Jun 3, 2013

நைன்ட்டி

வழக்கம் போலவே வாரா வாரம் திங்கட்கிழமை வந்து தொலைத்துவிடுகிறது. சோற்று மூட்டையைக் கட்டிக் கொண்டு, ட்ராஃபிக்கில் பைக் ஓட்டி, அலுவலகம் வந்து சேர்ந்தால் அடுத்த ஐந்து நாட்களுக்கும் மீட்டிங், இ-மெயில், டெட்லைன், ரிவ்யூ. ஆனால் இதற்காக புலம்ப முடியாது. சம்பளம் வாங்குகிறேன் அல்லவா? வேண்டுமானால் மாதத்திற்கு ஒரேயொரு முறைதான் ஒண்ணாம் தேதிதான் வருகிறது என துக்கினியூண்டு ஃபீல் செய்து கொள்ளலாம். 

எல்லாவற்றிலுமே இப்படித்தான்- ஆதாயம் வரும் வரைக்கும் என்ன குதி வேண்டுமானாலும் குதித்துக் கொள்ளலாம். யாரை வேண்டுமானாலும் எதிர்த்து பேசலாம்.விமர்சிக்கலாம். திட்டலாம். நட்ட நடு சென்டரில் நின்று நடுநிலையாளனாகவும் காட்டிக் கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு ரூபாய் அளவிற்கு அடுத்தவனிடம் வாங்கிவிட்டால் கூட நமது நடுநிலைமை, நாட்டாமைத் தனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு கூளை கும்பிடு போட்டுத்தான் ஆக வேண்டும். எதிர் முகாமை எதிர்த்து பேசினால் எட்டி குத்துவதற்கு ஆயிரம் பேர் அணி திரண்டுவிடுவார்கள். ‘நீ அங்கு வாலாட்டுகிறவன்தானே..இங்க என்ன சுழிக்கிற?’ என்று கேட்டால் முகத்தை முக்காட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியதுதான். 

ஆனால் அடுத்தவன் பற்றியெல்லாம் பெரியதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் சிரமத்தில் இருக்கும் போது யாருமே வர மாட்டார்கள். நாமாக பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான். அதுவே கொஞ்சம் தலை எடுப்பதாகத் தெரிந்தால் ஓங்கி கொட்டுவதற்கு மட்டும் தயாராக இருப்பார்கள். அதனால் நமக்கு எது சரி என்று படுகிறதோ அதை- மனசாட்சி என்று ஒன்றிருந்தால் அதற்கு பங்கம் வராமல் செய்து கொள்ளலாம் என்பதுதான் என் பாலிசி.

வாரத்தின் முதல் நாளும் அதுவுமாக இப்படியெல்லாம் தத்துவம் அளந்து கொண்டிருந்தால் ‘ரீல்’ அறுந்துவிடும்- அதுவும் கலைஞரின் பிறந்தாளன்று பேசிக் கொண்டிருந்தால் அரசியல் சாயம் வேறு அடித்துவிடுவார்கள். 

முப்பது வயதில் ப்ளட் ப்ரஷர், முப்பத்தைந்தில் சர்க்கரை, நாற்பதில் அட்டாக் அதன் பின்னர் பைபாஸ் சர்ஜரி என்று மருந்துகளால் மட்டுமே இந்த உடல் மெஷினை ஓட்டிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தொண்ணூறு வயது என்பதே பெரிய சாதனை. அதில் ஐம்பதுக்கும் மேலான வருடங்கள் சட்டப்பேரவையிலேயே கழித்தாகிவிட்டது. கட்சித் தலைவர், அமைச்சர், முதலமைச்சர், கிங் மேக்கர், அரசியல் ராஜதந்திரி - சாதாரண விஷயம் இல்லை. கலைஞர் நூறாண்டு வாழ்க!

அதே சமயம், பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரையில் கலைஞரின் மீது அபிமானத்தோடு இருந்த அத்தனை பேரும் இப்பொழுதும் அதே அபிமானத்தோடு இருக்கிறார்களா என்று யோசித்தால் அதற்கான பதில் நேரடியானது. “இல்லை”. காரணம் சிம்பிளானது. “கலைஞரை மிக மிக எதிர்பார்த்துவிட்டோம்”. 

முந்நூறு மதிப்பெண் வாங்குவான் என எதிர்பார்க்கும் மாணவன் இருநூற்றைம்பது வாங்கினால் பெரிய ஏமாற்றம் இருக்காது. அதுவே நானூற்று எழுபத்தைந்து மதிப்பெண் வாங்குவான் என எதிர்பார்க்கப்பட்ட மாணவன் இருநூற்றைம்பது வாங்கினால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அதுவும் தாங்க முடியாத பேரரதிர்ச்சியாக. கலைஞர் கடந்த பத்து ஆண்டுகளில் செய்தனவற்றில் பெரும்பாலானவை நானூற்றைம்பதுக்கான மாணவனாக இருந்துவிட்டு இருநூற்றைம்பது வாங்கிக் கொண்டிருந்ததுதான். 

