Feb 28, 2013

சுஜாதா


2004 ஆம் எம்.டெக் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது இந்தியன் இன்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு எழுதுவதற்கென்று சென்னை சென்றேன். அது சென்னைக்கு எனது இரண்டாவது பயணம். அதற்கு நான்காண்டுகளுக்கு முன்பாக இஞ்ஜினீயரிங் கல்லூரி சேர்க்கைக்கான கவுன்சிலுங்குக்காக அப்பா, அப்பாவின் நண்பர்கள், அவருடைய சொந்தக்காரர்கள் என பட்டாளமாக சென்றிருந்தோம். இரண்டாவது முறை தனியாக செல்வது ஒரு சுதந்திர உணர்வை தந்திருந்தது. 

தேர்வுக்கு மட்டுமில்லாமல் சென்னையில் யாரையாவது பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்பொழுது எனக்கு இருந்த ஒரே சாய்ஸ் சுஜாதாதான். அதுவரை எழுதி வைத்திருந்த மொத்த கவிதைத் தாள்களையும் ஒரு கவருக்குள் நிரப்பி வைத்திருந்தேன். விகடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சுஜாதாவின் முகவரியைக் கேட்டேன். தருவார்களா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.    "நெம்பர் 10,ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யங்கார் தெரு, மைலாப்பூர்" என்ற முகவரியை குறித்துக் கொண்டேன்.

சர்வீசஸ் தேர்வில் முதல் தாளையே சரியாக எழுதவில்லை. அடுத்த தேர்வை எழுதுவது வீண் வேலை என்று முடிவு செய்ததும் தேர்வை தவிர்த்துவிட்டு சுஜாதாவை பார்க்கச் செல்வது என்று முடிவு செய்து கொண்டேன். அன்றைய தினம் குளித்து முடித்து எட்டரை மணிக்கெல்லாம் அவரது வீட்டை அடைந்துவிட்டேன். வாசலில் இருந்த செக்யூரிட்டி தடுத்து நிறுத்தினார். சுஜாதாவை பார்க்க வேண்டும் என்றேன். சுஜாதா எப்பொழுதுமே காலை பதினோரு மணியளவில்தான் எழுவார் என்றார். மைலாப்பூரில் எனக்கு வேறு யாரையும் தெரியாது என்பதால் அவரது வீட்டிற்கு அருகில் இருந்த மைலாப்பூர் பூங்காவில் காத்திருந்து விட்டு, பத்தே முக்கால் மணிக்கு திரும்ப வந்த போது சுஜாதா வெளியில் சென்றுவிட்டதாகவும், மீண்டும் மதியம் இரண்டு மணியளவில்தான் வருவார் என்றார்கள். ஒன்றரை மணி வரைக்கும் அதே பூங்காவில் காத்திருந்துவிட்டு மீண்டும் சென்ற போது, “சார் தூங்கிட்டு இருக்கார்” என்றார்கள். ஏதாவதொரு காரணத்தை திரும்ப திரும்ப வாட்ச்மேன் சொல்வதுமாக இருந்ததால் நான் சுஜாதாவின் வீட்டிற்கும்,பூங்காவிற்கும் நடக்கத் துவங்கியிருந்தேன்.

சலிக்காமல் மாலை ஆறு மணிக்கு சென்றபோது பெசன்ட் நகர் பீச்சுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். பெசண்ட் நகர் பீச்சுக்கு சுஜாதா வாக்கிங் சென்றிருப்பதாகச் சொன்னவுடன், இனிமேல் பூங்காவிற்குச் செல்வது சரியல்ல என்று வீட்டு வாசலில் காத்திருக்கத் துவங்கியிருந்தேன். அப்பொழுது பொமேரேனியன் நாயுடன் அவரது மனைவி என்னைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார். சினிமாவில் சான்ஸ் கேட்கும் புதுமுக இயக்குனர் போல பரபரப்பாக பதில்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். மதிய உணவில்லாத களைப்பு முகத்தில் படரத் துவங்கியிருந்தது. இரவு ஏழு மணிக்கு சுஜாதா வ‌ந்து சேர்ந்த‌ போது, வாட்ச்மேன் என் மீது க‌ருணை கொண்டு உள்ளே அனுப்பினார்.

அவ‌ர் சோபாவில் அம‌ர்ந்திருக்க‌ நான் என் க‌விதைக் க‌வ‌ருக்குள் கை நுழைத்துக் கொண்டிருந்தேன்.

"சொல்லுப்பா"

"இந்த‌ப்பைய‌ன் ரொம்ப‌ நேர‌மா உங்க‌ளுக்கு வெயிட் ப‌ண்ணிண்டு இருக்கான்" என்று அவரது மனைவிதான் ஆரம்பித்து வைத்தார்.

