இந்தக் கவிதைத் தொகுப்பினை நம்பிக்கையுடனோ அல்லது அவநம்பிக்கையுடன் கையில் எடுத்திருக்கும் உங்களுக்கு நன்றியும் பிரியமும். அடுத்தவர்களின் கவிதைகளை வாசிப்பதற்கு ஆட்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களின் முகத்திற்கு நேராக நிறுத்துவதற்கு உங்களைப் போன்ற ஒருவரைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். அவர்களின் வாயை அடைக்க வேண்டும் அல்லது மண்டையைப் பிளக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கமில்லை.
”என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” தொகுப்பு 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரைக்குமான ஐந்தாறு வருடங்களில் நான் எழுதிய கவிதைகளை உள்ளடக்கியிருக்கிறது. ஆயிரமாயிரம் கவிதைகள் கொட்டிக் கொண்டிருக்கும் இங்கு ஆறு ஆண்டுகள் கூடி ஐம்பதுக்கும் குறைவான கவிதைகளைத் தூக்கிக் கொண்டு சுற்றுவதில் இருக்கும் ஏழ்மையை புரிந்து கொண்டிருக்கிறேன் என்றாலும் அதற்கான காரணத்தையும் யோசிக்கிறேன்.
இந்தக் காலகட்டத்தில் கவிதைகள் குறித்தான எனது புரிதல் தொடர்ந்து உருமாறிக் கொண்டேயிருந்திருந்தது. இதன் விளைவாக எழுதி வைத்திருந்த பல கவிதைகள் அடுத்த மூன்றே மாதத்தில் “கவிதை மாதிரி” ஆகி பிறகு “வெற்றுச் சொற்களாக” மாறிப்போனதன் சூட்சுமம் குறித்து புலம்பித் திரிந்தது ஞாபகத்தில் இருக்கிறது. கவிதை மாதிரியாகவும், சொற்களாகவும் என்னிடம் பல்லிளித்தவைகளை கணினிக் கோப்பில் இருந்து Shift+delete செய்தபிறகு மிச்சமிருந்த வெற்றுப்பக்கங்கள் தமக்கான ஆறுதலைக் கோரியபோதெல்லாம் அவைகளை தேற்ற முடியாமல் கணினியை Shut down செய்த துரோகியொருவன் தட்டச்சிய வாக்கியங்களைத்தான் இப்பொழுது வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
என் அழிப்பில் தப்பிப் பிழைத்தனவற்றை மட்டும் கவிதைகள் என அறிவித்துவிட்டேன். நீங்கள் இந்த அறிவிப்பினை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். ஒருவேளை ஏற்றுக் கொள்வீர்கள் எனில் அந்தத் தருணத்தில் ஒரு மென்புன்னகையை உதிரவிடுங்கள். வெக்கையான பெளர்ணமியில் ஆற்றங்கரையில் நிலாக்காயும் சுகத்தை அந்தப் புன்னகை எனக்கு அளித்துவிடக் கூடும். மறுக்க விரும்பினால் சல்லிசான ஒரு விருதுக்கு என் பெயரை பரிந்துரை செய்துவிடுங்கள்.
மற்றபடி, கவிதையைப் பற்றிய என் புரிதலை எழுதுவதற்கும் அல்லது நான் எழுதிய கவிதைகள் குறித்து விளக்கம் அளிப்பதற்கும் கவிதைத் தொகுப்பின் முன்னுரை சரியான இடமாக இருக்காது எனத் தோன்றுகிறது. எனது கவிதைகள் ”இப்படித்தான் வாசிக்கப்பட வேண்டும்” என நான் விரும்புவதன் வெளிப்பாடாக முன்னுரை அமைந்துவிடுவதற்கான சாத்தியங்களை உருவாக்கி என்னையும் என் கவிதைகளையும் நானே அவமானப்படுத்திக்கொள்வதற்கான துணிச்சல் என்னிடமில்லை.
