Mar 2, 2013

Compromise


இப்பொழுதெல்லாம் பெட்ரோல் விலை ஏறிவிட்டது என்பது எந்த அதிர்ச்சியையும் கொடுப்பதில்லை. கொசு கடிப்பது போலத்தான். அவ்வப்பொழுது கடிக்கும். நாமும் அவ்வப்பொழுது தட்டிவிட்டுக் கொள்ள வேண்டும். பெட்ரோல் விலை என்றில்லை- வேறு ஏதேனும் காரணத்திற்காக நமக்கு ரோஷம் வந்திருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள். கடைசியாக சுரணை வந்தது எப்பொழுது என்று யோசித்துப் பார்த்தால் எழவு எனக்கு எதுவுமே ஞாபகத்திற்கு வருவதில்லை. சுரணை என்பதே செத்துப் போய்விட்டது போலிருக்கிறது. வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வெட்கமாகத்தான் இருக்கும். ஆனால் நமக்குள்ளேயாவது ஒத்துக் கொண்டுதானே ஆக வேண்டும். 

அதிகாரவர்க்கம் எதைச் செய்தாலும் ஏற்றுக் கொண்டு பழகிவிட்டோம். மீறிப்போனால் சுற்றியிருப்பவர்கள் நான்கு பேரிடம் புலம்புவோம் அல்லது ஃபேஸ்புக் போன்ற இடங்களில் வீராவேசமாக பொங்குவோம். இப்பொழுது அதற்கும் கடிவாளம். 66 A சட்டத்தை கொண்டு வந்துவிட்டார்கள். பொங்கினால் உப்புமா ஆக்கிவிடுவார்களோ என அடங்கிப் போவதுதான் உசிதம் போலிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் குடும்பம், வேலை, சமூக அந்தஸ்து என்ற individual priorities அதிமுக்கியத்துவம் பெற ஆரம்பித்துவிட்டன. இவற்றிற்கு பங்கம் வராமல்தான் எனது எந்த போராட்டமும் இருக்கும் என்ற மிடில்-க்ளாஸ் மனநிலைதான் கிட்டத்தட்ட அத்தனை பேரிடமும் இருக்கிறது. இவற்றில் ஏதோ ஒன்றிற்கேனும் பங்கம் வராமல் எந்த ஒரு போராட்டமும் சாத்தியமில்லை என்பதால் வால்கள் சுருட்டிக் கட்டப்பட்டிருக்கின்றன.

வளர்ச்சி என்ற பெயரில் தொலைத் தொடர்பு சாதனங்கள், விதவிதமான ஆடைகள், செகளரியமான சாலைகள், அட்டகாசமான கார்கள், கண்ணைக் கவரும் ஆபரணங்கள், மால்கள் என அரசாங்கம் எதை எதையோ கொண்டு வந்துவிட்டது. இந்த அத்தனை ‘ஐட்டங்களுமே’ ஒருவித ஈர்ப்பு சக்தியுடைய காந்தங்கள்தான். இந்த காந்தங்களை அடைய பணம் அதி பிரதானமாகிவிட்டது. அந்த பணத்தை அடைய எந்தவிதமான Compromise செய்து கொள்ளவும் பழகிக் கொண்டோம். இத்தகைய சமரசங்களால் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறோம்.

சரி அதை விடுவோம். சமூகம், பருத்திக் கொட்டை, புண்ணாக்கு என்று ஜல்லியடிக்காமல் என் பிரச்சினையைச் சொல்லிவிடுகிறேன். புது வீடு கட்டியிருக்கிறோம் அல்லவா? வீட்டின் சாக்கடை குழாயை பாதாளாச் சாக்கடையில் இணைக்க வேண்டும். அதற்கு சாலையைத் தோண்ட வேண்டும். மண் சாலைதான். ஆனாலும் அதற்கு தனியாக மாநகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டுமாம். இந்த  விவகாரம் தெரியாமல் இரவோடு இரவாக வேலையை முடித்து ஆட்களுக்கு காசு கொடுத்து அனுப்பியாகிவிட்டது. 

