Oct 30, 2013

வினவு கலாய்த்த வண்ணதாசன்

வினவு தளத்தில் நேற்று சாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் வண்ணதாசனை வாரியிருக்கிறார்கள். அவர்கள் யாரைத்தான் வாராமல் இருந்திருக்கிறார்கள்? இவர்கள் தப்பிப்பதற்கு.

சிலர் எல்லாவற்றையும் பாஸிட்டிவாகவே பார்ப்பார்கள். சிலர் எல்லாவற்றிலும் இருக்கும் நெகடிவ்வை மட்டுமே தோலுரிப்பார்கள். தோழர்கள் இரண்டாவது வகை. இங்கு யார்தான் 100% பெர்ஃபெக்ட்? அதனால் அவர்களிடம் எல்லோருமே ஏதாவது ஒருவிதத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

சாரு தனது கட்டுரையில் ‘மோடியை ஆதரிக்கிறேன்’ என்ற சொன்னதற்காக வினவில் மாட்டிக் கொண்டார். தரகன் என்றெல்லாம் அசிங்கப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். ஜெயமோகனை அவர்களுக்கு எப்பொழுதுமே பிடிக்காது அதனால் அவருக்கும் ஒரு குத்து. அதே கட்டுரையில் போகிற போக்கில் பத்ரி சேஷாத்ரியையும் ஒரு தட்டு தட்டியிருக்கிறார்கள். அவரும் மோடியை ஆதரிக்கிறாராம். ஆனால் கட்டுரையின் உச்சபட்ச வன்மம் வண்ணதாசனைக் கையைப் பிடித்து உள்ளே இழுத்திருப்பதுதான். அவர் வைகுண்டராஜனையும், மோடியையும் எதிர்க்கவில்லையாம். அதனால் அவரின் சாதி வரைக்கும் கை நீட்டியிருக்கிறார்கள்.

இவர்களைப் பொறுத்த வரையில் மோடியை ஆதரிக்கவும் கூடாது அமைதியாகவும் இருக்கக் கூடாது. யாராக இருந்தாலும் மோடியின் மூக்கு மீது குத்த வேண்டும். அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அப்படியே குத்தினாலும் பாராட்டிவிடுவார்களா என்றால் அதுவும் செய்ய மாட்டார்கள். ‘பாட்னாவில் ஏன் மோடியின் ஆட்களே குண்டு வைத்திருக்கக் கூடாது’ என்று conspiracy theory ஐ கஷ்டப்பட்டு உருவாக்கி மோடியை எதிர்க்கும் ஞாநியை பாராட்டியிருக்கிறார்களா? அதுவும் இல்லை. இவர்கள்தான் நெடிவ்வை மட்டும்தானே பார்ப்பார்கள்.

அமார்த்தியா சென் எதிர்க்கிறார் அதனால் நீங்களும் மோடியை எதிர்க்க வேண்டும்; யு.ஆர்.அனந்தமூர்த்தி எதிக்கிறார் அதனால் நீங்களும் மோடியை எதிர்க்க வேண்டும் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். மோடியை எதிர்க்கும் மூன்று அறிவுஜீவிகளை இவர்கள் காட்டுவது போல மோடியை ஆதரிக்கும் வேறு சில அறிவாளிகளைக் காட்ட முடியும். இவர்கள் எல்லாரும் மோடியை ஆதரிக்கிறார்கள் அதனால் நீங்கள் மோடியை ஆதரிக்க வேண்டும் என்று சொன்னால் இந்தத் தோழர்கள் மோடியை ஆதரிப்பார்களா என்று தெரியவில்லை.

மோடியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை அது அவர்களுக்கான உரிமை. ஆனால் எதற்காக வண்ணதாசனை உள்ளே இழுக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. வண்ணதாசன் எப்பொழுது தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார் இன்று மட்டும் அவரை அரசியல் பேசச் சொல்வதற்கு? தன் வாழ்நாள் முழுவதும் வாழ்வின் அழகியலையும் அதன் நுட்பங்களையும் மட்டுமே தனக்கான தனித்த மொழியில் பேசிக் கொண்டிருப்பவர் வண்ணதாசன். தன்னைச் சுற்றிலும், தனது எழுத்திலும் எந்தக் காலத்திலும் ‘பாஸிடிவ் வைப்ரேஷனை’ மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை தெருவுக்கு இழுத்து சாணியைக் கரைத்து கையில் கொடுப்பது அபத்தம் தோழர்களே!

இதைச் சொன்னால் அடுத்த கேள்வி என்ன வரும் என்று தெரியும். 

அதிகாரத்தின் சுரண்டல்களை, ஆட்சியாளர்களின் வன்முறைகளை, முதலாளிகளின் அக்கிரமங்களை, ஏழைகளின் கண்ணீரை எல்லாம் இலக்கியவாதிகள் பேச வேண்டியதில்லையா? 

‘பேச வேண்டியதில்லை’ என்று எப்படிச் சொல்ல முடியாதோ அதே போலத்தான் ‘பேச வேண்டும்’ என்று சொல்ல முடியாது. தனிமனிதனின் சிக்கல்கள், அவனது அவஸ்தைகள், வாழ்வின் அழகியல்கள் என்பதை மட்டுமே தனது எழுத்து முழுவதுமாக நிரப்பிய பல இலக்கிய கர்த்தாக்களை உலகம் முழுவதும் காட்ட முடியும். வண்ணதாசன் அப்படியான ஒரு எழுத்தாளர். அரசியல் பரபரப்பு எந்தவிதத்திலும் தீண்டாத தேவதச்சன், வண்ணதாசன், தேவதேவன் போன்ற படைப்பாளிகளிடம் தத்தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தச் சொல்வது அவசியமில்லாதது.

தன்னை சமூகத்தை ரட்சிக்க வந்தவராகவோ, புரட்சியாளனாகவோ எந்தவிதத்திலும் வெளிப்படுத்திக் கொள்ளாத கவிஞனாகவே வண்ணதாசன் இருந்திருக்கிறார். தனது கவிதைகளிலும் படைப்புகளிலும் சமூகத்தின் அவலங்களையும் அபத்தங்களையும் சாமானிய தனிமனிதனின் பார்வையில் பதிவு செய்து கொண்டிருப்பவரிடம் ‘நீ இதையெல்லாம் எழுதுவதை நிறுத்திவிட்டு நாங்கள் கைகாட்டுபவரை எதிர்க்கத் தொடங்கு’ என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? தன் குடும்பம், தன் வாழ்க்கை என நகர்ந்து கொண்டிருக்கும் சாமானியனிடம் துப்பாக்கியை ஏந்தச் சொல்வது எப்படி அபத்தமோ அதே போன்றதொரு அபத்தம்தான் வண்ணதாசன் போன்ற பூக்களின் கவிஞனை போராடத் துவங்கச் சொல்வது. 

சமூகத்தோடு இணைத்துக் கொண்டு, ஒரு புரட்சி மனோநிலையில் எதிர்படும் ஒவ்வொருவரையும் எதிர்த்து சுற்றுப்புறத்தில் ‘நெகடிவ் வைப்ரேஷனை’ உருவாக்குவது என்பது எப்படி உங்களைப் போன்றவர்களுக்கு உகந்த மனநிலையோ அதற்கு முற்றும் மாறாக சமூகத்தோடு துண்டித்துக் கொண்டு, ஒரு மோனநிலையில், எதிர்படும் ஒவ்வொரு விஷயத்திலும் பாஸிடிவ்வான விஷயங்களை மட்டுமே சிலாகித்து ‘பாஸிடிவ் வைப்ரேஷனை’ உருவாக்குவதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய மனநிலைதான்.

கல்யாண்ஜியை புரட்சியாளராக பார்ப்பதைவிடவும் ஒரு கவிஞனாகவே பார்க்க விரும்புகிறேன். வண்ணதாசனை அரசியல் பேசும் பரப்பரப்பான மனிதனாக நெருங்குவதை விடவும் கணபதி அண்ணனைப் பற்றியும் காந்தி டீச்சரைப் பற்றியும் எழுதும் ப்ரியத்திற்குரிய சகமனிதனாகவே அணுக விரும்புகிறேன்.

ஒரு எழுத்தாளனோ அல்லது படைப்பாளியோ ஏன் கத்த வேண்டும் அல்லது கத்தியைத் தூக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? தனது பேனாவின் நுனியால் சமூகத்தைக் குத்திக் கிழிப்பதும் அல்லது பூ செருகி வைக்கும் ஸ்டேண்டாக பயன்படுத்துவதும் எழுத்தாளனைப் பொறுத்த விஷயம். ‘இதற்கெல்லாம் நீ குரல் கொடுக்க வேண்டும்; இதையெல்லாம் நீ எதிர்க்க வேண்டும்’என்று அவனை நோக்கி உத்தரவிடுவது என்னைப் பொறுத்தவரையில் சர்வாதிகாரம். 

நீங்கள் சமூகத்திற்காக போராடுங்கள்- வாழ்த்துக்கள்! ஆனால் வண்ணதாசனையும், தேவதச்சனையும், சுகுமாரனையும், சாம்ராஜையும் விட்டுவிடுங்கள். அவர்கள் கவிஞர்களாக மட்டும் வாழட்டும்!

கல்யாண்ஜி (எ) வண்ணதாசனின் இரண்டு கவிதைகள்

                                              (1)

இந்தக் கவிதை  எழுதுகிறவன்
எத்தனை சொற்கள் 
மனதாரப் பேசுகிறான்
அவன் மனைவியிடம் பிள்ளைகளிடம்.

அடுத்த, பக்கத்து வீட்டுக்காரனுடைய
மூக்கும் முழியும்
அடையாளம் சொல்ல முடியுமா
நெஞ்சில் கைவைத்து

இந்தக் கவிதை எழுதுகிறவன்
பீங்கான் கழிப்பறைகளில்
பிளாஸ்டிக் குவளைகளில் 
கொட்டிய தண்ணீரில்
கோடியில் ஒரு பங்காவது
ஊற்றியிருப்பானா 
ஒரே ஒரு செடி 
வேரடி மண்ணில்.

இந்தக் கவிதை எழுதுகிறவன்
முண்டியடித்து ஏறி
அமர்ந்த பேருந்தில்
எப்போதாவது 
எழுந்து இடம் கொடுத்திருக்கிறானா
இன்னொரு தள்ளாதவருக்கு.

குதிகால் நரம்பு தென்னிய
சைக்கிள் ரிக்‌ஷாக்காரனிடம்
கூலிபேரம் பேசாமல் 
இருக்கமுடிகிறதா இவனால்

எப்போதாவது எப்போதாவது
பாடைக்கு வீசிய பூவை
கூச்சமற்றுக் 
குனிந்து எடுத்துக் 
கையில் வைத்துக்
கசிந்தது உண்டா?

இவனைப் போலத்தானே 
இருக்கும் 
இவனுடைய கவிதையும்

                                                        (2)

பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்
மொரமொரவென
மரங்கள் எங்கோ சரிய.

Oct 29, 2013

ஸ்ரீபுரம் சாமியாரும் அப்புச்சாமி வாத்தியாரும்

சனி, ஞாயிறு ஆனால் போதும், வீட்டில் இருப்பவர்களுக்கு உள்ளங்கால் அரிக்க ஆரம்பித்துவிடுகிறது. வீட்டில் இருப்பவர்கள் என்றால் அது அம்மாவானாலும்- இது குதிரை இறக்கை அம்மா இல்லை- எங்கள் அம்மா. அல்லது மனைவியானாலும் சரி, கோவிலுக்கோ அல்லது குறைந்தபட்சம் கப்பன் பூங்காவுக்கோ அழைத்துச் சென்றுவிட்டால் அமைதியாகிவிடுகிறார்கள். எத்தனை நாளைக்குத்தான் லால்பாக்கையும், கப்பன் பூங்காவையும் காட்டுவது? எனக்கே சலிப்படைந்த மாதிரி இருந்ததால் இந்த முறை அவுட்டோர். 

ஸ்ரீபுரம் கோவிலுக்குச் சென்றோம். இப்பொழுதெல்லாம் நான் நாஸ்திகம் பேச மாட்டேன். ஒரு காலத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் ப்ளஸ் டூவில் ஊற்றிக் கொள்ளுமோ என்ற பயம் வந்த போது- அது ஒரு பெரிய கதை. 

அப்புச்சாமி என்ற வாத்தியாரிடம்தான் ட்யூசன் படித்துக் கொண்டிருந்தோம். கணக்கு ட்யூசன். அவருக்கு என்னைக் கண்டாலே வேப்பங்காய். அதற்கும் ஒரு காரணமிருக்கிறது. விடிந்தும் விடியாமலும் எழுப்பி வேறொரு வாத்தியாரிடம் உயிரியல் ட்யூசனுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். பல் துலக்காமலே சுற்றிலும் பலர் அமர்ந்திருக்கும் தூங்குமூஞ்சி தனிப்பயிற்சி அது. யாராவது வாயைத் திறந்து பதில் சொன்னாலே நாம் மூக்கை மூடிக் கொள்ள வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு பர்ஃபூயுமாக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஐந்து மணிக்கு எழுந்து பழைய சோற்றைக் கரைத்துக் குடித்துவிட்டு போய் அமர்ந்தால் எனக்கு ஆறரை மணிக்கு தூக்கம் வந்துவிடும். தூக்கம் உச்சத்தில் இருக்கும் போதுதான் ‘உணவுப்பாதையானது வாயில் ஆரம்பித்து குதத்தில் முடிகிறது’என்று பயாலஜி வாத்தியார் சொல்லிக் கொண்டிருப்பார். அந்த மனுஷனுக்கு எதிரில் இருப்பவர்கள் எல்லோருமே ஆடு மாடுதான். சொல்லிக் கொடுத்துவிட்டு ஒவ்வொரு ஆடு மாடையும் வரிசையாக எழுந்து நிற்கச் செய்து ‘உணவுப் பாதை எங்கே முடிகிறது?’ என்று கேள்வி கேட்பார். ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அந்த பதில்களில் இருக்கும் காமெடி இருக்கிறதே- மொத்தத் தூக்கமும் காணாமல் போய்விடும். ஆனால் ஒன்றரை நிமிடங்கள்தான் இந்தக் காமெடியெல்லாம். அதன் பிறகு வாத்தியாருக்கு அருள் வந்துவிடும். ஒவ்வொரு டெஸ்க்காக ஏறி ஒவ்வொருவனாக ஃபுட்பால் விளையாடுவார். இப்படி ‘மொத்து’ வாங்கி ஆரம்பமாகும் நாளின் வால் பகுதியில்தான் கணக்கு வாத்தியார் ஸீனுக்கு வருவார்.

பகலில் பார்த்தாலே கணக்கு புரியாது. இதில் வேதியியல், இயற்பியல் எல்லாம் முடித்துவிட்டு கடைசியாக இரவு நேரத்தில் கணக்கு ட்யூஷன். ஒரே பிணக்குதான். இண்டகெரேஷன், டிஃபரென்ஷியேஷன் எல்லாம் சேர்ந்து கான்ஸிடிபேஷனுக்குத்தான் வழிவகுத்தன. போதாக்குறைக்கு வாரந்தவறாமல் டெஸ்ட் வேறு வைப்பார். இப்படியான ஒரு டெஸ்ட்டின் போது எதுவுமே படிக்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் ஒரு துண்டுச்சீட்டை சட்டைப்பையில் செருகி வைத்திருந்தேன். வெறும் துண்டுச்சீட்டாக இருந்தால் பிரச்சினையில்லை- அதில் ஒன்றிரண்டு கணக்கையும் எழுதி வைத்திருந்ததுதான் தப்பாக போய்விட்டது.  அவர் ஏமாந்திருக்கிறார் என நினைத்து நான் வெளியே எடுக்க, என்னிடமே திருட்டு வேலை செய்கிறாயா என்று அவர் விழித்துக் கொள்ள ஒரே போர்க்களம்தான். நிராயுதபாணியாக நின்றிருந்த என்னிடம் தனது மொத்த பலத்தையும் பரிசோதனை செய்து கொண்டார். அநேகமாக அன்றைய தினம் அவர் தனது ஓட்டப்பயிற்சியைத் தவற விட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னை ஓடவிட்டு துரத்தி துரத்தி compensate செய்து கொண்டார். அந்த ஓட்டம் போதும். அடுத்த பத்து பதினைந்து நாட்களுக்கு அவருக்கு ஓட்டப் பயிற்சியே தேவைப்பட்டிருக்காது. என்ன அடி! இப்பொழுது நினைத்தாலும் மேல்மூச்சு வாங்குகிறது.

அடித்ததோடு விட்டாரா? ‘அம்மா அப்பாவை கூட்டிட்டு வா’ என்று சொல்லிவிட்டார். என்னவென்று போய் அவர்களிடம் சொல்வது? துண்டுச்சீட்டு தானாகவே பாக்கெட்டுக்குள் வந்துவிட்டது என்றா? அப்பொழுதெல்லாம் பையன் ஸ்டெதஸ்கோப்போடு வந்து கதவைத் தட்டுவதாக அம்மாவும் அப்பாவும் கனவில் மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கனவில் கல்லைத் தாங்கிப் போட முடியாது. ‘போய்யா நீயுமாச்சு உன் ட்யூஷனுமாச்சு’ என்று கட் அடிக்கத் துவங்கியிருந்தேன். சைக்கிளை ஓட்டிக் கொண்டு போனால் சீக்கிரம் வீட்டை அடைந்துவிட வேண்டியிருக்கும்; இதனால் அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்பதால் தினமும் உருட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். தினமும் இப்படியே சைக்கிளை உருட்டிக் கொண்டு போனதால் உடம்பு இளைக்கத் துவங்கியிருந்தது. பையன் படித்து படித்து இளைக்கிறான் என நினைத்து அம்மாவுக்கு ஒரே புளகாங்கிதம்.

இதன் பிறகுதான் பெரிய பிரச்சினைகள் வரத் துவங்கின. ட்யூஷன் செண்டரிலிருந்து மாதாமாதம் வீட்டிற்கு லெட்டர் அனுப்பத் துவங்கியிருந்தார்கள். போஸ்ட்மேனைப் பார்த்து நடுவழியில் சரிக்கட்டி, லெட்டரை வாங்கி கிழித்து எறிவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இப்படி ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோதான் செய்திருப்பேன். அதன் பிறகு போஸ்ட்மேனாகவே அந்த வேலையை செய்யத் துவங்கிவிட்டார் போலிருக்கிறது. லெட்டரே வரவில்லை.

