Dec 30, 2013

வேறென்ன வேறென்ன வேண்டும்..

சில விஷயங்கள் ஏதோ கனவில் நடப்பது போலவே இருக்கும். ஆனால் கிள்ளிப் பார்த்தால் வலிக்கும். இன்றும் அப்படித்தான். காலையிலிருந்து கிள்ளிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். கை கால் என்று ஒரு இடம் பாக்கியில்லை. வலிக்கிறது. ஆக, எல்லாமே உண்மையிலேயேதான் நடக்கிறது போலிருக்கிறது.

என்ன விஷயம் என்றால், நேற்று எழுதியிருந்தேன் அல்லவா? ரோபோடிக்ஸ் பாலாஜி. அவருக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. கத்தாரில் வசிக்கும் திரு.சுப்பிரமணியம்- இவர் காரைக்குடிக்காரர்- முப்பதாயிரம் கொடுத்திருக்கிறார். இன்று காலையில் அமெரிக்காவில் இருந்து திரு.ஆனந்த் பாபு ஐம்பதாயிரம் ரூபாயை பாலாஜியின் கணக்குக்கு மாற்றியிருக்கிறார்- அக்கவுண்டுக்கு பணம் வந்து சேரவில்லை. ஆனால் மாலைக்குள் பாலாஜியின் கையில் பணம் கிடைத்துவிடும் என நினைக்கிறேன். அது போக கோயமுத்தூரிலிருந்து திரு.ராமநாதன் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருந்தார். ஆக மொத்தம் எண்பத்தைந்தாயிரம் ரூபாய்.

பாலாஜி நேற்று பேசும் போது டிக்கெட் நாற்பதாயிரம் ஆகும் என்கிற மாதிரியாகச் சொன்னார். இன்றைக்கு ஐம்பதாயிரத்தைத் தாண்டுகிறதாம். ஒவ்வொரு நாள் தாமதமாகும் போது இந்த ஏரோப்ளேன்காரர்கள் விலையை ஏற்றிவிடுகிறார்கள். உடனடியாக டிக்கெட்டை ‘ப்ளாக்’ செய்வதாகச் சொல்லியிருக்கிறார். எப்படியிருந்தாலும் இந்தப் பணம் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன். போக்குவரத்து, தங்குமிடம், உணவு, கருத்தரங்குக்கான நுழைவுத்தொகை என அனைத்தையும் இதன் மூலம் சமாளித்துக் கொள்வார் என நம்பலாம்.

பாலாஜி கருத்தரங்கில் கலந்து கொள்வது இரண்டாம்பட்சம். இந்த உதவி அவருக்கு இது மிகப்பெரிய moral support. அடுத்த முறை பாருங்கள். இன்னும் ஒரு அடி உயரக் கால் வைத்து மேலே முயற்சிப்பார்.

நடந்து கொண்டிருப்பதை இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை. 

இத்தனை பெரிய தொகையை ஒரே இரவில் புரட்டிவிட முடியும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நேற்று இந்தப் பதிவை எழுதும் போது கூட பத்தாயிரம் ரூபாய் புரட்டினாலே பெரிய விஷயம் என்றுதான் தோன்றியது. ஆனால் நல்ல காரியத்திற்காகச் செய்யும் போது எல்லாமே சரியாக நடக்கின்றன. கடவுள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இந்த மாதிரியான கணங்களில் நம்பிக்கையை இன்னும் சற்று உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

எழுதுவதால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வதற்கு இன்னும் ஒரு காரணம் கிடைத்திருக்கிறது. அழுத்தம் திருத்தமான காரணம் இது. 

இதுதானே முக்கியம்? வாசிக்கிறோம், புத்தகம் எழுதுகிறோம், மார்க்கெடிங் செய்கிறோம், நான்கு பேர் நம் எழுத்தை வாசிக்கிறார்கள் எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா என்ற அத்தனையையும் தாண்டி இது போன்ற ஓரிரண்டு காரியங்கள் காலாகாலத்துக்கும் நிம்மதியைத் தந்து கொண்டிருக்கும். அது போதும். இதில் எனக்கு எந்தக் கிரெடிட்டும் இல்லை என்பதை மனப்பூர்வமாகவே சொல்கிறேன். இருபது நிமிடத்தில் ஒரு பதிவு எழுதிய சிறு வேலையை மட்டுமே செய்திருக்கிறேன். மற்றபடி, நிசப்தத்தில் எழுதியதை நம்பி அடுத்த சில மணிநேரங்களில் மிகப்பெரிய உதவியைச் செய்த மேற்சொன்ன நண்பர்களுக்குத்தான் அத்தனை நன்றியும், வாழ்த்துகளும். இவர்களில் யாரையுமே இதுவரை நேரில் பார்த்ததில்லை என்பது முக்கியமான விஷயம்.

அத்தனை பேரின் நம்பிக்கையையும் பாலாஜி காப்பாற்ற வேண்டும். அது எல்லாவற்றையும்விட முக்கியம். காப்பாற்றுவார் என நம்புகிறேன்.

ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பாலாஜி அழைத்திருந்தார். மிகப்பெரிய சந்தோஷம் அவருக்கு. ‘இனி பிரச்சினை இருக்காது சார்’ என்றார். அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

‘இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்ன்னு சொல்லிடுங்க சார்’ என்றார். எதற்குச் சொல்கிறார் என்று புரியவில்லை. 

‘இப்போதைக்கு இந்தப் பணம் போதும் சார். என்னை மாதிரி வேற யாராச்சும் வந்தாங்கன்னா அவங்களுக்கு தேவைப்படும்ல. அப்போ தந்துடச் சொல்லுங்க’ என்றார்.

போதும் என்ற மனம். இன்னும் டிக்கெட் எதுவும் உறுதியாகவில்லை. இருந்தாலும் ‘சரி’ என்று சொல்லிவிட்டேன்.

அவர் சொல்வதும் சரிதான். இன்னும் பல பாலாஜிகள் தமிழ்நாட்டின் வேறு ஏதாவது ஒரு மூலையில் இருப்பார்கள். தேவைப்படும் போது உதவலாம். அவசியம் வரும் போது ‘மட்டும்’ எழுதுகிறேன். அதற்குள் உங்களின் நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொள்கிறேன். 

ஆனந்த் பாபு ஐம்பதாயிரம் ரூபாயை அனுப்பியவுடன் ‘Very Thanks Sir' என்று பாலாஜி இன்று அதிகாலையில் மெசேஜ் அனுப்பியிருந்தார். அதையே ‘Very Thanks All' என்று அத்தனை பேருக்குமான நன்றியாக மாற்றிக் கொள்ளலாம். 

Dec 29, 2013

உங்களால் முடியுமா?

பாலாஜியைப் பற்றி தெரியுமல்லவா? ‘ரோபோடிக்ஸ்’ பாலாஜி. முன்பு ஒரு முறை எழுதியிருக்கிறேன். வில்லேஜ் விஞ்ஞானி அவர்.

அவருக்கு ரோபோவின் மீது வெறும் ஆர்வம் மட்டுமில்லை. வெறி, காதல் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். வெறும் ஆர்வத்தோடு நின்றுவிடாமல் தனது ஆர்வத்தை செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் ஏகப்பட்ட ரோபோக்களை சுயமாக வடிவமைத்திருக்கிறார். இவரது லிஸ்ட்டில் பறக்கும் ரோபோட், விவசாய ரோபோட் என்று பலவகைகள் அடங்கும்.

பாலாஜிக்கு பெரிய பேக்ரவுண்ட் எதுவும் இல்லை. வீட்டில் வசதி வாய்ப்புகளும் இல்லை. அவரது அப்பா விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் ஒரு தச்சுத் தொழிலாளி. அவ்வளவுதான் வருமானம். ஆனால் குடும்பச் சூழல் எதுவும் பாலாஜிக்கு தடையில்லை. பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்திலேயே பலவித ரோபோக்களை வடிவமைத்தவர்.

பி.ஈ முடித்தவர் தற்பொழுது எஸ்.ஆர்.எம் கல்லூரியில் எம்.டெக் ரோபோடிக்ஸ் படித்துக் கொண்டிருக்கிறார். சொந்தச் செலவில் எம்.டெக் படிக்கும் அளவிற்கு பாலாஜியிடம் வசதி வாய்ப்பு இல்லை. நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரி நிர்வாகமே அனைத்து செலவையும் ஏற்றுக் கொள்கிறது. 

இப்பொழுது எழுத வந்த விஷயம் பாலாஜியைப் பற்றி இல்லை. அவரைப் பற்றி இன்னும் இன்னும் அதிகமான தகவலை இந்து நாளிதழில் வாசிக்கலாம்.

பாலாஜிக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது.

ஜப்பானில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கு ஒன்றிற்கு அவரது ப்ராஜக்ட் ஒன்று தேர்வாகியிருக்கிறது. சென்று வருவது அவருக்கு நல்ல விஷயம்தான். ஆனால் செலவுதான் ஊர்ப்பட்டது ஆகும் போலிருக்கிறது. ஒரு சில நண்பர்கள் தங்களால் முயன்ற சிறு உதவியைச் செய்திருக்கிறார்கள். ஆனால் அது யானைப்பசிக்கான சோளப் பொறிதான். பணம் இன்னமும் தேவைப்படுகிறது.


இத்தனை செலவு செய்து ஜப்பான் போக வேண்டியது அவசியம்தானா என்று கேள்வி கேட்கலாம்தான். ஆனால் வெறும் படிப்பு, படிப்பு முடிந்தால் வேலை என்ற குறிக்கோளுடன் படிப்பவனுக்கு இதெல்லாம் அவசியம் இல்லைதான். ஆனால் பாலாஜி போன்று ஆராய்ச்சி மீது வெறித்தனமாகத் திரியும் ஒரு மாணவனுக்கு இத்தகைய அனுபவங்கள் நிச்சயம் அவசியம். அதுவும் ரோபோடிக்ஸ் துறையில் கொடிகட்டும் ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்குகள் நிச்சயம் சிறப்புத்தன்மை வாய்ந்தவை. கருத்தரங்குகளில் கலந்து கொள்பவர்களுடனான தொடர்புகள் அத்தகைய அரங்குகளில் நடைபெறும் விவாதங்கள், புதிய நுட்பங்கள் போன்றவை பாலாஜி போன்ற மாணவர்களுக்கு கண்டிப்பாக உதவக் கூடும்.

நேற்று போனில் அழைத்தவர் பதற்றத்துடன் ‘ஜப்பான் போக முடியாது போலிருக்கு’ என்றார். கிட்டத்தட்ட உடைந்துவிடும் குரல் அது.

‘ட்ரை பண்ணலாம்’ என்று சொல்லிவிட்டு இதை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.

முன்பொரு முறை சிங்கப்பூர் செல்வதற்கான வாய்ப்பு வந்த போதும் இதே பண விஷயத்துக்காக தவிர்க்க வேண்டியதாகப் போய்விட்டது. இந்த முறையும் ‘மிஸ்’ ஆகிவிட்டால் அவரது கல்லூரிப்படிப்பே முடிந்துவிடக் கூடும். தனது எம்.டெக்கின் கடைசி செமஸ்டரில் இருக்கிறார். 

வாய்ப்புகள் மட்டும் சரியாக அமைந்துவிட்டால் நிச்சயம் பாலாஜி முக்கியமான ரோபோடிக்ஸ் வல்லுநர் ஆகிவிடுவார் என நம்பலாம். ஆனால் ஒரு முக்கியமான வாய்ப்பு பணத்தினால் தடைபட்டிருக்கிறது. உங்களால் முடிந்த சிறுதொகை இவனுக்கான உலகின் கதவுகளை திறந்துவிடக் கூடும் என நம்புகிறேன். 

இயன்றதைச் செய்யுங்கள். 

பாலாஜியின் அலைபேசி எண்: +918056834037

அக்கவுண்ட் விபரம்: 
INDIAN BANK (1423)
A NO : 759993969
KANDACHIPURAM  605 701
CIF : 327325779

போலீஸ் இல்ல...

இந்த ஊரில் மாலை ஆறு மணிக்கெல்லாம் குளிர் ஆரம்பித்துவிடுகிறது. அதுவும் மரங்கள் நிறைந்த ஜே.பி.நகர் பக்கமெல்லாம் துளி டிகிரியாவது குறைவாகவே இருக்கிறது. அந்த ஜே.பி.நகரின் பிக் பஜார் பக்கம் நிறைய தள்ளுவண்டிகள் இருக்கும். பழங்கள், காய்கறிகள் என்று எதையாவது விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தமிழ்தான். தமிழ்க்காரர்களோ இல்லையோ தமிழ் பேசுகிறார்கள். எளிய மனிதர்கள். காலையில் ஐந்து அல்லது ஆறு மணிக்கு வியாபாரத்தை ஆரம்பித்தால் இரவு பத்தைத் தாண்டும். நின்று கொண்டேதான் இருக்கிறார்கள். கஷ்ட ஜீவனம்.

இவர்களிடம்தான் நம்மவர்கள் பேரம் பேசுவார்கள். 

‘மிஞ்சிப் போனால் ஒரு ரூபாய் அதிகம் வெச்சு விப்பானா? பேரம் பேசாமல் கொடுத்துட்டு போவோம்’ என்பது என் கட்சி. 

மனைவி அப்படியே எதிர்மறை. ‘ஆயிரம் ரூபாய் தாண்டிய வியாபாரம் வாரத்துக்கு ஒன்று கூடச் செய்ய மாட்டோம். அதுவே பத்து, இருபது ரூபாய்களில் சில்லரை வியாபாரம் தினமும் இரண்டு மூன்றாவது செய்வோம். ஒவ்வொரு முறையும் இந்தச் சில்லரை வியாபாரத்தில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் ஏமாந்தால் கூட அதுதான் பெரிய இழப்பு. கணக்குப் போட்டு பாருங்க’ என்னும் கட்சி.

இந்த மாதிரியான கணக்கு போட்டு மண்டை உடைக்கும் அளவுக்கு பொறுமை இல்லை என்பதால் ‘சரி’ என்று சரண்டர் ஆகிவிடுவேன். 

ஆனால் இந்தத் தள்ளுவண்டிக்காரர்களையும் நம்ப முடியாது. அவரைக்காய் ஜே.பி.நகரில் வாங்கினால் கிலோ முப்பது ரூபாய். வீட்டுக்கு பக்கத்தில் விசாரித்தால் அரைக்கிலோ முப்பது ரூபாய் சொல்கிறான். இருவருமே தள்ளுவண்டிக்காரர்கள்தான். வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கிறான் ஆனால் இனிமேல் அவனை எப்படி நம்புவது?

இந்தப் கணக்கு இருக்கட்டும்.

நேற்று ஒரு தள்ளுவண்டியில் ஒரு முதியவர் ரோஜாப் பூ விற்றுக் கொண்டிருந்தார். ஜே.பி.நகரில் இருக்கும் பிக் பஜாருக்கு பக்கத்தில். அவர் தள்ளுவண்டியில் இருந்த பூக்களில் பெரும்பாலானவை சிவப்பு ரோஜாக்கள். அவர் அடுக்கி வைத்திருந்ததே  அத்தனை அழகாக இருந்தது. செக்கச் சிவப்பு. பார்த்தவுடனே வாங்கலாம் என்று தோன்றியது. சிவப்பு ரோஜாக்கள் தவிர வேறு சில நிறங்களிலும் இருந்தன. ஆனால் அவை எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஒரு பூ பத்து ரூபாய் சொன்னார். நான்கு வாங்கிக் கொண்டேன். அந்த இடத்தில் தனியாகத்தான் இருந்தேன். பூவை என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை. அந்தப் பூக்களின் அழகுக்காக வாங்கியாகிவிட்டது. வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். நான்கு வாங்கிய பிறகு கூடுதலாக ஒரு குட்டிப் பூவையும் கொடுத்தார். நான் கேட்கவேயில்லை. என்ன நினைத்தாரோ. அவராகவே கொடுத்துவிட்டார்.

