Aug 31, 2013

கல் என்றால் கல், தெய்வம் என்றால் தெய்வம்

ஒரு காரியத்தைச் செய்யலாமா அல்லது வேண்டாமா என்று படு குழப்பமாக இருக்கும் போது என்ன செய்வீர்கள்? ஊர்ப்பக்கங்களில் சாமியிடம் வரம் கேட்பார்கள். குத்துமதிப்பாக ஜாதகம் பார்ப்பது, கேப்மாரி சாமியாரிடம் வாக்கு கேட்பது என்பதைவிடவும் இது நல்ல ஐடியா. வெள்ளை மற்றும் சிவப்பு நிறப் பூக்களை சிலை மீது அடுக்கி வைத்து முதலில் சிவப்பு பூ  கீழே விழுந்தால் யோசித்துக் கொண்டிருக்கும் ‘காரியத்தை தவிர்த்துவிடலாம்’, வெள்ளைப் பூ கீழே விழுந்தால் ‘காரியத்தை தொடங்கிவிடலாம்’ என்று மனதுக்குள் நினைத்து வரம் கேட்பார்கள். இந்த டைப் வரம் கொடுப்பதற்கென்றே ஸ்பெலிஷ்ட் சாமிகள் உண்டு. ஸ்பெஷலிஸ்ட் அர்ச்சகர்களும் உண்டு. 

எங்கள் மாமாவுக்கு திருமணம் ஆகாமல் இருந்த போது ஜாதகம் எல்லாம் பார்க்கவில்லை. கெஞ்சனூர் மாரியம்மனிடம்தான் வரம் கேட்டார்கள். பூக்களை அடுக்கி வைத்து கண்களை மூடிக் கொண்டு அர்ச்சகர் நின்ற பொழுது வெள்ளைப் பூ பறந்து வந்து விழுந்தது என்பார்கள். திருமணத்தை முடித்துவிட்டார்கள். வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதான் அது. ஆனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை. 

சரி இதெல்லாம் எதற்கு இப்பொழுது? 

இதுவரைக்கும் நான் வரம் கேட்டதில்லை. குழப்பமாக இருந்தால் இஷ்டதெய்வத்தின் சிலைக்கு முன்பாக நின்று கண்களையும் உதட்டையும் பார்ப்பேன். சிரிக்கும் படி தெரிந்தால் ‘க்ரீன் சிக்னல்’ என்று அர்த்தப்படுத்திக் கொள்வேன். முறைப்பது மாதிரி தெரிந்தால் ‘ரெட் சிக்னல்’. இது பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்து தொடரும் வழக்கம். மூட நம்பிக்கையோ, நல்ல நம்பிக்கையோ- கிட்டத்தட்ட சரியாக நடப்பது போலத்தான் தெரிகிறது. இதே கான்செப்டில் ஒரு நாவல் வந்திருப்பது சமீபத்தில்தான் தெரியும்.

‘கல் சிரிக்கிறது’ என்று ஒரு நாவல்- லா.ச.ரா எழுதியது. லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் என்பதன் Short form லா.ச.ரா. அவரின் எழுத்தை வாசித்தவர்கள் நிச்சயம் சிலாகித்துவிடுவார்கள் என நினைக்கிறேன். அது ஒரு மாதிரியான காந்தம். சாம்பிள் பார்க்க விரும்புபவர்கள் அழியாச்சுடர்கள் தளத்தில் லா.ச.ராவின் சிறுகதைகளை முயற்சித்துப் பார்க்கலாம்.

இந்த நாவலும் அப்படித்தான்- எழுத்துக் காந்தம். வங்கியில் வேலை செய்துவிட்டு தனது சொந்த ஊரில் வந்து வசிக்கிறார் ஒரு பெரியவர். தனது முந்தைய தலைமுறையினர் உள்ளூர் கோயிலில் அர்ச்சகர்களாக இருந்தவர்கள். அதை இந்தத் தலைமுறையில் தொடர்ந்து கொண்டிருக்கும் தனது பெரியப்பாவின் மகனிடம் தனக்கும் அந்தக் கோயிலில் அர்ச்சனை செய்யும் உரிமை இருக்கிறது என்று வாதம் செய்து வாங்கிவிடுகிறார். பெரியப்பாவின் மகனுக்கு இதில் செமக் கடுப்பு. ஆனால் அவருக்கு வேறு வழியில்லை- கொடுத்துதான் ஆக வேண்டும். கொடுத்துவிடுகிறார்.

ஊருக்குள் வந்தவர் ஒரு நாடாரின் வீட்டு மாடியில் குடியிருக்கிறார். நாடாருக்கு பாத்திரக் கடை வியாபாரம். நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. நாடார் இவரை சாமியாராக இல்லாமல் சாமியாகவே கருதுகிறார்- அவர் ஏன் அப்படிக் கருதுகிறார் என்பதற்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் உண்டு. இந்த இடத்தை வாசிக்கும் போது உண்மையிலேயே சிலிர்த்தது. அவ்வளவு அட்டகாசமான மொழிநடை. அட்டகாசமான விவரிப்பு. என்னளவில் நாவலின் இந்த இடம் முக்கியமானது. இன்னொரு இடமும் இருக்கிறது. இரண்டு பத்திகள் தாண்டி அதைப் பற்றிச் சொல்கிறேன்.

அர்ச்சகரின் வாழ்க்கை இப்படியாக ஒரு விதத்தில் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருக்கும் போது யதேச்சையாக தனது வங்கியில் தனக்கு ஜூனியராக பணிபுரிந்த பெண்ணைப் பார்க்கிறார். 

நாவலில் இவர்களுக்கு இடையே இருப்பது ‘அப்பா-மகள்’ உறவு என்பது மாதிரியான வாக்கியங்கள் வருகின்றன. ஆனால் வாசிக்கும் போது அவர்களிடையே அதைத் தாண்டியும் ஒரு பந்தம் இருப்பது போலவே தோன்றுகிறது. காமம் என்றெல்லாம் அவசரப்பட்டு நம்மால் முடிவு செய்ய முடிவதில்லை. காதல் என்றும் சொல்லிவிட முடிவதில்லை. பனிமூட்டத்திற்கு பின்னால் மறைந்திருப்பது போன்ற ஒரு உறவு அது. அந்த ஜூனியருக்குத் திருமணம் ஆகியிருக்கிறது. ஒரு குழந்தையும் உண்டு. 

பெரியவரைச் சந்திக்கும் ஜூனியர் தனது வீட்டுக்கு அழைக்கிறாள். இவரும் போகிறார். அவளை ஒதுங்கச் சொல்லிவிட்டு இரவுச் சமையலை பெரியவரே செய்கிறார். அற்புதமான சமையல் அது. இரவு உணவிற்கு பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது தனது கணவன் சரியில்லாதவன் என்பதை சொல்லிவிட்டு உடைந்து போகிறாள். சரியில்லாதவன் என்றால் சூதாடி. சம்பாதிப்பதையெல்லாம் தொலைத்துவிடுகிறான். இவளது நகைகளும் ஒரு மார்வாடியிடம் அடமானத்திற்கு போய்விடுகிறது. இந்த விவகாரங்களைச் சொல்லும் போதும் அவர்களுக்கு இடையே இருக்கும் ‘வைப்ரேஷன்’ இந்த நாவலின் இன்னொரு முக்கியமான இடம். ஏதாவது ‘மேட்டர்’ நடந்துவிடக் கூடும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். இருவரும் அப்பா-மகள் மாதிரிதான். ஆனால் அழுக்குப் பிடித்த என் மனம் அப்படி நினைத்து தொலைத்துவிட்டது.

ஜூனியரின் நகை சிக்கியிருக்கும் மார்வாடி தனித்த கட்டை. நோயாளி ஜீவனும் கூட. சமையலுக்கு ஆள் தேடிக் கொண்டிருக்கிறான். அங்கு சமையல்க்காரனாக போய்ச் சேர்கிறார் ஐயர்வால் சார். அங்கேயே இரவில் தங்கிக் கொள்கிறார். நாவல் படு வேகம் எடுக்கிறது. அந்த மார்வாடியிடம் எப்படி அந்த நகையை ஆட்டையை போடுகிறார், அதன் பிறகு என்னவாகிறது என்பதுதான் நாவல். 

நாவலை முடித்த பிறகும் மனதுக்குள் மனதுக்குள் ஒரு எண்ணம் சுழன்று கொண்டேயிருக்கிறது- காரியம் வென்றால் ‘தெய்வம் சிரிக்கிறது’. காரியம் தோற்றுப் போனால் ‘கல் சிரிக்கிறது’.

லா.ச.ரா மொத்தமே ஆறு நாவல்கள்தான் எழுதியிருக்கிறார்.  ‘கல் சிரிக்கிறது’ அதில் ஒன்று. இதைப் பற்றி இணையத்தில் எந்தக் கட்டுரையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ் இலக்கியத்தை வாசிக்கும் போது லா.ச.ராவைத் தவிர்த்துவிட்டு நகர முடியாது. லா.ச.ராவை இதுவரை வாசித்திராவதவர்கள் இந்த நாவலிருந்தே கூடத் தொடங்கலாம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்கலாம்.

Aug 30, 2013

மின்னஞ்சல் பாதுகாப்பு

மணிகண்டன்,

இரண்டு மாதங்களுக்கு முன்பாக உங்கள் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் கிடைத்தது. I'm thoroughly enjoying your blog. நிச்சயமாக உங்களின் விவரிப்பு முறைகளை விரும்புகிறேன்.‘எழுத்தில்’ நீங்கள் மிகச் சிறந்த உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்.

சமீபத்தில் உங்கள் மின்னஞ்சல் கணக்கை யாரோ களவாட முயற்சித்தது குறித்து வாசித்தேன். கணக்கை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அனேகமாக உங்களுக்கு உதவக் கூடும்.

1. ஜிமெயிலில் நுழைந்த பிறகு பக்கத்தின் அடியில் வலது ஓரமாக ‘Last Account Activity' என்று ஒரு இணைப்பு இருக்கும். அதன் கீழாக இருக்கும் 'Details' ஐ க்ளிக் செய்தவுடன் கடைசி பத்து முறை எந்த நேரத்தில், எந்த கணினியில் இருந்து அக்கவுண்ட் திறக்கப்பட்டது என்ற விவரம் கிடைத்துவிடும். உங்களைத் தவிர வேறு யாராவது உங்கள் இமெயில் கணக்கை பயன்படுத்துகிறார்களா என்பதற்கான ‘க்ளூ’வை இது கொடுத்துவிடும்.

2. Two-step authentication என்று ஒரு முறை இருக்கிறது. அதை நீங்கள் நிறுவிக் கொள்வதன் மூலம் நீங்களோ அல்லது வேறு நபர்களோ வேறொரு புதிய கணினி அல்லது மொபைலில் இருந்து திறக்க முயற்சிக்கும் போது உடனடியாக உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துவிடும். ( இந்த முறை இந்தியாவில் இருக்கிறதா என்று தெரியவில்லை- விசாரித்துப் பார்க்க வேண்டும்)

3. இது பொதுவான அறிவுரை. கடவுச்சொல்லில் அம்மாவின் பிறந்தநாள், மனைவியின் பிறந்தநாள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மிக நீளமான அதே சமயம் உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து அறிமுகமான ஒன்றை வைத்து கடவுச்சொல்லை உருவாக்குங்கள். உதாரணமாக உங்கள் விருப்பமான  பாடலைக் கூட கடவுச்சொல்லாக்கலாம். ('naananayittalathunadandhuvittal’) இடையிடையே மானே, தேனே போல குறியீடுகளான %, $, # போன்றவற்றை ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் நுழைத்து கடவுச் சொல்லை உருவாக்கலாம். இப்படிச் செய்யும் போது கடவுச் சொல்லை மறந்துவிடாமல் இருப்பது அவசியம்.

4. அப்படியே ஞாபகம் வைத்திருப்பதற்கு கஷ்டமாக இருந்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. lastpass.com அல்லது keepass.info போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி கடவுச் சொற்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

அன்புள்ள ஹரி,

இந்தத் தகவல்கள் எனக்கு மட்டுமில்லாமல்  பிறருக்கும் நிச்சயம் பிறருக்கும் உதவக் கூடும் என்பதால் நிசப்தத்தில் இதை பதிவு செய்கிறேன். 

அன்புடன், 
மணிகண்டன்

சாரு- சில கடிதங்கள்

அன்புள்ள மணிகண்டன்,

சாருவை பற்றிய உங்களின் கருத்துக்கள் மிகச் சரியானவை.

ஆமாம், அவர் Eminently Readable. குறிப்பாக தமிழ் பத்தி எழுத்துகளில் சுஜாதாவுக்கு பிறகு அவர்தான் வருவார்.

நாம் சாருவை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் அவர் மீது மண்ணை வாரி வீச வேண்டியதிதில்லை. தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி விவாதிக்கும் போது நிச்சயம் சாருவை புறக்கணிக்க முடியாது.

நான் எழுத விரும்புவதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.

ரகு.
                

அன்புள்ள ரகு,

வணக்கம்.

நமக்கு ஒரு மனநிலை உண்டு. ஒன்று முழுமையாக பாராட்ட வேண்டும் அல்லது கீழே போட்டு மிதித்துவிட வேண்டும். கலவையாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உண்மையை எழுத வேண்டுமானால் அது நிச்சயம் கலவையாகத்தான் இருக்கும். ஒரு மனிதன் எப்படி முழுமையாக நல்லவனாகவோ அல்லது முழுமையான கெட்டவனாகவோ இருக்க முடியும்?

இந்தப் பிரச்சினையின் காரணமாக  முடிந்தவரை தனிமனிதர்களைப் பற்றி பேசுவதையோ அல்லது எழுதுவதையோ தவிர்த்துவிடுவதுதான் நல்லது. மீறிச் செய்தால் பகைமையைச் சம்பாதிப்பதுதான் கண்ட பலனாக இருக்கும். இந்தக் கட்டுரையைச் சாரு எப்படி எடுத்துக் கொள்வார் என நினைக்கிறீர்கள்? ஒருவேளை வாசித்திருந்தால் அவரது  பாணியில் It is a Shit என்றுதான் சொல்வார். 

அன்புடன்,
மணிகண்டன்
                             
                                                                        (2)

மணிகண்டனுக்கு,

இப்போது உணர்ச்சி வசப்பட்ட வாசகர்கள் என்ற அடையாளத்துடன் சில தவறான வழிகாட்டல் மூலம் சில கருத்துக்களை நிராகரிக்க அலைவது ஒரு கலாச்சாரம் என்று கூட ஆகிவிட்டது .ஓஷோவை போல சாருவும் இன்னும் சில காலத்திற்கு பிறகு மதிக்கப்படலாம் .


என்றென்றும்அன்புடன்
*கிருஷ்ணமூர்த்தி*

                                                                    (3)

அன்பின் மணி, 

சாருவை நிராகரிக்க கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளது போல எனக்கு சாருவை நிராகரிக்க சொல்ல உரிமை இருக்கின்றது. நியாயப்படுத்தல்கள் நபர்களுகிடையில் வேறுபடலாம். 

நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள் நாங்கள் எங்கள் பாதையில் செல்லுங்கள்.

(நீங்கள் உங்கள் கருத்தை நியாயப்படுத்த சும்மா ஒரு கிசுகிசு வை அடித்துவிட்டிருக்கின்றீர்கள். கிசு கிசுவை நம்பி நீங்க உங்க நியாயப்படுத்தல்களை தொடங்கியிருக்கின்றீர்கள் என்பதை நினைக்க பாவமாக இருக்கின்றது )

ஹாரிஸ் டேவிட்.

அன்புள்ள ஹாரிஸ்,                                                  

வணக்கம்.

உங்களின் உரிமையை நான் மறுக்கவில்லை. சாருவை நிராகரிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆனால் சாருவின் எழுத்துக்களை நிராகரிப்பதைத்தான் வேண்டாம் என நினைக்கிறேன். 

நீங்கள் எனக்கு எழுதியிருப்பது போல நமது பாதையை நம்மால் நிர்ணயம் செய்துவிட முடியுமா என்ன? நமது தொண்ணூற்றைந்து சதவீதம் பாதைகள் தானாகவேதான் அமைகின்றன. பயணிப்போம். ஏதாவது ஒரு புள்ளியில் நிச்சயம் சந்திப்போம் என நம்புகிறேன்.

மற்றபடி, கிசுகிசு என்பது தமிழர்களின் வஸ்துதானே? அதை ஏன் முழுமையாக நிராகரிக்க வேண்டும்? இதில் பாவப்பட என்ன இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.

மிக்க அன்புடன்,
மணிகண்டன்

தங்கமீன்கள்- காமம் இல்லாத காதல்

ஒரு லவ் ஸ்டோரி. அதுவும் பத்தாம் வகுப்புக் காதல். துள்ளுவதோ இளமை மாதிரியான அரசல்புரசல் எதுவும் இல்லாத புனிதக் காதல்- நேரடியாகக் கதைக்கு வந்துவிடுகிறேன்.