இப்படி போய்க் கொண்டிருந்த +2வின் அரையாண்டுத் தேர்வில் கணிதத்தில் இருபத்தொன்பது மதிப்பெண்- நூற்றுக்கு இல்லை; இருநூறுக்கு. வீடு ரணகளம் ஆகிவிட்டது. அம்மா மூக்கைச் சிந்த, அப்பா தலையில் இடி இறங்கியது போல் அமர்ந்திருக்க என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர்கள் ட்யூஷன் செண்டரில் விசாரித்தார்கள். ‘அவன்தான் கணக்கு க்ளாஸூக்கு வருவதேயில்லையே’ என்று முதல் குண்டு வெடித்தது. ‘ஒவ்வொரு மாதமும் லெட்டர் அனுப்புறோமே’ என்ற அடுத்த குண்டும் சில வினாடிகளில் வெடித்தது. அதிர்ச்சியடைந்த அப்பா ராத்திரியோடு ராத்திரியாக போஸ்ட்மேனைத் தேடிப் போன போது ‘அத்தனை லெட்டரையும் அவனே வந்து வாங்கிட்டானே’ என்ற அடுத்த குண்டு. இந்த சீரியல் ப்ளாஸ்ட் என்னை சின்னாபின்னமாக்கிவிட்டது. 

வீட்டை விட்டு ஓடிப் போவதா அல்லது தற்கொலை செய்து கொள்வதா என்ற குழப்பம் வந்த போது எங்கள் ஊரில் லோக்கல் அம்மனிடம் கேட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். அதுவரை பேசிக் கொண்டிருந்த நாஸ்திகத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அம்மனிடம் சரண்டர் ஆகிவிட்டேன். இந்தக் கட்டுரைக்கு ‘நான் ஏன் சாமி கும்பிடுகிறேன்?’என்ற தலைப்பு வைத்திருந்தால் இதையெல்லாம் எழுதுவதில் அர்த்தம் இருக்கிறது. அப்படியே இருந்தாலும் இது என்ன அவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியா? மனசாட்சியே இல்லாமல் இழுத்துக் கொண்டிருக்கிறேன் பாருங்கள்.

ஸ்ரீபுரத்திற்கே வந்துவிடலாம். 

அடேயப்பா! எங்கு இருந்துதான் இத்தனை காசு சம்பாதித்தாரோ அந்தச் சாமியார். பதினாறு வயதிலேயே அம்மனின் அருள் அவருக்குள் இறங்கிவிட்டதாம். அதுவும் நாராயணீ. நாராயணின் மனைவி நாராயணீ. மஹாலட்சுமி கடாட்சம். சும்மா விடுவாரா? நூறு ஏக்கரில் வளைத்து வளைத்துக் கட்டியிருக்கிறார். மொத்த வேலூரும் காய்ந்து கொண்டிருக்க ஸ்ரீபுரத்திற்குள் மட்டும் அத்தனை குளுமை. அத்தனை மரங்கள், அவ்வளவு தண்ணீர். கோயிலை அடைவதற்காக நூறு ஏக்கரையும் சுற்ற வேண்டியிருக்கிறது. நடக்கும் வழிகள் மொத்தமும் பொன்மொழிகள்தான். எல்லாம் அம்மாவின் அருள்மொழிகள். பன்மொழி வித்தகர் போலிருக்கிறது. தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், தமிழில் வைத்திருக்கிறார்கள். இவர்களைப் போன்ற தத்துவவாதிகளுக்கு ஏன் நோபல் பரிசு கொடுப்பதில்லை என்று யோசிக்க வைத்துவிடுகிறார்கள். 

கோயிலை அடைவதற்குள் அம்மா கிட்டத்தட்ட அத்தனை அருள்மொழிகளையும் மனனம் செய்துவிட்டார். ‘நல்லா இருக்குல்ல?’ என்றார். அதுவரை அங்கு இருக்கும் சிலைகள் ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் பெறுமா? நடைபாதைக்கான செலவு ஒரு கோடி பெறுமா? பொற்கோவிலுக்கு எத்தனை கிலோ தங்கம் தேவைப்பட்டிருக்கும்? என்று பணத்திலேயே கணக்கு போட்டுக் கொண்டிருந்தது மனம். மொத்தமாக ‘நல்லா இருக்கு’ என்று சொல்லி வைத்தேன். இந்தக் கோவில் அம்மாவுக்கு மிகப் பிடித்துவிட்டது. சுத்தமாக இருக்கிறது, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கிறது, வருகிற அத்தனை பக்தர்களுக்கும் அன்னதானம் போடுகிறார்கள் என்று அம்மாவுக்கு ஸ்ரீபுரம் புராணம்தான்.

யோசித்துப் பார்த்தால் சாமியார் எப்படித்தான் சம்பாதித்திருந்தாலும் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது இத்தகைய கோயில்கள் முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிடும். இப்பொழுது இருக்கும் நமது கோயில்களை அந்தக் காலத்தில் எப்படிக் கட்டினார்கள் என்று யாருக்குத் தெரியும்? யாரிடமிருந்தோ கொள்ளையடிக்கப்பட்ட பணமாக இருக்கக் கூடும், எத்தனையோ உயிர்களை பலி வாங்கியிருக்கக் கூடும். ஆனால் இன்றைக்கு  அவை முக்கியமான வரலாற்றுச் சின்னங்கள் ஆகிவிடவில்லையா? அப்படித்தான் இதுவும் ஆகிவிடும். முதல் ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்கு ‘அவருக்கு எப்படி இத்தனை பணம் வந்தது’ என்று புலம்பிக் கொண்டிருப்போம். நிர்வாகம் மட்டும் சரியாக இருக்குமானால் அடுத்த தலைமுறையினர் கொண்டாடத் துவங்கிவிடுவார்கள்.

வெளியே வரும் போது ‘மனசு அமைதியாக இருக்கிறது’ என்று அம்மா சிலாகித்தார். சிரித்து வைத்தேன். ‘ஆத்தா மகாலட்சுமி, தெரியாத்தனமாகக் கூட இந்த ஆளுக்கு எங்கம்மா பக்தை ஆகிவிடக் கூடாது’ என்று நான் வேண்டிக் கொண்டதை மட்டும் அவரிடம் சொல்லவில்லை.

Oct 27, 2013

சிக்கிக் கொண்ட சின்னப்பையன்

ஒரு பார்ட்டி நடக்கிறது. பார்ட்டி என்றால் பிரச்சினைதானே? அப்படித்தான் இந்த பார்ட்டியும். மரணதண்டனையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பார்ட்டியில் ஒரு வக்கீலும் இருக்கிறார். அவருக்கு இளம் வயது. மரண தண்டனையை ஒப்பிடும் போது ஆயுள் தண்டனை எவ்வளவோ தேவலாம் என்கிறார். இது அங்கிருக்கும் ஒரு பணக்காரரை சொறிந்துவிடுகிறது. அவர் மரணதண்டனையின் ஆதரவாளர்.  “அப்படியானால் நீ தனிமைச் சிறையில் இருக்க முடியுமா? இது நமக்குள்ளான பந்தயம். நீ சிறையில் இருந்து வென்றுவிட்டால் பெரும் தொகையைத் தருகிறேன்” என்கிறார். வழக்கறிஞருக்குத்தான் இள ரத்தமாயிற்றே. துடிக்கிறது. “சரி, பதினைந்து வருடம் இருக்கிறேன்” என்கிறான்.

பணக்காரரின் தோட்டத்தில் ஒரு வீடு தயாராகிறது. அதுதான் சிறைச்சாலை. அந்த இளைஞனுக்கு அடுத்த பதினைந்து வருடங்களுக்கு எந்த வெளியுலகத் தொடர்பும் இருக்காது. கடிதங்கள் கூட கிடையாது. ஆனால் எவ்வளவு வேண்டுமானாலும் வாசிக்கலாம், எழுதலாம். பதினைந்து வருடங்களில் அந்த இளைஞன் நிறைய வாசிக்கிறான். தத்துவம், வரலாறு, ஆன்மிகம் என தொடாத ஏரியாவே இல்லை. பதினைந்து வருடங்கள் முடியப் போகின்றன. அவன் கிட்டத்தட்ட பந்தயத்தின் வெற்றியை நோக்கி பயணிக்கிறான். ஆனால் இந்த பதினைந்து வருடங்களில் பணக்காரர் ‘போண்டி’யாகிக் கொண்டிருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவனுக்கு கொடுக்க வேண்டிய பெருந்தொகையைத் தயார் செய்தாக வேண்டும். பணக்காரருக்கு வேறு வழியே இல்லை. அவனைக் கொன்றுவிட முடிவு செய்கிறார். மழை பெய்யும் இரவு நேரத்தில் அவனது அறைக்கு தீக்குச்சியின் வெளிச்சத்தில் தடுமாறிச் செல்கிறார். அறைக்குள் செல்லும் பணக்காரருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.  ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து அவன் தப்பித்திருக்கிறான் அதில் தனக்கு பணம் முக்கியமில்லை என்பதை நிரூபிப்பதற்காக தப்பிப்பதாக எழுதி வைத்திருக்கிறான். பணக்காரர் கமுக்கமாக திரும்பி வந்துவிடுகிறார். அடுத்த நாள் காலையில் காவலாளி ‘கைதியைக் காணவில்லை’ என்று அலறியடித்து ஓடி வருகிறான். கதை முடிகிறது.

இது அன்டன் செக்கோவின் ‘பந்தயம்’ என்ற கதையின் சாராம்சம்.  இருபத்து மூன்று வயதில் சிறைக்குள் நுழைந்து தனது இளமையை முழுமையாக தொலைத்துவிட்ட வழக்கறிஞரின் கடிதம் உருவாக்கும் சலனம் மிக முக்கியமானது. அவன் தனது லெளகீக வாழ்க்கையைத் தான் தொலைக்கிறான். ஆனால் புத்தகங்களின் வழியாக வாழ்க்கையை அவன் புரிந்து கொள்ளும் கோணம் நமக்கு அந்த சலனத்தை உருவாக்கிவிடுகிறது. தேர்ந்த எழுத்தாளரால் மட்டுமே பதினைந்து வருட சித்திரத்தை ஒரு சிறுகதையில் கொண்டுவந்து இறுதியில் நம்மை சலனப்படுத்த முடியும். அன்டன் செக்கோவ் அப்படியான எழுத்தாளர்.

சமீபத்தில் அன்டன் செக்கோவின் சிறுகதைகள் ஒன்று கையில் சிக்கியது. அதுவும் தமிழில்- 

செக்கோவின் சிறுகதைகளை தமிழில் வாசிப்பது பிரச்சினையில்லை ஆனால் அந்நியத்தன்மையில்லாமல் இருக்க வேண்டுமே என்று மனம் விரும்பியது. இப்படித்தான் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஆயிற்றே என்று சில மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசிக்கும் போது ‘ஜூனூன்’ சீரியல் பார்ப்பது போல இருக்கும். நம்மை நாமே கஷ்டப்படுத்தி வாசிப்பதற்கு பதிலாக அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசிக்காகமலேயே இருந்துவிடலாம் என்று மூன்று பக்கங்களில் மூடி வைத்துவிடத் தோன்றும். ஆனால் இந்தப் புத்தகம் அப்படியிருக்க வாய்ப்பே இல்லை என்று நம்பினேன். காரணம், மொழிபெயர்ப்பாளர். எம்.எஸ் தான் செக்கோவின் கதைகளை தமிழுக்கு மாற்றியிருக்கிறார். எம்.எஸ் மொழிபெயர்ப்பு பற்றி எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. மிகச் சிரத்தையாக செய்பவர். அவரது பிற மொழிபெயர்ப்புகளைப் பற்றி தனியாகவே எழுத முடியும். 

செக்கோவ் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பும் அப்படித்தான். நம்பிக்கை எந்தவிதத்திலும் பொய்க்கவில்லை. மொழிபெயர்ப்பு மிக இயல்பாக இருக்கிறது. விதிவிலக்காக, ஒரு கதையில் எஜமானியின் காணாமல் போன ‘புரூச்’சைத் தேடுகிறார்கள். அது இரண்டாயிரம் ரூபிள் பெறுமானமுடையதாம். ஆனால் கடைசி வரைக்கும் புரூச் என்றால் என்னவென்று தெரியவில்லை. ஒரு அடிக்குறிப்பு கொடுத்திருக்கலாம்.
                  
அன்டன் செக்கோவ் 1860 ஆம் ஆண்டு பிறந்தவர். மருத்துவம் படித்திருக்கிறார். ஆனால் தனது படிப்பின் மூலமாக பெரிதாக சம்பாதிக்கவில்லை. இலவச மருத்துவம் செய்தாராம். ஆனால் எழுத்து வழியாகவே நிறைய சம்பாதித்திருக்கிறார். ஆனால் மொத்த வாழ்க்கையும் நாற்பத்தி நான்கு ஆண்டுகள்தான். நுரையீரல் பிரச்சினையின் காரணமாக இறந்துவிட்டார். இந்த பாதி ஆயுளிலேயே நூற்றியைம்பது வருடங்களுக்கு பிறகும் ‘முக்கியமான சிறுகதையாளர்’ என்று இன்னமும் நம்மை பேச வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட அட்டகாசமான எழுத்துக்காரர் இந்த மனிதர்.

சரக்கு இல்லாமல் ஒரு மனிதரை இத்தனை காலமும் கொண்டாடுவோமா? அவரது சிறுகதைகள் நமக்கு ஒரு திறப்பை உருவாக்குகின்றன. ‘அட! இதைக் கூட சிறுகதை ஆக்க முடியும்’என்று யோசிக்க வைக்கின்றன. மேம்போக்காக பார்த்தால் அது ஒரு சாதாரண விஷயமாகத்தான் இருக்கும். ஆனால் அந்தக் கதைக்கான பின்னணி, கதாபாத்திரங்களின் மனநிலை போன்றவற்றை எல்லாம் சேர்த்து யோசிக்கும் போது செக்கோவின் கதைகள் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்குகின்றன. 

உதாரணமாக ‘வேட்டைக்காரன்’ என்று ஒரு கதை. ஒரு வனத்தில் வேட்டைக்காரனும், ஒரு பெண்ணும் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் இருவரின் பேச்சு மட்டும்தான் சிறுகதை. அநேகமாக ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் பேசியிருப்பார்கள். தங்கள் உரையாடலின் போது தன்னோடு வந்துவிடும்படி அவனை கெஞ்சுகிறாள் அந்தப் பெண். ஆனால் தனக்கு வேட்டைதான் பிடித்தமான தொழில் என்றும் கிராமத்தில் உன்னோடு அடைந்து கிடக்க முடியாது என்றும் மறுக்கிறான். கதையின் பேக்ரவுண்ட் முக்கியமானது - அவர்கள் கணவன், மனைவி. ஆனால் சேர்ந்து வாழவில்லை. வனத்தில் யதேச்சையாக சந்தித்து இதை பேசிக் கொள்கிறார்கள். அவனுக்கு வெளியுலக வாழ்க்கைதான் பிடிக்கிறது; அவளுக்கு கணவனோடு வாழ வேண்டும் என்று விருப்பம். சண்டை பிடித்துக் கொள்ளாமல் பேசுகிறார்கள். இருவரும் தங்களின் நிலைப்பாட்டை அடுத்தவர்கள் புரிந்து கொள்ளும்படியாக பேசுகிறார்கள். நான்கு பக்கங்கள்தான் இருக்கும். ஆனால் அவனது விருப்பம், அவளது ஏக்கம், அவனால் அவளோடு ஏன் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கான காரணங்கள் போன்றவை சேர்ந்து கதையை கணமாக்கிவிடுக்கின்றன. கதை, நமக்குள் ஒரு இறுக்கத்தைக் கொண்டு வந்துவிடுகிறது.

இன்னொரு கதையில் ஒரு நடுத்தர வயது ஆள் திருமண ஏஜெண்ட்டை பார்க்கிறான். அவளுக்கும் நடுத்தர வயதுதான். தனக்கு மனைவியாக வரப் போகிறவள் எப்படி இருக்க வேண்டும் என விவரிக்கிறான். கதையின் இறுதியில் அவளுக்கே ப்ரொபோஸ் செய்துவிடுகிறான். இது ஒரு ஜாலியான கதை.

இந்த புத்தகம் பாதரசம் பதிப்பகத்தின் வெளியீடு. பதிப்பாளர் சரவணனை ஒரு முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்திருக்கிறேன். வேறொரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக புத்தகங்களை பதிப்பிக்கிறார். அனேகமாக சம்பளக் காசைப் போட்டுத்தான் புத்தகங்கள் பதிப்பிக்கிறார் என நினைக்கிறேன். செக்கோவின் கதைகளை வாசித்துவிட்டு ஃபோனில் பேசினேன். சென்ற வருட புத்தகங்கள் விற்றுவிட்டதா என்று கேட்டால் சிரிக்கிறார். அவையே விற்காமல் இருந்தாலும் இந்த வருடம் இன்னும் ஆறு புத்தகங்களை கொண்டு வருகிறாராம். இந்த மாதிரியான எளிய, விளம்பரம் தேடாத, நஷ்டமடைந்தாலும் சோர்வடையாத பதிப்பாளர்களை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கும். எழுத்து மட்டுமே அவர்களை இயங்கச் செய்கிறது. எழுத்து என்ற ஒரேயொரு பிடிமானத்தை வைத்துக் கொண்டு அத்தனை சிரமங்களையும் தாண்டி வருகிறார்கள். 

சரி. மீண்டும் செக்கோவோடு இந்த குறிப்பை முடித்துக் கொள்ளலாம். 

செக்கோவின் கதைகளில் இன்னொரு முக்கியமான பலமாக அவரது நகைச்சுவையுணர்வு தெரிகிறது. மெலிதாக சிரிக்க வைத்துவிடுகிறார். வித்தியாசமான கதைக்களம், கதாபாத்திரங்களின் சித்தரிப்பு,  பாத்திரங்களின் மனநிலை, நகைச்சுவை என்பனவெல்லாம் சேர்ந்து செக்கோவை ‘முக்கியமான சிறுகதையாளர்’ என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை என்று நம்ப வைத்துவிடுகிறது. செக்கோவின் மொத்த எழுத்துக்களையும் நான் வாசித்ததில்லை. இந்த மொழிபெயர்ப்பு கதைகள் மட்டும்தான். இதன் அடிப்படையில்தான் செக்கோவை பற்றி பேச முடியும். இன்னும் அவரது பிற எழுத்துக்களை வாசித்தால் வேறொரு பரிமாணம் கிடைக்கக் கூடும்.

