Apr 30, 2013

உன்னையோட ஒரே புராணமா போச்சுடா


'உன்னையோட ஒரு புராணமா போச்சுடா' என்பதே அம்மா தன் வாழ்நாளில் அதிகபட்சமாக உபயோகப்படுத்திய வசனம் ஆகிவிடும் போலிருக்கிறது. காரணங்களை பட்டியலிடச் சொன்னால் அது வெகு நீளமாக இருக்கக் கூடும். குத்துமதிப்பாகச் சொன்னால் கூட ‘கோபப்படுகிறான், மற்றவர்கள் மீது ‘வள், வள்’ என விழுகிறான், எங்கோ இருக்கும் எரிச்சலை எல்லாம் வீட்டில் கொண்டு வந்து கொட்டுகிறான்’ etc.,etc.என்று தொடரக் கூடும்.

‘நாய்க்கு வாழ்க்கைப்பட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்’ என்பது போல என்னைப் பெற்றால் அனுபவித்துத்தானே ஆக வேண்டும் என்று அசால்ட்டாக விட முடிவதில்லை. வீட்டில் இருப்பவர்களைப் பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. ஒரு ஆராய்ச்சிக்கு பிறகு கோபத்திற்கான முக்கியமான காரணத்தை கண்டுபிடித்திருக்கிறேன். பசியோடு வீட்டிற்கு போனால் ஏதாவது ஒரு சில்லி காரணத்திற்காக கோபம் வந்துவிடுகிறது. அதே மாலையில் ரோட்டுக்கடையில் பஜ்ஜி, போண்டா என்று வயிற்றை நிரப்பிவிட்டு போனால் அன்றைய தினம் பெரும்பாலும் ஸ்மூத்தாகவே முடிகிறது. ஒரு பெரிய பிரச்சினை சின்ன முட்டை போண்டாவுக்குள் முடிந்துவிடுகிறது என ஆராய்ச்சியை முடிப்பதற்கு குதூகலமாக இருக்கிறது.

ஓகே. சுயபுராணம் படிப்பதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை. இது வேறொரு புராணம்- பெரிய புராணம். 

திடீரென்று பெரியபுராணத்தின் மீது நினைப்பு வரக் காரணம் சமீபத்தில் வாசித்த ‘கீ பார்ட்டி’ பற்றிய செய்தி. கீ பார்ட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அது இன்னொரு புராணம். கணவர்களும் மனைவிகளுமாக பார்ட்டியில் கலந்து கொண்டு கும்மாளம் அடிப்பார்கள். பார்ட்டியின் இறுதியில் ஆண்கள் தங்கள் கார் செயின்களை போட்டு குலுக்குவார்கள். குலுக்கப்பட்ட கீசெயின்களிலிருந்து ஒவ்வொரு பெண்ணும் தலா ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தான் தேர்ந்தெடுத்த செயினுக்குரியவனுடன் அன்றைய தினத்தை அந்தப் பெண் கழிப்பார். 

கல்லூரி காலத்திலேயே இதை கேள்விப்பட்டதுண்டு. இப்பொழுதுதான் செய்தித்தாளில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தவனுடன் தன் மனைவியை அனுப்பி வைக்கும் இப்படியான விவகாரங்கள் நமக்கு ஒன்றும் புதிதானதில்லை. நமது ஆட்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்கள். தேடிப்பிடித்தால் பெரிய புராணத்தில் இருக்கிறது.

இயற்பகையார் என்றொரு நாயன்மார். அறுபத்து மூன்று பேர்களில் இவரும் ஒருவர். சிவனடியார் ஒருவர் தனது மனைவியைக் கேட்டார் என்று ‘தாராளமாக எடுத்துக்கோ’ என்று அனுப்பி வைத்திருக்கிறார். இந்தக் கூத்தை வேடிக்கை பார்த்த சொந்தக்காரர் ஒருவர் ‘அடப்பாவி, இதெல்லாம் அடுக்குமா?’ என்று கேட்க, ‘நீ யாருடா அதைக் கேட்க?’ என்று அவரையும் ஒரே அடியாக அடித்துக் கொன்றுவிட்டார். இப்படி இயற்கைக்கு மாறாக  ‘பிம்ப்’ வேலையும், கொலையும் செய்ததால் அவருக்கு ‘இயற்பகையார்’ என்று பெயரிட்டு நாயன்மாரும் ஆக்கிவிட்டார்கள். தனக்கு மனைவியாகிவிட்டாள் என்பதற்காகவே எவனுக்கு வேண்டுமானாலும் அனுப்பி வைக்கும் உரிமை இருக்கிறது என்பது எத்தனை பெரிய ஆணாதிக்கம்?

இந்தக் காலத்தில் சிவன் கோவில்களில் சிலைகளாக மாறிவிட்ட நாயன்மார்களின் கதைகளை வாசித்தால் ‘பகீர்’கதைகள் இருக்கின்றன. சிவனடியார் கேட்டார் என்பதற்காக தனது குழந்தையை அறுத்து சமையல் செய்தது, லிங்கத்தில் ரத்தம் வழிகிறது என கண்களை தோண்டி வைத்தது, எலும்பு தேய சந்தனம் தேய்த்தது, சாமிக்கு போட்ட பூவை முகர்ந்து பார்த்ததால் தனது மனைவியின் மூக்கை அறிந்தது என சேக்கிழார் எழுதி வைத்திருக்கும் நாயன்மார்களின் புராணத்தின் கதைகளை சென்சார் செய்தால் ஏகப்பட்ட கதைகள் ‘A' சர்டிபிகேட் வாங்கும். அத்தனை வன்முறை.

இந்தக் கதைகள் எல்லாம் நடப்பதற்கு சாத்தியமானவைதான். சிவனடியார் வேஷம் போட்டு வந்தவன் மனைவியைக் கேட்க அந்த நாயன்மார் ‘எடுத்துக்கோ’ என்று சொல்லியிருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதோடு கதையை முடித்தால் ‘தெய்வாம்சம்’ இல்லாமல் போய்விடக் கூடும் என்பதற்காக பைனல் டச்சாக ‘சிவனடியார் வேடத்தில் வந்தது வேறு யாருமில்லை; சிவனேதான்’ என்று ஒவ்வொரு கதையிலும் எழுதி வைத்துவிட்டார்கள்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. ஏனாதிநாதர் என்றொருவர் இருந்திருக்கிறார். அவரது எதிரி அதிசூரன். திருநீறு அணிந்து வந்தான் என்பதற்காகவே “என்னை கொன்று கொள்” என தனது எதிரிக்கு அனுமதி அளித்தாராம். அதே போலத்தான் மெய்ப்பொருள் நாயனாரை சிவனடியார் வேடம் போட்டு வந்தவன் கொன்றிருக்கிறான். திருநீறு அணிந்தவன் என்பதற்காக நம்புவதாக இருந்தால் இந்தக் காலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்பவனும், கந்துவட்டிக்காரனும்தான் மங்களகரமாக இருக்கிறார்கள்.

மற்ற  பிரிவுகளை மட்டம் தட்டுவதற்காக சைவத்தினருக்கு ஹீரோயிஸக் கதைகள் தேவைப்பட்டிருக்கின்றன. அதை நாயன்மார்களின் கதைகளாகவும், திருத்தொண்டர்களின் புராணமாகவும், சிவனடியார்களின் அதி அற்புதங்களாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள். நம்மவர்களும் காலங்காலமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அந்தக்காலத்தின் வாழ்முறைகளையும், சமூக நிலவரங்களையும் புரிந்துகொள்ள இந்தக் கதைகளையெல்லாம் விட்டால் நமக்கு வேறு நாதி கிடையாது. எப்படியோ போகட்டும். 

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்தால் என் பிழைப்பு நாறிவிடும். 

தென்னாடு உடைய சிவனே போற்றி! எல்லோருக்கும் இறைவா போற்றி!!

Apr 29, 2013

பப்ளிக் கிஸ்


அசைவம் பழக்கப்பட்ட வீட்டு நாய்க்கு குறிப்பிட்ட இடைவெளியில் கடிப்பதற்கு எலும்பை கொடுத்துவிட வேண்டுமாம். இல்லாவிட்டால் ‘எலும்பு ஏக்கம்’ பிடித்து சோறு தின்னாமல், அடிக்கடி கோபப்பட்டு அழிச்சாட்டியம் செய்துவிடும் என்பார்கள். யோசித்துப் பார்த்தால் இந்த விஷயத்தில் நானும் அதே வகையறாதான். வாரம் ஒரு முறை கோழிக்குழம்போ, எலும்புச்சாறோ கிடைக்காவிட்டால் அடுத்த வாரம் ஒழுங்காக சோறு இறங்குவதில்லை. சர்க்கரையோ, ரத்த அழுத்தமோ வரும் வரைக்கும் வகைதொகையில்லாமல் வயிற்றுக்கு ஈயலாம் என்பதுதான் திட்டம்.

நேற்று ஞாயிற்றுக்கிழமையல்லவா? கறிநாள். மத்தியானத்திற்கு கோழி வருவலும் ஆட்டுக்கறி குழம்பும் செய்து வைத்திருந்தார்கள். ஆனால் விதி விளையாட வேண்டும் என்று நினைத்தால் நோபாலில் கூட சிக்ஸர் அடித்து திணற அடிக்கும். அப்படித்தான் சோற்று நேரத்தில் ஒரு சோலி வந்து சேர்ந்துவிட்டது. மணி ஒன்றரை ஆகியிருந்தது. வெறும் குழம்பு மட்டும் ஊற்றி அவசரமாக காரியத்தை முடித்துவிட்டு வெளியே கிளம்ப வேண்டியதாகிவிட்டது. அங்கிருந்து கப்பன் பூங்காவில் ஒரு கூட்டம். முடித்துவிட்டு வீட்டிற்கு போனால் நிம்மதியாக ஒரு வாய் பசியாறலாம் என்று நினைத்திருந்தேன். 

சொன்னது போலவே விதி கிரிஸ் கெயிலாக உருமாறியிருந்தது. வீட்டிற்கு திரும்பி சமையலைறைக்குச் சென்றால் அடுப்பில் தக்காளிச் சட்னி கொதித்துக் கொண்டிருந்தது. நேரடியாக கேட்காமல் ஃப்ரிட்ஜ்ஜில் தேடிப்பார்த்தால் எதுவும் சிக்கவில்லை. கறி ஆக்கியிருந்த பாத்திரங்களையும் கழுவி குப்புற கவிழ்த்திருந்தார்கள். ஏதோ விபரீதம் நடந்திருப்பது புரிந்தது. இனியும் கேட்காமல் இருக்கத் தேவையில்லை என்று “ராத்திரிக்கு என்ன சாப்பாடு” என்றேன். 

“பணியாரமும் தக்காளிச் சட்னியும்”

“கறிக்குழம்பு?”

“அதுவா. நீங்க போனதுக்கப்புறம் ஊர்ல இருந்து வந்திருந்தாங்க”

குண்டு விழுந்துவிட்டது. கைகள் லேசாக நடுங்கத் துவங்கின. கஞ்சாக்காரனுக்கு கஞ்சா கிடைக்காததால் வரும் நடுக்கம் அது. சில்லி சிக்கனாவது தின்றாக வேண்டும் போலிருந்தது. ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். எங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கும் மெயின் ரோட்டில் சில தள்ளுவண்டி கடைகளில் சில்லி சிக்கன் கிடைக்கும். அந்தச் சாலையில் ஒரு பிராந்திக் கடை ஒன்றும் இருக்கிறது. அதன் அருகில்தான் சில்லிசிக்கன், சில்லி மீன் எல்லாம் பொறிப்பார்கள். காரமாக இருக்கும். ஆனால் சுவையாக இருக்குமா, சுகாதாரமாக இருக்குமா என்றெல்லாம் கேட்பது ஒருவிதத்தில் நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்வது போலத்தான். 

அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆப்பிரிக்க க்ரூப் ஒன்று அதே சாலையில் சுற்றிக் கொண்டிருந்தது. அதே போன்றதொரு க்ரூப் எங்கள் லே-அவுட்டில் இருக்கும் ஒரு அபார்ட்மெண்டில்தான் தங்கியிருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பைக்கில் லிப்ட் கொடுத்திருக்கிறேன். எந்த நாடு என்று விசாரித்த போது கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் பெயர் ஒன்றைச் சொன்னான். ஞாபகத்தில் நிற்கவில்லை. இங்கு ஏதோ ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அவன் சொன்னதிலேயே முக்கியமான விஷயமாகத் தெரிந்தது ஒன்றுதான். சில மாணவிகளும் இந்த பையன்களோடு தங்கியிருக்கிறார்களாம்.

சாலையில் நின்று நிழற்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை பெரிதாக அலட்சியம் செய்யாமல் கண்ணும் கருத்துமாக சில்லி சிக்கனுக்கான கடையை நோட்டமிட்டுக் கொண்டிருந்த போதுதான் காணுதற்கரிய அந்தக் காட்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒரு ஆப்பிரிக்க பையனும் அவனது தோழியும் முத்தமிட்டுக் கொண்டிருக்க அதை இன்னொருத்தி படம் எடுத்துக் கொண்டிருந்தான்.

பப்ளிக் கிஸ்.

போகிறவர்கள் வருபவர்களெல்லாம் ‘சைட்’ கண்களில் நோட்டமிட்டார்கள். இந்தப் பாவிகளுக்கு வேறு நல்ல இடமா கிடைக்கவில்லை? இந்த மெயின்ரோட்டில் அதுவும் பிராந்திக் கடைக்கு முன்பாக நின்று அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த போதே ஒரு காவலர் வந்துவிட்டார். காக்கிச் சட்டை போட்ட காவலர் இல்லை. கலாச்சாரக் காவலர். இந்த நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவை எந்தவிதத்திலும் பங்கப்படாமல் பார்த்துக் கொள்வதற்காக அவதாரம் எடுத்திருப்பார் போலிருக்கிறது. எனர்ஜி ட்ரிங்கும் அருந்தியிருந்தார்.

அந்த ஆப்பிரிக்கக் குழுவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். நான் நூறு கிராம் சிக்கனை கையில் ஏந்தி கடிக்க ஆரம்பித்திருந்தேன். இரண்டு ஆப்பிரிக்க பையன்களில் ஒருவனுக்கு கையில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்றிருக்கின்றன போலிருக்கிறது. முறுக்கி காவலரை ஒரு குத்துவிட்டுவிட்டான்.  ‘குப்’. அவ்வளவுதான்.

ஆப்பிரிக்க பையன் இருக்கும் முரட்டுத் தோற்றத்திற்கு என்னை மாதிரியான நோஞ்சான்களை குத்துவிட்டிருந்தால் வயிற்றுக்குள்ளிருக்கும் குடல் வாய் வழியாக வெளியே முட்டியிருக்கும். ஆனால் காவலரும் ஓரளவும் தெம்பான ஆள்தான். அதனால் குடல் வெளியே வரவில்லை. ஆனால் வயிற்றைப் பிடித்தபடியே குத்துக்காலிட்டு அமர்ந்துவிட்டார்.

