனை சாத்தியங்களும் குறைக்கப்பட்டுவிட்டன. இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறினால் இன்னொரு ஐடி நிறுவனத்தின் கதவைத்தான் தட்ட முடியும். துணிந்து வேறு தொழில்களில் ஈடுபடுவதற்கான முனைப்புகள் மெல்ல மெல்ல மழுங்கடிக்கப்படுகின்றன. அதற்கான தைரியம் இல்லாத ஒரு சமூகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மீறி துணிந்தாலும் எத்தனை பேருக்கு உடல் ஒத்துழைக்கும் என்று தெரியவில்லை. வேறு தொழிலைத் தேடி இந்தச் சூழலில் இருந்து வெளியேறுபவர்கள் மிக மிகச் சொற்பம். அப்படிச் செல்பவர்களை தப்பித்தவர்கள் என்று தைரியமாகச் சொல்ல முடியும்.

இதையெல்லாம் ஐடி நிறுவனங்களை குறை சொல்வதற்காகச் சொல்லவில்லை. 

சம்பளம் தருகிறார்கள். வாழ்க்கையை சொகுசாக்கிக் கொண்டாகிவிட்டது. இந்த சொகுசுக்காக எனது உரிமை, சுதந்திரம் பற்றியெல்லாம் யோசிப்பது இல்லை. இந்த வேலையும் சம்பளமும் இருக்கும் வரைக்கும் மற்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் வேலை செய்து கொண்டிருப்பேன். செக்கிழுப்பதற்காக பூட்டப்பட்ட மாடு தனது உரிமை பற்றி எப்பவாவது யோசித்திருக்குமா? அப்படியே யோசித்தாலும் உடனடியாக மறந்துவிட்டு செக்கை இழுக்கத் தொடங்கிவிடும் அல்லவா? அப்படித்தான்.

(‘ஐடித் துறையில் உரிமையும் சுதந்திரமும் இருக்கிறதுதானே?’ என்று நேற்று கேட்ட நண்பர் அதியமானுக்காக)

Feb 13, 2014

எதுக்கும் இருக்கட்டும் வைங்க

நண்பர் ஒருவர் முப்பதுக்கு நாற்பது சைட் வாங்கியிருக்கிறார். பெங்களூரில்தான். சற்று வயதான நண்பர். சற்று என்றால் அறுபதைத் தாண்டிய வயது. 1970லேயே பெங்களூர் வந்துவிட்ட மலையாளி. இங்கு இருக்கும் தமிழர்களை விடவும் சுத்தமாகத் தமிழ் பேசுவார். இத்தனை வருடங்களாக இங்குதான் பெயிண்டிங் காண்டராக்டராக இருந்தார். இப்பொழுது பையன் தலையெடுத்துவிட்டான். தனது இரண்டு பெண்களையும் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. இனி இவரது சாம்ராஜ்யத்தில் மனைவியும் இவரும்தான். இனி வேலை செய்தது போதும் என்று நினைத்தவர் ஓய்வெடுக்கலாம் என முடிவு செய்து தன்னிடமிருந்த வேறொரு இடத்தை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் இந்த முப்பதுக்கு நாற்பதில் வீடு கட்டப் போகிறார். ரிட்டையர்ட்மெண்ட் வாழ்க்கை.

சென்றவாரத்தில் போர்வெல் துளை போட்டிருக்கிறார்கள். துளை போட்டதுதான் மிச்சம். ஒரு சொட்டுத் தண்ணீரைக் காணவில்லையாம். வெறுத்துப் போய் கடையில் வாங்கிய ஒரு பாட்டில் தண்ணீரைக் குழிக்குள் ஊற்றிவிட்டு மூடிவிட்டார்கள். அவரை சில மாதங்களுக்கு முன்பாக முதன்முதலாக ஒரு டீக்கடையில்தான் சந்தித்துப் பேசினேன். பரஸ்பரம் பேசிக் கொண்டதில் பழகிக் கொண்டோம். மாலை நேரத்தில் டீ குடிப்பதற்காக வெளியே போகும் போது அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்வோம். அதே கடையில் நேற்று சந்தித்த போதுதான் இந்த விஷயத்தைச் சொன்னார். அவருக்கு குழியில் தண்ணீர் வரவில்லை என்பது பற்றி ரொம்பவும் வருத்தம். வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வாங்கிய இடத்தில் முதல் முயற்சியே தோல்வியடைந்துவிட்டதே என்ற வருத்தம்தான். ஆனால் இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பெங்களூரில் கிட்டத்தட்ட பல இடங்களில் இதுதான் நிலைமை. 

முக்கால் ஏக்கர் இடம் இருந்தால் முப்பது நாற்பது சைட்டுகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் ஒரு துளை போட்டுவிடுகிறார்கள். பல இடங்களில் இரண்டு அழ்துளைக் கிணறுகளுக்கு இடையே பத்து அடி தூரம் கூட இருப்பதில்லை என்பதுதான் உண்மை. இவன் குழியில் இருப்பதை அவன் உறிஞ்சிக் கொள்கிறான் அடுத்த மூன்றாவது மாதத்தில் இந்தக் குழியிலிருந்து இன்னொரு குழி உறிஞ்சிக் கொள்ளும். அவ்வளவுதான். அடுத்த பத்தடியில் இன்னொருத்தன் குழியைத் தோண்டினால் வெறும் புகைதான் வரும்.

பூமாதேவிக்கு மட்டும் கை இருந்தால் நம்மையெல்லாம் இழுத்துப் போட்டு புதைத்துவிடுவாள். எத்தனை வலியைத்தான் தாங்குவாள்?

‘நான் இந்த ஊருக்கு வந்த போது வருடத்தில் முக்கால்வாசி நாட்கள் மழை பெய்யும்’ என்றார் அந்த பெயிண்டர் நண்பர். அவர் சொல்வது நாற்பது வருடங்களுக்கு முன்பு. அப்பொழுது இங்கு அத்தனை மரங்கள் இருந்தன. கார்டன் சிட்டி என்பதுதானே இதன் இன்னொரு பெயர். அதனால் மழை பெய்திருக்கும். இப்பொழுதுதான் கண்ணில் படும் மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மழை எப்படி பெய்யும்? ஆளாளுக்கு மொட்டை மாடியில் நின்று அடுத்தவன் தலையில் சிறுநீர் கழிக்க வேண்டியதுதான். 

அரசாங்கம் மரங்களை வெட்டுகிறது என்று புகார் வாசிக்கிறார்கள். அரசாங்கமும்தான் என்ன செய்யும்? 

ஒரேயொருவன் அலுவலகம் வருவதற்கு எண்பது லட்ச ரூபாய் காரை பயன்படுத்துகிறான். இப்பொழுதெல்லாம் ஐந்து லட்ச ரூபாய் காரை யார் வேண்டுமானாலும் வாங்கிவிட முடிகிறது. கண்ணாடியை ஏற்றிவிட்டுக் கொண்டு பாடல் கேட்டபடியேதான் அலுவலகம் வருகிறார்கள். இரண்டு தெரு தள்ளிய கடைக்குச் செல்வதற்குக் கூட பைக்கை எடுத்துக் கொள்கிறோம். அதுவும்  பைக்கை உதைக்க வேண்டியதில்லை. பட்டன் ஸ்டார்ட். வாழ்க்கையை வெகு சொகுசாக்கிக் கொண்டோம். 