"சார்..நான் கோபியிலிருந்து வ‌ர்றேன். கொஞ்ச‌ம் க‌விதை எழுதியிருக்கேன். நீங்க‌ பார்க்க‌..." என்று நான் முடிக்கவில்லை.

"நிறைய‌ க‌விதை புஸ்த‌க‌ங்க‌ள் வ‌ருது. என்னால‌ ப‌டிக்க‌ முடிய‌ற‌தில்ல‌. நீங்க‌ ப‌த்திரிகைக‌ளுக்கு அனுப்புங்க‌. ந‌ல்லா இருந்தா என் க‌ண்ணுல‌ ப‌டும்"

"தேங்க்யூ சார்".

அவ்வளவுதான் சுஜாதாவுடனான எனது உரையாடல். நிராகரிப்பின் வேதனையுடன் வெளியேறி வந்தேன். வெறும் இர‌ண்டு நிமிட‌ பேச்சுக்காக‌ ஒரு நாள் காத்திருக்க‌ வேண்டுமா என்று நினைத்தால் முட்டாள் த‌ன‌மான‌ காரிய‌மாக‌த்தான் தோன்றும். ஆனால் சுஜாதா அத‌ற்கு ச‌ரியான‌ ஆளுமைதான் என்று நம்பிக் கொண்ட்டிருந்தேன். குறுந்தொகை, புற‌நானூறு, வெண்பாவின் சிக்க‌ல்க‌ளையும், வானிய‌ல் த‌த்துவ‌ங்க‌ளையும், நேனோ டெக்னால‌ஜியின் கூறுக‌ளையும்,ஆன்மிகத்தின் பன்முகங்களையும் எந்த‌த் த‌டுமாற்ற‌முமில்லாம‌ல் த‌மிழில் சொல்ல‌க் கூடிய‌ எழுத்தாள‌ர் அவ‌ர் ம‌ட்டுமாக‌த்தானிருக்க‌ இய‌லும்- அதேசமயம் சுவார‌ஸிய‌த்திற்கு எந்த‌க் குறையுமில்லாம‌ல்.

சிறுகதை, கட்டுரை, நாவல், நாடகங்கள் என இலக்கியத்தின் பல்வேறு வகைகளையும் சுஜாதா வெற்றிகரமாக தொட்டிருக்கிறார். சிறுகதை,கட்டுரை இலக்கியங்களின் உச்சபட்ச சாத்தியங்களையும், கட்டற்ற தன் எழுத்தின் போக்கில் தொட்டு வந்த எழுத்தாள ஆளுமை சுஜாதா என நம்புகிறேன்.

சுஜாதா என்னோடு சரியாக பேசவில்லை என்ற‌ கார‌ணத்திற்காக‌ அடுத்த‌ இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு அவ‌ரின் வெகுஜ‌ன‌ ப‌த்திரிக்கைக் க‌ட்டுரைக‌ள் மீது கூட‌ என் வெறுப்பினைக் காட்டி வ‌ந்தேன். 2004,2005 ஆண்டுகளில் நடந்த புத்தகக் கண்காட்சிகளின் போது உயிர்மை அரங்கில் நின்று கொண்டிருப்பது வாடிக்கையாக இருந்தது. அப்பொழுது உயிர்மையில் சுஜாதாவின் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். அரங்கில் நின்று கொண்டிருக்கும் போது, யாராவது 'சுஜாதா புக் புதுசா என்ன‌ வ‌ந்திருக்கு' என்று கேட்டால், வேறொரு எழுத்தாளரின் புத்தகத்தை பரிந்துரைப்பேன். சுஜாதாதான் எனக்கு எதிரியல்லவா? அவரது புத்தகத்தை எப்படி பரிந்துரைக்க முடியும்? 

வேறு எழுத்தாளரை பரிந்துரைக்கும் என் மீது பெரும்பாலானவர்கள் அல‌ட்சிய‌மான‌ பார்வையைச் செலுத்துவார்கள். என்னை தவிர்த்துவிட்டு அனாயசமாக நகர்ந்து சுஜாதாவின் புத்தகத்தை எடுத்துப் போவார்கள். அது எனக்கான சூப்பர் பல்பாக இருக்கும். ப‌டைப்பாள‌ன் என்ற‌ ஆளுமை மீது அவ‌னது வாச‌க‌ர்க‌ள் கொண்டிருக்கும் ந‌ம்பிக்கையை சுஜாதாவின் வாச‌க‌ர்க‌ள் வழியாக பார்க்க முடிந்த தருணம் அது.

ஏதோ ஒரு சமயத்தில் “கணையாழியின் கடைசிபக்கங்கள்” தொகுப்பை வாசிக்கத் துவங்கியபோது என‌க்கும் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் அவர்களின் எழுத்துக்கும் இடையில் நான் போட்டுக்கொண்ட திரையால் என்னைத் த‌விர‌ வேறு யாருக்கும் இழ‌ப்பில்லை என‌ உணர‌த்துவ‌ங்கினேன். 

