Nov 30, 2013

தலையில் அம்மிக்கல்லை கட்டியிருப்பவர்கள்

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக சனி, ஞாயிறுகள் வராமலே இருந்தாலும் கூட நன்றாக இருக்கும் என்றிருக்கிறது. 

வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஆனால் போதும் - ‘இந்த வாரம் சனி, ஞாயிறுகளில் அலுவலகம் வந்துவிடுங்கள்’ என்று சமிக்ஞை தந்துவிடுகிறார்கள். சமிக்ஞை என்ன சமிக்ஞை- கிட்டத்தட்ட உத்தரவு. சோற்றுப் போசியை சுமந்து கொண்டு அலுவலகம் வந்து பார்த்தால் மொத்தம் நான்கைந்து பேர்தான் இருக்கிறார்கள். வந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தலையில் அம்மிக்கல்லைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்- மிளகாய் அரைப்பதற்கு வசதியாக. யார் வேண்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்.

வழக்கமாக என் தலையில் எப்பொழுதுமே அம்மிக்கல்லைக் கட்டி வைத்திருப்பேன். சென்ற வாரத்தில் தெரியாத்தனமாக பெரிய கல்லாகக் கட்டிக் கொண்டேன் போலிருக்கிறது. அம்மிக்கல்லில் நிறைய இடம் இருக்கிறது என்று ஜூனியர் ஒருவனும் சேர்ந்து மிளகாய் அரைத்துக் கொண்டான். அவன் என்னை விட நான்கைந்து வருடம் ஜூனியர். வயதிலும் அனுபவத்திலும்தான் ஜூனியர். ஆனால் ஆள் ஆஜானுபாகுவாக இருப்பான். அவன் நினைத்தால் என்னை எடுத்து அக்குளுக்குள் இடுக்கி பிடித்துக் கொள்ள முடியும். இருந்தாலும் ஜூனியர் ஜூனியர்தானே!

மீட்டிங் ஒன்றில் ஏதோ நினைப்பில் நான் அமர்ந்திருக்க ‘அதை முடிச்சுட்டுயா? இதை முடிச்சுட்டுயா?’ என்று ஏகப்பட்ட பன்னாட்டு அவனுக்கு. நானும் தெரியாத்தனமாக ‘ஆமாங்க...இல்லீங்க’ என்று பம்மிக் கொண்டிருந்தேன். வெளியே வந்த பிறகு ‘அவனுக்கு எல்லாம் ஏன் பம்முற’ என்று கேட்டு ஆளாளுக்கு தாளித்துவிட்டார்கள். நம் ஆட்கள் எப்பவுமே இப்படித்தான். தனியாக இருக்கும் போதுதான் அட்வைஸ் செய்வார்கள். மீட்டிங்கில் ஒருத்தராவது ‘மணியை கேள்வி கேட்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?’ என்று அவனைக் கேட்டிருந்தால் விழித்திருப்பேன். 

அத்தனை பேர்களுக்கு முன்னால் அவமானப்படுத்திவிட்டான். அதுவும் ஏகப்பட்ட பெண்கள் வேறு. ஜீன்ஸ் அணிந்த குஜராத் பெண்ணொருத்தியும் அந்த மீட்டிங்கில் இருந்தாள். அவளிடம் கெத்துக் காட்டுவதற்கு என்னை சட்னியாக்கிக் கொண்டான். இருக்கட்டும். அடுத்த மீட்டிங்கில் அவன் மூக்கு மீது குத்திவிடலாம் என்று கைகளை நிலத்தில் உரசிக் கொண்டிருக்கிறேன். 

சொந்தக் கதை சோகக் கதையை எழுதியபடி முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன். இந்த வாரமும் அலுவலகத்திற்கு வரச் சொல்லிவிட்டார்கள். மற்ற நாட்கள் என்றால் வந்துவிடலாம். நாளைக்கு டிஸ்கவரி புக் பேலஸில் மீட்டிங் இருக்கிறதல்லவா?  ‘வேண்டுமானால் சனிக்கிழமை அலுவலகம் வருகிறேன். ஆனால் ஞாயிறு வருவதற்கு வாய்ப்பே இல்லை’ என்று சொல்லிவிட்டேன். போனால் போகிறது என்று அனுமதித்துவிட்டார்கள்.

உண்மையில் சனிக்கிழமை இரவே சென்னையை அடைந்துவிட வேண்டும் என்றுதான் விரும்பினேன். முதற்காரணம்- பகலில், அதுவும் பேருந்தில் சென்னைக்கு பயணிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும். எட்டு மணி நேரம் முழுமையாகக் கிடைக்கும். பெரிய நாவல் ஒன்றை எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாசித்துவிடலாம். அப்படி நிறைய நாவல்களை சென்னை-பெங்களூர் பயணத்தின் போது வாசித்த அனுபவம் உண்டு. அதை விட முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. அதை வெளியே சொல்வதால் பந்தா செய்கிறான் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆனாலும் சொல்லிவிடுகிறேன். 

இன்று இரவிலிருந்து நாளை இரவு வரை நான் சென்னையில் தங்குவதற்கு ஒரு அறையை ரிசர்வ் செய்து கொடுத்திருக்கிறார் ஒரு மருத்துவர். 'இது என்ன பெரிய மேட்டர்' என்றுதான் தோன்றும். ஆனால் இதுவரை அவரை நேரில் கூட பார்த்ததில்லை. அந்த ஹோட்டலின் வெப்சைட்டில் பார்த்தால் குறைந்தபட்ச அறை வாடகை நான்காயிரத்தில் தொடங்குகிறது என்று போட்டிருக்கிறார்கள். தூக்கிவாரிப் போட்டது. 

சென்னை வரும் போது முன்பெல்லாம் நண்பர்களின் அறையில் ஓசியாக ஒட்டிக் கொள்வேன். இப்பொழுதெல்லாம் தி.நகர் ரத்னா கபேயில் ஐந்நூறு ரூபாய் கொடுத்தால் நாற்றமடிக்கும் அறை ஒன்றைக் கொடுப்பார்கள். வீட்டில் இருந்து கொண்டு வந்திருக்கும் துண்டை விரித்து அதன் மீது படுத்துக் கொண்டால் படுக்கையின் ‘கப்பு’ அவ்வளவாகத் தெரியாது. அதற்கு அதிகமாக செலவு செய்யவும் எனக்கு மனசு வராது. அதனால் போதும் என்று நினைத்து பொன் செய்து விடுவேன். 

இவர் செய்திருக்கும் காரியம் படு ஆச்சரியம் எனக்கு. 

எதற்காக இவ்வளவு செய்கிறார் என்று யோசனையாக இருந்தது. 

‘எனக்கு அந்த ஹோட்டலில் கன்செஷன்ஸ் இருக்கு. அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க’ என்றார். ஹோட்டல்காரர்கள் இனாமாகவே கொடுத்தாலும் அதை வாங்கித் தருவதற்கு ஒரு மனசு வேண்டும் அல்லவா? அப்படியே மனசு இருந்தாலும் கொடுப்பதை வாங்கிக் கொள்வதற்கு நமக்கும் ஒரு தகுதி வேண்டும்.

‘வேண்டாம்’ என்று தவிர்க்கத்தான் முயற்சித்தேன்.

‘தினமும் நீங்கள் எழுதுவதை வாசிக்கிறேன். பணம் முக்கியமில்லை. இது ஒரு courtesy’ என்றார். இத்தனைக்கும் நாளை அவர் சென்னையிலும் இல்லை. ஏதோ ஒரு கருத்தரங்குக்காக வெளியூர் செல்கிறார். சந்திக்கப் போவதுமில்லை. 

அவரது சிரமங்களுக்காகவேண்டியாவது சனிக்கிழமை இரவே சென்னை வந்து அந்த அறையில் தங்கிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பாருங்கள். அலுவலகம் வரச் சொல்லிவிட்டார்கள். 

இன்று காலையில் ஹோட்டலுக்கு ஃபோன் செய்த போது ‘எப்பொழுது வருவீர்கள்?’ என்றார்கள். 

‘நாளை காலை’ என்றேன்.

‘நாளைக்கு காலை வந்து மாலையே காலி செய்துவிடுவீர்களா?’ என்றார். 

‘ஆமாம்’ என்று சொன்ன போது குற்றவுணர்வாகத்தான் இருந்தது. ஒரே ஒரு பகல் தங்குவதற்கு நாலாயிரத்து சொச்சம் செலவு. 

வெறும் பதின்மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாயை கடனாக வாங்கிக் கொண்டு திரும்பத் தரவில்லை என்பதற்காக அடுத்தவன் மண்டையை உடைத்த சண்டையை ஓரிரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் பார்த்தேன். சண்டை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் அறையின் வாடகை தொகைதான் பூதாகரமாக வந்து பயமுறுத்தியது.

எழுதுவதால் என்ன பயன் என்று யாராவது கேட்டால்  ‘இது’தான். நான்காயிரம் ரூபாயை விடுங்கள். பணம் வரும் போகும். ஆனால் முகமே தெரியாத மனிதர்களின் அன்பும் அனுசரனையும் கிடைக்கிறது பாருங்கள். அதுதான். 

நாளை மாலை சென்னையில் இருப்பவர்கள் நிச்சயம் வாருங்கள். சந்திக்கலாம்.

பேச்சோடு பேச்சாக இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன். சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று இந்த டிசம்பரில் வெளிவருகிறது அல்லவா? தலைப்பு கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’. 

தொகுப்பில் இருக்கும் கதைகள் யாவும் light reading short stories தான். ஜாலியான கதைகள். என்ன மாதிரியான கதைகள் என்பதனை தலைப்பு சொல்லிவிடும் என நம்புகிறேன். நன்றாக இருக்கிறதுதானே?

Nov 29, 2013

இப்படியேதான் கடைசி வரைக்கும் இருப்பீங்களா?

கார்த்திக் என்னை விட ஒரு வருடம் சீனியர். வயதிலும் சரி; படிப்பிலும் சரி. படிப்பை பொறுத்த வரைக்கும் சீனியர் மட்டுமில்லை- படு கெட்டியும் கூட. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெருநிறுவனத்தில் வேலை வாங்கி பெங்களூர் வந்து இன்றைய தேதிக்கு பத்து வருடங்கள் ஓடிவிட்டன. யாருக்கு என்ன நடந்தால் என்ன? காலம் நிற்கவா போகிறது? காலம்தான் ஓடிவிட்டது ஆனால் கார்த்திக்கினால் காலத்தின் வேகத்தோடு ஓடி வர முடியவில்லை. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாகவே நின்று கொண்டான்.

கார்த்திக்கின் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன்பாக- 

கார்த்திக்கை நான் பார்த்தது கூட இல்லை. அவனது அம்மாவிடம் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் பெங்களூர் வருவார். நான்கைந்து நாட்களுக்கு விவேக் நகரில் இருக்கும் ‘ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்’ல் தங்கிச் செல்வார். ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் என்றால் கிராமம் இல்லை. அபார்ட்மெண்ட்தான். எப்பொழுதோ இந்த ஊரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்த போது விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக நிறைய அபார்ட்மெண்ட்களை கட்டியிருக்கிறார்கள். போட்டிகள் முடிந்தவுடன் மற்றவர்களுக்கு விற்றுவிட்டார்கள். மரங்களும்,நிறைந்த குளுமையுமாக அட்டகாசமான அபார்ட்மெண்ட் அது. அங்குதான் கார்த்திக் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறான். 

கார்த்திக் எங்கள் நிறுவனத்தில்தான் வேலையில் இருந்தான். அவன்  எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அதே சமயத்தில் சேர்ந்தவர்கள் இன்றைக்கு சீனியர் டெலிவரி மேனேஜர்கள் ஆகிவிட்டார்கள். கார்த்திக்கைப் பற்றி அவ்வப்போது இவர்களிடம் பேசியிருக்கிறேன். ‘அவன் இங்கேயே இருந்திருந்தா இந்நேரம் டைரக்டர் ஆகியிருப்பான்’ என்பார்கள். அவ்வளவு திறமைசாலியாம். வேலையில் அடித்து நொறுக்கியிருக்கிறான். நிறையப் பேருக்கு ரோல் மாடலாகவும் இருந்திருக்கிறான். மீட்டிங்கில்‘கார்த்திக் மாதிரி இருங்கள்’ என்று மேனேஜர்கள் தயக்கமே இல்லாமல் சொல்வார்களாம்.

கார்த்திக்கின் அம்மா ‘நிசப்தம்’ வாசிப்பவர். ஒரு முறை விபத்தில் இறந்து போன மனிதரைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அந்தக் கட்டுரை ஏதோவிதத்தில் தன்னைச் சலனப்படுத்திவிட்டதாகவும் பெங்களூர் வரும் போது சந்திக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்ததால் நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக ஸ்போர்ட்ஸ் வில்லேஜூக்கு சென்றிருந்தேன். மழை தொடங்கியிருந்தது. அவர்களின் அபார்ட்மெண்ட்டைச் சுற்றிலும் மரங்கள் அதிகம் என்பதால் இருள் சற்று தடிமனாகவே கவ்வத் தொடங்கியிருந்தது.

வீட்டில் கார்த்திக்கின் அம்மா மட்டும்தான் இருந்தார். வேறு யாரும் இல்லை. கார்த்திக் அவரை விட்டுப் போய்த்தான் நான்கைந்து வருடங்கள் ஆயிற்றே. ‘இறந்துவிட்டான்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துவதேயில்லை. 

சொல்லவில்லை பாருங்கள்- கார்த்திக் விபத்தில் இறந்துவிட்டான். அவன் மிக வேகமாக வண்டி ஓட்டுவான் என்று அவர்களது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். வேகம் என்றால் மின்னல் வேகம். அப்படியான ஒரு வேகத்தில்தான் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டுவிட்டான். தலைவிரி கோலமாக அவனைக் கிடத்தி வைத்திருந்த மணிப்பால் மருத்துவமனைக்கு ஓடியதாக அவனது அம்மா சொன்னார். ஆனால் பெரிய பலனில்லை. அவர் சென்ற போது அத்தனையும் முடிந்திருக்கிறது. தனது உயிரைக் கொடுத்து வளர்த்திருந்த மகன் இந்த புவியை விட்டு விலகியிருந்தான். 

மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான். எல்லோருமே  அதனை எதிர்கொள்கிறோம். இருந்தாலும் பெரும்பாலான மரணங்களை பெரும்பாலானவர்கள் கடந்துவிடுகிறோம். ஆனால் கார்த்திக்கின் மரணத்தை அவனது அம்மாவால் கடக்கவே முடியவில்லை. பெருமலையாகவோ அல்லது பெருங்கடலாகவோ மாறி நின்றுவிட்டது. தலைவிரி கோலமாக தனது மகனின் மரணத்தை எப்படி எதிர்கொண்டாரோ அதே புள்ளியில் நின்றுவிட்டார். கிட்டத்தட்ட standstill.

அந்த வீடு கார்த்திக் இருந்த போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. படுக்கை விரிப்புகள் கூட மாற்றப்படவில்லை. அவன் பயன்படுத்திய கம்ப்யூட்டர், டேபிள், அவன் ஒட்டி வைத்திருந்த நிழற்படங்கள் என அத்தனையும் அப்படியே இருக்கின்றன. அவனது வாழ்வின் இறுதி நொடிகளைத் தனது சக்கரத்தில் சுமந்து சென்ற பைக்கை வீட்டின் வரவேற்பறையிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார். 

கார்த்திக்கின் அம்மாவிடம் பேசுவதற்கு ஒரே விஷயம்தான் இருக்கிறது. ‘கார்த்திக்’. அங்கிருந்த நாற்பது நிமிடங்களும் அவனது நிழற்படங்களைக் காட்டினார். அவனது நண்பர்களைப் பற்றி பேசினார்- அந்த நண்பர்களில் ஒருவர் எனக்கு இப்பொழுது மேனேஜர். இன்னொருவர் முன்னாள் மேனேஜர்,  கார்த்திக்குக்கு நிகழ்ந்த விபத்து பற்றி பேசினார், அவனது எழுத்து பற்றிச் சொன்னார், அவனது ஆர்வங்கள் குறித்து உற்சாகமடைந்தார். 

அவனது மின்னஞ்சல்களிலும், அவனது வலைப்பதிவிலும், அவனது டைரிகளிலும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை புரட்டிக் கொண்டிருக்கிறார். ‘தனக்கான செய்தி’ எதையாவது இந்த எழுத்துக்களில் விட்டுச் சென்றிருப்பான் என்று இன்னமும் துழாவிக் கொண்டிருக்கிறார். இனியும் அதையேதான் தொடர்வார். இதுதான் அவரது வாழ்க்கை. இதுதான் அவரது உலகம்.

தனது உலகத்தை ஒட்டுமொத்தமாகச்  சுருட்டி ஒற்றை பெயருக்குள் வைத்துக் கொண்டிருந்த அந்த அம்மையாரைப் பார்க்கும் போது எனது பெரும்பாலான வார்த்தைகள் வறண்டு போய்விட்டன. தனது வாழ்க்கையின் மிச்சக்காலம் முழுவதையும் இப்படியே கழிக்கப் போகிறேன் என்ற அவரது வைராக்கியம் சற்று அச்சமூட்டுவதாக இருந்தது. தனக்கான அத்தனை சிறகுகளையும் கத்தரித்துக் கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதைப் போன்ற வதை உலகில் வேறு எதுவும் இல்லை. அதை அவர் சர்வசாதாரணமாகச் செய்து கொண்டிருக்கிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது பயத்தில் அவ்வப்போது எச்சிலை விழுங்கிக் கொண்டேன். அவரது கண்களை நேருக்கு நேராக பார்ப்பதைத் தவிர்த்தேன்.