ஒவ்வொரு ட்ராபிக் சிக்னலிலும் இருபது நிமிடங்கள் ஆகிறது. காலையிலும் மாலையிலும் போக்குவரத்து காவலாளிகள்  மென்று தண்ணீர் குடிக்கிறார்கள். அப்படியிருந்தும் முன்னால் போகும் வண்டியில் ‘டொம்’ என்று அடித்துச் சண்டை போடுகிறார்கள். அருகில் வரும் கார்க்காரன் மீது கோடு போட்டு வண்டியை விட்டு இறங்குகிறார்கள். வேறு வழியே இல்லாமல் மரங்களை வெட்டி சாலைகளை அகலப்படுத்த அரசாங்கம் டெண்டர் விடுகிறது. ஒரு மரத்துக்கு பதிலாக ஐந்து மரங்களை நடுவோம் என வெகு ஜம்பமாக அறிவிப்பார்கள். ஆனால் எங்கே நட்டார்கள், அது முளைத்த குழியை விட்டு மேலே வந்ததா என்று ஒன்றும் தெரியாது. 

அறுபது வயதுடைய ஒரு மரத்தை வெட்டிவிட்டு அதற்கு பதிலாக ஐந்து செடிகளை நட்டி வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

அடிப்படையைச் சரி செய்யாமல் க்ளோபல் வார்மிங், க்ரீன் ஹவுஸ் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இல்லையா?

மாற்றம் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும். வீட்டில் கார்பொரேஷன் நீர் இருந்தாலும் கூட ‘எதுக்கும் போர் போட்டு வைத்துக் கொள்ளலாம்’ என்று குழி தோண்டிவிடுகிறார்கள். ‘எதுக்கும் இருக்கட்டுமே’ என்பதைப் போன்ற அசிங்கமான மனநிலை வேறு இல்லை. ஆனால் அது நம் டி.என்.ஏவிலேயே இருக்கிறது. 

‘எதுக்கும் இருக்கட்டுமே’ என்று பேசும் போது இன்னொரு விஷயமும் ஞாபகத்திற்கு வருகிறது.

பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்கித் தருவதாக ஒரு திட்டம் இருக்கிறது அல்லவா? அது குறித்து ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள். பல பள்ளிகளில் புத்தகங்களை பராமரிக்க மாட்டார்கள். ஆசிரியர்கள் வீட்டுக்குத்தான் போகும். பையன்களுக்கு பயன்படாது’ என்று. அவர் சொல்வதும் சரிதான். ‘எதுக்கும் இருக்கட்டுமே’ என்று ஆசிரியர்கள் தினமும் இரண்டு புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றால் கடைசியில் பள்ளியில் ஒன்றும் இருக்காது. அதனால் பள்ளிகளை மிக கவனமாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதுவரைக்கும் இந்தத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது. இன்னுமொரு இருபதாயிரத்துக்கான காசோலையை ஒருவர் அனுப்பி வைத்திருக்கிறார். அது இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை. ஆக முப்பதாயிரம் ரூபாய்கள் உறுதி. அது போக உதவி செய்ய விரும்புவதாக சுமார் பத்து மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. அவை ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து பத்தாயிரம் வரை வேறுபட்ட தொகைகள். அவையும் கிடைக்கும்பட்சத்தில் இப்போதைய நிலையில் எப்படியும் ஐந்து அல்லது ஆறு பள்ளிகளுக்கு புத்தகங்களை வாங்கிட முடியும் என நம்பிக்கை இருக்கிறது. 

இந்தப் பண விவகாரம் பற்றி எங்கள் வீட்டில் அத்தனை ஒப்புதல் இல்லை. ‘நம்மால் முடிந்தால் செய்ய வேண்டும். முடியவில்லையென்றால் விட்டுவிட வேண்டும். அடுத்தவர்கள் விரும்பினால் அவர்களாகச் செய்து கொள்ளட்டும்’ என்று அம்மாவும், தம்பியும் பயப்படுகிறார்கள். பணம்தான் பெயரைக் கெடுக்கும் ஆயுதம் என்று மிரட்டுகிறார்கள். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. அதனால் ஒரு ரூபாயைக் கூட எனது கணக்குக்கு மாற்றக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. மேற்சொன்ன இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்தவர் தனது பெயர் எந்தவிதத்திலும் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்றார். அதனால் அந்தத் தொகையை மட்டும் எனது பெயருக்கு காசலோலையாக வாங்கிக் கொள்ள சம்மதித்திருக்கிறேன்.

‘இன்றைக்கு கூரியர் வரும்’ என்று சொன்ன போது அம்மாவும் அப்பாவும் பதறிவிட்டார்கள். ‘ஐம்பதாயிரம் ரூபாய்க்குச் செக் வரும்’ என்று சொன்னால் பயப்படத்தானே செய்வார்கள்? ஒருவரேதான் மொத்தத் தொகையையும் கொடுக்கிறார். இருபதாயிரம் ரூபாயை இரு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் இன்னொரு முப்பதாயிரம் ரூபாயை ‘வாழை’ அமைப்பினருக்கு கொடுத்துவிடுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

நிசப்தம் தளத்தில் சென்ற நவம்பரில்  ‘வாழை’ பற்றி எழுதியதன் வழியாக அந்த அமைப்புக்கு இதுவரையில் முப்பதாயிரம் கிடைத்திருக்கிறது. இப்பொழுது கூரியரில் வந்து கொண்டிருக்கும் இன்னொரு முப்பதாயிரம் ரூபாய். ஆக மொத்தம் அறுபதாயிரம் ரூபாய் அந்த அமைப்பினருக்குக் கிடைத்திருக்கிறது. வழங்கியவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.

இந்தத் தொகைகளைப் பார்க்கும் போது எனக்கும் சற்று பயமாகத்தான் இருக்கிறது. இதை உண்மையாகவேதான் சொல்கிறேன். அடுத்தவர்களின் பணத்தை வாங்கும் போது சிறு பதற்றம் இருக்கும் அல்லவா? அதுதான். நம்மை நம்பிக் கொடுக்கிறார்கள். அந்த நம்பிக்கை துளி கூடச் சிதையாமல் காப்பாற்ற வேண்டும் என்ற பயம்தான் இது. 

வெளிப்படையாக இருந்தால் பிரச்சினை இருக்காது என நம்புகிறேன். பார்க்கலாம். துளி பிசகினாலும் இது போன்ற காரியங்களைச் சுத்தமாக கைவிட்டுவிட வேண்டும்.

Feb 12, 2014

வாத்தியார் என்றாலே குச்சியும் சாக்பீஸூம்தானா?

வாத்தியார் என்றால் கையில் குச்சியோடும், சாக்பீஸோடும்தான் சுற்றுவார்களா?  முளைத்து மூன்று இலை விடுவதற்குள்ளாகவே இந்த மூடநம்பிக்கையை நாங்கள் உடைத்துக் கொண்டோம். அதற்கு காரணம் கனகு வாத்தியார். கனக சபாபதி என்ற பெயர் சற்று நீளமாக இருப்பதால் ஊருக்குள் அவரை கனகு வாத்தியார் என்றுதான் அழைப்பார்கள். நெடு நெடுவென்றிருப்பார். ஆனால் நான்கு நல்லி எலும்புகளைச் சேர்த்துக் கட்டியது போல ஒடிசலான தேகம். நடுவிரலையும், கட்டைவிரலையும் சேர்த்து வேகமாகச் சுண்டினால் கீழே விழுந்துவிடுவார். அப்படியொரு பலசாலி.

அவர் எப்பொழுதும் வேட்டி சட்டைதான். பக்கத்து ஊரில் ஏதோவொரு கிராமப்பள்ளியில் ஆசிரியராக இருந்தார். ஆனால் எந்தப் பள்ளியென்றெல்லாம் ஞாபகம் இல்லை. அவருக்கே ஞாபகம் இருந்திருக்குமா என்றும் தெரியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பார். இல்லையென்றால் ஏதாவது மரத்தில் குருவி அடித்துக் கொண்டிருப்பார். பிறகு எப்படி அவருக்கு ஞாபகம் இருக்கும்? 

