Jun 29, 2013

உங்களுக்கு இன்னும் டோக்கன் வரலையா?

தமிழகத்தில் இன்னுமொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி டம்மியாக்கப்பட்டிருக்கிறார். இந்த முறை அன்சுல் மிஸ்ரா. இனிமேல் வணிகவரித்துறையின் இணை செயலாளராக இருப்பாராம். பசையுள்ள பதவிதான். ஆனால் பைசா வாங்காத அன்சுல் மிஸ்ராவுக்கு இது எதற்கு பயன்படப் போகிறது? அவருக்கு மக்களோடு மக்களாக ஃபீல்டில் இறங்கிக் கலக்கும் வேலைதான் சரிப்பட்டு வரும். வணிகவரிக்கு எல்லாம் வேறு ஆட்கள் இருக்கிறார்கள். 

அன்சுல் மிஸ்ராவின் working style பற்றி எனக்கு ஓரளவுக்குத் தெரியும். அவர் எங்கள் ஊரில் கொஞ்ச நாட்களுக்கு சப்-கலெக்டராக இருந்தார்.  அதைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் இன்னும் சில விஷயங்களைச் சொல்லிவிட வேண்டும்.

எங்கள் அம்மா கிராம நிர்வாக அலுவலராக பணியில் இருந்தார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் இந்தப் பணியில் இருந்துவிட்டு ஓராண்டுக்கு முன்பாகத்தான் வி,ஆர்.எஸ் வாங்கிக் கொண்டார். குடும்பத்தை கவனிக்க விரும்பும் பெண்களுக்கு இது ஏற்ற வேலை இல்லை. இரவு பன்னிரெண்டு மணிக்கு ஆற்றில் பிணம் மிதக்கிறது என்று ஃபோன் வரும். அப்பாவும் அம்மாவும் அந்த நேரத்தில் பைக் எடுத்துக் கொண்டு கிளம்புவார்கள். மழைக் காலங்களில் இன்னமும் கொடுமை. ஆற்றில் வெள்ளம் வருகிறது, பள்ளத்தில் நீர் பெருக்கெடுக்கிறது என்று தகவல்கள் வரும். உடனடியாக ‘ஸ்பாட்’டில் இருக்க வேண்டும். அடுத்த சில நிமிடங்களில் மழையில் நனைந்தபடியே அப்பாவும் அம்மாவும் கிளம்பிப் போவார்கள். அப்பொழுது டூ வீலர்தான் இருந்தது. ஆரம்பத்தில் எங்கள் வீடு ஓட்டு வீடாக இருந்தது. நள்ளிரவில் அம்மாவும் அப்பாவும் சென்ற பிறகு இடியும் மின்னலும் அடித்து நொறுக்கும். ஓடுகளுக்கு இடையிலான சந்தில் மின்னல் வெளிச்சத்தைப் பார்க்கும் போது நானும் தம்பியும் பயந்து நடுங்கியிருக்கிறோம். என்னதான் கண்களை மூடிக் கொண்டு படுத்தாலும் தூக்கம் வராத இரவுகள் அவை. காற்றுக்காலத்தில் வாழை மரங்கள் சாய்ந்து போன அறிக்கை கொடுக்க வேண்டும். யானை ஊருக்குள் புகுந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். கொலை நடந்தாலோ, யாராவது தற்கொலை செய்து கொண்டாலோ அங்கு இருக்க வேண்டும்.

அது போக வருவாய்த் துறைக்கு வரும் பெட்டிஷன்கள், வருடாந்திர கணக்கு முடிக்கும் ஜமாபந்தி, நில அளவை, அதிகாரிகளின் ஆய்வு என கிட்டத்தட்ட வருடம் முழுவதும் பிஸியாகவே இருப்பார். அதுவும் தமிழகத்தில் இலவசக் கலாச்சாரம் வந்த பிறகு கிராமநிர்வாக அலுவலர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாகிவிட்டது. ஆரம்பத்தில் வேட்டி சேலை மட்டும்தானே இலவசமாகக் கொடுத்தார்கள். அதுவும் பொங்கல் சமயத்தில். அக்டோபர், நவம்பரில் கணக்கெடுத்துக் கொடுப்பார்கள். அந்த கணகெடுப்பிற்காகவே மிகுந்த சிரமப்படுவார்கள். ஆனால் அதன் பிறகு ஒவ்வொன்றும் ‘இலவசம்’ என்ற போது மணியகாரர்கள் நொந்து பரிதாபமாகிப் போனார்கள். ஒவ்வொரு இலவசத்திற்கும் தகுதியானவர்களைத் தேடிப்பிடித்து கணக்கெடுக்க வேண்டும். இலவச டிவிக்கு ஒரு முறை கணக்கெடுக்க வேண்டும், இரண்டு ஏக்கர் நிலத்துக்கு ஒரு முறை, ஆடு மாட்டுக்கு ஒரு முறை என வருடம் முழுவதும் கணக்கெடுத்தே தேய்ந்து கொண்டிருந்தார்கள். 

சென்ற ஆட்சியில் டிவி கொடுக்க ஆரம்பித்த போது உள்ளூர் பிரசிடெண்ட்கள் செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமில்லை. ஆரம்பத்தில் அவர்கள்தான் கணக்கு எடுத்தார்கள். எங்கள் அம்மா பணியாற்றிய கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவரும் அழிச்சாட்டியத்திலிருந்து விதிவிலக்கு இல்லை. அவசர அவசரமாக தனது கட்சிக்காரர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் இலவச டிவிகளுக்கான டோக்கன்களை கொடுத்துவிட்டார். டோக்கன் வாங்கிய பெரும்பாலானோர் தோட்டங்காட்டுக்காரர்கள். வசதியானவர்கள். எதிர்கட்சிக்காரர்கள் சும்மா இருப்பார்களா? டோக்கன் வழங்கப்படாத ஏழைகளிடம் ‘அவியளுக்கெல்லாம் டோக்கன் கொடுத்திருக்காங்க, உங்களுக்கு கொடுக்கலியா?’ என்று கொளுத்திப் போட்டுவிட்டார்கள். சொல்கிற விதத்தில் சொன்னால் பற்றிக் கொள்ளும்தானே? டோக்கன் கிடைக்காதவர்கள் களமிறங்கிவிட்டார்கள். விஷயம் வருவாய்த்துறைக்குச் சென்றதும் மீண்டும் கணெக்கடுக்கச் சொல்லி அம்மாவிடம் சொல்லிவிட்டார்கள். அப்புறம்தான் உண்மையாகவே பிரச்சினை ஆரம்பித்தது. “டோக்கன் வாங்கியிருக்கிறது எங்களோட ஆட்கள் நாங்கள் எடுத்த அதே கணக்கை கொடுத்துவிடுங்கள்” என்று அழுத்தம் வரத் துவங்கியதும் அம்மா டென்ஷனாகிவிட்டார். “முடியாது” என்று சொன்னதும் அழுத்தம் உருமாறி மிரட்டலாகியிருக்கிறது. பிரசிடெண்ட்டும் அவருடைய அல்லக்கைகளும் சத்தம் போட்டுவிட்டுச் சென்ற போது அருகிலிருந்த இன்னொரு வருவாய் ஊழியர் இந்தப் பிரச்சினை பற்றி தாசில்தாருக்கு தகவல் கொடுத்துவிட்டார். விஷயம் தாசில்தார் வழியாக அன்சுல் மிஸ்ராவுக்கு போனதும் அம்மாவை ஃபோனில் அழைத்திருக்கிறார். அம்மாவுக்கு இருந்த டென்ஷனில் இரண்டு வார்த்தைகள் பேசியதும் உடைந்து அழுதுவிட்டார். அன்சுல் மிஸ்ரா ஃபோனை கட் செய்துவிட்டார். அம்மாவுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

அடுத்த இருபது நிமிடங்களில் அவர் கிராமத்திற்கு வந்துவிட்டார். துக்கிணியூண்டு கிராமத்திற்கு சப்-கலெக்டர் வந்தவுடன் அம்மாவுக்கு மட்டுமில்லை அங்கிருந்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம். வருவாய்த்துறையிலிருந்து அவரோடு வந்திருந்த ஆட்கள் ஒரே நாளில் மொத்த கிராமத்தையும் வளைத்து வளைத்து கணக்கெடுத்துவிட்டார்கள். புது டோக்கனை தகுதியானவர்களுக்கு கொடுத்துவிட்டு அம்மாவை அழைத்து “எதைப் பத்தியும் பயப்படாம சர்வீஸ் செய்யுங்க. உங்களுக்கு சப்போர்ட் செய்ய நான் இருக்கேன். பார்த்துக்கலாம்” என்றவுடன் அம்மா படு உற்சாகமாகிவிட்டார். 

அவர் அதோடு விடவில்லை. பிரசிடெண்ட்டை அருகில் அழைத்து “ஓவரா ஆட்டம் போடுறீங்களா? நான் நினைத்தால் இங்கேயே சஸ்பெண்ட் செஞ்சுட்டு போய்டுவேன். தெரியுமில்ல? ஒழுங்கா நடந்துக்குங்க” என்று அத்தனை கூட்டத்திற்கு முன்பாக முகத்தில் அறைந்தாற்போல பேசியிருக்கிறார். அதன் பிறகு மற்ற எல்லா இலவசங்களுக்கும் அம்மாதான கணக்கு எடுத்திருக்கிறார். எதற்குமே அந்த பிரசிடெண்ட் மூச்சுவிடவில்லை. 

இதே போல இன்னொரு விவகாரமும் இருக்கிறது. வனத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் இடையிலான லடாய். அதை இன்னொரு முறை சொல்கிறேன். இப்பொழுது அன்சுல் மிஸ்ராவின் மனிதாபிமானம் பற்றி சொல்லிவிட வேண்டும்.

செண்டான் என்றொரு மனிதர். எங்கள் அமத்தா ஊர்க்காரர். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த அவரது மகளுக்கு பண்ணாரியம்மன் பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் ஃபீஸ் கட்ட பணம் இல்லை. வங்கியில் லோன் வாங்குவது பற்றிய விவரங்கள் தெரியாமல் விட்டுவிட்டார். கடைசி நேரத்தில் பணம் புரட்ட முடியாமல் கிட்டத்தட்ட படிப்பே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்கள். நல்லவேளையாக அந்தப் பக்கம் ஆய்வுக்குச் சென்ற அன்சுல் மிஸ்ராவிடம் இந்தத் தகவல் சேர்ந்துவிட்டது. விவரங்களைக் கேட்டுவிட்டு அடுத்த நாள் தனது அலுவலகத்திற்கு வரச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். செண்டானும், அவரது மகளும் சென்ற போது தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டு “இதை உங்களுக்கு சும்மா தரவில்லை. என்னிடமும் இப்போதைக்கு அதிகம் பணம் இல்லை. சம்பளத்தில் இருந்துதான் இதைக் கொடுக்கிறேன். வங்கிக் கடன் வாங்கித் தருவதற்கு நான் பொறுப்பு. கையில் வந்தவுடன் இதை எனக்கு திருப்பிக் கொடுத்தால் போதும்” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை படிக்க வைத்தவர் அன்சுல். 

லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி டேபிளுக்குள் செருகிக் கொள்ளும் ஆர்.டி.ஓக்கள், சப்-கலெக்டர்கள் பற்றிய கதைகளையே திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, சம்பளப் பணத்தில் உதவி செய்த அன்சுல் மிஸ்ராவெல்லாம் நிச்சயம் ஆச்சரியமான அதிகாரிதான்.

சமீபகாலத்தில் அவர் மதுரையை கலக்கிக் கொண்டிருக்கிறார் என்று செய்திகளை பார்த்த போது ஆச்சரியம் எதுவும் இல்லை. அவர் அப்படித்தான் என்று தெரியும். இப்பொழுது மதுரையை விட்டு அனுப்பிவிட்டார்கள் என்ற போதும் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆட்சியாளர்கள் எப்பவும் இப்படித்தான் என்பதும் நமக்குத் தெரியும் அல்லவா?

Jun 28, 2013

கறை நல்லது பாஸ்!

இரண்டு நாட்கள் சென்னை வாசம். சென்னைக்கும் பெங்களூருக்கும் எனக்குத் தெரிந்து ஒரேயொரு வித்தியாசம்தான். பெங்களூரில் போர்த்தாமல் தூங்க முடிவதில்லை; சென்னையில்  துணியோடு தூங்க முடிவதில்லை. சென்னையில் செய்த உருப்படியான ஒரு விஷயம்- டிஸ்கவரி புக் பேலஸில் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டதுதான். வேடியப்பனிடமிருந்து புத்தகங்களை வாங்கினால் மட்டும் அடுக்கி வைக்காமல் ஒழுங்காக படித்து விட முடிகிறது என நம்புகிறேன். மூட நம்பிக்கை போலத்தான் தெரிகிறது. ஆனால் “கறை நல்லது” மாதிரி இத்தகைய “மூட நம்பிக்கைகளும் நல்லதுதான்”.

சென்னை பற்றிய விஷயங்களைத் தனியாக பேச வேண்டும். அதுவரைக்கும் மண்டைக்குள் ஊறிக் கிடக்கட்டும். இப்பொழுது ‘தனிமனித அரசியல்’ பற்றி கொஞ்சம் பேசலாம் என்று தோன்றுகிறது. அரசியல் செய்யாத ஆட்கள் என்று யாராவது இருக்கிறார்களா? எல்லோருக்குமே இங்கு ஒரு அரசியல் உண்டு. எல்லோருமே ஏதாவதொரு விதத்தில் முன்னேறிவிட என்றுதான் நினைக்கிறோம். “நாசகமாகப் போக விரும்புகிறேன்” என்று சொல்லும் ஆளை பார்த்தால் சொல்லுங்கள். காலில் விழுந்து கும்பிட வேண்டும். 

சில அரசியலைத் தெரிந்தே செய்கிறோம், சில அரசியல் நம்மையும் மீறி அதுவாக நடந்துவிடுகிறது. வீட்டில் மனைவியிடம் பொய் சொல்வதில் ஆரம்பித்து, சொந்தக்காரனிடம் வழிவது வரைக்கும் தனி மனித அரசியல் இல்லாத ஒரு இடத்தை காட்ட முடியுமா என்ன? ரொம்பச் சிரமம். சுட்டி டிவி வேண்டும் என்பதற்காகவோ அல்லது வீடியோ கேம் வேண்டும் என்பதற்காகவோ அப்பாவிடம் மூன்று வயதுக் குழந்தை கூட அரசியலை ஆரம்பித்துவிடுகிறது. சோறு  ஊட்டுவதில் ஆரம்பித்து, குளிக்க வைப்பது வரை நாம் அதனிடம் ஏகப்பட்ட அரசியல் பேரங்களை நடத்துகிறோம். ஆனால் நாம் இதையெல்லாம் அரசியல் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. நம்  subconscious மனதில் இவற்றையெல்லாம் தினப்படி நிகழ்வாக நினைத்துக் கொள்கிறோம்.

ஆனால் வெளியுலகில் அப்படியில்லை. நமது எல்லாக்காரியங்களிலிருந்தும் அரசியலை பிரித்தெடுப்பதற்கு ஆட்கள் உண்டு. ஒரு ஆளைப் பாராட்டினால் “அவன் ஜால்ரா” என்பார்கள்.  ஒரு ஆளைக் கலாய்த்தால் “இவனுக்கு பொறாமை” என்பார்கள், மற்றவர்களிடமிருந்து விலகியிருந்தால் “அவனுக்கு தலைக்கணம்” என்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்லாமல்  இருந்தால் “என்கிட்ட பயப்படுகிறான்” என்பார்கள். 

இதெற்கெல்லாம் என்ன ரியாக்ட் செய்வது?

இதையெல்லாம் நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். இங்கு ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதன் பற்றிய Image வைத்திருப்பான். ‘அவன் வெட்டி’, ‘அவன்  பிஸ்தா’ ‘இவன் நல்லவன்’ ‘அவன் ஆகாவழி’,‘இவனால் காரியம் ஆகும் அதனால் பகைத்துக் கொள்ளக் கூடாது’ ‘இவனை அடித்து காலி செய்துவிட வேண்டும்’ எக்ஸெட்ரா;  எக்ஸெட்ரா. நம்மைப் பற்றிய மற்றவர்களின் இந்த பிம்பங்கள் இருந்துவிட்டு போகட்டுமே! ஏன் சிதைக்க வேண்டும்? இதையெல்லாம் நாம் சிதைக்க வேண்டியதில்லை.

