May 31, 2013

லட்சுமிமேனன் பத்தாவது பாஸாமே?

அப்சல் குருவோ, பின்லேடனோ- ஒரு மனிதனைக் கொன்றால் அதைக் கொண்டாடுவதற்கு சில லட்சம் பேராவது சேர்ந்துவிடுகிறோம். இப்பொழுதும் அப்படித்தான். சட்டீஸ்கரில் நடந்த காங்கிரஸ் பேரணி மீதான நக்சல் தாக்குதலில் இருபது முப்பது பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வெகுதூரத்தில் அது நடந்திருப்பதால் நமக்கு பெரிய பாதிப்பில்லை. பெரிய சலனமில்லையே தவிர அதையும் கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள்.  ‘செத்தாண்டா காங்கிரஸ்காரன்’ என்று சிலரும், ‘பழிக்கு பழி வாங்கினோம்’ என இடதுசாரி சிந்தனையாளர்களும் புளாங்கிதம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் மீது இடதுசாரிகளுக்கு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. “சல்வா ஜூடும்” என்ற பெயரில்-(இதற்கு அர்த்தம் சுத்தப்படுத்ததுலுக்கான வேட்டை) ஆயிரக்கணக்கான பழங்குடியினர் கொல்லப்படுவதற்கும், நூற்றுக்கணக்கான பழங்குடியினப் பெண்கள் நாசம் செய்யப்படுவதற்கும் பின்னால் இருந்த மூளை மகேந்திர கர்மா என்பதால் அவரை போட்டுத் தள்ளியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டது போக அவரது உடலில் 78 இடங்களில் வெட்டியிருக்கிறார்கள். அவரது மகனை கோடாரியால் பிளந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள், பாதுகாவலர்கள் என கையில் கிடைத்தவர்களையெல்லாம் பிளந்து கட்டிவிட்டு, “எங்கள் தாக்குதலில் இறந்து போன அப்பாவித் தொண்டர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று அறிக்கையும் விட்டிருக்கிறார்கள். 

கத்தி எடுப்பதற்கும், துப்பாக்கியை தூக்குவதற்கும் ஒவ்வொருவருக்கும் காரணம் இருக்கிறது. சாலையில் போகும் யாரை வேண்டுமாலும் நிறுத்தி  ‘உனக்கு துப்பாக்கி கொடுத்தால் யாருடைய ஆயுளை முடிப்பாய்?’என்று கேட்டுப்பாருங்கள். நிச்சயம் இரண்டு மூன்று பெயர்களைச் சொல்வார்கள்.  இந்த கலவரத்தில் செத்தவர்கள் எல்லாம் புனிதர்கள் இல்லைதான் ஆனால் அதற்காக ஆளாளுக்கு தமக்கு எதிரான ‘அயோக்கியர்களை’ கொல்லத் தயாரானால் மொத்த மக்கட்தொகையில் தொண்ணூறு சதவீதமாவது காலியாகிவிடாதா என்ன? அடுத்தவனைக் கொல்லும் உரிமை அரசுகளுக்கும், இராணுவத்திற்கும் இல்லை என்று சொல்பவர்கள் துரதிருஷ்டவசமாக தங்களுக்கு மட்டும் அந்த உரிமை வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இதையெல்லாம் பேசினோம் என்று வையுங்கள், ‘சல்வா ஜூடும்’ செய்த கொலைகளின் போதும், ஊடகங்கள் அவற்றை மறைத்த போதும் உன் வாய் என்ன பின்னந்தலையிலா இருந்தது என்பார்கள். அரசு மக்களை வேட்டையாடுகிறதே அது மட்டும் உங்கள் கண்ணுக்குத் தெரியாதா? என்று கேள்வி கேட்பார்கள். தெரியாமல் என்ன? தெரிகிறது. ஆனால் அதற்காக இருபது முப்பது பேரைக் கொன்றால் மட்டும் என்ன நல்லது நடந்துவிடப் போகிறது? ஒன்றுமில்லை. சாமானிய மக்களுக்கு இன்னும் கொஞ்சம் பயத்தை அதிகமாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

வேட்டைக்காரன் படத்தில் ‘பயம்...பயம்’ என்று வில்லன் கூவுவாரே. அதேதான். இதே கான்செப்ட்டைத்தான் இங்கு ஒவ்வொரு அதிகார மையமும் அமல்படுத்துகிறது. மம்தா பானர்ஜியைப் பற்றி எழுதினால் கைது செய்துவிடுவார்களோ என்ற பயம், காங்கிரஸைத் திட்டினால் சி.பி.ஐ அமுக்கிவிடுமோ என்ற பயம்,ஜெயலலிதாவை விமர்சனம் செய்தால் போலீஸ் வந்துவிடுமோ என்ற பயம்,  இடதுசாரிக்கொள்கைகளைத் திட்டினால் புரட்சியாளர்கள் ‘டென்ஷன்’ஆகிவிடுவார்களோ என்ற பயம். 

அடுத்தவர்களுக்கு தங்கள் மீது பயம் இருக்க வேண்டும் என்பதைத்தான் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். வீட்டிலிருப்பவர்கள் தமக்கு அடங்கிப் போக வேண்டுமென சாமானியன் எதிர்பார்க்கிறான் அல்லவா?  இப்படித்தான் ஒரு ஏரியா தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என லோக்கல் தாதா விரும்புவதில் ஆரம்பித்து, நக்சல்கள் மற்றவர்களின் தலையை உருட்டுவது, அரசு இராணுவப்படையை அனுப்பி வைப்பது வரை என எல்லா இடத்திலும் ‘பயம்...பயம்’தான்.

இந்த சட்டீஸ்கர் படுகொலைகளைக் கொண்டாடுபவர்களுக்கு சவூதியில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ரிசானாவின் மரணத்தையும், அப்சல் குருவின் தூக்கையும் கண்டிக்க என்ன முகாந்திரம் இருக்கிறது என்று புரியவில்லை. தீவிர இடதுசாரிகளுக்கு மகேந்திரகர்மாவின் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத குற்றச்சாட்டுகள் அப்சல்குருவின் மீது வலதுசாரிகளுக்கும், ரிசானாவின் மீது தீவிர இசுலாமியர்களுக்கு இருக்கிறது. 

இன்னொருவன் கொலை செய்யப்படுவதை விமர்சிக்க விரும்பினால் முதலில் நாம் அடுத்தவனை கொல்வதை நிறுத்த வேண்டும். தீர்ப்பு எழுதுவது பற்றியெல்லாம் பிறகு யோசிக்கலாம்.
                                        
                                                           ***********

ஸ்ஸ்ஸ்ப்பா...ஓவர் வெயில் தீடிரெனக் குறைந்து மழை பெய்ய ஆரம்பித்ததால் ‘ட்ராக்’ மாறிவிட்டேன் போலிருக்கிறது. மாதாமாதம் வெளிநாட்டுக்காரனிடம் கைகட்டி சம்பளம் வாங்கும் எனக்கு எதுக்கு புரட்சி, போராட்டம், வெங்காயம், விளக்கெண்ணெய் எல்லாம்? வழக்கமான ட்ராக்குக்கே வந்துவிடுகிறேன்.

இன்றைக்கு பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்திருந்தது அல்லவா? நடிகை லட்சுமி மேனன் பாஸ் என்று தெரிந்ததில் இருந்து அதிர்ச்சியடைந்து விரல்கள் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. அதுவும் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸாம். அந்தப் பெண் 'இனி மேலே படிக்க வேண்டும்' என  போய்விட்டால் தமிழ் சினிமாவை யார் காப்பாற்றுவார்கள்? லட்சுமி மேனனே கதி என்று கிடக்கும் வாலிப வயோதிக அன்பர்களின் கதி என்ன ஆகும்? இதையெல்லாம் யோசிக்காமல் மகேந்திரகர்மா, சட்டீஸ்கர் என்று எழுதிக் கொண்டிருக்கும் என்னை பசிக்காத புலி நுகர்ந்து பார்த்து திகில் ஊட்டட்டும்.

May 30, 2013

அதுவா? இதுவா?

கல்லூரிக்குள் நுழையும் போது கனவுகளும், கலர்களுமாகத்தான் காலடி எடுத்து வைத்திருப்போம். ஆனால் முதல் செமஸ்டர் வருவதற்குள்ளாகவே ருத்ரதாண்டவம் தொடங்கும் பாருங்கள்.ஸ்ஸ்ப்பா...!அதுவும் தமிழ் மீடியத்திலிருந்து கல்லூரிக்கு போயிருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. கனவுகளிலெல்லாம் கணக்கு வாத்தியார்தான் வருவார், கலரெல்லாம் காலியாகி வெறும் கறுப்பு மட்டும்தான் பல்லிளிக்கும்.....

                                                            ***

பள்ளியில் படிக்கும் போது வாத்தியார் ஆகிவிட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அந்தச் சமயத்தில் டீச்சர் ட்ரெயினிங் பாடம் பயங்கர பாப்புலர். அதை முடித்துவிட்டு எங்கள் பள்ளியிலேயே வாத்தியார் ஆகிவிட முடியும் என்ற நம்பிக்கையோடு இருந்த போது கட்-ஆஃப் மார்க் சுமாராக வந்துவிட்டது. சில முடிவுகள் நமது விருப்பத்தின் பேரில் இருக்காது அல்லவா? அப்படித்தான் ஆகிப் போனது. வீட்டில் பெரியவர்கள் கூடிப் பேசி பொறியியல் குட்டைக்குள் தள்ளிவிடுவது முடிவு செய்துவிட்டார்கள். அதுவும் கொங்கு, பண்ணாரியம்மன் போன்று வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கல்லூரிகளில் சேர்ந்தால் அடிக்கடி ஊருக்கு வந்து கெட்டுப்போவேன் என்பதால் தூரமாக ஒரு கல்லூரியில் சேரச் சொன்னார்கள். என் மீதும் எனது நண்பர்களின் மீதும் வீட்டிலிருந்தவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.

அப்படிச் சேர்ந்ததுதான் சேலம் சோனா கல்லூரி. சென்னையில் கவுன்சிலிங்கை முடித்துவிட்டு  பூத் ஃபோனிலிருந்து அம்மாவிடம் கல்லூரி பற்றிய விவரத்தைச் சொன்னபோது அவருக்கு அது பற்றி பெரிய திருப்தி இல்லை. அந்த ஊரும் அவருக்கு பிடிக்கவில்லை. கல்லூரியும் பாப்புலர் ஆகியிருக்கவில்லை. “சேலமா? அது ரவுடிக ஊருன்னு சொல்லுவாங்களே” என்று இழுத்தார். எதனால் அப்படியொரு நினைப்பை வைத்திருந்தார் என்று தெரியவில்லை. இப்பொழுது நான் சொல்ல வந்தது அது பற்றி இல்லை. வேறொரு சமாச்சாரம்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ் மீடியத்தில்தான் படித்திருந்தேன். கல்லூரியில் சேர்ந்த போது எங்கள் வகுப்பில் தமிழ்வழி கற்றவர்கள் மிகக் குறைவாகத்தான் இருந்தார்கள். ஐம்பத்தைந்து பேர் இருந்த அந்த வகுப்பில் தமிழ் மீடியத்தில் படித்தவர்களை பொறுக்கி எடுத்தால் பத்து பேர் கூட தேறவில்லை. ‘யார் எல்லாம் தமிழ் மீடியத்தில் படித்தீர்கள்?’ என்று கேட்கவே தேவையில்லை. முகத்தை பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். அதுவும் என்னையெல்லாம் சர்வசாதாரணமாக கண்டுபிடித்துவிடுவார்கள். ‘படிய வாரிய தலைதான் ஒழுக்கத்தின் குறியீடு’ என்று யாரோ சொல்லி  வைத்திருந்தனால் ஒவ்வொரு மாதமும் புதிதாக ஒரு பாராசூட் தேங்காய் எண்ணெய் பாட்டில் வாங்க வேண்டியிருந்தது. அத்தனை எண்ணெயை அப்பி அழுந்த சீவிக் கொள்வேன். ‘ரப்பர் செருப்பு அணிபவன் குடும்பத்தின் சூழலை அறிந்தவன்’ என்று இன்னொரு ஸ்டேட்மெண்டும் மனதிற்குள் பதிந்திருந்ததால் பாராகனில் ஐம்பது ரூபாய்க்கு வந்த வெள்ளை நிறமும் நீல நிறமும் கலந்த ரப்பர் செருப்புதான் அடையாளம். இந்த மாதிரியான அடையாளங்களை மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் குத்து மதிப்பாக உங்களுக்கு ஒரு உருவம் மனதில் வந்திருக்கும் அல்லவா? இதே ‘ஸ்டைலில்’இன்னுமொரு நான்கைந்து நபர்களை உருவகம் செய்து கொள்ளுங்கள். அவர்களுக்கு கேசவன், பெரியசாமி, கிருஷ்ணன், மணிகண்டன் என்று பெயர் சூட்டிவிட்டால் அதுதான் எங்கள் தமிழ் மீடியம் ‘பேட்ச்’.

உண்மையிலேயே கல்லூரியின் முதல் வருடத்தில் கிருஷ்ணன், பெரியசாமி, நானெல்லாம் திணறிக் கொண்டிருந்தோம். இஞ்ஜினியரிங் படிப்பு எங்களையெல்லாம் மொத்தமாக அமுக்கி சாவடிக்க முயன்று கொண்டிருந்தது. Current என்பது மின்னோட்டம் என்றும், Voltage என்பது மின்னழுத்தம் என்பதையும் புரிந்து கொள்ளவே கிட்டத்தட்ட ஒரு மாதம் பிடித்தது. அப்புறம் எங்கே எலெக்ட்ரிக்கல் எஞ்சினீயர் ஆவது? கண்ட்ரோல் ஸிஸ்டம், ஃபீல்ட் தியரி என்ற சொற்களை கேட்கும் போதெல்லாம் கட்டி வைத்து, கண்ணையும் மறைத்து பொடனி அடியாக அடிப்பது போலவே இருக்கும்.

இப்பொழுது நினைத்துப் பார்த்தால் நம்புவதற்கு கூட சிரமம்தான். ஆனால் அப்பொழுது Prefix, Suffix என்பதற்கான வித்தியாசம் கூட பெருங்குழப்பமாக இருந்தது. ‘பி’(prefix) என்று தொடங்கினால் அது  பின்னாடி இல்லை- மாறாக முன்னாடி அதுவே ‘ச’(suffix) என்று தொடங்கினால் அது பின்னாடி என்று குருட்டு அடியாக ஞாபகம் வைத்திருந்தேன். இப்படியான குருட்டு அடி புரிதல்கள்தான் ஏகப்பட்டது இருந்தது.

இப்படி குருட்டு அடியும், முரட்டுப்படிப்புமாக துவங்கிய பொறியியல் கல்வியில் கணிதம் படுத்திய பாடு இருக்கிறதே. இப்பொழுது நினைத்தாலும் கூட ரத்தக் கண்ணீர் வருகிறது. ராஜேஸ்வரி என்று ஒரு ஆசிரியை பாடம் எடுத்தார். வகுப்பிற்குள் வந்தும் வராததுமாக கரும்பலகை பக்கமாக திரும்பி நின்றுகொண்டு வரிவரியாக எழுதிக் கொண்டே போவார். சத்தியமாக ஒரு எழவும் புரியாது. அதோடு விட்டுத் தொலைய மாட்டார். திரும்பி கேள்வி வேறு கேட்பார். பள்ளிப்படிப்பு வரைக்கும் வெறும் பையன்கள் பள்ளியில் படித்ததால் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் டென்ஷன் ஆகவே மாட்டேன். “உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது” என்று கமுக்கமாக சிரித்துக் கொள்வோம். ஆனால் கல்லூரியில் அப்படியில்லை. சுற்றிலும் கலர் கலரான பெண்கள் இருந்தார்கள். பதில் தெரியாமல் எழுந்து நிற்கும் போது வெட்கம் தலையைக் கடித்து துப்பிக் கொண்டிருக்கும். பதில் தெரியவில்லை என்றால் அமரச் சொல்லவும் மாட்டார். அடுத்த பல நிமிடங்களுக்கு தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு நிற்க வேண்டும். ஆசிரியரைச் சொல்லியும் குற்றமில்லை. அதுவரைக்கும் differentiation, integration என்ற சொற்களைக் கூட கேள்விப்பட்டதில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் இதையெல்லாம் தமிழ்ச் சொற்களின் வழியாகத்தான் படித்திருந்தோம் என்பதால் இப்படி புதிதாகக் கேள்விப்படும் ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லையும் தமிழாக்கம் செய்து நாங்கள் புரிந்து கொள்வதற்குள் தாவு தீர்ந்து விடும். அவரது ஒவ்வொரு வகுப்பு முடிந்த பிறகும் முதல்வேளையாக லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். பேயறைவது என்பதை நேரடியாக உணர்ந்த தருணம் இது. இப்படித்தான் கணிதம், Basic Engineering என்று ஒவ்வொரு பாடமும் கூடி எங்களை வைத்து கும்மியடித்தன.

ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு பாடம் புரிவதில் வேண்டுமானால் சிரமம் இருக்குமே தவிர மொழி புரிவதில் பெரிய பிரச்சினை இருக்காது என்பதால் அவர்கள் அசால்ட்டாக இருப்பதை பார்ப்பதற்கு வயிறு எரியும். அதே சமயம் எங்களது இயலாமையினை நினைத்தால் துக்கம் தொண்டையை அடைக்கும். இந்த கருமங்களுக்கிடையே அவ்வப்போது வகுப்பில் ‘செமினார்’ எடுக்க வேண்டும். தமிழ் மீடிய பையன்களை ‘டெவலப்’ செய்ய வேண்டும் என எங்களையே குறி வைப்பார்கள். நாங்கள்தான் எடுக்க வேண்டும். ஒரு மணி நேர செமினாருக்கு மூன்று வாரத்திற்கு மேலாக உழைக்க வேண்டியிருக்கும். என்னதான் தயாரித்துக் கொண்டு வந்தாலும் மேடையில் ஏறி ஆங்கிலத்தில் ஓரிரு வரி பேசினாலே கூட ‘Grammar' சரியாகத்தான் பேசுகிறோமா என்று உதறல் எடுக்க ஆரம்பித்துவிடும். அடுத்த வரியை சாதாரணமாக பேச முடியாது. வாய் டைப் அடிக்கத் துவங்கிவிடும். ஒரு மணி நேர செமினார் சில நிமிடங்களிலெல்லாம் முடிந்துவிடும். 

இப்படித் திணறும் தமிழ் மீடிய மாணவன் குட்டிக்கரணம் அடித்தாவது இரண்டாம் ஆண்டு தொடங்குவதற்குள் தேறிவிட்டால் தப்பித்துவிடலாம். தப்பிப்பது மட்டுமில்லை பள்ளிகளில் படித்த அடிப்படை பாடங்களில் நல்ல புரிதல் இருக்கும் என்பதால் இஞ்ஜினியரிங் படிப்பிலும் பின்னியெடுத்துவிடுவான் -  கேசவன் அளவிற்கு கணித சூத்திரங்களை Derive செய்யும் ஆட்களை இதுவரை பார்த்தது இல்லை. பெரியசாமி அளவிற்கு மெஷினரிஸ் பற்றிய அறிவுடையவர்கள் மிகக் குறைவு. இப்படி எங்களில் சில பேர் தப்பித்துவிட்டோம். தப்பிப்பிழைத்தவர்கள் எல்லோருமே இப்பொழுது ‘டீசெண்டான’ வேலையில் இருக்கிறோம்.

