Sep 30, 2013

Erotica

இந்தத் தலைமுறையில் எரோடிக்காக எழுதக் கூடிய தமிழ் எழுத்தாளர்கள் யார் இருக்கிறார்கள்? இந்தத் தலைமுறையில் மட்டுமில்லை- எந்தத் தலைமுறையிலுமே தமிழில் இல்லை என்றுதான் நினைக்கிறேன்- சாரு மட்டும் விதிவிலக்கு. மற்றபடி தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன் போன்றவர்கள் எழுதியவற்றை எரோடிக் என்றெல்லாம் சொல்ல முடியாது. Soft porn என்று வேண்டுமானால் சொல்லலாம். 

இப்படி குத்துமதிப்பாக தீர்ப்பு சொல்லிவிட்டு போனால் விடமாட்டார்கள். சட்டைக் காலரைப் பிடித்து இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று யாராவது கேட்டால்? 

Softporn என்றால் துணியைக் கழற்றுவது வரைதான் இருக்கும் பிறகு ஜி.நாகராஜன் பாணியில் இருவரும்  ‘ஜலசுத்தி’ செய்து கொண்டார்கள் என்று முடித்துவிடுவது. நடுவில் நடந்ததையெல்லாம் நாமாக யூகம் செய்து கொள்ள வேண்டியதுதான். எரோடிக் அப்படியில்லை- பச்சை பச்சையாக, மஞ்சள் மஞ்சளாக, சிவப்பு சிவப்பாக சொல்லிவிடுவார்கள். அப்படியானால் சரோஜாதேவி புத்தகமும் அதையேதானே சொல்கிறது? பதினைந்து ரூபாய் கொடுத்து அதை வாங்கிப் படித்துவிடலாமே? அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.

இந்த வித்தியாசத்தைத் தான் பெங்களூர் இலக்கிய விழாவில் தெளிவாக புரிய வைத்தார்கள். அதைச் சொல்வதற்கு முன்பாக-

நேற்று ‘ஏனோதானோ’ என்றுதான் நிகழ்விற்கு சென்றிருந்தேன். ஆனால் எதிர்பார்த்ததற்கு எந்த பங்கமுமில்லாமல் விதவிதமான ஆடைகளில் நவநாகரீக பெண்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். பெண்களுக்கு மட்டும்தான் அந்தக் கொடுப்பினை இருக்கிறது. கிழிந்த துணியை மேலே போர்த்திக் கொண்டு வந்தாலும் ஃபேஷன் என்று சொல்லிவிடுகிறார்கள். தொடைக்கு கீழே கிழித்துக் கொண்டாலும் ஃபேஷன் என்கிறார்கள். பெங்களூர் பெண்கள்- படித்த பெண்கள்- ஜீன்ஸ் பெண்கள்- புடவையே இதுவரை கட்டியதில்லையோ என நினைக்குமளவிற்கு அபாய கட்டத்தில் புடவை உடுத்தியவர்கள் என்று வகைவகையாக பார்த்ததில் மாலையில் வீடு திரும்பும் போது கண்கள் இரண்டும் செக்கச் செவே என்றாகிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எழுபத்தைந்து ரூபாய்க்கு மசால் தோசை, இத்தனை அட்டகாசமான பெண்கள் என்றெல்லாம் கவனச் சிதறல்கள் இருந்தாலும் நடுவில் கற்றுக் கொள்ள மிச்சம் மீதியும் இருந்தது. மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் கவிதை வாசித்தார். பத்திரிக்கையாளர் சுனில் சேத்தி பேசினார். த்ரில்லர் நாவல்களைப் பற்றிய விவாதம் இருந்தது. அதையெல்லாம் விடவும் ‘எரோட்டிகா’ பற்றி தனி அரங்கமே இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையை முழுமையாகத் தொலைத்தாலும் பரவாயில்லை. ஜென்ம சாபல்யம் அடைந்தாயிற்று.

அரங்கு வழிந்தது என்பார்களே- அதை நேரடியாகப் பார்த்தேன். வெயிட்டீஸ்! கண்டதை எல்லாம் கற்பனை செய்யாதீர்கள். கூட்டம் நிரம்பி அரங்கம் வழிந்தது. கூட்டத்தில் ஷீபா கரீமும் இருந்தார். ஷீபா கரீமை நீங்கள் முன்பே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் அவரது வலைத்தளத்தை பார்த்துவிடுங்கள். இந்த அம்மிணிக்கு எத்தனை வயது இருக்கும் என்று தெரியவில்லை. எரோடிக் எழுத்தை தனது அடையாளமாக மாற்றி வைத்திருக்கிறார். மேடையில் ஒரு சிறுகதையை வாசித்துக் காட்டினார்.  அடேயப்பா! அவர் வாசிக்கும் போதே இதையெல்லாம் தமிழில் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. முதல் வேலையாக அவரது ஒன்றிரண்டு சிறுகதைகளையாவது மொழியாக்கம் செய்ய வேண்டும்.

ம்ம்..மறந்துவிட்டோம் பாருங்கள்- எரோடிக் x ஃபோர்னோகிராபிக்கு என்ன வித்தியாசம்? வித்தியாசம் இருக்கிறது. 

வெறுமனே இரு உடல்களின் அசைவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எழுதியிருந்தால் அது ஃபோர்னோகிராபி. நடுநடுவே ம்ம், ஆஆஆ, ஸ்ஸ்ஸ் போன்ற ‘மானே தேனே’ மசலாக்கள் இடம் பெற்றிருந்தாலும் கூட அது ஃபோர்ன்தான். அதுவே கதாபாத்திரத்தின் சித்தரிப்பு, அந்த கதாபாத்திரத்தின் ஆழ்மன வேட்கைகள், இன்னொரு உடலை அடைவதில் இருக்கும் சிக்கல்கள், காமத்தின் வலி, அதன் இன்பம் போன்றவற்றையெல்லாம் இழுத்துக் கொண்டு உடல் அசைவுளைப் பற்றிய வர்ணிப்புகளையும் சேர்த்துக் கொண்டு பயணிப்பது எரோடிக். இவனுக்கு இத்தனை அறிவா என்று நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. இந்த வியாக்கியானத்தைக் கொடுத்தது நான் இல்லை- அம்மிணி ஷீபாதான். 

இந்த வியாக்கியானத்திற்காகவே ஷீபாவின் புத்தகங்களை உடனடியாக வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். நிகழ்விலேயே புத்தகக் கண்காட்சி ஒன்றும் இருந்தது. ஆனால் கடைசி நாள் என்பதால் புத்தகங்களை மூட்டை கட்ட ஆரம்பித்திருந்தார்கள். ஷீபா Skunk girl என்றொரு நாவல் எழுதியிருக்கிறாராம். வயது வந்தவர்களுக்கான சரக்கு அது. அதைத்தான் தேடினேன். ஆனால் தேடிய அவசரத்திற்கு சிக்கவில்லை. அவசரத்தில் தேடினால் அண்டாவாகவே இருந்தாலும் அகப்பை உள்ளே போகாது என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்.

கடைசியில் கைக்குச் சிக்கிய அவரது Alchemy என்ற புத்தகத்தை வாங்கி வந்திருந்தேன். சிறுகதைகளின் தொகுப்பு அது. ஆனால் அத்தனை கதைகளும் ஷீபாவால் எழுதப்பட்டதில்லை. தொகுப்பில் ஒரேயொரு கதை மட்டும் அவருடையது. மற்றபடி, புத்தகத்திற்கு அவர் தொகுப்பாசிரியர் மட்டும்தான். புத்தகத்திலிருக்கும் அத்தனை சிறுகதைகளுமே எரோடிக் வகையறா. மொத்தம் பதின்மூன்று கதைகள்- அதில் எட்டுக்கதைகள் பெண்களால் எழுதப்பட்டவை. தமிழிலும் இப்படியெல்லாம் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும். யார் எழுதி புண்ணியம் தேடிக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.

அதெல்லாம் இருக்கட்டும் புத்தகத்தை வாசித்தாகிவிட்டதா என்றுதானே கேட்கிறீர்கள்? இந்த வரியை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இப்பொழுது நேரம் அதிகாலை 4.12. இனிமேல்தான் தூங்கப் போக வேண்டும்.

Sep 29, 2013

மேட்டுக்குடி இலக்கிய மீட்டிங்

பெங்களூரில் வெள்ளிக்கிழமையிலிருந்து ‘பெங்களூர் இலக்கியத் திருவிழா’ நடைபெற்று வருகிறது. எலெக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் வேளாங்கண்ணி பார்க்தான் இடம். சனிக்கிழமையன்று அசோகமித்திரன் கலந்து கொள்வதாக நிகழ்ச்சி நிரலில் இருந்தது. சென்றிருக்க வேண்டும். ஆனால் வேறொரு வேலையின் காரணமாக  ‘மிஸ்’ ஆகிவிட்டது. குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமையாவது முழுமையாக மேய்ந்துவிட வேண்டும் என்றிருக்கிறேன்.

நம் ஊர் இலக்கியக் கூட்டங்களைப் போன்று இந்த பெங்களூர் திருவிழாக்கள் நடப்பதில்லை. சேலத்திலோ, மதுரையிலோ கூட்டம் நடந்தால் உள்ளே நுழைவதற்கு முன்பாகவே ‘வா மச்சி’ என்று கணேசகுமாரனோ, இசையோ வந்து கட்டிப்பிடிப்பார்கள். கூட்டத்தில் முக்கால்வாசிப் பேருக்கு டாஸ்மாக் தீர்த்தம் தெளித்துவிடப் பட்டிருக்கும். கவிதையும் சரி, கட்டுரையும் சரி சிகரெட் நெடியில்லாமல் ஒரு வரி கூட வளராது. ஆனால் இங்கு அதெல்லாம் நஹி. ‘குசுகுசு’ என்றுதான் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசிக் கொள்வார்கள். பல் தெரியாத அளவுக்கு மில்லிமீட்டர் அளவில் மட்டுமே சிரிப்பார்கள்- இதெல்லாம்தான் பந்தாவாம். பாப் கட் அடித்த பெண்கள், Frame இல்லாத மூக்குக் கண்ணாடி அணிந்த ஆண்கள் என்று ஏரியாவே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும்.

கூட்டம் நடக்கும் போதும் அப்படித்தான் - நம் ஊரில் ‘ங்கோத்தா இது செமயான வரிடா’ என்று யாராவது சில குபீர் வார்த்தைகளைத் தெளிப்பார்கள். ஒரு படைப்பாளியை வாருவதும், வாரப்படுபவனை வேறொருவன் காப்பதுமாக ஒரு Liveliness இருக்கும். இந்த பெங்களூர் கூட்டத்தில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. நாகரீகமாக நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு முடிந்தவரை பற்களைக் கடித்துக் கொண்டே அமர்ந்திருப்பார்கள். கன்னத்தை கைகளால் தாங்கிப்பிடித்தோ அல்லது மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டோ அறிவுஜீவி பிம்பத்தை உருவாக்க படாதபாடு பட்டுக் கொண்டிருப்பார்கள்.

நீண்ட முடி வளர்த்து பின்னால் ரப்பர் பேண்ட் போட்டு முடிச்சு வைத்துக் கொண்ட யுவன்கள் கூட்டத்தினூடாக அதற்கும் இதற்குமாக அலைந்து கொண்டிருப்பார்கள். பார்ப்பதற்கு லட்சணமான அத்தனை இலக்கிய யுவதிகளும் அவர்களிடம் மட்டும்தான் பேசுவார்கள். ஒருவேளை அந்த இளைஞர்கள் இல்லையென்றால் நரைத்துப் போன பிரெஞ்ச் தாடி கிழவன்கள் யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பார்கள். நம்மையெல்லாம் துரும்பாகக் கூட மதிக்கமாட்டார்கள்.

Frame இல்லாத கண்ணாடி அணிந்த இலக்கியப் பெரும்புள்ளிகளின் கூட்டங்களில் கலந்து கொள்வதில் ஒரு சங்கடம் இருக்கிறது. பெங்களூரில் முன்பு இந்த மாதிரியான சில மேட்டுக்குடி நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறேன். இது போன்ற கூட்டங்களை தங்களை பிரஸ்தாபித்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறார்களோ என்று தோன்றும். எதிரில் நிற்பவனை ஒரு தூசு மாதிரிதான் பார்ப்பார்கள். ‘எனக்கு நீ பிஸ்கோத்து’ என்கிற மாதிரி. அவர்களைச் சொல்லியும் பிரச்சினை இல்லை. சமகால இந்திய இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்து வைத்திருந்தால் நாமும் ஏதாவது வாயை விடலாம். தற்கால தெலுங்குக் கவிஞர்கள், உருது சிறுகதையாளர்கள் என்று யாரைப் பற்றியுமே தகிடுதத்தம்தான். அப்படியே தெரிந்திருந்தாலும் கூட பேச வாயெடுத்தால் ஆங்கிலமே கூட கொங்குத் தமிழின் உச்சரிப்பில்தான் வந்து விழும். பிறகு எதைப் பேசுவது? ‘வேடிக்கை பார்க்க வந்தணுங்கண்ணா’ என்று சொல்லிவிட்டு ஓரமாக அமர்ந்து கொள்வதுதான் உசிதம்.

இந்த திருவிழாவிற்கு வந்திருப்பவர்கள் என்னதான் டகால்ட்டிகளாக அவர்கள் வந்திருந்தாலும், நமக்கு எவ்வளவுதான் தாழ்வுணர்ச்சி இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளவே கூடாது. யாரென்றே தெரியாத கல்யாண வீட்டில் நுழைந்து பந்தியில் அமரும் போது எந்த ரியாக்‌ஷனையும் முகத்தில் காட்டிவிடக் கூடாது அல்லவா? அதே கான்செப்ட் இந்த நிகழ்ச்சிக்கும் பொருந்தும். மார்க்வெஸ்ஸை கரைத்துக் குடித்தவனைப் போலவும், நெரூடாவுக்கு பக்கத்து வீட்டுக்காரனைப் போலவும் நம் மனதுக்குள் நம்பிக் கொண்டே திரிய வேண்டும்.

நாமும் அவ்வப்போது மேடையில் இருப்பவரின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கலாம், அவ்வப்போது பேனாவைத் திறந்து குறிப்பெடுப்பது போல பாவ்லா காட்டிக் கொள்ளலாம், மோட்டுவளையத்தையும் பார்க்கலாம்- இத்தனை அழிச்சாட்டியம் எதற்கு? 

மலையாளத்திலும், பஞ்சாபியிலும், பெங்காலியிலும் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இது போன்ற நிகழ்ச்சிகளை விட்டால் அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. அதற்காகத்தான்!

நான் செல்கிறேன். வாய்ப்பிருந்தால் ஒரு எட்டு வாருங்கள்.

மேலதிக விவரங்கள்-http://www.bangaloreliteraturefestival.org

Sep 25, 2013

வேலைதான் உலகமா?

முன்பு ஒரு டீமில் வேலை செய்து கொண்டிருந்தேன். முன்பு என்றால் இதற்கு முந்தைய நிறுவனத்தில். கடும் உழைப்பாளிகளால் நிரம்பிய டீம் அது. அவர்களின் கணக்குப்படி திங்கட்கிழமை காலையில் அலுவலகம் வந்து செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பினால் அது ‘நார்மல்’ டைம். அதுவே புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வரைக்கும் இழுத்தால் ‘ஓவர்’டைம். இந்த டீமில் கொஞ்ச நாட்கள்தான் வேலையில் இருந்தேன். அவ்வளவு நாட்கள்தான் இருக்க முடியும். பிறகு அலர்ஜியாகத் தொடங்கிவிட்டது. 

அப்பொழுது அலுவலகம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில். மாலை நேரத்தில் வெளியே வந்து நின்றால் இரண்டு கண்கள் போதாது. அப்போதைக்கு எவனாவது தனது கண்களை இரவலாகக் கொடுத்தால் கூட தேவலாம் என்றிருக்கும். அத்தனை சிட்டுக்கள்.  ஆனால் திருந்தாத ஜென்மங்கள் - டீமில் இருந்தவர்கள்- அவர்களும் வெளியே வரமாட்டார்கள் என்னையும் விடமாட்டார்கள். எத்தனை காலம்தான் பொறுத்துக் கொள்வது? எப்படியாவது இந்த டீமை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று சமயம் பார்க்கத் தொடங்கியிருந்தது மனம். வேறு ப்ராஜக்ட் கொடுங்கள் என்று நச்சரிக்கத் துவங்கியிருந்தேன். இரண்டு மாதம் பொறுத்துக் கொள், மூன்று மாதம் பொறுத்துக் கொள் என்று இழுத்தடித்துக் கொண்டிருந்தார்கள். அழுந்தி கடித்துக் கொண்ட பற்களுக்கடியில் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. நாட்கள்தான் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தனவே தவிர முடி தாறுமாறாகக் கொட்டத் தொடங்கியிருந்தது. தலைக்கு மேல் அத்தனை அழுத்தம்.

அந்த டீமின் மேனேஜரே அப்படித்தான். கல்லூரி முடித்தவுடன் நேரடியாக அந்த நிறுவனத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தார். புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுத்த கதையாக நாயாக பேயாக வேலை செய்யத் துவங்கியவர் பன்னிரெண்டு வருடங்களாக அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தார். ஒரே நிறுவனம். பன்னிரெண்டு வருட உழைப்பு. மடமடவென மேலே வந்துவிட்டார். மேலாளரும் ஆக்கிவிட்டார்கள். மேலே வந்துவிட்ட தலைக்கனம் எதுவும் இருக்காது. நல்ல மனிதர்தான். அடுத்தவனுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டார். டீமில் யாராவது ஏமாற்றினால் கூட தானே இழுத்துப் போட்டு வேலை செய்யும் இனாவானாவாகவும் இருந்தார்.