பேச்சுவாக்கில் அவனது நினைவிலேயே நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நாட்கள் மட்டும்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் உருக்குலைந்து போயிருக்கிறார். அவர் காட்டிய பழைய நிழற்படங்களில் இருந்ததற்கும் தற்போதைய உருவத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறார்.  ஐந்தாறு வருடங்களில் முடி மொத்தமாக நரைத்து கண்கள் குழிவிழுந்து, தோல் சுருங்கி தனது உருவத்துக்கும் வயதுக்கும் சம்பந்தமேயில்லாமல் மாறிவிட்டார். ஒவ்வொரு மாதமும் டிபன் பாக்ஸில் தக்காளிச்சாதமோ அல்லது எலுமிச்சை சாதமோ எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து பெங்களூர் வந்துவிடுகிறார். தனது மகன் வாழ்ந்த வீட்டில், தனது மகனின் மூச்சுக் காற்று நிறைந்த இந்த இடத்தில் நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு திரும்பச் செல்கிறார். யாருமே இல்லாத வீட்டில் அவரும் கார்த்திக்கும் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவனது தலையை தனது மடி மீது வைத்து வருடுகிறார். அவனுக்கு ஊட்டி விடுகிறார். அவன் உற்சாகமாக வீட்டிற்குள் அலைந்து கொண்டிருக்கிறான். நான்கைந்து நாட்களில் அவர் திரும்பச் சென்றவுடன் அந்த வீட்டின் மீது பெரும் அமைதி கவிகிறது. அங்கு கார்த்திக் தனிமையில் தனது அம்மாவுக்காக காத்திருக்கக் கூடும். இந்த உலகம் புரிந்து கொள்ள முடியாத தனிமை அது.

Nov 26, 2013

தினமும் எதையாவது எழுத முடியுமா?

இணையத்தில் எழுதும் போது consistency மிக முக்கியம் என நினைக்கிறேன். தினமும் எழுதுவது அத்தனை சுலபமில்லைதான். ஆனால் அது ஒன்றும் சாத்தியப்படாத காரியமும் இல்லை. முதல் நான்கைந்து மாதங்களுக்கு தினமும் எழுதுவதில் பெரிய சிரமம் இருக்காது. வாத்தியார் அடித்தது, டீச்சர் கொட்டியது, முதல் காதல், கல்லூரி வாழ்க்கை, நெருங்கிய மரணம் என்று சிறு வயதிலிருந்து நம் மண்டைக்குள் கிடப்பதையெல்லாம் எழுதிவிடலாம். அதன் பிறகு ஒரு வறட்சி வரும் பாருங்கள். எழுதுவதற்கு ஒன்றுமே இல்லாமல் தீர்ந்துவிட்டது போலத் தோன்றும். மனம் ஏதோ பாலைவனம் ஆகிவிட்டது போலவே இருக்கும். இனிமேல் எந்தக் காலத்திலும் எழுத மாட்டோம் என்றுதான் நினைப்போம். ஆனால் அதிக நாட்களுக்கு இந்த வறட்சி நிலவாது. ஓரிரண்டு மாதங்கள்தான். ஆனால் இந்த வறட்சிக்காலத்தில் எப்படி தப்பிக்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது என நம்புகிறேன்.

பிடித்த புத்தகங்களை வாசித்து அதைப் பற்றி எழுதுவது, பயணத்தின் மூலமாக அனுபவங்களைத் தேடுவது என்று எப்படியாவது survive ஆகிவிட வேண்டும். அப்படி தப்பித்து விட்டால் தினமும் எழுதுவது என்பது நம்முடைய தினசரி பழக்கமாகிவிடக் கூடும்- குளிப்பது மாதிரியோ அல்லது தம் அடிப்பது போலவோ. எழுதுவதை பொறுத்தவரை பழக்கம் என்பதையும் தாண்டி அதற்கு அடிமையாகிவிடுவது உசிதம். addicted. அதுவும் பெரிய சிரமம் இல்லை. இன்னும் கொஞ்ச நாளைக்கு தொடர்ந்து எழுதியபடியே இந்தப் பழக்கத்தை இழுத்துப் பிடித்தால் addicted ஆகிவிடலாம். அவ்வளவுதான்.

அடிக்ட் ஆகிவிட்ட பிறகு மிகப்பெரிய பிரச்சினையிலிருந்து தப்பித்துவிடுவோம். ‘எதை எழுதுவது’ என்ற முக்கியமான பிரச்சினையைச் சொல்கிறேன். எழுதுவதற்கு வேண்டிய கச்சாப் பொருளை நம்மையும் அறியாமல் மனம் தேடத் துவங்கிவிடுகிறது. அதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் எழுதுவதற்கான ‘மேட்டர்’ கிடைத்துவிடும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான முகங்களை பார்க்கிறோம். அதுமட்டுமில்லை. சண்டை, விபத்து, திருமணம், கொண்டாட்டம், துக்கம், அதிர்ச்சி என்று தினமும் ஒரு முக்கியமான நிகழ்வையாவது எதிர்கொள்கிறோம். இவை தவிர, பத்து ரூபாயைத் தொலைத்துவிட்டு அழும் சிறுவன், அப்பாவிடம் அடி வாங்கிவிட்டு அழும் சிறுமி, வகுப்பறையின் வெளியே மண்டியிட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகள், முதலமைச்சரின் அறிக்கை, பிரதமரின் மெளனம் என தினமும் எதிர் கொள்ளும் ஆனால் விரைவில் மறந்துவிடக் கூடிய செய்திகள் நூற்றுக் கணக்கில் கண் முன்னால் வந்து போகின்றன. இவற்றை எல்லாம் addict ஆகிக் கிடக்கும் ஆழ்மனம் பற்றிக் கொள்ளும். 

இப்படி பற்றிக் கொண்ட செய்திகளைக் கட்டுரை ஆக்குவதும் ரொம்ப சிம்பிள். பயிற்சி இருந்தால் போதும். எழுதுவது என்பதே வெறும் பயிற்சிதான். சென்ற மாதத்தில் எழுதிய கட்டுரைகளை இன்றைக்கு வாசிக்கும் போது போரடித்தால் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வேன். அதுவே,  இன்றைய கட்டுரை முந்தைய கட்டுரைகளை விட சுவாரசியம் இல்லாமல் இருப்பதாகத் தெரிந்தால் எங்கோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இப்போதைக்கு மட்டுமில்லை எப்போதைக்குமே சுவாரசியம்(Readability) என்பதைத்தான் அளவுகோலாக வைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆயிரம் பிரச்சினைகளோடு நமது எழுத்தை வாசிக்க வருகிறார்கள். நமக்கு வளைத்து வளைத்து எழுதத் தெரியும் என்பதையெல்லாம் அவர்களிடம் ஏன் நிரூபிக்க வேண்டும்? 

சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் ‘எழுதுவதற்கு அடிமையாதல்’ என்பதை முயற்சிக்கும் போது சில பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். வீட்டில் திட்டுவார்கள். குடும்பத்திற்கான நமது நேரம் குறையும். வண்டியில் போகும் போதும் வரும் போதும் கவனம் சிதறும். வேலையில் கொஞ்சம் பிசகுவோம். ஆனால் கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் சிலவற்றை அடையவே முடியாது.  எழுத்துக்காக இவற்றை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளலாம். அவ்வளவுதான்.

இதை வாசித்துவிட்டு ‘ஒன்றரை வருஷம் எழுதற இவன் எல்லாம் டகால்ட்டி ஆகிவிட்டான். ஐடியா கொடுக்கிறான் பாரு’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். எழுத்தை தவமாக அல்லது எழுத்தை புனிதமாகச் செய்து கொண்டிருக்கும் அல்லது செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும் யாரும் இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இப்பொழுதெல்லாம் ‘தினமும் எழுதுவதற்கு எப்படி முடியுது?’ என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்கிறேன். அந்தக் கேள்வியை எழுப்பியவர்களுக்கான பதில்தான் இது. 

ஒருவருக்காவது நமது அனுபவம் உதவும் என்றால் நல்லதுதானே?

ஏழு கோடி தமிழர்களில் குறைந்தபட்சம் ஒரு கோடி பேர்களாவது இணையத்தில் புழங்குபவர்களாக இருக்கக் கூடும் என நம்புகிறேன். இதில் சினிமா மற்றும் செய்திகள் தவிர்த்த பிற தமிழ் இணையதளமோ அல்லது வலைப்பதிவோ அதிகபட்சம் எத்தனை ஹிட் அடிக்கும் என்று நினைக்கிறீர்கள்? தினமும் ஐந்தாயிரத்தில் இருந்து பத்தாயிரம். அவ்வளவுதான். இன்னும் தொண்ணூற்று ஒன்பது லட்சத்து தொண்ணூறாயிரம் பேர் பாக்கியிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் இழுத்துப் பிடிக்கவும், மிச்சமிருக்கும் ஆறு கோடி பேர்களும் இணையத்திற்குள் வரும் போது அவர்களுக்கு தேவையான தீனி போடவும் என்று கணக்குப் பார்த்தால் இன்னும் பல லட்சம் பேர் எழுத வந்தாலும் எழுதுபவர்களுக்கான தேவை இருந்து கொண்டேதான் இருக்கும். 

இங்கு பொறாமையே இல்லாமல் எழுதலாம். யாரைப் பற்றியும் கவலையே பட வேண்டியதில்லை. இணையத்தில் மட்டுமில்லை எந்த ஊடகத்தில் அவரவரின் எழுத்து அவரவருக்கு. கதிர்பாரதி எழுதுவதை கணேசகுமாரன் எழுத முடியாது. ஜ்யோவ்ராம் சுந்தர் எழுதுவதை வா.மு.கோமு எழுத முடியாது. அப்புறம் எதற்கு அடுத்தவரைப் பார்த்து பயப்பட வேண்டும். பொறாமையும் பயமும் இங்கு அவசியமே இல்லை. 

இணையத்தில் எழுதும் போது வேறு சில விஷயங்களையும் கண்டிப்பாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் -

அச்சு ஊடகத்தைப் பொறுத்த வரையில் எழுதுபவனுக்கும், வாசிப்பவருக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி உண்டு. எழுத்தாளன் என்ற பிம்பத்திற்கு நிறைய மரியாதை உண்டு. இணையத்தில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதுபவர்கள் அல்லது தன்னால் எழுத முடியும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். இவர்களிடம் நமது ‘அறிவுஜீவி’ பிம்பத்தை உருவாக்க முயற்சித்தால் பொடனியிலேயே அடி விழும். தான் மட்டுமே பெரியவன் என்று ஸீன் காட்டினால் கழுத்து மீதே குத்துவார்கள். அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. அதிக பட்சம்- பத்து நிமிடங்களில் இந்த அடி விழுந்துவிடும்.

ஆனாலும் அடங்கி இருக்க முடியுமா? நான்கு பேர் மின்னஞ்சல் அனுப்பினால் கூட நமது ஈகோ லேசாகத் துருத்தத் துவங்கும். அடுத்தவர்களை விடவும் நாம் ஒரு படி மேலே என்ற நினைப்பு வரும். முடிந்தவரையில் இந்த ஈகோவை கத்தரித்துவிடுவது நல்லது. கத்தரிப்பது அவ்வளவு சுலபம் இல்லைதான். குறைந்தபட்சம் சுருட்டியாவது வைக்கலாம். 

இன்னொரு விஷயம்- வசவுகளும், திட்டுக்களும். இதைத் தாண்டுவதுதான் மிகப் பெரிய விஷயம். போகிற போக்கில் ‘புளிச்’ என்று உமிழ்ந்துவிட்டு போவார்கள். சாணத்தை உருண்டை பிடித்து ‘சத்’ என்று முகத்திலேயே எறிவார்கள். ‘நான் கஷ்டப்பட்டு எழுதுகிறேன். இவன் யார் கேள்வி கேட்பது; இவன் யார் நக்கலடிப்பதற்கு’ என்று தோன்றும். ஆனால்  பதில் சொல்வதைவிடவும் முடிந்தவரைக்கும் பற்களைக் கடித்துக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் பலன் தரும். ஆயிரம் பேர் திட்டிக் கொள்ளட்டும். நமக்கு என்ன ஆகிவிடப் போகிறது? காதுகளை மூடிக் கொண்டு நம் வழியை பார்த்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்போம்- அதுவும் வெறித்தனமாக. மற்றது எல்லாம் தானாக நடக்கும்.

Nov 25, 2013

கரும்பு மெஷினுக்குள் தலையை விட முடியுமா?

ஒரு பெண் குழந்தை. ஆறாம் வகுப்பிலோ அல்லது ஏழாம் வகுப்பிலோ படித்துக் கொண்டிருக்கிறாள். அவளது பெற்றோர்கள் உள்ளூரில் இல்லை. கல் உடைக்கும் வேலைக்காக ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் ஊருக்கு வருவார்கள். அந்தப் பெண்ணும் அவளது தம்பி மட்டும் தர்மபுரிக்கு பக்கத்தில் வசிக்கிறார்கள். வெறும் வயிற்றோடு பள்ளிக்குச் செல்வார்கள். மதிய உணவுக்கு சத்துணவு. இரவில் வந்து எதையாவது வேகவைத்து வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். பிறகு கதவைத் தாழிட்டுக் கொண்டு படுத்துக் கொள்வார்கள்.  அதைக் கதவு என்று கூட சொல்ல முடியாது. ஒரு தகரம். அவ்வளவுதான்.

பெயருக்குத்தான் பள்ளிக்கு போகிறார்கள். அ, ஆ, இ, ஈ கூட வாசிக்கத் தெரியாது. உடல் சற்று உறுதியானவுடன் படிப்பை நிறுத்திவிட்டு பெற்றோருடன் கல் உடைக்கச் சென்றுவிடுவார்கள். அடுத்த ஓரிரு வருடங்களில் யாருக்காவது கட்டி வைத்துவிடுவார்கள். அவன் மட்டும் என்ன செய்யப் போகிறான்? ‘தன்னோடு வா’ என்று கல் உடைப்பதற்கு அழைத்துச் சென்றுவிடுவான். அவர்களின் பிள்ளைக்கும் இதே விதிதான் இம்மி பிசகாமல் எழுதப்பட்டிருக்கும். இப்படி ஒன்றில்லை- நூறு கதைகளைப் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது -கடந்த வெள்ளிக்கிழமை.

இந்த இடத்தில் ‘வாழை பற்றிச் சொல்லிவிடுவது உசிதம். 

இதுவரைக்கும் வாழை பற்றி எனக்கு பெரிதாகத் தெரியாது. கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ரீனி, திரு போன்ற பெங்களூர் நண்பர்கள் ‘வாழை’ ‘வாழை’ என்பார்கள். ஆனால் அவ்வளவாக அலட்சியம் செய்ததில்லை. ‘பத்தோடு பதினொன்று அதோடு இது ஒன்று’ என்று நினைத்துக் கொள்வேன். இப்படி குருட்டுத்தனமாக நாம் எதையாவது நினைத்துக் கொண்டிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் அந்த நினைப்பு தவிடு பொடியாகிவிடுமல்லவா? அப்படித்தான் நடந்தது.

ஓரிரு வாரங்களுக்கு முன்பாக வெங்கட் அழைத்திருந்தார். அவர் வாழை அமைப்பின் உறுப்பினர். முதல் முறையாக பேசுகிறோம். ‘தர்மபுரிக்கு அருகில் பள்ளிகளுக்கு இடையிலான சில போட்டிகளை நடத்துகிறோம் வர முடியுமா’ என்றார். ‘வர முடியாது’ என்று சொல்லும் அளவுக்கு நான் என்ன பெரிய அப்பாடக்கரா? வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அலுவலகம்தான் தனது பெருவாய்க்குள் என்னை இறுகக் கவ்விப் பிடித்திருந்தது. வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என்றால் ஒட்டுமொத்த அலுவலகக் கட்டடத்தையும் வெடி வைத்துத் தகர்க்க வந்தவனைப் போல பார்க்கிறார்கள். நல்லவேளையாக வெள்ளிக்கிழமை காலையில் ‘படுக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது’- இப்படி அலுவலகத்தில் சொல்லிவிட்டு வாழை அமைப்பினரோடு வண்டி ஏறிக் கொண்டேன். அலுவலகத்தில் நான் சொன்னதை நம்பிக் கொண்டார்கள். அப்பாவிகள்.

ஆறு பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் அது. அனைத்துமே அரசு பள்ளிகள். ஏரியூரிலும், நெருப்பூரிலும், சின்ன வத்தலாபுரத்திலும் இருக்கும் அரசு பள்ளிகளில் கலெக்டரின் மகனும், எம்.எல்.ஏவின் மகளுமா படிப்பார்கள்? எளிய மனிதர்களின் பிஞ்சுகள் அவை. அந்தக் குழந்தைகளின் முகத்தை ஒரு முறை நேருக்கு நேர் பார்த்தால் கூட கண்கள் கலங்கிவிடும். விகல்பம் இல்லாத நீரோடைகள் அந்தக் குழந்தைகள். அவற்றின் மிரட்சியான பார்வையும், பயம் கலந்த வார்த்தைகளும் நெகிழச் செய்துவிடும். அந்தக் குழந்தைகளுக்கான போட்டிகளுக்காகத்தான் இந்த ஏற்பாடுகள். தர்மபுரியிலிருந்து ஓகேனக்கல் செல்லும் வழியில் உள்ள ஏரியூர் என்ற சிற்றூரில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். 

பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என்று வழக்கமான போட்டிகள்தான். கவிதைப் போட்டிக்குத்தான் என்னை நடுவராக இருக்கச் சொன்னார்கள்.  என்னைக் கவிஞன் என்று நம்பிய அந்த நல்ல உள்ளங்கள் வாழ்க சில நூற்றாண்டுகள் என்று மனசுக்குள் வாழ்த்தியபடியே அமர்ந்திருந்தேன். பெயருக்குத்தான் கல் உடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயக் கூலிகளின் பிள்ளைகள். அந்த வயதில் நான் கிறுக்கிய குப்பைகளை விட பன்மடங்கு நல்ல கவிதைகளை எழுதியிருந்தார்கள். இதை ஃபார்மாலிட்டிக்காகச் சொல்லவில்லை. நிஜமாகவே அந்த குழந்தைகளின் வயதையும், வாழும் சூழலையும் பொருட்படுத்தும் போது அவை ஆகச் சிறந்தவை. கலக்கிக் கொண்டிருந்தார்கள்.

