சுற்றி இருக்கும் எல்லோருமே ஏதாவதொரு விதத்தில் கெட்டவர்களாக இருக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், சதி செய்கிறார்கள், போக்கிரிகளாக திரிகிறார்கள், களவாடுகிறார்கள்.
அமெரிக்கா கெட்ட நாடு, இந்தியா திலுப்பாமாரி தேசம்.
தேசங்கள்தான் ஆகாவழிகள் என்றால் மன்மோகன் சிங் அமுக்கமான ஆள், சோனியா கேடி, கருணாநிதி சதிகாரர், ஜெயலலிதா மோசம், விஜயகாந்த் குடிகாரன், ராமதாஸ் சாதி வெறியன்.
அரசியல்வாதிகள் மட்டுமில்லை- அம்பானிகள் திருடர்கள், இன்போசிஸ் நாராயண மூர்த்தி மலை முழுங்கி, விஜய் மல்லய்யா கேப்மாரி.
பிஸினஸ் ஆட்கள் மட்டுமா? த்ரிஷா அரைவேக்காடு, ரஜினி ஒரு ஃப்ராடு, கமல் பார்ப்பனன், அமிதாப் பச்சன் ஒரு வியாபாரி.
சினிமாக்காரன்தான் இப்படியென்றால் சுஜாதா விஷம் கக்கி, ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ், எஸ்.ராமகிருஷ்ணன் மழுப்பல்வாதி, சாரு ஒரு வுமனைஸர்.
பிறகு யார்தான் இங்கே நல்லவர்கள்? எல்லோரையும் கழித்துவிட்டால் மிச்சமிருப்பதும் நீங்களும் நானும்தான். என்னைப் பற்றி வாசிக்க உங்களுக்கு சில புகார்கள் இருக்கும். உங்களை குத்திக்காட்ட எனக்கு சில மேட்டர் இருக்கும். அவ்வளவுதான். கதை முடிந்தது!
மேற்சொன்னவர்களின் உண்மையான முகங்கள் நமக்குத் தெரியாதா என்ன? அச்சு அசலாகத் தெரியும். ‘இவன் இப்படித்தான்’ என்று தெரிந்து வைத்திருந்தாலும் சகித்துக் கொள்கிறோம். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியும் இல்லை. மன்மோகன் சிங்கும், நரேந்திர மோடியும் வேண்டாம் என்றால் அடுத்த பிரதமர் யார்? கருணாநிதியும். ஜெயலலிதாவும் வேண்டாம் என்றால் மூன்றாவதாக யார்? எந்தத் திசையில் கை நீட்டினாலும் கிடைக்கக் கூடிய இன்னொருவன் இருப்பதைவிட படு ‘டேஞ்சராக’ இருப்பான் என்பதால் இருப்பதில் ஒன்றை ஒத்துக் கொள்கிறோம்.
நாம்தான் கிடைக்கும் கத்தரிக்காயை ஏற்றுக் கொள்கிறோம் என்றால் புரட்சியாளர்கள் ‘சும்மா’ இருப்பார்களா?. நாம் எதைத் தேர்ந்தெடுத்தாலும் நம்மை வறுத்தெடுக்கிறார்கள். ‘அட மந்திகளா...இவன்தான் உங்களுக்கு கிடைத்தானா?’ ‘சொம்புதூக்கிகளே! உங்களுக்கெல்லாம் சுரணையே இல்லையா?’ ‘சோற்றில் உப்பு போட்டுத்தான் தின்கிறீர்களா?’ என்கிறார்கள்.
இப்படியே எதற்கெடுத்தாலும் நம்மை ‘சப் சப்’ என்று அறைந்து கொண்டிருந்தால் நமக்கு என்ன மிச்சமாகும்? வெறும் குற்றவுணர்ச்சிதான்.
சாமானியர்களுக்கு வெறும் குற்றவுணர்ச்சியை உருவாக்குவது மட்டும்தான் இங்கு புரட்சியாக இருக்கிறது. குற்றச்சாட்டுகளையும், புலம்பல்களையும், வெறுப்புகளையும் வெவ்வேறு வாக்கியங்களில் எத்தனை நாட்களுக்குத்தான் பேசுவது?.