தனசேகர் வகுப்புத் தோழன். ஒரே பென்ச்தான். அவனுடைய அப்பா ஏதோ ஒரு வங்கியில் அலுவலராக இருந்தார். தனாவுக்கு கூடப் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை. ஒரே பையன் என்பதால் வீட்டில் செல்வாக்காக வைத்திருந்தார்கள். நல்ல சட்டை, வாட்ச் என்று வகுப்பில் சற்று வித்தியாசமாக இருப்பான். அவனுக்குத்தான் காதல். காதல் என்றால் காதல் அவ்வளவு ஆழமான காதல். அழகான காதலும் கூட.

அதற்கு முன்னாடி ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். எங்கள் பள்ளி இருக்கிறது பாருங்கள்- வறட்டு பாலைவனம். மருந்துக்கு கூட பெண்வாசம் இல்லாத பள்ளி. இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் படித்தோம். அத்தனை பேரும் கழுமுண்டராயன்ஸ். பழங் காலத்தில் எங்கள் பள்ளியில் பெண்களும் படித்தார்களாம். இடையில் ஏதோ ஒரு ஒழுக்க சிகாமணிக்கு வயிறு எரிந்திருக்கும் போலிருக்கிறது. பெண்களுக்கென எங்கள் ஊரில் தனியாக ஒரு பள்ளிக் கூடத்தை கட்டிவைத்துவிட்டார்கள். அப்பா காலத்தில் நடந்த இந்தக் கொடுமை எங்கள் காலம் தாண்டியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெண்வாசமே இல்லாமல்  ‘டென்ஷன்’ ஏறிக்கிடந்த கிடாய்கள் பாத்ரூம் சுவரில் ஒவ்வொரு டீச்சரையும் பற்றி எழுதி வைத்ததுதான் கண்டபலன். மற்றபடி ஆண்களுக்கான தனிப்பள்ளி கட்டி வைத்தால் ஒழுக்கம் கொழுந்துவிட்டு வளரும் என்பதெல்லாம் நம் கற்பனைதான்.

அப்படிப்பட்ட பள்ளியில் படித்த தனசேகர்தான் பத்தாம் வகுப்பிலேயே ஒரு பெண்ணை பிக்கப் செய்துவிட்டான். அந்தப் பெண் அவனுக்கு பக்கத்துவீடுதான். கல்பனா- இந்தக் கதையின் நாயகி. இந்தக் கதையை அவன் சொல்ல ஆரம்பிக்கும் போது நான் கேட்ட முதல் கேள்வியே ‘அழகா இருப்பாளாடா?’. அந்த அழகை வர்ணிக்கவே அவனுக்கு நான்கைந்து நாட்கள் தேவைப்பட்டது. கம்பராமாயாணம் தோற்குமளவுக்கு கல்பனாயனம் எழுதினான். முகத்தில் எனக்கு ஈயாடவில்லை. வயிறுதான் பற்றியெரிந்தது. இப்படிப்பட்ட அழகியை எப்படி பிடித்தான் என்று தெரியாமல் தாறுமாறாக டென்ஷன் ஏறிக் கொண்டிருந்தது. நான்கைந்து நாட்கள் கல்பனாயனம் முடிந்த பிறகு பிக்கப் படலத்தை ஆரம்பித்தான்.

அந்த விவகாரமே அலாதியானது.  நாங்கள் எல்லாம் சைட் அடிக்கக் கூட வழியில்லாமல் காய்ந்து கிடந்த போது அவன் ஐந்து ரூபாய் கொடுத்து ‘கோல்டு ஃபிஷ்’ வாங்கிக் கொடுத்துதான் இந்தப் புனிதக் காதலுக்கு பொட்டு வைத்திருக்கிறான். பக்கத்து வீடுதானே என்று அவளைப் பெற்றவர்களும் அசால்ட்டாக இருந்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்கு தங்கமீன்கள் என்று டைட்டில் வைக்க இதுதான் காரணம். டைமிங்காக இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். மற்றபடி படத்துக்கான விமர்சனமாக இருக்கும் என உள்ளே வந்திருந்தால் ஸாரி பாஸ்.

நாம் லவ் ஸ்டோரியைத் தொடரலாம். இந்த தங்கமீன்கள் வளரத் துவங்கும் போதே தனா-கல்ப்ஸ் காதல் பற்றி எரியத் துவங்குகிறது. முந்தின நாள் என்ன நடந்தது என்பதை அடுத்த நாளே என்னிடம் சொல்லிவிடுவான். அவன் சொல்லும் காதலில் எந்த இடத்திலும் காமமே இருக்காது. காமம் இல்லையோ அல்லது சென்சார் செய்துவிட்டானோ தெரியாது ஆனால் அது அற்புதமான ரொமான்ஸாக தொடர்ந்து கொண்டிருந்தது. தனா அளவுக்கு காதலை வர்ணிக்கும் திறமை இல்லை என்பதால் இந்த இடத்தில் ஒரு கலக்கலான ரொமாண்டிக் லவ் ஸ்டோரியை நமக்குத் தகுந்த விதத்தில் கற்பனை செய்து கொள்ளலாம்.

யாருமே இல்லாத மாலை நேரத்தில் இரண்டு பேரும் கைகளை பிடித்துக் கொண்டு நடப்பது, அவள் மொட்டை மாடிச் சுவரில் அமர்ந்து கொண்டிருக்க இவன் நின்று கொண்டே மணிக்கணக்கில் பேசியது, சிவப்பு நிற தாவணியில் தேவதையைப் போல அவள் வயல்வெளிகளில் நடந்தது என அவன் சொன்னவை எல்லாம் க்ளிஷேவாக இருந்தாலும் தனசேகர் சுவாரஸியத்தை கூட்டிக் கொண்டே போகப் போக ஒரு பெண்ணையாவது காதலித்தே தீர வேண்டும் என வெறியெடுத்துத் திரிந்தேன்.

வேலைக்கு அல்லது பள்ளிக் கூடத்திற்கு தினமும் கிளம்பிப் போவதற்கு சலிப்பாக இருந்தால் அந்த சலிப்பை போக்க ஒரே வழிதான் இருக்கிறது. நம்முடன் வேலை செய்யும் அல்லது படிக்கும் பெண்ணை காதலிக்கத் தொடங்கிவிட வேண்டும். அவளை தினமும் பார்க்க போகும் உற்சாகமே நமக்கான டானிக்காக அமைந்துவிடும்.  காதலிக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் இன்னொரு காதல் கதையையாவது பின் தொடர வேண்டும். அப்படித்தான் வயசுக்கு வந்த பருவமான பத்தாவது படிக்கும் போது பாலைவனத்தில் சிக்கியிருந்தாலும் தனாவின் காதல் கதையைக் கேட்பதற்காகவே தினமும் பள்ளிக்கு போவது என உற்சாகமாகியிருக்கத் துவங்கிய காலகட்டம் அது. 

பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கும் வரைக்கும் எனது ஒவ்வொரு நாளையும் தனது காதலினால் அதியற்புதமானவையாக மாற்றியிருந்தான். தேர்வுகள் தொடங்கிய பிறகு ஆளாளுக்கு பிஸியாக இருந்தோம். தனாவிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை. தேர்வுகள் முடிந்த பிறகு ‘சம்பளம் அதிகமாகக் கொடு, விடைத்தாள் திருத்தத்திற்கு காசு அதிகமாகக் கொடு’ என்று ஆசிரியர்கள் அரசாங்கத்தின் கழுத்தில் கத்தியை வைத்தார்கள். விடைத்தாள்களை திருத்தாமல் புறக்கணிப்பு செய்தனர். அதுவும் ஒரு விதத்தில் நல்லதாக போய்விட்டது. ஐந்து மாதம் விடுமுறை கிடைத்தது. 

ஐந்து மாதம் கழித்து பள்ளிக்குச் செல்லத் துவங்கினோம். நானும், தனாவும் வெவ்வேறு வகுப்பாகியிருந்தோம். தனாவின் காதல் கதையைக் கேட்டுவிட வேண்டும் என்று அவனைத் தேடிப் போனேன். அவன் பேசுவதைத் தவிர்க்க விரும்பினான். ‘என்னாச்சுடா?’ என்றதற்கு ‘எல்லாம் முடிஞ்சு போச்சு’ என்று நா தழுதழுக்கச் சொன்னான். பதறினேன். ஐந்து மாத இடைவெளியில் கல்பனா இறந்து விட்டாளாம். இரத்தப் புற்று நோய். ஆரம்பத்திலேயே கண்டறியாமல் சில மாதங்களுக்கு முன்பாக தெரிந்து கொள்வதற்குள் நோய் முற்றி மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். கடைசி நாட்களில் இருவரது பெற்றோருமே இவர்களின் காதலை ஏற்றுக் கொண்டார்களாம். அவள் இறப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பாக இவனது மடி மீது தலையை வைத்து ரத்தவாந்தி எடுத்திருக்கிறாள். அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கு காதலியாக பிறக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவள் மூச்சு நின்றுவிட்டது. இதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. அவனது கரங்களை அழுத்தமாக பிடித்துக் கொண்டேன்.

மனம் இப்பொழுது சற்று பாரமாகியிருக்கக் கூடும். இன்னும் சில வினாடிகள் ‘லேசாகவே’ வைத்திருங்கள். கதையை முடித்துவிடுகிறேன். பிறகு ஃபீல் செய்து கொள்ளலாம்.

கல்பனா படித்த பழனியம்மாள் பெண்கள் பள்ளியின் ஆசிரியை ஒருவர் எங்கள் வீதியில் குடியிருந்தார். அவரிடம் ‘கல்பனான்னு ஒரு புள்ள உங்க ஸ்கூலில் படிச்சுச்சே தெரியுமா? இந்த லீவுல அவ செத்துட்டாளாம்’ என்றேன். அவர் மூக்கு கண்ணாடியை மேலே ஏற்றிக் கொண்டு யோசித்துவிட்டு ‘அப்படியா?’ என்றார். மொத்தக் கதையையும் சொல்லி துக்கத்தை காட்டினேன். அடுத்த நாள் டீச்சர் வீட்டுக்கே வந்துவிட்டார். ‘கல்பனான்னு ஒரு பொண்ணும் படிக்கல..ரெஜிஸ்டரிலேயே தேடிட்டேன்...படிச்ச புள்ளைக அத்தனை பேரும் வந்து மார்க் ஷீட் வாங்கியாச்சு. யாரும் சாகல’ என்றார். பயங்கரக் குழப்பமாக இருந்தது. பள்ளிக்குச் சென்ற பிறகு முதல் வேலையாக தனாவைத் தேடினேன். விசாரித்த போது அசால்ட்டாகச் சொன்னான் ‘ஆமாண்டா...சும்மா உன்னை ஏமாத்தினேன்’. அவனிடம் வேறு என்ன பேசுவது? கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன். ‘இனாவானா’ என்று எதுவும் எழுதி ஒட்டியிருக்கவில்லைதான். ஆனால் எதற்கு அப்படி டபாய்த்தான் என்று தான் தெரியவில்லை. அதன் பிறகு அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இன்றைக்கு வரைக்கும்.

Aug 28, 2013

மிருகங்கள் சூழ் உலகு

பெங்களூரில் என் தம்பிக்கு பெரிய நண்பர் குழாம் இல்லை. இங்கு மட்டுமில்லை எங்குமே அவனுக்கு அப்படித்தான். கல்லூரியில் எப்படி இருந்தான் என்று தெரியவில்லை. அவன் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு யாருமே எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை.  அப்படியானவன் இங்கு அலுவலகத்தில் ஒரு நண்பரைப் பிடித்துவிட்டான். ராகுல். உத்தரப்பிரதேசத்துக்காரர். அவ்வப்போது வீட்டுக்கும் வந்திருக்கிறார். ராகுல் இங்கு வந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. இங்கு என்றால் பெங்களூரைச் சொல்கிறேன். வந்த இடத்திலேயே ஒரு கன்னடப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யாரும் அரிவாள் எடுத்துத் துரத்தவில்லை போலிருக்கிறது. மாறாக பெண் வீட்டார் ஒரு வீடு வாங்கிக் கொடுத்து சந்தோஷமாக இருக்கச் சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் நடந்து நான்கைந்து வருடங்கள் ஓடியாகிவிட்டது. 

நான்கைந்து வருடங்கள் சந்தோஷமாக ஓடினால் மூன்று வயதிலாவது ஒரு குழந்தை இருக்கக் கூடும் அல்லவா? ராகுலுக்கும் அப்படித்தான். மூன்றரை வயதில் குழந்தை. பையன். உத்தரப்பிரதேசமும், கர்நாடகமும் நல்ல காம்பினேஷன் என்பதற்கு அந்தக் குழந்தைதான் அத்தாட்சி. ஒரு முறை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்கள். அட்டகாசம் செய்துவிட்டான். ஒரு பென்சிலை எடுத்துக் கொண்டு வீட்டு ஹாலில் ஒரு படம் வரைந்தே தீருவேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான். நமது குழந்தையாக இருந்தால் நான்கு சாத்து சாத்தலாம். அந்தப் பையனை என்ன செய்வது? வரைந்துவிடுவானோ என்று பல்லைக் கடித்துக் கொண்டே பம்மிக் கொண்டிருந்தேன். பையனின் லோலாயத்தைத் தாங்க முடியாமலே இருபது நிமிடத்தில் கிளம்பிவிட்டார்கள்.

இந்த விவகாரம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. சமீபத்தில் ராகுலைப் பார்த்தேன். அடுத்த வருடம் பையனை எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்பதை விசாரிப்பதற்காக கொஞ்ச நாட்களுக்கு முன்பாக ராகுல் வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு பள்ளி இருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லி. ஆனால் ராகுல் விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டார். அவரே தினமும் காலையில் பையனை பள்ளியில் விட்டுவிடுவதாகவும், மாலையில் மனைவி வந்து மகனை பள்ளியிலிருந்து அழைத்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். ‘பையன் எப்படியிருக்கிறான்?’என்று கேட்ட போது சிரித்தார். அந்த சிரிப்பை ‘தூள் கிளப்புகிறான்’என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அப்படியானதொரு மந்தகாச சிரிப்பு.

இந்த காஸ்ட்லி பள்ளியின் செலவு ராகுலுக்கு கட்டுபடியாகும் என்பதை விடவும் பையனுக்காக என்ன செய்யவும் தயாராக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ராகுலின் வீட்டில் இரட்டைச் சம்பளம் இல்லை. ஒரு மாட்டு வண்டிதான். ஆனாலும் பையனுக்காக கணவனும் மனைவியும் உருகுகிறார்கள். பெற்ற பிள்ளை மீது யாருக்குத்தான் பாசம் இருக்காது? சிலருக்கு அதை வெளிக்காட்டத் தெரிகிறது. சிலருக்குத் தெரிவதில்லை. அவ்வளவுதான் வித்தியாசம். 

ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் வந்திருந்த ஜெயமோகனை பார்த்துவிட்டு- பார்த்துவிட்டு என்பதுதான் சரியான பதம்-பேசவெல்லாம் இல்லை- வீட்டில் தம்பி இல்லை. அந்த நேரத்தில் அவன் வெளியே போவதில்லை. என்னவென்று விசாரித்தால் ராகுல் வீட்டிற்கு சென்றிருப்பதாகச் சொன்னார்கள். வீட்டில் சற்று அமைதி நிலவியது. வீட்டிற்குள் நுழைந்தவுடன் கெட்ட செய்திகளைச் சொல்ல மாட்டார்கள் அல்லவா? அன்றும் அப்படித்தான். சிறிது நேரத்திற்கு பிறகாகச் சொன்னார்கள். ‘காலையிலிருந்து ராகுலின் மகனைக் காணவில்லை’. இதுதான் அந்தக் கெட்ட செய்தி. அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு எளிதில் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

விவகாரம் பெங்களூரில் நடக்கவில்லை. ராகுலின் மாமியார் தனது பேரனுடன் சம்பந்தி வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சம்பந்தி வீட்டார் உத்தரபிரதேசம் என்றாலும் இப்பொழுது போபாலில் இருக்கிறார்கள். காலை நேரத்தில் பக்கத்தில் இருக்கும் கடைக்கு தனது பாட்டிகளுடன் சென்றிருக்கிறான். சாக்லெட் ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு பாட்டிகள் காய்கறி பொறுக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். சில நிமிடங்கள்தான். திரும்பிப் பார்த்த போது கடை வாசலில் நின்று கொண்டிருந்த சிறுவன் மாயமாகிவிட்டான்.  

காலையிலிருந்து சல்லடை போட்டுத் தேடியும் தடயம் எதுவும் கிடைக்கவில்லை. சாக்கடைகள், குழிகள் என ஒவோரு இடமாக பார்த்திருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்களாகவே தேடுவதில் பயன் இல்லை என்பதால் மதியத்தில் காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் தேடியும் பையனைப் பற்றிய தகவல் இல்லை. ராகுலின் மனைவியிடம் மதியத்தில் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். எந்த அம்மாவினால்தான் தாங்கிக் கொள்ள முடியும். சுருண்டு விழுந்து நினைவிழந்துவிட்டார். 

