Feb 7, 2013

சாரு ஜெயமோகன் ஆட்டோக்காரன்


ஒவ்வொரு முறையும் பைக் மூலமாகத்தான் விபத்து நிகழ்ந்திருக்கிறது. ஆகவே இந்த முறை நடந்த ‘பைக் இல்லா’விபத்து ஆச்சரியமானதாக இருக்கிறது. விபத்து நடந்தது எனக்குத்தான். அதனால் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நிகழ்ந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. விபத்து என்றால் தலை நசுங்கவில்லை ஆனால் கையில் அடிபட்டிருக்கிறது. 

- இப்படி பிட் பிட்டாக பில்ட் அப் கொடுப்பதை நிறுத்திவிட்டு மொத்தக் கதையையும் சொல்லிவிடுகிறேன்.

ஒரு விழாவிற்காக திங்கட்கிழமை மாலை சிவகாசி கிளம்பியிருக்க வேண்டும். அலுவலகத்திலிருந்து நேராக பஸ் பிடித்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்ததால் பைக்கை வீட்டிலேயே நிறுத்திவிட்டேன். டவுன் பஸ் பிடித்து அலுவலகம் சென்றுவிட்டு அங்கிருந்து மாலையில் சிவகாசிக்கு பஸ் ஏறுவதாக ப்ளான். இப்பொழுதெல்லாம் சிவகாசி என்றால் பட்டாசு தொழிற்சாலை ஞாபகத்திற்கே வருவதில்லை. பேரரசுவும், விஜய்யும்தான் மனக்கண்ணில் தோன்றி படம் காட்டுகிறார்கள். விஜய்யை ஏற்றுக் கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை. பேரரசு இருக்கிறார் பாருங்கள். பயங்கரம்ம்ம்ம்ம். 

பெங்களூரில் டவுன்பஸ்ஸில் செல்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். சிவப்பு நிறங்களில் திரியும் ஏ.சி.பேருந்தில் அமருவதற்கு இடம் கிடைத்து விட்டால் போதும். அதன் மெல்லிய குலுங்கலும் அழகான அலட்டலும் இருக்கிறதே- சொர்க்கரதம் தோற்றுவிடும். எங்கள் ஊரில் இறந்து போனவர்களை இழுத்துச் செல்லும் சக்கர வண்டியில் சொர்க்க ரதம் என்று எழுதி வைத்திருப்பார்கள். அந்த சொர்க்கரதம் இல்லை. உண்மையிலேயே பெங்களூரில் டவுன் பஸ்களை அற்புதமாக பராமரிக்கிறார்கள். டிக்கெட் விலைதான் அதிகம்.

பொம்மனஹள்ளி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது ஒரு ஆட்டோக்காரர் அழைத்தார். என்னுடைய கெட்ட நேரம் ‘ஆட்டோ வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன். ஆட்டோவில் அலுவலகத்திற்குச் சென்றால் நூற்றைம்பது ரூபாய்க்கு குறைவில்லாமல் அழ வேண்டும். ஒரு நாள் அலுவலகம் போவதற்கு அவ்வளவு செலவு செய்வது டூ மச் என்று உள்ளுக்குள் அலாரம் அடித்தது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பார்க்கும் அவருக்கு நான் ஒரு ஜூஜூபி மேட்டர். முகக்குறிப்பை வைத்தே கூட ‘இவன் வர மாட்டான்’ என்று அவர் முடிவு செய்திருக்கக் கூடும். ஆட்டோவை ஓரமாக நிறுத்திக் கொண்டார். வேறு கிராக்கி வரும் வரையிலும் அல்லது ட்ராபிக் போலீஸ்காரர் துரத்தும் வரைக்கும் அந்த இடத்தில்தான் நின்று கொண்டிருப்பார். 

இரண்டு ஏ.சி. பேருந்துகள் வரிசையாக வந்தன. ஆனால் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி இத்தனை கூட்டத்தில் நசுங்க வேண்டியதில்லை என அடுத்த பேருந்துக்கு காத்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் வரை நிற்க வேண்டியதாக இருந்தது. இந்த இடைவெளியில் இன்னும் இரண்டு பேரை ஆட்டோக்காரர் அழைத்தார். அவருக்கும் கெட்ட நேரம் போலிருக்கிறது. யாரும் மசியவில்லை. 

ஏ.சி பேருந்துகளை விட்டுவிட்ட பிறகு மூன்றாவதாக ஒரு சாதாரண பேருந்து வந்தது. அதிலும் கூட்டம் அதிகம்தான். கூட்டம் கூட பிரச்சினையில்லை. ஆனால் எனது வெள்ளைச் சட்டையை நினைத்தால்தான் பாவமாக இருந்தது. ‘அழுக்கு நல்லது’ என்ற விளம்பரத்தை எடுத்தவன் கையில் சிக்கினால் கழுத்து அடியாக அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஏறுவதற்கு எத்தனிக்கத் துவங்கினேன். 

