அன்பிற்குரிய மணிகண்டன்,
உங்கள் வலைத்தளத்தில் அவ்வப்போது வாசிப்பதுண்டு. கவிதைகள், கொங்கு வாசனை ஆகிய பகுதிகள் பிடிக்கும். அனுபவக் கட்டுரைகள் சில வசீகரித்ததுண்டு.
இன்று ‘தோற்றால் சங்கு அறுத்துவிடுவார்கள்’ என்றொரு கட்டுரை வாசித்தேன். சாதாரணமான பகிர்வுதான் என்றாலும் அதில் ஒரு பிழையைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ‘சமணக் காப்பியமான மணிமேகலை’ என்று எழுதியுள்ளீர்கள். மணிமேகலை பௌத்தக் காப்பியம். பௌத்தத்திற்கு இருக்கும் ஒரே காப்பியம் இதுதான். சிலம்பு, சிந்தாமணி, நீலகேசி உள்ளிட்டவை சமணக் காப்பியங்கள்.
முதல் வரியின் தொடக்கம் ‘சைவர்களைச் சமணர்கள் அடிக்க’ என்றிருக்கிறது. சமணர்கள் அடிதடியில், வன்முறையில் ஈடுபட்டதாகச் சான்றுகள் இல்லை என்றே நினைக்கிறேன். அதனால் தான் அம்மதம் நிலைக்காமல் போய்விட்டது.
சொல்லத் தோன்றியதால் எழுதுகிறேன். தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் அல்ல.
அன்புடன்,
பெருமாள்முருகன்,
*******
டியர் சார்,
வணக்கம்.
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
தாங்கள் ஃபேஸ்புக்கில் இருப்பது தெரியும். ஆனால் வலைப்பதிவிலும் இருக்கிறீர்கள் என்பது சந்தோஷமான ஆச்சரியம்.
கொங்குவட்டாரச் சொல்லகராதிக்காகவும், கூளமாதாரிக்காவும், மாப்பு குடுக்கோணுஞ் சாமீக்காவும் என அவ்வப்போது தங்களை நேரில் சந்திக்க விரும்பிய தருணங்கள் நிறைய உண்டு. இப்பொழுது தங்களிடமிருந்து திடீரென மின்னஞ்சல் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
‘தோற்றால் சங்கு அறுத்துவிடுவார்கள்’ என்ற பதிவில் இரண்டு தகவல்களை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.
1) மணிமேகலை சமண காப்பியம் இல்லை.
அப்பரின் காலத்திற்கு முந்தைய காப்பியமான மணிமேகலை பெளத்த நூல் என்றுதான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கவனக் குறைவாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ சமணக் காப்பியம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். இது நிச்சயம் வருத்தம் தெரிவிக்க வேண்டிய தகவல் பிழைதான். மணிமேகலைக்கு பதிலாக சிலப்பதிகாரம் என்று இருந்திருக்க வேண்டும்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அடுத்த முறை இத்தகைய கவனக்குறைவான பிழைகளை தவிர்க்க முயற்சிக்கிறேன்.
2) சமணர்கள் வன்முறையாளர்கள் இல்லை
சமணர்கள் அப்பரை கொடுமைப்படுத்தினர் என்பதும், சம்பந்தரின் மடத்தை கொளுத்தினர் என்பதும் பெரிய புராணத்தில் பதிவாகியிருக்கிறது. சேக்கிழாரின் இந்தக் கூற்று ஆதாரப் பூர்வமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. சமணர்கள் அடிதடியில் இறங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் கை வலுவிழந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். இதனடிப்படையில்தான் ‘சைவர்களைச் சமணர்கள் அடிக்க’ என்று பத்தியைத் தொடங்கினேன்.
தங்களைப் போன்ற எனது மரியாதைக்குரிய எழுத்தாளர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை ‘தவறு கண்டுபிடிக்க அனுப்பட்ட மின்னஞ்சல்’ என்று ஒரு போதும் நினைக்க மாட்டேன். நினைக்கவும் முடியாது. இது போன்ற மின்னஞ்சல்கள் எனது புரிதல்களை வேறு தளத்திற்கு நகர்த்தும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
தங்களின் கடிதத்திற்கு நன்றி.
மிக்க அன்புடன்,
மணிகண்டன்.
******
மணிகண்டன்,
மகிழ்ச்சி.
சமணர்கள் தொடர்பாகப் பெரியபுராணத்தில் வருவது சைவம் சார்ந்த பதிவு. சைவர்கள் போலச் சமணர்கள் ஏதேனும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களா என்று பார்க்கலாம். இந்தக் கோணத்தில் யாரேனும் முன்பே எழுதியிருக்கக்கூடும். பார்க்கிறேன். கிடைத்தால் சொல்வேன்.
வாய்ப்பிருக்கும்போது நேரில் சந்திப்போம்.
அன்புடன்,
பெமு