இப்பேர்ப்பட்ட ஆளிடம் நான்கைந்து Freshers ஐ நிறுவனம் கொடுத்திருந்தது. தானும் கெட்டதுமில்லாமல் அவர்களையும் கெடுத்துவிட்டார். இருபத்தி நான்கு மணிநேரமும் ஆபிஸில் தவம் கிடப்பதே தாங்கள் செய்த முன்ஜென்ம புண்ணியம் என்ற நினைப்புக்கு வந்துவிட்டார்கள் அந்தப் பொடியன்கள். இந்த அக்கப்போரான படைக்குள்தான் நான் வந்து சிக்கிக் கொண்டேன். ஆப்பசைத்த குரங்கு தனது வாலைத்தான் சந்துக்குள் சிக்க வைத்தது- ஆனால் எனக்கு ஏதேதோ சிக்கிக் கிடந்தது. வெளியே வர முடியவில்லை.

ஆறு மாதத்திற்கு பிறகு ‘ஒன்று டீம் மாற்றுங்கள்; இல்லையென்றால் நான் கம்பெனியை மாற்றுகிறேன்’ என்று சொன்ன பிறகுதான் மெதுவாக தலையை அசைக்கத் துவங்கினார்கள். ஆனால் அதற்குள் ஒரு வழியாகியிருந்தேன். அலுவலகத்திலேயே தூங்கிக் கொள்வது, நாற்றம் பிடித்த ஷூக்காலுடனேயே இரவு முழுவதும் அலைவது, பல் விளக்காமல் அடுத்த நாளைத் தொடர்வது போன்ற சூட்சமங்களைக் கற்கத் துவங்கிய பருவம் அது. இரவு தங்க வேண்டிய அளவுக்கு வேலை இல்லாவிட்டாலும் கூட மற்றவர்களுக்காகத் தங்க வேண்டியிருந்தது. கூட இருப்பவன் பல் கூட துலக்காமல் அலுவலகத்தில் இருக்கும் போது நாம் மட்டும் வீட்டிற்கு போய் தினமும் குளித்துவிட்டு வருவது குற்றவுணர்ச்சியைத் தரத் தொடங்கிவிட்டது. அதுவும் இல்லாமல் அவர்களுக்கு மட்டும் ப்ரோமோஷனும், சம்பள உயர்வும் வந்துவிட்டால் என்ற வயிற்றெரிச்சல் வேறு. அலுவலகத்தில் பலியாகக் கிடந்து கொண்டிருந்தோம்.

இத்தனைக்கும் அப்பொழுது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. எனக்காக யாரும் காத்திருக்கமாட்டார்கள்தான் ஆனாலும் அலுவலகத்திலேயே தங்கிக் கொள்வது மன உளைச்சலை உருவாக்கத் துவங்கியிருந்தது. மாலை நேர வெயிலைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது என்பதை நினைத்த போது டார்ச்சராக இருந்தது.

ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்சினையாகவே தெரியவில்லையோ என்று தோன்றும். அவ்வளவு ஒன்றிக் கிடந்தார்கள். நடுச்சாமத்தில் சிப்ஸ் கொறிப்பார்கள், திடீரென்று நினைத்த நேரத்தில் பீட்ஸா ஆர்டர் செய்வார்கள். உட்கார்ந்த இடத்திலேயே தின்றுவிட்டு அப்படியே வேலையைத் தொடர்வார்கள். இடையிடையே சிகரெட் பிடிக்கப் போவார்கள். டீயைக் குடித்துக் கொண்டே சிகரெட்டை உறிஞ்சுவார்கள். தூக்கம் வரும் போது டேபிளில் தலை வைத்து தூங்கி எழுவார்கள். தலை கூட வாராத இந்த ஸ்டைல்தான் வாழ்க்கை முறை என்றாகியிருந்தது.

மேனேஜரின் மனைவியையும் குழந்தையையும் நினைத்தால் பாவமாக இருக்கும். அவர்கள் இவரை மறந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வார் என்று தோன்றும். ஆனால் அது அவருக்கு ஒன்றும் பெரிய பிரச்சினையாக இருக்காது. உண்மையில் அலுவலகம்தான் அவரது மனைவி. அதனால் இன்னும் வசதியாகப் போய்விடும். மொத்தமாக இங்கேயே கூடத் தங்கிக் கொள்வார்.

workholic என்பதை முழுமையாக உணரத் துவங்கியிருந்தேன். நல்ல சோறு கிடையாது, மனிதனின் வழக்கமான அன்றாட நடவடிக்கைகள் கிடையாது, வெளியுலகம் கிடையாது, வேறு எந்த நினைப்பும் கிடையாது, -  வேலை, வேலை, கம்ப்யூட்டர். அது மட்டும்தான். ஆனால் அதைத்தான் பெருமையாக நினைத்தார்கள். மேலிடத்திலிருந்து ஒற்றைவரி மின்னஞ்சல் வந்தால் கூட பெரிய கவுரவமாகக் கருதினார்கள். அலுவலகத்தில் வெல்வதுதான் வாழ்க்கையை வெல்வது என்பதான கருத்தாக்கம் அவர்களுடையது.

அந்த டீமில் மொத்தமாக ஏழெட்டு மாதங்கள்தான் இருந்தேன். அதுவும் பெரிய ஒட்டுதலில்லாமலேயே இருந்ததால் அந்த டீமில் நான் வேலை செய்த உணர்வே கிடையாது. அதனால்தான் அவர்களைப் பற்றி இதுவரைக்கும் யோசித்ததே இல்லை. இப்பொழுது நினைக்க வேண்டியதாகிவிட்டது. 

இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் தனசேகர் அழைத்திருந்தார். தமிழர். அவர் இன்னும் அதே நிறுவனத்தில்தான் இன்னும் இருக்கிறார். ஆனால் வேறு ப்ராஜக்டில் இருக்கிறார். பேச்சுவாக்கில் என் பழைய மேனேஜர் இறந்துவிட்டதாகச் சொன்னார். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் முழு விவரம் கேட்பதற்கு மனம் விரும்பியது. 

அவர்களுக்கு கடந்த வார இறுதியில் ஏதோ ப்ராஜக்ட் deployment இருந்திருக்கிறது. வழக்கம் போல தூக்கம் கெட்ட இரவுகள். நேரம் கெட்ட நேரத்தில் உணவுகள். deploymentக்கு பிறகாக வந்த சில Production issues, எஸ்கலேஷன். வெறித்தனமாக தூக்கம் கெட்டு மூன்று நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு போய் படுத்திருக்கிறார். படுத்தவர்தான். எழுந்திருக்கவேயில்லையாம். ஹார்ட் அட்டாக். வயது நாற்பதைத் தொடுவதற்கு முன்பாகவே வாழ்க்கை வாரிக் கொண்டுவிட்டது. அலுவலக நண்பர்கள் மலர்மாலையோடு போயிருந்த போது தலைமேட்டில் குழந்தையும் மனைவியும் அழுது கொண்டிருந்தார்களாம். 

தகவலைக் கேட்ட பிறகு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அந்த மனிதன் தன் வாழ்வில் அனுபவித்தது என்னவாக இருக்கும் என்று யோசித்தால் வெறும் பூச்சியம்தான் தெரிந்தது. ஆனால் அவருக்காக நம்மால் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை. மற்றபடி என்னளவில் ஒன்றைச் செய்யலாம் என நினைக்கிறேன். நாளையிலிருந்து சூரியன் அடங்குவதற்கு முன்பாக வீடு திரும்பி விட வேண்டும். அவ்வளவுதான்.

Sep 24, 2013

மைனர் கவுண்டன் கதை

ரத்தினசாமி கவுண்டரிடம் விதி விளையாடி இந்த புரட்டாசி சனிக்கிழமை வந்தால் ஒரு வருடம் முடிகிறது. விளையாடியது விதி இல்லை. உள்ளூர் சக்கிலி பையனும் ஒரு மூப்பனும்தான்.  அதுவரைக்கும்- அதாவது, சென்ற வருடம் வரைக்கும் ஊருக்குள் கவுண்டரின் மிரட்டல் என்ன?பன்னாட்டு என்ன? ம்ஹூம். அத்தனையும் முடிந்து விட்டது. ஆடிய ஆட்டத்தையெல்லாம்முப்பத்தி ஐந்து வயதில் மூட்டை கட்டியாகிவிட்டது. இப்பொழுது பாருங்கள்.சுருண்டு விழுந்து கிடக்கிறார். ஆள் மட்டுமா சுருண்டு கிடக்கிறார்? எல்லாமும் சுருண்டாகிவிட்டது.

அந்தக் காலத்திலிருந்தே சுற்றுவட்டாரத்தில் பெரிய பண்ணையம் என்றால் அது கவுண்டர் வீடுதான். மஞ்சக்காடு மட்டும் முப்பது ஏக்கர் தேறும். அது போக வயல் பதினாறு ஏக்கரும் மேட்டாங்காடு இருபது ஏக்கரும் சேர்த்தினால் போட்டிக்கு பக்கத்தில் ஒருத்தனும் வர முடியாது. அத்தனை சொத்து. மல்லு வேட்டியும், ரேக்ளா வண்டியும், வெற்றிலையுமாக சுற்றும் அளவிற்கு கவுண்டரின் தாத்தா காலத்திலேயே சம்பாதித்த சொத்துக்கள் இவை. சேர்த்த சொத்துபத்தில் தாத்தாவே பாதியை தொலைத்துவிட்டாராம். கூத்தியா வீட்டிலேயே குடியாகக் கிடந்து தொலைத்தார் என்பார்கள். உள்ளூரிலேயே ஒன்றுக்கு மூன்றாக வைத்திருந்தாராம். அது போக பக்கத்து பட்டணத்தில் ஒன்று. ரத்தினத்தின் பாட்டியை உட்கார வைத்து கேட்டால் ஒவ்வொரு கதையும் விடிய விடிய கேட்கலாம். அத்தனை கதை இருக்கிறது. அப்படியிருந்தும் நஞ்சை புஞ்சையைக் காப்பாற்றிவிட்டான் அந்தக் கிழவன். 

ஆனால் ரத்தினத்தின் அப்பா மோசமில்லை. சொத்து சேர்க்கவும் இல்லை, தொலைக்கவும் இல்லை. அந்த மனுஷன் ஒரு மதுக்கான். சீட்டாடவும் தெரியாது பொம்பளை பொறுக்கவும் தெரியாது. அதுவும் இல்லாமல் வீட்டில் பொண்டாட்டி பன்னாட்டுதான். வெளியே தொடுப்பு ஏதாவது இருக்கிறது என்று தெரிந்தால் கூட ‘அறுத்து’ வீசிவிடுவாள். என்னதான் புருஷனை கட்டுக்குள் வைத்திருந்தாலும் புள்ளை வளர்க்கத் தெரியாமல் ஏமாந்துவிட்டாள். 

தாத்தன் புத்தி அப்படியே ரத்தினசாமி கவுண்டருக்கு வந்துவிட்டது. ஊரில் ஒரு பெண்ணை விட்டுவைக்காமல் மேய்ந்து கொண்டிருப்பதாக அவரின் அம்மா திட்டுவதுண்டு. ஆனால் பதினேழு வயதிலேயே தினவெடுத்து திரிந்த கவுண்டனுக்கு இதெல்லாம் காதிலேயே விழுந்ததில்லை. ஆரம்பத்தில் பக்கத்து தோட்டத்து கவுண்டச்சி, மூப்பன் பெண்டாட்டி என்றுதான் திரிந்தார். ஆனால் அந்தக் கவுண்டனும், மூப்பனும் சாடைமாடையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். பேச ஆரம்பிப்பது என்றால்  ‘பள்ளத்தில் வைத்துக் கொன்று போட்டுவிடுவோம்’ என்கிற ரீதியில். அப்படியும் எச்சில் வட்டலில் வாய் வைக்கும் நாயாகத்தான் திரிந்தார். ஒரு பெளர்ணமியும் அதுவுமாக மூப்பன் கள்ளை குடித்துவிட்டு கத்தியைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டான். இதுவே வேறு காரணமாக இருந்தால் ரத்தினக் கவுண்டரின் அம்மா மூப்பனை உண்டு இல்லை என்றாக்கியிருப்பாள். ஆனால் மிகுந்த துக்கத்துடன் ‘எம் பெண்டாட்டியை உடச் சொல்லுங்க’ என்று கேட்கிறான். எப்படி சண்டைக்கு போவது? ‘காலையில் பேசிக்கலாம் போய் தூங்குடா’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி துரத்திவிட்டாள்.

மூப்பன் புலம்பிக் கொண்டே போன பிறகு ‘சாணாத்தி கூட படுக்கிறானே மானமே போகுது’ என்று ஒப்பாரி வைத்து ஊரையே கூட்டிவிட்டாள். மூப்பனை விட அம்மாதான் அதிகமாக மானத்தை வாங்கிவிட்டாள். அதன் பிறகு ஊருக்குள் சாடை பேசத் தொடங்கிவிட்டார்கள். முளைச்சு மூணு இலை விடாத பிஞ்சுகள் கூட ‘உங்களுக்கு என்னண்ணா கள்ளு சும்மாவே கிடைக்கும்’ என்று வாரத் தொடங்கிவிடார்கள். அதனால் கொஞ்ச நாளைக்கு மூப்பச்சியை பார்க்காமல் இருந்தார். கூளை வண்ணாத்தி, சரசா கொசத்தி என்று யாரிடம் போனாலும் பிரச்சினை வந்த போதுதான் இதெல்லாம் வேலைக்கு ஆவதில்லை என்று மாரியாத்தா கோவிலில் குத்த வைத்து யோசித்துவிட்டு கவுண்டச்சிகளும், இன்னபிற பலவற்றை சாதிகளும் வேலைக்கு ஆவாது என்று முடிவு செய்த பிறகுதான் சக்கிலிப் பெண்களைத் தேடத் துவங்கினார். 

உண்மையில் அந்தப் பெண்கள் பாவம். நாய் மாதிரி பாடுபட்டாலும் ஐந்து ரூபாயை தாண்டி கூலி வாங்க முடிந்ததில்லை. நோவு நொடியென்றாலும் கூட உள்ளூர் வைத்தியன் கொடுக்கும் மருந்துதான். பிழைத்து வந்தால் மூன்றாம் நாள் வேலைக்கு போக வேண்டும். இல்லையென்றால் சாக வேண்டியதுதான். அவர்களது புருஷன்களும் கடும் உழைப்பாளிகள். ஆனால் கிட்டத்தட்ட அடிமைகள் மாதிரிதான். நானூறு அல்லது ஐந்நூறு ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு கவுண்டர்கள் வருடக் கணக்கில் பண்ணையத்தில் வைத்துக் கொள்வார்கள். விடிந்தும் விடியாமலும் வந்து சாணம் வழித்துப் போட்டு, ஆடு மாடுகளை பிடித்துக்கட்டி, கட்டுத்தறியை சுத்தம் செய்து, தோட்டத்தில் களை எடுத்து, தென்னம்பிள்ளைகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, பண்டம் பாடிகளுக்கு தீவனம் அறுத்து வந்து போட்டு நிமிர்ந்து பார்த்தால் பொழுது சாய்ந்திருக்கும். மனசு வந்தால் பழைய சோற்றை கவுண்டச்சிகள் ஊற்றுவார்கள். இல்லையென்றால் அதுவும் இல்லை. இந்த அடிமை வாழ்க்கைதான் ரத்தினசாமி கவுண்டருக்கு வசதியாகப் போய்விட்டது. 

படிந்த பெண்களுக்கு இரண்டு வல்ல நெல் அல்லது கூலியில் ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுத்துவிடுவார். இந்த நெல்லுக்கும் ஒத்த ரூபாய்க்குமாகவெல்லாம் அந்தப் பெண்கள் வந்ததில்லை. பெரும்பாலும் மிரட்டலிலேயேதான் காரியம் சாதித்தார். ‘உஞ் சக்கிலியை வேலையைவிட்டுத் துரத்திவிடுவேன்’ ‘ஊரை விட்டு துரத்திவிடுவேன்’ இப்படி ஏதாச்சும் நொட்டை காரணமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த நொட்டைக் காரணங்களுக்கே பெரும்பாலும் அந்தப் பெண்கள் பயந்துவிடுவார்கள். சில பெண்களை கத்தியை காட்டிக் கூட கதறடித்திருக்கிறார். 

எத்தனை நாளைக்குத்தான் பூசணியை சோத்து வட்டலில் மறைப்பது? இந்த விவகாரமும் வெளியே தெரிய ஆரம்பித்த போது ஒரு கவுண்டச்சியை பிடித்து வந்து கட்டி வைத்து விட்டால் காளை ஊர் மேய போகாமல் கட்டுத்தறியிலேயே கிடக்கும் என்று வீட்டில் பெண் தேடத் துவங்கினார்கள். இந்த ஆளின் பூலவாக்கு அக்கம் பக்கமெல்லாம் பரவிக் கிடக்கிறது. எவன் பெண்ணை கூட்டி கொண்டு நிற்கிறான்? ஒன்றும் அமையவில்லை.

