(1) மிஞ்சிய குழந்தை
உனக்கும் எனக்குமான அத்தனை தொடர்புகளையும்
துண்டிக்கிறேன்.
உனது ஞாபகங்களை புதைத்துவிடுவேன்
என்ற போது
அது சாத்தியமா என நீ சிரித்த கணத்தை
ஒரு முறை நினைத்துக்கொண்டு புதைக்கிறேன்
உனக்கான கண்ணீரை கொஞ்சம் மிச்சம் வைத்திருந்தேன்
அதை வற்றிய இந்தக் குளத்தில் ஊற்றிய போது
குளத்தின் காய்ந்த கண்களில் தெரிந்த கருணை
நமது முதல் ரகசிய முத்தத்தை நினைவூட்டியது தற்செயலானதுதான்
நம் மாலைப் பொழுதுகளை
தீர்த்த
இந்த ஆலமரத்தை வெட்டச் சொல்லி ஏற்பாடுகள் செய்தாகிவிட்டது
படுக்கையை யாரோ ஒருத்திக்கு கையளித்தாயிற்று
தலையணை
மெத்தை
படுக்கை விரிப்புகள்-
நாம் பகிர்ந்து கொண்ட சகலமும்
எரிந்து கொண்டிருக்கின்றன
புன்னகைகளை அழிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை
விட்டுவிட்டேன்
உனது உடைமைகளை பிரித்து எடுத்துக் கொண்டாய்
எனது முதல் வாழ்த்துமடலை
நீ கசக்கிய போது
நம்மிடம் எந்தச் சலனமுமில்லை
இப்பொழுது கடைசியாக
இந்த வீட்டில் மிடறு தண்ணீரை
அருந்திக் கொள்கிறோம்
சிலிண்டரை திறந்துவிட்டு
பூட்டியாகிவிட்டது
ஒரு தீக்குச்சியை உள்ளே வீசப் போகிறேன்
கடைசியாக மிஞ்சும் இந்தக் குழந்தையை
எரியும் வீட்டிற்குள் வீசுவதா
அல்லது
கைப்பைக்குள் வைத்திருக்கும் ப்ளேடை எடுப்பதா
என
நீ யோசித்துக் கொண்டிருக்கிறாய்.
நானும்.
(2) பாதை தொலைத்த நாய்கள்
கிராமத்தை
நெடுக்காக பிளந்து செல்லும்
நெடுஞ்சாலையை
கடக்க காத்திருக்கும்
அவள்
நேற்றைய மழையில் துளிர்த்த
பசுந்தளிர் ஒன்றைக் கிள்ளி
உள்ளங்கையில் வைத்திருக்கிறாள்
வியர்வையில் கசங்கிக் கொண்டிருக்கும் அது
நசுங்கிக் கிடந்த நாயொன்றை நினைவுபடுத்துகிறது
பதட்டத்தில் தளிரை வீசியெறிந்தவள்
நெடுஞ்சாலைகளில் மரிக்கும் நாய்களுக்காக
ஒரு கணம் மெளனிக்கிறாள்
மணிக்கு நூற்றியிருபது கிலோமீட்டர் வேகத்தில்
அவளைக் கலைக்கிறது
கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ.
(3) பருவம் மாறும் பிரியம் அல்லது வேறெதுவும்
அது துவக்கத்தில் மிக எளிதானதாக இருந்தது
உறைந்த தேங்காய் எண்ணெயில் கீறப்படும் கோடு என
நீங்கள் குறிப்பிட்டபோது
வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்த ரோஜாப்பதியனின் பனித்துளிகளை
மென்சுண்டுதலில் சிதறடித்துக் கொண்டிருந்தது ஞாபகத்தில் இருக்கிறது
அதுவே பிறகு சற்று கடுமையானதானது
கறிவேப்பிலை மரத்தில் பூச்சி பிடித்திருந்த அந்தப் பருவத்தில்
வெடித்திருந்த பாதைகளில்
நடந்து களைத்திருந்தேன்
தாகம் உதடுகளை வறண்டுவிடச் செய்கையில்
அந்த ஈ
முகத்தில் விளையாடிக்கொண்டிருந்தது
நாம் பற்கள் தெரியாமல் புன்னகைத்துக் கொண்டோம்
இப்பொழுதெல்லாம் மிகச் சிக்கலானதாகிவிட்டது
முறுக்கேறி கன்னங்கள் பிளந்து கிடக்கின்றன
அவ்வப்பொழுது இரத்தம் போன்ற திரவம் பிசுபிசுத்து அப்பியிருக்கிறது
இந்த அவலத்தை நீங்கள் பார்த்துவிட வேண்டாம்
உங்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லாத
நான்