கன்னடக்காரனை யார் அடித்தாலும் கூட்டம் சேர்ந்து கும்மிவிடுவார்கள். அதுவும் இவன் ஆப்பிரிக்க பையன். அதைவிடவும் முக்கியம் பிராந்திக்கடைக்கு முன்பாக அடித்திருக்கிறான். ஈசல் பூச்சி போல பிராந்திக்கடைக்குள் இருந்து வெளியே வந்துவிட்டார்கள். கூட்டத்தில் இருந்த ஆட்டோக்காரன் என்ன ஏது என்றெல்லாம் கேட்கவே இல்லை. ஆப்பிரிக்கப் பையனை ஒரு அறை விட்டான். ஆப்பிரிக்க பையன் கையை ஓங்கினான். ஆனால் நிலைமை அவனது கட்டுப்பாட்டிற்குள் இல்லை. ஆளாளுக்கு கும்மிவிட்டார்கள். மற்ற மூவருக்கும் அடி எதுவும் விழவில்லை. ஒருவிதத்தில் அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். ஆனால் இன்னொரு விதத்தில் அடி வாங்கும் பையன் ஒரு பெரும் துரதிருஷ்டசாலி. மற்ற மூவருக்கு விழ வேண்டிய அடியையும் வாங்கிக் கொண்டிருந்தான். 

சிக்கனை பாதியிலேயே வைத்துவிட்டு கடைக்காரருக்கு இருபது ரூபாயைக் கொடுத்துவிட்டு அருகில் சென்ற போது குரூரமாக இருந்தது. ஆனால் வேடிக்கைதான் பார்க்க முடியும். தெரியாத்தனமாக தமிழில் பேசினால் எனக்கும் இரண்டு மூன்று அடி சேர்ந்து விழக் கூடும். அந்தப் பையனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் யாரோ சிலர் “சாக்கு சாக்கு” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். “போதும்” என்று அர்த்தம். ஆனால் யாரும் கேட்கும் மனநிலையில் இல்லை.

இனி என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஒரு முத்தமும் ஒரு குத்தும் இவனை வாழ்நாளின் உச்சபட்ச துன்பத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. மொழி தெரியாத ஊரில் முகம் தெரியாத ஆட்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இனி அடிப்பதை நிறுத்தினாலும் கூட வாங்கியிருக்கும் அடிகளுக்கு மாதக் கணக்கில் சிகிச்சை எடுக்க வேண்டும். ஒரு கட்டத்திற்கு மேல் “ஸாரி.” என்று கையெடுத்துக் கும்பிட்டான். 

அங்கிருந்தவர்கள் அத்துமீறிக் கொண்டிருந்த போது நல்லவேளையாக ரோந்து போலீஸ்காரர்கள் இரண்டு பேர்கள் வந்து சேர்ந்தார்கள். கூட்டத்தை விலக்க முயற்சித்தார்கள். அவர்களாலும் பெரிய வெற்றியடைய முடியவில்லை. பிறகு ட்ராபிக் போலீஸ் ஜீப்பும் வந்து சேர்ந்த போது அடிக்கு ‘ப்ரேக்’ கொடுத்தார்கள். போலீஸார் சமாதானம் பேசிக் கொண்டிருந்த போது அவனை யாரும் அடிக்கவில்லை. மற்ற மூவரும் அவனைத் தாங்கிப் பிடித்தவாறு கூட்டத்தை விட்டு விலக்கினார்கள்.

இந்த விவகாரம் நடந்து கொண்டிருந்த இடம் சர்வீஸ் ரோடு. நடுவில் இருந்த தடுப்பானைத் தாண்டினால் மெயின் ரோடு. பாதசாரிகள் சாலையைத் தாண்டுவதற்கு தோதாக ஒரு இடத்தில் உடைத்து வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். இன்னமும் போலீஸார் பேசிக் கொண்டிருந்தார்கள். கன்னடக் காரர்கள் ஆப்பிரிக்கர்களை கூட்டத்திற்குள் வரும்படி மிரட்டினார்கள். அவர்கள் உள்ளே வரத் தயங்கினார்கள். சில வினாடிகள்தான் இருக்கும். ஒரு ஆல்டோ கார் மிக வேகமாக வந்தது. ஆப்பிரிக்கர்களின் ஓரமாக நின்றது. கூட்டத்தினர் சுதாரிப்பதற்குள் அவசர அவசரமாக காரைத் திறந்து நான்குபேரும் தங்களை உள்ளே திணித்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். 

சிலர் அந்தக் காரைப் பிடிப்பதற்காக ஓட எத்தனித்தார்கள். ஒருவன் கார் அருகிலேயே போய்விட்டான். சிலர் கத்தினார்கள். ம்ஹூம். வேலைக்கே ஆகவில்லை. பட்சிகள் பறந்து விட்டன. ஒருவனுக்கு அடி விழுந்த போது மற்றவர்கள் கார்காரனுக்கு தகவல் கொடுத்திருக்கக் கூடும். மிகத் துல்லியமாக திட்டமிட்டு அரக்கர்களிடமிருந்து தப்பித்துவிட்டார்கள். போலீஸாருக்கும் நிம்மதியாக இருந்திருக்கக் கூடும். அவர்கள் கூட்டத்தை கலைந்து போகச் சொன்னார்கள்.  மீண்டும் ஈசல் பூச்சிகள் பிராந்திக் கடைக்குள் நுழைந்து கொண்டன. இப்பொழுது அந்த இடம் இயல்பு நிலைக்கு வர சில வினாடிகள் மட்டுமே தேவையானதாக இருந்தது.  

Apr 27, 2013

பெங்களூர் கலந்துரையாடல்


வணக்கம்.

நாளை (April 28, 2013-ஞாயிற்றுக்கிழமை) மாலை நான்கு மணிக்கு பெங்களூரு கப்பன் பூங்காவில் (ப்ரஸ் க்ளப் எதிரில்) நண்பர்கள் சந்திப்பு, உரையாடல் மற்றும் சுஜாதா தேசிகனின் சிறுகதைத் தொகுப்பான “அப்பாவின் ரேடியோ” நூல் வெளியீடு திட்டமிடப்பட்டிருக்கிறது.

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
Apr 26, 2013

சுஜாதா


உங்களுக்கு இந்நேரம் அநேகமாகத் தெரிந்திருக்கும். 

ஆம்! அதே விவகாரம்தான். 

இந்த வருடத்திற்கான சுஜாதா இணையவிருதுக்கு நிசப்தம் தளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இது உயிர்மையும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் விருது. பத்தாயிரம் ரூபாய் பணமும், பாராட்டு பத்திரமும் தருவார்கள். அதுவா முக்கியம்? விருதுக்கு நிசப்தத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? அதுதான் முக்கியம்.

சென்ற மாதம் மனுஷ்யபுத்திரனை விமர்சித்து எழுதியிருந்தேன். இன்னும் கொஞ்சம் ரிவர்ஸ் அடித்தால் சென்ற வருடத்தில் இதே நிகழ்வுக்காக “கவிப்பேரரசு” என்று பேனர் வைத்ததை நக்கலடித்திருந்தேன்.  முந்தாநாள் ஆளுமைச் சிக்கல் என்றெல்லாம் என்னை நக்கலடித்து மனுஷ்ய புத்திரன் Facebook-இல் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அப்படியிருந்தும்...

உங்களுக்கு இருக்கும் அதே சந்தேகம்தான் எனக்கும்...

எப்படி கொடுத்தார்கள்? ஆண்டவனுக்கும் சுஜாதாவுக்கும்தான் வெளிச்சம். 

“நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்; நீ அழற மாதிரி அழுன்னு ரெண்டு பேரும் சேர்ந்து டகால்ட்டி காட்டுறீங்களா?” என்று நண்பர் சாத்தப்பன் கேட்டார். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. 

விருது வேறு; நடுவர் குழு வேறு; உயிர்மை வேறு; மனுஷ்ய புத்திரன் வேறு என்று அவர் பேசுவார். 

நிசப்தம் வேறு; அதற்கு வழங்கப்படும் விருது வேறு; வா.மணிகண்டன் வேறு என்று நாம் சொன்னால் அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு என்று விட்டுவிடலாம்.

மனுஷ்யபுத்திரனுக்கும், உயிர்மைக்கும், சுஜாதா அறக்கட்டளைக்கும் எனது அன்பு.

எழுத்தாளர் இரா.முருகன், ‘கற்றது தமிழ்’ இயக்குநர் ராம், பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான மனோஜ் மூவரும்தான் நடுவர்கள். நல்ல மனிதர்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு தலா கோடி புண்ணியம் கிட்டட்டும். 

கவனித்தீர்களா? யாருக்குமே நன்றி சொல்லவில்லை மிச்சம் பிடித்த அத்தனை நன்றிகளும் உங்களுக்குத்தான். வெந்ததைத் தின்றுவிட்டு விரலுக்கு வருவதையெல்லாம் ஒருவன் டைப் செய்து வைக்கிறான் என்றும் புறந்தள்ளாமல் ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடமாவது ஒதுக்கி வாசிக்கும் அத்தனை பேருக்கும் நன்றி. ஒவ்வொரு பதிவுக்கும் மின்னஞ்சல்கள் அனுப்பிய, அலைபேசியில் பேசிய அனைவருக்குமே டபுள் நன்றி. வயிற்றெரிச்சலின் காரணமாகவோ, நல்லெண்ணத்தின் காரணமாகவோ கிளம்பி வந்த வசைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் விடுவதற்கான அத்தனை உற்சாகத்தையும் ஓவர் டோஸாக ஊட்டிய உங்களுக்குத்தான் மொத்த நன்றிகளும்.

விருதுக்கான அறிவிப்பு வந்தவுடனேயே நிசப்தத்தில் இருந்து பத்து விருப்பமான பதிவுகளை தேர்ந்தெடுத்து “இதை அனுப்புங்க..விருது கிடைக்கும்” என்று மெனக் கெட்ட நண்பர் ராஜவெங்கடசுப்ரமணியனுக்கு ஸ்பெஷல் நன்றி.ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். நேரில் கூட பார்த்ததில்லை. 

சந்தோஷமாக இருக்கிறது. எளிய மனம் இப்படியான அங்கீகாரங்களில் குதூகலிப்பதுதானே இயற்கை. கொஞ்ச நேரம் குத்தாட்டம் போடட்டும் விடுங்கள்.

இனி? 

மே மூன்றாம் தேதி சென்னை செல்கிறேன். விருதை வாங்கி உங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். 

பிறகு?

விருதுக்கு சலம்பாத மனமும் இதற்கெல்லாம் ஸீன் போடாத குணமும் கிடைக்க வேண்டும் என ஊர் உலகில் இருக்கும் அத்தனை சாமிகளையும் வேண்டிக் கொள்கிறேன். Miles to go!

மற்றபடி எல்லாமும் எப்பவும் போலவே நடக்க வேண்டும்.

வாசியுங்கள், வாழ்த்துங்கள், விமர்சியுங்கள்.

நன்றி.

Apr 25, 2013

தம்பி...சாருவுக்கு பணம் அனுப்பியாச்சா?


“நெடு நெடுன்னு தடத்துல போகுதுன்னு நெனச்சானாம்; அது வழு வழுன்னு ஆத்துல போச்சாமா” இதை யாராச்சும் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? கேட்டிருக்காவிட்டாலும்  பிரச்சினையில்லை. இப்பொழுது கேட்டாகிவிட்டது. நாம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வேறு என்னவோ நடந்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் நெடு நெடு வழு வழு என்று  இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடரில் அந்தக் காலத்தில் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

சாரு நிவேதிதாவின் சமீபத்திய பதிவுகளை பார்த்தால் இந்த சொலவடை ஞாபகத்துக்கு வந்து சிம்மாசனம் போட்டுக் கொள்கிறது. ஆரம்ப காலத்தில் அவருடைய பதிவுகளைப் படித்துவிட்டு அவருக்கு உண்மையிலேயே பணக் கஷ்டமோ என்று நம்பித்தொலைத்துவிட்டேன். நல்லவேளையாக அப்படி நம்பிக் கொண்டிருந்த சமயத்தில் நானும் துட்டுக்கு லாட்டரி அடித்துக் கொண்டிருந்தேன்.  ‘இருந்திருந்தால் மட்டும் கொடுத்திருப்பியா?’ என்று கேட்டுவிடாதீர்கள். அதன் பிறகாக பிச்சையெடுக்கிறேன், பரதேசியாகத் திரிகிறேன், காஸ்ட்லி சரக்கு கிடைக்கவில்லை, எலாஸ்டிக் ஜட்டி கிடைக்கவில்லை என்று அவர் பஞ்சப்பாட்டாகவே பாடிக் கொண்டிருந்ததை திரும்பத் திரும்ப வாசிக்கும் போது இதெல்லாமே லுலுலாயிக்கு என்று புரிந்து கொள்ள முடிந்தது.

“கிட்னி காலியாகிவிட்டது டயாலிஸஸ் செய்ய ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள்” என்று கேட்டால் கூட காசு தராத நம் மனிதர்கள் இவருக்கு சரக்கடிக்க காசு அனுப்புவார்களா என்று  சந்தேகமாக இருக்கிறது. கொடுக்கிறவர்கள் இருந்தால் தாராளமாக கொடுக்கட்டும்? நாம் ஏன் வயிறு எரிய வேண்டும். ஆனால் பாருங்கள், இதுவரை தனது தளத்தில்தான் பஞ்சப்பாட்டை பாடிக் கொண்டிருந்தார் என்றால் இப்பொழுது asianage.com என்ற ஆங்கிலத் தளத்திலும் ஆரம்பித்துவிட்டார். ‘பணக்கார நாய் வளர்க்கிறேன் அதற்கு பிஸ்கோத்து வாங்கோணும்’என்கிற ரீதியில்.

உண்மையில் வருத்தமாக இருக்கிறது. சாரு மட்டும் இல்லை, இங்கு எல்லோருமே ஏதாவது விதத்தில் பில்ட் அப் செய்து கொள்கிறோம் என்றுதான் நினைக்கிறேன். இந்த கலாச்சாரத்தை  யார் தமிழில் ஆரம்பித்து வைத்தார்கள் என்று தெரியவில்லை. ‘எனது புத்தகத்துக்கு இதுவரை இருபத்திரண்டு பேர் விமர்சனம் எழுதியிருக்கிறார்கள்’, ‘எனது கதையைப் படித்துவிட்டு அந்த சினிமா டைரக்டர் பேசினார்’, ‘இந்த உதவி இயக்குனர் திரைக்கதை கேட்டார்’, ‘கண்கள் களைத்துப் போக உழைக்கிறேன்’ என்ற டயலாக்குகள் கணக்கு வழக்கில்லாமல் பெருகிக் கிடக்கின்றன.