நம்மைப் பற்றிய பிம்பத்தை இன்னொருவன் மேலும் மேலும் மெருகூட்ட முயல்கிறான். ஆதாரங்களைத் தேடுகிறான். உதாரணமாக, ‘இவன் ஒரு பொறுக்கி’ என்று நம்மை நினைத்திருப்பவன் அதற்கான ஸ்க்ரீன்ஷாட்களைத் தேடுகிறான். ஆதாரங்களைத் தேடுவதோடு மட்டும் நில்லாமல் ‘இவன் இப்படித்தான்’ என நம்மைப் பற்றி வெளியுலகத்திற்கு அவன் நிரூபிக்க முயல்கிறான். 

இதையெல்லாம் நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. நம்மைப் பற்றிய எதிர்மறை பிம்பங்களை(Negative images) சிதைக்க முயல்கிறோம். இதுதான் பெரும்பாலான பிரச்சினைகளின் அடிநாதம். உண்மையில் நமது Image பற்றி அதிக அளவில் கவலைப்படுகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் நம்மை ‘நல்லவன், வல்லவன், நாலும் தெரிஞ்சவன்’ என்று நினைக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் இது practically சாத்தியமே இல்லை. என்னதான் குட்டிக் கரணம் அடித்தாலும் ஒவ்வொரு மனிதனையும் அசிங்கப்படுத்துவதற்கு இங்கு ஆட்கள் உண்டு. 

 குறுக்கே வந்து ‘சட்டையைப் பிடித்து’ கேள்வி கேட்பார்கள். ‘நீ அம்மணமாக ஓடுகிறாய்’ என்பார்கள். சொல்லிவிட்டு போகட்டும்- ஒவ்வொருவரிடமும் நம் ஆடையை நிரூபிக்க  வேண்டியதில்லை. ஒரே ஒரு புன்னகையோடு கடந்து போய்விட்டால் பிரச்சினை இல்லை. ஒரு முறை சொல்வார்கள் அல்லது இரண்டு முறை சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் நாம்  சிரித்துக் கொண்டேயிருந்தால்? கேள்வி கேட்பவர்களில் சிலர் புரிந்து கொண்டு நம் பாதையிலிருந்து விலகிக் கொள்வார்கள். ஆனால் சிலர் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்.  கேட்டுவிட்டு போகட்டுமே. நாம் சிரித்துக் கொண்டு நகர்ந்த படியே இருக்க வேண்டும். அவ்வளவுதான். இதனால் நமக்கு துளி கூட நஷ்டம் கிடையாது.

இவர்களை தவறானவர்கள் என்று சொல்லவில்லை. இதுதான் உலக இயல்பு. ரியாலிட்டி. நானும் நீங்களும் மட்டும் யோக்கியமா என்ன? நாமும்தான் தெரிந்தோ தெரியாமலோ எவனை தொலைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு செகண்ட் யோசித்துப் பார்த்தால் குறைந்தது நாம் கெடுதல் செய்த நான்கைந்து பேரின் முகம் வந்து போகும்.

நம்மை நோக்கிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என முடிவு செய்தால் பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மிடம்  பதில் இருக்காது. அந்தக் கேள்விகளை இதுவரை யோசித்து கூட இருக்க மாட்டோம். ஆனால் பதில் சொல்லியாக வேண்டும் என நம் Ego விரும்பும். பதில்களுக்காக மெனக்கெட வேண்டும். நாம் பதில் சொன்னால் மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? நிச்சயமாக நடக்காது. நமது விளக்கங்களுக்கு எதிராக இன்னும் சில கேள்விகள் வரும் அதற்கு இன்னும் சில பதில்கள் தேவைப்படும். விக்ரமாதித்யன் - வேதாளம் கதைதான்.

நமது அரசியலைக் கேள்வி கேட்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அரசியல் இருக்கும். சண்டை பிடிப்பது என்று முடிவானால் அதை நாமும் கேட்கலாம். ஆனால் இதனால் என்ன பயன்  வந்துவிடப் போகிறது? வெட்டிச் சண்டையும், வீண் பகையும் தவிர ஒன்றும் மிஞ்சாது. இந்த சண்டைக்கான தயாரிப்புகளிலும், சண்டையிலும் செலவிடும் நேரத்தில் வேறு ஏதேனும்  உருப்படியாகச் செய்துவிட முடியும் என திடமாக நம்புகிறேன்.

யுவகிருஷ்ணா ஃபேஸ்புக்கில் சில கதைகளை தமிழ்ப்படுத்தி எழுதுகிறார். சமீபத்தில் அப்படியொரு கதையை எழுதியிருந்தார். பாரீஸில் இருக்கும் ஈஃபிள் டவரில் வசித்த பல்லிகள் ஒரு  பந்தயம் நடத்துகின்றன. உச்சியை தொட வேண்டும் என்பதுதான் டார்கெட். ஆர்வ மிகுதியில் ஏகப்பட்ட பல்லிகள் போட்டியில் கலந்து கொள்கின்றன. போட்டி ஆரம்பம் ஆகிறது. கொஞ்சம் தூரம் ஏறியவுடன் பயந்த பல்லிகள் ‘இது ரிஸ்க்’ என்று விலகிக் கொள்கின்றன. சில பல்லிகள் மட்டும் ஏறிக் கொண்டிருக்கின்றன. பாதி ஏறிய பிறகு மேல் மற்ற பல்லிகளும் ஒதுங்கிக் கொள்கின்றன. இப்பொழுது ஒரே ஒரு பல்லி மட்டும் ஏறியபடியே இருந்தது. மற்ற பல்லிகள் ‘நீ முடிஞ்சடா’ என்று மிரட்டுகின்றன. ‘நீதான் வின்னர். ஏறியவரைக்கும் போதும். கீழே வந்துவிடு’ என்று கத்துகின்றன. ஆனால் அந்தப் பல்லி அசரவில்லை. முரட்டுவாக்கில் முயற்சித்து வெற்றிகரமாக உச்சியை அடைகிறது. ‘இது எப்படி சாத்தியம்?’ என மற்ற பல்லிகள் ஆச்சரியமடைந்த போது இன்னொரு பல்லி ரகசியத்தைச் சொன்னதாம். “அந்தப் பயலுக்கு காது கேட்காது” என்று. இதுதான் வெற்றியின் சிம்பிளான மந்திரம். டார்கெட்டை முடிவு செய்துவிட்டால் செவிடனாகிவிடுவதுதான் ஜெயிப்பதற்கான ஒரே வழி.

Let us Run!

Jun 25, 2013

மனுஷ்ய புத்திரன் எழுதியதெல்லாம் கவிதை இல்லையா?

இலங்கையில் வாழும் கவிஞர் றியாஸ் குரானா ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். தமிழின் முக்கியமான கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் ஒரு தொகுப்பாக கொண்டு வரப் போகிறாராம். எந்தப் பதிப்பகம் என்று தெரியவில்லை. ஆனால் இது லேசுப்பட்ட காரியமில்லை. பட்டியலில் ஒரு கவிஞரைச் சேர்த்தால் “அந்த ஆளு எல்லாம் கவிஞனாய்யா?” என்று கேட்பதற்கு பத்துப் பேர் இருப்பார்கள். யாரையாவது சேர்க்காமல் விட்டுவிட்டால் “என்னை ஏன் சேர்க்கவில்லை” என்று விடுபட்ட கவிஞரே வந்து கேட்பார். எப்படி இருந்தாலும் றியாஸூக்கு இடி விழும். இதையெல்லாம் றியாஸ் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

ஆனால் அவர் செய்து கொண்டிருப்பது முக்கியமான விஷயம். தமிழில் இப்படியான தொகுப்பு நூல்கள் மிகக் குறைவு. இதற்கு முன்பாக ராஜமார்த்தாண்டன் தொகுத்த ‘கொங்குதேர் வாழ்க்கை’(தமிழினி பதிப்பகம்) பரவலான கவனம் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் ‘பரவலான கவனம் பெற்றது’ என்பதற்கு மிகத் தெளிவான பொருள் உண்டு. தனியாக விளக்க வேண்டியதில்லை. ராஜமார்த்தாண்டனின் தொகுப்பில் பெரும்பாலும் சென்ற தலைமுறைக் கவிஞர்கள்தான் இடம் பிடித்திருந்தார்கள். தொண்ணூறு அல்லது இரண்டாயிரத்துக்கு பிறகு எழுதத் துவங்கிய கவிஞர்களின் முக்கியமான கவிதைகளைச் சேர்த்து எந்தத் தொகுப்பும் வந்ததாக ஞாபகம் இல்லை. ஆகவே றியாஸ் குரானாவுக்கு வாழ்த்துகள்.

ஓரிரண்டு நாட்களுக்கு முன்பாக தனது உத்தேசமான கவிஞர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தார். நான் தேடிய பெயர் அதில் இல்லை. தேடியது மனுஷ்ய புத்திரனை. அது மிஸ்ஸிங். இது றியாஸின் பட்டியல் - பட்டியலில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பது அவரது தனிப்பட்ட முடிவுதான். அது பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் யாரோ ஒரு புண்ணியவான் ‘மனுஷ்ய புத்திரன் இந்தப் பட்டியலில் வரமாட்டாரா?’ என்று கேட்டதற்கு றியாஸ் வேறு ஏதேனும் பதில் சொல்லியிருக்கலாம். மாறாக, ‘ம.பு இந்தப்பட்டியலில் வருவார். எனது தொகுப்பில் வரவேண்டுமென்றால் அவர் கவிதை எழுதிய பிறகுதான் சாத்தியம்’. இதுதான் சுள்ளென்றிருந்தது.

என்னைப் பொறுத்த வரையில் இது ஒரு பொறுப்பில்லாத பதில். மனுஷ்ய புத்திரனை பிற எந்தக் காரணங்களை முன் வைத்தும் ஒதுக்கி வைக்க முடியக் கூடிய ஒரு மனிதனால் நிச்சயம் அவரது கவிதைகளை எந்தக் காரணத்தின் அடிப்படையிலும் நிராகரிக்க முடியாது என நம்புகிறேன். மனுஷ்ய புத்திரன் தமிழ்க் கவிதையின் வடிவத்தில் செய்திருக்கும் பரிசோதனைகளுக்காகவும், இறுகிக் கிடந்த கவிதை மொழியை நெகிழச் செய்ததற்காகவுமே அவருக்கு மிக முக்கியமான இடமுண்டு. 

றியாஸ் நிராகரிக்க விரும்பினால் அதை செய்துவிட்டு போகலாம். ஆனால் போகிற போக்கில் ‘அவர் கவிதையே எழுதவில்லை’ என்பதெல்லாம் டூ மச்.

தமிழின் முக்கியமான கவிதைகளின் பட்டியலை கறாராக தயாரித்தால் அதில் கணிசமான எண்ணிக்கையில் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் இருக்கும் என நினைக்கிறேன். இன்றைய தேதிக்கு அவரது கவிதைகளை வாசித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இப்பொழுதும் அவரது பல கவிதைகளை உடனடியாக ஞாபகத்திற்கு கொண்டு வர முடிகிறது. ‘அம்மா இல்லாத முதல் ரம்ஜான்’,‘இறந்தவனின் ஆடைகள்’,‘அரசி’, ‘கால்களின் ஆல்பம்’ போன்ற கவிதைகளை அட்சரம் பிசகாமல் சொல்ல முடியாது என்றாலும் இவற்றையெல்லாம் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. 

இன்னும் சில கவிதைகளையும் சுட்டிக்காட்ட முடியும். தலைப்புகள் சட்டென ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் ‘சிவப்பு நிற பாவாடை வேண்டும் என்பதற்காக தனது தொடையைக் கிழித்து ரத்தத்தின் நிறத்தைக் காட்டும் ஊமைச் சிறுமி’, ‘பெரிய அவமானத்திற்கு பிறகு நடந்து கொள்ளும் விதம்’, ‘வரவே வராத ஒருவரிடம் நீ எப்போது வருவாய் என தொலைபேசியில் கேட்டுக் கொண்டிருக்கும் பெண்’ போன்ற கவிதைகளையெல்லாம் எப்படி கவிதைகள் இல்லை எனச் சொல்ல முடிகிறது? ஒருவேளை வாசிக்காமலேயே இருந்தால் அப்படிச் சொல்லலாம்.

மனுஷ்ய புத்திரனின் ‘நீராலானது’ கவிதைத் தொகுப்பை நிராகரித்துவிட்டு தமிழ்க் கவிதையின் முக்கியமான தொகுப்புகளை உங்களால் வரிசைப்படுத்த முடியுமா?  ‘முடியும்’ என்று தயவு செய்து ஜோக் அடித்துவிடாதீர்கள்.

மனுஷ்ய புத்திரன் கவிதைகளே எழுதவில்லை என்றால் பிறகு கவிதை என்பதற்கான உங்களது வரையறையைச் சொல்ல வேண்டியிருக்கும். அப்படி வரையறை செய்தால் உங்கள் பட்டியலில் இருக்கும் கவிஞர்கள்- நான் உட்பட- அத்தனை பேரும் இந்த வரையறைக்குள்தான் கவிதை எழுதுகிறார்களா என்ற கேள்வி வரும். கடைசியில் இதெல்லாம் சண்டையில் போய்த்தான் முடிந்து தொலையும்.

ந.பிச்சமூர்த்தியிலிருந்து கவிஞர்களின் பெயர்களை வரிசையாக எழுதி பார்த்தால் என்ன டகால்ட்டி வேலை செய்தாலும் என்னால் மனுஷ்யபுத்திரனின் பெயரை தவிர்க்க முடிவதில்லை. அதுதான் உண்மை. நவீன கவிதைகளில் மனுஷ்ய புத்திரன் உருவாக்கிய இசைத் தன்மை, கவிதைகளில் மெல்லிழையாக விரவியிருக்கும் லயம், சீராக அடுக்கிய சொல்முறை என்பனவற்றையெல்லாம் முக்கியமான பங்களிப்பாக எடுத்துக் கொள்ளமுடியாதா என்ன? 

ஒரு பட்டியல் தயாரிக்கும் போது சில விடுபடல்கள் இருப்பதும் சில தேவையற்ற சேர்க்கைகள் இருப்பதும் சாதாரணமான விஷயம். ஆனால் முக்கியமான கவிஞர்களை நிராகரித்துவிட்டு ‘அவர் கவிதையே எழுதவில்லை’ என்பது முக்கியமான பணியைச் செய்யும் தொகுப்பாளருக்கு அழகு இல்லை. 

ஒரு மனிதனை தனிப்பட்ட காரணங்களுக்காக பிடிக்கவில்லை என்றால் அவனது படைப்பை முழுமையாக நிராகரிப்பது எந்த விதத்திலும் நல்லதில்லை.

சரி இதையெல்லாம் நான் ஏன் எழுத வேண்டும்?

காரணம் மிக எளிமையானது. அறச்சீற்றத்தைக் காட்டுவதற்காகவோ அல்லது தார்மீக அடிப்படையிலோ இதை எழுதிக் கொண்டிருக்கவில்லை. தமிழ் கவிதையின் மிக எளிமையான வாசகனாக எழுதியிருக்கிறேன். ஒரு முக்கியமான வேலையைச் செய்கிறீர்கள். கவிதையை மட்டுமே முன்னிறுத்தி செய்யுங்கள். அவ்வளவுதான்.

மீண்டும் சொல்கிறேன் - மனுஷ்ய புத்திரனை உங்களது பட்டியலில் நிராகரிக்க உங்களுக்கு அத்தனை சுதந்திரமும் இருக்கிறது. அது உங்களது தனிப்பட்ட விருப்பம் - அது பற்றி எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர் கவிதையே எழுதவில்லை என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை. அப்படிச் சொன்னால் கவிதையை பின்தொடரும் சாதாரண வாசகனாக ஏதாவதொரு மூலையிலிருந்து கேள்வி எழுப்புவேன். இப்பொழுது கேட்டிருப்பது போலவே.


கால்களின் ஆல்பம்

ஆல்பம் தயாரிக்கிறேன் 
கால்களின் ஆல்பம்

எப்போதும் 
முகங்களுக்கு மட்டும்தான் 
ஆல்பமிருக்க வேண்டுமா?