சனிக்கிழமை மாலை என்பதால் அந்தச் சாலையே பூக்களால் நிரம்பியிருந்தது. இரண்டு கால் முளைத்த பூக்கள் அவை. அந்தப் பூக்களை நம்பித்தான் தாத்தா இந்தப் பூக்களை வண்டியில் நிரப்பியிருக்கிறார் போலிருந்தது. அவரது நம்பிக்கை ஒன்றும் வீண் போகவில்லை. ஏகப்பட்ட பேர் கையில் ஆளுக்கொரு சிவப்பு ரோஜாவோடு சுற்றிக் கொண்டிருந்தார்கள். தலையில் வைப்பதில்லை. கையில் வைத்துக் கொண்டிருப்பது. அவர்கள் தலையில் வைத்திருந்தாலும் சரி; கையில் வைத்திருந்தாலும் சரி. வியாபாரம் ஆனால் போதும்.

சத்தியமங்கலம் பக்கத்தில் எங்கள் சொந்தக்காரர் ஒருவருக்கு ரோஜாத் தோட்டம் இருக்கிறது. பெரிய அளவிலான தோட்டம் இல்லை என்றாலும் நல்ல வருமானம் அவருக்கு. அந்தப் பூக்களை பெங்களூர்தான் அனுப்பி வைக்கிறாராம். அவரிடமிருந்து ஒரு பூ இரண்டு அல்லது மூன்று ரூபாய் என்ற  அளவில்தான் வாங்கிக் கொள்கிறார்கள். அதுவே பெரிய விஷயம்தான். இடையில் பூ வியாபாரிக்கு, மண்டிக்கு, போக்குவரத்து செலவுக்கு என ஒவ்வொரு பக்கமும் கமிஷன் தள்ளிவிட்டு கடைசியில் தள்ளுவண்டிக்காரரிடமிருந்து நமது கைக்கு வரும் போது எட்டு அல்லது பத்து ரூபாயைத் தொட்டுவிடுகிறது. விற்றாலும் பரவாயில்லை. இந்தப் பூவை நம்பித்தான் லட்சக்கணக்கானவர்கள் பிழைக்கிறார்கள். பூக்கட்டுபவர்களிலிருந்து மணவறை அமைப்பவர்கள் வரை கணக்குப் பார்த்துக் கொள்ளலாம். லட்சக்கணக்கானவர்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை இல்லை.

இந்த பூவண்டிக்காரரிடம்தான் நேற்று ஒரு ட்ராபிக் போலீஸ்காரர் வெறுப்பாகிவிட்டார். பூவை பைக்கில் வைத்துவிட்டு ஒரு வடக்கத்தியை பையனிடம் பானிபூரியை வாங்கி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தேன். வேகமாக வந்த அந்த போலீஸ்காரர் இந்தப் பையனை நகரச் சொன்னார். அவனுக்கு தனது ஐட்டங்களை இடமாற்றுவது பெரிய சிரமமாக இல்லை. நட்டுவைத்த குடை மாதிரிதான் அவன் கடை இருந்தது. தின்று கொண்டிருந்த வரைக்கும் என்னிடம் காசை வாங்கிக் கொண்டு போய்விட்டான். தின்றும் தின்னாமல் பாதியில் துரத்திவிட்டுவிட்டதாக போலீஸ் மீது எரிச்சல் எனக்கு. என்ன செய்ய முடியும்? ஓரமாக நின்று கொண்டேன்.

அந்தப் போலீஸ்காரர் கையில் ஒரு கேமிராவை வைத்துக் கொண்டு ஒவ்வொரு தள்ளுவண்டியாக படம் எடுத்தார். எதற்கு எடுக்கிறார் என்று தெரியவில்லை.

பெரும்பாலான தள்ளுவண்டிக்காரர்கள் நகர்ந்துவிட்டார்கள். இந்தத் தாத்தாவும் நகர்ந்தார். ஆனால் பேசாமல் நகர்ந்திருக்கலாம். ‘பஜாருக்கு வர்றவங்க எல்லாம் வண்டியை இங்கேயதான் நிறுத்துறாங்க. எங்க பத்துக்கடைகள் தான் பிரச்சினையா’ என்று கன்னடத்தில் கேட்டார். அவர் கேட்டதும் சரிதான். அது ஒன்றும் முக்கிய சாலையில்லை. பிரதான சாலையோடு சேரும் இன்னொரு சாலை. ஆனால் போலீஸ்காரன் பிரச்சினை போலீஸ்காரனுக்கு. ரோந்து வண்டிகள் வந்தால் டூட்டியில் இருக்கும் போலீஸ்காரரைத்தான் கண்டபடி திட்டுவார்கள். அதுவும் நாராசமாகத் திட்டுவார்கள்.

தள்ளுவண்டிக்காரர் சொன்ன போது போலீஸ்காரன் லேசாக சிரித்த முகமாகத்தான் இருந்தான். ஆனால் என்ன நினைத்தாரோ திருப்பி அவரைத் திட்டத் தொடங்கிவிட்டான். என்ன பேசுகிறான் என்று புரியவில்லை. தாத்தாவோடு இன்னும் இரண்டு தள்ளுவண்டிக்காரர்கள் சேர்ந்துவிட்டார்கள். திட்டிக் கொண்டிருந்த போலீஸ்காரன் கான்ஸ்டபிள். ஏதோ பிரச்சினை போலிருக்கிறது என அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு வெள்ளைச் சட்டைக்காரர் வந்துவிட்டார். அவர் எஸ்.ஐ. தோள்பட்டையில் இரண்டு நட்சத்திரங்கள் இருந்தன. பிரச்சினையை விசாரித்தவர் எதுவுமே பேசவில்லை. திடீரென்று பூவண்டியைக் கீழே கவிழ்த்துவிட்டார். மொத்த ரோஜாக்களும் சிதறிவிட்டன. அரை வினாடிக்கு அந்த இடம் ஸ்தம்பித்தது. பிறகு ஆளாளுக்கு தங்கள் வேலையைத் தொடர்ந்தார்கள்.

தாத்தாவும் உடன் இருந்த இரண்டு தள்ளுவண்டிக்காரர்களும் சிதறிய பூக்களைப் பொறுக்கினார்கள். அத்தனை பூக்களையும் அவர்களால் பொறுக்க முடியவில்லை. அந்தச் சாலையில் ஓடிக் கொண்டிருந்த சில வாகனங்கள் பூக்களை பதம் பார்த்துவிட்டன. முப்பது பூக்களாவது நசுங்கியிருக்கக் கூடும். குறைந்தபட்சம் இருநூற்றைம்பது ரூபாய் சாலையில் நசுங்கிப் போனது.

அந்தத் தாத்தா அதன் பிறகு எதுவுமே சொல்லவில்லை. அமைதியாகப் போய்விட்டார். இன்னொரு தள்ளுவண்டிக்காரர்தான்  ‘அந்த மனுஷனோட ரெண்டு நாளத்து வருமானத்தை ரோட்ல போட்டு நசுக்கிட்டானுவ. பாவம்’ என்றார். அவர் தமிழில்தான் சொன்னார். அவர் சொன்ன போது போலீஸ்காரர்கள் வேறொரு இடத்திற்கு நகர்ந்திருந்தார்கள். அந்தத் தாத்தா வண்டியைத் தள்ளிக் கொண்டு சற்று தூரம் போயிருந்தார். அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. கிளம்பினேன். வாங்கி வைத்திருந்த ரோஜாப்பூக்கள் சலனமூட்டியபடியே இருந்தன. அதுவும் அந்தக் குட்டிப் பூ கூடுதல் சுமையாகத் தெரிந்தது.

இந்த ஈரல் ஆட்டு ஈரல்தானே?

நேற்று ரங்கஷங்கரா நாடக அரங்குக்கு செல்லலாம் என்று தோன்றியது. பெங்களூரின் பிரசித்தி பெற்ற நாடக அரங்கு. நாடகம் பார்ப்பதெல்லாம் நோக்கமில்லை. சும்மா ஒரு ரவுண்ட். அங்கு நாடகம் பார்க்கிறோமோ இல்லையோ- ஒரு சுற்று போய் வரலாம். அந்த ஏரியாவே ஜெகஜ்ஜோதியாக இருக்கும். ஜெகஜ்ஜோதி என்றால் ஜெகஜ்ஜோதிதான். 

போகிற வழியில் வெங்கடாஜலபதிக்கு ஒரு கோவில் கட்டி வைத்திருக்கிறார்கள். தங்கக் கருடகம்பம் வெளியே தெரியும் படி தகதகக்கும். என்னதான் சாமி என்றாலும் நம் ஆட்களை கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் அல்லவா? ராத்தியில் யாரும் சுரண்டிவிடாதபடி கம்பிவேலி போட்டு வைத்திருப்பார்கள். 

இப்பொழுது வெங்கடாஜலபதி முக்கியமா? காரைக்குடிக்காரரின் மீன் வறுவல் முக்கியமா என்ற குழப்பம் வந்துவிட்டது. ரங்கஷங்கராவுக்கு பக்கத்தில் ஒரு ஆம்னி வேனில் நம் தமிழ் ஆட்கள்  ஃபாஸ்ட் புட் கடை நடத்துகிறார்கள். மீன் வறுவல், ஈரல், சிக்கன் கபாப் என்றெல்லாம் கிடைக்கும். கோவிலுக்குச் சென்றுவிட்டு மீன் தின்னக் கூடாது என்பார்கள். யார் சொன்னது என்றெல்லாம் தெரியாது. ஆனால் போகக் கூடாதுதானே? அதனால் இப்போதைக்கு நாக்குதான் முக்கியம் என்று பாலாஜியிடம் இன்னொரு நாளைக்கு வருவதாகச் சொல்லியாகிவிட்டது.

மீன்காரரிடம் ஒரு பீஸ் குறைந்தபட்சம் முப்பது ரூபாய். நல்ல பீஸ் என்றால் ஐம்பது ரூபாய்க்கும் கூட விற்கிறார். காஸ்ட்லிதான். ஆனால் எப்போதோ ஒரு நாள்தானே. நன்றாக இருக்கும். அந்தப் பக்கம் போனால் முயற்சி செய்து பாருங்கள்.

மீன் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் ஈரல் தின்பதில் ஒரு குழப்பம். ஆட்டு ஈரலாகத்தான் இருக்குமா என்று.

தின்பது என்று முடிவான பிறகு ஆடு என்ன மாடு என்ன? பன்றி என்ன? இந்தக் குழப்பம் மண்டைக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த போது நாமக்கல் கவிஞரின் ஞாபகம் வந்துவிட்டது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் ‘என் கதை’ நூலில் ஒரு இடம் வரும். அவரும் இப்படித்தான் - ஆடு கோழி எல்லாம் தின்னலாம் ஆனால் மாடு பாவம் என்கிற மாதிரியான மனநிலையில் இருந்தவர். அதைக் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.

அந்தக் காலத்தில் திருச்சி ஜில்லாவின் பொதுப்பணித்துறையில் எக்ஸிகியூடிவ் எஞ்சினியராக இருந்தவர் மாணிக்கம் நாய்க்கர். இவர் பெரிய படிப்பாளி. நல்ல சிந்தனையாளர். இந்த மாணிக்கம் நாய்க்கர் ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாய்க்கருக்கு ஏதோ ஒருவகையில் நெருக்கம். எந்த ராமசாமி நாய்க்கர் என்று தெரிகிறதுதானே? அவரேதான். பெரியார். இருவரும் ஒரே ஜாதிதான் என்றாலும் இருவருக்குமிடையில் சொந்தம் இல்லை. மாணிக்கம் நாய்க்கர் வேளாளர். பெரியார் கன்னட தேசத்திலிருந்து வந்த நாய்க்கர் பரம்பரை. ஆனால் இருவருக்குமிடையில் நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது.

மாணிக்கம் நாய்க்கர், ராமசாமி நாய்க்கர் மற்றும் ராமலிங்கம் பிள்ளை மூவரும் அந்தக் காலத்தில் நிறைய விவாதிப்பது உண்டாம். அநேகமாக ஆரியர்xதிராவிடர், கம்பராமாயணம், இதிகாசம் என்றெல்லாம்தான் விவாதிப்பார்கள் போலிருக்கிறது. கம்பராமாயணத்தை பற்றி பேசும் போது பெரும்பாலும் பிள்ளையும், மாணிக்கம் நாய்க்கரும் கருத்துச் சண்டை போட்டுக் கொள்வார்களாம். அப்போதெல்லாம் ராமசாமி நாய்க்கர் நடுநிலை வகிப்பாராம். 

மாணிக்கம் நாய்க்கரைப் பொறுத்தவரைக்கும் ராமாயணம் என்பதன் பெயரே ‘ராவணாயனம்’ என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்பது விருப்பம். இதை அவர் ஒன்றும் போகிற போக்கில் சொல்லவில்லை. நாய்க்கருக்கு கம்பராமாயணம் அத்துப்படி. தானே ‘ராவணாயனம்’ எழுதப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாராம். குறிப்புகள் கூட நிறைய வைத்திருந்தாராம். ஆனால் எழுதினாரா என்று தெரியாது. இதெல்லாம் 1910 வாக்கில் நடந்திருக்கும் போலிருக்கிறது. அப்படியே அவர் எழுதியிருந்தாலும் கூட இப்பொழுது காணாமல் போயிருக்கக் கூடும்.

பிற்காலத்தில் பெரியார் ‘கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் அல்லவா? அந்த எண்ணமே கூட அவருக்கு மாணிக்கம் நாய்க்கரிடம் உரையாடியதால்தான் உருவாகியிருக்கக் கூடும் என்று நாமக்கல் கவிஞர் சொல்லியிருக்கிறார். பெரியாரைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம்.

இந்த மாணிக்கம் நாய்க்கர் அரசாங்கத்தின் பெரிய உத்யோஸ்தர் அல்லவா? அந்தச் சமயத்தில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பதவியேற்பு விழா ஒன்று டெல்லி தர்பாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அந்தக் காலத்தில் திருச்சியிலிருந்து டெல்லி போவது என்றால் சுலபமான காரியமா? ராமலிங்கம் பிள்ளையையும் பேச்சுத் துணைக்கு கூட்டிக் கொண்டார்.

இவர்கள் இரண்டு பேர் போக ஒரு ப்யூன், ஒரு சமையல்காரன் இந்த நான்கு பேருக்கும் ஆறுமாதத்திற்கு தேவையான சமையல் சாமான்கள் அது போக ‘சைட் காருடன்’ ஒரு மோட்டார் சைக்கிள், குளிருக்கு தேவையான ‘சரக்கு’ பாட்டில்கள். இத்தனையும் தூக்கிப் போட்டுக் கொண்டு ரயில் ஏறியிருக்கிறார்கள். டெல்லி சென்றால் உடனே திரும்புவதில்லை. வடநாடு மொத்தமும் ஆறுமாதம் சுற்றிப் பார்க்கும் திட்டத்தோடு. அரசு அதிகாரிக்கு ஆறுமாதம் எல்லாம் விடுப்பு கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

இத்தனை ஏற்பாடு செய்தவர்கள் டெல்லியில் தங்குவதற்கான இடத்தை ஏற்பாடு செய்யாமல் விட்டுவிட்டார்களாம். ரயில் நிலையத்தில் இறங்கி நின்றால் எங்கே போவது என்று தெரியவில்லை. விடுதிகள் பெரும்பாலும் நிரம்பி வழிகின்றன. நவம்பர்/டிசம்பர் மாதக் குளிர் வேறு பின்னியெடுக்கிறது. வேறு வழியே இல்லாமல் டில்லி சாந்தினிசெளக்கில் ஒரு மாட்டுக்காரரின் வீட்டில் அசுத்தமான பத்துக்கு பத்து அறை ஒன்றை வாடகைக்கு பிடிக்கிறார்கள். வாடகை மாதம் நூற்றைம்பது ரூபாய். இது ‘சீப்’ வாடகை எல்லாம் கிடையாது. அந்தக் காலத்தில் ஒரு வாத்தியாருக்கும், அரசாங்க கிளார்க்குக்கும் சம்பளம் மாதம் பதினைந்து ரூபாய்தான். அப்படியானால் மாதம் நூற்றைம்பது என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளலாம்.