எழுதுவதெல்லாம் பணம் சம்பாதிக்கத்தான் என்றால் அதற்கு வேறு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. எதற்காக எழுத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?  ஒருவன் எழுதவில்லையென்றால் யாருமே தூக்கு போட்டு சாகப் போவதில்லை, ஒருவனும் தீக்குளிக்க போவதில்லை, அதிகபட்சமாக ‘ஏன் எழுதுவதை குறைத்துக் கொண்டீர்கள்’ என கேட்பார்கள். அதற்கும் பதிலை எதிர்பார்க்க மாட்டார்கள். என்ன பதிலைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள். அவ்வளவுதான்.

மாறாக, எழுதினால்தான் ‘டென்ஷன்’ ஆவார்கள். நான்கு வருடமாக வலைப்பதிவு வைத்திருப்பவர்களெல்லாம் ‘பெரிய ரைட்டர்’ ஆகி அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். ‘பூனை குட்டி போடுவது போல எழுதுகிறான்; புலி ஆய் போவது போல எழுதுகிறான்’ என்பார்கள். அடுத்தவன் காலில் விழுந்தோ கையைப் பிடித்தோ வாரப்பத்திரிக்கையில் தொடர் எழுதுபவர்களெல்லாம் ‘உன் ஹேர்ஸ்டைல் சரியில்லை’ என்று அலம்பல் செய்வார்கள். (இங்கு ஹேர்ஸ்டைல் என்ற சொல்லை நாகரீகம் கருதி பயன்படுத்தியிருக்கிறேன்). எழுதுவதையும் எழுதிவிட்டு இந்த ஆட்கள் பேசுவதையும் கேட்டுத் தொலைக்க வேண்டும்.

சாரு எழுத ஆரம்பித்த போது நான் பிறந்திருக்க கூட மாட்டேன். ஆனால் கலாய்த்துக் கொண்டு திரிகிறேன். இப்படித்தான் எழுதுவதற்கு பணமும் கிடைப்பதில்லை, ஆளாளுக்கு லோலாயமும் செய்கிறார்கள். பிறகு எதற்கு சார் எழுத வேண்டும்?

எழுதுகிறவன் மட்டும்தான் உழைக்கிறானா என்ன? விடிய விடிய ஆட்டோ ஓட்டும் மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள். தூக்க முடியாமல் கல் சுமக்கும் ஆட்களை சர்வசாதாரணமாக  பார்க்க முடியும். தொடர்ச்சியாக மூன்று இரவுகள் தூங்காத மென்பொருள் ஆட்கள் இருக்கிறார்கள். சொல்லிப்பாருங்கள்- ‘அவர்கள் எல்லாம் பிழைப்பிற்காக உழைக்கிறார்கள்’ என்று  இடதுகையால் ஒதுக்கிவிடுவார்கள். எழுதுபவன் மட்டும் எதற்காக உழைக்கிறான்? புகழை விரும்புகிறான், உழைக்கிறான். எழுதுவதில் ஏதோ ஒரு சந்தோஷத்தை பெறுகிறான். அதற்காக விழிக்கிறான்.

அதை விடுத்து சமூகத்தை திருத்துவதற்காக எழுதுகிறேன் என்றெல்லாம் டூபாக்கூர் அடித்தால் யார் நம்புவார்கள்?. உண்மையில் அப்படியொரு எண்ணம் இருக்கும் எந்த எழுத்தாளனும் பில்ட்  அப் செய்து கொண்டு திரிவதில்லை.

சரி விடுங்கள்.

என்னை அடிக்க ஆளே இல்லை, எனக்கு புக்கர் பரிசு கிடைக்கும் என்பதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அகப்பையில் வர வேண்டும் இல்லையா?

தமிழில் என்னைத் தவிர எவனுக்கும் சுவாரசியமான எழுத்தே இல்லை என்று கலாய்க்கும் சாரு போன்ற முதிர்ந்த எழுத்தாளர்கள் ராஜுமுருகனை கிழிப்பது, உதவி இயக்குனரை கலாய்ப்பது  எல்லாம் அழகாகவா இருக்கிறது? ‘வட்டியும் முதலும்’ ஒரே டெம்ப்ளேட்தான். ஆனால் அத்தகைய ‘நெஞ்சுநக்கி’ வகையறா மேட்டரை எழுதவும் ஒரு திறமை வேண்டும்.  கட்டுரையையோ அல்லது பத்தியையோ வாசிப்பவர்களின் நெஞ்சை லைட்டாக நக்கிவிட வேண்டும். அதை ராஜூ முருகன் திறம்படச் செய்தார் என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக  வேண்டும்.

ஆரம்பித்த சொலவடைக்கே வந்துவிடுகிறேன். நமது நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன? சரியா? தவறா? விருப்பப்படும் திசையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோமா? இப்படி எந்தக்  கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைக்க போவதில்லை. காமெடியாக எதையாவது செய்து கொண்டிருந்தால் அதை சுட்டிக் காட்டுவதற்கான ஆட்கள் இங்கு மிகக் குறைவு. கமுக்கமாக  சிரித்துக் கொண்டு போய்விடுவார்கள் அல்லது புறம் பேசி சிரித்துக் கொள்வார்கள்.

விதிவிலக்காக சாருவையும், தமிழ்நாடு காங்கிரஸையும்தான் நேரடியாக கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இரண்டு பேருமே மாறுவதாகத் தெரியவில்லை.

வெயிட்...வெயிட்...முன்பொரு காலத்தில் இப்படியான லடாயில் “பப்ளிக் கக்கூஸ் மாதிரி blog நடத்துறானுக” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போனார். இப்பொழுதும் ஏதாச்சும்  சொல்லிவிட மாட்டார் என நம்புகிறேன். அப்படிச் சொன்னால் அதை “பிச்சைக்கார மடத்திலிருந்து சொல்லாதீங்க சார்” என்று சொல்லிவிட வேண்டியதுதான்.

Apr 23, 2013

சோழியன் குடுமி


பெங்களூரில் திப்பசந்த்ரா என்று ஒரு ஏரியா இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீகளா? இந்த ஏரியா வழியாக போகும் போது நேரம் கெட்டுக் கிடந்தால் ட்ராபிக் நெரிசலில் சிக்கி மெர்சல் ஆகிவிட வேண்டியிருக்கும். அவ்வளவு வளர்ச்சி- நமீதா வளர்ச்சி. அந்த நெரிசலின் வழியாகத்தான் முன்பெல்லாம் அலுவலகம் போவது வழக்கமாக இருந்தது. நெரிசலாக இருந்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் காரணம். இந்த இடத்தில் எந்த டபுள் மீனிங்கும் இல்லாமல் ‘மரங்கள் அதிகமாக இருக்கும்’ என்று புரிந்து கொள்வீர்களாக.

ஆனால் ஆன்னா ஊன்னா பைக்கோடு சேர்ந்து குட்டிக்கரணம் அடிப்பதும் யாராவது பார்த்தால் ‘கீழே விழுறது ஹாபிங்க’ என்று வழிவதுமாக பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் கண்ணுக்கு குளிர்ச்சி முக்கியமா, தழும்பு இல்லாத மூட்டுகள் முக்கியமா என்ற பட்டிமன்றம் வைக்க வேண்டிய நிலை வந்த போது மூட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். பாதையை நான் மாற்றிக் கொண்டது முக்கியமில்லை- அது இந்த இடத்தில் அவசியமும் இல்லை. ஆனால் இந்த திப்பசந்த்ரா வழியாக சென்று வந்து கொண்டிருந்த போது ரமேஷ் என்ற பெரிய மனிதரை அவ்வப்போது பார்க்க வேண்டியிருந்தது. அது முக்கியம்.

பெரிய மனிதர் என்றால் வசதி வாய்ப்புகளில் மட்டுமில்லை. ஆஜானுபாகுவான உடல், உருண்டையான உருளைக்கிழங்கு முகம், பென்ஸ் கார் என்று எல்லாவற்றிலும் பெரிய ஆள்தான். 

அவரது அலுவலகத்தைத் தாண்டித்தான் தினமும் போய் வர வேண்டியிருந்தது. அலுவலகம் என்றால் பெரிய வீடு அது. முன்புறமாக நிறைய காலி இடத்துடன் கூடிய பங்களாவாக இருந்தது. ஆரம்பத்தில் அந்த காலி இடத்தில் பந்தல் எதுவும் போட்டிருக்கவில்லை. கீழ் தளத்தில் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் இரண்டு மூன்று ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள். மேல்தளத்தில் ரமேஷ் இருப்பார்.

கொஞ்ச நாட்களுக்கு பிறகு ரமேஷ் படம் ஒட்டப்பட்ட ட்ராக்டர்களை அலுவலகத்திற்கு முன்பாக இருந்த காலி இடத்தில் நிறுத்தினார்கள். பின்னர் அந்த ட்ராக்டர்கள் தண்ணீர் டேங்கர்களாக மாற்றப்பட்டு இலவச தண்ணீர் வழங்கும் ஜலவூர்திகளாக மாறிப் போயின. திப்பசந்த்ராவில் இருக்கும் குடிசை வாசிகளுக்காக ட்ராக்டர்கள் ஓடாய்த் தேயத் துவங்கின.

இப்பொழுது அந்த அலுவலகத்தில் ஆள் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியது. எளிய மனிதர்கள் அலுவலகத்திற்கு முன்பாக காத்திருக்கத் துவங்கினார்கள். அவர்களின் கைகளில் மனுக்கள் இருப்பதையும் கவனிக்க முடியும். பெங்களூரில் கவுன்சிலரின் அலுவலங்களும், எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களும் ஈயாடிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் ரமேஷின் அலுவலகம் அத்தனை பிஸியாக இருந்தது.

பிறகு அலுவலகத்திற்கு முன்பாக இருந்த காலி இடத்தில் அலுமினிய தகரம் வேயப்பட்ட மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. அந்தப் பந்தல் நூறு ஆட்கள் அமரக் கூடிய இடமாக மாறியது.  

அலுவலகத்திற்கு முன்பாக அவ்வப்போது விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு போஸ்டரிலும், பேனரிலும் ரமேஷின் சமூகச் சேவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டது. கிரிக்கெட் லீக் நடத்தப்பட்டு அதற்கான போஸ்டர்கள் ஏரியா முழுவதும் ஒட்டப்பட்ட போது ஒவ்வொரு போஸ்டரிலும் ரமேஷ் சிரித்துக் கொண்டிருந்தார். இலவச மருத்துவ முகாம்களுக்கான விளம்பரங்களில் ரமேஷ் வாஞ்சையோடு ஏழைகளைத் ஆசிர்வதித்தார். இலவச கண் மருத்துவ முகாம்களுக்கான போஸ்டர்களில் ஒரு படி மேலே போய் கண்களை பரிசோதித்துக் கொண்டிருந்தார். 

அவரை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அலுவலகத்திற்கு முன்பாக பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே போன போது யாரும் தடுக்கவில்லை. அலுவலகத்தில் இருந்த ஒருவரிடம் “தலைவரை பார்க்க வேண்டும்” என்றேன். அமரச் சொன்னார்கள். சில நிமிடங்களுக்கு பிறகாக உள்ளே அழைப்பதாகச் சொன்னார்கள். பெரிய பந்தா எதுவும் இல்லை. முன்பு இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார். 

“பேனர்களை பார்த்தேன். உங்களின் சேவைகள் பிடித்திருக்கிறது. வாழ்த்த வேண்டும் எனத் தோன்றியது” என்றேன். தமிழில் பேசியது அவருக்கு புரியவில்லை. அருகில் இருந்தவர் அவருக்காக மொழிபெயர்த்தார். 

“சீக்கிரம் கன்னடம் பேசிப் பழகிக்குங்க” என்று கன்னடத்தில் சொன்னது புரிந்தது. சிரித்துக் கொண்டே இறங்கி வந்துவிட்டேன்.

உண்மையில் அவரது சேவை எதுவும் ஈர்க்கவில்லை. அவர் செய்த சேவைகளுக்கு செலவான தொகை அல்லது அதைவிடவும் அதிகமாகவும் கூட அதை விளம்பரப்படுத்துவதற்காக செலவு செய்து கொண்டிருந்தார். அத்தகைய மனிதனை ஒரு முறை நேரில் பார்த்துவிட என்றும் தோன்றியது. பார்த்தாகிவிட்டது. அவ்வளவுதான்.

கடந்த ஒரு வருடமாக சேவையும் விளம்பரங்களும் பன்மடங்கு அதிகரித்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகளில் பல கோடி ரூபாய்களை இரைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அலுவலகம் கனஜோராக மாறிவிட்டது. இன்ஸ்டண்ட் சேவகராக மாறியிருக்கிறார் என்று யாராலும் குற்றம் சுமத்திவிடமுடியாது என்கிற அளவில் படிப்படியாக தனது முகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 

சமீபகாலங்களில் அந்தப் பக்கம் வழியாக போவதில்லை என்றேன் அல்லவா? நேற்று அந்த வழியாக போயிருந்தேன். ஒன்றுமில்லை- அவரது அலுவலகம் எப்படியிருக்கிறது என பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. கனஜோராக இருந்தது. பயங்கர கூட்டம். ஆட்கள் படு உற்சாகமாக இருந்தார்கள்.

உற்சாகத்திற்கான காரணத்தை இந்நேரம் உங்களால் யூகித்திருக்க முடியும். இல்லையென்றால் அதற்கான விடை கடைசி பத்தியில் இருக்கிறது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்கிறார்கள். காங்கிரஸ் வென்றுவிடும் என்பதை விட பா.ஜ.க தோற்றுவிடும் என்பதுதான் சரியாக இருக்கும். அதனால் காங்கிரஸ் கட்சியில் ஸீட் வாங்க ஆளாளுக்கு தங்களால் இயன்ற தகிடுதத்தங்களைச் செய்துவிட்டார்கள். பெருந்தலைகளை  ‘கவர்’ செய்வதிலிருந்து, சல்லிப்பயல்களுக்கு ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் கொடுத்து கூட்டிக் கொண்டு போய் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் நின்று “எங்கள் அண்ணனுக்கு ஸீட் கொடு” என்றெல்லாம் கூவி கும்மாளம் அடிப்பது வரை கலக்கிவிட்டார்கள். அவ்வப்போது போலீஸ் தடியடி கூட நடந்தது.

இந்த களேபரங்களினால் சி.வி.ராமன் நகர் போன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நேரம் வரைக்கும் அறிவிக்கவில்லை.  திப்பசந்த்ராவும் சி.வி.ராமன் நகர் தொகுதியில்தான் வருகிறது. 

கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் பெயர் தெரியும்தானே? Yes, You are right! 

“பி.ரமேஷ்”.

விட்டதை பிடிக்க வாழ்த்துக்கள் தல என்று நினைத்துக் கொண்டேன்!

Apr 22, 2013

சச்சரவும் கண்ணாமூச்சியும்


பெரியார் திடல் புத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை மாலையில் கூட்டமே இல்லை. மொத்தமாக இருநூறு பேர் இருந்திருக்கக் கூடும். அவ்வளவுதான். பஜ்ஜி கடை கூட காலியாகத்தான் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது திடலுக்கு வெளியே சற்று தூரத்தில் சச்சரவாக இருந்தது. 

