2004 ஆம் எம்.டெக் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது இந்தியன் இன்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு எழுதுவதற்கென்று சென்னை சென்றேன். அது சென்னைக்கு எனது இரண்டாவது பயணம். அதற்கு நான்காண்டுகளுக்கு முன்பாக இஞ்ஜினீயரிங் கல்லூரி சேர்க்கைக்கான கவுன்சிலுங்குக்காக அப்பா, அப்பாவின் நண்பர்கள், அவருடைய சொந்தக்காரர்கள் என பட்டாளமாக சென்றிருந்தோம். இரண்டாவது முறை தனியாக செல்வது ஒரு சுதந்திர உணர்வை தந்திருந்தது.
தேர்வுக்கு மட்டுமில்லாமல் சென்னையில் யாரையாவது பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்பொழுது எனக்கு இருந்த ஒரே சாய்ஸ் சுஜாதாதான். அதுவரை எழுதி வைத்திருந்த மொத்த கவிதைத் தாள்களையும் ஒரு கவருக்குள் நிரப்பி வைத்திருந்தேன். விகடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சுஜாதாவின் முகவரியைக் கேட்டேன். தருவார்களா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. "நெம்பர் 10,ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யங்கார் தெரு, மைலாப்பூர்" என்ற முகவரியை குறித்துக் கொண்டேன்.
சர்வீசஸ் தேர்வில் முதல் தாளையே சரியாக எழுதவில்லை. அடுத்த தேர்வை எழுதுவது வீண் வேலை என்று முடிவு செய்ததும் தேர்வை தவிர்த்துவிட்டு சுஜாதாவை பார்க்கச் செல்வது என்று முடிவு செய்து கொண்டேன். அன்றைய தினம் குளித்து முடித்து எட்டரை மணிக்கெல்லாம் அவரது வீட்டை அடைந்துவிட்டேன். வாசலில் இருந்த செக்யூரிட்டி தடுத்து நிறுத்தினார். சுஜாதாவை பார்க்க வேண்டும் என்றேன். சுஜாதா எப்பொழுதுமே காலை பதினோரு மணியளவில்தான் எழுவார் என்றார். மைலாப்பூரில் எனக்கு வேறு யாரையும் தெரியாது என்பதால் அவரது வீட்டிற்கு அருகில் இருந்த மைலாப்பூர் பூங்காவில் காத்திருந்து விட்டு, பத்தே முக்கால் மணிக்கு திரும்ப வந்த போது சுஜாதா வெளியில் சென்றுவிட்டதாகவும், மீண்டும் மதியம் இரண்டு மணியளவில்தான் வருவார் என்றார்கள். ஒன்றரை மணி வரைக்கும் அதே பூங்காவில் காத்திருந்துவிட்டு மீண்டும் சென்ற போது, “சார் தூங்கிட்டு இருக்கார்” என்றார்கள். ஏதாவதொரு காரணத்தை திரும்ப திரும்ப வாட்ச்மேன் சொல்வதுமாக இருந்ததால் நான் சுஜாதாவின் வீட்டிற்கும்,பூங்காவிற்கும் நடக்கத் துவங்கியிருந்தேன்.
சலிக்காமல் மாலை ஆறு மணிக்கு சென்றபோது பெசன்ட் நகர் பீச்சுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். பெசண்ட் நகர் பீச்சுக்கு சுஜாதா வாக்கிங் சென்றிருப்பதாகச் சொன்னவுடன், இனிமேல் பூங்காவிற்குச் செல்வது சரியல்ல என்று வீட்டு வாசலில் காத்திருக்கத் துவங்கியிருந்தேன். அப்பொழுது பொமேரேனியன் நாயுடன் அவரது மனைவி என்னைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார். சினிமாவில் சான்ஸ் கேட்கும் புதுமுக இயக்குனர் போல பரபரப்பாக பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். மதிய உணவில்லாத களைப்பு முகத்தில் படரத் துவங்கியிருந்தது. இரவு ஏழு மணிக்கு சுஜாதா வந்து சேர்ந்த போது, வாட்ச்மேன் என் மீது கருணை கொண்டு உள்ளே அனுப்பினார்.
