ஐடியில் ரிஸஷனா? ஆளாளுக்கு அப்படித்தான் சொல்கிறார்கள். இந்தத் துறையில் இருப்பவர்கள் பெரும்பாலானோருக்கு இப்படியான ஃபீலிங்தான் இருக்கிறது. மூன்றில் இரண்டு பேர் ‘வெளியே மார்கெட் சரியில்லை’ என்கிறார்கள். மிச்சமிருக்கும் ஒருவர் ‘எதுக்கு ரிஸ்க், இதிலேயே கண்டினியூ செய்யலாம்’ என்கிறார். கேம்பஸ் இண்டர்வியூவுக்கு செல்லும் கம்பெனிகள் முன்பு போல கொத்து கொத்தாக ஆட்களை அள்ளுவதில்லை. கிள்ளி எடுத்துப் போகும் ஆட்களையும் உடனடியாக வேலைக்கு வரச் சொல்வதில்லை. மே மாதம் கல்லூரி முடிந்தால் வேலைக்கு சேர்வதற்கு அடுத்த ஜனவரி, பிப்ரவரி கூட ஆகிவிடுகிறது. ஒருமாதிரியான எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்கிறது.
மூன்று நான்கு நாட்களுக்கு முன்பாக ஒரு நண்பர் அழைத்திருந்தார். “என்னண்ணா நிறைய ஃபயரிங் நடக்குதாமே?” என்றார். இரண்டு வருடங்களுக்கு முன்பாக இப்படி யாராவது கேட்டிருந்தால் இரண்டு நாட்களுக்கு எனக்கு சோறு இறங்கியிருக்காது. தூக்கமே இல்லாமல் புரண்டிருப்பேன். இப்பொழுதெல்லாம் இந்த டயலாக் பழகிப் போய்விட்டது. பத்துக்கு நாலு பேர் இதைத்தான் கேட்கிறார்கள். ‘ஃபயரிங் இருக்கா?’ என்று. அவ்வப்போது அடி வாங்கினால் பயமாக இருக்கும். வாரத்துக்கு மூன்று நாள் யாராவது முட்டுச் சந்தில் வைத்து மொத்தினால் நமக்கு பயம் என்பதே போய்விடும் அல்லவா? அப்படித்தான்.
கவனித்தால் அப்படியொன்றும் பெரிய பிரச்சினை இருப்பது மாதிரி தெரியவில்லை. எந்த ஐடி கம்பெனியும் நஷ்டம் அடையவில்லை. முன்பு போல நிறைய புது ப்ராஜக்ட்கள் வருவதில்லை என்பதால் வந்து கொண்டிருந்த வருமானம் சற்று குறைந்திருக்கிறது. அவ்வளவுதான். மற்றபடி, எந்தக் கம்பெனியின் வருடாந்திரக் கணக்கை எடுத்துப் பார்த்தாலும் நஷ்டம் என்று பார்க்க முடிவதில்லை. எந்த முதலாளியும் தனது இலாபம் குறைவதை விரும்புவதில்லை. அதனால் செலவைக் குறைக்கச் சொல்கிறார்கள்.
அப்படியே செலவைக் குறைக்கச் சொன்னாலும் சகட்டுமேனிக்கு தலைகளை வெட்ட முடியாது. இருக்கும் வேலைகளைச் செய்ய ஆட்கள் வேண்டுமே! பெரும்பாலான ஐடிவாலாக்களுக்கு ஒன்றரை அல்லது இரண்டு ஆளுக்கான வேலை இருக்கிறது. பிழிந்து எடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை- எங்கள் நிறுவனத்தில் கரும்பு மெஷினுக்குள் தலையை விடுவது மாதிரிதான். காலையில் வந்தவுடன் தலையை நுழைத்தால் மாலையில் சக்கை மட்டும் வெளியே வரும். மீண்டும் இரவில் வீட்டுக்கு வந்து சக்கையை தலைவடிவத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அடுத்த நாள் மீண்டும் அதே கதைதான்.