ஆனால் திருமணம் ஆகவில்லை என்றெல்லாம் கவுண்டனுக்கு எந்தக் கவலையுமில்லை. யாரோ ஒருத்தியை கிணற்று மேட்டுக்கும், மூங்கில் கொட்டாய்க்கும் தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறார். மூங்கில் கொட்டாய் பற்றி இந்த இடத்தில் சொல்லிவிட வேண்டும். தோட்டத்தில் பதினைந்து அடி உயரத்தில் மூங்கில் குச்சிகளால் மேடை அமைத்து படுகிடையாக சருகு போட்டு வைத்திருப்பார்கள். இந்த உயரத்தில் இருந்து பார்த்தால் தோட்டத்தில் நடமாட்டம் இருந்தால் தெரியும் என்று செய்து வைத்திருக்கிறார்கள். கவுண்டர் எப்பொழுதிருந்து ஊர்மேயத் துவங்கினாரோ அப்பொழுதிருந்தே இங்குதான் படுக்கை. ராத்திரி காவலுக்கும் வசதி, சேட்டைக்கும் அதுதான் வசதி.

இப்படியே பத்து பன்னிரெண்டு வருடமாகத் திரிந்த ரத்தினக்கவுண்டருக்கு வீரய்யன் பெண்டாட்டி மூலமாகத்தான் சனி வந்து சேர்ந்தது. அவள் கொஞ்சம் முரண்டுதான். ஆனால் எத்தனையோ சிட்டுக்களை பார்த்த கவுண்டர் இவளையும் மிரட்டித்தான் வழிக்குக் கொண்டு வந்தார். வந்தவள்  ‘காரியத்தை’ புருஷனிடம் சொல்லிவிட்டாள். அவனுக்கு கோபம் என்றால் கோபம் படு கோபம். ஆனால் என்ன செய்ய முடியும்? மேல் சாதிக்காரனாக போய்விட்டான். பணம் காசும் வைத்திருக்கிறான். ஊரை விட்டு போய்விடலாம் என்றால் இந்தக் காலம் மாதிரியா? அந்தக் காலத்தில் எந்த ஊருக்கு தப்பிப் போனாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். புலம்பியும் மருவியும் கிடந்தான்.

அந்த நாளிலும் அவளைக் கவுண்டன் இழுத்துக் கொண்டு போய்விட்டான். வீரய்யனுக்கு குழந்தை குட்டியும் இல்லை. எத்தனை நேரம்தான் பாயைச் சுரண்டிக் கொண்டு கிடப்பது? மூப்பனைப் பார்த்து பேசிவிடலாம் என்று கிளம்பிப் போனான். பனங்காடு சலசலத்துக் கிடந்தது. எங்கோ மழை சாரலடிக்கும் மண் வாசனை அந்த இரவுக்கு இதமாக இருந்தது. மூப்பன் ஒவ்வொரு மரமாக ஏறி இறங்கும் வரைக்கும் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான். முப்பத்தியிரண்டு பனை மரங்களில் பானை இறக்கிய போது நடுச்சாமத்தைத் தாண்டியிருந்தது.

மூப்பன் கள்ளுக் குடிக்கும் வரைக்கும் காத்திருந்தான். மூப்பன் குடித்துவிட்டு வீரய்யனுக்கும் ஊற்றினான். ஊற்றிய கள்ளை வெறுங்கையை வாயில் ஒட்டி வைத்து ஒரே முசுவாக குடித்து முடித்த போது போதை உச்சந் தலையில் ஏறத் துவங்கியிருந்தது. 

‘என்னடா வீரய்யா குசுவ புடிச்சுட்டே பொறவாலயே திரியுற?’ என்று மூப்பன்தான் ஆரம்பித்தான்.

எப்படித் துவங்குவது என்று தெரியாமல் தயக்கமாக ஆரம்பித்து ஆனால் வேகமாக மொத்தக் கதையும் விலாவாரியாக சொல்லி முடித்த போது வீரய்யன் கண்களில் துளி நீர் துளிர்த்துவிட்டது. மூப்பன் எக்காளமிட்டுச் சிரித்தான். அந்தப் பனங்காடே அதிர்ந்தது. 

‘அது என்ற காதுக்கு எப்பவோ வந்திருச்சு...அந்த வக்காரோளிய என்னதான் பண்ணுறது சொல்லு? எம் பொண்டாட்டியைமில்ல கூட்டிட்டுத் திரிஞ்சான். கொன்னு போடலாமா?’ என்று மூப்பன் கேட்ட போது வீரய்யனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.

‘அந்தக் கவுண்டச்சி ஒத்தப் புள்ளைய பெத்து வெச்சிருக்குதுங்க சாமீ...நமக்கு எதுக்கு பொல்லாப்பு..வேற ஏதாச்சும் சொல்லுங்க’ என்று வீரய்யன் சொன்னதிலிருந்து அடுத்த அரை மணி நேரத்துக்கு அதுவும் இதுவுமாக யோசித்தார்கள். கடைசியில் முடிவானதுதான் கவுண்டரின் மொத்த ஆட்டத்துக்கும் ஆப்படித்தது.

அது புரட்டாசி அமாவாசை. அதுக்கு முன்பாகவிருந்தே பத்து நாட்களாக மூப்பனும், வீரய்யனும் கவுண்டனிடன் நைச்சியமாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள். ‘காசுக்கு வேண்டித்தான் காலைக் கட்டுறானுக’ என்றுதான் கவுண்டர் நினைத்திருந்தார். ஆனால் அவர்களின் திட்டம் வேறாக இருந்தது. அமாவாசையன்று புது மரக் கள்ளு இறக்குவதாகச் சொல்லி மூப்பன் அந்த ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் கவுண்டனை பனங்காட்டுக்கு அழைத்துப் போய்விட்டான். 

போனதிலிருந்தே ஊற்றிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டான். ஒரு மணி நேரத்துக்கு பிறகாக கவுண்டன் உளற ஆரம்பித்திருந்தான். மூப்பன் மனைவியைப் பற்றி அவனிடமே பேசிய போது கல்லைத் தாங்கி தலையில் போட்டுவிடலாமா என்று கூட யோசித்தான். ஆனால் வம்பாகிவிடும் என்று மேலும் மேலும் ஊற்றிக் கொண்டிருந்தான். கவுண்டனின் வயிறு புடைத்துக் கொண்டிருந்தது. ஒரு ஊசி இருந்து குத்தினால் நீர் நிரப்பிய பலூனிலிருந்து பீய்ச்சுவது போல வெளியேறக் கூடும்.

தூரத்திலிருந்து வந்த ஆந்தை ஒன்று இவர்களின் அருகாக வந்து போனது. இப்பொழுதும் மூப்பன் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தான். தள்ளாடிய கவுண்டன் பாறையிலேயே சாய்ந்துவிட்டான். அவன் சாயவும் வீரய்யன் வரவும் சரியாக இருந்தது. அவர்களின் கணக்குப்படி மூங்கில் கொட்டாயில் தங்களின் திட்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை வீரய்யன் செய்து முடித்துவிட்டான். வேறொன்றுமில்லை. கொட்டாயின் மேற்புறமாக நான்கைந்து மூங்கிலை உருவிவிட்டு அதன் மீது சருகை போட்டுவிட வேண்டியதுதான். கொஞ்சம் கால் பிசகினாலும் மேலே இருந்து கவுண்டன் கீழே விழுவான். இதுதான் திட்டம். என்ன இது மொக்கைத் திட்டமாக இருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள்? பொறுங்கள்.

வீரய்யனும் மூப்பனும் கைத்தாங்கலாக மூங்கில் கொட்டாய் வரைக்கும் கவுண்டனை அழைத்துச் சென்றுவிட்டார்கள். அதற்கு மேல் ஏற்றுவதுதான் பெரிய சிரமமாக இருந்தது. ஆனால் திட்டத்தோடு ஒப்பிடும் போது இது பெரிய சிரமம் இல்லை. திக்கித் திணறி ஏற்றிவிட்டார்கள். மேலே ஏற்றி மூங்கில் உருவாத இடமாக கவுண்டனை படுக்க வைத்துவிட்டார்கள். இனிமேல்தான் க்ளைமேக்ஸ். ஏற்கனவே கொண்டு வந்திருந்த தாம்புக்கயிறை கவுண்டனிம் கோவணத்தை விலக்கிவிட்டு ‘அதில்’ உருவாஞ்சுருக்கு போட்டு கயிற்றின் இன்னொரு முனையை மூங்கில் கொட்டாயில் மூலையில் கட்டி வைத்துவிட்டார்கள். அவ்வளவுதான். வேலை முடிந்தது.

இப்பொழுது மூப்பனும், வீரய்யனும் சற்று தள்ளி யார் கண்ணிலும் படாமல் படுத்துக் கொண்டார்கள். கவுண்டன் புரண்டு உருளுவதை பார்க்க வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் கவுண்டன் அசையாமல் செத்த பிணம் போலக் கிடந்தான். தூக்கம் கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது. இவர்களும் தூங்கிப் போனார்கள். இரண்டு மூன்று மணி நேரம் ஆகியிருக்கக் கூடும். பயங்கரமான அலறல் சத்தம். வீரய்யனும் மூப்பனும் விழித்துக் கொண்டார்கள். கவுண்டன் மூங்கில் கொட்டாயில் தொங்கிக் கொண்டிருக்கிறான். அசைந்திருப்பான் போலிருக்கிறது மூங்கில் உருவிய இடத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறான். அவனது மொத்த எடையையும் குஞ்சாமணி தாங்கிப் பிடித்திருக்கிறது. உடலைவிட்டு பிய்ந்துவிடும் போல அலறல் சத்தம். இறுகிய கயிறு வேறு வலியைக் கூட்டுகிறது. விழுந்த வேகத்தில் நரம்பெல்லாம் அறுந்திருக்கக் கூடும். ஆனால் கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக துண்டாகவில்லை. ரத்தம் கசியத் துவங்கியிருந்தது. சில கணங்களில் சுதாரித்துக் கொண்ட கவுண்டன் கயிறை பிடித்து உடல் எடையை கைகளில் தாங்கிக் கொண்டான். ஆனாலும் உருவாஞ்சுருக்கை கழட்ட முடியவில்லை. எத்தனை நேரம்தான் தொங்குவது? கையை சிறிது இளக்கினாலும் மொத்த குஞ்சாமணி கதறத் துவங்கியது. 

வீரய்யனும் மூப்பனும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிரிப்பில் பெரும் கொண்டாட்டம் இருந்தது. வீரய்யன் சிரித்த சிரிப்பில் நிற்க மாட்டாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. தாறுமாறாக கெட்டவார்த்தையில் கவுண்டனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவனை அவிழ்த்துவிடவே கூடாது என்று நினைத்துக் கொண்டார்கள்.

விடியும்போது தோட்டத்து வேலைக்கு வந்த ஆட்கள்தான் ஓடிவந்து முடிச்சை அவிழ்த்துவிட்டார்கள். அந்தப் பெண்களுக்கு சிரிப்பும் வெட்கமும் தாங்க முடியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு சிரிப்பை அடக்கினார்கள். அவர்கள் கவுண்டனை கீழே இறக்கிய போது கிட்டத்தட்ட மயங்கியிருந்தான். தூக்கிக் கொண்டு நாட்டு வைத்தியரிடம் போனார்கள். நாடி பிடித்து பார்த்தவர் ‘உசுருக்கு ஒண்ணுமில்ல’ என்றுவிட்டார். ஆனால் மற்றது எல்லாம் முடிந்து போனது போனதுதான். வீங்கிக்கிடந்ததை தூக்கிப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கிவிட்டார்.  ‘நாடி நரம்பெல்லாம் கத்திரிச்சு போய்டுச்சு போங்க...உசுர் பொழச்சதே பெருசு’ என்றார்.

‘இதுக்கு பொழைக்காமலே இருந்திருக்கலாம்’ என்றுதான் கவுண்டன் நினைத்திருக்கக் கூடும். ஆனால் எதுவும் பேசாமல் கிடந்தான். அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டுப் போட்டு பச்சிலை சாறு ஊற்றினார்கள். சுருண்டது சுருண்டதுதான். ஒரு வருடம் ஆகிவிட்டது. மைனர் ஷோக்கும் போயாச்சு, மல்லிப்பூவும் காஞ்சாச்சு!

Sep 23, 2013

அவ்வளவு அவசரம் என்ன?

பெங்களூர் ஜே.பி.நகரில் ஒரு வேலை இருந்தது. ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே வீட்டிற்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தேன். நல்ல ஏரியா அது. பணக்கார ஏரியாவும் கூட. ஒரு சதுர அடி எட்டாயிரம் ரூபாய்க்கும் மேலாக விற்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு கோடி ரூபாய் இருந்தால் மூன்றரை செண்ட் நிலத்தை நினைத்துப் பார்க்கலாம். அதுவும் கூட நினைத்துத்தான் பார்க்க முடியும். வாங்கிவிடலாம் என்றெல்லாம் சொல்ல முடியாது. 

ஆறு மணிக்கு குளித்தாகிவிட்டது. விடுமுறை தினமும் அதுவுமாக விடியற்காலையில் அடுத்தவர்கள் வீட்டுக்கதவைத் தட்டுவது நியாயமில்லைதான். ஆனால் வேறு வழியில்லை. ஆறு மணிக்கு கிளம்பினால் இருபது நிமிடங்களில் போய்விடலாம். பெங்களூரின் அதிகாலைக் குளிரில் அரை மணி நேரம் பைக் ஓட்டினால் போதும் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கான எனெர்ஜியைக் கொடுக்கும். அவ்வளவு அட்டகாசமான க்ளைமேட். தயக்கத்துடன் ஆறரை மணிக்கு கதவைத் தட்டினால் அவர் குளித்து பூஜையெல்லாம் முடித்துவிட்டு கனஜோராக இருந்தார். நாம்தான் சுற்று வட்டாரத்திலேயே சுறுசுறுப்பு என்று நினைத்துக் கொண்டால் நம்மைவிட ஒரு சுறுசுறுப்பாளி எப்பொழுதும் நமக்கு முன்னால் ஓடிக் கொண்டே இருக்கிறான். 

வந்த சோலி அரை மணி நேரம்தான். டாக்குமெண்ட்டை வாங்கிக் கொண்டு கிளம்பும் போது ‘நேத்து ஒரு பெரிய காரியம் நடந்துச்சே அது அந்த அபார்ட்மெண்ட்தான்’என்றார். பெரிய காரியம் என்பது மரணத்தைக் குறிப்பது. அந்தப் பெரிய காரியம் பற்றிய அது பற்றிய எந்த விவரமும் எனக்குத் தெரியவில்லை. அரசல்புரலசாகச் சொன்னார். காலையிலேயே எதற்கு விலாவாரியாக பேச வேண்டும் என்று நினைத்திருக்கக் கூடும். எதற்கும் எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று அந்த அபார்ட்மெண்டை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தால் பெங்களூர் பதிப்பு நாளிதழ்களில் அரைப்பக்கமாவது அந்தச் செய்திக்காக ஒதுக்கியிருந்தார்கள். செய்தியைப் படித்த பிறகு மறுபடியும் அந்த அபார்ட்மெண்ட்டை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. காலை உணவை முடித்துவிட்டு மீண்டும் கிளம்பிய போது ஏறு வெயில் முகத்தில் அடிக்க ஆரம்பித்திருந்தது.

ரூபா ஒரு ஐ.டி நிறுவனத்தில் ஹெச்.ஆராக பணிபுரிகிறார். கிட்டத்தட்ட மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்குவார் போலிருக்கிறது. கணவர் மதுசூதன் சீமன்ஸ் நிறுவனத்தில் இருக்கிறார். அவருக்கு மனைவியைவிட சம்பளம் குறைவென்றாலும் பெரிய சம்பளம்தான். மாதம் ஒரு லட்சம். அவர்களுக்கு ஆறு வயதில் குழந்தை இருக்கிறது. பெண் குழந்தை. இந்த வருடத் திருமண நாளைக் கொண்டாடுவதற்காக இப்பொழுது குடியிருக்கும் ஃபளாட்டை பிப்ரவரியில் வாங்கியிருக்கிறார்கள். ஷோபா பில்டர்ஸின் அபார்ட்மெண்ட் அது. ப்ரெஸ்டீஜ், ஷோபா போன்ற பில்டர்களிடம் எல்லோராலும் ஃப்ளாட் வாங்கிவிட முடியாது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவில்லாமல் விலை இருக்கும் என நினைக்கிறேன்.

ரூபாவுக்கு, மதுசூதனுக்கும் நல்ல வேலை, நல்ல சம்பளம், ஒரே குழந்தை, சொந்த வீடு. வேறு என்ன வேண்டும்?

ஆனால் ஏதோ ஒரு குறை இருந்திருக்கிறது. முந்தாநாள் கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ லடாய். பிரச்சினை விஸ்வரூபமெடுக்க மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு தானும் வீட்டு மாடியிலிருந்து குதித்து இறந்துவிட்டார் மதுசூதன். வெட்டு என்றால் கோபத்தில் வீசும் ஒரே வெட்டு இல்லை. ரூபாவின் உடலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியிருக்கிறார். நெற்றி, மார்பு, பிறப்புறுப்பு என எந்த இடமும் பாக்கியில்லை. தன்னோடு ஐந்தாறு ஆண்டுகள் வாழ்ந்த ஒருத்தியை இத்தனை கொடூரமாகக் கொல்ல வேண்டுமானால் எத்தனை குரூரமும், வன்மமும் அந்த மனிதனுக்குள் இருந்திருக்க வேண்டும்? 