அவர் சோபாவில் அமர்ந்திருக்க நான் என் கவிதைக் கவருக்குள் கை நுழைத்துக் கொண்டிருந்தேன்.
"சொல்லுப்பா"
"இந்தப்பையன் ரொம்ப நேரமா உங்களுக்கு வெயிட் பண்ணிண்டு இருக்கான்" என்று அவரது மனைவிதான் ஆரம்பித்து வைத்தார்.
"சார்..நான் கோபியிலிருந்து வர்றேன். கொஞ்சம் கவிதை எழுதியிருக்கேன். நீங்க பார்க்க..." என்று நான் முடிக்கவில்லை.
"நிறைய கவிதை புஸ்தகங்கள் வருது. என்னால படிக்க முடியறதில்ல. நீங்க பத்திரிகைகளுக்கு அனுப்புங்க. நல்லா இருந்தா என் கண்ணுல படும்"
"தேங்க்யூ சார்".
அவ்வளவுதான் சுஜாதாவுடனான எனது உரையாடல். நிராகரிப்பின் வேதனையுடன் வெளியேறி வந்தேன். வெறும் இரண்டு நிமிட பேச்சுக்காக ஒரு நாள் காத்திருக்க வேண்டுமா என்று நினைத்தால் முட்டாள் தனமான காரியமாகத்தான் தோன்றும். ஆனால் சுஜாதா அதற்கு சரியான ஆளுமைதான் என்று நம்பிக் கொண்ட்டிருந்தேன். குறுந்தொகை, புறநானூறு, வெண்பாவின் சிக்கல்களையும், வானியல் தத்துவங்களையும், நேனோ டெக்னாலஜியின் கூறுகளையும்,ஆன்மிகத்தின் பன்முகங்களையும் எந்தத் தடுமாற்றமுமில்லாமல் தமிழில் சொல்லக் கூடிய எழுத்தாளர் அவர் மட்டுமாகத்தானிருக்க இயலும்- அதேசமயம் சுவாரஸியத்திற்கு எந்தக் குறையுமில்லாமல்.
சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகங்கள் என இலக்கியத்தின் பல்வேறு வகைகளையும் சுஜாதா வெற்றிகரமாக தொட்டிருக்கிறார். சிறுகதை,கட்டுரை இலக்கியங்களின் உச்சபட்ச சாத்தியங்களையும், கட்டற்ற தன் எழுத்தின் போக்கில் தொட்டு வந்த எழுத்தாள ஆளுமை சுஜாதா என நம்புகிறேன்.
சுஜாதா என்னோடு சரியாக பேசவில்லை என்ற காரணத்திற்காக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரின் வெகுஜன பத்திரிக்கைக் கட்டுரைகள் மீது கூட என் வெறுப்பினைக் காட்டி வந்தேன். 2004,2005 ஆண்டுகளில் நடந்த புத்தகக் கண்காட்சிகளின் போது உயிர்மை அரங்கில் நின்று கொண்டிருப்பது வாடிக்கையாக இருந்தது. அப்பொழுது உயிர்மையில் சுஜாதாவின் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். அரங்கில் நின்று கொண்டிருக்கும் போது, யாராவது 'சுஜாதா புக் புதுசா என்ன வந்திருக்கு' என்று கேட்டால், வேறொரு எழுத்தாளரின் புத்தகத்தை பரிந்துரைப்பேன். சுஜாதாதான் எனக்கு எதிரியல்லவா? அவரது புத்தகத்தை எப்படி பரிந்துரைக்க முடியும்?
