Mar 31, 2013

குத்துங்க எசமான் நல்லா குத்துங்கவீட்டைச் சுற்றி சுற்றி “புஸ்ஸ்ஸ்ஸ்” “புஸ்ஸ்ஸ்” என்று சப்தமாக கேட்கிறது. விடிந்தால் இந்த சப்தம்தான் சுப்ரபாதம். தூங்கச் செல்லும் போதும் இதுதான் தாலாட்டு. இந்தச் சப்தங்களிலிருந்து இப்போதைக்கு தப்பிக்க முடியாது போலிருக்கிறது. வேறொன்றுமில்லை. பெரிய அனகோண்டாக்கள் பூமியை பதம் பார்க்கின்றன. Borewell என்ற பெயரில் குத்தி குதறுகிறார்கள். இந்த ஊரில் பூமியின் உடல் முழுவதும் பொத்தல்களால் நிரப்படுகிறது.

யாரையும் விரல் நீட்டி குற்றம் சாட்ட முடிவதில்லை. காவிரி காய்ந்து கிடக்கிறது. சுற்றிச் சுற்றி ஏரிகள் வறண்டு கொண்டிருக்கின்றன. பல வருடங்களுக்குப் பிறகாக வெப்பமானியின் அளவுகள் எகிறிக் கொண்டிருக்கிறது. கடும் வெப்பம் தண்ணீர் பிரச்சினையை தலைவிரித்து ஆடச் செய்கிறது. காசு கொடுத்து வாங்க வேண்டுமானால் ஒரு ட்ராக்டர் டேங்க் தண்ணீருக்கு அறுநூறு ரூபாய் வரை விலை சொல்கிறார்கள். வழியே இல்லாமல் போர்வெல்காரர்களை அழைக்கிறார்கள்..

ஒரு வருடத்திற்கு முன்பாக ஐந்நூறு அடி தோண்டினால் தண்ணீர் வந்த இடங்களில் இன்று ஆயிரம் அடிகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் அடிகள் தோண்டிய இடங்களில் இப்பொழுது சுத்தமாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள். கொஞ்ச நஞ்ச நம்பிக்கையோடு தோண்டும் அத்தனை போர்வெல்லும் வெற்றி என்றெல்லாம் சொல்ல முடிவதில்லை. பல குழிகளில் தண்ணீரே வருவதில்லை. சில குழிகள் ஆறுமாதங்களுக்கு பிறகாக முற்றாக வறண்டுவிடுகிறது. 

ஒரு வீட்டில் போர்வெல் போட்டிருக்கும் இடத்திலிருந்து பத்து அடி தள்ளி பக்கத்துவீட்டுக்காரன் தோண்டுகிறான். பத்து அடி தூரத்துக்கு ஒரு குழியைத் தோண்டினால் பூமாதேவியும் என்னதான் செய்வாள்?

வெயில் அடித்து நொறுக்கும் ஊர்களில் நிலத்தை ஈரமாக்கும் அளவுக்குக் கூட மழை இருப்பதில்லை. இருந்த மரங்களையெல்லாம் சாலைகளை அகலமாக்குகிறோம் பேர்வழி என்று வெட்டி சாய்த்தாகிவிட்டது. மிச்ச மீதி இருந்த மரங்களும் செடிகளும் வறண்டு கிடக்கின்றன. பசுமை போர்த்தியிருந்த அக்கம்பக்கம் மலைத்தொடர்கள் அத்தனையும் காய்ந்து சருகுகளால் நிரம்பிக் கிடக்கின்றன. இப்பொழுதெல்லாம் ஒரு மாபெரும் மலையை எரித்து சாம்பலாக்குவதற்கு ஒரேயொரு வத்திக்குச்சி போதுமானதாக இருக்கிறது. அந்த அளவிற்கு காய்ந்து கிடக்கிறது.

இந்த வருடம் மழை எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. சென்ற வருடம் பெய்யாத மழையின் கோரம் இந்த பங்குனி சித்திரையில் படம் காட்டுகிறது. ஒருவேளை இந்த வருடமும் மழை பொய்த்துவிடுமானால் அடுத்த வருட பங்குனி சித்திரையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரசாங்கங்களுக்கு நகரங்கள் செல்லப்பிள்ளைகள். ஓரளவுக்கு சரிகட்டிவிடுவார்கள். ஆனால் யோசித்து பார்த்தால் தங்களின் செல்லப்பிள்ளைகளுக்காக கிராமங்களின் அடிவயிற்றில்தான் கையை வைப்பார்கள். அங்கிருக்கும் தண்ணீரை உறிஞ்ச முடியும் அளவிற்கு உறிஞ்சி நகரங்களுக்கு கொடுத்துவிடுவார்கள். கிராமங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. 

ம்ம்.விடுங்கள். இதையெல்லாம் ஆயிரம் பேர் பேசியாகிவிட்டது. வரித்து வரித்து எழுதிவிட்டு டாய்லெட்டுக்குள் புகுந்து Flush செய்தால் ஆறு லிட்டர் தண்ணீர் குழிக்குள் போகப் போகிறது. அவ்வளவுதான் நம் விழிப்புணர்வு.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக பக்கத்துவீதியில் போர்வெல் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரே இடத்தில் தொடர்ந்து குத்துகிறார்களே எத்தனை ஆழம்தான் போட்டிருப்பார்கள் என்று விசாரித்துவரலாம் என்று போனால் வெற்றிகரமாக ஆயிரத்து நூறு அடிகளைத் தாண்டிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் பக்கத்தில் போய் தண்ணீர் வருகிறதா என்று பார்க்க விரும்பினேன். தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் நான்கு வயது சிறுவன்  கூட அதைவிட வேகமாகவும் அதிகமாகவும் ஒண்ணுக்கடிப்பான் என்று தோன்றியது.

Mar 30, 2013

பழுக்காத பிஞ்சுகள்


வீட்டிற்கு எதிர்புறத்தில் கட்டடம் ஆகிக் கொண்டிருக்கிறது. 30x40 க்கு அளவிலான சிறிய சைட்தான். தமிழ்க்காரர் ஒருவர் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு வீடு கட்டித்தரும் பில்டரும் தமிழர்தான். பில்டர் சின்சியர் ஆசாமி. காலையில் ஆறு மணிக்கு வந்து கட்டத்திற்கு நீர் ஊற்றுவதில் ஆரம்பித்து இரவு ஏழு மணி வரைக்கும் தவமாய் தவமிருக்கிறார். இந்த சைட்டுக்கு வேலை செய்வதற்கு ஒரு குடும்பம் வந்திருக்கிறது. பெங்களூர் நகரத்தில் கட்டடவேலை செய்பவர்கள் பெரும்பாலும் வெளியூர்க்காரர்கள்தான். சைட்டுக்கு அருகிலேயே தற்காலிக குடிசை அமைத்து தங்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு தங்குவதற்கு வீடு கிடைத்த மாதிரியும் ஆயிற்று சைட் ஓனருக்கு வாட்ச்மேன் கிடைத்தது போலவும் ஆயிற்று. Mutual benefit.

அப்படித்தான் இந்த சைட்டுக்கும் குடி வந்திருக்கிறார்கள். கன்னடக்காரர்கள். கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என சிறு குடும்பம். அந்த ஒற்றையறை குடிசையில்தான் சாப்பாடு செய்வதும், படுத்து உறங்குவதும், குடும்பம் நடத்துவதும். அதே அறைக்குள்தான் சிமெண்ட் மூட்டையும் அடுக்கி வைத்திருப்பார்கள். கொடுமையான வாழ்க்கைதான். ஆனால் அவர்கள் இது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாதது போலத்தான் தெரிகிறது. குழந்தைகளில் மூத்தவனான கணேஷ் படு அட்டகாசம். வந்த ஒரு வாரத்திலேயே எனது மகனும் கணேஷூம் நண்பர்களாகிவிட்டார்கள். மாலை நேரமானால் அவர்களின் நட்பை பிரித்து இவனை வீட்டிற்குள் எடுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ‘கணேஷ் வீட்டிற்கு போறேன்’என்று அழுது ஊரைக் கூட்டிவிடுகிறான். 

கடந்த ஒருவாரமாக அலுவலகம் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அம்மா புகார்ப்பட்டியல் வாசிக்கிறார். “தலை முழுவதும் மண்ணை அள்ளி போட்டுக் கொண்டான், கணேஷூடன் சேர்ந்து செருப்பை பிய்த்துவிட்டான், சாக்கடை தண்ணீரை காலில் மிதித்தான்” இப்படி ஏதாவது ஒரு கிரிமினல் குற்றம் அந்த பட்டியலில் நிச்சயம் இடம் பிடித்துக் கொள்ளும். இந்த மாதிரி சமயங்களில் பெரும்பாலும் காதில் விழாதது போல நடித்துவிடுவேன். மண்ணில் விளையாடுவதும், பொருட்களை நாசம் செய்வதும் குழந்தைகளுக்கான உரிமை. அதில் தலையிடுவதற்கு நமக்கு ரைட்ஸ் இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனாலும் அம்மாவும் அப்பாவும் “இப்படியே செல்லம் கொடுத்தால் பையன் சொன்ன பேச்சு கேட்காமல் கெட்டுப்போவான்” என்று திகிலூட்டித்தான் உரையாடலை முடிப்பார்கள்.

நேற்று காலையில் எதிர் சைட் பில்டருக்கும், அவரது பக்கத்து இடத்துக்காரருக்கும் பெரும் தகராறு நடந்தது. பக்கத்து இடமும் காலி சைட்தான். தகராறுக்கான காரணம் ரொம்ப சிம்பிள். கொஞ்ச காலத்திற்கு முன்பெல்லாம் பெங்களூரில் வீடு கட்டுபவர்கள் தற்காலிக குடிசைகளை சாலையோரமாக போட்டுக் கொள்வார்கள். இப்பொழுது தற்காலிக குடிசையை சாலையில் அமைத்தால் கார்பொரேஷன்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களாம். அதனால் அருகாமையில் இருக்கும் காலி இடங்களில் குடிசை போட்டுக் கொள்கிறார்கள். வீடு கட்டி முடிந்தவுடன் குடிசையை இடித்து விடுகிறார்கள். பக்கத்தில்தான் காலி இடம் இருக்கிறதே என்று எதிர் சைட் பில்டர் குடிசையை அந்த காலி இடத்தில் போட்டு கணேஷ் குடும்பத்தை தங்கச் சொல்லிவிட்டார்.

இந்த விவகாரத்தில்தான் பிரச்சினை. நேற்று காலை ஏழு மணிக்கெல்லாம் அந்த பக்கத்து இடத்துக்காரன் பத்து இருபது பேர்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். வந்திருந்தவர்கள் ஆளாளுக்கு குதித்தார்கள். “உங்க போன் நெம்பர் தெரியாது சார், இல்லைன்னா கண்டிப்பா பெர்மிஷன் வாங்கியிருப்பேன்” என்று பில்டர் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளும் மனநிலையில் அவர்கள் யாரும் இல்லை. தாறுமாறாக வசைமாரி பொழிந்தார்கள். பில்டர் பேச முயன்றால் யாராவது ஒருவன் கையை உயர்த்திக் கொண்டு வந்தான். பில்டர் அடி வாங்கிவிடுவார் போலிருந்தது. சமாதானப்படுத்துவதற்காக அப்பா சென்றார். “பெரியவரே உங்க வேலையைப் பாருங்க” என்று எவனோ கத்த இதற்கு மேல் அங்கு இருப்பது மரியாதை இல்லை என்று அப்பா திரும்பி வந்துவிட்டார்.

பிறகு மொத்த நிகழ்வையும் ஜன்னல் வழியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த தடியன்கள் குடிசைக்குள் புகுந்து ஒவ்வொரு சாமான்களாக தூக்கி வீசினார்கள். அவர்கள் வெளியே வீச வீச கணேஷின் அம்மாவும் அப்பாவும் பதட்டத்துடன் பொறுக்கி எடுத்துக் கொண்டார்கள். கணேஷூம் அவனது தங்கையும் மணல் மீது அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். பத்து நிமிடங்களில் மொத்த சாமான்களும் வெளியே வந்துவிட குடிசையை இடித்து தரைமட்டமாக்கினார்கள். பிறகு சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் திமிரை காண்பிக்கும் விதமாக தாறுமாறாக கத்திவிட்டு வண்டிகளில் ஏறி புழுதியைக் கிளப்பிவிட்டுச் சென்றார்கள். வெற்றிகரமாக சில நிமிடங்களில் ஒரு குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

கணேஷின் அம்மா அப்பாவிடம் பில்டர் ஏதோ பேசினார். பிறகு பில்டரிடம் பேசுவதற்காக அப்பா வெளியே சென்றார். பில்டர் அவமானத்தினால் குறுகிப் போயிருந்தார். கைவசம் இருக்கும் தகரங்களை வைத்து சைட்டிலேயே கணேஷின் குடும்பம் இன்று ஒரு நாள் தங்கிக் கொள்வதாகவும் மறுநாள் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதாகவும் பில்டர் சொன்னாராம். நான்கு குச்சிகளை நட்டு அடுத்த அரை மணி நேரத்தில் குடிசையை தயார் செய்துவிட்டார்கள். இனி பிரச்சினை இருக்காது என்று தோன்றியது. வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.

நேற்று அலுவலகம் முடிந்து கிளம்பும் போது ஆசுவாசமாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை என்பது உற்சாகமாக்கியிருந்தது. பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது மகி மீதான அம்மாவின் புகார் பட்டியல் என்னவாக இருக்கும் என நினைத்த போது என்னையுமறியாமல் சிரிப்பு வந்தது. வீட்டிற்கு வந்த போது வீட்டிற்குள் வழக்கமான உற்சாகம் இல்லை. ஒவ்வொருவரும் அமைதியாக இருந்தார்கள். யாராவது யாரையாவது திட்டியிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன். மகி சில நிமிடங்களுக்கு பிறகு அறைக்குள் இருந்து வெளியே வந்தான். அவன்தான் அந்த கனத்த அமைதியை உடைத்தான். “அப்பா கணேஷை ஆஸ்பிட்டல் தூக்கிட்டு போய்ட்டாங்க” என்றான்.  “கீழே விழுந்துட்டானா?” என்றேன்.

அப்பாதான் பதில் சொன்னார். தகரங்களை வைத்து அமைத்த தற்காலிக குடிசையில் மதிய நேரத்தில் கணேஷூம் அவன் தங்கையும் விளையாடிக் கொண்டிருந்தார்களாம். நான்கு குச்சிகள் ஏதோ ஒரு குச்சியை பிடித்து அசைக்க மேலிருந்த தகரம் சரிந்து கணேஷை வெட்டியிருக்கிறது. கைகளிலும் கால்களிலும் வெட்டுக்காயம் ஆகிவிட்டதாகவும் உடனடியாக பில்டர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுவிட்டதாகவும் சொன்னார். நேற்று வீட்டை இழந்தார்கள். இன்று மகனுக்கு விபத்து. அந்தக் குடும்பத்தை நினைக்க பரிதாபமாக இருந்தது. யாருக்கோ நடக்கும் பிரச்சினையின் அத்தனை வலிகளையும் அந்தக் குழந்தை சுமந்து கொண்டதாக தோன்றியது.

ஒன்பது மணிக்கு மேலாக பில்டர் வந்தார். கணேஷை பற்றி அவராகவே ஆரம்பித்தார். ரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டதாகவும் ஐ.சி.யூவில் இருப்பதாகவும் சொன்னார். “ஒண்ணும் பிரச்சினை இல்லீல்ல சார்?” என்றார் அப்பா. “இடது கை போயிடுச்சுங்க. இங்கேயே முக்கால்வாசி கட் ஆகிடுச்சு. எடுத்துட்டு போன போது கையை காப்பாத்தறது ரொம்ப சிரமம்ன்னு சொல்லிட்டாங்க. இப்போதைக்கு வேறெதுவும் சொல்ல முடியாதுன்னுட்டாங்க...பாவப்பட்ட ஜென்மங்கள்” என்றார். 