ராகுலின் நிலைமை அதைவிடக் கொடுமை. மயக்கமாகிக் கிடந்த மனைவியை பார்ப்பதா குழந்தையைப் பற்றி விசாரிப்பதா எனத் தெரியாமல் கதறியிருக்கிறார். அன்றைய தினம் கருப்பு தினமாகிவிடும் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் கணவனும், மனைவியும். அடுத்த சில மணி நேரத்தில் தகவல் தெரிந்து நண்பர்கள் குவியத் தொடங்கிவிட்டார்கள். எந்த நண்பர்தான் வந்து என்ன செய்ய முடியும்? ராகுலின் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். போபால் கிளம்புவதற்கான ஆயத்தங்களை செய்யத் துவங்கியிருக்கிறார்கள். அவர்கள் கிளம்பிக் கொண்டிருந்த போதுதான் தம்பி அங்கே போயிருக்கிறான். அவசர அவசரமாக உணவை முடித்துவிட்டு நான் சென்ற போது ‘கால் டாக்ஸி’ அவர்களை அழைத்துச் சென்றிருந்தது. நண்பர்கள் கூட்டம் மெதுவாக கலைந்து கொண்டிருந்தது. ராகுலுக்கும் அவரது மனைவிக்கும் ஆறுதல் சொல்லவாவது ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் குழந்தையை நினைத்தால்தான் கொடுமை. துக்கத்தை அடக்க முடியவில்லை. 

எவ்வளவு அழுதிருக்கும்? அந்த அழுகையை அடக்க என்னவெல்லாம் செய்து கொண்டிருப்பார்கள் கடத்திப் போன சில்லரைகள்? ஏதோ ஒரு பொறுக்கியிடம் அந்தப் பிஞ்சுக் குழந்தை அனுபவிக்கும் கொடுமையை யோசிக்கக் கூட முடியவில்லை. அந்த ஞாயிற்றுக்கிழமையின் இரவை எப்படி கழிப்பது என்றே தெரியவில்லை. பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை பார்த்துவிட்டு பைக்கை கிளப்பினேன். வீட்டுக்கு முன்பாக அந்தக் குழந்தையின் ஒரு சோடி செருப்பு இறைந்து கிடந்தது. 

இன்று காலை வரை குழந்தை கிடைக்கவில்லையாம். மூன்றாவது நாள் இன்று. இனி அந்தக் குழந்தை கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இரண்டு நாட்களாக வேறு எதுவும் யோசிக்க முடியவில்லை. இனி அந்தக் குழந்தை வந்தால் வீடு முழுக்க கிறுக்கினாலும் கூட கவலைப் படக் கூடாது என்று ஒரு கணம் தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை.  

Aug 25, 2013

நான் அவ்வளவு வொர்த் இல்லைங்க

கடந்த சில நாட்களாக ஒரு பிரச்சினை. சமூகப்பிரச்சினை எல்லாம் இல்லை. ஒரு சில்லி பிரச்சினை. யாரோ ஒரு புண்ணியவான் மின்னஞ்சலைக் களவாடுவதற்கான முயற்சியைச் செய்திருக்கிறார். 

இருபதாம் தேதி மாலையிலிருந்து  மின்னஞ்சலையும் திறக்க முடியவில்லை; ப்லாக்கரையும் திறக்க முடியவில்லை. முயற்சிக்கும் போதெல்லாம் Account Locked என்று காட்டியது. ஆரம்பத்தில் சர்வரில் ஏதோ பிரச்சினையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அடுத்த சில மணி நேரங்கள் கழித்தும் பிரச்சினை தொடர்ந்த போதுதான் யாரோ முட்டுச்சந்தில் விட்டு  சாத்தப் போகிறார்கள் என்று பொறிதட்டியது. 

எதனால் இப்படி அக்கவுண்ட் பூட்டப்படுகிறது என கூகிளில் தேடிப்பார்த்தால் ஏதாவது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருந்தால் ஒரு நிமிடத்திலிருந்து இருபத்திநான்கு மணி நேரம் வரைக்கும் account ஐ lock செய்துவிடுவார்களாம். குண்டக்க மண்டக்க விளையாட முயற்சித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. பூட்டிக் கொண்டது.

லாக் ஆகிக் கிடப்பது பிரச்சினையில்லை. மின்னஞ்சல் அனுப்பவில்லையென்றால் குடியா முழுகிவிடும்? ஆனால் இருபத்து நான்கு மணி நேரத்தில் மின்னஞ்சலில் இருந்து எந்தத் தகவலை எல்லாம் வழித்தெடுக்கப் போகிறார்களோ என்று பயமாக இருந்தது. அப்படியொன்றும் ‘பெரிய’ விஷயம் சிக்காது என்ற நம்பிக்கையிருந்தாலும் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக இதே மெயில் ஐடியைத் தான் பயன்படுத்துகிறேன். ஏதாவது விவகாரமான தகவல்களை ‘அழிக்காமல்’ விட்டுவைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. துழாவினால் எதாவது தட்டுப்பட்டுவிடுமோ வாய்ப்பிருக்கிறது என்ற பயமும் இருந்தது. 

டெக்னாலஜியின் சிக்கலே இதுதான். ஒற்றை பாஸ்வேர்ட். கிடைத்தால் போதும் நமது மொத்த அந்தரங்கமும் பல்லிளித்துவிடும். சென்ற தலைமுறையில் இந்த பிரச்சினை எல்லாம் இருந்திருக்காது அல்லவா? அதிகபட்சமாக ஒரு டைரி அல்லது லவ்லெட்டர். அதையும் கிழித்து வீசிவிட்டால் ஒரு சாட்சியம் கிடையாது. இந்தத் தலைமுறைதான் சபிக்கப்பட்டிருக்கிறது. யாராவது நம்முடைய இமெயில், சாட்டிங், ஃபேஸ்புக் என்று எதில் கைவைத்தாலும் சிக்கல்தான்.

ஜிமெயில் போனால் கூட தொலைகிறது என்று விட்டுவிடலாம். மின்னஞ்சல்தானே? இன்னொரு கணக்கைத் துவக்கிக் கொள்ளலாம். ஆனால் அதே ஐடிதான் ‘நிசப்தம்’தளத்திற்கான ஐடியும் என்பதால் பதற்றம் அதிகம் ஆகியிருந்தது. சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கும் Regular readers, எழுநூற்றுச் சொச்சம் கட்டுரைகள் என அத்தனையும் போய் விடக் கூடும் என்று நினைத்தேன். அங்கலாய்ப்பாக இருந்தது. மறுபடியும் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி, வடிவமைத்து, எழுதி...நடக்கும்ம்ம்ம்ம்ம் ஆனால் நடக்காது மாதிரிதான். 

வேறு என்னதான் செய்வது? அலுவலகத்தில் ஜிமெயில் திறக்காது. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் ஏதாவது குறுக்குவழி இருக்கிறதா என ‘நோண்டி’ பார்க்கலாம். ஆனால் அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் வேலையின் காரணமாக விடுமுறை எடுக்க வாய்ப்பே இல்லை. எனவே இரவு நேரத்தில்தான் வழிகளைத் தேட வேண்டியிருந்தது. இருபத்து நான்கு மணி நேரம் தாண்டியும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இலவச மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்துபவர்கள் கூகிளின் கஸ்டமர் சர்வீஸூக்கு ஃபோன் செய்ய முடியாதாம். முடியாது என்பதைவிட கூடாது என்ற சொல்தான் சரியாக இருக்கும். ஓசியில் கணக்கு வைத்திருந்தால் பதில் சொல்லமாட்டார்களாம். நல்லவேளையாக கூகிளுக்கு வருடம் ஒரு சிறு தொகையை கப்பம் கட்டி வருவதால் அழைத்தவுடன் பதில் சொன்னார்கள். பிரச்சினையைச் சொன்னவுடன் கூடிய சீக்கிரம் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அதுவரை பொறுத்திருக்கும்படி அறிவுறுத்தினார் அந்தப் பெண்மணி. பொறுத்திருப்பது சரி; யாராவது கை வைத்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு சிரித்தபடியே ‘லாக் ஆகிவிட்டால் யாரும் தகவலை எடுக்க முடியாது’ என்றார். அப்பாடா. மூச்சை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். 

நேற்றைக்கு காலையில் மின்னஞ்சல் விடுவிக்கப்பட்டது. உள்ளே எந்த மாறுதலும் இல்லை. யாரும் கை வைக்கவில்லை போலிருக்கிறது. இருக்கட்டும். கூகிள்காரி சொன்ன பேச்சை காப்பாற்றிவிட்டாள். 

அக்கவுண்ட்டை ஹேக் செய்யுமளவிற்கு ‘வொர்த்’ என்று என்னை நினைத்த அந்த பிரகஸ்பதிக்கு கோடானு கோடி நன்றிகள். அவர் செய்த ஒரே நல்ல காரியம் மூன்று நாட்கள் நிசப்தத்தில் பதிவு இல்லாமல் பார்த்துக் கொண்டததுதான்.  அவருக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. மற்றவர்கள் கண்ணை மூடிக் கொள்ளுங்கள். ப்ளீஸ்!  “சார் அடுத்த முறை நீங்களும் சிரமப்பட்டு என்னையும் சிரமப்படுத்தாதீர்கள். ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். பாஸ்வேர்டை கொடுத்துவிடுகிறேன்”

Aug 20, 2013

சாருவை போகிற போக்கில் நிராகரிக்க முடியாது பாஸ்!

நேற்று சாருவை பற்றி எழுதியதற்கு ஒரு நண்பர் பொங்கியிருந்தார். இன்னொருவர் மின்னஞ்சலில் கருவியிருந்தார். விட்டால் ஆட்டோவில் நான்கைந்து தடியர்களை அனுப்பி அடிப்பார்கள் போலிருக்கிறது.

சாருவை துளி புகழ்வது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? இங்கு சாரு நிவேதிதாவை கிட்டத்தட்ட தீண்டக் கூடாத மனிதராக்கி பாடம் செய்து வைத்துவிட்டோம். சாருவை விமர்சிக்க பெரும்பாலானோருக்கு திரும்பத் திரும்ப ஒரு சில காரணங்கள்தான் கிடைக்கின்றன. பெண்ணிடம் ஆபாசமாக பேசினார், நித்யானந்தாவுக்கு காவடி தூக்கினார், பிறகு பல்டியடித்தார், தனக்குத்தானே பில்ட் அப் கொடுத்துக் கொள்கிறார் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா. சாருவின் மீதான இந்த அத்தனை விமர்சனங்களும் எனக்கும் உண்டு. கிடைக்கும் போதெல்லாம் ஒரு குத்துவிட்டு ஓடி வந்திருக்கிறேன். இப்பொழுதும் வாய்ப்பு கிடைத்தால் சாணத்தை ஒரு கை அள்ளி வீசிவிட்டு வருவேன். ஆனால் அவ்வளவுதானா சாரு நிவேதிதா?

சாருவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என அவரின் அத்தனை உழைப்பையும் இடது புறங்கையால் தள்ளிவிட்டு அவரை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம். தமிழின் முக்கியமான நாவல்களை வரிசைப்படுத்தும் போது சாருவின் எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும் அல்லது ஸீரோ டிகிரியை தவிர்த்துவிட்டு பட்டியலை முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. கோணல்பக்கங்களை தவிர்த்து விட்டு பத்தி எழுத்துக்களை வரிசைப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. பிறகு எப்படி சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளனை அவ்வளவு அலட்சியமாக நிராகரிக்க முடியும்?

உண்மையில் இங்கு சாருவை விமர்சிப்பது என்பது பொதுப்புத்தி மனநிலையாக மாறியிருக்கிறது. எல்லோரும் குத்துகிறார்கள்- நாமும் ஒரு குத்துவிடுவோம் என்பது மாதிரி. அவரது இணைய எழுத்துக்களை மட்டும் படித்துவிட்டு அவர் மீதான இணைய விமர்சனங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வெறுப்பை வளர்த்து வைத்திருப்பவர்கள்தான் அதிகம். உண்மையில் சாருவின் சிறுகதைகளையோ, நாவல்களையோ வாசித்துவிட்டு அதன் அடிப்படையில் எத்தனை பேர் விமர்சிக்கிறார்கள்? நிச்சயமாக பத்து சதவீதம் கூட இருக்காது.

சாருவின் அரசியல், அவரது தனிமனித செயல்பாடுகள் ஆகியவை மீதான அத்தனை விமர்சனங்களையும் தாண்டி அவரைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் இருக்கின்றன என நம்புகிறேன். நாம்தான் அவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிடுகிறோம். பழமையான சமூகம், கட்டமைக்கப்பட்ட கலாச்சாரம் போன்றவற்றை எதிர்த்து பேசவும் நமது மரத்துப் போன மனநிலையை அவ்வப்போது கலைத்துப் போடவும் சாரு போன்ற ஆட்கள் தேவை. இங்கு பெரும்பாலான எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் Orthodox ஆக இருப்பதுதான் தமக்கும் தமது எழுத்துக்கும் comfort என நினைக்கிறார்கள். பாலியல் பற்றியோ, நமது மூடத்தனமான நம்பிக்கைகள் பற்றியோ, நமது பொதுப்புத்தியின் மடத்தனத்தைப் பற்றியோ எல்லோரும் அமைதி காக்கும் போது முதல் கல்லை எறிபவராகத்தான் சாரு நிவேதிதாவை பார்க்க முடிகிறது. சமூகத்தில் இந்த சலனப்படுத்துதல் மிக அவசியம் எனத் தோன்றுகிறது. இந்தக் கலங்கலின் குறைந்தபட்ச பலனாக ஒரு liveliness ஆவது கிடைக்கிறது.

சாருவின் எழுத்தில் இன்னொரு விஷயம் readability. எந்த வகையான எழுத்திலும் வாசகனை கடைசி வார்த்தை வரைக்கும் இழுத்துச் சென்றுவிடும் வித்தை தெரிந்தவர் சாரு. என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும் சுவாரசியத்தை அளவுகோலாக வைத்து சுஜாதாதான் ‘டாப்’ என்று சொன்னால் அவருக்கு அடுத்து சாரு நிவேதிதாதான் என்பதை மறுக்க முடியாது. சுஜாதாவுக்கும், சாருவுக்குமான வித்தியாசம் மிக அதிகமானதாக இருக்கலாம். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ‘இந்த அளவுகோலில்’ வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சுஜாதா தொட்ட பல இடங்களை சாரு தொடவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் சாருவின் பல ஏரியாக்களை சுஜாதா தொட்டதில்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் இருவரையும் ஒரே நேர்கோட்டில் வைப்பது ‘சுவாரசியம்’ என்பதன் அடிப்படையில் மட்டும்தான்.

எழுத்து சுவாரசியமாக இருந்தாலும், non-conventional ஆக இருந்தாலும் மட்டும் போதுமா? சாருவை விமர்சிக்க காரணங்கள் இல்லையா என்ன?

அதுதான் முதல் பத்தியில் பேசினோமோ! சாருவின் அரசியல், தனிமனித செயல்பாடுகள் என வைத்து பிரித்து மேயலாம். ஆனால் அதைச் செய்வதற்கு முன்பாக இங்கிருக்கும் ஒவ்வொரு எழுத்தாளனின் முகமூடியையும் சற்று கழட்டி பார்க்கலாமா? துரதிர்ஷ்டவசமாக இங்கு சாருவை Expose செய்யத்தான் ஆட்கள் இருக்கிறார்கள். மற்றபடி தங்களது காமத்தை மழைக்கவிதையிலும், வண்ணத்துப் பூச்சியின் ஓவியத்திலும் மறைத்துத் திரியும் படைப்பாளிகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தனது பேத்தி வயதுடைய பெண்ணுடன் மாதக்கணக்கில் தங்கியிருக்கும் பெரிய எழுத்தாளனை ஆதர்சமாக வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் கிசுகிசுவாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இந்த அந்தரங்கங்கள் இலக்கிய உலகில் இருப்பவர்கள் பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் யாரும் இதைப் பற்றி பேசுவதில்லை. அவரது ‘ட்ரவுசரை நாம் ஏன் கழட்ட வேண்டும்?’ என விட்டுவிடுகிறார்கள். ஆனால் சாருவை மட்டும் பிழிந்து விடுகிறார்கள். சாரு சாட்டிங்கில் வழிந்தால் கூட சிக்க வைத்து சீட்டியடிக்கிறார்கள். 