தமிழகத்தின் பிற முக்கியமான தலைவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. அதனால் அவர்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் அதிர்ச்சியில்லை. ஆனால் கலைஞரின் ‘தமிழினத் தலைவர்’என்ற பிம்பம் அறுபதாண்டு காலமாக உருவாக்கப்பட்டது. இந்த இனத்தை காப்பாற்றுவது அவருக்கு மட்டுமே சாத்தியம் என பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நடந்தவையெல்லாம் முற்றிலும் எதிர்மறையாக நடந்தது. தனது செயல்பாடுகளின் காரணமாக ‘தமிழினத் தலைவர்’ பிம்பத்தை கருணையே இல்லாமல் உடைத்தார். உடைத்தது உடைத்ததுதான். இனி எப்போதும் சேராது.

கலைஞரை வெறுக்கும் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பார்க்கலாம். மூன்று காரணங்களை அவர்களால் முக்கியமானதாகச் சொல்ல முடியும். அந்த மூன்று காரணங்கள் என்ன என்பது கலைஞருக்கும் தெரியும். ஆனால் ஒத்துக் கொள்வதற்குதான் மனம் இல்லை. சமாதானம் செய்வதற்காக எத்தனை காரணங்களை வேண்டுமானாலும் சொல்லலாம். “இதெல்லாம் அவரால் மட்டும் செய்யக் கூடிய காரியமில்லை, அவரைச் சுற்றியிருந்தவர்கள் சரியில்லை, அவருக்கு வயதாகிவிட்டது, மற்றவர்களை விட கலைஞர் பெட்டர் etc.etc....”

என்னதான் சொன்னாலும் ஆறுதல் அடைய முடியாத காயங்கள் இவை. மறைக்கவே முடியாத தழும்புகளாக இருக்கின்றன. 

இருக்கட்டும். ஆனாலும் அறுபதாண்டு காலத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றில் கலைஞரின் தடம் ஆழமானது. யாராலும் நிராகரிக்க முடியாதது. திறமை, உழைப்பின் உருவமாகத் திகழும் அந்தப் பெரியவரை இந்தச் சமயத்தில் வாழ்த்துகிறேன்.

                                                                           *******
பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்வுகளில் ஒரு படம் கண்களை உறுத்தியது. கவிஞர்களோடு கலைஞர் எடுத்துக் கொண்ட படம். தொண்ணூறாவது பிறந்தநாளுக்கு தொண்ணூறு கவிஞர்கள் வாழ்த்து பாடியிருக்கிறார்கள். சந்தோஷமான நிகழ்வுதான். தமிழகத்தில் திமுகவையும், கலைஞரையும் தவிர்த்தால் கவிஞர்களை யார் மதிக்கிறார்கள்? அப்படி அழைத்தவர்கள் கவிஞர்களுக்கான சரியான கெளரவத்தையும் கொடுத்திருக்கலாம் என நினைக்கிறேன். 

என்ன மரியாதை இல்லை என்கிறீர்களா? இந்தப் படத்தில் கல்யாண்ஜியைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


தமிழ் நவீன கவிஞர்களில் மிக முக்கியமான இடம் பெற்றவர் கல்யாண்ஜி. கலங்கல் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையில் தெரிவது போல அவரது கவிதைகளில் தூய்மையான அன்பு துள்ளிக் கொண்டிருக்கும். மூத்த கவிஞர்களின் வரிசையில் அவருக்கு அழிக்க முடியாத இடம் உண்டு. வண்ணதாசன் என்ற பெயரிலும், கல்யாண்ஜி என்ற பெயரிலும் இரட்டை வண்டிகளில் மாறி மாறி சவாரி செய்த அவரை இந்தப்படத்தில் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? கஷ்டம்தான். கடைசி வரிசையில் இடது ஓரமாக பாவமான தோரணையில் ஒருவர் நிற்கிறார் பாருங்கள் -அந்த உயர்ந்த மனிதன்.

“வந்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுங்க” பெருமொத்தமாக அழைத்தால் ஓடி வந்து முதல் வரிசையில் வந்து நின்று கொள்ளும் மனிதர் இல்லை அவர். ஓரமான இடமே பொருத்தமான இடம் என்று அவர் ஒதுங்கியிருக்கக் கூடும். ஆனால் நிகழ்ச்சியாளர்கள் இதை ஒழுங்குபடுத்தியிருக்கலாம்  அல்லது நவீன கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த கனிமொழியாவது அவரை கவனித்திருக்க வேண்டும்.

கவிதைகளை பிரியத்தோடு வாசித்துக் கொண்டிருக்கும் என்னால், நவீன கவிதைகளின் முன்னோடி கவியொருவர் தொண்ணூறோடு தொண்ணூற்றொன்றாக நின்று கொண்டிருப்பதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

கல்யாண்ஜியின் கவிதை ஒன்று- 

ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை.

அது தங்களுக்கு  என்று
நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்.

பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாமல்
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறு பெண் நோக்கி.