இந்தத் தகவலை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தலை மீது மண்ணை அள்ளிப் போட்டதும், செருப்பை பிய்த்ததும் அந்தக் கைதான் என்ற போது அழுகை வந்துவிடும் போலிருந்தது. ஒரு தற்காலிக குடிசைக்காக  மூன்றரை வயது குழந்தை வாழ்க்கை முழுவதும் கை இல்லாமல் சிரமப்படப் போகிறது என நினைக்கும் போது ஏதோ தொண்டையை அடைத்தது. வேறு எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை. நிலாவை பார்த்துக் கொண்டு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். நிலாவும் மேகமும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தன. கணேஷ் முகம் வந்து வந்து போனது.

Mar 29, 2013

நீ எழுதாவிட்டால் குடியா முழுகிவிடும்?


ஒரு கேள்வி. விருப்பம் இருந்தால் பதில் சொல்லுங்கள். 

தினமும் எழுதுவது சலிப்பை தரவில்லையா? அப்படி எழுதாவிட்டால்தான் என்ன?  ஏதாவது குறிக்கோள் இருக்கிறதா?

ஒரு கேள்வி என்று கூறிவிட்டு மூன்று கேள்விகளைக் கேட்டிருக்கிறேன்.

                                                            ********

அன்புள்ள ரவீந்திரன்,

எதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்டிருப்பீர்கள் என ஜெர்க் ஆகிவிட்டேன். உண்மையில் இந்தக் கேள்விகள் யோசிக்கச் செய்கின்றன. கண்களைத் திறந்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!

சலிப்பைத் தரவில்லையா?

இந்தக் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். 

தினமும் எழுதுவதற்கு ஆரம்பத்தில் ‘த்ரில்’ ஆக இருந்தது. வெளியில் சொல்லாத விஷயங்கள் மண்டைக்குள் நிறைய இருந்திருக்கும் போல. எதை எழுதப் போகிறோம் என்பதில் பெரிய சிரமம் இல்லை. ஆனால் எழுதி முடித்த பிறகு டிங்கரிங் வேலைக்கு அதிக நேரம் பிடித்தது. ஒரே பத்தியை குறைந்தபட்சம் இருபது முறையாவது வாசித்து திருத்தம் செய்வேன். இப்பொழுது உல்டாவாகியிருக்கிறது. எதை எழுதப் போகிறோம் என்பதற்கான தேடல்தான் அதிகமாக இருக்கிறது. எழுதுவது பற்றிய‘தீம்’கிடைத்துவிட்டால் அதிகபட்சம் முக்கால் மணி நேரம்தான் எழுத தேவைப்படுகிறது. 

நான் எழுதுவதில் தேர்ந்தவனாகிவிட்டேன் என்று பிரஸ்தாபிப்பதற்காக இதைச் சொல்லவில்லை. எழுதியதைத் திரும்ப திரும்ப வாசிப்பதில் உருவான சோம்பேறித்தனம் மற்றும் ‘எல்லாம் சரியா இருக்கும்’ என்ற மூடநம்பிக்கை என்றுதான் இதை புரிந்து கொள்கிறேன்.

பத்திரிக்கைகளுக்கு எழுதுவதில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. எழுதியது சரியாக இல்லாதபட்சத்தில் பிரசுரமாகாது. பிரசுரமாகாவிட்டால் ‘என்ன குறை’ என்று யோசித்து திருத்திக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் இணையத்தில் அது பெரிய drawback. என்ன எழுதினாலும் பிரசுரம் செய்து கொள்ளலாம். எப்படி எழுதினாலும் நான்கு பேர்களின் கண்களில் காட்டிவிடலாம். நன்றாக இல்லையென்றால் பெரிதாக சுட்டிக்காட்டமாட்டார்கள். “எப்படியோ தொலையட்டும்” என்று சைலண்டாக சென்றுவிடுவார்கள். நாமும் எழுதுவதெல்லாம் சரியாக இருக்கிறது என்று குருட்டுவாக்கில் திரிய நிறைய வாய்ப்பிருக்கிறது.

இப்பொழுது உங்கள் கேள்விக்கான பதில்- தொடர்ந்து எழுதுவதற்காக நான் சலிப்படையவில்லை. ஆனால் என்னையுமறியாமல் நான் குருட்டுவாக்கில் திரிவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை நிராகரிக்கவில்லை. இதுவரை நான் சலிப்படையவில்லையென்றாலும் உங்களுக்கு சலிப்பூட்டுவதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள். நம் இருவருக்குமே அது உதவும்.

எழுதாவிட்டால் என்ன?

எழுதாவிட்டால் ஒன்றும் இல்லை. குடி முழுகிவிடாதுதான்.

ஆனால் எழுதுவது ஒருவிதமான சுயநலம்தான். எழுத்தை Practice செய்து கொள்ளலாம். நூறு பேரைக் கொன்று அரை வைத்தியன் ஆவது போலத்தான் இது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் எதையாவது வாசித்தே தீர வேண்டிய கட்டாயம் உருவாகிறது. ஆழ்வாரோ, சைக்காலஜியோ , சீவகசிந்தாமணியோ- கொஞ்ச நேரமாவது வளைந்து படிக்கிறேன். இதுவும் selfishnessதானே? படித்ததை எனக்கு வாய்த்த மொழியில் எழுதுகிறேன். விரும்புபவர்கள் வாசிக்கிறார்கள்.அவ்வளவுதான் அதற்குமேல் ஒன்றுமில்லை.

குறிக்கோள் இருக்கிறதா?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எழுதி என்ன முதலமைச்சர் ஆகப்போகிறேனா? அல்லது லட்சக்கணக்கில் ராயல்டி வாங்கப் போகிறேனா?

ஒரு வெங்காயமும் இல்லை.

‘நிசப்தம்’ தளத்தை திறப்பவர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்ற கவனம் மட்டும் இருக்கிறது. ‘இதைத்தான் எழுதியிருப்பான்’ என்று வாசிப்பவர்கள் Predict செய்துவிடவும் கூடாது, ‘இப்படித்தான் எழுதியிருப்பான்’ என்று யூகிக்குமளவிற்கு ‘ஸ்டீரியோடைப்’ஆகவும் இருந்துவிடக் கூடாது என்ற பயம்  மட்டும் அவ்வப்போது வருவதுண்டு. அதில்தான் குறிக்கோளாக இருக்கிறேன்.

இந்த மின்னஞ்சலை பிரசுரம் செய்வதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது நன நம்புகிறேன்

பொம்பள சிரிச்சா போச்சு...


“பொம்பள சிரிச்சா போச்சு...புகையிலை விரிச்சா போச்சு” என்று ஒரு பாடல். எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் என்று வாங்கிய சி.டி. ஒன்றில் இந்த பாட்டு இருக்கிறது. சில நாட்களாக இந்த பாடலை ஓட விடும்போதெல்லாம் அம்மா டென்ஷனாகிவிடுகிறார். அம்மா என்றால் புரட்சித் தலைவி அம்மா இல்லை, எனது அம்மாதான். இந்தப்பாடல் பெண்களை அவமானப்படுத்துகிறது என்கிறார். நல்லவேளையாக அம்மாவுக்கு கம்யூட்டர் ஃபேஸ்புக் பற்றியெல்லாம் தெரியாது. இல்லையென்றால் அவரும் ஒரு போராளி ஆகியிருப்பார் போலிருக்கிறது.

எனக்கு என்னவோ இந்தப்பாடல் அவமானப்படுத்துவதாக இல்லை. பெண்களின் புன்னகையில் ஆண்கள் காலியாகிவிடுகிறார்கள் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

பெண்களைப் பற்றி ஏதாவது சொல்வதானால் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் ஏமாந்தாலும் ஏறி மிதித்துவிடுவார்கள். ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணியவாதி  சினிமாவில் பெண்களை கவர்ச்சியாக ஆடை அணியச் செய்கிறார்கள் என்கிற ரீதியில் பற்றி ஏதோ ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.  ‘கவர்ச்சியாகவே ஆடை அணியக் கூடாது என்கிறீர்களா?’ என்று அங்கு கேள்வி கேட்க போக “உனக்கெல்லாம் க்ளாஸ் எடுக்க முடியாது” என்று எகிறினார். அதோடு சரி. போட்டிருந்த கமெண்ட்டை அழித்துவிட்டு கமுக்கமாகிவிட்டேன். நமக்கு வரும் பிரச்சினைகளுக்காக சண்டை போடவே திராணி இருப்பதில்லை இதில் இந்த விவகாரங்களுக்கெல்லாம் சண்டை போட்டு இரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொள்ள முடியாது. 

ஏதோ ஒரு சினிமா போஸ்டரில் 'Boys are fraud' என்று நாயகி பேனரை பிடித்துக் கொண்டிருக்கிறாள்; ‘Girls are Cute' என்று நாயகன் பேனரைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அதுதான் உண்மையும் கூட. இது ஜெனிட்டிக்கலான விஷயம். பெண்களை உடல் ரீதியாகவே பார்ப்பது என்பது ஆண்களின் மனநிலை. ஆண்களை ஏமாற்றுக்காரர்களாகவும், அடிமைப்படுத்துபவர்களாகவும் பார்ப்பது என்பது பெண்களின் மனம். இதில் பெண்களை கவர்ச்சியாக பார்க்கக் கூடாது என்று சொல்வதெல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லாத விஷயம் என்றுதான் நினைக்கிறேன். 

பெண்களை மட்டம் தட்டுவது நம் சமூகத்திடம் நீண்டகாலமாகவே இருக்கும் பழக்கம்தான். சினிமாவில் பெண்களை மட்டம் தட்டி வரும் டயலாக்குகளுக்கு தியேட்டரில் விசில் பறப்பதை கவனிக்கலாம். அறிந்தோ அறியாமலோ அதைத்தான் பெருவாரியான ஆண்களின் மனம் விரும்புகிறது. பெண்களை அவ்வப்போது மட்டம் தட்டும் நாயகர்களான எம்.ஜி.ஆரும், ரஜினியும்தான் சூப்பர் ஸ்டார்களாக இருந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் படங்களைப் பற்றி அவ்வளவாக தெரியாது ஆனால் ரஜினியின் படையப்பா வரைக்கும் பெண்களை மட்டம் தட்டும் காட்சிகள் சர்வசாதாரணமாக இருக்கும். விஜய்யும், சிம்புவும் கூட இதே வகையறாதானே? 

பெண்களை ஒதுக்குங்கள், பெண்களை தோற்கடிப்பேன் என்று பாடுவது எம்.ஜி.ஆர், ரஜினி காலத்தில் என்று இல்லை- சித்தர்களே ஏகப்பட்ட பாடல்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.  பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், பட்டினத்தார் என்று யாருடைய பாடலை எடுத்தாலும் பெண்களையும் அவர்களது உடலையும் கேவலப்படுத்தி பாடியிருக்கிறார்கள்.

பாம்பாட்டியார் பாடல் ஒன்றில் “மலஞ்சொரி கண்ணை வடி வாளுக்கொப்பாக வருணித்துச் சொல்வார் மதி இன்மை இல்லாதார்” என்று ஒரு வரி வருகிறது. மலத்தை போன்ற பீளை ஒழுகும் கண்ணை வாள், வேல் என்றெல்லாம் சொல்கிறவர்கள் அறிவுகெட்டவர்கள் என்கிறார். மற்ற நக்கல்களை ஒப்பிட்டால் இது ரொம்ப டீசெண்டான வரி என்றுதான் நினைக்கிறேன். “கெட்ட நாற்றமுள்ள யோனிக் கேணியில் வீழ்ந்தார் கெடுவார்” என்றெல்லாம் பாடல்கள் முழுவதும் பெண்களை வாரிக் கொண்டேயிருக்கிறார். 

இந்த சித்தர்களுக்கு காமத்தின் மீதும், பெண்களின் அங்கங்கள் மீதும், கலவி மீதும் என்ன கடுப்போ தெரியவில்லை. நாயைவிடவும் கேவலமாக இவற்றையெல்லாம் பார்த்திருக்கிறார்கள். பாட்டிலேயே இப்படியெல்லாம் கலாய்ப்பவர்கள் அந்தக்காலத்தில் எதிர்படுபவர்களை எப்படியெல்லாம் கலாய்த்திருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள். மற்ற சித்தர்கள் எப்படியோ தெரியவில்லை ஆனால் பட்டினத்தாருக்கு லொள்ளு ஜாஸ்தி போலிருக்கிறது. ஒரு திருமணவீட்டில் மணமக்களை வாழ்த்த அழைத்தார்களாம். போனவர் சும்மா வந்திருக்கலாம் ஆனால் ஒரு பாடலை பாடி சாபம் விட்டுவிட்டு வந்திருக்கிறார். 

நாப்பிளக்க பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலன்ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போல
புலபுலனெனக் கலகலெனனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்குதனைப் போல
அகப்பட்டீர்; கிடந்துழல அகப்பட்டீரே

பொய் சொல்லி சொத்து சேர்த்து, புற்றீசல் போல குட்டிகளை பெற்று அவர்களை காக்கவும் தெரியாமல் கைவிடவும் முடியாமல் மரத்துளைக்குள் வாலை நுழைத்து ஆப்பை அசைத்த கொண்ட குரங்கு  போல மாட்டிகினீங்கோ என்று பட்டினத்தார் பாடிய போது மாப்பிள்ளை எவ்வளவு கடுப்பாகியிருப்பான் என யோசித்தால் சிரிப்பு வருகிறது.

திருமண வீட்டிலேயே இந்த லோலாயம் செய்த பட்டினத்தார் பெண்களை மட்டும் விட்டுவைத்திருப்பாரா? 

“பெண்ணாகி வந்த மாயப் பிசாசும் பிடித்திட்டு என்னை
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்து
புண்ணாங்குழியிடைத்தள்ளி” என்று புலம்புகிறார். 

பாருங்கள், கண்ணைக் காட்டி, மார்பை காட்டி, ஏதோ ஒரு ‘குழி’க்குள் தள்ளினாளாம். 

பெண்கள் வேண்டாம், பெண்களை கவர்ச்சியாக பார்க்க வேண்டாம் என்றெல்லாம் அட்டகாசம் செய்கிறார்கள். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இருபது கிலோமீட்டர் தூரம். நல்ல போஸ்டர் நான்கு பார்த்துவிட்டு வந்தால்தான் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. நல்லவேளையாக இந்தக் காலத்தில் சித்தர்கள் யாரும் இல்லை. அனுஷ்காவும், தமன்னாவும் இன்னபிற ‘ஆ’ வும் தப்பித்தார்கள். 

(‘ஆ’ என்றால் பசுமாடு என்றறிக)

Mar 28, 2013

கழிவறை இலக்கியங்கள்


வாழ்க்கை ஒன்றும் அத்தனை எளிமையானதாகத் தெரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் தகிடுதத்தம்தான்.  “எனக்கு எந்த பிரச்சினையுமில்லை” என்று நாமாக சொல்லிக் கொள்வது கூட நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் Self Justification என்றுதான் நினைக்கிறேன். அவனவன் பிரச்சினை அவனவனுக்கு.  அப்படியிருக்கும் போது அடுத்தவன் பிரச்சினையை காமெடியாக பார்ப்பது கூட நம் பிரச்சினைகளை மறைத்துக் கொள்ளத்தானே?

                                                               ****

பள்ளியில் படிக்கும் போது மாரப்பன் என்ற காவலாளி இருந்தார். இந்த இடத்தில் மாரப்பன் என்பது மாரப்பன் அல்ல அது நாகப்பனாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதோ ஒரு பெயராகவும் இருக்கலாம். பெயரை மாற்றித்தான் கதை சொல்ல வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் நிசப்தத்தை முந்நூறு அல்லது நானூறு பேர்தான் அதிகபட்சமாக படித்துக் கொண்டிருப்பார்கள். யாரையாவது பற்றி எழுத வேண்டுமானால் தைரியமாக பெயரைக் குறிப்பிட்டே எழுதிவிடலாம். யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இப்பொழுதல்லாம் அப்படியில்லை. சின்ன மாமனாரைப் பற்றி எழுதினால் பெரிய மாமனார் படித்துவிடுகிறார். வாத்தியார் பற்றி எழுதினால் “எங்கப்பாவை பற்றி எழுதியதை வாசித்தேன்” மின்னஞ்சல் வருகிறது. ஏற்கனவே என் கீபோர்டில் நவகிரகங்களும் குடியிருக்கிறார்கள் அதுவும் சனிபகவான் உச்சத்தில் இருக்கிறார் போலிருக்கிறது. யாரைப் பற்றி எழுதினாலும் கடைசியில் நக்கலாகவே முடிந்துவிடுகிறது. எதற்கய்யா வம்பு வழக்கெல்லாம்? பெயரை மாற்றிவிடுவதுதான் உசிதம்.