அத்தனை வாடகை கொடுத்தாலும் சமைக்க இடம் இல்லை. அதனால் கடைக்குச் சென்று வாங்கி வருவதுதான் உணவு. ஒவ்வொரு முறையும் நல்லி எலும்பு பெரியதாகவே இருந்திருக்கிறது. நான்கைந்து நாள் கழிந்த பிறகு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ராமலிங்கம் பிள்ளை ‘இந்த ஊர் ஆடுகளுக்கு எலும்பு உறுதியா இருக்கு பாருங்க’ என்றாராம். 

நாய்க்கருக்கு சிரிப்பு வந்து வாயில் இருந்த சோற்றைப் பூராவும் ‘குபீர்’ என்று துப்பிவிட்டாராம். பிள்ளைக்கு புரியவே இல்லை. ஆனால் உங்களுக்கு புரிந்திருக்குமே. அதேதான். 

அந்த ப்யூன் வாங்கி வந்தது ஒரு பாய் கடையில். பிரியாணியில் கிடந்தது மாட்டுக் கறி. இதைத்தான் நான்கைந்து நாட்களாக உச்சுக் கொட்டியபடியே தின்றிருக்கிறார்கள். நாய்க்கருக்கு அது பற்றிய பிரச்சினை இல்லை. எதுவாக இருந்தாலும் தின்றுகொள்ளும் வகையறா. ஆனால் ராமலிங்கம் பிள்ளை அப்படியில்லை. முந்தைய ஐந்து நாட்கள் தின்றதும் குமட்டிக் கொண்டு வந்திருக்கிறது. அவ்வளவுதான். அதிலிருந்தே அவருக்கு அசைவம் என்றால் வெறுப்பு வந்துவிட்டது.

இந்த ‘என் கதை’ படு சுவாரஸியமான புத்தகம். இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகக் கண்காட்சிக்கு லிஸ்ட் போடுவதாக இருந்தால் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

ரங்கஷங்கரா ஃபாஸ்புட் கடையில் ஒரு பீஸ் ஈரல் தின்பதில் உருவான குழப்பத்தில் டெல்லி வரைக்கும் போய் வந்தாகிவிட்டது. உண்மையில் அந்த ஏரியாவில் சில டிராஃபிக் போலீஸ்காரர்கள் செய்து கொண்டிருந்த அட்டகாசத்தை எழுதத்தான் நினைத்தேன். ஆனால் காற்று திசைமாறிவிட்டது. ஒன்றும் பிரச்சினையில்லை. ராமலிங்கம் பிள்ளை பற்றி பேசியாகிவிட்டது. வெண்சட்டை மாமாக்களைப் பற்றி இன்னொரு நாள் பேசுவோம்.

Dec 28, 2013

குட்டி குட்டியாக பத்து

பத்து புத்தக விமர்சனங்கள் வந்து சேராது என்று நினைத்தேன். நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன? அடுத்த சில மணிநேரங்களில் வந்து சேர்ந்துவிட்டன. அனைவருக்கும் நன்றி. ‘குட்டி குட்டியான’ ஒவ்வொரு விமர்சனத்தையும் படு வேகமாக முடித்துவிடலாம். ஒரு வரியில் கூட விமர்சனம் வந்திருக்கிறது. அனுப்பியவர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயார் செய்கிறார் போலிருக்கிறது. மனப்பூர்வமான வாழ்த்துகள் அவருக்கு. அதைவிட அட்டகாசம் திருக்குறளுக்கான விமர்சனம். அனுப்பியிருப்பவரின் பெயரை கவனியுங்கள். 

இதில் பெரும்பாலானவர்கள் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் என்பது எனது எண்ணம். இவர்கள் தொடர்ந்து எழுதி தூள் கிளப்புவார்கள் என நம்புகிறேன்.

                                                                 ***                  

1. சோளகர் தொட்டி- ச.பாலமுருகன்

ச.பாலமுருகனின் இந்த நாவலைப் பற்றி நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார். ‘வீரப்பன் தேடலில் போது நடந்தது’ என்ற அந்த ஒரு வாக்கியம் மட்டும் என் மனதில் பதிந்திருந்தது.தஞ்சையில் அவ்வப்போது ஏதாவது ஒரு புத்தக கடையில் நுழைந்து 1/2 மணி நேரம் வேடிக்கை பார்ப்பது வழக்கம் (இது ஒரு வித வியாதியா என‌ தெரியவில்லை).அப்போது தான் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது அந்த புத்தகத்தை வாங்கினேன். இரண்டு மூன்று வாரங்கள் கடந்தது. ஓர் வார இறுதி , தனிமை என இரண்டு சொர்க்கமும் சேர்ந்துக் கிடைத்தது. அப்போது தான் துவங்கினேன் சோளகர் தொட்டியை வாசிக்க...

பொதுவாக முன்னுரை வாசிப்பது எனக்கு விருப்பமில்லாத ஒன்று, ஆதலால் நேராக நாவலில் குதித்துவிட்டேன். நாவலை இரண்டு பகுதியாக பிரிக்கலாம்.

முதல் பகுதி :

சோளகர் தொட்டி மக்களின் வாழ்வியல் முறை, அவர்களின் வழிபாடு, விவசாயம், கொண்டாட்டங்கள் என நகரும்.துவக்கத்தில் கும்கி படம் பார்ப்பது போல இருந்தது. நாவலின் கதாப்பாத்திரங்கள் நம் மனதிற்கு பதிந்து விடும். கண‌வனின் மர‌ணத்திற்கு பிறகு கொழுந்தனை திருமணம் செய்வது என சின்னச் சின்ன சம்பிரதாய முறைகளும், மக்களின் கஞ்சா பழக்கத்தை பற்றின தகவல்களும் கதையோடு நகரும். அரசின் சட்டத்திட்டங்கள் அறியாது நிலத்தை பறிக்கொடுத்து தவிக்கும் அவர்களின் நிலைமை சற்றே நம்மை வேதனையின் நுழைவாயில் வரை எடுத்துச் சென்று அடுத்த பகுதியில் வேதனையில் முழுமையாக தள்ளிவிடும்.

இரண்டாம் பகுதி:

நரகம் என்றதும் நமது கற்பனை எவ்வளவு தூரம் செல்ல நேரிடுமோ அதை விட பல மடங்கு கடந்து நிற்கிறது சோளகர் தொட்டி மக்களின் நிலைமை. தமிழகம், கர்நாடகம் என பாகுபாடு இல்லாது கொடுமைகள் அந்தந்த மாநில அதிகாரிகள் (வீரப்பன் தேடலின் போது ஈடுப்பட்ட சில அதிகாரிகள்) மூலம் அங்கு அரங்கேறியுள்ளது. நாம் சித்திரிக்கும் ராட்சகர்கள் நம்மிடையே வாழ்ந்தவர்கள் என்பதை நாவல் ‘பளார்’ ‘பளார்’  என முகத்தில் அறைந்தார் போல் சொல்லிக் கொண்டே நகர்கிறது.

நாவல் கொடுமையின் உச்சத்தை நம்மிடையே நகர்த்திச் செல்லும் போது, தொடர்ந்து படிக்க முடியாமல் மனம் தள்ளாடும். கரண்ட் அறை (சரியாக நினைவில் இல்லை) என ஒர் அறை இருக்கும். அங்கு மக்களை நிர்வாணமாக  தொங்க விட்டு உடம்பில் மின்சாரம் பாய்ச்சி விசாரனை என்ற பேரில் நரக்த்தினை வடிவமைத்த பெருமை அந்த அதிகாரிக்களுக்கே சேரும்.இதில் ஆண்,பெண் பேதமில்லை. மாதவிடாய், கர்ப்பம்  என பாகுபாடு இல்லை. கண்கள் மூடி சிறிது நேரம் அமரும் போதெல்லாம் அந்த கோரக் காட்சிகள் நம் முன் வந்து நம்மை ரணமாய் வதைத்துச் செல்லும்.

இந்த நாவலின் பாதிப்பு கண்டிப்பாக சிறிது நாட்களுக்கு நம்மை விட்டு பிரிந்துச் செல்லாது. தமிழர்கள் என அடிக்கடி மார் தட்டிக்கொள்ளும் நாம், தமிழனின் கருப்பு சரித்திரத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

தனிமை, வார இறுதி இந்த இரண்டு சொர்க்கமும் சோளகர் தொட்டியின் நரக‌ வேதனையை என் கண்முன்னே காட்டியது. சென்ற வருடம் நான் படித்த சிறந்த புத்தகம் மற்றும் என்னை மிகவும் பாதித்த புத்தகம் எனில் இதைத் தான் சொல்வேன்.

-பிரபு ராஜேந்திரன், பெங்களூர்

ஆன்லைனில் வாங்க: சோளகர் தொட்டி

                                                                     ***

2. ராஸ லீலா- சாரு நிவேதிதா

தபால்துறையில் பணியாற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையைப் பற்றி சாரு நிவேதிதாவின் ராஸ லீலா பேசுகிறது. அதுவும் தனக்கேயுரிய தனித்த மொழியில்/நடையில். படைப்பாளியின் hypocrisy பற்றி யார் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். ஆனால் இந்த நாவலில் செய்திருப்பது போல பல வழமைகளை உடைத்து நொறுக்கிய படைப்பாளி நிச்சயம் கொண்டாடப்பட வேண்டும்.

ராஸலீலாவில், பெருமாள் என்ற நாவலின் முக்கிய கதாபாத்திரத்தோடு நம்மை ஒன்றச் செய்துவிடுகிறார் சாரு நிவேதிதா. அந்த கதாபாத்திரத்தோடு வாசகனால் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பயணிக்க முடிகிறது. போர்னோவிற்கும் இலக்கியத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டில் ராஸலீலா பயணிக்கிறது- பாரம்பரியமான தமிழ் இலக்கியத்தின் போக்கோடு ஒப்பிடும் போது இது நிச்சயம் கடினமானது. அதைச் சாரு எளிதாகச் செய்திருக்கிறார்.

தமிழ் இலக்கியத்தில் வழங்கிவரும் தொன்மங்களை உடைப்பதற்காகவே இந்த நாவல் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த நாவல் ஒரு கணம் கூட நம்மை சலிப்படையச் செய்வதில்லை. அதுதான் சாரு. தான் எதை எழுதினாலும் வாசகனை தனது எழுத்தின் வழியாக இறுகப்பற்றிக் கொள்கிறார்.

அதனால் ராஸலீலாவை தமிழ் இலக்கியத்தின் முக்கியமான புத்தகமாகக் கருதுகிறேன் - வழமைகளை உடைத்ததற்காகவும், சாருவின் ஈர்ப்பான எழுத்து நடைக்காகவும்.

- கணேஷ், BSNL, சென்னை

ஆன்லைனில் வாங்க: ராஸ லீலா
                                                                       ***

3. திருக்குறள்- திருவள்ளுவர்

பேரன்பு மிக்க வாசக சமூகமே(இதை நீர் மட்டும் படிப்பீர் என்றால், 'அன்பின் வா ம’ எனப் படித்து இன்புறுக),

இந்தப் புத்தகக் கண்காட்சியில் வரும் புத்தகங்களை விமர்சனம் செய்ய நாவைத் தொங்கப்போட்டவாறு உக்காந்திருந்த என்னை, மணி'யின் பதிவு இந்த விமர்சனத்தை எழுதத்தூண்டியது.

நேரே விமர்சனத்துக்குப் போய்விடலாம்.

விமர்சனம் எழுதுவது எப்படி எனப் புத்தகங்கள் வரும் இன்றைய காலகட்டத்தில், நானும் எங்க அப்பாரும் ஏன் அவரு கொள்ளுத்தாத்தா அவரோட எள்ளுத்தாத்தா....நிற்க.

அதாகப்பட்டது, வெகு காலத்துக்கு முந்தியே "அறம், பொருள், இன்பம்(காமம்)" இவற்றைப் பற்றிப் பேசிவிட்டுப் போயிச் சேர்ந்துவிட்டார், வள்ளுவனாகிய திருவள்ளுவர்.

வழமைபோல், முதலில் அட்டைப்படத்தைப் பற்றிய விமரிசனம்.

இஞ்சிப்புளி இடிக்க வைத்திருக்கும் மத்துப்போல் ஒன்றைக் கையில் வைத்தவாரு தாடி வைத்த பெரியவர் ஒருவர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பேனா, அப்பொழுதெல்லாம் மத்து போல இருந்திருக்கும். பத்மாசனா (ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்ல) நிலையில் அமர்ந்த அந்தப் பெரியவருக்கு, திரிச்சலாக ஒரு கொண்டை இருந்தது. இன்றுவரை தமிழ்ச்சமூகம் இப்படியான ஒரு உருவத்தைத்தான் திருவள்ளுவராக சுவீகரித்துக்கொண்டுள்ளது. பின்னணியில், சிவப்பு வர்ணம்- போயித் தொலையுது. முன்னட்டை, பின்னட்டை விமர்சனங்களை மிலன் செய்துகொள்ளட்டும்.

நாம் நேரே விஷயத்துக்குள் செல்வோம்.

'அ' என்ற எழுத்தில் ஆரம்பித்திருந்தது அந்தச் செய்யுள் அல்லது புரதானகவி. ஆகச் சரியாய் ஏழே வார்த்தைகள். முடிந்துவிட்டது. ட்வீட்டுகள் தாங்கிய சமகால ட்வீட்தரின் புத்தகம்தான் படிக்கிறோமோ என்ற  எண்ணம் எழாமலில்லை. தொலைகிறது விடுங்கள்.

அறத்துப்பால் முழுவதும் படித்தவுடன், ஒரு தீவிர அமைதி ஆட்கொண்டுவிட்டது.

அதிலும் அடக்கம், புகழ் என சகலத்தையும் கலந்துகட்டி எழுதியிருக்கிறார் எழுத்தாளர். அவருக்கு எனது வாழ்த்துக்கள். 

                             "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
                              ஆரிருள் உய்த்து விடும்" - 

என்ற இந்தக் கவிதையில், அடங்குடா என்பதை எளிமையாக எடுத்துக் கூறியுள்ளார்.

பொருட்பாலில் அரசியல், கல்வி எனவும் காமத்துப்பாலில் புணர்ச்சி, உவகை என வாழ்வியலை ரவுண்டு கட்டி எழுதியிருக்கிறார். நவீனத்துவ நடையிலில்லாமல் அதிரப்பழசான, மொக்கையான நடையில் நகர்கிறது இப்புத்தகம்.

நிறையப் பதிப்பகங்களில் இந்தப் புத்தகம் வெவ்வேறு விலையில் வெளிவந்துள்ளது. இது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை நண்பர்கள் வாயிலாக அறிந்தேன். 

நல்லது.

இறுதியாக, இதை வாங்கலாமா, வேண்டாமா எனக் கேட்டால் என் பதில், "ஒவ்வொருவரும் படித்து உய்வுற வேண்டிய புத்தகமிது" என்பேன்.

- வெ.

(இலக்கியச் செம்மல் வெளங்காதவன் என்ற என்பெயரின் ஷார்ட் ஃபார்ம்தான் ‘வெ’ என்பதை அறிக).


                                                             ***

4. Spectrum's A Brief History of Modern India.

இந்தப் புத்தகம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வெவ்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியிருக்கிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆகுபவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் பயன்படும்.

- காளிரத்னம், Civil Service Aspirant
                                       
                                                             ***

5. Papillon - Henri Charrière

                                                   A Real Hero

                       “எவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் மீண்டும்
                         அங்குலம், அங்குலமாக மேலே ஏறுவேன்......
                         என்னிடம் உள்ள கடைசி துருப்பு சீட்டு உள்ளவரை
                         ஆடிப் பார்க்காமல் ஓயமாட்டேன் ”
      
ஒரு புத்தகத்தை பற்றி எழுதவேண்டும் என்ற உடன் என் நினைவு அடுக்கில் எப்போதும் ஊறிக்கொண்டு இருக்கும் இந்த வரிகள் தான் முதலில் வந்து விழுந்தது .

குமுதம், ஆ.வி, ராணி போன்ற வார இதழ்களை தவிர  வேறு புத்தகத்திற்கு வழி இல்லாத, தண்ணீர், தண்ணீர் கிராமத்தில் வாழ்ந்த எனக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகிய வரிகள் இவை. .

சரி இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் யார் என்று தானே கேட்கிறீர்கள்? நீங்கள் நினைப்பது சரிதான் ....அவர் தான் ஹென்றி ஹாரியர்.