அழுவது குறித்தான நம்பிக்கையையும் இழந்துவிட்டேன்
(4) டைனோசர்களுடன் வாழ்பவன்
டைனோசர்களை வளர்க்கும்
என் பக்கத்து வீட்டுக்காரரின் பற்களில்
கண்கள் முளைத்திருக்கிறதென
வெளியூர்களிலிருந்து வந்து பார்க்கிறார்கள்
அவர்களிடம்
தன் பற்களைக் காட்டும் அந்த மனிதன்
ஒருபோதும் டைனோசர்களைக் காட்டுவதில்லை
தெருவோரம் கிடந்த டைனோசர் குட்டியை
முதன் முதலாக
அவர் எடுத்து வந்தபோது
அருகாமையில் எதிர்த்தார்கள்
அக்குட்டி வளர்கையில்
இரத்த கவிச்சை வீச குறையத் துவங்கியது
எதிர்த்தவர்களின் எண்ணிக்கை
இப்பொழுது நிறைய டைனோசர்களை வளர்க்கிறார்
அவைகளுக்கென வீடுகளை
வாடகைக்கு பிடிக்கிறார். வீடு தராதவர்களை
அவைகளுக்கு உணவாக்கி விடுவதாக மிரட்டுவதும் உண்டு
அதன்பிறகாக வாடகை தருவதில்லை
டைனோசர்கள் அவர் மீது மிகுந்த அன்பு செலுத்துவதை
அவரின் பாதத்தை தம் சொர சொர நாவினால் தடவுவது உட்பட-
ஜன்னலில் ஒளிந்து பார்த்திருக்கிறேன்
சமீபமாக
வீடுகளுக்கு அதிக சேதாரமில்லாமல்
அவை
அடங்கி வாழக் கற்றுக் கொண்டதாக டீக்கடைக்காரரிடம் சொல்லியிருக்கிறார்
’டைனோசர்களுடன் வாழ்வது எப்படி’ என்ற புத்தகம் வாசிப்பதை
தினசரி வழக்கமாக்கிக் கொண்ட எனக்கு
டைனோசர்களின் அருகில்
அவன்
என் குழந்தையயை தூக்கிச் சென்றதாக கேள்விப்பட்ட
வெள்ளிக்கிழமையிலிருந்து
விரல்கள் சில்லிட்டுக் கிடக்கின்றன
எதிர்க்கவே முடியாத மனிதனிடம்
மறுப்பு சொல்வதற்கான வழிமுறைகளை
கூகிளில் தேடி
இரவுகள் தீர்ந்து கொண்டிருக்கின்றன
இதுவரை கடுமை காட்டப்படாத குழந்தையிடம்
இனி அவனிடம் போகக்கூடாது என மிரட்டிய கணம்
அதன் பற்கள் சிமிட்டியதை பார்த்தேன்
(5) மூன்று தினங்களாக உங்களை அழைத்துக் கொண்டிருப்பவன்
மூன்று தினங்களாக
உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் அவனுக்கு
பெயர் எதுவுமில்லை
ஓவ்வொருவரின் பெயரையும்
அவர்கள் திரும்பிப்பார்க்கும் வரை உச்சரித்துவிட்டு
பிறகு சலனமில்லாமல் நகர்ந்துவிடுகிறான்
இதுவரை நீங்கள் திரும்பிப்பார்க்காதது குறித்த
எந்த வருத்தமுமற்ற அந்த மனிதன்
தன்
ஈரம் வற்றிய குரலில்
உங்களின் பெயரை
கமறிக் கொண்டிருக்கிறான்
உங்களை அழைப்பதற்கு முன்பாக
எதிர்வீட்டு கணித ஆசிரியரை அழைத்திருந்தான்
குழப்பத்தில் ஸ்கூட்டரில் இருந்து விழுந்தவர்
டெட்டால் வாசனை வீசிக்கொண்டிருக்கும்
மண்டை காயத்துடன் பரிந்துரைக்கிறார்
அவனை நீங்கள் திரும்பிப்பார்க்க வேண்டுமென
எதைப்பற்றியும் கவலையுறாத
நீங்கள்
நெற்றியில் மூன்றாவது கண் முளைக்கத் தொடங்கும்
என நம்பிக் கொண்டிருக்கையில்
நிலவும் வெள்ளியும்
இன்றிரவு
நேர்கோட்டில் வருவதாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்
பெட்ரோலை ஊற்றி முடித்திருந்தார்
உங்களின் தலையுச்சியில்
************
கவிஞர் ராணிதிலக்கின் வலைப்பூவான சப்தரேகையில் அவர் பதிவிட்டிருந்த கவிதைகள். இந்தக் கவிதைகள் “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ராணிதிலக் அவர்களுக்கு நன்றிகள்.