பக்கத்துவீட்டு புண்ணியவான் யாரோ ஒருவருக்கு நாக்கு அரிப்பெடுத்திருக்கிறது. கார்பொரேஷனில் போட்டுக் கொடுத்துவிட்டார். அடுத்த நாள் காலையில் விடிந்தும் விடியாமலும் கைத்தடி ஒருவர் வந்துவிட்டார். கார்பொரேஷனில் வேலை செய்கிறாராம். எகிறி எகிறி குதித்தார். 

“தெரியாமல் செய்துவிட்டோம். என்ன செய்யலாம் சார்?” என்றேன்.

“ஃபைன் கட்டிடுங்க”

“சரி சார். எவ்வளவு?”

“அறுபதாயிரம்” என்றார். எப்படியெல்லாம் அதிரச் செய்கிறார்கள் பாருங்கள்.

அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “அவ்வளவு பணம் இப்போ இல்லை சார்” என்றேன். அதில் கெஞ்சும் தொனி இருந்தது.

“அப்படீன்னா இஞ்சினியரை வந்து பாருங்க” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இஞ்சினியர் யாரென்று தெரியவில்லை. ஆனால் ஒரு அப்பாடக்கர் போலிருக்கிறது.

எப்படியும் லஞ்சம் கேட்கத்தான் முயற்சிக்கிறார்கள் என்று தெரியும். நம்பிக்கை, நேர்மை, ஹமாம் என்றெல்லாம் பேசிவிட்டு அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பது முறையில்லை அல்லவா? லோக் அயுக்தாவில் விசாரித்துப் பார்க்கலாம் என்று மண்டைக்குள் வண்டு ரீங்காரமிட ஆரம்பித்தது. லோக் அயுக்தா என்பது லஞ்ச ஒழிப்புத்துறை.

லோக் அயுக்தாவின் நெம்பர் எல்லாம் கண்டுபிடித்த பிறகு, தெரிந்தவர் ஒருவர் “போட்டுக் கொடுக்கிறது பிரச்சினையில்லை சார். அதே கார்பொரேஷனில் ஏகப்பட்ட டிபார்ட்மெண்ட் இருக்கு. சாக்கடை குழாயில் ஆரம்பித்து குடிதண்ணீர் கனெக்‌ஷன் வரைக்கும் எதில் வேண்டுமானாலும் கை வைக்கலாம்” என்று புளியைக் கரைத்தார். அவர் சொன்னதும் வாஸ்தவம்தான். கஷ்டப்பட்டு வீட்டைக் கட்டிவிட்டு கடைசியில் சில சில்லரை வேலைகளில் சிக்கிக் கொண்டு சிரமப்பட வேண்டியதில்லை என்று தோன்றியது.

அவரே ஐடியாவும் கொடுத்தார் “சண்டைக்கு போவதை விட சரணாகதியாவதுதான் நல்லது. நீங்க போனால் காசு கேட்பாங்க. அப்பாவை அனுப்பி வைங்க”.

அப்பா கொஞ்சம் பொறுமையாக பேசும் சுபாவம் கொண்டவர். நேற்று கார்பொரேஷன் அலுவலகத்திற்குச் சென்று யாரோ சிலரை பார்த்துவிட்டு வந்தார். அத்தனையும் கிட்டத்தட்ட சுமூகமாக முடிந்துவிட்டது. மழுங்கிப் போனவன் என்று காட்டிக் கொண்டால் பெரும்பாலான பிரச்சினைகளை தவிர்த்துவிடலாம் போலிருக்கிறது. மழுங்கியவர்களைத்தான் சுற்றமும் நட்பும் விரும்புகிறது.

சில்லி மேட்டர். இதிலேயே Compromise செய்து கொண்ட நானெல்லாம் பெட்ரோல் விலைக்கு எதிராக பொங்கியெழுவோம் என்று கெத்துக் காட்டுவதெல்லாம் டூ மச் இல்லையா?. 

ப்ளீஸ்! முதல் பத்தியை மறந்துவிடுங்கள்.