இப்படியே அந்த மண்டபத்தின் வெவ்வேறு இடங்களில் மற்ற போட்டிகளை எல்லாம் நடத்திவிட்டு பரிசளிக்கும் விழாவில் என்னையும் இன்னொரு ஆசிரியரையும் மேடைக்கு அழைத்துவிட்டார்கள். பரிசளிக்க வேண்டுமாம். மற்றவரவாவது தமிழாசிரியர். என்னை எதற்கு மேடைக்கு அழைத்தார்கள் என்று படு குழப்பமாக இருந்தது. தன்னடக்கம் என்றெல்லாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. உண்மையிலேயே ‘வாழை’ அமைப்பினரோடு ஒப்பிட்டால் நான் பத்து பைசா பெற மாட்டேன் என்று தெரியும். அந்த அளவிற்கு அவர்கள் தகுதியானவர்கள். 

அவர்கள் வெறும் போட்டிகளை மட்டும் நடத்துவதில்லை. இந்த அமைப்பில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் நாற்பது பேர் mentorகளாகச் செயல்படுகிறார்கள். இந்த ஒவ்வொரு Mentor ம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்கிறார்கள். இந்த தத்தெடுத்தலை பெயருக்குச் செய்வதில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அதே திருமண மண்டபத்தில் சந்திக்கிறார்கள். தாம் தத்தெடுத்துக் கொண்ட குழந்தையோடு இரண்டு நாட்களை முழுமையாகச் செலவிடுகிறார்கள். இடையில் வாரம் ஒரு முறையாவது அந்தக் குழந்தையோடு தொலைபேசி, அஞ்சல் என்று தொடர்பில் இருக்கிறார்கள்.  பத்தாம் வகுப்பு வரை அந்தக் குழந்தை சரியான பாதையில் செல்வதற்கும், படிப்பை பாதியில் விட்டு நின்றுவிடாமல் தொடர்வதற்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். இது மட்டுமில்லை- இன்னும் என்னனென்னவோ செய்கிறார்கள்.

எவ்வளவு பெரிய விஷயம் இது? நாலணாவுக்கு கூட சமூகத்துக்கு பிரயோஜனம் இல்லாதவனெல்லாம் இந்த நாட்டையே கட்டிக் காக்க வந்தவன் போல அரற்றிக் கொண்டிருக்கும் போது போக்குவரத்துச் செலவிலிருந்து அத்தனையும் கைக்காசு போட்டு வந்து குழந்தைகளோடு நாட்களைக் கழிக்கிறார்கள். இத்தனையும் செய்துவிட்டு சப்தம் இல்லாமல் இருக்கிறார்கள். 

அந்த மண்டபத்தில் அவர்கள் சுற்றிச் சுழன்றதை பார்த்திருக்க வேண்டும்- பார்த்த எனக்கே கால் வலித்தது. 

இதையெல்லாம் பார்த்தால் நாமும் வாழ்நாளில் ஒரு குழந்தைக்காவது Mentor ஆக இருக்க வேண்டும் என்று தோன்றியது. வீட்டில் இதைச் சொன்னால் முதல் வாக்கியம் என்ன வரும் என்று தெரியும். ‘முதலில் உங்க பையனுக்கு Mentor ஆகுங்க. அப்புறம் பார்க்கலாம்’ என்பார்கள். இப்போதைக்கு அடக்கி வைத்திருக்கிறேன். 

வெள்ளிக்கிழமை போட்டிகள். சனி,ஞாயிறு மேற்சொன்ன வொர்க்‌ஷாப். மூன்று நாட்களும் தங்கியிருந்து குழந்தைகளின் செயல்பாட்டை பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன?

வெள்ளிக்கிழமை மாலையே கரும்பு மெஷின்காரர் அழைத்தார். அவருக்கு ப்ராஜக்ட் மேனேஜர் என்ற பெயரும் உண்டு. 

‘மணி, சாரி டூ டிஸ்டர்ப் யூ’- தொடங்குவது மட்டும்தான் இப்படித் தொடங்குவார்கள் என்றுதான் நமக்குத் தெரியுமே. அவர்களா அப்பாவிகள்? நான்காம் பத்தியில் அவர்களுக்கு கொடுத்த சர்டிபிகேட் வாபஸ். படுபாவிகள்.

‘இட்ஸ் ஓகே. சொல்லுங்க’ என்றுதான் நாம் ஆரம்பிக்க வேண்டும். அதுதான் மேனர்ஸ்.

‘நாளைக்கு ஒரு ப்ரொடக்‌ஷன் வேலை இருக்கு. வர முடியுமா?’ என்றார். அதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார். 

‘உனக்கு உடம்பு சரியில்லைன்னு தெரியும். சனிக்கிழமை விடுமுறைதான். ஆனாலும் வேறு வழியில்லை. வர முடியுமா?’ இவர்களிடம் எப்படி முடியாது என்று சொல்வது? 

‘கரும்பு மெஷினுக்குள் தலையை விட முடியுமா?’ என்று கேட்பது போலவே இருக்கும். சரி என்று சொல்லிவிட்டு அப்பொழுதே கிளம்பினேன். 

கிளம்பும் போது ‘விழாவில் ஏதாச்சும் குறை இருந்தா சொல்லுங்க’ என்று கேட்டார்கள்.

‘குறையா? ஒவ்வொருத்தரும் காலைக் கொடுங்க பாஸ். தொட்டுக் கும்பிட்டுக்கிறேன்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வண்டியேறினேன். 

Nov 24, 2013

அப்படியே மண்டைக்குள் ஊறணும்

ஊரில் ஒரு நடுத்தர வயதுக்காரர் இருக்கிறார். அவருக்கு இளம் மனைவியும் உண்டு- பெயர் கிருஷ்ண வேணி. குழந்தைகள் பெற்றுக் கொண்டு ஒழுங்காக போய்க் கொண்டிருக்கும் குடும்பத்தில் சடாரென்று கடும் புயல் அடிக்கிறது. இளம் மனைவிக்கும் கொண்சீ என்று அவளால் செல்லமாக விளிக்கப்படும் குணசேகரனுக்கும் காதல் உருவாகிவிடுகிறது. கொண்சீ உள்ளூரில் இருக்கும் டீக்கடையில் வேலை செய்கிறான். சிறுவயதிலேயே அப்பாவின் அடி பொறுக்கமாட்டாமல் ஊரைவிட்டு ஓடி வந்த காலத்திலிருந்து இந்தக் கடையில்தான் வேலையில் இருக்கிறான். இதுவரைக்கும் ஒழுக்கமாகத்தான் இருந்தான். கொண்சீக்கும் அவளின் கணவர் ரத்தினத்துக்கும் நல்ல பழக்கம் உண்டு. அவரைப் பார்ப்பதற்கு வீட்டுக்கு போய் வருவான். முதலில் கொண்சீக்கும் அவளுக்கும் வெறும் பேச்சுவார்த்தைதான். ஆனால் இதெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். பிறகு அவன் தனது வீட்டுக்கு வரும் போது தனது ஆடைகள் விலகியிருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது போன்ற அவனோடு நடத்தும் சீண்டல்கள் எல்லை மீறி அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருக்கும் பண்டகசாலையில் அவனை அவள் அனுமதிக்கிறாள்- முழுமையாக.

வந்தவன் வட்டிலில் வாயை வைத்தால் வீட்டுக்காரன் அமைதியாக இருப்பானா? ரத்தினம் தனது மனைவியை கண்டிக்கிறார். அவளுக்கு அடியும் விழுகிறது. விவகாரம் வெளியில் கசிந்து கொண்சீ வேலை செய்யும் கடையின் முதலாளி அவனுக்கு அறிவுரை சொல்கிறார். அடி பொறுக்கமாட்டாமல் ‘இனி என்னைப் பார்க்க வேண்டாம்’ என அவளும் சொல்லிவிட கொண்சீக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘என்னோடு வா’என்கிறான். குழந்தைகளை விட்டு வர முடியாது என்கிறாள். அசுபயோக அசுபதினத்தில் அதிகாலையில் அவளது வீட்டு முன்பாக கெரசினை ஊற்றிக் கொளுத்திக் கொள்கிறான். அவனைப் பார்ப்பதற்கு அவள் வெளியே போக முயற்சிக்கும் போது ரத்தினம் ஓங்கி அறைகிறான். வீட்டைப் பூட்டிக் கொண்டு மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போகிறான். கொண்சீயின் உடலைத் திரும்பிப் பார்த்தபடியே மிரட்சியோடு நடக்கிறாள் அவள்.

அழகிய பெரியவனின் ‘நெரிக்கட்டு’ தொகுப்பில் முதல் கதையே இதுதான். இப்படி இரண்டு பத்தியில் நாம் கதையைச் சொல்லும் போது வெறும் கள்ளக்காதல் கதைதான் என்று தெரியும். ஆனால் அழகிய பெரியவன் தனது கதையை சொல்லும் நேர்த்தி க்ளாஸிக்.  ‘ஒரு ஊரில் ஒருத்தன் இருந்தானா.....’ என்று ஆரம்பித்து கதையை நேர்கோட்டில் சொல்வது ஒரு வித்தை என்றால், அழகிய பெரியவனின் வித்தை வேறு மாதிரி. க்ளைமேக்ஸூக்கு முந்திய காட்சியை வைத்துத்தான் கதையே தொடங்குகிறது.  மொத்தக் கதையையும் நான்கைந்து துண்டுகளாக கத்தரித்து அவற்றை வரிசை மாற்றி அடுக்கி வைத்திருக்கிறார். ஆனால் வாசிக்கும் போது துளி கூட சிரமம் இல்லாமல் நகர்கிறது. இது ஒரு கதை மட்டும்தான் உதாரணம் இல்லை.

மொத்தம் பன்னிரெண்டு கதைகள். ஒவ்வொன்றுமே ஏதாவது விதத்தில் வித்தியாசமாக இருக்கிறது. 

அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். வேலூர் மாவட்டம் பேராணம்பட்டைச் சேர்ந்தவர். இப்பொழுதும் அங்குதான் வசிக்கிறார் என நினைக்கிறேன். அவரின் கவிதைத் தொகுப்புகளை வாசித்ததுண்டு; ஆனால் அவற்றை விடவும் சிறுகதைகள்தான் பிடித்திருக்கின்றன. பிடித்திருக்கின்றன என்பதை விடவும் மிகப் பிடித்திருக்கின்றன என்பது பொருத்தமாக இருக்கக் கூடும்.

அழகிய பெரியவனின் கதையின் பாத்திரங்கள் எல்லோருமே மிக எளிமையான மனிதர்கள்தான். ஒழுகும் வீட்டில் வசிப்பவர்கள், செருப்புத் தைப்பவர், தோல் பதனிடும் தொழிற்சாலையிம் கடும் உழைப்பைக் கொடுக்கும் வயதான மனிதர், பீடி சுற்றுபவர்கள், சாய்பு வீட்டு பண்ணையத்தில் இருப்பவர்கள் என்று ஒவ்வொருவருமே வாழ்வின் அடித்தட்டு மனிதர்கள்தான். தொகுப்பின் முக்கியமான அம்சம்- இவர்கள் யாவருமே தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் கதையில் எந்த இடத்திலும் அவர்கள் தலித் என்பது துருத்திக் கொண்டிருப்பதில்லை. இந்த துருத்தலின்மையின் வழியாகவே அவர்களின் வலியை நமக்குள் பாய்ச்சிவிடுகிறார்.

வெறும் வலிகளால் மட்டும் நிறைந்ததில்லை இந்தத் தொகுப்பு. 

யட்சிணி என்றொரு கதை. ஒருவன் ஒரு பெண்ணைத் தழுவும் போது ‘ஒளி’ என்கிறாள். அவள் பாலியல் தொழிலாளி. அவன் பெயர் ஒளிச்சந்திரன். அவனது பெயரைத்தான் சொல்லியிருக்கிறாள். இதற்கு முன் அவளோடு தொடர்பு எதுவும் இருந்ததில்லை. அவளுக்கு அவனைத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவனுக்கு அவள் யாரென்றே தெரிவதில்லை. தனது வாழ்நாளில் எதிர்கொண்ட வெவ்வேறு பெண்களின் முகங்களை கற்பனை செய்து பார்க்கிறான். அந்த ஒவ்வொரு முகமும் இவளோடு பொருந்திப் போகிறது என்றாலும் ‘அவள்தான் இவள்’ என்று முடிவு செய்ய முடிவதில்லை. இப்படியே கதையின் முடிவு வரைக்கும் ஒளிச்சந்திரன் ஒவ்வொரு முகமாகக் கற்பனை செய்கிறான்; அந்த ஒவ்வொரு முகத்தோடும் ஒரு கிளைக்கதை விரிகிறது. ஒருவிதமான ஃபேண்டஸி கதை இது.

இப்படியே ஒவ்வொரு கதையாகச் சொல்லிப் போனால் வாசிக்கும் போது உங்களுக்குத் த்ரில் இல்லாமல் போய்விடக் கூடும். வாய்ப்பு கிடைத்தால் தொகுப்பை நிச்சயம் வாசித்துவிடுங்கள். உயிரிடம் கதையில் வரும் அன்னமும், கண்காணிக்கும் மரணம் கதையில் வரும் ரகுபதியும், உள்ளூர் அளவில் நடைபெறும் அரசியலைப் பேசும் யாரும் யாரையும் கதையில் வரும் வேல்முருகனும், மனோகரனும், பால்மறதியில் வரும் ஏலாசியும், மின்றாவும், கண்மணியும் ஏதாவது ஒரு வகையில் நம்மைச் சலனப்படுத்திவிடுவார்கள். 

இந்தத் தொகுப்பை ஒரே நாளில் வாசிப்பதில் பெரிய சுகம் இல்லை. முதலில் ஒரு கதையை வாசிக்க வேண்டும். பிறகு மூடி வைத்துவிட வேண்டும். கதையின் களமும் கதை மாந்தர்களும் அடுத்த ஓரிரண்டு நாட்களுக்காவது மண்டைக்குள் ஊறிக் கொண்டே கிடக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களில் அவர்கள் எப்படியும் நம் மனதுக்குள் கிடக்கும் இண்டு இடைவெளிகளில் நுழைந்து தங்களுக்கான இடத்தை பிடித்துக் கொள்வார்கள். பிறகு அடுத்த கதையைத் தொடங்க வேண்டும். 

இந்தக் கதைகளில் இன்னொரு முக்கியமான அம்சமாகத் தெரிவது கதையின் அழகியல். அழகியல் என்று வர்ணனைகளைச் சொல்கிறேன். ஒரு இடத்தை வர்ணிப்பதென்றாலும், மனிதர்களின் மனநிலையை வர்ணிப்பதென்றாலும் அழகிய பெரியவனுக்கு சர்வசாதாரணமாக கைவருகிறது. அதை ஒரு கலையாகவே செய்கிறார்.

இந்தத் தலைமுறையின் சிறுகதை எழுத்தாளர்களில் அழகிய பெரியவன் மிக முக்கியமானவர் என்று நம்புகிறேன். அழகிய பெரியவனின் கதைகளை ஏற்கனவே வாசித்தவர்களுக்கு இந்த நம்பிக்கை ஏற்கனவே வந்திருக்கும். ஒருவேளை வாசித்திருக்கவில்லை என்றால் தொகுப்பு ஆன்லைனில் கிடைக்கிறது. வாசித்துவிடுங்கள். பிறகு முந்தய வரியில் இருக்கும் எனது நம்பிக்கை உங்களுக்கும் வந்துவிடக் கூடும்.

Nov 23, 2013

மூன்றாம் உலகம்

எங்கள் அலுவலக இருக்கும் வளாகத்தில் வேறு சில நிறுவனங்களும் இருக்கின்றன. அத்தனையும் ஐ.டி நிறுவனங்கள்தான். இப்படியான பெருநிறுவனங்கள் இருக்கும் வளாகங்களில் மதியம் இரண்டு மணிக்கு மேல் கவனித்திருக்கிறீர்களா? ஆசுவாசமான வேறொரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். அது Cab driverகள் உருவாக்கிய இரண்டாம் உலகம். 

தலைப்புக்கும் கட்டுரைக்கும் இது மட்டும்தான் சம்பந்தம். சினிமா விமர்சனம் என்று நினைத்து தெரியாத்தனமாக உள்ளே வந்துவிட்டவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டாம். வாசித்தாலும் கூட பரவாயில்லை. கடைசியில் கண்டபடிக்கு சாபம் விட்டுவிடுவார்கள். அதுதான் பிரச்சினை.

சாபம் விடாதவர்கள் மட்டும் அடுத்த பத்திக்கு நகரவும்.

டிரைவர்களின் அந்த இரண்டாம் உலகத்தை கவனித்திருக்கிறீர்களா? சொர்க்கம். தனிப்பட்டவர்களுக்காக கார்களை ஓட்டுபவர்கள், நிறுவனங்களின் Cab ஓட்டுபவர்கள் என்று அத்தனை ஓட்டுனர்களும் மொத்தமாக சேர்ந்து ஒரு சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். மதிய உணவை முடித்துவிட்டு சிலர் சாவகாசகமாக சீட்டு விளையாடத் துவங்குவார்கள். வேறு சிலர் ஏதாவது ஒரு வண்டியில் படம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் வண்டிக்குள்ளேயே காலை நீட்டித் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

அனுஷ்காக்கள் இல்லாத வெறும் ஆர்யாக்களினால் நிறைந்த சொர்க்கம் அது. இந்த சொர்க்கத்தை பார்ப்பதற்காகவே இரண்டு மணிக்கு மதிய உணவை முடித்துவிட்டு ஒரு குட்டி ரவுண்ட் சென்று வருவது வாடிக்கையாக்கிக் வைத்திருக்கிறேன். தங்களின் சொர்க்கத்தை நிர்மாணிக்க முயன்று கொண்டிருக்கும் பெரும்பாலான டிரைவர்கள் நம்மைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஆனாலும் விட முடியுமா? ஒரு டிரைவருடன் நட்பாகிக் கொண்டேன். அவர் தமிழ்க்காரர்தான். அவர் தினத்தந்தி வாசித்துக் கொண்டிருந்த போது ‘நம்மாளு’ என்று பேச்சுக் கொடுத்து நட்புக் கரம் நீட்ட அது அப்படியே இறுகி ஃபெவிக்கால் நட்பு ஆகிவிட்டது.