அவ‌ருக்கு ஏதாவ‌து மின்ன‌ஞ்ச‌ல் அனுப்புவ‌தும் அத‌ற்கு எந்த‌ ப‌திலும் வராத‌தும் என‌க்கு சாதார‌ண‌மான‌ விஷ‌ய‌ங்க‌ள். எனக்கு அதில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை. ஒரு வேளை இந்த‌ மின்னஞ்ச‌ல் முக‌வ‌ரியை அவ‌ர் உப‌யோக‌ப்ப‌டுத்தாம‌ல் இருக்க‌லாம் என்ற‌ எண்ண‌த்தில் எனக்கு வரும் அத்தனை மின்னஞ்சல்களையும் அவருக்கு 'Forward' செய்யத் துவ‌ங்கியிருந்தேன். அது கிட்டத்தட்ட ஒரு போர்த்தாக்குதல் மாதிரிதான். ஒரு நாளைக்கு நாற்பது அல்லது ஐம்பது மின்னஞ்சல்களைக் கூட Forward செய்திருக்கிறேன். அதில் Spam மின்னஞ்சல்கள் கூட இருந்திருக்கக் கூடும். இப்படியான தாக்குதலில் அவர் ஜெர்க் ஆகியிருக்கக் கூடும். 

'Please remove my ID from your group mailing list -ws" என்று என‌க்கு ப‌தில் வ‌ந்த‌து. அத‌ற்குப் பிற‌காக‌ அவ‌ருக்கு மின்ன‌ஞ்ச‌ல் அனுப்புவ‌தை நிறுத்திவிட்டேன்.

எனது முதல் கவிதைத் தொகுப்பான ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ தொகுதியின் அச்சாக்கப் பணிகள் முடிந்து புத்தகமாக வந்திருந்தது. புத்தகக் கண்காட்சியிலேயே வெளியிட்டுவிடலாம் என்று மனுஷ்ய புத்திரன் முடிவு செய்திருந்தார். “யாரை வெளியிடச் சொல்லலாம்” என்றார். “நீங்களே முடிவு செய்யுங்க சார்” என்றேன். சுஜாதாவை வைத்து வெளியிட‌ச் செய்ய‌லாம் என்ற‌ போது மிகுந்த‌ ச‌ந்தோஷ‌ம‌டைந்திருந்தேன். சுஜாதா புத்தகக் கண்காட்சிக்கு வந்தவுடன் என்னைப்பற்றி சில சொற்களில் அறிமுகம் செய்து வைத்தார்கள். புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டபோது “சரி” என்றார். சுஜாதா புத்தகத்தை வெளியிட ரோஹிணி பெற்றுக் கொண்டார். 

நிக‌ழ்ச்சி முடிந்து கிளம்பும் போது சுஜாதாவிடம் "சார்,க‌விதைக‌ளை ப‌டிச்சுப் பாருங்”க‌" என்றேன். "ம்ம்..ஒரு காப்பி எடுத்துட்டு போறேன்ப்பா..ப‌டிக்கிறேன்" என்றார். இது எனக்கும் அவருக்குமான இரண்டாவது உரையாடல். இந்த‌ உரையாட‌ல் அரை நிமிட‌த்தில் முடிந்திருந்த‌து. ஆனால் என‌க்கு ஒரு திருப்தியிருந்த‌து. 

அவர் எனது கவிதைகளை வாசித்து முடித்தவுடன் அவரிடம் கவிதைகளைப் பற்றி ஓரிரு சொற்களாவது பேசி விட வேண்டும் என விரும்பியிருந்தேன். ஆனால் அடுத்த நாற்பத்தியிரண்டு நாட்களில் அவர் தனது ஞாபகத்தை முற்றாக இழந்திருந்தார். அவரது வரிகளில் சொன்னால் “மரணம் என்பது ஞாபகமிழப்பு”.

அவரோடு இரண்டாவதாக பேசியதுதான் அவருடனான எனது கடைசி உரையாடல். “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுப்புதான் அவர் வெளியிட்ட கடைசி புத்தகம்.

(2008 ஆம் ஆண்டு எழுதிய ஒரு குறிப்பு இது. திருத்தங்களுடன்...)