ஆனால் ஒருவேளை தேற முடியாமல் ‘மிஸ்’ ஆகிவிட்டால் அந்த மாணவன் படும் சிரமம் சொல்லி மாளாது. ஒவ்வொரு செமஸ்டரிலும் அரியர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும். கல்லூரி முடிக்கும் போது கூட பத்து, பதினைந்து அரியர்ஸ் வைத்திருந்த ஆட்களைத் தெரியும். 

இவை வெறும் மொழி புரிதல் குறித்தான பிரச்சினை மட்டுமில்லை. இந்த மொழிப்பிரச்சினை கல்லூரி பருவத்தின் ஆரம்பத்திலேயே மாணவர்களுக்கு உருவாக்கும் மன உளைச்சல், தாழ்வு மனப்பான்மை போன்றவை அவர்களின் வாழ்வையே சீரழித்துவிடுகிறது. எத்தனைதான் அறிவாளியாக இருந்தாலும் ஒரு ‘ஆளுமையை’யே சிதைந்து போவதை நேரடியாக பார்கக் முடியும். இஞ்ஜினியரிங் முடித்துவிட்டு ஐந்தாயிரம் ரூபாய்க்கும், ஆறாயிரம் ரூபாய்க்கும் வேலையில் இருக்கும் அவர்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் என்னையும் அறியாமல் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி தொற்றிக் கொள்கிறது.

தமிழகத்தில் ‘ஆங்கில வழிக் கல்வியா? தமிழ் வழிக் கல்வியா’ என விவாதம் உருவாகும் போதெல்லாம் ‘தமிழ்தான் சிறப்பு’, ‘ஆங்கிலம்தான் பெஸ்ட்’ என்று பேசுகிற ஆட்களைத்தான் நிறைய பார்க்கிறோமே தவிர ஆங்கிலமோ, தமிழோ- uniformity தேவை என்பதை பற்றி பேசும் ஆட்களை பார்த்ததாக ஞாபகம் இல்லை. அப்படி uniformity பற்றி பேசும் போது எதிர்கொள்ளும் சிக்கல்களை சரி செய்ய முயன்றாலே கூட நம் கல்வி முறையில் இருக்கும் பெரும்பாலான குறைகளை களைந்துவிட முடியும் என நினைக்கிறேன். கல்வியியல் Intellectuals இது பற்றி பேசுவார்கள் என நம்புவோம்.

May 29, 2013

இலக்கிய உலகின் பவர்ஸ்டார்கள்

‘உலகத்திலேயே என்னை அடிச்சுக்க ஆள் இல்லை என்று யாராவது பீற்றிக் கொள்வார்களா?’ - இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் அதைவிட முட்டாள்த்தனமான கேள்வி வேறு இருக்கவே முடியாது. நாம் பார்க்கிற ஆட்களில் தொண்ணூற்றைந்து சதவீத ஆட்கள் இப்படித்தானே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்- இதை எழுதிக் கொண்டிருப்பவன் உட்பட. 

புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை விற்பவர்களிலிருந்து டிவியில் சாயந்திரம் ஆனால் முகம் காட்டுபவர்கள் வரைக்கும் ஒவ்வொருவரும் இப்படியே நினைத்துக் கொண்டிருந்தால் உலகம் என்னதான் ஆகும்? சத்தியமாகத் தெரியவில்லை. ஒரு நாள் இல்லாவிட்டாலும் இன்னொரு நாள் பூமாதேவி பெருமொத்தமாக வாயைத் திறந்து நம்மை எல்லாம் விழுங்கினால் தவிர இந்த கண்றாவிகளிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை போலிருக்கிறது.

‘ஒபாமாவைவிட சக்தி வாய்ந்த மனிதன் இருக்க முடியாது’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அமத்தா ‘அவன் யாரு ஒவாமா?’ என்று நோஸ்கட் விடுகிறார். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வேட்டைகாரன்புதூர் வரைக்கும் அறுநூற்று சொச்சம் கோடி மக்களுக்கும் தெரிந்த ஒரு பெர்சனாலிட்டி இருக்க வாய்ப்பிருக்கிறதா? யேசுநாதரைக் கூட தெரியாத ஆட்கள் வாழும் இந்த உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த ‘ஆல் இன் ஆல்’ அப்பாடக்கருக்கு வாய்ப்பே இல்லை. 

உலக அளவில் வேண்டாம். இந்திய அளவில்? அதுவும் சந்தேகம்தான். அமிதாப்பச்சனையோ அல்லது ஆமிர்கானையோ கூட எங்கள் ஊர் ஆட்களுக்குத் தெரிவதில்லை. ரூபாய் நோட்டில் இருக்கும் பொக்கை வாய் தாத்தாவைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க தெரியாத ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் உலக அளவில் அல்லது இந்திய அளவில் என்பதையெல்லாம் விட்டுவிடுவோம். மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் அத்தனை பேருக்கும் தெரிந்த ஆட்கள் இருக்கிறார்களா? வேண்டுமானால் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், ரஜினிகாந்தையும் சொல்லலாம். 

மற்றபடி ஜெயமோகனையும், நாஞ்சில்நாடனையும், மனுஷ்ய புத்திரனையும் மொத்தமாக எத்தனை பேருக்குத் தெரியும்? முப்பதாயிரம் பேருக்குத் தெரியுமா? அவர்கள் ஆசையை ஏன் கெடுப்பானேன்? அதிகபட்சமாக ஒரு லட்சம் பேருக்கு தெரியும் என்று வைத்துக் கொள்ளலாம். அதுவும் இந்த இண்டர்நெட்டும், ஃபேஸ்புக்கும், தனியார் சேனல்களும் வந்திருப்பதனால் தெரிந்து வைத்திருப்பார்கள். இல்லையென்றால் சிறுபத்திரிக்கைகள் வாசிக்கும் முந்நூற்று சொச்சம் பேர்களைத் தவிர்த்தால் இவர்களையெல்லாம் சீண்டுவதற்கு ஆளே இருந்திருக்க மாட்டார்கள்.

இந்த ரேஞ்சில் பாப்புலாரிட்டியை வைத்துக் கொண்டு ஒருவர் “என் முன்னால் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது” என்று கேட்கிறார். இன்னொருவர் விகடன் பேட்டியில் “எனது ஃபேஸ்புக் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை ரிஜக்ட் செய்யும் ஒருத்தன் இதுவரை பொறக்கலை. இனிமேலும் பொறப்பான்னு நினைக்கலை” என்கிறார். இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இந்த அகங்காரமும், ஆணவமும் வந்து அமர்ந்து கொள்கிறது என்று புரியவில்லை. 

சிங்கம் சிலுப்பிக்கிட்டு வருது, மீசையை முறுக்கிக்கிட்டு வருது அலம்பிக் கொண்டிருந்த ஜெயகாந்தனே கூட சென்ற ஆட்சியில் தன் மகனுக்கு அரசுப் பணி வாங்க குழைந்ததை பார்த்தவர்கள்தானே நாம்?

படைப்பு ரீதியாக இவர்கள் மீதெல்லாம் என் நம்பிக்கையும், மரியாதையும் எந்தவிதத்திலும் குறைந்ததில்லை. மனுஷ்ய புத்திரன்தான் எனது  ‘நவீன இலக்கியத்தின் நுழைவாயில்’ என்று சொல்லிக் கொள்வதிலும், என்னளவில் சமகால நவீன தமிழ் இலக்கியத்தில் ஜெயமோகன்தான் மிக முக்கியமான ஆளுமை என்பதிலும் எந்தக் காலத்திலும் மாறுதல் வரப் போவதில்லை. ஆனால் இவர்கள் தங்களுக்குத் தாங்களே பீடம் கட்டிக் கொள்வதையும், பிம்பம் அமைத்துக் கொள்வதையும்தான் பார்க்க சகிக்கவில்லை. 

அரசியல்வாதிக்கு போஸ்டர் அடிக்க சில அல்லக்கைகள் எப்பொழுதும் இருப்பார்கள். சினிமாக்காரனுக்கு பாலாபிஷேகம் செய்ய குடும்பத்தை அடமானம் வைத்த சில தறுதலைகள் உண்டு. ஆனால் இந்த எழுத்தாளர்களின் நிலைதான் பரிதாபம். அவர்களுக்கென அல்லக்கைகள் யாருமே இருப்பதில்லை. தமக்குத்தாமே பாலாபிஷேகம் செய்து கொள்வதாக மண்ணை வாரி தலையில் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. தனக்குத்தானே போஸ்டர் அடிப்பதாக நினைத்து அடுத்தவர்களுக்கான  ‘காமெடி பீஸாக’ தங்களை உருமாற்றம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ கவிஞர், காவியப்பேரரசு போன்ற பட்டங்களை சூட்டிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தம்மை என்னவோ உலகை ரட்சிக்க வந்த பிதாமகனைப்போலவும் எதிரில் நிற்பவர்கள் அத்தனை பேரையும் பாவிகளாகவும் நினைத்து அடுத்தவர்களை கலாய்ப்பதைப் பார்ப்பதற்குதான் கூச்சமாக இருக்கிறது.

யாராவது மொக்கையர்கள் ஓவராக பேசும் போது கோபமே வரக்கூடாது என்று சொல்ல வரவில்லை. ஆனால்  ‘டேய்..நான் யார் தெரியுமா?என்கிட்டேயேவா?’ என்றெல்லாம் வெளிப்படையாக எழுதி தனக்கான ‘பில்ட் அப்’ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். கொஞ்ச காலத்திற்கு முன்பிலிருந்து இந்த் வேலையை சாரு நிவேதிதா செய்துவந்தார். ‘ஃபோன் செய்து என்னை டார்ச்சர் செய்யாதீர்கள்; மின்னஞ்சலில் மொன்னையான கேள்விகளை கேட்கிறார்கள்’ என்று டபாய்த்துக் கொண்டிருந்த போது ‘பவர் ஸ்டார் வகையறா போலிருக்கிறது’ என்று அவரிடமிருந்து ஒதுங்கிப் போனார்கள். இப்பொழுது என்னடாவென்றால் ஆளாளுக்கு பவர்ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இவர்களிடமெல்லாம்  ஏதாவது கேள்வி கேட்கலாம் அல்லது பேசலாம் என்று நினைப்பவன் கூட ‘இதைக் கேட்கலாமா? கூடாதா? இது நல்ல கேள்வியா? கெட்ட கேள்வியா’ என்ற குழம்பிப் போவான். எழுத்தாளர்கள் என்பவர்கள் உலகில் எழுதப்படும் ஒவ்வொரு வரியையும் வாசித்தவர்கள் என்று வாசகனை நம்பவைப்பதில் எழுத்தாளர்கள் அடையும் லாபம் என்ன? நல்ல வாசகர்கள் எழுத்தாளர்களை விடவும் அதிகம் வாசிக்கிறார்கள் என்பது தெரியாதா என்ன? 

நூறு புத்தகங்களை எழுதியதாலும், பல புத்தகங்களை வாசித்திருப்பதாலும் மட்டுமே விவசாயியை விடவோ, கட்டட வேலைக்காரனைவிடவோ எழுத்தாளன் எந்தவிதத்திலும் உயர்ந்தவன் இல்லை. அவர்கள் ‘உருப்படியாக’ செய்யும் வேலையில் பத்தில் ஒரு பங்கு கூட So called எழுத்தாளர்கள் செய்வதில்லை என்பதுதானே நிதர்சனம்? வாள் முனையைவிட பேனா முனை உயர்ந்தது போன்ற ‘பிட்டு’க்களை இந்தக்காலத்திலும் நம்ப வேண்டியதில்லை என்று அனைவருக்குமே தெரியும். பிறகு எதற்கு பொதுவெளியில் இத்தனை அல்டாப்புகள்?

தினம் தினம் டிவியில் வருவதால் தான் பாப்புலர் ஆகிவிட்டதாக நம்புவதைவிடவும் காமெடி வேறு எதுவும் இருக்க முடியுமா? ராமராஜன் அடையாத ‘ரீச்’சையா இந்த டிவிக்கள் கொடுத்துவிடுகின்றன? ஆனானப்பட்ட அவரையே சீட்டியடிக்க வைத்ததுதான் இந்தச் சமூகம். 

அத்தனை அழிச்சாட்டியங்களையும், அலட்டல்களையும் நிறுத்திவிட்டு எழுதுவதை மட்டுமே செய்து கொண்டிருந்தாலும் கூட எழுத்தாளர்களுக்கான ‘உண்மையான’மரியாதை இருந்து கொண்டிருக்கும். இதையெல்லாம் என்னைப் போன்ற பொடியன் சொல்ல வேண்டுமா என்ன? பெரியவர்களுக்கு தெரியாததா? என்னமோ செய்யுங்க!

நேற்று பெய்த மழையில் இன்னும் முளைக்கவே முளைக்காத என்னைப் போன்ற காளான்கள் போலியாக கட்டமைக்கப்படும் பிம்பங்களை பற்றி ஏதாவது பேசப் போக ‘புளிச்ச ஏப்பம் விடும் இணைய மொக்கைகள்’ போன்ற வசவுகளை வாங்கிக் கட்ட கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் நேற்றைய எனது பிரார்த்தனையோடு இன்றைய பத்தியை முடித்துக் கொள்கிறேன்.

Oh My God! வறட்சி, பஞ்சம், பட்டினி, பவர்கட், குற்றச்செயல்கள், வன்மம், அக்கிரமம், துரோகம், சூதாட்டம், ஐபிஎல் என சகலத்தையும் என் மக்களே சமாளித்துக் கொள்வார்கள். நீ அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால் தயவு செய்து இந்த எழுத்தாளர்களிடமிருந்து மட்டும் காப்பாற்றிவிடு!

May 28, 2013

மெக்கானிக்கல் அலை

இந்த வருடத்திற்கான டிமாண்ட் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பெரிய கல்லூரிகளில் மெக்கானிக்கல் பாடத்திற்கு இருபது இலட்சம் வரைக்கும் கேட்கிறார்கள். மற்ற பாடங்களுக்கு அதைவிட குறைவான தொகையை டொனேஷனாகக் கொடுத்தால் போதும். சுமாரான கல்லூரிகளில் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங்க்கு ஏழு லட்சம் என்றால் மற்ற பாடங்களுக்கு ஐந்துதான். ஆக பெரிய கல்லூரியாக இருந்தாலும் சரி, டம்மியான கல்லூரியாக இருந்தாலும் மெக்கானிக்கலுக்குத்தான் டிமாண்ட்.

கல்லூரிகள் எப்படி டிமாண்டை நிர்ணயம் செய்கின்றன?

எல்லாம் நம் மக்களின் கைங்கரியம்தான். ரிசல்ட் வந்தும் வராமலும் ‘சார் மெக்கானிக்கலுக்கு எவ்வளவு டொனேஷன்?’ என்று கேட்டு விசாரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எந்த பாடத்தை அதிகம் பேர் கேட்கிறார்களோ அந்தப்பாடத்திற்கான ‘ரேட்’டை அதிகமாக்கிவிடுகிறார்கள். மற்றபடி இந்த ‘ரேட் பிக்‌ஷிங்’கில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இதை வைத்து ஒரு பாடத்திட்டம் சூப்பராக இருக்கிறது என்றும் இன்னொரு பாடத்திட்டம் பல்டியடித்துவிட்டது என்றும் முடிவு செய்ய வேண்டியதில்லை.

இந்த வருடம் மெக்கானிக்கலுக்கு ஏன் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது?

காரணம் ரொம்ப சிம்பிள். சென்ற ஆண்டு ஐடி நிறுவனங்கள் கொஞ்சம் ஆட்டம் கண்டன. கேம்பஸ் இண்டர்வியூக்களில் வேலைக்கு எடுத்திருந்தவர்களை பணிக்கு அழைப்பதற்கு மிகவும் கால தாமதப்படுத்தின. அதனால் ஐ.டி துறை காலியாகிவிட்டது போன்ற பிம்பம் உருவாகியிருக்கிறது. ஆகவே ஐடி துறையயை மாணவர்கள் தவிர்க்கிறார்கள். ஐடியை விடுத்தால் இந்தியாவில் மெக்கானிக்கலுக்கு நிறைய வேலைவாய்ப்பு இருப்பதால் இந்த வருடம் அதன் மீது கண் வைக்கிறார்கள்.

உண்மையிலேயே ஐடி துறை ‘டல்’லடிக்கிறதா?

கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஐடியை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் ஒன்று புரியும். ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை இப்படியான Slowdown வருகிறது. ‘கப்பல் கவிழ்ந்துவிடும்’ போன்றதான மாயை உருவாக்கிவிட்டு அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் ‘பிக் அப்’ ஆகிவிடும். கடந்த ஆண்டிலில் உருவான Slow downம் இத்தகைய தற்காலிகமான ஒன்றுதான். அதனால் ஐடி டல்லடிக்கிறது என்ற பயத்தை முழுமையாக நம்ப வேண்டியதில்லை.

அப்படியானால் மெக்கானிக்கல் துறையை நாட வேண்டியதில்லையா?

ச்சே.ச்சே. அப்படியெல்லாம் இல்லை. விருப்பம் இருந்தால் தைரியமாக அந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் எல்லோரும் அதனுள் விழுகிறார்கள் என்று குருட்டுவாக்கில் அதில் விழ வேண்டாம். இப்பொழுது கல்லூரியில் சேர்பவர்கள் படித்து முடிக்க இன்னும் நான்காண்டுகள் இருக்கின்றன. அதற்குள் ஐடி ‘பிக் அப்’ ஆகியிருக்கும். அப்பொழுது பாருங்கள். இந்த வருடம் மெக்கானிக்கல் துறையைத் தேர்ந்தெடுத்தவர்களில் முக்கால்வாசிப்பேர் ஐடியில்தான் வேலைக்குச் சேர்வார்கள். அதனால் ஐடியோ/கம்ப்யூட்டர் சயின்ஸோ படிப்பதாக விருப்பமிருந்தால் தயக்கமில்லாமல் தேர்ந்தெடுங்கள்.

இந்த ‘மெக்கானிக்கல் அலையை’ எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்?

எல்லோரும் மெக்கானிக்கலுக்கு போகிறார்கள் என்று பயப்படாமல் வேறு பாடத்தை தேர்ந்தெடுக்க நினைப்பவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்.  உதாரணமாக ஒரு மாணவரின் கட்-ஆஃப் 185 வைத்துக் கொள்வோம். மெக்கானிக்கல் அலையின் காரணமாக அவருக்கு நல்ல கல்லூரியில் அந்தப்பாடம் கிடைக்க வாய்ப்பில்லை. ‘மெக்கானிக்கல்தான் வேண்டும்’ என்று அவர் நினைத்தால் ஏதேனும் சுமாரான கல்லூரியில்தான் சேர வேண்டும். அதுவே மற்ற பாடங்களுக்கு போட்டி குறைவு என்பதால் அவை நல்ல கல்லூரிகளில் சீண்டப்படாமல் கிடப்பதற்கு வாய்ப்பு என்பதால் அதை பொறுக்கி எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமான காரியம்.