அவளைக் கொன்றதோடு நில்லாமல் தூக்கில் தொங்க முயன்றிருக்கிறான். ஏதோ காரணத்தினால் அதில் வெற்றியடைய முடியவில்லை. பிறகு தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு கொளுத்திக் கொள்ள பார்த்திருக்கிறான். தீப்பெட்டி கிடைக்கவில்லை போலிருக்கிறது. அதே வேகத்தில் பதின்மூன்றாவது மாடியிலிருந்து குதித்துவிட்டான். கதை முடிந்துவிட்டது.

பெங்களூரில் ஐ.டிக்காரர்கள் தற்கொலை செய்து கொள்வது, கொலை செய்யப்படுவது போன்ற செய்திகள் ஒன்றும் புதிதில்லைதான். இந்த ஊருக்கு வந்ததிலிருந்தே மாதம் ஒரு ‘பெரிய காரிய’ச் செய்தியாவது கேள்விப்பட வேண்டியிருக்கிறது. 

இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஐ.டி நிறுவனத்தின் மாடியிலிருந்து ஒருவன் எட்டிக்குதித்துவிட்டான். குதித்தவன் வடநாட்டுப் பையன். என்ன பிரச்சினை என்றெல்லாம் தெரியவில்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவரை சாக்காக வைத்துக் கொண்டு அந்த நிறுவனத்திற்கு போன போது ஒருவன் இறந்து போனதற்காக எந்தச் சுவடும் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பையன் விழுந்த இடத்தின் மீதாக ஒரு மேட்டை விரித்து வைத்திருந்தார்கள். அருகில் ஒரு க்ளாஸில் தண்ணீர் இருந்தது. அவனுக்கு கொடுப்பதற்காக எடுத்துவரப்பட்ட கடைசித் தண்ணீராக இருக்கக் கூடும். 

செக்யூரிட்டிகளில் ஒருவர் தமிழர் இருந்தார். பேச்சுவாக்கில் விசாரித்த போது ‘தொப்’ என்று சத்தம் கேட்டது. ஓடிப்பார்த்த போது கண்கள் திறந்திருந்தன, காது வழியாக ரத்தம் வந்தது. தண்ணீர் கொடுப்பதற்குள் உயிர் போய்விட்டது என்றார். அவன் குதித்த இடத்தில் நான்கடி உயரத்தில் ஒரு கைபிடிச் சுவர் இருந்தது. அந்தச் சுவரின் மீது அமர்வதற்கும் வாய்ப்பில்லை. அவனாக குதிக்க வேண்டும் என்று முடிவு செய்தால் மட்டுமே அந்த இடத்தில் கீழே விழுவதற்கு சாத்தியம். ஆனால் அடுத்த நாள் பெங்களூர் பதிப்பு தினகரனில் ‘கால் தவறி விழுந்து இறந்து போனதாக’ எழுதியிருந்தார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாய்ந்து கேஸை முடித்துவிட்டது. 

இதே போல இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்பாக தெலுங்குப் பெண் ஒருத்தி இதே போல ஒரு ஐ.டி நிறுவனத்தின் பார்க்கிங் கட்டடத்திலிருந்து எட்டிக் குதித்துவிட்டாள். அவளுக்குத் திருமணமாகி குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாட்கள் அமெரிக்காவில் தனியாக இருந்திருக்கிறாள். அந்தச் சமயத்தில் மும்பையில் இருந்த இன்னொரு தெலுங்குப்பையனுடன் காதல் உருவாகியிருக்கிறது. அவன் அவளுக்காக மும்பையிலிருந்து அமெரிக்கா போய்விட்டு வந்தானாம். கணவனுக்கு இந்த விவகாரம் தெரியாது. பூனைக்குட்டியை எத்தனை நாளைக்குத்தான் மூடி வைக்க முடியும்? அவள் அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் பிரச்சினை ஆரம்பமாகியிருக்கிறது. குதித்துவிட்டாள். இன்னொரு கதை முடிந்துவிட்டது.

உயரத்திலிருந்து குதிப்பதை நினைத்துப் பார்த்தால் திகிலாக இருக்கிறது. இவர்கள் எப்படி சர்வசாதாரணமாக குதிக்கிறார்கள்? எப்பொழுதுமே உயரம் நமக்கு பயமூட்டக் கூடியது. எந்தக் வயதிலும் உயரம் பற்றிய நமது பயம் அவ்வளவு சீக்கிரம் விலகுவதில்லை. வெறும் இருபது அடி உயரத்திலிருந்து பிடிமானம் இல்லாமல் கீழே பார்க்கும் போது கால் நடுங்கத் துவங்குகிறது.

ஆனால் ஐம்பது அடி உயரத்தில் நின்று கொண்டு காலை உந்துவதற்கு இவர்களை எது தூண்டுகிறது? குழந்தைப் பருவத்திலிருந்து நம்மோடு ஒட்டிக் கிடக்கும் உயரம் பற்றிய அத்தனை பயங்களையும் மீறிக் குதிக்க வேண்டுமென்றால் எவ்வளவு பெரிய சிக்கல் ஒன்று மனதுக்குள் சம்மணம் போட்டு அமர்ந்திருக்க வேண்டும். மேனேஜர் கொடுக்கும் அழுத்தமோ, அடுத்தவளுடனான காதலோ, கணவனுடனான பிரச்சினையோ என ஏதோ ஒன்று காலை உந்த வைத்துவிடுகிறது. 

இந்தப் பெருநகரம் நிறைந்த பணத்தை கொடுக்கிறது. விதவிதமான லைஃப் ஸ்டைலைக் காட்டுகிறது. ஆடையும், காரும், பங்களாவும், காதலர்களும்- குறிப்பாக கள்ளக்காதலர்களும் கிடைப்பதில் கூட பெரிய சிரமம் இல்லை. வசதிகள் நிறைந்த மருத்துவமனைகள், லட்சக்கணக்கில் பணம் வாங்கினாலும் தரமான கல்வியைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் என வசதிகளுக்கு எந்தக் குறைவும் இல்லை. என்னதான் வசதிகள் கிடைத்தாலும் வாழ்க்கையின் பிரச்சினைகள்தான் பூதாகரமாகிக் கொண்டிருக்கின்றன. 

அலுவலகத்தில் ஆக்டோபஸ் போல விரியும் சிக்கல்கள் ஒருவனை தனது மொத்தக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்கிறது. முதலில் குடும்ப உறவுகளை பதம் பார்க்கிறது. மனதுக்குள் ஆயிரம் Complexity களை உருவாக்குகிறது. இந்த ஆக்டோபஸ் பிரச்சினைகளிலிருந்து விடுபட மனம் ஏதாவதொரு பற்றுக் கோலைத் தேடத் துவங்குகிறது. இந்தப் பற்றுக் கோல் ஆணோ, பெண்ணே- ஏதோ ஒரு வடிவில் நெருங்கி வந்து கூடிய சீக்கிரம் பாசக்கயிறாக உருமாறுகிறது.

பணம் இருக்கிறது, வசதிகள் இருக்கின்றன ஆனால் இவற்றை அடைய உதவிய இந்த வாழ்க்கை முறை உருவாக்கும் அழுத்தங்களுக்கும், அதன் வழியாக உருவாகும் பிரச்சினைகளுக்கும் பதில்களைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு இந்தத் தலைமுறையில் பக்குவம் இல்லை போலிருக்கிறது. வெறும் பணமும், பகட்டான வாழ்க்கை முறை மட்டுமே போதுமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அம்மாவும் அப்பாவும் ஓடாய்த் தேய்ந்தும் வாழ்க்கையின் இறுதி வரை பார்க்க முடியாத வசதிகளை முப்பத்தைந்து வயதில் அடைந்துவிடுகிறோம். அதன் பிறகு? 

இந்த பிரச்சினைகளும் அழுத்தங்களும் மற்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறதுதான் ஆனால் இந்தத் துறையில் இதன் வீரியம் அதிகம். எட்டுக்கால் பாய்ச்சலில் நகர்கிறது என்பதுதான் உண்மை. முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் முடித்துக் கொள்ள வாழ்க்கை ஒன்றும் சுய இன்பம் இல்லை. தொண்ணூறு வயது தாண்டி வாழ்ந்தாலும் கூட அனுபவிப்பதற்கு என்று ஏதாவது மிச்சம் மீதி இருந்து கொண்டேதான் இருக்கும். விட்டுப்பிடித்துத்தான் பார்க்க வேண்டும்.

Sep 22, 2013

பிராமணனின் பிணம்

அக்ரஹாரத்தில் ஒரு பிராமணனின் பிணம் கிடக்கிறது. அது நாரணப்பனின் பிணம். அவனுக்கு குடும்பம் என்றெல்லாம் எதுவும் இல்லை. அவன் பிராமணனாக பிறந்திருந்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்காதவன். மாமிசம் தின்றவன். குடிப் பழக்கம் உண்டு. கூத்தியா வைத்துக் கொண்டு கும்மாளமும் போட்டவன். 

இப்பொழுது அக்ரஹாரத்து பிராமணர்களுக்கு அவனை அடக்கம் செய்வதில் ஒரு குழப்பம் வந்துவிடுகிறது. அவன் உயிரோடு இருந்த போதே அவனை பிராமணீயத்திலிருந்து பகிஷ்கரித்திருந்தால் இத்தனை பிரச்சினை வந்திருக்காது. பிராமணனாக இல்லாதவனை யார் வேண்டுமானாலும் அடக்கம் செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது அவன் பிராமணன். பிராமணர்கள்தான் அடக்கம் செய்ய வேண்டும். பிராமணீயத்தை அவன் கைவிட்டிருந்தாலும் பிராமணீயம் அவனைக் கைவிடவில்லை.

நாரணப்பாவை பிராமணன் என்று கருதி அடக்கம் செய்தால் தோஷம் வந்து சேர்ந்துவிடக் கூடும். அதே சமயம் சவத்தை அடக்கம் செய்யாமல் அக்ரஹாரத்தில் இருப்பவர்கள் அன்னம் தண்ணீர் தொட முடியாது. அக்ரஹாரத்து பிராணேஸாச்சார்யார்தான் இது பற்றிய முடிவெடுக்க வேண்டும் என்று அவர் தலையில் பொறுப்பை ஏற்றிவிட்டார்கள். ஆச்சார்யார் தனக்குத் தெரிந்த சாஸ்திரங்களை எல்லாம் தேடிக் கொண்டிருக்கிறார். ஒரு முடிவும் கிடைக்கவில்லை. பிணம் அழுகிக் கொண்டிருக்கிறது. அக்ரஹாரத்து பிராமணர்கள் பசியால் கண் சொருகிக் கிடக்கிறார்கள்.

நாரணப்பா உயிரோடு இருந்த போது பிராணேஸரார் அவ்வளவு எளிதாக அவனை பகிஷ்கரிப்புசெய்து விட முடியவில்லை. அந்த அக்ரஹாரத்திலே மிகப் படித்த, தேஜஸான பிராணேஸாசார்யார்தான் அந்தக் காரியத்தை செய்ய வேண்டும். ஆனால் அவரையே நாரணப்பா மிரட்டினான். ‘அப்படி எதாச்சும் எக்குத்தப்பா செஞ்சீங்கன்னா முசல்மானாக மாறி இந்த அக்ரஹாரத்திலேயே தங்கியிருப்பேன். நீங்க எல்லாம் இந்த அக்ரஹாரத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்’ என்று ப்ளாக்மெயில் செய்தான். ஒருவேளை அவன் சொன்னதுபடியே இஸ்லாமியனாக மாறிவிட்டால் அவனை அக்ரஹாரத்தை விட்டு வெளியேற்றுவதற்கு சட்டத்தில் எந்த வழியுமில்லை.  ஆச்சார்யார் ‘சரி பகிஷ்கரிப்பு இல்லாமலேயே அவனைத் திருத்திவிடலாம்’ என்று பின் வாங்கிவிட்டார். ஆனால் அவனை திருத்த முடியவில்லை. போய்ச் சேர்ந்துவிட்டான்.

இப்பொழுது பிரச்சினை வந்து சேர்ந்துவிட்டது. பெருங்குழப்பம். பிராணேஸரால் முடிவெடுக்க முடியவில்லை. சாஸ்திரமும் கை கொடுக்கவில்லை.

நாரணப்பனின் தொடுப்பான சந்திரி தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழட்டிக் கொடுத்து அடக்கம் செய்யும் பிராமணனுக்கு தனது நகைகளை கொடுத்துவிடுவதாகச் சொல்கிறாள்.இந்த நகைகள் இரண்டு பிராமணர்களின் கண்களில் குறுகுறுக்கிறது. ஆனாலும் ஆச்சார்யார் முடிவு சொல்ல இயலாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

இந்தச் சமயத்தில் அக்ரஹாரத்தில் எலிகள் செத்துச் செத்துச் விழுகின்றன. நாரணப்பனும் வயிற்றில் கட்டி வந்துதான் இறந்திருக்கிறான். ஆனால் பிராமணர்களுக்கு அது ப்ளேக் நோய் என்று தெரியவில்லை. இன்னமும் பிணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பசியோடு மருவிக் கிடக்கிறார்கள். ஆச்சார்யாருக்கும் ஒரு வழியும் கிடைக்கவில்லை. கடைசி முயற்சியாக ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருக்கும் மாருதியின் கோவிலுக்குச் சென்று மாருதியிடமே கேட்டுவிடலாம் என்று ஆச்சார்யார் முடிவு செய்கிறார். மாருதிக்கு அலங்காரம் செய்து மந்திர உச்சாடனம் செய்கிறார். மாருதியின் வலப்பக்கத்திலிருந்து பிரசாதம் விழுந்தால் அடக்கம் செய்துவிடலாம் என்றும் இடப்பக்கத்திலிருந்து விழுந்தால் அடக்கம் செய்வதில்லை என்றும் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். ஆனால் மாருதியும் பதில் சொல்லவில்லை. மனம் தளர்ந்து வீடு திரும்புகிறார்.

வனத்துக்குள் சந்திரி அமர்ந்திருந்து ஆச்சார்யாரின் காலைக் கட்டிக் கொள்கிறாள். அவளது மார்புகள் அவரது கால்களில் படுகிறது. ஆச்சார்யரோ பல ஆண்டுகளாகவே நோயாளி மனைவியுடன் வாழ்ந்து பெண் இன்பத்தையே அறிந்திராதவர். இப்பொழுது தடுமாறுகிறார். அவளது சுடுமூச்சு ஆச்சார்யாரின் தொடைகளில் படுகிறது. ஆச்சார்யருக்கு முன்பாக எழுந்து நிற்கும் சந்திரி அவரின் கைகளை எடுத்து தனது குளிர்ந்த முலைகளின் மீது வைக்கிறாள். இப்பொழுது அவருக்கு கண்கள் இருண்டு போகின்றன. தன்னிலை மறக்கிறார். அந்த வனத்தில் புல்வெளியிலேயே அவளோடு கலவி செய்கிறார்.

ஒரு வைதீக பிராமணன் தடுமாறி தனது அத்தனை கட்டுப்பாடுகளையும் காமத்தின் கீழாக போட்டு மிதிக்கும் இந்த இடத்தில் யு.ஆர்.அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா நாவலின் ஒரு பகுதி முடிகிறது.

அடுத்த பகுதியில் பிராணேஸர் அக்ரஹாரத்துக்குத் திரும்பி நாரணப்பாவின் பிணம் குறித்து தன்னால் முடிவெடுக்க முடியாததை பிராமணர்களிடம் தெரிவித்துவிடுகிறார். மாருதியும் பதில் சொல்லவில்லை என்கிறார்.

வேறுவழி இல்லாத பிராமணர்கள் தங்களின் குருமடத்திலேயே கேட்டு முடிவு செய்துவிடலாம் என்று கிளம்புகிறார்கள். அதற்கு முன்பாக தங்களின் மனைவி, பிள்ளைகளை தத்தமது மாமியார் வீடுகளில் விட்டுவிடுகிறார்கள். பிராணேஸர் தனது நோயாளி மனைவியை விட்டு வரமுடியாது என்று அக்ரஹாரத்திலேயே இருந்துவிடுகிறார். அவரையும் அவரது மனைவியையும் தவிர்த்து அக்ரஹாரத்தில் வேறு யாருமே இல்லை. போகிற வழியில் ஒவ்வொரு பிரமணனாக நோய்வாய்ப்படுகிறான். இறந்தும் போகிறார்கள். பிராமணர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அத்தனையும் ப்ளேக்கின் மரண விளையாட்டு.

இந்த நிலையில் சந்திரி ஒரு இசுலாமியனை அழைத்து வந்து நாரணப்பனின் பிணத்தை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்துவிட்டு அந்த ஊரைவிட்டு கிளம்பிவிடுகிறாள். ஆனால் பிராமணர்கள் யாருக்கும் இந்த விஷயம் தெரிவதில்லை. அவர்கள் பிணத்துக்கான ‘தீர்வை’ தேடிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது ஆச்சார்யாரின் மனைவியும் இறந்து போகிறாள். அவளுக்கு ப்ளேக்தான். அவளை அடக்கம் செய்துவிட்டு கால் போன போக்கில் நடக்கத் துவங்குகிறார் பிராணேஸாச்சார்யார்.

அவர் போகுமிடத்தில் புட்டா என்ற ஓதுவார் ஒட்டிக் கொள்கிறார். ஆச்சார்யார் நடக்கும் பாதையில் எல்லாம் தானும் நடக்கிறார். பொய் சொல்வது, தீட்டுடன் கோவிலுக்குள் நுழைவது, பத்மாவதி என்ற பெண்ணைப் பார்த்து காமம் கொள்வது என வைதீகங்களை மீறத் துவங்குகிறார் பிராணேஸர். தனது வாழ்வில் நடைபெறும் இந்த மாற்றங்களைப் பற்றிய அவரின் உள்மன தர்க்க விவாதம் நாவலின் மறுபாதி முழுவதும் நீள்கிறது.