திட்டமாய் அறிந்தேன் 
எண்சாண் உடலுக்குக் 
காலே பிரதானம்

படிகளில் இறங்கும் கால்கள் 
நடனமாடும் கால்கள் 
பந்துகளையோ 
மனிதர்களையோ 
எட்டி உதைக்கும் கால்கள்

கூட்டத்தில் நெளியும் கால்கள் 
பூஜை செய்யப்படும் கால்கள் 
புணர்ச்சியில் பின்னும் 
பாம்புக் கால்கள்

கறுத்த வெறுத்த சிவந்த 
நிறக் குழப்பத்தில் ஆழ்த்துகிற 
மயிர் மண்டிய வழுவழுப்பான 
கால்கள்

சேற்றில் உழலும் கால்கள் 
தத்துகிற பிஞ்சுக் கால்கள் 
உலகளந்த கால்கள் 
அகலிகையை எழுப்பிய கால்கள் 
நீண்ட பயணத்தை நடந்த 
சீனன் ஒருவனின் கால்கள்

பாதம் வெடித்த கால்கள் 
மெட்டி மின்னுகிற கால்கள் 
ஆறு விரல்களுள்ள கால்கள் 
எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப் 
பெருவிரல் நகம் சிதைந்த 
நீளமான கால்கள்

குதிக்கிற ஓடுகிற தாவுகிற
விதவிதமாய் நடக்கிற 
(ஒருவர்கூட மற்றவரைப் போல நடப்பதில்லை) 
பாடல்களுக்குத் தாளமிடுகிற 
நீந்துகிற மலையேறுகிற 
புல்வெளிகளில் திரிகிற 
தப்பியோடுகிற 
போருக்குச் செல்கி
(படை வீரர்களின் கால்கள் உண்மையானதல்ல)
நேசித்தவரை நாடிச் செல்கிற 
சிகரெட்டை நசுக்குகிற 
மயானங்களிலிருந்து திரும்புகிற 
விலங்கு பூட்டப்பட்ட 
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட 
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற 
வரிசையில் நிற்கிற 
தையல் எந்திரத்தில் உதறுகிற 
சுருங்கிய தோலுடைய 
நரம்புகள் புடைத்த 
சிரங்கு தின்ற
குஷ்டத்தில் அழுகிய
முத்தமிடத் தூண்டுகிற கால்கள்

யாரைப் பார்த்தாலும் 
நான் பார்ப்பது கால்கள் 
ஒட்டுவேன் 
என் கால்களின் ஆல்பத்தில் 
எல்லாக் கால்களையும்

பெட்டிக்கடியில்
ஒளித்துவைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல் 
என் போலியோ கால்களை மட்டும்

Jun 24, 2013

இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது

அன்புள்ள மணிகண்டன்,

என்னோடு பணி புரிபவர்கள் உங்களது வலைப்பதிவை அறிமுகப்படுத்தினார்கள். இப்பொழுது தொடர்ந்து வாசிக்கிறேன். நீங்கள் தினமும் எழுதுவது ஆச்சரியமளிக்கிறது, பெரும்பாலான பதிவுகள் சுவாரசியமானதாகவும் இருக்கின்றன. உங்களின் சமீபத்திய பதிவு ஒன்றில், வலைப்பதிவுகளில் மட்டுமே கருத்துக்களை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்றும் மற்ற சமூக ஊடகங்கள் சிந்தனையை dilute செய்துவிடுகின்றன என்றும் எழுதியிருந்ததை வாசித்தேன். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் வலைப்பதிவுகளில் எழுதுவதை விரும்புகிறேன் ஆனால் என் எண்ணங்களை என்னால் தொகுக்க முடியாது அல்லது எனக்கு க்ரியேட்டிவிட்டி குறைவாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். என்னைப் போன்றவர்கள் ட்விட்டரை வரமாக பார்க்கிறோம் (ஃபேஸ்புக் பற்றி எனக்கு கருத்து இல்லை). என்னால் கட்டுரை எழுத முடியாது ஆனால் எனது பார்வை, கோபம், ஆச்சரியம் அல்லது Fun ஆகியவற்றை சுருக்கப்பட்ட வடிவில் ட்விட்டரில் வெளிப்படுத்திவிடுகிறேன். ஒருவேளை ட்விட்டரில் தொடர்ந்து எழுதுவது என்னை வலைப்பதிவு பக்கமாக இழுத்து வரலாம். அதனால் ட்விட்டரை நான் எனது கருத்துக்களை வெளியிடும் ஊடகமாக ட்விட்டரை பார்க்கிறேன். நிறைய எழுத முடியாதவர்களுக்கு இது மாற்று வழி. இங்கு நான் ரி-ட்வீட் செய்பவர்களைப் பற்றி பேசவில்லை.

அன்புடன்,
கைலாஷ்.

                                                                         *****

அன்புள்ள கைலாஷ், 

வணக்கம்.

நீங்கள் ட்விட்டரை இன்னொரு கோணத்தில் பார்க்கிறீர்கள். “எழுத முடியாதவர்களும்/ தெரியாதவர்களும் தங்களது கருத்தை வெளிப்படுத்த வேண்டுமல்லவா? அதற்கான ஊடகமாகத்தானே இது இருக்கிறது” என்கிறீர்கள். ஏற்றுக் கொள்ளலாம். இப்படி லட்சக்கணக்கானோர்(அல்லது கோடிக்கணக்கானோர்) நினைப்பதால்தான் ட்விட்டர் வெற்றிகரமான தளமாகவும் இயங்குகிறது.

இந்த இடத்தில் மூன்று விஷயங்களை பேசத் தோன்றுகிறது- போரடிக்காமல் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

1) நான் எழுதியிருந்த கட்டுரை நீங்கள் குறிப்பிடும் எழுத முடியாதவர்கள்/தெரியாதவர்களை ‘டார்கெட்’ செய்யவில்லை. எழுதத் தெரிந்தவர்கள் அல்லது ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்தவர்கள் தங்களது எண்ணங்களை நூற்றி சொச்சம் எழுத்துக்களில் Dilute செய்யாமல் கட்டுரையாகவோ அல்லது கவிதையாகவோ மாற்றுவதற்கான சரியான தளமாக வலைப்பதிவு இருக்கும் என நினைக்கிறேன்- அதுதான் சொல்ல வந்தது.

2) எழுத்தைப் பொறுத்த வரையிலும் கடும் உழைப்புத் தேவை. சும்மா சோம்பேறித்தனமாக இருந்தால் அல்லது தயங்கிக் கொண்டிருந்தால் காலம் நமக்கு டாட்டா சொல்லிவிட்டு நகர்ந்துவிடும். இன்னொரு விஷயமும் இருக்கிறது-  ‘நான் எழுதுவதெல்லாம் டாப்பாகவே இருக்கும்’ என்ற நம்பிக்கை நம்மை குப்புற கவிழ்த்துவிடும். நல்லதோ கெட்டதோ எழுதி விட வேண்டும். தயங்கவே கூடாது. இதுதான் என் பாலிஸி. இப்படி பக்கம் பக்கமாக எழுதி அதை சேகரித்தும் வைத்துக் கொள்ள வலைப்பதிவு நல்ல ஊடகம் என நம்புகிறேன். இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு எழுதிய சில கட்டுரைகளைப் படித்தால் எனக்கு இப்பொழுது வெட்கமாக இருக்கிறது. இது ஒரு தொடர்ச்சிதான். இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டில் இப்பொழுது எழுதிக் கொண்டிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கக் கூடும். காலப்போக்கில் நாம் எழுதியதில் நல்லது எல்லாம் தப்பித்துவிடும் கெட்டதெல்லாம் காணாமல் போய்விடும். போனால் போகட்டுமே! நல்லதாக நாற்பது பக்கம் தேறினால் போதும்- வாழ்நாள் முழுமைக்கும் சேர்த்து. 

3) நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல ட்விட்டரில் அதிகம் எழுதுவதன் காரணமாக பின்னால் வரும் காலத்தில் கட்டுரைகள் எழுத முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் வார்த்தைகளிலேயே சொன்னால் “ஒருவேளை” சாத்தியம் ஆகலாம். ஆனால் என்னால் அப்படி உருமாறியிருக்க முடியாது என நினைக்கிறேன். எழுத்து என்பது ஒரு பழக்கம்தானே? அது ஒரு பயிற்சி. கொஞ்சம் கொஞ்சமாகவே நகர முடியக் கூடிய ஒரு பாதை. இப்பொழுது நாம் யோசிப்பதையெல்லாம் துண்டு துண்டாக்கி பழகிவிட்டு சிறிது காலம் கழித்து ஒரு துண்டத்தை விவரித்து கட்டுரையாக்குவது அவ்வளவு எளிதானதாக இருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை அப்படி எளிதாக இருந்து, புதிதாக யாராவது எழுத ஆரம்பித்தால் எனக்கு சந்தோஷம். அப்பொழுது எனது கருத்தை நிச்சயம் மாற்றிக் கொள்வேன்.

தங்களின் கடிதத்திற்கு நன்றி. உங்களுக்கு பதில் திருப்தியில்லை எனில் தெரியப்படுத்துங்கள்.

மிக்க அன்புடன்,
மணிகண்டன்

                                                                  +++++
                                                                     (2)                                                   

மணிகண்டன்,

இன்று தான் உங்கள் நிசப்தம் தளம் பற்றி அறிந்தேன், யாரோ ஒருவர் முகநூலில் ஷேர் செய்ததன் மூலம். அருமையானதொரு வாசிப்பு அனுபவத்தை பெற முடிகிறது உங்கள் எளிய நடையில். தினமும் எப்படி ஒருவரால்  இப்படி எழுதமுடியும் என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கிறேன். 

அருணா.
                                                                     ******

அன்புள்ள அருணா,

வணக்கம்.

தினமும் எப்படி எழுத முடிகிறது என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. அது பழக்கத்தில் வந்தது, வரம் கிடைத்திருக்கிறது, பைத்தியங்களால் மட்டுமே சாத்தியம்- இப்படி எதையாவது சொல்லிக் கொள்ளலாம்.

இப்பொழுதெல்லாம் எழுதுவதை அன்றாட வாடிக்கையாக்கிக் கொண்டேன். எழுதுவதற்கு நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது. எனவே அதையும் வாடிக்கையாக்கிக் கொண்டேன். இந்த இரண்டும் பல பிரச்சினைகளிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள வழி செய்கிறது என்பதால் இரண்டையுமே வெகுவாக விரும்புகிறேன். உங்களை வதைக்கும் போது சொல்லுங்கள். அப்பொழுதும் எழுதுவேன். ஆனால் வெளியிடாமல் வைத்துக் கொள்வேன்.

தங்களின் மின்னஞ்சலுக்கு நன்றி.

தொடர்ந்து வாசியுங்கள். 

அன்புடன்,
மணிகண்டன்.

சே குவேரா, விரலில் சூலம், புர்ச்சி

இப்பொழுதெல்லாம் யார் நினைத்தாலும் புரட்சியாளர்கள் ஆகிவிட முடிகிறது. ஒரு லேப்டாப்பும், இண்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும். இதுபோக ஃபேஸ்புக்கில் கணக்கு இருந்தால் காரியம் இன்னமும் சுலபம் ஆகிவிடுகிறது. சமூக ஆர்வலர், கவிஞர், கம்யூனிஸ்ட், கட்சிக்காரன் என்று எந்த வடிவமும் எடுத்துவிடலாம். தேவைப்படும் போது வடிவத்தை மாற்றிக் கொள்ளலாம். 

ச்சீ. சம்பந்தமில்லாமல் ஆரம்பித்துவிட்டேன். உண்மையான புரட்சிக்காரன் பற்றித்தான் இன்றைக்கு ஆரம்பித்திருக்க வேண்டும். நட்சத்திரப் பலனில் விரலில் சூலம் என்றிருந்தது. பலித்துவிடும் போலிருக்கிறது. இப்படி டைப் செய்து தொலைத்துவிட்டேன். புர்ச்ச்சியாளர்கள் மன்னிக்கக் கடவது.

உண்மையான புரட்சிக்காரன் என்று சொன்னேன் அல்லவா? யார் உண்மையான புரட்சிக்காரனாக இருக்க முடியும் என்று ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பார்த்தால் என் கெட்ட நேரம் காந்தி கண்ணதாசன்தான் ஞாபகத்துக்கு வருகிறார். தமிழில் சே குவேராவின் படம், அவருடைய எழுத்து என சகலத்துக்கும் காந்தி கண்ணதாசன் காப்பிரைட் வாங்கி வைத்திருக்கிறாராம். அதனால் அவர் அனுமதியில்லாமல் இதையெல்லாம் பயன்படுத்தினால் “கேஸ் போட்டுடுவேன், பீ கேர்புல்’ என வடிவேல் கணக்காக முறைக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் கண்ணதாசனின் ஆவி அவரை மன்னிக்குமாக! “ஆகட்டும் சார், கொஞ்சம் ஒதுங்குங்க” என்று காந்தியாரை ஒதுக்கிவிட்டு இன்னும் ஒரு நிமிடம் யோசித்தால் புரட்சிக்காரனாக சே குவேரா வருகிறார்.

சே எதனால் புரட்சியாளராக மாறினார் என்று கேட்டால் ‘மோட்டார் சைக்கிள் டைரி’யை சுட்டிக்காட்டுவார்கள். 1952 ஆம் ஆண்டு தனது நண்பன் அல்பர்ட்டோவுடன் தென்னமெரிக்கா முழுவதும் சுற்றியிருக்கிறார் எர்னெஸ்டோ குவேரா. பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பயணம் அது. தேசங்களைச் சுற்றுவதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட வாகனம் ஒரு சுமாரான பைக். அந்தச் சமயத்தில் சேவுக்கு இருபத்து மூன்று வயது; அல்பர்ட்டோவுக்கு முப்பது முடிகிறது. இந்தப் பயணத்தின் போது எர்னெஸ்டோ தான் பார்த்த விஷயங்கள், எதிர் கொண்ட மனிதர்கள், தனது மனதில் உண்டான சலனங்கள் என சகலத்தையும் குறிப்புகளாக எழுதி வைக்கிறார். இந்தக் குறிப்புகள்தான் பிற்காலத்தில் ‘தி மோட்டார் சைக்கிள் டைரி’ என்று புத்தகமாக வந்திருக்கிறது. அதே புத்தகத்தை படமாகவும் எடுத்துவிட்டார்கள்- ஸ்பானிஷ் மொழியில். இந்தப் புத்தகத்தை இதுவரை நான் வாசித்ததில்லை. ஆனால் அந்தப் படத்தை சமீபத்தில் பார்க்க முடிந்தது. நல்ல படம். ‘துப்பாக்கியில்லாமல் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது’ என்று எர்னெஸ்டோ சொல்லும் ஒரு வாக்கியத்தைத் தவிர புரட்சி பற்றிய எந்தக் குறிப்புகளும் படத்தில் கிடையாது.

சினிமாவைப் பொறுத்தவரையில் நல்லவர்கள் அடிவாங்கக் கூடாது, பார்வையாளர்களை அழச் செய்யக் கூடாது, நாயகனும்- நாயகியும் லவ் ஃபெயிலியரால் பிரிந்துவிடக் கூடாது போன்ற சில விஷயங்களை எதிர்பார்த்துத் தொலைத்துவிடுகிறேன். ‘தில்’படத்தில் விக்ரம் அடிவாங்கிய போது கண்ணீர் கசிந்த எமோஷனல் க்ரூப்பைச் சார்ந்தவன் நான். அடுத்த பாட்டிலேயே ஹீரோ எழுந்து நடனமாடும் இத்தகைய மசாலாப்படங்களை பார்க்கும் போது கூட அழுதிருக்கிறேன் என்றால் சோகப்படங்களை நினைத்துப் பாருங்கள். தியேட்டரில் தெரியாத்தனமாக யாராவது வேகமாக நடந்தால் பெருக்கெடுத்து ஓடும் எனது கண்ணீரில் வழுக்கி விட வேண்டியிருக்கும். நல்லவேளையாக, மோட்டார் சைக்கிள் டைரி அப்படியான அழுவாச்சி காவியம் இல்லை. 

இரண்டு நண்பர்கள் ஜாலியாக பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு நாடாக பயணிக்கிறார்கள். மலைகள், பனிப்பிரதேசங்கள் என வெவ்வேறு நிலங்களை படம் முழுவதும் காட்டுகிறார்கள். சாலையோர வாய்க்காலில் பைக்கோடு விழும் போதும் சரி, மாடு மீது மோதி தெறிக்கும் போது சரி ஒருவித நகைச்சுவையோடு படம் பார்க்க முடிந்தது. சீலேயில் காசில்லாமல் சிரமப்படும் இரண்டு கம்யூனிஸ்ட்களைச் சந்திக்கும் போதும், பெருவில் தொழுநோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் போதும் எந்த சினிமாத்தனமும், ‘நெஞ்சுருக்கி’த்தனமும் இல்லாமல் பார்த்தாலேயே இந்தப்படம் மிகப் பிடித்துப் போனது.

