Jun 7, 2013

இனி ஏழரை ஆரம்பம்....

ஜூன் மாதம் வந்தாலும் வந்தது- காலை ஏழரை மணியானால் எங்கள் லே-அவுட்டில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏழரை பிடித்துக் கொள்கிறது. குழந்தைகளுக்கு மட்டுமா? பெற்றோருக்கும் சேர்த்துதான். காரணம், அந்த நேரத்தில்தான் மஞ்சள் நிற ஸ்கூல் வேன்கள் மேக்கப் போட்ட அரும்புகளை அள்ளிப்போட்டுக் கொள்வதற்காக வந்து சேர்கின்றன. பல் துலக்கினார்களா, ஆய் போனார்களா, குளித்தார்களா என்றெல்லாம் பார்ப்பதில்லை. டையும் ஷூவுமாக வண்டிக்கு நின்று கொண்டிருப்பவர்களை அசால்ட்டாக உள்ளே திணித்துக் கொள்கிறார்கள். 

இந்த  வெயிட்டிங் இடங்களில் பெற்றோர்கள் செய்யும் டகால்ட்டிகளை கவனித்திருக்கிறீர்கள்தானே? தட்டமும் கையுமாக சிலர் குழந்தைகளுக்கு சோறூட்டிக் கொண்டிருப்பார்கள், கொண்டையும் சீப்புமாக வேறு சிலர் குழந்தைகளுக்கு தலைவாரிக் கொண்டிருப்பார்கள், இன்னும் சிலர் ஹோம்வொர்க் செய்து கொண்டிருப்பார்கள். சென்ற வருடங்களில் இத்தகைய பகீர் காட்சிகளை பார்க்கும் போதெல்லாம் போகிற போக்கில் கமெண்ட் அடித்து தொலைத்திருக்கிறேன். பள்ளிக் கூடத்தை, பெற்றவர்களை, அந்தக் குழந்தைகளை என சகலரையும் நக்கலடித்திருக்கிறேன். ஆனால் நமக்கு முதுகுவலியும் திருகுவலியும் வர எத்தனை நாள் ஆகும்? இதோ வந்துவிட்டது.

இந்த வருடத்திலிருந்து மகன் பள்ளிக்கு போகிறான். அதுவும் ஸ்கூல் வேனில். நேற்றுதான் முதல் நாள். நீங்கள் நினைப்பது சரிதான். ஒரு காமெடி ஸீன் அரங்கேறியது. வழக்கமாக எனக்கு முன்பாகவே மனைவி அலுவலகம் கிளம்பிவிடுவார் என்பதால் பையனை பள்ளிக்கு அனுப்பிவிடும் சகல பொறுப்புகளும் என் தலை மீது இறங்கியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் பல் தேய்ப்பதில் ஆரம்பித்து ஸ்கூல் பையை தோளில் மாட்டிவிடுவது வரை சகலமும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முந்தாநாள் கட்டுரை எழுதிவிட்டு தூங்குவதற்கு மணி இரண்டு ஆகியிருந்தது. அந்த அசதியில் உறங்கி காலையில் விழித்துப் பார்த்தால் மணி 7.50. எப்பவுமே எனக்கு முன்பாக எழுந்துவிடும் மகி நேற்று பார்த்து என் மீது காலைப் போட்டு அனந்தசயனத்தில் கிடந்தான்.

அவனை எழுப்பிவிட்டாலும் அவ்வளவு சீக்கிரம் பல் தேய்த்துவிட முடியாது. பேஸ்ட் வேண்டாம் என்பான், வாய் கொப்புளிக்க முடியாது என்பான் அப்படியே கொப்புளித்தாலும் என் லுங்கி மீதுதான் துப்ப வேண்டும் என்பான். கர்ண கொடூரனாகி அவனை அமுக்கி பல்லைத் தேய்த்து, வெறித்தனமாக தண்ணீரை மேலே ஊற்றிவிட்டு (அதை குளித்தல் என்று சொன்னால் பாவம் பிடித்துக் கொள்ளும்) வெளியே வந்தால் மணி எட்டரை ஆகியிருந்தது. 