வேட்டைக்கு தனியாகவும் செல்ல மாட்டார். எப்பொழுதும் இரண்டு பையன்களைச் சேர்த்துக் கொள்வார். அந்தக் காலத்தில் வாத்தியார் சரியில்லையென்றால் கல்வித் துறைக்கு எல்லாம் புகார் எதுவும் அனுப்பமாட்டார்கள் அல்லவா? அதுவுமில்லாமல் எல்லோருக்கும் தெரிந்த முகமாக இருந்தார். ‘தொலைந்து போகட்டும்’ என்று விட்டுவிடுவார்கள். ஆனால் தனது மகன் கெட்டுப்போவதாக நினைத்து புலம்பும் பெற்றோர்கள் ‘இனிமே அந்த வாத்தியார் கூட சேர்ந்தீன்னா காலை முறிச்சுப் போடுவேன்’ என்று தங்கள் மகனை மிரட்டி வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு வாத்திக்கு உள்ளூரில் புகழ்.

கனகு வாத்தியார் ஒன்றும் பெற்றோர்களின் கவலையைப் புரிந்து கொள்ளாத ஜடம் இல்லை. பையன்களை மாற்றிக் கொண்டே இருப்பார். ‘தெரியாம போய்ட்டு வந்துரலாம் வாங்கடா’ என்று வேட்டைக்கு அழைத்துக் கொள்வார். நேற்று தன்னோடு வந்தப் பையனை விட்டுவிட்டு இன்றைக்கு புதிதாக இரண்டு பேர். நாளைக்கு வேறு இரண்டு பேர் என்று ‘ரொட்டேஷன் பேஸிஸில்’அவருடன் செல்வார்கள். அவருக்கு எந்த மாதத்தில் எந்தக் குருவி ஊருக்குள் வரும் என்று தெரியும். வாய்க்காலில் தண்ணீர் ஓடும் காலத்தில் எந்த மரங்களில் குருவிகள் இருக்கும், தண்ணீர் இல்லாத காலங்களில் எந்த பகுதிக்கு போனால் கொக்குகள் மேய்ந்து கொண்டிருக்கும் என்பதை துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்பார்.

அது மட்டும் இல்லை-  குறி வைத்து வில்லால் அடிப்பதிலும் படு கில்லாடி. ஒரு முறை அவரோடு குருவியடித்திருக்கிறேன். 

அது நடவுக் காலம். வயல்களில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். யாராவது இவரோடு சுற்றுவதைப் பார்த்து அம்மாவிடம் போட்டுக் கொடுத்துவிடுவார்கள் என்று பயந்து கொண்டே அவருக்கருகில் நின்று கொண்டிருந்தேன். அவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். எங்கள் தலைக்கு மேலாக கொக்குகள் கூட்டமாக பறந்து கொண்டிருந்தன. அவை ஒரு வயலிலிருந்து இன்னொரு வயலுக்கு இடம் மாறிக் கொண்டிருந்தன. தூண்டிலைக் கீழே வைத்தவர் ‘அந்த வில்லை எட்றா’ என்று வாங்கி கல்லை ஏற்றினார். வலது கண்ணை மூடிக் கொண்டு இடது கண் பக்கமாக உண்டிவில்லை வைத்து ஒரே அடிதான்.  கூட்டத்திலிருந்த ஒரு கொக்கு நடு வயலில் திருகிக் கொண்டு விழுந்தது. ‘போய் எடுத்துட்டு வாடா’ என்று என்னை அனுப்பினார். நான் அருகில் ஓடுவதற்குள் அதன் துடிப்பு அடங்கியிருந்தது. சகதிக்குள் கிடந்தது. கையில் எடுத்த போது துள்ளவில்லை என்றாலும் அதன் இதயத் துடிப்பை உணர முடிந்தது. அதன் பிறகு அவரோடு சுற்றுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

வாத்தியாரோடு சேர்ந்து குருவியடிக்க எந்தப் பையனுக்குத்தான் பிடிக்காது? அவர் அழைத்தால் போதும் என்று காத்திருப்பார்கள். சிக்னல் கிடைத்தவுடன் சோற்றுப் போசியை எடுத்துக் கொண்டு அவரது டிவிஎஸ் 50 இல் தாண்டுக்கால் போட்டு ஏறிக் கொள்வார்கள். தடம் வழியில் பையனுடைய அம்மாவோ அப்பாவோ பார்த்துவிட்டால் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே சிரிப்பார்.

‘படிச்சவன்தான் உருப்புடுவான்னு இல்ல அம்மிணி..நானுந்தேன் படிச்சேன்..இப்போ உருப்பட்டனா? படிக்காம சுத்துனாலும் உம்பையன் சூட்டிப்பு. பொழச்சுக்குவான் போ’ என்று மடக்கிவிடுவார். வீட்டிற்கு திரும்பிய பிறகு அவனுக்கு நான்கு மொத்துக்கள் அல்லது சில பல குத்துக்கள் காத்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

குருவியடிப்பதற்கும் மீன் பிடிப்பதற்கும் எதற்கு குச்சியும் சாக்பீஸூம்? அவருக்கு சாக்பீஸ் பிடித்து எழுதுவது கூட மறந்திருக்கக் கூடும். அவரது டிவிஎஸ் 50ன் பெட்டிக்குள் எப்பொழுதும் உண்டி வில் இருக்கும். அதன் கேரியரில் மீன் தூண்டில் இருக்கும். அவ்வளவுதான் கனகு வாத்தியார்.

அவருக்கு ஒரு பேரன் இருந்தான். என்னை விட இரண்டு வயது இளையவன். நாங்கள் படித்த அதே பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தான். பள்ளி முடிந்தவுடன் பேருந்தில் நாங்கள் வீட்டுக்கு வந்துவிடுவோம். ஆனால் அவரது பேரனுக்கு படு செல்லம். தினமும் கனகு வாத்தியார்தான் தனது டிவிஎஸ் 50ல் அழைத்துச் செல்வார். பள்ளி விடுவதற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே வந்து நின்று கொள்வார். பெரும்பாலும் கொக்கு அல்லது குருவியை வண்டியின் முன்புறமாக தொங்கவிட்டிருப்பார். சில சமயங்களில் ஆறாமீன்களை ஊணாங்கொடித் தாவரத்தில் கோர்த்து தொங்கவிட்டிருப்பார். தினமும் வேட்டையின் அடையாளமாக அவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்வார் என்று சொல்ல முடியாது. யாராவது கேட்டால் கொடுத்துவிடுவார் ஆனால் பேரனுக்கு அளவாக எடுத்து வைத்து விட்டுத்தான் கொடுப்பார்.

அவர் நேரத்திலேயே பள்ளிக்கு முன்பாக வந்து நின்றாலும் பேரன் சீக்கிரம் வெளியே வர மாட்டான். தன்னுடன் சில சேக்காளிகளைச் சேர்த்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பான். கனகு வாத்தியாரின் பேரனல்லவா? பிறகு எப்படி இருப்பான்? ஆனால் அதற்காக கனகு வாத்தியார் சலித்துக் கொள்பவரில்லை. வெளியே பேருந்துக்காக நின்று கொண்டிருக்கும் எங்களோடு பேசிக் கொண்டிருப்பார்.