எர்னெஸ்டோ குவேராவும், அல்பெர்ட்டோவும் தங்களது பயணத்தில் பெண்களை பிக்கப் செய்வதும், படம் முழுவதும் நாயகர்களின் பாவனைகளும் அட்டகாசமாக இருக்கிறது. இத்தனை ஜாலியான காட்சிகளுக்கிடையேயும் ஒரு சாதாரண கல்லூரி மாணவன் புரட்சியாளன் ஆவதற்கான காரணங்களை மிகத் தெளிவாகக் காட்டிவிடுகிறார்கள். இவையெல்லாம் சேர்ந்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைத்தது.

போதும். ‘மோட்டார் சைக்கிள் டைரி’ என்று கூகிளில் அடித்தால் தமிழிலேயே கூட ஏகப்பட்ட பேர் எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் இதோடு நிறுத்திக் கொள்ளலாம். நிறுத்துவதற்கு முன்பாக இந்தப்படத்தில் வரும் ஒரு காட்சியை மட்டும் சொல்லிவிட வேண்டும். 

அல்பர்ட்டோவும், எர்னெஸ்டோவும் பெருவுக்கு வரும் போது கிட்டத்தட்ட கிழிந்த துணிகளைப் போல வந்து சேர்வார்கள். இடையில் பைக் இனி வேலைக்கு ஆகாது என்பதால் நடந்தே பயணத்தை தொடர்வார்கள். இந்த அலைச்சலும், பசியும் அவர்களை ஒரு வழியாக்கியிருக்கும்.  அப்பொழுது டாக்டர் ஹூகோ அவர்களுக்கு உணவு, உடை தங்க இடம் என அத்தனையும் கொடுத்து பெருவில் இருக்கும் தொழுநோயாளிகளுக்கான சிகிச்சை மையத்திற்கு செல்வதற்கான டிக்கெட்டையும் இவர்களுக்குத் தருவார். இந்தச் சமயத்தில் தான் எழுதிய நாவல் ஒன்றின் கையெழுத்து பிரதியைக் கொடுத்து ‘வாசித்துவிட்டு எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்’ என்பார். அங்கு தங்கியிருக்கும் காலத்தில் இருவரும் நாவல் பற்றி எந்த பதிலும் சொல்லியிருக்க மாட்டார்கள். தொழுநோயாளிகள் சிகிச்சை மையத்திற்கு கிளம்பும் போது கப்பல் ஏறும் சமயத்தில் ஹூகோ, “நீங்கள் நாவல் பற்றி எதுவுமே சொல்லவில்லையே?” என்பார். அல்பர்ட்டோ முந்திக் கொண்டு “தூளாக இருந்தது” என்பார்.

எர்னெஸ்டோவிடமும் பதிலை எதிர்பார்த்து மருத்துவர் நிற்கும் போது “நல்ல முயற்சிதான். ஆனால் நிறைய க்ளிஷே இருக்கிறது, கதை சொன்ன முறையும் சரியில்லை” என்பார். ஹூகோ ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டு பிறகு நார்மலாகிவிடுவார்.  “இவ்வளவு நேர்மையாக யாரும் விமர்சனம் செய்ததேயில்லை” என்று சொல்லிவிட்டு அல்பர்ட்டோவின் முகத்தைப் பார்த்து “ஒருவர் கூட” என அழுத்தமாகச் சொல்வார். அப்பொழுது அல்பர்ட்டோ தலையைக் குனிந்து கொள்வார். படம் முடிந்த பிறகும் கூட இந்தக் காட்சி மட்டும் ஏனோ தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது.

இப்படி யாரையாவது நம் ஊரில் விமர்சனம் செய்ய முடியுமா என்று தோன்றியது. அப்படியே விமர்சனம் செய்வதாக இருந்தாலும் இங்கு விமர்சனம் என்ற பெயரில் வெறியெடுத்து திரிபவர்கள்தானே அதிகம்? ஒருவன் மீது பொறாமைப் பட்டு எதையாவது எடுத்து வீசினால் அவனை காலி செய்துவிட முடியுமா என்ன? உண்மையில் எழுத்தைப் பொறுத்தவரையிலும், எழுதுபவனாகப் பார்த்து தன்னை காலி செய்து கொண்டால்தான் முடியுமே தவிர, மற்றபடி யாரையும் யாராலும் காலியாக்க முடியாது. அவனவன் இடம் அவனவனுக்கு உண்டு- எப்பவும்!

Jun 23, 2013

வெறியின் கதை

இருபது வருடங்களுக்கு முன்பாக தினத்தந்தி அல்லது மாலைமுரசு படித்த ஞாபகம் இருக்கிறதா? எனக்கு மங்கலாக இருக்கிறது. அந்தக் காலத்திய கொலைகளை ரீவைண்ட் செய்து பார்த்தால் பெரும்பாலனவை பங்காளிச் சண்டைகளாக இருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் அத்தகைய சண்டைகள் குறைந்துவிட்டனவா என்று தெரியவில்லை. ஒருவேளை  கள்ளக்காதல் அல்லது திருட்டுக் கொலைகள் அவற்றை ஹைஜாக் செய்துவிட்டன போலிருக்கிறது. கணவனை கொன்ற மனைவி, மனைவியைக் கொன்ற கணவன், மனைவியின் கள்ளக்காதலனைக் கொன்ற கணவன் என்ற ரீதியிலான செய்தி தினமும் ஒன்றாவது கண்ணில்பட்டுவிடுகிறது. இப்பொழுது எழுதுவது கள்ளக்காதல் பற்றி இல்லை- பங்காளிச் சண்டைகள் பற்றி.

எங்கள் பாட்டி இப்படியான ஒரு கதை வைத்திருந்தார். பாட்டி என்றால் அம்மாவுக்கு அமத்தா. நான் கல்லூரி படிக்கும் வரைக்கும் உயிரோடுதான் இருந்தார். பழங் காலத்து மனுஷி என்பதால் அதுவரைக்கும் படு திடகாத்திரமாகவும் இருந்தார். அந்தக் காலத்தில் பாட்டியின் கணவர் நிறைய மந்திர தந்திரங்களைக் கற்று வைத்திருந்தாராம். அமாவாசையன்று சுடுகாட்டில் பூஜை செய்வது, குட்டிச்சாத்தானை ஏவுவது என்று ஊருக்குள் அட்டகாசம் செய்து திரிந்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் இருபது வயதுகளில் திருமணம் ஆகிவிடும் அல்லவா? அவருக்கும் அப்படித்தான். ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை. பத்து வருடம் பார்த்துவிட்டு இன்னொரு கல்யாணமும் செய்து வைத்திருக்கிறார்கள். ம்ஹூம். நோ சக்ஸஸ்.

அவருக்கு அறுபது வயதான போது ‘மந்திரத்தையெல்லாம் விட்டால்தான் குழந்தை பிறக்கும்’ என கனவில் ஏதோ ஒரு சாமி சொன்னதாம். அதன் பிறகு  தான் கற்று வைத்ததையெல்லாம் யாரோ ஒருவருக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு மீண்டும் ‘ட்ரை’ செய்திருக்கிறார். அப்பவும் நடக்கவில்லை. அதன் பிறகுதான் பாட்டியைக் கட்டி வைத்திருக்கிறார்கள். மூன்றாவது பார்ட்டியாக எங்கள் பாட்டி வாழ்க்கைப்பட்டிருக்கிறார். முதல் வருடத்திலேயே எங்கள் அமத்தா பிறந்துவிட்டார். அறுபத்தைந்து வயதில் குழந்தையா என்று ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இதைவிட இன்னொரு ஆச்சரியம் அடுத்த பதினேழு வருடங்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது. அப்பொழுதுதான் அமத்தாவுக்கு தம்பி பிறந்தாராம். அந்தத் தம்பி பிறக்கும் போது பாட்டனாருக்கு எத்தனை வயதாகியிருக்கும் என குத்து மதிப்பாக கணக்கு போட்டு பாருங்கள். எனக்கு கிட்டத்தட்ட மயக்கமே வருகிறது.

அந்தக்காலத்தில் அவர்தான் ஊருக்கு நாட்டாமை. சாகும் வரைக்கும் ஒற்றைக் குதிரையில் அமர்ந்தபடி வேல் ஒன்றைத் தூக்கிக் கொண்டு பஞ்சாயத்துக்கு போவாராம். பஞ்சாயத்து சரியாக நடக்கவில்லையென்றால் கையில் வைத்திருக்கும் வேல் யார் மீது வேண்டுமானாலும் பாயக்கூடும் என்பதால் மொத்த பஞ்சாயத்தும் நடுங்கிக் கொண்டிருக்குமாம். சினிமாவில் காட்டுவது போல நாட்டாமை என்றால் மனதிற்குள்ளும் மரியாதையாக நடத்துவார்கள் என்றில்லை. ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்’ என பாட்டெல்லாம் பாடமாட்டார்கள். பஞ்சாயத்துகளில் பாதிக்கப்படும் குடும்பங்கள் நாட்டாமை மீது செம கடுப்பில் இருப்பார்களாம். புழுதிவாரித் தூற்றி சாபம் விடும் நிகழ்வுகள் சாதாரணம் என்பதால்  ‘கண்டவர்களின் சாபம் நமக்குத் தேவையில்லை’ என பாட்டிக்கு இந்த நாட்டாமை விவகாரத்தில் அவ்வளவு விருப்பம் இல்லை போலிருக்கிறது. பாட்டனிடம் “வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இத்தனை ஆண்டு காலம் நாட்டாமையாக இருந்துவிட்டு பாட்டி சொன்னதற்காக விட்டுவிட முடியுமா? அவர் விடாமல் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க ஊருக்குள் பகை அதிகமானபடியே இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பங்காளிகள் சேர்ந்து அவரைக் காலி செய்துவிட முடிவு செய்திருக்கிறார்கள்.

பங்காளி வீட்டுக்கு சவரம் செய்துவிடச் சென்ற நாவிதன் இதை மோப்பம் பிடித்துவிட்டார். ஒரே ஓட்டமாக ஓடிவந்து மூச்சிரைக்க பாட்டனைக் கொல்லப் போகிறார்கள் என்ற தகவலை பாட்டியிடம் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் நடந்த போது பாட்டியின் மூத்த குடிகள் இரண்டு பேரும் மேலே போய்ச் சேர்ந்துவிட்டார்கள். அதனால் வீட்டில் யாரும் இல்லை. பாட்டனும் அந்தச் சமயத்தில் குதிரையில் ஏறி எங்கோ போயிருக்கிறார். பாட்டியும் அமத்தாவும் சேர்ந்து ஒப்பாரி வைத்திருக்கிறார்கள். ஊரைச் சுற்றிவிட்டு வந்த பாட்டனுக்கு இவர்கள் அழுது கொண்டிருக்கும் காரணம் தெரிந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எப்பவும் இருக்கும் வேலோடு சேர்த்து இடுப்பில் ஒரு சூரிக்கத்தியை சேர்த்துக் கொண்டாராம். அவ்வளவுதான், அவருடைய Precautionary action.

ஒரு வேலும் ஒரு சூரிக்கத்தியும் எத்தனை நாளைக்கு எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவிடும்? மிகச்சரியாக திட்டமிட்ட பங்காளிகள் அடுத்த ஒரே மாதத்திற்குள் சித்திரை வெயிலில் குதிரையில் வந்து கொண்டிருந்தவரை முடித்துவிட்டார்களாம். அந்தக் கொலைச் சம்பவம் ஒரு மிகச் சிறந்த கதைகளுக்குரிய ‘ட்விஸ்ட்’களால் நிறைந்தது. இன்னொரு நாள் விரிவாக சொல்கிறேன். 

நாட்டாமை போய்ச் சேர்ந்தாகிவிட்டது. அதன் பிறகு அடுத்த நாட்டாமை யார் ஆவது என்ற பேச்சு வந்திருக்கிறது. பாட்டனாரின் மகனுக்கு ஐந்து வயதுதான் ஆகியிருக்கிறது. அதனால் பங்காளி ஒருவரை நாட்டாமை ஆக்கிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே பாட்டிக்கு இந்த நாட்டாமை பதவியில் விருப்பமில்லை என்பதால் அசால்ட்டாக விட்டுவிட்டார்கள். இறந்தவருக்கு பதினாறாம் நாள் முடிந்தவுடன் ஊர்க் கோவிலில் வைத்து புது நாட்டாமை சத்தியம் செய்வார் என்று தண்டோரா போட்டிருக்கிறார்கள். அதுவரை வீட்டை விட்டு வெளியே வராத பாட்டி தலை முடியை அள்ளி முடிந்து தெருவுக்கு வந்தாராம். அத்தனை அழுகையையும் நிறுத்திவிட்டு வெறியெடுத்தவரைப் போல கத்தியிருக்கிறார்.  “எம்புருஷனைக் கொன்னுபோட்டு எந்த வக்காரோலி நாட்டாம ஆவறது? அறுத்து காக்காய்க்கு வீசிறுவேன்’ என்று அடித்தொண்டையில் இருந்து எழும்பிய அந்தக் குரலுக்கு ஊரே அதிர்ந்து ஒடுங்கியிருக்கிறது.

வெறித்தனமாக வீட்டிற்குள் புகுந்து வேலைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்கு போயிருக்கிறார். ஊரே திரண்டு அவர் பின்னால் போகிறது. யாரையும் எதிர்பார்க்காமல் ‘எம்பையன் வர வரைக்கும் நாந்தான் நாட்டாமையாக இருப்பேன்’ என  சாமி மீது அடித்து சத்தியம் செய்துவிட்டுத்தான் தனக்கு பின்னால் வந்த கூட்டத்தைத் திரும்பி பார்த்திருக்கிறார். தலைவிரி கோலமும், வெள்ளைப் புடவையுமாக நின்ற அவரின் உருவம் அத்தனை பயமூட்டக் கூடியதாக இருந்தது என அமத்தா சொல்லியிருக்கிறார். திரண்டு நின்ற கூட்டத்தில் துளி சப்தமில்லை. கூட்டத்தோடு கூட்டமாக பங்காளிகளும் கலந்து நின்றிருக்கிறார்கள். ஆனால் அப்பொழுதும் சரி; அடுத்த பத்து வருடங்களுக்கும் சரி- எந்தப் பங்காளியும் மூச்சுவிடவில்லையாம். அமத்தாவின் வார்த்தைகளில் சொன்னால் “பாட்டிக் கெழவி பொசுக்கி போடுவா...சாமி மாதிரி”

Jun 21, 2013

எது பெஸ்ட்? வலைப்பதிவு Vs ஃபேஸ்புக்

எப்பொழுதுமே புது சம்சாரமோ அல்லது சமாச்சாரமோ- அது வந்தவுடன் நம்மாட்கள் படு வேகமாக இருப்பார்கள்.  எங்கள் ஊர்ப்பக்கம் ‘புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுக்குறான்’ என்ற சொலவடை உண்டு. அப்படித்தான். வலைப்பதிவுகள் வந்த சமயம் ஆளாளுக்கு Blogspot அல்லது wordpress இல் ஒரு வலைப்பூவை ஆரம்பித்தார்கள். கட்டுரையோ, கவிதையோ, எச்சில் துப்புவதோ, வாந்தியெடுப்பதோ- எதுவாக இருந்தாலும் ப்லாக்கில்தான் நடந்தது. சுஜாதா வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல்  “ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப் படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது” என்று அடித்துவிட்டு போய்விட்டார். விடுவார்களா நம் மக்கள்? வரிசைகட்டி நின்று அவரை அடித்தார்கள். இன்றைய தாலி மேட்டர் அளவுக்கு பரபரப்பு இல்லையென்றாலும் அந்தக்காலத்தில் அது ரொம்ப பரபரப்புத்தான்.