                                                       ******

கன்னடத்தில் வெளியான இந்த நாவலை தமிழில் டி.எஸ்.சதாசிவம் மொழி பெயர்த்திருக்கிறார். என்னளவில் இது மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு. அடையாளம் பதிப்பகத்தின் வெளியீடு இந்த நாவல்.

அக்ரஹாரத்தின் எளிய பிராமணர்கள், வறட்டுத்தனமான அவர்களது வைதீகம், பசி அவர்களோடு நிகழ்த்தும் விளையாட்டு, அவர்களை துணுக்குறச் செய்யும் சந்திரியின் நகைகள், நாரணப்பாவின் நண்பர்கள், அவனது பிணம், அவன் உயிரோடு இருக்கும் போது மீறிய செயல்கள், ஊருக்குள் பரவும் ஃப்ளேக் நோய், பெள்ளி என்ற புலைச்சி, அவளது மண் நிற முலைகள், அவளோடு உறவு கொண்ட இன்னொரு பிராமணன், சிறுவயதிலேயே காசியில் விலைமாதுவுக்காக தனது சாஸ்திர சம்பிரதாயங்களை விட்டுக் கொடுத்த பிராணேஸரின் நண்பன் என்று நாவலின் கதாபாத்திரங்களும் காட்சிகளும் இந்த நூற்று தொண்ணூறு பக்கங்களில் கச்சிதமாக அடங்கியிருக்கிறது.

இந்த நாவல் வாசிப்பதற்கு எந்தச் சிக்கலும் இல்லாதது. முழு நாவலுமே எளிமையாக நேர்கோட்டில் நகர்கிறது. நாவல் முழுவதும் தொடரும் கவித்துவங்களும், தர்க்கங்களும், மரபை மீறுதலும் இயல்பாக செவ்வியல் தன்மையாக மாற்றிவிடுகிறது எனத் தோன்றுகிறது. 

இந்த நாவலை வாசிக்கும் போது ஏதோ ஒருவிதத்தில் நம்மோடு ஒன்றிவிடுகிறது. ஒவ்வொரு சில பக்கங்களை புரட்டும் போதும் ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு நம்மோடு பயணிக்கிறது அல்லது நம்மை அதோடு பயணிக்கச் செய்கிறது. அதுதானே classic தன்மை? 

மரபுகளை அதன் போக்கிலேயே விட்டு பின்னால் நின்று ஓங்கி அறையும் வித்தை இந்த நாவல் முழுவதும் விரவியிருக்கிறது. இந்த நாவலை எழுபதுகளில் படமாக எடுத்திருக்கிறார்கள். கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை முதலில் சென்சார் போர்ட் அனுமதிக்கவில்லையாம். பல சிரமங்களுக்கு பிறகான இந்தப் படம் பிறகு தேசிய விருது வாங்கியிருக்கிறது.

வாய்ப்பிருந்தால் வாசித்துவிடுங்கள். இந்த கலக்கலான க்ளாசிக் நாவலை ஆன்லைனிலும் வாங்கலாம்.

Sep 21, 2013

மோடிக்கு மாற்று - II

    (1)
நண்பருக்கு வணக்கம், 

உங்கள் நேரத்தை வீணடிக்க மனமில்லாமல் சுருக்கமாக எழுதவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் முடியவில்லை மன்னிக்கவும். நீங்கள் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தது "மோடிக்கு மாற்று" எனும் கட்டுரை தான். 

அறிவையும், சமுதாயம் பற்றிய விழிப்புணர்வையும்  வளர்த்துக்கொள்ளும் நோக்கோடு சில முற்போக்கு சிந்தனைவாதிகளையும் (மனுஷ்யபுத்திரன்,ஷானவாஸ், முத்துகிருஷ்ணன் இன்னும் பலர்)  அவர்களின் பேச்சு நடவடிக்கை களையும்  உற்று நோக்கினேன். அதன் விளைவு இனி இவர்கள் நல்லதையே சொன்னாலும் கேட்கக் கூடாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். நான் எந்த கட்சியையும், மதத்தையும் ஆதரிக்கிறவன்  இல்லை (ஐய்யா நல்லகண்ணு போன்ற மனிதர்கள் நாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணம் உடையவன்). இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் ஏதேனும் நல்லது நடக்காத என ஏங்கும்  ஒரு சாதாரண கிராம வாசி. உங்களுடைய இந்த கட்டுரை என்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே பிரதிபலித்திருக்கிறது. உங்களுடைய இந்த பதிவை புப்ளிசிட்டி தேடும் சில முற்போக்கு சிந்தனைவாதிகள் வேண்டுமானால் எதிர்க்கலாம் ஆனால் 100% உறுதியாக சொல்கிறேன் உங்கள் இந்த பதிவை சாதாரண மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர்.   நாட்டில் சிலர் ஏதேனும் நல்லது செய்து நல்ல பேர் வாங்கிவிட்டால் போதும் இந்த முற்போக்கு சிந்தனைவாதிகள் அப்பொழுதுதான் வெளியே வருவார்கள் அவர்களை பற்றி விமர்சித்து பேச. மற்றபடி கருணாநிதி, ஜெயலலிதா, மாயாவதி, முலாயம், மன்மோகன், சோனியா, ராபர்ட் வதேரா, நிதின் கட்கரி, கல்மாடி  இப்படி நாட்டையே கூறு போட்டு விற்பவர்களை பற்றி எதுவும் வாய் திறக்க மாட்டார்கள்.  

இதற்கு முன்பு அண்ணா ஹசாரே தாத்த வந்தார் ஊழல் பற்றிய விழிப்புணர்வை சாமான்ய  மக்கள் வரையிலும் எடுத்துசென்றார். ஆனால் அந்த மனிதரை விமர்சிக்க முத்துகிருஷ்ணன் போன்றோர் அவர் வாழும் கிராமத்திற்கே சென்று ஆய்வு நடத்தினாராம். அதில் அந்த கிராமத்தில் மாமிசம் உண்பவர்களை, மது, புகை பிடிப்போரை கட்டிவைத்து அடிப்பாராம். இதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. நானும் கிராமத்தில் பிறந்தவன் தான் என்னுடைய கிராமத்தில் 12 வயது பிள்ளைகள் வரை குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலான ஆண்கள் கந்து வட்டிக்கு பணம் வாங்கி குடித்து அழித்துவிட்டு கடன் கொடுத்தவனின் தொல்லையால் கடனை அடைக்க கொலை கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பாலான கிராமக்குடும்பங்கள் அந்த வீட்டு பெண்களாலேயே உயிரோடு இருக்கின்றன. என்னுடைய கிராமத்தை ஒப்பிடும் போது ஹசாரே வாழும் கிராமத்தில் மக்களின் வாழ்க்கைதரம் ஆயிரம் மடங்கு மேம்பட்டதாகவே உள்ளது. இப்பொழுது மோடி என்னும் மனிதரை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள். சரி  மோடி வேண்டாம், வேறு யார் வேண்டும் என்று அந்த முற்போக்கு சிந்தனைவாதிகளை கேட்டு பாருங்கள். அதை பற்றி அவர்கள் சிந்தித்து கூட இருக்கமாட்டார்கள். இந்த முற்போக்கு சிந்தனைவாதிகள் பற்றி புரிந்துகொள்ள சிறிய உதாரணம் சொல்கிறேன். இவர்கள் இதுவரை விமர்சித்து பேசியவர்கள் யார் என்று பாருங்கள் அதில் அன்ன அஜாரே, அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி, நரேந்தர மோடி போன்றோர் மட்டுமே அடங்குவர். மற்றபடி எந்த ஊழல்வதியையும் இவர்கள் விமர்சித்திருக்க மாட்டார்கள்.      உலகத்தில் 100% சரியான மனிதன் யார்? இந்த கேள்விக்கு இந்த சிந்தனைவாதிகள் பதில் சொல்லட்டும் இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு இவர்கள் இருக்கவேண்டும். 

நண்பரே உங்கள் எழுத்து உணர்வு பூர்வமாக உள்ளது. மனதில் இருந்து வருகிறது. உண்மையாக உள்ளது. ஏற்றுக்கொள்ளும் படி உள்ளது. யாரைப்பற்றியும் கவலைபடாமல் உங்கள் பாணியிலேயே தொடர்ந்து எழுதுங்கள். 

உங்களுடைய எழுத்துக்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 

நன்றி
அஜய் 

                                                      (2)
அண்ணனுக்கு, 

இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலமாக, நீங்கள் ராஜபக்சேவை நல்லவர் என்றோ, வல்லவர் என்றோ கூறுவீர்கள் என்றால், உங்களது கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும். தெஹல்கா வெப்சைட்டிலும், யு டியூப் வீடியோக்களிலும் குஜராத் கலவரத்தின் கொடுமைகளை நீங்கள் காணவில்லை என்றே கருதுகின்றேன். 
மோடியை எதிர்ப்பதன் மூலம் முஸ்லீம்களை, தேசப்பற்று அற்றவர்களாகவும், இந்து விரோதிகளாகவும் பார்ப்பது தவறு. நாங்கள் எதிர்ப்பது மோடியைத்தானே அன்றி, இந்துக்களை அல்ல. அல்ல. அல்ல...

இப்படிக்கு,
யாஸிர்.

                                                          (3)

மோடிக்கு மாற்று பற்றிய உங்கள் கருத்துகள் கவலை தருகிறது..கலவரம்,கற்பழிப்பு ,படுகொலைகள் போலி encounters ..இவை பற்றிய உங்கள் பார்வை என்ன? அந்த விடியோ காட்சிகளை நீங்கள் பார்த்து இருக்கின்றீர்களா? 

இந்துவோ,முஸ்லிமோ அல்லது வேறு என்ன சாதி மதம் ஆனலும் சரியே மனித உயிர்கள் அவ்வளவு மலிவானது அல்ல! கலவரம் எல்லா மாநிலங்களிலும் நடந்து உள்ளது ..ஆனால் அரசு கண் மூடி கை கட்டி வேடிக்கை பார்த்தது இல்லை சகோதரா !!

குத்துபட்டவனுக்கு, காயம்பட்டவனுக்கு, மானபங்கம் செய்யப்பட்டவளுக்குத் தான் வலிக்கும் ..மனிதநேயம் ,மனிதாபிமானம் உள்ளவர்கள் இந்த கொடுஞ்செயல் புரிந்தவரை ஆதரிக்க முடியாது என்பது என் கருத்து .

ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்று எண்ணுவது தவறு இல்லை. ஆனால் மாற்று வழிகளை யோசிக்கவேண்டும் ..

தலை அரிக்கிறது என்பதற்காக கொள்ளிக்கட்டையை எடுத்து சொரிந்து கொள்ளுதல் அறிவுடைமை அல்ல ..

உங்கள் கட்டுரையில் ஆரம்பத்தில் குறிப்பிட்டு உள்ளதை போல இந்து வெறியன் என்று உங்களை நான் எண்ணவில்லை..பல விசயங்களை நீங்கள் எழுதி நான் ரசித்து இருக்கிறேன்..அது உங்களுக்கு நன்கு தெரியும்.

வருந்துகிறேன் இதை சொல்வதற்கு...

இந்த கட்டுரையை என்னால் ரசிக்க இயலவில்லை ..

மாறாத அன்புடன் 
ஹசன்கனி 
                                           ***

அன்புள்ள யாஸிர்/ஹசன்கனி,

வணக்கம்.

என்னால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. மக்கள் தேர்ந்தெடுத்ததாலேயே மோடியை நல்லவன் என்று சொல்ல முடியும் என்றால் ராஜபக்‌ஷேவும் நல்லவனாகத்தானே இருக்க முடியும்? இந்த கேள்விக்கு எப்படி பதில் சொன்னாலும் அது என்னை justify செய்து கொள்ளச் செய்யும் சால்ஜாப்பாகவே இருக்கும் என நினைக்கிறேன். என்றாலும், மனதில் தோன்றுவதை எந்த முலாமும் பூசாமல் சொல்ல முயற்சிக்கிறேன். 

தொடக்கத்திலேயே ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் - நீங்கள் மோடியை எதிர்ப்பது எப்படி இந்துக்களை எதிர்ப்பது இல்லையோ அதே போலத்தான் மோடியை ஆதரிப்பது என்பது இந்துத்துவாவை ஆதரிப்பதும் இல்லை, இஸ்லாமியர்களை எதிர்ப்பதும் இல்லை.

இங்கு மோடியை எதிர்ப்பது என்பதும் சரி, ஆதரிப்பது என்பதும் சரி - Paid Media வினால் உருவாக்கப்பட்ட மனநிலைதான். நீங்கள் எந்தக் காரணங்களுக்காக மோடியை எதிர்க்கிறீர்களோ அதைத் தவிர்த்த வேறு சில காரணங்களுக்காக நான் மோடியை ஆதரிக்கிறேன். இரண்டு தரப்புமே தங்களுக்கான தரவுகளை ஊடகத்தின் வாயிலாகவே உருவிக் கொள்கிறோம். மோடிதான் குஜராத் கலவரத்தின் சூத்திரதாரி என்று நம்புவதற்கான வாய்ப்புகள் இருப்பது போலவே மற்ற மதக் கலவரங்களைப் போலவே அதுவும் ஒரு கலவரம் என்று நம்புவதற்கான வாய்ப்புகளும் இருக்க முடியும் அல்லவா?

மோடி நல்லவன்xகெட்டவன் என்ற பஞ்சாயத்தை சில கணங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு அவரை அடுத்த பிரதமராக எதிர்பார்ப்பதற்கு என்னளவில் அடிப்படையான மூன்று காரணங்கள் இருக்கின்றன-

  • குஜராத் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்கள்தான் முதன்மைக் காரணம் - இன்னொரு முறை மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் பதவிக்கு வந்தால் இந்த தேசத்தை தட்டு எடுக்க வைத்துவிடுவார்கள் என நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்தத் தகவல் சற்று ஆறுதலாக இருந்தது.
  • தொடர்ச்சியாக மூன்று முறை மாநில மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது இரண்டாவது காரணம்- இதில் கணிசமான அளவில் இஸ்லாமியர் வாக்குகள் குறித்த புள்ளி விவரங்களும் இருக்கின்றன. ராஜபக்‌ஷேவை கணிசமான தமிழர்கள் ஆதரித்தார்கள் என்று எந்தச் செய்தியும் என் கண்ணில் பட்டதில்லை.
  • ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், முலாயம் சிங் யாதவ், மம்தா பானர்ஜி, மாயாவதியை விடவும் மோடி ஊழல் கறை இல்லாத, உறுதியான மனிதன் என நம்புவது மூன்றாவது.

அரசியல்வாதிகளுக்குரிய அநேக குறைகளுடனும், சில தனித்துவமான பலங்களுடனுமான இன்னொரு மனிதன்தான் மோடி. ஆனால் சிலர் அவரை படு தீவிரமாக எதிர்ப்பதற்கான காரணம்  ‘மோடி ஒரு மதவாதி’ என்பதையும் தாண்டி சில சைக்கலாஜிக்கலான விஷயங்களும் இருப்பதாகத் தோன்றுகிறது. அதில் ஒன்று அறிவுஜீவி(அல்லது) புரட்சியாளன் என்ற அடையாளம். நம் ஊரில் எப்பொழுதுமே பெரும்பான்மையை எதிர்ப்பவன்தான் அறிவுஜீவி என்ற பிம்பம் உண்டு. அந்த இடத்தை அடைவதற்காக உழைப்பவர்களில் பெரும்பாலானோர்கள் எழுத்தாளர்களாகவும், பத்திரிக்கையாளர்களாகவும் இருப்பது ஒருவிதத்தில் நம் துரதிர்ஷ்டம். 

சுதந்திரத்திற்கு பிறகாக இந்த நாட்டில் எத்தனையோ கலவரங்கள் நடந்திருக்கின்றன. குஜராத் உட்படவும்- கிட்டத்தட்ட நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஏதோவொரு கலவரம் நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியச் சகோதரர்கள் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். சொந்த நிலத்தைவிட்டு துரத்தடிக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் மட்டுமில்லை- சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள், தலித்துக்களுக்கு எதிரான வன்முறைகள், கிறிஸ்துவர்களுக்கு எதிரான கொடுமைகள் என சமூகத்தின் சகல பிரிவுகளுக்கும் எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கலவரங்களில் ஹிந்துக்களும் தப்பித்ததில்லை. 

இதே குஜராத்தில்தான் 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் எழுநூறு பேர்கள் கொல்லப்பட்டார்கள்- இதில் நானூற்று சொச்சம் பேர் இஸ்லாமியர்கள். 1984 இல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில் பல்லாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். 1989 ஆம் ஆண்டு பீஹார் மாநிலம் பாகல்பூரில் நடைபெற்ற கலவரம் ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்களை காவு வாங்கியது. 1992 ஆம் ஆண்டு மும்பை கலவரம் நமக்குத் தெரிந்ததுதானே? ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள், நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் என்று பட்டியல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இவை தவிர்த்து அஸாமில், திரிபுராவில் என நீட்டிக் கொண்டே போனால் ‘இரத்தம் நனைக்காத மண்’ இந்த நாட்டில் இல்லை என்று முடிவுக்கு வந்துவிடலாம். நிலைமை இப்படி இருக்க, இதில் எத்தனை கலவரங்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்? இந்தக் கலவரங்களின் காரணகர்த்தாக்கள் என்று யாரை எல்லாம் தண்டித்திருக்கிறோம்? 