வேறு எழுத்தாளரை பரிந்துரைக்கும் என் மீது பெரும்பாலானவர்கள் அலட்சியமான பார்வையைச் செலுத்துவார்கள். என்னை தவிர்த்துவிட்டு அனாயசமாக நகர்ந்து சுஜாதாவின் புத்தகத்தை எடுத்துப் போவார்கள். அது எனக்கான சூப்பர் பல்பாக இருக்கும். படைப்பாளன் என்ற ஆளுமை மீது அவனது வாசகர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சுஜாதாவின் வாசகர்கள் வழியாக பார்க்க முடிந்த தருணம் அது.
ஏதோ ஒரு சமயத்தில் “கணையாழியின் கடைசிபக்கங்கள்” தொகுப்பை வாசிக்கத் துவங்கியபோது எனக்கும் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் அவர்களின் எழுத்துக்கும் இடையில் நான் போட்டுக்கொண்ட திரையால் என்னைத் தவிர வேறு யாருக்கும் இழப்பில்லை என உணரத்துவங்கினேன்.
அவருக்கு ஏதாவது மின்னஞ்சல் அனுப்புவதும் அதற்கு எந்த பதிலும் வராததும் எனக்கு சாதாரணமான விஷயங்கள். எனக்கு அதில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. ஒரு வேளை இந்த மின்னஞ்சல் முகவரியை அவர் உபயோகப்படுத்தாமல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் எனக்கு வரும் அத்தனை மின்னஞ்சல்களையும் அவருக்கு 'Forward' செய்யத் துவங்கியிருந்தேன். அது கிட்டத்தட்ட ஒரு போர்த்தாக்குதல் மாதிரிதான். ஒரு நாளைக்கு நாற்பது அல்லது ஐம்பது மின்னஞ்சல்களைக் கூட Forward செய்திருக்கிறேன். அதில் Spam மின்னஞ்சல்கள் கூட இருந்திருக்கக் கூடும். இப்படியான தாக்குதலில் அவர் ஜெர்க் ஆகியிருக்கக் கூடும்.
'Please remove my ID from your group mailing list -ws" என்று எனக்கு பதில் வந்தது. அதற்குப் பிறகாக அவருக்கு மின்னஞ்சல் அனுப்புவதை நிறுத்திவிட்டேன்.
எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ தொகுதியின் அச்சாக்கப் பணிகள் முடிந்து புத்தகமாக வந்திருந்தது. புத்தகக் கண்காட்சியிலேயே வெளியிட்டுவிடலாம் என்று மனுஷ்ய புத்திரன் முடிவு செய்திருந்தார். “யாரை வெளியிடச் சொல்லலாம்” என்றார். “நீங்களே முடிவு செய்யுங்க சார்” என்றேன். சுஜாதாவை வைத்து வெளியிடச் செய்யலாம் என்ற போது மிகுந்த சந்தோஷமடைந்திருந்தேன். சுஜாதா புத்தகக் கண்காட்சிக்கு வந்தவுடன் என்னைப்பற்றி சில சொற்களில் அறிமுகம் செய்து வைத்தார்கள். புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டபோது “சரி” என்றார். சுஜாதா புத்தகத்தை வெளியிட ரோஹிணி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது சுஜாதாவிடம் "சார்,கவிதைகளை படிச்சுப் பாருங்”க" என்றேன். "ம்ம்..ஒரு காப்பி எடுத்துட்டு போறேன்ப்பா..படிக்கிறேன்" என்றார். இது எனக்கும் அவருக்குமான இரண்டாவது உரையாடல். இந்த உரையாடல் அரை நிமிடத்தில் முடிந்திருந்தது. ஆனால் எனக்கு ஒரு திருப்தியிருந்தது.
அவர் எனது கவிதைகளை வாசித்து முடித்தவுடன் அவரிடம் கவிதைகளைப் பற்றி ஓரிரு சொற்களாவது பேசி விட வேண்டும் என விரும்பியிருந்தேன். ஆனால் அடுத்த நாற்பத்தியிரண்டு நாட்களில் அவர் தனது ஞாபகத்தை முற்றாக இழந்திருந்தார். அவரது வரிகளில் சொன்னால் “மரணம் என்பது ஞாபகமிழப்பு”.