ப்லாக்கின் வசந்தகாலம்  என்றால் முதல் இரண்டு மூன்று வருடங்கள்தான் என நினைக்கிறேன். வசந்தகாலமும் அதுதான், சோதனைக்காலமும் அதுதான். கண்டதையெல்லாம் எழுதிக் கொட்டினார்கள். நிறைய நல்லதும் இருந்தது; ஏகப்பட்ட குப்பையும் இருந்தது. பிறகு நிறையப் பேர் ஏதோ ஒருவிதத்தில் சலிப்படைந்தோ அல்லது போலி டோண்டு போன்ற விவகாரங்களினாலோ ஒதுங்கிக் கொண்டார்கள். அதேசமயத்தில்தான் ஆர்குட் வந்தது. கொஞ்சம் பேர் அந்தப் பக்கம் போனார்கள். அதைத் தொடர்ந்து வந்த ட்விட்டருக்கு எதிராக ஆர்குட்டினால் நின்று ஆட முடியவில்லை. சுருண்டு கொண்டது. ட்விட்டர் கோலோச்சத் தொடங்கிய காலத்திலேயே ஃபேஸ்புக்கும் வந்து சேர்ந்துவிட்டது. அதுபோக கூகிள் ப்ளஸ். ப்லாக்குக்காவது பதினைந்து நிமிட புகழ். அப்படியானால் மற்றவற்றிற்கெல்லாம் எத்தனை நிமிட புகழ்? அடுத்தவன் ஸ்டேட்டஸ் போட்டு நம்முடைய ஸ்டேட்டஸ் கீழே போகும் வரைக்கும்தான் லைஃப். பொங்கினாலும் சரி, சீறினாலும் சரி. இந்த இடைவெளியில் எல்லாவற்றையும் முடித்துக் கொள்ள வேண்டும். அதற்குமேல் ஒன்றுமில்லை. 

நம் எண்ணங்களை Dilute செய்வதைவிட நல்ல விஷயம் எதையாவது ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் செய்திருக்கின்றனவா எனத் தெரியவில்லை. மனதில் தோன்றியதை அடுத்த ஒன்றரை செகண்டில் ஸ்டேட்டஸாகவோ, ட்வீட்டாகவோ மாற்றிவிடுகிறோம்.ஒருவேளை இந்த ஸ்டேட்டஸ்களும், ட்வீட்களும் கட்டுரையாகவோ, கவிதையாகவோ அல்லது கதையாகவோ மாறியிருக்கக் கூடும். அதற்கெல்லாம் பொறுமையும் இல்லை, அவசியமும் இல்லை என்று நினைத்தோ என்னவோ அவசர அவசரமாக குறைப்பிரசவம் செய்துவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் இந்த நூற்றி நாற்பது எழுத்து ‘குறுஞ்செய்திகள்’ கொடுத்துவிடுகின்றன.

சமூக வலைத்தளங்களில் நாம் காட்டும் அறச்சீற்றங்களும், உணர்ச்சிக் கொப்பளிப்புகளும் எந்தவிதத்திலாவது நமக்கு பயன்பட்டிருக்கின்றனவா? ‘எகிப்தில் நடைபெற்ற போராட்டம் ஃபேஸ்புக்கினால்தான் நடந்தது’ என்று தயவு செய்து கை உயர்த்த வேண்டாம். பெரும்பாலான ஃபேஸ்புக்வாசிகளுக்கு இது மட்டும்தான் உலகம் என்ற நினைப்பை விதிப்பதைத் தவிர வேறொன்றும் நடப்பதில்லை. வெளியுலகத்தின் பரப்போடும் வீச்சோடும் ஒப்பிட்டால் இணைய உலகம் என்பது Negligible. ஒரு நாளின் முக்கால்வாசி நேரத்தை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் செலவு செய்யும் நபருக்கு, இங்கு நடப்பதுதான் மொத்த உலகத்தையும் திசை மாற்றுகிறது என்ற நினைப்பு வந்துவிடுகிறது. அதைத் தவிர இவை வேறு எதுவும் பெரிதாக சாதித்துவிட்டதாகத் தெரியவில்லை.

ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ்ஸெல்லாம் மோசனாவை என்பதல்ல எனது வாதம். இவற்றை Just Thought Sharing ஆக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் இப்போதைக்கு ஃபேஸ்புக் என்பதை ஒரு விசிட்டிங் கார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் எழுத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நம்புகிறேன்.

ப்லாக் எழுதுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேர உழைப்பு தேவைப்படுகிறது. ஆற அமர யோசித்து எழுதலாம். ஒரு பக்க அளவிற்காவது சொல்லவந்ததை விரிவாக எழுத வேண்டியிருக்கிறது. எப்பொழுது எழுதி வைத்தாலும் அது அங்கேயேதான் இருக்கப் போகிறது. எந்தக் காலத்திலும் Search செய்து தேடி எடுத்துவிடலாம். கூகிளில் தேடினாலும் சரி, யாஹூவில் தேடினாலும் சரி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும். ஆனால் ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ இதெல்லாம் நடப்பதேயில்லை- சாத்தியமே இல்லை என்று சொல்லவில்லை; நடப்பதேயில்லை.

இன்னொரு விஷயம்- வாசிப்பவர்கள். ஜெயமோகனுக்கும், சாரு நிவேதிதாவுக்கும் கிடைத்திருக்கும் வாசர்களில் கணிசமானவர்கள் ப்லாக் வழியாகக் கிடைத்தவர்கள் என்பதை உறுதியாகச் சொல்லலாம். இந்த எழுத்தாளர்களின் அச்சுப்பிரதிகளில் ஒரு பக்கத்தைக் கூட வாசிக்காமல் இணையத்தின் வழியாக இவர்களைக் கண்டுபிடித்தவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தாங்கள் எதையுமே எழுதாவிடினும் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளருக்கு மட்டும் இணையத்தின் மூலமாக அதிதீவிர வாசகராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். ‘இப்பொழுதெல்லாம் அத்தனை வாசகர்களும் எழுத்தாளராக இருக்கிறார்கள், வாசகர்கள் என்று தனியாக இல்லை’ என்பது கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை என்றுதான் நினைக்கிறேன். மெளனமாக வாசித்துவிட்டுப் போகும் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். இதெல்லாம் நல்லதா கெட்டதா என்பதில் பிரச்சினையில்லை. ஆனால் வாசகர்கள் என்பவர்கள் எந்தக் காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.  இதெல்லாம் ப்லாக் வழியாக சாத்தியம் ஆவதைப் போல மற்ற சமூக தளங்களின் வழியாக நிகழ்வதில்லை.

வலைப்பதிவுகளில் தரமான எழுத்துக்களைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள் கோலோச்சிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வினவும், சவுக்கும் ப்லாக் வழியாகத்தான் அத்தனையும் எழுதுகிறார்கள். ஞாநி, பத்ரி, ஆர்.அபிலாஷ் போன்றவர்கள் வலைப்பதிவுகளில் முக்கியமான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதிஷா, யுவகிருஷ்ணா, கேபிள் சங்கர் போன்றவர்களின் தளங்களில் எப்பொழுதும் சுவாரசியமான விஷயங்கள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், இரா.முருகனுக்கும், எம்.டி.முத்துக்குமாரசாமிக்கும் இன்னமும் வலைப்பதிவு எழுதும் தளமாக இருக்கின்றது.

வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவதால் இவன் அந்தக் கட்சிக்கு கொடிபிடிக்கிறான் என நினைக்கத் தேவையில்லை. மற்ற அத்தனை சமூக ஊடகங்களிலும் எனக்கு ‘கணக்கு’இருக்கிறது. அந்தத் தளங்களை கவனிப்பதும் உண்டு. ஆனால் Personally, மற்ற எல்லாவற்றையும் விடவும் இணையத்தின் வழியாக சமாச்சாரங்களை எழுதுவதற்கு ப்லாக் சிறந்த வழி என நினைக்கிறேன். எழுத்தை தொடர்ந்து Tune செய்து கொள்வதற்கும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும் தொடர்ந்து பயிற்சி செய்வதற்கும் இது அற்புதமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் நான் கருதுவது, வலைப்பதிவை வாசிப்பவர்கள் ‘மூன்று வரிக்கு மேல் படித்தால் கொட்டாவி வருகிறது’ என்று சொல்வதில்லை. வாசிப்புக்கு தேவையான உழைப்பைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். 

அப்படியானால் வலைப்பதிவுகளில் ‘கச்சடா’வே இல்லையா? அப்படியெல்லாம் இல்லை. நிறைய இருக்கிறதுதான். ஆனால் மற்ற சமூக ஊடகங்களின் வடிவங்களுக்கும், வலைப்பதிவின் வடிவத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தரமான எழுத்தை எழுதினால் மற்ற எந்த   இணைய ஊடகத்தையும் விடவும் அதிகக் கவனம் பெறும் வழியாக வலைப்பதிவு இருக்கிறது.

சமீபமாக சில நல்ல வலைப்பதிவுகளை பார்க்க நேரிடுகிறது. நிறையப் பேர் திரும்பவும் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வருவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இதை இன்னொரு சமூக ஊடகத்தை தாக்கிவிட்டு பிறிதொன்றை தூக்கிபிடிக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. வலைப்பதிவில் இன்னும் நிறையப் பேர் எழுத வேண்டும் என விரும்புகிறேன். அவ்வளவுதான் விஷயம். இன்னமும் பேசலாம்.

Jun 20, 2013

வந்தேண்டா பால்காரன்...

ஹோண்டா சிஆர் வி காரின் விலை இருபத்தைந்து லட்சம் வரும் போலிருக்கிறது. பழைய மேனேஜர் அந்தக் காரை வாங்கியிருக்கிறார். அவருடைய ஜாதகத்தில் குரு சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறான். அதனால் அவர் தொண்ணூறுகளிலேயே ஐ.டியில் வேலைக்கு சேர்ந்து விட்டார். அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரில் ஏ,பி,சி,டி டைப் செய்யத் தெரிந்தால் அமெரிக்கா போய்விடுவார்கள். இவருக்கு ‘சி’ ப்ரோகிராமிங்கே தெரிந்ததாம். அதனால் வருடக்கணக்கில் அங்கேயே குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டார். சைதாப்பேட்டையை சைதை என்பது போல ஹைதராபாத்தை ஹைதை என்று வைத்துக் கொள்வோம். மேனேஜர் ஹைதைக்காரர். அதனால் ‘அவர் கொல்ட்டி’ என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

ஹைதையில் ‘ஹை-டெக்’சிட்டி என்று ஒரு ஏரியா இருக்கிறது. இப்பொழுதுதான் அது ‘ஹை-டெக்’ தொண்ணூறுகளில் அது ‘எருமை டெக்’. எருமைகள் மேய்வதைத் தவிர ஒன்றுமே இருக்காதாம். அந்த ஏரியாவில் சீப்பாகக் கிடைத்ததால் ஆறு லட்ச ரூபாய் கொடுத்து கால் ஏக்கர் பொட்டல் வெளியை வாங்கிப் போட்டிருக்கிறார். அவருக்குத்தான் ஆறு லட்சம் சீப். ஆனால் அவரது அம்மா அப்பாவிற்கு அது பிடிக்கவில்லை. குதித்தார்களாம். எதிர்ப்புகளை நிராகரித்துவிட்டு துணிந்துதான் வாங்கியிருக்கிறார். நிலத்தின் மீது போடும் காசு நம்மை ஏமாற்றிவிடாதல்லவா? அவருக்கும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. இவருக்குத்தான் குரு உச்சத்தில் இருக்கிறாரே! இன்றைக்கு அதே கால் ஏக்கரை ஒண்ணே முக்கால் கோடிக்கு விற்றுவிட்டார். 

சில நாட்களாக காசு, பணம், துட்டு, money money என்று சுற்றிக் கொண்டிருந்தவர் ஒண்ணே கால் கோடியில் நீச்சல் குளத்தோடு ஒரு வீடு வாங்கிவிட்டார். ‘ஒண்ணே கால் கோடி கொடுத்து அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்குவதற்கு பதிலாக தனி வீடே கட்டியிருக்கலாமே’ என்றால் ‘கட்டியிருக்கலாம்தான். ஆனால் இப்பொழுது அறுபதாயிரம் வாடகை வருகிறது, தனிவீட்டில் அவ்வளவு எதிர்பார்க்க முடியாதே’ என்று ஜெர்க் கொடுக்கிறார். வாடகை வருமானமே அறுபதாயிரம். ம்ம்! மிச்சமிருந்த பணத்தில்தான் முதல் வரியில் சொன்ன ஹோண்டா சிஆர்.வி.

அவர் இந்தக் காரை வாங்கி ஓரிரு மாதங்கள் ஆகியிருக்கும். இந்த ஓரிரு மாதங்களாக அந்தக் கார் மீது ஒரு Craze ஆகத் தான் திரிந்தேன். இத்தனை வருடங்களாக கார் மீது ஆர்வம் இருந்ததேயில்லை. ஆனால் கடந்த ஒரு வருடமாக எந்தக் காரை பார்த்தாலும் ஆசை வருகிறது. சரி அது இருக்கட்டும். சிஆர்.வி காரின் மீது இருந்த அத்தனை ஆசையும் இன்று போய்விட்டது. காரணம்- ஃபேவரைட் பெலந்தூர் ஏரிதான். பெங்களூரிலேயே மிகப் பெரிய ஏரியாம். எனக்கென்னவோ சைஸைவிடவும் இன்னொரு Fact தான் முக்கியமானதாகத் தெரிகிறது. பெங்களூர் ஏரிகளிலேயே அதிகமான ஆய்த் தண்ணீர் கலக்கும் ஏரி இதுவாகத்தான் இருக்கும். அத்தனை நாற்றம். அத்தனை அழுக்கு.

சரி. ஹோண்டா சிஆர்.வியை வெறுக்க காரணம் என்னவாகியிருக்கும்? ஒரு நிமிடம் யோசியுங்கள், அதற்குள் இன்னொரு தகவலைச் சொல்லிவிடுகிறேன்.

இந்த ஊரில் பால் வியாபாரம் கொடி கட்டுகிறது. ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு பிடித்தோ அல்லது விலைக்கு வாங்கியோ அது நிறைய எருமைகளையும், மாடுகளையும் கட்டி வைத்து பால் கறந்து பிழைப்பு நடத்துபவர்களை இங்கு பார்க்கலாம். ஹாலுக்குள் பெரிய எருமையும் அதனோடு சில கன்றுக்குட்டிகளும் இருந்தால், பெட்ரூமை திருமதி.பசுமாடுகளுக்குகும், கிச்சனை மாஸ்டர் அண்டு பேபி வகையறாக்களுக்கும் ஒதுக்கி வைத்திருப்பார்கள். பக்கத்திலேயே இன்னொரு வீட்டில் பால்க்காரர் குடும்பம் இருக்கும். மாலை நேரம் ஆனால் வேப்பிலைகளைக் கொளுத்தி கொசுவைத் துரத்துகிறேன் பேர்வழி என்று அந்த வீதி முழுவதையும் ரகளையாக்குவார்கள். மாலையானால் கூட சமாளித்துவிடலாம். மழையானால்தான் சிரமம். கால் வைக்க முடியாது. கால் மட்டுமில்லை மூக்கையும் அந்த ஏரியாவில் வைக்க முடியாது.  ‘மணம்’ பின்னியெடுக்கும். ஆக, எருமைகளுக்கும், மாடுகளுக்கும் வீடு ரெடி. புவாவுக்கு?

அதுக்குத்தான் சுற்றிச் சுற்றி ஏரிகள் இருக்கின்றனவே. காலை ஏழு மணிக்கெல்லாம் ஏரிக்கரையோரங்களில் புல்லுக்கட்டுகளை பார்க்கலாம். ஏரிகளுக்குள் இறங்கி புற்களை அறுத்து எடுத்து வந்து கட்டுக் கட்டாக விற்று பிழைப்பு நடத்தும் சில குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு தொழிலே இதுதான். சில பால்க்காரர்கள் பைக்களிலும், சைக்கிளிலும் கட்டி எடுத்துப் போய்விடுகிறார்கள். லாரி, ஆட்டோ வைத்து யாரும் எடுத்துப் போவதில்லை. அதற்கு தனியாக பெர்மிஷன் வாங்க வேண்டுமா அல்லது ட்ராஃபிக் மாமாஸ் பிடித்துக் கொள்வார்களா என்று தெரியவில்லை. லாரி, ஆட்டோவில் புற்கட்டுகளை ஏற்றி பார்த்ததேயில்லை. பிறகு? அதுதான் ஹோண்டா சிஆர்.வி மீதான் Craze போகக் காரணம். பலவித கார்களில் புற்களை நிரப்பி எடுத்து போவதை கவனித்திருக்கிறேன். ஆனால் இன்று சிஆர்.வி ஐ நிறுத்தி ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நின்று அந்தக் கார்க்காரரிடம் ஏதாவது ‘விவரம்’ கேட்கலாம் என்று தோன்றியது. ஆனால் மேனேஜருக்கு குரு சம்மணம் போட்டிருப்பது போல எனக்கு சனி சம்மணம் போட்டிருக்கிறார். பேசாமல் வந்துவிட்டேன்.