அந்த தம்பி- என்னை விட நான்கைந்து வயது இளையவன். திருப்பத்தூர் பக்கம் ஒரு கிராமம். பெங்களூரு வந்து ஒரு வருடம்தான் இருக்கும். பக்கத்து நிறுவனத்தில் எக்ஸிகியூடிவ் டைரக்டராக இருக்கும் ஒரு தமிழ் பொம்மனாட்டிக்கு டிரைவர் ஆகிவிட்டார். காலையில் எட்டு மணி வாக்கில் வந்து வண்டியை ‘பளிச்’ என்று கழுவித் தயாராக இருந்தால் பொம்மனாட்டி ஒன்பதரை வாக்கில் வந்து வண்டியில் ஏறிக் கொள்வார். அரை மணி நேரம்தான் அலுவலகம் வந்து சேருவதற்கு ஆகும்- அதுவும் ட்ராபிக் இருந்தால். இல்லையென்றால் இருபது நிமிடமோ அல்லது இருபத்தைந்து நிமிடமோ. திரும்பவும் ஐந்தரை அல்லது ஆறு மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆறரை மணிக்கு மேல் கோடி ரூபாய் கொடுத்தாலும் பொம்மனாட்டி அலுவலகத்தில் இருக்க மாட்டார் என்பதால் அதோடு தம்பிக்கு பணி முடிந்தது. இதற்கு மாதம் பன்னிரெண்டாயிரம் சம்பளம். 

ஒரு நாள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் அந்தத் தம்பியிடம்  ‘மாசம் பூராவும் வெட்டியாவே இருக்க சங்கடமா இல்லையா?’ என்று கேட்டுவிட்டேன். அவனுக்கு அது உறைத்திருக்கக் கூடும். 

‘எந்தக் கூலி வேலைக்கு போனாலும் ஒரு நாளைக்கு ஐந்நூறு அல்லது அறுநூறு தருவார்கள். விடுமுறை எடுத்தால் அதுவும் வராது. அத்தனை கஷ்டப்பட்டு சம்பாதிப்பதைவிடவும் இப்படியே இருந்துகொண்டு இந்த அளவுக்கு சம்பாதித்தால் போதும்’

-கொஞ்சம் சுருக்கென்றுதான் சொன்னான். அதன்பிறகு அவனிடம் இது பற்றி பேசுவதில்லை. அடங்கிக் கொண்டேன். 

தினத்தந்தி செய்திகளைப் பேசுவதோடு எங்களின் நட்பு நின்றுவிட்டது. அரசியல் பேசுவான். ஊரைப் பற்றி பேசுவான். அப்புறம் இப்பொழுது இருக்கும் பெங்களூர் பற்றி புகழ்வான். இப்படி ஓடிக் கொண்டிருக்கையில் சில மாதங்களுக்கு முன்பிலிருந்து தம்பியோடு இன்னொரு ட்ரைவர் பழக்கமாகியிருந்தான். சித்தூர்க்காரன். அவனுக்குத் தெலுங்கும் தெரியும்; தமிழும் தெரியும். கன்னடமும் சக்கை போடு போடுவான். அவ்வப்போது அவனிடமும் பேசியிருக்கிறேன். திருப்பத்தூர் தம்பியளவுக்கு சித்தூர் சின்னவன் சகஜம் இல்லை. கேட்டால் பதில் சொல்வான். இல்லையென்றால் அமைதியாக நிற்பான். அடுத்தவனின் கோபத்தைக் கூட சமாளித்துவிடலாம். அமைதியை எதிர்கொள்வதுதான் சிரமம். நகர்ந்துவிடுவேன்.

இப்பொழுது என்ன பிரச்சினையென்றால் ஆர்யாக்களுக்கு இடையில் ஒரு அனுஷ்கா வந்து சேர்ந்துவிட்டாள். ஜீன்ஸ் அணிந்த குத்துவிளக்கு. பக்கத்து நிறுவனத்தில்தான் பணியில் இருக்கிறாள். ஐடிக்காரி. மூன்று பேரில் யார் முதலில் நூல் விட்டார்களோ தெரியவில்லை- மதிய நேரங்களில் அவள் இவர்களுக்கு அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது சகஜமாகியிருந்தது. அந்தச் சமயத்தில் ‘என்ன தம்பி’ என்று நாம் போய் பல்லிளித்தால் அது தர்மசங்கடமாக இருக்கும். என்று போவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் சொர்க்கம் அப்படியேதான் இருந்தது. அதே சீட்டாட்டம். அதே வீடியோ. அதே உறக்கம். எக்ஸ்ட்ரா ஒரு தேவதை. அவ்வளவுதான். 

ஆனால் இரண்டு பேரில் யார் அவளை பிக்கப் செய்கிறார்கள் என்று தெரியவே தெரியாது. ஒரு முறை சித்தூர்க்காரனிடம் பேச்சுக் கொடுத்த போது திருப்பத்தூர்க்காரனுக்கும் அவளுக்கும் கனெக்‌ஷன் என்கிற ரீதியில் பேசினான். திருப்பத்தூர்க்காரன் பேசினால் சித்தூர்க்காரனை கை நீட்டுவான்.

எல்லாம் இரே மாதிரி ஓடிக் கொண்டிருக்காது அல்லவா? க்ளைமேக்ஸ் வந்துதானே தீரும். இதோ க்ளைமேக்ஸ்.

சென்ற வாரம் முழுவதும் அலுவலகத்தில் கடும் பணி. மதிய நேரத்தில் வசந்த கால வாக்கிங்குக்கு வாய்ப்பே இல்லை. முந்தாநாள்தான் நேரம் கிடைத்தது. சென்றிருந்த போது சொர்க்கம் அப்படியேதான் இருந்தது. தம்பிக்குத்தான் முகத்தில் காயம். ப்ளாஸ்திரி போட்டிருந்தான். யூகித்திருப்பீர்களே? அதேதான். அனுஷ்காவால் வந்த வினைதானாம். அந்த அனுஷ்கா சாதாரண ஆள் இல்லை. ஏதோ ரெட்டி குடும்பத்து வாரிசு. வீட்டில் கொட்டிக் கிடந்தாலும் பொழுது போக்க வேலைக்கு வந்திருக்கிறாளாம். வந்தோமோ நிறுவனத்தில் நாற்காலியைத் தேய்த்தோமா என்றில்லாமல் அவள் இங்கே வர, பையன்கள் மனசு கெட்டு நூல் விட...இருங்கள். என்ன ஆனது என்று முழுமையாகச் சொல்லிவிடுகிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக ‘அய்யா அழைக்கிறார்’ என்று கூப்பிட்டிருக்கிறார்கள். திருப்பத்தூரானுக்கு சந்தேகம்தான். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. காரில் அழைத்துச் சென்ற போது அங்கே ஏற்கனவே சித்தூர்க்காரன் இருந்திருக்கிறான். அவன் அடி வாங்கிய சந்தானம் போல முகத்தை வைத்திருக்க கூடும். இவனுக்கு மூத்திரம் முட்டத் தொடங்கியிருக்கிறது. ஏதோ மிரட்டியிருக்கிறார்கள். பிறகு அங்கேயே ஒரு அறை விழுந்திருக்கிறது. தாறுமாறாக எச்சரித்தார்களாம். அறையோடு முடிந்தது என்று நம்பிக் கொண்டிருக்கும் போதே வீட்டிற்கு பின்புறமாக இருக்கும் கார் ஷெட்டுக்கு அழைத்துச் சென்று கும்மியிருக்கிறார்கள். ஒவ்வொரு அடியும் ஊமைக் குத்தாகவே விழுந்திருக்கிறது. அப்படியிருந்தும் ஒருவன் உணர்ச்சி வசப்பட்டு கையில் வைத்திருந்த ஸ்பேனரையோ திருப்புளியையோ வீசியதில்தான் முகக் காயம். மற்றபடி வெளியே ஒரு காயம் இல்லை. ஒவ்வொரு எலும்பிலும் நெட்டி முறித்துவிட்டார்கள் என்றான். இதைச் சொல்லும் போது அவன் முகத்தை பார்த்திருக்க வேண்டும். காலாகாலத்துக்கும் மறக்க முடியாத முகத்தின் சித்திரம் அது.

இன்னும் சித்தூர்க்காரனைக் காணவில்லை.அவனைப் பற்றி விசாரித்தால் ‘அவன்தான்ணா அவளை சினிமாவுக்கு கூட்டிட்டு போனான். அதனால் அவனுக்குத்தான் அடி அதிகம். இன்னும் ஒரு வாரம் எந்திரிக்க மாட்டான்’ என்றான். 

‘சரி உனக்கு எதுக்கு அடி?’ என்றால் 

‘அவனுக்கு ஃப்ரெண்டா இருந்ததுக்கு’ என்கிறான்.

மொத்தத்தில் அந்தப் பெண்ணை சினிமாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சினிமாவுக்கு போவது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை. ஆனால் யாருடன் போகிறோம் என்று இருக்கிறது அல்லவா? அதுவும் அலுவலக நேரத்தில். அந்தப் பெண் அலுவலகத்துக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறாள். ஆனால் தியேட்டரில் இவர்களைப் பார்த்த யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். ரெட்டிகாரு முதலில் அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்திருக்கிறார். அவள் மழுப்பியிருக்கிறாள். ரெட்டிகளுக்கு இதெல்லாம் ஜூஜூபி மேட்டர். பெங்களூரின் மொத்தக் கட்டுப்பாடும் அவர்களிடம்தான் இருக்கிறது. ஒரு வீதியில் மிகப்பெரிய பங்களா இருந்தால்- அது எந்தத் தெருவாக இருந்தாலும்- கண்ணை மூடிக் கொண்டு ‘ரெட்டி பங்களா’ என்று சொல்லிவிடலாம். அவ்வளவு பணக்காரர்கள். அவ்வளவு செல்வாக்கு.

அவர்களிடம் செல்லுபடியாகுமா? இந்த சில்வண்டுகளை கண்டுபிடித்துவிட்டார்கள்.

உண்மையைச் சொல்லியிருந்தால் விட்டிருப்பார்களோ என்னவோ? முதலில் அவள் மழுப்ப, சித்தூர்க்காரனை அழைத்துக் கேட்க அவன் ஏதோ உளறி வைக்க பிறகு இவனை அழைத்துக் கேட்டிருக்கிறார்கள். இவனும் எதையோ சொல்லியிருக்கிறான். இரண்டு பேருக்கும் செமத்தியாக கொடுத்து துரத்திவிட்டார்கள். 

இதோடு க்ளைமேக்ஸ் முடியவில்லை. க்ளைமேக்ஸின் இரண்டாவது பகுதி இது-

இன்று அலுவலகம் வந்திருந்தேன். விடுமுறைதான். ஆனால் வேலை இருந்தது.

பார்க்கிங் ஏரியாவில் வேறு சில ஓட்டுனர்கள் இருந்தார்கள். சித்தூர்க்காரனும் இருந்தான். அவனுக்கும் காயம்தான். ஆனால் வாயே கொடுக்கவில்லை. என்னனவோ விசாரித்தாலும் கமுக்கமாக இருந்தான். வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை. கிளம்பலாம் என்று நினைத்துக் கொண்டே போது ‘திருப்பத்தூர் ஜமீனைக் காணோம்? இன்னைக்கு லீவா?’ என்றேன்.

படு டென்ஷனாகிவிட்டான்.

‘அந்த தே...பத்தி மட்டும் பேசாதீங்க...அவனால்தான் இத்தனையும்’ என்றான். குமிழ் உடைந்துவிட்டது. பேசத் தொடங்கிவிட்டான். துக்கம் பெருக்கெடுக்க ‘அத்தனைக்கும் அவன் தான் காரணம்’ என்று பேசினான். ‘அவன் தான் அவ கூடச் சுத்தினான். இப்போ என்னை சாத்துறானுக’ என்றான்.

இவனை நம்புவதா? அவனை நம்புவதா என்று தெரியவில்லை. ஒவ்வொருவனுக்குள்ளும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இன்னொரு ஆள் இருக்கிறான். எது பொய் எது உண்மை என்றே தெரியாத அளவுக்கு நடிக்கிறார்கள். என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்ற எந்த அவசியமும் அவர்களுக்கு இல்லை. ஆனால் தங்களை Justify செய்து கொள்ள பொய் சொல்கிறார்கள். இவனுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.

ஒரு சாதாரண ‘பிக்கப்’ மேட்டர். ஆனால் ஆளாளுக்கு விருமாண்டி ஸ்டைலில் கதை சொல்கிறார்கள். எப்படியோ! இரண்டுமே சுவாரஸியம்தான். கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதுதானே நம்முடைய மூன்றாவது உலகம்.

Nov 21, 2013

நல்வரவு


முளைத்துக் கொண்டிருக்கிறேன்...

நேரம், இடம், பேசுபவர்கள் என அனைத்தும் முடிவாகிவிட்டது. நீங்கள் வருவது மட்டும்தான் பாக்கி.

மறக்காமல் வந்து சேருங்கள்.

அன்புடன்,
மணிகண்டன்.

Nov 20, 2013

கொலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கிறார்கள்

இந்த வீடியோவை பார்த்தீர்களா? காலையில் எழுந்தவுடன் தெரியாத்தனமாக பார்த்துத் தொலைத்துவிட்டேன். சில வினாடிகள் உயிரே போய்விட்டது. ஏடிஎம்முக்குள் புகுந்த முரடன் ஒருவன் அந்தப் பெண்மணியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். அது பொம்மைத் துப்பாக்கி போலிருக்கிறது. அந்தப் பெண் தப்பிக்க முயற்சிக்கிறார். அவரை வெளியேறவிடாமல் மறித்தபடியே சாவகாசமாக அரிவாளை எடுத்து அவரை வெட்டிவிட்டு இருப்பதை பறித்துக் கொண்டு ஓடியிருக்கிறான். அத்தனையும் பெங்களூரின் ஜே.சி.சாலையில் நடந்திருக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் நடக்கும் போது ’ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் நடந்திருக்கிறது’ என்பார்கள். ஆனால் இந்தச் சாலையை  ஒதுக்குப் புறமான இடம் என்றெல்லாம் புறந்தள்ளிவிட முடியாது. மாநகராட்சி அலுவலகம் இந்த ஏரியாவில்தான் இருக்கிறது. ஜன சந்தடி மிக்கது. அதுவும் காலை ஐந்து மணிக்கு ஆட்கள் நடமாடத் தொடங்கிவிடுவார்கள். இத்தகைய இடத்தில் இருக்கும் ஒரு ஏடிஎம்முக்குள்தான் புகுந்து, ஷட்டரை மூடி அவரை வெட்டியிருக்கிறான்.

அந்த நேரத்தில் அங்கு வாட்ச்மேன் இல்லை, அது, இது என்று ஏகப்பட்ட காரணங்கள் சொல்லியிருக்கிறார்கள். என்னவோ இருக்கட்டும்- ஒருவரை வெட்டுவதற்கு எப்படி இந்த தைரியம் வருகிறது? கேமரா இருக்கும் என்று தெரியும். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்றும் தெரியும். யாராவது வரக் கூடும் என்றும் தெரியும். ஆனாலும் வெட்டியிருக்கிறான். எப்படியும் அவனை போலீஸார் பிடித்துவிடுவார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்தப் பெண் பிழைப்பாளா என்று தெரியாது. அவளுக்கு பத்து வயதில் மகனோ அல்லது மகளோ இருக்கக் கூடும். காலையில் அவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்துவிட்டு கிளம்பியிருப்பாள்.  ‘அம்மா அலுவலகம் சென்றிருப்பார்’ என அவர்கள் நினைத்துக் கொண்டிருந்திருக்கக் கூடும். 

ஆனால் ஏழு மணிக்கு வெட்டுப்பட்டவளை ரத்த வெள்ளத்தில் இரண்டரை மணி நேரம் கழித்து கண்டுபிடித்திருக்கிறார்கள். நினைவு தப்பிய பிறகு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். பிள்ளைகளுக்கு செய்தி சென்ற போது எவ்வளவு பதறியிருப்பார்கள்? இந்த வீடியோவை பார்த்தால் எவ்வளவு வேதனையடைவார்கள்? வாழ்நாள் முழுமைக்கும் மறக்காது. நினைத்துப் பார்த்தால் மனம் பதறுகிறது.

ஒரு மரணமும் கொலையும் கொல்லப்படுபவரோடு நின்றுவிட்டால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் மரணம் எப்பொழுதுமே சங்கிலித் தொடர் போன்ற விளைவுகளை உருவாக்குகிறது. இறந்தவரை விடவும் அவரைச் சார்ந்தவர்களுக்குத்தான் அது பெரிய தண்டனை. இறந்தவனின் பிரேதத்தை தகனம் செய்துவிட்டு நகர்ந்துவிடுவோம். ஆனால் அவனது மகனுக்கும் மகளுக்கும் அது ஆயுள் தண்டனை. ஒவ்வொரு கொலையைக் கேள்விப்படும் போதும் கொல்லப்பட்ட தனது தந்தை/தாயின் நினைவு வந்து வதைக்கும். ஒவ்வொரு மரணத்தை பார்க்கும் போது மனதுக்குள் ஏதோ ஒரு இடத்தில் உறுத்திக் கொண்டு நிற்கும்.