ஒன்பதேகாலுக்கு வேன் வந்துவிடும் என்று சொல்லியிருந்தார்கள்- அப்படிச் சொன்னது என் மனைவிதான். முந்தின நாள் இரவிலிருந்தே பாடிக் கொண்டிருந்தார்.  “சீக்கிரம் போயிடுங்க, லேட் பண்ணிடாதீங்க, வேனை மிஸ் பண்ணிடாதீங்க...” எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா. எனக்கு காதில் ரத்தம் வராத குறைதான். அதுவும் வேன் வீட்டிற்கு முன்பாக வராதாம். சற்று தள்ளியிருக்கும் தெருமுனையில்தான் நிற்கும். முதல் நாள் என்பதால் பத்து நிமிடங்கள் முன்பாக போய்விடுவதுதான் உசிதம். குளித்த ஈரத்தோடு நின்றவனை அரைகுறையாக துடைத்துவிட்டு சட்டையை அணிவித்து, பவுடர் பூசி, சாமி கும்பிவிட்டு கடிகாரத்தைப் பார்த்தால் மணி எட்டு நாற்பது.  இன்னும் இருபது நிமிடங்கள்தான். ராக்கெட் வேகத்தில் இரண்டு இட்லிகளை அவனுக்குள் தள்ளியாக வேண்டும். முதல் பத்து நிமிடங்களில் ஒரு இட்லியை ஸ்வாஹா செய்தாகிவிட்டது. இன்னும் பத்து நிமிடங்களில் மிச்சமிருக்கும் ஒரு இட்லியை முடித்தாக வேண்டும். கடைசி ஓவரில் முப்பத்தாறு ரன்கள் வேண்டும் என்பது போலத்தான்.

முதல் இட்லியால் பாதி வயிறு நிரம்பியிருந்ததால் இரண்டாவது இட்லிக்கு அவன் முரண்டு பிடிக்கத் துவங்கியிருந்தான். இந்த மாதிரி சமயங்களில் எனக்கு மண்டைக்குள் இருக்கும் கிரிமினல் பிரிவு விழித்துக் கொள்ளும். அப்படித்தான் நேற்றும். இட்லியில் தயிரை ஊற்றி பிசைந்து பெரிய கவளங்களாகத் தள்ளிவிடலாம் என்று குறுக்குப் புத்தி வேலை செய்தது. செயல்படுத்தத் துவங்கினேன். அந்த ஐடியா என்னைக் கைவிடவில்லை. பாதி இட்லி மூன்று நிமிடங்களில் காணாமல் போய்விட்டது. இன்னும் அரை இட்லிதான். மூன்று கவளங்களில் முடித்துவிடலாம். முதல் கவளமும் சக்ஸஸ். இரண்டாவது கவளத்தைப் திணிக்கும் போது வாந்தி எடுப்பது போல ‘வ்ய்யாக்’ என்றான். கொஞ்சம் தண்ணீரைக் குடிக்க வைத்து அடக்கிவிட்டேன். அத்தனை களேபரங்களையும் பார்த்துக் கொண்டிருந்த அப்பா ‘விட்டுரு’ என்றார். ஆனால் விட்டுவிட எனக்கு மனம் வரவில்லை. இன்னும் ஒரே வாய்தான் என்று அடுத்த வாயைத் தள்ளிய போது மகியைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. கண்களை பரிதாபமாக வைத்துக் கொண்டு வாங்கிக் கொண்டான். விழுங்கியும் ஆகிவிட்டது. ஆனால் நேரம் சரியில்லை. அடுத்த வினாடியே இன்னொரு ‘வ்ய்யாக்’. இந்த முறை தண்ணீர் குடிக்க வைத்தேன். ஆனால் தண்ணீரால் எதுவும் செய்ய முடியவில்லை. ‘வ்ய்யாக்’ வென்றுவிட்டது. மொத்த இட்லியும் வந்துவிட்டது. அத்தனை கஷ்டங்களும் வீண்.

அவனைக் கழுவி விடுவதில் Precious time இல் சில நிமிடங்களும் கரைந்துவிட்டன. அவனது வயிறு காலியாகியிருந்தது. வாந்தியெடுத்துவிட்டதால் சும்மா விட முடியுமா? பள்ளி முடிந்து மதியம் ஒரு மணிக்குத்தான் வீட்டிற்கு வருவான். அதுவரை எப்படி பசி தாங்குவான்? வாழைப்பழம் இருந்தது. ஆனால் நேரம்தான் இல்லை. ஆனால் கிடைத்த கேப்பில் ஒரு பழத்தை உண்ண வைத்தாகிவிட்டது. என்னால் முடிந்தது அவ்வளவுதான்! இனி ‘ஷூ’ போடும் படலம். உண்மையிலேயே அது ஒரு ‘வாதை’படலம். இதைப் பற்றி மேலும் பேசினால் ‘ஷூ’ கண்டுபிடித்தவன் மீது கடுப்பாகிவிடுவேன் என்பதால் அவனை இன்னொரு நாள் கவனித்துக் கொள்ளலாம்.

போர்களத்திலிருந்து வெளியே வருவது போல கதவைத் திறந்து வெளியே வரும் போது மணி 9.10. இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கிறது என்பதால் மகியை நடக்க வைப்பது நல்லதாகத் தெரியவில்லை. அவனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாகத் தெரு முனைக்குச் சென்றுவிட்டேன். ஆங், சொல்ல மறந்துவிட்டேன். பால் பாட்டிலில் கொஞ்சம் பாலும் ஊற்றி எடுத்துக் கொண்டேன். 