Feb 27, 2013

எருமைபெங்களூரில் எஸ்.பி.சாலை பக்கம் போயிருக்கிறீர்களா? சர்தார் பட்ரப்பா சாலை என்பதை சுருக்கி எஸ்.பி.ரோடு என்றாக்கிவிட்டார்கள். கப்பன் பூங்கா, ஜே.பி நகரை எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு இதுதான் பெங்களூர் என்று முடிவுக்கு வந்தால் அது தவறான முடிவாகிவிடும். அவையெல்லாம் பெங்களூரின் “மேனாமினுக்கி”முகங்கள். எஸ்.பி.ரோடு இந்த ஊரின் வியாபார முகம். மார்வாடிகள் நிறைந்த இந்தச் சாலையின் குறுக்குச் சந்துகளும், நெருக்கடியான கடைகளும் மொத்த பெங்களூருக்கும் வேறொரு பரிமாணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சதுர அடி இடம் கிட்டத்தட்ட அறுபதாயிரம் ரூபாய்க்கு விற்கிறதாம். அப்படியே பணம் இருந்தாலும் பத்து சதுர அடி வாங்குவதாக இருந்தாலும் கூட அடியாள் பலத்திலிருந்து அரசியல் பின்புலம் வரை அத்தனையும் தேவைப்படுமாம். இடம் வாங்குவதாக ஐடியாவும் இல்லை, திராணியும் இல்லை. 

துணிமணியிலிருந்து, எலெக்ட்ரானிக் சாமான்கள் வரை சகலமும் சல்லிசான விலைக்கு கிடைக்கும் என்று சித்தப்பா அழைத்திருந்தார். சித்தப்பா என்றால் மனைவி வகைச் சொந்தம். இந்த ஊரில்தான் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களாக இருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே பம்ப் செட் தொழிலில்தான் இருக்கிறார். கூட இருந்தவர்கள் ஏமாற்றியது, தன் குடும்பத்துக்கு நடந்த வாகன விபத்து போன்றவற்றிலிருந்தெல்லாம் தான் மீண்டு வந்தததை கோடிட்டு காட்டும் போது ‘பாஸிடிவ் எனர்ஜி’ என்பதை தெரிந்து கொள்ளலாம். அவரைப் பற்றி இன்னொரு நாள் தனியாகவே எழுத வேண்டும். 

இந்த பத்தியை ஆரம்பித்தது எஸ்.பி.ரோடு பற்றியோ அல்லது சித்தப்பா பற்றியோ எழுதுவதற்காக இல்லை. எருமை வளர்த்த கதையைச் சொல்வதற்குதான். இந்த எஸ்.பி.ரோட்டில் நடந்து கொண்டிருந்த போதுதான் எங்கள் வீட்டில் இருந்த எருமை ஞாபகத்துக்கு வந்தது. இந்தச் சாலையின் குறுகலான ஒரு சந்தில் இருந்த கான்க்ரீட் கட்டடம் ஒன்றில் எருமைகளையும் மாடுகளையும் கட்டி வைத்திருந்தார்கள். அது மனிதர்கள் வசிப்பதற்கு தோதான வீடுதான். ஆனால் மனிதர்களுக்கு பதிலாக எருமை மாடுகளை பால்காரர் வைத்திருக்கிறார். அவைகள் அங்கேயே வைக்கோலைத் தின்றுவிட்டு, அங்கேயே சாணத்தை போட்டுவிட்டு பால் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட அவைகளுக்கு அந்த வீடு ஜெயில் மாதிரிதான். எருமை மாடுகளை வெளியே அனுப்புவார்கள் என்று தோன்றவில்லை. எஸ்.பி.சாலையின் நெரிசலில் அவை திரும்பி வருவதும் அத்தனை சாத்தியமாகத் தெரியவில்லை.

எங்கள் ஆயா உயிரோடு இருந்த போது எருமை ஒன்று எங்கள் வீட்டு ‘பொடக்காலி’யில் இருந்தது. ஆயாவுக்கு எருமை மேய்த்த பழக்கம் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. ஆயா திருமணம் முடித்து வந்தபோது பண்ணையத்தில் இருந்த ஆட்கள்தான் எருமைகளை பார்த்துக் கொள்வார்களாம். அப்பொழுது ஆட்கள் வைத்து பண்ணயம் நடத்தும் அளவுக்கு வசதியும் இருந்திருக்கிறது. ஆனால் தாத்தா தெம்பாக இருக்கும் போதே தோட்டம் காடெல்லாம் கை மாறிவிட்டது. வெறும் ஒன்றரை ஏக்கர் வயலில் வந்த வருமானம் ஓரளவுக்கு குடும்பச் செலவுகளை சமாளித்திருக்கிறது. தோட்டம் காடு எல்லாம் காலியானவுடன் ஆடு மாடுகளை விற்றுவிட்டு பண்ணையத்து ஆட்களையும் அனுப்பிவிட்டார்களாம். இருந்தாலும் எனக்கு நினைவு தெரிந்து ஆயா வெளுப்பு குறைவான புடவைகளை அணிந்து பார்த்ததேயில்லை. தனது தோலின் நிறத்திற்கு தோததாக ‘செவச்செவ’ என வெற்றிலையைக் குதப்பி முடிந்த வரை வெற்றிலைச் சாறை துப்பிவிட்டு ‘லிப்ஸ்டிக்’ பூசியது போல உதட்டு நிறத்தை வைத்திருப்பார். வீட்டில் சமையல் செய்வது மட்டும்தான் ஆயாவுக்கு வேலை. குடும்ப வருமானம் பற்றிய கவலையெல்லாம் ஆயாவுக்கு இருந்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் எருமை மாடுகள் வளர்க்க வேண்டும் என்பதில் ஆயாவுக்கு அளவு கொள்ளாத ஆசை. 