எங்கள் ஊரிலும் பால்க்காரர்கள் உண்டு. காலையில் மூன்றரை மணிக்கு எழுந்து பால் கறந்து சைக்கிளில் பால்கேன்களைக் கட்டிக் கொண்டு- இப்பொழுது சிலர் பைக்குகளில் போகிறார்கள்- முரட்டுத்தனமாக பெடலை மிதித்து வீடு வீடாக ஊற்றிவிட்டு காலை ஒன்பது மணிக்கு வீடு திரும்பினால், சோற்றைக் குடித்துவிட்டு எருமை, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வெயிலில் காய்ந்து நண்பகல் தாண்டி வீடு திரும்பி மதிய சோற்றை முடித்தவுடன் பால் கறக்க ஆரம்பித்துவிட வேண்டும். அப்பொழுதுதான் மாலை நேரத்திற்கான  ‘ரவுண்டு’ போக முடியும். இடையில் எருமை மாடுகளுக்கு ஏதாவது நோய்நொடியென்றாலோ, கறவைகளுக்கு மடு கட்டிவிட்டாலோ, தனக்கு உடம்பு சரியில்லையென்றாலோ- இன்னும் என்ன என்னவோ- எது வந்தாலும் சிரமம்தான். அது போக பண்டம்பாடிகளுக்கு புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை வாங்க வேண்டும், மருந்து ஊற்ற வேண்டும். அது மட்டுமா? சினை சேர்க்க வழி தேட வேண்டும். சினை கூடவில்லையென்றால் டாக்டருக்கு நடையாய் நடக்க வேண்டும். இத்தனைக்கும் இடையில் சொந்தக்காரர் வீட்டு கல்யாணம், தெரிந்தவர்கள் வீட்டில் எழவு, காதுகுத்து, கெடாவிருந்து, சீர்...எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா அத்தனையும் பார்த்தாக வேண்டும். 

இத்தனை கஷ்டங்களுக்கு இடையில்தான் தாங்கள் பால் ஊற்றும் வீடுகளில் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ பால்காசு வாங்கிப் போவார்கள். அதுவும் சும்மா போய்விட முடியாது. பால் கெட்டியாக இல்லை என்பதில் ஆரம்பித்து, புரை போட்டு வைத்த தயிரில் கும்ப வாசம் அடிக்கிறது என்ற ஏகப்பட்ட கம்ப்ளெய்ண்ட்களை வாங்கிக் கொண்டு திரும்புவார்கள். அவர்களுக்கும்தான் குடும்பம் ஓடுகிறது.

பால்க்காரர்கள் இப்படியென்றால் சம்சாரிகள் வேறு ரகம். எத்தனைதான் மேய்ச்சல் நிலம் இருந்தாலும் மேற்சொன்ன காரணங்களால் ஒரு மாடு வளர்த்துவார்கள் அல்லது இரண்டு வைத்திருப்பார்கள். அவ்வளவுதான். எம்ஜிஆர் பாடல் ஒன்று இருக்குமே ‘சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு’. அப்படித்தான். ஐந்தரை செண்டில் வீடு கட்டியிருந்தாலும், ஆடு மாடுகளைக் கட்டி வைக்க தொண்டுபட்டி இல்லையெனச் சொல்லிவிட்டு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக மூன்று லிட்டர் பால் கறந்து சொசைட்டியில் ஊற்றி அறுபதோ எழுபதோ சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள்.

சென்னையில் எப்படியென்று தெரியவில்லை. 

இந்த ஊரில் பாருங்கள். இவன் இருபத்தைந்து லட்சம் ரூபாய் காரில் புல்லை நிரப்பிக் கொண்டு போகிறான். அப்படியென்றால் என்றால் அந்த மாடுகளாலும், எருமைகளாலும் இந்த ஊர்க்காரர்கள் எத்தனை சம்பாதிப்பார்கள்? நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களுக்கு நம் ஊர் பால்காரர்களின் அளவிற்கு சிரமம் இருக்காது என்று சொல்லவில்லை. ஆனால் நகரம் ஒரு உழைப்பாளிக்கு, அவனது உழைப்புக்குத் தகுந்த வசதி வாய்ப்புகளைக் கொடுத்துவிடுகிறது. 

சிஆர்.வி சம்பவத்தைப் பார்த்த போது இந்த ஊர் பால்க்காரர்களை சர்வசாதாரணமாக ‘பால்காரன்’ என்று நக்கலடித்துவிடுவதை நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டேன். ஒன்றரையணா செல்போனை வாங்கி வைத்துக் கொண்டு அது சொத்தையாகிவிடும் என்று கவர் போட்டு, ஸ்கிரீனுக்கு பேப்பர் ஒட்டி அழிச்சாட்டியம் செய்யும் நானெல்லாம் பெங்களூர் பால்க்காரரின் சுண்டுவிரல் நகத்திற்குக் கூட சமமில்லை போலிருக்கிறது

Jun 19, 2013

படிப்புக்கும் பி.எம்.டபிள்யூவுக்கும் என்னய்யா சம்பந்தம்?

பத்தாவது படிக்கும் போது முந்நூற்று சில்லரைதான் மதிப்பெண் வாங்கினார். அவர் என்னை விட இரண்டு வருடங்கள் சீனியர். நெருங்கிய சொந்தமும் கூட. அதுதான் பொறியியல் கல்லூரிகள் ‘வதவத’வென துவங்கப்பட்ட காலம். ஏகப்பட்ட பேர் ‘இஞ்ஜினியரிங் வெறி’பிடித்து திரிந்தோம். இவர் வாங்கியிருந்த மதிப்பெண்ணுக்கு பதினோராம் வகுப்பில் ஃபர்ஸ்ட் க்ரூப் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் பெற்றவர்கள் இவரை வொகேஷனல் க்ரூப்பில் சேர்த்துவிட்டார்கள். அதில் நல்ல மதிப்பெண் வாங்கினால் +2 முடித்த பிறகு பொறியியல் சேர்ந்துவிடலாம். படிப்பதற்கு சுலபமான க்ரூப்தான். ஆனால் கணிதத்தில் மார்க் வாங்கியாக வேண்டும். அவர் கணிதத்தில் வீக். அதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கும் அர்ச்சனைதான். ‘பத்தாவதில்தான் கோட்டை விட்டாச்சு, பன்னிரெண்டாவதிலாவது மார்க் வாங்குற வழியைப் பாரு’ என்பதில் ஆரம்பித்து பக்கத்துவீட்டு பையன், அடுத்த தெரு பெண் என ஒவ்வொருவரையும் ‘கம்பேர்’ செய்து காய்ச்சி எடுத்தார்கள்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினார். எதிர்பார்த்ததுதான் நடந்தது. தொள்ளாயிரத்து சொச்சம். கட்-ஆஃப் படு மோசம். சத்தியமாக நல்ல கல்லூரியில் பொறியியல் கிடைக்காது. வேறு வழி? டிப்ளமோ சேர்த்துவிட்டார்கள். அதுவும் ஒரு சுமாரான பாலிடெக்னிக்தான். டிப்ளமோவில் மெக்கானிக்கல் சேர்ந்து அவர் மூன்றாவது வருடம் வந்த போது நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது. அவர் படித்த பாலிடெக்னிக்கில் கேம்பஸ் இண்டர்வியூவெல்லாம் கிடையாது. அவர் டிப்ளமோ முடித்த பிறகு வீட்டிலிருந்தவர்கள்தான் அவரை பொறியியல் படிப்பில் சேர்ப்பதாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் தெளிவாக இருந்தார்.  ‘பொறியியல் சேர்ந்தாலும் மதிப்பெண் வாங்க முடியாது’ என்று சொல்லிவிட்டு இருசக்கர வாகன சர்வீஸ் செண்டரில் வேலைக்கு சேர்ந்தார். எடுத்தவுடன் மேனேஜர் பதவியா கொடுப்பார்கள்? இரண்டாயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்து அப்ரண்டீஸ் என்று சொல்லியிருந்தார்கள். யூனிபார்மும், எண்ணெய் வழியும் முகமும், வண்டி ஆயிலும், கரியும் அப்பிய கையுமாக அவர் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவரது அம்மா புலம்பத் துவங்கினார். 

வருமானமும் பெரிதாக இல்லை, உழைப்பும் ஆளை உருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் இதையெல்லாம் செய்து கொண்டிருப்பது என யோசித்தவர் ‘பிஸினெஸ்’ செய்யப்போவதாக அறிவித்தார். யார் கொடுத்த ஐடியா என்று தெரியவில்லை. ஆனால் சிம்பிள் கான்செப்ட். சாக்குப்பை (கோணி)யை  வாங்கி வந்து அதில் ‘ரைஸ் மில்’ பெயர், ‘தாமரை - நெம்பர் 1 திடம் அரிசி’ என அரிசியின் பிராண்ட் போன்றவற்றை பிரிண்ட் செய்ய வேண்டும். ப்ரிண்ட் செய்யப்பட்ட சாக்குப்பைகளை அரிசி ஆலைக்காரர்கள் வாங்கிக் கொள்வார்கள். இந்தத் தொழிலை தனியாக ஆரம்பிக்கவிலலை. கூடவே பார்ட்னரை சேர்த்துக் கொண்டு ஆரம்பித்துவிட்டார். பார்ட்னரும் அதே பள்ளியில், அதே வொகஷனல் க்ரூப்பில், அதே பாலிடெக்னிக்கில் படித்தவர்தான். புதிய தொழிலில் ஆளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்தான் முதலீடு. அதில் ஐந்தாயிரம் ரூபாய் கடைக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ். மிச்சமிருந்த ஐந்தாயிரம்தான் தொழிலுக்கான முதலீடு.

அப்பொழுதும் சொந்தக்காரர்களுக்கும் பந்தக்காரர்களுக்கும் பெரிய திருப்தி இல்லை. ‘இதெல்லாம் ஒரு பிஸினஸா? சாக்குக்கடைக்காரன் என்று சொல்லி பெண் கூட தர மாட்டார்கள்’ என்று சொன்னவர்களின் முகம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் பார்ட்னர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆரம்பத்தில் பழைய சாக்கு பைகளை வாங்கி, அதில் கிழிசல் ஏதாவது இருந்தால் தையல் போட்டு, உள்பக்கமாகத் திருப்பி பிரிண்ட் அடித்துக் கொடுப்பார்கள். தொழிலாளர்கள் என்று யாரும் கிடையாது. சாக்குத் தைக்க ஒரு ஆள் இருந்தார். மற்றபடி பார்ட்னர்கள்தான் பிரிண்ட் அடிப்பார்கள். சர்வீஸ் செண்டரில் வேலை செய்துவிட்டு வரும் போது கையில் அப்பியிருக்கும் கரியை சோப்பு போட்டுக் கழுவினால் போய்விடும். ஆனால் இந்த பெய்ண்ட் போகவே போகாது. அதே கலர் கையோடுதான் இருபத்தி நான்கு மணிநேரமும் சுற்ற வேண்டும். சாக்கில் இருந்து கிளம்பு சிறுதுகள்கள் மூக்கில் புகுந்து அடிக்கடி சளி பிடிக்கச் செய்யும். ஆனால் இதனால் எல்லாம் அவர்கள் சோர்ந்து போனதாகத் தெரியவில்லை.

தொடக்கத்தில் ஒரு சாக்கை வாங்கி, கிழிசலை சரி செய்து, ப்ரிண்ட் போடுவதற்கு இருபது ரூபாய் செலவு பிடிக்கும். அதையே அரிசி ஆலைக்காரர்கள் இருபத்தியொரு ரூபாய்க்கு வாங்கிக் கொள்வார்கள். ஆக ஒரு சாக்குக்கு ஒரு ரூபாய் லாபம். ஆரம்பத்தில் நூறு, இருநூறு சாக்குகளைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். பிறகு நிறைய அரிசி ஆலைகளில் ஆர்டர் பிடித்தார்கள். தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமானது. ஒரிஸா, பீகார் போன்ற இடங்களில் இருந்து தொழிலாளர்கள் சேர்ந்தார்கள். ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் சாக்குகள் முதல் பத்தாயிரம் வரை எண்ணிக்கை அதிகமானது. கணக்குப் போட்டால் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய் இலாபம். பிறகு பழைய சாக்குகளை வாங்குவதை நிறுத்திவிட்டு புது சாக்குகளை பங்களாதேஷிலிருந்தும், கல்கத்தாவிலிருந்தும் இறக்குமதி செய்யத் துவங்கினார்கள். புது சாக்குகளில் இலாபம் அதிகம் என்பதால் இன்னமும் ஒரு படி மேலே போனார்கள்.

நான் எம்.டெக் முடித்துவிட்டு ஹைதராபாத் போன போது ‘பேரு பெத்த பேரு தாக நீலு லேது’ என்று தெலுங்குப் பழமொழி கற்றுக் கொண்டதுதான் மிச்சம். பெரிய வேலையும் இல்லை; நல்ல சம்பளமும் இல்லை. ஆனால் இந்தச் சமயத்தில் அவர்கள் தொழிலில் ஸ்திரமாகிவிட்டார்கள். வாசிப்பதற்கு என்னவோ ஒரே பாடலில் பணக்காரராகும் அண்ணாமலை ரஜினி போலத்தான் தெரியும். ஆனால் தொழிலில் ஸ்திரமடைவதற்கு தேவையான அத்தனை சிரமங்களையும், அவமானங்களையும் இரண்டு பேரும் தோளில் சுமந்துதான் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

மிகப் பெரிய அடி வாங்கிய சம்பவங்களும் நடந்தது. ஒரிரு வருடங்களுக்கு முன்பாக இரு குடோன்களில் ஒரு சாக்கு குடோன் முழுமையாக எரிந்து போனது. குடோனுக்கு மேலே போய்க் கொண்டிருந்த மின்வயர் அறுந்து விழுந்தது என்றார்கள். ஆனால் உண்மையில் அதுதான் காரணமா என்று யாருக்கும் தெரியாது. வெளியில் இருந்து பார்த்தவர்களுக்கு அது மீளவே முடியாத அடி என்றுதான் நினைத்திருக்க முடியும். சில கோடிகளாவது தீக்கு இரையாகியிருந்தது. அத்தனை மெஷின்களும், அத்தனை ஸ்டாக்கும் கருகிப் போயின. ஆனால் மற்றவர்கள் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. அடுத்த ஐந்தே நாளில் புதிய மெஷின்களை இறக்கினார்கள். கடன் வாங்கினார்களா என்றெல்லாம் தெரியாது- ஆனால் கடுமையான உழைப்பும், திறமையும் பெரிய அளவிற்கு கொண்டு போய்விட்டது. இடம் வாங்குவதாக இருந்தாலும், புதிய கட்டடம் கட்டுவதாக இருந்தாலும் இரண்டு பேரின் பெயரிலும்தான் செய்கிறார்கள்.

இப்பொழுது சாக்கு பிஸினஸ் தனியாக நடக்கிறது. அது போக நூல் பிஸினெஸ், நூல் மில்களுக்குத் தேவையான் ‘கோன்’ தயாரிப்பு என்று கிளை விரித்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலான பிஸினஸ் பற்றி எனக்கு அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதால் அதிகமாக கேட்டுக் கொள்வதில்லை. ஃபோன் செய்வதும் கூட குறைந்து விட்டது. ‘கலெக்‌ஷனில் இருக்கிறேன்’ ‘சப்ளையரை பார்க்க போகிறேன்’ என்று ஒரு நாளின் முக்கால்வாசி நேரமும் பிஸியாக இருக்கும் மனிதரை தொந்தரவு செய்வதற்கு மனம் வருவதில்லை. ஓரிரு வாரங்களுக்கு முன்பாக இரண்டு பி.எம்.டபிள்யூ பதிவு செய்தாகிவிட்டது என்றார். ஒன்று இவருக்கு, இன்னொன்று பார்ட்னருக்கு. இது முன்பே நடந்திருக்க வேண்டியதுதான். ஆனால் தீ விபத்தினால் தாமதமாகிவிட்டது என நினைக்கிறேன். கேட்பதற்கு சந்தோஷமாக இருந்தது.