இப்படித்தான் நேற்று இரவு வேலை முடித்துக் கிளம்ப பத்து மணி ஆகிவிட்டது. வண்டி ரிசர்வில் இருந்தது. முந்தின நாளிலிருந்தே ரிசர்வ்தான். அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் அடிக்காமல் விட்டுவிட்டேன். திமிர் எல்லாம் இல்லை- ஏதோ நினைப்பில் அதை கவனிக்கவில்லை. பெலந்தூர் ஏரிக்கு அருகில் வந்தவுடன் எதிர்பாராமல் நின்று விட்டது. மணி பத்தரை ஆகியிருந்தது. இன்னமும் குறைந்தபட்சம் ஐந்தாறு கிலோமீட்டராவது தள்ள வேண்டியிருக்கும். அது போக ஓரிரண்டு கிலோமீட்டர் தாண்டினால்தான் பெட்ரோலுக்கு வழி. தள்ளுவது கூட பிரச்சினையில்லை. வீட்டுக்கு போவதற்கு தேர்ந்தெடுத்த பாதைதான் சரியில்லை. அந்த நேரத்தில் ஏரிக்கரையில் நடமாட்டமே இருக்காது. வண்டியை நிறுத்துவதற்கும் கூட வழியில்லாத பாதை அது. என்னிடம் லேப்டாப் இருக்கிறது. அதுவும் அலுவலகத்தில் கொடுத்தது. யாராவது அதை மட்டுமே பறித்துக் கொண்டாலும் பெரிய பிரச்சினைதான்.
அந்தச் சாலையில் தவளைகளும், இரவுப்பூச்சிகளும் கும்மாளமிட்டுக்கொண்டிருந்தன. தவளைகள் நாற்பதாண்டு காலம் வாழுமாம். சென்ற வருடம் இங்கு மழையே இல்லை. அதனால் எந்தத் தவளையும் வெளியே வந்து பார்த்ததேயில்லை. இந்த வருடம் நல்ல மழை. சந்தோஷத்தில் வெளியே வந்த தவளைகள் குருட்டுவாக்கில் சாலைகளைக் கடந்து நசுங்கிக் கிடக்கின்றன. அவைகள் வெளியே வராத இடைப்பட்ட ஒரு வருடத்தில் இந்த நகரத்தில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வண்டிகளாவது பெருகியிருக்கும்.
இப்பொழுது அதுவா பிரச்சினை? எதிர்வரும் கிலோமீட்டர்களைக் கடப்பதுதான். பஞ்சர் ஆகியிருந்தால் இவ்வளவு பிரச்சினை இருக்காது. டயர் போனால் தொலையட்டும் என்று அப்படியே ஓட்டி வந்திருக்கலாம். இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை. தள்ள ஆரம்பித்துவிட்டேன். வண்டிக்காரர்கள் தாண்டிச் செல்கிறார்கள். யாரும் நிற்கவில்லை. அவர்களை எதுவும் குறை சொல்ல முடியாது. இதே இடத்தில் வேறு யாராவது தள்ளிக் கொண்டிருந்தால் நான் நிச்சயம் நின்றிருக்க மாட்டேன்.
முக்கால் கிலோமீட்டர் தாண்டியவுடன் மூச்சு வாங்கத் துவங்கியது. யாருக்காவது ஃபோன் செய்து ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வரச் சொல்லலாம்தான். ஆனால் இந்த நேரத்தில் யாரை தொந்தரவு செய்வது என்பதுதான் குழப்பமாக இருந்தது. தம்பி வெளியூரில் இருக்கிறான். அதனால் யாரையும் அழைக்கத் தோன்றவில்லை. குழப்பத்தில் நடந்து கொண்டிருந்த போது எதிரில் இரண்டு பேர் நடந்து வந்தார்கள். அது பயத்தைக் கூட்டியது. இதயத்துடிப்பு காதுக்குள் கேட்டது. ஆனால் பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பதுதான் உசிதம். முகத்தை கடுமையாக வைத்துக் கொள்ள பிரயத்தனம் செய்து கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் அருகில் வந்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்தவுடன் மூச்சு இயல்பானதாக மாறத் துவங்கியிருந்தது - அவர்கள் திருடர்கள் இல்லை. தனது காதலியோடு அவன் நடந்து வந்திருக்கிறான். பார்த்தும் பார்க்காததும் போல கடந்தார்கள். இப்பொழுது ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் போலிருந்தது. இந்த நேரத்தில் அவன் ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு இந்த வழியில் வந்திருக்கிறான் என்றால் பெரிய பிரச்சினை எதுவும் இருக்காது என்ற நம்பிக்கைதான்.