இதையெல்லாம் சாருவை புனிதமானவர் ஆக்குவதற்கோ அல்லது அவர் செய்வதையெல்லாம் நியாயப்படுத்துவதற்காகவோ சொல்லவில்லை. இப்பொழுதும் கூட சாருவின் செயல்பாடுகளை, காமெடிகளையெல்லாம் கலாய்ப்பதாக இருந்தால் படு குஷியாகவே செய்யலாம். ஆனால் போகிற போக்கில் ‘சாருவின் எழுத்துக்களை நிராகரிக்க வேண்டும்’ என்பதையோ அல்லது ‘அவர் மீது எப்பொழுதும் சாணம் அடித்துக் கொண்டேயிருக்க வேண்டும்’ என்பதையோ சொல்வதற்கு முன்பாக மிகச் சிறிய அளவிலாவது Justification கொடுக்க வேண்டும். அப்படியொரு Justification ஐ யாராலும் கொடுக்க முடியாது என்பதை மிக அழுத்தமாக நம்புகிறேன்.

Aug 19, 2013

அதற்குள் என்ன அவசரம்?

சுஜாதா, சாருவுக்கு பிறகு அந்த வரிசையில் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் எழுதுவதற்கு இந்தத் தலைமுறையில் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் ஏதோ கொஞ்சம் பயந்து பயந்து எழுதுவது போலவே தெரிகிறது. நக்கல், நையாண்டி, கொண்டாட்டம், விமர்சனம், இலக்கியம் என கலந்து கட்டி அடிக்க ஒரு ஆள் இல்லாதது ஒரு குறையாகவே இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நான் என்ன நினைப்பது செந்தில்குமார்? 

திருவள்ளுவரைப் போல நறுக்குத் தெரித்தாற்போல எழுதக் கூடிய ஒரு எழுத்தாளரைக் கூட இரண்டாயிரம் வருடங்களாக பார்க்க முடியவில்லை என நினைக்கிறேன். சீவகசிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவரைப் போல இலக்கியச் சுவையுடன் காமத்தை எழுத ஒருத்தரும் இல்லையே என நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டேதான் போகலாம்.

அது இருக்கட்டும். உங்கள் கேள்விக்கே வருவோம். 

இந்தத் தலைமுறை என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? இருபத்தைந்திலிருந்து முப்பத்தைந்து அல்லது நாற்பது வயதுக்குள்ளான எழுத்தாளர்களையா? இந்த வயதில் இருப்பவர்கள் அதிகபட்சமாக எத்தனை வருடங்களாக எழுதிக் கொண்டிருப்பார்கள்? பத்து வருடங்கள்? சுஜாதாவின் இடத்தையும், சாருவின் இடத்தையும் அடைவதற்கு பத்து வருட உழைப்பு போதுமானது என்று நினைக்கிறீர்களா? 

ரொம்பக் கஷ்டம். 

சுஜாதா தனது இடத்தை அவ்வளவு சாதாரணமாக அடைந்து விடவில்லை. அந்த மனிதர் தன் வாழ்நாளின் இறுதிவரை எழுதிக் கொண்டிருந்தார். அதுவும் வெறித்தனமாக. ஒரே சமயத்தில் ஏழு வார இதழ்களில் ஏழு தொடர்கதைகளை எழுதிக் கொண்டிருந்தார் என கேள்விப்பட்டிருக்கிறேன். நினைத்துப் பார்த்தாலே கண்ணைக் கட்டுகிறது. அப்படியிருந்தும் கூட ‘சுஜாதா நல்ல சிறுகதைகள் என்று தோன்றக்கூடிய சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார்’ என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்பில் வாரியிருந்தார் குவளைக் கண்ணன்.

எழுத்து என்பது தொடர்ச்சியான பயிற்சி என்பதுதான் என் எண்ணம். எழுதுவதற்கான ‘கரு’வை யார் வேண்டுமானாலும் கற்பனை செய்துவிட முடியும். ஆனால் அதை எழுத்தில் கொண்டு வருவதற்கு பயிற்சி அவசியம். அப்படியே எழுதினாலும் கூட நீங்கள் குறிப்பிடும் சுவாரசியத்தன்மை என்பது அவ்வளவு எளிதாக வந்துவிடுவதில்லை என்று நினைக்கிறேன். தொடர்ச்சியாக வாசிப்பதும் இடைவிடாத எழுத்துப் பயிற்சியுமே அதை சாத்தியமாக்குகிறது. அதுவும் கூட உடனடியாக நிகழ்வதில்லை- பல நூறு பக்கங்களை எழுதி முடித்த பிறகு. அப்பொழுதும் கூட அந்த சுவாரசியத்தை உச்சம் என்று சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. நம் எழுத்து subconscious Mind இல் தொடர்ச்சியாக Tune ஆகிக் கொண்டேதான் இருக்கிறது. 

சுஜாதாவும், சாருவும் அல்லது நாம் கொண்டாடும் வேறு எந்த எழுத்தாளரும் இந்த சூட்சமங்களின் வழியாகவே அவர்களுக்கான இடத்தை அடைந்திருக்கிறார்கள் என நம்புகிறேன். இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் என்று நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு யாரைக் கற்பனை செய்தாலும் இப்பொழுதுதான் எழுதவே ஆரம்பித்திருப்பார்கள். (இப்பொழுது என்பது பத்து அல்லது பதினைந்து வருட காலம் என்று வைத்துக் கொள்ளலாம்). அதற்குள் அவரின் இடத்தை பிடிக்கிறேன், இவரின் இடத்தை பிடிக்கிறேன் என Claim செய்வது கண்ணைக் கட்டி கொண்டு கிணற்றுக்குள் குதிப்பது போலத்தான் - அதுவும் காய்ந்து போன வெற்றுக் கிணற்றுக்குள் குதிப்பது.

முதலில் நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது. Committed ஆக எழுத வேண்டியிருக்கிறது. நீண்டகாலம் இயங்க வேண்டியிருக்கிறது, தலைக்கனம் இல்லாமல் இருக்க வேண்டியிருக்கிறது. இன்னும் என்னென்னவோ ‘வேண்டியிருக்கிறது’.

இன்னும் இருபது வருடங்களாவது போகட்டும். என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்? வாசகர்கள் மாறியிருக்கக் கூடும், மொழி மாறியிருக்கக் கூடும், எழுத்து நடை மாறியிருக்கக் கூடும், இன்று எழுதுபவர்கள் ஒருவர் கூட ஸீனில் இல்லாமல் போயிருக்கக் கூடும் அல்லது வேறு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கக் கூடும். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். 

தெளிய வைத்து, தெளிய வைத்து

சனிக்கிழமையன்று நள்ளிரவு தாண்டிய நேரத்தில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டிருக்கிறது. பெங்களூரில் அது சாதாரண விஷயம்தான். தெருவெங்கும் ஏகப்பட்ட நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கும். கார்போரேஷன்காரர்கள் அவ்வப்போது பிடித்துக் கொண்டு போவார்கள். கொல்வது இல்லை- கத்தரித்துவிடுகிறார்கள். ஆனாலும் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. 

பெயர்தான் தெருநாயே தவிர, இவை தங்களுக்குள் ஏரியா பிரித்துக் கொள்கின்றன. பழசோ/புதுசோ- தங்கள் ஏரியாவுக்குள் கிடைப்பனவற்றை அந்த ஏரியா நாய்கள் மட்டும்தான் தின்ன முடியும். கல்யாணம், காதுகுத்து, எழவு என எதையாவது சாக்காக வைத்து தங்களது ஏரியாவுக்குள் புதிதாக ஏதாவது நாய் தென்பட்டால் அவ்வளவுதான். பிடித்து குதறிவிடுகின்றன. இதெல்லாம் ஓகேதான். இரவு நேரத்தில் அலுவலகம் முடித்து வரும் போதோ அல்லது அதிகாலையில் ஊரிலிருந்து வரும் போதோ இவை செய்யும் அதிகாரம் இருக்கிறது பாருங்கள். சற்று பயந்தவனாக இருந்தால் கால்சட்டையை நனைக்க வேண்டியிருக்கும்.

கிராமப்புற நாய்களுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம். குனிந்து கல் எடுத்தால் ஓடி வந்து நம் மீது ஏறிவிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் நகர்ப்புற நாய்கள் குரைத்தால் தைரியமாக குனிந்து கல் எடுப்பது போல பாவ்லா காட்டலாம். கல்லை எடுக்கவெல்லாம் தேவையில்லை. பாவ்லா போதும். சற்று தூரத்திற்கு ஓடிவிடும். அதெல்லாம் இருக்கட்டும். நாய்கள் தங்களுக்குள் எப்படி பாகம் பிரிக்கின்றன என்று தெரியுமா? எனக்குத் தெரியாது. சேகர் தத்தாத்ரியின் புலிகளைப் பற்றிய ஒரு குறும்படத்தில் புலிகளும் தங்களுக்குள் பாகம் பிரித்துக் கொள்கின்றன என்று பார்த்த ஞாபகம் இருக்கிறது. அவை தங்களின் எல்லையைக் குறிக்க மரத்தில் சிறுநீர் கழித்துவிட்டு போகும். ‘இந்த ஏரியாவைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக் கூடாது’ என்று அர்த்தமாம்.

நாயும், புலியும் இருக்கட்டும். சனிக்கிழமை நள்ளிரவில் நாய் குரைத்தது என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடலாம். இந்த குரைப்புச் சத்தம் எனக்கு கேட்கவில்லை. தூங்கிய பிறகு பேயறைந்தாலும் கூட எனக்கு கேட்பதில்லை. அம்மா அப்பாவுக்குத்தான் கேட்டிருக்கிறது. எழுந்து போய் கதவுகள் நன்றாக தாழிடப்பட்டிருக்கிறதா என பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதுவே ஊரில் இப்படி கேட்டிருந்தால் கதவைத் திறந்து போய் பார்த்து இருப்பார்கள். கதவைத் திறந்து கொண்டு வெளியே வருபவர்களுக்குத் துணையாக இன்னும் இரண்டு மூன்று வீட்டுக்காரர்கள் வந்து நின்றிருப்பார்கள்.

இங்கு அப்படியில்லை. பகலில் கூட வீட்டைப் பூட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சேல்ஸ் ரெப்களின் தொந்தரவு ஒரு பக்கம் என்றால் அவர்கள் உண்மையிலேயே விற்பனைப் பிரதிநிதிகள்தானா என்ற குழப்பம் இன்னொரு பக்கம். பகலிலேயே இதுதான் நிலைமை என்றால் இரவில் மட்டும் வெளியே போக முடியுமா என்ன? அவசரப்பட்டு வெளியே சென்றால் நாம் மட்டும்தான் தனியாக நின்று கொண்டிருப்போம். 

ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்திருக்கிறார்கள். எதிர்வீட்டில் அதுவரை எரிந்து கொண்டிருந்த விளக்கும் அணைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் அதே பயம்தான் போலிருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் அமைதியாக இருந்திருக்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் வெளியில் கூச்சல் குழப்பமாக இருக்கவே, அப்பா வந்து என்னையும் தம்பியையும் எழுப்பினார். நாங்கள் அரைத் தூக்கத்திலேயே ஜன்னலில் பார்த்த போது வீட்டிற்கு முன்பாக ஓரிருவரின் நடமாட்டம் தெரிந்தது. பக்கத்து வீடுகளில் கதவு திறக்கப்படுவதை உறுதிப் படுத்திக் கொண்டு வெளியே போனால் ஒரே பரபரப்பு. எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு வீட்டில் திருடன் புகுந்திருக்கிறான். எத்தனை பேர் நுழைந்தார்கள் என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஒருவன் மட்டும் சிக்கிக் கொண்டானாம்.

அந்த வீட்டு ஓனர் சற்று முரட்டுத்தனமான கன்னடக்காரர். வீட்டில் தனியாகத்தான் இருந்திருக்கிறார். டிவி பார்த்துக் கொண்டிருந்தாராம். ‘சத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்றார். அந்நேரத்தில் ஒலியைக் குறைத்து எதைப் பார்த்துக் கொண்டிருந்தாரோ! அது அவரது பர்செனல்.விட்டுவிடலாம். திருட வந்த பையன்கள் கோகோகோலோ பாட்டில் அளவில் கியாஸ் சிலிண்டருடன் வந்திருக்கிறார்கள். அதன் நுனியில் வெல்டிங் சமாச்சாரங்களை பொருத்தி கதவின் தாழ்பாளைச் சுற்றிலும் கருக்கியிருக்கிறார்கள். ஏதோ கருகிய வாசம் உள்ளே வருகிறது என்பதை மோப்பம் பிடித்த வீட்டு ஓனரின் குறுக்குப்புத்தி படு வேகமாக வேலை செய்திருக்கிறது. டிவி, எரிந்து கொண்டிருந்த விளக்கு என அத்தனையும் அணைத்துவிட்டு ஒரு பெரிய துண்டு ஒன்றை எடுத்து தனது முகம் முழுவதையும் மூடிக் கொண்டிருக்கிறார்.

அதே வேகத்தில் சமையலறையிலிருந்து மிளகாய்த் தூளை எடுத்துக் கொண்டு போய் கதவுக்கு அருகில் தயாராக நின்று விட்டாராம். சில நிமிடங்களுக்கு பிறகு கதவைத் திறந்து கொண்டு அவர்கள் உள்ளே வரவும் வெறித்தனமாக கத்தியபடியே பொடியைத் துல்லியமாக முகத்தில் அடித்திருக்கிறார். இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்தவர்கள் அவரது சத்தத்தினாலோ என்னவோ சிக்கிக் கொள்ளக் கூடும் என்று தலை தெறித்துவிட்டார்கள். முதலில் வீட்டிற்குள் காலடி வைத்தவன் மட்டும் மிளகாய் காரத்தின் நெடியால் நகர முடியாமல் விழுந்துவிட்டான். அவன் மீது போர்வை ஒன்றைப் போட்டு மேலே அழுத்தியபடியே அவர் கத்தவும் வீதியில் இருந்த மக்கள் சேர்ந்துவிட்டார்கள்.

நாங்கள் போகும் போது திருடனைச் சுற்றி இரண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். சிக்கிக் கொண்டவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. யாரும் அவனை பிடிக்கவில்லை என்றாலும் அவனால் எழக் கூட முடியவில்லை. எரிச்சல் தாள முடியாமல் கதறிக் கொண்டிருந்தான். உடனடியாக போலீஸை அழைக்கலாம் என்றார் ஒருவர். நாமே முதலில் தண்டிக்க வேண்டும் என்றார் இன்னொருவர். மெஜாரிட்டி ஆதரவுடன் இரண்டாமவர் வென்றுவிட்டார். சிக்கியவனை சிதைப்பதற்காக வெளியே இழுத்துச் சென்று மின்கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கத் துவங்கினார்கள். இத்தனை அடியை ஒருவனால் தாங்க முடியும் என்பதை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன். ஆளாளுக்கு அடித்தார்கள். மனைவியின் மீது, மேனேஜரின் மீது இருந்த கோபத்தையெல்லாம் இறக்கி வைக்க ஒருவன் வகையாகச் சிக்கிக் கொண்டான் என்ற ரீதியில் தாக்குதலில் இறங்கியிருந்தார்கள். ‘போதும் விட்டுவிடலாம்’ என்று யார் சொன்னாலும் அவர் மீது எரிந்து விழுந்தார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அடித்த பிறகு மணி நான்கைத் தாண்டியிருந்தது. பிறகு ‘போனால் போகட்டும்’ என்பது போல போலீஸூக்கு தகவல் கொடுத்தார்கள். அவர்கள் அடுத்த அரை மணிநேரத்திற்குள் வந்தார்கள். என்றாலும் அந்த அரை மணி நேரம் என்பது அவனுக்கு கிட்டத்தட்ட மரணவாசல்தான். 

போலீஸ் வருவதற்குள் எத்தனை அடிக்க முடியுமோ அடித்து விட வேண்டும் என்ற வெறியில் கும்மித் தள்ளிவிட்டார்கள். முகம் எல்லாம் பிய்ந்து தொங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் கத்தக் கூட முடியவில்லை. 

போலீஸார் அவனை அடிக்கவில்லை. குடிக்கத் தண்ணீர் கொடுக்கச் சொன்னார்கள். பாத்ரூம் mug ஒன்றில் தண்ணீரை பிடித்து வந்து ஊற்றினார்கள். அவன் குடித்ததைவிடவும் அதிகமாக கீழே ஓடியது.  ‘பத்து மணிக்கு இரண்டு மூன்று பேர் ஸ்டேஷனுக்கு வாங்க’என்று சொல்லிவிட்டு பைக் நடுவில் அவனை அமர வைத்து இரண்டு போலீஸாரும் அழைத்துச் சென்றார்கள்.  ‘இனிமே திருட மாட்டேன். விட்டுடுங்க’ என்று ஈனஸ்வரத்தில் சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கும் அவன் சொல்வதில் உண்மை இருப்பதாகத்தான் தோன்றியது. 

Aug 17, 2013

ரெட்லைட் ஏரியாவின் கதை

“அவன் இரண்டு ரூபாயை எடுத்து அவள் கையில் தருகிறான். அதை அவள் வாங்கி நிதானமாக அவளது இடுப்பில் முடிந்து கொள்கிறாள். அவன் அவளது அழகை ரசித்த வண்ணம் நிற்கிறான். அவள் பாயைச் சரிப்படுத்திவிட்டு, தலைமயிரை விலக்கி பாயில் படுத்துக் கொண்டு ஜம்பர் முடிச்சை அவிழ்த்துவிடுகிறாள்.”