யோசித்துப் பார்த்தால் எதுவுமே இல்லை. அத்தனை பிணங்களையும் அரசியல் காரணங்களுக்காகவே மூடி மறைத்திருக்கிறார்கள். ஊடகங்களும் வெகு இலாகவமாக மறந்துவிட்டு அடுத்த செய்திகளுக்கு போய்விட்டார்கள். என்ன காரணங்களுக்காக மற்ற கலவரங்களை மறக்கடித்தார்களோ அதே அரசியல் காரணங்களுக்காத்தான் குஜராத் கலவரத்தை மட்டுமே திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறார்கள் என்று நம்புகிறேன்.

இங்கு மோடியை எதிர்ப்பதில் சமூக அக்கறை என்பதைவிடவும், தனக்கான அறிவுஜீவி அடையாளம் மற்றும் அரசியல் காரணங்கள்தான் அதிகம். அவ்வளவுதான்.

இப்படித் திரும்பத் திரும்ப ஒரே மனிதனை வலுக்கட்டாயமாக நியாயப்படுத்தும் பணியைச் செய்யும் போது நாம் அந்த மனிதனுக்கு தீவிர ஆதரவாளராகிவிடுவோம். இப்போதைக்கு நான் மோடியை ஆதரிக்கிறேன். மற்ற போலி மதச் சார்பற்றவர்களைவிடவும், ஊழல் சிகாமணிகளை விடவும் மோடி ஒரு மடங்காவது மேல் என நம்புகிறேன். ஆனால் அதே சமயம் அவரைப் பற்றி மட்டுமே பேசி  ‘மோடி வெறியன்’ ஆகிவிடக் கூடாது என விரும்புவதாலும், இசுலாமிய நண்பர்களின் புரிதல் மாறும் வரை அவர்களை புண்படுத்த வேண்டியதில்லை என்பதாலும் தற்காலிகமாக மோடி பற்றி பேசுவதை நிறுத்தி வைக்கலாம் என்று தோன்றுகிறது. 

Sep 15, 2013

தலைமுறை இடைவெளி

அன்புள்ள மணிகண்டன்,

நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசித்தாலும் மருத்துவமனைகள் பற்றிய தங்களின் பதிவை படிக்கும் வரை மின்னஞ்சல் அனுப்பத் தோன்றியதில்லை. அந்தக் கட்டுரையோடு முழுமையாக ஒத்துப் போகிறேன். சில வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற விஷயங்களில் நமது முன்னோர்கள் வழிகாட்டினார்கள் அதே சமயம் அவர்களுக்கு பிரச்சினைக்கான காரணமும் தெரிந்திருந்தது. முக்கியமாக, நோய்வாய்ப்படும் சமயங்களில் நமக்கு தங்களின் தார்மீக ஆதரவைக் கொடுத்தார்கள். இப்பொழுதெல்லாம் நம்மைச்சுற்றிலும் பலவகையான நோய்களை பார்க்கும் போதும் நமக்கு அத்தகைய ஆதரவு கிடைப்பதில்லை. 

அன்புடன்,
ஸ்ரீராம்.


அன்புள்ள திரு. ஸ்ரீராம்,

வணக்கம்.

இரண்டு விஷயங்களைப் பற்றி பேசலாம் என்று தோன்றுகிறது-

- ஒன்று நாம் மாற்றிக் கொண்ட வாழ்க்கை முறை (life style)
- இன்னொன்று தலைமுறை இடைவெளி (Generational Gap)

வாழ்க்கை முறை மாறிவிட்டது என்பது கிட்டத்தட்ட நாம் எல்லோருமே உணர்ந்ததுதான். இதைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு குரல்களிலும் வெவ்வேறு தொனிகளிலும் பேசுகிறோம். ஆனால் மாறியது மாறியதுதான். ரிவர்ஸ் கியர் இல்லாத மாறுதல் இது. 

முந்தைய காலத்தில் மனிதனுக்கு இத்தனை அழுத்தம் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. இப்பொழுது இருப்பது போல அளவு கடந்த வேகமும் தேவைப்பட்டிருக்காது. வாழ்க்கையை நகர்த்துவதில் அவனுக்கு பெரிய புறச் சிக்கல்களோ அல்லது அகச்சிக்கல்களோ இருந்திருக்கவும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அப்பொழுதும் பணம் முக்கியமானதுதான் - ஆனால் அது மட்டுமே அத்தனையுமாக இருந்திருக்கவில்லை. அதனால் வாழ்க்கை மிக எளிமையானதாக இருந்தது. இந்த ஐம்பது வருடங்களில் அத்தனையும் மாறிப் போயிருக்கிறது.

பெருமாள் முருகனின் ‘கங்கணம்’ நாவலில் நிலத்தை மதிப்பிடும் முறையைப் பற்றி ஒரு இடம் வரும்- அந்தக் காலத்தில் நிலத்தை அதன் விளைச்சல் தன்மையை அடிப்படையாக வைத்து மதிப்பிட்டார்கள். நெல் விளையும் பூமி, களிமண் காடு, நல்ல செம்மண், மேட்டு நிலம்- இப்படி ஏதாவது ஒரு வகையில்தான் நிலத்திற்கான மதிப்பிருந்தது. யோசித்துப் பார்த்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படித்தான் கணக்கிட்டார்கள். ஆனால் ஐம்பது வருடங்களில் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. சாலை ஓர நிலம், கமர்ஷியல் சைட் ஆகும், பக்கத்திலேயே மருத்துவமனை இருக்கிறது, பஸ் ஸ்டாப்புக்கு அதிக தூரம் இல்லை என்றெல்லாம் நிலத்தை மதிப்பிடத் துவங்குகையிலிருந்து நமது வாழ்க்கை முறை ஒட்டு மொத்தமாக புரட்டிப் போடப்பட்டிருக்கிறது.

ப்ளாஸ்டிக்கும், கெமிக்கலும் நம் உடலை குத்தகைக்கு எடுக்கத் துவங்கிய காலம் இது. விதவிதமான நோய்கள் எட்டிப்பார்க்க ஆரம்பித்ததும் இதே பருவம்தான். முன்பெல்லாம் இன்றைய காலத்தைப் போல மிகச் சிக்கலான நோய்கள் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. காய்ச்சல், தலைவலி, சொரியோ, சிரங்கோ  அல்லது வயிற்றுப் போக்கு- அதிசயமாக கொத்துக் கொத்தாக அள்ளிச் செல்லும் கொள்ளை நோய்கள். இதில் எதுவாக இருந்தாலும் அமத்தாவுக்கோ, அப்பத்தாவுக்கோ வைத்தியம் தெரிந்திருந்தது. கை மீறிப் போன நோய்க்கு உள்ளூரில் வைத்தியர்கள் இருந்தார்கள். காடு மேடெல்லாம் சுற்றியலைந்து பச்சிலைச் சாறை வாயில் ஊற்றினார்கள். பத்தியம் சொன்னார்கள். நோயாளிகள் மீண்டெழுந்தார்கள். கெமிக்கல் புகுந்திராத அந்தக் காலத்தில் பச்சிலைச் சாறுகள் நோயை குணப்படுத்தின. இப்பொழுது கெமிக்கலால் நிரம்பியிருக்கும் நம் உடலை பச்சிலைச் சாறுகள் மட்டும் காப்பாற்றும் என்று சொல்ல முடியவில்லை.

இப்பொழுது பெயர் தெரியாத நோய்கள். விதவிதமான ரிப்போர்ட்கள். புதுப் புது அறிகுறிகள். வெவ்வேறு விதமான பரவும் முறைகள். கெமிக்கல் புகுந்த உடலில் இருந்து நோயை விரட்ட இன்னும் கொஞ்சம் கெமிக்கலை மருந்து என்ற பெயரில் உள்ளே விட்டுக் கொள்கிறோம். சில நாளில் உடலில் இன்னொரு பிரச்சினை வருகிறது. இப்பொழுது வேறொரு கெமிக்கலை உள்ளே விடுகிறோம். இப்படியே தொடர்கிறது. புலி வாலை பிடித்துக் கொண்ட கதைதான். பிடித்தாயிற்று இனிமேல் விட முடியாது.

இன்னொன்று Generational Gap - நமது தாத்தா தலைமுறையில் இருந்த மருத்துவ அறிவு தந்தையின் தலைமுறையில் இல்லை. மிகப் பெரிய வியாதிகளைக் கூட நாடி பிடித்து, விழிகளை கவனித்து, நாக்கை நீட்டச் சொல்லி கண்டுபிடித்துவிடும் மனிதர்கள் வாழ்ந்த தேசம்தானே இது? இரண்டு தலைமுறைக்கு முன்னால் இருந்தவர்களுக்கு இந்த வித்தை தெரிந்திருந்தது. இப்பொழுது இந்த முறையை கிட்டத்தட்ட தொலைத்துவிட்டோம். நகரமயமாக்கல் பரவலாகியதன் காரணமாகவோ என்னவோ இந்த வித்தைகள் நமக்கு முந்தைய தலைமுறைய வந்து சேரவில்லை. அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ அல்லது அவர்களது வயதையொத்தவர்களுக்கோ நோய்கள் பற்றிய பெரிய புரிதல்கள் இல்லை. இந்தத் தலைமுறைக்கு இது பெரிய இழப்புதான். இப்பொழுதெல்லாம் பெரியவர்கள் நம் கூடவே இருந்தாலும் ‘எதுக்கும் டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துடலாம்’ என்றுதான் சொல்கிறார்கள்.

நன்றி.

Sep 14, 2013

மோடிக்கு மாற்று

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பதை ஆதரித்து பேசினாலும், எழுதினாலும் ரிஸ்க்தான். ‘இந்து வெறியன்’ என்ற முத்திரையை குத்திவிடுவார்கள். எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்துவிடலாம்தான். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கும் அல்லவா? ஒவ்வொரு அரசியல் நிகழ்வின் போதும் மனம் ஒருபக்கமாக நகரும் அல்லவா? அதை வெளிப்படையாக பேசுவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

மோடியின் எதிர்ப்பாளர்களும், விமர்சகர்களும் சொல்வது போல ‘மோடியிஸம் என்பது மீடியாக்களாலும் சமூக ஊடகங்களாலும் உருவாக்கப்பட்ட பிம்பம்’ என்பதை ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. காங்கிரஸ்காரர்கள் சொல்வதைப் போல மோடி தன்னைப் பிரகடனப்படுத்திக்(I, I, I & Me, Me, Me) கொள்கிறார் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த பிரகடனங்களால் மட்டும் ஒருவன் தலைவனாக உருவாகிவிடுவதில்லை அல்லவா? எந்த நிர்வாகத் திறமையும் இல்லாமல் வெறும் பிரகடனங்களால் மட்டும் ஒருவன் பிரதமர் ஆகிவிட முடியும் என்றால் இந்நேரம் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் இந்த தேசத்தின் பிரதமராக இருந்திருக்கக் கூடும்.

கேசுபாய் பட்டேலை ஓரங்கட்டிவிட்டு குஜராத் முதல்வர் ஆனார். இப்பொழுது அத்வானியை ஓரங்கட்டிவிட்டு பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்று இன்னொரு விமர்சனம் இருக்கிறது. ஆனால் இதிலும் பெரிய தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. வாஜ்பாயி பிரதமராக இருக்கும் போது அத்வானி இதைத்தானே செய்தார்? ஒரே வித்தியாசம் அத்வானி தனது முயற்சியில் தோற்றுப் போனார். நரேந்திர மோடி வென்றுவிட்டார். அவ்வளவுதான்.

கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, மாயாவதியோ அல்லது இந்திராகாந்தியோ வேறு யாரையும் ஓரங்கட்டாமல்தான் தங்களின் பதவியை அடைந்திருக்கிறார்களா? ஓரங்கட்டுதல் என்பது அரசியலின் அடிப்படைச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தை பின்பற்றாமல் தற்கால அரசியலில் வென்றவன் என்று யாரையாவது சுட்டிக்காட்ட முடியும் என்று தோன்றவில்லை. ஒன்றியச் செயலாளர் அளவில் கூட இந்த ஓரங்கட்டுதல் உண்டு.

‘மீடியாக்களால் உருவாக்கப்பட்ட பிம்பம்’, ‘மற்றவர்களை ஓரங்கட்டி மேலே வந்தவன்’ போன்ற விமர்சனங்கள் எல்லாம் உண்மையில் அர்த்தமற்றவை. எப்படியாவது மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட காரணங்களாகத்தான் தெரிகிறது.

மற்றபடி மோடியை எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் காரணங்களில் பொருட்படுத்தத் தக்கது என்றால் அது குஜராத் கலவரங்கள். ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை- குஜராத் கொலைகாரன் என்று ஊடகங்களும், முற்போக்காளர்களும் வர்ணிக்கும் மோடியை எதற்காக மூன்று முறை குஜராத் மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள்? ஒருவேளை இசுலாமியர்கள் ஒட்டுமொத்தமாக மோடிக்கு எதிராக இருப்பார்கள் என்று நினைத்தால் இருபத்தைந்து சதவீதத்திற்கும் அதிகமான இசுலாமியர்கள் பா.ஜ.கவுத்தான் வாக்களித்திருப்பதாக புள்ளி விவரங்கள் இருக்கின்றன. ஒருவேளை புள்ளிவிவரங்கள் தவறாகக் கூட இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் மோடியின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனங்களுக்கும் அந்த மாநில மக்கள் பதில் அளித்திருக்கிறார்கள். தொடர்ந்து மூன்று முறை அவரை மாநில முதல்வராக நீடிக்க அனுமதித்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலான சமயங்களில் மத்தியில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்படியிருந்தும் மோடி வென்றிருக்கிறார். அதுதான் புரியவில்லை - மோடி விஷயத்தில் இங்கே கதறும் முற்போக்காளர்களை நம்புவதா அல்லது குஜராத் மக்களை நம்புவதா என்று.

மற்றபடி மோடியை திமுக எதிர்க்கிறது, சமாஜ்வாதிக் கட்சி எதிர்க்கிறது என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. தேர்தலுக்குப் பிறகு மோடி அரசு அமைப்பதாக இருந்தால் வெட்கமே இல்லாமல் வரிசை கட்டி நிற்பார்கள். காலங்காலமாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்று அணி என்று கங்கணம் கட்டுவார்கள். சரி ஏதேனும் மாறுதல் வரும் என்று ஆர்வமாக இருப்போம். தேர்தலுக்கு பிறகு ‘நாங்கள் மதவாத சக்திகளுக்கு எதிரானவர்கள்’ என்று காங்கிரஸின் காலைக் கட்டுவார்கள். அதன் பிறகு மத்திய அரசு கொள்ளையடித்தாலும் சரி; சுரண்டினாலும் சரி; பதுக்கினாலும் சரி- தங்களின் பிழைப்பு ஓடினால் போது என்று கண்களைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள் இந்த போலி மதவாத எதிர்ப்பாளர்கள். 

மோடியை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. முழுமையாக விமர்சிக்கலாம். ஆனால் மோடிக்கு மாற்று என்று யாரை முன்வைப்பது? சீரழிந்து கிடக்கும் இந்த தேசத்தின் பொருளாதாரத்தை ஓரளவுக்கேனும் நிர்வகிக்கக் கூடிய நிர்வாகியாக உங்களின் கண்களில் யார் படுகிறார்கள்? ஊழலற்ற ஆட்சியாளர் என்பது சாத்தியமே இல்லை- குறைந்தபட்ச ஊழலுடன் ஆட்சி நடத்தக் கூடிய மனிதராக யாரை முன் வைக்க முடியும்?

உத்தரபிரதேசத்தில் குடிசைகளில் கஞ்சி குடிக்கும் ராகுல் காந்தியா? பொருளாதார மேதை மன்மோகன்சிங்கா? சிவங்கங்கையில் நேர்மையாக வென்ற சிதம்பரமா? தமிழகத்தின் இரும்புப் பெண்மணியா? உத்தரப்பிரதேசத்தின் தங்கப் பெண்மணியா? உறங்காத விழிகளின் சொந்தக்காரர் தேவகெளடாவா அல்லது அஞ்சாநெஞ்சன் அழகிரியா? தகுதியான ஆளைக் காட்டினால் ‘சைலண்ட்’ ஆகிவிடுகிறேன்.

இன்றைய ட்ரெண்டுக்கு நம்மை முற்போக்காளராகவும், புரட்சியாளாரகவும் காட்டிக் கொள்ள வேண்டுமானால் ஒரே வழிதான் - மோடியை எதிர்க்க வேண்டும். ஆனால் நான் முற்போக்காளராகவும் இருக்க விரும்பவில்லை, புரட்சியாளன் ஆகவும் விரும்பவில்லை. நிதர்சனத்தின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன்.

Sep 12, 2013

உன் Attitude சரியில்லை

மருத்துவர்களை பற்றி நேற்று எழுதியதற்கு பயங்கர அடி. அத்தனை அடியையும் போட்டவர்கள் மருத்துவர்கள் என்பதுதான் சிறப்பம்சம். ஃபேஸ்புக்கில் மட்டுமில்லாது மின்னஞ்சல் வழியாகவும் குத்துக்களை இறக்கியிருந்தார்கள். நம் ஊரில் ஆட்டோக்காரர் மீது கை வைத்தால் அத்தனை ஆட்டோக்காரர்களும் சேர்ந்து கொள்கிறார்கள். மாநகரப் பேருந்தின் நடத்துனரோடு தகராறு செய்தால் அத்தனை பேருந்தையும் நிறுத்தி குறைந்தபட்சம் அரை நாளாவது ‘ஸ்ட்ரைக்’ செய்கிறார்கள். ஒரு வக்கீலுக்கு பிரச்சினை என்றால் மொத்த வக்கீலும் ஒன்று சேர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் கலந்து கொள்கிறார்கள். மருத்துவர்களும் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை போலிருக்கிறது.