[சிறு புத்தகம்தான். நூற்றியிருபது பக்கங்கள். நூறு ரூபாய் விலை. புத்தகத்தை ஆன்லைனில் வாங்கலாம்.

சரவணனின் மின்னஞ்சல் : creator.saravanan@gmail.com]

Oct 25, 2013

கரப்பான் பூச்சியாதல்

அலுவலகத்தில் பிரச்சினை; வீட்டில் சண்டை; வெளியே சென்றால் அங்கும் யாரிடமாவது தகராறு- யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான நாட்களில் பிரச்சினைகளோடு தூங்கி பிரச்சினைகளோடுதான் விழிக்கிறோம். நம்மைச் சுற்றி இத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன. சரி, அவற்றுக்கான தீர்வுகள்? நாம்தான் டெக்னாலஜிஸ்ட்கள் ஆயிற்றே. டெக்னாலஜியைப் பயன்படுத்தியே ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆயிரம் தீர்வுகளை கண்டுபிடிக்கலாம். ஆயிரமென்ன ஆயிரம்? இலட்சக்கணக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கலாம். இலட்சம் தீர்வுகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அந்த லட்சத்தில் இருந்து ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவும் இருப்பதிலேயே சிறந்த ஒன்றை.

அது எப்படி? டார்வின் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாரே! ‘தக்கன தப்பிப்பிழைக்கும்’(Survival of the fittest').அதே நுட்பம்தான். இந்த தக்கன தப்பிப்பிழைத்தலுக்கு கரப்பான் பூச்சியை உதாரணமாகச் சொன்னால் சாலப் பொருத்தமாக இருக்கும். என்ன மருந்து வேண்டுமானாலும் அடியுங்கள்- இந்த ஜீவனை முற்றாக ஒழித்துக் காட்டுங்கள் பார்க்கலாம். வாய்ப்பே இல்லை. எப்படியும் ஒன்றிரண்டாவது தப்பி தங்கள் சந்ததியை பெருக்கிவிடும். கரப்பானைப் பற்றி இணையத்தில் தேடினால் அவை பல மில்லியன் வருடங்களுக்கு முன்பாகவிருந்தே இந்த பூமியில் கோலோச்சி வருவதாக எழுதி வைத்திருக்கிறார்கள். எரிமலைக் குழம்பு லார்வாவே அடித்து நொறுக்கிக் கொண்டு ஓடினாலும் கூட பாறைக்களின் அடியில் சிறு இடைவெளி இருந்தால் போதுமாம் அதற்கடியில் ஒண்டியும் பதுங்கியும் தப்பித்துவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தச் செய்தியை நினைத்துக் கொண்டே அடுத்த முறை கில்லாடி கரப்பானைக் கொல்ல முயற்சித்துப் பாருங்கள் அது ‘கெக்கெபிக்கே’ என்று நமக்கு இளிப்புக் காட்டிக் கொண்டே ஓடுவது காதில் விழும். 

மில்லியன் கணக்கான வருடங்களாக இவை எப்படி தப்பித்திருக்கின்றன? இத்தனை வருடங்களாக பூமி ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இங்கு இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, பருவநிலை மாறியிருக்கிறது, கடல் இருந்த இடமெல்லாம் மலைகளாக உருமாறியிருக்கின்றன, நிலப்பகுதிகளையெல்லாம் கடல் ஆக்கிரமித்திருக்கிறது. இப்படி என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தங்களை தகவமைத்துக் கொண்ட உயிர்கள் மட்டும் தப்பிக்கின்றன. மற்றவை எல்லாம் வெறும் எச்சங்களாகிப் போகின்றன. இதைச் சுருக்கமாகச் சொன்னால் அதுதான் ‘தக்கன தப்பிப் பிழைத்தல்’. 

இப்படித் தப்பிப்பிழைப்பதற்கான திறமை எல்லாம் அந்ததந்த உயிரியின் மரபிலேயே வருவது- ஜெனிட்டிக்கல். எவ்வளவுதான் பிரச்சினைகள் வந்தாலும் தீர்வு கண்டுபிடித்து தப்பித்து விடுகின்றன. உயிர்களுக்கான பிரச்சினைகள்- பிரச்சினைகளுக்கான தீர்வுகள்- அந்தத் தீர்வுகளிலிருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்னும்  ‘கான்செப்ட்டை’ நவீன அறிவியலுக்கு பயன்படுத்திப் பார்க்கலாமா என்று யோசித்த போது உருவானதுதான் மரபியல் கணிப்புநெறி (Genetic Algorithm).

அதாவது, இதே உயிரியல் கான்செப்ட்டை கணினியில் ப்ரொகிராமாக எழுதிவிடுவதுதான். 

இப்பொழுது மரபியல் கணிப்புநெறியை ஏகப்பட்ட துறைகளில் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். உதாரணமாக பொருளாதாரத்தை எடுத்துக் கொள்ளலாம். பெட்ரோல் விலை உயர்வோ அல்லது வேலையில்லாத் திண்டாட்டமோ  - பிரச்சினையின் வீரியத்தைப் போலவே அவற்றிற்கான தீர்வுகளும் இருக்கும். ஒரு சாமானிய தனிமனிதனின் பொருளாதாரப் பிரச்சினைக்கே ஏகப்பட்ட தீர்வுகள் இருக்கும் போது ஒரு நாட்டின் அல்லது உலகப் பொருளாதார பிரச்சினைக்கு எத்தனை தீர்வுகள் இருக்கக் கூடும். இந்த எக்கச்சக்கமான தீர்வுகளிலிருந்து மிகச் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க மரபியல் கணிப்புநெறியைப் பயன்படுத்தலாம்.

எப்படி? எந்தவொரு பிரச்சினைக்கும் சில தீர்வுகள் மேலோட்டமாகவே கண்ணுக்குத் தென்படும் அல்லவா? அவற்றை குத்து மதிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஒவ்வொரு தீர்வையும் ஜெனிடிக் அல்காரிதமானது க்ரோமோசோம் ஆக மாற்றிக் கொள்ளும். இப்படி தேர்ந்தெடுத்த க்ரோமோசோம்களை(தீர்வுகளை) பிணைத்தால்- அதாவது இரண்டு தீர்வுகளை இணைத்து இன்னொரு புதிய தீர்வை அடைவது- இரண்டாம் தலைமுறைத் தீர்வுகள் கிடைக்கும். இரண்டாம் தலைமுறையில் கிடைக்கும் தீர்வுகளை பிணைத்து அடுத்த தலைமுறைக்கு போகலாம். இப்படி ஒவ்வொரு தலைமுறையாகத் தாண்டும் போதும் சிறந்த தீர்வுகளை நோக்கி நகர்கிறோம். 

மேம்போக்காக ‘தீர்வுகளை பிணைத்து இன்னொரு தீர்வை அடைகிறோம்’ என்று சொல்லிவிட்டாலும் கூட அது அவ்வளவு எளிமை இல்லை. தீர்வை க்ரோமோசோமாக மாற்றும் போது அது கணினி புரிந்து கொள்ளும்படியாக 0 அல்லது 1 என்ற பைனரி வடிவத்திற்கு மாற்றுவதிலிருந்து மேற்சொன்ன பிணைத்தல்(Cross over), பிறழ்வு (Mutation) போன்ற இயற்கை நிகழ்த்தும் உயிரியியல் செயல்களை மனிதன் கண்டறிந்த கணினியில் பிரதியெடுத்தல் சற்று சவாலான காரியம்தான். ஆனாலும் நம்மவர்கள் இத்துறையில் படு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கும் போது அப்பாவை நச்சரித்து ஒரு கணிப்பொறி வாங்கித் தரச் சொல்லியிருந்தேன். அப்பொழுது அதன் விலை ஐம்பதாயிரம் ரூபாய். பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அப்பாவால் வங்கிக் கடன் மூலமே வாங்கித் தர முடிந்தது. மூன்றே ஆண்டுகள்தான். நான் வைத்திருந்த கணினியைவிட பன்மடங்கு திறன் வாய்ந்த கணினி நாற்பதாயிரம் ரூபாய்க்கு கிடைத்தது. அடுத்த சில ஆண்டுகளில் அதைவிட நான்கைந்து மடங்கு ஆற்றல் மிகுந்த கணினி இருபத்தைந்தாயிரத்திற்கும் குறைவாக கிடைக்கத் துவங்கிவிட்டது.

எப்படி சாத்தியம்? மின்னணுவியலின் அசுரத்தனமான வளர்ச்சிதான் காரணம். மின்னணுவியல் துறையில் VLSI(Very Large Scale Integration) என்றொரு பிரிவு உண்டு. ஆயிரக்கணக்கான மின்னனு இணைப்புகளை எப்படி மிகக் குறைந்த இடத்தில் வடிவமைப்பது என்பதுதான் இந்த வல்லுனர்களின் வேலை. 64 MB RAM வந்த சில மாதங்களில் 128 MB RAM ஐத் தயாரித்துவிட்டார்கள். அடுத்த சில மாதங்களில் 256 MB RAM. இப்படி திறன் கூடிக் கொண்டே போகும் போது விலை இறங்கிக் கொண்டே வந்ததுதான் ஆச்சரியம்.  அதனால்தான் கணினியின் திறன் கூடினாலும் விலை குறைந்து கொண்டே வந்தது. இப்பொழுதெல்லாம் GB அளவு மெமரி கொண்ட RAM கள் கிடைக்கின்றன. கூடிய விரைவில் Terabyte(TB) அளவில் RAM ஐ எதிர்பார்க்கலாம்.

Pen-drive ஒரு பேனா மூடியளவுதான் இருக்கிறது. ஆனால் ஏகப்பட்ட தகவல்களை அதனுள் அடக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் VLSI தான். துக்கினியூண்டு இடத்தில் அவ்வளவு மெமரியை வடிவமைத்திருக்கிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கான மின்னணு இணைப்புகளை உருவாக்கும் போது எந்த இணைப்பை எந்த இடத்தில் வைக்கலாம் என்பதற்கு ஆயிரக்கணக்கான சாத்தியங்கள் உண்டு அல்லவா? இதில் எது சிறந்தது என்பதை நம் மரபியல் கணிப்பு நெறியை வைத்து எளிதாக கண்டுபிடிக்கலாம். எந்த மாதிரி இணைத்தால் மிகக் குறைந்த இடம் தேவைப்படும், எந்த மாதிரி இணைத்தால் இன்னும் திறன் வாய்ந்த மின்னணு சாதனங்களை உருவாக்க முடியும் போன்ற பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜெனிடிக் அல்காரிதம் கொடுக்கிறது.

பொருளாதாரம், மின்னணுவியல் என்பனவெல்லாம் வெறும் ‘சாம்பிள்’ துறைகள்தான். இவை தவிர ஏகப்பட்ட துறைகளில் மரபியல் கணிப்பு நெறி கலக்கிக் கொண்டிருக்கிறது. என்றாலும் அதன் கால் படாத துறைகளும் நிறைய இருக்கின்றன. வருங்காலத்தில் மரபியல் கணிப்புநெறியை நம் மொபைலில் போட்டு வைத்துக் கொண்டால் முதல் பத்தியில் சொன்ன எல்லாப்பிரச்சினைகளுக்கும் சர்வசாதாரணமாக தீர்வைக் கண்டுபிடித்துவிடலாம் என நினைக்கிறேன். அப்படியான சூழல் வருவதற்கான காலம் ஒன்றும் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

(இன்றைய இந்து நாளிதழில் வெளியான கட்டுரை)

Oct 24, 2013

பாலியலில் வறண்ட சமூகம்

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு பஞ்சாயத்து போர்ட் தண்ணீர் குழாய் இருக்காது. இரண்டு வீதிகளுக்கு சேர்த்து ஒரு பொதுக் குழாய் இருக்கும். அதில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் தண்ணீர் வரும். அதுவும் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ தான். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் சண்டை நடக்கும். பெண்கள் பின்னியெடுத்துவிடுவார்கள். சண்டை என்றால் சாதாரணச் சண்டை இல்லை. கிட்டத்தட்ட செவி வழிப் புணர்ச்சி- சிறு திருத்தம்- அது செவி வழி வன்புணர்ச்சி. நாறடித்துவிடுவார்கள். 

சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அது வெறும் ஒரு குடம் தண்ணீர் பிரச்சினைதான். ஆனால் அந்தப் பெண்களைப் பொறுத்தவரைக்கும் அது தண்ணீர் பிரச்சினையே இல்லை. ஈகோ சார்ந்த போராட்டம்; யார் பெரியவள் என்ற போட்டி; தனது அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் நிலை நாட்டக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு. மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

அப்பொழுதெல்லாம் எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதுதான் இருக்கும். அம்மா வீட்டில் இருந்தால் தண்ணீர் வரும் நேரத்தில் அந்தப் பக்கமே விட மாட்டார். கெட்டுப் போய்விடுவேனாம். அப்படியே அந்தப் பக்கம் போனாலும் முக்கியமான வார்த்தைகளைத் தவிர மற்றதெல்லாம் புரியாது. ஆனால் சிலவற்றை விஷூவலைஸ் செய்துவிட முடியும். ‘அறுத்து தோரணம் கட்டிவிடுவேன்’என்ற வசனம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அப்படியொரு தோரணத்தை நினைத்துக் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓடிய பருவம் அது. 

வயது கூடக் கூட பெண்களை விட்டு விலகத் துவங்கியிருந்தேன். விடலைப் பருவம் முழுவதும் ஆண்கள் பள்ளியிலேயே கரைந்து போயிற்று. திரும்பிய பக்கமெல்லாம் தண்டுவன்கள்தான். மல்லிகை வாசமே இல்லாத பதின்ம பருவத்தை விடக் கொடுமையான ஒன்று வேறு இருக்க முடியாது. அப்படியே வளர்ந்த பிறகு ‘பெண்களும் கெட்டவார்த்தைகளும்’ என்பது எனக்கு ஃபேன்டஸியான விஷயமாக மாறிப் போயிருந்தது. இது அனேகமாக சிறுவயது விஷூவலைசிங்கின் பாதிப்பாக இருக்கக் கூடும். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ‘பெண்கள் கெட்டவார்த்தை பேசுவார்களா?’ என்று தெரிந்து கொள்ள படு ஆர்வமாகத் திரிந்தேன். ஆனால் கண்டுபிடிக்கவே முடிந்ததில்லை. எந்தப் பெண்ணும் ஆண்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு கெட்ட வார்த்தை பேசுவதில்லை. இருபது வருடங்களில் பெண்களின் அகராதியிலிருந்தே கெட்டவார்த்தை அழிந்து போய்விட்டது போலத் தோன்றியது. ஆங்கிலப் படங்களில் ‘Fuck' என்று பெண்ணின் வாயிலிருந்து வந்துவிட்டால் போதும். அதுவே உத்வேகமடைய போதுமானதாக இருந்தது. இந்த உத்வேகத்திற்காகவே கொட்டக் கொட்ட ஆங்கிலச் சேனல்களை வெறித்துக் கொண்டிருந்த காலம் ஞாபகத்தில் இருக்கிறது.

இதே போலத்தான் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக செக்ஸ் கதை படிக்க வேண்டுமென்றாலும் அவ்வளவு எளிதில்லை- பழுப்பு நிறத்தில் மட்டமான தாளில் கிடைத்த சரோஜாதேவி புத்தகத்தை நீளமான கணக்கு நோட்டில் வைத்து மறைத்துத்தான் படிக்க வேண்டும். நம் செளகரியத்துக்கு ஏற்ப வீட்டிற்கு எடுத்துப் போய் படிப்பது ரிஸ்க். அதுவும் இல்லாமல் அரை மணி நேரம்தான் நமக்கு ஒதுக்கப்பட்ட நேரமாக இருக்கும். அதற்குள் வேகமாக படித்துவிட்டு ‘க்யூ’வில் நிற்பவனிடம் கொடுத்தாக வேண்டும். அதனால் வகுப்பறை அல்லது டியூஷனிலேயே பாராயணத்தை நடத்தியாக வேண்டும். நம் நேரம் கெட்டுக் கிடந்து தெரியாத்தனமாக அப்புச்சாமி வாத்தியாரிடமோ, டியூஷன் மாஸ்டர் கர்ணனிடமோ சிக்கிக் கொண்டால் சோலி சுத்தம். குரல்வளையிலேயே கால் வைத்து மிதிப்பார்கள். இத்தனை கட்டுக்காவல்களையும் மீறி நம் அறிவை வளர்த்துக் கொண்ட காலம் அது.

ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியா இருக்கிறது? பாலியல் குறித்த தேடல் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. பெண்கள் கெட்டவார்த்தை பேசுவார்களா என்று தெரிந்து கொள்ள விரும்பினால் வெறும் யூடியூப் போதுமானதாக இருக்கிறது. சகட்டு மேனிக்கு பேசுகிறார்கள். அதுவும் தமிழிலேயே வெளுத்துக் கட்டிய ஆடியோக்கள் கிடைக்கின்றன. கேட்டு சலித்துப் போய்விட்டது. இப்பொழுது அது ஃபேன்டஸியாகவும் இல்லை; க்ரேஸியாகவும் இல்லை- நம்மையும் அறியாமல் இதில் அடுத்த படி என்ன என்று மனம் யோசிக்கத் தொடங்கிவிடுகிறது. இதுவொரு பரிணாம வளர்ச்சி போலிருக்கிறது.

இன்றைக்கு இணையமும், ஸ்மார்ட் ஃபோனும் இவற்றையெல்லாம் மிக எளிதாக மாற்றிவிட்டன. பாலியல் தேடல்கள் எவ்வளவு எளிதாகிவிட்டனவோ அதே அளவிற்கு தொடர்புகளும் எளிதாக மாறிவிட்டன. அந்தக் காலத்தில் ‘ஒரு வார்த்தை பேச ஒரு வருடம் காத்திருந்தார்கள்’. டைப்ரைட்டிங் செண்டரிலோ, வகுப்பறையிலோ, வாய்க்கால் மேட்டிலோ சைகையில் ஆரம்பித்து, சிரிப்புக்கு வந்து பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்குள் வீட்டில் திருமண பேச்சைத் தொடங்கியிருப்பார்கள். 

இப்பொழுதெல்லாம் ஒரு மிஸ்டு கால் போதும். பிறகு அந்த மிஸ்டு கால் நம்மை சொர்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும். தகவல் தொடர்பியலில் ஏற்பட்டிருக்கும் இந்த எளிமையாக்கல் சமூகத்தில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை கவனிக்கிறோமா இல்லையா என்று தெரியவில்லை. தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சி என்பது சமூகத்தில் இருண்ட மனநிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ‘இருண்ட மனநிலை’ என்பது அடுத்தவருக்கு தெரியாத ‘secret பக்கங்கள்’.