(ஜம்பர்- ஜாக்கெட்)

ஒரு புத்தகத்தை வாசிக்கத் துவங்கும் போது இரண்டாம் பக்கத்திலேயே மேற்சொன்ன ஒரு ‘ஸீன்’ இருக்கிறது. பிறகு எப்படி மூடி வைப்பது? மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு பரபர மனநிலையுடன் தொடர்ந்தால் இரண்டாம் பக்கத்தில் மட்டுமில்லை- கிட்டத்தட்ட ஒவ்வொரு நான்கைந்து பக்கத்திற்கும் ஒரு ‘ஸீன்’.  

ஐம்பது பக்கத்தில் ஒரு குறுநாவல்- இடைவெளி இல்லாமல் வாசித்தால் ஒன்றரை மணி நேரத்தில் முடித்துவிடலாம். ‘குறத்திமுடுக்கு’தான் அந்த நாவல். 

நாவலை எழுதிய ஜி.நாகராஜன் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் சிறந்த புலமை பெற்றிருந்தாராம். அந்தக் காலத்திலேயே பட்டதாரி. அந்தக் காலம் என்றால் 1929 ஆம் ஆண்டில் பிறந்தவர். இன்றைக்கு மாதிரி வீதிக்கு வீதி கல்லூரி இல்லாத காலத்தில் பட்டம் வாங்குவது என்பதெல்லாம் பெரிய விஷயம்தானே? வேலை, சம்பாத்தியம் என்று இருந்திருந்தால் இரண்டு தலைமுறையாவது ‘உட்கார்ந்து சாப்பிடும்’அளவுக்கு சேர்த்திருக்கலாம். ஆனால் ஜி.என் லட்சியவாதியாகத் திரிந்திருக்கிறார். கம்யூனிஸத்தில் ஈர்ப்பு மிக்கவராக எந்த வேலையிலும் உருப்படியாக ஒட்டியிருக்கவில்லை.

அவ்வப்போது விலைமாதர்களிடமும் தொடர்பில் இருந்திருப்பார் போலிருக்கிறது.  ‘அந்தக் கால’ கம்யூனிஸ்ட்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அல்லவா? ஜி.என் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார். ராணுவத்திற்கும் சென்றிருக்கிறார். கம்யூனிஸ்ட் என்பதால் அங்கும் தொடர்ந்து இருக்க முடியவில்லை.  வெளியே வந்தாகிவிட்டது. பிறகு மதுரையில் ட்யூஷன்கள் எடுத்திருக்கிறார். பெரிய சம்பாத்தியம் எதுவுமில்லை. 1970க்கு பிறகு எந்த வேலையும் செய்யாமல் அலையும் நாடோடியாகவும், விட்டேந்தியாகவும் இருந்திருக்கிறார். கடைசி காலத்தில் கஞ்சாபழக்கம் வேறு. 1981 ஆம் ஆண்டில் காலம் அள்ளிக் கொண்டது.

தனது ஐம்பதாண்டு கால வாழ்க்கையில் ஜி.என் எழுதியவற்றை ‘ஏகப்பட்டது’என்று சொல்லிவிட முடியாது. ‘குறத்தி முடுக்கு’ என்ற குறுநாவலும், ‘நாளை மற்றுமொரு நாளே’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். அது போக முப்பத்தைந்து சிறுகதைகள். அவ்வளவுதான். ஆனால் தமிழில் பாலியல் எழுத்து என்றால் அதன் முன்னோடிகளின் வரிசையில் இவரைச் சேர்த்துத்தான் சொல்கிறார்கள். 

எத்தனை எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை பாஸ்; எப்படி எழுதுகிறோம் என்பதுதான் மேட்டர்.

குறுநாவல் பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம்-

‘குறத்தி முடுக்கு’ என்ற ஒரு தெரு இருக்கிறது. அந்தத் தெருவே ‘ரெட் லைட்’ ஏரியாதான். மல்லிகையும், செம்பங்கியும், குட்டிக்குரா பவுடரும், கிளுகிளு பேச்சுமாக தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பல்வேறு வயதுகளில், அழகான, அவலட்சணமான பெண்களால் நிரம்பிக் கிடக்கிறது அந்தத் தெரு. அங்கு இருக்கும் பெண்களில் ஒருத்தியான தங்கம் என்பவளிடம் பத்திரிக்கை நிருபரை அழைத்துச் செல்கிறான் ஒரு புரோக்கர். நிருபர் திருமணம் ஆகாதவன். நிருபருக்கு இது முதல் அனுபவம் இல்லை. ஆனால் தங்கத்துடன் இதுதான் முதல் முறை. முதல் தடவையே தங்கத்தின் வாஞ்சை பிடித்துவிட அவளின் ரெகுலர் கஸ்டமர் ஆகிவிடுகிறான். பிறகு அவ்வப்போது அவளிடம் போய்வருகிறான். அவளுக்கும் அவன் மீது ப்ரியம்தான்.

நாட்கள் நகர நகர அவளின் மீது ஈர்ப்பு உருவாகிவிடுகிறது. இது காதலா என்று புரியாத காதல். ஒரு நாள் அவளைத் நாடிப் போகும் போது தங்கத்தின் வீடு பூட்டியிருக்கிறது. அவளை போலீஸ் பிடித்து போய்விட்டதாக தெரிந்து கொள்கிறான். ‘தெருவில் போகிற வருகிறவர்களை கட்டாயப்படுத்தி அழைத்தாள்’ என்பதுதான் வழக்கு. இந்த வழக்கில் அவன் தனக்காக சாட்சி சொல்ல வேண்டும் என தங்கம் கேட்டுக் கொள்கிறாள். இவனும் ஒத்துக் கொள்கிறான். கோர்ட்டில் ‘தங்கம் அப்படிப்பட்டவள் இல்லை எனவும் தங்கத்தை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என சாட்சி சொல்கிறான். தங்கம் விடுதலை ஆகிறாள். 

அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அவள் மழுப்பிவிடுகிறாள். அடுத்த மூன்று தினங்களில் அவள் ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள். அதன் பிறகு நிருபருக்கு அந்த ஊரில் இருக்க பிடிக்கவில்லை. மதுரைக்கு மாறுதல் கோருகிறான். மதுரை செல்வதற்கு முன்பாக திருவனந்தபுரம் சென்று அங்கு ஒரு வேலையை முடித்து வரச் சொல்கிறார்கள். அந்த வேலைக்காக செல்லும் போது இவன் திருவனந்தபுரத்தில் அவளைப் பார்க்கிறான். அவள் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். தான் யாரோடு வசிக்கிறேன் என்பதைப் பற்றிச் சொல்கிறாள். பேசி முடித்துவிட்டு நிருபர் தான் தங்கியிருக்கும் விடுதிக்குத் திரும்புகிறார். தங்கத்தின் நினைவோடு அறையில் படுத்திருக்கிறான். முக்கியமாக, இந்த இடத்தில் ‘ஸீன்’ எதுவும் இல்லை.

இதுதான் நாவலின் Core. இதை மட்டுமே விவரித்து எழுதியிருந்தால் நம்மவர்கள் சர்வசாதாரணமாக Pulp நாவல் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அப்படிச் சொல்வதற்கான எந்த வாய்ப்பையும் நாவலும், ஜி.நாகராஜனும் கொடுப்பதில்லை. 

குறத்தி முடுக்கில் இருக்கும் கர்ப்பிணியான செண்பகத்தை ஒரு முரட்டு நடுத்தரவயதுக்காரன் புரட்டியதில் கலையும் கர்ப்பம், மரகதம் என்ற விலைமாதுவுக்கு உருவாகும் காதல், அந்த இளைஞன், குறத்தி முடுக்கு பெண்களை விலைக்கு வாங்கி அவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கும் அத்தான்கள், பதினைந்து வயதுப் பெண்ணொருத்தி தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போகும் அவலம், போலீஸ் பிடித்துச் சென்று முடியை மழித்துவிட்ட பிறகு மனநிலை பாதிக்கப்படும் மீனாட்சி என்ற ஒவ்வொரு கேரக்டருமே ஏதாவதொரு விதத்தில் நாவலின் ‘பில்லர்’களாக மாறி நிற்கிறார்கள்.

இந்த நாவல் தமிழின் முக்கியமான Work. ஐம்பது பக்கம்தானே? அசால்ட்டாக முடித்துவிடலாம். 

(புத்தகத்தை ஆன்லைனில் வாங்கலாம்)

Aug 16, 2013

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி

‘விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’ என்ற  டயலாக் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மையில் விவசாயிகள் கதறுகிறார்கள். ஒருபக்கம் ஒரே நாளில் ஆறு டி.எம்.சி தண்ணீரை கடலில் கலக்க விடுகிறோம். இன்னொரு பக்கம் சொட்டு மழையில்லாமல் கருகுகிறார்கள். பனியன் கம்பெனிக்காரர்களும், பட்டாசு கம்பெனிக்காரர்களும் வேன் வைத்து ஆட்களை அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். தோட்ட வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்பதில் ஆரம்பித்து விளைச்சலுக்கு ஏற்ற வருமானம் இல்லை என்பது வரை ஏகப்பட்ட புகார்கள் விவசாயிகளிடம் இருக்கின்றன. இன்றைய தேதிக்கு நவீனத் தொழில்நுட்பம் ஓரளவு விவசாயிக்கு உதவுகிறது என்றாலும் நாம் அடைய வேண்டிய தூரம் வெகு தூரம் இருக்கிறது.

ஒவ்வொரு துறையிலும் 'ஸ்பெஷலிஸ்ட்' ரோபோக்கள் கொடிபறக்கவிடுவதைப்போலவே விவசாயத்துறையிலும் ரோபோக்கள் காலடி வைத்திருக்கின்றன. உழவு, நடவு, களைவெட்டுதல், நீர் பாய்ச்சுதல் என சகலத்தையும் செய்வதற்காக அவற்றிற்கென வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் செய்யத் துவங்கியிருக்கின்றன. விவசாயப்பணிகளை செய்யும் ரோபோக்களை 'அக்ரிபோட்' என்கிறார்கள்.

அக்ரிபோட் வடிவமைப்பு கொஞ்சம் சிக்கலானது. உதாரணமாக களையெடுக்கும் ரோபோக்களை தயாரித்து தோட்டத்திற்குள் விட்டால் அது களைகளைவிட்டுவிட்டு பயிர்களையெல்லாம் ஒழித்த காமெடி வரலாறுகள் எல்லாம் உண்டு. அதனால்தான் அக்ரிபோட் வடிவமைப்பில் மிகுந்த கவனம் எடுக்கிறார்கள். அக்ரிபோட்டில் இன்னொரு சேலஞ்ச் இருக்கிறது- அது காசு, பணம், துட்டு, மணி, மணி. Hi-Fi, ஸூப்பர் டூப்பர் என்று லட்சக்கணக்கில் விலை சொன்னால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளால் அக்ரிபோட்களை வாங்க முடியாது. அதனால் காஸ்ட்லியான டெக்னிக்கல் சமாச்சாரங்களைத் தவிர்த்துவிட்டு பெரும்பான்மையான விவசாயிகளின் பொருளாதார பின்னணியையும் அக்ரிபோட் வடிவமைப்பின் போது கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதால் குறைந்த செலவில் அக்ரிபோட்கள் களமிறங்கிக் கொண்டிருக்கின்றன.

நம் ஊரிலும் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி இருக்கிறார். பாலாஜி என்று பெயர். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் எம்.டெக் ரோபோ படித்துக் கொண்டிருக்கும் பாலாஜியோடு அவ்வப்போது பேசுவது வழக்கம். ஒரு கல்லூரி மாணவனால் இத்தனை உற்சாகமாகவும், இத்தனை வெறித்தனமாகவும் இருக்க முடியுமா என்று சந்தேகம் உருவாக்கக் கூடிய மனுஷன். ஆளில்லாமல் பறக்கும் ரோபோட், ஆளில்லாமல் எதிரியை அட்டாக் செய்யும் ஆர்மி ரோபோ என்று படம் காட்டிக் கொண்டிருக்கும் பாலாஜி அக்ரிபோட் ஒன்றையும் தயாரித்திருக்கிறார். அது தோட்டங்காடுகளில் மருந்து அடிக்கும் ரோபோட். ஏதோ விஷயமாக கல்லூரிக்கு வந்த ஆர்மி அலுவலர் ஒருவர் இதையெல்லாம் பார்த்துவிட்டு ‘எங்களுக்கும் ஒரு ரோபோ செஞ்சு கொடு தம்பி’ என்று பாலாஜிக்கு கொக்கி போட்டுவிட்டார். பாலாஜி இருக்கட்டும். இப்போதைக்கு அக்ரிபோட் பற்றி பார்க்கலாம்.

வெளிநாடுகளில் திராட்சை பறிப்பதற்கும், ஆரஞ்சு பறிப்பதற்கும் ரோபோக்களை பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். இந்த ரோபோக்களுக்கு பழங்களின் நிறத்தையும் அளவையும் கண்டறியும் சென்சார்கள் உண்டு. அதோடு சில கணிப்புகளையும் இந்த ரோபோக்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் பழமாக கனிந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதால் அவற்றை பறித்துவிட வேண்டும். நன்றாக கனிந்திருந்தாலும் கூட இலைகளுக்கு இடையில் பழங்கள் மறைந்திருக்கக் கூடும். எனவே இவற்றையெல்லாம் கணித்து சரியான பழங்களை கண்டறியும் படியான ப்ரொக்ராம்களை ப்ராசஸர்களில் எழுதப்பட வேண்டும். மேலும் இந்த ப்ரோகிராம்களை தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு உதவும் கணினித்திரை, கீபோர்ட் போன்றவற்றையும் ரோபோக்களில் பொருத்துகிறார்கள்.

இவை மட்டுமில்லாது பழங்களை பறிப்பதற்கு தோதான கைகள் போன்ற அமைப்பும் இந்தக் கைகள் பல கோணங்களில் வளைவதாகவும் தேவைக்கு ஏற்ப நீள்வதாகவோ அல்லது குறுகுவதாகவோ அமைந்திருப்பதும் அவசியம். கைகளை மணிக்கட்டு, முழங்கை என ஒவ்வொரு பகுதியையும் சிறு சிறு மின் மோட்டர்கள் மூலமாக கட்டுப்படுத்துகிறார்கள். 

அக்ரிபோட்கள் பல நாடுகளிலும் தேவைப்படுகின்றன. இந்தியாவைப் போலவே அரிசியை விரும்பி உண்ணும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஜப்பானிய விவசாயிகளுக்கும் இந்திய விவசாயிகளைப் போலவே ஒரு பெரும் பிரச்சினை உண்டு. அது விவசாயத்திற்கு தேவையான பணியாளர்கள் கிடைப்பதில்லை என்பது. இந்தப் பிரச்சினையின் காரணமாக ஜப்பானில் அக்ரிபோட்களை மும்முரமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். 

நெல் நடவு செய்வதற்கான ரோபோதான் ஜப்பானிய விவசாயிகளின் முதல் தேவையாக இருந்தது. இதற்கான முயற்சியை கி.பி. 1800 களின் இறுதியிலேயே தொடங்கிவிட்டார்கள். ஆனால் அது அத்தனை பெரிய வெற்றி இல்லை. அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு வரைக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அந்த ஆண்டு சைடாமா மாகாணத்தில் உள்ள தேசிய விவசாய ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் அக்ரிபோட் ஒன்றை தயாரித்தார்கள். மனிதர்களின் எந்த உதவியும் இல்லாமல் நெல் நடவு செய்யும் ரோபோவை வயலில் இறக்கினார்கள். இந்த ரோபோவில் இடங்காணல் கருவி(Global Positioning System) பொருத்தப்பட்டது. இந்தக் கருவி செயற்கைக் கோளுடன் தொடர்பில் இருக்கும். உலகில் எந்த மூலையிலிருந்தும் ரோபோவை கண்காணிப்பதற்கான வசதியை இந்தக் கருவி உருவாக்கி தருகிறது. 

இந்த ரோபோவின் ப்ராசஸசர் மனித மூளையின் பிரதியைக் கொண்டிருக்கிறது. ரோபோவில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்களின் தகவலுக்கு ஏற்ப நடவு செய்ய வேண்டிய இடத்தை துல்லியமாக இந்த ப்ராசஸரால் கணிக்க முடிகிறது. நடவு முடிந்தவுடன் சுற்றிலும் நெல் நாற்றைச் சுற்றிலும் இருக்கும் மண்ணிலிருந்து நாற்று மண்ணுக்குள் எத்தனை மில்லி மீட்டர் பதிந்து இருக்கிறது என்பது வரை ஒரு ‘இன்ஸ்பெக்ஷனை’ முடித்துவிடும். எத்தனை நாற்றுக்கள் நட்டப்பட்டிருக்கின்றன என்ற கணக்கையும் குறித்துக் கொள்ளும். ரோபோ பாத்தியின் இறுதிக்குச் சென்றவுடன் தானாகவே 'U' வடிவில் திரும்பி அடுத்த வரிசை நடவைச் செய்யும்.