பதிவு செய்த கார் வந்துவிட்டதா என்பதைக் கேட்க வேண்டும் என நேற்று காலையில் தோன்றியது. திடீரென ஞாபகம் வந்ததால் ஓட்டிக் கொண்டிருந்த பைக்கை நிறுத்திவிட்டு அழைத்தேன். 

“சொல்லு மணி” என்றார். 

“கார் வந்துடுச்சுங்களாண்ணா?” என்றேன். 

“நேத்தே எடுத்துட்டு வந்தாச்சு. பண்ணாரி கோயிலுக்கு போய்ட்டு வந்தோம். இப்போ மாமன் ஊருக்கு கெடா விருந்துக்கு போயிட்டிருக்கோம்” என்றார். மற்றதெல்லாம் பேசி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன். 

மற்றவர்களின் தன்னம்பிக்கையை வளர்பதற்காகவோ அல்லது படித்தால் உருப்பட முடியாது என்பதை பறைசாற்றவோ இந்தக் கட்டுரையை எழுதவில்லை. ‘நீ பிஎம்.டபிள்யூ வாங்கவில்லையென்றால் படித்த மற்றவர்களாலும் வாங்க முடியாது என்று அர்த்தமில்லை’ என்றோ, அல்லது ‘அவர் தொழிலில் வென்றுவிட்டார் என்பதால் பிஸினஸ் ஆரம்பிப்பவர்கள் எல்லாரும் ஜெயித்துவிடுவார்கள் என்றோ அர்த்தமில்லை’ என யாராவது சொன்னால் தலை வணங்கி ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் ஒன்றை குறிப்பிட வேண்டும் என்று தோன்றியது. நாங்கள் இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே வயது, ஒரே காலகட்டத்தில்தான் வளர்ந்தோம். அவர் டிப்ளமோதான். ஆனால் என்னால் வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத காரில் போய்க் கொண்டிருக்கிறார். நான் எம்.டெக்தான் ஆனால் ஸ்பெண்டர் ப்ளஸ்ஸில் அலுவலகத்திற்கு போய்க் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான் படிப்புக்கும் வசதி வாய்ப்புக்குமான ரிலேஷன்ஷிப்.

Jun 18, 2013

தமிழன் எப்பவுமே மூளைக்காரன்யா

வழக்கமாக திங்கட்கிழமையன்று ஒன்பதரை மணிக்கு அலுவலகத்தில் மீட்டிங் ஆரம்பித்துவிடும். எப்பவுமே ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தாமதமாக வருவேன் என்பதால் ‘இவன் இப்படித்தான்’ என்று H20 வை தெளித்துவிட்டார்கள். ஆனால் நேற்று பார்த்து இருபது நிமிடம் தாமதம். மீட்டிங் அறைக்குள் நுழைந்ததுதான் தெரியும். அதன் பிறகு அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு வடசட்டியில் பொரிந்து கொண்டிருந்ததால் என்ன நடந்தது என்றே தெளிவாகத் தெரியவில்லை. பொரிந்தது நான்; பொரித்தது மேனேஜர் பெருந்தகை. 

நான் என்ன வேண்டுமென்றா தாமதமாகச் சென்றேன்? காணுதற்கரிய காட்சிகள் எல்லாம் சாலைகளில் நிகழ்ந்தால் முன்பின் தாமதமாகத்தான் செய்யும். இதைக் கூட புரிந்து கொள்ளாத மேனேஜரைக் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டியதாக இருக்கிறது. நேற்றும் அப்படியொரு காட்சியால்தான் சற்று தாமதம். காட்சி என்றால் தமன்னாவின் இடுப்போ அல்லது அனுஷ்காவின் தொடையோ மட்டும்தான் காட்சியாக இருக்க வேண்டியதில்லை. ஒரு குழந்தை ஜட்டி போடாமல் சுற்றிக் கொண்டிருப்பதும் காட்சிதான்; ஒரு பெண் துள்ளிக் குதித்து சாலையைக் கடப்பதும் காட்சிதான்.

சரி ஓவராக படம் ஓட்டாமல் நேரடியாக காட்சிக்கு வந்துவிடுகிறேன்.

பெங்களூரில் சர்ஜாப்பூர் சாலை தெரியுமல்லவா? அந்தச் சாலையோடு ஹரலூர் சாலை இணையும் இடம்? இரண்டுமே தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. நமக்குத்தான் கூகிள்பாய் இருக்கிறாரே. கீழே இருக்கும் படத்தில் தெரிகிறது பாருங்கள்.  ஹரலூர் என்பது கன்னடக்காரர்களின் உச்சரிப்பு. அருலூர் என்பதுதான் தமிழ் உச்சரிப்பு. இந்தச் சாலைகள் இணையும் இடத்தில் ஒரு பழங்கால திசைகாட்டி கல் இருக்கிறது. அதில் ‘அருலூர்’ என்று தமிழிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் அது கன்னடக்காரர்களுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ, தமிழ் எழுத்துக்களை மறைப்பதற்கு பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது இப்பொழுது முக்கியமில்லை.


இந்தப்படத்தில் நட்சத்திரக் குறியிட்ட ஸ்பாட்தான் முக்கியம். காலை ஒன்பது மணியளவில் இந்த ஸ்பாட்டில் ஒரு போர்வெல் லாரி ஓடிக் கொண்டிருந்தது. ‘ஓடி’ என்பதற்கு பதிலாக ‘நகர்ந்து’ என்பது பொருத்தமான சொல்லாக இருக்கும். அந்த லாரிக்கு பின்னால்தான் நான் உட்பட சில பைக்காரர்களும் ஒரு ‘L' போர்ட் ஸிவிஃப்ட் உட்பட ஓரிரண்டு கார்க்காரர்களும் நகர்ந்து கொண்டிருந்தோம். ஆளாளுக்கு அலுவலகம் செல்லும் அவசரம். ஹார்னை அதிர விடத் துவங்கினோம். அந்த ஹார்ன் மொத்தத்தையும் ஸிவ்ஃப்ட்காரன் காதில்தான் அடித்திருக்க வேண்டும். காரணம் அவன்தான் லாரிக்காரனுக்கு பின்னால் போய்க் கொண்டிருந்தான். லாரிக்காரனை முந்தவும் இல்லை ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடவும் இல்லை. நடுச்சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தான். ‘L' போர்ட் என்பதற்காக எத்தனை நேரம்தான் பொறுப்பார்கள்? ஒரு பைக் அந்தக் காரை முந்திவிட்டது. முந்தும் போது பைக்கின் பின்னால் இருந்தவன் ஏதோ கையசைத்து பேசினான். அவனுக்கு பின்னால்தான் எனது பைக் சென்றது என்றாலும் தெளிவாக புரியவில்லை. ‘L' போர்ட் அவசரமாக கார்க்கண்ணாடியை கீழே இறக்கிவிட்டு ஏதோ கத்தினான். இது போதுமல்லவா? ஒரு அற்புதமான சண்டைக்காட்சிக்கு மனம் தயாராகிவிட்டது. மீட்டிங், மேனேஜரெல்லாம் மண்டையின் பின்பகுதிக்கு போய்விட்டார்கள். லாரிக்காரனை போகவிட்டவர்கள் பைக்கையும், காரையும் ஓரம் கட்டி நிறுத்தினார்கள். பின்னால் வந்தவர்களும் இவர்களை முந்திக் கொண்டு போகத் துவங்கினார்கள். என்னைப் பொறுத்தவரையிலும் முன்பைக் எவ்வழியோ என்பைக்கும் அவ்வழியே. ஓரம்கட்டியாகிவிட்டது.

பைக்கில் இருந்தவர்கள் தமிழ். இறங்கியவுடன் ‘நீதான் ‘L' போர்ட் ஆச்சே வழி விட மாட்டியா?’ என்று தமிழில்தான் ஆரம்பித்தார்கள். காரில் இருந்தவனுடன் ஒரு பெண்ணும் இருந்தாள். அவர்கள் தென்னிந்தியர்கள்தான். ஆனால் தமிழ் இல்லை. ‘என்கிட்ட DL இருக்கு’ என்று ஆங்கிலத்தில் கத்தியபடியே இறங்கினான். ‘L’ போர்ட் என்றது அவனது ஈகோவை சீண்டியிருக்க வேண்டும். சொற்பிரயோகங்கள் தடிக்க ஆரம்பித்தன. கார்க்காரன் பைக்பையன்கள் மீது ஆதிக்கம் செலுத்தத் துவங்கினான். அவர்கள் அதிகம் பேசவில்லை. கார்க்காரனின் மனைவியும் களத்தில் குதிக்க ஆரம்பித்தாள். எங்களுக்கு பின்னால் சைக்கிளில் வந்த பெரியவர் ஒருவர் கார்க்காரனிடம்‘ஏம்ப்பா உன்மேலதானே தப்பு?’ என்றார். அவர் கட்டடவேலைக்கு போகுபவர் போலிருந்தது. காரைச்சட்டி, கைக்கரண்டியெல்லாம் சைக்கிள் கேரியரில் கட்டி வைத்திருந்தார். அவர் சொன்னதையெல்லாம் கார்வாலாக்கள் கண்டுகொள்ளவே இல்லை. 

பைக்கார பையன்கள் இருவரும் விடலைகள். இப்பொழுதுதான் கல்லூரி முடித்திருக்க வேண்டும். பில்லியனில் அமர்ந்திருந்தவன் துடிப்பானவனாக இருந்தான். 

‘இப்போ என்ன செய்யணும்?’என்றான். அதில் சற்று விறைப்பு இருந்தது.

ஸாரி கேட்கச் சொன்னார்கள்.

‘எதுக்கு?’ என்று எகிறினான்.

இப்பொழுது மீண்டும் பெரியவர் சமாதானம் செய்ய முயன்றார். அவரோடு நானும் ஏதோ சொல்ல எத்தனித்த போது ‘கன்னடா கொத்தாயல்லவா?’ என்று கார்க்காரன் ஆரம்பித்தான். பெங்களூரில் சண்டைகளின் போது தமிழில் பேசினால் இதுதான் பிரச்சினை. அதையே பிடித்துக் கொள்வார்கள். விடாமல் ‘கன்னடத்தில் பேசு’ என டார்ச்சர் செய்யத் துவங்குவார்கள். கன்னடம் தெரியவில்லை என்றால் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியே இருக்காது. நான் பின்வாங்கிக் கொண்டேன். பெரியவருக்கு கன்னடம் தெரிந்திருக்கக் கூடும். இங்கு கட்டடவேலை செய்யும் பெரும்பாலான தமிழர்கள் கன்னடம் பேசுவார்கள். ஆனால் ‘கார்க்காரனுக்கும் பைக்காரனுக்கும் சண்டை நடக்கும் போது சைக்கிள்காரனுக்கு என்ன வந்தது’ என்று நினைத்தாரோ என்னவோ விலகிவிட்டார்.

என்னைத் தவிர அந்த இடத்தில் வேடிக்கை பார்க்கும் ஆட்கள் யாருமே இல்லை. பெரும்பாலான வண்டிகள் சற்று வேகத்தை குறைத்து வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டன. அந்தச் சாலையில் ட்ராபிக் போலீஸ் வருவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவு. வேடிக்கை பார்ப்பது மட்டுமே என் நோக்கம் என்பதால் நானும் சற்று விலகி நின்று கொண்டேன்.

கார்க்காரன் தனது கையில் சாவியை வைத்துக் கொண்டு எகிறிக் கொண்டிருந்தான். பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த துடிப்பானவன் மற்றவனை போகச் சொன்னான். எதற்காக போகச் சொல்கிறான் என்று குழப்பமாக இருந்தது. ஆனால் அவன் பெரிதாக மறுக்காமல் கிளம்பிவிட்டான். ஸிவிஃபிட்க்கு சில அடிகளுக்கு முன்பாக கார்கள் வரிசையாக நிற்கத் துவங்கின. அனேகமாக சர்ஜாப்பூர் சாலையில் ட்ராஃபிக்காக இருக்கக் கூடும்.  அதனால் நகர முடியாமல் அருலூர் சாலையில் வண்டிகளின் க்யூ நீளமாகிக் கொண்டிருந்தது.

இப்பொழுது கார்க்காரனும், துடிப்பானவனும் தாறுமாறாக கத்திக் கொள்ளத் துவங்கினார்கள். அவர்களோடு அந்தப் பெண்ணும் சேர்ந்து கொண்டாள். இவர்கள் இப்படியேதான் இழுத்துக் கொண்டிருப்பார்கள் போலிருந்தது. கிளம்பிவிடலாம் என்று நினைக்கத் துவங்கிய போதுதான் அந்தக் கண்கொள்ளாக் காட்சி அரங்கேறியது. பைக்காரப் பையன் கார்க்காரன் கையிலிருந்த சாவியை பறித்துவிட்டான். அது ஒரு லாவகமான பறிப்பு. கோழிக்குஞ்சை அடிக்கும் பருந்தின் லாவகம். எதற்கு பறிக்கிறான் என்று யோசிப்பதற்குள் அவன் செயலில் இறங்கிவிட்டான்.

அடுத்த வினாடி ஓடத் துவங்கிவினான். சர்ஜாப்பூர் சாலையை நோக்கி ஓடுகிறான். கார்க்காரனுக்கும் அவனது மனைவிக்கும் என்ன நடக்கிறது என்றே சில கணங்கள் புரியவில்லை. சுதாரித்துக் கொண்டு ஓடத் துவங்கும் போது அவளும் கூடவே ஓடினாள். கோபம் அடைந்தவனாக ‘வெயிட் செய்யி. கார் உந்துகாதா? ஒஸ்தானு’ என்று கத்தினான். அடப்பாவி! தெலுங்குப்பயல். கன்னடக்காரன் போல நடித்திருக்கிறான்.

பைக்பையன் ஒருவித உற்சாகத்துடன் ஓடத் துவங்கினான். அந்த ஓட்டத்தில் ஒருவித நடனத்தன்மை கலந்திருந்தது. நக்கலான நடனமும் ஓட்டமும் கலந்த வேகம். அவனது வேகத்திற்கு இவனால் தொப்பையைத் தூக்கிக் கொண்டு ஓடி சத்தியமாக பிடிக்க முடியாது. ‘வெயிட்ரா..ரேய்..அர்ஜெண்ட்ரா...ப்ளீஸ்ரா’ என்று கத்திக் கொண்டே பின் தொடர்ந்தான். இருவருக்கும் இடையில் கிட்டத்தட்ட நூறு அடி தூரம் இடைவெளி இருந்தது. இடைவெளி அதிகமாகிக் கொண்டேயிருந்தது. சாவியோடு ஓடும் அவன் சர்ஜாப்பூர் வாகனநெரிசலுக்குள் கரைந்துகொண்டிருந்தான். கார்க்காரனைப் பார்கக் பாவமாக இருந்தது என்றாலும் ‘இவனுக்கு இது தேவைதான்’ என்று தோன்றியது. சர்ஜாப்பூர் சாலையில் நின்று கொண்டிருந்த ட்ராபிக் போலீஸை நோக்கி கார்க்காரன் நகர்ந்தான். அவர்களால் மட்டும் என்ன செய்துவிட முடியும்? போன சாவி போனதுதான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- இனி வாழ்நாளில் யாரோடும் சாலையில் இறங்கிச் சண்டை போடமாட்டான் எனத் தோன்றியது. மாறாக சாவியைப் பறித்துக் கொண்டு ஓடியவன் ‘எவன் கிடைப்பான்’ என்று ஏதாவதொரு கைப்புள்ளையை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கவும் கூடும். இப்பொழுது எனது பின் மண்டையிலிருந்த மேனேஜர் முன் மண்டைக்கு வந்திருந்தார். ஆக்ஸிலேட்டரை முறுக்கத் துவங்கினேன். பிறகுதான் நீங்கள் முதல் பத்தியில் படித்த வடசட்டி மேட்டர் நடந்தது.

Jun 17, 2013

நமக்கு எதுக்கு வம்பும் வழக்கும்?