அந்தக் காலத்தில் அவரிடம் ஒரு வாக்மேன் இருந்தது. அதை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார். அவர் மட்டும் கேட்கமாட்டார். தன்னைச் சுற்றிலும் நிற்கும் பையன்களுக்கும் காதில் மாட்டிவிடுவார். ஆனால் துளியூண்டு நேரம்தான் ஒவ்வொருத்தனுக்கும் கிடைக்கும். ‘பூ...’‘ங்கா’‘ற்று’‘புதி’‘ரானது’ என்று ஒவ்வொரு பையனும் இரண்டு எழுத்துக்கான ஒலியை மட்டுமே கேட்க முடியும். பாடலின் மூன்றாவது வரி வரும் போது கனகு வாத்தியாரின் தலையில் ஹெட்போன் இருக்கும். ஆனால் ஒரு பையனுக்கு மிஸ் ஆகாது. அருகில் இருக்கும் அத்தனை பேரின் காதுகளிலும் ஒரு மாத்திரை கால அளவில் மாட்டி எடுத்துவிடுவார். அதுவே எங்களுக்கு சொர்க்கம் மாதிரிதான்.

பேரன் வரும் வரைக்கும் எங்களைக் கூட்டி வைத்து கதை சொல்வார். எங்கள் வீட்டிலும் அந்த வாத்தியாரோடு சேரக் கூடாது என்று சொல்லி வைத்திருந்தார்கள் என்பதால் அவரது கதைகளைக் கேட்டால் நமது படிப்பு கெட்டுவிடும் என்று பயமாக இருக்கும். அதற்கேற்றாற்போல அவரது கதைகளும் வேட்டையைப் பற்றித்தான் இருக்கும். எலி வங்கு, பெருக்கான் வங்கிலிருந்து அத்தனை உயிரினங்கள்  பற்றியும் துல்லியமாகச் சொல்வார். கீரிப்பிள்ளை எதை உண்ணும், பாம்பு கடித்தால் எந்தச் செடி உதவும், இப்பொழுது காணாமல் போன தாவரங்கள் எவை எவை என்று சகட்டு மேனிக்கு கதையோடு சேர்த்துச் சொல்வார். இப்பொழுது நாம் சூழலியல் என்று பேசுகிறோம் அல்லவா? அதன் பேச்சு வடிவம்.  

ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் எங்கள் ஆயா வேகமாக வீட்டிற்குள் வந்தார். உள்ளே நுழைந்தவுடனேயே கனகு வாத்தியார் இறந்துவிட்டதாகச் சொன்னார். அப்பா ‘எப்படி’ என்றதற்கு ‘லாரி அடிச்சுடுச்சு...வா’ என்றார். அப்பா வந்தாரா என்று ஞாபகம் இல்லை ஆனால் நான் ஆயா பின்னாலேயே ஓடினேன். ஊரே கூடியிருந்தது. அப்பொழுது ஊரில் இவ்வளவு ஜனநெரிசல் இல்லை. ஆனால் இருந்தவர்களில் பெரும்பாலானோர் கூடியிருந்தார்கள்.

டிவிஎஸ் 50 இல் வரும் போது வாக்மேனை காதில் மாட்டிக் கொண்டு வந்திருக்கிறார். அந்தக்காலத்தில் மூக்கு லாரி ஒன்று இருக்குமே. மஞ்சள் நிற எமன். அந்த லாரிக்காரன்தான் ஒருவன் அடித்துவிட்டான். அதை அடித்துவிட்டான் என்று சொல்ல முடியாது. லாரியின் பின்சக்கரத்தில் கனகுவாத்தியாரின் தலை சிக்கிக் கொண்டது. மூளை மூன்று பாகங்களாகச் சிதறிக் கிடந்தது. நாங்கள் போகும் போது அவரது வேட்டியை எடுத்து தலை மீது போர்த்தியிருந்தார்கள். அவரது மனைவி ‘மூளை மட்டும் தனியா துடிச்சத பார்த்தேனே...என் கண்ணு அவிஞ்சு போகட்டுமே’ என்று கதறிக் கொண்டிருந்தார். 

அப்பொழுது 108 வசதி இல்லை. வெகுநேரத்திற்கு பிறகே ஆம்புலன்ஸ் வந்தது. அவரது உடலை எடுக்க எத்தனித்தார்கள். அது அவ்வளவு சுலபமாக இல்லை. அவரது தலை தார்ச்சாலையோடு ஒட்டி இறுகிக் கிடந்தது. கால்களைப் பிடித்து இழுத்தார்கள். ரத்தம் காய்ந்து கிடந்தது. வெகு சிரமத்திற்கு பிறகே பிரிக்க முடிந்தது. ஒரு பாலித்தீன் பையில் மூளைச் சிதறல்களை சுரண்டி எடுத்துக் கொண்டார்கள். அப்பொழுது பெரும்பாலான பெண்கள் அழுதார்கள். அந்தச் சத்தம் எங்களைப் போன்ற சிறுவர்களை பயமூட்டியது. பாலித்தீன் கவரோடு ஆம்புலன்ஸூக்குள் ஏறியவர் கதவை மூடிக் கொண்டார். பின்னாலேயே ஊர்க்காரர்களின் வண்டிகள் அரசு மருத்துவமனைக்கு விரைந்தன. நாங்கள் அங்கேயே நின்று கொண்டோம். ஒரு துளி மூளை அதே இடத்தில் கிடந்தது. எங்கள் ஊரின் சூழலியலைத் தெரிந்திருந்த கடைசி மூளைத் துளி அது. ஆனால் அது அப்பொழுது துடிக்கவில்லை.

Feb 11, 2014

அடி ஆத்தாடி இள மனசொன்னு..

கிராம நிர்வாக அலுவலர் என்றாலே சாதிச்சான்றிதழுக்கு காசு வாங்கும் காட்சிதான் நினைவுக்கு வருகிறது என்றால் அதற்கு ஷங்கர் மட்டும் காரணமில்லை. ரியாலிட்டியும் கிட்டத்தட்ட நெருக்கம்தான். என்றாலும் இதை நான் தப்பித் தவறி கூட ஒத்துக் கொள்ள மாட்டேன். ‘மாட்டேன்’ என்பதை விடவும் ‘கூடாது’. அம்மா படு டென்ஷனாகிவிடுவார். முதலமைச்சர் அம்மா இல்லை. என் அம்மாதான். அவர் அந்த வேலையில்தான் பல வருடங்களாக காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக இந்த வேலையில் இருந்தவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். வயதாகிவிட்டது. சர்க்கரை உடலை பலவீனமாக்கிவிட்டது. பெங்களூர் இடம் பெயர வேண்டும் என்று ஏகப்பட்ட காரணங்கள். ஆனால் விருப்ப ஓய்வுக்கான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து வாங்கிச் சேர்ப்பதற்குள் மென்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்தார். உதவி கேட்டுச் சென்றால் அவர் கட்சிபேதம் எதுவும் பார்க்கமாட்டார். அவரது சிபாரிசுக்கு பிறகுதான் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

வரும் போது விட்டகுறை தொட்டகுறையாக ஒன்றை பாக்கி வைத்துவிட்டு வந்துவிட்டார். அவர் கடைசியாக பணியாற்றிய கிராமத்தில் ஒரு கொலை நடந்துவிட்டது. கணவனே மனைவியைக் கொளுத்திவிட்டான். கள்ளக்காதல் விவகாரம்தான். எக்ஸ்ட்ரா காதல் மனைவிக்கு வந்ததா அல்லது கணவனுக்கா என்று தெரியவில்லை. விவகாரம் முற்றி அடித்துக் கொண்டார்களாம். அடியோடு நிறுத்தவில்லை. அவளை இரண்டு பேர் தூக்கிக் கொண்டு போய் ஒரு வனப்பகுதியில் கொன்று எரித்துவிட்டார்கள். தூக்கிக் கொண்டு போனவர்களில் கணவனும் ஒருவன்.

