Oct 29, 2013

ஸ்ரீபுரம் சாமியாரும் அப்புச்சாமி வாத்தியாரும்

சனி, ஞாயிறு ஆனால் போதும், வீட்டில் இருப்பவர்களுக்கு உள்ளங்கால் அரிக்க ஆரம்பித்துவிடுகிறது. வீட்டில் இருப்பவர்கள் என்றால் அது அம்மாவானாலும்- இது குதிரை இறக்கை அம்மா இல்லை- எங்கள் அம்மா. அல்லது மனைவியானாலும் சரி, கோவிலுக்கோ அல்லது குறைந்தபட்சம் கப்பன் பூங்காவுக்கோ அழைத்துச் சென்றுவிட்டால் அமைதியாகிவிடுகிறார்கள். எத்தனை நாளைக்குத்தான் லால்பாக்கையும், கப்பன் பூங்காவையும் காட்டுவது? எனக்கே சலிப்படைந்த மாதிரி இருந்ததால் இந்த முறை அவுட்டோர். 

ஸ்ரீபுரம் கோவிலுக்குச் சென்றோம். இப்பொழுதெல்லாம் நான் நாஸ்திகம் பேச மாட்டேன். ஒரு காலத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் ப்ளஸ் டூவில் ஊற்றிக் கொள்ளுமோ என்ற பயம் வந்த போது- அது ஒரு பெரிய கதை. 

அப்புச்சாமி என்ற வாத்தியாரிடம்தான் ட்யூசன் படித்துக் கொண்டிருந்தோம். கணக்கு ட்யூசன். அவருக்கு என்னைக் கண்டாலே வேப்பங்காய். அதற்கும் ஒரு காரணமிருக்கிறது. விடிந்தும் விடியாமலும் எழுப்பி வேறொரு வாத்தியாரிடம் உயிரியல் ட்யூசனுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். பல் துலக்காமலே சுற்றிலும் பலர் அமர்ந்திருக்கும் தூங்குமூஞ்சி தனிப்பயிற்சி அது. யாராவது வாயைத் திறந்து பதில் சொன்னாலே நாம் மூக்கை மூடிக் கொள்ள வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு பர்ஃபூயுமாக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஐந்து மணிக்கு எழுந்து பழைய சோற்றைக் கரைத்துக் குடித்துவிட்டு போய் அமர்ந்தால் எனக்கு ஆறரை மணிக்கு தூக்கம் வந்துவிடும். தூக்கம் உச்சத்தில் இருக்கும் போதுதான் ‘உணவுப்பாதையானது வாயில் ஆரம்பித்து குதத்தில் முடிகிறது’என்று பயாலஜி வாத்தியார் சொல்லிக் கொண்டிருப்பார். அந்த மனுஷனுக்கு எதிரில் இருப்பவர்கள் எல்லோருமே ஆடு மாடுதான். சொல்லிக் கொடுத்துவிட்டு ஒவ்வொரு ஆடு மாடையும் வரிசையாக எழுந்து நிற்கச் செய்து ‘உணவுப் பாதை எங்கே முடிகிறது?’ என்று கேள்வி கேட்பார். ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அந்த பதில்களில் இருக்கும் காமெடி இருக்கிறதே- மொத்தத் தூக்கமும் காணாமல் போய்விடும். ஆனால் ஒன்றரை நிமிடங்கள்தான் இந்தக் காமெடியெல்லாம். அதன் பிறகு வாத்தியாருக்கு அருள் வந்துவிடும். ஒவ்வொரு டெஸ்க்காக ஏறி ஒவ்வொருவனாக ஃபுட்பால் விளையாடுவார். இப்படி ‘மொத்து’ வாங்கி ஆரம்பமாகும் நாளின் வால் பகுதியில்தான் கணக்கு வாத்தியார் ஸீனுக்கு வருவார்.