நாங்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான் மாரப்பனுக்கு திருமணம் ஆகியிருந்தது. அவருக்கு பள்ளியிலேயே கிணற்றோரமாக வீடு கட்டிக் கொடுத்துவிட்டார்கள். எங்கள் பள்ளி ஆண்கள் பள்ளி. பெண்வாடையே சுத்தமாக இருக்காது என்று சொல்ல முடியாது- சில ஆசிரியைகள் இருப்பார்கள். ஆனாலும் ஒரு ரோஜா கூட நிலத்தில் விழாத பாலைவனம்தான். இதுதான் மாரப்பனுக்கு பிரச்சினை என்று நினைக்கிறேன். அவரது வீட்டுப்பக்கமே பையன்களை விட மாட்டார். ஏதாவது காரணம் சொல்லி துரத்திவிட்டுவிடுவார். அந்தக் காரணங்கள் படு மொக்கையாக இருக்கும் என்பதால் பையன்கள் விடாப்பிடியாக அதே இடத்தில் விளையாட வேண்டும் என முரண்டு பிடிப்பார்கள். முரண்டு பிடிக்கும் மாணவர்களைப் பற்றி விளையாட்டு வாத்தியாரிடம் போட்டுக் கொடுத்துவிடுவார். அதிலும் ஒரு பி.டி வாத்தியார் இருந்தார் பாருங்கள். கிடைத்த பையன்களையெல்லாம் பிழிந்து சாறு எடுத்துவிடுவார். மாரப்பன் என்ன காரணம் சொல்கிறார் என்றெல்லாம் தெரியாது ஆனால் வாத்தியாரிடம் கும்மாங்குத்து விழும். இத்தனை தடங்கல்களும் இருந்தாலும் மாணவர்கள் அசர மாட்டார்கள். மாரப்பனின் வீட்டிற்கு முன்பாகத்தான் மூன்று குச்சியை நிறுத்தி வைத்து கிரிக்கெட் விளையாடுகிறோம் என்று தவம் கிடப்பார்கள். 

அதிலும் முதல் பீரியட் பி.டி வகுப்பாக இருந்துவிட்டால் எட்டுமணிக்கெல்லாம் சிங்கக்குட்டிகள் களத்தில் இறங்கிவிடும். உணர்ச்சி வேகத்தில் ஏழு மணிகே பள்ளிக்கு வந்துவிடும் சில முந்திரிக்கொட்டைகளும் உண்டு. இந்த சிங்கக்குட்டிகள், முந்திரிக்கொட்டைகளின் பட்டியலை எடுத்து பி.டி வாத்தியாரிடம் நாகப்பன் போட்டுக் கொடுக்கத் துவங்கியிருந்தார்.  “ஏண்டா பரீட்சைக்கு வரும் போது பல்லு கூட வெளக்காம வருவீங்க, பி.டி. பீரியட்ன்னா ஏழு மணிக்கே வருவீங்களா?” என்று வாத்தியார் சுளுக்கெடுப்பார். 

அடியை வாங்கிக் கொள்ளும் பையன்கள் தங்களின் அத்தனை கோபத்தையும் கழிவறையின் சுவர்களில் கொட்டிவிடுவார்கள். அப்பொழுதெல்லாம் எங்கள் பள்ளியின் மிகச் சிறந்த இலக்கியக் கூடமாக கழிவறைதான் இருந்தது. பள்ளியிலிருந்த அத்தனை இலக்கியவாதிகளும் தங்களின் இலக்கியத்தை அதன் சுவர்களில்தான் எழுதி வைப்பார்கள். இலக்கியவாதிகள் மட்டுமில்லை படுபயங்கரமான ஓவியர்களையும் அந்த கழிவறை உருவாக்கிக் கொண்டிருந்தது. மாணவனை அடிக்கும் ஒவ்வொரு வாத்தியாரும் அந்த சுவர்களில் நிர்வாணமாக்கப்பட்டார்கள். மற்றவர்களை நிர்வாணமாக விட்டுவிடும் மாணவ ஓவியர்கள் இந்த பி.டி.வாத்தியாரின் உறுப்பை துண்டித்தும் விட்டுவிடுவார்கள். 

நாட்கள் ஓட ஓட மாரப்பன் போட்டுக் கொடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. முறிந்து போகும் பி.டி.வாத்தியாரின் குச்சிகளின் எண்ணிக்கையும் தாறுமாறாக எகிறியது. இதுவரை கழிவறைச் சுவர்களில் இடம் பெறாத மாரப்பனும் அவரதும் மனைவியும் கூட இடம் பிடிக்கத் துவங்கினார்கள். மாரப்பனுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்தவுடன் விடிந்தும் விடியாமலும் கழிவறைச் சுவர்களை சுத்தம் செய்யும் பணியையும் துவங்கிவிட்டார். மாரப்பனே சுத்தம் செய்வதை தெரிந்து கொண்ட மாணவர்கள் இன்னமும் உற்சாகமாகிவிட்டார்கள். சுவர் முழுவதையும் மாரப்பனுக்கும் அவரது மனைவிக்கும் மட்டுமே ஒதுக்கிவிட்டார்கள். மாரப்பனும் அசரவில்லை. பல நாட்களுக்கு ஏதேதோ தகிடுதத்தங்களை செய்து பார்த்தார். தினம் தினம் கழிவறைச் சுவர்களை சுத்தமாக்கத் துவங்கியிருந்தார். மாணவர்களிலேயே சிலரை தனக்கான ஒற்றர்களாக மாற்றினார். ஆனால் இவை எதுவும் ஓவியங்களின் எண்ணிக்கையையும், இலக்கியங்களின் வீரியத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. 

தனது தோல்விகளால் அடுத்து வந்த நாட்களில் மாரப்பனின் முகம் வாடிப்போனது. நிதானமிழந்தவராகவும் மாறியிருந்தார். சில சமயம் மாணவர்களை அடிக்கவும் துவங்கியிருந்தார். இந்தப் பிரச்சினைகள் தலைமையாசிரியரின் கவனத்துக்கு சென்றிருக்கக் கூடும். மாரப்பனின் வீட்டைச் சுற்றிலும் வேலி கட்டப்பட்டது. ஜல்லிக் கற்கள் அந்த வீட்டிற்கு முன்பால் கொட்டப்பட்டன. அதன் பிறகு மாணவர்கள் விளையாடுவதற்கு தோதற்ற இடமாக அது மாறிப்போனது. மாணவர்கள் தங்களது ஜாகையை மாற்றிக் கொண்டார்கள். இந்தச் சமயத்தில் மாரப்பன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. பிறகு மாரப்பன் மாணவர்களை பற்றிய பிரக்ஞையற்றவராக மாறிப்போனார். மாரப்பனின் கண்காணிப்பு சுத்தமாக இல்லாமல் போன சமயத்திலிருந்து மாரப்பனும் அவரது மனைவியும் சுவர்களிலிருந்து காணாமல் போகத் துவங்கினார்கள். அந்த இடத்திற்கு வேறு சில ஆசிரியர்களும், ஆசிரியைகளும் வந்து சேர்ந்திருந்தார்கள்.

                                                     ****

வா.மு.கோமுவின் கவிதை ஒன்றை முகநூலில் ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார்.  வா.மு.கோமு கிராமத்து மனிதர். கிராமங்களைத்தான் தனது எழுத்துக்களில் பதிவு செய்கிறார்.

நகரங்களைவிடவும் இன்றைய பெரும்பாலான கிராமங்கள் பதட்டமானவை. முக்கால்வாசி கிராமங்கள் தங்களின் அப்பாவித்தனத்தை இழந்து விட்டன. கிராமங்களின் இன்றைய முகங்கள் அரிதாரம்  பூசப்பட்ட முகங்கள். நகரமயமாகிக் கொண்டிருக்கும் கிராமத்தார்களின் சிக்கல்கள் நகரத்திலிருப்பவர்களின் சிக்கல்களைவிடவும் புதிரானவை.  இந்தச் சிக்கல்களும் புதிர்களும்தான் வா.மு.கோமுவின் கிரவுண்ட். அடித்து நொறுக்கிறார். 

அங்கு உருவாகும் காதல்களையும். பாலியல் வேட்கைகளையும் வா.மு.கோமு அளவிற்கு சித்திரப்படுத்துபவர்கள் தமிழில் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன். 

நீ சௌக்கியமா ?

ஒரு நாள் சாவுகாசமாய்
உன்னோடு உட்கார்ந்து
பேச திட்டமிருக்கிறது என்னுள்.

சமயம்தான் வாய்க்கவில்லை.

ஊர் மாரியம்மன் திருவிழாவிற்க்கு
உனது ஊட்டுக்காரரோடு வந்து
சாமி கும்பிட்டு போனதாய்
சின்னமுத்து கூறினான்.

மேலும் அவன் கூறுகையில்
பழைய உனது தேஜஸ் இல்லையெனவும்
உனது ஊட்டுக்காரர் பொறத்தே
நீ ஒரு பெட்டிப்பாம்பு மாதிரிதான்
காட்சியளித்தாய் எனவும், வயிறு
புடைக்கவில்லை, தப்பட்டையாகத்தான்
இருந்ததெனவும் கூறினான்.

மழைக்குக் கூட பள்ளிக்கூடப்பக்கம்
ஒதுங்கியிராத எனது ஊட்டுக்காரி
எனது துடையிலிருக்கும் சாந்தி என்கிற‌
உனது பெயர் பற்றி எதுவும் கதைப்பதில்லை.

உனது ஊட்டுக்காரர் உனது
துடையிலிருக்கும் முருகசாமி என்கிற‌
எனது பெயர் பற்றி
உனையொன்றும் வினவவில்லையா ?

Mar 27, 2013

அத்தனைக்கும் ஆசைப்படுவோம்


ஆசைதான் அழிவுக்கு காரணமாம். காலம் காலமாக இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ப்ராக்டிகலாக ஆசையில்லாமல் இருப்பது அத்தனை எளிதான காரியமா? ம்ஹூம். வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன். 

சாலையோரமாக விற்கும் பஜ்ஜி போண்டாவிலிருந்து சில்லி சிக்கன் வரைக்கும் எதைப் பார்த்தாலும் ருசி பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. எத்தனை சதவீதம் சம்பள உயர்வு வந்தாலும் இன்னும் இரண்டு சதவீதம் சேர்த்து வந்திருக்கலாம் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. அடுத்தவன் நல்ல பெயர் வாங்கும் போதெல்லாம் நாமும் வாங்க வேண்டும் வெறி கிளம்புகிறது. இன்னும் கொஞ்சம் பணம், இன்னும் கொஞ்சம் சொத்து, இன்னும் கொஞ்சம் புகழ் என ‘இன்னும் கொஞ்சம்’ எல்லா இடத்திலும் இருக்கிறது.

தத்துவத்தை நிறுத்திவிட்டு மேட்டரை பார்க்கலாம்.

சீவக சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவர் ஒரு சமணர். ஆசையே அழிவுக்கு காரணம் என்று படம் ஓட்டும் க்ரூப்பைச் சார்ந்தவர். அவரை யாரோ மூக்கைச் சொறிந்துவிட நரிவிருத்தத்தையும், சீவக சிந்தாமணியையும் எழுதிவிட்டார். மூக்கு சொறிந்தவர்கள் விவரமானவர்கள் போலிருக்கிறது. ‘சமணர்களால் எழுத முடியாது’என்று சொறிந்துவிடவில்லை. ‘சமணர்களால் குஜால் மேட்டரை எழுத முடியாது’என்றுதான் சொறிந்திருக்கிறார்கள். தேவர் இதுதான் வாய்ப்பு என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. ஒரு முழுமுதல் டீசெண்டான சரோஜாதேவி புத்தகத்தை எழுத அனுமதி தர வேண்டும் என்று தனது ஆசிரியரிடம் கேட்டிருக்கிறார்.

இவனால் எழுத முடியுமா என்று சந்தேகப்பட்ட ஆசிரியர் ‘குஜிலி பத்தி அப்புறம் எழுதலாம் முதலில் நரியை பத்தி எழுது’ என்று சொல்லிவிட்டார். திருத்தக்க தேவரிலிருந்து தேவர் பிலிம்ஸ் தேவர் வரைக்கும் நரி, யானையை விட மாட்டார்கள் போலிருக்கிறது. அவரும் இவற்றை வைத்தே  ‘நரிவிருத்தம்’ எழுதியிருக்கிறார்.

கதை இதுதான் -

யானையை வேட்டையாடுவதற்காக வில்லை எடுத்துக் கொண்டு ஒரு வேட்டைக்காரன் செல்கிறான். அவன் வில்லில் அம்பை பூட்டி ரெடியாகும் போது பாம்பு ஒன்று அவனது காலில் போட்டுவிடுகிறது. கடுப்பான வேடன் அம்பை எய்துவிட்டு வில்லை திருப்பி பாம்பை நசுக்கியே கொன்றுவிடுகிறான். எய்த அம்பு யானையை முடித்துவிடுகிறது. பாம்பு விஷம் மண்டையில் ஏறி வேடனும் இறந்துவிடுகிறான். ஆக மூன்று பேரும் அவுட். பாம்பும் யானையும் வேடனும் பிணமாகக் கிடக்கும் அந்த வழியாக வந்த நரியொன்று வில்லின் நாணை கடிக்கிறது. நாண் அறுபட வில் நரி மீது அடிக்க நரியின் கதையும் முடிகிறது.

‘பார்த்தீர்களா? ஆசைதான் இவர்களின் அழிவுக்கு காரணம்’ என்று விருத்தப்பாவை முடிக்கிறார். ஸ்ஸ்ப்பா!

நரிவிருத்தத்தை வாசித்து திருப்தியடைந்த தேவரின் ஆசிரியர் “ம்ம்ம்ம்...தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்” என்று தேவருக்கு அனுமதியளிக்க, சீவக சிந்தாமணியின் மூவாயிரத்து சொச்சம் செய்யுளையும் எட்டே நாளில் எழுதி முடித்தாராம். 

கதைப்படி நாயகனான சீவகன் எட்டு பெண்களை கல்யாணம் கட்டிக் கொள்கிறான். பிறகு என்ன? சீவகனின் காம வேட்கையும், நினைத்தவரோடெல்லாம் சேர்ந்து  ‘அப்படி இப்படி’ இருப்பதுதான் இந்த பெருங்காப்பியம் முழுவதும் இருக்கிறது. முழுவதையும் வாசித்து  Enjoy செய்தாலும் கடைசியில் ஒரு தத்துவம் வேண்டுமல்லவா? காப்பியத்தின் இறுதியில் இது அத்தனையும் நிலையாமை என்று உணர்ந்த சீவகன் துறவு பூண்டுவிடுகிறானாம். ஆடும் வரைக்கும் ஆடிவிட்டு கடைசியில் துறவு. இதுதான் சீவகனின் ‘டக்கு’.

ஒருத்தியைக் கட்டிக் கொண்டவனே துறவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். இதில் இவனுக்கு எட்டு பேர். ம்ம்ம்.

நமது ஆட்கள் இப்பொழுது எப்படி இருக்கிறார்களோ அப்பொழுதும் அப்படித்தானே இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. ‘இந்தளவுக்கு சூடேற்றும் காமத்தை எழுதிய இந்த ஆளுக்கும் காமத்தில் அனுபவம் இருக்கும்மய்யா’என எவனோ ஒருவன் தன் பக்கத்தில் இருப்பவனின் காதைக் கடிக்க, அடுத்தது என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்திருப்பீர்களே. yes! you are right..