இப்படியான கொலைகளும், வெட்டுக்களும் சாதாரணமாக நிகழ்வது போன்ற ஒரு பிரமை. அது பிரமை இல்லை. உண்மைதான். மிக மிகச் சாதாரணமாகிவிட்டது.

சமீபத்தில்தான் இதே போன்றதொரு நிகழ்வு சென்னையில் நடந்தது. சொத்துத் தகராறில் ஒரு மருத்துவரை சென்னையில் வெட்டினார்கள். அதுவும் பகல் நேரத்தில், பெரிய மனிதர்களின் வீடுகள் நிறைந்த சாலையில் வைத்துதான் வெட்டியிருந்தார்கள். மூன்று பேர்கள் வெட்டிய அந்த வீடியோவும் காணக் கிடைக்கிறது. சினிமாவில் பார்ப்பது போல அருவாள்கள் மனிதச் சதையை பதம் பார்க்கின்றன. கொடூரம்.

சமூகத்தில் நிலவும் வன்முறை குறித்தான ஆராய்ச்சிகள், சமூகத்தின் மனநிலை மாற வேண்டும் என்பதெல்லாம் இருக்கட்டும். இத்தகைய குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை அளிக்கப்படுகிறது? தினமும் எந்தச் செய்தித்தாளைப் புரட்டினாலும் ஒரு செய்தியாவது கொலை பற்றி இடம் பெற்றுவிடுகிறது. கூலிப்படையினர் என்ற சொல் சாதாரணமாகக் புழக்கத்தில் இருக்கிறது. பிடிக்கப்பட்ட கூலிப்படையினரை என்ன செய்கிறார்கள்? பதினைந்து நாள் ரிமாண்ட். பிறகு ஜாமீன்தானே? எவன் பயப்படுவான்?

இந்த பயமின்மையினால்தானே வரிசையாக கொல்கிறார்கள்? சக உயிரை வெட்டுவதற்கும் வீழ்த்துவதற்கும் எந்தப் பயமும் இல்லாமல் திரிகிறார்கள். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று சொன்னால் மனித உரிமை ஆர்வலர்கள் வந்துவிடுவார்கள். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையளிப்பது மனித உரிமையை மீறும் செயல் என்பார்கள். சரிதான் - ஆனால் இன்னொரு மனிதனை கொலை செய்வது மட்டும் மனித உரிமை மீறல் இல்லையா? எந்தக் கருணையும் இல்லாமல் பென்சில் சீவுவது போல தலைகளைக் கொய்வது உரிமை மீறல் இல்லையா? 

நிலத் தகராறு, பணத் தகராறு, கள்ளக் காதல் பிரச்சினைகள் என்று எதற்கெடுத்தாலும் இங்கு கொலை மட்டும்தான் தீர்வாக இருக்கிறது. ஆயிரம் பிரச்சினைகள் இருக்கட்டும். ஒருவனை வெட்டுவதற்கு யார் உரிமை கொடுத்திருக்கிறார்கள்? வெட்டுகிறார்கள். வெட்டட்டும். வெட்டியவனைப் பிடித்து கடும் தண்டனை அளிக்க வேண்டியது நீதியின் கடமை இல்லையா என்ன? கொல்லப்படுபவர்களின் குடும்பத்திற்கு இந்தச் சமூகம் என்ன பதில் சொல்கிறது? ஒரு எழவும் இல்லை.

கடும் தண்டனையளிக்கப்பட்ட ஒரு கூலிப்படையினரை நினைவு படுத்திப் பாருங்கள். நினைவு படுத்தவே முடியாது. அப்படி கடும் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தால்தானே ஞாபகப்படுத்துவதற்கு. ஒவ்வொரு கொலையாளியும் சாவகாசமாக தப்பிக்கிறார்கள். எப்.ஐ.ஆர் போடும் இடத்திலேயே லஞ்சம் ஆரம்பிக்கிறது. FIR இல் ஒரு வரியை மாற்றி எழுதினால் கூட தப்பித்துவிடலாமாம். இப்படி எப்.ஐ.ஆரிலிருந்து தீர்ப்பு எழுதப்படும் இடம் வரைக்கும் பணம் பாய்கிறது. வெளியே வருகிறார்கள். மீண்டும் கொல்கிறார்கள்.

பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் ஆளை முடிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். இந்த வீடியோவில் வெட்டுபவன் எடுத்துச் சென்ற பணம் கூட வெறும் பதினைந்தாயிரம்தான். இப்படி பத்துக்கும், பதினைந்துக்கும் உயிர் மலினப்படுத்தப்பட்ட சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நினைக்கவே பயமாக இருக்கிறது. அந்தப் பெண்ணின் கழுத்தில் இறங்கிய அரிவாள் நம் கழுத்திலும், நம்மைச் சார்ந்தவர்களின் கழுத்திலும் இறங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று நம்பிக் கொண்டிருந்தால் நமது கண்களை மூடிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

சமூக மாற்றம் என்பதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். அரசும், நீதியமைப்பும் விழித்துக் கொள்ளவில்லையென்றால் இன்னும் சில வருடங்களில் நாம் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கொல்வார்கள். அடுத்தவனை தாக்குவதற்கு கடுமையாக பயப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அப்படியே தாக்கிவிட்டால் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் மற்றவர்களுக்கு பயத்தை உருவாக்க வேண்டும். ‘சிக்கினால் சிதைத்துவிடுவார்கள்’ என்ற பயம் உருவாக்கப்பட்டால் மட்டுமே இத்தகைய தவறுகளை சற்றேனும் மட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி ஒரு சூழல் இப்போதைக்கு உருவாகாது போலிருக்கிறது.

Nov 18, 2013

சொம்பும் போச்சுடா கோயிந்தா

மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை. அந்தக் காலத்தில் கொங்குப் பகுதியில் இருந்த வீடுகளில் சின்ன ஊடு பெரிய ஊடு என்று இரண்டு பிரிவு இருக்கும். வெயிட்டீஸ். தறிகெட்டு ஓடும் கற்பனைக் குதிரையை இழுத்துப் பிடியுங்கள். இது அந்த சமாச்சாரம் இல்லை. உண்மையிலேயே வெறும் வீட்டுச் சமாச்சாரம் மட்டும்தான். அந்தக் காலம் என்றால் முப்பது வருடங்களுக்கு முன்பாகக் கூட அப்படித்தான் இருந்தது.

ஒவ்வொரு வீட்டையும் இரண்டாக பிரித்து வைத்திருப்பார்கள். பெரிய ஊட்டில் காசு, பணம் வைத்திருப்பார்கள். சில வீடுகளில் கட்டில் மெத்தையும் இருக்கும். மொடாவில் நெல்லும் அரியும் இருக்கும். சின்ன ஊடு என்பது பெரும்பாலும் சோறாக்கும் வீடு- சமையல்கட்டு. பெரிய ஊட்டுக்கும் சின்ன ஊட்டுக்கும் அநேகமாக இடைவெளி இருக்கும். இரண்டும் தனித்தனி கட்டடங்கள். மழை கீது வந்துவிட்டால் பெரிய ஊட்டில் இருந்தால் சின்ன ஊட்டுக்கும் சின்ன ஊட்டில் இருந்தால் பெரிய ஊட்டுக்கும் சாக்கு அல்லது துண்டை தலையில் போட்டுக் கொண்டுதான் ஓட வேண்டும்.  

என்ன கான்செப்டில் இப்படி படுக்கை அறையையும், சமையலறையையும் பிரித்துக் கட்டியிருந்தார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது எதற்கு இந்தக் கதை என்றால்- தாத்தா காலத்தில் எங்கள் வீடும் இப்படித்தான் இருந்திருக்கிறது. ஏதோ ஒரு நாள் ராத்திரி நேரத்தில் வந்த குடுகுடுப்பைக்காரன் ‘சின்ன ஊட்டில் ஏழு மொடா நெறைய தங்கம் இருக்குது. இடிச்சுப் பாருங்க’ என்று சொல்லிவிட்டு போய்விட்டான். அவன் சொன்னதும் சொன்னான், ஆயாவுக்கு முழிப்பு வந்துவிட்டது. ஆயாவுக்கு மட்டும் இல்லை அப்பா, சித்தப்பா என்று வீட்டில் இருந்த எல்லோருக்கும்தான்.

அவன் சொன்னது போலவே சின்ன ஊட்டில் தங்கம் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று ராத்திரியோடு ராத்திரியாக முடிவு செய்துவிட்டார்கள். அதற்கு காரணமிருக்கிறது. அந்தச் சின்ன ஊடு இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாம். அந்தக் காலத்தில் உள்ளே ஏதாச்சும் ஒளித்து வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கைதான். தாத்தாவுக்கு மட்டும் இதில் முழுமையான நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. ஆனால் மற்றவர்களின் விருப்பத்தில் தலையிடவில்லை.

அந்தக் காலத்து சுவர்களைப் பற்றித்தான் தெரியுமே? கிட்டத்தட்ட இரண்டடி அகலம் இருக்கும். மண் சுவர்தான் என்றாலும் இடிப்பது அத்தனை சுலபமில்லை. அப்படியே இடித்தாலும் மண்ணை அள்ளிக் கொட்டுவது அதைவிடச் சிரமம். ஆனாலும் இது நிதி சம்பந்தப்பட்டது அல்லவா? சிதம்பர ரகசியம். வெளியாட்களை விட்டால் குட்டு வெளிப்பட்டுவிடும் என்று அடுத்த நாள் இரவில் அப்பாவும் சித்தப்பாவுமே இடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மூச்சு வாங்குகிறது என்று வாயில் துணியைத் திணித்துக் கொண்டு ‘கண்ணு மண்ணு’ தெரியாமல் என்று இடித்தார்களாம். 

இந்தக் கதையை எப்பொழுதோ ஆயா சொல்லியிருக்கிறார். ஆனால் இப்பொழுது ஒரு கன்னடச் சிறுகதைதான் இதை ஞாபக்கபடுத்தியது. அஸ்வத் நாராயண ராவ் என்ற எழுத்தாளரின் கதை அது. அவர் ‘அசுவத்த’ என்ற பெயரில்தான் எழுதுகிறார். கதையின் தலைப்பு ‘விபச்சாரம்’.

கன்னடத்தில் நல்ல சிறுகதைகள் இருக்காது என்ற திமிரில் இருந்தவனுக்கு பொடனி அடி இந்தக் கதை. இப்படியே அடுத்த மொழிக்காரனை மட்டம் தட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். கன்னடக்காரர்கள் இதுவரை எட்டு ஞானப்பீட விருது வாங்கியிருக்கிறார்கள். நாமும்தான் இருக்கிறோமே- இரண்டே இரண்டு. ஒன்று அகிலனுக்கு; இன்னொன்று ஜெயகாந்தனுக்கு.

கதைக்கு வருவோம்.

கதையில் ஒரு சேட்டு பிழைப்பு தேடி பம்பாய் வருகிறார். இது அரைலிட்டர் பவுண்ட் மண்ணெண்ணெய் பத்தணாவுக்கு விற்ற பிரிட்டிஷ்காரன் காலம். நாட்டில் பஞ்சம் நிலவுகிறது. அப்பொழுது விலைக்கட்டுப்பாடும் அமலில் இருந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக கடைகளில் தாறுமாறான விலைக்கு விற்க முடியாது. ஆனால் பிலானி சேட் இதில் எல்லாம் கில்லாடி. பதுக்கி வைத்து விற்கிறார். இப்படி விற்று விற்றே பெரும்பணக்காரர் ஆகிவிடுகிறார். கையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருபத்தைந்து சேர்ந்துவிடுகிறது. அந்தக் காலத்தில் இருபத்தைந்தாயிரம் ரூபாய். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

சேட்டுக்கு கெட்ட நேரம்- பணக்காரர்களும், வரி ஏய்ப்பவர்களும் ஆயிரம் ரூபாயில்தான் நிறைய சேட்டை செய்கிறார்கள் என்று அரசாங்கம் ‘இனிமேல் ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது’ என்று அறிவித்துவிடுகிறது. பிலானி சேட்டுக்கு குடியே முழுகிப் போனாற் போல ஆகிவிடுகிறது. ஆனால் கெட்டநேரத்திலும் ஒரு நல்ல நேரமாக குறிப்பிட்ட அவகாசம் கொடுத்து அதற்குள் ஆயிரம் ரூபாயை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவிக்கிறது. ஆனால் அதிலும் ஒரு ஆப்பு இருக்கிறது. சரியான கணக்கு கொடுத்தால் மட்டுமே மாற்ற முடியும். இல்லையென்றால் அவ்வளவுதான். பிலானியிடம் கணக்கும் இல்லை வழக்கும் இல்லை. கண்டபடி யோசித்து கடைசியில் ஒரு வக்கீலைப் பிடிக்கிறார். ஒரு டுபாக்கூர் வக்கீல்.

அந்த வக்கீல் ஒரு திட்டமிடுகிறார். ஆனால் அதற்குள் டாக்ஸி பிடி, அதைப் பிடி என்று ஏகப்பட்ட செலவு வைக்கிறார். கஞ்சப்பயலான பிலானி மூக்கால் அழுது கொண்டே செலவு செய்கிறார்.ஒரு வழியாக மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு ‘ஃப்ராஸ் ரோட்டுக்கு’ செல்கிறார்கள். அது பம்பாயின் ரெட் லைட் ஏரியா. தான் வழக்கமாகச் செல்லும் வீட்டிற்குச் சென்று ஒரு புத்திசாலிப் பெண் வேண்டும் என்கிறார் வக்கீல். வக்கீலின் செய்கை பிலானிக்கு புரியவில்லை. இதுவரை வக்கீலுக்காக செய்திருந்த செலவுப் பணத்தை வரியாகக் கட்டியிருந்தால் கூட போதும். அத்தனை பணமும் தப்பித்திருக்கும். ஆனால் அப்பொழுது ஏமாற்றிவிட்டு இப்பொழுது முழிக்கிறார்.

விபச்சார விடுதியின் உரிமைக்காரப் பெண்மணி ஒரு அழகான பெண்ணை அவர்களோடு அனுப்பி வைக்கிறார். கிடைக்கிற சந்தில் அவளுக்கு வக்கீல் ஒரு முத்தம் கொடுத்துக் கொள்கிறார். பிலானி-ம்ஹூம். ஏக பத்தினி விரதன். மூன்று பேருமாகச் சேர்ந்து ரிசர்வ் வங்கிக்கு செல்கிறார்கள். அந்தப் பெண் படுபாந்தமாக மேக்கப் செய்திருக்கிறாள். வங்கியில் அத்தனை பேரும் அவளையே பார்க்கிறார்கள். வங்கியாளரிடம் சென்று ‘எல்லாம் எனது தொழிலில் சம்பாதித்த பணம்’ என்கிறாள். ‘எங்கள் தொழிலில் கணக்கெல்லாம் கிடையாதுன்னு உங்களுக்கே தெரியுமே’ என்கிறாள். வங்கியாளர் சிரித்துக் கொண்டே ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு அனுமதிக்கிறார். அவளுக்கு முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது. எல்லா தாள்களையும் நூறு ரூபாய் நோட்டுக்களாக அவள் மாற்றிக் கொண்டிருக்கும்தான் போது பிலானி சேட்டுக்கு உயிரே வருகிறது.

இப்பொழுது வீடு இடித்த கதைக்குச் சென்றுவிடலாம்-

தாத்தா மூன்று மணிக்கு எழுந்து வந்து பார்த்திருக்கிறார். முக்கால்வாசியை இடித்தாகிவிட்டது. பானையும் கிடைக்கவில்லை. பூனையும் கிடைக்கவில்லை.

‘அடப் பசங்களா, பானை கிடைக்காட்டியும் போச்சாதுடா. சின்ன ஊட்டை இடிச்சுப் போட்டீங்க இனி எங்க வெச்சு சோறாக்குறது?’ என்று கேட்டாராம்.

‘போய் தூங்குப்பா நாங்க பூராத்தையும் இடிச்சுப் பாத்துடுறோம்’ என்றிருக்கிறார்கள். 

‘சொம்பும் போச்சுடா கோயிந்தாங்கப் போறீங்க’ என்று முனகிக் கொண்டே போய்விட்டாராம். 

இவர்கள் விடியும் வரை இடித்திருக்கிறார்கள். அடுத்த ஓரிரு மணி நேரங்களில்  வாசல் தெளிப்பதற்கு ஆயா எழுந்து வந்திருக்கிறார். 

‘என்னடா பசங்களா?’ என்றாராம்.

கடுப்பில் இருந்தவர்கள் ‘சொம்பும் போச்சுடா கோயிந்தா’தான் என்றிருக்கிறார்கள். ஆயாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இடித்தது இடித்ததுதான். கடைசி வரைக்கும் ஒன்றும் கிடைக்கவில்லை.

இப்பவும் அப்பாவிடம் ரிஸ்க்கான சமாச்சாரம் பற்றி ஏதாவது பேசினால் முதல் வாக்கியம் இதுவாகத்தான் இருக்கும். ‘பார்த்து செய்யி. சொம்பும் போச்சுடா கோயிந்தான்னு ஆகிடப் போவுது’ என்பார். 

பிலானி கதையும் அப்படித்தான். பணத்தை நூறு ரூபாயாக மாற்றிக் கொண்டவள் தனது பைக்குள் செருகிக் கொண்டு கம்பி நீட்ட பார்க்கிறாள். பிலானி ஓடிப் போய் அவளின் கையைப் பிடிக்கிறான். ‘அவை அத்தனையும் தனது பணம்’ என்று கத்திவிட்டு அங்கிருந்த போலீஸிடம் நைஸாக நூறு ரூபாயை நீட்டுகிறாள். போலீஸ்காரன் பிலானி சேட்டை பிடித்துக் கொள்கிறான். இந்த விவகாரத்தில் வக்கீல் மூக்கை நுழைத்து போலீஸைச் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்கும் போது அந்தப் பெண் அங்கிருந்து கிளம்பி நேராக ரயில்வே நிலையம் சென்று ரயில் ஏறிவிடுகிறாள். இனி அவள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவாள். வக்கீலும் பிலானி சேட்டும் விபச்சார விடுதி உரிமையாளரும் மாறி மாறி சண்டைப் பிடித்துக் கொள்கிறார்கள். 