May 23, 2013

ஒரு கவுண்ட பையனும் வண்ணா பொண்ணும்

ஒரு வாட்டசாட்டமான கவுண்டர் பையன். அசத்தலான உயரம். அட்டகாசமான அழகு. 

‘ஒரு பையன்னு சொன்னால் போதாதா? கவுண்டர் பையன்னு சாதியைச் சேர்க்கணுமா?’என்று யாராவது கேட்கக் கூடும். ஆனால் ‘கவுண்டர் பையன்’ என்ற விவரம் இந்த இடத்தில் முக்கியம். அந்தப் பையனுக்கு ஒரு வெளியூர் சோலி வந்துவிடுகிறது. கரூரோ காங்கேயமோ-ஊர்ப்பெயர் சரியாகத் தெரியவில்லை. சோலியை முடித்துவருவதற்காக செல்கிறான். தனியாகத்தான் செல்கிறான். 

ஆங்! சொல்ல மறந்துவிட்டேன். இது இன்றோ நேற்றோ நடந்த சம்பவம் இல்லை. பல நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்தக் காலத்தில் வெளியூர் பயணங்களுக்கு குதிரை வண்டிப் பயணம்தான் என்பதால் ஒரு சவாரிக் குதிரையில் போகிறான். போகிற வழியில் குதிரையும் களைத்துப் போகிறது, பையனும் களைத்துப் போகிறான். சற்று ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தபடி தோதான இடத்தை தேடுகிறான். வண்ணாந்துறை ஒன்று கண்ணில்படுகிறது. குதிரையை ஒரு மரத்தில் கட்டிவிட்டு அவனும் அங்கேயே படுத்துக் கொள்கிறான். சற்று தூரத்தில் வண்ணார்கள் துணி வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பையன் களைப்பாக இருக்கிறான். படுத்துக் கொண்டும் இருக்கிறான். ஆனால் தூங்கலாம் என்று நினைத்தால் கண்ணை மூட முடியவில்லை. காரணம் ஒரு யுவதி. வண்ணார் கூட்டத்திலேயே அவள் மட்டும் தனித்து தெரிகிறாள். அவள் இடுப்பும், எடுப்பும் அவனை புரட்டிப் போடுகிறது. அவளும் துறுதுறுவென மழைத்தும்பி கணக்காக அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக ஓடிக் கொண்டிருக்கிறாள். இப்படி ஒரு அந்துசான அழகியை அவன் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என்பதால் தனது மொத்தக் கட்டுப்பாட்டையும் இழந்தவனாக அத்தனை உற்சாகம் அடைகிறான். அவளும் இவனை கவனித்துவிடுகிறாள். கண்ணும் கண்ணும் மோதிக் கொள்ள அவளுக்கு வெட்கமென்றால் வெட்கம், அத்தனை வெட்கம்.

என்ன இருந்தாலும் கவுண்டர் பையனை கட்டிக் கொள்ள வண்ணாத்தி பெண்ணை அனுமதிக்கமாட்டார்கள் அல்லவா? அவள் பயந்து அமைதியாகிவிடுகிறாள். அவள் அமைதியானாலும் இவன் விடுவதாக இல்லை. நூல் விடுகிறான். ஆரம்பத்தில் அவள் ஓடி ஓடி போகிறாள். ஆனால் விடுவானா? வெளியூர் வந்த சோலியை மறந்துவிட்டு இவளை ‘தேத்தும்’ சோலியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான். வண்ணார்களுக்கு அரசல்புரசலாக சந்தேகம் வருகிறது. ஆனால் கவுண்டரை கேள்வி கேட்க முடியாதல்லவா? அதனால் ஒன்றும் தெரியாதது போல இருந்துவிடுகிறார்கள்.

இவனுக்கு இன்னமும் தைரியம் வந்துவிடுகிறது. அவளோடு சாடை மாடையாக பேசுகிறான். அவள் ஒதுங்கிப் போனாலும் விடாமல் அருகில் போய் பேசத் துவங்குகிறான். அவளுக்கும் வயசும் வாலிபமும் இருக்கிறதே! எத்தனை நாளைக்குத்தான் கட்டுப்படுத்த முடியும்? எறும்பு ஊர ஊர பாறையும் தேயும் என்பது போல வழிக்கு வருகிறாள். அதன் பிறகு இருவரும் ஒளிந்து ஒளிந்து காதலை வளர்க்கிறார்கள். ஆற்றங்கரை, மொட்டைப் பாறை, கானகம் என்று வளர்ந்த அந்தக் காலத்துக் காதல் அது. நிலா, மரம், கிளி என அத்தனையும் ரொமாண்டி ஐட்டங்களாக மாறிப் போன காதல். எத்தனை நாளைக்குத்தான் ஒளிந்து கொண்டே  காதலிப்பது என யோசித்தவன் அவளைக் கூட்டிக் கொண்டு எங்காவது ஓடிவிடலாம் என நினைக்கிறான். அவளுக்கு பயம்தான். ஆனால் இவனை விட்டுவிட மனசில்லை. “நீங்க என்ன செஞ்சாலும் சரிதேன்” என்று சொல்லிவிடுகிறாள்.

காதல் பொங்கிய ஒரு நல்ல நாளாக பார்த்து இரண்டு பேரும் குதிரை ஏறிவிடுகிறார்கள். விதி வேறு மாதிரி இருக்கிறது. ஊரைத் தாண்டும் போது காவல்காரன் பார்த்துவிடுகிறான். விடுவார்களா? ஊரே மொத்தமாகச் சேர்ந்து துரத்துகிறது. சரியான ஓட்டம். பெண்கள் எல்லாம் ஓய்ந்து போக ஆண்கள் மட்டுமே துரத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் “இரண்டு பேரையும் கொன்று விடுவது”. வெகுதூரம் ஓடிய பிறகு காதலர்களின் குதிரை களைத்துப் போகிறது. இனிமேல் குதிரையை நம்பி பிரையோஜனம் இல்லை என நினைத்தவர்கள் குறுக்கே வரும் பவானி ஆற்றுக்குள் குதித்துவிடுகிறார்கள். அந்தக் காலத்தில் பவானி ஆறு முரட்டுத்தனமாக ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்கு நீச்சல் தெரியும். தாண்டிவிடுகிறான். அவளுக்கும் அது ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை. ஆற்றோரம் பிறந்து, நீரோடு வளர்ந்தவள் என்பதால் எந்தச் சிரமமும் இல்லாமல் ஆற்றைத் தாண்டி வட பக்கக் கரையை அடைந்துவிடுகிறார்கள்.

கரைக்கு அந்தப்பக்கம் வெறும் காடாக இருக்கிறது. வேட்டுவக் கவுண்டர்கள் நிறைந்த காடு. அவர்களுக்கு வேட்டைதான் தொழிலே. “நாங்க அப்டி அப்டி பேசுனோம்ங்க...அது இப்டி இப்டி ஆகிப்போச்சுங்க...அவியெல்லாம் எங்களை கொல்றதுக்குத்தான் வாராங்க” என்று வேட்டுவர்களிடம் தஞ்சம் அடைந்துவிடுகிறார்கள். துரத்திக் கொண்டு வருபவர்கள் கரையைக் கடந்து வருவதற்குள் அவர்களின் திருமணத்தை முடித்து வைத்துவிடுவதாக உறுதியளித்த வேட்டுவர்கள் தங்களின் வில்லில் இருக்கும் நரம்பை அறுத்து தாலியாகக் கட்டச் சொல்லிவிடுகிறார்கள். துரத்தியவர்கள் ஆற்றைக் கடந்து வடகரையை அடைவதற்கும், இவர்களின் திருமணம் முடிவதற்கும் சரியாக இருக்கிறது. சினிமாவின் க்ளைமேக்ஸ் மாதிரி பெரிய பிரச்சினை எதுவும் இல்லாமல் திரும்பிப் போகிறார்கள்.

இனி என்ன ஆகும்? அதுதான் வரலாறு. இப்படி நரம்பை அறுத்து தாலியாகக் கட்டிக் கொண்டதால் இவர்களுக்கு ‘நரம்புகட்டி கவுண்டர்கள்’ என்று பெயர். இதெல்லாம் பவானி ஆற்றின் வடகரையில்  நடந்ததால் வடகரைக் கவுண்டர்கள் என்ற பெயரும் உண்டு. நரம்புகட்டி கவுண்டர்கள் அந்தியூர்-கோபிச் செட்டிபாளையம் பகுதியைத் தவிர வேறு எங்குமே இல்லை. அதுவும் கூட மொத்தமாக இருபத்தைந்து ஊர்களில்தான் இருப்பார்கள். மொத்த மக்கட்தொகையும் பத்தாயிரத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். 

இந்தக் கதை எதிலாவது எழுத்துப் பூர்வமாக இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு தாத்தா சொன்ன ‘செவிவழி’க் கதையில் கொஞ்சம் உப்பு மிளகு தூவி இங்கு சொல்லிவிட்டேன். 

ஆனால் வேறு யாராவது இன்னொரு காரணத்தை எழுதி வைத்திருப்பார்கள் அல்லவா? ஆமா எழுதி வைத்திருக்கிறார்கள். கையில் கிடைத்த ஒரு புத்தகத்தில் வேறொரு கதை இருந்தது.அதில் “தாம் வேட்டையாடிக் கொன்ற புலியின் நரம்பை உருவியெடுத்து அதில் புலியின் பல், நகம் போன்றவற்றை கழுத்தில் கட்டிக் கொண்டதால் நரம்புகட்டி கவுண்டர் என்ற பெயர் வந்ததது” என்று எழுதியிருந்தார்கள். 

இப்பொழுது எந்தக் கதையை நம்புவது?

May 22, 2013

மணியா வரலாறு தெரிஞ்சுக்கோணும்.


சிம்பு இமயமலை போகிறாராம். போனால் போகட்டும். ஆனால் ‘ஞானம் தேடிப் போகிறேன்’ என்று பீலா விடுவதுதான் டூ மச்சாகத் தெரிகிறது. இமயமலை போகிறவர்களுக்கெல்லாம் ஞானம் வருவதாக இருந்தால் சோனியா, மன்மோகனில் ஆரம்பித்து நத்தம் விஸ்வநாதன் வரைக்கும் அத்தனை பேரையும் குண்டு கட்டாக அமுக்கி இமயமலைக்கு தூக்கிச் சென்று திரும்பக் கொண்டு வந்து விட்டுவிடலாம். நம்மை ஆள்பவர்கள் ஞானமணிகளாகத் திரிந்தால் நமக்கும் நல்லதுதானே?

இமயமலை சென்று வருபவரெல்லாம் ஞானகுருக்கள் என்று சொல்லி ஏன் பில்ட்-அப் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்தக்காலத்தில் இமயமலை சென்றார்கள் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் ஒரு வசதியும் கிடையாது. இமயமலை செல்வதென முடிவு செய்தால் தனது குடும்பம், சொத்து, சுகவாழ்க்கை என அத்தனையும் துறக்க வேண்டியிருக்கும். மாதக்கணக்கில் பயணம் செய்தாலும் கூட நிச்சயம் மலையை அடைந்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. நடுவழியில் விலங்குகளிடம் சிக்கியோ, வெள்ளத்தில் மூழ்கியோ, நோய்வாய்ப்பட்டோ மொத்தமாக ‘மலையேறி’ விட வாய்ப்புகள் நிறைய உண்டு. அத்தனையும் மீறி இமயமலையை அடைந்தாலும் கூட திரும்ப வருவது சாத்தியமில்லை. ‘போனால் போனதுதான்’. அப்படியான பயணமாக இருந்தால் ‘ஞானம்’ வர வாய்ப்பு இருக்கிறது. 

அந்தக் காலத்தில் கைலாஷ் மலையை நோக்கி பயணித்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அப்பர் தனது கை,கால்கள்,மார்பெல்லாம் தேய்ந்து நகரக் கூட முடியாமல் கிடந்தாராம். சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரப்பெருமான் நாயனாரும் கூட இமயமலைக்குச் சென்றதாக சேக்கிழார் எழுதி வைத்திருக்கிறார். அந்தப் பஞ்சாயத்துக்கு பிறகு வரலாம். 

இப்பொழுதெல்லாம் சென்னையில் இருந்து ‘ப்ளைட்’ பிடித்து காத்மண்டுவில் இறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்று சிவபெருமானுக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு விரும்பினால், அடுத்த நாளே சென்னைக்கு திரும்பி முந்தின நாள் தூங்கின அதே மெத்தையில் கூட தூங்கலாம். ‘லீவ்’ நிறைய இருந்தால் பத்து பதினைந்து நாள் அங்கேயே நல்ல லாட்ஜில் தங்கிவிட்டும் வரலாம். 

திரும்பி வந்து ‘ஞானம் பொங்கி காது வழியாக வழிகிறது’ என பால் வடியும் முகத்தை வைத்துக் கொண்டு பேட்டியும் கொடுக்கலாம். ஆகட்டும்!

சேரப்பெருமான் நாயனார் இருக்கிறார் பாருங்கள். பிழைக்கத் தெரியாத மனுஷன். ஏகப்பட்ட ஃபிகர்களால் நிரம்பிய மலையாள- சேர நாட்டுக்கு மன்னனாக இருந்திருக்கிறார். ஆனாலும் திருமணமே செய்து கொள்ளவில்லை. இந்தக்காலத்து டவுன் பஞ்சாயத்து கவுன்சிலரே கூட வீதிக்கு ஒரு வீடும் அதில் ஒரு செட்டப்பும் வைத்திருக்க அந்தக் காலத்தில் அவர் மன்னனாக இருந்து என்ன பிரயோஜனம்? சரி போகட்டும்.

இவருக்கும் இன்னொரு நாயன்மாரான சுந்தரமூர்த்திக்கும் ப்ரெண்ட்ஷிப்ன்னா ப்ரெண்ட்ஷிப் அப்படியொரு திக் ப்ரெண்ட்ஷிப். ‘இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை’ என்று சொல்லிவிட்டு அடுத்த வரியிலேயே இன்னொரு ஆணுடன் பயங்கரமான நட்பு என்று சொல்வதால் ‘அப்படி இப்படி’யான நட்பாக இருக்குமோ என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. நல்ல நட்புதான். சு.மூ நாயனார் தமிழ்நாட்டுப் பக்கம். சேர மன்னனோ மலையாளக்கரையோரம். அதனால் சு.மூ தனது நண்பரைப் பார்ப்பதற்காக இரண்டு மூன்று முறை கேரளாவுக்கு சென்றிருக்கிறார். போவது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறையும் ஏகப்பட்ட தங்கம், வெள்ளியென்று நண்பரிடமிருந்து வாங்கி வருவாராம். அப்படி போகும் போதும் வரும் போதும் சில பல கோயில்களுக்குச் சென்று அந்தக் கோயில்களைப் பற்றி எல்லாம் எழுதி வைத்திருக்கிறார். அப்படி எழுதி வைத்துதான் அவிநாசி, திருமுருகன் பூண்டி போன்ற கோயில்கள் பற்றிய வரலாறுகள்.

ஓகே மேட்டருக்கு வருவோம். சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தின்படி சுந்தரர் வெள்ளை யானையில் பயணித்து கைலாய மலையை அடைகிறார். அவரது நண்பர் சேரப்பெருமான் நாயனார்  குதிரையில் ஏறி கைலாயத்தை அடைகிறார். நாட்டை அம்போவென விட்டுவிட முடியாதல்லவா? அதனால் கொங்கு நாட்டின் பூந்துறை நாட்டிலிருந்து இரண்டு பேரை அழைத்து வந்து ஒருவனை கள்ளிக்கோட்டைக்கும் இன்னொருவனை கொச்சிக்கும் மன்னனாக நியமித்துவிட்டு போகிறார். கைலாயம் சென்றால் என்ன ஆகுமோ அதுதான் நடந்தது. அதோடு அவர்களின் கதை முடிந்துவிடுகிறது. நொடித்தான் மலையில் இரண்டு பேரும் சிவகணங்களாக இடம்பெறுகிறார்கள்.

இந்த வரலாறு உண்மையா என்று கேட்க தோன்றுகிறது அல்லவா? இரண்டு நாயன்மார்ளும் வாழ்ந்ததெல்லாம் உண்மைதான். ஆனால் குதிரையிலும், யானையிலும் கைலாயம் சென்றார்கள், அங்கு சேரப்பெருமானைப் பார்த்த சிவபெருமான் ‘அழையாமல் ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்டார் போன்ற பூ சுற்றும்  கடைசி அத்தியாயம்தான் சந்தேகமானதாக இருக்கிறது. 

கேரளத்தில் வழங்கப்படும் கதைகளில் சேரப்பெருமான் இஸ்லாத்தை தழுவி கடல்வழியாக அரபு நாடுகளுக்குச் சென்றுவிட்டார் என்று சொல்கிறார்களாம். சேரப்பெருமான் இஸ்லாம் மதத்தை தழுவுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கிறது. நபிகள் நாயகம் கி.பி.633லியே பிறந்துவிட்டார். சுந்தரமூர்த்தி/சேரப்பெருமானின் காலம் கி.பி.800 க்கு பிறகுதான். இருநூறு வருடங்களில் இஸ்லாம் கேரளத்தில் பரவியிருக்க நிறைய சாத்தியங்கள் உண்டு. தஞ்சைப் பெரிய கோயில் ஓவியங்களிலும் கூட சேரப்பெருமானின் கடல்வழி பயணம்தான் ஓவியமாக இருக்கிறது. பெரிய புராணம் எழுதப்படுவதற்கு முன்பே தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டுவிட்டதால் பெரிய புராணத்தை விடவும் இந்த விஷயத்தில் அந்த ஓவியத்தை நம்பலாம். அப்படியானால் சேரப்பெருமான் கடல்வழி பயணம்தான் மேற்கொண்டிருக்கிறார். கேரளத்திலிருந்து இமயமலை போவதற்கு எதற்கு கடல்வழியில் பயணிக்க வேண்டும்? ஆக அவர் இமயமலை போகவில்லை. அப்படித்தானே?

ஒருவேளை சேரப்பெருமான் இந்துமதத்தை பரப்புவதற்காக அரபு நாடுகளுக்குச் சென்று தோல்வியுற்றிருக்கலாம் அல்லது இஸ்லாமிய மதத்தின் மீது ஆர்வம் கொண்டும் சென்றிருக்கலாம்.

எப்படியிருந்தாலும் ஏதோவொரு இடத்தில் வரலாறு மாற்றப்பட்டிருக்கிறது. 

எது உண்மை? சிவபெருமானுக்கும், நபிகள் நாயகத்துக்கும்தான் வெளிச்சம்.

May 21, 2013

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்


‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’- இந்தப் பழமொழி இப்பவும் அப்படியேதான் இருக்கிறதா?. சந்தேகமாகத்தான் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் நாளைக்கு சாவதாக இருந்தால் நேற்றைக்கே பால் ஊற்றிவிடுகிறார்கள்.