40வருடங்களுக்கு முன்பு 'பட்டாம் பூச்சி' (ஆங்கிலத்தில் PAPILLION) என்ற பெயரில்  குமுதத்தில் ரா.கி.ர.வால் மொழி பெயர்ப்பு செய்து தொடராக வெளி வந்து பின் உலகம் முழுதும் பல மொழிகளிலும் புத்தககளாகவும், திரைபடமாகவும் வந்து எல்லோராலும் பேசப்பட்ட ஒரு இளைஞனின் அடங்காத சுதந்திர வேட்கையை சொல்லும் சுய சரிதை இது.

இருபது வயது இளைஞன் ஒருவன் செய்யாத குற்றத்திற்கு ஆயுள் தண்டனை கைதியாக சிறைக்கு செல்கிறான். சிறைக்கு சென்ற முதல் நாளில் இருந்தே தப்பிக்க திட்டமிடுகிறான் .

அங்கேயே ஆரம்பித்து விட்டது எனக்கும் அந்த தொடருக்குமான ஓட்டம். 40 வருடங்களாக தப்பிப்பதும் பின் பிடிபட்டு சிறையில் அடைக்கப் படுவதும் என்று போலீசுக்கும் அவனுக்கும் நடக்கும் கண்ணாமூச்சிதான் இந்த புத்தகத்தின் அடி நாதம்.

படித்து இத்தனை வருடங்கள் ஆனாலும் அவனுடைய காதலி சுரைமா, பிரென்ச் கயானாவின் இயற்கை அழகு, சிறை பாதுகாப்பு ஏற்பாடுகள், அதில் இருந்து அவன் தப்பிக்கச் செய்யும் முயற்சிகள் என யாவும என்னுள்ளே பசுமையாக உள்ளது. ஒவ்வொரு முறை அவன் தப்பிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, போலீசிடம் மீண்டும் மாட்டிக்கொள்ளும் போது ஏற்படும் வருத்தம் என்று தொடர் முழுதும் என்னை முழுவதுமாக உள் வாங்கி கொண்டது என்றே சொல்லலாம்.

இன்று தன்னம்பிக்கை நூல்கள் என்ற பெயரில் வெளி வரும் நூல்கள் பணம் பண்ணுவதற்கு ஒரு உத்தியாகிவிட்டது. என்னை பொருத்தவரை இன்றய இளைஞர்கள் இந்த புத்தகத்தை ஒரு முறை படித்தால் மிக பெரிய உந்துசக்தியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

இந்த புத்தகத்தின் உயிரோட்டமே ரா.கி.ரங்கராஜன் அவர்களின் மொழி பெயர்ப்பில் தான் உள்ளது என்பேன். என்னே ஒரு மொழி ஆளுமை!  ‘தமிழில்: ரா .கி .ரங்கராஜன்’ என்று மட்டும் குறிப்பிடப்படாமல் இருந்தால் சத்தியம் செய்தால் கூட யாரும் இதை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்ல மாட்டார்கள். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது .

- வ .பழனி 

ஆன்லைனில் வாங்க: பட்டாம்பூச்சி
                                           
                         ********

6. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

நான் கல்லூரி சேர்ந்த முதல் வருடம் முதன் முதலாக எனக்கு (அந்த நாவலாசிரியருக்கும் அதுதான் முதல் நாவல்) ஆங்கில நாவல் ஒன்றின் அறிமுகம் கிடைத்தது. அதுவரை பாட புத்தகத்திலிருந்த ஆங்கிலத்தைத் தவிர அதிகமாக ஒரு வரி கூட அறிந்திடாதவன் நான். ஆனால் என்னாலும் கிரகித்துக் கொள்ள இயலும் வகையில் எளிய வரிகளில் புலிப்பாய்ச்சலான ஒரு நடையில் அற்புதமான ஒரு நாவல் அது அன்றைய தேதிக்கு. ஆனால் அதே எழுத்தாளரின் மிக சமீபத்திய நாவலை என்னால் அதிகபட்சமாக அரைப் புத்தகம் கூட படிக்க இயலாமல் அலமாரியில் அது உறங்குவது வேறு கதை.

இருவருக்கும் முதலான அந்த நாவல் எனக்குப் பிடித்துப் போனதுக்குக் காரணம் அதன் எளிமையும், விறுவிறுப்பும் மட்டுமல்ல, அது எழுதப்பட்ட தளமும் கூடவே. அந்த நாவலும் என்னைப் போன்று முதலாமாண்டு பொறியியல் அதுவும் "மெக்கானிக்கல் இஞ்சினியரிங்" படிக்கும் மாணவர்களைப் பற்றிய கதை என்பதே உண்மையில் என்னை படிக்கத்தூண்டிய முழுமுதற்காரணமாகும். உங்கள் யூகம் மிகச்சரியே. த்ரீ இடியட்சாக இந்தியிலும், நண்பனாகத் தமிழிலும் உருமாற்றமடைந்த ‘ஃபைப் பாய்ண்ட் சம் ஒன்’ என்ற சேத்தன் பகத்தின் நாவலே அது. 

அந்த நாவலை ஏன் இங்கு "என் பெயர் ராமசேஷன்" என்ற எண்பதுகளில் வெளிவந்த ஒரு நாவலுடன் ஒப்பிடுகிறேன் என்பதற்கு இந்த இரு நாவல்கள் எழுதப்பட்ட தளம் ஒன்றே என்பது மட்டுமல்ல காரணம். இக்கதை சாதாரண, சுஜாதாவின் வார்த்தையில் சொல்லப்போனால் ஒரு மத்தியமர் பிராமணக் குடும்பத்திலிருந்து வந்த கல்லூரி மாணவனின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது.

நடிகனோ, சாதரணனோ, அரசியல்வாதியோ, அறிவாளியோ, அழகனோ, அவன் ஆறோ அல்லது அறுபதோ எல்லோரும் விரும்புவது அடுத்தவர்களின் அங்கீகாரத்தை மட்டுமே. நடிகனுக்கு கைத்தட்டு, அரசியல்வாதிக்கு ஓட்டு, அறிவாளிக்கு பாராட்டு என்று ஒவ்வொருவருக்கும் ஒருவிதம் ஆனால் யாரும் இதில் விதிவிலக்கல்ல. ஹார்மோன்கள் கபடியாடும் வயதில் இந்த அங்கீகாரத்தை நோக்கியே நம் எண்ணம், சொல் மற்றும் செயல் அமைவதிலேதும் ஆச்சர்யமில்லை. அதிலும் எதிர்பாலரின் அங்கீகாரம் என்றால் இன்னும் உசத்தியே. அப்படியான  அங்கீகாரத்திற்காக ஏங்கும் ராமசேஷனைச் சுற்றிப் பின்னப்பட்ட நாவலே “என் பெயர் ராமசேஷன்”. ஆதவனின் எழுத்து நடைக்காகவே கட்டாயமாக வாசிக்க வேண்டிய ஒரு நாவல் இது.

- கார்த்திக் பாலசுப்ரமணியன்.

ஆன்லைனில் வாங்க: என் பெயர் ராமசேஷன்

                                                         ***

7. இது யாருடைய வகுப்பறை - ஆயிஷா நடராசன்

ஒரு வரியில் : இந்திய கல்வி முறையின் வரலாறு, தற்போதைய நிலைமை, மற்றும் உலக கல்விமுறைகள் பற்றிய ஒரு அலசல்

‘ஆயிஷா’ புத்தகம் வாசித்து இருக்கறீர்களா? 16 பக்கங்கள் இருக்கும் அவ்வளவு தான். ஆனால் என் வாழ்வில் தீராத பாதிப்பை ஏற்படுத்திய புத்தகங்களுள் அதுவும் ஒன்று. கிட்டதட்ட ஒரு வார காலம் தூங்காமல் இருந்திருக்கிறேன் அந்த புத்தகத்தை படித்து விட்டு. என்னடா ஒவர் பில்டப் கொடுக்கிறானே என்று எண்ணி விடாதீர்கள். வாங்கிப் படியுங்கள். சரி விமர்சனம் சொல்ல வந்த புத்தகம் இது அல்ல என்று யோசிக்கிறீர்கள் தானே. அந்த ஆயிஷா புத்தகத்தை எழுதிய ஆசிரியரின் புத்தகம்தான் இதுவும். மேலும் இந்த புத்தகம் பற்றிய விவாதத்திற்கு சென்னையில் உள்ள பனுவல் புத்தக கடைக்கு இதன் ஆசிரியர் வருவதாக சொல்லி இருந்தார்கள். விடுவோமா? மாச கடைசி ஆனாலும் கடன் வாங்கி புத்தகம் வாங்கியாயிற்று.

மொத்தம் 7 கட்டுரைகள் இந்த புத்தகத்தில். இந்திய கல்வி முறையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விளக்கி இருக்கிறார் ஆசிரியர். எதற்கெடுத்தாலும் வெள்ளைக்காரனை மெச்சிக் கொள்ளும் நாம், இந்திய கல்வியில் அவன் செய்த மோசமான மாற்றங்களின் பலன்களை இன்றளவும் அனுபவித்து வருகிறோம். பிரிட்டிஷ்காரர்களுக்கு தேவைப்பட்டது யோசிக்கும் திறனுடைய இந்தியன் அல்ல. சொன்னதை செய்யும் ஒரு எழுத்தர் (கிளார்க்). அதன் தொடர்ச்சி தான் இன்றைய எழுத்து தேர்வு என்கிறார் ஆசிரியர்.

பாடப்புத்தகத்தில் அச்சான நகராத சொற்களை அப்படியே மனப்பாடம் செய்து நகல் உருவாக விடைத்தாளில் கொட்டித் தீர்ப்பது தேர்வு என்று அழைக்கப்படும் கொடுமை வேறு எந்த தேசத்திலும் கிடையாது என்கிறார் ஆசிரியர். எவ்வளவு உண்மை? ஆசிரியர் வெறும் பாடம் நடத்தும் இயந்திரம் மட்டும் அல்ல. அவருக்கு மாணவர் உளவியலும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைக்கு நமது வகுப்பறை மாணவர்கள் வெறும் கொத்தடிமைகள் போலத்தானே நடத்தப்படுகின்றனர். காலையில் 9 மணிக்கு வந்தால் சாயந்திரம் 5 மணி வரை பேசாமல் கைகட்டி வாய் பொத்தி... இதற்கு பெயர் கல்வி இல்லை என்கிறார் நடராசன்.

சரி, அப்போ எது தான் கல்வி எனும் உங்கள் கேள்விக்கு விடையையும் அவரே தந்துள்ளார். உலகின் மிகச்சிறந்த கல்விமுறை அமெரிக்காவில் அல்ல. குட்டியூண்டு நாடுகளான பின்லாந்திலும் கியூபாவிலும் தான் உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் இன்றைக்கு அந்த நாடுகளுக்கு படை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாமோ... சரி விடுங்க.

கல்வி பற்றிய அக்கறை உள்ளவர்கள், மாற்று வழி கல்வியை ஆதரிப்பவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். குறிப்பாக, அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.( புத்தகத்தின் ஆசிரியர், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பதை கவனத்தில் கொள்க). இனிமேல் ஆசிரியர் பணியில் இருக்கும் எவருக்கேனும் பரிசளிக்க ஆசைப்பட்டால் கண்ணை மூடிக்கொண்டு இந்த புத்தகத்தை கொடுக்கலாம்.

பின்குறிப்பு : பனுவலில் நடந்த விவாதத்தில் நானும் பங்கேற்று, ஆசிரியரிடம் ஒரு புத்தகத்தில் கையெழுத்து (ஆட்டோகிராஃப்) வாங்கி வந்தேன். இவரைப் போல வெகு சிலர் இருக்கும் வரை, இந்தியக் கல்வி ஐ.சி.யூ விலாவது உயிர் வாழும்

-ரா.சு.சிவா

ஆன்லைனில் வாங்க: இது யாருடைய வகுப்பறை

                                                                ****

8. வாடிவாசல்- சி.சு.செல்லப்பா

சாமானியர்களின் கதை இது. சி.சு.செல்லப்பாவின் எழுத்து நடை மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று. மாடு பிடிப்பதன் அம்சங்களை அருமையாக உணரவைத்துள்ளார். ‘ஆடுகளம்’ படத்தின் சேவல் சண்டைக்கான தயாராதல் இதைப் போன்றதொரு உதாரணம். நாவலின் க்ளைமேக்ஸ் வர்ணனைகள் அட்டகாசம். இந்த நாவலை வாசிப்பவர்களுக்கு இது நிச்சயமாக சுகானுபவமாக இருக்கும்.

-சத்தியமூர்த்தி

ஆன்லைனில் வாங்க: வாடிவாசல்
                                                                ****

9. சித்திரப்பாவை - அகிலன்

சித்திரப்பாவை 1975யில் வெளி வந்த நூல். இதை சுமார் நான்கு மாதத்திற்க்கு முன்பாக வாசித்தேன். நான் நீண்ட காலமாக புத்தகங்கள் வாசிப்பவன் அல்ல. கடந்த எட்டு மாதங்களாகத்தான் வாசிக்கிறேன். இந்த பசிக்குக் காரணம் பொன்னியின் செல்வன். அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன், இப்போது பாவைப் பக்கத்தில் பார்வையைத் திருப்புவோம்.

சித்திர பாவை ஒரு கொத்தனார் தன் மகனை பொறியாளராக்க ஆசைப்படுகிறார், ஆனால் அவன் ஓவியனாகிறான். ஒவியனாகும் போதும் ஒவியனான பிறகும் அவன் படும் துன்பங்களும், மனிதர்களின் மனமற்ற செயல்கள் , பணத்திற்க்காக பிணம் போல் அலையும் மனிதர்களின் நட்பு, காதலிக்காக (காலுக்காக) ஏங்கும் மனம் ஆகியவற்றை அழகாக வரைந்திருக்கிறார் அகிலன். இந்த புத்தகத்தில் பல நிகழ்வுகள் நமது வாழ்க்கையில் நடந்து போலவே இருக்கும். உதரணமாக ஆடம்பரத்தை விரும்பும் துனைவி, காசை வாங்கி விட்டு ஏமாற்றியதால் இறந்த தந்தை, நண்பனின் காதலைப் பிரிப்பது. இந்த புத்தகத்தின் சிறப்பே எளிமை. இந்தப் புத்தகத்தை பத்து வயது சிறுவனே படிப்பான், அவ்வளவு எளிமை. ஒரு வரியில் சொன்னால் 'பணம் பிடியில் மனிதன் போடும் வேடத்தை வரைந்துக் காட்டிய ஒவியம்'.

இந்த புத்தகத்தில் வரும் மனிதர்கள் அப்படி இப்படி என்றெல்லாம் எழுத விருப்பமில்லை. ஆனால் இது சாதாரண மனிதனின் சரித்திரம்.

-கிரேஸ்குமார்

ஆன்லைனில் வாங்க: சித்திரப்பாவை

                                                               ***

10. கோபல்ல கிராமம்- கி.ராஜநாராயணன்

நான் இந்த புத்தகத்தை சமீபத்தில் படித்தற்கு காரணம் இலக்கிய தாகம்னு எல்லாம் ஜல்லியடிக்க விரும்பல.இரண்டு வாரங்களுக்கு முன்னர் தூத்துக்குடிக்கு வேறு ஒரு வேலையாக நானும் அப்பாவும் சென்ற பொழுது இடைச்செவலுக்கு ஒரு சின்ன விசிட் செய்தோம். பின்னர் அது சம்பந்தமான யோசனையிலே அடுத்தடுத்த வாரங்களை கடத்துகையில் எதேச்சையாக  ஏன் இந்த புத்தகத்தை படிக்காமல் விட்டோம் என்று தோன்றியது. அப்போது எடுத்ததுதான் ஒரே சிட்டிங்கில் படித்து முடித்ததும் தான் தெரிந்தது இந்த புத்தகத்தை மிஸ் செய்த அருமை. இனி புத்தகத்தினுள் செல்வோம். 