அம்மா திருமணம் ஆன புதிதில் ஊரிலிருந்து சீதனமாக ஒரு மாடு வாங்கி வந்திருக்கிறார். ஆனால் ஆயாவுக்கு அந்த மாட்டை பரமாரிக்கவெல்லாம் தெரிந்திருக்கவில்லை. வளையவும் இல்லை. சும்மா பார்த்து சந்தோஷப்பட்டுக்கொள்வதோடு சரி. அம்மாவும் இதில் எல்லாம் பெரிய அனுபவசாலி இல்லை. கல்லூரி முடித்த கையோடு அப்பாவுக்கு கட்டி வைத்துவிட்டார்கள். எப்படியோதான் எருமையை சமாளித்திருக்கிறார்கள். அரசு வேலையொன்று அம்மாவுக்கு கிடைத்தவுடன் அந்த மாடும் வீட்டை விட்டு போய்விட்டது.

இதன் பிறகு வெகுநாட்களுக்குப் பிறகு சித்தப்பாவுக்கு திருமணம் ஆனபோது மீண்டும் ‘பொடக்காலி’யில் ஒரு எருமை சீதனமாக வந்து சேர்ந்தது. இந்தச் சித்தப்பா அப்பாவின் தம்பி. இரண்டாவது பத்தியில் வந்த சித்தப்பா இல்லை. 

எருமை கிட்டத்தட்ட எனக்கு தோழனாக இருந்தது. பொடக்காலியில் நின்றிருக்கும் அதன் மீது யாருக்கும் தெரியாமல் ஏறி அமர்ந்து கொள்வதில் ஒரு சந்தோஷம் இருந்தது. மாடு மீது அப்படி அமர்வது எளிதான காரியமில்லை. குத்திவிடும் என்று பயமாக இருக்கும்- குத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எருமை எதிர்ப்பு காட்டாது. ‘தொலைந்து போ’ என்று விட்டுவிடும்.

எருமைக்கு என் ரகசியங்கள் சில தெரியத் துவங்கியது. அம்மாவோ அப்பாவோ அடித்தால் எருமை கட்டி வைக்கப்பட்டிருக்கும் பொடக்காலியில் அமர்ந்துதான் அழுவேன் என்பது மட்டும் காரணமில்லை. பொடக்காலியின் கற்சுவருக்குள் சித்தப்பா ஒளித்து வைத்திருந்த கணேஷ் பீடியை எடுத்து உறிஞ்சியதை அந்த எருமை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்ததது. அப்பொழுது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். காந்தியடிகள் அவரது அம்மாவுக்கு தெரியாமல் கறி தின்ற போது அவரது வயிற்றுக்குள் ஆடு கத்திக் கொண்டிருந்ததாக யாரோ கதை சொல்லியிருந்தார்கள். அது உண்மையோ பொய்யோ தெரியாது. அம்மாவுக்கு தெரியாமல் பீடி குடித்ததை பார்த்த இந்த எருமை என் வயிற்றுக்குள் கத்தும் என்று வெகு நாட்களுக்கு பயந்து கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் பின்மாலை நேரத்தில் திடீரென பெருமழை கொட்ட ஆரம்பித்திருந்தது. கல்மாரியும் விழுந்தது. இந்த பனிக்கட்டிகள் எருமை மீது விழுந்தால் எருமையின் தோலில் புண்கள் ஆகிவிடக் கூடும் என்று எருமையை இடம் மாற்றிக் கட்டுவதற்காக சித்தப்பா பொடக்காலிக்குச் சென்றிருந்தார். அந்தச் சமயத்தில் மழையினால் மின்சாரம் தடைபட்டிருந்தது. நாங்கள் ஆசாரத்தில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோம். சில நிமிடங்களில் பொடக்காலியிருந்து சித்தப்பா கதறுவது கேட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் அத்தனை பேரும் ஓடினோம். சித்தப்பா கீழே விழுந்து கதறிக்கொண்டிருந்தார். சில வினாடிகள் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஆளாளுக்கு சித்தப்பாவிடம் விசாரித்தார்கள். கயிற்றை அவிழ்ப்பதற்காக எருமையின் அருகில் சித்தப்பா சென்றவுடன் அது குதித்திருக்கிறது. குதித்ததோடு நில்லாமல் சித்தப்பாவின் காலையும் மிதித்துவிட்டது. சித்தப்பாவின் காலை தொட்டுப் பார்த்துவிட்டு அம்மா அதிர்ச்சியடைந்துவிட்டார். அந்த இடத்தில் விரலே இல்லை. விரல் துண்டானது மட்டுமில்லாமல் இருட்டுக்குள் ரத்தப்போக்கு பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை. யாரோ ஓடிச் சென்று அரிக்கேன் விளக்கை தூக்கி வந்தார்கள். அந்த மழைக்குள்ளும் காற்றுக்குள்ளும் விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்வதும், விரலைத் தேடுவதும் அத்தனை எளிதானதாக இல்லை. சில நிமிடங்களுக்கு பிறகு தம்பிதான் விரலை கண்டுபிடித்தான். பிசுபிசுத்துக் கிடந்த அந்த விரலை பாலித்தீன் கவருக்குள் சுற்றி டி.வி.எஸ் 50 சித்தப்பாவை நடுவில் வைத்து பின்னால் ஒருவர் அமர்ந்து பிடித்துக் கொண்டார். தொலைபேசி வசதி எதுவும் இல்லை. அதனால் மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அந்த மழையில் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தோம். ஆயா நிற்காமல் புலம்பிக் கொண்டிருந்தார்.