ஒவ்வொரு மனிதனுக்கும் மிக ரகசியமான ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அந்தரங்கங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறன. நாம் உருவாக்கி வளர்த்துக் கொண்டிருக்கும் அந்தரங்கமான உறவுகளைப் பற்றி நமக்கு மிக நெருக்கமான- கணவனுக்கோ, மனைவிக்கோ, அம்மா அப்பாவுக்கோ அல்லது மகன் மகளுக்கோ கூட தெரிவதில்லை-இந்த அந்தரங்கமான தொடர்புகளில் இருப்பவர்களை பார்த்திருக்கக் கூட மாட்டோம். ஆனால் எந்த extreme எல்லைக்கும் சென்றும் உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருப்போம். இது பெரிய உணர்வுபூர்வமான உறவு நிலையும் கிடையாது. ஏதோ ஒரு கட்டத்தில் கசந்துவிடும் போது இந்த தொடர்புகளை விட்டுவிட்டு இன்னொரு புதிய தொடர்புகளை கண்டுபிடித்துவிடுகிறோம். அவ்வளவுதான்.

நகரங்களில் நடைபெறும் கொலைகளாகட்டும், தற்கொலைகளாகட்டும்- தொண்ணூறு சதவீத விசாரணை கள்ளக்காதலில்தான் போய் நிற்கின்றன. அதிலும் இந்த குற்றச்செயல்களின் பிண்ணனியை ஆராய்வதற்கு தொண்ணூற்றொன்பது சதவீதம் செல்போன்கள்தான் உதவியாக இருக்கின்றன. அவனுக்கு அவள் இத்தனை எஸ்.எம்.எஸ்கள் அனுப்பியிருந்தாள். இவன் அவளோடு இத்தனை முறை ஃபோனில் பேசியிருந்தாள் என்று அறிக்கை விடுகிறார்கள் விசாரணை அதிகாரிகள். 

எதற்காக இந்த உறவுகள் தேவைப்படுகின்றன? நம்மைச் சுற்றிலும் திரும்பிய திசைகளிலெல்லாம் நமது உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. இந்த தூண்டப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஏதோவொரு விதத்தில் வடிகால்களைத் தேடத் துவங்குகிறது மனம். இந்த தேடியலையும் மனதுக்கு இணையமும் தகவல் தொடர்பியலும் ஏதோவொரு விதத்தில் நமக்கு ‘வெர்ச்சுவல் பார்ட்னராக’ மாறிவிடுகிறது அல்லவா? இதுதான் சிக்கல்.  உண்மையில் இத்தகைய தொடர்புகள் நமக்குள் கசடுகளை மட்டுமே உருவாக்குகின்றன. நம்மைவிட்டு வெளியேறாத கசடுகள் இவை. 

நமக்குத் தெரிகிறது- இவையெல்லாம் கசடுகள் என்று. ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் இவற்றிலிருந்து தப்பித்துவிட முடியாது என்று நினைக்கிறேன். மிகப் பெரிய ட்ராப் இது. ஆனால் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக அப்பாவின் நெம்பருக்கு ஒரு அழைப்பு வந்தது. அன்றைக்கு அம்மா எடுத்தார். ‘சுமதிங்களா?’ என்று கேட்டிருக்கிறான். ‘இல்லைங்க சுப்புலட்சுமி’ என்றிருக்கிறார். ‘திண்டுக்கல்லிலா இருக்கறீங்க?’ என்று அடுத்த கேள்விக்கு அம்மாவும் தெரியாத்தனமாக ‘இல்லைங்க பெங்களூரில் இருக்கிறோம்’ என்று உளறியிருக்கிறார்.

அம்மாவின் வாயிலிருந்தே தகவல்களை வாங்கிக் கொண்டவன் ‘நான் அடிக்கடி ஓசூர் பக்கம் வருவேன், நீங்க ஃப்ரீயா இருந்தீங்கன்னா சொல்லுங்க’ என்று மூன்றாவது வாக்கியத்திலேயே கேட்டிருக்கிறான். எதிர்முனையில் இருப்பவருக்கு என்ன வயது இருக்கும், எப்படி இருப்பார் என்ற எந்த அக்கறையும் அவனுக்கு இல்லை. அவனுக்குத் தேவையானதெல்லாம் ஒரு பெண்ணின் குரல்- அது மட்டும்தான். அம்மா மூர்ச்சையாகாத குறை. அதிர்ச்சியாகிவிட்டார். அதன் பிறகு நான் அழைத்து திட்டிய பிறகு ‘சாரி சார், ராங் நெம்பர்’என்று துண்டித்துவிட்டான். அது ராங் நெம்பர் எல்லாம் இல்லை. வேண்டுமென்றே பேசிய ராங் பேச்சு. 

இப்படி கைக்கு வந்த எண்ணிற்கு டயல் செய்து பேசுவது, ஒருவேளை பெண்கள் பேசினால் தூண்டில் வீசிப்பார்ப்பது என்று திரிகிறார்கள். 

பிறகு என் நெம்பரில் இருந்து ‘நான் நித்யா’ என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன். எந்த ஊர்? வயது என்ன? என்ற இரண்டு கேள்விகளுக்கு பிறகு ‘உனக்கு என்ன ரேட்?’ என்று மெசேஜ் அனுப்புகிறான். இவனை எல்லாம் என்ன செய்வது? தொடர்ந்து மெசேஜ் அனுப்பினால் தனக்கு திருமணமாகிவிட்டது, குழந்தை இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறான்.

இவனை போலீஸில் பிடித்துக் கொடுக்கலாம்தான். கொடுத்தால் என்ன நடக்கும்? நாலு சாத்து சாத்துவார்கள். அதனால் இந்த சமூகம் திருந்திவிடுமா என்ன? இவனைப் போல இன்னும் ஏகப்பட்ட பேர்கள் இருப்பார்கள். தனிப்பட்ட ஒருவனை அடித்து திருத்துவதால் எதுவும் நடக்கப் போவதில்லை. சமூகத்தின் பெரும்பகுதி இப்படித்தான் சிதைந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு திருமணமாகிவிட்டது, குழந்தை இருக்கிறது, குடும்பம் நடக்கிறது. எல்லாம் இருந்தும் என்ன பயன்? வறண்டு கிடக்கிறான். யாரையாவது தேடுகிறான். இதுதான் பாலியலில் வறண்ட சமூகம் என்பது. எல்லா உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுவிட்டது, ஆனால் இந்த சமூகத்தின் உணர்ச்சிகளுக்கு வடிகால்தான் இல்லை. இதை எப்படி தனிமனிதனின் பிரச்சினை என்று ஒதுக்குவது?

Oct 22, 2013

திருமணம் ஆனாலும் அவஸ்தைதான்

நேற்று ஒரு பஞ்சாயத்து. அதுவும் கணவன் மனைவிக்கிடையேயான பஞ்சாயத்து. இரும்படிக்கிற இடம் என்றாலும் ஈக்களுக்கும் அங்கு துளி இடம் இருக்கும் அல்லவா? அப்படித்தான் எனக்கும் துளி இடம் கிடைத்தது. 

நந்தினியை எனக்கு நன்றாகவே தெரியும். எங்கள் அலுவலகத்தில் முக்கியமான வேலையில் இருக்கிறாள். நந்தினி மாதிரி முக்கியமான பணியில் இருப்பவர்களோடு தொடர்பில் இருப்பது என்பது சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டரக்டர்களோடு தொடர்பில் இருப்பது போல- அவ்வப்போது நமக்கு பரபரப்பான தகவல்களைச் சொல்லிவிடுவார்கள். நந்தினியும் அப்படித்தான். தலைக்கு இடியே வந்தாலும் கூட ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே அழைத்துச் சொல்லிவிடுவாள். தயாராகிக் கொள்ளலாம். அப்படிப்பட்டவளுக்கே ஒரு பேராபத்து. 

நேற்று மதியவாக்கில் போனில் அழைத்து ‘ஒரு பிரச்சினை. ரெண்டு நிமிஷம் ரிஷப்சனுக்கு வர முடியுமா?’ என்றாள். அவள் அழைத்தது திருமண ரிசப்ஷனுக்கு இல்லை. அலுவலக ரிசப்ஷனுக்கு. ஆண்களுக்கு பிரச்சினை என்றால் மெதுவாக போகலாம். பெண்களுக்கு பிரச்சினை என்றால் விட முடியுமா? பதறியடித்து ஓடினேன். அவள் அழைத்ததற்கு காரணம் இருக்கிறது. நந்தினி கன்னடப் பெண். பிரச்சினையைக் கொண்டு வந்தவர்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். ஒருவேளை நான் அருகாமையில் இருந்தால் தனக்கு உதவிகரமாக இருக்கக் கூடும் என நினைத்திருக்கலாம். 

கணவன் நாகூரைச் சேர்ந்தவன், மனைவி நாகர்கோவில். ஊர்ப் பெயரைக் கேட்டதுமே சமாதானம் ஆகிவிட்டேன். சாரு நிவேதிதாவின் ஊர்க்காரனுக்கும், ஜெயமோகனின் ஊர்க்காரிக்கும் திருமணம் செய்துவைத்தால் கொஞ்சிக் கொண்டா இருப்பார்கள்? இதற்குத்தான் திருமணம் செய்யும் போது இதற்குத்தான் மற்ற பொருத்தங்களோடு சேர்த்து ஊர்ப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்பது. ஊர் பிரச்சினையை விடுங்கள். 

இருவருக்கும் திருமணம் ஆகி ஆறு மாதங்கள்தான் முடிந்திருக்கிறது. கணவன் நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்கிறான். மனைவி பகல் ஷிஃப்ட். இதைவிடக் கொடுமை என்னவென்றால் அவனுக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை. அவளுக்கு சனி, ஞாயிறு. இருவருக்கும் பார்த்துக் கொள்ளவே வாய்ப்பு இல்லை. பிறகு மற்றதெல்லாம் எப்படி நடக்கும்? இந்த இடத்தில் ‘மற்றது’ என்றால் இருவரும் பேசிக் கொள்வது, புரிந்து கொள்வது எல்லாம். வேறு  ‘எதையாவது’ நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இருவரும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். ஆனால் இருவருக்கும் சம்பந்தமே இல்லாதது போல வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வப்போது சந்தித்துக் கொண்டால் சண்டை பிடிக்கத்தான் நேரம் சரியாக இருக்கும் போல. இப்படி போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் முந்தாநாள் புயலடித்திருக்கிறது. 

அதிசயமாக சனிக்கிழமை இரண்டு பேரும் வீட்டில் இருந்திருக்கிறார்கள். அதுதான் வம்பாக போய்விட்டது. அதிகாலையிலேயே சண்டை ஆரம்பமாகியிருக்கிறது. அவர்களின் பாஷையில் அதிகாலை என்றால் பத்து மணி. அப்பொழுதுதான் எழுந்திருக்கிறார்கள். எழுந்தவுடன் பிரச்சினை. கண்டபடி திட்டிக் கொண்டார்களாம். 

வீட்டில் சமையலுக்கு எதுவும் இல்லை. முந்நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு கடைக்கு போயிருக்கிறாள் அந்தப் பெண். திரும்ப வரும் போது வீடு பூட்டியிருக்கிறது. அவன் எங்கோ போய்விட்டான். போனவன் போனவன் தான். மாலை வர திரும்ப வரவில்லை. வீட்டிற்கு வெளியிலேயே அமர்ந்திருக்கிறாள். மாலை முடிந்து இரவும் தொடங்கியாகிவிட்டது. ம்ஹும். இப்படியே அடுத்த நாளும் ஓடியிருக்கிறது. வீட்டுக்கு முன்பான வராண்டாவிலேயே படுத்திருந்தாளாம். கையில் இருந்த ஐம்பது ரூபாயில் சனிக்கிழமை மதியம் சாப்பிட்டிருக்கிறாள். அதோடு சரி. திங்கள் மதியம் வரைக்கும் உணவுக்கும் வழியில்லை. படுக்கைக்கும் வழியில்லை. 

வடகிழக்கு பருவமழையின் சாரல் பெங்களூரை குளிர்வித்துக் கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் போர்த்திக் கொண்டு படுத்தாலும் குளிர்கிறது. அவள் இரண்டு நாட்களாக வெறுந்தரையில் பசியோடு கிடந்ததை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. அபார்ட்மெண்டில் இருந்தவர்கள் இவளை கவனித்தார்களா என்றும் தெரியவில்லை. கவனித்திருந்தாலும் கூட நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிப் போயிருக்கக் கூடும். 

கதவை உடைத்திருக்கலாம்தான். ஆனால் அந்த ஜீவனுக்கு அதற்கும் தைரியம் இல்லை. கதவை உடைத்தால் வீட்டு ஓனர் அவ்வளவு சீக்கிரம் விடமாட்டார் என்று பயந்திருக்கிறாள். திங்கட்கிழமை செக்யூரிட்டி மூலமாக ஓனருக்கு தகவல் சென்று அவரே வந்திருக்கிறார். அவரிடமும் டூப்ளிகேட் சாவி எதுவும் இல்லையாம். இவளது நிலைமையை உணர்ந்தவர் பூட்டை உடைத்துவிடச் சொல்லியிருக்கிறார். பூட்டை உடைத்து உள்ளே சென்று கணவனுக்கு ஃபோன் செய்த போது அழைப்பைத் துண்டித்திருக்கிறான். ஏதோ விபரீதம் நடந்ததை புரிந்து கொண்டவள் வீட்டைத் தேடிய போது அவனது சர்டிபிகேட், துணிமணிகள் என அனைத்து உடைமைகளையும் வழித்து எடுத்துச் சென்றிருக்கிறான். அதோடு இவளது பர்ஸ், ஏடிஎம் கார்ட், கிரெடிட் கார்டுகளையும் எடுத்துச் சென்றுவிட்டானாம். அத்தனையையும் எடுத்துக் கொண்டு போனவன் மறதியாக எங்கள் நிறுவனம் கொடுத்த ஆஃபர் லெட்டரை மட்டும் ஒரு டேபிளுக்குள் போட்டு வைத்திருக்கிறான். அதன் பின்புறம்தான் நந்தினியின் பெயரையும் அவளது ஃபோன் நெம்பரையும் எழுதியிருக்கிறான்.

இதுதான் நந்தினிக்கு வினையாக போய்விட்டது. நந்தினிக்கும் தனது கணவனுக்கும் தொடர்பிருக்கிறது என்று நினைத்தவள் எங்களது அலுவலகத்திற்கு வந்து ரிசப்ஷனில் இருந்து நந்தினியை அழைத்திருக்கிறாள். அழைத்தவள் போனிலேயே அழ ஆரம்பித்திருக்கிறாள். ரிசப்ஷனிஸ்ட்டிலிருந்து, செக்யூரிட்டி வரை ஆளாளுக்கு பதறியிருக்கிறார்கள். அவர்கள் பதறுவதற்கு ஏற்றபடி அவளது கோலமும் அப்படி இருந்திருக்கிறது. இரண்டு நாட்களாக சாப்பிடாதவள், தூக்கம் வேறு கெட்டு போதாக்குறைக்கு மழையில் நனைந்து நைந்த பழைய காகிதத்தைப் போல நின்று கொண்டிருந்தாள். 

இப்பொழுதான் மூன்றாவது பத்தியின் செய்தி எனக்கு வந்தது. ‘ஒரு பிரச்சினை. ரெண்டு நிமிஷம் ரிஷப்சன் வர முடியுமா?’.

கீழே போன போது நந்தினியும் பேசும் மனநிலையில் இல்லை. பயந்திருந்தாள். திடீரென்று அறிமுகமில்லாத பெண் வந்து ‘என் கணவனைக் கொடுடி’ என்று கேட்டால் எந்தப் பெண்ணுக்குத்தான் பேச்சு வரும்? இத்தனைக்கும் இதற்கு முன்பாக நந்தினி அவனைப் பார்த்தது கூடவும் இல்லையாம். நந்தினிக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. ஆனால் அதை அந்தப் பெண்ணும் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. இருவருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று உறுதியாக நம்பியிருந்தாள். அவள் கிட்டத்தட்ட தன்னிலை இழந்திருந்தாள். கையில் காசு இல்லை; தனது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து நான்கைந்து மாதங்கள்தான் ஆகியிருக்கிறது- அதனால் பெங்களூரில் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. பசியும் மழையும் சேர்ந்ததனால் என்ன பேசுகிறோம் என்பதே புரியாமல் பேசிக் கொண்டிருந்தாள். பார்க்கவே கொடுமையாக இருந்தது.

அவளது கணவனுக்கு அலுவலகத்திலிருந்தே போனில் பேசலாம் என்று தோன்றியது. ஹெச்.ஆர் நண்பர் ஒருவரை உதவிக்கு அழைத்துக் கொண்டோம். அலுவலக நெம்பரில் இருந்து போன் செய்த போது எடுத்தான். ஹெச்.ஆரிலிருந்து பேசுகிறோம் என்றவுடன் அவன் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தான். ‘அவள் ஒரு லூசுங்க’ என்றுதான் அந்தக் கதையின் முதல் வாக்கியம் இருந்தது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவளையே கை காட்டினான்.  இரண்டு பேரும் விவாகரத்து கோரப் போகிறார்களாம்.

திருமணம் முடிந்து ஆறு மாதம் கூட முடியவில்லை- அதற்குள் விவாகரத்து.

இரண்டு நாட்களாக எங்கே சென்றாய் என்றால் ‘ஒரு பெர்சனல் ட்ரிப்’ என்று பதில் வந்தது. இதற்கு மேல் அவனிடம் என்ன கேட்பது? ‘எதற்கு கதவைப் பூட்டிக் கொண்டு போனாய்’என்றால், ‘அவளுக்கு பனிஷ்மெண்ட்தான்’ என்றான் அசால்ட்டாக. 