கோபல்ல கிராமம்...கோ என்றால் மாடு.பல்லம் என்றால் இடம். மாடுகள் அதிகமாக இருக்கும் இடமாதலால் கோபல்ல கிராமம் என பெயர் பெற்றதாக அறிமுகப்படுத்துகிறார். தற்போது இதைவிட நவீனமான கதை சொல்லும் உத்திகளை வாத்தியார் சுஜாதா அறிமுகப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார் என்ற போதிலும் ஒரு பழைய கிளாசிக் படத்தை பார்த்த உணர்வு.எந்த இடத்திலும் போரடிக்காமல் செல்கிறது. காலச்சுவடு சரியாகவே ‘க்ளாஸிக்’வரிசையில் சரியாகவே வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 

மங்கத்தாயாரு பாட்டியின் கழுக்குப்பார்வையில் இருந்து கதை நகர்வதாக எனக்கு தோன்றுகிறது. மற்றபடி கதையின் நாயகனாக யாரையும் சொல்வதற்கில்லை. அந்த கிராமத்தையும் அதன் மாந்தர்களையும் அறிமுகப்படுத்துகிறார்.. அறிமுகப்படுத்துகிறார்.. அறிமுகப்படுத்திக்கொண்டே இறுதி வரையிலும் செல்கிறார். ஒவ்வொரு நாயக்கர்களின் கதையுமே சுவாரஸ்யமானது. ஆரம்ப பத்திகளில் அந்த பெண்மணியை அறிமுகப்படுத்துவதும் பின்னர் அதை விட்டுவிட்டு கதை எங்கோ செல்கிறது. பின்னர் புத்தகம் பாதியை கடக்கையில் அந்த கேஸ் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது. கிராமங்களை விவரிப்பதில் மனுஷன் தூள் கிளப்புகிறார். அந்த மண்ணை விவரிப்பதிலும் அந்த மக்கள் அந்த மண்ணோடு உடலோடும் உயிரோடும் கலந்து அவர்கள் வம்சம் பெருகியதும் சிறப்பான கதை சொல்லியாக அவரை நிலைநிறுத்தும் இடங்கள். சென்னா தேவி கதை நமக்குள் அவளை கண்முன் நிறுத்துகிறது. சில நாயக்கர்கள் நம் வாழ்விலும் கலந்து விட்டது போன்ற உணர்வு. நம்மை பிரதிபலிப்பது போன்ற ஒரு உணர்வும் கூட. கோழி மயிர் நாயக்கர், ராம நாம நாயக்கர் போன்றோரை நாம் வாழ்வில் வெவ்வேறு பெயர்களில் நாம் சந்திக்காமல் இருக்க முடியாது. நாம் எதிரே ஒரு கிழவர் அமர்ந்து கொண்டு பேராண்டி... என்றவாறே கதை சொல்வதை கேட்கும் உணர்வு.

புகழ்ச்சி அத்தியாயம் முடிந்தது. இனி விமர்சனம். 

விமர்சனம் என்று பார்த்தால் சில ஃபேண்டஸி பகுதிகள் உறுத்துகின்றன மரம் இறங்கி வழிவிடுதல் போன்றவை. பின்னர் கிராமத்தில் நாயக்கர்கள் தான் ஆதிக்க சாதி என்பதும் இவர்கள் சொல்வதே சட்டம் நியாயம் என்பதும் சில பத்திகளிலேயே தெரிந்து விடுகிறது. அங்கே இரண்டு பெண்களை கல்யாணம் செய்தல், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை மிக எளிதாக கடந்து செல்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டாமை கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அப்பட்டமான உண்மையை ஜஸ்ட் லைக் தட் சொல்கிறார். அதை பற்றிய விவரிப்புகள் அவர்கள் பக்க நியாயங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. மொத்தத்தில் கோபல்ல கிராமம் ஆதிக்க சாதியில் இருந்து ஒருவர் தயார் செய்த மிகைப்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட டாக்குமெண்டரி.

எனக்கு பிடித்த பகுதி:கும்பினிகள் சுமை தூக்க சொல்வதை தவிர்க்க கையில் ஈரக்கருப்பட்டியை கட்டிக்கொண்டு ஏமாற்றும் மக்களின் எதார்த்தமான தந்திரம். 

- திலீபன்.

ஆன்லைனில் வாங்க: கோபல்ல கிராமம்

Dec 27, 2013

இதை போட்டி என்றெல்லாம் சொல்ல முடியாது.

சரவணபாபு அபுதாபியில் இருக்கிறார். நேரில் பார்த்தது இல்லை. அவ்வப்போது தொடர்பு கொண்டு ‘இன்னைக்கு எழுதியிருந்தது நல்லா இருந்துச்சு’ என்பார். பிறகு காணாமல் போய்விடுவார். அப்புறம் மீண்டும் எப்பொழுது வருவார் என்று தெரியாது. வெகுநாள் கழித்து இன்று திடீரென்று பிரஸன்னமானவர் ‘பத்து புஸ்தகத்துக்கு நான் ஆர்டர் செய்யறேன். ஆனால் நீங்க யாருக்கு வேணும்ன்னா கொடுத்துக்குங்க’ என்றார். அவர் ‘ஆர்டர் செய்கிறேன்’ என்று சொன்ன புத்தகம் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் தான். கடந்த ஓரிரண்டு தினங்களாக இப்படி திடீர் திடீரென்று ‘சொக்கா சொக்கா’ என்று என்னை உற்சாகமடைய வைத்துவிடுகிறார்கள். உற்சாகம் இருக்கட்டும். பத்துப் பேரை எப்படித் தேர்ந்தெடுப்பது?

‘போட்டி, அது, இது’ என்றால் டூ மச்சாகத் தெரியும். நாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லையென்பதால் அதற்கு அவசியமும் இல்லை. அதனால் போட்டி எல்லாம் எதுவும் இல்லை. ஏதாவதொரு புத்தகத்துக்கு விமர்சனம் எழுதி அனுப்பச் சொல்லலாம் என்று தோன்றியது. அந்த விமர்சனம் எந்தப் புத்தகம் குறித்து வேண்டுமானாலும் இருக்கலாம். விமர்சனம் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த நிபந்தனையும் கிடையாது. புதியதாக இருக்க வேண்டும். அது மட்டும்தான் நிபந்தனை. முதலில் வரும் பத்து விமர்சனங்களுக்கு இந்தப் பிரதிகளை தலா ஒன்றாக அனுப்பிவிடலாம். 

சிம்பிள். 

பத்துக்கு மேலான விமர்சனங்கள் வந்தால்? தெரியவில்லை. லிண்ட்சே லோஹனுக்கும் மாரியப்பனுக்கும்தான் வெளிச்சம்.

எதற்கு இந்த விமர்சனம் எல்லாம்? வெறும் அட்ரஸை அனுப்பச் சொல்லி முதலில் வரும் பத்து இமெயில்காரர்களுக்கு அனுப்பிவிட வேண்டியதுதானே என்று கூடத் தோன்றியது. ஆனால் அது புத்தகத்துக்கும் மரியாதை இல்லை; வாங்குபவர்களுக்கும் மரியாதை இல்லை. புத்தகத்தோடு ஏதோவிதத்தில் சம்பந்தமுடையவர்களுக்கு அனுப்பி வைப்பதுதான் சரி. அதனால்தான் மண்டைக்குள் இந்த ஐடியா பல்பாக எரிந்தது. 

பத்துப் பிரதிகளுக்கான பணத்தை டிஸ்கவரி புக் பேலஸுக்கு சரவணபாபு இன்னும் ஓரிரு நாளில் மாற்றிவிடுவார். பத்து முகவரிகளை நான் டிஸ்கவரிக்கு அனுப்பி வைத்தவுடன் அவர்கள் புத்தகங்களை அனுப்பி வைத்துவிடுவார்கள். 

‘வெளிநாட்டு முகவரிகளாக இருந்தாலும் பரவாயில்லையா?’ என்று கேட்டால் டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பன் கதறுகிறார். 

‘அதுக்கு செலவு எக்கச்சக்கமாக ஆகும்ங்க’ என்பது அவரது கதறலுக்குக் காரணம். அவரது எரிச்சலும் சாபமும் மிகுந்த வீரியம் மிக்கது- என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் இந்தியாவுக்குள்ளான முகவரிகளை மட்டும்தான் அவரிடம் கொடுக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் உள்ளூர் முகவரியைக் கொடுங்கள். ப்ளீஸ்.

‘இவ்வளவு ரிஸ்க் எடுத்து எல்லாம் உன் புஸ்தகத்தை படிக்க முடியாது’ என்று டென்ஷனாக வேண்டாம். உங்களுக்கு ஆகாத நண்பர்கள் யாராவது ஒருவரின் முகவரியைக் கொடுத்துவிடுங்கள். அனுப்பி வைத்துவிடலாம். தண்டனை கொடுத்த மாதிரி இருக்கட்டும்.

எதனால் ‘உங்களுக்கு பத்து புக் ஐடியா வந்தது?’ என்று சரவணபாபுவிடம் கேட்டேன்.

அவர் சொன்ன பதிலை வெளியே சொல்லி அசிங்கப்பட முடியாது என்பதால் சென்சார் செய்தாகிவிட்டது.

ஆனால் ஒன்று, ஜெகதீசன், சரவணபாபு போன்றவர்கள் ஏதோ ஒருவிதத்தில் உற்சாகமூட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த எனர்ஜியிலேயே இன்னும் பல வருடங்களுக்கு எழுதலாம். இந்த ஜெகதீசன்தான் முதல் பிரதிக்கு ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பி வைத்து என்னை ரெளடி என்று ஃபார்முக்கு வரச் செய்தவர். இப்பொழுது சரவணபாபு கையில் ஒரு சோடாபாட்டிலையும் கொடுத்திருக்கிறார். இனி சுழற்றிக் கொண்டே கொஞ்ச நாட்களுக்குத் திரிய வேண்டியதுதான். யாராவது சாணத்தை எடுத்து வீசுவார்கள். அப்பொழுது யாரும் பார்க்கவில்லை என்றால் துடைத்துக் கொண்டு சவுண்ட் விடலாம். யாராவது பார்த்துவிட்டால் அமைதியாகிவிடலாம். இப்போதைக்கு இந்த திட்டத்தோடுதான் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

மின்னஞ்சல்: vaamanikandan@gmail.com

புலித்தடம் தேடிச் சென்றவனுக்கு...

ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்திருக்கிறது. அவரை அனேகமாக நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கக் கூடும். தெரியவில்லை என்றாலும் பெரிய பிரச்சினை இல்லை- அவர் 1991 இல்தான் பிறந்திருக்கிறார். இருப்பத்தியிரண்டு வயது முடிந்திருக்கிறது. பொடியன் தான். ஆனால் அதற்குள் ஏகப்பட்டது எழுதியிருக்கிறார். பெரும்பாலும் ஈழத்தமிழர்களுக்கான கட்டுரைகள். ஈழம் பற்றிய அவரது விகடன் கட்டுரைகள் பிரசித்தம். அவரது புத்தகமான ‘புலி தடம் தேடி’ அதைவிட பிரசித்தம். இலங்கையில் ரத்த தாண்டவம் முடிந்த பிறகு அதை நேரடியாகப் பார்த்து எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளின் தொகுப்பு அது.

இப்பொழுது மீண்டும் ஒரு முறை இலங்கை சென்ற போது கைது செய்துவிட்டார்கள். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் வைத்திருக்கிறார்களாம். அதைக் கொடும் சித்ரவதைக் கூடம் என்கிறார்கள். கண்டிப்பாக சித்வரை செய்வார்களாம். வருத்தமாக இருக்கிறது. செய்தியைக் கேட்டவுடன் ‘எதுக்கு ரிஸ்க் எடுக்கிறான்? பேசாமல் இருக்க வேண்டியதுதானே’ என்று தோன்றியது. நடுத்தரவர்க்க புத்தி. வேறு எப்படி யோசிக்கும்? ஆனால் அப்படி யோசிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? அவர் என்ன கொள்ளையடிக்கவா சென்றிருக்கிறார். ‘எங்கள் நாடு முழுவதுமே ரத்தினக் கம்பளத்தை போர்த்தி வைத்திருக்கிறோம்’ என்று கூவிக் கொண்டிருக்கும் இலங்கையில் ‘கொஞ்சம் கம்பளத்தை தூக்குங்க நானும் பார்க்கிறேன்’ என்று சென்றிருக்கிறார்.

பத்துக்கு பத்து ஏசி அறையில் அமர்ந்து கொண்டு கம்யூட்டரில் ஃபேஸ்புக்கை பார்த்துக் கொண்டே கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் களத்திற்குச் சென்று கட்டுரை எழுதும் துணிச்சல்காரன்- இருபத்தியிரண்டு வயதில் எடுக்கும் இத்தகைய முடிவுகளை துணிச்சல் என்பதா அல்லது குருட்டுத் தைரியம் என்பதா என்று குழப்பமாக இருக்கிறது- ஒருவனை அந்நிய தேசத்தில் அடைத்து அடிக்கிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது.

மிகச் சமீபத்தில் தேவயானிக்காக கதறிய ஊடகங்கள் பெரும்பாலானவை படு அமைதி காக்கின்றன. அவருக்காக கவர்ஸ்டோரி எழுதிய மை கூட தீர்ந்திருக்காது. டீக்குடிக்க போயிருப்பார்கள் போலிருக்கிறது. அமைதியாக இருக்கிறார்கள். அவர்களை விடுங்கள். அரசின் பெருந்தலைகளோ அல்லது அரசியல் பெருந்தலைகளோ காதில் பஞ்சை வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சை வெளியே எடுத்தால் குளிர் காதுக்குள் போகிறதாம். இவர்களுக்குத்தான் குளிர்- பிரபாகரனுக்கு அநேகமாக உடல் முழுவதும் சூடேற்றியிருப்பார்கள்.

இந்த விவகாரத்தில் ஏன் குறைந்தபட்சக் கண்டனக் குரல்கள் கூட எழுப்பப்படவில்லை என்பது சந்தேகமாக இருக்கிறது. 

அவன் புலிகளின் ஆதரவாளன், இலங்கை அரசின் எதிரி, குருட்டுவாக்கில் சிக்கிக் கொண்டான் என்று அவர் மீதான நமது விமர்சனங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். 

‘சின்னப்பையன், துடிப்பானவன், நல்ல பத்திரிக்கையாளன்’- இந்த மூன்று காரணங்கள் போதும் என நினைக்கிறேன், அவனுக்காக குரல் கொடுப்பதற்கு. ஊடகங்களும், அரசும், அரசியல்வாதிகளும் அவர்கள் போக்கில் போகட்டும். நம்மால் சிறு துரும்பைக் கிள்ளிப் போட முடியும் என நம்புகிறேன்.

சார்மியிடம் சிம்பு வெட்கப்படுகிறார்; சன்னி லியோன் ஷாருக்கானுடன் சேர்ந்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டாள் என்ற இரண்டு செய்திகளை படிக்கும் நேரத்தில் வெளியுறவுத்துறைக்கு என்னால் ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட முடிந்தது. நீங்கள் ஏதாவது இரண்டு செய்திகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வையுங்கள். நடப்பது நடக்கட்டும்.

‘தேவயானியைக் காப்பாற்றாமல் பாராளுமன்றத்துக்கே வரமாட்டேன்’ என்று சொன்ன மத்திய அமைச்சர்கள் பெருமக்களில் யாராவது ஒருவராவது ‘அப்படியா பார்க்கிறேன்’ என்றாவது சொல்வார்கள் என நம்புவோம்.

கீழே இருக்கும் செய்தியை காப்பி செய்து பின்வரும் மின்னஞ்சல்களுக்கு அனுப்பிவிடுங்கள். நம்மால் அதிகபட்சம் செய்ய முடிந்த உதவி இதுவாகத்தான் இருக்கும்.

eam@mea.gov.in, dirfs@mea.gov.in, psfs@mea.gov.in,

The Foreign Secretary,
Ministry of External Affairs,
South Block,
New Delhi

Dear Sir,

Mr.Ma ka.Tamil Prabakaran was a student reporter in Vikatan group of publications in the year 2011-2012. He was selected as the best student reporter in his batch. After completing his training in Vikatan group of publications, he has been working as a free lancer for Vikatan group of magazines and various other news portals.

