புத்தகம் வந்துவிட்டது என்று சொன்னார்கள்.
நாளை வெளியிட்டுவிடலாம்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் வைத்து மிக எளிமையாக வெளியீடு நடைபெறுகிறது - நாளை (ஜனவரி, 11) மதியம் மூன்று மணிக்கு.
எந்த ஃபார்மாலிட்டியும் இல்லை. ராஜீவ்காந்தி முதல் பிரதியை வெளியிடுகிறார். இவர் ராணுவ வீரர். இப்பொழுது மதுரா முகாமில் இருக்கிறார். கன்னிவெடி ஸ்பெஷலிஸ்ட். (மூன்று சுழி ‘ணி’ வருமா என்று சந்தேகமாக இருக்கிறது) பெரும்பாலும் தனது மொபைல் வழியாக நிசப்தம் தளத்தை வாசிக்கும் மதுரைக்காரர். வாசித்துவிட்டு வாரத்தில் மூன்று முறையாவது ஃபோனில் பேசுவார். இதுவரை நேரில் பார்த்ததில்லை. புத்தக வெளியீடு என்று சொன்னதும் ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி ஐந்தாறு நாட்கள் விடுப்பு வாங்கிவிட்டாராம். மிலிட்டரியில் விடுப்பு வாங்குவதொன்றும் சுலபமில்லை என்று நினைக்கிறேன். அநேகமாக திரும்பிச் சென்றவுடன் துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓடச் சொல்வார்கள். பாவம். புத்தக வெளியீட்டுக்கு அவர் வருவதாகச் சொன்னவுடனே முதல் பிரதியை அவரை வைத்தே வெளியிடச் செய்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
முதல் பிரதியை ஜெகதீசன் வாங்கிக் கொள்வார். நிசப்தம் தளம் நன்றாக இருப்பதாக மிகவும் நம்பும் அப்பாவி. இப்பொழுது அரபு தேசம் ஒன்றில் இருக்கிறார். இன்று காலை சென்னை வந்து அழைப்பதாகச் சொல்லியிருந்தார். இன்னமும் அழைக்கவில்லை. நாளை எப்படியும் சென்னையில் இருப்பார் என நம்புகிறேன். அவரிடம் இதுவரை தொலைபேசியில் கூட பேசியதில்லை. முதல் பிரதிக்காக பல நாட்களுக்கு முன்பாகவே யாவரும்.காம்மின் கணக்குக்கு ஐந்தாயிரம் ரூபாயை மாற்றியவர் இவர்தான். ஒருவேளை அவரால் வர இயலவில்லை என்றால் முதல் பிரதியை அவருக்காக எடுத்து வைத்துவிட வேண்டும்.
கவிஞர்.கதிர்பாரதி என் மீதும் அக்கறை மிகுந்தவர். பாராட்டுகிறாரா அல்லது கலாய்க்கிறாரா என்று தெரியாமலே பேசி அத்தனை பேருக்கும் நல்ல மனிதராக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
அவ்வளவுதான்.
ஒருவர் வெளியிட, இன்னொருவர் பெற்றுக் கொள்ள பேக்ரவுண்டில் கதிர்பாரதி நின்று ஃபோட்டோ பிடித்துக் கொண்டால் வெளியீடு முடிந்தது.
கூட்டம் இல்லை. உரை இல்லை. அது பரவாயில்லை. ஒரு டீ கூட இல்லை என்பதுதான் கவலை.
வாய்ப்பிருப்பவர்கள் நிச்சயம் கலந்து கொள்ளுங்கள். இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை. எப்படியும் அதே அரங்கில்தான் இரண்டு நாட்களுக்கு மேய்ந்து கொண்டிருப்பேன். வந்து கை குலுக்கினால் கூட போதும். எனக்கு ஒரு சந்தோஷம். திருப்தி.
ஒருவேளை, சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வர வாய்ப்பே இல்லையென்றால்? அதற்கும் ஒரு ஆப்ஷன் வைத்திருக்கிறேன். இருந்த இடத்தில் இருந்தே துக்கினியூண்டு வாழ்த்து ஒன்றை மனதாரச் சொல்லிவிடுங்கள். அது போதும்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment