நேற்று ஊருக்கு போக வேண்டியிருந்தது. ஹைதராபாத்தில் இருக்கும் போது அடிக்கடி ஊருக்கு போவதற்கு சாத்தியமே இல்லை. போக ஒன்றரை நாள் வர ஒன்றரை நாள் ஆகிவிடும் என்பதால் புரட்டாசிக்கு ஒரு முறை; பெளர்ணமிக்கு ஒரு முறைதான். இப்பொழுது நினைக்கும் போதெல்லாம் ஊருக்கு போய் வர முடிகிறது. சொந்த ஊருக்கு பயணிப்பதற்கான முக்கியமான காரணம் - உள்ளூருக்குள் ஒரு சிலராவது நம்மை ஞாபகம் வைத்திருக்க வேண்டுமே என்ற ஆசைதான்.
என்னதான் முயற்சித்தாலும் ஊர் மெதுவாக என்னை மறந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போதெல்லாம் பாதிக்கு மேலான முகங்கள் புதியனவாகத் தெரிகின்றன. வளர்ச்சியும், பொருளாதாரமும் காட்டாற்று வெள்ளம் போல ஒவ்வொருவரையும் உருட்டிச் சென்றுவிடுகிறது. பல நூறு வருடங்களாக மாறாமல் கிடந்த கிராமங்களின் முகங்கள் இருபத்தைந்து வருடங்களில் அசுர வேகத்தில் மாறிவிட்டது போல் தோன்றுகிறது. காலங் காலமாக விவசாயம் செய்து கொண்டிருந்தவர்களை பெரு நிறுவனங்கள் இரும்புத் துகள்களை ஈர்க்கும் காந்தங்களைப் போல உள்ளிழுத்துக் கொள்கின்றன. அது இருக்கட்டும்.
ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் யாராவது வயிற்றைக் கலக்கிவிட்டுத்தான் திருப்பி அனுப்புகிறார்கள்.
இந்த முறை ஒரு ஆசிரியர். நல்ல ஆசிரியர்தான். ஆசிரியரிடம் ட்யூசன் படித்திருக்கிறேன். அவருடன் கூடவே ஒரு ட்ரங்கன் மங்கி ஆசாமியும் இருந்தார். இருவரும் நடைபயிற்சிக்கு வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியரைச் சந்திக்கிறேன். பெயரை மறக்காமல் ஞாபகம் வைத்திருந்தார். வழக்கமான விசாரிப்புகள்தான். எந்த நிறுவனம்? கல்யாணம் ஆகிவிட்டதா? எத்தனை குழந்தைகள்? அம்மா அப்பா எல்லாம் எங்கே இருக்கிறார்கள்? எல்லாவற்றிற்கும் கர்ம சிரத்தையாக பதில் சொல்லி முடித்த பிறகு நான் அமைதியாக இருந்திருக்கலாம். ‘உங்க பையன் என்ன செய்கிறான்?’ என்று கேட்டதுதான் உரையாடலை வேறு திசைக்கு நகர்த்திவிட்டது.
பையன் பி.ஈ. முடித்திருக்கிறானாம். நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் உருப்படியான வேலை எதையும் தேடிக் கொள்ளவில்லை. கோயமுத்தூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் டேட்டா எண்ட்ரி வேலையைச் செய்து கொண்டிருக்கிறான். வாங்கும் சம்பளம் அவனுடைய தேவைகளுக்கே போதும் போதாமலும் இருக்கிறது. பையன் முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறான். ஆசிரியரும் ஓய்வு பெறப் போகிறார். அவருக்கு ஒரே மகன்தான். அவனுக்கு தகுந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்காமல் இருக்கிறோமே என்கிற கனத்த வருத்தம் அவருடைய வார்த்தைகளிலும் முகத்திலும் தெரிந்தது. தனக்குத் தெரிந்த தொடர்புகளையெல்லாம் பயன்படுத்துகிறார். பையனுக்காக ஏதாவது ஒரு வேலையைப் பிடித்து விடலாம் என்ற நப்பாசைதான். அந்தக் காலம் போலவே ஏதாவது ஒரு வேலையில் ஒட்ட வைத்துவிட்டால் பிழைத்துக் கொள்வான் என்று நினைக்கும் பெற்றோர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். பையனாக பார்த்து வேலை தேடிக் கொள்ளாவிட்டால் கோர்த்துவிடுவதெல்லாம் அவ்வளவு எளிதான காரியமில்லை என்று அவருக்கு புரிய வைத்து அவரைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அமைதியாக ‘ம்ம்ம்’ போட்டுக் கொண்டிருந்தேன்.அவரேதான் தொடர்ந்தார். ஒரு கல்லூரியில் அவருடைய மாணவர் HOD ஆக இருக்கிறாராம். பையனை தங்கள் கல்லூரியில் எம்.ஈ சேர்க்கச் சொல்லியிருக்கிறார். பிறகு அங்கேயே ஆசிரியர் ஆக்கிவிடலாம் என்றும் ஐடியா கொடுத்திருக்கிறார். பையனை சம்மதிக்க வைக்க கடும் பிரயத்தனம் செய்திருக்கிறார். ஆனால் ‘வாத்தியார் வேலை வேண்டாம்’ என்று பையன் சொல்லிவிட்டானாம். சொல்லிவிட்டு ஒரு ‘ப்ச்’ போட்டுக் கொண்டார்.
