Dec 25, 2013

போங்கய்யா நீங்களும் உங்க அரசியல் எழுச்சி மாநாடும்

இன்று ஊருக்கு வர வேண்டியிருந்தது. பெங்களூரிலிருந்து அதிகபட்சம் நான்கரை மணி நேரப் பயணம்தான். பிழைக்க வந்த ஊரிலிருந்து நினைத்த போது சொந்த ஊருக்கு போய் வருவதில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்படி கிளம்பி வந்தால் ஏதாவது ஞாபகம் வந்துவிடுகிறது. இன்றைக்கு முருகையன் ஞாபகம் வந்துவிட்டது. அவர் ஏதோ ஒரு வகையில் பழக்கம். எப்படி பழக்கமானார் என்றெல்லாம் துல்லியமாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் பழக்கமாகிவிட்டார். ஆரம்பத்தில் பல்லடம் பக்கத்தில் ஒரு ஊரில் குடியிருந்தார். திருமணமாகியிருந்தது. அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். மூன்றுமே பொடிசுகள்தான். மூத்தவள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

முருகையன் தறிக் குடோன் ஒன்றில் வேலையில் இருந்தார். பெரிய சம்பளம் இல்லை என்றாலும் படு பாஸிடிவான மனிதன். புலம்பிப் பார்த்ததாக ஞாபகமே இல்லை. ஆனால் மூன்றுமே பெண்பிள்ளைகள் என்பதால் பெரிய சுமை ஒன்று தலையில் இருப்பதாக ஒரு முறை சொல்லியிருக்கிறார். மற்றபடி ஜாலியான மனிதர் அவர்.

இப்பொழுது ஊருக்கு வந்ததற்கும் முருகையனை நினைத்துக் கொண்டதற்கும் இருக்கும் சம்பந்தத்தை சொல்லிவிடுவது நல்லது.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கொங்குதேசத்தில் பாப்புலராகிக் கொண்டிருந்தது. பெஸ்ட் ராமசாமி என்ற தொழிலதிபர் அந்தக் கட்சிக்கு தலைவராக இருந்தார். ஈஸ்வரன் என்ற இன்னொரு தொழிலதிபர் பொதுச் செயலாளராக இருந்தார். பெயர்தான் கொ.மு.கவே தவிர அது கவுண்டர்களுக்கான கட்சிதான். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அந்தக் கட்சியின் கரை வேஷ்டியைக் கட்டத் துவங்கியிருந்தார்கள். இந்த ஏரியாவில் காசு படைத்தவர்கள் கவுண்டர்கள்தானே. அவர்கள் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்தால் பாப்புலராகத்தானே செய்யும். அப்படித்தான் இதுவும்.

முருகையனும் தன்னை கட்சியில் ஐக்கியமாக்கியிருந்தார். அவரது மனைவிக்கு இதில் முழுச் சம்மதமில்லை போலிருக்கிறது. ஆனால் தடுக்க முடிந்ததில்லை. சரி தொலையட்டும் என்று விட்டிருக்கிறார்.

காசு படைத்த கவுண்டர்கள் கட்சிக்காக அள்ளிக் கொடுத்தார்கள் என்றால் முருகையன் மாதிரியான ஆட்கள் கடும் உடல் உழைப்பைக் கொடுத்தார்கள். நோட்டீஸ் கொடுப்பது முதல் போஸ்டர் ஒட்டுவது வரை அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு செய்த போது கொங்கு மண்டலத்தில் மிக முக்கியமான அரசியல் சக்தியாக கொ.மு.க வந்துவிடும் என்று நினைத்தார்கள். முன்பும் இப்படி சில முறை நடந்திருக்கிறது. நாராயணசாமி நாயுடுவின் விவசாய சங்கம், சொல்லேருழவன்- சொற்களாலேயே ஏர் ஓட்டுவாராம் செல்லமுத்துவின் உழவர் உழைப்பாளர் கட்சியெல்லாம் இப்படி மூன்றாவது சக்தியாக உருவெடுத்து அப்படியே அமுங்கிப் போயின என்பதுதான் அரசியல் வரலாறு. அமுங்கிப் போயின என்பதை விடவும் அமுக்கிவிட்டார்கள் என்பார்கள். அதையெல்லாம் விலாவாரியாக எழுதலாம். ஒருவேளை நாவலே கூட எழுத முடியும். அத்தனை கச்சாப்பொருள் நிரம்பிய அரசியல் அது.