சென்ற வாரத்தில் உறவினரின் குடும்பத்தில் நிகழ்ந்த விபத்திற்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தோம். விபத்தில் இறந்தவர் இருபது வருடங்களுக்கு முன்பாகவே காதல் திருமணம் செய்து கொண்டவர். எண்பதுகளின் இறுதியில் அரும்பிய அழகான காதல் அது. பாவாடை தாவணியில், டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்டுக்கு வந்த பெண்ணிடம் தயங்கித் தயங்கி காதலைச் சொல்லி, பெரும் போராட்டத்திற்கு பிறகு அவளின் சம்மதத்தை பெற்று, வழக்கமான குடும்ப எதிர்ப்புகளை சந்தித்து இறுதியில் வெற்றி பெற்ற காதல். காதல் திருமணத்திற்கு பிறகு வழக்கமான அம்மாக்களைப் போல இவரின் அம்மாவுக்கும் மருமகளை பிடிக்கவில்லை. ஏதேதோ பிரச்சினைகள். கொஞ்ச நாட்களுக்கு பிறகாக அவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். இதே காரணத்திற்காகவோ என்னவோ அவரது அக்கா குடும்பத்துடனும் தகராறுதான். கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருடங்களாக அம்மா, அக்காவுடன் பேச்சு வார்த்தை இல்லை. போக்குவரத்தும் இல்லை.

அதனால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. கணவரின் அத்தனை சிரமங்களுக்கும் மனைவியும் தோள் கொடுக்க தம் பிடித்து மேலே வந்துவிட்டார்கள். பிஸினஸில் கொடிகட்டியிருக்கிறார்கள். சொத்துக்களும் பெருகியிருக்கிறது. ஒரே மகள் என்பதனால் தாங்கித் தாங்கி வளர்த்திருக்கிறார்கள். அவளுக்கு பதினெட்டு வயதில் குடல் சம்பந்தமான பிரச்சினை. சில நாட்களுக்கு முன்பாகத்தான் அதற்காக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். மீண்டும் மருத்துவரைப் பார்ப்பதற்குத்தான் சென்றவாரம் கோயமுத்தூர் கிளம்பியிருக்கிறார்கள். அப்பொழுதுதான் விபத்து நிகழ்ந்திருக்கிறது. அவரும், அவரது மகளும், மனைவியின் அக்காவும் அதே இடத்தில் இறந்து போனார்கள். சரியாகச் சொன்னால் மனைவியின் அக்கா அதே இடத்தில் இறந்து போகவில்லை. பரிதாபமாகத்தான் இறந்திருக்கிறார். இரண்டு கண்களையும் தகரம் கிழித்துவிட பார்வையில்லாமல் கிடந்திருக்கிறார். ‘புள்ளைகளைக் காப்பாத்துங்க’ என்று அடுத்த ஒரு மணி நேரத்திற்கு கதறிக் கொண்டே இருந்திருக்கிறார். மற்றவர்கள் யார் சொன்ன ஆறுதலும் அவரது காதில் விழவில்லை போலிருக்கிறது. கதறிக் கொண்டே இருந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது இறந்து போயிருக்கிறார். 

அக்காவின் மகளும், இறந்தவரின் மனைவியும் மட்டும்தான் விபத்தில் தப்பித்தவர்கள். அக்காவின் மகளுக்கு கால்கள் இரண்டும் முறிந்ததோடு பெரிய பிரச்சினையில்ல- உயிருக்கும் ஆபத்தில்லை. ஆனால் இறந்தவரின் மனைவிக்கு நெஞ்சு எலும்பு உடைந்து நுரையீரலை கிழித்ததோடு இல்லாமல், பின் மண்டையில் அடிபட்டு கோமா நிலைக்கு போய்விட்டார். இரண்டு பேரையும் கோவையில் ஒரு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு இறந்து போனவர்களுக்கு இறுதிக் காரியங்களை ஆற்ற ஊருக்கு எடுத்து வந்திருக்கிறார்கள்.

ஊரே திரண்டு கதறியிருக்கிறது. பதினைந்து வருடங்களுக்கு பிறகாக இறந்தவரின் அக்கா மகனும் ‘பெரிய காரியத்திற்கு’ வந்திருக்கிறான். ‘எனது மாமாவுக்கு நான் தான் கொள்ளி வைக்க வேண்டும்’ என பிடிவாதம் பிடிக்க யாரும் பெரிதாக மறுப்புத் தெரிவிக்கவில்லை. மூன்று சவங்களையும் ஒரே கட்டையில் போட்டு எரியூட்டியிருக்கிறார்கள். 

அடுத்த ஒரு வாரத்திற்கு அந்த ஏரியாவில் யாராவது இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால் இதைப்பற்றித்தான் முதலில் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் இது இன்னுமொரு விபத்து. ஆனால் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு மூன்று உயிர்களைக் காவு வாங்கிய பெரிய கோரம். தங்கள் கண் முன்னால் வளர்ந்தவர்கள், தங்களோடு நடமாடியவர்கள் ரத்தமும் சதையுமாக வீடு சேர்ந்தததையும், தீயின் நாவுகளுக்குள் கருகிப் போனதையும் அத்தனை சீக்கிரமாக ஜீரணிக்க முடியவில்லை. இதை அந்த ஊரில் இருந்த சில மணி நேரங்களுக்கு உணர முடிந்தது. இருபது வருடங்களுக்கு முன்பாக இத்தனை வாகனங்கள் இல்லை, இத்தனை விபத்துக்கள் இல்லை, இத்தனை சாவுகள் இல்லை, கேட்டுக் கேட்டு பழக்கமாகிப் போன 108ன் சப்தம் இல்லை. ஏதாவதொரு ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலும் கூட நடுங்கியவர்கள் அதிகம் - இப்படியெல்லாம் ஏதாவது ஒரு வாக்கியத்தை யாரிடமிருந்தாவது கேட்க முடிந்தது.

ஒரு பேரதிர்ச்சிக்கு பிறகு சிறு அமைதி நிலவும் அல்லவா? நிசப்தம். அந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு இன்னொரு அதிர்ச்சி வந்து விழுந்திருக்கிறது. இறந்தவரின் அக்கா மகன் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான். இறந்து போனவரின் குடும்பச் சொத்துக்கள் முழுவதற்கும் அவன் தான் வாரிசு என்று அது சொல்லியிருக்கிறது. இவர்கள் இறந்து மூன்று நாட்கள் ஆகாத நிலையிலும் கூட எந்தவிதமான தயக்கமும் வெட்கமும் இல்லாமல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான். இதில் முக்கியமான விஷயம் இறந்தவரின் மனைவி கோமாவில்தான் இருக்கிறாரே தவிர உயிரோடுதான் இருக்கிறார். ஆனால் அதற்குள்ளாக சொத்துக்கான அடிதடியை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

இந்தக் குடும்பம் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கிய போதும், கை ஊன்றி கர்ணமடித்து மேலே வந்த போதும் எந்தவிதமான ஆதரவையும் கொடுக்காத குடும்பம், இப்பொழுது சொத்துக்கான உரிமையைக் கோரியிருக்கிறது. அதுவும் இறந்தவரின் மனைவி உயிருடன் இருக்கும் போதே. நோட்டீஸ் விவகாரத்தைக் கேள்விப்பட்ட போது நாராசமாக இருந்தது. பாசம், அன்பு, மனிதாபிமானம் என சகலத்தையும் மறந்து போன ஒரு சமூகத்தோடுதான் நாம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறோம்; பணத்திற்காக எதைச் செய்யவும் தயாரான குடும்பங்கள் நம்முள் ஊடுருவிக் கிடக்கின்றன என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் என்றாலும் நேரில் பார்ப்பதற்கு மிகுந்த அருவெருப்பாக இருந்தது.

ஊருக்கு திரும்பி வரும்போது இதையேதான் பேசிக் கொண்டிருந்தோம். கோமாவில் கிடப்பவர் மீண்டு வரும் அவருக்கான ஆதரவு என்று யாருமே இல்லை என்பதைவிடவும் இவர்களோடு அவர் போராட வேண்டியிருக்கும் என்பது பெரிய சவாலாகத் தெரிந்தது. அம்மாவுக்கு தன்னையும் மீறி அழுகை வந்தது. அவள் பாவப்பட்ட ஜென்மம் என்று சொல்லியபடி கலங்கினார். நாங்கள் பேச்சை மாற்ற முயன்று கொண்டிருந்தாலும் நினைப்பு அவரிடம்தான் இருந்தது. 

மாலை ஆறு மணியளவில் ஓசூரை அடைந்திருந்தோம். ஃபோன் வந்தது. ‘பத்திரமாக ஊர் சேர்ந்தாகிவிட்டதா’ என்பதை விசாரிக்கும் வழக்கமான அழைப்பாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அதற்கான அழைப்பு இல்லை. கோமாவில் இருந்தவர் இறந்துவிட்டாராம். கேட்பதற்கு வருத்தமாகத்தான் இருந்தது. அழுதுவிடலாமா என்று கூட தோன்றியது. ஆனால் இப்பொழுது அவருக்காக அழுவதைவிடவும் இந்த உலகத்தில் இருந்து அமைதியாக பெற்றுக் கொண்ட விடுதலைக்காக ஆறுதல் அடைவதுதான் சரி என்பதாகப் பட்டது.

May 20, 2013

செத்தாண்டா ஸ்ரீசாந்த்


ஸ்ரீசாந்த் வசமாக சிக்கிக் கொண்டார் போலிருக்கிறது.  சூதாட்டம் பற்றிய மற்ற அத்தனை செய்திகளையும் விட அவரது லீலைகள் சார்ந்த குஜால் செய்திகள் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. ‘ஸ்ரீசாந்த்தின் லேப்டாப்பில் மாடல்களின் நிர்வாணப்படங்கள் சிக்கின’, ‘அழகிகளுடன் விடிய விடிய கூத்தடித்தார்’, ‘கிரிக்கெட்டரின் டைரிகளில் கிடைத்த கிளு கிளு விவரங்கள்’ என்று பாம்புகளையும், தேள்களையும் ஒவ்வொன்றாக வெளியே விடுகிறார்கள்.

மீடியாவுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம். ‘மோசடி செய்துவிட்டான்’ என்று அழுவது போல நடித்தவாறே இந்தச் செய்திகளைக் கொண்டாடுகிறார்கள். ஆங்கில சேனல்களின் பாதி நேரத்தை இந்தச் செய்திகள்தான் தின்று ஏப்பம் விடுகின்றன. பத்திரிக்கைகளுக்கு பல பக்கங்கள் சர்வசாதாரணமாக நிரம்புகின்றன.

ஸ்ரீசாந்தின் அந்தரங்கத்தை பெருமளவில் முன்னிலைப்படுத்தும் இந்தத் தகவல்களுக்கு பின்னால் என்ன நோக்கம் என்று இருக்கக் கூடும் என்பதை கோக்குமாக்காக புரிந்து கொள்ள முடிகிறது. முதலாவதான நோக்கம்,  செலிபிரிட்டிகள் பற்றிய கிளுகிளு செய்திகளுக்கு இருக்கும் நல்ல ‘மார்க்கெட்டை’ திறம்பட பயன்படுத்திக் கொள்வது. இன்னொரு நோக்கம், கிரிக்கெட்டின் சில்லரைத் தனங்களில் ஈடுபட்டிருக்கும் பெருந்தலைகளைக் காப்பாற்றுவதற்கான 'diverting agent'.

நம் நாட்டில் இப்படி ஒரு கலாச்சாரம் உண்டு- மனிதர்களைக் காப்பாற்ற ஆடுகளையும், கோழிகளையும் காவு கொடுத்துவிடுவார்கள். ‘அய்யாவுக்கு ஆயுசுல கண்டம் இருக்கு. ஒரு சேவலை அறுத்து போட்டுடுங்க’ என்ற கான்செப்ட்தான். ஆ.ராசாவை உள்ளே தள்ளி மற்ற அத்தனை பேரையும் காப்பாற்றியது போல, மூன்று பேருக்கு தூக்கு தண்டனையை கொடுத்துவிட்டு கேப்மாரி அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் தப்பிக்கவிட்டுவிட்டது போல, ஹர்ஷத் மேத்தாவோடு சேர்த்து ஷேர் மார்கெட் ஊழல் மூழ்கடிக்கப்பட்டது போல, குவ்த்ரோச்சி ‘நல்லவர்’ என்று அறிவித்ததோடு ஃபோபர்ஸ் வழக்கு முடிவுக்கு வந்தது போல...இப்படியே போல போல என்று சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு புத்தகமே எழுதிவிடலாம்.

இப்பொழுது ஸ்ரீசாந்த்தை அமுக்கிவிட்டார்கள். அதனால் மற்ற அத்தனை யோக்கியசிகாமணிகளும் பெருமூச்சு விடுவார்கள். இனி ஸ்ரீசாந்தின் கழுத்தை கருணையில்லாமல் அறுத்துவிட்டு மற்றவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். ஸ்ரீசாந்த் செய்தது குற்றமா இல்லையா என்பது இருக்கட்டும். உண்மையில் ஸ்ரீசாந்த் மட்டும்தான் குற்றவாளியா?

கிரிக்கெட்டை வணிகமாக்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் ஆரம்பித்து, ஐபிஎல் என்ற ஆபாசத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சுரண்டிப் பெருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், ‘கிரிக்கெட் எங்களின் மதம்’ என்று பில்ட் அப் கொடுத்த மீடியா, ஐபிஎல் அணியின் ஓனர்கள், அவர்களுக்கு விளம்பரங்களின் மூலம் கொட்டிக் கொடுத்த விளம்பரதாரர்கள் என அத்தனை பேரை நோக்கியும் கை நீட்ட வேண்டும்.

அரசியலில் ‘கிங்மேக்கர்’ என்ப்படும் லாலுபிரசாத் யாதவ், ஆயிரக்கணக்கான கோடிகள் புரளும் வணிகத்தின் அதிபரும் மத்திய அமைச்சருமான சரத்பவார் போன்றவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு  அவர்களது ‘கிரிக்கெட் பிரியம்’ மட்டும்தான் காரணமாக இருக்கும் என்று நம்மால் நம்ப முடியுமா? ஐபிஎல் மூலம் கோடிகளை வாரிச்சுருட்டிய லலித் மோடி இப்பொழுது வாழும் லண்டன் ராஜவாழ்க்கையைப் பற்றி ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை?

எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் பின்னால் பல கோடிகள் புரள்கிறது. கிரிக்கெட் என்பது இங்கு விளையாட்டு மட்டும் இல்லை. அது பொழுது போக்காக, வணிகமாக, சூதாட்டமாக, கவர்ச்சியாக என அத்தனையுமாக இருக்கிறது. ஒரு சாதாரண அரசு அதிகாரியைக் கவர்வதற்காகக் கூட பணம், பெண், போதை என சகலத்தையும் வாரிக் கொடுக்கும் புரோக்கர்களும், வணிகர்களும் மலிந்த இந்த தேசத்தில் கோடிக்கணக்கில் பணம் புரளும் கிரிக்கெட் வீரர்களை கவர்ந்திழுக்க என்னவெல்லாம் செய்வார்கள்?

கிடைத்த வாய்ப்பில் ஸ்ரீசாந்த் சறுக்க, வலை கட்டி அமுக்கிவிட்டார்கள். மற்றவர்கள் எல்லாம்? அவர்கள் ஒன்றும் சொக்கத்தங்கம் இல்லை. அவர்களுக்கு நல்ல நேரம். தப்பித்துவிட்டார்கள். அவ்வளவுதான்.

‘கிரிக்கெட் கமர்ஷியலைசேஷன்’ வண்டவாளங்களைத் தோண்டியெடுத்தால் நிழல் உலக தாதாக்கள், வணிக முதலைகள், அரசியல் ஃப்ராடுகள், புரோக்கர்கள், விபச்சார ஏஜெண்ட்கள், விளையாட்டு வீரர்கள் என பெரும் கூட்டத்தையே பிடிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை அவர்களையெல்லாம் சிறைச்சாலைகளில் அடைப்பதாக இருந்தால் இந்தியாவின் பெரும்பாலான சிறைச்சாலைகளை அவர்களுக்காக காலி செய்ய வேண்டியிருக்கும். ஒருவேளை அவர்கள் கிரிக்கெட்டில் முறையற்று சம்பாதித்த வருமானத்தையெல்லாம் பறிமுதல் செய்வதாக இருந்தால் பல ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை ஒட்டுமொத்தமாக அடைத்துவிட முடியும். ஆனால் அதையெல்லாம் நம்மவர்கள் செய்யமாட்டார்கள் என உறுதியாக நம்பலாம்.

எல்லா வழக்குகளையும் போலவே இதுவும் ஒரு வழக்கு. தேசத்தின் கவனத்தை சற்று நேரத்திற்கு திசைமாற்றும் வழக்காகக் கூட இருக்கலாம். கொஞ்ச நாட்களுக்கு இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். இன்னொரு பரபரப்பான விவகாரம் வந்தால் ஊடகங்கள் இதை கைவிட்டுவிட்டு அதைப் பிடித்துக் கொள்ளும். நாமும் ஊடகங்களின் வாலைப் பிடித்துக் கொண்டு ஸ்ரீசாந்த்தை டீலிங்கில் விட்டுவிடுவோம்.

அப்படியானால் ஸ்ரீசாந்த் நல்லவனா என்றால், அப்படியெல்லாம் சொல்லவில்லை. இங்கு வாய்ப்பு கிடைக்காதவரைக்கும்தான் உத்தமன், பத்தினி எல்லாம். சிக்கிக் கொள்ளாதவரைக்கும்தான் யோக்கியன், நல்லவன் எல்லாம். ஒருவேளை சிக்கிக் கொண்டால் சிதைத்துவிடுவார்கள். இப்பொழுது இவன் சிக்கிக் கொண்டான். சிதைக்கிறோம். நாளைக்கு நானோ நீங்களோ சிக்கினாலும் கூட அதையேதான் செய்வார்கள்.

May 18, 2013

போலீஸ் ஸ்டேஷனும் அங்கு கிடைக்கும் மரியாதையும்


வாழ்க்கையில் ஒரு முறை சிறைச்சாலைக்கு சென்று பார்க்க வேண்டும் என ஆசை இருக்கிறது. அதுவும் சஞ்சய் தத் காட்டும் டகால்ட்டிகளை பார்த்தால் ஜெயில் என்பது பெரிய விஷயமே இல்லை போலிருக்கிறது. வீட்டுச் சாப்பாடு, மெல்லிய மெத்தை, தலையணை எல்லாம் கொடுத்துவிடுகிறார்கள். எப்படியும் நியூஸ்பேப்பரையும், சில சஞ்சிகைளையும் கொடுத்துவிடுவார்கள்.  இது போக சிறைச் சாலைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதி கேட்டிருக்கிறாராம். பிறகு என்ன தேவை? புதிதாக கல்யாணமானவராக இருந்தால் பெண்டாட்டி மட்டும்தான் பாக்கியாக இருக்கும். திருமணம் ஆகி பல வருடங்கள் ஓடிவிட்டதால் இதனை தாதாபாய் மிகச் சிறந்த விடுதலையாக பயன்படுத்திக்கொள்ளுவார் என நினைக்கிறேன்.