தனது துறையைச் சார்ந்தவனுக்கு பிரச்சினை வரும் போது ஒதுங்கிப் போவது இரண்டு இடங்களில்தான் நடக்கும். ஒன்று எழுத்துத் துறை. ஒரு எழுத்தாளனுக்கு அடி விழுந்தால் கமுக்கமாக சிரித்த படியே கொண்டாடும் எழுத்தாளர்களால் நிரம்பியது நம் தமிழ் உலகம். ஒரு எழுத்தாளனைக் வெளியாள் ஒருவன் குதறும் போது ஓடிப் போய் இன்னும் கொஞ்சம் தகவல்களைக் கொடுத்து குதூகலிக்கும் சக எழுத்தாளர்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். இன்னொரு துறை? அது ஐ.டி. அது பற்றி வேறொரு நாள் பேசலாம்.

நேற்று அடித்தவர்கள் ‘உன் Attitude சரியில்லை’ என்கிற ரீதியில் வாரியிருந்தார்கள். இருக்கலாம். அதை ஏற்றுக் கொள்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் யோசித்துப் பார்த்தால் என் attitude மட்டும்தானா சரியில்லை? 

இங்கு எதைப் பற்றி நினைத்தாலும் பயமாக இருக்கிறது. எதைப் பார்த்தாலும் பதட்டமாக இருக்கிறது. விபத்துக்கள், நோய்கள் என நம்மைச் சுற்றி கண்ணாமூச்சி நடக்கின்றன. விளையாட்டுப் பருவத்திலிருந்து உடன் இருந்தவனை சர்வசாதாரணமாக காலன் அபகரித்துக் கொள்கிறான். இரண்டு நாட்கள் முன்பாக பேசிக் கொண்டிருந்தவன் தூங்கிக் கொண்டிருக்கும் போதே போய்ச் சேர்ந்துவிடுகிறான். கண் மூடி விழிக்கும் கணத்தில் அடையாளம் தெரியாத வாகனத்தின் சக்கரத்தில் நசுங்கிப் போய்விடுகிறார்கள். 

இப்பொழுதெல்லாம் நம்மிடையே மரணம் மிக எளிய விளையாட்டுப் பொருளாகிவிட்டது. ‘வாழ்க்கை முறை மாறிவிட்டது. வாகனங்கள் பெருகிவிட்டன. அதனால் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன’  என்றோ ‘உடம்புக்குள்ள நெறைய கெமிக்கல் போகுது. அதனால ஏதேதோ நோய் வருது’என்றோ ஏதேனும் சமதானத்தை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். உண்மையில் பிரச்சினை நமக்கு வரும் வரை அதன் வலியை உணர்ந்து கொள்ள முடிவதில்லை.

முப்பத்தியேழு வயதில் இறந்து போனவனின் குடும்பத்தை சமீபத்தில் பார்க்க வேண்டியிருந்தது. ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனான். அவன் போனது கூட பிரச்சினையில்லை. அந்தக் குடும்பத்தை பார்ப்பதுதான் அத்தனை கொடுமையாக இருக்கிறது. ‘அப்பா இருக்கும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியே சாப்பிட போவோம். இப்போ எல்லாம் எங்கேயும் போறது இல்லை அங்கிள்’ என்று இறந்தவனின் ஆறு வயதுக் குழந்தை சொல்லும் போது என்ன பதிலைச் சொல்வது? 

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்க்கையைத் தொடங்குகிறோம். அவன் மட்டும் நினைத்திருப்பானா? முப்பத்தியேழு வயதிலேயே வாழ்வின் இறுதிச் சுவாசத்தைச் சந்திப்போம் என்று. எல்லோரையும் போலவே வீடு வாங்குவதும் வாகனங்கள் வாங்குவதும் என இ.எம்.ஐயோடு நகரும் வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் ஒரு பெரும் பாறாங்கல் வந்து விழுந்துவிடுகிறது. அவனது மனைவி குழந்தையைப் படிக்க வைப்பாளா? இ.எம்.ஐ கட்டுவாளா? அடுத்த வேளை சோற்றுக்கான வழியைத் தேடுவாளா? குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது.

ஓரிரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் ஒருவன் இறந்து போவதால் இந்த அளவிற்கு இருந்திருக்கும் சிக்கல்கள் என நினைக்கவில்லை. விவசாயமோ, கூலி வேலையோ- எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் உறவினர்களின் ஆதரவாவது இருக்கும். இன்றைய தேதியில் அவனவன் பிழைப்பை பார்ப்பதற்கே சரியாக இருக்கிறது. அடுத்தவர்களை எங்கே கவனிப்பது? ‘பாவம் அவங்க தலையெழுத்த்து’ என்று கைகழுவி விடுகிறார்கள்.

விபத்துக்கள் மட்டுமில்லை கடும் மன அழுத்தம் காரணமாக வாழ்க்கைய முடித்துக் கொள்பவர்கள், பெயர் தெரியாத நோயினால் இறந்து போகிறவர்கள், நோயைத் தெரிந்தும் இலட்சக்கணக்கில் செலவு செய்ய இயலாமல் வாழ்வை முடித்துக் கொள்பவர்கள் என்று வாழ்க்கையின் நிலையாமையை எதிர்கொள்ளும் போதெல்லாம் விரல்கள் சில்லிடுகின்றன. ஏதோ முன்னோர்களின் புண்ணியத்தினால் இதுவரைக்குமாவது வாழ்க்கை நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை இன்னும் பத்து வருடங்களுக்காவது நீடித்துக் கொள்ள வேண்டும் என்ற பயம் மனதின் ஏதோ ஒரு மூலைக்குள் ஒளிந்துகிடக்கிறது.

எனக்கு மட்டுமில்லை. என்னையொத்த ஒவ்வொரு நடுத்தர வயதுக்காரனுக்கும் இருக்கும் பிரச்சினைதான் இது. ஐந்து வருடங்களுக்கு முன்பாக இருந்தால் எதைப் பற்றியும் கவலை இருந்திருக்காது. உடல் ரீதியாக எந்தப் பிரச்சினை என்றாலும் ‘தொலையட்டும்’ என்று விட்டுவிடும் மனநிலைதான் இருந்தது. இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. குடும்பம், குழந்தை என்று ஏகப்பட்ட commitments. இரண்டு முறை பைக்கில் இருந்து விழுந்த பிறகு வேகமானி முப்பது கிலோமீட்டரைத் தாண்டுவதில்லை. எவ்வளவுதான் அவசரம் என்றாலும் மெதுவாகத்தான் போகிறேன். உயிர் மீது அத்தனை பயம். கொஞ்சம் தலைசுற்றினால் கூட ஏதாவது பிரச்சினையாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. நெஞ்சுக்குள் வாயுப்பிடிப்பு என்றாலும் கூட ஒரு இ.சி.ஜி எடுத்துப் பார்த்துவிட்டால் தப்பில்லையே என்று மனம் நினைக்கிறது. சரி போகட்டும்.

வாழ்க்கை நமக்கு அசால்ட்டாக பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தன்னிடம் சிகிச்சைக்காக வருபவனின் இந்த பயத்தில் ஒரு சதவீதத்தையாவது குறைக்க வேண்டியது ஒரு மருத்துவரின் அடிப்படையான எதிக்ஸ் இல்லையா? நான்கு கேள்வி கேட்டால் கூட ஒரு நோயாளியின் பிரச்சினையை ஓரளவு உணர முடியும். ஆனால் கேள்வியே கேட்காமல் ஒன்றரை நிமிடங்களில் முடிவெடுத்து ரத்தப் பரிசோதனைக்கு பரிந்துரை செய்வதுதான் மருத்துவரின் attitude ஆக இருக்குமா என்பதுதான் யோசிக்க வைக்கிறது. வாய்ப்புண்ணுக்கு ஒருவன் சிகிச்சை பெறச் சென்றால் ‘சாதாரண வாய்ப்புண்ணாகத்தான் இருக்கக் கூடும். எதுக்கும் டெஸ்ட் செய்துவிடலாம்’ என்று சொல்வதுதானே மருத்துவரின் attitude ஆக இருக்க வேண்டும்? ரிஸல்ட் வரும் வரைக்குமாவது மன உளைச்சல் இல்லாமல் இருக்கலாம்.  மாறாக ‘உனக்கு ஹெர்பெஸ்தான். ரத்தப் பரிசோதானையை முடித்துவிட்டு வா மருந்து கொடுக்கிறேன்’ என்பதுதான் சரியான முறையா என்று தெரியவில்லை.

உங்கள் அத்தனை பேரையும் நான் குறை சொல்லவில்லை. நேரடியாக அனுபவித்ததைத்தான் எழுதியிருக்கிறேன். மருத்துவர்களுக்கு வேண்டுமானால் நோயாளி என்பவன் இன்னொரு மெஷினைப் போல தெரியலாம். ஆனால் அவன் ரத்தமும் சதையுமான உயிர் அல்லவா? அவனுக்கு ஆயிரம் கவலைகளும் சொல்லொண்ணா பிரச்சினைகளும் இருக்கும் போது இன்னும் ஒரு இரண்டு நிமிடங்களை அவனுக்காக நீங்கள் ஒதுக்கலாம் அல்லவா? அடுத்த நோயாளி காத்திருக்கிறான் என்ற அவசரம் உங்களுக்கு. உயிரே போய்விடுமோ என்ற பயம் எங்களுக்கு. அவ்வளவுதான்!

Sep 11, 2013

மருத்துவமனைகள் காட்டும் மரண பயங்கள்

நாக்கில் சிறு புண் வந்திருந்தது. இது அவ்வப்போது வரும். குறிப்பாக டென்ஷன் ஆகும் போது. பதினேழு வயதிலிருந்தே வாதித்துக் கொண்டுதான் இருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பின் தேர்வு சமயங்களில் ஆப்பு வாங்கிவிடக் கூடும் என்று பயப்பட்ட போதெல்லாம் பொத்தல் விழுந்துவிடும். அப்படியே விட்டுவிட்டால் மூன்று அல்லது நாட்களில் ஆறிவிடும். ஆனால் அதற்குள் ஆளை ஒரு வழியாக்கிவிடும். சோறு உண்பதிலிருந்து யாரிடமாவது பேசுவது வரை எல்லாமே சிரமம்தான்.

இப்பொழுதெல்லாம் அலுவலகத்தில் தாறுமாறான வேலை. பிழிந்து எடுக்கிறார்கள். அது போக எழுத்து, வாசிப்பு, தூக்கமின்மை என்று நானாக டென்ஷனைத் தேடிக் கொள்கிறேன் என்பதால் அவ்வப்போது வாயில் தாண்டவம் நடக்கிறது. வீட்டில் இருப்பவர்களுக்கு கவலையாகிவிட்டது. கேன்சர் ஏதாவது வாங்கிக் கொள்வானோ என்று பயப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது, வெளிப்படையாக என்னிடம் சொல்லாவிட்டாலும் மருத்துவரிடம் பார்த்தாக வேண்டும் என்று அரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இங்கு மருத்துவரிடம் சென்றாலே தாளித்துவிடுகிறார்கள்- முந்நூறு ரூபாய்க்கு குறைவில்லாமல் தொடக்க தண்டம் வைக்கிறார்கள்.

அலுவலகத்திற்கு பக்கத்தில் ஒரு மருத்துவமனை இருக்கிறது. கொஞ்சம் பரவாயில்லை. இருநூறுதான் கேட்பார்கள். காட்டிவிடலாம் என்று போயிருந்தேன். விசாரித்த மருத்துவர் எதற்கும் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என்றார். வாய்க்கும் சிறுநீருக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஆனால் எழுபது ரூபாய்தான். சரி என்றாகிவிட்டது. மாலையில் ரிப்போர்ட் கொடுத்தார்கள். பத்து பதினைந்து கணக்கு எடுத்தால் ஒன்றிரண்டு தவறாக இருப்பது சகஜம்தானே? ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறது என்பதால் ‘கல்ச்சர்’ பார்த்துவிடலாம் என்றார்கள். இப்பொழுது வேட்டை ஆரம்பமாகிறது. இந்த ‘கல்ச்சர்’ டெஸ்ட்டுக்கு அறுநூறு ரூபாய் அழ வேண்டும். போய்த் தொலையட்டும் என்று கொடுத்துவிட்டேன்.

அந்த ரிப்போர்ட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னால் பிரச்சினையை முழுமையாக கண்டறிய முடியவில்லை என்றும் ஒரு தோல் சிறப்பு நிபுணரை பார்ப்பதுதான் உசிதம் என்றார். ‘நீங்களே ஒரு நல்ல டாக்டராக சொல்லுங்கள்’ என்றேன். பெயரைச் சொன்னார். அந்த டாக்டரும் பக்கத்தில்தான் இருக்கிறார். நல்லவேளையாக, அவரும் இருநூறு ரூபாய் மருத்துவர்தான். அப்படியே ஒவ்வொரு செலவாக கூட்டிக் கொள்ளுங்கள். கணக்கு பார்த்தால் இந்நேரம் செலவு ஆயிரம் ரூபாயை தாண்டியிருக்கும் பாருங்கள்.

அந்த தோல் டாக்டர் நிறைய கேள்விகளை எல்லாம் கேட்கவில்லை. 

‘அவ்வப்போது வருமா’ என்றார். 

‘ஆமாம் டாக்டர்’ என்றேன்.

‘எப்பவாச்சும் ஜிண்டில் வந்திருக்கா?’- ஜிண்டு என்றால் என்னவென்று கேட்கக் கூடாது.

‘ஒரு தடவ வந்திருக்குங்க’ இப்பொழுது முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டேன்.

‘வெளிநாடு போயிருக்கீங்களா?’ இது டாக்டரின் கேள்வி.

‘ஓ...ஏகப்பட்ட தடவை’ சொல்லிவிட்டு முகத்தை பெருமை பொங்க வைத்திருந்தேன்.

‘ஏதாச்சும் தப்புத்தண்டா....’ அவரைக் கேள்வியை முடிக்கவே விடவில்லை ‘நிர்வாணக் கடற்கரைக்கு போயிருக்கேன்..மத்தபடி பிஞ்சு......நெஞ்சு சார்’ அவரும் முடிக்கவே விடவில்லை.

‘ஹெர்பெஸா இருக்கும்ன்னு சந்தேகப்படுகிறேன்’ என்றார்.

‘அதென்ன சார் ஹெர்பெஸ்?’

‘பால்வினை நோய். இரண்டு வகை இருக்கிறது. அநேகமாக இது முதல் வகை. அல்ரெடி infected. பயப்பட வேண்டாம். இந்த டெஸ்ட் எல்லாம் செய்துடுங்க. குறிப்பா வீட்டில் தனியா இருங்க. எச்சில் மூலமாகவும் பரவும்’ என்று அவர் முடித்த போது வியர்த்துப் போனது. பீச்சுக்கு போனால் கூட பால்வினை நோய் பரவும் என்பது தூக்கிவாரிப்போட்டது. அதுவும் இந்த கடற்கரை புனித யாத்திரை எல்லாம் நடந்து இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும்.

அவர் எழுதிக் கொடுத்த டெஸ்ட்களுக்கு மொத்தமாக மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் ஆனது. இப்பொழுது பணம் பெரியதாகத் தெரியவில்லை. என்ன நோய் என்றே தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். ரத்தம் எடுப்பதற்காக டெஸ்ட் ஊசியை குத்தும் போதிலிருந்தே ஏகப்பட்ட சாமிகளிடம் வேண்டிக் கொண்டேன். ஒரு சாமியிடம் தேங்காய் உடைப்பதாகவும், இன்னொரு சாமியிடம் மொட்டை அடிப்பதாகவும், இன்னொரு சாமியிடம் கோவிலுக்கு வருவதாகவும் எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா.

ஹெர்பெஸில் இரண்டு வகை இருக்கிறது. முதல் வகை எச்சில் மூலமாகவோ அல்லது தோல் மூலமாகவோ பரவும்- பால்வினை நோய்தான் - ஆனால் ‘மேட்டர்’ நடக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. அமெரிக்காவில் ஐந்தில் ஒருவருக்கும் இருக்கிறதாம். கூகிள் புள்ளிவிவரம் அப்படித்தான் சொல்கிறது. குழந்தைக்கு கூட முத்தம் கொடுக்கக் கூடாதாம். நாம் சாப்பிட்ட தட்டு, காபி குடித்த டம்ளர் என எதன் மூலமாகவும் பரவிவிடும். இதுதான் எனக்கு வந்திருப்பதாகச் சொன்னார். 

இரண்டாம் வகை ஹெர்பெஸ் உடலுறவின் மூலம் பரவுகிறது. எதற்கும் அதையும் டெஸ்ட் செய்துவிடலாம் என்று எழுதிக் கொடுத்திருந்தார்.

ஹெர்பெஸ் வந்தால் ஆளைக் கொன்றுவிடாது. ஆனால் இதற்கு வைத்தியமே கிடையாது. ஆனால் ஒன்று- இந்த வைரஸை நம் உடலை விட்டு எந்தக் காலத்திலும் துரத்தவே முடியாது.  நம் நரம்புக்குள் போய் தங்கிக் கொள்ளும். அதற்கு Mood வரும் பொழுதெல்லாம் வாயில் புண் ஆக்கிவிடும். எப்பவாவது ஜிண்டு, கைவிரல்கள் என்றெல்லாம் கூட புண் ஆக்கிவிடும். அதே சமயம் மற்றவர்களுக்கும் பரவிவிடும் என்பதால் நம் வாழ்க்கை முறையையே மாற்ற வேண்டியிருக்கும். தனி தட்டு, தனி சோப்பு, தனி டம்ளர் என்று நம்மை நாமே தனிமைப் படுத்திக் கொள்வதுதான் நல்லது. கிட்டத்தட்ட வாழ்க்கையே சிறைச்சாலை மாதிரிதான்.