கவிதைகளை வெளியிட்ட இதழ்களுக்கும், கவிதைகளை வாசித்து என் கவிதை மனம் அணையாமல் பார்த்துக் கொண்ட நண்பர்களுக்கும், காலச்சுவடு பதிப்பகத்துக்கும் நன்றிகள்.
***
‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ தொகுப்பிற்கான முன்னுரை இது. தொகுப்பிலிருக்கும் இரண்டு கவிதைகள் கீழே.
***
நம் முத்தங்களின் சாட்சி
மரம் ஒன்றை
வெட்டியெறிகிறார்கள்.
குழந்தையின் கழுத்தை பிளேடால் அறுக்கிறார்கள் என்றேன்
கிழவியை கோடாரியால் பிளக்கிறார்கள் என்றாய்
குழந்தையின் கழுத்தை பிளேடால் அறுப்பதும்
கிழவியை கோடாரியால் பிளப்பதும்
உனக்கும் எனக்கும் புதிதாக தோன்றாததால்
வேறொன்றை யோசிக்க வேண்டிய நிர்பந்தம்
நமக்கு.
அவசரமாக எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
வெட்டப்படும் மரமொன்று
நாம் தனித்திருக்கும் மாலையை
ஆக்கிரமிக்க விரும்பாத
இருவருமே
பேச்சை மாற்ற முயல்கிறோம்.
முத்தம் பற்றி நான் ஆரம்பிக்கிறேன்
ஸ்பரிசம் குறித்து நீ.
வெளிச்சம்
வடிய
இழந்த குஞ்சுகளையும்
கூடுகளையும்
தேடும்
பறவைகளின் பதட்டம்
நம் தனிமையை கலைக்கிறது.
இன்று
இந்த மாலையை
இந்த இடத்தை
விரைந்து கடக்க பிரார்த்திக்கிறோம்.
நேரமாவதாகச் சொல்கிறாய்
நானும் ஆயத்தமாகிறேன்.
முத்தம் இல்லாத
இந்த மாலையில்
இறந்து கொண்டிருக்கும்
இந்த மரத்தை
பார்த்துவிட்டு நகர்கிறோம்.
நம்
முத்தங்களின் சாட்சி
உயிர்
கசிந்து கொண்டிருக்கிறது
****
சாதுவான பொன்னிற மீன்
கண்ணாடித் தொட்டியில் மீன் வளர்த்துகிறீர்கள்
சாதுவான பொன்னிற மீன்
அதன்
இசையார்வத்தையும்
மென்நடனத்தையும்
நீங்கள் கவனித்ததில்லை
அது
உறங்குவது பற்றியும்
யாருமற்ற மௌனத்தில்
அதனியக்கம்
சலனமற்ற கனவுகள்
குறித்தும்
நீங்கள்
யோசித்திருக்கிறீர்கள்.
நீங்கள்
பபிள்காம் குமிழியிடுவதை கவனித்திருக்கிறது
ஒலி குறைத்து நீலப்படம் பார்த்ததை தெரிந்து வைத்திருக்கிறது
வெறுமையில் சிகரெட் உறிஞ்சியதை அலட்சியப்படுத்தி நீந்தியிருக்கிறது
அப்படித்தான்
ஒரு நாள் உங்கள் நிர்வாணத்தை பார்த்தது
ஒரு நாள் உங்கள் மகளின் நிர்வாணத்தை
ஒரு நாள் உங்கள் மகனின் நிர்வாணத்தை
வேறொரு நாள்
உங்கள் மனைவியின் நிர்வாணத்தை
அவளோடு
வேறொருவனின் நிர்வாணத்தையும்
1 எதிர் சப்தங்கள்:
சாதுவான பொன்னிற மீன் கவிதையில் இன்னும் இரு வரிகள் சேர்த்திருக்கலாம்.'உங்கள் கணவரின்......','அவனோடு வேறொரு பெண்ணின் .....'எங்களை நாங்கள் குறைந்தபட்சம் எழுத்துக்களில் ஆயினும் விட்டுக் கொடுக்காமல் இருக்க முயற்சிக்கிறோம் தம்பி..!
Post a Comment