Mr.Ma ka Tamil Prabakaran had visited Sri Lanka in the year 2012 and wrote a series about the plight of the Lankan Tamils in the Tamil bi-weekly Junior Vikatan, which was subsequently published as a book. Mr.Maha Tamil Prabakaran went to Sri Lankan on a tourist visa and he was taken around the area of Tamils at Kilinochi by Mr.Sridharan, Member of Parliament and Mr.Pasupathi Pillai, an elected member of Northern Provincial Council. 

At a time when they were visiting Valaipedu Village in Kilinochi District, they were intercepted by the Sri Lankan Army and all of them were taken into custody. While Sridharan and Pasupathi Pillai were released by the army, Mr.Maha Tamil Prabakaran has been detained by the army and according to media reports, he is being interrogated at the Sri Lankan Terrorist Crime Prevention Center at Colombo.

I request you to kindly intervene in this matter through diplomatic sources and ensure the release of Mr.Ma.ka Tamil Prabakaran safely.

Sincerely
--------------

(கடிதத்தின் டெம்ப்ளேட் கார்டூனிஸ்ட் பாலாவின் ஃபேஸ்புக்கில் இருந்து எடுத்துக் கொண்டேன்)

Dec 26, 2013

மணி ரத்னத்தை புரிந்து கொள்ளுதல்

அந்த இரண்டு நண்பர்களுக்கும் சினிமாதான் கனவு. இரண்டு பேர் மட்டுமில்லை அவர்களது குழுவில் இதே கனவோடு இன்னும் சிலரும் உண்டு. உட்லாண்ட்ஸ் டிரைவ்-இன்னில் அமர்ந்து கையில் வைத்திருக்கும் காசுக்கு ஏற்ப காபி குடித்துக் கொண்டே பேசும் நண்பர்கள் குழாம் அது. காபிதான் அதிகபட்ச மெனு. அதற்கு மேல் பட்ஜெட் இடம் கொடுக்காதாம். அதில் ஒருவர் எம்.பி.ஏ முடித்துவிட்டு மும்பையில் கன்ஸல்டண்டாக இருந்தவர். சினிமாவுக்கு போகலாம் என்று வேலையை விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டார். எம்.பி.ஏ படித்தவர் அல்லவா? செம ப்ளானிங். வாய்ப்பு தேடுவதற்காக அடுத்து யாரைச் சந்திப்பது, யாருடன் follow-up, யார் எல்லாம் நிராகரித்தார்கள் என்று பக்காவாக வைத்திருப்பார்.

அவரிடம் ஒரு யெஸ்டி(Yezdi) வண்டி உண்டு. அவரது நண்பருக்கு ஓளிப்பதிவாளர் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த நண்பரிடம் லாம்ரெட்டா ஸ்கூட்டர் இருந்தது. இரண்டு பேரும் இந்த இரண்டு வண்டிகளில் ஒன்றில் ஏறிக் கொண்டு சென்னை நகரின் முக்கியமான சினிமா நிறுவனங்களை அணுகிக் கொண்டிருந்தார்கள். வாய்ப்புத் தேடி போன இடம் அத்தனையுமே அந்தக் காலத்து பெருந்தலைகள். மகேந்திரன், பாலச்சந்தர், பாரதிராஜா, கமலஹாசன் என்று. எதுவும் சரியாக அமையவில்லை. ஆனால் வைத்திருந்த கதைக்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார். ‘டைரக்டரும் புதுசு; ஒளிப்பதிவாளரும் புதுசுன்னா கொஞ்சம் பயமா இருக்கே’ என்று தயாரிப்பாளர் தயங்க, பாலுமகேந்திராவை ஒளிப்பதிவாளராகச் சேர்த்துக் கொண்டு முதல் படத்தை இயக்கிவிட்டார். அதுவும் கன்னடத்தில். அந்த இயக்குனர் மணிரத்னம். அவருடன் சுற்றிக் கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.

இதெல்லாம் நடந்தது 1980களில். மணிரத்னத்தின் முதல் கன்னடபடமான பல்லவி அனுபல்லவி வெளிவந்த ஆண்டு 1983. அதன்பிறகுதான் நமக்குத் தெரியுமே- ‘பகல்நிலவு’வில் ஆரம்பித்து ‘கடல்’ வரைக்கும். பகல்நிலவுக்கு முன்பாக ‘உணரு’ என்ற ஒரு மலையாளப்படத்தையும் இயக்கியிருக்கிறார். 

யாரிடமும் அஸிஸ்டெண்ட் டைரக்டராகக் கூட இல்லாமல் சினிமாவில் கொடிகட்டிய நம் காலத்தின் ஜாம்பவான் ஒருவர் ஸ்கூட்டரில் வாய்ப்புத் தேடிய கதையை தெரிந்து கொள்ளும் போது ஒரு சுவாரஸியம் இருக்கிறது அல்லவா? அதுவும் அவரது சொந்த நடையிலேயே. அப்படியொரு புத்தகம் கையில் கிடைத்திருக்கிறது. ‘மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்’ என்று. கிழக்கு பதிப்பகத்தில் கொண்டு வருகிறார்கள். Review copy அனுப்பி வைத்திருந்தார்கள். செம கனமான புத்தகம். ஐந்நூறு பக்கங்கள். 

'Conversation with Maniratnam' என்று ஏற்கனவே ஆங்கிலத்தில் வந்த புத்தகம் இது. அதுதான் இப்பொழுது தமிழில் வருகிறது. ஒரு சினிமா சம்பந்தமுடைய புத்தகத்தை- அதுவும் ஐந்நூறு பக்கங்களால் ஆன புத்தகத்தை ஒரே நாளில் வாசித்து முடிக்க முடியும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. ஆனால் முடித்தாகிவிட்டது. புத்தகம் கையில் கிடைத்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. சுடச்சுட காரியம் முடிந்தது.

நேற்று மதியவாக்கில்தான் வாசிக்க ஆரம்பித்தேன். இரவு முழுவதும் பயணம். ஒரு இரவை நல்லபடியாகக் கொண்டாட வேண்டும் என்றால் புத்தகம் ஒன்றைக் தூக்கிக் கொண்டு பேருந்தில் ஏறிவிட வேண்டும். நீண்ட தூர வண்டிகளில் ஏறுவதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. இருக்கைகள் நிரம்பியவுடன் விளக்கை அணைத்துவிடுவார்கள். ஜன்னலை மூடிக் கொண்டு தூங்கினால் நாம் போக வேண்டிய இடம் வந்த பிறகுதான் முகத்தில் வெளிச்சத்தை பாய்ச்சி எழுப்புவார்கள். 

அதனால் முடிந்தவரை ஒரே பேருந்தில் பயணிப்பதை தவிர்த்துவிடுவேன். கோபியிலிருந்து ஈரோடு, ஈரோட்டிலிருந்து சேலம், சேலத்திலிருந்து தர்மபுரி, தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி அங்கிருந்து பெங்களூர் என்று மாற்றி மாற்றி பேருந்து ஏறும் போது ஒவ்வொரு பேருந்தும் ஒரு உலகத்தை காட்டிவிடும். சிறு தொலைவு பேருந்துகளில் பெரும்பாலும் விளக்கை அணைக்க மாட்டார்கள். இடையிடையே நிறுத்தி ஆட்களை ஏற்றிக் கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களில் கண்டக்டர்கள் லுங்கி அணிந்து கொண்டு படு கேஷூவலாக இருப்பார்கள். பேருந்திலும் ஷிப்ட் முடித்து வருபவர்கள், மார்கெட் சென்று கொண்டிருப்பவர்கள், வியாபாரத்திற்காக பயணிப்பவர்கள் என்று விதவிதமான முகங்களை பார்த்துக் கொண்டே பயணிப்பது நல்ல அனுபவம். ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கும். இத்தகைய அனுபவம் எல்லோருக்கும் இது பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பிடித்துவிட்டால் விட முடியாது. எனக்கு பிடித்திருக்கிறது.

இந்தப் வெட்டுப்பட்ட பயணத்தில்தான் மணிரத்னத்தின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். எந்த இடத்திலும் மூடி வைத்துவிட வேண்டும் என்றே தோன்றவில்லை என்பது புத்தகத்தின் முக்கியமான அம்சம். அப்படியே ஓரிரண்டு இடத்தில் போரடித்தால் அந்தக் கேள்வி பதிலைத் தாண்டிச் சென்றுவிடலாம். இரண்டு நண்பர்கள் படு மும்முரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் காது கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இடையில் ஏதாவது பிடிக்கவில்லையென்றால் நம் கவனத்தை கொஞ்சம் நேரம் திசை மாற்றிவிட்டு மீண்டும் அவர்கள் பேசுவதை கவனிப்போம் அல்லவா? அப்படித்தான். இந்தப் புத்தகத்தின் சில குறைகளை எளிதாக தாண்டிவிட முடிகிறது.

புத்தகம் முழுவதுமே மணிரத்னத்திற்கும், பரத்வாஜ்ரங்கனுக்கும் இடையிலான உரையாடல்கள்தான். மணிரத்னத்தின் ஒவ்வொரு படத்தையும் முன் வைத்து பேசுகிறார்கள். இந்தப் பேச்சு வழியாகவே மணிரத்னத்தின் வாழ்க்கை, அவரது சினிமா அனுபவங்கள், சினிமாப்புள்ளிகளுடனான அவரது பழக்கம் என்று விரிகிறது. உண்மையில் இந்த உரையாடலே ஒரு சினிமா பார்ப்பது போலத்தான் இருக்கிறது. மணிரத்னம் இந்த புத்தகத்திற்கு எத்தனை பலமோ அதே அளவு பலம் பரத்வாஜ் ரங்கனின் கேள்விகளும் சினிமா பற்றிய அவரது புரிதல்களும். அந்த மனிதரிடம் ஏகப்பட்ட சரக்கு இருக்கிறது.

மணிரத்னம் மீது தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் எந்த படைப்பாளி மீதுதான் எதிர்மறை விமர்சனம் இல்லை? அத்தனை விமர்சனங்களையும் தாண்டி மணிரத்னத்தின் சினிமா குறித்த பார்வை முழுமையாக புரிந்து கொள்ளப் பட வேண்டியது என நினைக்கிறேன். என்னைப் போன்ற சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஆட்களுக்கு இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ள ஏகப்பட்ட ‘ஐட்டம்’ இருக்கையில் சினிமா பிரியர்களுக்கும், சினிமாவில் இருப்பவர்களுக்கும் ஒரு முக்கியமான புத்தகமாகிவிடும் என தோன்றுகிறது.

சரி, இந்தக் குறிப்பை இதோடு முடித்துக் கொள்ளலாம். அதற்கு முன்பாக-

மெளனராகம் வெளிவந்த பிறகு ஒரு ஹிந்திப்படத்தின் வீடியோ கேசட்டை முக்தா சீனிவாசனிடம் கொடுத்து மணிரத்னத்திடம் சேர்ப்பிக்கச் சொன்னாராம் கமல்ஹாசன். அந்த ஹிந்திப்படம் மணிரத்னத்துக்கு பிடிக்கவில்லை. அதுவுமில்லாமல் ரீமேக் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்று முக்தாவிடம் சொல்லியிருக்கிறார். ‘அதை நீங்களே கமலிடம் சொல்லிவிடுங்கள்’ என்று முக்தா அழைத்துப் போகிறார். ‘சரி ரீமேக் வேண்டாம். வேறு எந்தக் கதையைச் செய்யலாம்?’ என்று கமல் கேட்கிறார். ‘வரதராஜ முதலியார்’ என்று மணிரத்னம் சொல்ல உருவான படம்தான் நாயகன். தனது முதல்படத்தில் கமலோடு சேர முயன்று முடியாமல் நாயகனில் கை கோர்க்கிறார்.

இன்னொரு குட்டித் தகவல். மணிரத்னத்தின் முதல் கன்னடப்படத்திற்கு இளையராஜாதான் இசை. அப்பொழுது தான் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்கு சம்பளத்தை மட்டுமே வாங்கிக் கொண்டு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். 

இப்படி புத்தகம் முழுவதுமே ஏகப்பட்ட சுவாரஸியமான தகவல்களால் ஜாலியாகவேதான் ஓடியது. 

அதிகாலை ஐந்தரை மணிக்கு பெங்களூரை அடைவதற்கு பத்து நிமிடங்கள் முன்பாக புத்தகத்தை முடித்துவிட்டேன். கடைசியாக ஏ.ஆர்.ரஹ்மானின் முகவுரையை வாசித்தேன். அது மூன்றரை பக்கங்கள்தான். ‘மணிசார் மனிதனாக என்னக் கவர்ந்தது அதிகமா...இயக்குநராக என்னைக் கவர்ந்தது அதிகமா?’ என்ற கேள்வியோடு இந்த முகவுரை முடிகிறது. மணிரத்னம் மனிதராக எப்படிப்பட்டவர் என்ற கேள்வி நமக்கு அவசியமில்லாதது என நினைக்கிறேன். ஆனால் ஒரு இயக்குநராக மணிரத்னத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்தான். அதற்கு இந்தப் புத்தகம் உதவும்.

Dec 25, 2013

போங்கய்யா நீங்களும் உங்க அரசியல் எழுச்சி மாநாடும்

இன்று ஊருக்கு வர வேண்டியிருந்தது. பெங்களூரிலிருந்து அதிகபட்சம் நான்கரை மணி நேரப் பயணம்தான். பிழைக்க வந்த ஊரிலிருந்து நினைத்த போது சொந்த ஊருக்கு போய் வருவதில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்படி கிளம்பி வந்தால் ஏதாவது ஞாபகம் வந்துவிடுகிறது. இன்றைக்கு முருகையன் ஞாபகம் வந்துவிட்டது. அவர் ஏதோ ஒரு வகையில் பழக்கம். எப்படி பழக்கமானார் என்றெல்லாம் துல்லியமாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் பழக்கமாகிவிட்டார். ஆரம்பத்தில் பல்லடம் பக்கத்தில் ஒரு ஊரில் குடியிருந்தார். திருமணமாகியிருந்தது. அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். மூன்றுமே பொடிசுகள்தான். மூத்தவள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

முருகையன் தறிக் குடோன் ஒன்றில் வேலையில் இருந்தார். பெரிய சம்பளம் இல்லை என்றாலும் படு பாஸிடிவான மனிதன். புலம்பிப் பார்த்ததாக ஞாபகமே இல்லை. ஆனால் மூன்றுமே பெண்பிள்ளைகள் என்பதால் பெரிய சுமை ஒன்று தலையில் இருப்பதாக ஒரு முறை சொல்லியிருக்கிறார். மற்றபடி ஜாலியான மனிதர் அவர்.

இப்பொழுது ஊருக்கு வந்ததற்கும் முருகையனை நினைத்துக் கொண்டதற்கும் இருக்கும் சம்பந்தத்தை சொல்லிவிடுவது நல்லது.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கொங்குதேசத்தில் பாப்புலராகிக் கொண்டிருந்தது. பெஸ்ட் ராமசாமி என்ற தொழிலதிபர் அந்தக் கட்சிக்கு தலைவராக இருந்தார். ஈஸ்வரன் என்ற இன்னொரு தொழிலதிபர் பொதுச் செயலாளராக இருந்தார். பெயர்தான் கொ.மு.கவே தவிர அது கவுண்டர்களுக்கான கட்சிதான். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அந்தக் கட்சியின் கரை வேஷ்டியைக் கட்டத் துவங்கியிருந்தார்கள். இந்த ஏரியாவில் காசு படைத்தவர்கள் கவுண்டர்கள்தானே. அவர்கள் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்தால் பாப்புலராகத்தானே செய்யும். அப்படித்தான் இதுவும்.

முருகையனும் தன்னை கட்சியில் ஐக்கியமாக்கியிருந்தார். அவரது மனைவிக்கு இதில் முழுச் சம்மதமில்லை போலிருக்கிறது. ஆனால் தடுக்க முடிந்ததில்லை. சரி தொலையட்டும் என்று விட்டிருக்கிறார்.