இத்தனை வசதிகளையும் கொண்டிருக்கும் இந்த ‘அக்ரிபோட்’டின் வேகமும் அசாத்தியமானது. 20 நிமிடங்களில் கிட்டத்தட்ட 1000 சதுர மீட்டருக்கு நடவு செய்யும் இந்த ரோபோ ஜப்பானின் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இந்தியாவிலும் இந்த ‘அட்வான்ஸ்ட்’ நெல் நடவு செய்யும் ரோபோவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடக்கின்றன.

ஐ ரோபோ என்ற ஆங்கிலப் படத்தில் கதாநாயகனுக்கும் ரோபோவுக்கும் இடையில் ஒரு உரையாடல் நிகழும். ரோபோவிற்கும் கனவுகள் உண்டு என்பதை நாயகனால் ஏற்றுக் கொள்ள முடியாது. "மனிதர்களுக்கு கனவுகள் உண்டு. நாய்களுக்குக் கூட கனவுகள் உண்டு. ஆனால் உனக்கு கனவுகள் வராது. நீ வெறும் இயந்திரம். ரோபோவினால் சிம்பொனி இசையமைக்க முடியுமா? ஒரு நல்ல ஓவியத்தை வரைய முடியுமா?" என்று ரோபோவிடம் நேரடியாகக் கேட்பான். 

ரோபோ ஆழ்ந்த மெளனத்திற்குப் பிறகு நாயகனைப் பார்த்துக் கேட்கும் "என்னால் முடியாதுதான். ஆனால் உன்னால் முடியுமா?" என்று. கதாநாயகன் ‘பெப்ரப்பே’ என முழிப்பான்

இந்த உரையாடல் உணர்த்துவது எளிமையான கருத்து. ஒரு மனிதனால் எப்படி எல்லாவற்றையும் செய்ய முடியாதோ அதே மாதிரிதான் ஒரே ரோபோவால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. அதே சமயம் எந்த அம்சத்திலும் ரோபோ மனிதனைவிட தாழ்ந்தது என்று சொல்லிவிட முடியாத காலகட்டத்தை மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அத்தனை திறமைவாய்ந்த ரோபோக்கள் கலக்கிக் கொண்டிருக்கின்றன. அனைத்து ரோபோக்களிலும் அடிப்படையான தொழில்நுட்பம் ஒன்றுதான். மற்றபடி ரோபோக்களை பயன்படுத்தும் துறைகள்தான் வேறுபடுகிறது. விண்வெளி, நீர்வளம், இராணுவம், விவசாயம் என அந்தந்த துறைகளின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்துவிடுகிறார்கள். அவ்வளவுதான்.

(கல்கியில் எழுதிய ‘ரோபோஜாலம்’ தொடரின் அனைத்து கட்டுரைகளையும் நிசப்தத்தில் பதிவு செய்தாகிவிட்டது)

Aug 14, 2013

இந்த உலகம் ஆப்புகளால் சூழப்பட்டிருக்கிறது

சென்ற வாரத்தில் ஒரு நாள் டைரக்டரிடம் இருந்து ஃபோன் வந்தது. சினிமா டைரக்டர் எல்லாம் இல்லை. எங்கள் நிறுவனத்தில் இருக்கும் பல டைரக்டர்களில் அவரும் ஒருவர். அவரது டீமில்தான் முன்பு வேலை செய்தேன். ஒரு வருடத்திற்கு முன்பாக இந்த புது டீமுக்கு மாற்றிவிட்டார்கள். அவர்கள் வேறொரு கட்டடத்தில் இருக்கிறார்கள். மற்றொரு கட்டடத்தில் நான் வேலை செய்கிறேன். டைரக்டர் தெலுங்குக்காரர். ரவிதேஜா பற்றியும், பாலகிருஷ்ணா பற்றியும் வெகுநேரம் பேசிக் கொண்டிருப்பார். தெலுங்கானாவின் தீவிர ஆதரவாளர்.

இவர் எதற்கு ஃபோன் செய்கிறார் என்ற குழப்பத்துடனேயேதான் எடுத்தேன். அதுவும் மத்தியான நேரம்.

“மணி, நாங்க லன்ச்சுக்கு கிளம்பிட்டோம்” என்று நிறுத்தியவர் பக்கத்தில் இருந்த யாரோ ஒருவரிடம் “எந்த ஹோட்டல்ன்னு சொன்னீங்க?” என்று கேட்டுவிட்டு “ஆங், இந்திராநகர்லதானே....நீ வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” என்றார். பெரிய மனிதரே அழைக்கிறார், போகாவிட்டால் மரியாதை இருக்காது, அதைவிடவும் முக்கியமானது இத்தகைய பெருந்தலைகளுடன் நெருங்கிப் பழகுவதற்கான வாய்ப்பு கிடைப்பதெல்லாம் அவ்வளவு எளிதில்லை. ஆனால் ‘என்னை எதற்கு அழைக்கிறார்’ என்பதுதான் குழப்பமாக இருந்தது. அடுத்த சில மைக்ரோ செகண்ட்களுக்கு குழப்பத்தை ஒதுக்கிவிட்டு “இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் சார்” என்றேன். ஒருவேளை தெலுங்கானாவின் வெற்றிக்கான ட்ரீட்டாக இருக்கும் என்று தோன்றியது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும். எங்கள் வீட்டில் கூட்டுக் குடும்ப முறைதான். எனது மனைவியின் தங்கையைத் தான் எனது தம்பி திருமணம் செய்திருக்கிறான் என்பதால் வீட்டிற்குள் பெரிய அரசியல் எதுவும் நடப்பதில்லை. அம்மா, அப்பாவும் எங்களுடனேயேதான் தங்கியிருக்கிறார்கள். சம்பளம் வந்த இரண்டாவது நாளில் பெட்ரோல் செலவுக்கும், ஐந்து பத்து கை செலவுக்கும் போக பைசா மிச்சமில்லாமல் தம்பியிடம் கொடுத்துவிடுவேன். வீட்டுக்கடனில் ஆரம்பித்து கரண்ட் பில் கட்டுவது வரை அத்தனையும் அவனுடைய வேலை. 

குழந்தைகளை அம்மா பார்த்துக் கொள்கிறார். கடைச் செலவு, காய்கறி வாங்குவதெல்லாம் அப்பாவின் டிபார்ட்மெண்ட். என் மனைவிதான் வீட்டுச் சமையலுக்கு பொறுப்பு. தம்பியின் மனைவி அவருக்கு சமையலில் உதவுவார். ஆக மொத்தம் வீட்டில் அத்தனை பேருக்கும் ஏதாவது வேலை உண்டு- என்னைத் தவிர. அதனால்தான் ஆயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கினால் கூட ‘இதுக்குத்தான் இவன் லாயக்கு’ என்று நக்கலடிப்பார்கள். 

சரி இந்த சொந்தக் கதை எதற்கு என்றால்- எந்த நேரத்திலும் என் கையில் அதிகபட்சம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய்தான் இருக்கும் என்பதைச் சொல்லத்தான்.  அப்படியான ஒரு நன்னாள்தான் இந்த டைரக்டர் அழைத்ததும். அவராகத்தான் கூப்பிடுகிறார் என்றாலும் அந்த மாதிரியான இடங்களுக்கு பணம் இல்லாமல் போவது நல்லது இல்லை என்பதால் நண்பனிடம் பணம் கேட்டேன். கையில் இல்லையென்றும் ஏடிஎம் கார்டை வைத்துக் கொள் என்றும் கொடுத்துவிட்டான்.

அடுத்த பத்து நிமிடங்களில் ரெஸ்டாரண்டுக்குச் சென்றாகிவிட்டது. தாறுமாறாக அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். இந்த ஹோட்டல் நடத்துபவர்களின் கிரியேட்டிவிட்டிக்கு இணையாக வேறு யாரிடமும் க்ரியேட்டிவிட்டி இல்லை எனத் தோன்றுகிறது. மீன் தொட்டி, தண்ணீர் ஊற்று என்பதெல்லாம் அந்தக் காலத்திய சமாச்சாரங்கள் ஆகிவிட்டன. இப்பொழுதெல்லாம் சுவர் அலங்காரத்தில் ஆரம்பித்து லைட்டிங், கழிவறை வடிவமைப்பு என எல்லாவற்றிலுமே பட்டையைக் கிளப்புகிறார்கள். கிளப்பாமல் என்ன? ஒரு ஆளுக்கு அறுநூற்றுச் சொச்சம் ரூபாய்க்கு பில் போடுகிறார்கள்.  பஃபே சிஸ்டம். இந்த பொக்கனாத்தி சிஸ்டத்தை எவன் கண்டுபிடித்தான் என்று தெரிந்தால் அவனை அடிப்பதற்காக நான்கைந்து பேரை ஆட்டோவில் அனுப்பி வைக்கலாம். இந்த முறையில் சாப்பிடுகிறவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் உணவை வீணடிக்கிறார்கள். ஐந்து ரூபாய் கிடைத்தால் ஒருவேளை சோறு தின்ன முடியுமா முடியாதா என சண்டை போடும் அற்புத தேசத்தில்தான் ஒரு வேளை சோற்றுக்கு அறுநூற்றுச் சொச்சம் கொடுத்து வீணடிப்பவர்களும் வாழ்கிறார்கள். தெருவில் நிற்க வைத்துச் சுட வேண்டும். என்னை மட்டும் வலி கொடுக்காத துப்பாக்கி இருந்தால் சுட்டுக் கொல்லுங்கள்.

டைரக்டர் அண்ட் குழாம் எனக்கு முன்பாகவே வந்திருந்தார்கள். டைரக்டர், இரண்டு சீனியர் மேலாளர்கள், அப்புறம் நான்கு டீம் லீடர்கள். இவர்கள் எல்லோரிடமும் வேலை செய்திருக்கிறேன் என்பதால் பெரிய சங்கோஜம் இல்லை. இயல்பாக கை கொடுத்துவிட்டு ஆளாளுக்கு தட்டு ஒன்றைத் தூக்கிக் கொண்டோம். ஸ்டார்ட்டர் என்று சில்லி சிக்கன், மீன் வறுவல் எல்லாம் வைத்திருந்தார்கள். தனியாக ஹோட்டலுக்கு போகும் போது நூற்றைம்பது ரூபாய் பிரியாணி வாங்கக் கூட கை கூசும். ஆனால் இப்படி யாராவது ஓசி பார்ட்டி தரும் சமயங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தின்றுவிடுவது வழக்கம்- காணாத நாய் கருவாட்டைக் கண்ட மாதிரி- மீன் வறுவலையும், சிக்கனையும் மிக்சராக்கித் தின்று கொண்டிருக்கும் போது ‘புது டீம் எப்படியிருக்கிறது?’ ‘குடும்ப வாழ்க்கை எப்படி போகிறது?’ என்றெல்லாம் விசாரித்தார்கள். இவர்களுக்கு பதில் சொல்வதை விடவும் மற்ற ஐட்டங்களை ஒரு கை பார்ப்பதுதான் முக்கியமானதாகத் தெரிந்தது. அரைகுறையாக பதில் சொல்லிக் கொண்டே வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தேன். 

ஸ்டார்ட்டர் முடிந்த பிறகு மெயின் பிக்சர். தட்டில் பிரியாணியை நிரப்பிவிட்டு வந்து அமரும் போது கிட்டத்தட்ட எல்லோரும் மெயினுக்கு வந்திருந்தார்கள். டைரக்டரும் பிரியாணிப் ப்ரியர். எண்ணிப்பார்த்தால் எனது தட்டில் இருந்ததைவிட பதினோரு பருக்கையாவது அவரது தட்டில் அதிகமாக இருக்கும். பிரியாணிச் சட்டிக்குள் நல்ல லெக் பீஸாக நான் தேடிய போது கிடைக்கவில்லை. அது எப்படிக் கிடைக்கும்? நல்ல லெக் பீஸ் அத்தனையும் டைரக்டரின் தட்டில்தான் இருந்தது. ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டேன்.

ஒரு வாயை ஸ்பூனில் அள்ளி உள்ளே தள்ளிக் கொண்டு அவர்தான் ஆரம்பித்தார். ‘கங்க்ராட்ஸ் மணிகண்டன்’. எதற்கு வாழ்த்துச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ‘நன்றி’ என்றேன். ‘ஆனால்.....’ நான் முடிப்பதற்கு முன்பாகவே ‘ஆனால்....ஜனவரி மாதம் வாங்கிய ப்ரோமோஷனுக்கு ஆகஸ்டில் ட்ரீட் கொடுப்பது டூ மச்’ என்றார் இடையில் புகுந்த ஒரு மேனேஜர். தொண்டைக்குள் சிக்கியிருந்த இரண்டு பருக்கைகள் மண்டைக்குள் ஏறி புரை தட்டியது.  ‘ட்ரீட் கொடுக்கிறேன்’ என்று நான் சொல்லவே இல்லை. அப்படியானால் அந்த முடிவில்தான் இந்தக் கட்டு கட்டுகிறார்களா இந்தப் பாவிகள்? 

பில் எவ்வளவு வரும் என்று மண்டைக்குள் கணக்கு ஓட ஆரம்பித்துவிட்டது. எப்படியும் வரிகளோடு சேர்த்து ஒரு ஆளுக்கு எழுநூறு ரூபாயைத் தொடும். எட்டு பேருக்கு ஐயாயிரத்து அறுநூறு ரூபாய். காலுக்கு கீழாக உலகம் வழுக்கிக் கொண்டிருந்தது. நான் பாட்டுக்கு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எதற்காக இப்படி அழைத்து மிளகாய் அரைக்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது. நெற்றியில் இனாவானாவென்று எழுதி யாராவது ஒட்டி வைத்து தொலைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. கண்ணீர் வருவது போல இருந்தது. இது பணத்துக்கான கண்ணீர் மட்டும் இல்லை- ஏமாற்றத்துக்கான கண்ணீரும்.

அவர் குறிப்பிட்ட அந்த ப்ரோமோஷனும் சர்வசாதாரணமாகக் கிடைக்கவில்லை. இங்கு வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே ஒவ்வொரு வருடமும் கெஞ்சி கூத்தாடி மூன்றாவது வருடக் கடைசியில் கொடுத்தார்கள். சம்பள உயர்வு என்று கிள்ளிக் கொடுத்தார்கள். வயிறெரிந்து கிடந்தேன். நான் போராடி வாங்கிய பதவி உயர்வுக்கு இவர்களுக்கு எல்லாம் எதற்காக செலவு செய்ய வேண்டும் என்றுதான் புரியவில்லை. 

நல்லவேளையாக கையில் ஏ.டி.எம் கார்ட் இருந்து மானத்தைக் காப்பாற்றியது. அதுவும் இல்லையென்றால் அசிங்கப்பட்டிருக்க வேண்டும். ஏடிஎம் கார்டை உரைத்துவிட்டு கிளம்பும் போது ஆளாளுக்கு ‘தேங்க்ஸ்’ என்றார்கள். உங்கள் நன்றிகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கத்தத் தோன்றியது. திரும்ப அலுவலகத்துக்கு போகும் போது ஏதோ பாரமாக இருந்தது. டைரக்டர் அளவில் கூட இப்படி மட்டமாக நடந்து கொள்வார்களா என்று குழப்பமாக இருந்தது. இனி யார் அழைத்தாலும் போய்விடக் கூடாது என்று நினைப்போடு அலுவலகத்தை அடைந்து கம்யூட்டரைத் திறந்தேன்.

ஒரு பன்னாடை மெயில் அனுப்பியிருந்தான். ‘இன்று நீ ட்ரீட் வைப்பதாகச் சொல்லி நாங்கள்தான் உனது மெயிலில் இருந்து சிலருக்கு மெயில் அனுப்பியிருந்தோம். எங்கள் திட்டம் மிகச் சரியாக நடந்து முடிந்தது குறித்து எங்களுக்கெல்லாம் பரம திருப்தி. Hope you had a good time with them. இனிமேல் எங்கு செல்வதாக இருந்தாலும் கம்ப்யூட்டரை லாக் செய்துவிட்டுச் செல்லவும்’.

Aug 11, 2013

க்கோட்டானு கோட்டி ஸ்தோத்திரங்கள் யேசுநாதரே

ரொம்ப நாட்களுக்கு பிறகாக நாங்கள் சந்தித்துக் கொண்டோம். இந்த ‘ரொம்ப’ என்பதில் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் அடங்கும். ஈரோடு செல்வதற்காக கோபி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது ‘டேய், என்னெய தெரியுதாடா?’ என்று அருகில் வந்தவன் சில நொடிகளில் கைகளை பற்றிக் கொண்டான். அவனை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. சுரேஷை இப்பொழுதுதான் எட்டாம் வகுப்பில் பார்த்தது போல இருக்கிறது. நானும் அவனும் ஒரே பெஞ்சில்தான் அமர்ந்திருந்தோம்- இரண்டாவது வரிசையில். அப்பொழுது அவனுக்கு கீச்சுக்குரலாக இருக்கும். இப்பொழுது கீச்சுவையெல்லாம் எங்கோ தொலைத்துவிட்டான்- புரோட்டா கடையொன்றில் வேலை செய்வதாக கட்டைக்குரலில் சொன்னான். 