நடுத்தர வயதுடைய மனிதருடன் வண்டியில் வந்த பெண்ணொருத்தியின் இடுப்பை பின்னால் பைக்கில் வந்த வேறொருவன் கிள்ளிவிட்டானாம். மூவரும் பைக்கை விட்டு இறங்கி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். கிள்ளி வைத்தவன் ஒரு பெரிய மாடு போல இருந்தான். முழு போதையில் வேறு இருந்தான். 

அந்தப் பெண்ணுக்கும் நடுத்தர மனிதனுக்கும் தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை. ஆந்திராக்காரர்கள் போலிருந்தார்கள். அந்தப் பெண் “I am a lawyer” என்றாள். எனக்கு அந்த வாக்கியத்தின் மீது நம்பிக்கை வரவில்லை. அந்த போதையேறியவனுக்கும் நம்பிக்கையில்லை போலிருந்தது. அந்தப் பெண்ணிடம் ஏதோ உளறிக் கொண்டிருந்தான். ஆட்டோக்காரர்கள் சில பேர் கூடினார்கள். அவனுக்கு அடி விழும் என்று நினைத்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தார்கள். அந்த நடுத்தர வயதுக்காரரும் அந்த இடத்திலிருந்து நகர்வதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்தார். அடுத்த சில வினாடிகளில் அந்த இடம் காலியாகிவிட்டது. போதைக்காரன் வெற்றியடைந்தவனுக்கான மனநிலையில் மற்றவர்களின் முகத்தைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். 

இந்த நிகழ்ச்சியின் காரணமாக இல்லை- ஆனால் திடீரென்று ஊருக்கு போக வேண்டும் என்று தோன்றியது. என்னிடம் பெரும்பாலும் லக்கேஜ் எதுவும் இருக்காது. அதிகபட்சமாக ஒரு பை மட்டும்தான் இருக்கும் என்பதால் எப்பொழுது நினைத்தாலும் பயணத்தின் திசையை மாற்றிக் கொள்ள முடியும். அப்பொழுதும் ஒரு பை மட்டும்தான் இருந்தது. சென்னையில் தங்குவதற்கு பதிலாக கோயம்பேடு சென்று பேருந்து ஏறிவிடலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

சிக்னலில் நின்று கொண்டிருந்த போது ஹெல்மெட் அணியாத ஒரு பெண் வேகமாக வந்து கொண்டிருந்தார். சிவப்பு சிக்னல் எரிந்து கொண்டிருந்த போது வலது புறமாக Wrong இல் வந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. என்னைத் தாண்டும் போது “க...வி...தா...சொ...ர்...ண..வ..ல்..லி” என்று மெதுவாக அழைத்தேன். அவராக இல்லாமலிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் அந்த மெதுவான அழைப்பில் ஒரு சந்தேகம் இருந்தது. வண்டியை நிறுத்தி “யெஸ்ஸூ” என்றார். அவரேதான். இதுவரை நேரில் பார்த்ததில்லை. Facebook இல் மட்டும் அவரது நிழற்படத்தை பார்த்திருக்கிறேன்.

“உங்களை அடையாளமே தெரியவில்லை. நாற்பது வயது ஆளாக இருக்கும் என நினைத்திருந்தேன்” என்றார். இதுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 

“எங்கே போறீங்க?” என்றார். 

“கோயம்பேடு” 

“கே.கே.நகரில் இறக்கிவிடுகிறேன்” என்றார். சில வினாடிகள் யோசித்தேன். ஏற்கனவே எனக்கு ‘பைக்’கில் கண்டமிருக்கிறது என்பதால் வம்படியாக மாட்டிக் கொள்வேனோ என்று பயமாக இருந்தது. “உட்காருங்க” என்று தைரியப்படுத்தினார். ஏறிக் கொண்டேன்.

வழியில் சில வண்டிக்காரர்களைத் திட்டினார். சில கார்க்காரர்களை முறைத்தார். ப்ளாஸ்டிக் பாட்டிலின் மீது ஏறிய பைக் கார பெண்ணை நோக்கி ஏதோ சப்தமிட அவளும் திட்டிக் கொண்டே போனாள். திடீரென எதிரே இருந்த Divider இல் இடிப்பது போல சென்று கத்தியபடி “ஜெர்க்” கொடுத்தார். இத்தனை சாகசங்களுக்கும் இடையிடையே ஹலோ எஃப்.எம்மில் தான் நடத்தும்  ‘ஹலோ தமிழா’ நிகழ்ச்சி பற்றி பேசினார், வேலைக்கு போகும் பெண்களைப் பற்றிச் சொன்னார், குடும்பம் பற்றி பேசினார் இன்னும் நிறைய நிறைய பேசிக் கொண்டேயிருந்தார். ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் கே.கே.நகரில் இறங்கிய போது பின்னால் வந்த வண்டிக்காரர்கள் ஹார்ன் அடிக்கத் துவங்கியிருந்தார்கள்.  “தேங்க்ஸ்” என்று சொல்லிய அடுத்த சில கணங்களில் வண்டிகளுக்குள்ளாக கவிதா மறைந்திருந்தார்.

கோயம்பேட்டில் பெங்களூர் பேருந்துகள் நிற்குமிடத்திலும் சலசலப்பு. பெரியார் திடல் அருகே இருந்த கூட்டத்தை விடவும் அதிகம். ஒருவனை ஏழெட்டு பேர் சேர்ந்து பின்னியெடுத்துக் கொண்டிருந்தார்கள்.அதே பிரச்சினைதான். ஒரு பெண்ணை சீண்டியிருக்கிறான். அடி வாங்கியவன் போதையில் இருந்தானாம். ஆனால் இப்பொழுது அதெல்லாம் தெரியவில்லை. பிய்ந்த முகமும் ரத்தமும்தான் தெரிந்தது. அடித்தவர்களில் ஒரு சிலரும் போதையில் இருந்த மாதிரிதான் தெரிந்தது. சீண்டப்பட்ட பெண் வெறி கொண்டவளாக அடித்தவர்களை உசுப்பேற்றிக் கொண்டிருந்தாள். “அடிங்க பரதேசி” “உங்க அம்மா மேல கை வைப்பியாடா?” என்றெல்லாம் அவள் கேட்க கேட்க அவனுக்கான அடிகளின் அளவு அதிகமாகிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.

ஒரு மனிதர் அவனை செருப்பில் அறைந்து கொண்டிருந்தார். பேருந்து நிலையம் என்பதால் அவனுக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. உடனடியாக இரண்டு மூன்று போலீஸ்காரர்கள் வந்து விலக்கிவிட்டார்கள். “வாம்மா ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதிக் கொடு” என்று கேட்டார்கள். “அடிச்சவங்கள்ல ரெண்டு பேரு கூட வாங்க” என்ற வார்த்தை போலீஸாரிடமிருந்து முழுமையாக வந்து சேருவதற்குள்ளாகவே ஆளாளுக்கு பேருந்துக்கு நேரமாகிக் கொண்டிருப்பது போன்ற பாவனையைக் காட்டியவாறு நழுவத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெண்ணும் கூட நழுவததற்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்ததார்.

நின்று கொண்டிருந்த பெங்களூர் பேருந்தில் ஏறி தூங்காமல் விழித்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். பாதை முழுவதும் சோடியம் விளக்குகளும் இருளும் மாறி மாறி கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன. ஆனாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். பெங்களூர் வந்து இறங்கிய போது இடையில் ஒரு வினாடி கூட தூங்காமல் வந்திருப்பது ஆச்சரியம் அளித்தது. 

ஞாயிற்றுக்கிழமையின் பகலில் வேண்டியவரைக்கும் உறங்கி விட்டு மாலையில் பத்திரிக்கையாளர் வினோத்தை பார்க்க அல்சூர் ஏரிக்குச் சென்றிருந்தேன். அவருடைய நண்பர் ராஜேஷூம் வந்திருந்தார். இரண்டு பேரையும் முதன் முறையாக சந்திக்கிறேன். அல்சூர் ஏரியில் நடந்தபடியே வினோத் தனது இலங்கை பயணம், வரவிருக்கும் தனது புத்தகங்கள், பத்திரிக்கை பணி என்று நிறைய பேசிக் கொண்டிருந்தார். பின்புறமாக நடந்து வந்த ராஜேஷ் ஃபோனில் யாருடனோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பேசி முடித்துவிட்டு அவர் எங்களிடம் வந்த போது நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.  “ஏதோ பிரச்சினை” என்று நினைத்துக் கொண்டேன். வினோத்துடன் பேசியிருந்தது நிறைவாக இருந்தது. 

வீட்டிற்கு வரும் போது அவர் பேசிய விஷயங்கள்தான் நினைவில் வந்து போய்க் கொண்டிருந்தது. இரண்டு நாட்களில் மூன்று நண்பர்களை முதன்முதலாக சந்தித்திருக்கிறேன். மூன்று பேருமே நம்பிக்கைக்குரிய இளைஞர்கள். நல்ல விஷயங்கள் யாவும் யதேச்சையாக நடக்கிறது என்றால் சந்தோஷமாகத்தானே இருக்கும்? ஆனால் எல்லா சந்தோஷங்களுக்கும் நீண்ட ஆயுள் இருப்பதில்லை.

இன்று முகநூலை திறந்தால் பெரிய அதிர்ச்சி. சனிக்கிழமையன்று முதன் முதலாக பார்த்த கவிதா, ஞாயிறன்று முதன் முதலாக பார்த்த ராஜேஷ் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக வைத்திருக்கிறார்.வினோத்தையும் சம்பந்தப்படுத்தி எழுதியிருந்தார். அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு சுலபமாக ஜீரணிக்கவும் முடியவில்லை.

எதற்காக அடுத்ததடுத்த நாட்களில் இரண்டு வெவ்வேறு நகரங்களில் மூன்று பேரை புதிதாக சந்திக்க வேண்டியிருந்தது என்பதும், அடுத்த நாளிலேயே அவர்களுக்கு இடையே ஏன் பிரச்சினை உருவானது என்பதும் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. யோசித்துப்பார்த்தால் இந்த நிகழ்வுகளை எந்தவிதத்திலும் இணைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் கண்ணாமூச்சி நடந்திருக்கிறது. 

மரண வீட்டின் குறிப்புகள்

சேலத்தில் நடைபெற்ற கவிதை விமர்சனக் கூட்டத்தில் “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” தொகுப்பிற்காக கவிஞர் ராணிதிலக் வாசித்த கட்டுரை அவரது தளத்தில் கிடைத்தது.

அவருக்கு நன்றி.

                                                          *****

                                                  மரண வீட்டின் குறிப்புகள்


இந்தப் புத்தாண்டில் வெளியான கவிதைத்தொகுதிகளில் ஒன்றான வா.மணிகண்டனின் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி பற்றி இப்பொழுது உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருக்கிறேன். அதற்குமுன்பு இத்தொகுதியின் சில கவிதைகளை வாசிக்க விரும்புகிறேன்.

1) மூன்று தினங்களாக உங்களை அழைத்துக்கொண்டிருப்பவன்

மூன்று தினங்களாக
உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் அவனுக்கு
பெயர் எதுவுமில்லை
ஓவ்வொருவரின் பெயரையும்
அவர்கள் திரும்பிப்பார்க்கும் வரை உச்சரித்துவிட்டு
பிறகு சலனமில்லாமல் நகர்ந்துவிடுகிறான்
இதுவரை நீங்கள் திரும்பிப்பார்க்காதது குறித்த
எந்த வருத்தமுமற்ற அந்த மனிதன்
தன்
ஈரம் வற்றிய குரலில்
உங்களின் பெயரை
கமறிக் கொண்டிருக்கிறான்
உங்களை அழைப்பதற்கு முன்பாக
எதிர்வீட்டு கணித ஆசிரியரை அழைத்திருந்தான்
குழப்பத்தில் ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவர்
டெட்டால் வாசனை வீசிக்கொண்டிருக்கும்
மண்டை காயத்துடன் பரிந்துரைக்கிறார்
அவனை நீங்கள் திரும்பிப்பார்க்க வேண்டுமென
எதைப்பற்றியும் கவலையுறாத
நீங்கள்
நெற்றியில் மூன்றாவது கண் முளைக்கத் தொடங்கும்
என நம்பிக் கொண்டிருக்கையில்
நிலவும் வெள்ளியும்
இன்றிரவு
நேர்கோட்டில் வருவதாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்
பெட்ரோலை ஊற்றி முடித்திருந்தார்
உங்களின் தலையுச்சியில்

                                                 ***

2) இந்த வருடத்தின் முதல் தற்கொலை

உங்கள் மீதான அதீத நம்பிக்கையில்
என் அந்தரங்கங்களை
பூட்டாமல் விட்டுச் செல்கிறேன்
அல்லது
ரகசிய அறையின் சாவியை
உங்களிடமே கொடுத்து வைத்திருக்கிறேன்.

நான் இல்லாத நேரத்தில்
மிக அவசரமாக
என் ரகசியங்களை சோதனையிடுகிறீர்கள்

எப்பொழுதும்
என்னுடையதாகவே
இருந்திருக்க வேண்டிய
அந்தரங்கங்கள்
இப்பொழுது
நம்மிடையே
பொதுவானதாகிறது.

நேர்த்தியாக என் குற்றங்களை வரிசைப்படுத்துகிறீர்கள்
எனக்கு எதிராக எழுப்ப வேண்டிய வினாக்களை
தயார்படுத்துகிறீர்கள்
வினாக்களுக்கு தரப்படும் பதில்களை பொறுமையாக
பெற்றுக் கொள்ளும் நீங்கள்
அதே வினாக்களை வேறுபடுத்திய வரிசைகளில்
திரும்ப
என் கண்களை நோக்கி செலுத்துகிறீர்கள்
நான் தலை குனியத் துவங்கும் போது
உங்களின் வேகம் அதிகரிக்கிறது.

                                                ***

3) நான் தோல்வியடைகிறேன்

என்னிடமிருந்து
கண்ணீர் பெருகும்
கணத்திலிருந்து
நான்
நசுக்கப்படுகிறேன்

உங்களுக்கும் எனக்கும்
இடையில்
கட்டப்பட்ட
எனது பிம்பம்
சிதைந்து
கொண்டிருக்கிறது.

எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்ள
தயாராகிறேன்.
கைகளை கிழித்துக் கொள்வதோ
அல்லது
நெருப்பினில் விரல் வைப்பதோ
உங்களை ஆசுவாசப்படுத்தும்
என நினைக்கிறேன்.

நீங்கள்
எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

வினாக்கள்
இன்னொரு வரிசையில்
விழத் துவங்குகின்றன.

நான் ரகசியமாக
வைத்திருந்த சிறகுகள்
கத்தரிக்கப்படுகின்றன.

எனது வானத்தில்
பறந்து கொண்டிருந்த
சிறு பறவைகளை
சுட்டு வீழ்த்துகிறீர்கள்.

எனது பாடல் வரிகள்
களைத்தெறியப்படுகின்றன.