கூட்டமான பேருந்தில் ஏறுவதும் ஒரு கலைதான். ஆளாளுக்கு ஒரு Strategy வைத்திருப்பார்கள். நான் முதலில் ஆர்வ மிகுதி கேஸ்களை அனுமதித்துவிட்டேன். அதன் பிறகாக நமக்கு பின்புறமாக சிலர் இருக்கும் போதே ஏறிக் கொள்வதுதான் நல்லது என நம்பிக்கை உண்டு. நமக்கு பின்பாக ஏறும் அவர்கள் நமக்கு பாதுகாப்பு அரணாக நின்று கொள்வார்கள் என்ற நப்பாசைதான். இந்த Strategy களை எப்பொழுதுமே செயல்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால் திங்கட்கிழமை செயல்படுத்த முடிந்தது. வீர பிரதாபங்களுக்குப் பிறகு என்னை பேருந்துக்குள் நுழைத்து முதல்படியில் நின்று கொண்டிருந்தேன். பாதுகாப்பாக அரணாக நிற்பார்கள் என்று நான் நம்பியவர்களில் ஒருவர் சதிகாரராகிவிட்டார். முதல் படியில் நின்றிருந்த என் தோள் மீது கை வைத்து ஏற முயன்றார். அவர் கிட்டத்தட்ட தொண்ணூறு கிலோ எடை இருக்கக் கூடும். எனது அறுபத்தைந்து கிலோ உடம்பால் தாங்க முடியவில்லை. பிடிமானமும் எதுவும் இல்லை. விழுந்து கொண்டிருப்பதை தெளிவாக உணர முடிந்தது. ஆனால் தப்பிக்கத்தான் முடியவில்லை. 

கீழே விழுந்த சில வினாடிகளில் பேருந்து என்னைத் தாண்டியிருந்தது. டிரைவர் நான் கீழே விழுந்ததை பார்த்தாரா என்று தெரியவில்லை. எப்படியோ சக்கரத்தை மேலே ஏற்றாமல் ஓட்டிச் சென்று புண்ணியத்தை தேடிக் கொண்டார். பேருந்தைத்தான் காணவில்லை என்றால் தொண்ணூறுகிலோ வாலாவையும் காணவில்லை. என்னைக் கீழே தள்ளிவிட்டு அவர் பேருந்தில் இடம் பிடித்துக் கொண்டார் போலிருக்கிறது. Survival of the fittest.

கீழே இருந்து உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. சுற்றிலும் நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் என்னைத் தூக்கினார்கள். கையில் கடும் வலியாக இருந்தது.  யாரோ ஒருவர் கையைப் பிடித்தே தூக்கினார். தமிழில் ஏதோ கத்தினேன். புரியவில்லை போலிருக்கிறது. திங்கட்கிழமை அதுவும் தமது வேலைகளை விட்டுவிட்டு தூக்கிவிடுவதே பெரிய விஷயம்- அவர்களைப் பார்த்து கத்துவது புண்ணியத்திற்கு வந்த மாட்டை பல்லைப் பிடித்து பார்ப்பது போலத்தான். இருந்தாலும் வலி என் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கிக் கொண்டிருந்தது. ஆட்டோவில் ஏற்றினார்கள். அதே ஆட்டோதான். அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனைக்குள் இருந்தேன். அடுத்த சில நிமிடங்கள் மட்டுமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கும் அங்குதான் இருந்தேன். 

ஓரிரண்டு மணிகளுக்குப் பிறகு அம்மா வந்து அழுது கொண்டிருந்தார். இப்படி விபத்து நடக்கும் போதெல்லாம் அவருக்கு ஒரே ஒரு காரணம்தான் தெரியும் “எழுதுறேன் எழுதறேன்னு இருபத்தி நாலு மணி நேரமும் கண்டதையே நினைச்சுட்டு இரு” அப்பாவும் விதிவிலக்கு இல்லை “மனசை அலையவிடாம பார்த்துக்கன்னா கேட்கேவே கேட்காதா?” என்று புலம்பிக் கொண்டிருந்தார். இந்த புலம்பல்களும் அட்வைஸ்களும் ஒரு காதில் புகுந்து இன்னொரு காதில் வெளியேறிக் கொண்டிருந்தன. மலையாள நர்ஸ் ஊசிகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தார். அம்மாவையும் அப்பாவையும் வெளியே அனுப்பினால் காதுகளுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு கண்களுக்கு வேலை கொடுக்கலாம் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை. அவர்கள் இருக்கும் போதே ஊசிகளை சகட்டுமேனிக்கு ஏவிவிட்டார். கண்களை மூடிக் கொண்டு பற்களை நறநறத்தேன்.

அப்பொழுது சாருநிவேதிதாவும் ஜெயமோகனும் என் மண்டைக்குள் புகுந்திருந்ததுதான் துரதிர்ஷ்டம். ஏதோ ஒரு அறுவை சிகிச்சைக்காக சாரு நிவேதிதா மருத்துவமனையில் இருந்த போது வலி கொடூரமாக இருந்திருக்கிறது. அப்பொழுது ஜெயமோகனுக்கு தனது வலி குறித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாராம். அந்தக்காலத்தில் இரண்டு பேருக்கும் ஒத்து போயிருக்கும் போல.  வழக்கம் போல ஏகப்பட்டவற்றை எழுதி கடைசியாக “வலியும் ஒரு ஆன்மிகம்” என்று ஒரு பதிலை ஜெ.மோ அனுப்பியிருக்கிறார். சாரு என்ன நினைத்திருப்பார் என்று சொல்லித் தெரியவேண்டுமா? “உனக்கு வலியும் ஆன்மிகம்; எனக்கு ஆன்மிகமும் வலிதான்”. 

இதே நினைப்பில் இருந்ததால் எனக்கு யாராவது மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்த்தேன். ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ‘பெர்சனல் லோன்’ வேண்டுமா என்று கேட்டு அனுப்பியிருந்தார்கள். மொபைலை அணைத்துவிட்டு மூன்று நாட்களாக உறங்கிக் கொண்டிருந்தேன்.