சில மணிநேரங்களுக்கு பிறகாக மழை ஓய்ந்திருந்தது. மருத்துவமனைக்குச் சென்ற மூன்று பேரும் திரும்பி வந்தார்கள். விரலை ஒட்ட வைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்களாம். ஆனால் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். விரல் போனதில் ஆயாவுக்குத்தான் கடும் வருத்தம்.  “இது எருமை இல்லை எமன்” என்றார். எனக்கு எருமையை பார்க்க வருத்தமாக இருந்தது. ஆனால் எதுவுமே தெரியாதது போல எருமை அசை போட்டுக் கொண்டிருந்தது.எல்லோரும் தூங்கப்போன போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. விடிந்தும் எழாமல் தூங்கிக் கொண்டிருந்தேன். அம்மாதான் எழுப்பிவிட்டார். தூக்கம் தெளிந்தவுடன் இரத்தக்கறையை பார்க்கவேண்டும் என்று பொடக்காலிக்குச் சென்றேன். ரத்தக் கறை இரண்டாம் பட்சம். அங்கு எருமையைக் காணவில்லை. மொடச்சூர் சந்தைக்கு பிடித்துச் சென்றுவிட்டார்களாம். யார் பிடித்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை. அந்த எருமை போனது போனதுதான். அதன் பிறகு இத்தனை வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் எந்த எருமையும் எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை.

Feb 26, 2013

கட்டியாச்சு கட்டியாச்சு


ஒரு வீடு கட்டியாகிவிட்டது. கனவு மாதிரிதான் இருக்கிறது. கனவு என்பதால் வீடு குறித்து ஆயிரக்கணக்கான கற்பனைகள் செய்து வைத்திருந்ததாக நினைக்க வேண்டியதில்லை. இதற்கு முன்பாக பெங்களூரில் பி.டி.எம். லே-அவுட்டில் குடியிருந்தோம். குடியிருந்தோம் என்றெல்லாம் சொல்ல முடியாது. சட்டி பானைகளை அந்த வீட்டில் வைத்துவிட்டு பயந்து கொண்டிருந்தோம். எதற்கெடுத்தாலும் வீட்டு உரிமையாளருக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. அவரும் அவர் மனைவியும் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். ஆனால் இரண்டு பேரும் ஒரே வீட்டில்தான் குடியிருந்தார்கள்.  ஆரம்பத்தில் சுவரில் ஆணி அடிக்கக் கூடாது என்றுதான் சொல்லியிருந்தார். சரி என்று சொல்லியிருந்தோம். கொஞ்ச நாட்கள் ஆன பிறகு காலிங் பெல் கூட அடிக்கக் கூடாது என்று டார்ச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். சத்தம் அவருக்கு டிஸ்டர்பென்ஸாக இருக்கிறது என்று காரணம் சொன்னார். கதவைத் தட்டும் போது கூட கதவுக்கு ஏதும் பாதிப்பு வந்துவிடாமல் தட்டுங்கள் என்றெல்லாம் சொன்ன போது அலர்ஜியாக இருந்தது.  இதன் பிறகு தண்ணீர் பயன்பாட்டில் ஆரம்பித்து துவைத்த துணிகளை வீட்டிற்கு முன்னால் காயப்போடும் முறை வரைக்கும் எல்லாவற்றிலும் மூக்கை மட்டுமில்லாது மொத்த உருவத்தையும் நுழைத்துக் கொண்டிருந்தார்.