நான்
உடைந்து கொண்டிருக்கிறேன்.
அல்லது
நொறுங்கிக் கொண்டிருக்கிறேன்

வீதிகளில்
எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள்.

ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
ஒன்று

பட்டாசுகள் வெடிக்கத் துவங்குகின்றன.

இப்பொழுது
என் அறை சாத்தப்படுகிறது
மெதுவாக
                                     ***

4) துளிகள்

(அ)
ஹெல்மெட்
கண்ணாடி வழியே
பார்த்துக் கொண்டிருக்கிறான்-
நசுங்கிய கால்.


(ஆ)
எந்த நடிகையும்
அழுவதில்லை-
என் அறைச் சுவர்களில்

(இ)
வியர்வையில்
நெளிகிறாள்-
நிறமேற்றப்பட்டவள்.

(ஈ)
மூடாத விழிகளில்
வானம் நோக்குகிறது-
அநாதைப் பிணம்
                                                                     ***

இந்த ஆண்டு வெளியான கவிதைத்தொகுதிகளைப் பெரும்பாலும் வாசித்த எனக்குச் சில கோடுகள் கிடைத்திருக்கின்றன.  சுய அனுபவம், கற்பனை, அதிகார எதிர்ப்பு, கனவு என வியாபித்திருக்கும் இக்கவிதைக் கோடுகளில் வா.மணிகண்டன் கவிதைகளின் கோடும் ஒன்று. அதாவது ரத்தக்கோடு. மரணக்கோடு.

இத்தொகுதியில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எதைப்பற்றிப் பேசுகின்றன? என்பதைத் தொகுதியின் பின்புறம் குறிப்பு எழுதி வாசித்தபோது எனக்குக் கிடைத்த வரிதான் ஒரு புத்தகத்தின் நான்கைந்து தாள்கள்.  அதாவது இங்கு தாள்கள் என்பது வெற்றுத் தாள் அல்ல.  ஒரு தாள் என்பது வன்மம், இரண்டாம் தாள் என்பது கொலை என்று அப்படி.... ரத்தத்தில் நனைத்த தாள்கள்.

இக்கவிதைகளை என்னால் ஓரே மூச்சில் வாசிக்க இயலவில்லை.  மிகவும் கவனமாகவும் சிரத்தையுடனும் வாசிக்கவேண்டிய பிரதியாக இருக்கிறது.  ஒரு கவிதையிலிருந்து இன்னொரு கவிதைக்குள் நுழைவதற்குள் என்னிடம் குருதி வழிந்துவிடுகிறது.  நீங்கள் இந்தத் தொகுப்பை வாசித்தீர்கள் எனில், மரணம், கொலை, வன்மம், தற்கொலை, துக்கம், பிரிவு, குருதி வழிதல் என்கிற பதங்களை, அதன் சாயல்கள் ஏதாவது ஒன்றினை, ஒவ்வொரு கவிதையிலும் கண்டுவிடமுடியும். 

ஒரு கருத்து சார்ந்த கவிதைகளை வலிந்து எழுதியதுபோலவும் தோற்றமளிக்கிறது.. 

நேற்று-இன்று-நாளைகளில் எழுதப்படும் எல்லாக் கவிதைகளிலும் மரணமும் குருதியும்  ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வாழ்கின்றன.  வலியும் பரிதவிப்பும் குற்றமும் பிரிவும் இதனுடன் பேசப்படுகின்றன. 

ஒரு தொகுதி முழுவதும் மரணத்தை மட்டும் வாசிக்கும்போது ஏதோ ஒரு சாவு வீட்டில் அமர்ந்துகொண்டு, எப்படி இறந்தான் இறந்தாள் என்று சாவு வீட்டாரிடம் கேட்க,  அவர்கள் சொல்வதுபோல் இருக்கின்றன கவிதைகள்.

நிகழ்ந்தது- நிகழ்கின்றது-நிகழலாம் என்கிற கோட்டில்  அமையும் கவிதைகள் இவை. மிகத் துல்லியத்துடன் கவனமாகவும் உத்திகளாலும் செதுக்கப்பட்ட கவிதைகள்தான் இவை.  சொல்முறைகள் மனுஷ்யபுத்திரனுடன் ஒத்துப்போகுபவை. ஒரு கவிஞனின் சாயல் நம்மீது விழுவது தவறில்லை. நாம் அந்தக் குடையிலிருந்து விலகி நடக்கத்துவங்கினால், நமக்கான குடை கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்

யாதார்த்தம் என்பதைக் கடந்து, இக்கவிதைகளைப் புனைவு என்கிற தளத்தில் நான் அணுகுகிறேன்.  நித்யம் அநித்யம், என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி, மூன்று தினங்களாக உங்களை அழைத்துக்கொண்டிருப்பவன், செவ்வந்திப்பூக்கள் சிதிறய மயானம், கரப்பான் பூச்சிகள் புழங்கும் வீடு, மழைக்காமம், புனிதக் காதல், கொலை மேடைக்குதிரைகள் ஆகியவை இத்தொகுதியின் கோட்டினை வரையும் மையமான கவிதைகள். இம்மையங்கள் யதார்த்துடன் கலந்த கற்பனைக்கோடுகள். குருதி வழியும் கோடுகள்.

இவர் கவிதைகளில் மரணமும் பிரிவும் வலியும் பிறக்க ஏதாவது ஒரு காரணம் இருந்துவிடுகிறது.  இந்தக் காரணத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளில் கவித்வ பின்புலமோ, ஆன்மீகமோ, தத்துவமோ நீங்கள் காணமுடியாது. வாழ்வின்  கொடூர கணங்களை, நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாத தீவினைகளின் சம்பவங்களை இக்கவிதைகள் மொழிகின்றன. இந்த அபூர்வம் எந்தப் பழைய மற்றும் புதிய கவிஞர்களிடம் என்னால் காண முடியவில்லை.

இந்தக் கவிதைகள் ஒவ்வொன்றினையும்  வாசிக்கும்போதும் நமக்குள் ஒருவித படபடப்பும் அச்சமும் பீதியும் அலைவதை உணர்ந்துவிடமுடியும். நாமே மரணத்தின் பிடியில் இருப்பதாகவும், நம் உடலில் குருதி வழிந்து பிணமாகிக் கொண்டிருப்பதாகவும் தோன்றும். அதிர்ச்சியூட்டும் மரணத்தின் படிமங்கள் நமது இரத்தத்தில் கலந்து ஒரு பயத்தை உருவாக்கி விடுகிறது.  அவர் கவிதையில் வரும் பிணவறையில் மண்டையைப் பிளக்கும் சப்தம் நம் காதை நிலைகுலையச் செய்வது என்பது உறுதி.

இக்கவிதைகள் அனைத்தும் ஒற்றைக்குரலாக மாறிவிடுவதையும், அவ்வொற்றைக் குரலின் வெவ்வேறு தொனிகளை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும்போது அச்சமும் பீதியும் ஏற்படுவது இயல்பாக நிகழ்ந்துவிடுகிறது. மரணத்தையும் பரிதவிப்பையும் திரும்ப திரும்ப வாசிக்கும்போது ஏற்படும்  அசௌகரியத்தை என்னவென்று சொல்வது?

இன்றைய நவீன கவிதையின் ஆன்மாவை இக் கவிதைகள் சொல்கின்றனவா? இக்கவிதைகள் புதிய கவிதை இயலை உருவாக்குகிறதா? என்ற கேள்விகளை எல்லாம் இங்கே பேசவேண்டியதில்லை. இத்தொகுதி நவீன வாழ்வில் நடக்கும் துர் சம்பவங்களால் புனையப்பட்ட ஓர் அனுபவம். இத்துர்சம்பவங்கள் நமக்குள் ஏற்படுத்தும் சிறு சலனங்களே இத்தொகுதியின் சின்னஞ்சிறு உரையாடல்.

இந்த உரையாடல்களை கவிதைக்கு வெளியேயும் உள்ளேயும் நீங்கள் நிகழ்த்திக் கொள்ளலாம்.  அதற்கான மிகச் சிறந்த பாதையை இத்தொகுதி அமைக்கிறது.  அந்தப் பாதை கொஞ்சம் நிணத்தால் ஆனது....ரத்தம் வழியும் உடலால் ஆனது.  நீங்கள் தாராளமாக யாத்திரை மேற்கொள்ளலாம்.  நீங்கள் நீதிதேவனாய் இருக்கவேண்டியது இல்லை. நமது உண்மையான மனதைத் திறக்கும்போது, நாம் எவ்வளவு பெரிய சாத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள இத்தொகுதி வழிவகுக்கும்.

இத்தொகுதியின் துர்சம்பவங்களிலிருந்து வெளியேறி இருக்கும் பறவைகள் நகர்ந்துவிட்ட வானம், காணாத மீசை, சாதுவான பொன்னிற மீன், சொல்லப்படாத ரகசியம், சுழுன்று விழும் இலை, டைனோசர்களுடன் வாழ்பவன், செவ்வாய்க் கிழமையின் மதுச்சாலை கவிதைகள் கொஞ்சம் நிறைவை உருவாக்குகின்றன.  வாழ்வு இக்கவிதைகளில் இருக்கிறது. அதாவது புனைவற்ற நிஜ அனுபவங்கள்.  இந்த அனுபவங்கள்தான் கவிதையை சத்தியத்திற்கு அழைத்துச் செல்பவை  என்று நம்புகிறேன்.

சிறிது முடிவாகச் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. இக்கவிதைகள் தினசரிகளில் வரும் கொடூர செய்திகளை கவிதை வடிவில் விரிவாக்கிச் சொல்வதுபோல் இருக்கிறது.

2.       நவீன கவிதை எடுத்து இயம்ப தயங்குகின்றன சாத்தான் உலகத்தை இக்கவிதைகள் முழுதளவும் குறிப்பாகக் காட்டுகின்றன.

3.   மரணத்தைப் பற்றிப் பேசும் ஒற்றைக் குரலாக மட்டும் இத்தொகுதி மாறிவிடுவது நமக்கு அசௌகரியத்தை உருவாக்கிவிடுகிறது. இந்த அசௌகரியத்திலிருந்து விடுபடும்போது, நமக்கு இக்கவிதைகள் அந்நியமாகிவிடுவதை நாம் பார்க்கலாம்.

4.   மரணம் குறித்த உரையாடலை எஸ்.சம்பத் தன் நாவலில் ஏற்படுத்தியது போன்ற சிறு சலனங்களை வா.மணிகண்டன் தம் கவிதையில் தவறவிடுகிறார். ஏனெனில் மரணம் இவர் கவிதைகளில் நிகழ்வாக மட்டும் சித்தரிக்கப்படுகிறது என்பதால்.

5.  இந்த வகைமாதிரி கவிதைகளை இதுவரை அவர் எழுதியிருக்கலாம். இனிமேல் தொடரும்போது சலிப்பான பிரதிகளாக அவை கருதப்படலாம். அனுபவத்தின் பின்புலத்திலிருந்து எழுதுவதற்கும், தகவலின் பின்புலத்திலிருந்து உருவாக்குவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

என்றாலும், வா. மணிகண்டன் இக்கவிதைத் தெரிந்தோ தெரியாமலோ மரணத்தின் கொடூர முகங்களையும், வாழ்வின் அபத்தங்களையும் எழுதியிருக்கிறார். இந்த அபத்தத்தை நம்மால் மறுக்க இயலாது ஒன்று. அதனாலேயே அதிகமாய் ஏற்று, குறைவாக மறுக்கவேண்டியுள்ளது. தயவு செய்து வா.மணிகண்டன் கொஞ்சம் மரணத்திலிருந்து, ஒற்றைக்குரலிலிருந்து விலகிவிடுங்களேன்.  நீங்கள் எங்கள் சாத்தான் உலகத்தைப் பார்க்க வைத்தது போதும். குரூரத்தை எவ்வளவுதான் தாங்கிக்கொள்வது?

Apr 20, 2013

சென்னையில் ஒரு அப்பாடக்கர்


சென்னை வர வேண்டியிருந்தது. ஒரு மணி நேரத்து வேலைதான். இரண்டு பேர்களைப் பார்க்க வேண்டும். இரண்டு பேரும் வானகரம் பக்கத்திலுள்ள அயனம்பாக்கத்தில் ஒரே அலுவலகத்தில்தான் இருக்கிறார்கள். இரண்டு பேரில் முதலாமவரை காலை பத்து மணிக்கு பார்ப்பதாகத் திட்டம். 

அதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இறங்கியாகிவிட்டது. முன்பெல்லாம் சென்னை வரும் போது நண்பர்களின் அறைக்கு போய்விடுவேன். இப்பொழுது எல்லோருக்கும் என்னைப் போலவே கழுதை வயதாவதால் கல்யாணம் கட்டி புள்ளை குட்டிகளோடு சந்தோஷமாகவோ துக்கமாகவோ இருக்கிறார்கள். அந்நேரத்தில் கதவைத் தட்டி கொடுமைப்படுத்த வேண்டியதில்லை என வாடகை அறை எடுத்துக் கொள்வது வாடிக்கையாகிருக்கிறது. 

தி.நகர் ரத்னா கஃபே விடுதியில் நூற்றைம்பது ரூபாய் கொடுத்தால் குளிப்பதற்காக ஏ.சி.ரூம் கொடுக்கிறார்கள். ஆனால் முக்கால் மணி நேரத்தில் வெளியேறி விட வேண்டும். அவ்வளவுதான் டைம் லிமிட். அங்கிருந்து 27 சி பேருந்தைப் பிடித்தால் நேராக வானகரத்தில் இறங்கிக் கொள்ளலாம். இட்லியையும் குடல்கறியையும் ஒரு கடையில் முழுங்கிவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் அயனம்பாக்கம் வந்து சேர்ந்துவிட்டேன்.

நம் ஆட்களைப் பற்றித்தான் தெரியுமே! பத்து மணிக்கு பார்க்கச் சொன்ன மாமனிதர் பன்னிரெண்டு மணிக்கு பார்த்தார். தூக்கம் கெட்டால் ஹார்மோன்கள் நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இதில் இரண்டு மணி நேரம் காக்க வைத்து வேறு கடுப்பேற்றியிருக்கிறார்கள். எல்லாம் சேர்த்து ஏதாவது எகிறிவிடுவேனோ என்று தயங்கித் தயங்கியே பேசிக் கொண்டிருந்தேன். அப்படியாக எதுவும் நடக்கவில்லை. அவர் பேசி முடித்துவிட்டு அடுத்த மனிதரை மாலை நான்கு மணிக்குத்தான் சந்திக்க முடியும் என்றார். அவர் அவ்வளவு பிஸிஸிஸியாம். 

இந்தியாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் அழிச்சாட்டியம் செய்வார்கள். பெங்களூரில் இருந்து வந்தாலும் சரி பெர்லினில் இருந்து வந்தாலும் சரி, அவனைக் காக்க வைத்துத்தான் தனது கெத்தை காட்டுவார்கள். இரண்டு பேரும் ஒரே இடத்தில்தான் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் காலை பதினோரு மணிக்கு என்னை அனுப்பி விட்டிருக்க முடியும். ம்ஹூம். தொலையட்டும்.