பிறகு அவளிடமே பேசச் சொன்னதற்கு முடியாது என்றான். பிறகு அவனே ‘சரி கொடுங்க’ என்று சொல்லிவிட்டு இரண்டு பேரும் ஐந்து நிமிடம் பேசினார்கள். அதை எப்படி ‘பேசினார்கள்’ என்று சொல்ல முடியும்? தாறுமாறாக சண்டை போட்டுக் கொண்டார்கள். அவள் உடைந்து அழத் துவங்கினாள். பெரும் அழுகை வெடித்தது. இது இப்போதைக்கு சமாதானம் ஆகாது என வலுக்கட்டாயமாக சண்டையை நிறுத்த வேண்டியிருந்தது. அவன் இன்று இரவு நைட் ஷிஃப்டுக்கு வருவான். அதுவரை இருந்து பார்த்துவிட்டு போகிறேன் என்றாள். ஆனால் அதற்கு செக்யூரிட்டி அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

என்ன செய்வது என்று தெரியவில்லை. கேண்டீனில் சாப்பிடச் சொன்னபோது மறுத்தாள். வற்புறுத்தலுக்குப் பிறகு ஒரு ஜூஸ் மட்டும் குடித்தாள். வேறு வழியில்லை- நண்பர்களிடம் ஆயிரம் ரூபாய் திரட்டி அவளிடம் கொடுத்து ஊருக்கு செல்லச் சொன்னோம். முதலில் தற்கொலை செய்து கொள்வதாகச் சொன்னாள். அந்த ஹெச்.ஆர் நண்பர் நிறைய பேசினார். இரண்டு மணி நேரமாவது பேசியிருப்பார். சற்று கரைந்திருந்தாள். ஊருக்கு போவது என்பது நல்ல ஐடியாவாகத் தோன்றியிருக்கக் கூடும். சம்மதித்தாள். அவளது அப்பா நெம்பரை வாங்கிக் கொண்டோம். ‘அப்பாகிட்ட சொல்லாதீங்க நானே பேசிக்கிறேன்’ என்று எங்கள் முன்னாலேயே அவரை அழைத்து ‘அப்பா கொஞ்சம் உடம்பு சரியில்லை; ஊருக்கு வர்றேன்’ என்றாள்.

‘இல்லப்பா...மாப்பிள்ளைக்கு லீவு இல்லை அவர் தீபாவளிக்கு வருவார்’ என்று தொடர்ந்தாள். 

அவளுக்கு அம்மாவும் இல்லையாம். அவரது அப்பா தனது மகள் உண்டாகியிருப்பதாக நினைத்துக் கொண்டு உற்சாகமாகிவிட்டாராம். இதை எங்களிடம் சொன்ன போது அவளது உதடுகளில் இருந்து வறண்ட புன்னகை பூத்திருந்தது. ‘அவனை நாங்க பார்த்துக்கிறோம். நீ தைரியமா போய்ட்டு வா’ என்றார் ஹெச்.ஆர் வாலா. அவள் ஒருவாறாக தெளிவான மனநிலைக்கு வந்திருந்தாள். ஆனால் நடை தளர்ந்திருந்தது. மெதுவாக நடந்து அவள் ஒரு புள்ளியாக மாறி மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்படி பார்த்துக் கொண்டிருப்பது ஒரு பெருந்துக்கமாக இருந்தது. என்றாலும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தோம்.

Oct 20, 2013

திருமணம் ஆகாதவனின் அவஸ்தைகள்

இப்பொழுதெல்லாம் ஈரோடு, நாமக்கல், கோயமுத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் கல்யாணம் ஆகாத ஆடவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறிவிட்டது. நாற்பது வயதிலும் தனியாகப் படுத்து பாயை பிறாண்டிக் கொண்டிருக்கும் கவுண்டப் பையன்களைக் கணக்கெடுத்தால் ஒரு தனி சாதிப்பிரிவே உருவாக்கலாம். அத்தனை பேச்சிலர்கள். கடந்த இருபது முப்பது வருடங்களாக கவுண்டர் சமுதாயத்தில் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. குறையாமல் என்ன செய்யும்? திருமணம் ஆனவுடன் முதல் குழந்தை பையனாக பிறந்துவிட்டால் போதும். ‘ஒன்றே போதும்’ என நரம்பைக் கத்தரித்துக் கொள்கிறார்கள். தப்பித்தவறி முதலில் பெண் குழந்தை பிறந்தால் மட்டுமே அந்தக் குடும்பத்திற்கு பெண் வாரிசு. 

இப்படி ஒவ்வொரு குடும்பமும் அளவோடு நிறுத்திக் கொண்டால் முப்பது வருடங்களுக்கு முன்பாக பிறந்த ஆண்களுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்? அதுவும் பத்தாவது படிக்கும் போது காலில் ஆணி விழுந்துவிட்டது, பன்னிரெண்டாவது பரீட்சை சமயத்தில் அம்மை வந்துவிட்டது என்ற நொண்டிச்சாக்குகளோடு படிப்பை கைவிட்டவர்கள், ரிக் வண்டிக்கு வேலைக்கு போனவர்கள், திருப்பூர் பனியன் கம்பெனிக்கு டிரைவராக போனவர்கள் என்ற வகையறாக்களின் கல்யாணக் கனவெல்லாம் தவிடு பொடிதான். இருக்கும் சொற்ப எண்ணிக்கையிலான கவுண்ட பெண்களும் படித்து தொலைத்துவிடுகிறார்கள். இந்தப் பெண்களை பெங்களூரிலும், அமெரிக்காவிலும், சென்னையிலும் கம்யூட்டரைத் துடைத்துக் கொண்டிருக்கும் சாப்ட்வேர்க்காரர்கள் கட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள். மிச்சம் மீதி இருக்கும் பெண்களை இருபது ஏக்கர் தோட்டக்காரன், சொந்தமாக சுல்சர் தறி வைத்திருப்பவன் என்று பணக்காரப் பையன்கள் கட்டிக் கொள்கிறார்கள். 

அப்படியானால் திருமணம் ஆகாத பையன்கள்? உள்ளூரிலேயே வேற்றுச் சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றால் வறட்டு சாதிக் கவுரவம் தடுக்கிறது. அதற்காக திருமணம் செய்யாமலும் இருக்க முடியாது, தர்மபுரிப் பக்கத்திலோ அல்லது கேரளாவிலோ தேடி ‘கிடைப்பது கிடைக்கட்டும்’ என்று தாலியைக் கட்டிக் கூட்டி வருகிறார்கள். மற்றவர்கள் கேட்டால் ‘கவுண்டபுள்ளதான். எப்பவோ அங்கே போய் செட்டில் ஆகிட்டாங்க’ என்று சொல்லிக் கொள்ளலாம். சிலர் விவாகரத்தான பெண்கள், கணவனை இழந்தவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அப்படியும் திருமணம் நடைபெறாத ஆண்கள் அனுபவிக்கும் சித்ரவதை மிகக் குரூரமானது. திருமணம் ஆகாவிட்டால் பாலியல் இன்பம் என்பதே கிடைக்காது என்ற வறட்டு சமூகத்தில் முப்பத்தைந்தைத் தாண்டியும் தண்டுவனாக சுற்றுவது என்பதை விடக் கொடுமை வேறொன்றும் கிடையாது. டிவியைத் திறந்தாள் எவளாவது தொப்புளைக் காட்டுகிறாள்; சினிமாவுக்கு போனால் அங்கு ஒருத்தி மாராப்பை விலக்குகிறாள்; போஸ்டரை பார்த்தால் முக்கால்வாசி காட்டுகிறாள்; அந்த ஆடவனைத் தூண்டிவிட திரும்பிய பக்கமெல்லாம் தயாராக இருக்கிறார்கள். உணர்ச்சி கொந்தளிக்கிறது. ஆனால் அவன் திருமணம் செய்து கொள்ளத்தான் வழியில்லை. என்னதான் செய்வான் அவன்?

மாரிமுத்து அப்படியொருவன். வீட்டிற்கு ஒரே பையன். திருச்செங்கோட்டு பக்கம் தோட்டங்காடு எல்லாம் இருக்கிறது- ஆனால் திருமணம்தான் ஆகவில்லை. வருகிற பெண்களை எல்லாம் கூட இருப்பவர்களும், சொந்தக்காரர்களும் தட்டிக் கழித்துவிடுகிறார்கள். ஒரு பெண்ணை அம்மா நிராகரிக்கிறாள்; இன்னொரு முறை இவனது உடை சரியில்லை என்று பெண் வீட்டார் இவனை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள்; இன்னொரு முறை மாரிமுத்துவின் அப்பா தடை போடுகிறார். இப்படியே வயது முப்பதைத் தாண்டியாகிவிட்டது.

இடையில் ஒரு போயர் இனப்பெண்ணை காதலிக்க முயற்சிக்கிறான். அதுவும் வெற்றியடையவில்லை. பெண்கள் சகவாசமே இல்லாமல் காய்ந்து கிடக்கிறான். மாரிமுத்துவுக்கு பெண் வாடையே இல்லை என்று சொல்ல முடியாது. விடலைப் பருவத்தில் ஒரு பெண்ணோடு உதடு பதித்திருக்கிறான். அதோடு சரி. ‘க்ளைமேக்ஸ்’ எதுவும் நடக்கவில்லை. அந்த ஞாபகம் வேறு அடிக்கடி வந்து மனுஷனுக்குள் பற்ற வைத்துவிடுகிறது. 

இந்தச் சங்கடங்களை அடிப்படையாக வைத்து ஒரு சுவாரசியமான நாவலை சமீபத்தில் வாசிக்க முடிந்தது. 

நாவலின் பெயர் - கங்கணம். கொங்கு நாட்டில் திருமணத்தின் போதோ அல்லது திருவிழாவின் போதோ கையில் மஞ்சளை நூலில் கோர்த்து கையில் கட்டிவிடுவார்கள். அதைத்தான் கங்கணம் என்பார்கள். காரியம் முடியும் வரைக்கும் அதை அவிழ்க்க மாட்டார்கள். யாராவது ஒரு வேலையை முடித்தே தீருவது என்று திரிந்தால் ‘அவன் கங்கணம் கட்டிட்டு திரியறான்’என்பார்கள். அப்படித்தான் மாரிமுத்துவும் ஆறுமாதத்திற்குள் திருமணம் செய்து விடுவது என்று வேட்டை ஆடுவதைப் போலத் திரிகிறான். அதனால் இந்த நாவலுக்கு ‘கங்கணம்’ என்று பெயர்.

திருமணம் ஆகாத ஒரு கவுண்டப் பையன் என்பதுதான் நாவலின் முடிச்சு என்றாலும் இதில் கொங்கு நாட்டின் சடங்குகள், திருமண முறை, ஒரு ஆணின் பாலியல் ஏக்கம், திருமணம் ஆகாத அவன் மீது சமூகம் கொடுக்கும் அழுத்தம், அவனுக்கு ஆதரவாக களமிறங்கும் ஒரு தாத்தா, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பால்ய நண்பன், சித்தப்பா பையன் என அத்தனையும் சேர்த்து வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார் பெருமாள் முருகன்.

இதை வெறும் காமத்தின் சித்தரிப்பு என்று சொல்லிவிட முடியாது. கவுண்டர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சமூக அமைப்பு, மனவோட்டங்கள், சடங்குகள், பேச்சுவார்த்தை என இதைவிடத் துல்லியமாக பதிவு செய்த புத்தகம் என்று வேறு எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. 

பங்காளித் தகராறினால் தலைமுறை தாண்டியும் விவசாயம் செய்யாமல் கிடக்கும் காடு அதைப் பிரிப்பதற்காக நடைபெறும் பேச்சுவார்த்தைகள், திருச்செங்கோட்டைச் சுற்றியிருக்கும் கோவில்கள், மாரிமுத்துவின் பாட்டி, பண்ணையாள் குப்பன் அவரது மகன், மாரிமுத்துவின் அத்தை மருமகள் என ஒவ்வொரு பாத்திரமும், காட்சியும் மனதுக்குள் ஆழமாக பதிந்து விடுகின்றன.

இந்த நாவலைப் பற்றி மிக விரிவாக எழுதலாம்- எழுதுவது மட்டுமில்லை, பி.ஹெச்.டி கூட செய்யலாம். அத்தனை விரிவான நாவல் இது. நாவல் சற்று பெரியதுதான் - நானூற்று சொச்சம் பக்கங்கள். ஆனால் மிக வேகமாக வாசித்துவிட முடியும். நாவலின் நடை அப்படி. மிக இயல்பான மொழியில், எதார்த்தமாக, நேர்-கோட்டில் நகரும் இந்த நாவலை மிக வேகமாக முடித்துவிட்டேன். நாவல் வாசிப்பின்பத்தைக் கொடுத்தாலும் வாசித்து முடித்தவுடன் பள்ளியில் உடன் படித்த, சிறுவயதில் கூடவே சுற்றிய, இன்னமும் திருமணம் ஆகாமல் திரியும் பால்ய நண்பர்களின் ஒவ்வொரு முகமும் சில வினாடிகள் நினைவில் வந்து போயின. இந்த அத்தனை நண்பர்களின் வேதனைகளையும், அவஸ்தைகளையும் மாரிமுத்து பிரதிபலிக்கிறான் -மிகத் துல்லியமாகவும், அதே சமயத்தில் நம் மனதில் மிகப் பெரிய வெற்றிடத்தை உருவாக்கிவிடும் வகையிலும்.

அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட இந்த புத்தகத்தை ஆன்லைனிலும் வாங்கலாம். 

Oct 19, 2013

எழுத்தாளர்களின் ப்ராண்டிங்

நிர்வாகவியல் சம்பந்தமான பாடங்களை படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். வியாபாரத்தில் Branding என்பது ஒரு கலை. நமது பொருளுக்கு நல்ல பெயரை வைப்பதோ அல்லது அட்டகாசமான லோகோவை வடிவமைப்பது மட்டுமே Branding இல்லை. வெறும் லோகோவினால் மட்டும் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட முடியாது. அப்படியே கவர முடியும் என்றால் அது ஒரு தற்காலிகமான ஈர்ப்பு மட்டும்தான். ‘அர்ஜூன் அம்மா யாரு?’ மாதிரி. அதன் பிறகு சில நாட்களில் மறந்துவிடுவோம். 

உண்மையில் Branding என்பது எமோஷனல் அட்டாச்மெண்ட். ஊருக்குள் புதிது புதிதாக கடைகள் வந்தாலும் நமக்கென்று ஒரு விருப்பமான கடை இருக்கும் அல்லவா? நாம் விரும்பும் அந்தக் கடைக்கு பெயர் பலகை கூட இருக்காது. ஆனாலும் அந்தக் கடைக்கு நாமாக பெயர் வைத்திருப்போம் - ‘நாடார் கடை’ ‘மூக்குத்தியான் கடை’ என்று. அந்தக் கடையில் விலை ஒன்றிரண்டு ரூபாய் அதிகமாக இருக்கக் கூடும். ஆனால் அது ஒன்றும் நம்மை அவ்வளவாக பாதிக்காது. ‘மூக்கான் கடையில் ரெண்டு ரூவா அதிகமாத்தான் இருக்கும். ஆனா சாமானம் நல்லா இருக்கும்’ என்போம். தரம் பற்றிய இந்த புரிதலும், அந்த கடைக்காரர் மீதான நமது விருப்பமும்தான் Branding-ன் அடிப்படை கான்செப்ட்.

இப்பொழுதெல்லாம் பொருட்களுக்கும், வியாபார ஸ்தலங்களுக்கு மட்டுமில்லை- மனிதர்களுக்கும் கூட ப்ராண்டிங் தேவைப்படுகிறது. நிறுவனத்தில் நான்கு பேர் இருக்கும் ஒரு டீமுக்குள் கூட நமக்கான வர்த்தகப்படுத்துதல் தேவைப்படுகிறது. கட்சியில் இருப்பவன் எப்படியாவது தலையை வெளியே நீட்டிக் கொண்டேயிருக்கிறான். ஆட்சியில் இருப்பவன் புரட்டுத் தகவல்களை(Fake data) கொடுத்துக் கொடுத்தே தன்னை நிரந்தர தலைவனாக சித்தரிக்கிறான்.

பணியிடம், பொதுவெளி, இணையம் என எல்லா இடங்களிலும் போட்டிதான். ஒவ்வொரு இடத்திலும் நம்மை நாமே விளம்பரம் செய்கிறோம். ஷாம்பூ விற்பவன், காண்டம் விற்பவன் எல்லாம் வர்த்தகத்தில் ஈடுபடுகிறான் என்றால் அது அவன் பிழைப்பு. ஆனால் எழுத்தாளன் எதற்காக சிரமப்பட வேண்டும் என்றுதான் புரியவில்லை? அதுவும் முக்கினாலும் முந்நூறு பிரதிகளைத் தாண்டாத தமிழ் எழுத்தாளர்கள் மிக மிக பிரயாசைப் படுகிறார்கள். டிசம்பரை நெருங்க நெருங்க இந்தக் காய்ச்சலின் வீச்சு தாறுமாறாகிவிடுகிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இயலும் போதெல்லாம் சுயபுராணம்தான். ‘இல்லை இல்லை, வரலாற்றை மாற்றி எழுதுகிறோம். இனிமேல் தமிழ் நூல்களும் பல்லாயிரம் பிரதிகள் விற்கும்’ என்ற நம்பிக்கையோடு செய்தால் அதற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

எழுத்தைப் பொறுத்தவரைக்கும் ப்ராண்டிங் என்பது என்பது நமது எழுத்தை நாமே திரும்பத் திரும்ப பேசிக் கொள்வது இல்லை. ஆனால் சில எழுத்தாளர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ‘இதையெல்லாம் எப்பொழுதோ பாம்புக் கதைகளில் தாண்டிவிட்டேன்’ ‘அந்தக் காலத்திலேயே இதை எழுதியாகிவிட்டது’ என்று வாய்க்கும் போதெல்லாம் பேசுவது, ‘எழுத்தாளனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’ என்று தனது பிம்பத்தைக் கட்டமைப்பது, ‘திரும்பிய பக்கமெல்லாம் என்னைப் பற்றித்தான் விவாதம்’ என்று மிதப்பில் உளறுவது- இப்படியெல்லாம்.

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது அல்லவா? கேட்பவனுக்கு அலர்ஜியாகிவிடாதா என்ன? இப்படி ‘பில்ட் அப்’ கொடுத்து நாம் பேசுவதையும் எழுதுவதையும் பத்து பேர் நம்பினால் நாற்பது பேர் கடுப்பாவார்கள். இந்த இடத்தில்  ‘சில எழுத்தாளர்கள்’ மட்டும் குறிப்பிடுவது ஒருவித தப்பித்தல்தான்.  பெயர் சொல்லி எழுதினால் குரல்வளையைக் கடிப்பார்கள். எதற்கு வீண் பொல்லாப்பு? ஆனால் ‘சில எழுத்தாளர்கள்’என்பதை நீக்கிவிட்டு அவரவருக்கு விருப்பமான எந்தப் பெயரையும் எழுதிக் கொள்ளலாம். வா.மணிகண்டன் என்று எழுதினாலும் கூட பொருத்தமாகத்தான் இருக்கும்.

ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் அது வரலாறு ஆகிவிடுமா என்ன? விற்பனை பல்லாயிரங்களைத் தாண்டிவிடுமா? மிஞ்சிப் போனால் நூறு பிரதிகள் அதிகமாக விற்கும். இதில் பாதிப்பேர் நம் பில்ட் அப்பை நம்பித்தான் வாங்கியிருப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்த ஒன்று உள்ளே இல்லையென்றால் நமக்கு வசவுதான் மிஞ்சும். நூறு பிரதியோ அல்லது இருநூறு பிரதியோ - அதிகமாக விற்றால் பதிப்பாளருக்கு வேண்டுமானால் சற்று கூடுதல் வருமானம். அவ்வளவுதான். அதற்கு எழுத்தாளன் ஏன் தொண்டைத் தண்ணீர் தீர கத்த வேண்டும்?

ஒரு எழுத்தாளனின் எழுத்தைப் பற்றி வாசகர்கள்தான் பேச வேண்டும். அப்படி பேச வைக்கும் வேலையை மட்டும் எழுத்தாளர்கள் செய்தால் போதும் என்று தோன்றுகிறது. ஆனால் வாசகர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவ்வளவு சீக்கிரம் எழுத்தாளனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சர்வசாதாரணமாக யாரையும் தலையில் வைத்துக் கொண்டாடிவிட மாட்டார்கள். அவர்களைத்தான் எழுத்தாளன் ஈர்க்க வேண்டும். இந்த இடத்தில் வாசகர்கள் என்பது, ‘முகம் தெரியாத வாசர்கள்’. மற்றபடி தங்களின் லாபியிங் மூலமாகவோ, தனிப்பட்ட தொடர்புகளின் வழியாகவோ அல்லது தனது பிம்பத்தை ஊதிப் பெருக்கி அதன் மூலம் கவரப்படும் குழுவினரை எப்பொழுதும் ‘வாசகர்கள்’ என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

அசோகமித்திரன் என்ன லாபியிங் செய்தார்? லா.ச.ரா தனது எழுத்துக்கு என்ன விளம்பரம் செய்தார்? இவர்களுக்கெல்லாம் இப்பொழுது இலக்கியத்தில் என்ன அதிகாரம் இருக்கிறது? இவர்களை ஆதரிப்பதால் நமக்கு ஏதாவது பலன் கிடைக்குமா என்ன? ஒரு மண்ணும் கிடையாது. ஆனாலும் இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் வாசகர்கள் பரவலாக இருக்கிறார்கள். சமூக ஊடகத்தில் இந்த எழுத்தாளர்கள் விமர்சித்து மூன்று வரி எழுதினால் கூட உலகின் ஏதோவொரு மூலையிலிருந்து ஒரு வாசகன் எதிர்ப்பான். இத்தனைக்கும் அந்த வாசகன் எழுத்தாளனோடு பேசியிருக்கக் கூட மாட்டான்.

எப்படி சம்பாதித்தார்கள் இந்த வாசகர்களை? எழுத்தினாலும், தங்களின் attitudeனாலும் மட்டும்தான். இத்தகைய வாசகன் தனது எழுத்தாளனோடு உணர்வுப்பூர்வமாக இணைகிறான். இந்த emotional attachment தான் ப்ராண்டிங். சி.சு.செல்லப்பாவை எத்தனை பேர் நேரில் பார்த்திருப்போம்? அவரது பேச்சைக் கேட்டிருக்கிறோமா? அதையெல்லாம் விடுங்கள்- அவரது தெளிவான நிழற்படமாவது கண்ணில் பட்டிருக்கிறதா? ஆனால் அவரது ‘வாடிவாசல்’ நாவலை கடந்த பத்து ஆண்டுகளில் பன்னிரெண்டு பதிப்பு போட்டிருக்கிறார்கள். இந்த நாவலுக்கு யார் விளம்பரம் செய்தார்கள்? நீங்களும் நானும்தான். நாவலைப் பற்றி நீங்கள் எனக்குச் சொல்கிறீர்கள், நான் இன்னொருவருக்குச் சொல்கிறேன். இதுதான் Branding. எழுத்தாளன் வாசகனோடு தனது எழுத்தின் மூலமாக மட்டுமே நிகழ்த்தும் Bonding. அது மட்டுமே அவனது எழுத்தை விற்கச் செய்கிறது.

brandingக்கும் promotion க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இங்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் செய்வது ப்ரோமோஷன். அது எழுத்துக்குத் தேவையில்லை- ஷாம்பூவுக்கும், காண்டத்துக்கும்தான் தேவை. 

Oct 17, 2013

அவ்வளவுதான்...சிம்பிள்

இது நடந்து நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. அப்பொழுதுதான் அந்த நிறுவனத்தில் ‘காண்ட்ராக்டராக’ சேர்ந்திருந்தேன். காண்ட்ராக்டர் என்றால் என்னவென்று ஐடி நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். வேலை செய்து கொடுப்பது ஒரு நிறுவனத்திற்காக இருக்கும். ஆனால் சம்பளம் கொடுப்பது இன்னொரு நிறுவனமாக இருக்கும். ‘இவனுக்கு மாசம் இத்தனை ரூபாய்’ என்று கணக்கு பேசி வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தினர் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் வாங்கும் தொகையில் நான்கில் ஒரு பங்குதான் நமக்கு வந்து சேரும். மிச்ச மீதியெல்லாம் அவர்களின் பாக்கெட்டுக்கு போய்விடும். இங்கு பல ஐ.டி நிறுவனங்கள் இப்படி ஆள்பிடித்துக் கொடுத்துத்தான் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.

வேலைக்கு சேர்ந்தவுடனே மலேசியா அனுப்பி வைத்தார்கள். அதுதான் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் படு உற்சாகமாக இருந்த பருவம் அது. திருமணம் ஆகியிருக்கவில்லை. உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்? மனம் முழுவதும் மசாஜ் பார்லர்களால் நிறைந்திருந்தது. பினாங்கு நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் அழகாகத் தெரிந்தது- மலாய் பெண்களைத் தவிர. அவர்கள் அத்தனை அழகாக இருப்பதில்லை. உருளைக்கிழங்குக்கு கண்களும் மூக்கும் வரைந்து வைத்த மாதிரி இருப்பார்கள். ஆனால் சீனப் பெண்களுக்கு கண்களே இல்லையென்றாலும் கூட பரவாயில்லை- ஒருவித அழகுடன் இருந்தார்கள். உலகம் இத்தனை அழகான சீனப் பெண்களால் நிரம்பியிருக்கிறது என்று புரிந்து கொண்ட போது எனக்கு வாயெல்லாம் பற்கள். எப்படியும் ‘சிங்கி’யிடம் மசாஜ் செய்து கொள்ள வேண்டும் என கங்கணம் கட்டியிருந்தேன்.

அந்தச் சமயத்தில் எனக்கு மேனேஜராக இருந்தவர் கன்னடக்காரர். வேலை மலேசியாவில் என்றாலும் இந்தியாவில் இருக்கும் அவருக்குத்தான் ரிப்போர்டிங் செய்ய வேண்டும். வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குப் பிறகு இருவரும் முதன் முதலாக பினாங்கில்தான் சந்தித்துக் கொண்டோம். அவருக்கு பதினைந்து நாள் பயணம். நான் ஏற்கனவே மாதக் கணக்கில் அங்கேதான் இருந்தேன். அவர் ஐம்பதைத் தொடும் காலத்தில் இருந்தார். கிருதாவெல்லாம் ஏற்கனவே நரைத்திருந்தது. மீசையில் வெள்ளை எட்டிப்பார்க்கத் துவங்கியிருந்தது. அப்பாவின் பெயர்தான் அவருக்கும் என்பதால் சற்று நெருக்கமாக உணர்ந்திருந்தேன். அவருக்கும் என்னைப் பிடிக்கத் துவங்கியிருந்தது. அங்கு அவர் இருந்த பதினைந்து நாட்களும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் சாவடித்துவிட்டார். இந்திய உணவு வேண்டும், இந்திய கடைகள் வேண்டும் என்று ஒரே அக்கப்போர். வேறு யாராவதாக இருந்தால் ‘இதெல்லாம்தான் இந்தியாவிலேயெ கிடைக்குதே இங்கு வந்தும் அதையே தேட வேண்டுமா?’ என்று மண்டையிலேயே ஒரு போடு போட்டிருக்கலாம். ஆனால் மேனேஜர் அல்லவா? பல்லிளித்துக் கொண்டே ‘சரிங்க சார்’ போட்டுக் கொண்டிருந்தேன்.

அவரோடு சுற்றிய லிட்டில் இந்தியா, காரைக்குடி ரெஸ்டாரண்ட் என்று சுற்றிய இடமெல்லாம் ஒரே இந்திய வாசம்தான். அதைக் கூட மன்னித்து விட்டுவிடலாம் சைட் அடித்தால் கூட இந்தியப் பெண்களையே பார்க்க வேண்டும் என்றார். அது மட்டுமா? ‘சீனப் பெண்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது’ என்று பல் மீது நாக்கைப் போட்டு பேசிவிட்டார். இந்த இடத்தில் அவரை முறைத்திருப்பேன் என்றோ அல்லது பழி வாங்கியிருப்பேன் என்றோ நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. இப்பொழுதும் அவர்தானே மேனேஜர் அதனால் அதுக்கும் ‘சரிங்க சார்’தான். வேறு வழியே இல்லை.

அவர் இந்தியாவிற்கு கிளம்பிய பிறகுதான் எனக்கு சிறகு முளைக்கத் துவங்கியது. என்னென்ன செய்தேன் என்று இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம். இப்போதைக்கு நோ சிங்கி மங்கி டாக்கிங்.

இந்தியா வந்த பிறகு மலேசிய நிறுவனத்தின் விவகாரங்களை மேனேஜர் என்னிடமிருந்துதான் தெரிந்து கொள்வார். அப்படியே பேசிப் பேசி நண்பர்கள் ஆகிவிட்டோம். அவர் இந்திரா நகரில் ஒரு வீடு வாங்கி இருந்தார். பெங்களூரில் அது நல்ல ஏரியா. காஸ்ட்லி ஏரியாவும் கூட.அந்தப் பகுதியில் அவ்வளவு எளிதில் வீடு வாங்கிவிட முடியாது- வங்கிக் கடன் தான் என்றாலும் பெருங்கடனாக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் அவனை விட சிறிய மகளும் இருந்தார்கள். மனைவி வேலைக்கு போகவில்லை. நல்ல வேலை, அளவான குடும்பம், அழகிய வீடு என்று சந்தோஷமான வாழ்க்கை. ஐம்பதை நெருங்கும் போது நமக்கும் இப்படித்தான் வாழ்க்கை இருக்க வேண்டும் என மற்றவர்களும் விரும்பும்படியான வாழ்க்கை அது.

அந்த சந்தோஷம் அவரது முகத்திலும் தெரியும். நல்ல தேஜஸ். அளவான புன்னகை, மழித்த முகம், காஸ்ட்லி முகக் கண்ணாடி, ப்ராண்டட் சட்டையும் பேண்ட்டும் என்று அவரைப் பார்த்தாலே ஒரு மரியாதை வரும்.

மலேசியாவிலிருந்து பெங்களூர் திரும்பிய பிறகு வேலை அதிகம் இல்லை. மேனேஜருக்கு என் மீது ஒருவித நம்பிக்கை இருந்ததால் பெரிதாக ‘ப்ரஷர்’ கொடுக்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது அது என்னுடைய மனப்பிராந்தி. அவர் யாருக்குமே ப்ரஷர் கொடுக்காத நல்ல மனுஷன். 

ஐ.டி நிறுவனத்தில் சில மேலாளர்கள் இருக்கிறார்கள்- கண்கொத்திப் பாம்பாக பார்ப்பார்கள். ஒருவன் எத்தனை முறை டாய்லெட் போகிறான் என்பது வரைக்கும் கவனிக்கும் கேடிகள் அவர்கள். டீம் மீட்டிங்கில் மனசாட்சியே இல்லாமல் கத்துவார்கள். இவர்கள்தான் இந்த நிறுவனத்தையே வலது தோளில் தாங்கிப் பிடிக்கிறார்களோ என்று நம்மை எண்ண வைத்துவிடுவார்கள். ஆனால் இந்த மேனேஜர் அப்படியெல்லாம் இல்லை. காலையில் பத்து மணிக்கு வருவார். ஆறு மணிக்கு கிளம்பிவிடுவார். இடையில் ஒரு முறை மொத்த டீமையும் அழைத்து ‘ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?’ என்பார். அவ்வளவுதான். 

இரவு நீண்ட நேரம் வேலை செய்வதாகத் தெரிந்தால் அடுத்த நாள் தனியாக அழைத்துப் போய் ‘அதிகமாக stretch செஞ்சுக்க வேண்டாம். வேலை நிறைய இருந்தால் இன்னொரு ஆளை டீமுக்குள் எடுத்துக்கலாம்’ என்று பேசும் எழுபது கிலோ ப்ளாட்டினம் அந்த மனுஷன்.

அது ஆகஸ்ட் மாதம் என்று ஞாபகம். காலையில் பயங்கரமாகத் தூங்கிவிட்டேன். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எப்படியும் அலுவலகம் போய்ச் சேர்வதற்கு பதினொன்று ஆகிவிடும். மேனேஜர் எதுவும் சொல்ல மாட்டார் என்றாலும் அவரை அழைத்துச் சொல்லிவிடுவதுதான் மரியாதை என்று பல் துலக்கிவிட்டு அலைபேசியில் அழைத்தேன். கட் செய்தார். அவசர அவசரமாக குளித்துவிட்டு வந்து மீண்டும் அழைத்த போதும் கட் செய்தார். மீட்டிங்கில் இருக்கக் கூடும். நேரடியாக பார்த்து சொல்லிக் கொள்ளலாம் என்று சாப்பிடாமல் வந்து சேர்ந்தேன். மணி பதினொன்று ஆகியிருக்கவில்லை. ஆனால் நெருங்கிக் கொண்டிருந்தது.

பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தவும் அவர் வெளியே வரவும் சரியாக இருந்தது. அவருடைய மேனேஜரும் கூடவே இருந்தார். ‘சாரி சார் லேட்டாகிடுச்சு அதுக்குத்தான் ஃபோன் செய்தேன்’ என்று சொல்லும் போது அவருடைய கண்கள் கலங்கியிருந்தன. ஆனாலும் மெலிதாக சிரித்தார். ‘என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க’ என்றார். அது சிரிப்பு இல்லை- தனது துக்கத்தை மறைக்கும் முகமூடி. அருகில் இருந்த அவருடைய மேனேஜர் என்னை உள்ளே போகும் படி சைகை செய்தார். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவரை பார்த்தேன். மீண்டும் அதே சிரிப்பு- அதே கலங்கிய கண்கள்.

அதன் பிறகு இதுவரைக்கும் அவரிடம் எந்தத் தொடர்பும் இல்லை. அவருடைய நண்பர்கள் சிலர் அவர் மிகவும் உடைந்து போயிருப்பதாகச் சொன்னார்கள். ஃபோன் செய்து பேசலாம்தான். ஆனால் அவருடைய அனுபவதுக்கும் வயதுக்கும் என்னால் எதைச் சொல்ல முடியும் என்று தயக்கம். அடுத்த ஒரு வருடம் வரைக்கும் அவருக்கு வேலை எதுவும் சரியாக அமையவில்லை என்று தெரிந்தது. அந்தச் சமயத்தில் ஐ.டி மார்க்கெட்டும் சரியில்லை.

அவ்வப்போது அந்த அழகிய குடும்பம் கண் முன்னால் வந்து போகும். அவரது கடன்களுக்கு என்ன செய்வார்? குழந்தைகளின் படிப்புக்கு என்ன செய்வார் என்று தோன்றும். ஆனால் நம் கையில் என்ன இருக்கிறது. அப்படியே அந்த மேனேஜரை மறந்திருந்தேன். 

நேற்று லின்க்-இன் வழியாக அழைப்பு அனுப்பியிருந்தார். ஜிமெயிலுக்கு notification வந்திருந்தது. லின்க்ட்-இன் தளத்தை நான் சரியாக பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அவர் என்ன வேலையில் இருக்கிறார் என்று பார்க்க விரும்பினேன். பார்த்த போது சந்தோஷமாகத்தான் இருந்தது- ஒரு மிகப்பெரிய ஐடி நிறுவனத்தில் சீனியர் டைரக்டராக இருக்கிறார். 

மனுஷன் கலக்கியிருக்கிறார். விழுந்தது ஒரு அடிதான். அவ்வளவு சீக்கிரம் எழ முடியாத சமயத்தில் விழுந்த அடி. ஆனால் கை கால்கள் என அத்தனையும் சேர்த்து மொத்த பலத்தையும் திரட்டி உந்தியிருக்கிறார் போலிருக்கிறது. அந்த உந்துதலின் மூலமாக இப்பொழுது மிக உயரத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த நிறுவனத்திலிருந்து வெளியே போன போது வெறும் மேனேஜர். ஆனால் இப்பொழுது சீனியர் டைரக்டர். அதுவும் மிகப் பெரிய நிறுவனத்தில். 

எனக்கு கண்கள் திறந்தது போலிருந்தது. அவ்வளவுதான் வாழ்க்கை. அவருக்கு என்ன உயிரா போய்விட்டது? வெறும் வேலைதான். யோசித்துப் பார்த்தால் உயிரைத் தவிர வேறு எது போனாலும் சரி- வெறும் மயிர் போன மாதிரிதான்!

Oct 16, 2013

திருட்டு சாமியார்கள்

அரசியல்வாதிகள் கில்லாடிகளா? சாமியார்கள் கில்லாடிகளா? இப்படி யாராவது கேட்டால் கேள்வியை முடிப்பதற்குள்ளாக பதில் சொல்லிவிடலாம். பாபாஜி ராம்தேவிலிருந்து நித்யானந்தா வரைக்கும் அத்தனை சாமியார்களும் கில்லாடிகள்; அத்தனை சாமியார்களும் கேடிகள். இந்த பட்டியலுக்குள் ‘காவி சாமியார்கள்’ மட்டுமில்லை, பால் தினகரன், மோர் தினத்தந்தி, தயிர் தினமலர் என்று மதத்தின் பெயரால் வியாபாரம் செய்து கொண்டிருக்கு அத்தனை பேரையும் செருகிவிடலாம்.