சொம்பும் போச்சுடா கோயிந்தா மாதிரி.

Nov 17, 2013

நரேந்திர மோடியின் பெங்களூரு கூட்டம்

இன்று காலையில் திடீரென்று தோன்றியது - மோடியின் கூட்டத்திற்கு போய் வரலாம் என்று. பாட்னாவில் குண்டு வெடிக்காமல் இருந்திருந்தால் பெரிய குழப்பம் எல்லாம் இருந்திருக்காது. தைரியமாக முடிவெடுத்து போயிருக்கலாம். ஆனால் அங்கு குண்டு வெடித்த பிறகு ஒரு பயம். பெங்களூரிலும் ஏதாவது எக்குத்தப்பாக நடந்து போய்ச் சேர்ந்துவிட்டால் மோடி வீட்டுக்கு வந்து ஐந்து லட்சம் தருவார்தான். ஆனால் அதற்காகவெல்லாம் உயிரைக் கொடுக்க முடியாது. யோசனை பலமாக இருந்தது.

ஆனால் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். கொஞ்சம் கொஞ்சமாக போய்ப் பார்க்கலாம். எதுவும் ஆகாது என்று நம்பிக்கை வந்தால் கூட்டத்திற்கு போகலாம். ஏதாவது சகுனம் பார்த்தால் திரும்பிவிடலாம் என்றுதான் கிளம்பினேன். சகுனம் எதுவும் தென்படவில்லை. ஒன்றும் பிரச்சினை இருக்காது போலிருக்கிறது.

பேலஸ் க்ரவுண்டில்தான் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கப்பன் பூங்கா தாண்டும் வரைக்கும் பெரிய பதாகைகளோ விளம்பரத் தட்டிகளோ இல்லை. அங்கங்கு போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அவ்வளவுதான். அத்வானியை பா.ஜ.கவினர் மொத்தமாக மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. வாஜ்பாய் மட்டும் தப்பித்திருக்கிறார். பிரதமர் வேட்பாளருக்கு இவ்வளவுதான் போஸ்டர்களா? நம் புரட்சித் தலைவி பெங்களூர் கோர்ட்டுக்கு- அதுவும் வழக்கு விசாரணைக்கு வந்த போது கூட இன்னும் சற்று அதிகமான தட்டிகளை கர்நாடக அ.தி.மு.க காரர்கள் வைத்திருந்ததாக ஞாபகம்.

மைதானத்திற்குள் நுழையும் வரைக்கும் ஊரில் பெரிய சலனம் இல்லை. பெங்களூர் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது- அதுவும் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை போல சோம்பலின் அடையாளத்தோடு. அவ்வப்போது கார்களும் பைக்குகளும் தாமரைக் கொடிகளுடன் தாண்டிப் போய்க் கொண்டிருந்தன. அது மட்டும்தான் மோடி வருகிறார் என்பதற்கான அடையாளம். 

பேலஸ் க்ரவுண்ட் ஒன்றும் சாதாரணமானதில்லை. நானூறு ஏக்கருக்கு மேலாக இருக்கும். நகரின் மையத்தில் பரந்து கிடக்கிறது. இப்பொழுதும் மைசூர் உடையார்களின் வசம்தான் இருக்கிறது. பெரிய கூட்டங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை இங்குதான் நடத்துகிறார்கள்.

அரண்மனைச் சாலை முழுவதும் போலீஸ்காரர்கள்தான். இருசக்கர வாகனங்களை எல்லாம் ஒரு கேட் வழியாக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். குத்துமதிப்பாக வண்டியை ஒரு இடத்தில் நிறுத்த வேண்டும் போலிருக்கிறது. அங்கு நிறுத்திவிட்டு கூட்டம் நடக்கும் இடம் வரைக்கும் நடந்து போக வேண்டும். கேட்டுக்குள் நுழையும் போதுதான் உற்சாகத்தின் ஒரு துளியை காண முடிந்தது. ‘பாரத் மாதா கீ’ என்று அறைகூவல் விடுக்கத் துவங்கியிருந்தார்கள். வயிற்றுக்குள் லேசாக குண்டு உருளத் துவங்கியது. பயம்தான். தேவையில்லாத பயம்தான். இருந்தாலும் பயம் பயம்தானே.

வண்டியை நிறுத்துவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்த போது மிக வேகமாக ஒரு பைக் தாண்டிப் போனது. போலீஸ்காரர்களை அலட்சியம் செய்து கொண்டு பறந்து கொண்டிருந்த காவித் தலையர்கள் கண் மூடி திறப்பதற்குள் ஒரு குழிக்குள் விட்டு சாலையின் மீது கிடந்தார்கள். அதில் ஓட்டிக் கொண்டிருந்தவன் நிலைமை பரிதாபம். மண் சாலையில் விழுந்து முகத்தை தார்ச்சாலையில் உரசியிருந்தான். இருவரும் எழ முடியாமல் கிடந்தார்கள். என்ன அவசரமோ தெரியவில்லை. அவர்களை வேடிக்கை பார்ப்பதற்கு ஒவ்வொரு வண்டியாக நிற்க ஆரம்பிக்கும் போது ட்ராஃபிக் அதிகமாகத் துவங்கியது. சில போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்க்க நின்றவர்களை லத்தியைத் தூக்கிக் கொண்டு துரத்தினார்கள். அவசர அவசரமாக வண்டியை கொண்டு போய் வெகுதூரத்தில் நிறுத்திவிட்டு பக்கத்தில் இருந்தவரிடம் அந்த இடத்திற்கான அடையாளத்தைக் கேட்டுக் கொண்டேன். இடம் தெரியாவிட்டால் திரும்ப வரும் போது வண்டியைத் தேடுவது படு சிரமம் ஆகிவிடும். ‘டென்னிஸ் பெவிலியன்’ என்றார். மனது மனனம் செய்து கொண்டது. 

நினைத்ததுதான் நடந்தது. மேடைக்கு அருகில் செல்வதற்கு வெகுதூரம் நடக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டரை கிலோ மீட்டர் இருக்கும். வரிசை வரிசையாக நடந்து கொண்டிருந்தார்கள். சில ஆயிரம் பேருந்துகளையும் பல நூறு தொடரூர்திகளையும் வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அது போக தனியார் வாகனங்கள், பைக்குகள் என்று மைதானம் நிரம்பிக் கிடந்தது. நடக்க முடியாத கிழம் கட்டைகள் பேருந்துக்குள்ளேயே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எண்ணிக்கை காட்டுவதற்காக அழைத்து வரப்பட்ட டிக்கெட்டுகளாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. 

கூட்டத்தை அடைவதற்குள் மூன்று நான்கு இடங்களில் ‘செக்கப்’ செய்தார்கள். ஒவ்வொருவராக உள்ளே போகும் போதும் தடவித் தடவி தேடினார்கள். பீடி, சிகரெட், தீப்பெட்டி உட்பட எல்லாவற்றையும் வெளியே வீசிவிடச் சொன்னார்கள். அந்த இடத்தில் நிரம்பிய குவார்ட்டர் பாட்டில்களின் எண்ணிக்கையை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இடுப்பில் செருகிக் கொண்டு வந்தது, பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு வந்தது என அத்தனையும் சிக்கிக் கொண்டது. இன்னொரு கேட்டிலும் இதே போலத் துழாவினார்கள். அடுத்த கேட்டில் ‘மெட்டல் டிடெக்டர்’. 

இத்தனை பரிசோதனைகளைப் பார்த்த பிறகு எப்படியும் குண்டு வெடிக்காது என்ற நம்பிக்கை வந்துவிட்டது. உள்ளே நுழையும் போது ஜெகதீஷ் ஷெட்டர் பேசிக் கொண்டிருந்தார். முன்னாள் முதல்வர். பல்லாயிரக்கணக்கானவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பந்தலிலேயே உணவு வழங்கினார்கள். நான் இருந்த இடத்திலிருந்து மேடையே கண்ணுக்குத் தெரியவில்லை. மேடையிலிருந்து வெகுதூரத்தில் நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. பெரிய திரைகளில் தலைவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தேன். மழை பொத்துக் கொள்ளும் போலிருந்தது. 

ஷெட்டருக்கு பிறகு ஓரிருவர் பேசி முடிக்கவும் ஹெலிக்காப்டர் பறப்பதை திரையில் காட்டினார்கள். மோடிதான். குஜராத்திலிருந்து பெங்களூரிலிருக்கும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்து அங்கிருந்து விழா மேடைக்கு ஹெலிக்காப்டரில் வருகிறார். நான் வீட்டிலிருந்து பேலஸ் க்ரவுண்ட் கிளம்பும் போது அனேகமாக அவர் குஜராத்தில் தனது வீட்டிலிருந்து கிளம்பியிருக்கக் கூடும். ஹெலிக்காப்டர் தெரிந்தவுடன் மேடையில் பேசிக் கொண்டிருந்த பெண்மணி பதட்டமாகியிருந்தார். என்னவோ உளறிவிட்டு கடைசியில் ‘நரேந்திர மோடி ஜி’ என்றார். கூட்டம் ஆர்ப்பரித்தது. ஹெலிக்காப்டரிலிருந்து அவர் மேடை வரும் வரை அவரை திரையில் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவரோடு ராஜ்நாத் சிங்கும் வந்தார். மோடியை அவ்வப்போது ‘க்ளோஸ்-அப்’ ஷாட்டில் காட்டினார்கள்.

முதலில் ராஜ்நாத் சிங் பேசினார். ஏக் ஹே, தோ ஹே, காங்கிரஸ் ஹே, ராகுல் ஹே என்றார். எனக்கு ஹிந்தி அவ்வளவுதான் புரிந்தது. கூட்டம் அவ்வப்பொழுது விசிலடித்தது. நான் கூட்டத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன். மூன்று லட்சத்தைத் தாண்டும் என நினைக்கிறேன். சரியான கணிப்பு என்று சொல்ல முடியாது. என் கணிப்பு.  அவ்வளவுதான். 

அடுத்தது மோடி பேசினார். அவரும் ஹை, ஹை என்று ஹிந்தியில்தான் பேசினார். பெங்களூர்வாசிகளுக்கு ஹிந்தி புரியும். பெல்லாரியிருந்தும், மைசூரிலிருந்தும் வந்தவர்கள் என்னைப் போலத்தானே இருப்பார்கள். அவர்களுக்கு ‘பெப்பெப்பே’தான். சாரி சாரியாக எழுந்து போனார்கள். ஆனால் அமர்ந்திருந்தவர்களை மோடி தனது பேச்சின் மூலமாக மெஸ்மெரிசம் செய்து கொண்டிருந்தார். மெதுவாக மேடைக்கு அருகில் செல்ல முடியுமா என்று முயற்சித்தேன். அது பெரிய ரிஸ்க்காகத் தெரிந்தது. கூட்டம் நம்மைச் சட்னியாக்கிவிடும் என்று தோன்றியது. நைஸாக வந்த வழியிலேயே திரும்பிவிட்டேன். 

எத்தனை பேர் வெளியேறுகிறார்களோ அதைவிட அதிகமாக உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். பேருந்துகள் இன்னமும் மைதானத்திற்குள் வந்து கொண்டிருந்தன. மோடியே பேசி முடிக்கப் போகிறார். இவர்கள் வந்து என்ன செய்யப் போகிறார்கள்? நமக்கு என்ன வந்தது? பிரியாணி சாப்பிடக் கூட வந்திருக்கக் கூடும். 

வெளியே வரும் போது எதிர்பார்த்தது போலவே வண்டியைத் தேடுவது அத்தனை சுலபமாக இல்லை. வரும் போது இருந்தததை விட பல நூறு பேருந்துகள் அதிகமாகி வழியை மறைத்திருந்தன. போலீஸ்காரர்களுக்கும் ‘டென்னிஸ் பெவிலியன்’ தெரியவில்லை. ஏற்கனவே கால் வலிக்கத் தொடங்கியிருந்தது. தடத்தை நிரவி நிரவி பைக் அருகில் வந்த போது ஃபோன் வந்தது. செல்லமுத்து குப்புசாமி அழைத்திருந்தார். அவரது ‘இரவல் காதலி’ என்ற நாவல் இந்த வருடம் உயிர்மையில் வருகிறது. ஒரு மாதிரியான குஜால் புத்தகம். நான் வாசித்துவிட்டேன். அது பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதலாம்.

‘எங்க இருக்கே மணி?’ என்றார்.

‘மோடி மீட்டிங்குக்கு வந்தேண்ணா’ 

‘நாடகத்துக்கு போற, பொதுக்கூட்டத்துக்கு போற. வீட்ல தண்ணி தெளிச்சு உட்டுட்டாங்களா?’

ஹி ஹி என்று சிரித்துக் கொண்ட போது குப்புறடித்த பைக்காரர்களின் ஞாபகம் வந்தது. இப்பொழுது அந்த இடத்திற்கு போனால் யாரும் துரத்த மாட்டார்கள். போய்ப் பார்த்தேன். ரத்தம் தாறுமாறாக ஓடி இறுகிக் கிடந்தது. அருகில் இருந்த போலீஸ்காரரிடம் விசாரித்தேன். பெங்களூரின் பெரும்பாலான ஆட்டோக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் தமிழ் தெரியும். அதனால் அவர்களிடம் தமிழிலேயே பேசலாம். பைக்காரர்களில் ஒருவன் முடிந்தானாம். இன்னொருவன் தப்பித்துவிட்டான் என்றார். அனேகமாக ஓட்டிவந்தவன் தான் முடிந்திருக்க வேண்டும். குடித்திருந்தானோ என்னவோ. பரிதாபமாக இருந்தது.வண்டியைக் கிளப்பினேன். இன்னமும் பேருந்துகள் வந்து கொண்டிருந்தன. மனதுக்குள் என்னனென்னவோ நினைப்புகள் ஓடிக் கொண்டிருந்தன.

Nov 16, 2013

சச்சின்

மழை ஓய்ந்திருக்கிறது. கூடவே சச்சின் பற்றிய செய்திகளும் ட்விட்டர், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களும் சற்றே ஓய்ந்திருக்கின்றன. 

இந்திய கிரிக்கெட்டில் இருபத்தைந்து ஆண்டு காலம் தனக்கான இடத்தை பிடித்து வைத்திருந்த சச்சின் அதை காலி செய்துவிட்டுப் போகிறார். இனி அந்த இடத்தை அடைவதற்காக சச்சினின் மகன் உட்பட ஏகப்பட்ட பேர் போட்டியிடுவார்கள். அந்த நாற்காலியில் யாராவது அமருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படலாம் அல்லது இனி அது வரலாற்றில் சாத்தியமே இல்லாமல் போகக் கூடும்.

கிரிக்கெட்டின் பெரும்பாலான துறைகளில் அவ்வளவு சீக்கிரத்தில் தொட்டுவிட முடியாத சாதனைகளை சச்சின் செய்துவிட்டு போயிருக்கிறார். இருபத்தியிரண்டு யார்டுகளுக்கு இடைப்பட்ட தூரத்தில் ஓடும் வெறும் ஓட்டங்கள் மட்டுமே சச்சினை இந்த உயரத்திற்கு ஏற்றி வைத்திருக்கும் என்று சொல்ல முடியவில்லை.தனது ஆட்டத்தை தவிர்த்து இத்தனை ஆண்டுகளும் கோடிக்கணக்கானவர்களுக்கு தன்னை ஒரு ஆதர்சமான பெர்சனாலிட்டியாக வடிவமைப்பதில் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறார், சச்சின். சர்வசாதாரணமாக ஒருவரை கடவுள் என்று சொல்லிவிடுவார்களா என்ன? ஆனால் சச்சினைச் சொல்கிறார்கள். இதில் மீடியாக்களின் உதவியும் மிகப் பெரியது. சச்சினை எளிமையானவராக, பணிவானவராக, புகழ்ச்சியை தவிர்ப்பவராக, அர்பணிப்பு உடையவராக என இன்னும் பல ப்ளஸ்களாக காட்டியதில் ஊடகத்தின் பங்கு தவிர்க்கவே முடியாதது. சச்சினிடம் இந்த ப்ளஸ்கள் இல்லையென்று சொல்லவில்லை. அவை சரியான நேரத்தில் சரியான முறையில் வெளிப்படுவது முக்கியம். அது சச்சினுக்கு நிகழ்ந்திருக்கிறது. 

தனது திறமை, உழைப்பு ஆகியவற்றால் மட்டுமே ஒருவன் உச்சியை அடைந்துவிட முடியும் என்று தோன்றவில்லை. சச்சினின் திறமை, உழைப்பு தவிர்த்து அவரது அரசியல் செல்வாக்கு, மராத்திய பிண்ணனி, சரத்பவாரின் முழு ஆசி, பவாருக்கு இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் அசைக்க முடியாத ஆதிக்கம் என எல்லாவற்றையும் இந்த உச்சியோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். 

நூல் விலை உயரும் போதெல்லாம் திருப்பூர்க்காரர்களிடம் பேசிப் பாருங்கள். ஐந்து பேரில் நான்கு பேர்களாவது சச்சினை சபிப்பார்கள். உண்மையோ அல்லது பொய்யோ என்று தெரியாது. ஆனால் சச்சினும், சரத்பவாரும் தங்களிடம் மிகப்பெரிய அளவில் பஞ்சை பதுக்கி வைத்து விலையை செயற்கையாக ஏற்றுகிறார்கள் என்பார்கள். இது அவருக்கு ஆகாதவர்களால் கசியவிடப்பட்ட கட்டுக்கதை என்று கூட சொல்லலாம். இந்தச் செய்தியை எப்படி முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதோ அதேபோலத்தான் மறுப்பதற்கும் இல்லை. போகட்டும்.

