Jan 8, 2014

சனிக்கிழமை நேரம் ஒதுக்க முடியுமா?

சனிக்கிழமையன்று சென்னையில் இருப்பீர்களா? கொஞ்சம் நேரம் ஒதுக்கி வையுங்கள். அதிகபட்சம் அரை மணி நேரம்தான். அதற்குமேல் தேவைப்படாது. லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் கிட்டத்தட்ட அச்சு முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். நாளை புத்தகம் கைக்கு வந்துவிடும் என்றும் வெள்ளிக்கிழமையன்று புத்தக வெளியீட்டு விழாவை வைத்துவிடலாமா என்று ஒரு யோசனை இருந்தது. ஆனால் தனியாக விழா எதுவும் தேவையில்லை எனத் தோன்றியதால் புத்தகக் கண்காட்சிக்குள்ளேயே அரங்கில் வைத்து வெளியிட்டுவிடலாம் என்பதுதான் இப்போதைய முடிவு.

வெகு அமைதியாகவும், மிக எளிமையாகவும் இருக்கட்டும். 

ஒரு விழா நடத்தி புத்தகத்தை வெளியிடுவதில் சில சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. நிகழ்வுக்கு வருபவர்களில் பலரும் புத்தகத்தை வாங்கிவிடுவார்கள். இதனால் சில பல பிரதிகள் விற்றுவிடும்தான். நிறைய பிரதிகள் விற்றால் பதிப்பாளருக்குத்தான் உடனடி சந்தோஷம். முதலீட்டை எடுத்துவிடலாம். ஆனால் எழுதுபவனுக்கு புத்தக விற்பனை பற்றிய கவலை எதற்கு? வரும் ராயல்டியில் மெர்சிடிஸ் பென்ஸ் வாங்கவா போகிறோம்? ஐந்தாயிரம் பிரதிகளை விற்றாலும் நான்கு பேர் மட்டுமே புத்தகத்தை பற்றி பேசினால் என்ன சந்தோஷம்? அதுவே நான்கே பிரதிகள் விற்றிருந்தாலும் அந்த நான்கு பேருமே புத்தகத்தைப் பற்றி பேசினால் அதுவே பெரிய சந்தோஷம்தான். 

இப்படியெல்லாம் எழுதுவதால் இந்த புத்தகத்தின் விற்பனை பற்றி நீ கவலைப்படப் போவதில்லையா என்கிறீர்களா? ச்சே..ச்சே. அப்படியெல்லாம் விட முடியாது. எந்தத் துறையாக இருந்தாலும் மற்றவர்கள் நம்மை over-shadow செய்துவிடக் கூடாது என்ற நினைப்பு இருக்கத்தானே செய்யும்? அதுதானே மனித மனம்? அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

இன்னொரு காரணமும் இருக்கிறது. நம்மை நம்பிக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் அல்லவா? பெரிய பதிப்பகம் இல்லை. பெரிய பொருளாதார வசதி இல்லை. விற்பனைக்கான நெட்வொர்க் எதுவும் இல்லை. இருந்தாலும் ஆறு பேர் சேர்ந்து பதிப்பக வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆறு பேருமே மாதச் சம்பளக்காரர்கள். சம்பளத்தில் மிச்சம் பிடித்து இந்தப் புத்தகத்தை வெள்ளோட்டமாக விடுகிறார்கள். இந்தப் புத்தகம் கையைக் கடிக்காமல் இருந்தால் அடுத்த வருடம் இன்னும் சில புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். அதற்காகவாவது இவர்கள் தப்பித்துவிட வேண்டும் என விரும்புகிறேன்.

சினிமாவில் லோ-பட்ஜெட் படங்கள் ஜெயிப்பது போலத்தான் புத்தம் புதியவர்கள் பதிப்புத் துறையில் ஜெயிப்பது. வென்றுவிட்டால் பல புதிய குதிரைகளை நம்புவார்கள். பெரிய எழுத்தாளர்களைத் தாண்டி பெரிய பதிப்பகங்களின் கதவைக் கூடத் தட்ட முடியாத புதிய எழுத்தாளர்கள் மேலே வருவது இத்தகைய புதிய பதிப்பாளர்களால் சாத்தியமாக்கப்படும். இப்படியெல்லாம் எழுதிக் கொண்டே போகலாம்தான்.

‘என்னமோ அடுத்தவர்களின் நலனுக்காக புத்தகத்தை விற்கிறானாம்’- இந்நேரம் யாருக்காவது இப்படி நக்கலாகத் தோன்றியிருக்குமே. தோன்றாமல் இருக்குமா? நாமெல்லாம் ஒரே ரத்தம். எனக்கு அப்படித்தான் தோன்றும். 

உண்மையில் பொதுநலம், சுயநலம் என்பதையெல்லாம் தாண்டி அந்த ஆறு பேரின் நலனைப் பார்க்கிறேன். அடுத்தவர்களுக்கு எரிச்சல் உண்டாக்காமல், சர்ச்சை எதுவும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் மார்கெட்டிங் செய்துவிட வேண்டும். பொறுத்துக் கொள்ளுங்கள். 

இன்னொன்றையும் சொல்லிவிடலாம்.

இந்தப் புத்தகத்தை ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கிறார்கள். விற்றுவிடும் என நம்புகிறார்கள். ஒருவேளை- இந்தப் பதம் முக்கியமானது. ஒருவேளை, நஷ்டமில்லாமல் விற்பனை நடந்து எனக்கு துளி பணம் வருமானால் அந்தப் பணத்தின் இன்னொரு மடங்கைச் சேர்த்து- அதாவது ஆயிரம் ரூபாய் கிடைத்தால் இன்னொரு ஆயிரம் ரூபாயை எனது பணமாகக் கொடுத்து கோபியில் இருக்கும் தாய்த்தமிழ் பள்ளிக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துவிடலாம் என்றிருக்கிறேன்.

எவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்யலாம்- அதற்கு தகுதியான பள்ளிதான் அது. 

வாய்ப்பு கிடைத்தால் அந்தப் பள்ளியை ஒரு முறை எட்டிப்பாருங்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்தே தமிழ்வழிக் கல்விதான். ஆனால் அதற்காக பள்ளியில் ஆங்கிலமே இல்லை என்று அர்த்தம் இல்லை. அதை ஒரு மொழி என்ற அளவில் கற்றுத்தருகிறார்கள். மொழி இருக்கட்டும்- குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படும் தமிழர்களின் பாரம்பரிங்களுக்காகவும், தமிழர்களின் கலைகளுக்காகவும் இத்தகைய பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டும். இந்தப் பள்ளியின் குழந்தைகளின் பறையடியைக் கேட்க வேண்டும். நரம்பு முறுக்கேறிவிடும்.

இந்தப் பள்ளிக்கு ஏதாவது செய்யலாம் என்றிருந்தேன். இப்பொழுது இந்தப் புத்தகத்தின் வழியாக அணில் அளவுக்கான உதவி. அவ்வளவுதான்.

அணிலுக்கு ஆன்லைனில் உதவ விரும்பினால்.....லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்

0 எதிர் சப்தங்கள்: