Nov 7, 2013

எல்லாம் நேரம்...

நல்ல நேரம், கெட்ட நேரம், விதி etc, etc., என்பது பற்றியெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? 

சென்ற வாரத்தில் நடந்த ஒரு மீட்டிங்கில் இப்படித்தான் கேட்டார்கள். எதற்கு கேட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ‘ஆமாம்’ என்று சொல்லிவிட்டேன். இதையெல்லாம் கூமுட்டைத் தனமாக நம்பாமல் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா என்றால் சத்தியமாக சரண்டர் ஆகிவிடுவேன். நிச்சயமாக முடியாது. ஆனால் இதெல்லாம் ஒரு நம்பிக்கைதானே. தெருவில் போகும் போதோ, யாரையாவது பார்க்கும் போதோ ‘எல்லாம் நேரம்’ என்று சர்வசாதாரணமாக வார்த்தைகள் வந்து விழுகின்றன. அவற்றை எப்படி வெறும் வார்த்தைகள் என்று தள்ளிவிட முடியும்? அவை சொற்கள் மட்டுமில்லை- நம்பிக்கை.

முப்பதே வருடங்களில் தலைகுப்புற விழுந்த குடும்பங்களை பார்க்கிறோம். வெறும் இருபதே வருடங்களில் வாழ்வின் உச்சாணிக்குச் சென்றவர்கள் இருக்கிறார்கள். எங்கள் வயசுப் பையன்கள் அரை ட்ரவுசரோடு சைக்கிள் டயர் ஓட்டிக் கொண்டிருந்த காலத்தில் இரட்டை மாடுகள் பூட்டிய கூட்டு வண்டியில் ‘சலங் சலங்’ என்று பயணம் செய்த பல மிராஸ்தார்களின் குடும்பங்கள் இப்பொழுது சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டன. அதே அரை ட்ரவுசரோடு மூக்கில் சளி ஒழுகத் திரிந்த பையன் லட்சக்கணக்கான ரூபாய்களோடு சுற்றிக் கொண்டிருக்கிறான். அந்தக் குடும்பங்கள் சிதைந்து போக எப்படி வேறு காரணங்களை கண்டுபிடிக்க இயலவில்லையோ அதேபோல அந்தப் பையன் மேலே வர திறமை உதவியது என்றும் சொல்ல முடியவில்லை, திருடினான் என்றும் சொல்ல முடியவில்லை - ‘எல்லாம் நேரம்’.

ஒருவன் மேலே வருவதற்கு அவனது திறமை, உழைப்பு என எல்லாவற்றையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது என நம்புகிறேன். அதே போல ஒருவன் நைந்து போக அவனிடம் எந்த மோசமான பழக்கவழக்கம் இல்லையென்றாலும் அதே கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது எனவும் நம்பலாம்.

இப்படியே தத்துவம் பேசிக் கொண்டே போய் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் ஆனதற்கு அவரது திறமையும், உழைப்பும் மட்டுமே காரணமா என்று ஒரு வரியை எழுதலாம்தான். ஆனால் வருகிறவர்கள் எல்லோரும் இந்த ஒரு வரியை மட்டும் பிடித்துக் கொண்டு துவைத்து காயப்போடுவார்கள் என்பதால் இதையெல்லாம் எதற்காக உளறிக் கொண்டிருக்கிறேன் என்ற மேட்டருக்கு போய்விடலாம்.

ஒரு Porsche கார். 

நேற்றிரவு பார்த்தேன். எப்படி பார்த்தேன் என்பதற்கு முன்பாக- இந்தியாவில் இந்தக் கம்பெனியின் இருபத்தியிரண்டு மாடல்கள் இருக்கிறதாம். குறைந்தபட்ச விலை எழுபது லட்சம். இரண்டேகால் கோடி ரூபாய் வரைக்கும் மாடல் இருக்கிறது. அடேயப்பா! இத்தனை காசு கொடுத்து கார் வாங்கி என்ன செய்வார்கள்? நாம் போகும் அதே சாலையில்தான் போக வேண்டும். நாம் ஓட்டும் அதே ஸ்பெண்டர் ப்ளஸ்ஸைத்தான் தாண்டித்தான் போக வேண்டும். ஆனாலும் ஒரு ப்ரஸ்டீஜ். ஒரு கெத்து.

என்ன செய்வதென்றே தெரியாமல் பணத்தை கரையான் அரித்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் கார் வாங்க வேண்டும். எழுபது லட்சம் கையில் இருந்தால் பெங்களூரில் நான்கரை செண்ட் இடம் வாங்கி விடலாம். எங்கள் ஊராக இருந்தால் இரண்டு ஏக்கர் வயல் வாங்கிவிடலாம். அமெரிக்கா போய் எம்.எஸ் முடித்துவிடலாம். வங்கியில் போட்டு வைத்தால் வட்டியிலேயே காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால் இதெல்லாம் அரை டிக்கெட்களுக்குத்தான். அந்தக் கார்க்காரனுக்கு இல்லை. 

அவ்வளவு கொடுத்து கார் வாங்குபவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும்? குளிப்பதே கூட மினரல் வாட்டர் வாங்கித்தான் குளிப்பான் என்று நினைக்கிறேன். ‘அம்மா மினரல்’ என்றெல்லாம் சொல்லவில்லை- பொதுவாக மினரல் வாட்டர் என்று வாசியுங்கள். அப்படியான ஒரு பணக்காரன் நேற்று பெலந்தூர் ஏரியில் சென்றிருக்கிறான்.  ‘பேரு பெத்த பேரு தாக நீலு லேது’ என்று தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. அப்படித்தான் பெலந்தூர் ஏரியும். பெயருக்குத்தான் பெங்களூரிலேயே பெரிய ஏரி. ஆனால் அள்ளி ஒரு மிடறு குடிக்க முடியாது. அத்தனை சாக்கடைத் தண்ணீர் கலக்கிறது அந்த ஏரியில். அந்த வழியைத் தாண்டும் போதே குமட்டிக் கொண்டு வரும். ஊர்க்காரர்களின் கழிவுகளை மொத்தமாக வழித்துப் போட்டு தனக்குள் அமிழ்த்துக் கொள்கிறது.

இந்த ஏரிக்கரையில் ஒரு குறுகலான பாதை இருக்கிறது. இந்தச் சாலையில் எப்பொழுதும் நான்கைந்து பன்றிகள் புது மணப்பெண்ணைப் போல குனிந்த தலை நிமிராமல் ‘குண்ட்ருக்கு குண்டுருக்கு குண்டுருக்கு’ என்று குதித்துக் கொண்டு ஒடும். சற்று ஏமாந்தாலும் வண்டியில் மோதிவிடும். பன்றி மோதினால் அதோடு சரியாம். நல்ல நேரம் போய்விடுமாம். Porsche காரனுக்கும் குறுக்கே ஒன்று ‘குண்டுருக்கு குண்டுருக்கு’ என்று குதித்திருக்கும் போலிருக்கிறது. ‘மோதித் தொலைத்தால் நல்ல நேரம் போய்விடும்’ என்று அவன் பயந்திருக்கக் கூடும். நல்ல நேரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவன் ஸ்டீயரிங்கைத் திருப்ப, மொத்த நல்ல நேரமும் பெலந்தூர் ஏரிக்குள் இறங்கிவிட்டது. வண்டி முழுவதும் மூழ்கவில்லை. ஆனால் பாதி வண்டி சேறுக்குள் சிக்கிக் கொண்டது. சிக்கியவுடன் டிரைவர் ஸீட்டில் அமர்ந்திருந்த பணக்காரரை மூழ்கடிக்கும் அளவிற்கு தண்ணீரும் உள்ளே புகுந்துவிட்டது. போகிற வருகிறவர்கள் கல்லைத் தாங்கிப் போட்டு பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டார்கள். அவர்களுக்கு அந்தக் காரின் விலை தெரியவா போகிறது? உடைத்த வேகத்தில் உள்ளே இருந்தவரையும் இழுத்துவிட்டார்கள். என்னதான் இழுத்து என்ன பிரையோஜனம்? வாழ்நாளுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீரைக் குடித்துவிட்டார்- சாக்கடைத் தண்ணீர். உடனடியாக அந்த ஆளை 108 இல் தூக்கிப் போட்டு கொண்டு போய்விட்டார்களாம். உயிருக்கு எதுவும் பயமில்லையாம். ஆனால் ட்யூப் வைத்து உறிஞ்சுவார்கள் என்று நினைக்கிறேன்.

நேற்று மாலையில் அலுவலகம் முடித்து அந்தப் பாதையைக் கடக்கும் போது கிரேன் கட்டி வண்டியை இழுத்துக் கொண்டிருந்தார்கள். வன்புணரப்பட்ட பணக்காரக் கிழவியைப் போல கார் மேலே வந்து கொண்டிருந்தது. பரிதாபமாக இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இந்தக் கதையைச் சொல்லச் சொல்ல ‘வ்யாக்’ என்று வந்தது. ‘வ்யாக்’ மீன்ஸ் குமட்டல். கதை கேட்கும் நமக்கே ‘வ்யாக்’. அந்த ஆளை நினைத்துப் பாருங்கள். வாழ்நாள் முழுமைக்கும் ‘வ்யாக்’ ‘வ்யாக்’தான்.

கதை முடிந்துவிட்டது.

இந்தக் கதையை எப்படி முடிப்பது? ‘எல்லாம் நேரம்’.