இத்தனை வருடங்களில் அவ்வப்போது ஊருக்கு வருவதும் போவதுமாக இருந்தாலும் அவன் எப்படியோ கண்ணில் படாமல் தப்பித்திருக்கிறான். ஆனால் எப்பவாவது- பழைய நண்பர்களை பார்க்கும் போதோ அல்லது ஆசிரியர்களை நினைக்கும் போதே அவனையும் நினைத்துக் கொள்வதுண்டு. கடைசியாக முத்து மீனாளின் ‘முள்’ புத்தகத்தை வாசிக்கும் போது ஞாபகத்திற்கு வந்தான். 

சுரேஷ் எட்டாம் வகுப்பு வருவதற்கு முன்பாகவே தனது அப்பாவை இழந்திருந்தான். ஒரு அண்ணன் உண்டு. அண்ணன் படித்த மாதிரி ஞாபகம் இல்லை அல்லது நாங்கள் படித்த போது அவனை பள்ளியில் பார்த்ததிவில்லை. கச்சேரி மேட்டில் ஒரு டெலிஃபோன் பூத்தில் வேலைக்கு இருப்பதாக சுரேஷ் சொல்லியிருக்கிறான். சுரேஷ் ஓரளவுக்கு படிக்கக் கூடிய பையனாக இருந்தான். படிப்பதைவிடவும் அவனுடைய கையெழுத்தும், நோட்டுப்புத்தகங்களை பராமரிக்கும் விதமும் அட்டகாசமாக இருக்கும். நுனி மடங்காமல் வைத்திருப்பான். யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை- ஒவ்வொரு பக்கத்திலும் ‘உ’ போட்டுவிட்டுத்தான் எழுதத் தொடங்குவான். விநாயகரின் குறி என்பான். உவுக்கும், விநாயகருக்கும் என்ன சம்பந்தம் என்று இதுவரைக்கும் எனக்குத் தெரியாது. பெரும்பாலான வாத்தியார்கள் அவனிடம்தான் நோட்டுகளை வாங்கி தாங்கள் வகுப்பில் கடைசியாக என்ன நடத்தினோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள். 

எட்டாம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகளுக்கு முன்பாக ஒரு நாள் எங்கள் பெஞ்ச் அருகில் நின்று பாடம் நடத்திய வெங்கடாசல வாத்தியார் திடீரென பாடத்தை நிறுத்திவிட்டு ‘இது என்னடா கன்னத்துல தழும்பு?’ என்று சுரேஷிடம் கேட்டார். நாங்கள் வாயைத் திறந்து ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த போது தனது அரைஞாண்கயிற்றில் இருந்து ஒரு பின்னூசியை எடுத்துக் தழும்பு மீது குத்தி ‘வலிக்குதா?’ என்றார். அவன் அசராமல் ‘இல்ல சார்’ என்றான். அவருக்கு முகம் மாறியதை உணர முடிந்தது. ஆனால் எதுவும் பேசவில்லை. பாடத்தை அவர் அதற்கு மேல் தொடரவில்லை. அவர் கிளம்பிப் போன சில நிமிடங்களிலேயே ப்யூன் வந்தார்.

‘சுரேஷை ஹெட்மாஸ்டர் கூப்புடுறாரு’ என்றவுடன் அவன் திடீர் வி.ஐ.பி ஆகிப் போனான். அவ்வளவு சீக்கிரமாக தலைமையாசிரியர் யாரையும் அழைக்க மாட்டார். நன்றாக நினைவில் இருக்கிறது- பின்னூசியால் குத்தியும் வலிக்காததால் அவனுடைய ‘ஸ்பெஷல் சக்தி’யை தெரிந்து கொள்ளத்தான் அழைத்திருக்கிறார் என்று நினைத்திருந்தேன். சுரேஷை அன்றே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மாலை வகுப்பு முடியும் நேரத்தில்தான் வந்தான். கையில் ஒரு ப்ளாஸ்திரி ஒட்டியிருந்தது. ரத்தம், சிறுநீர் எல்லாம் அவனிடமிருந்து எடுத்துக் கொண்டதாகச் சொன்னான்.

அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு நாள் அவனது அம்மா வந்து தலைமையாசிரிடம் அழுது கொண்டிருந்தார். அது தனது மகனை இழந்துவிட்ட தாயின் ஒப்பாரியாகவே இருந்தது. தலைமையாசிரியரும் சில வாத்தியார்களும் ஏதேதோ சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சுரேஷ் அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற மாணவர்களை ப்யூன் வந்து விரட்டியதால் வகுப்பறைக்கு ஓடி வந்துவிட்டோம்.

அதன் பிறகு சுரேஷை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.

சில நாட்களுக்கு பிறகு அவனை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருப்பதாக வெங்கடாசல வாத்தியார்தான் சொன்னார். அது தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையம். அவனுக்கு தொழுநோய் என்பதால் சில வருடங்களுக்காவது மருந்து தின்ன வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டு ‘க்ளாஸ்ல ஒரு பையனுக்கு தொழுநோய்ன்னு ஊட்ல சொல்லாதீங்கடா..உங்க அம்மா அப்பனெல்லாம் பயந்துக்குவாங்க’ என்று எச்சரித்திருந்தார். அருகில் அமர்ந்திருந்ததால் எனக்கும் நோய் ஒட்டிக் கொள்ளக் கூடும் என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் வீட்டில் இது பற்றி எதையுமே பேசவில்லை.

சுரேஷை இப்பொழுது பார்த்த நேரத்தில் இந்த அத்தனை சம்பவங்களும் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட்டில் மண்டைக்குள் சுழன்றடித்தது. சுரேஷ் என்னைப் பற்றி நிறைய விசாரித்தான். வழக்கமான விசாரிப்புகள்தான். வேலை, கல்யாணம், சம்பளம் இத்யாதிகள். உள்ளூருக்குள் இருப்பவர்கள் பெரும்பாலும் ‘நம்ம கூட படிச்சவங்க எல்லோருமே நல்லா இருக்காங்கடா’ என்பார்கள். அதையே இவனும் இம்மிபிசகாமல் சொன்னான். என்னையுமறியாமல் கண்கள் அவனது கன்னத்திற்கு போய் வந்தன. தழும்பு எதுவும் இல்லை.

‘கண்டிப்பா புரோட்டா சாப்புட்டுத்தான் போவோணும்’ என்றான். மறுக்கத் தோன்றவில்லை. அவனோடு போன போது ஒரு அறைக்கு கூட்டிச் சென்றான். புரோட்டாக்கடைக்கு பின்புறமாகவே உள்ள ஒரு சிறிய அறை அது. அந்த அறையில்தான் வசிப்பதாகச் சொன்னான்.அறைக்கு முன்பாக ‘Praise the Lord' என்று எழுதி சிலுவை போட்டிருந்தான். ‘உ’வை சிலுவையாக மறுவாழ்வு மையம் மாற்றியிருக்கிறது. அறைக்குள்ளேயும் சில யேசுநாதர்கள் கருணையுடன் ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார்கள். புத்தகங்கள் நிறைய வைத்திருந்தான். பெரும்பாலானவை ‘க்கோட்டானு கோட்டி ஸ்தோத்திரங்கள் யேசுநாதரே’ வகையறா. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தோம். அமைதியை குலைக்க விரும்பியவன் டிவியை ஆன் செய்தான். கலைஞரின் இலவச தொலைக்காட்சி அது.

டிவி ஓடிக் கொண்டிருக்கும்போது அவனாகவே பேசத் தொடங்கினான். இரண்டு வருடங்களுக்கு முன்பாக அம்மா இறந்துவிட்டாராம். அண்ணனைப் பற்றி விசாரித்தேன். அவன் மூன்று வருடங்களுக்கு முன்பாகவே ஒரு கவுண்டர் வீட்டு பெண்ணை கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான். ‘திருப்பூரில் கம்பெனிக்கு போவானாட்ட இருக்குது’ என்றான். இருவரும் தொடர்பில் இல்லை போலிருக்கிறது. ‘உனக்கு கல்யாணம்?’ என்றேன். அதிர்ச்சியாக பார்த்தான். ஒருவேளை கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது. சில வினாடிகளில் ‘ஹவுஸ்ல இருந்தவனுக்கு யார்றா பொண்ணு தருவாங்க?’ என்றான். மறுவாழ்வு மையத்தைத்தான் ஹவுஸ் என்கிறான்.

அவனுடைய அம்மா இருக்கும் போது ஒன்றிரண்டு பேர் வந்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் விசாரித்துவிட்டு ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்களாம். ‘எங்கம்மா இருக்க வரைக்கும் அவியளுக்கு சாபமா உட்டுட்டு இருந்துச்சு’ என்று பயங்கரமாக சிரித்தான். ‘நோவு இருந்ததை மறைக்கிறது பெருசில்ல பின்னாடி தெரிஞ்சா நல்லா இருக்குதில்ல?’ என்றான். என்னிடமிருந்து ‘நல்லா இருக்காது’ என்ற பதிலைத்தான் எதிர்பார்த்தான். அவனுடைய எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை. ஆசுவாசமாக சிரித்தான். 

கடந்த ஓரு வருடமாக திருமணம் செய்து கொள்ளும் ஆசையே போய்விட்டதாகச் சொன்னான். ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தேன். பக்கத்துவீட்டுப் பெண்மணி கவனித்துக் கொள்கிறாராம். எப்படியான கவனிப்பு என்று கேட்கவில்லை. அவளுக்கு அவ்வப்போது காசு கொடுத்துவிடுகிறானாம். ‘இந்த லைஃப் போரடிக்குது’ என்று சொல்லிவிட்டு கொஞ்ச நாளில் சர்ச்சில் வேலைக்குச் சேரப் போகிறேன் என்றான். புரோட்டாக்கடையை விட அது அவனுக்கு நல்ல வேலையாக இருக்கும் என்று தோன்றியது. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே உடைமாற்ற எத்தனித்தான். அந்த ஒற்றை அறையில் எந்த மறைப்பு எதுவும் இல்லை. அவன் எந்த சங்கோஜமும் இல்லாமல் சர்வசாதாரணமாக சில வினாடிகள் நிர்வாணமாகி வேறு துணிக்குள் தன்னை புகுத்திக் கொண்டான். எனக்குத்தான் அந்த சில வினாடிகளை எப்படிக் கடப்பது என்று தெரியவில்லை. ஆனால் அப்பொழுதும் அவன் எதையாவது பேசிக் கொண்டே இருந்தான். 

பிறகு புரோட்டாக்கடைக்குச் சென்றோம். அதுவரை கல்லில் நின்று கொண்டிருந்த மாஸ்டரை நகர்த்திவிட்டு ஸ்பெஷல் கொத்துபுரோட்டா ஒன்று போட்டுத் தந்தான். அந்த சுவைக்காகவாவது காசு கொடுக்க விரும்பினேன். வாங்க மறுத்துவிட்டான். ‘ரெண்டு நாளைக்கு இங்கதான் இருப்பேன். மறுபடியும் வர்றேன்’ என்றேன்.  கடைக்கு வெளியே வந்த போது அவசர அவசரமாக ஓடி வந்து கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைத் திணித்து ‘பையனுக்கு கொடு’ என்றான். மறுத்த போதும் வற்புறுத்தினான். வாங்கிக் கொண்டேன். 

ஈரோடு செல்வதை விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். டவுன்பஸ்ஸில் ஏறி அமர்ந்த போது ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் நினைவுக்கு வந்தவையெல்லாம் ஸ்லோ மோஷனில் ஓடத் துவங்கின. சுற்றிலும் கீச்சுக்குரல் கேட்கத் துவங்கியிருந்தது.

Aug 10, 2013

சாரு X அசோகமித்திரன் - உரையாடல்

அன்புள்ள மணிகண்டன்,

அசோகமித்திரன் எழுத்துக்களை நான் அதிகம் படித்ததில்லை. படித்த ஒரே நாவல் ஒற்றன் மட்டுமே. அதுவும் ஒரு பயணக்கட்டுரை போன்று இருந்ததாகத்தான் எனக்கு தோன்றியது. நான் வாசகனில்லை, படிப்பவன் மட்டுமே என்பதால் விளைந்த கோளாறு என்று நினைக்கிறேன். பின்னொரு நாள் ராயர் காபி க்ளப்பில் உறுப்பினனாக இருந்த காலத்தில் (இரா.மு, பா.ரா, மரபுக்கவிஞர் ஹரிகிருஷ்ணன், மாலன் போன்றோர் பட்டையைக்கிளப்பிக்கொண்டிருந்த குழு அது. ஒரு ஓரமாய் நாங்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம் அப்போது) பா.ரா அந்த நாவலை சிலாகித்து வேறு ஒரு கோணத்தில் அற்புதமாக எழுதி இருந்தார். அதில் முக்கியமாக, இன்னும் நினைவில் இருப்பது, பல்கலை ஒன்றின் அழைப்பிற்கிணங்க மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியவாதிகள் அமெரிக்க சென்று அங்கே கருத்தரங்கத்தில் பங்கு கொள்வது, அதன் அனுபவ பதிவு - உள்ளூர் இலக்கிய சிம்மங்கள் அமெரிக்கா போன்ற முதல் உலக நாட்டில் கார்டூன் போன்றாகிவிடுவது குறித்து.

நேற்று இணையத்தில் புலிக்கலைஞன் படித்தேன். மிக மிக எளிதான கதை. படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். திரை வாய்ப்பு கேட்டு வருபவனை 'நாளை பார்க்கலாம்' என்று திருப்பி அனுப்பும் குறுங்கதை. அதை இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

சுஜாதா சொன்னது போல, அவர் writer's writer-தான் போல.

இனி சாரு :

தனது தளத்தில் அதிகம் சமரசம் செய்துகொள்ளாமல் (எனக்குத்தெரிந்து) தீவிரமாக இயங்குவதாக நான் நினைப்பதால் ஒரு மரியாதை மட்டுமே அவர் மேல் இன்னும். மற்றபடி அவரது நூல்களை படித்துவிட்டே அவரைப்பற்றி கருத்து உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதால் அவரது 'ராஸ லீலா', அவர் மிக மிக சிலாகித்துக்கொள்ளும் 'கலகம் காதல் இசை' மற்றும் 'திசை அறியும் பறவைகள்' (அதன் கவித்துவமான தலைப்புக்காகவே வாங்கியது, மற்றபடி தலைப்பில் இருக்கும் அழகு உள்ளே இல்லை) இவற்றை படித்துவிட்டே பேசுகிறேன்.

அவரது நாவல் என்னைக் கவரவே இல்லை. அதிலிருந்து நான் என்ன பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் இன்று வரை தெரியவில்லை. என்னவோ கோட்பாடுகளெல்லாம் பேசுகிறார். சரி என்று கேட்டுக்கொள்ளவேண்டியதுதான் போல.

'கலகம் காதல் இசை' வெறும் தகவல் தொகுப்பு. இதற்கா இத்தனை பாடு என்றுதான் தோன்றுகிறது. இணையம் இல்லாத அந்தக்காலத்தில் எழுதியது என்றால், அந்த தகவல் சேகரிப்புக்கு வேண்டுமானால் மரியாதை செலுத்தலாம் அவ்வளவே.

இன்னொன்று, நமது இசை மரபைப்பற்றியோ அதன் ஆழம், வீச்சு பற்றியோ எதுவும் தெரியாமல், வெறுமனே மேல்நாட்டுக்காரனின் இசை பற்றி மட்டும் சிலாகித்துப்பேசுவது, அப்புறம் 'ஆஹா என்னைப்பார், அவனைப்பற்றியும் உங்கள் யாருக்கும் தெரியாத இவனைப்பற்றியும் அந்த இசை பற்றியும் இந்த இசை பற்றியும் - சொல்லப்போனால் அந்தந்த இசை பற்றி கொஞ்சமே கொஞ்சம்தான், வெறும் வரலாறுதான் - என்னென்னவெல்லாம் எழுதியிருக்கிறேன் பார்' என்று வீராப்பு பேசுவது என்னைப்பொறுத்தவரை அபத்தம் என்றே தோன்றுகிறது. வெறும் ஆங்கிலம் பேசத்தெரிந்ததால் "மட்டுமே" அறிவாளி போல அலட்டிக்கொண்டு ஆங்கிலம் தெரியாதவரை அலட்சியப்படுத்துவதற்கு இணையானது இது.