பரிசோதனைக்காக ரத்தத்தைக் கொடுத்துவிட்டு வந்ததிலிருந்து இதைப் பற்றித்தான் இணையத்தில் படித்துக் கொண்டிருந்தேன். இனிமேல் என்ன செய்ய வேண்டும், மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது என்ற கேள்விகளுக்கான விடை தேடுவது மிகச் சிரமமாக இருந்தது. எல்லாவற்றையும் விடக் கொடுமை மகனை எப்படி விலகச் சொல்வது என்று யோசித்த போது அழுகை வந்துவிட்டது. 

தற்கொலை செய்து கொள்வதும் கூட ஒரு விதத்தில் நல்லதுதான். தெரிந்தோ தெரியாமலோ என் மூலமாக மற்றவர்களுக்கு பரவாமலாவது தடுக்கலாம். ஆனால் குடும்பத்தை நிராதரவாக விட்டுப் போவதைவிடவும் அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது. அதனால் என்ன முடிவெடுப்பதாக இருந்தாலும் ரிஸல்ட் வந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தது. ஆனால் பதட்டம் தாறுமாறாக எகியிருந்தது. 

ஒவ்வொரு மணிக்கும் ஒரு முறை ஆய்வகத்திற்கு என்னையும் அறியாமல் ஃபோன் செய்திருந்தேன். மதியம் ஒரு மணிக்கு அழைத்த போது மாலை ஆறு மணிக்குத்தான் ரிசல்ட் கொடுக்க முடியும் என்றார்கள். வேலை எதுவும் செய்யப்பிடிக்கவில்லை. அலுவலகத்திற்கு வெளியிலிருக்கும் புல்வெளியிலேயே அமர்ந்திருந்தேன். நான்கரை மணி ஆகியிருந்தது. மருத்துவமனையிலிருந்து அழைப்பு. ரிஸல்ட் வந்துவிட்டது. ‘ரிப்போர்ட்டில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?’ என்று கேட்ட போது ‘அதை டாக்டர்தான் சொல்ல முடியும்’ என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த ஐந்து நிமிடத்தில் மருத்துவமனையில் இருந்தேன். மருத்துவர் வேறு யாருக்கோ வைத்தியம் செய்து கொண்டிருந்தார். காத்திருந்த ஒவ்வொரு நிமிடமும் கடும் மன உளைச்சலைத் தந்து கொண்டிருந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு உள்ளே அழைத்தார்கள். மருத்துவர் சில நிமிடங்கள் ரிப்போர்ட்டைத் திருப்பித் திருப்பி படித்துக் கொண்டிருந்தார். ஏதோ பிரச்சினை இருக்கும் போலிருக்கிறது என நம்பத் தொடங்கிவிட்டேன். பொறுமையாக கண் கண்ணாடியை சரி செய்தவர் ‘ரிப்போர்ட் நார்மல்’ என்றார். அப்பாடா! உயிர் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டது. ‘எனக்கு ஏற்கனவே தெரியும் சார்’ என்றேன். அவர் சிரித்தார். 

‘இது டென்ஷன் காரணமாக வரும் வாய்ப்புண். பி காம்ப்ளக்ஸ் மாத்திரை பதினைந்து நாட்களுக்குத் தருகிறேன்’ என்றார். இப்பொழுது எனது அத்தனை டென்ஷனும் குறைந்து கோபம் மம்மானையாக வந்தது. டென்ஷன் காரணமாக வருகிறது என்பது எனக்கு பதின்மூன்று வருடங்களுக்கு முன்பாகவே தெரியும். பி காம்ப்ளக்ஸ் எடுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்காது என்பதும் எனக்குத் தெரியும். மெளனமாக அமர்ந்திருந்தேன். 

பிரிஸ்கிரிப்ஷன் எழுதத் துவங்கினார். மனம் செலவுக் கணக்கை ஆரம்பித்திருந்தது. ரிப்போர்ட் செலவு, மருத்துவருக்கான ஃபீஸ் எல்லாம் சேர்த்து ஐந்தாயிரத்தை தொடும் என்ற போது ஆத்திரமாக வந்தது. பிரிஸ்கிரிப்ஷனில் பி காம்ப்ளக்ஸ் பதினைந்து எழுதிக் கொடுத்துவிட்டு சிரித்தார். வெளியே வந்து கிழித்து வீசிவிட்டு வந்தேன்.

உண்மையிலேயே பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய அவசியம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் செய்ய வைத்துவிட்டார்கள். என் மூலமாக குழந்தைக்கும் பரவும் என்று பயமுறுத்தினார்கள். அதனால்தான் பரிசோதனைகளுக்கே சம்மதித்தேன். கடைசியில் ஒன்றுமில்லை. ‘ஒன்றுமில்லை’ என்பதைச் சொல்ல ஐந்தாயிரம் ரூபாய் செலவு. இத்தனை செலவு செய்து பிக்காஸூல்ஸ் வாங்கிச் செல்லும் இனாவானா நானாகத்தான் இருக்கும். செலவு கூட தொலைகிறது என்று விட்டுவிடலாம். இரண்டு நாள் அவர்கள் ஏற்றிய டென்ஷன் இருக்கிறது பாருங்கள். இந்த டென்ஷன் காரணமாகவே புதிய புண் இன்னும் இரண்டு நாட்களில் உருவாகிவிடும். ஆனால் வாயில் மட்டும் வந்தால் பரவாயில்லை. எகிறிய பி.பிக்கு எல்லா இடங்களிலும் வரும். 

Sep 9, 2013

டாஸ்மாக்புரம்

டாஸ்மாக்புரம், குடிகாரன்பேட்டை என்றெல்லாம் மனதுக்குள் கொஞ்ச காலத்திற்கு முன்பே தோன்றியிருந்தாலும் குடிகாரர்களைப் பார்த்து எரிச்சல் வந்ததில்லை. அவனவன் சம்பாதிக்கிறான்; செலவு செய்கிறான் - எப்படியோ நாசமாகப் போகட்டும் என்றுதான் தோன்றும். ஆனால் முந்தாநாள் அத்தனை எரிச்சல் வந்தது. 

ஒரு திருமணத்திற்காக இந்த வாரம் ஊருக்கு வர வேண்டியிருந்தது. நான் மட்டும்தான் வருவதாக முடிவு செய்து வைத்திருந்தேன். இப்படித் தனியாக பயணிக்கும் போதெல்லாம் அரசுப் பேருந்துதான் ‘சாய்ஸ்’ ஆக இருக்கிறது. ஏனோ ரிசர்வ் பேருந்துகளில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் சகபயணியைப் பார்த்து பங்காளியைப் முறைப்பது போலவே தோன்றும்.அரசுப் பேருந்துகளில் அப்படியில்லை. சந்தைக்கடையைப் போலவோ அல்லது பள்ளிக்கூட க்ரவுண்டைப் போலவோ ஒருவிதமான இயல்புத் தன்மை விரவிக் கிடக்கும்.

மேலும் இந்தப் பேருந்துகள் சல்லிசாக இருக்கின்றன என்பது ஒரு காரணமாக இருந்தாலும் பேருந்தில் இருப்பவர்களின் பேச்சையும் செயலையும் சற்று கவனித்தால் இரண்டு மூன்று கதைகளைப் பிடித்துவிடலாம் என்பதுதான் முக்கியமான காரணம். இந்த முறையும் நான்கைந்து கதைகளோடு வீடு திரும்புவதாக திட்டமிருந்தது.

நினைப்பதெல்லாம் நடந்துவிடாமல் தடுப்பதற்கென தெய்வம் இருப்பதால் கடைசி நேரத்தில் திட்டத்தில் மாறுதல் செய்ய வேண்டியிருந்தது. அம்மாவும் உடன் வருவதாகச் சொல்லிவிட்டார். அவரை அழைத்துச் செல்வதற்கு தயக்கமாகத்தான் இருந்தது. மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வரும் நாட்களில் அரசுப் பேருந்துகளில் அவ்வளவு எளிதாக போய்விட முடிவதில்லை. அதுவும் அம்மாவுக்கு அறுபது வயதாகிவிட்டது. உடலில் சர்க்கரை வேறு- சீக்கிரம் சோர்ந்து போய்விடுகிறார்.

ஆனால் வேறு வழியில்லை. முன்பதிவு டிக்கெட்கள் தீர்ந்திருந்தன. கிடைத்த பேருந்தில் ஏறியாகிவிட்டது. சேலம் வரும் வரையிலும் பெரிய சிரமம் இல்லை. சமாளித்துவிட்டோம். 

அதுவும் சேலத்திலிருந்து ஈரோடு வரைக்கும் பிரைவேட் பேருந்து. DTSஇல் புதிய பாடல்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பிந்துமாதவி ஸ்கீரினில் வந்த போதெல்லாம் ‘எங்க காலேஜ் ஜூனியரைப் பாருங்க’ என்று அம்மாவிடம் பெருமை பேசிக் கொண்டிருந்தேன். 

இப்படியே ஈரோடு வந்த போது சற்று ஆசுவாசமாக இருந்தது. இன்னும் முப்பத்தைந்து கிலோமீட்டர்கள்தான். ஊரை அடைந்துவிடலாம் என்று நினைத்திருந்த சமயத்தில் அது அத்தனை சுலபம் இல்லை என்று தோன்றியது. ஈரோடு பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே மிகப்பெரிய கூட்டம் திமுதிமுவென ஓடி வந்தது. இந்தப் பேருந்து உடனடியாக சேலத்திற்கு திரும்புவதால் ஸீட் பிடிப்பதற்கான திமுதிமு அது. உள்ளே இருப்பவர்களுக்கு சுனாமியைப் பார்த்தது போல வியர்த்திருக்கக் கூடும். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை- எனக்கு மூன்றே முக்கால் துளிகள் அதிகமாகவே வியர்த்துப் போனது. இந்த பெருங்கூட்டத்திலிருந்து அம்மாவை காப்பாற்றிவிட வேண்டும் என முடிவு செய்து அவரை பின்புறமாக நிறுத்திக் கொண்டேன். பேருந்துக்குள் சில பெண்கள் கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னைவிடவும் கூட சற்று தைரியமாக இருப்பதாக நினைப்பதற்குள்ளாகவே ஜன்னல் வழியாக பையை வீசி ஒருவன் முதல் வரிசையில் இடம் பிடித்துவிட்டான்.

அடுத்த சில வினாடிகளில் பெரும் பிரவாகம் ஒன்று பேருந்துக்குள் நுழைந்துவிட்டது. ‘இறங்க கொஞ்சம் வழிவிடுங்க’ என்ற குரல்களை மிதித்தபடி இடத்திற்கான பெருவேட்டை தொடங்கியாகிவிட்டது. அது மிகக் குரூரமான வேட்டையாக இருந்தது. உள்ளே நுழைந்தவர்கள் கருணையே இல்லாமல் இடங்களை வீழ்த்தி தங்களின் புட்டத்திற்கு அடியில் அழுத்திக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு இடமாக வீழ்ந்து கொண்டிருந்தது. 

இன்னமும் வெளியேற இயலாமல் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையில் எந்த குறைவும் இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஐந்து தண்டுவன்கள் வெறித்தனமாக பேருந்துக்குள் முன்னேறினார்கள். அதை முன்னேறுதல் என்று எப்படிச் சொல்ல முடியும்? எதிர்ப்படும் ஒவ்வொருவரையும் வீழ்த்திவிட்டு ஸீட் பிடிக்கும் வெறி அது. சோமநாதர் கோயிலை அழித்த முகலாயர்களின் முரட்டுத்தனத்திற்கு சிறிதும் குறைவில்லாத முரட்டுத்தனம் அது.

இந்த தண்டுவர்களின் அழித்தொழிப்பு ஆரம்பாகும் போதே பேருந்துக்குள் இருந்த குழந்தைகள் வீறிடத் துவங்கின. பெரியவர்களின் இரைச்சலும், குழந்தைகளின் கதறலும் பேருந்தை போர்க்களமாக்கிக் கொண்டிருந்தன. இந்த நெருக்குதலில் இருந்து லாவகமாக தப்பித்திருந்த கண்டக்டர் கீழே இறங்கி  ‘சேலம் மட்டும் ஏறிக்க. வழியில எங்கயும் நிக்காது. சேலம் மட்டும் ஏறிக்க’ என்று தன் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த கண்டக்டரின் சுண்டுவிரலில் ‘ரோடு ரோலர்’ ஏறட்டும் என்று அந்தக் கணம் சபித்துத் தொலைத்து விட்டேன். பாவம் பிள்ளைகுட்டிக்காரனாக இருக்கக் கூடும்- எனது பத்தினி சாபம் பலிக்காமல் இருக்கக் கடவது.

கதறிக் கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்று பச்சைக் குழந்தை. ஒரு துணியால் போர்த்தி நெஞ்சோடு அணைத்து ‘வழிவிடுங்க’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் அந்தக் குழந்தையின் அம்மா. யாரும் செவிமடுப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண் எனக்கும் அம்மாவுக்கும் பின்பாக நின்று கொண்டிருந்தாள். தண்டுவன்கள் என்னைத் தாண்டும் போது போதை நெடி மூக்கு முடியை கருக்கியது. மிக அதிக அளவில் குடித்திருந்தார்கள். விடுமுறைக் கொண்டாட்டத்தை துவக்கியிருந்த அவர்கள் யாரைப் பற்றியும் யோசிப்பதாகத் தெரியவில்லை. மூன்று பேர் கையில் பை வைத்திருந்தார்கள். அவர்கள் பேருந்துக்குள் முன்னேறிக் கொண்டிருந்த போது போது முகத்தை மூன்று இஞ்ச் பின்புறமாக நகர்த்தி இடம் கொடுத்தவர்கள் தப்பித்துவிட்டார்கள். மற்றவர்கள் அவர்களின் பையை முகத்தோடு உரசிக் கொண்டு பிறகு வலி பொறுக்காமல் தேய்த்துக் கொண்டார்கள்.

மூன்றாவதாகச் சென்ற ஒரு தண்டுவன் அந்த பெண்மணியின் அத்தனை கட்டுக்காவலையும் மீறி அந்தக் குழந்தையின் தலையில் உரசிவிட்டான். அந்தக் குழந்தையோடு சேர்த்து பெண்ணும் கதறினாள். அவளது கதறல் அத்தனை அவலமாக இருந்தது. என்னவோ நடந்துவிட்டது என்று யூகிக்க பெரிய சிரமப்படத் தேவையிருக்கவில்லை. குழந்தையை போர்த்தியிருந்த துணியில் ஒரு சிவப்புக் கோடு துளிர்த்திருந்தது. அடுத்த சில வினாடிகளில் பேருந்து பரபரப்பாகிவிட்டது. ஆளாளுக்கு உள்ளே ஏற முயன்றவர்களை எட்டித் தள்ளி அந்தப் பெண் கீழே இறங்குவதற்கு வழி கொடுத்தார்கள். அந்தப் பெண்ணின் கணவனும் கூட்டத்தில்தான் இருந்திருக்கிறான். குழந்தையின் குருதியைப் பார்த்தவன் பதறினான். அந்தப் பெண் குழந்தையுடன் இறங்கிய அடுத்த வினாடி குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்தபடி ஆட்டோவுக்கு ஓடினான். குழந்தையின் பால்புட்டியோடு அந்தப் பெண்ணும் பின்புறமாகவே ஓடினாள். அவர்களுக்கு சண்டைப் போடுவதற்கெல்லாம் நேரம் இல்லை. அவர்களது ஆட்டோ சில கணங்களில் பேருந்து நிலையத்தில் இருந்து மறைந்து போனது. ஆட்டோ கண்களில் இருந்து மறைவதற்கும் பேருந்தை விட்டு மற்றவர்கள் கீழே வருவதற்கும் சரியாக இருந்தது. 

துளி நேரப் பரபரப்பிற்கு பிறகு பேருந்து இயல்பு நிலையை அடைந்திருந்தது. தண்டுவன்கள் ஜன்னல் ஓரத்தில் இடம் பிடித்திருந்தார்கள். அவர்களிடம் அந்தக் குழந்தையின் சார்பில் பேசுவதற்கு அந்த இடத்தில் யாரும் இல்லை. குழந்தையை உரசிய மூன்றாவது தண்டுவனின் காதில் இப்பொழுது ஹெட்போன் இருந்தது. கண்கள் போதையில் தொங்கிக் கொண்டிருந்தன. கீழே இறங்கி ஜன்னல் வழியாக அவனைப் பார்த்தேன். குழந்தை பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் பாட்டுக் கேட்க ஆரம்பித்திருக்கிறான். வெறி உச்சந்தலைக்கு ஏறியது. அவர்களை என்னால் செய்ய முடியும்? அந்தக் காதும் தலையும் நசுங்கிப் போகும்படி லாரி ஏறட்டும் என்று சபித்தேன். அவனுக்கு பிள்ளை இருந்தாலும் சரி, குடும்பம் இருந்தாலும் சரி- இந்தச் சாபம் பலித்துவிட வேண்டும் என்றுதான் எல்லை காத்த அய்யனாரிடமும் வேண்டிக் கொண்டேன்.