இந்த வாரத்தில் நரேந்திர மோடியை பால் தினகரன் சந்தித்திருக்கிறார். சந்தித்துவிட்டு போகட்டும். நமக்கென்ன வந்தது? இதே போலத்தான் சில மாதங்களுக்கு முன்பாக மோடியை ஜக்கி வாசுதேவ் சந்தித்தார். கடந்த மாதம் திருச்சிக்கு வரும் வழியில் கேரளாவில் அமிர்தானந்தமாயியைச் சந்தித்துவிட்டு வந்துதானே கூட்டத்திற்கு டாட்டா சொன்னார், Mr.மோடி. 

பிஸினஸ் செய்யும் சாமியார்கள் எல்லாம் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் அடிவயிற்றில் கை வைத்துவிடக் கூடாது. அவ்வளவுதான் அவர்களின் நோக்கம். அரசியல்வாதிகளின் கருப்புப்பண விவகாரங்களை பற்றி கதறும் மீடியாவும், சினிமாக்காரனின் வருமான வரி பற்றி பேசும் புரட்சியாளர்களும் ஏன் சாமியார்களின் கேப்மாரித்தனங்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை? சாபம் விட்டுவிடுவார்கள் என்ற பயம் போலிருக்கிறது. 

நித்யானந்தா இருக்கிறான் பாருங்கள்- ஒருசமயம் எங்கள் கல்லூரிக்கு வந்திருந்தான். அப்பொழுது கருமுத்து தியாகராஜ செட்டியாரின் குடும்பம்தான் அவனை தாங்கிப் பிடித்திருந்தது. எங்கள் கல்லூரியும் அந்தக் குடும்பத்துடையதுதான். அவன் வந்த போது கொடுக்கப்பட்ட வரவேற்பு இருக்கிறதே- இரண்டு பக்கமும் சிவந்த நிறப் பெண்கள் நின்று பூத்தூவ, மங்கள வாத்தியங்கள் முழங்க பற்களைக் கெஞ்சிக் கொண்டே மேடையேறினான். அதோடு நிற்கவில்லை. வந்தவன் ‘டச் ஹீலிங்’ செய்கிறேன் என்று உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு இரண்டு பக்கமும் படிகட்டுக்கள். ஒரு பக்கத்திலிருக்கும் படிக்கட்டு வழியாக மேலேறி அவனிடம் சென்று எந்த இடத்தில் வலிக்கிறது அல்லது நோய் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். பற்களைக் காட்டிக் கொண்டு அந்த இடத்தை அழுத்திக் கொடுப்பான். வலியும் நோவும் பறந்து போய்விடுமாம். இன்னொரு படிக்கட்டு வழியாக நாம் கீழே இறங்கி வந்துவிட வேண்டும். இதுதான் ‘டச் ஹீலிங்’ முறை. எந்த நோயும் இல்லாதவர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. அவன் அருகில் சென்றால் நெஞ்சு மீது கை வைப்பான். ஆசி வழங்குகிறானாம். அதன் பிறகு எந்த நோயும் வராதாம்.

அவனுக்கு முன்பாக திரண்ட கூட்டம் இன்னமும் கண்களுக்குளேயே இருக்கிறது. இடுப்பிலும், நெஞ்சிலும் வலி என்று வந்த பெண்கள் உட்பட அத்தனை பேருக்கும் ‘டச் ஹீலிங்’கில் வைத்தியம் பார்த்தான். பிறகுதான் அவன் யோக்கியதை பல் இளித்ததே. ஆனால் இன்னமும் பாருங்கள்- அவன் தான் பரமஹம்ஸன். தந்தி டிவியில் அவனுக்கு தனி ஸ்லாட். தினத்தந்தியில் தினமும் அரைப்பக்கம் வண்ண விளம்பரம். காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் தின்னும் ஊடகங்கள் நம்மைச் சுற்றி இருப்பது நம் பெருந்துக்கம்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக சாய்பாபாவின் பள்ளியறையில் கோடிக்கணக்கான பணமும், தங்க நகைகளும் இருந்ததாகச் சொன்னார்கள். அதன் பிறகு அவையெல்லாம் என்னவாயின? ஏதாவது சப்தம்? மூச்சு விட மாட்டோமே! அவற்றையெல்லாம் காகம் ஒன்று தூக்கிச் சென்றுவிட்டதாம். அதனால் மறந்துவிட வேண்டும். அவருக்கு எப்படி அத்தனை வருமானம் வந்தது என்றால் ‘வெளிநாட்டில் இருந்து வந்தது’ என்று முடித்து விடுவார்கள். அதோடு நம் கேள்வியை நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறிக் கேட்டால் ‘அவர் எப்படியோ சம்பாதிக்கட்டும் மருத்துவமனை கட்டி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் செய்தாரே’ என்பார்கள். அதுதான் நமது கடைசிக் கேள்வியாக இருக்க வேண்டும். இதுதான் அவர்களின் கடைசி பதிலாக இருக்கும்.

பெங்களூரின் டவுன் பஸ்களில் ஒரு கூத்து நடக்கும். ஒரு நிறுத்தத்திலிருந்து இன்னொரு நிறுத்தத்திற்கு ஏழு ரூபாய் டிக்கெட்டாக இருக்கும். நம்மிடமிருந்து ஐந்து ரூபாயை மட்டும் நடத்துனர் வாங்கிக் கொள்வார். டிக்கெட் தர மாட்டார். நமக்கு இரண்டு ரூபாய் இலாபம். அது போதும். நடத்துனருக்கு ஐந்து ரூபாய் இலாபம் என்பது பற்றியோ, அரசுக்கு ஏழு ரூபாய் நட்டம் என்பது பற்றியோ யோசிக்க மாட்டோம். 

இதே கதையைத்தான் ஒவ்வொரு சாமியாரும் அரங்கேற்றுகிறார்கள். ஆயிரம் கோடி சம்பாதித்தால் நூறு கோடியில் கோவிலோ, மருத்துவமனையோ கட்டிவிட வேண்டியது. அதன் பிறகு யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் அல்லவா?

இவற்றையெல்லாம் தவிர்த்து இன்னொரு பிஸினஸிலும் சாமியார்கள் கொடிகட்டுகிறார்கள். அது கல்லூரிகள். கட்டித் தொலையட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது. இப்படி கல்லூரி கட்டும் சாமியார்கள் கல்விச் சேவையா செய்கிறார்கள்? மற்ற எந்தக் கல்லூரியை விடவும் ஒரு ரூபாயாவது அதிகமாக ஃபீஸ் வாங்குகிறார்கள். அதுவும் அமிர்தானந்தமாயி போன்றவர்கள் பெரிய நகரங்களில் கல்லூரிகளின் ஃப்ராஞ்ச் வைத்திருக்கிறார்கள். கோவையில் ஒன்று; பெங்களூரில் ஒன்று; கேரளாவில் ஒன்று என. இந்த ஊர்களில் கல்லூரிகளுக்கா பஞ்சம்? ஆனால் அங்குதான் கல்லூரி நடத்துவார்கள். சேவை நடத்துபவர்கள் ஏதாவது கிராமப்புறத்தில் கல்லூரியை நடத்த வேண்டியதுதானே? வருமானம் தட்டுப்பட்டுவிடும் அல்லவா?

வேலூருக்கு அருகில் இருக்கும் நாராயணீ பீடம் சாமியார் தங்கத்திலேயே கோவில் கட்டியிருக்கிறாராம். பெருமைதான். ஆனால் எப்படி வருமானம் வந்தது? மண்வெட்டி எடுத்து களை வெட்டிச் சம்பாதித்தாரா? அரேபிய பாலைவனங்களில் ஒட்டம் ஓட்டி சம்பாதித்தாரா? வருடம் முழுவதும் நாய்படாத பாடு பட்டாலும் ஒன்றரை பவுன் தங்கத்துக்கு வழியில்லாத லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழும் தேசத்தில்தானே அவரும் இருக்கிறார்? ஆனால் முப்பத்தியிரண்டு வயதில் பெரும் சாம்ராஜ்யம் அமைத்துவிட்டார். வருமானம் பற்றிய கேள்விகள் இல்லை- வரி கட்டியது பற்றிய தகவல்கள் இல்லை. காவியணிந்திருக்கிறார் அல்லவா? எப்படி கேட்க முடியும்?

அதே போலத்தான் பங்காரு அடிகளாரும். அந்த மனிதனை அம்மா என்கிறார்கள் - ரியல் அம்மாவுக்குத் தெரிந்து இந்த அம்மாவின் முட்டியைக் கழட்ட இந்த ஆட்சியில் நீதான் கண் திறக்க வேண்டும் ஆதிபராசக்தியே- அந்த மனிதனின் காலைக் கழுவி குடிப்பதற்கும் கூட காசு கொடுக்க வேண்டும். அது அபிஷேகமாம். வெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்தவர். வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தில் மஞ்சத் துணியைச் சுற்றிவிட்டு பெருஞ்சாமியார் ஆகிவிட்டார். அவ்வப்போது அவர் பற்றிய செய்திகள் வெளிவரும். ஆனால் அப்படியே அமுங்கிவிடும். காசு, பணம், துட்டு, மணி!மணி!

இப்படி காவி அணிந்து திருடுபவர்கள் ஒரு பக்கம் என்றால் வெள்ளையாடை அணிந்து திருடும் இன்னொரு கும்பலும் திரிகிறது. தினகரன் போன்ற அல்லேலூயா கோஷ்டிகளுக்கு எந்த விதத்திலும் சளைக்காத இன்னொரு கோஷ்டி அது. சத்குரு, மகரிஷி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்றெல்லாம் பெயரை வைத்துக் கொண்டு யோகாசனம் கற்றுத் தருகிறேன், தியானம் கற்றுத் தருகிறேன் என்று கோடிகளில் புரளும் குருமார்கள். 

யோகாசனம், தியானம் எல்லாம் சொல்லித் தருவது நல்ல விஷயம்தான். அதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால அதை மிக எளிமையாக செய்ய முடியாதா என்ன? ஊருக்கு ஒதுக்குப் புறமாக நூற்றுக் கணக்கான ஏக்கர்கள வளைத்து வளைத்து இடம் பிடித்து கோடிகளில் புரண்டு கொண்டே ஏன் செய்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்த வெண்ணிற ஆடை மூர்த்திகளின் சொத்துக்கணக்கைத் துல்லியமாக எடுக்க முடியுமானால் அதை விட பெரிய சாதனை எதுவும் இருக்க முடியாது. அப்படி கணக்கெடுத்தால் மூக்கு மீது விரலை இல்லை- வேறு எதை எதையோ வைக்க வேண்டியிருக்கும். 

இந்த கார்பொரேட் களவாணிகளில் எந்தச் சாமியார் சாமானியனாக இருக்கிறான்? எந்த குரு எளிமையாக இருக்கிறார்? பணத்துக்கும், அதிகாரத்துக்கும், புகழுக்குமாக ஏங்கிக் கிடக்கிறார்கள். தங்களது ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் அமைந்த ஆஸ்ரமங்களில்- சொகுசு பங்களாவுக்கு இவர்களின் அகராதியில் ஆஸ்ரமங்கள் என்று பெயர்- லேண்ட் ரோவரில் வலம் வரும் இந்த புண்ணியவான்களின் வருமானம் பற்றி யாராவது கேள்வி கேட்கிறோமோ? 

ஒருவன் பணக்காரன் ஆவது பற்றியோ, சொத்து சேர்ப்பது பற்றியோ எந்தப் பிரச்சினையும் இல்லை. மகராசனாக இருக்கட்டும். ஆனால் மதத்தையும், ஆன்மிகத்தையும் முன்னிறுத்தியல்லவா சுருட்டி வழிக்கிறார்கள். ஒவ்வொரு சாமியாருக்கும் அரசியல்வாதியின் தொடர்பு இருக்கிறது. ஊடகத்தில் ஆட்கள் இருக்கிறார்கள். கையில் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. தங்களது அத்தனை அழிச்சாட்டியங்களையும் மறைத்துவிட்டு வாய் நிறைய பற்களோடு தாடியைத் தடவிக்கொண்டே ‘போஸ்’ கொடுக்கிறார்கள். சமத்துவம், சமாதானம், அமைதி என்று சொல்லிச் சொல்லியே அத்தனை பேர்களின் கண்களையும் கட்டி வைத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் நாம் பேசினால் இங்கு சுற்றிக் கொண்டிருக்கும் புண்ணியவான்கள் விடுவார்களா? ‘கிறித்துவ சாமியார்கள்தான் மோசம்; இந்து குருமார்கள் நல்லவர்கள்’ என்று சான்றிதழ் அளிப்பார்கள். சிரிப்பு வருகிறது. சாமியார்கள் மீது எனக்கு எந்தக் காழ்ப்பும் இல்லை. ஏதோவொரு மலையிலும், கிராமத்திலும் காவியோ, வெண் உடையோ தரித்து ஆன்மிகப் பணி செய்து கொண்டிருக்கும் சாமியார்களும், பாதிரிகளும் காலகாலத்துக்கும் வாழட்டும். ஆனால் கார்பொரெட் சாமியார்களையும் மதகுருமார்களையும் காட்டி ‘இவரு நல்லவரு வல்லவரு’ என்றெல்லாம் சொல்ல வேண்டாம். அவர்கள் வெறும் பிழைப்புவாதிகள்; பிஸினஸ் புள்ளிகள். பணம் சேர்க்கும் கேடிகள். அவ்வளவுதான். 

Oct 15, 2013

பைத்தியம்

தமிழகத்திற்கு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை இருப்பது போல கர்நாடகத்திற்கு நிமான்ஸ். இது பழைய மருத்துவமனை- நூறு வருடங்களை தாண்டியே பல வருடங்கள் ஆகி விட்டது. அரசு மருத்துவமனைதான். ஆனால் நம் ஊர் அரசு மருத்துவமனைகளைப் போல நோயாளிகளை அவமானப்படுத்துவதில்லை. இலவச சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள் என்பதற்காக எந்த அலட்சியமும் இல்லை. மருத்துவமனையில் நுழைந்தவுடன் பெருங்கூட்டம் இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கேயுரிய கூட்டம்தான். ஆனால் வழக்கமான கூட்டம் இல்லை இது. சிலர் ஏதோ ஒரு திசையைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தனக்குத்தானாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் அங்கஹீனத்துடன் இருக்கிறார்கள். வேறு சிலரை பார்த்தவுடன் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதவாறு மறைத்துக் கொள்கிறார்கள்- நம்மைப் போலவே.

இருபது ரூபாய் கட்டினால் முதலில் ஒரு மருத்துவரை பார்க்க அனுப்புகிறார்கள். அந்த மருத்துவர் நம்மிடம் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு நோயின் தன்மையைப் பொறுத்து ‘ஸ்பெஷலிஸ்டி’டம் அனுப்புவார். அந்த ஸ்பெஷலிஸ்ட் நியுரோசர்ஜனாக இருந்தாலும் சரி; சைக்யாட்ரிஸ்ட்டாக இருந்தாலும் சரி. மொத்த ஃபீஸூம் இருபது ரூபாய்தான். அத்தனை கூட்டமிருந்தாலும் அதிகபட்சம் ஒன்றரை மணிநேரத்தில் மருத்துவரை பார்த்துவிட முடிகிறது. அவ்வளவு நேர்த்தியாக கூட்டத்தை முறைப்படுத்துகிறார்கள்.

மருத்துவமனையில் நுழைந்தவுடன் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது அல்லவா? அங்கு மட்டும்தான் சிறிது நேரம் பிடிக்கிறது. இருபது நிமிட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கூட்டத்தில் இருப்பது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் நோயாளிகளை பார்ப்பதற்கு திடமான மனம் வேண்டும். பிஞ்சுக் குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்சினை என்று அமர்ந்திருக்கிறார்கள். முப்பது வயதுப் பெண்ணொருத்தி தன் காலோடு சிறுநீர் கழிக்கிறாள்- அவளுக்கு மூன்று வயது குழந்தையின் மூளை வளர்ச்சிதானாம். ஒரு வயதானவருக்கு முகம் கோணலாக இருக்கிறது- நரம்பு சார்ந்த ஏதோ ஒரு தொந்தரவு போலிருக்கிறது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது இனம்புரியாத பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. 

ஏதோ ஒரு நல்ல நேரம்- இந்தப் பிரச்சினைகள் இல்லாமல் தப்பித்துக் கொண்டோம். அதையும் பெருமையாகவெல்லாம் நினைத்துக் கொள்ள முடியாது. எந்த நொடியில் எந்தக் கிரகம் நடைபெறும் என்று யாருக்குத் தெரியும்? இரண்டு வருடங்களுக்கு முன்பாக விபத்தில் தண்டுவடம் முறிந்து போனவரை அழைத்து வந்திருந்தார்கள். இப்பொழுது இடுப்புக் கீழே எந்த உணர்ச்சியும் இல்லை. கையில் ஒரு பாக்கெட்டோடு சுற்றுகிறார்கள். அதில்தான் சிறுநீர் சேகரமாகிறது. அவர் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தான்.

இன்று வரை நன்றாக இருக்கிறோம்- அவ்வளவுதான். 

நிமான்ஸ் வெறும் மனநல மருத்துவமனை மட்டுமில்லை. மனநலம் மற்றும் நரம்பு சார்ந்த பிரிவுகளுக்கான மருத்துவம் பார்க்கிறார்கள். National Institute of Mental Health and Neuroscience என்பதன் சுருக்கப்பட்ட வடிவம்தான் நிமான்ஸ். ஏற்கனவே நான் பைக்கில் இருந்து விழுந்த வரலாறு புவியியலை எல்லாம் கேட்ட மருத்துவர்தான் ‘எதற்கும் இந்த மருத்துவமனையில் காட்டிவிட’ சொல்லியிருந்தார். அது இருக்கட்டும்- இப்பொழுது அதுவா முக்கியம்?