எனக்கு சென்னை வருவதென்றால் உற்சாகம் பீறிட்டுவிடும். பேருந்து நிலையத்திலேயே ஆட்டோக்காரர்கள் ஏமாற்றினாலும், வெயில் வகைதொகையில்லாமல் கருக்கினாலும், நான்கு மரங்களை மட்டும் வரிசையாக நட்டி வைத்துவிட்டு மனசாட்சியே இல்லாமல் ‘வனத்துறை’ என்று பந்தாவாக எழுதி வைத்திருந்தாலும், மேம்பாலங்களுக்குக் கீழே குப்பைகள் நிரம்பிக் கிடந்தாலும், அந்தக் குப்பைகளுக்குள்ளேயே நாய்களோடு மனிதர்கள் படுத்திருந்தாலும் இந்த ஊர்தான் எனக்கு சர்க்கரைக் கட்டி. 

ஆனால் திருமணத்திற்கு பிறகு சென்னை வருவது அருகிப் போய்விட்டது. “சென்னை போகிறேன்” என்று வாயெடுத்தாலே “எதுக்குகுகுகு?” என்று அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு இழுக்கிறார்கள். அந்த இழுவையை நிறுத்துவதற்கு போதும் போதும் என்றாகிவிடுவதால் இப்பொழுதெல்லாம் கேட்பதேயில்லை. ஏதாவது ஒரு காரணம் வசமாகச் சிக்கினால் மட்டுமே ஏமாற்றிவிட்டு வர முடிகிறது. இப்படித்தான் சென்ற முறை ஏதோ காரணம் சொல்லி ஏமாற்றிவிட்டு வந்திருந்தேன்.

வெள்ளிக்கிழமை இரவில் பேருந்து பிடித்து சனிக்கிழமை காலையில் இந்த மண்ணை மிதித்து அதே ரத்னா கஃபேயில் அறை எடுத்து தங்கியிருந்த போது சனிக்கிழமை மாலையிலேயே “பையனுக்கு லைட்டா காய்ச்சல். ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் உன்னை கேட்டுட்டே இருக்கான்” என்று போனில் சொன்னார்கள். யார் என்னைக் கேட்டிருந்தாலும் அவ்வளவு சீக்கிரமாக போயிருக்க மாட்டேன். அதுவே பையன் கேட்டால் இதைவிட மெதுவாக போக மாட்டேன்.

அடித்துப் பிடித்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் போய் கதவைத் தட்டினால் சர்வசாதாரணமாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். தொட்டிலை விலக்கி அவன் முகத்தை பார்த்து “ரொம்பக் கேட்டானா?” என்றால், “ஆமா ரெண்டு தடவ கேட்டான்” என்று அசால்ட்டாகச் சொன்னார்கள். “ஜஸ்ட் ரெண்டு தடவைதானா?” என்று கேட்டு முடிப்பதற்கு அவளும் தூங்கிவிட்டாள்.  வெறும் இரண்டு தடவை அவன் கேட்டதற்காக என் சென்னை பயணத்திட்டத்தில் மண் அள்ளிப் போட்டுவிட்டார்கள். அதன் பிறகு ஏமாற்றுவதற்கான நல்ல தருணத்திற்காக காத்திருந்தேன். பல மாதங்களுக்கு பிறகாக இப்பொழுது வாய்த்திருக்கிறது. அதுவும் சென்னையில் இப்பொழுது புத்தகக் கண்காட்சி வேறு நடக்கிறது. 

படு உற்சாகமாக கிளம்பியிருந்தேன். வரும் போதே “உடான்ஸ் போன் எல்லாம் செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கும் செருப்புத் தேயும் வரை சுற்றிவிட வேண்டும் என கனவு கண்டிருந்தேன். நேற்றிரவு பேருந்தில் வரும் போது ஜன்னல் கம்பியில் இடித்து முன் மண்டை புடைத்துக் கிடக்கிறது. சென்னை மட்டும்தான் நினைப்பில் இருப்பதால் அதெல்லாம் பிரச்சினையாகவே தெரியவில்லை. இரண்டு முறை தேய்த்துக் கொண்டால் சரியாகிவிடும். 

வானகரத்தில் இருக்கும் வானரங்கள்தான் காய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கூட “நான்கு மணிக்குத்தான் பார்க்க முடியுமா? முன்னாடியே பார்க்க முடியாதா?” என்று கேட்டேன். மெயில் அனுப்பியிருக்கிறோம். பதிலை பார்த்துவிட்டுச் சொல்கிறோம் என்றார்கள். ஒரே கட்டடத்தில் இருந்தாலும் கூட நேரில் கேட்க முடியாதாம். ஏற்கனவே சொன்ன “அவ்ளோ பிஸிஸிஸி”யாம். பசிக்க ஆரம்பித்திருக்கிறது. அப்பாடக்கர்களிடம் நம்மை அப்பாடக்கராக நிரூபிக்கும் தருணங்கள் சுவாரசியமானவை. அப்படியான ஒரு தருணத்திற்காக காத்திருக்கிறேன். 

Apr 19, 2013

தொப்புள்


சில நாட்களுக்கு முன்பாக எங்கள் பகுதியில் ஒரு ஃபேஷன் ஷோ நடந்தது. குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அது. பத்து வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு மட்டும்தான் பங்கேற்க அனுமதியளித்திருந்தார்கள். மேக்கப், ரிகர்சல் என சகலத்தையும் வீட்டில் தயார் செய்து கொண்டு வந்து விட வேண்டும். பார்வையாளர்களாக பெற்றோர்களை அனுமதித்திருந்தார்கள். குழந்தைகளுக்கு எந்த சங்கோஜமும் இருந்ததாக தெரியவில்லை. மேடை பயம் இல்லாமல் அப்படியும் இப்படியும் வளைத்து நெளித்து நடந்து கலக்கிக் கொண்டிருந்தார்கள். 

ஆண் குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. கிருஷ்ணர் வேஷம், வேட்டி துண்டு, பைஜாமா, டீ சர்ட்-ஜீன்ஸ் என்ற வழக்கமான காம்பினேஷன்கள்தான். ஆனால் பெண் குழந்தைகள் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். துணியிலிருந்து, மேக்கப் வரைக்கும் ஏகப்பட்ட வகையறாக்கள். தோள் வரைக்கும் நீண்ட காது வளையங்களில் ஆரம்பித்து கால் தண்டை வரைக்கும் ஒவ்வொரு உறுப்புக்கும் விதவிதமான அணிகலன்கள். பார்வையாளர்களுக்கு தெரியும் படி அதை தனித்து காட்டுவதற்கான அங்க அசைவும் அவர்களுக்கு தெரிந்திருந்தது.

அந்த நிகழ்ச்சியின் நிழற்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது அம்மாவுக்கு உச்சந்தலையில் முடி நட்டுக் கொண்டது. “அநியாயம், அக்கிரமம்” என்று வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தார். “அதெல்லாம் இப்போ சகஜம் அத்தை” என்று சமாதான படலங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தது. “இப்பவே இப்படியெல்லாம் துணி போட்டு பழக்கலாமா?” என்று கேட்டு வாய் மூடவில்லை. இன்னொரு படம் கண்களில் பட்டுவிட்டது. அந்தப் படத்தில் பெண் குழந்தையின் தொப்புளைச் சுற்றி கோலமிட்டு வைத்திருந்தார்கள். சோலி சுத்தம். 

அம்மாவின் காதில் புகை வர ஆரம்பித்துவிட்டது. இனி இந்தப் படங்களை பார்ப்பது என்பது பூகம்பத்தை விலைக்கு வாங்கி வருவதற்கு சமம் என்று “அவ்வளவுதான்” என்று சொல்லி லேப்டாப்பை மூடி வைத்தாலும் தூவானம் விடாமல்தான் இருந்தது. “சினிமாக்காரங்களை பார்த்து கெட்டுப் போயிட்டாங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த மாதிரி விவகாரங்களை வீட்டில் வெளிப்படையாக பேச தைரியம் இல்லை. அமைதியாக இருந்துவிடுவேன். இப்பொழுதும் அப்படித்தான்.

யோசித்துப் பார்த்தால் பிரபுதேவா ஆம்லெட் சுட்டது, கேப்டன் பம்பரம் விட்டதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு பேசுகிறார் என நினைக்கிறேன். சினிமாக்காரர்களையே எத்தனை நாளைக்குத்தான் குற்றம் சொல்வது? தொப்புள் நம் வயிற்றில் இருக்கும் சாதாரண தழும்புதான் என்றாலும் சங்ககாலத்திலிருந்தே நம் ஆட்கள் அதை வர்ணிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் காலத்தில் சினிமாக்காரர்கள் அந்த ஆர்வம் அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

நடிகைகளின் இடுப்புப்பிரதேசங்களை மட்டும் கலர் படங்களாக போட்டு “இது யாருடைய இடுப்பு என்று கண்டுபிடியுங்கள்” என்ற போட்டிகளில் ஆரம்பித்து  நடுப்பக்க கவர்ச்சி ஃப்ளோ-அப் வரைக்கும் பல்வேறு முறைகளில் இடுப்புகளையும், தொப்புள்களையும் விதவிதமாக ரசிக்கும் மனநிலையை  ‘கண்டினியூ’ செய்து கொண்டிருக்க பத்திரிக்கைகளும் உதவிக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் ஆம்லெட், பம்பரம் எல்லாம் ஜூஜூபி சமாச்சாரங்கள். அதையெல்லாம் தாண்டி நாம் வெகுதூரம் போய்க் கொண்டிருக்கிறோம். இணையத்தில் தொப்புளுக்கான அலங்காரங்களைத் தேடினால் படங்களாக கொட்டுகிறது. பெண்களின் தொப்புள் படங்களைப் பிரசுரம் செய்வதற்காகவே ஏகப்பட்ட இணையதளங்கள் இருக்கின்றன. தொப்புளில் வளையம் போடுவது, கம்மல் மாட்டுவது, அதைச் சுற்றிலும் கோலம் என்பதையெல்லாம் அசால்ட்டாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை சினிமாக்காரர்கள் ஆரம்பித்து வைத்தார்கள், குமுதம் தூக்கிப் பிடித்தது, விகடனின் டைம்பாஸ் தொடர்கிறது என்றெல்லாம் சொன்னால் அது டூ மச். 

‘தொப்புள் அலங்காரத்தை’கடவுளர்களின் காலத்திலேயே தொடங்கிவைத்துவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்தால் அதற்கு முன்பே கூட யாராவது ஆரம்பித்திருக்கக் கூடும். ஆழ்வார்களின் பாடல்களில் இருந்தே கூட உதாரணத்தை காட்ட முடியும். 

கி.பி.ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் பேயாழ்வார். டாப் 3 ஆழ்வார்களில் ஒருவர்.  மைலாப்பூரில் வாழ்ந்தவர். அவரது பாடல் ஒன்று கீழே- 

ஆங்கு மலரும் குவியுமாம் உந்திவாய்
ஓங்கு கமலத்தின் ஒண்போது- ஆங்கைத்
திகிரி சுடர என்றும்; வெண் சங்கம் வானில்
பகரும் மதிஎன்றும் பார்த்து;

திருமாலின் ஒரு கையில் சக்கரமும் இன்னொரு கையில் சங்கும் இருக்கிறது. அவரின் தொப்புளில் செருகி வைக்கப்பட்டிருக்கும் தாமரையானது ஒரு சமயம் அவரது கையில் இருக்கும் சக்கரத்தைப் பார்த்து சூரியன் என நினைத்து மலர்கிறதாம். அடுத்த கணமே அவரது இன்னொரு கையில் இருக்கும் சங்குவை பார்த்து நிலா வந்துவிட்டது என நினைத்து குவிகிறதாம்.

பாருங்கள், கிருஷ்ணரே தனது தொப்புளை தாமரைப் பூ வைத்து டெகரேட் செய்திருக்கிறார். த்ரிஷாக்களையும், தமன்னாக்களையும் குற்றம் சுமத்தி என்ன பயன்? 

இன்றைக்கு ராமநவமி. பிறந்தநாளன்று இதற்கு மேல் கிருஷ்ணரை கலாய்த்தால் ஏதாவது ‘ராவுடி’செய்துவிடுவார் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.

Happy Birthday Rama! 

Apr 18, 2013

கடப்பாரை எல்லாம் பல்குச்சி மாதிரி...


இரண்டு நாட்களுக்கு முன்பாக அலுவலகத்தில் ஒரு நேர்முகத் தேர்வு. நிறைய ஆட்களை எடுக்கவில்லை. டீமுக்கு ஒரு Fresher தேவையென்று சொல்லியிருந்தார்கள். ஒரேயொரு Fresher. அவ்வளவுதான். 

வந்திருந்த ஏழெட்டு பேர்களில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுக்க வேண்டும். வழக்கமாக இண்டர்வியூ எடுக்கும் ஆள் ‘கட்’அடித்துவிட்டதால் என்னை எடுக்கச் சொல்லியிருந்தார்கள். என் மீது நம்பிக்கை இல்லாமலோ என்னவோ கூடவே இன்னொருத்தனையும் அனுப்பியிருந்தார்கள்.  வந்தவன் பெங்காலி. கொஞ்சம் ஏமாந்தாலும் தலைக்கு மேல் ஏறி அமர்ந்துவிடுவான்.அதேசமயம் எந்த தயவுதாட்சண்யமும் இல்லாமல் யார் முகத்தில் வேண்டுமானாலும் கருணையில்லாமல் குத்துவான். 

எனக்குத் தெரிந்த இரண்டு பெங்காலிகளுமே தாறுமாறாக நிராகரிக்கிறார்கள். ஒன்று இவன். இன்னொருவர் பிரணாப் முகர்ஜி.

நிராகரிக்கும் குணமுள்ளவன் என்பதற்காகவே இவனையும் நேர்காணலுக்காக அனுப்பி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நேர்முகத் தேர்வுகளில் அனுபவசாலிகளை நிராகரிப்பது சுலபமான காரியம். அவர்களுக்கும் அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. ‘இது ஒன்றுதான் உலகத்திலேயே கம்பெனியா?’என்று வேறு இடம் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் புதியவர்களை நிராகரிப்பது கொஞ்சம் சிக்கலானது. Emotional ஆக சற்று வலிமையாக இருக்க வேண்டும்.

இந்த இண்டர்வியூவிற்கு போவதில் விருப்பமே இல்லாமல்தான் இருந்தேன். “வேண்டாம்” என்று சொல்வதற்கு வாயே வருவதில்லை. அதுவும் இவர்கள் சென்ற வருடம் மே மாதம் படிப்பை முடித்துவிட்டு இந்த வருடம் ஏப்ரல் வரைக்கும் வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் வேலையில் சேராவிட்டால் இந்த வருடம் படிப்பை முடிப்பவர்களும் வரும் ஜூன் மாதத்திலிருந்து இவர்களோடு போட்டியில் குதித்துவிடுவார்கள்.