தமிழ்நாட்டிலும் புழல் சிறை ஏகப்பட்ட வசதிகளுடன் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டு போலீஸ்காரர்களை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. மற்றவர்களிடம் மரியாதையாக பேசும் போலீஸ்காரர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் படுகேவலமாக நடத்தும் போலீஸ்காரர்களை பார்த்திருக்கிறேன். ‘றேன்’ என்பதைவிட ‘றோம்’ பொருத்தமாக இருக்கும். கிட்டத்தட்ட அத்தனை பேருமே பார்த்திருப்போம்.

சில வருடங்களுக்கு முன்பாக அப்பாவுக்கு ஒரு விபத்து நிகழ்ந்தது. பணியிலிருந்து ரிடையர்ட் ஆன பிறகுதான் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டியே பழகினார். அதுவரைக்கும் சைக்கிள், டிவிஎஸ் 50, சுசூகி மேக்ஸ் 100 ஆர் மட்டும்தான். கார் ஓட்டிப் பழகிய பிறகு- அதை  ‘பழகிய பிறகு’ என்று சொல்ல முடியாது. குத்துமதிப்பாக ஓட்டத் தெரிந்த போது புத்தம் புது காரை எடுத்துக் கொண்டு பண்ணாரியில் கிடாவிருந்துக்கு போயிருக்கிறார். கூடவே அம்மாவும். போகும் போதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை. விருந்துக்கு போன இடத்தில் ‘அதுக்குள்ள ஓட்டி பழகிட்டீங்களா?’ என்று ஆளாளுக்கு உசுப்பேற்றியிருப்பார்கள் போலிருக்கிறது. வெற்றிலை பாக்கு சிவக்க வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

வீட்டிலிருந்து பண்ணாரிக்கு நாற்பது கிலோமீட்டர் இருக்கும். ஆக, போக வர எண்பது கிலோமீட்டர். திரும்பி வரும் போது மெயின்ரோட்டிலிருந்து வீட்டிற்கு பிரியும் சிறு சாலையில்தான் சனிபகவான் கட்டில் போட்டு படுத்திருக்கிறார். இன்னும் நூறு மீட்டர் தாண்டினால் வீடு வந்துவிடும் என்ற நினைப்பில் அப்பா வண்டியைத் திருப்ப, ஒரு பெண் இடது பக்கமாக வர அப்பா வலது பக்கமாக திருப்ப அந்தப் பெண் திடீரென்று வலது பக்கமாக நகர இப்படியே இட-வல-இட சடுகுடு விளையாடி டென்ஷனில் ப்ரேக்குக்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்து வேப்பமரத்தில் சாத்தித்தான் வண்டியை நிறுத்தியிருக்கிறார். பின்னால் ஸீட்டில் அமர்ந்திருந்த அம்மா ஒரு பல்டியடித்து முன்னாடி கண்ணாடியில் மோதி முன் மண்டை காயத்தோடு தப்பிவிட்டார். தினத்தந்திக்காரனுக்கு ‘அப்பளம் போல நொறுங்கிய கார்’ என்று நியூஸ் கொடுத்து உதவிய அப்பாவுக்குத்தான் கால் முறிந்துவிட்டது.

விபத்து பற்றி கேள்விப்பட்டு பெங்களூரிலிருந்து அவசர அவசரமாக பஸ் பிடித்து வந்த போது அப்பாவை தனியறையில் வைத்திருந்தார்கள். என்னை பார்த்ததும் அம்மா ‘ஓ’வென அழத் துவங்கினார். நிலைமை கட்டுப்பாட்டிற்குள்தான் இருந்தது. இந்த விபத்தினால் பிரச்சினைதான்; ஆனால் பயப்படும்படியான பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்றவுடன் அடிபட்ட காரை பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. மருத்துவமனையிலிருந்து விபத்து நடந்த இடத்திற்கு போன போது பக்கத்தில் இருந்த பாழடைந்த வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார்கள். ஒரு கீறல் கூட விழாத மினுமினுப்பான கார் இப்பொழுது தகர டப்பாவைப் போல கிடந்தது. 

‘புதுக்கார் என்பதால் எண்பது சதவீதம் இன்ஷூரன்ஸ் வாங்கிவிடலாம், எதற்கும் ஒரு எஃப்.ஐ.ஆர் வாங்கிவிடுங்கள்’ என்று சொன்னார்கள். உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பினேன். தனியாக போயிருக்கக் கூடாது. ஆனால் போய்விட்டேன். அதுவும் ஜீன்ஸ் பேண்ட்டும், டீ-சர்ட்டுமாக.

ஸ்டேஷனில் முரட்டுக்கிடாய்களாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு போலீஸ்காரரிடம் விவகாரத்தைச் சொன்னவுடன் ‘இரு...பார்க்கலாம்’ என்றார். அந்த ‘இரு...பார்க்கலாம்’மில் ஒரு தெனாவெட்டு இருந்தது பாருங்கள். வாழ்நாளில் அப்படியொரு இளக்காரத்தையும், தெனாவெட்டையும் பார்த்ததே இல்லை.

அவர் ‘இரு..பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டார் என்பதற்காக மணிக்கணக்காக ‘இரு’ந்தேன். ஆனால் அவர்தான் பார்க்கவில்லை. ஸ்டேஷனுக்குள் யாராவது வருவதும் போவதுமாக இருந்தார்கள். கரைவேட்டி கட்டியவர்களைத் தவிர மற்ற எல்லோருமே ஏதாவதொருவிதத்தில் பம்மிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் கரைவேட்டிக்காரர்களும் பம்மிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாதவாறு அவர்களுக்கு நடிக்கத் தெரிந்தது.

இனி யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. சில மணி நேரங்களுக்கு பிறகாக இன்னொரு போலீஸ்காரர் வந்தார். அவரிடமும் மொத்த கதையும் சொல்ல வேண்டியிருந்தது. அவரோ ‘எஸ்.ஐ வரட்டும்’ என்றார். அடுத்த சில மணிகளில் எஸ்.ஐ வந்தார். அவர் இன்ஸ்பெக்டர் வரட்டும் என்றார். இப்படியே அடுத்தது டி.எஸ்.பி, எஸ்.பி என்று நீண்டு டி.ஜி.பி வந்தால்தான் எஃப்.ஐ.ஆர் போடுவார்களோ என்று பிதுங்கிக் கொண்டிருந்தேன். 

நல்ல வேளையாக இன்ஸ்பெக்டர் வந்தவுடன் ஒரு போலீஸ்காரர் போய் அவரை பார்த்துவிட்டு வந்து ‘டெத் இல்லைன்னா எஃப்.ஐ.ஆர் எல்லாம் போட முடியாது. அது எங்களுக்கு பெரிய பிரச்சினை’என்றார். இதுக்காக யாரைக் கொல்வது என்று புரியாமல் ‘இன்ஷூரன்ஸ் வாங்க தேவைப்படுதே சார்’ என்ற போது,

‘அப்போ உங்க அப்பாவை அக்யூஸ்ட்ன்னு எழுதட்டுமா’ என்றார். இந்த எழவெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அப்பாவை குற்றவாளி என்று எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. 

‘வேறொண்ணு பண்ணலாம். இந்த இடத்தில் விபத்து நடந்துச்சுன்னு ஒரு ரெஸிப்ட் தர்றேன் அதை கொடுத்தா இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வாங்கிக்குவாங்க’ என்றார். 

‘சரி சார் எழுதிக் கொடுங்க’ என்றவுடன் மேலும் கீழும் பார்த்தார். அவர் ‘மேட்டர்’ எதிர்பார்க்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. 

இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என்று நினைத்து ‘விண்ணப்பம் எழுதி கொடுத்துட்டு போ. போய்ட்டு நாளைக்கு யாராவது பெரியவங்களோட வா’என்றார்.

இதைவிட என்னை வேறு மாதிரி ‘இன்சல்ட்’ செய்திருக்க முடியாது. காரணம், அப்பொழுது எனக்கு திருமணம் ஆகியிருந்தது. ‘பெரியவன்’ என்று நம்பி திருமணமே செய்துவிட்டார்கள் ஆனால் இன்னமும் இந்த போலீஸ்காரர் என்னை பொடியனாக நினைக்கிறார் என்பதுதான் பெரிய டார்ச்சராக இருந்தது. 

ஸ்டேஷனில் இருந்த சில மணி நேரங்களில் பார்த்த வரைக்கும் யாருக்குமே மரியாதை இல்லை. எல்லோரையும் ஏதாவதொரு விதத்தில் இளப்பமாக பார்க்கிறார்கள். இன்ஸ்பெக்டரிடம் மட்டும் ‘அய்யா அய்யா’ என்று கூழைக் கும்பிடு போட்டார்கள். மற்ற அத்தனை பேரும் அவர்களைப் பொறுத்தவரை ‘அக்யூஸ்ட்’தான் போலிருந்தது.

விண்ணப்பத்தை எழுதிக் கொண்டிருந்தேன். இன்ஸ்பெக்டர் வெளியே போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது இரண்டு போலீஸ்காரர்கள் நான்கைந்து பேரைக் கூட்டி வந்தார்கள். ஒரே குடும்பம் போலிருந்தது. ஒரு முதியவர், அவரது மனைவி, அவர்களின் மகன் மற்று மகள். ஒரு போலீஸ் பெண்மணியிடம் இன்ஸ்பெக்டர் கண்ணிலேயே ‘என்ன?’ என்பது போலக் கேட்டார். 

‘அந்த மூலவாய்க்கால் திருட்டு கேசுங்க அய்யா’ என்றார். ‘ம்ம்’ என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் வெளியேறிவிட்டார். 

நான்கு பேரையும் அமரச் சொல்லிவிட்டு அந்த போலீஸ்கார பெண்மணி அறைக்குள் சென்றுவிட்டார். பெண்மணியும், மகனும், மகளும் தரையில் அமர்ந்து கொண்டார்கள். வேஷ்டியும், பனியனும் அணிந்திருந்த அந்த முதியவர் மட்டும் பெஞ்சில் அமர்ந்து கொண்டார். 

போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவது அந்த குடும்பத்திற்கு புதியதாக இருந்திருக்க வேண்டும். அந்த பெண்மணி துக்கம் தாளாமல் தனது வாயில் துணியைப் பொத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தார். மற்ற மூவரும் தலையை நிமிர்த்தவே இல்லை. அவர்களைப் பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது. விரைவாக ஸ்டேஷனை விட்டு நகர்ந்துவிட வேண்டும் எனத் தோன்றியது.

அவசரமாக விண்ணப்பத்தை எழுதி முடித்திருந்தேன். போலீஸ்காரரிடம் கொடுக்க போன போது மிக ஆவேசமாக போலீஸ் பெண்மணி அறையிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த முதியவரை அறைந்ததை பார்த்தேன். ஒரு நிமிடம் நெஞ்சு அடைத்துக் கொண்டது. திடீர்த்தாக்குதலை எதிர்பார்ககாத பெரியவர் நிலைகுலைந்து போனார். முதியவருடன் இருந்த பெண்மணி கதறிய போது, ‘வாயை மூடச் சொல்லி’ அவருக்கும் அடி விழுந்தது. அத்தனை பலத்தையும் திரட்டி தனது அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றார். எதற்காக அந்தக் குடும்பத்தைக் கூட்டி வந்திருக்கிறார்கள், இப்பொழுது ஏன் அடிக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்கவில்லை. யோசிக்க விருப்பமும் இல்லாமல் இருந்தது. உண்மையைச் சொன்னால் அந்தச் சமயத்தில் நடுக்கமாக இருந்தது. அந்த ஸ்டேஷனின் சூழல், வெளிச்சம். அவர்களின் அதிகாரம் அத்தனையையும் மீறி பேசுவதெல்லாம் சாத்தியமே இல்லை என்று தோன்றியது. 

ஸ்டேஷனை விட்டு வெளியேறுவதை விட எனக்கு வேறு எந்த வழியும் இல்லை. அந்தக் குடும்பத்திற்கு அந்த வாய்ப்பும் கூட கிடையாது. அங்குதான் இருந்தாக வேண்டும். தொண்டையை அடைத்த கசப்புடன் ஸ்டேஷனை விட்டு வெளியேறிய போது ஸ்டேஷனில் இருந்த மரத்தில் பறவைகள் தாறுமாறாக கத்திக் கொண்டிருந்தன. இருள் சற்று தடித்திருந்தது.

May 17, 2013

நீங்களும் உங்கள் சடங்குகளும்


மேட்டூர் அணையில் வெறும் 27.5 அடிக்குத்தான் தண்ணீர் இருக்கிறதாம். அது எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது. தமிழ்நாட்டின் பிற பெரும்பாலான அணைக்கட்டுகளில் இரண்டு மூன்று பக்கெட் அளவுக்குத்தான் தேறும் என்கிறார்கள். 

ஆனால் ரமணனை எப்பொழுது டிவியில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்கிறார். பல வருடங்களுக்கு முன்பாக ஊர்ப்பக்கங்களில் ‘மழை தொட்டச்சி’ என்ற ஒரு பூச்சி அவ்வப்போது தென்படும். XL சைஸ் வெட்டுக்கிளி. தொங்கிப் போன கிழவனைப் போல- I mean, தலை தொங்கிப்போன கிழவன் - தலையை அசைத்துக் கொண்டே நடக்கும். அதனருகில் சென்று ‘தொட்டச்சி தொட்டச்சி மாமன் ஊரில் மழை பெய்யுமா?’ என்றால் தலையை அசைக்கும். நாம் என்ன கேட்டாலும் அப்படித்தான் தலையை அசைக்கும்.எதுவுமே  கேட்காவிட்டாலும் கூட அப்படித்தான் அசைக்கும் என்பதால்‘மாமன் ஊரில் மழை பெய்தாலும் பெய்யும்’ என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது தொட்டச்சிக்கு பதிலாக ரமணன் வந்துவிட்டார். தொட்டச்சி தலை அசைப்பதற்கு பதிலாக ரமணன் வாயை அசைக்கிறார். 

நமக்குத்தான் தெரியுமே! மழை இல்லை. வானம் பொய்த்துவிட்டது.

மழையே இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் இன்னமும் ஊர் ஊருக்கு மாரியம்மன் பண்டிகை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் எங்கள் ஊரில் ஐந்தாறு மாரியம்மன்ஸ். புதூருக்கு ஒன்று, பழையூருக்கு ஒன்று, வன்னியர்களுக்கு ஒன்று, போயர்களுக்கு ஒன்று என்று சித்திரை வந்தால் மாரியம்மன்ஸ் சந்தோஷம் ஆகிவிடுகிறார்கள். இத்தனை மழை அம்மன் இருந்தும் மழை வரும் பாட்டைத்தான் காணவில்லை. வெயிட்! இன்று நாஸ்திகம் பேசி புரட்சி செய்கிறேன் என யோசிக்க வேண்டியதில்லை. அது ஒரு Flow இல் வந்துவிட்டது. அவ்வளவுதான்.

மழைப்பாட்டை எதற்கு ஆரம்பித்தேன் என்றால் அபிலாஷின் ஒரு குறிப்பை படித்தனால். ஆர்.அபிலாஷை தெரியும்தானே? இப்பொழுது உயிர்மையில் அவர்தான் தொடர்ந்து கவர்ஸ்டோரியை எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் ரொம்ப நல்ல மனுஷன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் என்னை புகழ்ந்து எழுதியிருக்கிறார். என்னையெல்லாம் புகழ்ந்து எழுதினால் நல்ல மனுஷன் என்று சொல்லாமல் என்ன சொல்வது? அவர் எழுதியதில் இரண்டாவது பத்தியில் கடைசி வரியை படித்துவிட்டு “அய்யய்ய அவரு உங்களை கலாய்க்கிறாருங்க” என்றார் உள்துறை அமைச்ச்சர். ஆனால் எங்கள் நட்பில் பங்கம் விளைவிக்க மேற்கொள்ளப்படும் உள்நாட்டு சதி என்பதாக புரிந்து கொண்டு அதையும் பாராட்டாகவே எடுத்துக் கொண்டேன். 

அபிலாஷ் உண்மையிலேயே நல்ல நண்பர். இப்பொழுதெல்லாம் அவரை டென்ஷன் ஆக்குவதற்கு மிகச் சிறந்த உபாயத்தை கண்டுபிடித்திருக்கிறேன். ‘ராஜூமுருகனோட வட்டியும் முதலும் இருக்கு பாருங்க....’என்று ஆரம்பித்தால் போதும். அதன் பிறகு அவர் பேசத் துவங்கிவிடுகிறார். ராஜூமுருகன் எழுத்தின் மீது அவருக்கு அவ்வளவு பாசம். ஃபேஸ்புக்கிலோ அல்லது ஏதோ ஒரு கட்டுரையிலோ ராஜூமுருகன் சபரிமலைக்கு போவதாகவும், எழுத்தாளர்கள் சடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும் அபிலாஷ் எழுதியிருந்தார்.

நான் சபரிமலைக்கு போயிருக்கிறேன் என்பதால் ‘சுள்’ என்றது. என்னளவில் சடங்குகள் என்பவை வெறும் செயல்கள் மட்டும் இல்லை. அவை அனுபவங்கள். 

எங்கள் ஊர் மாரியம்மன் பண்டிகையில் ஒவ்வொரு வருடமும் அக்னிக்கும்பம் எடுத்துவிடுகிறேன். பெயருக்குத்தான் பூச்சட்டி என்பார்கள். ஆனால் ஒரு மண் சட்டியில் கால்வாசி அளவுக்கு தவிட்டை நரப்பி அதன் மீது குச்சிகளைப் வைத்து நெருப்பை மூட்டி விடுவார்கள். அதை தூக்கிக் கொண்டு ஊரை வலம் வர வேண்டும். எங்கள் ஊரில் மாரியம்மன் பண்டிகை சித்திரை மாதம், அக்னிநட்சத்திரத்தில்தான்  வரும் என்பதால் ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக நடுக்கமாக இருக்கும்.

அதுவும் இப்பொழுதெல்லாம் ஊரின் பெரும்பாலான வீதிகளை தார்ச் சாலை ஆக்கிவிட்டார்கள். கும்பத்தின் வெப்பம் கைக்கு சவால் என்றால் தார்ச்சாலை யின் வெப்பம் பாதத்துக்கு சவால். சாலையில் தண்ணீர் ஊற்றாமல் விட்டால் கூட ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் ‘சாமிகள் வருகுது’ என்று தண்ணீரை ஊற்றிவிடுவார்கள். புகையைச் சேர்த்துக் கொண்டு சூடு கிளம்பும் பாருங்கள். யப்பா!

ஒரு வினாடி கூட நிற்கவே முடியாது. பறையடிக்கு ஏற்ப ஆடிக் கொண்டே வந்தாக வேண்டும். அவ்வப்போது நெருப்பு அணைந்து புகை கண்களைக் கருக்கும். இதில் நடுநடுவே நிறுத்தி நெய், வெண்ணெய் என்று சகட்டு மேனிக்கு கும்பத்திற்குள் ஊற்றிவிடுவார்கள். அது மேலே இருக்கும் சூட்டையெல்லாம் இழுத்துக்கொண்டு தவிடு வழியாக ஊடுருவி உள்ளங்கையில் கபடி ஆடும். 