அத்தனை பேர் முன்னிலையிலும் இரும்புக் கம்பி நெருப்பில் காய்ந்து கொண்டிருக்கிறது. “நான் பேச்சிலர்தான், அப்படியில்லையெனில் இதைத் தொடும் எனது கைகள் வெந்து தணியட்டும்” என்று பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை கையில் ஏந்தி தனது துறவு நிலையை நிரூபித்தாராம் தேவர். என்னதான் சுத்தமானவனாக இருந்தாலும் இரும்புக்கம்பி சுடாதா? எப்படித்தான் வலிக்காத மாதிரியே நடித்தாரோ?
                    
அது வேறு ட்ராக். உங்களுக்கு ஆசை இருக்கிறதா? எனக்கு எக்கச்சக்கமாக இருக்கிறது. காஜல் அகர்வாலோடு ஒரு படத்தில் டூயட் பாட வேண்டும் போன்ற பெர்சனல் ஆசைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நம்மைச் சுற்றி இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்குமே என ஒரு லிஸ்ட் இருக்கிறது.

ராஜபக்‌ஷே சாகும் வரைக்கும் பைல்ஸ் தொந்தரவால் நொந்து போக வேண்டும் என்பதிலிருந்து அவனது தம்பிக்கு கிட்னியில் பாறாங்கல் உருள வேண்டும், அவனது மகன் ஆண்மை இழப்பால் துவண்டு போக வேண்டும் என்பது வரைக்கும் அவர்களைச் சுற்றியே எனது ஆசைகள் இருப்பதுதான் அபத்தமாக இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக இருந்த அத்தனை பேர் மீதும் கொஞ்சமாவது சாணியடிக்கவும் ஆசையிருக்கிறது.

நேற்று ஏர்டெல்லிலிருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியிருந்தேன். ராமனுக்கு அணில் மணல் எடுத்த அளவிற்கான சிறு உதவிதான்.

இன்று காலையில் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலிருந்து அழைத்திருந்தார்கள். 

“எதற்காக ஏர்டெல்லிலிருந்து மாறுகிறீர்கள்?” என்றார்கள் 

“தமிழர்கள் எதற்காக மாறுகிறார்கள் என்று தெரியும்தானே” என்றேன். 

“ஸ்ரீலங்கா பிரச்சினை” என்றார்கள்.

"அதேதான்” என்று சொல்லிவிட்டு கட் செய்தேன்.

வழக்கமாக சமாதானம் செய்ய முயலும் கஸ்டமர் கேர் ஆட்கள் எதுவுமே சொல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. தமிழர் பிரச்சினை பற்றி பெங்களூர் போன்ற வெளி மாநில ஊர்களிலிருக்கும் கஸ்டமர் கேர் செண்டர்களில் பணிபுரிபவர்களுக்கு தெரிய வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நாம் இவர்களுக்கு செருப்படி கொடுத்திருக்கிறோம் என்பதை உறுதியாக நம்பலாம். முடிந்த இடங்களிலெல்லாம் இலங்கை விவகாரத்தை பேசச் செய்திருக்கிறார்கள் நம்மவர்கள். எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் நமது எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு அதுதான் தேவையானதாக இருக்கிறது. 

Mar 26, 2013

மதுபாபுவின் வாழ்வில் சிம்புவும் நயனும் கொட்டிய கும்மி


மதுபாபுவுக்கு மார்ச் 12 ஆம் தேதி பெரிய கண்டம் இருந்தது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அது ஒரு அஜால்குஜால் படம் மூலமாக வந்து சேர்ந்தது. படம் என்றால் சலனப்படம் இல்லை. நிழற்படம்தான்.

2006 அல்லது 2007 ஆம் ஆண்டு என்று ஞாபகம். சிம்புவும் நயன்தாராவும் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொண்ட படங்கள் பரபரப்பாக மின்னஞ்சலில் Forward ஆகிக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் நான் ஹைதராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அது ஒரு டார்ச்சரான நிறுவனம். மொத்தமாக ஐம்பதுக்கும் குறைவான ஆட்களுக்குத்தான் இணைய இணைப்பு  கொடுத்திருந்தார்கள். சிஸ்டம் அட்மினாக சரிதா என்ற பெண்மணி இருந்தார். அவருக்கு வேலையே ஐம்பது பேரும் என்ன பார்க்கிறார்கள் என்று கண்காணிப்பதுதான். கண்காணித்தால் தொலைகிறது என்று விட்டுவிடலாம். அப்பொழுதே அழைத்து “இப்பொழுது என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்பார். இதே கேள்வியை ஆண் கேட்டிருந்தால் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். பெண்ணிடம் சொல்வதற்கு தயக்கமாக இருக்குமல்லவா? “பெப்பேப்பெபே” என்று உளறும் போது இதை ஸ்கீரின்ஷாட் எடுத்து சேர்மேனுக்கு அனுப்பட்டுமா என்று மிரட்டல்விடுவார். 

அப்பொழுது “பேசலாம்” என்ற பெயரில் இந்த வலைத்தளம் இருந்தது. தளத்திற்காக சில நடிகைகளின் படத்தை டவுன்லோட் செய்து கொண்டிருந்தபோது வசமாக சிக்கிக் கொண்டேன். போனில் அழைத்தவர் “இது ரொம்ப அவசியமா?” என்றார். அதே “பெப்பேப்பேப்பே”தான் என்னிடமிருந்து வந்தது. சேர்மேனிடம் புகார் அளிக்கப்போகிறேன் என்றான். என்ன கெஞ்சினேன் என்று தெளிவாக ஞாபகமில்லை ஆனால் படு பயங்கரமாக கெஞ்சினேன் என்று ஞாபகமிருக்கிறது. “தொலைந்து போ” என்றுவிட்டுவிட்டார்.

அதற்கு பிறகாக அலுவலகத்தில் அவ்வளவு தைரியமாக எந்தப்படத்தையும் திறந்து பார்க்க மாட்டேன். உமாநாத் என்ற நண்பரிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது அவர் சி-ந வின் பரபரப்பான படங்களை பார்த்துவிட்டதாகச் சொன்னார். ‘எப்படியாவது’ பார்த்துவிட வேண்டும் என்று மனது துடித்தது. அடுத்தவன் முத்தம் கொடுப்பதை பார்ப்பது அழுக்கான செயல் என்றெல்லாம் ‘பிட்’ ஓட்டலாம் என்றாலும் After all மனித மனம்தானே?

“அனுப்பி வைக்கட்டுமா?” என்றார்.

“அலுவலகத்தில் பார்க்க முடியாது” என்றேன். 

“அனுப்பி வைக்கிறேன், ப்ரவுசிங் செண்டரில் பாருங்கள்” என்றார். அதுவும் நல்ல ஐடியாவாக இருந்தது. அந்தப் படங்களை “நவீன கவிதைகள்” என்ற பெயரில் ஃபார்வேர்ட் செய்து வைத்தார். அந்த நாள் மாலையிலேயே ப்ரவுசிங் செண்டருக்குச் சென்று ஜென்ம சாபல்யம் அடைந்தது ஞாபகத்திலிருக்கிறது. இந்தக் கதை எதற்கு மதுபாவுவின் கதைக்குள் வருகிறது என்றுதானே யோசிக்கிறீர்கள். மதுபாபு மாட்டிக் கொண்டதும் அதே சி-ந படத்தினால்தான். ஆனால் இது நடந்தது சரிதாவின் நிறுவனத்தில் இல்லை. நான் வேலைக்குச் சேர்ந்த அடுத்த நிறுவனத்தில்.

அப்பொழுது ஸ்விட்சர்லாந்து நாட்டு நிறுவனத்திற்காக எங்கள் டீமில் இருந்தவர்கள் மாடாய் உழைத்துக் கொண்டிருந்தோம். அந்த நாட்டைச் சேர்ந்த ஸ்டீபானியா என்ற ஒருத்தியிடம்தான் சாட்டை இருக்கும். அங்கிருந்தே அதை அவள் சுழற்றுவாள். அவள் சுழற்றுவதில் எங்கள் முதுகு பழுத்துக் கிடக்கும். எங்கள் நிறுவனத்திற்கு என்ன வேலைகளை ஒதுக்க வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்வாள். ஒரு வேலையை நாங்கள் முடிப்பதற்குள்ளாகவே இன்னும் இரண்டு புதிய வேலைகளை அனுப்பி வைத்து பெண்டு நிமிர்த்தினாள்.

எங்கள் டீமில் இருந்த எல்லோராலும் அவளிடம் பேச முடியாது. அனுமதிக்கவும் மாட்டாள். அவளுடன் பேசுவதற்கென்று ஒருவனை நியமித்தார்கள். அந்த ஒருவன்தான் மதுபாபு. எங்கள் டீமைச் சார்ந்தவர்கள் ஒவ்வொரு நாளும் என்னென்ன வேலை செய்தார்கள் என்பதை பட்டியலிட்டு ஸ்டீபானியாவுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு மதுபாபுவுக்கு வந்து சேர்ந்தது. க்ளையண்ட்டுடன் நேரடித் தொடர்பில் இருப்பது ‘கெத்தான மேட்டர்’என்பதால் அவனுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. மாலை ஐந்தரை மணி ஆனால் நாங்கள் ஒவ்வொருவரும் செய்த வேலைகளை அவனிடம் பட்டியல் வாசிக்க வேண்டும். அவன் குறித்துக் கொள்வான். இந்த தெனாவெட்டான வேலையின் காரணமாக பந்தா காட்டிக் கொண்டிருந்தான்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த அவனது பொழப்பில்தான் சி-ந சேர்ந்து கும்மியடித்தார்கள். மதுபாவுவின் மின்னஞ்சலுக்கு அவனது நண்பர்கள் யாரோ இந்த நிழற்படத்தை அனுப்பி வைத்துவிட்டார்கள். சொறி வந்தவன் கை எதையாவது சொறிவது போலத்தான் தனக்கு வந்த மின்னஞ்சலை ஃபார்வேர்ட் செய்வது என்பதும். ஒருமுறை பழகிக் கொண்டால் பிறகு தவிர்க்க முடியாது. மதுபாபுவும் அப்படி சொறிபிடித்தவன் போலிருக்கிறது.  தனக்கு வந்த படத்தை ஸ்டிபானியாவுக்கு அனுப்பி தொலைத்து விட்டான். தெரிந்து அனுப்பினானோ அல்லது தெரியாத்தனமாக அனுப்பினானோ- ஆனால் அவளுக்கு போய்ச் சேர்ந்துவிட்டது. சிம்புவும் நயன்தாராவும் முத்தமிட்டுக் கொண்டால் நமக்கு வேண்டுமானால் கிளுகிளுப்பாக இருக்கக் கூடும். ஸ்டீபானியாவுக்கு என்ன வந்தது? அவர்கள் பார்க்காத முத்தங்களையா நாம் பார்த்துவிட்டோம்?

அடுத்த சில வினாடிகளில் அதே மின்னஞ்சலை மேனேஜர், டைரக்டர் என பெருந்தலைகளுக்கு Forward செய்து "What the F*** is happening there?" என்று காறித் துப்பிவிட்டாள். அவ்வளவுதான். அடுத்த ஐந்து நிமிடங்களில்  ‘டீமே’ அல்லோகலப்பட்டுவிட்டது.

மதுபாபுவை மேனேஜர் அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் செல்கிறார். அரை மணி நேரம் பேசுகிறார்கள். பிறகு டைரக்டரும் அதே அறைக்குள் போகிறார். முக்கால் மணி நேரம் பேசுகிறார்கள். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் என்னமோ பெரிதாக நடக்கப் போகிறது என்று தெரியும். அவன் தெரியாத்தனமாக செய்துவிட்டதாகவும், மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் சொன்னானாம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. அடுத்த சில நிமிடங்களில் HRலிருந்து சில காகிதங்களைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அதே அறைக்குள் போனார்கள். பத்து நிமிடங்கள் பேசினார்கள். பிறகு அவர்கள் வெளியேறிவிட்டார்கள். 

அடுத்த சில வினாடிகளில் மதுபாபுவும் மேனேஜரும் அறையிலிருந்து வெளியேறினார்கள். அவனிடம் பேசுவதற்கு எங்களை அனுமதிக்கவில்லை. மேனேஜர் அவனை ஆறுதலாக தட்டிக் கொடுத்தார். தனது இடத்திற்கு வந்தவன் டிபன் பாக்ஸ் உள்ளிட்ட உடைமைகளை எடுத்துக் கொண்டான். பிறகு வீங்கிய முகத்தோடு அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினான். அதுதான் அந்த அலுவலகத்தில் அவனது கடைசி நாளாக இருந்தது.

Mar 25, 2013

ஊரும் பேரும்


ஆறா மீன் பிடிக்கப் போகும் போது அயிரை மீன் மாட்டிக் கொண்டால் வேண்டாமென்று விடவா போகிறோம்? அப்படித்தான் கோபிச்செட்டிபாளையத்தின் வரலாற்றை கொஞ்சம் தேடிப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தேடும் போதுதான் சுந்தரரும் மாட்டுகிறார், பவணந்தி முனிவரும் மாட்டுகிறார். சுந்தரர் அவிநாசி வரைக்கும் ‘ட்ரிப்’ அடித்திருக்கிறார். அப்படியே இன்னும் ஒரு நாற்பது கிலோமீட்டர் நடந்திருந்தால் கோபியைப் பற்றிய குறிப்பை எழுதியிருக்கலாம். ஆனால் எழுதாமல் அப்பீட் ஆகிவிட்டார்.

பவணந்தி முனிவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். நன்னூலை எழுதியவர். சுந்தரமூர்த்தி நாயனாராவது அவினாசியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் நடந்திருந்தால்தான் கோபியை அடைந்திருக்க முடியும். ஆனால் இந்த முனிவர் இருக்கிறார் பாருங்கள். சீனாபுரம் வரை வந்திருக்கிறார். சோம்பேறித்தனம் படாமல் பதினைந்து கிலோமீட்டர் நடந்திருந்தால் கோபிக்கு வந்திருக்கலாம். ஆனால் இவரும் வந்த மாதிரி தெரியவில்லை. இப்பொழுது கிடைத்தால் மண்டையில் ஒரு கொட்டு வைத்துவிடுவேன்.

பவணந்தி முனிவர் சனகாபுரி என்ற ஊர்க்காரராம். இவர் பூசை செய்த கோயில் ஒன்று இன்னமும் சீனாபுரத்தில் இருக்கிறது. சனகாபுரிதான் சீனாபுரம் என்று மாறிவிட்டது என்று நம்புகிறேன். ஆனால் ஜைனர்புரம்தான் மருவி சீனாபுரம் என்றாகிவிட்டது என்கிறார்கள். எது உண்மை என்று அந்த முனிவருக்குத்தான் வெளிச்சம். இந்த சீனாபுரம், விஜயமங்கலம் எல்லாம் ஒரு காலத்தில் சமணர்களின் பேட்டையாக இருந்திருக்கிறது என்கிறார்கள். 

சுந்தரர், முனிவரையெல்லாம் திட்டி பிரயோஜனம் இல்லை. கொங்குநாட்டின் எந்த வரலாற்றைத் தேடினாலும் கோபிக்கு அருகில் இருக்கும் ‘காஞ்சிக்கோயில்’ என்ற ஒரு உள்நாட்டைப் பற்றிய தகவல்கள்தான் இருக்கிறது. No கோபி.

இதையெல்லாம் பார்த்தால் அந்தக் காலத்தில் கோபி என்ற ஊரே கிடையாது போலிருக்கிறது. பிறகு எப்படி  Mr.சுந்தரரையும் திருவளர் பவணந்தியாரையும் திட்ட முடியும்? ‘ஏன் எங்கள் ஊருக்கு வரவில்லை?’ என்றால்  ‘ எங்கள் காலத்தில் அப்படியெல்லாம் ஊரே இல்லைப்பா’ என்று பேந்த பேந்த முழிப்பார்கள் என நினைக்கிறேன். இன்றைக்கு கோபி டவுனாக இருந்தாலும் மிகச் சமீபத்தில்தான் ஊராக உருவாகியிருக்கக் கூடும். 