பேச்சுவாக்கில் ‘உனக்கு சம்பளம் எல்லாம் பரவாயில்லையா?’ என்றார். அவரிடம் எனது சம்பளத்தை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கமில்லை. ஆனால் இந்தச் சூழலில் அவரிடம் சொல்ல விருப்பமில்லை. தன் மகனை விட ஒரு ரூபாய் அதிகம் என்றாலும் கூட அவருக்கு ஒரு உறுத்தல் வர வாய்ப்பிருக்கிறது. என்னதான் நல்ல ஆசிரியர் என்றாலும் அவரும் ஒரு மனிதர்தானே? மனம் எப்பொழுதும் ஒப்பீட்டைச் செய்து கொண்டேயிருக்கிறது. தனது வேலையை அடுத்தவன் வேலையோடு, தனது செல்வத்தை இன்னொருவன் சொத்தோடு, தனது மகனை வேறோரு பிள்ளையோடு என்று நம்மையும் மீறி மனம் கணக்கிடத் தொடங்கிவிடும். பகீரத பிரயத்தனங்களுக்கு பிறகாக திசை மாற்றினேன்.
அவரை சமாதானம் செய்ய வேண்டிய சூழலில் இருந்தேன். தனது மகன் மீதான அவரின் வருத்தங்களை சற்று ஆசுவாசப்படுத்திவிட்டால் போதும் என்று தோன்றியது. ‘வெளியிலும் மார்கெட் சரியில்லை சார். ஆளுங்க எடுக்கிறதே குறைஞ்சு போயிடுச்சு..இருக்கிறவங்களுக்கும் சிரமம்தான்’ என்று சொன்னது ஒருவிதத்தில் அவரை சமாதானம் ஆக்கியிருக்கக் கூடும். ‘ஆமாம் அமெரிக்காவே முடிஞ்சுடுச்சுன்னு சொல்லுறாங்க’ என்றார். Shutdown ஐ சொல்லுகிறார் என்று புரிந்தது. விளக்கவெல்லாம் விரும்பவில்லை. ‘ஆமாம்’ என்றேன்.
இதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த ட்ரங்கன் மங்கி ஆசாமி இப்பொழுது பேச ஆரம்பித்தார். பெங்களூரிலும் சென்னையிலும் எந்த நிறுவனத்தில் யாரைத் தூக்கினார்கள் என்று பட்டியலிட ஆரம்பித்தார். ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் அவரின் உறவினர் பையனை அல்லது பெண்ணைத் வேலை நீக்கம் செய்திருப்பார்கள் போலிருக்கிறது. ‘டிசிஎஸ்ஸில் என் மச்சினன் பையன் வேலையில் இருந்தான். எண்பதாயிரம் வாங்கிட்டு இருந்தான். போன வாரம் வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க’ ‘இன்போஸிஸில் மனைவியின் அக்கா மகள்’ ‘விப்ரோவில் நண்பரின் மகன்’ என்று பட்டியல் நீண்டு கொண்டிருந்தது. இதில் பெரிய துக்கம் என்னவென்றால் அவர் உண்மையைச் சொல்கிறாரா அல்லது அடித்து விடுகிறாரா என்று தெரியவில்லை. நிறுவனங்களின் பெயர், ப்ராஜக்ட் விவரங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். எனது மனநிலை மாறத் துவங்கியிருந்தது. அம்பு செலுத்தி வீழ்த்தப்பட்ட பறவை ஒன்றின் மனநிலையில் இருந்தேன்.
அதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. வேலையிழந்தவர்களில் ஒருவன் வீடு கட்ட வாங்கியிருந்த கடன், இன்னொருவன் மகனை சேர்த்திருந்த பள்ளியின் ஃபீஸ் விவரங்களை எல்லாம் சொல்லி அடிபட்டுக் கிடக்கும் பறவையின் ஒவ்வொரு இறகாக இணுங்கத் துவங்கியிருந்தார். அவர்களுக்கு நிகழ்ந்த அனுபவம் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஐ.டியில் இருக்கும் ஒவ்வொருவருமே இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காலை பத்து மணிக்கு கேண்டீனில் நம்மோடு அமர்ந்து டீ குடித்தவனை பன்னிரெண்டு மணிக்கு வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள். வழக்கம் போல அலுவலகம் வந்தவனை எந்தக் காரணமும் சொல்லாமல் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பிய கதைகள் உண்டு. இந்தக் கதைகளையெல்லாம் மற்றவர்கள் சொல்வதையெல்லாம் விடவும் ஐ.டியில் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படியெல்லாம் துரத்தப்படும் போது இன்னொரு வேலை கிடைத்துவிட்டால் தப்பித்துவிடலாம். ஆனால் அடுத்த வேலை எப்பொழுது கிடைக்கும், இதே சம்பளம் கிடைக்குமா என்பதெல்லாம் நிச்சயமில்லை. எப்பொழுது வேலை மார்க்கெட்டிற்கு போனாலும் லட்சக்கணக்கானவர்கள் நமக்கு முன்பாகவும் பின்பாகவும் க்யூ அமைத்திருக்கிறார்கள். ‘ஏன் உன்னை வேலையை விட்டு அனுப்பினார்கள்?’ என்ற கேள்வியைக் கேட்டே அடுத்தடுத்த இண்டர்வியூக்களில் சாவடிப்பார்கள். அத்தனையும் சமாளித்து இன்னொரு வேலை வாங்க வேண்டும். ஏழு கடலைத் தாண்டும் சமாச்சாரம்தான்.
எப்பொழுது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இங்கு வேலை என்பதே நிரந்தரமில்லைதான். நாங்களும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் மற்றவர்கள் எதற்காக அவ்வப்போது இந்த பயத்தைக் கிளறி விடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. தன்னை விட அதிகம் சம்பாதிக்கும் ஒருவனை ஏதோ ஒரு புள்ளியில் வீழ்த்திவிட்டோம் என்ற சுய திருப்திதானே? இருந்துவிட்டு போகட்டும்.
அவர் பேசுவது சற்று நடுக்கமடையச் செய்தது. இந்தப் பேச்சை கத்தரித்துவிட வேண்டும் என விரும்பினேன். ‘தம்பி உங்க வேலை எப்படி? நிரந்தரம்தானே? ஏதாச்சும் பிரச்சினை என்றால் சமாளித்துக் கொள்வீர்களா?’ என்கிற ரீதியில் கேள்வி வந்து விழுந்தது. ஐ.டியில் ‘என் வேலை நிரந்தரம்தான்’ என்று யாரால் சொல்லிவிட முடியும்? அவருக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். இருந்தும் கேட்கிறார். இந்தக் கேள்வி சற்று நிலைகுலையச் செய்தது. இந்த மாதிரியான சூழலை நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன். நிலைமை என்ன ஆகும் என்று கற்பனை செய்து பதறி இருக்கிறேன். ஆனால் இப்படி யாரும் முகத்தில் அறைந்தாற் போல கேட்டதில்லை என்பதால் இதற்கான பதில் என்னிடம் தயாராக இல்லை. இந்தக் கேள்வியை அவர் நல்ல எண்ணத்தில் கேட்டது போலவும் தெரியவில்லை. சில வினாடிகளுக்கு நாக்கு உலர்ந்து போனது போல இருந்தது.
சற்று பதறியபடிதான் இருந்தேன். ஆனால் எரிச்சலை முகத்தில் தேக்கிக் கொண்டு ‘தெரியாதுங்க. ஆனால் ஆண்டவன் புண்ணியத்தில் உங்ககிட்ட வந்து தட்டு நீட்டும் நிலைமை வராதுன்னு நம்புறேன்’ என்று சொல்லிவிட்டு அவரின் முகத்தை பார்க்காமலேயே ஆசிரியரிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். ட்ரங்கன் மங்கி ஏதோ சொல்ல முயற்சித்தார். அதைக் கேட்கவும் விரும்பவில்லை- மேலும் பதில் சொல்லவும் விரும்பவில்லை. முறைத்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டே நகர்ந்தேன். அந்த ஆள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். அது முக்கியமானதாகத் தெரியவில்லை. ஆனால் அடுத்த முறை வேறொரு ஐ.டிக்காரனை சந்திக்கும் போது இந்தக் கேள்வியை கேட்கமாட்டார் என நம்புகிறேன். இன்னொரு சக ஐ.டி அடிமைக்கு என்னால் முடிந்த உதவி இது. அவ்வளவுதான்.