இந்த ஊர்வலம் மொத்தமாக முடிய மூன்று மணி நேரம் ஆகும். மொத்த நேரமும் கிட்டத்தட்ட தியானம் போலத்தான். அத்தனை சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு கோயிலை அடைந்து விட வேண்டும் என பற்களைக் கடித்துக் கொண்டிருக்க வேண்டும். அதே சமயம் இது ஒரு enjoyment கூட.  

சித்திரை வெயிலில் மூன்று மணி நேரத்திற்கு கால் சூட்டையும் பொறுத்து, கும்பத்தையும் கீழே விட்டுவிடாமல் கோயிலை அடையும் போது மிகப்பெரிய நம்பிக்கை உருவாவதாக உணர்கிறேன். அந்த நம்பிக்கை அடுத்த வருடம் முழுவதற்குமான ஆன்ம பலத்தை தருகிறது என நம்புகிறேன்.

இது போன்ற நம்பிகைக்களாலும், திருப்தியினாலும் சடங்குகளின் மிகப்பெரிய விசிறியாக இருக்கிறேன்.  இது ஒரு சாம்பிள்தான். எந்த மதமாகவும், சாதியாகவும் இருந்தாலும்  சடங்குகள் வேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். பெரும்பாலான சடங்குகளில் நாம் கற்றுக் கொள்வதற்கும், தொடர்வதற்கும் ஏதாவது இருக்கும். அதை கண்டுபிடித்தால் போதும்- அனுபவிப்பதற்கும் அதில் ஏதோ ஒன்று இருக்கும்.

May 16, 2013

வாங்க சின்னதா ஒரு புரட்சி பழகலாம்


சுற்றி இருக்கும் எல்லோருமே ஏதாவதொரு விதத்தில் கெட்டவர்களாக இருக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், சதி செய்கிறார்கள், போக்கிரிகளாக திரிகிறார்கள், களவாடுகிறார்கள்.

அமெரிக்கா கெட்ட நாடு, இந்தியா திலுப்பாமாரி தேசம்.

தேசங்கள்தான் ஆகாவழிகள் என்றால் மன்மோகன் சிங் அமுக்கமான ஆள், சோனியா கேடி, கருணாநிதி சதிகாரர், ஜெயலலிதா மோசம், விஜயகாந்த் குடிகாரன், ராமதாஸ் சாதி வெறியன். 

அரசியல்வாதிகள் மட்டுமில்லை- அம்பானிகள் திருடர்கள், இன்போசிஸ் நாராயண மூர்த்தி மலை முழுங்கி, விஜய் மல்லய்யா கேப்மாரி. 

பிஸினஸ் ஆட்கள் மட்டுமா? த்ரிஷா அரைவேக்காடு, ரஜினி ஒரு ஃப்ராடு, கமல் பார்ப்பனன், அமிதாப் பச்சன் ஒரு வியாபாரி.

சினிமாக்காரன்தான் இப்படியென்றால் சுஜாதா விஷம் கக்கி, ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ், எஸ்.ராமகிருஷ்ணன் மழுப்பல்வாதி, சாரு ஒரு வுமனைஸர். 

பிறகு யார்தான் இங்கே நல்லவர்கள்? எல்லோரையும் கழித்துவிட்டால் மிச்சமிருப்பதும் நீங்களும் நானும்தான். என்னைப் பற்றி வாசிக்க உங்களுக்கு சில புகார்கள் இருக்கும். உங்களை குத்திக்காட்ட எனக்கு சில மேட்டர் இருக்கும். அவ்வளவுதான். கதை முடிந்தது! 

மேற்சொன்னவர்களின் உண்மையான முகங்கள் நமக்குத் தெரியாதா என்ன? அச்சு அசலாகத் தெரியும். ‘இவன் இப்படித்தான்’ என்று தெரிந்து வைத்திருந்தாலும் சகித்துக் கொள்கிறோம். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு சகித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியும் இல்லை. மன்மோகன் சிங்கும், நரேந்திர மோடியும் வேண்டாம் என்றால் அடுத்த பிரதமர் யார்? கருணாநிதியும். ஜெயலலிதாவும் வேண்டாம் என்றால் மூன்றாவதாக யார்? எந்தத் திசையில் கை நீட்டினாலும் கிடைக்கக் கூடிய இன்னொருவன் இருப்பதைவிட படு ‘டேஞ்சராக’ இருப்பான் என்பதால் இருப்பதில் ஒன்றை ஒத்துக் கொள்கிறோம்.

நாம்தான் கிடைக்கும் கத்தரிக்காயை ஏற்றுக் கொள்கிறோம் என்றால் புரட்சியாளர்கள் ‘சும்மா’ இருப்பார்களா?. நாம் எதைத் தேர்ந்தெடுத்தாலும் நம்மை வறுத்தெடுக்கிறார்கள். ‘அட மந்திகளா...இவன்தான் உங்களுக்கு கிடைத்தானா?’ ‘சொம்புதூக்கிகளே! உங்களுக்கெல்லாம் சுரணையே இல்லையா?’ ‘சோற்றில் உப்பு போட்டுத்தான் தின்கிறீர்களா?’ என்கிறார்கள். 

இப்படியே எதற்கெடுத்தாலும் நம்மை ‘சப் சப்’ என்று அறைந்து கொண்டிருந்தால் நமக்கு என்ன மிச்சமாகும்? வெறும் குற்றவுணர்ச்சிதான்.

சாமானியர்களுக்கு வெறும் குற்றவுணர்ச்சியை உருவாக்குவது மட்டும்தான் இங்கு புரட்சியாக இருக்கிறது. குற்றச்சாட்டுகளையும், புலம்பல்களையும், வெறுப்புகளையும் வெவ்வேறு வாக்கியங்களில் எத்தனை நாட்களுக்குத்தான் பேசுவது?.

அரசியல் பிரச்சினைகளையும், சமூகச் சிக்கல்களையும் பேசக் கூடாது என்பதில்லை- பிரச்சினைகளுக்கு எதிராக குரல் எழுப்பவர்கள் தேவைதான். ஆனால் எது அலர்ஜியாக இருக்கிறதென்றால் இணையவெளியில் கம்யூனிசம் பேசும் மனிதர் கார்போரேட் பத்திரிக்கையில் நிருபராக இருக்கிறார். சமத்துவம் பேசும் புரட்சியாளர் தனியார் தொலைக்காட்சியின் சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார். பெரியாரின் கொள்கைகளை பேசுபவர்கள் சினிமா பத்திரிக்கையில் பக்கத்திற்கு பக்கம் நடிகையர்களை உரித்து தொங்கவிடுகிறார்கள். மார்க்ஸை புகழ்ந்து புளாங்கிதம் அடைபவர்கள் மென்பொருள் நிறுவனத்தில் அமர்ந்து கொண்டு ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் புரட்சி செய்கிறார்கள். கேட்டால் பிழைப்பு வேறு கொள்கை வேறு என்று கொடிபிடிக்கிறார்கள்.

இங்கு இருக்கும் எந்த புரட்சியாளனும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்வதில்லை. அவன் மோசம், இவன் மோசம் என்று அடுத்தவனைக் கை காட்டி வெறும் புகார்ப்பட்டியல் மட்டும்தான் வாசிக்கிறார்கள். ‘அவர்கள் மோசம் என்று எங்களுக்கும்தான் தெரியுமே’ என்று சொல்லிப் பாருங்கள். ‘அதுதான் எங்களால் செய்ய முடியும், தீர்வை மக்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும், புரட்சி வெடிக்க வேண்டும்’  என்பார்கள். 

‘எவன் எப்படி போனால் நமக்கென்ன?’ என்பதும், பிரச்சினைகளிலிருந்து சற்று விலகிப் போய்விடுவதும்தான் இங்கு யதார்த்தம். இந்த யதார்த்தத்தில்தான் 99.9% பேரின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தக் கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் என்று நிரூபிப்பதற்காக புரட்சியாளராக வேடம் போட்டுக் கொள்கிறோம். எதைப் பார்த்தாலும் அறச்சீற்றத்தை காட்டிவிடுகிறோம். காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரைக்கும் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பெரியாரியவாதியாகவும், சமத்துவவாதியாகவும், கம்யூனிஸ்டாகவும், பரோபகாரியாகவும் காட்டிக் கொண்டு மாலை 5.05 மணிக்கு சாதாரணமானவர்களாகிவிடுகிறோம்.  

சரி விடுங்கள். அடுத்தவர்களை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? நான் மட்டும் யோக்கியமா? ஏதோ சில புரட்சியாளர்களை ஃபாலோ செய்ததன் side effect இது.

மாதாமாதம் ஃசாப்ட்வேர் கம்பெனி படியளப்பதை மடியில் ஏந்திக் கொள்ளும் நான் எல்லாம் இப்படி ஓவராக கூவிக் கொண்டிருந்தால் ‘கார்பரேட் கைக்கூலி இப்படித்தான் பேசுவான்’ என்று ஒரே அடியில் மண்டையை பிளந்துவிடுவார்கள் என்பதால் கியரை மாற்றிக் கொள்வதுதான் நல்லது. 


தடாகா என்றொரு தெலுங்குப்படம் வந்திருக்கிறது. வேட்டை படத்தின் ரீமேக். நாக சைதன்யா நடித்திருக்கிறார். அதெல்லாம் தேவையில்லாத சமாச்சாரம். தமன்னா நடித்திருக்கிறார். இதுதான் முக்கியம். அதைவிடவும் முக்கியம் ஆண்ட்ரியாவும் கூட நடித்திருக்கிறார். கூகிளில் தேடினால் ஏகப்பட்ட படங்களாக வந்து கொட்டுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூர் முழுவதும் படத்தின் போஸ்டரை ஒட்டியிருந்தார்கள். திங்கட்கிழமை அலுவலகம் வரும் போது ஒரு போஸ்டரைக் காணவில்லை. எல்லாவற்றையும் கிழித்து வைத்திருக்கிறார்கள். அதுவும் தமன்னாவையும் ஆண்ட்ரியாவையும் மட்டும் குறி வைத்து கிழித்திருக்கிறார்கள். வெறும் நாக சைதன்யா மட்டுமே இருக்கும் கிழிந்த போஸ்டர் இருந்தால் என்ன? பொசுங்கினால் என்ன? பெங்களூரில் இது ஒரு கெட்ட பழக்கம். நடிகைகளின் படங்களை குறி வைத்துக் கிழிக்கும் ஆணாதிக்கவாதிகளால் இந்த ஊர் நிரம்பியிருக்கிறது. பெண்களை மட்டும் போஸ்டரில் இருந்து கிழிக்கும் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இதற்கெல்லாம் இந்த தேசத்தில் புரட்சியே வெடிக்காதா என்று ஒரே யோசனையாக இருக்கிறது. 

May 15, 2013

பையனுக்கு எதில் இண்ட்ரெஸ்ட்?


ஒரு போன். 

அது போதும் நம்மை கொஞ்ச நேரம் ஜெர்க் ஆக்குவதற்கு. அப்படி ஒரு போன் இன்று காலையில் வந்தது.

“பொண்ணு ஆயிரத்து நூறுக்கு மேல மார்க் வாங்கியிருக்கா...ஆனால் மெடிக்கல் வேண்டாம்; இஞ்ஜினியரிங் வேண்டாம்; பி.எஸ்.சி அக்ரி வேண்டாம்; டீச்சிங் வேண்டாம்; ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் வேண்டாம்ங்கிறா ...வேற என்ன படிக்கிறதுக்கு இருக்கு?”

இது உண்மையிலேயே டக்கரான கேள்வி. கிட்டத்தட்ட 99% சதவீத பாடப்பிரிவுகளை அந்தப் பெண் நிராகரித்துவிட்டாள். இனி மிச்சம் இருக்கும் பாடத்திட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். வேறு என்ன பாடங்கள் இருக்கின்றன? இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்க்கலாம். 

அதற்கு முன்...

இப்படி மெடிக்கல், பொறியியல் போன்ற முக்கியமான பாடத்திட்டங்களை நிராகரிப்பதை ‘என்கரேஜ்’ செய்வதாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒரே பாடத்தையே இலட்சக்கணக்கானவர்கள் படிப்பதும், வேறு வழியே இல்லை என்ற பட்சத்தில் மட்டுமே பிற பாடங்களை தேர்ந்தெடுப்பதும் நீண்டகால நோக்கில் பார்க்கும் போது சமூகத்தில் மிகப் பெரிய பின்விளைவை உருவாக்கியிருக்கும். 

இப்படி யோசிக்கலாம்- இன்றைக்கு பொறியியல், மருத்துவம் தவிர்த்து பிற துறைகளில் படிக்கும் மாணவர்களில் எத்தனை சதவீதத்தினர் ‘இந்த பாடத்தைதான் படிக்க வேண்டும்’ என்ற ஆர்வத்தில் சேர்ந்திருப்பார்கள்? ஐம்பது சதவீதம்? முப்பது சதவீதம்? இருபது? ம்ஹூம். குத்துமதிப்பாக கணித்தாலும் கூட பத்து சதவீதம் கூட தேறாது. இந்த நிலை இன்னும் இருபது வருடங்களுக்குத் தொடர்கிறது என வைத்துக் கொள்வோம். அப்பொழுது ‘வேறு வழியே இல்லாமல்’ ஆர்ட்ஸ் படித்தவர்கள்தான் ஆசிரியர்களாக பெஞ்ச்சை தேய்ப்பார்கள். ‘வேறு வழியே இல்லாமல்’ தமிழும், ஆங்கிலமும் படித்தவர்கள்தான் தமிழ், ஆங்கில பாடத்திட்டத்தை உருவாக்குவாக்குவார்கள். அறிவியலின் அடிப்படையான இயற்பியலை ஆர்வத்தோடு படித்தவர்கள் ஆராய்ச்சி கூடங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். ‘வேறு வழியே இல்லாமல்’ வேதியியல் படித்தவர்கள்தான் உரத் தொழிற்சாலைகளிலும், மருந்துத் தொழிற்சாலையிலும் பணியில் இருப்பார்கள். 

அது சரி. சமூகம், விளக்கெண்ணெய் என்று பார்த்து ஒன்றுக்கும் உருப்படியில்லாத கோர்ஸில் படித்து என் மகன்/மகளின் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டுமா? இப்படி யாராவது கேட்டால் அது அந்தப் பெண் கேட்டதை விட முக்கியமான கேள்வி.  ‘வித்தியாசமான பாடத்தை படிக்கிறேன் பேர்வழி’ என்று குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்வதை போல முடிவெடுக்க வேண்டியதில்லை. உதாரணமாக ரோபோடிக்ஸ் படிக்க பையன் விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். அட! வித்தியாசமாக இருக்கிறதே என்று நாமும் சேர்த்துவிடுகிறோம். அதற்கு இந்தியாவில் வேலை வாய்ப்பு இருக்கிறதா என்றால் சத்தியமாக இல்லை. இந்தியாவில்தான் வேலை இல்லையே தவிர வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும்.

அதே போலத்தான் பயோ டெக்னாலஜி பாடமும். கல்லூரிக்கு கல்லூரி பயோ-டெக்னாலஜி பாடங்களைத் துவங்கியிருக்கிறார்கள். உண்மையில் இத்தனை பேருக்கு வேலை கொடுக்குமளவுக்கு இந்தியாவில் பயோ-டெக்னாலஜி ஆய்வுகள் நடப்பதில்லை. ஆய்வகங்களும் இல்லை. ஆனால் வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும்.

இப்படியான சில பாடத்திட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், படித்து முடித்துவிட்டு இந்தியாவில் வேலை செய்யப் போகிறோமா அல்லது வெளிநாடு செல்ல விரும்புகிறோமா? வெளிநாடு செல்வதென்றால் மேற்படிப்பு படிப்பதற்கான குடும்பச் சூழல் இருக்கிறதா? வெளிநாட்டு கல்லூரிகளில் அட்மிஷன் பெறுமளவிற்கு உழைப்பும் திறமையும் நம்மிடம் இருக்கிறதா என்பதையெல்லாம் நமக்கு நாமே கேட்டுக் கொள்ளலாம். 

இருக்கும் பாடங்களை எல்லாம் list செய்வது, மேற்சொன்ன கேள்விகளும் கிட்டத்தட்ட என்ன பாடத்தை தேர்ந்தெடுப்பது என்ற தெளிவை கொடுத்துவிடும். ஒருவேளை தெளிவு கிடைக்காத பட்சத்தில், ‘தகுதியானவர்களின்’ ஆலோசனையை நாடலாம்.

‘மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப பாடத்தை தேர்ந்தெடுக்கட்டும். பெற்றோர்கள் அவர்களை வதைக்க வேண்டாம்’ என்று நேற்று சொன்னதற்கு ஆளாளுக்கு சண்டைக்கு வருகிறார்கள். ‘ப்ராக்டிகலாக பார்த்தால் மாணவர்களுக்கு பாடத்தை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு தெளிவு இல்லை’ என்றார்கள். அவர்கள் சொல்வதை 100% ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இங்கு பல ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமுமே கூட தெளிவு இல்லைதான். பிறகு மாணவர்களிடம் எப்படி தெளிவை எதிர்பார்க்க முடியும்?

மாணவர்கள் பாடத்தை தேர்ந்தெடுக்கட்டும் என்றால் முழுமையாக அவர்களாவே முடிவு செய்யட்டும் என்பதில்லை. அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான அத்தனை வழிவகைகளையும் உருவாக்கிக் கொடுப்போம் என்று அர்த்தம். கணிதமே பிடிக்காத மாணவனிடம் ‘நீ கணித ஆசிரியர்தான் ஆக வேண்டும்’ என்று அழுத்த வேண்டாம் என்று அர்த்தம். மற்றபடி, அவர்கள் மட்டுமே முடிவு செய்யட்டும்; நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம் என்று அர்த்தம் இல்லை.

மூன்றாம் வகுப்பிலிருந்து மைனாக்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பவனிடம், பறவையியல் பற்றி படிப்பதற்கான பாடத்திட்டம் இருக்கிறது என்று அறிமுகம் கொடுக்கலாம். சைக்காலஜி பற்றி பேசும் பெண்ணிடம் கல்லூரிகளில் சைக்காலஜி தனிப் பாடமாகவே இருக்கிறது என்று தெரியப்படுத்தலாம். தொல்பொருள் பற்றிய விருப்பம் உடையவனுக்கு Institute of Archaeology என்ற கல்வி நிறுவனத்தை பற்றி தெரியச் செய்யலாம். இவை போன்ற பாடத்திட்டங்கள் யாவுமே வேலை வாய்ப்பை உடையன; படித்து முடித்த பிறகு என்ன செய்வது என்று புலம்ப வைக்காதவை. 