காசு படைத்த கவுண்டர்கள் கட்சிக்காக அள்ளிக் கொடுத்தார்கள் என்றால் முருகையன் மாதிரியான ஆட்கள் கடும் உடல் உழைப்பைக் கொடுத்தார்கள். நோட்டீஸ் கொடுப்பது முதல் போஸ்டர் ஒட்டுவது வரை அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு செய்த போது கொங்கு மண்டலத்தில் மிக முக்கியமான அரசியல் சக்தியாக கொ.மு.க வந்துவிடும் என்று நினைத்தார்கள். முன்பும் இப்படி சில முறை நடந்திருக்கிறது. நாராயணசாமி நாயுடுவின் விவசாய சங்கம், சொல்லேருழவன்- சொற்களாலேயே ஏர் ஓட்டுவாராம் செல்லமுத்துவின் உழவர் உழைப்பாளர் கட்சியெல்லாம் இப்படி மூன்றாவது சக்தியாக உருவெடுத்து அப்படியே அமுங்கிப் போயின என்பதுதான் அரசியல் வரலாறு. அமுங்கிப் போயின என்பதை விடவும் அமுக்கிவிட்டார்கள் என்பார்கள். அதையெல்லாம் விலாவாரியாக எழுதலாம். ஒருவேளை நாவலே கூட எழுத முடியும். அத்தனை கச்சாப்பொருள் நிரம்பிய அரசியல் அது.

கொ.மு.கவுக்காக முருகையன் நாய் படாத பாடு படுகிறார் என்பார்கள். உள்ளூருக்குள் ஒரு சுவர் விடாமல் உரிமையாளரிடம் பேசி ‘ரிசர்வ்’ செய்து வைத்துவிடுவதால் மற்ற கட்சிக்காரர்களின் கடும் எரிச்சலைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். ஆனால் அந்த எரிச்சல் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் அவருக்கு இல்லை. கட்சி முக்கியம் இல்லையா? 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி தனித்து களமிறங்கியது. பொறுக்கியெடுத்த பன்னிரெண்டு தொகுதிகளில் ஆட்களை நிறுத்தினார்கள். பல லட்சம் வாக்குகளை அள்ளியெடுத்தார்கள். அவர்களின் நோக்கம் நாடாளுமன்றத் தேர்தல் இல்லை என்பது அனைவருக்குமே தெரியும். அடுத்து வரவிருந்த சட்டமன்றத் தேர்தலில் ‘டீலிங்’ பேசுவதற்காக இந்தத் தேர்தலில் பலத்தைக் காட்டியே தீர வேண்டும் என்று உழைத்தார்கள்.

முருகையன் தனது சட்டையை சுருட்டி விட்டு சிலிண்டரைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு வீடு வீடாக வாக்கு கேட்டார். கொ.மு.கவின் சின்னம் சிலிண்டர். காலி சிலிண்டர்தான் என்றாலும் அது ஒன்றும் லேசுப்பட்ட காரியம் இல்லை. தோள் கழண்டு விடும். தேர்தல் நெருங்க நெருங்க இவர்களின் சூறாவளி பிரச்சாரமும் அனல் கிளப்பியது. தோள் வலியெடுத்ததைக் கண்டுகொள்ளாமல் முருகையன் அலைய தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பாக முருகையனை காலன் கவ்விச் சென்றுவிட்டான். சிலிண்டரைத் தூக்கியதால்தான் தோள்பட்டை வலிக்கிறது என அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அது ஹார்ட் அட்டாக். கதை முடிந்து போனது. அவரது பிணத்தை நடுவீட்டில் போட்டு வைத்து அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் கதறியது இன்னமும் ஞாபகமும் இருக்கிறது. 

அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக என இரண்டு கட்சியுடனும் பேரம் நடத்தில் கடைசியில் திமுகவுடன் கூட்டு சேர்ந்தார்கள் கொ.மு.கவினர். பெஸ்ட் ராமசாமிக்கு தனி டீலிங்; ஈஸ்வரனுக்கு தனி டீலிங் என்றார்கள். சர்க்கரை ஆலைக்கான அனுமதி கூட டீலிங்கில் இருந்ததாம். ஏழு ஸீட் வாங்கினார்கள். போட்டியிட்ட ஏழு தொகுதியிலும் மண்ணைக் கவ்வினார்கள்.

அவ்வளவுதான். கட்சி முடிந்தது. 

பெஸ்ட்டுக்கும், ஈஸ்வரனுக்கும் லடாய் வந்துவிட்டது. கட்சியை பிரித்துவிட்டார்கள். இப்பொழுது ஈஸ்வரன் தனிக்கட்சி. பெஸ்ட் தனிக்கட்சி. கொஞ்ச நாள் அமைதியாக இருந்தார்கள். தேர்தல் வருகிறதல்லவா? இப்பொழுது ஈஸ்வரனின் சப்தம் அதிகமாகியிருக்கிறது. போஸ்டர்களில் ஈஸ்வரன் சுருங்கி ஈசன் ஆகிவிட்டார். ஐந்தாறு கலர்களில் ஒரு கொடியைத் தயாரித்திருக்கிறார்கள். கரைவேட்டி கட்டினால் வேட்டியில் பாதி கரைதான் இருக்கும் போலிருக்கிறது அத்தனை கலர்கள். வழிநெடுக ‘ஈசன் அழைக்கிறார்’ என்கிறார்கள். பணக்காரக் கவுண்டனுக்கெல்லாம் பேனரில் இடம் கொடுத்திருக்கிறார்கள். ஏழைக் கவுண்டனுக்கெல்லாம் வேறு வேலை கொடுத்திருப்பார்கள். அரசியல் எழுச்சி மாநாடு நடத்துகிறாராம். 

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் டீலிங்குக்காக பலம் காட்டுவதற்கான மாநாடு இது. இப்பொழுதும் சில முருகையன்கள் இருப்பார்கள்தானே? அவர்களைப் பொறுத்தவரை ‘தலைவர் அழைக்கிறார்’. கத்திக் கொண்டே வண்டியேறுவார்கள். போகட்டும். முருகையன்களுக்காக ஒரு உதவியை இவர்களால் செய்ய முடியும் என நினைக்கிறேன். ஹார்ட் அட்டாக் வந்தால் வித்தியாசம் கண்டுபிடிக்கும் அளவிற்கு எடை குறைவான சின்னத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லி ஒரு கடிதம் அனுப்ப வேண்டும்.

Dec 24, 2013

பாதிக்கிணறு தாண்டியிருக்கிறாள்

கிட்டத்தட்ட பாதிக்கிணறு தாண்டியாகிவிட்டது. 

டிசம்பர் வந்தால் ‘புத்தகம் வருதா?’ என்று கேள்வி முளைத்துக் கொள்ளும். யாராவது நிச்சயமாகக் கேட்பார்கள். இந்த வருடம் ‘இல்லை’ என்றுதான் நினைத்திருந்தேன். ஒன்றரை மாதங்கள் முன்பு வரைக்கும் புத்தகம் எதுவும் வெளிவரும் என்று நினைக்கவில்லை. கையில் கதைகளும் கட்டுரைகளும் இருந்தன. ஆனால் எந்த பதிப்பகத்தில் கேட்பது என்று குழம்பி விட்டுவிட்டேன். புத்தகம் வரவில்லை என்றால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது? வந்தால் மட்டும் யாருக்கு என்ன லாபம் வந்துவிடப் போகிறது?

எதிர்பாராததெல்லாம் நடப்பதுதானே வாடிக்கை?

ஜீப்பில் இடம் இருப்பதாகவும் என்னை ஏற்றிக் கொள்வதாகவும் யாவரும்.காம் நண்பர்கள் தெரிவித்தார்கள். அவர்கள் நல்ல டீம்- சில இளைஞர்கள் அணியாகச் செயல்படுகிறார்கள். பதிப்பகம் ஆரம்பிக்கிறார்கள். முதல் புத்தகமாக இந்த சிறுகதைகளை வெளியிட விரும்பினார்கள். அப்படி வடிவம் பெற ஆரம்பித்ததுதான் ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’.


இந்த வகைக் கதைகள் இரண்டு மூன்றை எழுதிய பிறகு மனுஷ்ய புத்திரனுக்கு அனுப்பி வைத்திருந்தேன். ‘இன்றைய தினத்தை இந்தக் கதைகள் refresh செய்கின்றன’ என்று சாட்டில் சொல்லி உற்சாகமூட்டினார். தொடர்ந்து எழுதி மொத்தக் கதைகளின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியவுடன் தானே புத்தகமாக வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார். இது நடந்து நான்கைந்து வருடங்கள் இருக்கும். நான்கைந்து வருடங்கள் என்பது நீண்ட காலம் இல்லையா? அதற்குள் காற்று திசைமாறி அடித்துவிட்டது. கப்பல், யாவரும்.காம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சிவிட்டது.

கதைகளைத் தேர்ந்தெடுப்பது, வரிசைப்படுத்துவது என புத்தக உருவாக்கத்தின் அத்தனை வேலைகளையும் வேல்கண்ணனும், ஜீவ கரிகாலனும் செய்தார்கள் என்றால், பிழை திருத்துவது, புத்தக வடிவமைப்பு என பிற வேலைகளை யாவரும்.காம் குழுவின் முகம் தெரியாத நண்பர்கள் செய்தார்கள். உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது என்பதை விடவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் யாருமே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களோ, கோடிக்கணக்கில் பிஸினஸ் செய்பவர்களோ இல்லை. மிக மிகச் சாதாரணமானவர்கள். எழுத்தும் வாசிப்பும் அவர்களின் Passion. தங்களின் ஆர்வத்துக்காக மாதம் ஒரு இலக்கியக் கூட்டத்தை கைக்காசை செலவழித்து சென்னையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இப்பொழுது புத்தகம். 

புத்தகம் வெளியிட விரும்புவதாக அவர்கள் சொன்னவுடன் ‘செலவு செய்து கையைச் சுட்டுக் கொள்வீர்கள் என்றால் வேண்டாம்’ என்றுதான் எங்களின் பேச்சே ஆரம்பித்தது. 

‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லீங்க. வித்துடும்’ என்றார்கள். என்ன நம்பிக்கையில் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. அனேகமாக டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் விற்றுக் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் இலாபம் அடையாவிட்டாலும் கூட பரவாயில்லை. நஷ்டம் அடையாமல் இருந்தால் போதும் என விரும்புகிறேன். 

நஷ்டம் அடையமாட்டார்கள் என்ற நம்பிக்கை கடந்த ஓரிரண்டு நாட்களாக வந்திருக்கிறது. அதற்கு காரணம் இருக்கிறது-

டிசம்பர் கச்சேரிக்காக நடக்கும் புத்தக விளம்பரங்களை பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் நக்கலாக ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன். “புத்தகத்தின் முதல் பிரதியை ஏலம் விடுறாங்களாம்..அதுவும் ஆயிரக்கணக்கில்..ம்ம்..நாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை என்றாலும் நமக்குன்னு ஒரு ரேஞ்ச் இருக்குதுல்ல...அந்த ரேஞ்சில்.....சரோஜாதேவியின் சோப்பு டப்பா...ச்சை...லிண்ட்ஸே லோஹன் w/o மாரியப்பன்...முதல் பிரதி அஞ்சே அஞ்சு ரூவா...பிம்பிலிக்கி பியாபி தவிர எவ்வளவு வேணும்ன்னாலும் சொல்லலாம் சார்...அஞ்சே அஞ்சு ரூவா முதல் தரம் சார்...ஆங்...நாமளும் ரெவுடிதான் சார்...அஞ்சே அஞ்சு...” என்று.

இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. காமெடியாக நினைத்துக் கொண்டுதான் எழுதினேன். ஆனால் இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு முதல் பிரதியை ஐந்தாயிரம் ரூபாய்க்கும், இரண்டாயிரம் ரூபாய்க்கும் வாங்கிக் கொள்வதாக நண்பர்கள் செய்தி அனுப்பிய போதுதான் உண்மையிலேயே உறைத்தது- நம்மையும் நம்புகிறார்கள் என்று. இனிமேலாவது போகிற போக்கில் எதையாவது எழுதிவிடக் கூடாது என நினைக்கிறேன்.

பணம் முக்கியமே இல்லை. அது இன்று வரும் நாளை போகும். ஆனால் இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை முக்கியம். அந்த நம்பிக்கைக்காக, இவர்கள்தான் இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

அட்டைக்கான நிழற்படம் கார்த்திகேயன் கொடுத்தது. கார்த்தி, முன்பு ஐடியில் வேலையிலிருந்தவர். இந்த வேலையில் டார்ச்சராகி மத்திய அரசுத் தேர்வு ஒன்றை எழுதி இப்பொழுது திருச்சியில் செட்டில் ஆகிவிட்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேமராவைத் தூக்கி தோளில் மாட்டிக் கொண்டு படம் எடுக்கிறார். அப்படி எடுத்த படங்களில் ஒன்றுதான் அட்டைப்படம். மாரியப்பன் என்பதே இந்தப் பையன் தான் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லது மாரியப்பனுக்கு லிண்ட்சே லோஹனா என நக்கலாக சிரிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். எப்படியிருந்தாலும் இந்தப் படத்தில் இருக்கும் நேட்டிவிட்டி முக்கியமான விஷயம் என்று தோன்றியது.

அட்டையை வடிவமைத்தவர் சந்தோஷ். ‘சோமாலிய கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும்’ தொடரை எழுதிக் கொண்டிருக்கும் அதே சந்தோஷ்தான். தனது அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு படத்தை அனுப்பிய ஒரே இரவில் ‘கவர் டிசைன்’ஐ அனுப்பிவிட்டார். இப்படி எதுவுமே எதிர்பார்த்ததைவிடவும் வேகமாகவும் சந்தோஷம் அடையும்படியாகவும் நடக்கிறது.

அட்டை வடிவமைப்பு முடிந்துவிட்டது. ஃப்ரூப் ரீடிங் பாதி முடிந்திருக்கிறது. நாளை மறுநாள் அச்சுக்குச் சென்றுவிடும் என நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் சற்று அசால்ட்டாக இருந்தேன். இப்பொழுது சற்று ஆர்வம் கூடியிருக்கிறது. 

ஜனவரி 11 ஆம் நாள் சென்னையில் வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த ஒரு நாளை லிண்ட்சே லோஹனுக்காகவோ, மாரியப்பனுக்காகவோ, மணிகண்டனுக்காகவோ, நிசப்தம்.காமுக்காகவோ ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 

புத்தகம் ஒன்றை உங்களால் வாங்கிக் கொள்ள இயலும் என்றால் இன்னமும் சந்தோஷம் அடைவேன். பதிப்பகத்தினரின் முதல் முயற்சிக்கு உங்களின் ஆதரவாக இருக்கும். புத்தகத்தை  ஆன்லைனில் வாங்க முடியும். (இன்னும் ஓரிரு வாரத்திற்குள் அனுப்பி வைத்துவிடுவார்கள்)

நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பதும், மின்னஞ்சல் அனுப்புவதுமாக இந்தக் கதைகளுக்கும், எனது எழுத்துக்குமான சுடரை அணையாமல் பார்த்துக் கொண்டது நீங்கள்தான். உங்களுக்கு எனது அத்தனை நன்றிகளும். நெகிழ்ச்சியான அன்பும். இது வெறும் ஃபார்மாலிட்டியான சொற்கள் இல்லை என்பதை இந்த வரியை நான் தட்டச்சும் கணத்தில் எனது அருகில் இருந்து பார்த்திருந்தால் உங்களால் உணர்ந்திருக்க முடியும்.

நன்றி.

Dec 22, 2013

ஐடி அடிமைகளின் உரிமைகள்

நேற்று பெங்களூரில் ஒரு கூட்டம் நடந்தது. ஐடி ஊழியர்களின் உரிமை குறித்தான கலந்துரையாடல் கூட்டம். கலந்துரையாடலின் அஜெண்டாவைக் கேட்டவுடன் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஐடி ஊழியர்களுக்கு உரிமை என்று ஏதாவது இருக்கிறதா? அப்படித்தான் சொன்னார்கள். 

அரங்கில் முப்பது பேர் வரைக்கும் இருந்திருப்பார்கள். பெரும்பாலானவர்கள் ‘காம்ரேட்’ போலவே இருந்தார்கள். மிச்சமிருந்தவர்கள் அப்பிராணிகளாகத் தெரிந்தார்கள். சிறப்புப் பேச்சாளர்கள் எல்லோரும் ஏதோ ஒரு தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்கள். முந்தைய தலைமுறை. நரை தட்டியிருந்தது. அரசு நிறுவனங்களின் தொழிற்சங்களில் முக்கியமான பொறுப்பில் இருப்பார்கள் போலிருக்கிறது. கூட்டத்தில் எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டேன்.