நமது காவல்துறைக்கு விஷயமே தெரியவில்லை. வெகு நாட்கள் கிடப்பிலேயே கிடந்திருக்கிறது. பக்கத்து வீட்டில் யாராவது ‘வீட்டுக்காரி எங்கே?’ என்று கேட்கும் போதெல்லாம் ‘ஊரில் இருக்கிறாள்’ என்று சொல்லியிருக்கிறான். எத்தனை நாளைக்குத்தான் சொல்ல முடியும்? யாருக்கோ சந்தேகம் வந்திருக்கிறது. பெரும்பான்மையான கொலைவழக்குகளைப்  போலவே சந்தேகம் வந்தவன் போட்டுக் கொடுத்துவிட்டான். அதுவும் மொட்டைக் கடுதாசி. கடுதாசி வந்த பிறகுதான் காவல்துறைக்கு கொலை நடந்திருக்கிறது என்று தெரியுமாம்.

நேரே வீட்டுக்கு வந்து பார்த்திருக்கிறார்கள். டிவி பார்த்துக் கொண்டிருந்தானாம் அந்தப் புண்ணியவான். தூக்கிச் சென்று லாடம் கட்டியிருக்கிறார்கள். ஒத்துக் கொண்டான்.

கடுதாசி அனுப்பியவன் காவல்துறைக்கு மட்டும் அனுப்பினால் வேலைக்காகாது என்று நினைத்தானோ என்னவோ வருவாய்த்துறைக்கும் சேர்த்து அனுப்பிவிட்டான். அதனால் அம்மாவை ஒரு சாட்சியாகச் சேர்த்துக் கொண்டார்கள். இத்தனை நாட்களுக்குப் பிறகு கோர்ட் சம்மன் வந்திருக்கிறது. ‘உடம்பு சரியில்லை என்று சொல்லிவிடுங்கள்’ என்றால் ‘அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துவிடுவார்கள்’ என்று பயந்தபடியே போயிருக்கிறார். கொளுத்தியவன் செல்வாக்கானவன் போலிருக்கிறது. ‘இப்படித்தான் நீங்கள் கோர்ட்டில் சாட்சி சொல்ல வேண்டும்’ என்று இதுவரை மூன்று நான்கு பேர் ஃபோன் செய்துவிட்டார்கள். அம்மா பதறிவிட்டார். 

‘எனக்கு எல்லாம் மறந்து போச்சு’ என்று சொல்லப்போவதாக கடைசியாக ஃபோன் செய்தவரிடம் கத்திக் கொண்டிருந்தார். ‘எல்லாம் மறந்துவிட்டது’ என்று அரசியல்வாதிகள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். இவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. செய்தித்தாள் படித்துக் கெட்டுப் போயிருக்கிறார். இப்பொழுதெல்லாம் அதுதான் வேலை. காலையில் ஒன்பது மணிக்கு எல்லோரும் அவரவர் வேலைக்குக் கிளம்பிவிடுவோம். அப்பா ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறார். அதற்கு சோறு போடுவதும், குளிப்பாட்டுவதுமாக நேரத்தை ஓட்டிவிடுகிறார். அம்மாவுக்கு தினத்தந்தி, சூப்பர் சிங்கர்தான். இந்த விஜய் டிவியில் அநியாயம் செய்கிறார்கள். ஒரேயொரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு மறு ஒளிபரப்பு செய்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களும் சலிப்பேயில்லாமல் திவாகரையும், சோனியாவையும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதை விடுங்கள்.

உண்மையிலேயே அம்மாவுக்கு எல்லாம் மறந்துவிட்டது. ‘எதை எழுதி கையெழுத்து போட்டேன்’என்று கூட ஞாபகம் இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார். நல்ல வக்கீலாக இருந்தால் இதை எளிதில் கண்டுபிடித்துவிடக் கூடும். இன்ஸ்பெக்டரைக் காட்டி ‘இவர்தானே அந்தக் குற்றவாளி’ என்றால் ‘ஆமாம்’ என்று தலையாட்டிவிடுவார். அத்தனை ஞாபக சக்தி.

நேற்று அவரை அனுப்பி வைப்பதற்காக பேருந்து நிற்குமிடத்திற்கு அழைத்துச் சென்றேன். இரவு பதினோரு மணி ஆகியிருந்தது. சாலையில் மனித நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. பெங்களூரில் பதினோரு மணியானால் பெரும்பாலான ட்ராபிக் சிக்னலை அணைத்துவிடுகிறார்கள். வாகனங்களின் சராசரி வேகம் அதிகரித்திருக்கும். சற்று கவனமாகத்தான் இருக்க வேண்டும். எங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் மதுக்கடையும் மூடுகிற தருணம். எப்பவுமே மதுக்கடைகள் பெர்முடா முக்கோணங்கள். அப்படித்தான் நேற்றும் ஆகிப் போனது. ஒருவர் நடந்து கொண்டிருந்தார். அதை நான் பெரிதாக அலட்சியம் செய்யவில்லை. அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். சில வினாடிகள்தான். வண்டிக்குள் விழ வந்துவிட்டார். உச்ச போதையில் இருந்தார். இதைத் துளி கூட எதிர்பார்க்கவில்லை. அத்தனை பலத்தையும் திரட்டி ப்ரேக்கை அழுத்தினேன். மூன்று அடி கூட இடைவெளி இருந்திருக்காது. ஒரு கணம் இதயத்துடிப்பே நின்று போனது. நெஞ்சுக் குழி என்பது ஒரு குகை என்று இது போன்ற தருணங்களில்தான் தெரிகிறது. அவ்வளவு பெரிய வெற்றிடம் உருவாகியிருந்தது. அம்மாவுக்கு அதே ‘திக்’தான். அவரையும் அறியாமல் கத்திவிட்டார். அவரைப் பொறுத்தவரையிலும் இது ஒரு கெட்ட சகுனம். பாட்டிலிலிருந்து நீரை எடுத்துக் குடித்துக் கொண்டார்.

அதன்பிறகு வண்டி நாற்பது கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டவில்லை. நிறுத்தத்தை அடைந்த கால் மணி நேரத்தில் பேருந்து வந்துவிட்டது.  அம்மாவை பேருந்தில் ஏற்றிவிட்டு திரும்பும் போது இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டிருந்தேன். சோடியம் விளக்கு சாலைகளை மஞ்சள் ஒளியில் நனைத்துக் கொண்டிருந்தது. பெங்களூரின் குளிர் இதமாக இருந்தது.

பாடலைக் கேட்டுக் கொண்டே வரும் போதுதான் அந்தக் காட்சி கண்ணில்பட்டது. வீட்டிற்கு அருகில் இருக்கும் அதே மதுக்கடையினருகில் இப்பொழுது நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். அனேகமாக கடையில் வேலை செய்பவர்களாக இருக்கும். அது சாதாரணக் கூட்டம் இல்லை. சற்று பரபரப்பாக இருந்தார்கள். ஒரு ஆள் கீழே கிடந்தான். இது எதிர்பார்த்ததுதான். 