அந்த மருத்துவமனைக்கு ஒரு அம்மாவும் மகளும் வந்திருந்தார்கள். பார்த்தவுடனே தெரிந்தது, தமிழர்கள் என்று. மகளுக்கு ஏழு வயதுக்கு மேலிருக்கும் ஆனால் பத்தைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்பது போல இருந்தாள். மகளை இடுப்பில் சுமந்து கொண்டு வந்தார். அம்மாவின் இடுப்பில் இருந்து எப்பொழுதும் சிரித்துக் கொண்டேயிருந்தாள். வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. இருபது ரூபாய் கட்ட வேண்டிய இடத்தில் பெயரும் முகவரியும் கொடுக்க வேண்டும். ஒரு நீல நிறத் தாளில் விவரங்களை எழுதித் தரச் சொல்கிறார்கள். அந்த அம்மாவால் மகளையும் வைத்துக் கொண்டு எழுத முடியும் என்று தெரியவில்லை. வெட்டியாகத்தான் அமர்ந்திருந்தேன். அருகில் சென்று ‘எழுதித் தரட்டுங்களா?’ என்றவுடன் சிரித்தார். 

பெண்ணின் பெயர் ஷகிரா பானு. பன்னிரெண்டு வயதாகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்- இந்த விவரங்களை எழுதும் போது தெரிந்து கொண்டேன். பணத்தைக் கட்ட க்யூவில் நிற்கவேண்டும். அவரே நின்று கட்டிவிட்டு அருகில் வந்து அமர்ந்தார்கள். ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் முறை இன்னமும் வரவில்லை. ‘எவ்வளவு நேரம் ஆகும்?’ என்றார். எனக்கும் பதில் தெரியாது. ஆனால் ‘சீக்கிரம் கூப்பிட்டுவிடுவார்கள்’ என்றேன். 

அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனாலும் தயக்கமாக இருந்தது. மிகுந்த தயக்கத்திற்கு பிறகு ‘பொண்ணுக்கு என்ன பிரச்சினை’ என்றேன். அவர் பேச ஆரம்பிக்கும் போது மெதுவாகத்தான் ஆரம்பித்தார். ஆனால் பேசத் துவங்கியவுடன் எந்தத் தடையுமில்லை. அந்தப் பெண்ணுக்கு தந்தை இல்லை. இல்லை என்றால் மரணமில்லை- இவர்களை விட்டுவிட்டு போய்விட்டார். இப்பொழுது அம்மாவும் மகளும்தான். அந்த அம்மாவின் தம்பி வீட்டில் வசிக்கிறார்கள். அம்மா ஆம்பூரில் ஏதோ ஒரு தோல் தொழிற்சாலையில் வேலையில் இருக்கிறார். சொற்ப சம்பளத்தை தம்பியிடம் கொடுத்துவிட்டு இரண்டு பேரும் ஜீவனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

இன்று அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார்களாம். அப்படிக் கிளம்பினால்தான் பெங்களூர் வந்து சேர முடியும். ரெஜிஸ்ட்ரேஷன் பதினொன்றரை மணி வரைக்கும்தான். பக்கத்திலேயே சில மருத்துவர்களிடம் பார்த்திருக்கிறார்கள். பில்லி சூனியத்திலிருந்து அலோபதி வரைக்கும் எல்லாமும் அடங்கும். தனது உடன் வேலை செய்யும் ஒருவர் பரிந்துரைத்ததால் இங்கே வந்திருக்கிறார்கள். இதைச் சொல்லி முடித்த பிறகு வேறு எதுவும் பேச வேண்டுமா என்று அவர் குழம்பியிருக்கக் கூடும். நானும் கேட்கவில்லை. மூவருக்குமிடையில் சில நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது. 

இடையில் அலுவலகத்திலிருந்து அழைத்திருந்தார்கள். நிமான்ஸில் அமர்ந்திருக்கிறேன் என்றதும் அவர்கள் அனேகமாக அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும். ஃபோனை பாக்கெட்டுக்குள் வைத்த போது ஷகிரா பானுவை கவனித்தேன். அவள் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறாள். எச்சில் ஒழுகி அவளது சூம்பிய கைகளை நனைத்துக் கொண்டிருந்தது. அவளுக்கு இந்தச் சூழலே புரியவில்லை போலிருக்கிறது. தனது வீட்டின் மூலையில் ஒடுங்கிக் கிடந்தவளுக்கு இந்த இரைச்சலும், ஜனங்களின் அசைவுகளும், மனிதர்களின் அபத்தங்களும் ஆச்சரியமூட்டிக் கொண்டிருக்கக் கூடும். 

ஏனோ திடீரென்று மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்து போனது. பைத்தியங்களைப் பற்றிய கவிதை அது.  அக்கவிதையிலிருந்து ‘அவர்கள்  இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்காத தங்களின் கடவுளர்களை பார்க்கிறார்கள்’ ‘சில சமயங்களில் மரத்திலிருந்து ரத்தம் ஒழுகுவதை பார்க்கிறார்கள்’ ‘அவர்களால் மட்டுமே எறும்புகள் கோரஸாக பாடுவதைக் கேட்க முடிகிறது’ என்ற வரிகள் திரும்பத் திரும்ப நினைவில் வந்தன. ஒருவேளை ஷகிரா பானு தனது கடவுளை பார்த்திருக்கக் கூடும். எறும்புகள் பாடுவதை கேட்டிருக்கக் கூடும். இன்னும் என்னனவோ சாத்தியங்கள். சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

தனது மகளை நான் கவனிப்பதை உணர்ந்த அந்த அம்மா அவசர அவசரமாக ஷகிராவின் எச்சிலைத் துடைக்க எத்தனித்தார். பார்வையை வேறு திசையில் நகர்த்திக் கொண்டேன். அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை. மீண்டும் ஃபோனை எடுத்து பழைய மெசேஜ்களை படித்துக் கொண்டிருந்தேன். அவை ஏற்கனவே படிக்கப்பட்டிருந்த மெசேஜ்கள்தான். ஆனால் வேறு எப்படி நேரத்தை நகர்த்துவது என்று தெரியவில்லை. அடுத்த பத்து நிமிடங்களில் என்னை அழைத்துவிட்டார்கள். அந்த அம்மாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்த போது சிரித்தும் சிரிக்காமலும் அந்த இடத்திலிருந்து நகர்ந்தேன்.

நியுரோ சர்ஜனை பார்க்கச் சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள். வெளியே வந்த சில வினாடிகளில் அவர்களும் வந்துவிட்டார்கள். ஷகிராவை வேறொரு செக்‌ஷனில் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அந்த அம்மாவுக்கு அதை சொல்லத் தெரியவில்லை.  ‘இவளை கொஞ்ச நேரம் பார்த்திருக்கீங்களா சாப்பாடு வாங்கிவிட்டு வர்றேன்’ என்றார். கேண்டீன் பக்கத்தில்தான் இருந்தது. ஷகிராவை கண்காணிக்க வேண்டும் என்ற பொறுப்பு அது சங்கடமாக இருந்தது. அந்தப் பெண் ஏதாவது செய்தால் அதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று தெரியாது என்பதுதான் முதற்காரணம். ஆனால் எப்படி மறுப்பது என்று தெரியவில்லை. ‘சரிங்க’ என்று சொல்லிவிட்டேன். ‘அமைதியா உக்காந்திரு’ என்று ஷகிரா பானுவிடம் அவளது அம்மா சொல்லிவிட்டு சென்ற போது அவளுக்கு மீண்டும் அதே சிரிப்பு.

சில நிமிடங்கள் கடந்தன. சிரித்துக் கொண்டிருந்தவள் அழத் துவங்கினாள். அழுகையினூடாக என்னவோ சொன்னாள். ஆனால் என்ன சொல்கிறாள் என்று சரியாக புரியவில்லை. அம்மாவைத் தேடுகிறாள் என்று தோன்றியது. அவளால் அந்த இடத்தை விட்டு அசைய முடியாது. என்னிடமிருந்து அவளால் தப்பிக்கவெல்லாம் முடியாதுதான். ஆனால் அவளின் அழுகையை எப்படிக் கட்டுபடுத்துவது என்று தெரியவில்லை. அந்த அம்மாவை இருக்கச் சொல்லிவிட்டு நானே கேண்டீனில் ஏதாவது வாங்கி வந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் இப்பொழுது என்ன தோன்றி என்ன பயன்? ஷகிரா சற்று சப்தத்துடன் அழத் துவங்கினாள். கிட்டத்தட்ட நடுங்கத் துவங்கியிருந்தேன். 

மருத்துவமனை ஊழியர் ஒருவரைக் குறுக்காட்டிய போது அவர் நிற்கக் கூட இல்லை. அந்த வழியைக் கடப்பவர்கள் பார்த்துவிட்டுச் செல்கிறார்களே தவிர யாரும் அருகிலேயே வரவில்லை. அவ்வளவு சிரித்துக் கொண்டிருந்த பெண் அழுவதை பார்க்க பரிதாபமாக இருந்தது. விரலை வாய் மீது வைத்து கண்களை உருட்டினேன். சற்று ஓய்ந்தாள். இந்த சைகைக்கு பயப்படுகிறாள் போலிருக்கிறது. அவளை ஏற்கனவே இப்படி யாராவது மிரட்டியிருக்கக் கூடும். 

இந்த நிலைமையில் இருக்கும் ஒரு பெண்ணை மிரட்டுவதைப் போன்ற அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று நினைத்த போது பதற்றம் சற்று கூடியது. ஆபத்துக்கு பாவமில்லை என்று சமாதானப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு உபாயமில்லை. அவள் அழத் துவங்கிய போதெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தேன். பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். இப்பொழுது என்னை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்- அழவும் இல்லை; சிரிக்கவும் இல்லை. அவளையும் கேண்டீனுக்குச் செல்லும் வழியையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது அம்மா தூரத்தில் வருவது தெரிந்தது. சற்று ஆசுவாசமாக இருந்தது. அவர் வந்ததும் கூச்சலிட்டு ஷகிரா பானு அழத் துவங்கினாள். அம்மாவுக்கும் தன் மகள் மீது இரக்கம் வந்திருக்கக் கூடும். ‘அழாத செல்லம்..என் தங்கம்’ என்று கட்டியணைத்துக் கொண்டார். அவர்கள் என்னைப் பார்ப்பதற்குள் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும் என விரும்பினேன். வேகமாக நகர்ந்து சற்று தூரத்திலிருந்து திரும்பிப் பார்த்தேன். ஷகிரா மீண்டும் சிரித்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது யாருக்கும் தெரியாமல் சில வினாடிகளாவது அழ வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அழவில்லை.

Oct 14, 2013

முரட்டுக்காளை

சிறுவயதில் பார்த்த படங்களில் நீங்கள் இன்னமும் மறக்க முடியாதவை எவை? எந்த ஸீன்கள் உங்கள் மனதுக்குள் பதிந்து கிடக்கின்றன? அந்தக் காலத்தில் கேட்ட கதைகள் ஏதாவது ஞாபகமிருக்கிறதா?

பள்ளிக்காலத்தில் பார்த்தவைகளில் ரஜினி, விஜயகாந்த் மற்றும் அர்ஜூன் போன்றவர்களின் படங்கள் மட்டுமே எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன. மனதுக்குள் பதிந்த ஸீன்கள் என்று பட்டியலிட்டால் தனது நெஞ்சில் ‘மாவீரன்’ என்று எழுதியிருப்பதை சட்டையை விலக்கிக் காட்டுவது போன்ற முரட்டுத்தனமான காட்சிகள்தான் நினைவில் வருகின்றன. கேட்ட கதைகளில் ‘முரடனைக் கொன்ற ராஜாக்கள்’தான் நீயுரான்களின் சந்துகளுக்குள்ளிலிருந்து வெளியே வருகிறார்கள். 

உங்களுக்கும் அப்படித்தான் என்றால் நாமெல்லாம் ஒரே கட்சி. ஹீரோக்களை விரும்பும் கட்சி. ஹீரோயிஸ பிரியர்கள்.

இதையெல்லாம் இப்பொழுது கிளறுவதற்குக் காரணம் சி.சு.செல்லப்பா. அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக்காலத்தில் தனது சொத்தை எல்லாம் விற்று ‘எழுத்து’ என்ற பத்திரிக்கையை நடத்தினார் என்றுதான் அவரைத் தெரியும்.  ‘அந்த மனுஷன் தனது சொத்தை விற்று இலக்கியம் வளர்த்தான்’ என்று யாராவது சொன்னால் கேட்பதற்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் இலக்கியத்தை விடவும் குடும்பம் முக்கியம் இல்லையா? இது அவரின் தனிப்பட்ட விவகாரம்தான். என்றாலும் எழுத்தைக் காப்பதை விடவும் நம்மை நம்பி இருப்பவர்களை காப்பது அவசியம் அல்லவா? ஆனால் சி.சு.செல்லப்பா அப்படித்தான் இருந்திருக்கிறார். இவரை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லைதான். ஆனால் செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலையும் அவரது வாழ்க்கை குறிப்பையும் வாசிக்கும் போது ஏனோ அப்படி நினைக்கத் தோன்றியது. 

சி.சு.செல்லப்பா பற்றி நாம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம், அவரது ‘எழுத்து’ இதழின் இலக்கியப் பங்களிப்பு போன்றவை முக்கியமானவைதான். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டியும் அவரது படைப்புகள் முக்கியமானவை என்பது  வாடிவாசல் நாவலை வாசித்த பிறகுதான் தெரியும். அது குறுநாவல். மொத்தமாகவே ஐம்பத்தைந்து பக்கங்கள்தான். சற்றே நீண்ட சிறுகதை.  ‘எழுத்து’ என்ற சிறுபத்திரிக்கையை நடத்திக் கொண்டிருக்கும் போது அதன் சந்தாதாரர்கள் அனைவருக்கும் இந்த நூலின் பிரதி ஒன்றை செல்லப்பா அனுப்பி வைத்தாராம். இது நடந்தது 1959 வருடம். இடையில் இந்த நாவலின் வேறு பதிப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. அதன்பிறகு நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகாக காலச்சுவடு பதிப்பகத்தில் 2003 ஆண்டு பதிப்பித்திருக்கிறார்கள். அப்பொழுதிலிருந்து 2012 வரைக்குமான பத்து வருடங்களில் பன்னிரெண்டு பதிப்புகள். பத்து வருடங்களில் அத்தனை பிரதிகள் விற்பனை ஆகியிருக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நாவல் மிக எளிமையானது. செல்லாயி அம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அந்த ஜல்லிக்கட்டு வாசல்தான் மொத்த நாவலும். இரண்டு இளைஞர்கள், அவர்களின் பின்னால் நிற்கும் ஒரு கிழவன், அந்த ஊரின் ஜமீன்தார், சில காளை மாடுகள், ஒரு ஃபளாஷ்பேக். இவ்வளவுதான் மொத்த நாவலும். இதற்குள்ளேயே ஹீரோயிஸம், மனிதனின் பகைமை, மிருகத்தின் வெறி, வெற்றி மீதான வேட்கை என கலந்து கட்டி அடித்திருக்கிறார் செல்லப்பா. 

அதிகாரக் கட்டமைப்புகள், பழி வாங்கும் எண்ணம், காளை மாடுகளை அடக்கும் விதம் என நாவல் தொட்டுச் செல்லும் இடங்கள் எல்லாம் துல்லியமானவையாக இருக்கின்றன. காளையை அடக்குவதற்காகக் காத்திருக்கும் பிச்சி, அவன் அங்கு வந்திருப்பதற்கான காரணம், கிழவன் பேசும் ஜல்லிக்கட்டு புராணம் போன்றவை வரையில்தான் நாவல் இயல்பாக நகர்கிறது. இவையெல்லாம் முதல் முப்பது பக்கங்களில் முடிந்துவிடுகிறது. பிச்சி அடக்கப்போகும் காளையைப் பற்றிய காட்சிகள் வர ஆரம்பித்ததிலிருந்து நாவலின் க்ளைமேக்ஸ் வரை எல்லாமே சுவாரசியம்தான். முப்பத்தைந்து பக்கங்களை படித்த பிறகு இறுதியில் என்னவாகும் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. நேரடியாக ஐம்பத்தி மூன்றாவது பக்கத்தில் நாவலின் இறுதிப்பகுதியை படித்துவிட்டு மீண்டும் நடுவிலிருந்து வாசித்தேன். அத்தனை விறுவிறுப்பான நாவல் அது. 

நாவலின் நாயகனான பிச்சி ‘சரசர’வென ஹீரோவாக மாறும் காட்சி தமிழ் சினிமாவின் அட்டகாசமான நாயகன் உருவாகும் காட்சிக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை. சர்வசாதாரணமாக விசிலடிக்கத் தோன்றக் கூடிய விவரிப்பு அது. மனிதனுக்கு ‘மாடுபிடித்தல்’ ஒரு விளையாட்டு. ஆனால் மாடுகளுக்கு அது விளையாட்டு இல்லை. வெறியோடு திரியும் அதன் கொம்புகளுக்குத் தேவை குடல் மாலையும், ரத்த நனைத்தலும். இந்த மனநிலையை வாசகனுக்கு நாவல் கொண்டு வந்துவிடுகிறது. மனிதனும் மிருகமும் வெறி கொண்டு மோதுகிறார்கள். இது வெறும் மனிதனுக்கும் மிருகத்திற்குமான மோதல் மட்டும் இல்லை என்பதுதான் நாவலின் சூட்சமம் என்று நினைக்கிறேன்.

நல்ல நாவல் என்பது தனது கதையை மட்டும் நமக்குள் பதியச் செய்வதில்லை. அதிலிருந்து கிளைக்கதைகளை வாசகனுக்குள் உருவாக்க வேண்டும்.  ‘வாடிவாசல்’ நாவல் மிகச் சிறியது. ஆனால் அது உருவாக்கும் கிளைக்கதைகள் தூள் டக்கர்.

முதல் பத்தியில் சொன்ன ரஜினியையும், விஜயகாந்தையும், அர்ஜூனையும் திரையில் பார்க்கும் போது நம்மை அவர்களாகவே கற்பனை செய்து கொள்வோம் அல்லவா? கேப்டன் பிரபாகரனில் வீரபத்திரனை விஜயகாந்த் அடித்து இழுத்து வரும் போது நானே இழுத்து வருவது போல கற்பனை செய்து கொண்டதுண்டு. மன்சூரலிகானின் மினியேச்சர் சைஸ் மனிதன் யாரையாவது நேரில் பார்த்திருந்தால் இழுத்து வருவதற்கான முஸ்தீபுகளில் ஒறங்கியிருக்கக் கூடும். அப்படியான ஒரு ஹீரோயிசத்தை இந்த நாவல் எந்தவித துருத்தலும் இல்லாமல் உருவாக்குகிறது. நாவலை வாசித்த ஒன்றரை மணி நேரம் அதன் பிறகு இரண்டு மூன்று மணி நேரங்களும் பிச்சியாகத்தான் திரிந்தேன். ஆனால் காளை எதையும் பிடிக்கவில்லை.