வரலாறு எபப்டியோ போகட்டும். atleast பெயர்க்காரணத்தை தெரிந்து கொள்ளலாம் அல்லவா? ஒவ்வொரு ஊருக்கும் பெயர்க்காரணத்தை தெரிந்து கொள்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. உதாரணமாக தஞ்சை பெரிய கோயிலின் உச்சியில் இருக்கும் 80 டன் எடையுள்ள பிரம்ம மந்திரக்கலை மேலே கொண்டு செல்வதற்கு ஐம்பது கிலோமீட்டர் தூரத்திலிருந்து சாய்வான சாரம் அமைப்பதற்காக மணலைக் கொட்டி, பாலம் போல அமைத்து, யானைகளை வைத்து கல்லை உருட்டிச் சென்றார்களாம். இந்த சாரத்தின் தொடக்கப்புள்ளிக்கு சாரப்பள்ளம் என்ற பெயர் நிலைத்துவிட்டதாக குறிப்பை வாசித்த போது ஆச்சரியமாக இருந்தது. 

இப்படியான ஏதாவது ஒரு வரலாறு கோபிக்கும் இருக்குமல்லவா? தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு தமிழ் பேராசியரரிடம் பேசிய போது அவரிடமும் ஒரு கதை இருந்தது. 

பாரியூர் என்ற கோயில் எங்கள் பகுதியில் பிரசித்தம். அதுதான் தொடக்ககாலத்தில் ஊராக இருந்ததாம். வாய்க்கால் வெட்டும் போதோ வெள்ளம் வரும் போதோ மேட்டுப்பாங்கான இடம் தேடி மக்கள் நகர்ந்திருக்கிறார்கள். நகர்ந்த இடத்ததைத்தான் இப்பொழுது இருக்கும் கோபிச்செட்டிபாளையம் என்கிறார்கள். ஆனால் இது செவி வழிச் செய்திதான். ஆதாரம் என்றெல்லாம் எதுவும் கிடைக்கவில்லை. இந்தக் காலத்தில் செவிவழிச்செய்திகளை வரலாறாக பதிவு செய்வது பெரும்பாலும் தவறான முடிவாகவே அமைந்துவிடும் என நினைக்கிறேன்.

ஊரின் வரலாறு இது. ‘ஊருக்கான பெயர்க்காரணம் தெரியுமா?’ என்று கேட்ட போது இன்னொரு கதையைச் சொன்னார்.

கோபிச்செட்டுபிள்ளான் என்ற ஒருவரின் பெயரிலிருந்து ஊர்ப்பெயர் உருவாகியதாகவும் ‘செட்டு’ என்றால் வாணிகம் என்றொரு அர்த்தம் இருக்கிறது என்றார். (இந்தச் சொல்லிலிருந்துதான் வணிகர்களை செட்டியார் என்று அழைக்கத் துவங்கி பிறகு அதுவே சாதிப்பெயராய் நிலைத்துவிட்டது என்றார்). அதே போல பிள்ளான் என்ற சொல் அந்தக்காலத்தில் சாதீயப்பெயராக பயன்படுத்தப்படவில்லை என்றார். இப்படியிருக்க கோபி என்பவர் செட்டியாராகவும் இல்லை பிள்ளையாகவும் இல்லை என்றார். 

“பிறகு?” என்ற போது 

“அவன் கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன்” என்றார்.

இது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் நம்பப் போவதில்லை. இதே ஸ்டேட்மெண்ட்டை வேறொரு சாதியைச் சார்ந்தவரிடமிருந்து வந்திருந்தால் நம்பிவிடுவேன். கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர் சொல்லும் போது இன்னும் கொஞ்சம் தேட வேண்டும் என நினைக்கிறேன்.

பெருமாள் முருகன் - சமணர்கள்


அன்பிற்குரிய மணிகண்டன்,

உங்கள் வலைத்தளத்தில் அவ்வப்போது வாசிப்பதுண்டு. கவிதைகள், கொங்கு வாசனை ஆகிய பகுதிகள் பிடிக்கும். அனுபவக் கட்டுரைகள் சில வசீகரித்ததுண்டு. 

இன்று ‘தோற்றால் சங்கு அறுத்துவிடுவார்கள்’ என்றொரு கட்டுரை வாசித்தேன். சாதாரணமான பகிர்வுதான் என்றாலும் அதில் ஒரு பிழையைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ‘சமணக் காப்பியமான மணிமேகலை’ என்று எழுதியுள்ளீர்கள். மணிமேகலை பௌத்தக் காப்பியம். பௌத்தத்திற்கு இருக்கும் ஒரே காப்பியம் இதுதான். சிலம்பு, சிந்தாமணி, நீலகேசி உள்ளிட்டவை சமணக் காப்பியங்கள்.

முதல் வரியின் தொடக்கம் ‘சைவர்களைச் சமணர்கள் அடிக்க’ என்றிருக்கிறது. சமணர்கள் அடிதடியில், வன்முறையில் ஈடுபட்டதாகச் சான்றுகள் இல்லை என்றே நினைக்கிறேன். அதனால் தான் அம்மதம் நிலைக்காமல் போய்விட்டது. 

சொல்லத் தோன்றியதால் எழுதுகிறேன். தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் அல்ல.

அன்புடன், 
பெருமாள்முருகன்,

                                                                  *******

டியர் சார்,

வணக்கம்.

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

தாங்கள் ஃபேஸ்புக்கில் இருப்பது தெரியும். ஆனால் வலைப்பதிவிலும் இருக்கிறீர்கள் என்பது சந்தோஷமான ஆச்சரியம்.

கொங்குவட்டாரச் சொல்லகராதிக்காகவும், கூளமாதாரிக்காவும், மாப்பு குடுக்கோணுஞ் சாமீக்காவும் என  அவ்வப்போது தங்களை நேரில் சந்திக்க விரும்பிய தருணங்கள் நிறைய உண்டு.  இப்பொழுது தங்களிடமிருந்து திடீரென மின்னஞ்சல் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘தோற்றால் சங்கு அறுத்துவிடுவார்கள்’ என்ற பதிவில் இரண்டு தகவல்களை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

1) மணிமேகலை சமண காப்பியம் இல்லை.

அப்பரின் காலத்திற்கு முந்தைய காப்பியமான மணிமேகலை பெளத்த நூல் என்றுதான் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கவனக் குறைவாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ சமணக் காப்பியம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். இது நிச்சயம் வருத்தம் தெரிவிக்க வேண்டிய தகவல் பிழைதான். மணிமேகலைக்கு பதிலாக சிலப்பதிகாரம் என்று இருந்திருக்க வேண்டும். 

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அடுத்த முறை இத்தகைய கவனக்குறைவான பிழைகளை தவிர்க்க முயற்சிக்கிறேன். 

2) சமணர்கள் வன்முறையாளர்கள் இல்லை

சமணர்கள் அப்பரை கொடுமைப்படுத்தினர் என்பதும், சம்பந்தரின் மடத்தை கொளுத்தினர் என்பதும் பெரிய புராணத்தில் பதிவாகியிருக்கிறது. சேக்கிழாரின் இந்தக் கூற்று ஆதாரப் பூர்வமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. சமணர்கள் அடிதடியில் இறங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் கை வலுவிழந்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். இதனடிப்படையில்தான் ‘சைவர்களைச் சமணர்கள் அடிக்க’ என்று பத்தியைத் தொடங்கினேன். 

தங்களைப் போன்ற எனது மரியாதைக்குரிய எழுத்தாளர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை ‘தவறு கண்டுபிடிக்க அனுப்பட்ட மின்னஞ்சல்’ என்று ஒரு போதும் நினைக்க மாட்டேன். நினைக்கவும் முடியாது. இது போன்ற மின்னஞ்சல்கள் எனது புரிதல்களை வேறு தளத்திற்கு நகர்த்தும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

தங்களின் கடிதத்திற்கு நன்றி.

மிக்க அன்புடன்,
மணிகண்டன்.
                                                                      
                                                                 ******

மணிகண்டன்,

மகிழ்ச்சி. 

சமணர்கள் தொடர்பாகப் பெரியபுராணத்தில் வருவது சைவம் சார்ந்த பதிவு. சைவர்கள் போலச் சமணர்கள் ஏதேனும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களா என்று பார்க்கலாம். இந்தக் கோணத்தில் யாரேனும் முன்பே எழுதியிருக்கக்கூடும். பார்க்கிறேன். கிடைத்தால் சொல்வேன்.

வாய்ப்பிருக்கும்போது நேரில் சந்திப்போம்.

அன்புடன்,
பெமு 

Mar 24, 2013

தோற்றால் சங்கு அறுத்துவிடுவார்கள்


சைவர்களை சமணர்கள் அடிக்க, சமணர்களை சைவர்கள் கொல்ல- இவர்களோடு ஒரே புராணமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. பெரிய புராணம். பெரிய புராணத்திற்கு அடிப்படைக் காரணமான அறுபத்து மூன்று நாயன்மார்களும் இயேசுவுக்கு ஜூனியர்கள். 

இயேசு காலம் என்பது காலண்டர் பயன்படுத்தும் எல்லோருக்குமே தெரியும். 2000 வருடங்கள் ஆகிவிட்டது. நாயன்மார்கள் அதற்கப்புறம் முந்நூறு வருடங்களுக்கு பிறகுதான் ஸீனுக்கு வருகிறார்கள். கி.பி.300 லிருந்து கி.பி 865 வரை. அவர்களுக்கும் அப்புறம்தான் சுந்தரர் காலம் கி.பி. 840 வாக்கில். எதற்கு இந்த பெரிய புராண ஆராய்ச்சி? 

சுந்தரர் எனக்கு சின்ன வயதிலேயே அறிமுகம். ஏதோ ஒரு படத்தில் விவேக்குக்கு போலீஸ் அதிகாரி அறிமுகமாகிய கதைதான். எனக்கு சுந்தரரை தெரியும். ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது. அவிநாசியில்தான் சித்தி வீடு இருக்கிறது. அங்கு போகும் போதெல்லாம் ‘அந்தக் காலத்தில் சிறுவன் ஒருவனை முதலை விழுங்கிவிட்டதாகவும் சுந்தரர் ஏதோ பாட்டெல்லாம் பாட சிவபெருமானின் அருளால் பொற்றாமரைக் குளத்திலிருந்த முதலை அந்த சிறுவனை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கதை சொல்வார்கள். அந்தப் பொற்றாமரைக் குளத்தில் முதலை இருக்கிறதா என்று எட்டி எட்டி பார்த்திருக்கிறேன். முதலையெல்லாம் எதுவும் கண்ணில் பட்டதில்லை. தண்ணீரில்லாத அந்தக் குளத்தில் கக்கூஸ் போகும் யாராவது மனிதர்தான் கண்ணில் படுவார். 

இப்பொழுது இதே கதையை அச்சு பிசகாமல் என் மகனிடம் சொன்னால் அவன் முதலையைப் பற்றிய எந்த கவனமும் இல்லாமல் ‘பாட்டு பாடினால் சிவபெருமான் வருவாரா?’ என்கிறான். அறுபத்து மூன்று நாயன்மார்களையும் சோதனை செய்த சிவபெருமானை என் மகன் சோதனை செய்து கொண்டிருக்கிறான். ஆனால் பாருங்கள், அத்தனை நாயன்மார்களின் கதையிலும் சிவபெருமான் ஏதோ ஒரு வகையில் பிரசன்னமாகியிருக்கிறார். இதெல்லாம் நடந்து ஜஸ்ட் 1200 ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. ஆனால் இப்பொழுதெல்லாம் யாருடைய கதையிலுமே சிவபெருமான் அட்டடெண்டன்ஸ் போடுவதில்லை. யுகங்களைத் தாண்டி வாழும் சிவபெருமானுக்கு 1200 ஆண்டுகளில் என்ன சிக்கல் வந்துவிட்டது என்று தெரியவில்லை. You are very bad guy சிவபெருமான்!

கவனித்துப்பார்த்தால் நம் கதைகளில் சிவபெருமானும், விஷ்ணுவும் மற்றும் அவர்களது வாரிசுகளும் மட்டுமே கடவுளாக இருக்கிறார்கள். சைவம், வைணவத்தையும் விட பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு சமணம் வலுவாக இருந்தது. இந்த மண்ணில்தானே சமண காவியமான மணிமேகலை பிறந்தது? அதன் பிறகு சமணர்கள் எங்கே சென்றார்கள் என்றால் அழித்தொழிக்கப்பட்டனர் அல்லது விரட்டியடிக்கப்பட்டனர். காலங்காலமாகவே வெல்பவர்களின் பெயர்கள்தான் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது. அப்படித்தான் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமான இடம் உறுதி செய்யப்பட்ட நம் வரலாற்றில் சமணர்கள் காலி செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அந்தக் காலத்திலிருந்தே இந்த சாமியார்கள் அலும்பு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் வலுவாக இருந்த சமணர்கள் குரூப்பாக சேர்ந்து அப்பரை வைத்து கும்மியடித்திருக்கிறார்கள். அதற்கு மகேந்திரவர்மன் என்ற பல்லவனும் உடந்தை.  அப்பரை வதைத்தவர்கள் சம்பந்தரின் மடத்துக்கு தீயை வைத்திருக்கிறார்கள். காற்று ஒரே பக்கம் அடித்துக் கொண்டிருக்காது அல்லவா? இண்டர்வெல்லுக்கு முன்பாக ஹீரோ மனம் மாறுவது போல சமணனாக இருந்த மகேந்திரவர்மன் சைவனாக மாறிவிட்டான். அதன் பிறகு சமணர்களை துவம்சம் செய்திருக்கிறான். ரிவர்ஸ் கியரில் வண்டியை எடுத்தவன் சமணர்களின் கட்டடங்களையெல்லாம் அடித்து தரைமட்டமாக்கியிருக்கிறான். சமணர்களின் கதை கந்தலாகத் தொடங்கியது. 

நெடுமாறன் என்றொரு மன்னன் இருந்திருக்கிறான். இவனுக்கு ரஜினிக்கும் சம்பந்தம் உண்டு. நெடுமாறனின் மகன் பெயர்தான் கோச்சடையன். நெடுமாறனும் converted தான். சைவத்திற்கு மாறிய பிறகு சமணர்களை கழுவிலேற்றியவன். சைவர்கள் சமணர்களை கழுவிலேற்றினார்கள் என்பதெல்லாம் பொய் என்றும், சைவர்கள் உத்தமர்கள் என்றும் இன்றைய இந்துப் பிரியர்கள் வரலாற்றை திருத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சைவர்கள் இந்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை செய்திருக்கிறார்கள். திருஞான சம்பந்தரிடம் வாதம் புரிந்து தோற்றுப்போனதால் பெருங்குன்றத்தைச் சேர்ந்த எட்டாயிரம் சமணர்களை கழுவிலேற்றியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை நம்பியாண்டார் நம்பி பல இடங்களில் குறிப்பிட அதைத்தான் சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படியெல்லாம் விரட்டியடிக்கப்பட்ட சமணர்கள் தமிழகத்தைவிட்டே காணாமல் போனார்கள். பிறகு புனையப்பட்ட கடவுள்களான சிவபெருமானும், விஷ்ணுவும் மட்டுமே தமிழகத்தின் கதைகளில் இடம் பிடித்துக் கொண்டார்கள்.

Mar 23, 2013

தாண்டவம்


அம்மாவையும் அப்பாவையும் ஊருக்கு அழைத்து வர வேண்டியிருந்தது. தொப்பூர் வரைக்கும்தான் தேசிய நெடுஞ்சாலையில் பயணம். அதற்கு பிறகு இருவழிப்பாதையில்தான் வண்டி ஓட்டுவேன். அதற்கு காரணமிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்தால் சுங்கவரியை தவிர்க்கலாம்.  சுங்கவரி என்ற பெயரில் சுருட்டிக் கட்டுகிறார்கள். கேட்டால் தனியார்மயமாக்கல் என்பார்கள். நமக்கெதுக்கு பொல்லாப்பு? எவனோ எப்படியோ போகட்டும் என்று மாநிலச் சாலையை எடுத்துக் கொள்வதுதான் உசிதம். தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் நூற்றைம்பது கிலோமீட்டரில் குறைந்தபட்சம் பத்து நாய்களாவது நசுங்கிக் கிடக்கும். டெவலப்மெண்ட் என்ற பெயரில் பெரும்பாலான ஊர்களுக்கு நடுவில் கோடு போட்டுச் செல்கிறது நெடுஞ்சாலை. முன்பு அடுத்ததடுத்த தெருவாக இருந்தவர்களை இப்பொழுது நெடுஞ்சாலை பிரித்து வைத்திருக்கிறது. அடுத்த தெருவுக்கு செல்வதென்றால் கூட நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்து யூ டர்ன் அடிக்க வேண்டியிருக்கிறது. நம்மவர்களே கணக்கு வழக்கில்லாமல் வண்டிகளின் சக்கரத்திற்கடியில் சரணமடைகிறார்கள். நாய்கள் எம்மாத்திரம்? குனிந்துகொண்டே ஓடி நொடியில் நசுங்கிப் போகின்றன.

தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்துவிட்டு தொப்பூர் சாலையில் பயணிக்கும் போது அந்தியூர் என்ற ஊர் இருக்கிறது. அந்தியூர் பற்றி தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பெருமைக்குரிய அண்ணன் ஜூனியர் பவர்ஸ்டார் தேவயானி ராஜகுமாரனை ஈன்றெடுத்த ஊர் என்று அந்த ஊருக்கு அறிமுகம் கொடுக்கலாம்தான். ஆனால் அந்தியூர்க்காரர்கள் சண்டைக்கு வரக் கூடும் என்று பயமாக இருக்கிறது. அவரை தவிர்த்துவிட்டால் அந்தியூர் வெற்றிலை, அந்தியூர் செங்கல் என்று இன்னொரு பட்டியலும் இந்த ஊருக்கு இருக்கிறது. இந்த ஊரைத் தாண்டி கொஞ்சம் வந்துவிட்டால் போது பசுமை கொழிக்கத் துவங்கிவிடும். சாலைக்கு இரண்டு பக்கமும் வயல்களாக கண்களை குளிரச் செய்துவிடும்.

ஆனால் இதெல்லாம் சென்ற வருடம் வரைக்கும்தான். இந்த வருடம் காய்ந்து கிடக்கிறது. இப்பொழுது எங்கு பார்த்தாலும் வறட்சி. மழை பொய்த்துவிட்டது. பவானியில் சாக்கடைத் தண்ணீர்தான் ஓடுகிறது. வாத்துகள் மேய்ந்த வயல்கள் வெப்பத்தில் வெடித்துக் கிடக்கின்றன. கொக்குககள் பறந்த எங்கள் ஊரின் வானம் வெக்கையில் காந்துகிறது. ஒரே வருடத்தில் ஒட்டுமொத்தமாக இந்த ஊரை புரட்டிப் போட்டுவிட்டது இயற்கை. கிணறுகளில் இருந்த மீன்கள் செத்து நாற்றமடிக்கின்றன. எப்பொழுதும் கேட்கும் தவளைகளின் சப்தத்தை கேட்க முடியவில்லை. கால்நடைகளையும் பஞ்சம் விட்டுவைக்கவில்லை. ஆடுகளும் மாடுகளும் வெப்பத்தை தாங்கமுடியாமல் திணறுகின்றன. ஊருக்குள் கால் வைக்கவே பதட்டமாக இருக்கிறது. பச்சிலைகளால் போர்த்தியிருந்த இந்த பூமியை நோயாளியைப் போல பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது.

முப்பது வருடங்களாக என் மூச்சாக இருந்த இந்த ஊரை இப்படி மூப்பெய்திய அநாதைக் கிழவியென பார்க்க வேண்டியிருக்குமானால் இந்த ஊருக்கு வராமல் இருந்துவிடுவதே நல்லது என நினைக்கிறேன். நீச்சல் பழகிய வாய்க்காலும், குருவி பிடித்து விளையாடிய மரங்களும் தங்களின் அந்திமக் காலத்தை நெருக்கிவிட்டதென அதிரச் செய்கின்றன. வாய்க்கால் கரையோரம் மணிக்கணக்காக கிடந்த நாட்கள் நினைவில் வந்து போகின்றன. இப்பொழுது சில கணங்கள் கூட இந்த கரைகளின் வெம்மையைத் தாங்க முடியவில்லை. 

வெக்கையின் இத்தனை கொடூரமும் பங்குனியிலேயே படுத்தியெடுக்கிறது. சித்திரையும் அக்னிநட்சத்திரமும் இன்னும் எவ்வளவு குரூரமானதாக இருக்கும் எனத் தெரியவில்லை. தோட்டவேலைகளுக்கு செல்லும் கூலிகள் பல மாதங்களாக வேலை இல்லை என்கிறார்கள். விவசாயமே நடத்த முடியாத பூமியில் கூலியாட்களுக்கு அவசியமே இல்லாமல் இருக்கிறது. அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் நிலங்களை குத்தைகைக்கு பிடித்திருந்த சிறு விவசாயிகள் கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறார்கள்.  அடுத்த வருடம் மழை பெய்யும் என்ற சிறு நம்பிக்கை மட்டுமே அவர்களின் வாழ்விற்கான பற்றுகோலாக இருக்கிறது.

கட்டுரையை உற்சாகமானதாக ஆரம்பித்தாலும் இயற்கையால் குத்திக் கிழிக்கப்படும் எனது ஊரின் அவலத்தை எழுத்தாக மாற்றும் மனோதிடம் இந்தக் கணத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். 

வண்டியில் எனது அருகில் அமர்ந்திருந்த அப்பாவிடம் “இப்படியொரு வறட்சியை உங்கள் காலத்தில் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா?” என்றேன். பதில் சொல்லவில்லை. “அப்பா” என்றழைத்துவிட்டு இன்னொரு முறை அதே கேள்வியைக் கேட்டேன். அப்பா கண்களைத் துடைத்ததை கவனித்தேன். அவருக்கு அறுபத்தைந்து வயதாகிறது. தாத்தா இறந்த போது அவர்  அழுததை முதன்முதலாகப் பார்த்தேன். பிறகு அவர் விபத்தில் அடிபட்ட போது ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாக எங்களைப் பார்த்து அழுதார். இப்பொழுது மூன்றாவது முறை. கண்களை துடைத்துவிட்டு “இல்லை” என்றார். ஏனோ அப்பொழுது அவரை என்னால் நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை.

Mar 22, 2013

மாராப்பு


முந்தாநாள் appraisal பற்றி எழுதிய போது இன்னொரு விவகாரம் ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் மென்பொருள் நிறுவனத்தில் நடந்த விவகாரம்தான். நடந்து கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்கள் இருக்கும். அப்பொழுது ஹைதராபாத்தில் இருந்தேன். எனக்கு வாய்த்த மேனேஜர் நல்ல மனிதர். ஆனால் வாய்தான் காது வரைக்கும் நீண்டிருக்கும். ஓட்டவாய். பேசிக் கொண்டே இருப்பார். அதிகமாக பேசும் மேனேஜர் கிடைப்பது ஒருவிதத்தில் நமக்கு நல்லதுதான். ஜால்ரா தட்டுவதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் உருவாகும்.

அப்பொழுதே நான் நன்றாக ஜால்ரா அடித்து பழகியிருந்தேன். அவர் என்ன சொன்னாலும் “ஜிங் ஜாக்”தான். அதனால் அவருக்கு என்னை மிகப் பிடிக்கும். போரடிக்கும் போதெல்லாம் என்னை இழுத்துக் கொள்வார். கறிக்கடையில் வெள்ளாட்டை கீழே போட்டு அறுப்பார்கள் அல்லவா? அப்படியொரு ஃபீலிங்தான் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும். வெள்ளாட்டையாவது நல்ல கதுமையான கத்தியை வைத்து வெறுக்கென அறுத்துவிடுவார்கள். சீக்கிரம் உயிர் போய்விடும். ஆனால் இந்த மேனேஜர் ரம்பத்தை வைத்து அறுப்பது போல அறுப்பார். அதுவும் மொன்னை ரம்பம். அறுப்பார் அறுப்பார் அறுத்துக் கொண்டே இருப்பார். 

‘ம்ம்ம்’ போட்டுக்கொண்டே கவனத்தை வேறு பக்கம் மேய விடும் கலையை இவரிடமிருந்துதான் பழகிக் கொண்டேன். அவர் பேசுவதற்கெல்லாம் ‘ஜிங் ஜாக்’ அடிக்கும் விதமாக ‘ம்ம்’ கொட்டிக் கொண்டே இருந்தாலும் கவனம் அங்கிருக்காது. அவரது வார்த்தைகள் இந்தக் காதில் நுழைந்து மற்றொரு காதில் தப்பித்துக் கொண்டிருக்கும். அதைத்தவிர அவரிடமிருந்து தப்பிப்பதற்கு வேறு வழியும் இருக்காது. இப்படி ஓடிக் கொண்டிருந்த எங்கள் ஆட்டுமந்தை டீமில் ஆகஸ்ட் மாத வாக்கில் மது பாபு என்றொருவன் எங்கள் மேனேஜருக்கு கீழாக வந்து சேர்ந்தான். என்னைவிட வயதில் சிறியவன் என்றாலும் இதற்கு முன்பு பன்னாட்டு நிறுவனத்தில் இருந்ததால் நல்ல சம்பளத்துடன் வந்து சேர்ந்தான். ‘ஜிங் ஜாக்’ அடிப்பது கெளரவக் குறைச்சல் என நினைக்கும் பரம்பரையைச் சேர்ந்தவன் போலிருக்கிறது. மேனேஜர் என்ன சொன்னாலும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான். 

எங்கள் மேனேஜரிடம் குறிப்பிடத்தக்க விஷயம் இருந்தது. மேனேஜ்மெண்ட் என்ன சொல்கிறதோ அதை அச்சு பிசகாமல் ஒப்பித்துவிடுவார். ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. சில கணங்கள் மலங்க மலங்க விழித்துவிட்டு “I will get back to you" என்று மீட்டிங்கை முடித்துவிடுவார். அதற்கப்புறம் get ம் இருக்காது back ம் இருக்காது. நாங்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். இந்த முறைகளில் குழப்படி செய்வதற்கென்றே மது பாபு டீமுக்குள் வந்துவிட்டான் போலிருக்கிறது. 

மீட்டிங் முடிந்த கையோடு Minutes of Meeting என்று மதுபாபு மின்னஞ்சல் அனுப்பிவிடுவான். மேனேஜர் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளை எல்லாம் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டு மேனேஜரின் மேனேஜருக்கு Cc போட்டு அனுப்பத் துவங்கினான். வேறு வழியில்லாமல் அந்தக் கேள்விகளுக்கு மேனேஜர் பதில் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். இதெல்லாம் அவருக்கு அத்தனை உவப்பானதில்லை. அவனை வழிக்கு கொண்டு வருவதற்கான அத்தனை பகீரத பிரயத்தனங்களையும் மேனேஜர் எடுக்கத் துவங்கினார். எதுவும் பலிக்கவில்லை என்பதுதான் சோகம்.

இன்னொரு உபாயமாக மீட்டிங் முடிந்தும் முடியாமலும் மேனேஜரே Minutes of meeting அனுப்பத் துவங்கினார். அவருக்குண்டான கேள்விகளை மட்டும் தவிர்த்துவிட்டு அவரது மின்னஞ்சல் வந்திருக்கும். அவர் விடாக்கொண்டன் என்றால் மதுபாபு கொடாக்கண்டன். Missing Items என்று அவரது கேள்விகளையும் சேர்த்து பதில் அனுப்புவான். இப்படி இரண்டு முறை நடந்தது. கிட்டத்தட்ட மேனேஜரின் நாக்கு வெளித் தள்ளத் துவங்கிவிட்டது. நுரைத் தள்ளாமல் தப்பிப்பாரா என்று நாங்கள் குதூகலிக்கத் துவங்கினோம். ஆனால் அத்தனை பிரச்சினைகளும் எங்கள் தலைமீதுதான் இறங்கியது. தான் அசடு வழிவதை மறைக்க இன்னும் அதிகமாக பேசத் துவங்கினார். தனது கடந்தகால பிரதாபங்களை பட்டியலிடத் துவங்கினார். அவரது அறுப்பு தாங்கமுடியாமல் நாங்கள் இன்னும் அதிகமாக அல்லப்பட்டோம். 

மேனஜருக்கு வந்த சோதனை இதோடு முடியவில்லை. மேனேஜர் குடியிருந்த தெருவிலேயே மதுபாபுவும் குடியேறினான். இதன் பிறகு டீ குடிப்பதாக இருந்தாலும் சரி; மதிய உணவுக்கு செல்வதாக இருந்தாலும் சரி. மதுபாபுவை அழைத்துக் கொண்டுதான் செல்வார். மதுபாபு அவரிடம் சிக்கிக் கொண்டதால் நாங்கள் தப்பித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தோம். மேனேஜரும் மதுபாபுவும் ஒன்றாகவே சுற்றினாலும் மதுபாபு மீது அவருக்கு பிரியம் எதுவும் வந்திருக்கவில்லை. அவன் தன்னுடனேயே இருப்பது ஒருவிதத்தில் நல்லது என்று அவர் நினைத்திருக்கக் கூடும். 

இருந்தாலும் மதுபாபுவிடம் பெரிதாக எந்த மாற்றமுமில்லை. கேள்வி கேட்டுக் கொண்டேதான் இருந்தான். பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் என்னையும் அதிசயமாக மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். அன்றும் வழக்கம் போலவே மேனேஜர்தான் பேசிக் கொண்டிருந்தார். மதுபாபு என்னைப் போல வெறும் “ம்ம்” கொட்டாமல் இடையிடையே பேசிக் கொண்டிருந்தான். மேனேஜர் சொல்வதையெல்லாம் எதிர்த்தும் பேசினான். அவன் பேசுவதையெல்லாம் மேனேஜர் உன்னிப்பாக கேட்டுக் கொண்டார். 

மேனேஜருக்கு அன்றைய தினத்தில் ஒன்பது கிரகங்களும் நீச்சத்தில் இருந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ பெண்களின் உடை பற்றிய பேச்சை துவங்கினார். பெண்கள் மாராப்பு அணிவது தவறென்றும் அது ஆண்களால் உருவாக்கப்பட்ட அடிமைச் சின்னம் என்றும் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எனக்கு திருமணம் ஆகாத பருவம். இன்றைய தினம் கிளுகிளுப்பாக இருக்கும் போலிருக்கிறது என உற்சாகமாகத் துவங்கியிருந்தென். பெண்களின் உடலை போகப்பொருளாக மாற்றுவதற்காகத்தான் பெண்களுக்கு இந்த மாதிரியான உடையை அந்தக் காலத்தில் கொடுத்திருக்கிறார்கள் என்றும் அடிமைத்தனத்தை உடைக்க விரும்பும் பெண்கள் முதலில் மாராப்புகளையும், துப்பட்டாக்களையும் கொளுத்த வேண்டும் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தார். 

இப்பொழுது மதுபாபுவின் ஆட்டம். “அப்படியானால் பெண்கள் மாராப்பு இல்லாமல் வரும் போது ஆண்கள் தவறாக பார்க்கக் கூடாது” என்றான். 

உற்சாகமான மேனேஜர் “exactly! கொஞ்ச நாட்களுக்கு வெறித்துப் பார்ப்பார்கள் ஆனால் போகப் போக சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார். 

நான் வழக்கம் போல “ம்ம்ம்” என்றேன்.

மதுபாபு தொடர்ந்தான் “அப்போ நம் வீட்டு பெண்களுக்கும் அந்தச் சுதந்திரத்தை கொடுக்க வேண்டும்ன்னு சொல்லுறீங்களா?” என்றான். அவன் கொக்கி போடுவது போலவே பட்டது.

“அதைத்தானே சொல்லிட்டு இருக்கேன்” என்று சலித்துக் கொள்வது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டார்.

மேனேஜருக்கு ஒன்பது கிரகங்களும் நீச்சம் என்றேன் அல்லவா? அது பலித்தது. “ஒருவேளை உங்கள் மனைவி துப்பட்டா இல்லாமல் வரும் போது- நீங்கள் குறிப்பிட்ட அந்த கொஞ்ச நாட்களுக்கு வீதியில் இருக்கும் எங்களைப் போன்றவர்கள் வெறித்துப் பார்த்தால் எப்படி எடுத்துக்குவீங்க” என்றான் மதுபாபு.