தெருமுனையில் நிற்கிறோம் நிற்கிறோம் நின்று கொண்டேயிருக்கிறோம். ஆனால் வேன் வந்தபாடுதான் இல்லை. எரிச்சலாக இருந்தாலும் அதுவும் ஒரு விதத்தில் வசதியாகப் போய்விட்டது. கையில் எடுத்து வந்திருந்த பாலை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வைக்க நேரம் கிடைத்தது. பால் குடித்தபிறகு அவனது வயிறு சற்று புடைத்திருந்தது. இனி பிரச்சினையில்லை என்று ஆசுவாசமாக இருந்தது. 

அவன் பள்ளிக்கு போவது குறித்து மிகுந்த உற்சாகமாக இருந்தான். நிறைய பேசினான். பெரும்பாலும் அவனது புதிய ஸ்கூல் வேன் பற்றியே இருந்தது. மணி ஒன்பதரை ஆகியிருந்தது. அப்பொழுதுதான் ஆடி அசைந்து வேன் வந்தது.  

டிரைவரிடம் “இதான் உங்கள் ரெகுலர் டைமா?” என்றதற்கு “ஆமாம் சார்” என்றார்.

“ஒன்பதேகால்ன்னு சொன்னாங்களே”

“இல்லை..ஒன்பதரைதான்”

மெதுவாக கிளம்பியிருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன். வேனுக்குள் ஏற்றிவிட்ட பிறகு புது கிரகத்துக்குள் நுழைந்தவனைப் போல மகி அமர்ந்து கொண்டான். சில குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. நல்ல வேளையாக இவன் அழவில்லை. வேன் நகர்ந்தது. 

மனைவிக்கு ஃபோன் செய்தேன். வாந்தி கதையெல்லாம் சொல்லிவிட்டு “ஒன்பதரைதான் ரெகுலர் டைமாம்” என்றேன். 

“எனக்குத் தெரியும்” என்றாள் அசால்ட்டாக.

“தெரியுமா? அப்புறம் ஏன் ஒன்பதேகால்ன்னு சொன்ன?” என்றேன். கோபமாகத்தான் இருந்தேன். ஆனால் கல்யாணம் ஆகி நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டதல்லவா? இப்பொழுதெல்லாம் கோபத்தை காட்டுவதற்கு பயமாக இருக்கிறது. எனக்கு கோபம் வந்தால் ஐந்து நிமிடங்களில் போய்விடும். ஆனால் அவசரப்பட்டு காட்டிவிட்டால் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு அவஸ்தைப் பட வேண்டியிருக்கிறது என்பதால் என்ன கோபம் வந்தாலும் பற்களைக் கடித்துக் கொண்டு ஓங்கி அறைந்துவிடுகிறேன் - எதிரில் இருக்கும் சுவர் அல்லது கற்களைத்தான். வலிக்கும்தான். ஆனால் மற்ற பின்விளைவுகளை ஒப்பிட்டால் இந்த வலி எவ்வளவோ பெட்டர்.

“முன்னாடியே ஒன்பதரைன்னு சொன்னால் முதல் நாள் அதுவுமா லேட் பண்ணிடுவீங்கன்னுதான் ஒன்பதேகால்ன்னு பொய் சொல்லியிருந்தேன்” என்றாள். 

யார் நம்பினாலும் சரி மனைவி மட்டும் கணவனை நம்பமாட்டாள் என்று சும்மாவா சொன்னார்கள்? அப்படியெல்லாம் யாரும் சொல்லியிருக்கவில்லையா? யாரும் சொல்லாவிட்டால் என்ன? அதுதானே உண்மை! இனிமேல் நாம் சொன்னதாக இருக்கட்டும் விடுங்கள்.

“ஹி  ஹி” என்று வழிந்து கொண்டு வீடு திரும்பினேன்.

என்னதான் சிரமமாக இருந்தாலும் இது ஒரு நல்ல அனுபவம். தந்தைமையை அணு அணுவாக அனுபவிக்கும் சந்தர்ப்பம். உண்மையாகவே இதை வாழ்க்கையின் மிக முக்கியமான பருவமாக நினைக்கிறேன். 

வீட்டிற்கு வந்து அமர்ந்த போது ஆசுவாசமாக இருந்தது. சுழற்றிச் சுழற்றி அடித்த மழை ஓய்ந்த பிறகு ஜன்னைலைத் திறந்து வைத்தால் ‘சில்’ காற்று நம்மை குளிரச் செய்யுமல்லவா? அப்படி...