வேறு வழியில்லாமல் வேறு வீடு பார்க்க வேண்டியிருந்ததது. எங்கள் குடும்பத்தில் எட்டு நபர்கள். எட்டு பேருக்கு வீடு தர முடியாது என்று சொல்லும் ஓனர்களைத்தான் அதிகம் பார்க்க முடிந்தது. அத்தனை பேரும் செளகரியமாக புழங்கும் அளவிற்கான பெரிய வீட்டை பிடித்தால் முக்கால்வாசி சம்பளம் வாடகையாக கரைந்து கொண்டிருந்தது. வீடு தேடும் இந்த அலைச்சல் ஆளை பாதியாக்கிவிடும் போலிருந்து. இப்படியாகத்தான் வாடகை வீடு தேடலாம் என்பதிலிருந்து சொந்த வீடு வாங்கலாம் என்ற மனநிலைக்கு மாறிக் கொண்டிருந்தோம். இதன் பிறகு நடந்ததுதான் கனவு மாதிரி இருக்கிறது.

ஊரில் இருந்த இடத்தை விற்று இங்கு இடம் வாங்கி, கொஞ்ச நகைகளை வங்கியில் வைத்து, எப்படியெல்லாம் கடன் வாங்க முடியுமோ அப்படியெல்லாம் சேர்த்து...இப்படி இழுத்துக் கொண்டே போகலாம். பணம் சேர்ப்பது ஒரு பிரச்சினை என்றால் வேலை செய்தவர்களின் பிரச்சினைகள் பல பல. இஞ்சினியரின் அக்கப்போர்கள், வேலையாட்களின் அழிச்சாட்டியங்கள், பக்கத்துவீட்டுக்காரர்களின் புகார்கள் என அத்தனையும் தாண்டி ஒன்றரையணா கட்டடத்தை முடிக்க கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கிறது. 

கட்டட வேலை நடந்து கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் இரத்த அழுத்தம் கூடிக் கொண்டே வந்ததை உணர முடிந்தது. எப்பொழுது அடுத்த தொகை வரும் என்ற பொறியாளரின் கேள்வியில் ஆரம்பித்து, பெய்ண்ட் வாங்கி வாருங்கள், பத்து சதுர அடி மரம் வேண்டும், ஆசிட் ஐந்து லிட்டர் வேண்டும் என்று வேலை செய்பவர்களின் நச்சரிப்புகள் வரை ஒவ்வொன்றும் விரக்தியின் விளிம்புக்கு தள்ளிக் கொண்டிருந்தன. ஆசாரிக்காக மரக்கடையில் நிற்கும் போது பெய்ண்டர் அழைத்து அவசரப்படுத்துவார். அவருக்காக ஓடினால் டைல்ஸ் ஒட்டுபவருக்கு ஏதாவது தேவைப்படும். ஒரு கட்டத்தில் தொலைபேசி சிணுங்கினாலே கை கால் உதறல் எடுக்க ஆரம்பித்தது. பெரும்பாலான நேரங்களில் அலைபேசியை அணைத்து வைக்க பழகிக் கொண்டிருந்தேன். என்னிடம் பேச முடிவதில்லை என்று நண்பர்கள் புகார் வாசித்தார்கள். அவரவர் பிரச்சினை அவரவருக்கு. ஆனால் இனி கொஞ்ச நேரத்துக்கு அழைப்பு வராது என்று நினைப்பது ஆறுதலாக இருந்தது.

கட்டட வேலை முடிகிறதோ இல்லையோ புதுமனை புகுவிழாவை மாசி மாதத்தில் வைத்துவிட வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் சொல்வதும் வாஸ்தவம்தான். ஆனால் பொறியாளர் கட்டடத்தை முடிப்பதாகத் தெரியவில்லை. அலுவலகத்தில் அடிக்கடி விடுப்பும் எடுக்க முடியவில்லை. இது ஆண்டு இறுதி சமயம். சம்பள உயர்வில் கை வைத்துவிடுவார்கள். ஆனால் அரையும் குறையுமாக அடித்து நொறுக்கி புதுமனை புகுவிழாவையும் நடத்தியாகிவிட்டது. பெங்களூரில் இருக்கும் ஒரு ஐயர் வந்திருந்தார். தமிழ் ஐயர்தான். பிஸினஸூக்கு புதிதாக வந்திருக்கிறார் போலிருக்கிறது. இருபத்தைந்து வயதுக்குள்தான் இருக்க வேண்டும். அது வேண்டும் இது வேண்டும் என்றெல்லாம் கேட்காமல் “ஸ்வாஹா” “ஸ்வாஹா” என்று ஹோமத்தை நடத்தி வீட்டுச் சாவியை கொடுத்துவிட்டார். 