சற்று வேகமெடுத்து பைக்கைத் தள்ளத் துவங்கியிருந்தேன். ஒரு கட்டத்தில் தள்ள முடியவில்லை. அனேகமாக இப்பொழுது நான்கு கிலோமீட்டர் கடந்தாகியிருக்கக் கூடும். பத்து நிமிடங்களாவது ஓய்வெடுத்தால்தான் அடுத்த ஓரிரு கிலோமீட்டர்களுக்கு நகர்த்த முடியும். வண்டியின் மீது அமர்ந்திருந்த போது ஒரு ஆபத்பாந்தவன் வந்தார். ஆட்டோக்காரர். இத்தனை தூரத்தைக் கடந்த போதும் ஒரு ஆட்டோ கூட அந்தப் பாதையைக் கடக்கவில்லை என்பது அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. கையை நீட்டியவுடன் அவர் நிறுத்திவிட்டார். ஆட்டோவில் இன்னொருவரும் இருந்தார். ஆட்டோக்காரரின் நண்பராக இருக்கக் கூடும். அதுதான் பயமாக இருந்தது. மழைத் தூறல் போடத் துவங்கியிருந்தது. பிரச்சினையைச் சொன்னேன். வண்டியை ஓரமாக நிறுத்தி பூட்டுங்கள் பெட்ரோல் வாங்கி வரலாம் என்றார். யோசித்தேன். ‘ஒன்றும் பிரச்சினை இருக்காது வாங்க’ என்று தைரியப்படுத்தினார். வண்டியைத் தள்ளுவதும் ரிஸ்க்தான். அவர்களோடு செல்வதும் ரிஸ்க்தான். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன்.
பெட்ரோல் வாங்கிக் கொண்டு திரும்பிய போது மணி ஒன்றரையை நெருங்கியிருந்தது. பைக் அதே இடத்தில்தான் இருந்தது. வாழ்நாளின் நிம்மதியான தருணங்களில் இது ஒன்று. அவ்வளவு நிம்மதியாக இருந்தது. அதுவும் சில வினாடிகள்தான். இறங்கி ‘ஆட்டோவுக்கு எவ்வளவுங்க சார்?’ என்றேன். ஆயிரம் ரூபாய் என்றார். தூக்கி வாரிப்போட்டது. ‘என்ன சார்?’ என்றேன். அவர்கள் பேரம் பேசுவதில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. கூட இருந்தவன் குரலை உயர்த்தினான். முகத்தில் அருகம்புல் சிரிப்பு கூட இல்லாமல் பேசினான். இனி அவர்களிடம் பேசுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. பர்ஸில் அவ்வளவு காசு இருக்காது. அதையும் சொன்னேன். ‘நீங்க முன்னாடி போங்க ஏடிஎம் இருக்கு. பின்னாடியே வர்றோம்’ என்றான். இம்மிபிசகாமல் அவர்கள் சொன்னதைக் கேட்டேன். ஏடிஎம்மில் ஈ, காக்கா இல்லை. இந்த மாத சம்பளம் வந்திருந்தது. இரண்டு ஐந்நூறு ரூபாய்த் தாள்களை மட்டும் அளவாக எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள். வீட்டுக்கு வந்து சேர்ந்த போது மணி இரண்டு.
எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் கெண்டைக்காலில் வலி எடுத்திருந்தது. கடுமையான வலி. அலுவலகத்திற்கு போக முடியும் என்று தெரியவில்லை. மேனேஜருக்கு லீவ் சொல்லிவிட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்றைய வேலைகளை நாளைக்குத்தான் செய்ய வேண்டும். நாளை அலுவலகத்திற்கு சென்றால் கரும்பு மெஷின் இன்னும் கொஞ்சம் வேகமாக அழுத்தும். பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவர்களுக்கு ரிசஷன். எனக்கு சம்பளம்.