சினிமா பற்றிய ஆர்வம் இல்லாதது போலவே கிரிக்கெட் பற்றியும் எனக்கு அதிகம் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் என்னதான் சினிமாவில் ஆர்வம் இல்லையென்றாலும் ரஜினி அல்லது கமலை ரசிப்பது போலவே என்னதான் கிரிக்கெட்டில் ஈர்ப்பு இல்லையென்றாலும் சச்சின் அல்லது கங்குலி என்ற ஆளுமைகளை ரசிப்பவனாகவே எனது வயதையொத்த ஒவ்வொருவரும் இருந்திருக்க முடியும். அப்படித்தான் நானும். சச்சினைப் பற்றி துளியாவது பேசி விட வேண்டும் என்று தோன்றுகிறது.

சச்சின் களத்தில் நிற்கும் போதெல்லாம் நண்பர்களோடு அமர்ந்து கிரிக்கெட் பார்ப்பது படு கொண்டாட்டமாகவே இருந்திருக்கிறது. அது ஒரு இன்ஸ்பிரேஷன். அவரது நேர்த்தி, பொறுமை, Professionalism என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எனது தலைமுறைக்கு எத்தனையோ இருந்தது. கிரிக்கெட் தாண்டி அவரது அரசியல் தொடர்புகள், அவரது பிஸினஸ் என்று எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் கிரிக்கெட் ரசிகர்களிடம் அவர் அடைந்திருக்கும் புகழை நிச்சயம் மரியாதை செய்ய வேண்டும். சச்சினின் ஆட்டத்திற்காக ப்ளஸ்டூ தேர்வுக்கு முன்பாக கிரிக்கெட் பார்த்த லட்சக்கணக்கான் இந்தியர்கள் இந்த நாட்டில் உண்டு. சச்சின் விளையாடுகிறார் என்பதற்காக தனது வாழ்வின் மிக முக்கியமான தருணங்களை ‘மிஸ்’ செய்தவர்களை சர்வசாதாரணமாக பார்க்க முடியும். சச்சினைத் தவறாக பேசிவிட்டான் என்பதற்காக நண்பர்களை பகைத்துக் கொண்டவர்கள் உண்டு. சச்சின் என்ற பெயருக்காக வெறியெடுத்துத் திரிந்தவர்கள் இருக்கிறார். இவையெல்லாம் அத்தனை விளையாட்டு வீரனுக்கும் சாத்தியமில்லை. கடவுளுக்கு மட்டுமே சாத்தியம். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சச்சின்தான் கடவுள்.

சச்சினின் அம்மா இதுவரை விளையாட்டு மைதானத்திற்கு வந்து கிரிக்கெட் பார்த்ததேயில்லையாம். சச்சினின் கடைசி ஆட்டத்தைப் பார்க்க முந்தாநாள் வந்திருக்கிறார். ஆட்டம் முடிந்து தனது சக்கர நாற்காலியில் அவர் திரும்பிச் செல்லும் போது கவனித்தீர்களா? மொத்த அரங்கமும் எழுந்து நின்று வழிவிட்டது. அவருக்கு வழிவிட வேண்டும் என்று கூட்டத்திற்கு எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஒதுங்கி நின்றார்கள். அதுதான் மரியாதை. ஒவ்வொரு ரசிகனின் மனதில் இருந்தும் வெளிப்படும் மரியாதை. அந்த அம்மையாருக்கு அந்த கணத்தில் எவ்வளவு பெருமிதமாக இருந்திருக்கும்? சில வினாடிகள் எனக்கு உடல் சிலிர்த்து அடங்கியது.

ஒருவன் புகழ் அடைவது அத்தனை சுலபம் இல்லை. அதே புகழோடு கால் நூற்றாண்டு காலம் கலக்குவதும் எளிதில்லை. இத்தனை புகழோடும் மரியாதையோடும் தனது இடத்தை விட்டு விலகுவதும் சுலபமில்லை என்பது போலவே தனது புகழை ரிடையர்ட்மெண்டுக்கு பிறகும் சிதையாமல் பாதுகாப்பதும் எளிதில்லை. சச்சினுக்கு அந்த வித்தை தெரிந்திருக்கும் என நம்புவோம்.

Nov 15, 2013

செத்து என்ன ஆகப் போகிறது? இருந்து தொலையலாம்

நாய்க்குட்டி ஒன்று வீட்டுப்பக்கமாக சுற்றிக் கொண்டிருந்தது. இந்த ஊரில் தெரு நாய்களுக்கு பஞ்சமே இல்லை. வருடத்தில் முக்கால்வாசி மாதங்கள் குளிராகவே இருக்கிறது. குளிரடிக்கும் மாதங்கள் எல்லாம் மார்கழி என்று நினைத்துக் கொள்கின்றன போலிருக்கிறது. வதவதவென பெருகிக் கிடக்கின்றன. இப்படி பெருகிக் கிடந்தாலும் பெங்களூர் கார்பொரேஷன்காரர்கள் கருணை மிகுந்தவர்கள். அலேக்காகத் தூக்கிக் கொண்டு போய் திரும்பக் கொண்டு வரும் போது காது நுனியை கத்தரித்துவிட்டிருப்பார்கள். அப்படியென்றால் ‘சோலி’யை முடித்துவிட்டார்கள் என்று அர்த்தம். ஆனால் சோலி முடிக்கும் விகிதத்தை ஒப்பிடும் போது நாய்களின் பர்த் ரேட் பல மடங்கு அதிகம் போலிருக்கிறது. அதனால்தான் இத்தனை குட்டிகள். இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து சூரியன் எட்டிப்பார்க்கும் வரை தெருக்களில் அவைகளின் ராஜ்ஜியம்தான். ஒருத்தன் நடந்து போக முடியாது.

எங்கள் வீட்டுப்பக்கமாகச் சுற்றும் இந்தக் குட்டி நாயும் அப்படி காது நுனி கத்தரிக்கப்பட்ட வகையறாதான். ஆரம்பத்தில் வத்தலும் தொத்தலுமாகத் திரிந்தது. எங்கப்பாவுக்கு அதன் மேல் தனிப் பிரியம். வீட்டிலிருந்து எதையாவது எடுத்து அதற்கு போடுவார். சில சமயம் தயிரையும் பாலையும் அதிகமாக ஊற்றிவிடுவதாக அம்மா அங்கலாய்த்திருக்கிறார். ‘ரோட்டுல சுத்துற நாய்க்கு பட்டுக்குஞ்சம் விரிக்கிறாரு உங்கப்பா’ என்று நக்கலடிப்பார். அப்பா அந்த வசவுகளைக் கண்டு கொள்ளவில்லை என்பதை நாய்க்குட்டியைப் பார்த்தாலே அனுமானித்துவிடலாம். ஓரிரு வாரங்களில் நாய்க்குட்டி சதைப்பிடிப்பாகிவிட்டது. கூடவே இரண்டு மூன்று குட்டிகளைச் சேர்த்துக் கொண்டு தாறுமாறான அட்டகாசம் வேறு. 

இந்த ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் சோற்றுத் தட்டு வரைக்கும்தான். தட்டில் சோறு விழுந்தால் அவ்வளவுதான். மற்றவற்றை துரத்திவிட்டு வந்து தான் மட்டும் கொட்டிக் கொள்ளும். ஒரு பருக்கை மிச்சம் விடாமல் நாக்கைச் சுழற்றி முடித்துவிட்டு மீண்டும் நண்பர்களைத் தேடிப் போய்விடும். இரவு நேரத்தில் வீட்டு முன்னால் வந்து படுத்துக் கொள்ளத் துவங்கிய போது அப்பாவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ‘நன்றியுள்ளதுன்னு காமிச்சுடுச்சு பாரு’ என்று பெருமையடிக்கத் துவங்கியிருந்தார். அதுவும் அப்படியொன்றும் சளைத்த நாயாகத் தெரியவில்லை. துளி சப்தம் கேட்டாலும் குரைத்து ஊரை எழுப்பத் துவங்கியிருந்தது. 

வயதான நாய்கள் இரவில் விழித்திருந்துவிட்டு பகலில் தூங்கிக் கொள்ளும். ஆனால் இந்த பொடியன் பகலிலும் கெட்ட ஆட்டம்- சாலையைத் தாண்டுவதும் மணலில் எட்டிக் குதிப்பதுமாகவும் துள்ளிக் கொண்டிருந்தது.

எங்கள் லே-அவுட்டில் தார் ரோடு போடும் வரை வாகனப் போக்குவரத்து மிகக் குறைவாக இருந்தது. தார் ரோடு போட்டாலும் போட்டார்கள், ஏரோப்ளேன் ஓட்டுவது போலவே கார் ஓட்டுகிறார்கள். அவர்களின் வேகத்தில் மனிதர்கள் தப்பிப்பதே பெரும்பாடு. நாய்க்குட்டிகள் எத்தனை நாளைக்குத்தான் தப்பிக்கும்? அதுவும் இது துள்ளலான நாய்க்குட்டி வேறு. இரண்டு நாட்களுக்கு முன்பாக சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. சாகவில்லை. ஆனால் பின்னங்கால் முறிந்து நிறைய ரத்தம் போய்விட்டது. அலுவலகம் முடிந்து வந்த போது அப்பாதான் சோகமான முகத்தோடு இதைச் சொன்னார். சென்று பார்த்த போது பக்கத்து கட்டடத்தின் மணல் மீது படுத்திருந்தது. படுத்தபடியே வாலை மட்டும் மிகச் சிரமப்பட்டு அசைத்தது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. உணவையும் வாயில் வைக்கவில்லை. பால், தயிர் போக நெய், எலும்புத் துண்டு என்று எதைக் கொடுத்தாலும் திரும்பிப் பார்க்கவில்லை. இரண்டு நாட்களுக்கும் தனது புண்ணை நாவால் தடவிக் கொடுத்தபடியே இருந்தது. தப்பித்துவிடுமா என்று தெரியவில்லை.

‘சாப்பிட்டா பொழைச்சுக்கும். ஆனால் மோந்து கூட பார்க்க மாட்டேங்குது’ என்று அப்பா அவநம்பிக்கையோடு சொன்னார். தெருநாய்தானே. போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம்தான். ஆனால் பார்க்க பரிதாபமாக இருந்தது. கடந்த சில வாரங்களாக வீட்டை விட்டு கிளம்பும் போது வழியனுப்பும் ஜீவனாக அதுதான் இருந்தது. திரும்பி வரும் போது அதன் முகத்தைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே போக முடியும். கேட் திறக்கும் சப்தம் கேட்டால் வாலை சுழற்றிக் கொண்டு வந்துவிடும். அந்த நாய்க்குட்டிதான் அடிபட்டுக் கிடக்கிறது என்பது வருத்தமாகத்தான் இருந்தது.

நேற்று காலையில் பார்க்கும் போது கொஞ்சம் தெளிவாக இருந்தது. அதன் சோம்பல் சற்று காணாமல் போயிருந்தது. இருந்தாலும் புண்ணை நாக்கால் தடவிக் கொண்டேயிருந்தது. இன்னமும் உண்ணாவிரதம்தான். ஒருவேளை புண்ணை முழுமையாக ஆற்றிவிட்டுத்தான் தின்னுமோ என்று தெரியவில்லை. அப்பாவுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருந்தது ‘கெலுத்தி ஆயிருச்சு. தப்பிச்சுரும்’ என்றார். Healthy என்பதைத்தான் கெலுத்தி என்கிறார்.

அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. இன்று காலை தனது இடத்தை விட்டு எழுந்துவிட்டது. மற்ற நாய்கள் அதன் அருகில் வந்துவிட்டன. விளையாட முயற்சிக்கிறது. ஆனால் முடியவில்லை. தில் படத்தில் அடிபட்டதிலிருந்து விக்ரம் மீண்டும் எழுந்து வருவார் அல்லவா? நண்பர்கள்  ‘ஓ நண்பனே!’ உற்சாகமாக ஆடுவார்கள். விக்ரம் வலியோடு சிரிப்பார். அந்தக் காட்சி சில வினாடிகள் மனதுக்குள் வந்து போனது.

இரண்டு நாட்களாக தனது வாழ்க்கையைச் சுற்றிய கசடுகளை நீக்கிக் கொண்டேயிருந்திருக்கிறது இந்த நாய்க்குட்டி.  குளத்தின் மேற்பரப்பில் இருக்கும் கசடுகளை நீக்கினால் உள்ளே கிடக்கும் கண்ணாடித் துண்டு அல்லது வெண்மையான கல் ஒன்றின் மீது சூரிய ஒளி பட்டுத் தெறிப்பது போலத்தானே வாழ்க்கை? எத்தனை சிக்கல்கள் வந்தாலும் அந்த நம்பிக்கையின் ஒளியை பார்த்துவிட்டால் தப்பித்துவிடலாம். இந்த நாய்க்குட்டியும் அப்படித்தான். உணவும் இல்லை, தண்ணீரும் இல்லை- இரண்டு நாட்களாக அசையாமல் கிடந்த போதும் எப்படியாவது பிழைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையை மட்டும் பிடித்திருக்கிறது. இப்பொழுது தப்பித்துவிட்டது.

இனிமேல் அதன் முறிந்த காலின் எலும்பு சேராமலே போனாலும் கூட அது ஒன்றும் ஓய்ந்துவிடப் போவதில்லை. அதன் துள்ளலும், ஓட்டமும் திரும்ப வந்து ஒட்டிக் கொள்ளும். அதன் வேகம் குறைந்திருக்கலாம். ஆனால் மற்ற நாய்களை விட தான் ஒரு படி உசத்திதான் என்று அது இனி நம்பக் கூடும். அவ்வளவுதான்! நான் தான் நினைத்துக் கொண்டேன். வெறும் நாய்க்குட்டிதானே என்று. ஆனால் அது வைத்திருக்கிறது ஆயிரம் சங்கதிகளை- நமக்கு சொல்லித் தருவதற்கு.

கல்யாண்ஜியின் கவிதை ஒன்று:

இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்

செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலையலாம்

Nov 14, 2013

டிசம்பர் ஒன்று- நீங்கள் ஃப்ரீதானே?

டிசம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் ஒரு கூட்டம் நடக்கவிருக்கிறது. கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் யாவரும்.காம் நண்பர்கள் நடத்தும் கூட்டது அது. 

என்னளவில் இது ஒரு முக்கியமான கூட்டம். அதற்கு காரணமிருக்கிறது. நிசப்தம்.காமும், என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவியும்தான் அஜெண்டா. ஃபார்மலாக எதுவும் இருக்காது என நம்புகிறேன். கூட்டம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் எழுதியதை எல்லாம் பொருட்டாக மதித்து தனிக்கவனம் கொடுத்து நடத்தப்படும் முதல் கூட்டம் இது- வாழ்நாளின் முதல் கூட்டம். சந்தோஷம் இருக்கத்தானே செய்யும்?

ஒழுங்காக எழுதிக் கொண்டிருந்தால் இன்னும் பத்து வருடங்கள் கழித்து யாராவது கூட்டம் நடத்துவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதே என்பது சற்று அதிகப்படியாகத் தெரிந்தாலும் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? எழுத்துக்கான அங்கீகாரத்தைத் தவிர இங்கு வேறு எதை எதிர்பார்ப்பது? யாராவது முகம் தெரியாத ஒருவர் இரண்டு வரி மின்னஞ்சல் அனுப்புகிறார்; கேட்டிராத தொலைபேசிக் குரல்கள் வாழ்த்துகின்றன என்ற சந்தோஷங்களைத் தாண்டிய இன்னொரு மகிழ்ச்சி இது.

‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக் குருவி’ கவிதைத் தொகுப்பு பற்றி கவிஞர். தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகிறார். ஆனால் நிசப்தம்.காம் பற்றி யார் பேசப் போகிறார்கள் என்று இன்னும் முடிவாகவில்லை. அது ஒரு பக்கம் முடிவாகிக் கொண்டிருக்கட்டும். அதற்கு முன்பாக உங்களிடம் தெரிவித்து விட விரும்பினேன். 

சென்னையில் இருப்பவர்கள் மற்றும் அந்த தினத்தில் சென்னை வர இயல்பவர்கள் என அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஒதுக்குங்கள். அது போதும்.

கடைசி நேரத்தில் சொன்னால் ‘அடடா ஊருக்கு போக டிக்கெட் புக் செஞ்சுட்டேனே’ ‘ஒரு வெளியூர் ட்ரிப் போக ஏற்கனவே ஒத்துக் கொண்டேனே’ என்று யாராவது சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன்.

தொடர்ச்சியான உங்கள் வாசிப்பும், உங்களின் தொடர்பு மட்டுமே என்னை உற்சாகத்தோடு எழுதச் செய்கிறது. அதே உற்சாகத்தோடு இன்னும் பல வருடங்களைத் தாண்டுவதற்கு உங்களின் ஆதரவும் அன்பும் தேவை. அதற்கான அத்தாட்சியாக வந்து தலையைக் காட்டிவிடுங்கள்.

ஒரு முட்டாள் நாடகம் பார்க்கிறான்

கடந்த வாரத்தில் ஒரு நாடகம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பெங்களூரில் நாடகப் பிரியர்கள் அதிகம். கிரிஷ் கர்னாட் மாதிரியான நாடகவாசிகளுக்கு மரியாதையும் அதிகம். மரியாதை என்றால் நிஜமான மரியாதை. உள்ளூர் மாரியம்மன் கோவிலில் பேனர் கட்டினாலும் கூட அதில் கர்நாடகத்தின் அறிவுஜீவிகளின் படங்கள் வரிசையாக இருக்கும். அந்த படங்களின் வரிசையில் நிச்சயம் கிரிஷ் கர்னாடின் படம் இருக்கும். தமிழ்நாட்டில் அறிவுஜீவிகளின் படங்களை பேனரில் போடுவதென்றால் யாருடைய படங்கள் எல்லாம் இடம் பெறும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். எனக்கு தலை கிறுகிறுக்கிறது.