கொ.மு.கவுக்காக முருகையன் நாய் படாத பாடு படுகிறார் என்பார்கள். உள்ளூருக்குள் ஒரு சுவர் விடாமல் உரிமையாளரிடம் பேசி ‘ரிசர்வ்’ செய்து வைத்துவிடுவதால் மற்ற கட்சிக்காரர்களின் கடும் எரிச்சலைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். ஆனால் அந்த எரிச்சல் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் அவருக்கு இல்லை. கட்சி முக்கியம் இல்லையா? 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி தனித்து களமிறங்கியது. பொறுக்கியெடுத்த பன்னிரெண்டு தொகுதிகளில் ஆட்களை நிறுத்தினார்கள். பல லட்சம் வாக்குகளை அள்ளியெடுத்தார்கள். அவர்களின் நோக்கம் நாடாளுமன்றத் தேர்தல் இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். அடுத்து வரவிருந்த சட்டமன்றத் தேர்தலில் ‘டீலிங்’ பேசுவதற்காக இந்தத் தேர்தலில் பலத்தைக் காட்டியே தீர வேண்டும் என்று உழைத்தார்கள்.

முருகையன் தனது சட்டையை சுருட்டி விட்டு சிலிண்டரைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு வீடு வீடாக வாக்கு கேட்டார். கொ.மு.கவின் சின்னம் சிலிண்டர். காலி சிலிண்டர்தான் என்றாலும் அது ஒன்றும் லேசுப்பட்ட காரியம் இல்லை. தோள் கழண்டு விடும். தேர்தல் நெருங்க நெருங்க இவர்களின் சூறாவளி பிரச்சாரமும் அனல் கிளப்பியது. தோள் வலியெடுத்ததைக் கண்டுகொள்ளாமல் முருகையன் அலைய தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பாக முருகையனை காலன் கவ்விச் சென்றுவிட்டான். சிலிண்டரைத் தூக்கியதால்தான் தோள்பட்டை வலிக்கிறது என அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அது ஹார்ட் அட்டாக். கதை முடிந்து போனது. அவரது பிணத்தை நடுவீட்டில் போட்டு வைத்து அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் கதறியது இன்னமும் ஞாபகமும் இருக்கிறது. 

அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக என இரண்டு கட்சியுடனும் பேரம் நடத்தில் கடைசியில் திமுகவுடன் கூட்டு சேர்ந்தார்கள் கொ.மு.கவினர். பெஸ்ட் ராமசாமிக்கு தனி டீலிங்; ஈஸ்வரனுக்கு தனி டீலிங் என்றார்கள். சர்க்கரை ஆலைக்கான அனுமதி கூட டீலிங்கில் இருந்ததாம். ஏழு ஸீட் வாங்கினார்கள். போட்டியிட்ட ஏழு தொகுதியிலும் மண்ணைக் கவ்வினார்கள்.

அவ்வளவுதான். கட்சி முடிந்தது. 

பெஸ்ட்டுக்கும், ஈஸ்வரனுக்கும் லடாய் வந்துவிட்டது. கட்சியை பிரித்துவிட்டார்கள். இப்பொழுது ஈஸ்வரன் தனிக்கட்சி. பெஸ்ட் தனிக்கட்சி. கொஞ்ச நாள் அமைதியாக இருந்தார்கள். தேர்தல் வருகிறதல்லவா? இப்பொழுது ஈஸ்வரனின் சப்தம் அதிகமாகியிருக்கிறது. போஸ்டர்களில் ஈஸ்வரன் சுருங்கி ஈசன் ஆகிவிட்டார். ஐந்தாறு கலர்களில் ஒரு கொடியைத் தயாரித்திருக்கிறார்கள். கரைவேட்டி கட்டினால் வேட்டியில் பாதி கரைதான் இருக்கும் போலிருக்கிறது அத்தனை கலர்கள். வழிநெடுக ‘ஈசன் அழைக்கிறார்’ என்கிறார்கள். பணக்காரக் கவுண்டனுக்கெல்லாம் பேனரில் இடம் கொடுத்திருக்கிறார்கள். ஏழைக் கவுண்டனுக்கெல்லாம் வேறு வேலை கொடுத்திருப்பார்கள். அரசியல் எழுச்சி மாநாடு நடத்துகிறாராம். 

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் டீலிங்குக்காக பலம் காட்டுவதற்கான மாநாடு இது. இப்பொழுதும் சில முருகையன்கள் இருப்பார்கள்தானே? அவர்களைப் பொறுத்தவரை ‘தலைவர் அழைக்கிறார்’. கத்திக் கொண்டே வண்டியேறுவார்கள். போகட்டும். முருகையன்களுக்காக ஒரு உதவியை இவர்களால் செய்ய முடியும் என நினைக்கிறேன். ஹார்ட் அட்டாக் வந்தால் வித்தியாசம் கண்டுபிடிக்கும் அளவிற்கு எடை குறைவான சின்னத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லி ஒரு கடிதம் அனுப்ப வேண்டும்.