அதே ஆளா என்று தெரியவில்லை. ஏதோ ஒரு வாகனம் செதுக்கிவிட்டு போயிருக்கிறது. மண்டையில் அடிபட்டிருந்தது.நூற்றியெட்டுக்குச் சொல்லிவிட்டார்கள். இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுமாம். கொஞ்சம் தண்ணீரை ஊற்றினார்கள். அது வாந்தியோடு கொப்புளித்தபடி வெளியே வந்தது. பயங்கரமான துர்நாற்றம். அவன் வெகு நேர்த்தியாக ஆடை அணிந்திருந்தான். காலில் இருந்த ஷூவை யாரோ கழட்டிக் கொண்டிருந்தார்கள். அடிபட்டுக் கிடந்தவன் ஏதோ பினாத்திக் கொண்டிருந்தான். ஒன்றும் புரியவில்லை. எதற்காக இத்தனை போதையை ஏற்றிக் கொண்டான் என்று தெரியவில்லை. அதுவும் தனியாக வந்திருக்கிறான். அவனது அலைபேசியை எடுத்து சில நெம்பர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இனி அவர்கள் பதற்றத்தோடு ஓடி வருவார்கள். அவர்களது தூக்கம், நிம்மதி அத்தனையையும் இந்த இரவு திருடிக் கொள்ளப் போகிறது. 

இந்த நிகழ்வுகளுக்கிடையில் ரோந்து போலீஸ்காரர்கள் வந்துவிட்டார்கள். எனது வண்டியில் நான் ஏறிக் கொண்டேன். ஃபோனை வண்டியிலேயே வைத்திருந்தேன். அம்மா அழைத்திருக்கிறார். மிஸ்டு கால் ஆகியிருந்தது. அதுவும் ஐந்தாறு முறை. அவர் பயந்திருக்கக் கூடும். திரும்ப அழைத்து வீட்டுக்கு வந்துவிட்டதாக பொய் சொல்லிவிட்டு ஃபோனைத் துண்டித்தேன். சில கணங்களுக்கு அவன் வண்டிக்குள் விழ எத்தனித்த கணம் நினைவில் வந்து போனது. அவனது குடும்பம் பற்றியும், அவனது குழந்தைகள் பற்றியும் நானாக ஒரு கற்பனையைச் செய்து கொண்டேன். அந்தக் குழந்தைக்கு என்னையும் அறியாமல் எனது மகனின் முகம் வந்துவிட்டது. மகி ‘அப்பா வேண்டும்’ என்று அழுவதாக கற்பனை வளர்ந்த போது பதறிப்போனேன். அவசர அவசரமாக பாடலின் ஒலியைக் கூட்டினேன். அப்பொழுது இளையராஜாவும், ஜானகியும் ‘அடி ஆத்தாடி இளமனசொன்னு’ பாடிக் கொண்டிருந்தார்கள்.

Feb 10, 2014

அணில் என்ன வேலை செய்தது?

ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று பாலகுமார் அழைத்திருந்தார். வாழை அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். அந்த அமைப்பு பற்றித் தெரியும் அல்லவா? பெங்களூரில் ஒன்றும் சென்னையில் ஒன்றுமாக இரு குழுக்களாகச் செயல்படுகிறார்கள். பெரும்பாலும் ஐடிக்காரர்கள்தான். பிறரும் இருக்கிறார்கள் என்றாலும் இவர்கள்தான் மெஜாரிட்டி. பெங்களூர் குழுவானது தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமப்பள்ளியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சென்னையில் இயங்கும் குழு விழுப்புரம் அருகில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் தங்களால் முடிந்த அளவிலான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மிகவும் பின் தங்கிய, வறுமையில் உழலும், இனிமேல் கல்வியைத் தொடர முடியாது என்னும் சூழலில் இருக்கும் மாணவர்கள் அவர்கள். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் அந்த மாணவர்களுக்கு Mentor ஆகிவிடுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தங்களது மாணவர்களைச் சந்தித்து அவர்களோடு இரண்டு நாட்களைச் செலவிடுகிறார்கள். அந்த மாணவனின் வெற்றி அவனது Mentor-ன் பொறுப்பு. ஆகச் சிறந்த முயற்சி.

அவர்களின் செயல்பாட்டில் ஒரு முறை கலந்து கொண்டு அந்த நிகழ்வு பற்றி எழுதியிருந்தேன். அதற்காகத்தான் பாலகுமார் அழைத்திருந்தார்.

இந்த மின்னஞ்சல்தான் அந்த நல்ல விஷயம்.


வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்று சொல்வார்கள் அல்லவா? இந்த தினேஷ் அப்படியான மனிதர் போலிருக்கிறது. என்னிடம் எந்தத் தகவலையும் சொல்லவில்லை. பாலகுமார் விஷயத்தைச் சொல்லிவிட்டு இந்த மின்னஞ்சலை அனுப்பியிருக்காவிட்டால் விஷயமே தெரிந்திருக்காது. இவரைப் போன்றவர்கள் செய்யும் நல்ல காரியத்தை தயக்கமே இல்லாமல் வெளியே சொல்லிவிடலாம். கெட்ட காரியத்தையே வெட்கமில்லாமல் வெளியே சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இதைச் சொல்வதற்கு என்ன? வெளிப்படையாகச் சொல்லிவிட்டு செய்தால் வேறொருவருக்கு உந்துதலாக இருக்கக் கூடும். தினேஷ் சொல்லாவிட்டால் என்ன? நாம் அறிவித்துவிடலாம்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

உங்களைப் போன்றவர்கள்தான் நான் எழுதுவதை தொடர்ந்து அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. நன்றி தினேஷ்.

இதே சமயத்தில் இன்னொரு தகவலும் இருக்கிறது.

லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் நூலின் முதல் பதிப்பு ராயல்டியாக கிட்டத்தட்ட மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய் கிடைக்கும் போலிருக்கிறது. அப்படித்தான் பதிப்பகத்தில் சொல்லியிருந்தார்கள். ஏற்கனவே சொல்லியிருந்தபடி எனது தொகையாக நான்காயிரம் ரூபாயைச் சேர்த்து மொத்தமாக ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு புத்தகங்களாக வாங்கி தாய்த்தமிழ் பள்ளிக்கு கொடுத்துவிடலாம் என்பது திட்டம்.

அநேகமாக நூறிலிருந்து நூற்றைம்பது புத்தகங்கள் வரை வாங்க இயலும். அத்தனையும் குழந்தைகளுக்கான புத்தகங்களாக இருக்கும். அறிவியல் சார்ந்த புத்தகங்களை பட்டியலில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

எதனால் தாய்த்தமிழ் பள்ளிக்கு கொடுக்க வேண்டும் என்பதற்கு நிறைய காரணங்களைச் சொல்ல முடியும். கடந்த பல வருடங்களாகவே தொடக்கப்பள்ளியாக இருக்கிறது. அத்தனை மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் இடையில் இத்தனை வருடங்களாக தமிழ் வழியில்தான் கல்வி கற்பிப்போம் என மூச்சு பிடித்து நின்றதே பெரிய விஷயம். இப்பொழுது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார்கள். பள்ளியின் அறக்கட்டளையில் கூடுதலாக உறுப்பினர்களைச் சேர்த்து உயர்நிலைப்பள்ளி வரை கொண்டு வந்துவிட்டார்கள். தமிழ் வழியில் கல்வி கற்பிப்பது, நமது பாரம்பரியக் கலைகளை மாணவர்களுக்குச் சொல்லித் தருவது, சூழலியல் குறித்த விழிப்புணர்வை ஆக்கப்பூர்வமாக உருவாக்குவது என எல்லாவிதத்திலும் மிக முக்கியமான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அடிப்படையான காரணம். மாணவர்களை வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக இல்லாமல் அவர்களை மாணவர்களாகவே வைத்திருக்கும் பள்ளிக்கு இந்தப் புத்தகங்கள் சிறு அளவிலாவது உதவக் கூடும் என நம்பலாம்.

இந்த யோசனை ஓடிக் கொண்டிருந்த போதுதான் ‘செய்வதே செய்கிறோம். முடிந்தால் இன்னும் சில பள்ளிகளுக்கும் சேர்த்துச் செய்யலாமே’ என்று தோன்றியது. சொந்தக் காசில் நிறையப் பள்ளிகளுக்குச் செய்வதற்கு தற்சமயத்தில் வாய்ப்பு இல்லை. அதனால்தான் இந்த அறிவிப்பு. 