அ.மி. சொன்னது அவரது கருத்து மட்டுமே. 'நாங்களெல்லாம் என்ன புடுங்கிக்கொண்டிருந்தோமா' என்றால் 'நீங்கள் புடுங்கினதெல்லாம் என்னைக் கவரவில்லை, ஜெ.மோ புடுங்கினதே என்னைப்பொறுத்தவரை சிறந்த புடுங்கல்' என்பதே அதன் பொருள் என்பது கூட தெரியாமல் இவரென்ன எழுத்தாளர் ?

ஜெ.மோ தனது ஆசிரியத்துவத்தில் வந்த இதழில் அட்டைப்படத்தில் போட்டதாலும் அவர் சென்னை வரும்போதெல்லாம் வந்து பார்க்கிறார் என்பதாலுமே (சாருவின் வார்த்தைகளில் 'சொம்பு தூக்குவதால்') அவரைப்பற்றி அ.மி உயர்வாக சொல்கிறார் என்று சொல்வதன் மூலம் அ.மி.யை இடுப்புக்குக் கீழே தாக்குவது அருவருப்பாக இருக்கிறது.

'நாங்கள் எழுதுவதை பற்றி தெரியாமல் அ.மி அப்படி பேசுவது கயவாளித்தனம்' என்றால், அவர் என்ன படிக்கிறார் என்றோ, அவரது படிப்பின் ஆழ அகலம் பற்றியோ எதுவுமே தெரியாமல் அவருக்கு அது தெரியாது, இது தெரியாது என்று உளறுவது என்ன தனம் ?

சாருவுக்கே மின்னஞ்சல் அனுப்பலாம் என்றிருந்தேன். அப்புறம், 'ஆமா, போ' என்ற அலுப்பிலும் என்னை என்னென்ன வசை பாடுவாரோ என்ற பயத்திலும் (?!)  விட்டுவிட்டேன்.

உச்சமாக, தன்னை மிகவும் நிதானமானவன், ஆன்மீகமானவன் என்றெல்லாம் தனது முதுகை தானே தட்டிக்கொண்டு (இதற்கு வேறு யாரோ அரசியல்வாதி இவரை வாடா போடா என்றெல்லாம் தொலைக்காட்சியில் வசைபாட இவர் கருணாமூர்த்தியாக அருள் வழியும் புன்னகையோடு கேட்டுக்கொண்டிருந்தது சாட்சியாகிவிட்டது) சுயபுகழ் பாடுபவர் இந்த கட்டுரைக்கு வைத்திருக்கும் தலைப்பு அவல நகைச்சுவை, வேறென்ன சொல்ல?

அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
                                                          ***

அன்புள்ள முத்துக்குமார்,

வணக்கம்.

தங்களின் கடிதத்தை இரண்டு முறை வாசித்தேன். பதிவை வாசித்துவிட்டு உடனடியாக ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருப்பதற்கு முதலில் நன்றி.

அசோகமித்திரன் மற்றும் சாரு நிவேதிதா பற்றி நீங்கள் நினைப்பதை பாசாங்கில்லாமல் எழுதியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அந்தச் சந்தோஷமே உடனடியாக தங்களுக்கு பதிலை எழுதிவிட வேண்டும் என உசுப்பேற்றியிருக்கிறது.

முதலில் அ.மி பற்றி-

அசோகமித்திரனின் ஒரு நாவலையும், சிறுகதையும் வைத்து Writer's writer என்று நீங்கள் அனுமானித்ததில் சற்று வேறுபடுகிறேன். கவனியுங்கள், வேறுபடுகிறேன் - ஜட்ஜ்மெண்ட் இல்லை.  அசோகமித்திரனுக்கு இப்படியான கிரீடத்தைச் சூட்டுவது சரியா என்றும் சொல்ல முடியவில்லை. அது தேவையுமில்லை என்றுதான் நினைக்கிறேன். அசோகமித்திரனின் புனைவுகளுக்கு தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான இடம் உண்டு. ஆனால் அதை மட்டுமே வைத்து Writer's writer என்று சொல்லிவிட முடியாதல்லவா? அசோகமித்திரனின் பிற எழுத்துக்களை நீங்கள் வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்குமாயின் நிச்சயம் அது பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அ.மிXசாரு பற்றிய இந்த பதிவுக்கு ஃபேஸ்புக்கில் ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு பதில் சொல்லியிருந்தார்.  ‘அ.மியின் புனைவுகள் ஓகே; ஆனால் விமர்சனப்பார்வையை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று. சுந்தர் சொல்லியிருப்பதை மறுக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவருடைய விமர்சனப்பார்வை ஏற்றுக்கொள்ளத்தக்கனவையாக இல்லை என்பதற்காக அவரை கிணற்றுத்தவளை என்கிற ரீதியில் அவமானப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? அதைத்தான் சாரு செய்து புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.

இனி சாரு பற்றி-

‘சமரசம் செய்து கொள்ளாத சாரு’ என்பதை எதனடிப்படையில் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. சாரு சமரசம் செய்து கொள்பவர்தான். சுஜாதாதான் என் குருநாதர் என்பதில் ஆரம்பித்து, பதிப்பாளருடனான தனது பிரச்சினைகள்,  நித்தி சமாச்சாரம் வரைக்கும் என ஏகப்பட்ட பல்டிகள் உண்டு. 

ஆனால் எழுத்தைப் பொறுத்தவரையில் சாருவின் Frankness எனக்கு பிடித்தமான அம்சம். மழுப்பல் இல்லாத, ‘வழவழா கொழகொழா’ இல்லாத வாள் வீசும் எழுத்து சாருவினுடையது. இந்தச் சமூகம், கலாச்சாரம் என்ற கட்டமைப்புகளின் மீது எந்தப் பெரிய மரியாதையுமில்லாமல் சர்வசாதாரணமாக சிறுநீர் கழித்துவிட்டுப் போகும் ‘கெத்து’வுக்காகவே சாருவின் எழுத்து மீதான அத்தனை விமர்சனங்களையும் ஓரங்கட்டிவிட்டு பின் தொடரலாம். எழுத்தில் அவர் உருவாக்கும் சுவாரசியத்தன்மை முக்கியமானது. 

அவரது குறிப்பிட்ட கட்டுரை பற்றி நீங்களே நிறைய எழுதிவிட்டீர்கள்.

மிக்க அன்புடன்,
மணிகண்டன்
                                           *******

அன்புள்ள மணிகண்டன்,

வணக்கம். உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி.

அடடா, நான் அ.மி writer's writer என்று சொல்லவில்லை. எனக்கு அவரது எழுத்துக்கள் மிக எளிமையாக தோன்றுவதையும், எழுத்தாளர்கள் அனைவரும் அவரது எழுத்துக்களை கொண்டாடுவதையும் பார்க்கும்போது, நான் வெறும் படிப்பவன் மட்டுமே என்பதால் அவர் writer's writer தானோ என்று தோன்றுவதாக சொன்னேன். 

சுந்தர் சொல்வதையேதான் நானும் சொல்கிறேன். அசோகமித்திரன் சொன்னதை அவரது அபிப்ராயம் / கருத்து என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே நான் கருதுவது. அவரது கருத்து எல்லோருக்கும் உவப்பானதாக இருக்கவேண்டியதில்லையே ! பிடிக்காத பட்சத்தில் புறக்கணிக்கலாம். தனிநபர் தாக்குதலிலா இறங்குவது ?

சாரு அதிகம் சமரசம் செய்துகொள்ளாதவர் என்பதை அவரது தளத்தில் அவரே எழுதி வரும் - திரை வாய்ப்புகளை மறுப்பது - கட்டுரைகள் மூலமும், வாசகர்களையே நிதி உதவி சொல்லி கேட்பதுமே அப்படி எண்ண வைத்தது. நித்தி விஷயத்தில் நீயா நானா-வில் தான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்ட நேர்மையும் பிடித்திருந்தது. (ஆனால் பிறகு, தான் குழந்தை போன்றவர் என்றும், கோபிநாத் விடாமல் தன்னை துரத்தித் துரத்தி அப்படி 'தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வைத்துவிட்டார்' என்பது போல ஒரு பதில் சொல்லி இருந்தார்). மறுபரிசீலனை செய்யவேண்டியதுதான் 

மற்றபடி அவரது எழுத்தின் கெத்து மற்றும் சுவாரஸ்யத்தன்மை பற்றி நீங்கள் சொல்வதை அப்படியே ஒப்புக்கொள்கிறேன். அதனால்தான் அவரை பெரிதாக பிடிக்காவிட்டாலும் புதிய பதிவு எது வந்தாலும் படித்துவிடுகிறேன்.


அன்புடன்
பொன்.முத்துக்குமார்.                    

Aug 9, 2013

இலக்கிய உலகின் அப்பாடக்கர்கள்- சாருவும் இன்னபிறரும்

ஒரு புத்தகம் வாங்க வேண்டியிருந்தது. என்ன புத்தகம்? இந்த இடத்தில் பெயர் தெரியாத ஆப்பிரிக்க எழுத்தாளரையோ, செக்கோஸ்லோவோக்கியா எழுத்தாளரையோ குறிப்பிட்டு ‘அவர் எழுதிய புத்தகத்தைத்தான் தேடினேன்’ என்று படம் ஓட்டலாம்தான். ஆனால் 'மொசப்புடிக்கிற நாயை மூஞ்சியை பார்த்தே' கண்டுபிடித்துவிடுவீர்கள் என்பதால் உண்மையைச் சொல்வதுதான் உசிதம். ஒரு புத்தகத்தை மொழிபெயர்க்கும் ஐடியா இருக்கிறது. மண்டைக்குள் பல்பு எரிந்து தானாக இந்த ஐடியா வரவில்லை. ஒரு பதிப்பகத்திலிருந்துதான் கேட்டார்கள். ஜாலியான நாவல் அது. இப்பொழுது இருக்கும் எனது மொழிநடை அந்த நாவலுக்கு பொருத்தமானதாக இருக்கும் என முடிவு செய்து கேட்டிருக்கிறார்கள். கொஞ்சம் விவரமாகவே சொல்லலாம்தான். ஆனால் அதில் ஒரு விவகாரம் இருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக காலச்சுவடு பதிப்பதில் அசோகமித்திரனின் ‘18வது அட்சக்கோடு’ நாவலை செம்பதிப்பாக கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள்.  இந்த இடத்தில் அ.மி பற்றி சில வார்த்தைகள்-

இலக்கிய பவர்ஸ்டார் சாரு கலாய்த்துக் கொண்டிருப்பது போல அசோகமித்திரன் ஒன்றும் லேசுப்பட்ட ஆள் இல்லை. அ.மி யின் எழுத்துக்கள் அத்தனையையும் கூட வேண்டாம் முக்கியமான மூன்று நாவல்களை எடுத்து ஒரு தராசில் வைத்து இன்னொரு தட்டில் தனது அடிப்பொடிகள் அத்தனை பேரையும் சேர்த்துக் கொண்டு வந்து ஏறி அமர்ந்தாலும் சாருதான் தோற்றுப் போவார். சாருவின் எழுத்துக்களை மதிக்கிறேன் என்றாலும் கூட என்னைப் பொறுத்தவரைக்கும் சாருவுக்கும், அ.மிக்கும் அத்தனை வித்தியாசம் இருக்கிறது. 

‘நான் தான் அப்பாடக்கர், அந்த இசையைப் பற்றி எழுதியிருக்கிறேன், இந்த எழுத்தாளனைப் நான் தான் அறிமுகப்படுத்தினேன்’ என்பதெல்லாம் இருக்கட்டும். அவையெல்லாம் பொருட்படுத்தத் தக்கவைதானா என்பதை வாசகர்கள்தானே முடிவு செய்ய வேண்டும்? வாசகர்கள் என்ன அத்தனை முட்டாள்களா? உண்மையில் எழுதுபவர்களைக் காட்டிலும் அவர்களுக்கு பரந்த வாசிப்பு உண்டு. அவர்கள் மிக எளிதில் ‘யார் அப்பாடக்கர்’ என்பதை முடிவு செய்துவிடுவார்கள். எழுதிவிட்டார் என்பதற்காகவே கொண்டாட வேண்டும் என்றால் அப்படியான ஆட்கள் இங்கு ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். நாயும் கூடத்தான் வேளாவேளைக்கு சோறு கண்டுபிடித்து வயிறு வளர்க்கிறது. அதைக் கொண்டாடுகிறோமா என்ன? எழுதுவதோடு எழுத்தாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதைத் தாண்டி வட்டம் அமைப்பது, சதுரம் அமைப்பது என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்துக் கொள்வதையும் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் என்னைவிட்டால் இங்கு எவனுமே எழுத்தாளன் இல்லை என்று சிலாகித்துக் கொள்ளுதல்தான் அலர்ஜியாக இருக்கிறது.  இது ஒரு வியாதி. நம்மைச் சுற்றிலும் ஏகப்பட்ட எழுத்தாளர்கள் இந்த வியாதியால் Infect ஆகிக் கிடக்கிறார்கள் என்பதுதான் நமது துக்கம்.

சாரு ஆன்லைனுக்கு ஹிட் வேண்டுமென்றால் அ.மியை ஏன் சொறிய வேண்டும் என்று தெரியவில்லை.

சரி போகட்டும். 18வது அட்சக்கோட்டிற்கே வந்துவிடுகிறேன். அந்த நாவலின் களம் ஹைதராபாத். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஹைதையை ஆண்ட நிஜாம் ‘இந்தியாவோடு சேரமாட்டேன்’ என்று லோலாயம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் அங்கு வசிக்கும் ஒரு தமிழ்க்குடும்பத்தின் கதைதான் நாவல். அட்டகாசமான ஃப்ளோவில் இருக்கும். காலச்சுவடு பதிப்பகத்தில் மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளை ‘க்ளாஸிக்’வரிசையில் கொண்டு வரத் துவங்கியிருந்தார்கள். 

கொஞ்ச நாள் நான் ஹைதராபாத்தில் இருந்ததாலோ அல்லது வேறு என்ன காரணத்தினாலோ இந்த நாவலுக்கு முன்னுரை எழுதித் தரச் சொல்லியிருந்தார்கள். அதுக்கு முந்தின நாள் பெய்திருந்த மழையில்தான் நான் முளைத்திருந்தேன் என்பதால் எனக்கு உதறலாகத்தான் இருந்தது. ஆனால் ஒருவழியாக எழுதிக் கொடுத்த பிறகு முன்னுரை நல்லபடியாக வந்திருப்பதாக நிறையப் பேர் சொன்னார்கள். ஆனால் சில பெரிய மனிதர்களுக்குத்தான் பொறுக்கவில்லை.  ‘இவனை எல்லாம் முன்னுரை எழுத வைத்து அசோகமித்திரனை கேவலப்படுத்தலாமா? முன்பே தெரிந்திருந்தால் எப்படியாவது தடுத்திருப்பேன்’ என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள். இங்கு பொடியன்கள் எப்பொழுதுமே பொடியன்களாகவே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்தான் அதிகம். அவ்வளவு நல்ல எண்ணங்களினால் சூழப்பட்டது இந்த இலக்கிய உலகம். அவர்கள் என்னமோ பேசிவிட்டு போகட்டும். ஆனால் முன்னுரை எழுதியாகிவிட்டது. அவ்வளவுதான் மேட்டர்.

இத்தகைய நல்ல மனிதர்கள் இருப்பதனால் மொழிபெயர்ப்பு நாவலைப் பற்றிய விவரங்களை இப்பொழுதே பேசி ஏன் பிழைப்பை கெடுத்துக் கொள்ள வேண்டும்? முதலில் வெண்ணெய் திரண்டு வரட்டும். வேறு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். அதன் பிறகு யார் தாழியை உடைத்தால் என்ன? நொறுக்கினால் என்ன?

அந்தக் கதை இந்தக் கதையை எல்லாம் பேசிவிட்டு சொல்ல வந்த கதையை மறந்துவிட்டேன். தேடிய புத்தகம் கிடைக்கவில்லை. Crossword, landmark, Sapna வில் எல்லாம் தேடியாகிவிட்டது. எல்லாக்கடைகளிலும் டேட்டாபேஸில் புத்தகத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள் ஆனால் கைவசம் பிரதி இல்லை என்று துரத்திவிட்டுவிட்டார்கள். பெங்களூரில் எந்தப் புத்தகக் கடைக்கு போனாலும் கூட்டமாக இருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு மூன்று நவநாகரீக அழகுப் பெண்களாவது இருக்கிறார்கள். இனிமேல் வாரம் ஒரு முறையாவது புத்தக்கடையில் வேடிக்கை பார்க்கப் போக வேண்டும் என முடிவு செய்யுமளவுக்கு அழகு. நேற்று சப்னாவில் Erotica பிரிவிலிருந்து நான்கைந்து புத்தகங்களை அள்ளி வந்திருக்கிறேன். எப்படியும் ஓரிரு வாரங்களில் வாசித்துவிடுவேன். வேறு வழியில்லை-ஆங்கிலத்தில் வாசிப்பதற்கான ஆர்வத்தை இப்படித்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.