அரசியல் பிரச்சினைகளையும், சமூகச் சிக்கல்களையும் பேசக் கூடாது என்பதில்லை- பிரச்சினைகளுக்கு எதிராக குரல் எழுப்பவர்கள் தேவைதான். ஆனால் எது அலர்ஜியாக இருக்கிறதென்றால் இணையவெளியில் கம்யூனிசம் பேசும் மனிதர் கார்போரேட் பத்திரிக்கையில் நிருபராக இருக்கிறார். சமத்துவம் பேசும் புரட்சியாளர் தனியார் தொலைக்காட்சியின் சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார். பெரியாரின் கொள்கைகளை பேசுபவர்கள் சினிமா பத்திரிக்கையில் பக்கத்திற்கு பக்கம் நடிகையர்களை உரித்து தொங்கவிடுகிறார்கள். மார்க்ஸை புகழ்ந்து புளாங்கிதம் அடைபவர்கள் மென்பொருள் நிறுவனத்தில் அமர்ந்து கொண்டு ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் புரட்சி செய்கிறார்கள். கேட்டால் பிழைப்பு வேறு கொள்கை வேறு என்று கொடிபிடிக்கிறார்கள்.
இங்கு இருக்கும் எந்த புரட்சியாளனும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்வதில்லை. அவன் மோசம், இவன் மோசம் என்று அடுத்தவனைக் கை காட்டி வெறும் புகார்ப்பட்டியல் மட்டும்தான் வாசிக்கிறார்கள். ‘அவர்கள் மோசம் என்று எங்களுக்கும்தான் தெரியுமே’ என்று சொல்லிப் பாருங்கள். ‘அதுதான் எங்களால் செய்ய முடியும், தீர்வை மக்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும், புரட்சி வெடிக்க வேண்டும்’ என்பார்கள்.
‘எவன் எப்படி போனால் நமக்கென்ன?’ என்பதும், பிரச்சினைகளிலிருந்து சற்று விலகிப் போய்விடுவதும்தான் இங்கு யதார்த்தம். இந்த யதார்த்தத்தில்தான் 99.9% பேரின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தக் கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் என்று நிரூபிப்பதற்காக புரட்சியாளராக வேடம் போட்டுக் கொள்கிறோம். எதைப் பார்த்தாலும் அறச்சீற்றத்தை காட்டிவிடுகிறோம். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரைக்கும் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பெரியாரியவாதியாகவும், சமத்துவவாதியாகவும், கம்யூனிஸ்டாகவும், பரோபகாரியாகவும் காட்டிக் கொண்டு மாலை 5.05 மணிக்கு சாதாரணமானவர்களாகிவிடுகிறோம்.
சரி விடுங்கள். அடுத்தவர்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? நான் மட்டும் யோக்கியமா? ஏதோ சில புரட்சியாளர்களை ஃபாலோ செய்ததன் side effect இது.
மாதாமாதம் ஃசாப்ட்வேர் கம்பெனி படியளப்பதை மடியில் ஏந்திக் கொள்ளும் நான் எல்லாம் இப்படி ஓவராக கூவிக் கொண்டிருந்தால் ‘கார்பரேட் கைக்கூலி இப்படித்தான் பேசுவான்’ என்று ஒரே அடியில் மண்டையை பிளந்துவிடுவார்கள் என்பதால் கியரை மாற்றிக் கொள்வதுதான் நல்லது.
தடாகா என்றொரு தெலுங்குப்படம் வந்திருக்கிறது. வேட்டை படத்தின் ரீமேக். நாக சைதன்யா நடித்திருக்கிறார். அதெல்லாம் தேவையில்லாத சமாச்சாரம். தமன்னா நடித்திருக்கிறார். இதுதான் முக்கியம். அதைவிடவும் முக்கியம் ஆண்ட்ரியாவும் கூட நடித்திருக்கிறார். கூகிளில் தேடினால் ஏகப்பட்ட படங்களாக வந்து கொட்டுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூர் முழுவதும் படத்தின் போஸ்டரை ஒட்டியிருந்தார்கள். திங்கட்கிழமை அலுவலகம் வரும் போது ஒரு போஸ்டரைக் காணவில்லை. எல்லாவற்றையும் கிழித்து வைத்திருக்கிறார்கள். அதுவும் தமன்னாவையும் ஆண்ட்ரியாவையும் மட்டும் குறி வைத்து கிழித்திருக்கிறார்கள். வெறும் நாக சைதன்யா மட்டுமே இருக்கும் கிழிந்த போஸ்டர் இருந்தால் என்ன? பொசுங்கினால் என்ன? பெங்களூரில் இது ஒரு கெட்ட பழக்கம். நடிகைகளின் படங்களை குறி வைத்துக் கிழிக்கும் ஆணாதிக்கவாதிகளால் இந்த ஊர் நிரம்பியிருக்கிறது. பெண்களை மட்டும் போஸ்டரில் இருந்து கிழிக்கும் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இதற்கெல்லாம் இந்த தேசத்தில் புரட்சியே வெடிக்காதா என்று ஒரே யோசனையாக இருக்கிறது.