ஏற்கனவே ரோபோடிக்ஸ் படித்துக் கொண்டிருக்கும் பாலாஜிக்கு நிசப்தம் வழியாகக் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய், தினேஷின் மேற்கொண்ட உதவி போன்றவை இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கான நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

இந்தச் செயல்பாட்டில் விருப்பமும் நம்பிக்கையும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்து கொள்ளலாம். ஒருவேளை முப்பதாயிரம் கிடைக்குமானால் மூன்று பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கலாம். ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்குமானால் ஐந்து பள்ளிகளுக்கு வழங்கலாம். எதுவும் கிடைக்கவில்லையென்றாலும் பிரச்சினை இல்லை. இந்த ஏழாயிரத்து ஐநூறுக்கு மட்டும் வழங்கிவிடலாம். தாய்த்தமிழ் பள்ளியைத் தவிர பிற பள்ளிகள் யாவும் அரசுப் பள்ளிகளாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். 

பணத்தை எனது அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் என்று எழுதினால் அதைவிட அக்கப்போர் வேறெதுவும் இருக்காது என்பதால் அப்படியான காமெடி எதுவும் செய்யப்போவதில்லை. ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். புத்தக விற்பனையாளரின் கணக்கு விபரம் தருகிறேன். பணத்தை அவருக்கு மாற்றிவிட்டு ஒரு தகவல் தந்தால் போதும். புத்தகங்களை நேரடியாக பள்ளிகளுக்கு  அனுப்பச் சொல்லி விற்பனையாளரிடம் தெரிவித்துவிடலாம்.

இந்தச் செயல்பாடு முடிந்தவுடன் வசூலான தொகை, புத்தகங்களின் விபரம் என அத்தனையையும் தெரிவித்துவிடுகிறேன். 

அடுத்த தலைமுறையிலிருந்து ஒரு மாணவனாவது இந்தப் புத்தகங்களின் வழியாக வாசிக்கத் துவங்குவான் எனில் அதைவிட பெரிய வெற்றி இதற்கு இல்லை என்று நம்பலாம்.

சிறிய காரியம்தான். முயன்று பார்ப்போம்.

vaamanikandan@gmail.com

Feb 9, 2014

நீங்கள் எல்லாம் எழுத்தாளராய்யா?

கே.என்.செந்திலைப் பற்றிய கட்டுரையை பதிவேற்றிவிட்டு நேற்று  மதியத்துக்கு மேல் தபாலில் வந்திருந்த காலச்சுவடு இதழைப் புரட்டினால் அதில் கே.என்.செந்தில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரையின் ஒரு பத்தியில் எனது பெயரும் வந்திருக்கிறது. திட்டியிருக்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான். நேற்று பாராட்டி எழுதிய அதே விரல்களால் இன்று சண்டைக்காக தட்டச்சு வேண்டியதாகிவிட்டது 

கட்டுரையில் அந்தப் பத்தி இப்படி இருக்கிறது-

முகநூல் மற்றும் வலைப்பக்கம் வைத்திருப்பவர்களின் தாக்கத்தை இந்தப் புத்தகச் சந்தையில் அதிகமாகவே உணர முடிந்தது. படைப்பாளிகள் பல ஆண்டுகள் எழுதி அதன் வழி உருவான வாசக எண்ணிக்கையை விளம்பரங்களால் இவர்கள் அனாயசமாக கடந்து போகிறார்கள். தற்காலிக வெற்றியை நோக்கி ஓடுகிறார்களோ? அடுத்த ஆண்டு இந்த நூல்களைப் பற்றி யாரேனும் பேசுவார்களா? சில பாடல்கள் ஒன்றிரண்டு மாதங்கள் மாநிலத்தையே உலுக்கிய பின் இருந்த சுவடு தெரியாமல் போய்விடுமே அதே கதிதான் இந்த நூல்களுக்கும் நேருமோ என்று தோன்றியது. பதிவர், எழுத்தாளர், படைப்பாளி, கலைஞன், மேதை என்ற வரிசையில் பதிவர்கள் எழுத்தாளர்களின் இடத்தையும், எழுத்தாளர்கள் படைப்பாளியின் இடத்தையும்- அதற்குரிய உழைப்பும் அர்பணிப்புமின்றி- பிடிக்க முண்டுகிறார்கள். முகநூலிலும் வலைப்பூவிலும் எழுதும் பெரும்பாலானோர் தங்களை எழுத்தாளர்களாக நினைத்துக் கொள்வது அதனால்தான். இவர்களின் முதல் இலக்கு அனைத்திலும் சுவாரசியம். சுவாரசியம் ஒன்றை மட்டுமே கொண்ட சுஜாதாவை பின் தொடர்கிறார்களோ? சுஜாதாவின் எழுத்து மேலோட்டமானது. ஆனால் வாசிப்பு பரந்துபட்டது. இவர்களோ நுனிப்புல் வாசிப்பையும், மேலோட்டமான எழுத்தையும் கொண்டவர்கள். அராத்து, விநாயகமுருகன், வா.மணிகண்டன் போன்றோரின் நூல்கள் ஒரே வாரத்தில் சுமார் ஐநூறு பிரதிகளாவது விற்றிருக்கும். அராத்து, விநாயகமுருகன் ஆகியோரிடம் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் மணிகண்டனிடம் இந்த புகழ், வெளிச்சம், விற்பனையின் எண்ணிக்கை போன்றவற்றின் பின்னே சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ள முடியும்.

கடைசி வரியை அறிவுரை என்று எடுத்துக் கொள்ளலாம். அறிவுரைதானே? இருக்கட்டும், தப்பில்லை. 

ஆனால் பாருங்கள்- ‘இணையத்தில் எழுதுவதற்கு எந்த உழைப்பும் தேவையில்லை, இங்கு எழுதுபவர்கள் வாசிப்பே இல்லாதவர்கள்’ என்றெல்லாம் எழுதியிருப்பதுதான் வருத்தமடையச் செய்கிறது. இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து பெரும்பாலான இலக்கியவாதிகளும் இதையேதான் சொல்கிறார்கள். இணையத்தில் எழுதுபவர்களுக்கு தங்களைப் போன்ற வாசிப்பு இல்லை; இங்கு எழுதுபவர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி இல்லை என்றெல்லாம் அடித்து விடுகிறார்கள். எப்படி இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை. 

இவர்கள் சொல்லும் உழைப்பு, அர்பணிப்பு, வாசிப்பு இத்யாதியெல்லாம் இல்லையென்றால் இங்கு வெகு நாளைக்கு ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதுதான் உண்மை. 

நம்பிக்கையில்லாதவர்கள் இணையத்தில் எழுதிப் பார்க்கலாம். அதிகமாக வேண்டாம்- ஒரு வருடம் போதும். உங்களின் அத்தனை உழைப்பையும், அர்பணிப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு சாதாரணமாக ஜல்லியடியுங்கள். சுஜாதாவின் அதே மேலோட்டமான எழுத்திலேயே எழுதுங்கள். உங்களின் அதிக நாட்களைக் கோரவில்லை. ஒரு வருடம். ஒரே ஒரு வருடம்தான். பதிவுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது வரும்படி ஒரு தளத்தை உருவாக்கிக் காட்டுங்கள். பிறகு சொல்லுங்கள். இங்கே எழுதுவதற்கு எந்த இழவும் தேவையில்லை என்று. சலாம் அடித்து ஏற்றுக் கொள்கிறேன். 