தமிழ்நாடு இருக்கட்டும். கிரிஷ் கர்னாட் தெரியும் அல்லவா? மிக எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ரட்சகன் படத்தில் சுஷ்மிதா சென்னுக்கு அப்பாவாக நடித்தவர். ஞானபீட விருது கூட வாங்கியிருக்கிறார். ஆனால் அது சுஷ்மிதா சென்னைவிட முக்கியமில்லை என்பதால் இரண்டாவதாகச் சொல்கிறேன். அது போக பத்மஸ்ரீ, பத்ம பூஷண், சாகித்ய அகாடமி, சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது, சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருது என்று தாறுமாறாக வாங்கியிருக்கிறார். 

இத்தனை கலக்கலான ஒரு மனிதர் ஜோல்னா பையைத் தூக்கிக் கொண்டு டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தார். எங்கு என்று சொல்லவில்லை பார்த்தீர்களா?. ரங்க ஷங்கராவில். ரங்க ஷங்கரா பெங்களூரில் இருக்கும் முக்கியமான நாடக அரங்கு. இதைப் பற்றி சொல்ல வேண்டுமானால் மறைந்த கன்னட நடிகர் ஷங்கர் நாக் பற்றி சொல்ல வேண்டும். படுவேகமாக வளர்ந்து வந்த நடிகர் அவர். ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னமும் நாற்பது சதவீத ஆட்டோக்களில் அவரது படத்தை ஒட்டி வைத்திருப்பார்கள். கர்நாடகத்தின் ஐகான்.

அவரது நினைவாக கட்டிய நாடக அரங்குதான் ரங்க ஷங்கரா. அரசு ஒதுக்கிய இடத்தில் அவரது மனைவி கட்டிய அரங்கு இது. நாடகம் பார்ப்பதென்றால் இப்படியான ஒரு அரங்கில் பார்க்க வேண்டும். தூள் டக்கர்.

இப்படியே சொல்லிக் கொண்டு போனால் கிரிஷ் கர்னாட், சங்கர் நாக், அவரது மனைவி, ரங்க ஷங்கரா என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இப்போதைக்கு ஒரு பிடிமானம் கிடைத்துவிட்டதல்லவா? அது போதும். இவர்களைப் பற்றியெல்லாம் தனித்தனியாக இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம்.

முருக பூபதி பெங்களூர் வந்திருந்தார். அவரை முதன் முதலாக பார்த்த போது எழுத்தாளர் கோணங்கியின் சகோதரர் என்றுதான் பார்த்தேன். ஆனால் அவருக்கு அந்த அடையாளம் தேவையே இல்லை என்று பிறகு தோன்றியது. தமிழில் நவீன நாடகத்தின் சிற்பிகளில் ஒருவர் அவர். அவரது முந்தைய நாடகமான சூர்ப்பணங்கு நாடகத்தை பெங்களூரில் நடத்தினார்கள். நாடகத்தின் இசை முதற்கொண்டு அவரே அமைத்ததுதான். மனுஷனிடம் எந்த பந்தாவும் இருக்காது. மிக இயல்பாக இருக்கும் எளிய மனிதர் அவர்.

அவரது அடுத்த நாடகம் ‘குகைமர வாசிகள்’. ஏற்கனவே பல இடங்களில் மேடையேற்றிவிட்டார்கள். இப்பொழுது பெங்களூரில் இடம் பார்ப்பதற்காக வந்திருந்தார். கூடவே ஸ்ரீனியும். ஸ்ரீனி தீவிரமான வாசகர். நிறைய வாசித்திருக்கிறார். இத்தனை நாட்கள் பெங்களூரில்தான் இருந்தார். இப்பொழுது சேலத்தில் குடியேறிவிட்டார். தானும் முருகபூபதியும் ரங்க ஷங்கராவில் நாடகம் பார்க்க வந்திருப்பதாகவும், நாடகத்திற்கான ஒரு டிக்கெட் கூடுதலாக கைவசம் இருப்பதாகவும் சொன்னார். ஒட்டிக் கொண்டேன்.

நாடகத்தின் பெயர் ‘மாரிக்காடு’. காடு கதை சொல்வது போல அமைக்கப்பட்ட நாடகம் இது. நாடகத்தில் ராஜா உண்டு, தளபதி உண்டு, சூழ்ச்சி உண்டு, கொலைகள் உண்டு, கடைசியில் மனம் வெதும்புதல் உண்டு- கதை இதுதான். தொண்ணூறு நிமிடம் கட்டிப் போட்டுவிடுகிறார்கள். கட்டிப் போடுதலுக்கு இரண்டு காரணம் உண்டு. முதற்காரணம், ரங்க ஷங்கராவில் உள்ளே நுழைந்துவிட்டால் அசையக் கூட முடியாது. யாரும் அருகில் இருப்பவர்களிடம் பேசுவது கூட இல்லை. நாடகம் ஏழரை மணிக்குத் தொடங்குகிறது என்றால் 7.28க்கு செல்போனை அணைக்கச் சொல்லிவிட்டு விளக்கை அணைத்துவிடுகிறார்கள். கதவும் அடைக்கப்பட்டுவிடுகிறது. 

இரண்டாவது காரணம், நாடகம் படு சுவாரஸியமாக இருந்தது. எப்படி நாடகக் கலைஞர்களால் இவ்வளவு நேர்த்தியாக வசனம் பேசி நடிக்க முடிகிறது என்ற பிரமிப்பு தீருவதற்குள்ளாகவே நாடகத்தை முடித்துவிடுகிறார்கள்.

இந்த நாடகம் சந்திரசேகர் கம்பார் என்ற எழுத்தாளருடையது. அவரும் ஞானபீடம் வாங்கியவர்தான். ஷேக்ஸ்பியரின் மெக்பெத்தை தழுவி எழுதபட்டது என்று நாடகத்தில் நடித்த நவீன் சொன்னார். எனக்கு கம்பாரையும் தெரியாது; மெக்பத்தையும் தெரியாது என்பதால் அமைதியாக தலையை ஆட்டிக் கொண்டேன்.

ரங்க ஷங்கராவில் முந்நூற்றுச் சொச்சம் பார்வையாளர்கள் அமரலாம். அத்தனை இருக்கைகளும் நிரம்பியிருந்தன. அத்தனை அமைதி, அத்தனை ஒழுங்கு.

கன்னட நாடகம் பார்க்கப் போகிறேன் என்று சொன்னவுடன் வேணி கடுப்பாகியிருந்தாள். ‘நிம்து ஊட்டா ஆயித்தா? நம்து ஆயித்து’ என்று மட்டும்தான் எனக்கு கன்னடத்தில் பேசத் தெரியும். இந்த லட்சணத்தில் கன்னட நாடகம் பார்க்கப் போகிறேன் என்றால் கோபம் வரத்தானே செய்யும்?. ஆனால் நவீன நாடகத்திற்கு மொழி பிரதானமில்லை. கொஞ்சம் அறிவு இருந்தால் போதும். எனக்கு அது இல்லாததுதான் பிரச்சினையே. இத்தனைக்கும் சூர்ப்பணங்கு தமிழ் நாடகம்தான். ஆனால் பாதிக்கு மேல் புரியவில்லை.

பிறகு எதற்கு சென்றேன் என்கிறீர்களா? அறிவை வளர்த்துக்கொள்ளத்தான்! வளர்ந்துவிட்டதா என்று அடுத்த கேள்வி வரலாம். நான்கைந்து பத்திகளுக்கு முன்னால் பாருங்கள். நாடகத்தின் கதையைச் சொல்லியிருக்கிறேன். அப்படியானால் துளியூண்டு வளர்ந்துவிட்டது என்றுதானே அர்த்தம்?

Nov 13, 2013

எழுத்தாளர் ஆவது எப்படி- செம ஐடியா

‘எழுத்தாளர் ஆவது எப்படி?’- இந்தக் கட்டுரையை இப்படி ஆரம்பிக்கலாம்தான். ஆனால் ‘இவன் எல்லாம் அறிவுரை சொல்லுமளவுக்கு ஆகிவிட்டான்’ என்று ஏகப்பட்ட பேர் எசகுபிசகாக நினைப்பதற்கு நாமாகவே வழி ஏற்படுத்தி விடக் கூடாது அல்லவா? ஏற்கனவே தத்துவம் சொல்கிறேன் பேர்வழி, அறிவுரை சொல்கிறேன் பேர்வழி, கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று திரும்பிய பக்கமெல்லாம் தமிழகம் நசநசத்துக் கிடக்கிறது. போதாதற்கு ஒன்றரை கவிதை எழுதியவன், மூன்றரை கதை எழுதியவன் எல்லாம் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்கிறான் - இந்தக் கடைசி வரி கண்ணாடியைப் பார்த்து எனக்கு நானே சொல்லிக் கொண்டது.

இந்த நிலையில் ‘எழுத்தாளன் ஆவது எப்படியா?’

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் சில கல்லூரி மாணவர்கள் குடியிருந்தார்கள். ஐந்து கல்லூரி மாணவர்கள் இருந்தால் அதில் நிச்சயம் ஒருவர் கவிஞராக இருக்க வேண்டும் என்பது ஒரு விதி. அப்படித்தான் பக்கத்துவீட்டிலும். அவர்களில் ஒருவர் மட்டும் கவிஞர். கல்லூரி ஆண்டு மலரில் எல்லாம் கவிதை எழுதியிருக்கிறார். அந்தச் சமயத்தில் நானும் கவிதை எழுத ஆரம்பித்திருந்தேன். “அன்பே ஆருயிரே உன் மச்சம் பார்த்து என் மிச்ச உயிரும் போச்சு” என்றெல்லாம் எழுதி வைத்திருந்தேன். இதையெல்லாம் கவிதை என்று அம்மாவிடமா காட்ட முடியும்? பக்கத்து வீட்டில் இருந்த அண்ணன்கள்தான் காணி. அவர்களிடம் காட்டிய போது அத்தனை பேரும் கைநீட்டியது கவிஞரை நோக்கித்தான்.

எழுதி வைத்திருந்த தாள்களை மிகுந்த படபடப்புடன் கொடுத்த போது அவற்றை வாங்கிக் கொள்ள அவருக்கு மூன்று விரல்கள் மட்டுமே தேவைப்பட்டன. அத்தனை சாவகாசம். அத்தனை தெனாவெட்டு. வாங்கிக் கொண்டவர் மேலே பார்த்தார்; கீழே பார்த்தார்; சைடிலும் பார்த்தார். பிறகு எனது முகத்தை அசால்ட்டாக பார்த்துவிட்டு பக்கங்களை புரட்டத் துவங்கினார். ஒவ்வொரு பக்கத்துக்கும் அதிகபட்சமாக மூன்றேகால் வினாடிகள்தான். அண்ணன் செம ஃபாஸ்ட் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன். வாசித்து முடித்துவிட்டு தாள்களை திருப்பி எனது கையில் கொடுக்கும் போது தலையை ஒன்றரைக் கிடையாக வைத்துக் கொண்டு  “நாம ஈவ்னிங் மீட் பண்ணுவோம். உனக்கு கவிதை பத்தி ஒண்ணுமே தெரியலை” என்று அவர் சொன்ன போது பாதத்திற்கு கீழாக பூமி வழுக்கிக் கொண்டிருந்தது.

ஆனாலும் ஒரு நம்பிக்கை -‘அண்ணன் எப்படியும் கவிதையை சொல்லிக் கொடுத்துவிடுவார்’ என்று.

அப்படித்தான் நடந்தது.

இந்த இடத்தில் அண்ணனை மனக்கண்ணில் கொண்டு வந்துவிடுவது உசிதம் - சிவந்த நிறம்; சுருட்டை முடி; மீசை தாடியெல்லாம் முளைத்திருக்கவில்லை; குரல் ‘கீச்சு கீச்சு’ என்றிருக்கும்- சைக்கிள் சக்கரத்தில் சிக்கி அடிபட்ட குட்டிநாயின் குரலைப் போல.

மாலையில் என்னை அழைத்து ‘நீ என்ன பண்ணுறீன்னா...ராத்திரி சாப்பிட்டுட்டு ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துட்டு வந்துடு...இன்னைக்கு பெளர்ணமி....கவிதை பத்தி சொல்லிக் கொடுத்துடுறேன்’ என்றார். அவர் சொன்ன தொனியை நீங்கள் நேரில் பார்த்திருக்க வேண்டும். சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்துவிடுகிறேன் என்பது போல சொன்னார்.

பெளர்ணமிக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் அவன் எப்படி ஒரு கவிஞனாக முடியும்? அதனால் எந்தக் கேள்வியும் இல்லாமல் குருநாதரிடம் சரணடைந்திருந்தேன்.  ‘ஒரு நல்ல அடிமை சிக்கிட்டான்’ என்று அவர் அனேகமாக கொண்டாட்டமாக இருந்திருக்க வேண்டும். தெறிக்க வைத்துவிட்டார்.

“கணையாழி கேள்விப்பட்டிருக்கியா?” முதல் அடியே இப்படித்தான்.

ஏதோ கெட்டவார்த்தையாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். காது விடைத்துக் கொண்டது.

“அது ஒரு சிற்றிதழ்”- எனக்கு ஒரு எழவும் புரியவில்லை.

“வைரமுத்து கருணாநிதி எல்லாம் அதுலதான் எழுதுவாங்க”

“அப்படீங்குளாண்ணா?” என்று திறந்த வாயை மூட வைக்கும் விதமாக “என் கவிதை கூட அதுல வந்துருக்கு” என்றார்.

என்ன ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.  “என் கவிதையைப் போடுவாங்களாண்ணா?” என்றேன்.

“இப்படியே அனுப்புனா குப்பைலதான் போடுவாங்க....அதுக்கெல்லாம் புரியாம எழுதோணும்”

“எதுக்குண்ணா புரியாம எழுதோணும்” 

இப்பொழுது அந்த அண்ணனுக்கு காது விடைத்துக் கொண்டது.

“சாமானியன், சாணக்கியன்னா தெரியுமா?” என்றார்.

திட்டுவதற்கென்றே அழைத்திருப்பான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். “தெரியாதுங்கண்ணா”

“சாமானியன்னா சாதாரண ஆளு. உங்க அப்பா அம்மா மாதிரி. சாணக்கியன்னா அறிவாளி. என்னை மாதிரி, கருணாநிதி மாதிரின்னு வெச்சுக்கலாம்”

“அடங்கொக்கமக்கா” அல்லது “அடங்கொண்ணியா” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் - எந்த வார்த்தை என்று சரியாக நினைவில் இல்லை.

“நீ எழுதுற கவிதை சாமானியனுக்கு புரியவே கூடாது” இதைச் சொல்லிவிட்டு இதன் பிறகும் நிறையச் சொன்னார். ஆனால் அதெல்லாம் முக்கியம் இல்லை. இதுதான் மெயின் கான்செப்ட். நாம் எழுதுவது அடுத்தவனுக்கு புரியக் கூடாது.

அடுத்த இரண்டு நாட்களுக்கும் கடும் பிரயத்தனங்கள். அகராதிகளைப் புரட்டி புரட்டி புரியாத கவிதை ஒன்றை எழுதிவிட்டேன். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. அகராதியில் நமக்கு இதுவரை அறிமுக ஆகியிராத சொற்களை எல்லாம் பொறுக்கி இணைத்தால் ஒரு புரியாத கவிதை ரெடி ஆகிவிடும். அம்மாவிடம் காட்டினேன். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. சாமானியனுக்கு புரியாத கவிதை எழுதியாகிவிட்டது. சக்ஸஸ்.

கவிஞரிடம் காட்டினேன். “பிரமாதம், கவித கவித” என்று குணா கமல் பாணியில் பாராட்டினார். குரல் மட்டும் அதே கீச்சு கீச்சு. அவருக்கும் புரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் குருநாதருக்கு எல்லாம் தெரியும் என்று நம்புவதுதானே சிஷ்யனுக்கு அழகு? நம்பிக் கொண்டேன்.

“இதை அனுப்புனா கசையடில போடுவாங்களாண்ணா?”

“டேய்...அது கணையாழிடா”

“சரிண்ணா. அதுல போடுவாங்களா?”

“போடுவாங்க போடுவாங்க”- நோட் திஸ் ‘டபுள்’ போடுவாங்க.

“அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு நல்ல பேர் வைக்கணும்”

“பேரு வெக்கறீங்களா? எங்கம்மா அப்பா கொன்னே போடுவாங்கண்ணா”

“இதெல்லாம் புனைப் பெயருடா”- ஏதோ புஸ்ஸி கேட் என்று வைப்பார் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன். ஆனால் பூனைப்பெயர் இல்லையாம். இது புனைப் பெயர். ஏதோ ஒரு கருமம். மொத்தத்தில் என் பெயர் மாறப் போகிறது.

“ஊர் பேரு கரட்டடிபாளையம். அப்பா பேரு வாசுதேவன். க.வா இன்ஷியல்....ம்ம்ம்ம்” என்று மோட்டுவளையைப் பார்த்து யோசித்தவர் “இனிமே கனவான் மணிகண்டன்னு எழுதிக்க” என்றார்.

“கனவான்னா என்னண்ணா?” 

“அது பயில்வான் மாதிரிடா...எழுத்துல பயில்வான் மாதிரின்னு வெச்சுக்க”

‘ஒகே’ சொல்லிவிட்டு கலர் கலராக பேனாக்களை வாங்கி திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்தேன். ஒரு சமயத்தில் அந்தப் பெயர் மிகப் பிடித்துவிட்டது. அதன் பிறகு அவசர அவசரமாக எனது ’புரியாத கவிதையை’ வெள்ளைத் தாளில் எழுதி கடைசியில் கொட்டை எழுத்தில் ‘கனவான் மணிகண்டன்’ என்று மறக்காமல் எழுதி கணையாழிக்கு அனுப்பி வைத்திருந்தேன். இருபது வருடங்கள் ஆகப் போகிறது. ஒரு தகவலையும் காணவில்லை. அந்தப் பத்திரிக்கை அலுவலகம் பக்கமாக யாராவது போனால் கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.