எனக்கு தலை மீது வெடிகுண்டு விழுந்தது போல இருந்தது. அவருடன் ஒரே வீதியில் இருந்து கொண்டு இப்படியொரு நினைப்போடு சுற்றியிருக்கிறான் போலிருக்கிறது என்று அதிர்ச்சியாகியிருந்தேன். மேனேஜரின் முகம் சுருங்கி, இருண்டு ஒரு வழியாகிவிட்டது. அதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை. பதில் சொல்லவில்லை என்பதைவிடவும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். ஏதோ மழுப்பினார். ஒரு மீட்டிங் இருக்கிறது என்று கிளம்பினார். ஆனால் படு டென்ஷனாகிவிட்டார் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

எனக்கு அப்பொழுது மதுபாபுவிடம் பேசுவதற்கே பயமாக இருந்தது. நானும் அந்த இடத்திலிருந்து கழண்டு கொண்டேன். இந்த அக்கப்போர் நடந்தது பிப்ரவரி மாதத்தில். மார்ச் மாத இறுதியில்தான் appraisal. மேனேஜர் அவனுக்கு குறிவைப்பார் என்று நன்றாகவே தெரியும். ஆனால் மார்ச் 12 ஆம் தேதி வரைக்கும் சரியான காரணம் சிக்கவில்லை. ஆனால் மேனேஜர்கள் நாகபாம்புகள் அல்லவா? 12 ஆம் தேதி அவருக்கும் ஒரு காரணம் சிக்கியது. மதுபாபு செமத்தியாக சிக்கிக் கொண்டான். அதை நாளைக்கோ அல்லது இன்னொரு நாளைக்கோ சொல்கிறேன்.

Mar 21, 2013

புதுமாப்பிள்ளையின் முதல் சில நாட்கள்


கல்யாணம் முடிந்து பன்னிரெண்டு நாட்கள்தான் ஆகியிருக்கிறது. எனக்கு இல்லை- ரவிக்கு. அவனுக்கு கல்யாணம் ஆனாலும் ஆனது பன்னிரெண்டு நாட்களாகவே மாமனார் வீட்டில்தான் சுகவாசம். பெயரளவில்தான் சுகவாசம் உண்மையில் ரவி டார்ச்சராகிக் கிடக்கிறான். வீட்டை விட்டு அவனை தனியாக வெளியே விடுவதில்லை. கவிதாவுடன் வேண்டுமானால் வெளியே செல்லலாமாம் ஆனால் ஆறு மணிக்குள் வீட்டிற்கு திரும்பிவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். சினிமாவுக்கு போவதென்றாலும் கூட ‘மேட்னி ஷோ’போகச் சொல்லி சாவடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியே போக வேண்டாம் என்று சொன்னால் கூட ரவி ஏற்றுக் கொள்வான். ஆனால் அதற்கு ஒரு டப்பா காரணம் சொல்கிறார்கள். புதுமாப்பிள்ளையிடம் மாலை வாசம் அடிக்குமாம்- கல்யாணத்தின் போது அணிந்திருந்த பூமாலையின் வாசம்தான். பொழுது சாய்ந்த பிறகு இந்த வாசத்தோடு வெளியே சென்றால் காத்து கருப்பு பிடித்துக் கொள்ளும் என்று சொல்லி கடுப்பேற்றுகிறார்கள். பதினைந்து நாட்களுக்கு பிறகு வேண்டுமானால் வெளியே செல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். அப்பொழுது வாசம் போய்விடும் போலிருக்கிறது. மாமியார் ரவியிடம் பேச்சுக் கொடுத்துக் கூட பேசுவதில்லை. மாமனார்தான் இந்த அழிச்சாட்டியத்தை செய்து கொண்டிருக்கிறார். இந்த ரூல்ஸையெல்லாம் கவிதாவிடம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிடுகிறார். ரவிக்கு கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட் மாதிரிதான்.

பன்னிரெண்டு நாளும் இரவில் என்ன செய்கிறான் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் பகலில் நடக்கும் ஒரே உருப்படியான காரியம் சோறு தின்பதுதான். மூன்று வேளையும் விதவிதமான சோறாக்கி போடுகிறார்கள். அதில் நிறைய ஐட்டங்களை ரவி இப்பொழுதுதான் முதன்முதலாக கண்ணிலேயே பார்க்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சோறு மட்டும்  இல்லை நேராநேரத்துக்கு காபி, டீ, மிக்சர், போண்டா என்று மாமியார் வீட்டில் படம் காட்டுகிறார்கள். 

முதலில் ரவியிடம் பேசுவதற்கே வெட்கப்பட்ட கவிதா கடந்த ஐந்தாறு நாட்களாக அவனுக்காக உருகுகிறாள். அவனது இலையை பதார்த்தங்களால் நிரப்புவதிலிருந்தே அவன் மீதான பிரியத்தை புரிந்து கொள்ள முடியும். ரவியின் அருகாமையும் அரவணைப்பும் அவளுக்கு வேறொரு உலகத்தை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தது. ரவியும் ஒன்றும் சும்மா இல்லை. மினுமினுக்கும் ப்ரேஸ்லெட்டும், மைனர் செயினும், மோதிரமுமாக சுற்றுகிறான். எல்லாமே கல்யாணத்திற்கு மாமனார் வீட்டில் செய்து கொடுத்திருக்கிறார்கள். மடமடப்பான புது லுங்கி, வெளுப்பான பனியன், மழித்த முகம் என்று ஆளே கிட்டத்தட்ட மாறிவிட்டான். வெளியில் போகாமல் இருப்பதைக் கூட சமாளித்துவிடலாம். மச்சினிச்சிகளைத்தான் சமாளிக்க முடிவதில்லை. வெயிட்...வெயிட்..குண்டக்க மண்டக்க நினைக்காதீர்கள்.

மச்சினிகள் செய்யும் அட்டகாசங்களை ரவியால் அடக்க முடிவதில்லை என்றுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நேற்றிரவு கவிதாவின் சித்தி மகள் வந்திருந்தாள். அவள் பெயர் ரவிக்கு ஞாபகத்தில் இல்லை. கல்லூரியில் படிக்கிறாளாம். நேற்று ஏதோ பேசிக் கொண்டிருந்தவள் “மச்சான் முகம் இப்படி உப்பிக் கெடக்கு, ராத்திரியில தூக்கமில்லையோ” என்று கிண்டலடிக்க ரவிக்கு தூக்கி வாரிப்போட்டது. இப்படி கிண்டலை எதிர்கொள்வது ரவிக்கு புதிது. அதுவும் பெண்களிடமிருந்து தாக்குதல் என்பதால் திகிலடித்துக் கிடந்தான். கவிதாவை அழைத்தான். தனது தங்கைகளிடமிருந்து அவனை காப்பாற்றிவிடுவாள் என்று நம்பித்தான் அழைத்தாள். அவளிடமும் “அக்கா, மச்சானுக்கு பாதாமும் முந்திரியும் கொடு. உனக்குத்தான் பிரையோஜனப்படும்” என்றாள்.  ஷாக் ஆன கவிதா அந்த இடத்திலிருந்து வெட்கப்பட்டவளாக ஓடிவிட்டாள். இப்படித்தான் ரவி திணறிக் கொண்டிருக்கிறான்.

பன்னிரெண்டு நாட்கள் முடிந்துவிட்டது. இதற்கு மேல் தாங்க முடியாது என இன்று காலையில்தான் மாமனார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு மனைவியோடு கிளம்புவதாக முடிவு செய்துவிட்டான். இன்னும் மூன்று நாட்கள் ஆகட்டும் என்ற பேச்சுகளை நாசூக்காக தவிர்த்தான். ரவியின் ஊருக்கும் மாமனார் ஊருக்கும் அதிகம் தொலைவு இல்லை. ரவியின் மாமனார் எந்த ஊர் என்றே சொல்லவில்லை பார்த்தீர்களா? புளியம்பட்டி தெரியுமா?. அன்னூருக்கும் அவினாசிக்கும் இடையில் இருக்கும் அதே புன்செய் புளியம்பட்டிதான். அந்த ஊருக்கு பக்கத்திலிருக்கும் கவுண்டம்பாளையம்தான் ரவிக்கு சொந்த ஊர். இந்த ஊர் ரொம்ப ஃபேமஸ். நடிகர் சிவக்குமார் இருக்கிறாரல்லவா? அவரின் மனைவி இந்த ஊர்க்காரர்தான். சூர்யாவின் அமத்தா, அப்பிச்சியெல்லாம் இன்னமும் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியவில்லை. சூர்யா முன்னொரு காலத்தில் சரவணனாக ட்ரவுசர் போட்டு திரிந்த கதைகளை ரவியின் அம்மா சொல்லியிருக்கிறார். ஒரு காலத்தில் இந்த ஊரில் புகையிலை வியாபாரம் கொடிகட்டிக் கொண்டிருந்தது. ரவியின் அப்பா கூட புகையிலை வியாபாரிதான். இப்பொழுதெல்லாம் மழையும் இல்லை தண்ணியும் இல்லை. அந்த ஊரில் இருந்துதான் ரவி தினமும் புளியம்பட்டி மில்லுக்கு வேலைக்கு போய்வருகிறான். 

ரவியின் மாமனார் கொஞ்சம் வசதியானவர். புளியம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஹோட்டல் வைத்திருக்கிறார். ரவி அவ்வப்போது இந்த ஹோட்டலுக்கு சாப்பிட வருவதுண்டு. தனது சாதிக்காரன் என்று தெரிந்து கொண்ட பிறகு மாமனாருக்கு ரவி மீது சற்று கவனம் அதிகம். கெட்டபழக்கம் இல்லாத பையன் என்பதால் வசதி குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று ரவிக்கு தன் மகளை கட்டி வைத்துவிட்டார். ரவியின் மாமியாருக்கு இந்த சம்பந்தத்தில் ஆரம்பத்தில் விருப்பமில்லைதான். ஆனால் ரவிக்கு கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை. அப்பாவும் எப்பவோ போய் சேர்ந்துவிட்டார். அம்மா மட்டும்தான். பிக்கல் பிடுங்கலில்லாத குடும்பம் என்று அவரும் சம்மதித்துவிட்டார்.

கல்யாணத்திற்கு பிறகு மாப்பிள்ளையையும் கூடவே வைத்துக் கொண்டு ஹோட்டல் பொறுப்புகளை ரவியிடம் கொடுத்துவிட விட வேண்டும் என்று மாமனார் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் திருமணம் ஆனதும் ஆகாததுமாகச் சொன்னால் மாப்பிள்ளை வேறு மாதிரி எடுத்துக் கொள்ளக் கூடும் என்று அமைதியாக இருந்துவிட்டார். கொஞ்ச நாட்களுக்கு அதே மில் வேலைக்கு போய் வந்தால் தப்பில்லை என்று நினைத்திருந்தார். ஆனால் ரவியின் பைக்தான் மாமனாரின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. அரதப்பழசான அதை தனது மருமகன் ஓட்டுவதில் அவருக்கு விருப்பமில்லை. மாற்றிக் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

ரவியும், கவிதாவும் கவுண்டம்பாளையத்திற்கு கிளம்பினார்கள். கவிதா அடக்கமாட்டாமல் அழுதாள். அவளது அம்மாதான் சமாதானப்படுத்தினார். ரவியின் மாமனாருக்கும் மகளை பிரிவது குறித்து வருத்தம்தான். தனது கவனத்தை சிதறடிக்கும் விதமாக ரவியிடம் பேச்சுக் கொடுத்தார். “ஊருக்கு போயிட்டு ஒரு நாள் சாயந்திரமா புளியம்பட்டி வாங்க மாப்ள. ஒரு பைக் புக் பண்ணிடலாம்” என்றார். ரவி தலையாட்டிக் கொண்டான். ரவிக்கு அந்த வார்த்தைகள் உற்சாகமானதாக இருந்தன. தனது செகண்ட் ஹேண்ட் பைக்கை இனிமேல் ஓட்ட வேண்டியதில்லை என்பது ஆசுவாசமாக இருந்தது.

பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும்போதே கவிதாவிடம் “இன்னைக்கு சாயந்திரமே புளியம்பட்டி போய்ட்டு வரட்டுமா?” என்றான். கவிதாவுக்கு அதில் மறுப்பு சொல்ல எதுவுமில்லை. வீட்டில் ரவியின்  அம்மாதான் இரண்டொரு நாள் கழித்து போகலாம் என்றார். ஆனால் ரவிக்கு இருப்பு கொள்ளவில்லை.  தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அடுத்த அரை மணி நேரத்தில் மாமனாரின் ஹோட்டலில் இருந்தான். அந்தச் சமயத்தில் மாமனார் வெளியே சென்றிருந்தார். அவர் வரும் வரைக்கும் தந்தி பேப்பரை புரட்டிக் கொண்டிருந்தான். கள்ளக்காதல் செய்திகளால் பக்கங்கள் நிரம்பியிருந்தன. அரை மணி நேரம் இருக்கும். மாமனார் வந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டான். அவரும் தூரத்திலேயே இவனது பைக் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டார்.

இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டார்கள். “போய் பைக் புக் பண்ணிடலாங்களா?” என்றார். 

ஃபார்மாலிட்டிக்காக “இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்றான். ஆனால் இன்றே செய்துவிட வேண்டும் என்று உள்ளூர ஆசைப்பட்டான்.

“வந்ததது வந்துட்டீங்க. அப்புறம் எதுக்கு தவணை” என்று சொல்லி அழைத்துச் சென்றார்.

ஏற்கனவே பைக் பற்றியெல்லாம் முடிவு செய்து வைத்திருந்தான். நீல நிற சூப்பர் ஸ்பெண்டர் புக் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். ஹீரோ ஷோரூமுக்கு வெளியிலேயே பூக்கடை இருந்தது. தனது மகளுக்கு ஒரு முழம் மல்லிகைப்பூவை வாங்கி ரவியிடம் கொடுத்துவிட்டு சிரித்தார். அதை சிரிப்பு என்று சொல்ல முடியாது. முறுவல் எனலாம்.

“கவிதாவ பார்த்துக்குங்க மாப்ள. பொசுக்குன்னு ஏதாச்சும் பேசிப் போடாதீங்க” என்ற போது ரவியின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். அது ஒருவித கெஞ்சலான தொனி. அவரது கைகளில் ஈரப்பதம் இருந்தது. ஈரப்பதத்தையும் மிஞ்சிய கதகதப்பும் இருந்தது. ரவிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பூவை பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துவிட்டு “கவலைப்படாதீங்க மாமா” என்றான். அவருக்கு அந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தது. பேச்சை மாற்ற விரும்பியிருப்பார் போலிருக்கிறது.

“டீ குடிக்கலாங்களா?” என்றார்.

“வேண்டாங்க மாமா. இப்பவே லேட்டாகிடுச்சு” என்றான். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். சாயுங்காலத்தில் அவன் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறான் என்ற பிரக்ஞை வந்தவராய் அவனை வீட்டிற்கு போகச் சொல்லி அறிவுறுத்தினார். மாமனாரை அவரது ஹோட்டலில் விட்டுவிட்டு ரவி உடனே கிளம்பிவிட்டான். இன்னும் இருபது நிமிடங்களுக்குள் ஊருக்கு போய்விடுவான். மல்லிகைப்பூ வாசனை அவனது முகத்தில் வீசிக் கொண்டிருந்தது.

புளியம்பட்டியிலிருந்து கவுண்டம்பாளையம் செல்வதற்கு நால்ரோடு தாண்டித்தான் போக வேண்டும். ரவி இடது பக்கம் திரும்ப வேண்டும். திரும்பவதற்கு பதிலாக கோயமுத்தூர் சாலையில் நேராக போய்க் கொண்டிருந்தான். காரணமாகத்தான். அந்தப்பக்கம் ரங்கநாதன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்தே பல காலம் ஆகிவிட்டது. பேசிவிட்டு போய்விடலாம் என்றுதான் நினைத்தான். ரங்கநாதனும் இவனை பார்த்துவிட்டு கையசைத்தான். ரவி நால்ரோட்டிலிருந்து ஐம்பது மீட்டர் கூட தாண்டியிருக்க மாட்டான். அவிநாசியிலிருந்து பால் வேன் ஒன்று படு வேகமாக வந்து கொண்டிருந்தது. சாலையில் இருக்கும் தடுப்பரண்களை மோதவிருக்கும் சமயத்தில்தான் அதை தவிர்ப்பதற்காக டிரைவர் ப்ரேக்கை அழுத்தினார். அது எந்த பலனையும் தரவில்லை. இழுத்துக் கொண்டு சென்ற வேன் ரவியின் பைக் மீது மோதியது. அடித்த வேகத்தில் இரண்டு அடி உயரத்துக்கு வண்டியிலிருந்து மேலெழும்பிய ரவி கீழெ விழுந்தான். ரங்கநாதன் ஓடி வந்தான். ரவி பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான். காதில் ரத்தம் வரத் துவங்கியது. ரங்கநாதன் பதறிக் கொண்டிருந்தான். பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் இருந்த பூ சிதறிக்கிடந்தது என்று சொன்னால் ‘க்ளிஷே’வாகத்தான் இருக்கும். ஆனால் அப்படித்தான் கிடந்தது. 