பகலில் பார்த்தாலே கணக்கு புரியாது. இதில் வேதியியல், இயற்பியல் எல்லாம் முடித்துவிட்டு கடைசியாக இரவு நேரத்தில் கணக்கு ட்யூஷன். ஒரே பிணக்குதான். இண்டகெரேஷன், டிஃபரென்ஷியேஷன் எல்லாம் சேர்ந்து கான்ஸிடிபேஷனுக்குத்தான் வழிவகுத்தன. போதாக்குறைக்கு வாரந்தவறாமல் டெஸ்ட் வேறு வைப்பார். இப்படியான ஒரு டெஸ்ட்டின் போது எதுவுமே படிக்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் ஒரு துண்டுச்சீட்டை சட்டைப்பையில் செருகி வைத்திருந்தேன். வெறும் துண்டுச்சீட்டாக இருந்தால் பிரச்சினையில்லை- அதில் ஒன்றிரண்டு கணக்கையும் எழுதி வைத்திருந்ததுதான் தப்பாக போய்விட்டது.  அவர் ஏமாந்திருக்கிறார் என நினைத்து நான் வெளியே எடுக்க, என்னிடமே திருட்டு வேலை செய்கிறாயா என்று அவர் விழித்துக் கொள்ள ஒரே போர்க்களம்தான். நிராயுதபாணியாக நின்றிருந்த என்னிடம் தனது மொத்த பலத்தையும் பரிசோதனை செய்து கொண்டார். அநேகமாக அன்றைய தினம் அவர் தனது ஓட்டப்பயிற்சியைத் தவற விட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னை ஓடவிட்டு துரத்தி துரத்தி compensate செய்து கொண்டார். அந்த ஓட்டம் போதும். அடுத்த பத்து பதினைந்து நாட்களுக்கு அவருக்கு ஓட்டப் பயிற்சியே தேவைப்பட்டிருக்காது. என்ன அடி! இப்பொழுது நினைத்தாலும் மேல்மூச்சு வாங்குகிறது.

அடித்ததோடு விட்டாரா? ‘அம்மா அப்பாவை கூட்டிட்டு வா’ என்று சொல்லிவிட்டார். என்னவென்று போய் அவர்களிடம் சொல்வது? துண்டுச்சீட்டு தானாகவே பாக்கெட்டுக்குள் வந்துவிட்டது என்றா? அப்பொழுதெல்லாம் பையன் ஸ்டெதஸ்கோப்போடு வந்து கதவைத் தட்டுவதாக அம்மாவும் அப்பாவும் கனவில் மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கனவில் கல்லைத் தாங்கிப் போட முடியாது. ‘போய்யா நீயுமாச்சு உன் ட்யூஷனுமாச்சு’ என்று கட் அடிக்கத் துவங்கியிருந்தேன். சைக்கிளை ஓட்டிக் கொண்டு போனால் சீக்கிரம் வீட்டை அடைந்துவிட வேண்டியிருக்கும்; இதனால் அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்பதால் தினமும் உருட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். தினமும் இப்படியே சைக்கிளை உருட்டிக் கொண்டு போனதால் உடம்பு இளைக்கத் துவங்கியிருந்தது. பையன் படித்து படித்து இளைக்கிறான் என நினைத்து அம்மாவுக்கு ஒரே புளகாங்கிதம்.

இதன் பிறகுதான் பெரிய பிரச்சினைகள் வரத் துவங்கின. ட்யூஷன் செண்டரிலிருந்து மாதாமாதம் வீட்டிற்கு லெட்டர் அனுப்பத் துவங்கியிருந்தார்கள். போஸ்ட்மேனைப் பார்த்து நடுவழியில் சரிக்கட்டி, லெட்டரை வாங்கி கிழித்து எறிவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இப்படி ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோதான் செய்திருப்பேன். அதன் பிறகு போஸ்ட்மேனாகவே அந்த வேலையை செய்யத் துவங்கிவிட்டார் போலிருக்கிறது. லெட்டரே வரவில்லை.

இப்படி போய்க் கொண்டிருந்த +2வின் அரையாண்டுத் தேர்வில் கணிதத்தில் இருபத்தொன்பது மதிப்பெண்- நூற்றுக்கு இல்லை; இருநூறுக்கு. வீடு ரணகளம் ஆகிவிட்டது. அம்மா மூக்கைச் சிந்த, அப்பா தலையில் இடி இறங்கியது போல் அமர்ந்திருக்க என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர்கள் ட்யூஷன் செண்டரில் விசாரித்தார்கள். ‘அவன்தான் கணக்கு க்ளாஸூக்கு வருவதேயில்லையே’ என்று முதல் குண்டு வெடித்தது. ‘ஒவ்வொரு மாதமும் லெட்டர் அனுப்புறோமே’ என்ற அடுத்த குண்டும் சில வினாடிகளில் வெடித்தது. அதிர்ச்சியடைந்த அப்பா ராத்திரியோடு ராத்திரியாக போஸ்ட்மேனைத் தேடிப் போன போது ‘அத்தனை லெட்டரையும் அவனே வந்து வாங்கிட்டானே’ என்ற அடுத்த குண்டு. இந்த சீரியல் ப்ளாஸ்ட் என்னை சின்னாபின்னமாக்கிவிட்டது. 