நம் மகனும், மகளும் பதினேழு அல்லது பதினெட்டு வருடங்களாக நம்மோடுதானே இருக்கிறார்கள்? அவர்களின் ஆர்வம் நமக்குத் தெரியாதா என்ன? என் மகனின் ஆர்வம் என்னவென்று தெரியாது என்று யாராவது சொன்னால் ‘அப்படின்னா...அவன் என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் யோக்கிதையும் உங்களுக்கு இல்லை’ என்று தைரியமாகச் சொல்லிவிடலாம்.

இமெயில் ஐடியை திருடி என்னய்யா பண்ணுவீங்க?


இமெயில் ஐடி கூட திருடப்படும் வஸ்தா என்றால் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஐடியை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள் என்பது திருடும் ஆளையும், திருட்டுக் கொடுத்த ஆளையும் பொறுத்து இருக்கிறது. ஒருவேளை ஃபேஸ்புக் பிரபலம் டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியின் ஐடியை ஆட்டையை போடுகிறோம் என வையுங்கள்- அதில் ‘செம’ சாட் மெசேஜ்கள் இருக்கம் அல்லவா? அதுவே சுப்பிரமணியசுவாமியின் ஐடியை அடித்தால் அரசியல் கருமாந்திரம்தானே இருக்கும்!

இமெயில் ஐடி திருடுவது என்பது இரண்டு வகையில் நடக்கலாம். முதல் வகையில் நமது கடவுச்சொல்லை மட்டும் திருடிக் கொண்டு நாம் வழக்கம்போலவே மின்னஞ்சலை இயக்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் கொடுத்திருப்பார்கள். மின்னஞ்சல் களவாடப்பட்டிருப்பதே தெரியாமல் நாம் மின்னஞ்சலை உபயோகப்படுத்திக் கொண்டிருக்க, மூன்றாவது கண் நமது சமாச்சாரங்கள் அத்தனையையும் உளவு பார்த்துக் கொண்டிருக்கும். 

இரண்டாவது வகை திருட்டில் களவாடப்பட்ட மின்னஞ்சலை அதன் சொந்தக்காரர் திரும்ப உபயோகப்படுத்தவே முடியாது.போனது போனதுதான். 

இரண்டு வகைகளில் முதல் வகையான திருட்டுதான் செம டேஞ்சர். அதனால் இவ்வகையான திருட்டை தடுக்க கிட்டத்தட்ட அனைத்து மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனங்களும்(யாஹூ,ஜிமெயில், ஹாட்மெயில் போன்ற)நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.

அது எப்படி?

மின்னஞ்சல் கணக்கை நாம் துவங்கும் போது, ரகசியக் கேள்வி ஒன்று கேட்கப்படும் அல்லவா?. 'உங்கள் செல்லப்பிராணியின் பெயர் என்ன?' 'உங்கள் முதல் ஆசிரியரின் பெயர் என்ன்?' என்ற ரீதியில் இருக்கும் கேள்விகளுக்கு நாம் பதிலைச் சொல்லி வைத்திருப்போம். ஒருவேளை நமது கடவுச்சொல்லை மறந்துவிட்டால், இந்த ரகசியக் கேள்வியை நாம் கணக்கு வைத்திருக்கும் இணையத்தளம் கேட்கும். நாம் சரியான பதிலைச் சொன்னால், புதியக் கடவுச் சொல் ஒன்றை அவர் கணக்குத் துவங்கும் போது கொடுத்திருந்த இன்னொரு மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் அல்லது அதே பக்கத்தில் புது கடவுச் சொல் காண்பிக்கப்படும்.

இதற்காகவே மின்னஞ்சல் கணக்குத் துவங்கும் போது இரண்டாவது மின்னஞ்சலை(Secondary Email ID) கொடுத்து வைக்க வேண்டும். சில இணையத்தளங்கள் இந்த இரண்டாவது மின்னஞ்சல் ஐடியை, கடவுச் சொல்லைத் தேடும் போது தேடுபவருக்கு உரிய தகவல்களை அனுப்பி வைப்பதற்காக உபயோகப்படுத்திக் கொள்கின்றன. ரகசியக் கேள்விகளும் பிறரால் யூகிக்க முடியாத அளவிலான கேள்வியாக இருப்பது உசிதம்.

இப்படியாக தனது ரகசியக் கேள்விக்கு பதில் சொல்லி, இணையதளத்திடம் இருந்து கடவுச் சொல்லை பெற்றுக் கொள்ளும் போது பழைய கடவுச் சொல் அழிக்கப்பட்டு, புதிதாக கடவுச் சொல் வ்ழங்கப்படும். திருடுபவருக்கோ அல்லது மெயி ஐடியின் சொந்தக்காரருக்கோ என யாராவது ஒருவருக்குத்தான் கடவுச் சொல் கிடைக்கும் என்பதால் இரண்டு ஆட்கள் ஒரே மின்னஞ்சலை இயக்குவது அவ்வளவு சுலபமில்லை.இத்தகைய நடவடிக்கையின் மூலம் முதல் வகையான திருட்டு தடுக்கப்பட்டுவிடுகிறது. 

ஒருவரின் மெயில் ஐடியை மற்றவர் திருடிவிடும் போது, களவு கொடுத்தவர் தனது மெயில் ஐடியை உபயோகப் படுத்த முடிவதில்லை. இதனால் இந்த மெயில் ஐடியின் மூலமாக புதிதாக எந்த தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள மாட்டார். மெயில் ஐடியை திருடியவர், அந்த மின்னஞ்சலில் சேமித்து வைத்திருக்கும் பழைய தகவலகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ள முடியும். 

                                                                       (2)

என் நண்பர் ஒருவரின் இமெயில் ஐடி களவாடப்பட்டது. பல தகவல்களையும் கம்ப்யூட்டரிலேயே வைத்துக் கொள்ளும் தலைமுறையயைச் சார்ந்தவர் என்றாலும் முதலில் அவர் அதன் பாதிப்பை உணரவில்லை.

நண்பர் வேறொரு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு மற்றொரு சாப்ட்வேர் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தவர். பழைய நிறுவனத்தோடு இவருக்கு என்னமோ லடாய். அதனால் Relieving letter எல்லாம் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நண்பரும் புது நிறுவனத்தின் மேலாளருக்கு இந்த விஷயங்களை விலாவாரியாக மின்னஞ்சலில் அனுப்பி இந்தச் சான்றிதழ்களில்லாமல் தன்னை பணிக்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால் தாம் இணைவதாக‌ தெரிவித்திருக்கிறார். மேலாளரும் சம்மதம் தெரிவித்து மின்னஞ்சலில் பதில் அனுப்பி இருக்கிறார். 

பணிக்கு சேர்ந்த பிறகு, மூன்று மாதம் கழித்து புது நிறுவனத்தில் ஏதோ தணிக்கை இருப்பதாகவும் இவரின் அனுபவச் சான்றிதழ் தேவைப்படுவதாகவும் கேட்டிருக்கிறார்கள். தான் ஏற்கனவே மேலாளரிடம்  அனுபவச் சான்றிதழ்களை கொடுக்க முடியாது என்று மின்னஞ்சல் அனுப்பியதையும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்து தனக்கு பதில் அனுப்பியதையும் விளக்கியிருக்கிறார். இவரின் கெட்ட நேரம் அந்த மேலாளர் வேறு நிறுவனத்திற்கு மாறி போய்விட்டார். புது மேலாளரோ, பழைய மேலாளரிடமிருந்து வந்த மின்னஞ்சலின் பிரதியைக் கொடுத்தால் தான் சமாளித்துக் கொள்வதாக சொல்கிறார்.  மின்னஞ்சலை சேமித்து வைத்திருந்த மெயில் ஐடியை யாரோ திருடிவிட்டார்கள் என்று "சிறுபிள்ளைத்தன"மாகவும் சொல்ல முடியாது.

கணிணியில் இருக்கும் தகவல்களை மென்பிரதி(Soft Copy) என்றும் அச்சுப் பிரதியில் இருப்பனவற்றை வன்பிரதி(Hard Copy) என்றும் சொல்கிறார்கள். நண்பரும் சாப்ட்காப்பியை மட்டுமே வைத்துக் கொள்ளும் பழக்கமுடைய‌ வகையறா என்பதால் இந்த மின்னஞ்சல் பரிமாற்றங்களை தன் யாகூ ஐடியில் சேகரித்திருக்கிறார். அதுதான் தற்பொழுது திருடப்பட்ட ஐடி. என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் வாழ்நாளின் மிக அதிகபட்ச குழப்ப நிலைக்குச் சென்றிருந்தார். 

கடைசியாக தனது பழைய நிறுவனத்தில் நெட்வொர்க் துறையில் பணிபுரியும் நண்பர் ஒருவரை தாஜா பிடித்து மேலாளரின் மின்னஞ்சலில் இருந்து அந்த பழைய மெயிலை எடுத்து கொடுத்து தப்பித்துவிட்டார். ஒரு மின்னஞ்சல், ஒரு மனிதனின் வாழ்க்கையில் இத்தனை அவஸ்தைகளை கொண்டுவர முடியுமா என்று தத்துவார்த்தமாக பல நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறார்.

                                                                         (3)

இந்த மின்னஞ்சல் திருட்டு கார்பொரேட் நிறுவனங்களின் அளவிலும் நடக்கின்றன. தன் எதிராளி நிறுவனத்தின் பணியாளர்களின் மின்னஞ்சல்களைத் திருடி அந்த மின்னஞ்சலில் இருந்து எதிராளியின் வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் அனுப்புவார்கள். இந்தத் தகவல்கள் வைரஸ் கொண்டதாக இருக்கலாம் அல்லது அந்த வாடிக்கையாளரை எரிச்சலூட்டும் வகையில் இருக்கலாம். இந்த வைரஸோ அல்லது தகவலோ வாடிக்கையாளரை பாதிக்கும் போது அதனை அனுப்பியவரை தேடிப்பார்ப்பார். தனக்கு சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்திலிருந்துதான் வைரஸ் வந்திருக்கிறது என்று நம்புவார். இத்தகைய தவறான மின்னஞ்சல் மூலமாக தனக்கும், தன் வாடிக்கையாளருக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் நிலைக்கு செல்லும் போது தன் மின்னஞல்களைத் திருட்டுக் கொடுத்த நிறுவனம் தனது வாடிக்கையாளரை 'தாஜா' செய்யவும், தான் பிரச்சினை உண்டாக்கிய மின்னஞ்சலை அனுப்பவில்லை என்பதனை புரிய வைக்கவும் படாதபாடு பட வேண்டியிருக்கும். வாடிக்கையாளருக்கு ஏற்படும் பாதிப்பு பெரியதாக இருப்பின் அவரை எப்படியும் சமாதானம் செய்ய முடியாமல் போகும்.

அமெரிக்காவில் எத்தி என்பவர் ஒரு சிறிய மென்பொருள் நிறுவனம் ஆரம்பித்திருக்கிறார். அதற்காக இனடர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர் (ஐ எஸ் பி) யிடம் தன் நிறுவனத்திற்கென இணையதளமும், மின்னஞ்சலும் பெற்றிருக்கிறார். இதனைத் தெரிந்து கொண்ட அவரின் எதிராளி நிறுவனம், அந்த மின்னஞ்சலை எத்தியிடமிருந்து திருடிவிட்டார்கள். இரவோடு இரவாக அந்த மின்னஞ்சலில் இருந்து ஆயிரக்கணக்கானோருக்கு தாறுமாறாக‌ மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறு மொத்தமாக அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு Spam என்று பெயர். இது போன்ற மின்னஞ்சல்கள் நம்மை தொந்தரவு செய்வதாக உணர்ந்தால் அது குறித்து புகார் செய்யலாம். www.spamcomp.com போன்ற இணையதளங்கள் இத்தகைய புகார்களை பெற்று நடவடிக்கை எடுப்பதற்காகவே செயல்படுகின்றன‌. இந்த 'ஸ்பாம்காம்ப்' போன்ற நிறுவனங்க‌ள் குறிப்பிட்ட ஐஎஸ்பியைத் தொடர்பு கொண்டு ஸ்பேம் மெயில் அனுப்பும் நிறுவனத்தின் மொத்த இணையத்தளத்திற்கும் தடை விதிக்கக் கோருவார்கள். பின்னர் ஐஎஸ்பியால் அந்தத் தளம் முடக்கப்படும்.

நல்ல இணையத்தளங்களை உருவாக்குவதற்கென நிறுவனங்கள் இலட்சக் கணக்கில் செலவு செய்கின்றன. எத்தி ஆரம்பித்த தளமும் மிகப்பெரும் செலவைத் தின்றிருக்கிறது. அவரின் எதிரி நிறுவனம் இவரின் மின்னஞ்சலைத் திருடி மின்னஞ்சல் அனுப்பியதும்மில்லாமல் அதே நிறுவனம் 'ஸ்பாம்காம்ப்'பில் எத்தியின் நிறுவனத்திலிருந்து ஸ்பேம் மின்னஞ்சல்கள் அனுப்பபட்டிருக்கின்றன என்று புகார்களையும் அனுப்பியிருக்கிறது. இந்த விவகாரத்தால் எத்தியின் இணையதளம் முடக்கப்பட்டது. இப்பொழுது எத்தி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். விசாரணை முடிந்து இந்த மின்னஞ்சல்களை தான் அனுப்பவில்லை என்று எத்தியால் நிருப்பிக்க முடிந்தால் அவரது தளம் மீண்டும் வழங்கப்படலாம்.இப்படி நிறுவனங்களிடமிருந்து, தனி மனிதனிடமிருந்தும் திருடப்படும் ஐடிகளைக் கொண்டு அவர்களின் வணிகத்தில் இழப்பினை உண்டாக்குதல், தவறான தகவல்களைப் பரப்பி கெட்ட பெயரினை உருவாக்குதல், ஸ்பாம் மின்னஞ்சல்களை அனுப்புதல் போன்றதான செயல்களின் மூலமாக அவர்களுக்கெதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விட முடியும்.

                                                                         (4)

என்னைப் பொறுத்த வரைக்கும் மிகச் சுவாரசியமான மின்னஞ்சல் திருட்டு என் நண்பன் சாதிக் செய்ததுதான். கல்லூரி காலத்தில் தொடர்ந்து ஒரு பெண்ணிடம் சாட் செய்து வந்தான். மின்னஞ்சல் வாழ்த்து அட்டைகள், தொலைபேசி உரையாடல்கள் என இருவரும் மிக நெருக்கமாகி கிட்டத்தட்ட அந்தப் பெண்ணை காதலிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டான். "சாட்டிங் உறவுகளில் எந்த நம்பகமும் இல்லை. அவளுக்கு உன்னைப் போலவே வேறு பல நண்பர்கள் இருக்கிறார்கள்" என்று இன்னொரு நண்பன் சாதிக்கிடம் எச்சரித்திருக்கிறான். 

கொஞ்சம் சந்தேகம் கொண்ட சாதிக் துப்பறிதலில் ஈடுபட்டான். ஒரு பெண் பெயரில் ஐடி உருவாக்கினான். தன் தோழியோடு பழகுபவனை இவனுக்கும் தெரியும் என்பதால் (அவன் பெயரை சங்கர் என்று வைத்துக் கொள்வோம்) சங்கரோடு பெண் பெயரில் பேசியிருக்கிறான். சாதிக்கை பெண் என்று நினைத்து கொண்ட சங்கர் வழிந்து கொண்டே சாதிக்கின் தோழியோடு இருக்கும் தன் அந்தரங்க பேச்சுகளை உளறியதுமில்லாமல் நாமும் அவ்வாறு நெருக்கமாக இருக்கலாம் என்று உருகியிருக்கிறான். 

முழிப்பு வந்த சாதிக் தன் தோழியின் மின்னஞ்சலை உடைத்து விட்டான். உடைத்த மின்னஞ்சலில் நுழைந்தால், அந்தப் பெண் கிட்டத்தட்ட நான்கைந்து ஆண்களிடம் மிக அந்தரங்கமாக பேசியிருக்கிறாள்- off the record போடாமல். சாதிக் ஒன்றும் உத்தமனில்லைதான். இவன் வெவ்வேறு நான்கைந்து பெண்களிடம் இப்படி அந்தரங்கமாக பேசியிருக்கிறான். இதே போல்தான் அவள் வேறு நான்கைந்து பையன்களிடம் பேசியிருக்கிறாள்.

"ஒவ்வொரு உறவும் வேறு வேறு தளத்தில் இயங்குகின்றன. இதில் ஒரு உறவு குறித்து மற்ற உறவுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் சாட்டிங் போதை போன்றது. எதையாவது எவளிடமாவது பேசிக் கொண்டேயிருக்க வேண்டும்" என்றெல்லாம் சொல்லித் திரிந்தவன் அவளின் மெயில் ஐடியைத் திருடிய பின் சாட்டிங்கையே விட்டுவிட்டு சவூதியில் அமைதியாக இருக்கிறான். ஒட்டகப்பாலை குடித்துக் கொண்டு.

May 14, 2013

அவ்வளவுதான்


துளசிமணி சித்திக்கும் பாப்பு சித்திக்கும் சிறு வயதாக இருக்கும் போதே அவர்களது அம்மாவை ஏதோ ஒரு நோய் வாரிக் கொண்டு போய்விட்டது. புற்று நோய் என்றார்கள். அது சரியாக ஞாபகம் இல்லை. அவர் இரண்டு பெண்களையும் தவிக்கவிட்டு போய்விட்டதாக அவ்வப்போது யாராவது அழுததுதான் மங்கலாக ஞாபகத்தில் இருக்கிறது. திக்குத் தெரியாத வயதில் இருந்த சித்திகள் சம்பந்தமான அத்தனை பொறுப்புகளையும் அவர்களது அண்ணனான சின்னச்சாமி மாமாதான் ஏற்றுக் கொண்டார். 

இரண்டு சித்திகளும் எனது அம்மாவுக்கு சித்தப்பாவின் மகள்கள். அம்மாவின் ஊரில்தான் சித்திகளும் இருந்தார்கள். சிறுவயதில் நான் அமத்தாவிடம் அதிகமாக இருந்ததனால் சித்திகளின் வீட்டிலும் ஏகபோகமாக திரிந்திருக்கிறேன். அப்பொழுது அந்த ஊரில் டி.வி வந்திருக்கவில்லை. ரேடியோவும் கூட யாராவது ஒரு சிலர் வீட்டில்தான் இருக்கும். அப்படியிருந்தும் பிரச்சினையில்லாமல் பொழுது போய்க் கொண்டிருந்தது. சித்திகள்தான் எனக்கு தாயம் விளையாட்டு சொல்லித் தந்தார்கள், ஐந்தாங்கல் அவர்களிடம் கற்றுக் கொண்டது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. அடைகாக்கப்பட்ட முட்டையிலிருந்து வெளியேறிய புத்தம் புதுக் கோழிக் குஞ்சு ஒன்றை முதன்முதலாக தொட்டுப்பார்த்ததும் அவர்கள் வீட்டில்தான்.

எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த வயதில் துளசிமணிச் சித்தி சமையல் செய்யப் பழகியிருந்தார். அப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இருக்காது. குடி நீருக்காக ஒரு அடி பம்பு இருக்கும். அதில் இருந்துதான் குடத்தில் நிரப்பிக் கொள்வார்கள். கியாஸ் அடுப்பும் கிடையாது. விறகு வெட்டித்தான் எரிக்க வேண்டும். வெள்ளை நிற ட்யூப்லைட்டும் கூட அரிதுதான். தோட்டத்தில் மோட்டார் ஓடும் போது பெண்கள் துணி துவைப்பார்கள். ஓடும் தண்ணீரில் ஊர்க்கதைகள் அத்தனையும் கரைந்து கொண்டிருக்கும். குழந்தைகளான நாங்கள் கதைகளைக் கேட்டுக் கொண்டே குளித்துக் கொண்டிருப்போம்.

ஆழ்துளைக் கிணறுகளோ, சொட்டு நீர்ப்பாசனமோ வந்திருக்காத அந்த வானம் பார்த்த பூமியில் தண்ணீர் இல்லாத சமயத்தில் நிலக்கடலை பயிர் செய்வார்கள். கொஞ்சம் தண்ணீர் இருந்தால் புகையிலை காற்றில் ஆடும். இதுதான் வாழ்வாதாரமாக இருந்தது. இடையில் வரும் வறட்சியின் காரணமாக அவ்வப்போது வீட்டில் இருக்கும் குண்டுமணி தங்கமும் அடமானத்திற்கு போகும் அல்லது தெரிந்தவர்களிடம் ஆயிரம் ஐந்நூறு ‘கைமாத்தாக’ வாங்குவார்கள். இந்தத் தொகைக்கு வட்டி எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. கையில் பணம் சேரும் போது திருப்பிக் கொடுத்தால் போதும். மனிதர்கள் அத்தனை நம்பிக்கையுடையவர்களாக இருந்தார்கள்.

சின்னச்சாமி மாமா வீட்டில் எப்பொழுதும் அரை மூட்டை கடலைக்காய் இருக்கும். அவ்வப்போது வறுத்து பொரியில் கலந்து கொடுப்பார்கள். மிக்சரும், ஜிலேபியும் சர்வ சாதாரணமான தின்பண்டங்களாக உருமாறியிராத காலம் அது. விஷேசங்களின் போது மட்டும்தான் அதையெல்லாம் வாங்குவார்கள். ஊருக்குள் எந்த வசதியும் இல்லை என்றாலும் வாழ்க்கை ஒன்றும் சிக்கலானதாக இல்லை. மாறாக அத்தனை சுவாரசியமானதாக இருந்தது. 

துளசிமணிச் சித்தி படித்தாரா என்று தெரியவில்லை. வீட்டு பொறுப்புகளை எடுத்துக் கொள்ளத் துவங்கியிருந்த போது பாப்புச் சித்தி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்திருந்தார். எண்பதுகளின் பருவப் பெண்ணிற்கான எந்த அம்சமும் குறையாமல் ஒற்றை சடை, கொஞ்சம் மல்லிகையோ அல்லது கனகாம்பரமோ சூடிய வாடை,பாவாடை தாவணி, அளவான சிரிப்பு என்று இன்னமும் கண்ணுக்குள் நிற்கிறார். இதெல்லாம் எனது ஐந்து வயதுக்குள் நடந்தவை.

அதன் பிறகு என்னை எங்கள் ஊருக்கு அழைத்து வந்துவிட்டார்கள். எப்பவாவது விடுமுறைக்கு செல்லும் போது அரைமணி நேரமோ அல்லது கால் மணி நேரமோ பார்த்து பேசுவதோடு சரி. பிறகு அதுவும் இல்லை. அதற்கு காரணமிருக்கிறது. துளசிமணி சித்திக்கு முதலில் திருமணம் நடந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து பாப்புச் சித்திக்கும் நிகழ்ந்தது. அவர்கள் திருமணம் முடிந்து வேறு ஊருக்குப் போன பிறகு அவர்களை பார்ப்பதும் பேசுவதும் முற்றாக நின்று போனது. ஏதாவது குடும்ப விழாக்களில் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கும். சில வார்த்தைகள் பேசிக் கொள்வோம். அந்த சில வினாடிகளில் குழந்தைப் பருவம் நினைவில் ஊஞ்சலாடும். அவ்வளவுதான்.

துளசிமணி சித்திக்கு ஒரு பெண்; பாப்பு சித்திக்கும் ஒரு பெண். சித்திகளின் மகள்கள்தான் என்றாலும் அவர்களைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பள்ளி, கல்லூரி என அவர்கள் பிஸியாகிவிட, வேலை, குடும்பம் என நாங்களும் ஒதுங்கிவிட அவ்வப் போது அவர்களை நினைத்துக் கொள்வதோடு சரி. 

சென்ற ஞாயிற்றுக்கிழமை துளசிமணிச் சித்தி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். ஈரோட்டில் வீடு கட்டிவிட்டார்கள். புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பதற்காக வந்திருந்தார். தனது மகள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் சென்ல்வதாகவும், கணவருக்கு இன்னும் ஓராண்டில் பணி ஓய்வு கிடைக்கப் போவதாகவும், கிட்டத்தட்ட வாழ்வில் பெரும்பாலான கடமைகளை தான் வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும்- அத்தனை சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். பாப்புச் சித்தியின் மகளும் கல்லூரியில் சேர்ந்துவிட்டாளாம். அவர்களும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று பூரித்தார். இரவு பேசிவிட்டு கிளம்பும் போது வெகுநேரமாகிவிட்டது.  

ஒரு வாரம் ஆகிவிட்டது. நேற்று வழக்கம் போல அலுவலகப் பணியில் இருந்த போது ஒரு ஃபோன். துளசிமணிச் சித்தி இறந்துவிட்டாராம். தூக்கி வாரிப் போட்டது. துக்கம் தொண்டையை அடைக்கத் துவங்கியது. காரணம் கேட்ட போது சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்றார்கள். காலன் அதோடு நிற்கவில்லை. பாப்பு சித்தியின் கணவரையும், பாப்பு சித்தியின் மகளையும் சேர்த்து வாரிக் கொண்டான்.பாப்பு சித்திக்கும், துளசிமணிச் சித்தியின் மகளுக்கும் பலத்த அடி. இப்பொழுது மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

ஐந்து பேரும் காரில் போயிருக்கிறார்கள். ஏதோ ஒரு வாகனத்தை முந்த முயன்ற போது எதிரில் வந்த வாகனத்தில் மோதி விபத்து நிகழ்ந்திருக்கிறது. மூன்று பேரை பறித்துக் கொண்டு, இரண்டு பேரை படுகாயப்படுத்திவிட்டு போயிருக்கிறது அந்த விபத்து.

விரும்புவதை மட்டும் எடுத்துக் கொள்ள வாழ்க்கை நம்மை அனுமதிப்பதில்லை, அதே சமயம் அது கொடுப்பதையெல்லாம் ஏற்றுக் கொள்வது நமக்கு அத்தனை எளிதானதாக இல்லை.

தகவல் தெரிந்த பிறகு நேற்று மதியத்திலிருந்து எதையும் செய்ய இயலவில்லை. மொத்தக் குடும்பத்தையும் ஒரு விபத்து அஸ்தமனாக்குவதை ‘விதி’ என்று ஆறுதல்படுத்திக் கொண்டு விட முடியவில்லை. இரண்டு குடும்பங்களின் இருபது ஆண்டுக் கனவுகள் வாகனத்தின் சக்கரங்களில் ரத்தச் சகதியோடு நசுக்கப்பட்டிருக்கிறது. நேற்றிலிருந்து எனது மொத்த பால்யமும் கருகியது போல ஒரு உணர்வு. பாப்புச் சித்தியின் மகள் குழலினியின் ஃபேஸ்புக் பக்கத்தை துழாவிக் கொண்டிருந்தேன். அந்த பிஞ்சுப்பெண்ணின் விரல்கள் தட்டச்சிய வாக்கியங்களின் மூலமாக சில வார்த்தைகளாவது அவளோடு பேச வேண்டும் எனத் தோன்றியது. அவளுக்கு காது கேட்கவில்லை. அவளுடனான பேசும் முயற்சியில் எனது மொத்த இரவும் தீர்ந்திருந்தது. அவர்களின் மொத்த வாழ்வும் தீர்ந்துவிட்டது என்று புரிந்த போது தூக்கமே வராமல் தூங்கிப் போயிருந்தேன்.

சொல்லியடித்தால் அது கில்லிதான்..


“பையன் புத்திசாலி, ஐ.ஏ.எஸ் கூட ஈஸியா பாஸாகிடுவான்...அதனால் அவன் கலெக்டர்தான் ஆக வேண்டும்” இப்படி உசுப்பேத்தி ரணகளமாக்கும் பெற்றோருக்கும் உற்றோருக்கும் ஒரு அட்வைஸ் செய்யச் சொன்னால் என்ன சொல்வீர்கள்? 

நானாக இருந்தால் “Please..கொஞ்சம் அடங்குங்க” என்பேன்.

+2 முடிக்கும் மாணவர்கள் கல்லூரிப் படிப்பில் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கட்டும். ஆனால் அதை அவர்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டும். ஐ.ஏ.ஏஸ் ஆனாலும் சரி; ஏரோநாட்டிகல் சயின்ஸானாலும் சரி- அந்த ஆர்வம் மாணவர்களிடமிருந்துதான் வர வேண்டும். அதை விட்டுவிட்டு நமது விருப்பத்தை எல்லாம் பிள்ளைகளிடம் திணிக்கக் கூடாது.
‘நான் கலெக்டராக நினைத்தேன். என்னால்தான் முடியவில்லை அதனால் எனது மகனாவது கலெக்டர் ஆகவேண்டும்’ என்று அழிச்சாட்டியம் செய்வது போன்ற கொடுமை வேறெதுவும்  இருக்க முடியாது. 

பையன் பத்தாம் வகுப்பில் 450 வாங்கியிருப்பான். அவனுக்கு பொருளாதாரமோ அல்லது வணிகவியலோ படிக்கலாம் என்ற விருப்பம் இருந்திருக்கும். ஆனால் இங்குதான் 425  மதிப்பெண்ணைத் தாண்டிவிட்டால் முதல் க்ருப்பில்தான் சேர வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆயிற்றே. பொடனியில் கையைப் வைத்துத் தள்ளி ஃபர்ஸ்ட் க்ரூப்பில் சேர்த்திருப்பார்கள்.  அதோடு நில்லாமல், +2வில் 1150 மதிப்பெண்களைத் தாண்டி விட வேண்டும் என அடுத்த இரண்டு வருடங்களுக்கும் அவன் கழுத்தை நெரிப்பார்கள். கடைசியில் அவன் நொந்து 800+  மதிப்பெண்களோடு நூடுல்ஸ் ஆகிவிடுவான். அவ்வளவுதான். சோலி சுத்தம்.

இக்பால் சிங் தலிவால்- இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 1996 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் முதல் ரேங்க் வாங்கியவர் யாரென்று தேடினால் இந்தப் பெயரை கேள்விப்படக்  கூடும்.

ஆமாம். அந்த ஆண்டு இக்பால்சிங்தான் சிவில் சர்வீஸஸ் தேவில் முதல் ரேங்க். 

இக்பால் சிங் பள்ளிப் படிப்பிலேயே பட்டாசு கிளப்பியவர். அந்த படி படித்ததற்கு நாமாக இருந்தால் அடுத்த குறி டாக்டர் அல்லது இஞ்ஜினியராக இருந்திருக்கும். ஆனால் இக்பால் சிங் தலிவால் டாக்டரும் ஆகவில்லை, இஞ்ஜினியரும் ஆகவில்லை. பொருளாதாரம் படித்தார். டெல்லி யுனிவர்சிட்டியிலேயே ‘தல’தான் முதல் ரேங்க். அடுத்து எம்.ஏவிலும் அடித்து தூள் கிளப்பிவிட்டு அதே ஆண்டு எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் 229வது ரேங்க். ஆனால் அதோடு திருப்தியடையவில்லை. அதற்கு அடுத்த ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வெழுத அதில் முதல் ரேங்க்கை அள்ளி எடுத்தார். ஐ.ஏ.எஸ் தேர்வில் பாஸ் செய்வதற்கு கூட ஆளாளுக்கு ஐந்து முறை, ஆறு முறை முக்கிக் கொண்டிருக்க இரண்டாவது முறையே இந்திய அளவில் முதல் ரேங்க் எடுக்கக் அவர் சொன்ன ஒரே காரணம் “ஆர்வம்”. பொருளாதாரத்தில் அவருக்கு இருந்த ஆர்வம்தான் அவரை உச்சாணிக் கொம்பில் தூக்கி நிறுத்தியது.

ஐ.ஏ.எஸ் பயிற்சியை தமிழ்நாடு Cadre இல் வெற்றிகரமாக முடித்துவிட்டு இக்பால் சிங் பணிக்கு சேர்ந்த இடம் கோபிச்செட்டிபாளையம். துணைக் கலெக்டராக வந்து சேர்ந்தார். அப்பொழுது  நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். எனது தமிழாசிரியர் பாரிமணியம்தான் அவருக்கு தினமும் தமிழ்க் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் என்பதால் அவர் மூலமாக அவ்வப்போது  இக்பால் சிங்கிடம் பேசியிருக்கிறேன். அப்பொழுது எனக்கு ஆங்கிலம் பேச வராது. துணைக் கலெக்டருக்கு தமிழ் முழுமையாகத் தெரியாது என்பதால் இரண்டு பேருமே உளறிக் கொள்வோம்.  வீட்டில் ‘துணைக் கலெக்டரிடம்’ பேசுவேன் என்று சொன்ன போது யாருமே நம்பவில்லை. பிறகு அவர் பிறந்த ஊர், அவர் வாக்கிங் அழைத்து வரும் நாய்க்குட்டியின் பெயரை எல்லாம்  சொல்லத் துவங்கிய போது வீட்டில் எனக்கு மரியாதை உண்டாகியிருந்தது. அவர்தான் நான் நினைவு தெரிந்து பார்த்த முதல் ‘கில்லி’.

அனுமதியில்லாத கடைகளை தூக்குவதும், மணல் கடத்தல் லாரிகளை மடக்குவதும், அரசியல்வாதிகளை அடக்குவதுமாக இக்பால்சிங் தலிவால் எங்கள் ஏரியாவில் கதாநாயகன் ஆகிக் கொண்டிருந்தார். ‘அதிகாரிகள் ஆரம்பத்தில் இப்படித்தான் துள்ளுவார்கள் பிறகு அடங்கிவிடுவார்கள்’ என்று விமர்சித்தார்கள். விமர்சித்தவர்களின் முகத்தில் தயவுதாட்சண்யம் இல்லாமல் கரியைப் பூசினார். அவர் நினைத்திருந்தால் ஆட்களை மிரட்டியும், தனது பாக்கெட்டை நிரப்பியும் ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் ‘அடங்காப்பிடாரி’ என்பதைத்தான் தொடர்ந்து தனது அடையாளமாக்கிக் கொண்டிருந்தார். 

தனது வேலையோடு சேர்த்து கிராமங்களின் சமூக-பொருளாதார நிலை குறித்தான கட்டுரைகளை எழுதினார். ஈரோடு மாவட்டத்தின் மலைவாழ் பிரதேசங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்  குறிப்புகளை உருவாக்கினார், நிலச் சீர்திருத்தங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். கவனித்துப் பாருங்கள். இந்தச் செயற்பாடுகள் அனைத்துமே அவரது விருப்பமான பொருளாதாரவியல் சார்ந்தே இருந்தது.

இதன் பிறகு சில அரசுத் துறைகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தார். அப்பொழுதும் அவர் யாருக்கும் ‘அடங்கவில்லை’ என்றுதான் பேசிக் கொண்டார்கள். அவரை நம்மவர்கள் பந்தாடியிருக்கக் கூடும் அல்லது தனது பொருளாதார ஆர்வப் பசிக்கு ‘பெஞ்ச் தேய்க்கும்’ வேலைகளின் மூலமாக சோறு கிடைக்காமல் திணறியிருக்க வேண்டும். அவர் செய்த காரியம் சிம்பிளானது. ஐ.ஏ.எஸ்ஸைத் தூக்கி எறிந்துவிட்டு அமெரிக்கா போய்விட்டார். 

இப்பொழுது பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. ஐ.ஏ.எஸ் என்பது அந்தத் தேர்வில் ஜெயித்து வரும் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் கனவு. அந்தக் கனவை நான்கைந்து ஆண்டுகளில்  ஒருவர் தூக்கியெறிந்தார் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? அதுவும் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தவர் .அவர் விரும்பியிருந்தால் அரசியல்வாதிகளின் காலை நக்கிக்  கொண்டு சைரன் வைத்த காரும், கஜானா நிறைய பணமுமாக இருந்திருக்க முடியும். ஏதாவது துறையில் ‘செகரட்டரி’ ஆகி பதவியின் பந்தாவிலும், பணத்தின் குளுமையிலும்  வாழ்க்கையின் மீதி நாட்களை ஓட்டியிருக்க முடியும்.

ஆனால் அதிகாரம், பதவி, பணம் என அத்தனையும் துறந்த இக்பால் சிங் தாலிவால் இப்பொழுது அமெரிக்காவின் நெம்பர்.1 பல்கலைக்கழகமான மாசச்சூசெட்ஸில் பொருளாதாரத் துறையில்  பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இப்பொழுதும் கூட அவரிடம் ஏன் ஐ.ஏ.எஸ்ஸைத் துறந்தீர்கள் என்று கேட்டால் அவர் சொல்லக் கூடிய காரணம் “ஆர்வம்” என்பதாக இருக்கும் என  நம்புகிறேன்- பொருளாதாரத் துறையில் அவருக்கு இருக்கும் ஆர்வம்.

இப்பொழுது இக்பால் சிங் தலிவாலைப் பற்றிக் குறிப்பிடக் காரணம்- ஆர்வம் மட்டுமே ஒருவனது கல்வியையும், வாழ்க்கையும் நிர்ணயிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை  வலியுறுத்துவதற்காக. அப்படி மட்டும் அமைந்துவிட்டால் அந்தத் துறையில் அவன் ‘கிங்’ ஆகிவிட முடியும். எங்கெல்லாம் நாம் அரைகுறையாக இருக்கிறோமோ அங்கெல்லாம்தான் நாம்  அடுத்தவனுக்கு பயப்படுவோம். எங்கெல்லாம் நாம் கோலோச்சும் அளவுக்கு ‘சப்ஜெக்டை’ அறிந்து வைத்திருக்கிறோமோ அங்கெல்லாம் யாரைக் கண்டும் பயப்பட மாட்டோம். கோலோச்ச  வேண்டுமானால் அந்தத் துறையில் ஆர்வம் இருக்க வேண்டும். அந்த ஆர்வம்தான் கற்பதற்கான மனநிலையை உருவாக்கும். இந்த கற்றல்தான் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். 
அந்தத் தன்னம்பிக்கைக்கு ஒரே வழி- நமக்கு பிடித்த, நமக்கு ஒத்துவரக் கூடிய துறையைத் தேர்ந்தெடுப்பது மட்டும்தான். 

உங்களின் மகனோ அல்லது மகளோ அவர்களுக்கு விருப்பமான துறையத் தேர்ந்தெடுப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும். ஜெயிப்பதையும் தங்கள் துறையில் கில்லியடிப்பதையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!