நிகழ்வை இரண்டு வீடியோக் கேமிராக்களில் படம் பிடித்தார்கள். அதில் ஒன்று செய்திச் சேனல். இந்த மாதிரி கூட்டத்திற்கு போகும் போதும் முகத்தில் மரு ஒன்றை ஒட்டிக் கொண்டு மாறுவேஷத்தில் செல்ல வேண்டும். நம் நேரம் கெட்டுக் கிடந்து அலுவலகத்தில் வேலை செய்பவன் எவனாவது பார்த்துத் தொலைந்தால் கருப்புப் பட்டியலில் நமது பெயரை முதலாவதாக சேர்த்துவிடுவார்கள். கேமரா எனது பக்கம் திரும்பிய போதெல்லாம் படாதபாடு பட வேண்டியிருந்தது. ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமாகத் தெரியவில்லை. வீடியோவில் மாட்டிக் கொண்டேன்.

வெளிப்படையாகச் சொன்னால் ஐடித் துறையில் ‘எனது உரிமை’ என்பதில் எள்ளளவு கூட நம்பிக்கை இல்லை. இன்று வரைக்கும் நான் செய்யும் வேலைக்கு ஊதியம் கொடுக்கிறார்கள். அவர்கள் லாபத்தில் கொழிக்கிறார்கள். எனக்கும் சம்பளம் கொடுக்கிறார்கள். அவ்வளவுதான். அவர்களாகப் பார்த்து ‘நீ வேண்டாம்’ என்று சொன்னால் கிளம்பிவிட வேண்டும். அப்படியான மனநிலையில்தான் இருக்கிறேன். கிட்டத்தட்ட பெரும்பாலான ஐடி அடிமைகளுக்கும் இதுதான் மனநிலையாக இருக்கக் கூடும்.

இது அப்படியே நடுத்தர மக்களின் மனநிலைதான். ‘நாம் உண்டு; நம் வேலை உண்டு’ என்றிருப்பார்கள். பிரச்சினை நமக்கு வராதவரைக்கும் ஒரு சிக்கலும் இல்லை. நமக்கு பக்கத்திலேயே அமர்ந்திருப்பவனை ‘திடுதிப்’என்று வீட்டுக்கு அனுப்பும் போது கூட ‘ஆண்டவா, அடுத்த ஆடு நானாக இருக்கக் கூடாது’ என்று ரகசியமாக பிரார்த்தித்துக் கொள்ளும் பயந்தாங்கொள்ளிகளாக மாறிவிட்ட ஒரு கூட்டம் இது. தைரியம், போராட்டக் குணம் என்பதெல்லாம் கிட்டத்தட்ட சிதைந்து போன வர்க்கம் இது. ஆர்பாட்டம், ஊர்வலம் என்றால் ஒதுங்கிச் செல்பவர்கள்தான் இங்கு உண்டு. உரிமை, கலகம் என்றெல்லாம் கொடிபிடித்து வேலையை இழக்க எந்த யுவனும், யுவதியும் தயாராக இல்லை. 

அவ்வளவு ஏன்? இந்தக் கூட்டத்தை நடத்தும் அமைப்பினர் காலாண்டிதழ் ஒன்றை நடத்துகிறார்கள். இருபது பக்கங்கள் இருக்கக் கூடும். ஒரு பக்கத்தில் கூட ஆசிரியர், ஆசிரியர் குழுவின் பெயரோ, இடத்தின் முகவரியோ, தொடர்பு எண்ணோ இல்லை. வெறும் இமெயில் ஐடியும், ஃபேஸ்புக் பக்கம் மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள். இந்த பயம்தான் ஐடி நிறுவனங்களின் பலமே.

ஐடி காண்டாமிருகங்களை எதிர்த்து பேசுவது என்பது இருண்டகாலத்தில் புரட்சிக் கூட்டம் போடுவது போலத்தான். முதல் பிரச்சினை- கூட்டம் போடுபவர்களுடன் சேருவதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். இரண்டாவது பிரச்சினை சேரும் சொற்பக் கூட்டத்தையும் கறிவேப்பிலையைக் கிள்ளுவது போல கிள்ளுவதற்கு HR ஆட்களுக்குத் தெரியும்.

எதற்கு வம்பு? அமைதியாக போய்விட வேண்டியதுதான்.

மிகச் சமீபத்தில் கர்நாடகாவில் ‘எஸ்மா’சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். பால், மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான சட்டம் இது. தமிழகத்தில் அம்மையார் கொண்டு வந்த ‘டெஸ்மா’ சட்டத்தின் இன்னொரு வடிவம்தான். இந்தத் துறை ஊழியர்கள் உரிமை, போராட்டம் என்றெல்லாம் ஸ்ட்ரைக் செய்ய முடியாது. எஸ்மாவில் கைது செய்து உள்ளே தள்ளிவிட முடியும். அது இருக்கட்டும். அநியாயம் என்னவென்றால் கர்நாடக அரசு ஐடித் துறையை Essential service ஆக கருதப்போவதாக அறிவித்திருக்கிறது. ஐடி நின்று போனால் குழந்தைக்கு பால் கிடைக்காது பாருங்கள்.

எல்லாம் காசு. டாலர்களாகக் கொண்டு வந்து அரசியல்வாதிகளுக்குக் கொட்டுகிறார்கள். நம்மாட்கள் கண்களை மூடிக் கொள்கிறார்கள். ‘என்ன நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டோம்’ என்று சொல்லிவிடுவார்கள். அவ்வளவுதான். 

இங்கு ஊழியர்களுக்கு உரிமை கிடையாது. வெளிப்படையான நிர்வாகம் கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இப்படி எத்தனையோ எதிர்மறையான விஷயங்கள் இருக்கின்றன.

ஆனால் இப்பொழுதும் ஐடியில் வேலை பெறுவதற்காக இலட்சக்கணக்கில் செலவு செய்யவும் மாணவர்களும் பெற்றோர்களும் தயாராக இருக்கிறார்கள். என்ன காரணம் என்று கேட்டால் தயவு செய்து ‘சம்பளம்’ என்று சொல்லிவிடாதீர்கள். தமிழக அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்கு கிட்டத்தட்ட முப்பத்தைந்தாயிரம் சம்பளம் வருகிறது. மத்திய அரசு ஊழியர்களைப் பற்றி கேட்கவே தேவையில்லை. ஆறாவது சம்பள கமிஷனுக்கு பிறகு லட்சக்கணக்கில் சம்பளம் என்பது சர்வசாதாரணம். இப்பொழுது அவர்களுக்கு ஏழாவது சம்பளக் கமிஷன் வேறு வருகிறது. போராட்டம், ஸ்ட்ரைக் என்று நடத்தி தாறுமாறாக ஊதிய உயர்வை வாங்கிவிடுவார்கள்.

ஐடியில் ஐந்து சதவீத சம்பள உயர்வு கூட கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக வருவதில்லை. பதினைந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கைதான் பெரும்பான்மையாக இருக்கும். இத்தனை குறைகள் இருக்கின்றன. பிறகு எதற்கு இந்தத் துறையில் வேலை தேடுகிறார்கள்? 

வேறு வழி?

மாநிலத்துக்கு மாநிலம் பலநூறு பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதியளித்துவிட்டார்கள். பெற்றவர்களின் ஒரே குறிக்கோள் ‘மகனோ, மகளோ பொறியியல் முடிக்க வேண்டும்’.படிக்கிறோம். டிகிரி முடித்து வெளியே வந்தால் லட்சக்கணக்கான போட்டியாளர்கள் டையும், ஷூவுமாகத் திரிகிறார்கள். எங்கே போவது? பற்களைக் கடித்துக் கொண்டு கிணற்றுக்குள் எட்டிக் குதிக்கிறார்கள். அது வெளியே அலங்கரிக்கப்பட்ட கிணறுதான். ஆனால் உள்ளே நிலைமை வேறு. இருண்டு கிடக்கும் கிணறு அது. ஏற்கனவே லட்சக்கணக்கானவர்கள் உள்ளே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள்ளேயே இவர்களும் குதிக்கிறார்கள்.

இந்த நிலைமையில் ‘உரிமை, புரட்சி’ என்பதில் எல்லாம் எனக்கு துளி நம்பிக்கை கூட இல்லை. நம்பிக்கை இல்லை என்பதைவிடவும் இவை எல்லாவற்றையும் விட என் குடும்பமும், குழந்தையும், அவனது எதிர்காலமும் முக்கியமானதாகத் தெரிகிறது. அதற்காக எத்தனை கசையடிகளையும் தாங்கிக் கொள்ளும் இன்னொரு மத்திய தர குடும்பஸ்தன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. 

சத்தமில்லாமல் பாதியில் எழுந்து வந்துவிட்டேன். 

Dec 21, 2013

பூனைக்கு மணி கட்ட மாட்டாங்க..

கடந்த ஆண்டு எனது இந்தியப் பயணத்தின் போது ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். பஃபே சிஸ்டம்தான், எனது தட்டத்தில் தேவையான அளவு மட்டும் குறைவாக எடுத்துக் கொண்டிருந்தேன். உடன் இருந்த நண்பர் இன்னமும் எடுத்துக் கொள்ளச் சொன்னார். இல்லையென்றால் இன்னொரு முறை வரிசையில் நிற்க வேண்டும் என்றார்.

அந்த பஃபேயில் பத்து வகையான இனிப்பு பண்டங்களாவது இருந்திருக்கும். பெரும்பாலும் எல்லோரும் பத்து வகை இனிப்பையும் தங்கள் தட்டத்தில் எடுத்திருந்தார்கள். இனிப்பு தவிர ஐஸ்கிரீம் உண்டு, நீங்கள் சொன்னது போலவே தண்ணீர் பாட்டிலும் உண்டு. அதைவிடவும் அந்தக் பஃபே கூட்டத்தில் இருந்த குழப்பத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே...

-கோபிநாத் வெங்கட்ராமன்

வணக்கம் கோபிநாத்,

ஒருவேளை நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் இந்த படோபடங்கள் உங்களுக்கு ஆச்சரியமானதாக தெரியலாம். ஆனால் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. பஃபே சிஸ்டம் என்பது ஒரு விதத்தில் திருமண வீட்டாரின் தகுதியை வெளிக்காட்டும் உத்தி என்ற எண்ணம் மாறி இப்பொழுது அந்த முறை இல்லையென்றால் திருமணத்தை மட்டமாக பார்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். மணமகன் அல்லது மணமகளுக்கு திருமணத்தில் முழு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ- அது பற்றிய கவலை இல்லையென்றாலும் பஃபே சிஸ்டம் பற்றிய கவலை நம்மவர்களுக்கு உண்டு.

சம்மணமிட்டு அமர்ந்து உண்டால் அளவோடுதான் உள்ளே போகுமாம். அந்த முறையை ஒதுக்கிவிட்டு ‘இப்போவெல்லாம் மூட்டுவலி சகஜமாகிடுச்சுல்ல’ என்று டைனிங் டேபிளில் அமரத் தொடங்கிய பிறகுதான் அளவுக்கு மிஞ்சி உள்ளே சென்று ஆயிரத்தெட்டு நோய்கள் நமக்கு. இப்பொழுது ‘டைம் இல்லை...’ என்று டேபிளையும் ஒதுக்கிவிட்டு கையில் ஏந்திக் கொள்கிறோம்.

வரிசையில் நெருக்கிக் கொண்டு கையகல தட்டத்தில் அத்தனை ஐட்டங்களையும் அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு மேலும் கீழுமாக சிதறவிட்டபடியே கொஞ்சத்தை வயிற்றுக்குள்ளும் மிச்சத்தை குப்பைத் தொட்டிக்குள்ளும் தள்ளுவது ஒவ்வொரு தமிழனும் பழகிக் கொண்ட கலை. இத்தனை வீறாப்பாக எழுதும் என்னை யோக்கியன் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். திருமணத்திற்குச் சென்றால் அச்சுபிசகாமல் இதையேதான் செய்கிறேன்.

பஃபே சிஸ்டத்தின் மீது காழ்ப்புணர்ச்சி வருவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமானால் waste. கைபடாமல் வீணாகப் போனால் கூட பிரச்சினை இல்லை- இல்லாதவர்களை அழைத்துக் கொடுத்துவிடலாம். ஆனால் இந்த முறையில் அத்தனை உணவையும் எச்சில் படுத்தியல்லவா கொட்டுகிறோம்? ஒட்டுமொத்தமாக வீண். 

ஒரு வேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் லட்சக்கணக்கான குடும்பங்கள் தவித்த பஞ்ச காலத்தை இந்தத் தமிழகம் தாண்டித்தானே வந்திருக்கிறது? அந்தத் தலைமுறை ஆட்களின் மகனுக்கும் மகளுக்கும்தான் இத்தகைய திருமணங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களது மகனும் மகளும் பஞ்சகாலத்தை பார்க்கவில்லை. ஆனால் ‘உணவுச் சாபம்’ அவர்களின் பேரன் பேத்திகளின் மீது விழுந்துவிடாமல் இருக்கக் கடவது.

                                                    **********

நாட்டுக்கோட்டை நகரத்தார் திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாழ்க்கை முழுக்க சேமித்த காசை ஒரே நாளில் அழும் கொடுமை அது. நம்புவீர்களோ மாட்டீர்களோ, என் திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் 95% மக்களை நான் திருமணத்திற்கு முன்பும் பின்பும் ஒருமுறை கூட கண்டதில்லை.

கல்லூரி நாட்களில், உடன் படிக்கும் நண்பனின் வீட்டு கல்யாணத்தில் நான் கலந்துகொள்ளும் நாள் தொட்டே, எனக்கு இந்த உறுத்தல் உண்டு. நண்பனுக்குக் கல்யாணம்-னா போகணும், அவன் அண்ணன், அக்கா கல்யாணத்துக்கெல்லாம் நான் ஏன் போகணும்? அப்படிப்போன கல்யாணங்களில், நானும் (மணமக்களை முதலும் கடைசியுமாக அன்று மட்டுமே பார்த்த) 95% மக்களில் ஒருவனானேன்!

-ராம்

வணக்கம் ராம்,

நீங்கள் மட்டும் இல்லை- திருமணம் முடித்த இந்தத் தலைமுறையினரில் கிட்டத்தட்ட அத்தனை பேருக்கும் இதே பிரச்சினை உண்டு. எங்கள் அம்மா அப்பாவின் திருமண ஆல்பத்தில் (தோராயமாக 150 படங்கள்) ஒவ்வொரு முகத்தையும் அவர்களால் அடையாளம் சொல்ல முடிகிறது. எனது திருமண ஆல்பத்தில் (தோராயமாக 1000 படங்கள் உண்டு) எங்களால் ஐந்து சதவீத மனிதர்களைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடிவதில்லை. 

வரவேற்பு விழாவில் வருகிறவர்களுக்கெல்லாம் வணக்கம் வைத்து நிழற்படத்திற்கு போலியாக புன்னகைக்க வேண்டியிருந்தது. கணக்குப் பார்த்தால் ஃபோட்டோ ஆல்பத்திற்கான செலவு மிகப்பெரிய செலவாக இருந்தது.  திருமண ஆல்பத்திற்கு எதற்கு இத்தனை செலவு? ஆல்பத்தை எத்தனை முறை புரட்டிப் பார்க்கிறோம்? அதிகபட்சமாக ஐந்து முறை இருக்கலாம்- மொத்த வாழ்நாளிலும் சேர்த்து. அடையாளத்திற்கு ஐம்பது படங்கள் இருந்தால் போதாது?

ஆடம்பரத் திருமணங்கள் என்பது கிட்டத்தட்ட அத்தனை இனத்திற்கும், மதத்திற்கும் பொதுவான ஒன்றாகிவிட்டது. பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களின் சாபக்கேடாக திருமணச் செலவுகள் மாறிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இத்தகைய திருமணங்கள் சமூக அடையாளம் இல்லை- சமூகச் சீரழிவு. ஆனால் இப்போதைக்கு இந்த பூனைக்கு யாருமே மணி கட்டப்போவதில்லை.