வீட்டை விட்டு ஓடிப் போவதா அல்லது தற்கொலை செய்து கொள்வதா என்ற குழப்பம் வந்த போது எங்கள் ஊரில் லோக்கல் அம்மனிடம் கேட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். அதுவரை பேசிக் கொண்டிருந்த நாஸ்திகத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அம்மனிடம் சரண்டர் ஆகிவிட்டேன். இந்தக் கட்டுரைக்கு ‘நான் ஏன் சாமி கும்பிடுகிறேன்?’என்ற தலைப்பு வைத்திருந்தால் இதையெல்லாம் எழுதுவதில் அர்த்தம் இருக்கிறது. அப்படியே இருந்தாலும் இது என்ன அவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியா? மனசாட்சியே இல்லாமல் இழுத்துக் கொண்டிருக்கிறேன் பாருங்கள்.

ஸ்ரீபுரத்திற்கே வந்துவிடலாம். 

அடேயப்பா! எங்கு இருந்துதான் இத்தனை காசு சம்பாதித்தாரோ அந்தச் சாமியார். பதினாறு வயதிலேயே அம்மனின் அருள் அவருக்குள் இறங்கிவிட்டதாம். அதுவும் நாராயணீ. நாராயணின் மனைவி நாராயணீ. மஹாலட்சுமி கடாட்சம். சும்மா விடுவாரா? நூறு ஏக்கரில் வளைத்து வளைத்துக் கட்டியிருக்கிறார். மொத்த வேலூரும் காய்ந்து கொண்டிருக்க ஸ்ரீபுரத்திற்குள் மட்டும் அத்தனை குளுமை. அத்தனை மரங்கள், அவ்வளவு தண்ணீர். கோயிலை அடைவதற்காக நூறு ஏக்கரையும் சுற்ற வேண்டியிருக்கிறது. நடக்கும் வழிகள் மொத்தமும் பொன்மொழிகள்தான். எல்லாம் அம்மாவின் அருள்மொழிகள். பன்மொழி வித்தகர் போலிருக்கிறது. தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், தமிழில் வைத்திருக்கிறார்கள். இவர்களைப் போன்ற தத்துவவாதிகளுக்கு ஏன் நோபல் பரிசு கொடுப்பதில்லை என்று யோசிக்க வைத்துவிடுகிறார்கள். 

கோயிலை அடைவதற்குள் அம்மா கிட்டத்தட்ட அத்தனை அருள்மொழிகளையும் மனனம் செய்துவிட்டார். ‘நல்லா இருக்குல்ல?’ என்றார். அதுவரை அங்கு இருக்கும் சிலைகள் ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் பெறுமா? நடைபாதைக்கான செலவு ஒரு கோடி பெறுமா? பொற்கோவிலுக்கு எத்தனை கிலோ தங்கம் தேவைப்பட்டிருக்கும்? என்று பணத்திலேயே கணக்கு போட்டுக் கொண்டிருந்தது மனம். மொத்தமாக ‘நல்லா இருக்கு’ என்று சொல்லி வைத்தேன். இந்தக் கோவில் அம்மாவுக்கு மிகப் பிடித்துவிட்டது. சுத்தமாக இருக்கிறது, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கிறது, வருகிற அத்தனை பக்தர்களுக்கும் அன்னதானம் போடுகிறார்கள் என்று அம்மாவுக்கு ஸ்ரீபுரம் புராணம்தான்.

யோசித்துப் பார்த்தால் சாமியார் எப்படித்தான் சம்பாதித்திருந்தாலும் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது இத்தகைய கோயில்கள் முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிடும். இப்பொழுது இருக்கும் நமது கோயில்களை அந்தக் காலத்தில் எப்படிக் கட்டினார்கள் என்று யாருக்குத் தெரியும்? யாரிடமிருந்தோ கொள்ளையடிக்கப்பட்ட பணமாக இருக்கக் கூடும், எத்தனையோ உயிர்களை பலி வாங்கியிருக்கக் கூடும். ஆனால் இன்றைக்கு  அவை முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிடவில்லையா? அப்படித்தான் இதுவும் ஆகிவிடும். முதல் ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்கு ‘அவருக்கு எப்படி இத்தனை பணம் வந்தது’ என்று புலம்பிக் கொண்டிருப்போம். நிர்வாகம் மட்டும் சரியாக இருக்குமானால் அடுத்த தலைமுறையினர் கொண்டாடத் துவங்கிவிடுவார்கள்.

வெளியே வரும் போது ‘மனசு அமைதியாக இருக்கிறது’ என்று அம்மா சிலாகித்தார். சிரித்து வைத்தேன். ‘ஆத்தா மகாலட்சுமி, தெரியாத்தனமாகக் கூட இந்த ஆளுக்கு எங்கம்மா பக்தை ஆகிவிடக் கூடாது’ என்று நான் வேண்டிக் கொண்டதை மட்டும் அவரிடம் சொல்லவில்லை.