கவுண்டம்பாளையத்திற்கு தகவல் போவதற்கு இன்னும் சில நிமிடங்களாவது ஆகும். ரவியின் அம்மா சாமி படங்களுக்கு முன்பு விளக்கு பற்ற வைத்துக் கொண்டிருந்தார். கவிதா சட்னி அரைப்பதற்கு அம்மிக்கல்லைக் கழுவிக் கொண்டிருந்தாள்.
                                            *************

பிற கதைகளை வாசிக்க: மின்னல் கதைகள்

Mar 20, 2013

கங்காணியும் அனுஷ்காவும்இன்றைக்கு appraisal. பரதேசி படத்தில் கங்காணி கணக்கு முடிப்பது போல மேனேஜர் அழைத்து கணக்கு முடிப்பார். இந்த மீட்டிங்கில் என்ன பேசுவார் என்று நன்றாகவே தெரியும். “நீ தூள் டக்கரான வேலைக்காரன்; அப்பாடக்கரான அறிவாளி” என்றெல்லாம் அளப்பார். கேட்க கேட்க புல்லரிக்கும். புல்லரிப்பு தாங்க முடியாமல் சொறியத் துவங்கும் போது “ஆனா பாரு...இந்த வருஷம் கம்பெனியோட லாபம் சரியில்லை அதனால இவ்வளவுதான் கொடுக்க முடியும்” என்று கிள்ளிக் கொடுப்பார். கங்காணி பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு உள்ளே போகும் காட்சி மனத்திரையில் சோக கீதம் வாசிக்கும். 

ஒருவனுக்கு தூக்குதண்டனை கொடுப்பதாக அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில்  ‘தூக்குத் தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனையாக மாற்றிவிடுகிறோம்’ என்று சொன்னால் ஆயுள் தண்டனை கிடைத்துவிட்டதே என்னும் சோகத்தைவிட தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற மகிழ்ச்சிதானே அவனுக்கு அதிகமாக இருக்கும். அப்படித்தான் இன்றைக்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் காரணமாக appraisal இல் என்ன நடந்தாலும் சரி என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். ஒருவேளை மாட்டியிருந்தால் கடந்த வருடம் நான் சம்பாதித்தது மொத்தத்தையும் நஷ்ட ஈடாக கொடுத்திருந்தாலும் கட்டுபடியாகியிருக்காது. ஆனால் ஆண்டவன் நல்லவன் பக்கம் இருப்பான் போலிருக்கிறது. தப்பித்துவிட்டேன்.

‘மிர்ச்சி’ என்றொரு தெலுங்குப் படம் வந்திருக்கிறது. பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அது யாருக்கு வேண்டும்? அனுஷ்காதான் கதாநாயகி. அதுதான் முக்கியம். அவுட்டர் ரிங் ரோட்டிலிருக்கும் பெங்களூர் செண்ட்ரல் மாலுக்கு பக்கத்தில் ஒரு சந்து உண்டு. சந்தில் நுழைந்தால் Dead end வரும். இந்த இடம்தான் ஸ்பாட். அங்கிருந்து வலது பக்கமாக திரும்பும் இடத்தில் இரு குட்டிச்சுவர் இருக்கிறது. அந்தச் சுவரில் அனுஷ்காவின் குத்தாட்டப் போஸ்டர் ஒன்றை ஒட்டி கண்கள் மொத்தத்தையும் அந்த போஸ்டரில் அடமானம் வைக்கச் செய்துவிட்டார்கள். அனுஷ்காவின் முகத்தைப் பார்த்துவிட்டு “இந்தப் பொண்ணு எவ்வளவு எனர்ஜெடிக்கா இருக்கா பாருடா மணி” என்றுதான் நினைத்தேன். வேறெதுவும் நினைக்கவில்லை என்று சொன்னால் அதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.  அனுஷ்காவோ தமன்னாவோ- மனதுக்குள் வந்துவிட்டால் இடத்தை காலி செய்ய சில நிமிடங்கள் தேவைப்படுமல்லவா? அந்த சில நிமிடங்களில்தான் என்ன வேண்டுமானாலும் நடந்து தொலையும்.

இந்த சந்தில்தான் என் பைக்குக்கு முன்பாக ஒரு வெள்ளை நிற ஆடி கார் சென்று கொண்டிருந்தது. A4 மாடல். இந்த கார் மீது எனக்கு எப்பவுமே ஒரு கண் உண்டு. இருபத்தொன்பது லட்ச ரூபாயாம். அடங்கொக்கமக்கா!

இயக்குநர் ஷங்கர் முன்பொரு காலத்தில் உதவி இயக்குநராக இருந்த போது “ஒரு மாருதி 800 காரும், தி.நகரில் ஒரு ப்ளாட்டும் வாங்க வேண்டும்” என்று கனவு கண்டதாக சமீபத்தில் ஏதோ ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவரால் இப்பொழுது நினைத்தால் மாருதி 800 என்ன? ரோல்ஸ் ராய்ஸே வாங்க முடியும். எனக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. ஆல்டோவோ, ரோல்ஸ்ராய்ஸோ- கனவுதானே? பெரிய ரேஞ்சிலேயே இருக்கட்டும் என்று அவ்வப்போது ஆடியுடன் டூயட் பாடுவதுண்டு. அந்த ஆடி கார்தான் முன்னால் போய்க் கொண்டிருந்தது. 

பெங்களூர் சாலைகளில் சில சல்லிப்பயல்கள் வண்டி ஓட்டுவார்கள். அவர்களிடம் லைசென்ஸ் இருக்காது ஆர்.சி புத்தகம் இருக்காது என்பதெல்லாம் வேறு கதை- வண்டியில் ப்ரேக்கே இருக்காது என்பதுதான் முக்கியம். இந்த வண்டியை வைத்துத்தான் வீலிங் அடிப்பார்கள். பின்னால் சக்கரம் மட்டும் நிலத்தில் இருக்கும். முன்பக்கச் சக்கரம் அந்தரத்தில் பறக்கும். ப்ரேக்கே இல்லாத வண்டியில் சைலன்சர் மட்டும் இருக்குமா? அதுவும் இருக்காது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சத்தம் கேட்கும். அப்படி ஒரு சல்லிப்பயல் வெகு வேகமாக முறுக்கிக் கொண்டு வந்தான். இந்த ட்ராபிக்கில் இப்படி சத்தம் எழுப்பிக் கொண்டு வருகிறானே என்று நினைத்து அனுஷ்காவை கோட்டை விட்டிருந்தேன். சில வினாடிகள்தான் இருக்கும். நெருங்கிவிட்டான். எனது வண்டிக்கு பக்கமாகத்தான் கொஞ்சம் இடம் இருந்தது என்பதால் கிட்டத்தட்ட உரசுமளவிற்கு வந்துவிட்டான். அமைதியாக நின்றிருக்கலாம். கொஞ்சம் நகர்ந்து கொள்ளலாம் என்று ஆக்ஸிலேட்டரை மெதுவாக முறுக்கினேன். வண்டி நகரத்துவங்கவும் அவன் எனது வண்டியின் முன் சக்கரத்தை முட்டவும் சரியாக இருந்தது. 

“டொப்”.கதை முடிந்தது. எனது வண்டியின் பம்பர் ஆடியின் பின்பக்கமாக இடித்துவிட்டது. அனுஷ்கா, ஆடியெல்லாம் தாண்டி இப்பொழுது ஒரு வார்த்தை ஞாபகத்திற்கு வந்தது “செத்தேன்”. ஆண்டவன் என் பக்கமாக இருந்தான் என்று சொன்னேன் அல்லவா? அந்த சல்லிப்பயலின் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்திருப்பான் போலிருக்கிறது. சல்லிப்பயலும் தடுமாறி ஆடி கார் மீது ஒரு கீறலை அழுந்தப் போட்டுவிட்டான். போட்டவன் போட்டவன்தான். வண்டிகளுக்கிடையில் இருந்த சந்து பொந்துகளில் நுழைந்து அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தான். என்னால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. 

ஆடி கார்காரன் கண்ணாடியை இறக்கிவிட்டு கத்தத் துவங்கியிருந்தான். ஆடி கார்காரனைத்தான் எல்லோரும் பாக்கிறார்களே தவிர சல்லிப்பயலை ஒரு பயல் கூட தடுக்கவில்லை. ஆடிக்காரனால் கதவை திறக்க முடியவில்லை. அத்தனை வாகன நெருக்கம். திக்கித் திணறி இறங்கியபோது நான் பயத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டிருந்தேன். ஆஜானுபாகுவான ஆளாக இருந்தான். காரை பார்த்துவிட்டு தலை மீது கை வைத்துக் கொண்டான். பாவமாக இருந்தது. ஒருவேளை இரண்டு கீறலையும் நான் போட்டதாக அவன் நினைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. வாலண்டியராக சென்று “இந்த ஒரு இடியை நான் இடித்தேன்; இன்னொன்றுதான் அவன் இடித்தான்” என்று சொல்லுமளவுக்கு நான் புத்தனுமில்லை. அந்த ஒரு கீறலுக்கான செலவைக் கொடுத்தாலும் கூட அடுத்த மாதம் பைசா இல்லாமல் பைக்குக்கு பெட்ரோல் அடிக்கக் கூட மனைவியிடம் கடன் வாங்க வேண்டும். என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.

தலையில் கை வைத்தபடியே “ரெண்டு இடி இடிச்சிட்டு போய்ட்டான்..கூபேகாடு” என்றான். அவன் சொன்னதை கவனித்தீர்களா? இரண்டு கீறலையும் சல்லிப்பயல் போட்டுவிட்டதாக நினைத்திருக்கிறான். தப்பித்தாகிவிட்டது. மூச்சை இழுத்து விட்டுக் கொண்டேன். கிட்டத்தட்ட விசில் அடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அடக்கிக் கொண்டேன். அவன் என்னைப் பார்த்துதான் பேசிக் கொண்டிருந்தான். ஏதாவது பேச வேண்டுமல்லவா?

“நெம்பரை கவனிச்சீங்களா சார்?” என்றேன். அந்த  வண்டியில் நெம்பர் ப்ளேட்டே இல்லை என்று எனக்குத் தெரியும் என்றாலும் வேறு என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை. முறைத்தார். இதற்கு மேல் நின்றால் ஆபத்து என்று தோன்றியது. அவர் வண்டியை ஓரம் கட்டிவிட்டு யாருக்கோ போன் செய்யத் துவங்கினார். நான் நைஸாக கம்பி நீட்டத் துவங்கினேன்.

வண்டி ஓட்டும் போது “பாவம் அந்த வண்டிக்காரன்” என்று தோன்றியது. ஆனாலும் “சந்து பொந்துக்குள்ளெல்லாம் எதற்கு ஆடி காரை ஓட்டுகிறான் அப்படித்தான் ஆகும்” என்றும் தோன்றியது. இந்த லாஜிக்கல் ஆர்க்யூமெண்ட் இப்போ தேவையா என்று நினைத்த போது வேறொரு இடத்தில் அதே மிர்ச்சி போஸ்டர் அதே அனுஷ்கா. கண்களை திருப்பத்தான் நினைத்தேன். ஆனால் முடியவில்லை. பி.எம்.டபிள்யூவோ, ஆடியோ குறுக்கே வராமல் இருக்க வேண்டும் என்றுதான் நாளையிலிருந்து சாமி கும்பிட வேண்டும் போலிருக்கிறது.

பரதேசி -பார்வையாளர் குறிப்பு குறித்தான கடிதம்

பரதேசி திரைப்படத்திற்கு எழுதியிருந்த  ‘பார்வையாளர் குறிப்பு’க்கு சில மின்னஞ்சல்கள் வந்திருந்தன. இந்தக் குறிப்பு குறித்து முகநூலில் சில நண்பர்கள் தெரிவித்த அதே கருத்துகளையொட்டி ஜூலிஸ்டன் என்ற நண்பரும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். முகநூலில் தெரிவித்த அதே பதிலை அவருக்கும் அனுப்பியிருந்தேன். அந்த மின்னஞ்சலும் பதிலும்.

 [பாருடா! கடிதங்களை பதிவிட ஆரம்பித்துவிட்டான் என்று டென்ஷனாகிவிட மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :) ]

                                                          ********


வணக்கம் திரு. மணிகண்டன்,

சென்சார் சான்றிதல் காட்டியவுடன் வரும் முதல் கார்டே "Inspired by the novel Red Tea by PH Daniel " அப்படினு தான் வரும்.  பாலா எந்த எடத்திலையும் கதை அவருடையதுனு போடல.  அதுவும் இல்லமல் Red Tea  நாவல அப்படியே எடுக்குறேனும் சொல்லல. வசனம் நஞ்சில்நாடானு தான் வரும்.  "A bala's flim"  மட்டும் போடுவாங்க. அதில் தப்பில்லை என்று நினைக்குறேன். 

அலுவலகம் மற்றும் வீட்டு தொல்லைகளிலிருந்து விடுபட "Relaxation" க்கு செல்ல இந்த படம் மட்டுமல்ல உலகப்படன்னு சொல்ல படுற எந்த படம்மும் சரி இருக்காது.  

குறிப்பு:  நான் உங்க பிளாக்கை தொடர்ந்து வாசிப்பவன். இப்போது தான் முதன்முதல் தொடர்புகொள்கிறேன்.

-ஜுலிஸ்டன்.

                                                                    ---அன்புள்ள ஜூலிஸ்டன்,

வணக்கம்.

Relaxationக்காக படத்திற்கு போவது என்று குறிப்பிட்டதில் நான்குபாடல்கள், இரண்டு சண்டைக்காட்சிகள், கொஞ்சம் ஜோக் என்ற மிக்ஸரை எதிர்பார்த்து இல்லை. படம் எதைப் பற்றி பேசப் போகிறது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததுதானே. அதுவும் பாலா என்றால் அதன் வீர்யம் எப்படியிருக்கும் என்பதையும் புரிந்து வைத்திருந்தேன். 

ஜாலியான படமா அல்லது சோகமான படமா என்பதில் Relaxation இல்லை என்று நினைக்கிறேன். எந்த சாராம்சமத்தை உடைய படமாக இருப்பினும் சினிமா என்ற அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதைவிட உக்கிரமான சித்தரிப்புகளை உடைய “எரியும் பனிக்காடு” நாவல் மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும் போது, அதை மிஞ்சியிருக்க வேண்டிய சினிமா ஊடகத்தில் படம் டார்ச்சராக இருக்கிறது என்ற அடிப்படைதான் நான் எழுதிய குறிப்பு.

Red Tea என்ற நாவலின் பெயரைக் குறிப்பிட்டதை நான் கவனிக்கவில்லை. ஒருவேளை நான் மிஸ் செய்திருக்கலாம். அப்படியிருப்பின் அந்த ஒரு வரியை நான் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.இருப்பினும் முருகவேளுக்கு தரப்படாத கிரெடிட்(அவர் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்களா?), டாக்டரை கிறித்துவ மத போதகராக மட்டும் ப்ரொஜக்ட் செய்தது போன்றவை மீதான விமர்சனம் அப்படியேதான் இருக்கும்.

நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி. தொடர்ந்து தொடர்பிலிருங்கள்.

எனது பதில் திருப்தியளிக்கவில்லை என்றாலும் கூட தெரியப்படுத்துங்கள்.

அன்புடன்,
மணிகண்டன்.