இன்றைக்கு ‘நிசப்தம்’ தளத்தில் எழுதுவதற்காக வேறு சில விஷயங்களை சேகரித்து வைத்திருந்தேன். ஆனால் முந்தாநாள் பதிவிட்டிருந்த கடிதங்களும் அதற்கான சில பதில்களும் சிலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டியிருக்கிறது. ஃபேஸ்புக் பக்கத்தில் ‘இவனாகவே கடிதம் எழுதிக் கொள்கிறான்’ என்கிற ரேஞ்சில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. இந்த வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருப்பதால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு வரப்போகிறதா? அரசியல் மேடையில் இடம் கொடுக்கப் போகிறார்களா அல்லது வெகுஜன ஊடகத்தில்தான் இரண்டு பக்கம் ஒதுக்கப் போகிறார்களா? மேற்சொன்ன மூன்று விஷயங்களுக்கும் எழுத்தைத் தாண்டிய சில அரசியல் தேவை என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். அதற்கு எனக்கு திராணியும் இல்லை ஆர்வமும் இல்லை. ‘ச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்னும் நரியின் கதைதான் என்று வைத்துக் கொள்ளுங்கள். நிலைமை இப்படியிருக்க எதற்காக எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பிக் கொள்ள வேண்டும் அல்லது பில்ட்-அப் செய்து கொள்ள வேண்டும்?

வெளிப்படையாகச் சொன்னால் நிசப்தம் தளத்தை வாசிப்பவர்களின் எண்ணிக்கையை exponential ஆகக் கூட்ட வேண்டும் என்று கூட விரும்புவதில்லை. வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது எழுத வேண்டிய ‘ப்ரஷரும்’ அதிகமாகும். அது ஒரு சுமையைத் தூக்கி தலைக்கு மேல் வைப்பது போலத்தான். இயலும் அளவிற்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கேற்ப வாசிப்பவர்களின் எண்ணிக்கை கூடட்டும் என்றுதான் விரும்புகிறேன்.

எதற்காக இந்த சில கடிதங்களை வெளியிட்டேன் என்றால் சென்ற வாரத்தில் வந்திருந்த மின்னஞ்சலில் ‘ஏன் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை? பயமா?’ என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். அந்தக் கேள்விகளுக்காக இனிமேல் வாரம் ஒரு முறை கடிதங்களை வெளியிட்டுவிடலாம் என்று யோசித்திருந்தேன். அதை இந்த வாரம் செய்தேன். அவ்வளவுதான். 

வாரத்திற்கு குறைந்தபட்சம் ஐந்தாறு பதிவுகள் எழுதுபவனுக்கு குறைந்தபட்சம் நான்கைந்து கடிதங்கள் கூட வராது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.

இந்த மாதிரியான ‘புழுதி தூற்றல்’ பிரச்சினைகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற விருப்பமோ உந்துதலோ இல்லை.  ‘விரும்புவதை எழுதிக் கொண்டிருப்போம், விரும்புவர்கள் வாசிக்கட்டும்’ என்ற எளிய பாலிசிதான். ஆனால் அவ்வப்போது சில பத்திகள் சிலரைச் சீண்டிவிடுகிறது. உண்மையில் ‘நமக்கு எதுக்கு வம்பும் வழக்கும்? எல்லோருக்கும் நல்லவனாகவே இருப்போம்’ என்றுதான் பல சமயங்களில் தோன்றுகிறது. ஆனால் கை மீறிவிடுகிறது. போகட்டும்.

நாம் எதைச் சொன்னாலும், செய்தாலும் சிலர் பொங்கத்தான் செய்வார்கள். அதற்கு பின்ணணியில் அவர்களின் ராஜவிசுவாசமோ அல்லது வேறு என்ன காரணமோ இருந்துவிட்டு போகட்டும். எனக்கு அவர்கள் பற்றிய கவலை  இல்லை. ஆனால் இந்தப் பிரச்சினைகள் பற்றி சம்பந்தமேயில்லாத ஒரு மனிதர் ‘ஒருவேளை இந்தக் கடிதங்களை இவனாகவே எழுதியிருப்பானோ’ என்ற சந்தேகம் அடைந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டியது எனது கடமை என நினைக்கிறேன். இந்த வலைப்பதிவில் எழுதுவதும் கூட அந்த மாதிரியான மனிதர்களுக்குத்தான். அறிவுஜீவிகளுக்கும், சமூகப்போராளிகளுக்குமாக எழுதுவதற்கு எனக்கு தகுதியும் இல்லை, என்னிடம் சரக்கும் இல்லை. அதே சமயம் அவர்களுக்கும் இதைப் படிக்க வேண்டிய அவசியமுமில்லை என்று நம்புகிறேன்.

இதோ ‘ஸ்கிரீன்ஷாட்களை’ போஸ்ட் செய்தாகிவிட்டது. இந்த மாதிரி ஸ்கிரீன்ஷாட்களை போஸ்ட் செய்வதற்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் இனிமேல் இத்தகைய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். அப்படியே அவசியம் வந்தாலும் Ignore செய்துவிட முயற்சிக்கிறேன்.
Jun 16, 2013

கறிக்கு மசாலா இல்லை, குழம்புக்கு வெங்காயம் இல்லை

ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வேலைகளில் இருந்து தப்பிப்பது பெரிய வரம். ஆனால் அந்த வரம் எப்பொழுதும் கை கூடுவதில்லை. படுக்கையைவிட்டு எழுந்ததிலிருந்து ஏதாவது வேலை வாங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். கோழிக்கடைக்குச் சென்றால் பயங்கரக் கூட்டமாக இருக்கிறது. மீன் கடைக்குச் சென்றால் விலை தாறுமாறாக இருக்கிறது. ஆட்டுக்கறி வாங்கி வரட்டுமா? என்றால் ‘உனக்கு ஆட்டுக்கறி வாங்கத் தெரியாது, கிழட்டு ஆட்டைக் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்’ என்கிறார்கள். இப்படி அவமானப்படுத்துவது கூட பரவாயில்லை ‘இதுக்கெல்லாம் தம்பிதான் லாயக்கு’ என்று ஒரு இடி வேறு இடிக்கிறார்கள். ‘அவனையே போகச் சொல்லுங்கள்’ என்றால் அவன் தனது பொறுப்பை நிரூபிக்க குழந்தைகளுக்கு ‘கட்டிங்’ செய்துவிட அழைத்துச் சென்றிருக்கிறானாம்.

இதையெல்லாம் தாண்டி ஆடோ, கோழியோ, மீனோ- எதையாவது எடுத்து வந்து கொடுத்தாலும் விடுவதில்லை. கறிக்கு மசாலா இல்லை, குழம்புக்கு வெங்காயம் இல்லை என்று மூன்று நான்குதடவை கடைக்குச் சென்றாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமையின் ஒரு பொழுது சர்வசாதாரணமாக கரைந்துவிடுகிறது. இனி மதியத்திற்கு மேல் என்ன சதித்திட்டங்கள் தீட்டி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சரி, அந்தப் பிரச்சினையை பிறகு பார்த்துக் கொள்கிறேன். 

இப்பொழுது கவிதை பற்றி பேசலாம். 

சற்று விலகி நின்று பார்த்தால் கவிதை ஒரு மேலோட்டமான வஸ்து. ஆனால் கவிதையில் deepness உண்டு. இந்த ஆழத்தை ‘bottomlessness' என்று கூடச் சொல்லலாம். ஒரு நல்ல கவிதை நம்மை புதிய தேசங்களுக்கு அழைத்துச் செல்லக் கூடும்- இப்படி எழுதிக் கொண்டே போனால் கவிதையைப் பற்றி எழுதும் போது கவிதையை சூப்பர் ஸ்டாராக்குவதற்காக இப்படியெல்லாம் உதார் விடுவது போலத் தோன்றும். ஆனாலும் அதுதான் உண்மை. நல்ல கவிதையை அதன் அர்த்தத்தின் அடிப்படையிலோ அல்லது அது உருவாக்கும் சலனத்தின் அடிப்படையிலோ எல்லைகளுக்குள்ளாக அடக்குவது மிகச் சிரமம். 

இது போன்று கவிதைகளுக்கான நல்ல அம்சங்களை வாய் வலிக்கும் வரை பேசிக் கொண்டிருக்கலாம். அதனால்தானோ என்னவோ நம் ஆட்களுக்கு கவிதை மேல் எப்பொழுதுமே க்ரேஸ் உண்டு. தமிழைத் தவிர வேறு எந்தக் மொழியாவது இத்தனை கவிஞர்களை பெற்றுப்போட்டு சமாளிக்கமாட்டாமல் திணறிக்கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. இப்பொழுது கூட, லிங்குசாமியின் கவிதைத் தொகுப்பிற்கு ‘லிங்கூ’ என்று பெயராம். என்ன இருந்தாலும் சினிமாக்காரர் வெளியிடும் புத்தகம் அல்லவா? பல பத்திரிக்கைகளில் இரண்டு பக்கத்திற்கு கவர் செய்திருக்கிறார்கள். இனி இப்படியே ‘ங்கூ’ விகுதியில் ராமசாமி- ரங்கூ, ஷங்கர்-ஷங்கூ என்று வரிசையாக தொகுப்புகளை வெளியிடாமல் இருக்க தமிழ்த்தாய்தான் துணை இருக்க வேண்டும். ஆனால் அவளே பாவம், ஆயிரத்தெட்டு வேலை. இப்பொழுது கூட மதுரைச் சிலைக்கு ‘போஸ்’ கொடுத்துக் கொண்டு நிற்கிறாளாம். அவளாவது இதையெல்லாம் தடுப்பதாவது! யாராவது கேசவன் என்று ஒரு ஆள் ‘கேக்கூ’ என்று தொகுப்பு வெளியிடும் வரைக்கு ஓய மாட்டார்கள்.

அது இருக்கட்டும். நாம் கவிதைக்கே போய்விடலாம்.

ஒரு கவிதையை நாம் நல்ல கவிதை என்று சொல்லும் போது வேறு சிலர் அதே கவிதையை ‘டப்பா’ என்று சொல்வதை கவனித்திருக்கலாம். ஒருவர் ‘ஆஹா’ என்று கொண்டாடும் கவிதை நமக்கு ‘மொக்கையாக’ இருப்பதிலும் பெரிய ஆச்சரியம் இல்லை. இது நம்முடைய புரிதலின் அடிப்படையில்தான். ஒன்றாம் வகுப்புக் குழந்தைக்கு எட்டாம் வகுப்பு பாடம் புரியாமல்தான் இருக்கும். அதுவே பத்தாம் வகுப்பு பையனிடம் மூன்றாம் வகுப்பு பாடத்தைக் கொடுத்தால் ‘இவ்வளவுதானா?’ என்று ஒதுக்கிவிடுவான் அல்லவா? அதே லாஜிக்தான்.  

கவிதையை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவரால் மிக விரைவாக கவிதையின் அடுத்தடுத்த நிலைக்கு நகர்ந்து விட முடியும். ‘கவிதை புரிவதில்லை’ என்ற வசனங்கள் இப்போதைய சூழலில் அவசியமில்லை என்றுதான் நினைக்கிறேன். நேரடியாக புரிந்து கொள்ளும் வகையில், எளிமையான கவிதைகள் நிறைய எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சென்ற மாத காலச்சுவடு (மே’2013) இதழில் வெளிவந்த கவிதை இது. நீலகண்டன் எழுதிய கவிதை. முதலில் கவிதையை வாசித்துவிடுவோம். 

என் தலைக்குள் தேவையான இடமிருக்கிறது

இப்போது குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்
சகிப்புத் தன்மையுடையவர் என்றாலும்
என்றாவது ஒருநாள் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்
அதற்குள் நான் எனக்கென
ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும்
இந்தப் பூமியில் எனக்கென ஓர் இடமில்லாததை
சிந்தித்துக் கொண்டிருந்தபோது
என் தலைக்குள் தேவையான இடமிருப்பதைக் கண்டேன்
அங்கே தோட்டவசதியுடன் அழகான
புத்தம் புதிய வீட்டைக் கட்டத் தொடங்கினேன்
அதில் மனைவிக்குப் பிடித்த மாதிரி சமையலறை
கழிவறையுடன் கூடிய இரட்டைப் படுக்கையறை 
மகளுக்கு ஏற்றதுபோல் எல்லா வசதிகளோடும் ஓரறை
அம்மா அப்பாவிற்கும்
உறவினர்கள் சௌகரியமாக தங்கிச் செல்லவும் ஓய்வறை
வாஷிங் மெஷினுடன் கூடிய ஒரு துவைப்பறை
நவீன வசதிகளுடன் குளியல் அறை
நான் வணங்கும்
எல்லாக் கடவுள்களுக்குமான பெரிய பூஜையறை
அமைதியான சூழ்நிலையில் ஓர் படிப்பறை
உணவு மேசை புத்தக அலமாரி
எல்.சி.டி. டிவி புகழ்பெற்ற ஓவியங்கள்
குளிர்சாதனப் பெட்டி என
உள் அலங்காரம் செய்யப்பட்ட பெரிய ஹால்
பார்ப்பவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அந்த
வீட்டைக் கட்டி முடித்ததின் களைப்பில் 
பால்கனியில் அமர்கிறேன்
எதிரே தெரிந்த வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த
வெள்ளை ரோஜாக்களைப் பார்த்த ஆனந்தத்தில்
அயர்ந்து அப்படியே கண்மூடிவிட்டிருக்கிறேன் இவ்வீட்டில்.

நல்ல கவிதை அல்லவா? இந்தக் கவிதை பற்றி கொஞ்சம் பேசலாம். 

கவிதை ஒரு விஷயத்தை நேரடியாகச் சொல்லிவிடுகிறது. ஒருவன் வீடு கட்ட விரும்புகிறான். விரும்புகிறான் என்று கூட சொல்ல முடியாது- அது ஒரு நிர்பந்தம். வீட்டுக்காரர் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றிவிடக் கூடும். நிர்பந்தமிருக்கிறது, வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அவனிடம் கைவசம் இடம் இல்லை. அதனால் கற்பனையில் வீடு கட்டுகிறான். அவ்வளவுதான் கவிதை.

ஆனால் இந்தக் கவிதையில் ஒரு மெல்லிய சோகம் இருக்கிறது. ஒரு ஏக்கம் இருக்கிறது. இந்த ஆசை நிறைவேறாது என்ற அவநம்பிக்கை ஏதோ ஒரு இடத்தில் வெளியே வந்துவிடுகிறது பாருங்கள். 

கவிதையில் வரும் கற்பனைக்காரனுக்கு பதிலாக நம்மை பொருத்திக் கொள்ளலாம்; அவனுக்கு வீடு கட்ட வேண்டும் என்பது போல நமக்கு வேறு ஏதேனும் ஒரு ஆசை இருக்கும்தானே?- அது அவ்வளவு எளிதில் நிறைவேறாத ஒரு ஆசையாக இருக்கக் கூடும். நமது ஆசை குறித்து அவனைப் போலவே கற்பனை செய்கிறோம். அவனைப் போலவே ஏங்குகிறோம். கொஞ்ச நேரத்திற்கு பிறகு வேறு வேலை ஏதாவது செய்வதற்காக போய்விடுகிறோம் அல்லது தூங்கிவிடுகிறோம். அவனுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆக நாமும் அவனும் ஒன்றுதான்.

இப்படி ஏதோவொரு விதத்தில் கவிதையை நமது மனதுக்கு நெருக்கமாக புரிந்து கொள்வது என்பது கவிதை வாசித்தலின் முக்கியமான படி என நம்பலாம். 

இந்தக் கவிதையை வேறு விதத்தில் எழுதவும் சாத்தியமிருக்கிறது எனத் தோன்றியது. வீடு குறித்தான விவரணையிலிருந்தே கவிதை ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது “தோட்டவசதியுடன் அழகான வீட்டைக் கட்டத் துவங்கினேன்” என்று தொடங்கி சமயலறை, படுக்கையறை, குழந்தைகள் அறை பற்றிய குறிப்புகள் என்று தொடர்ந்து, கவிதை முடியுமிடத்தில் இதுக்கெல்லாம் என்னிடம் வசதி வாய்ப்பு இல்லை, அதனால் என் தலைக்குள் இருக்கும் இடத்தில் கட்டிய வீட்டோடு தூங்கிவிட்டேன் என்பது மாதிரி முடிந்திருந்தால் ‘ட்விஸ்ட்’ இருந்திருக்கும் எனத் தோன்றியது. வாசிப்பவர்களுக்கு அதிர்ச்சியும் உண்டாகியிருக்கும்.

ஒரு கவிதை இப்படி இருந்திருக்கலாம் என்று சொல்வதும் கூட ஒரு சர்வாதிகாரம்தான். கவிஞனுக்கு தெரியாதா? எதை எப்படி எழுத வேண்டும் என்று. ஆனால் ‘இப்படி இருக்கவும் வாய்ப்பிருக்கு’ என்று கவிதையை பிரித்து மேய்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது அல்லவா? அப்படியான ஒரு நினைப்புதான் இது.