ஏற்கனவே “ஒரு வருஷமா வேலை கிடைக்கலையா?” என்ற கேள்வியை பக்கத்து வீட்டுக்காரர்களும் மற்றவர்களும் கேட்டுக் கேட்டு வெறுப்பேற்றி வைத்திருப்பார்கள். ஜூன் மாதத்திலிருந்து இண்டர்வியூவிலும் அதே கேள்வியைக் கேட்டு சாவடிப்பார்கள்.

ஆனால் பெங்காலி இப்பொழுதே அந்தக் கேள்வியை ஆரம்பித்துவிட்டான். அறைக்குள் வந்தவுடனே “இதுவரைக்கும் எத்தனை கம்பெனிக்கு இண்டர்வியூக்கு போயிருக்க?” “அத்தனை கம்பெனியும் நிராகரித்த உன்னை நாங்க ஏன் எடுக்கணும்?” என்று மனசாட்சியே இல்லாமல் ராகிங் செய்து கொண்டிருந்தான். இவனது கேள்வியிலும் முகத்தின் அஷ்டகோணல்களிலுமே பெரும்பாலானவர்கள் வெறுத்து போனார்கள். நான் அந்த அறைக்குள் வாயே திறக்காமல் அமர்ந்திருந்தேன். ஏதாவது கேட்பதற்காக வாய் திறக்கும் போதெல்லாம் பேச்சுக்குள் பேச்சாக குரலை உயர்த்தி வேறொரு கேள்வியை எழுப்பினான். அவனது சத்தத்தில் எனது கேள்வி நசுங்கி ஒடுங்கிக் கொண்டிருந்தது. இனிமேல் கேட்க வேண்டியதில்லை என முடிவு செய்து கொண்டேன்.

இப்படி ஐந்தாறு பேரை நிராகரித்துவிட்டான். நாங்கள் யாரையாவது தேர்ந்தெடுத்து அனுப்பினால் மேனேஜருடன் அடுத்த ரவுண்ட் நேர்காணல் இருக்கும். ஆனால் இவன் செய்யும் சேட்டையைப் பார்த்தால் அத்தனை பேரையும் நிராகரிக்கும் மனநிலையில் இருப்பது போலத் தோன்றியது. கிட்டத்தட்ட இண்டர்வியூ முடியும் நிலைக்கு வந்திருந்தது. ஓன்றிரண்டு மட்டும் பேர் வெளியே காத்திருந்தார்கள். மற்றவர்களையெல்லாம் துரத்தி விட்டிருந்தான்.

இப்பொழுது ஒரு பையனை அழைத்தார்கள். மலையாளி. கொச்சினைச் சார்ந்தவன். கோயமுத்தூரில் படித்தானாம். 

பெங்காலி வழக்கம் போலவே சுட ஆரம்பித்தான். ஆனால் அந்தப்பையன் இவனின் கேள்விகளுக்கு சலித்துப் போகவில்லை. ஆரம்பத்தில் பதவிசாக பதிலளித்தவன், இவனது முரட்டுத்தனத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் பதில்களை கொடுக்க ஆரம்பித்திருந்தான். 

“இதுவரை உனக்கு ஏன் எந்த வேலையும் கிடைக்கவில்லை?” என்றான் பெங்காலி.

“நான் எந்த நேர்காணலுக்குமே தயாரிப்பு செய்து கொண்டு போனதில்லை” என்றான். 

“அப்போ இன்னைக்கும் அசால்ட்டாகத்தான் வந்திருக்கியா?” என்றான் பெங்காலி.

“அதை நீங்க செக் செஞ்சுட்டு சொல்லுங்க”. பெங்காலியின் முகத்தில் ஒரு அறைவிட்டது போலிருந்தது. அவன் முகம் சிவந்து பொயிருந்தான்.

பிறகு டெக்னிக்கலாக கேள்விகளைக் கேட்டான். அவனுக்கு பெரும்பாலும் பதில் தெரிந்திருந்தது. “யூ ஆர் டூயிங் வெல்” என்று நான் சொன்னது பெங்காலியின் ஈகோவை தொட்டிருக்கக் கூடும்.

இன்னும் சில கேள்விகள். இன்னும் சில பதில்கள்.  

“ஐயாம் கோயிங் டூ ரிஜக்ட் யூ” என்றான். அந்தப் பையன் பெரிதாக அதிரவில்லை.

“ஏன்?” என்று கேட்டான்.

“அதைச் சொல்ல முடியாது. நீ எனக்குத் தேவையில்லை” என்றான். பையன் பயங்கரமாக கோபமாகியிருந்தான். இவனை ஒரு அடி அடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கக் கூடும்.

சிரிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டு எழுந்தான். வெல்கம் என்பதற்கு பதிலாக கன்னங்களை உப்பலாக வைத்துக் கொண்டு “பெல்கம், பெல்கம்” என்று பெங்காலி மாதிரியே உச்சரித்துவிட்டு வெளியேறினான். 

எனக்கு அவனை பார்ப்பதற்கு ‘தடிமாட்டு’ வில்லனை அடித்துவிட்டு பேக்ரவுண்ட் மியூசிக்கோடு வெளியேறும் தனுஷ் மாதிரியே தெரிந்தது.  விசிலடிக்க வேண்டும் போலிருந்தது.பெங்காலியின் முகத்தில் ஈயாடவில்லை. என்னைத் திரும்பிப் பார்த்தான். சிரிப்பை அடக்க முயற்சி செய்தேன். முடியவில்லை.

இண்டர்வியூ முடிந்தது. 

மேனேஜர் எங்களை அழைத்துக் கேட்டார். யாருமே சரியில்லை என்றான் பெங்காலி. சரியென்று சொல்லிவிட்டு மேனேஜர் நகர்ந்தார். அவர் கொஞ்ச தூரம் போனதும் ஓடிப்போய் அந்த மலையாளப் பையன் பெயரைச் சொன்னேன். காரணத்தையும் சொன்னேன். சிரித்துக் கொண்டு சரி என்றார்.

நேற்று காலையில் அந்தப் பையன் வந்திருந்தான். மேனேஜருடனான இண்டர்வியூ என்றான். இன்று காலையில் மேனேஜர் அழைத்து “அந்தப் பையனை செலக்ட் செஞ்சுட்டோம்” என்றார். சிரித்துக் கொண்டேன்.  

இந்த மேட்டர் பெங்காலிக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

Apr 17, 2013

ஏன் சார் கல்யாணம் பண்ணிக்கல?


“ஆக்கித் திங்கறவனுக்கு பொண்டாட்டி வேண்டாம்; மூட்டை தூக்கறவளுக்கு புருஷன் வேண்டாம்” என்று ஒரு சொலவடை உண்டு. சமையல் செய்யத் தெரிந்தவனுக்கும், மூட்டை தூக்கியாவது பிழைத்துக் கொள்ளும் துணிச்சல் உடையவளுக்கும் திருமணம் அவசியமில்லை என்று அர்த்தம். ‘புள்ள குட்டி’க்கு எல்லாம் திருமணம் அவசியமில்லை என்ற லாஜிக் பேக்ரவுண்டில் இருக்கும் போலிருக்கிறது. அது இருக்கட்டும்.

திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது வரமா? சாபமா என்றெல்லாம் கேட்க போவதில்லை. ஆனால் வேறொரு கேள்வி இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்து திருமணம் செய்து கொள்ளாத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா? ஒரு செகண்ட் கண்களை மூடி அவர்களை நினைத்து பாருங்கள். இப்பொழுது அவர்களைப் பற்றி சொல்வதற்கான ஒரு கதை நிச்சயம் உங்களிடம் இருக்கும். 

என்னிடமும் ஒரு கதை இருக்கிறது. சுப்பையன் வாத்தியாரைப் பற்றி. எங்கள் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். 

சுப்பையன் வாத்தியார் குடியிருந்த வள்ளியாம்பாளையத்திலிருந்து எங்கள் பள்ளி ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. வாத்தியார்கள் பைக்கில் வரத் துவங்கிய காலத்திலும் கூட சைக்கிளில் வந்த மிகச் சில ஆசிரியர்களில் ஒருவர். முழுக்கை கதர்ச்சட்டையை முழங்கைக்கு மேலாக சுருட்டிவிட்டிருப்பார். மடித்துவிட்டிருப்பார் என்று சொல்லவில்லை- சுருட்டி விட்டிருப்பார். நெற்றியில் ஒரு சிறிய கட்டி இருக்கும். தலையில் பூசிய எண்ணெய் அந்தக் கட்டி வரைக்கும் வடிந்து நின்றிருக்கும். 

காலையில் எட்டரை மணிக்கெல்லாம் சைக்கிளில் போய்க் கொண்டிருப்பவரை பார்க்க முடியும். பார்க்க மட்டும்தான் முடியும். பிடிக்க முடியாது. அத்தனை வேகத்தில் மிதிப்பார். அவரது சைக்கிள் அரதப்பழசானது. ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. முன்புறமாக யாராவது மெதுவாக போய்க் கொண்டிருந்தால் மணி அடித்துக் கொண்டிருக்கமாட்டார். ஒரு கட் அடித்து தாண்டி போய்க் கொண்டேயிருப்பார். எதற்காக அத்தனை வேகத்தில் செல்கிறார் என்றெல்லாம் தெரியாது. பத்து பதினைந்து நிமிடங்களில் பள்ளியை அடைந்துவிடுவார். அவரை முந்துவதற்காக முயற்சி செய்த எந்தப் பையனுமே வென்றதாக ஞாபகத்தில் இல்லை.

அவரது சைக்கிளின் ஹேண்டில் பாரில் எப்பொழுதும் ஒரு மஞ்சள் நிற துணிப்பை தொங்கிக் கொண்டிருக்கும். அதில் கசங்கிய ஒரு செட் வேட்டி சர்ட்டையும் டிபன் பாக்ஸ் ஒன்றையும் வைத்திருப்பார். சைக்கிளை விட்டு இறங்கியவுடன் ஒரு அறைக்குள் வேகவேகமாகச் சென்று பையில் இருக்கும் வேட்டி சட்டையை உடுத்திக் கொண்டு அதுவரை அணிந்திருந்த சட்டை வேட்டியை அந்தப் பைக்குள் திணித்துக் கொள்வார். இரண்டு செட் உடைகளுமே கசங்கி, சுருட்டித்தான் இருக்கும். ஆனால் எதற்காக மாற்றுகிறார் என்று யாருக்குமே தெரியாது. மாலை பள்ளி முடிந்து போகும் போதும் ஒரு முறை துணியை மாற்றிக் கொள்வார்.

துணியை மாற்றிவிட்டால் அவர் ‘ரவுண்டு’க்குத் தயார் என்று அர்த்தம். அந்த ரவுண்டு செம சுவாரசியமானது. சைக்கிளின் வேகத்திற்கு எந்தவிதத்திலும் சளைக்காதது ரவுண்ட் வேகம். தண்டனையளிப்பதற்காக வெளியே நிற்க வைப்பட்டிருக்கும் அல்லது முட்டி போட வைக்கப்பட்டிருக்கும் வகுப்புகளில் மட்டும் சில வினாடிகள் நிற்பார். ஆசிரியர் விரும்பினால் காது கொடுத்துக் கேட்பார். இல்லையென்றால் சில வினாடிகளில் நடப்பதற்கு ஆரம்பித்துவிடுவார். சில ஆசிரியர்கள் அவர் நகர்ந்த பிறகு பேச முயற்சிப்பார்கள். ஆனால் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ‘இன்னொரு தடவை பேசிக் கொள்ளலாம்’ என்று விட்டுவிடுவார்கள்.

விளையாட்டு மைதானங்களில் மற்ற வாத்தியார்கள் நம்மை பார்த்துவிட்டால் திட்டுவார்கள் என்ற பயம் மாணவர்களுக்கு இருக்கும். ஆனால் சுப்பையன் வாத்தியார் கிரவுண்டுக்கு வந்தால் படு ஜாலியாக இருக்கும். கில்லி விளையாடினாலும் சரி, பம்பரம் விட்டுக் கொண்டிருந்தாலும் சரி அவர் எதுவுமே சொன்னதில்லை. மீறிச் சொன்னால் “கில்லி விளையாடும் போது கண்ணை பத்திரமா பாத்துக்குங்க” என்ற மாதிரியான அறிவுரைகளாகத்தான் இருக்கும் என்பதால் பையன்களுக்கும் அவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. 

சாஃப்ட் கார்னருக்கு அது மட்டும் காரணமில்லை. அப்பொழுதெல்லாம் பள்ளியில் இருந்து பாதியில் வெளியேற விரும்பினால் உதவித் தலைமையாசிரியர்கள் மூன்று பேர்களில் யாராவது ஒருவரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஒரு துண்டுச்சீட்டில் பெயரும், வகுப்பும் எழுதிச் சென்றால் ‘வெளியே விடவும்’ என்று எழுதி கையொப்பமிட்டுத் தருவார்கள். மற்ற இரண்டு உதவித் தலைமையாசிரிகளிடம் சென்றால் துருவித் துருவி விசாரிப்பார்கள். திருப்தி வரவில்லையென்றால் மிரட்டி வகுப்பிற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். ஆனால் சுப்பையன் வாத்தியார் அதையெல்லாம் எதுவுமே கண்டுகொள்ள மாட்டார். அனுமதி கொடுத்துவிடுவார். மதிய உணவுக்கு பிறகு குறைந்தது ஐம்பது பேராவது அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்கு நிற்பார்கள். வடிவேலு கணக்காக “விட்டா மடுவுக்கு ஒரு கையெழுத்து கேட்பாங்க போலிருக்கு” என்று அடித்து நொறுக்குவார்.  

மாலையில் பள்ளி முடியும் தறுவாயில் மீண்டும் துணி மாற்றிக் கொண்டு மூன்று கிலோமீட்டர் தாண்டி இருக்கும் ஒரு பேக்கரிக்கு செல்வார். மாலை நேரம் என்பதற்காக சைக்கிளின் வேகம் குறைந்திருக்காது. காலையில் பறந்த அதே வேகத்தில்தான் செல்வார். பேக்கரி, மளிகைக் கடை என்று எதுவாக இருந்தாலும் வெளியே நின்று கேட்க மாட்டார். கடைக்குள் புகுந்துவிடுவார். நேரம் இருக்கும் வரை கடைக்காரருக்கு உதவிகரமாக மற்ற வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை எடுத்துத் தருவது, பொட்டலம் கட்டுவது என்று கொஞ்ச நேரத்துக்கு கலக்குவார். நேரம் ஆனதும் தனக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொண்டு காசையும் வைத்துவிட்டு கிளம்பிவிடுவார்.

தினமும் அந்த பேக்கரியிலிருந்து பிஸ்கட், ரொட்டி பாக்கெட்களை எடுத்துக் கொண்டு சைக்கிளை பேக்கரிக்கு முன்னால் நிறுத்தி பூட்டிவிட்டு பேருந்து பிடித்து வளையபாளையம்,கணக்கம்பாளையம் போன்ற மலையடிவார கிராமங்களுக்குச் சென்றுவிடுவார். அங்கு படிப்பை கைவிட்ட பெண்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதும் அவர்களுக்கான Guidance செய்வதையும் ஒரு சேவையாகவே செய்து கொண்டிருந்தார். அந்தப் பெண்களுக்கு கொடுக்கத்தான் பிஸ்கெட்டும், ரொட்டி பாக்கெட்டும். இரவில் திரும்ப வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போவார்.