இன்னொரு விஷயம்- எழுத்தாளர், பதிவர், படைப்பாளி குழப்பம். வலைப்பூவில், முகநூலில் என எழுதுபவர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்றும் படைப்பாளிகள் என்று நினைத்துக் கொள்ளட்டுமே. அதில் என்ன தவறு? எங்குதான் இதை நினைத்துக் கொள்ளவில்லை. ஒண்ணேகால் கவிதை பிரசுரமானவர்கள் தங்களைக் கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லையா? வாழ்நாள் முழுமைக்கும் சேர்த்து ஒற்றைத் தொகுப்பை வெளியிட்டவர்கள் ‘இந்த உலகம் எங்களை கண்டுகொள்ளவே இல்லை’ என்று கதறுவதில்லையா? எனக்கு விளம்பரமே பிடிக்காது என்று சொல்லிக் கொண்டு சேனல்களில் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்குவதில்லையா? இணையத்தில் மட்டும் இல்லை- எல்லா இடத்திலுமே இப்படியானவர்கள் உண்டு.

மூன்று வரிகளை சேர்ந்தாற்போல தட்டச்சு செய்யத் தெரிந்தவர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்றும் படைப்பாளிகள் என்றும் நினைத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அது அவர்களின் திருப்தியென்றால் தாராளமாக நினைத்துக் கொள்ளட்டும். ஆனால் அதைப் பற்றி வேறு யாரும் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. இங்கு புழங்கும் வாசகர்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்களில்லை. நிறைய வாசிக்கக் கூடிய நுட்பமான வாசகர்கள் ஏகப்பட்ட பேரை இங்கு கைநீட்டிக் காட்ட முடியும். சாவதானமாக நிராகரித்துவிடுவார்கள்.

செந்தில் குறிப்பிட்டிருக்கும் இன்னொரு விஷயம் புத்தகத்தின் ஆயுட்காலம். வெளியிலேயே தெரியாமல் செத்துப் போகும் புத்தகங்களை விடவும், குறைந்தபட்சம் வெளியில் தெரிந்து அடுத்த வருடம் அந்தப் புத்தகத்தைப் பற்றி யாருமே பேசாமல் மறந்து போவது நல்ல விஷயம் என்றுதான் நினைக்கிறேன். ஒவ்வொரு வருடங்களும் எத்தனை ஆயிரம் புத்தகங்கள் வெளிவருகின்றன? அவற்றில் எத்தனை புத்தகங்களை புரட்டிப் பார்க்கிறோம்?  

தனது புத்தகம் பற்றி வாயே திறப்பதில்லை என்று பேசும் படைப்பாளிகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இங்கு இலக்கியவாதி என்பதற்கான சில இமேஜ்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வாழ்நாள் முழுமைக்கும் கஷ்டப்பட வேண்டும்; எழுத்துக்காக உருக வேண்டும்; துன்பத்தோடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் எக்ஸெட்ரா; எக்ஸெட்ரா. உண்மையில் அப்படி இருக்கிறார்களோ இல்லையோ- ஆனால் அப்படியிருப்பதாகக் காட்டிக் கொள்ளும் ஆட்கள் இங்கு அதிகம்.

இந்தத் தியாகம் எல்லாம் தேவையே இல்லை.

எழுத்தாளர்கள் புத்தகத்தைப் பற்றி வெளியில் பேச வேண்டும். நமது குழந்தைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதில்லையா? அப்படித்தான். இந்தியாவில் வெளியாகும் ஆங்கில நூல்களை மிகச் சிறந்த வகையில் ப்ரோமோட் செய்கிறார்கள். ஆனால் நாம்தான் பெரிய வியாக்கியானங்களை பேசிக் கொண்டு ‘பதிப்பகத்தார் பாடு’ என்று விட்டுவிடுகிறோம். ஒரு புத்தகம் பரவலான வாசக பரப்பை அடைவதற்கான நேர்மையான செயல்பாடுகளை எழுத்தாளர்கள் செய்ய வேண்டும். தமது புத்தகம் பற்றிய நேர்மையான உரையாடல்களை தயக்கமே இல்லாமல் உருவாக்கலாம். இப்படியான உரையாடல்களை உருவாக்குவதற்கான மிகச்சிறந்த தளமாக இணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதைச் சொல்வது பீற்றிக் கொள்வது போலத்தான் இருக்கும் ஆனாலும் சொல்லிவிடுகிறேன். ஒரே வாரத்தில் ஐந்நூறு பிரதிகள்- சரியாகச் சொன்னால் பத்து நாட்களில் எந்நூற்று சொச்சம் பிரதிகள் விற்றதற்கு- வலைப்பதிவிலும், முகநூலிலும் எழுதியதைத் தவிர எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. புத்தக விளம்பரத்திற்கெனச் செய்த அதிகபட்ச செலவு வெறும் தொண்ணூற்று நான்கு ரூபாய். அவ்வளவுதான். டிஸ்கவரி அரங்கில் புத்தக அட்டையின் கலர் பிரிண்ட் அவுட்களை ஒட்டி வைத்திருந்தார்கள். அதைத் தவிர வேறு எந்தச் செலவும் இல்லை. புத்தகம் குறித்தான சச்சரவு எதையும் உருவாக்கவில்லை, வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யவில்லை, புத்தக வெளியீட்டுக்கு எந்தப் பிரபலத்தையும் அழைக்கவில்லை. ஆனால் இந்தப் புத்தகம் பற்றி திரும்பத் திரும்ப எழுதினேன். நண்பர்கள் பேசினார்கள். இவை அத்தனையும் இணையத்திலேயேதான் நடந்தது. ஆனால் நமது புத்தகத்திற்காக இதைக் கூடச் செய்யவில்லை என்றால் எப்படி?

இணையத்தில் எழுதுபவர்கள் வெறும் சுவாரசியத்தை மட்டுமே மையமாக எழுதுகிறார்கள் என்பதிலும் கூட மாற்றுக் கருத்து உண்டு. அநேகமாக செந்தில் அப்படியான எழுத்துக்களை மட்டுமே இங்கு வாசிக்கிறார் என்று நினைக்கிறேன். தமிழில் மிக ஆழமான கட்டுரைகளை சர்வசாதாரணமாக கூகிளில் தேடி எடுத்துவிடலாம். ஏகப்பட்ட பேர்கள் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வளவு கவனம் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை.

ஆனால் காலம் இருக்கிறது. 

இப்பொழுதுதான் இணையத்தில் தமிழை வாசிக்கும் ஒரு பெரிய வாசகப்பரப்பு உருவாகியிருக்கிறது. இது ஒரு வகையில் Transition period. இந்த வாசகர்களில் கணிசமானவர்கள் தங்களின் தேடுதலை விரிவுபடுத்தும் போது பிற எழுத்தாளர்களும் கவனம் பெறுவார்கள். கொஞ்சம் பொறுத்திருப்போம். அது கூடிய சீக்கிரம் நடந்துவிடும். இணையத்திற்கான வக்கீலாக நான் இருக்க விரும்பவில்லை. ஆனால் இணையத்தின் வீச்சையும் அதன் ஆழத்தையும் புரிந்து கொள்ளாமல் நிறைய பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வருத்தம். பேசுங்கள். ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் உள்ளே வந்து இங்கே கொஞ்சம் புழங்கி விட்டு பிறகு பேசுங்கள். நான்கு வலைப்பதிவுகளைத் திறந்து பார்த்துவிட்டு, சக இலக்கியவாதியோடு பேசியவற்றிலிருந்து ஒரு கருத்தை உருவாக்கி கொண்டு ஒரு கவளம் மண்ணை எடுத்து வீச வேண்டாம் என்பது மட்டுமே எனது வேண்டுகோள்.