அவரோடு இரண்டாவதாக பேசியதுதான் அவருடனான எனது கடைசி உரையாடல். “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுப்புதான் அவர் வெளியிட்ட கடைசி புத்தகம்.
(2008 ஆம் ஆண்டு எழுதிய ஒரு குறிப்பு இது. திருத்தங்களுடன்...)
6 எதிர் சப்தங்கள்:
/ஒரு நாளைக்கு நாற்பது அல்லது ஐம்பது மின்னஞ்சல்களைக் கூட Forward செய்திருக்கிறேன்./
:) வில்லத்தனம்...
சுஜாதாதான் எனக்கு எதிரியல்லவா? அவரது புத்தகத்தை எப்படி பரிந்துரைக்க முடியும்//
// “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுப்புதான் அவர் வெளியிட்ட கடைசி புத்தகம்//
வில்லனின் வெற்றியோ.
you will have to put yourself in sujatha's shoes. on an average day he probably got quite a few of these cold calls. it is humanly impossible to cater to every request. you would probably behave the same, if you get 100 requests a day from strangers. something about our culture, strangers fall at the feet of famous persons, and immediately expect succour. i think it is not fair. talent ofcourse will speak for itself. you dont need partons. i am just making an observation. not in any way criticizing your request to sujatha. hope you have a great life as a poet. best wishes.
I agree with "phantom363." சுஜாதா தன் “கற்றதும் பெற்றதும்”-ல் கூட ஒருமுறை ”தனக்கு யாரும் கவிதை, கதை புத்தகங்கள் அனுப்ப வேண்டாம் தன்னால் படிக்க முடியாது நேரமில்லை” என்று எழுதியிருந்தார். கமல், மணிரத்னம், ஷங்கர் என்று பலர் தங்கள் படைப்புகள் குறித்து அவரிடம் விவாதம் செய்வது, எழுத்து என்று மிகவும் பிசியாக இருப்பவர்களை நாம் தான் தவறாகப் புரிந்து கொள்கின்றோம். சமீபத்தில் ஒரு பிரபல இயக்குனரை ஒரு கல்லூரி விழாவில் சந்திக்க, விழா அமைப்பாளர் மிகவும் பிகு செய்தார். ஆனால், அந்த இயக்குனர் மற்ற விஐபிக்கள் என்னுடன் மிகவும் சகஜமாகப் பழகினார்கள் - நான் மட்டும் தான் வெளிஆள்! அதுவும் ”நானே திரைக்கதை எழுதுபவன்” என்றாலும் தன் காண்டாக்ட் நம்பர் எல்லாம் கொடுத்தார். என் திரைக்கதையை அவருக்கு அனுப்பிய போது வேறு இயக்குனரை சென்று சந்திக்கும்படி என்னிடம் சொன்னார். முதலில் அவர் என்னை சற்று உதாசீனம் செய்வதாக எனக்குத் தோன்றியது! உங்களுக்கு சுஜாதாவுடன் இது போன்ற சந்தர்ப்பம் வாய்க்க இயற்கை அனுமதிக்கவில்லை என்று நினைக்கின்றேன். எனினும் சுஜாதாவை ஒருமுறை சென்னை சென்ட்ரலில் பார்த்தேன். பேச முடியவில்லை. ஒருமுறை, அவர் ஆசிரியராக இருந்த போது, குமுதம் அலுவலகம் சென்றும் சந்திக்க முடியவில்லை. Like many Tamil youth his influence on me is BIG as I read his works from my school days. He is a great inspiration!
வாசிக்கும் பழக்கமுள்ள எல்லாருக்குமே கண்டிப்பாக சுஜாதா அவர்களை பிடிக்கும் . பரவாயில்லை.. எனக்கு படைப்புகளை மட்டுமே அனுபவிக்கும் பழக்கம் உள்ளதால் படைப்பாளிகளை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை
கவிதையில கொல்லுரிங்க போங்க! :)
Post a Comment