எங்கள் அத்தை மலையடிவார ஊரில்தான் இருந்தார்.‘அந்தப் பெண்ணுக்கு டீச்சர் ட்ரெயினிங் சீட் வாங்கிக் கொடுத்தார், இந்தப் பெண் அவரால்தான் D.Co-op படிப்பை முடித்தாள்’ என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு ‘வெற்றிக் கதையை’ சொல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இந்தக் கதைகளை வாத்தியார் வெளியில் சொன்னதுமில்லை மற்றவர்களுக்கு தெரிந்ததுமில்லை. 

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சுப்பையன் வாத்தியார் ரிடையர்ட் ஆகிவிட்டார். அனேகமாக எழுபத்தைந்து வயதை நெருங்கியிருக்கக் கூடும். வயதுதான் கூடியிருக்கிறது. ஆள் அப்படியேதான் இருக்கிறார். இன்னமும் அதே சைக்கிளைத்தான் வைத்திருக்கிறார். அதே வேகத்தில்தான் ஓட்டுகிறார். எப்பவாவது பார்க்கும் போது சிரித்துக் கொள்வோம். கடந்த முறை ஊருக்கு சென்றிருந்த போது மூக்கான் மளிகைக்கடையில் பொட்டலம் கட்டிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து சிரித்த போது “முட்டை வாங்க வந்தேன் சார்” என்றேன். மூக்கானிடம் எனக்கு சீக்கிரம் கட்டித்தரச் சொன்னார். கடையை விட்டு வெளியே வந்து வேலை பற்றியெல்லாம் விசாரித்தார். நானும் விவரித்துக் கொண்டிருந்தேன். 

அவரிடம் இதுவரை கேட்டதேயில்லை. கேட்டுவிடலாம் என்று தோன்றியது.  

“ஒரு கேள்வி சார்...தப்பா எடுத்துக்காதீங்க” என்றேன். 

“கேளுப்பா” என்றார். 

“ஏன் நீங்க கல்யாணமே பண்ணிக்கல?” கேட்டே விட்டேன்.

ஒரு வினாடி அமைதியாக இருந்தார். தோள் மீது கை போட்டு “ஏன்?  ஏதாச்சும் பொண்ணு பாத்திருக்கியா? பேண்ட் போட்ட புள்ளையா?” என்று கேட்டுவிட்டு கெக்கேபிக்கே என்று சிரித்தார். 

அதற்கு மேல் அவரிடம் என்ன கேட்பது?  “நீங்க உம்ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க..தூள் கெளப்பிடலாம்” என்றேன். 

இரண்டு பேருமே  சிரித்துக் கொண்டோம். 

அந்தக் கேள்வி மட்டும் பதில் இல்லாமல் இருவருக்குமிடையில் அலைந்து கொண்டிருந்தது.

Apr 15, 2013

நீ வளரணும் தம்பி


கீழ்க்கண்ட இரண்டும் நீங்கள் எழுதியது. சாதாரணமாகப் படித்தாலே, இவை இரண்டும் நேர் முரணாக இருப்பது புரியும். 

பாரத் பந்த்

தொழிற்சங்கவாதிகள் கோரிக்கைகளை முன்வைப்பது பற்றிய ஆட்சேபனைகள் எதுவும் இல்லை. ஆனால் இரண்டு நாட்கள் பந்த் நடத்துவதால் காய்கறி விற்பவனுக்கும், தினசரி ஆட்டோ ஓட்டி பிழைப்பவனுக்கும், கட்டடவேலை செய்பவனுக்கு, மண் வேலை செய்பவர்களுக்கும் என்ன பயன் வந்துவிடப் போகிறது என்றுதான் தெரியவில்லை. ஆனால் இந்த பந்த்களால் அதிகம் பாதிக்கப்படப் போவது அவர்கள்தான்.

இன்றைய பந்த்தினால் நேரடியாக பாதிக்கப்படப் போவது இந்த ஆட்டோக்காரரை போன்ற இலட்சக்கணக்கான அன்றாடங்காய்ச்சிகள்தான். பந்த்க்கு அழைப்பு விடுத்திருக்கும் பதினோரு தொழிற்சங்கத் தலைவர்களும் ஏ.சி.ரூமில் இருப்பவர்கள் என்று நம்புகிறேன்.

சோற்றுக்கு லாட்டரி அடிப்பவர்கள் எப்படியோ தொலையட்டும்.

தொழிற்சங்கம் ஜிந்தாபாத்......சமத்துவம் ஜிந்தாபாத்!


தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்தால் சுங்கவரியை தவிர்க்கலாம். சுங்கவரி என்ற பெயரில் சுருட்டிக் கட்டுகிறார்கள். கேட்டால் தனியார்மயமாக்கல் என்பார்கள். நமக்கெதுக்கு பொல்லாப்பு? எவனோ எப்படியோ போகட்டும் என்று மாநிலச் சாலையை எடுத்துக் கொள்வதுதான் உசிதம். தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் நூற்றைம்பது கிலோமீட்டரில் குறைந்தபட்சம் பத்து நாய்களாவது நசுங்கிக் கிடக்கும். டெவலப்மெண்ட் என்ற பெயரில் பெரும்பாலான ஊர்களுக்கு நடுவில் கோடு போட்டுச் செல்கிறது நெடுஞ்சாலை. முன்பு அடுத்ததடுத்த தெருவாக இருந்தவர்களை இப்பொழுது நெடுஞ்சாலை பிரித்து வைத்திருக்கிறது. அடுத்த தெருவுக்கு செல்வதென்றால் கூட நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்து யூ டர்ன் அடிக்க வேண்டியிருக்கிறது. நம்மவர்களே கணக்கு வழக்கில்லாமல் வண்டிகளின் சக்கரத்திற்கடியில் சரணமடைகிறார்கள்.

முதல் கட்டுரையில் தனியார்மயத்தை எதிர்ப்பவர்களை (கம்யூனிஸ்ட்கள்) எதிர்க்கிறீர்கள். தனியார்மயம் இருந்தால், சாதாரண தொழிலாளியும் பிழைக்கலாம் (ஒரு நாள் மட்டும்) என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஒரே மாதத்தில் தனியார்மயம் மோசமானது என்று எழுதுகிறீர்கள். இதில் எது சரி?

மேற்கண்ட தாண்டவம் கட்டுரை சார்ந்து மற்றொரு விஷயம்: இயற்கையால் குத்திக் கிழிக்கப்படும் எனது ஊரின் அவலத்தை ... இப்படியெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். 

இயற்கை ஏதோ பெரிய நம்பியார், பி.எஸ்.வீரப்பாவைப் போல. இயற்கை என்பது தன் உணர்வு அற்ற ஒரு ஜடமல்ல. அது காரண, காரியத் தொடர்புடையது. அதை அறிவியல்பூர்வமாக புரிந்துகொண்டால் மட்டுமே அதை உணர்ந்து கொள்ள முடியும்.

எதையும் சுவாரசியமாக எழுத வேண்டும் என்ற முனைப்பைத் தவிர, வேறு எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால், உலகம் சுவாரசியமானதல்ல, வஞ்சகம், சூழ்ச்சி, அதிகாரம், பணம், பலம் போன்ற பல்வேறு நச்சுகள் நிறைந்தது. அதை உங்கள் தளத்தில் பார்க்க முடியவில்லை.

இந்தக் கடிதத்தை முன்பே எழுதிவிட்டேன். இன்றைக்கு வெளியான கட்டுரையை பார்த்தவுடன்தான் கடிதத்தை உடனே அனுப்ப வேண்டுமெனத் தோன்றியது. பாரத் பந்த் என்று 2 மாதங்களுக்கு முன்பு எழுதிய அதே கட்டுரையை, ஒரு குடுவையில் போட்டு குலுக்கி எடுத்து இன்றைக்கு தேர்தல் பற்றி எழுதியிருக்கிறீர்கள். எதிலுமே அரசியல் பார்வையோ, சமூகப் பார்வையோ இல்லை.  நடுத்தர வர்க்கம் ஏற்கெனவே ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிற அதே ஒப்பாரி, சால்ஜாப்பு, "என்னத்தை செய்து, என்ன மாறப் போகிறது" என்ற போக்கிலேயே கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

Thanks,

Regards,
Valliappan .K

                                                        **************

அன்புள்ள வள்ளியப்பன்,

வணக்கம்.

மூன்று கட்டுரைகளையும் Comparison செய்து ஒரு மின்னஞ்சலை அனுப்பியமைக்கு மிக்க நன்றி. நேரடியான எதிர்மறை விமர்சனம் என்றாலும் நாகரீகமான மொழியில் அனுப்பியிருக்கிறீர்கள். அதற்காக என் அன்பு.

இந்த மூன்று கட்டுரைகளையும் எதற்காக வலுக்கட்டாயமாக இணைத்து பார்த்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நேரமிருப்பின் எந்த முன் முடிவும் இல்லாமல் இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள். மூன்று கட்டுரைகளுமே வெவ்வேறு விஷயங்களை மனதில் வைத்து எழுதப்பட்டது. அவற்றை எந்தவிதத்திலும் ஒப்பிட்டு பார்க்கத் தேவையில்லை என நினைக்கிறேன். இருந்தாலும் எழுதுவதற்கான உரிமை எனக்கு இருப்பதை போலவே விமர்சிப்பதற்கான உரிமை வாசிப்பவர்களுக்கு இருக்கிறதல்லவா? அதனால் No comments.

பாரத் பந்த்தை பாட்டிலில் குலுக்கி டூ மச் என்ற கட்டுரையை எழுதப்பட்டிருக்கிறது என்ற தங்களின் கண்டுபிடிப்பு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. எந்தவிதத்தில் இவை இரண்டும் சம்பந்தமுடையவை என்று யோசித்து விடை கிடைக்காமல் மண்டை காய்ந்து கொண்டிருக்கிறேன். அதுமட்டுமில்லை பாரத் பந்த் கம்யூனிஸ்ட்களை எதிர்த்து எழுதப்பட்டது, தாண்டவம் இயற்கையை வில்லனாக சித்தரித்து எழுதப்பட்டது என்பதெல்லாம் கூட எனக்கு புரியாத புதிர்கள்தான். (தா.பாண்டியனை கம்யூனிஸ்ட் என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்)

நான் எழுதியது சரி என்றும், உங்களின் விமர்சனம் தவறு என்றும் justification செய்யப்போவதில்லை. அது தேவையுமில்லை என நினைக்கிறேன். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “இயற்கையை வில்லனாக சித்தரித்திருக்கிறேன்” என்ற உங்களது குற்றச்சாட்டிலிருந்தே இந்தக் கட்டுரைகளில் உங்களின் வாசிப்பிற்கும் புரிதலுக்கும் இடையில் இருக்கக் கூடிய இடைவெளியை புரிந்து கொள்கிறேன்.

இன்னும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.

முழுமையாக கட்டமைக்கப்பட்ட எந்த சித்தாந்தமும் எனக்கு கிடையாது. யாரையுமே முழுமையாக பின் தொடர்வதில்லை. கம்யூனிஸத்தின் ஒரு அம்சத்தை எதிர்க்கும் என்னால் கம்யூனிஸத்தின் இன்னொரு அம்சத்தை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடியும். தனியார் மயத்தை இன்று ஏற்றுக் கொள்ள முடியும் என்னால் நாளை ஏதோ ஒரு காரணத்திற்காக தனியார்மயத்தை எதிர்க்க முடியும். பெரியாரின் புத்தகத்தை வாசிக்கும் என்னால் சபரிமலைக்கு மாலையிட முடியும். இப்படியான கேரக்டராகத்தான் இருந்து வந்திருக்கிறேன்.

மற்றபடி Concrete ஆன சித்தாந்தங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் களத்தில் இறங்கிப் போராடும் போராளியாகவோ அல்லது செயற்பாட்டாளாராகவோ இதுவரை  இருந்ததில்லை. இனியும் அப்படி இருப்பேன் என்று நினைக்கவில்லை. தனிப்பட்ட வாழ்வில், அன்றாட நிகழ்வில், வாசிப்பதன் அடிப்படையில் என்னை எவையெல்லாம் பாதிக்கின்றனவோ அதே அடிப்படையில்தான் சிந்தனை ஓட்டம் இருக்கிறது. அதைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டபடி ‘என்னத்தை சொல்லி என்ன மாறப்போகிறது’ என்பதுதான் என் நம்பிக்கை. இந்த தேசத்தை திருத்துகிறேன், சமூகத்தை மாற்றுகிறேன் என்பதெல்லாம் எனக்கு சாத்தியமேயாகாத விஷயங்கள்.

அவநம்பிக்கைகள் மிகுந்தவனாக, நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்தவனாக, அதே சமயம் வாழ்வதற்கு தேவையான துக்கினியூண்டு உற்சாகமிக்கவனாக இந்த உலகில் மிக மிகச் சாதாரண மனிதனாக வாழ விரும்புகிறேன். உங்களின் கசப்பான வார்த்தையில் சொன்னால் “நடுத்தர வர்க்கம்”. என் சமாதான வார்த்தைகளில் சொன்னால் “யதார்த்தவாதி”.

இந்த வாழ்க்கை என்னைச் சுற்றி நிகழ்த்தும் பகடையாட்டங்களை எள்ளலாக, புலம்பலாக, அழுகையாக, கோபமாக என ஏதோ ஒரு வடிவத்தில் மற்றவர்களிடம் சொல்ல எத்தனிக்கிறேன். அந்த எத்தனிப்பு சுவாரசியமானதாக இருக்க வேண்டும் என விரும்புவதில் என்ன தவறு என்று தெரியவில்லை.

மனதில் தோன்றுவதை எழுதுகிறேன். வாசிக்கிறார்கள். சிலரது சிந்தனை நான் யோசிப்பதோடு ஒத்துப் போகிறது. உடன் வருகிறார்கள். உங்களைப் போன்றவர்கள் முரண்படுகிறார்கள். அவர்களிடமும் முடிந்தவரை என் நிலைப்பாட்டைச் சொல்லிவிடுகிறேன். ஏற்றுக் கொள்பவர்கள் இன்னும் சற்று தூரம் வந்து பார்க்கிறார்கள். மறுப்பவர்கள் வேறு வழியை பார்த்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். Passing clouds.

மற்றபடி இந்த உலகம் வஞ்சகம், சூழ்ச்சி, பணம், அதிகாரம், பலம் போன்ற பல்வேறு நச்சுகள் நிறைந்தது, எனக்கு சமூகப் பிரக்ஞை இல்லை, அரசியல் பார்வை இல்லை போன்றவற்றை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி. “நீ வளரணும் தம்பி” என்று எனது முதுகில் தங்களின் சார்பாக தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.