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்று புரிகிறதுதானே? ஒரு வாரமாக நிசப்தத்தில் எதுவும் எழுதாதற்கான Justification. அது இருக்கட்டும். சொந்தவீடு என்பது ஒரு திருப்தியான மனநிலையை தருகிறது. குழந்தைகள் சுவரில் கிறுக்கினால் ஓனர் திட்டுவார் என்ற பயமில்லை. மேலே குதித்தால் கீழ் வீட்டுக்காரர்கள் டென்ஷனாவார்கள் என்ற பதட்டமில்லை. ஆணியடிக்க பர்மிஷன் கேட்டால் தருவார்களா என்ற யோசனை இல்லை. இவையெல்லாவற்றையும் மிஞ்சிய திருப்தியும் கூட இருக்கும் போலிருக்கிறது. புதுமனை புகுவிழாவுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக கட்டத்தில் யாரும் இல்லை. லைட், பைப் யாவும் பொருத்தியாகிவிட்டது. ஆனால் கதவில் பூட்டு இல்லாமல் இருந்தது. இரவில் அப்படியே விட்டுவிட்டு போக பயமாக இருந்தது. அங்கேயே படுத்துக் கொள்ளலாம் என்றால் குப்பை, மரத்துகள், சிமெண்ட், மணல் என சகலமும் தாறுமாறாக கலந்து கிடந்தது. சுத்தம் செய்வதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. மிச்சமிருந்த ப்ளைவுட் ஸீட் ஒன்றை கீழே போட்டு அதன் மீது இரண்டு சாக்குப் பைகளை சுருட்டி தலையணை போல வைத்து படுத்துக் கொண்டேன். யாராவது வந்தால் என்ன செய்வது பயமாக இருந்தது. ஆனால் என்ன நடந்தாலும் என் சொந்த வீட்டில்தான் நடக்கப் போகிறது என்ற நினைப்பு அந்த பயத்தை மீறிய திருப்தியாக இருந்தது என்பதுதான் உண்மை. 

Feb 20, 2013

பாரத் பந்த்


இன்றைக்கு எட்டு மணிக்கெல்லாம் அலுவலகம் வந்தாகிவிட்டது. வராமல் என்ன செய்வது? பந்த் நடப்பதால் நேரத்திலேயே வந்துவிடச் சொல்லி மின்னஞ்சல் வந்திருந்தது. எழுந்தும் எழாமலும், பல் துலக்கியும் துலக்காமலும், குளித்தும் குளிக்காமலும் இப்படியே etc etc என்று தொடர்ந்து அலுவலகம் கிளம்பியாகிவிட்டது. 

பஸ் ஓடாது, ஆட்டோ இருக்காது என்றெல்லாம் நினைத்துக் கொண்டு வெளியே வந்தால் சகலமும் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏ.டி.எம் களில் பணம் கிடைக்காது என்று பதட்டத்தில் நேற்றிரவே கணக்கில் மிச்சமிருந்த சொச்ச பணத்தையும் எடுத்து பர்ஸில் திணித்து வைத்திருந்தேன். இன்று காலையில் வழக்கம் போல ஏ.டி.எம்மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். கையில் பணம் இருந்தால் எப்படியும் கரைந்துவிடும். இப்பொழுதுதான் தேதி இருபது ஆகிறது. இந்த மாதக் கடைசியில் சீட்டிதான் போலிருக்கிறது.

ஏ.டி.எம் மட்டுமில்லாமல் நேற்றிரவு பெட்ரோல் பங்க்களிலும் கூட்டம் பிதுங்கிக் கொண்டிருந்தது. மார்கெட்களிலும் கூட்டத்திற்கு குறைவில்லை. காய்கறிகளை அள்ளிக் கொண்டிருந்தார்கள். இந்த பில்ட் அப்களை பார்த்தால் மொத்த பெங்களூரும் ஸ்தம்பிக்க போகிறது என்றுதான் தோன்றியது. ஆனால் அவை அனைத்தும் இன்றும் வழக்கம் போலவே இயங்கிக் கொண்டிருந்தன. அப்படியானால் இன்றைக்கு பந்த் இல்லை போலிருக்கிறது என்று நினைத்துவிட வேண்டாம்.

மாதச்சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் சிவப்புக் கொடிகளை பிடித்துக் கொண்டு அவர்களது அலுவலகங்களின் முன்பாக அமர்ந்து கொண்டிருந்தார்கள். ஆறாவது ஊதியக்கமிஷனின் குழப்பங்களை நீக்கு, மத்திய அரசுப்பணிகளை அவுட்சோர்சிங் செய்ய வேண்டாம் என்பதெல்லாம் அவர்களது கோரிக்கைகள். அதுபோல பணவீக்கத்தை கட்டுப்படுத்து, விலைவாசியைக் குறை, வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கு போன்று சாத்தியமே இல்லாத கோரிக்கைகளையும் சேர்த்திருக்கிறார்கள். இன்னும் சில கோரிக்கைகள் இருக்கக் கூடும். 

இந்த தொழிற்சங்கவாதிகள் கோரிக்கைகளை முன்வைப்பது பற்றிய ஆட்சேபனைகள் எதுவும் இல்லை. ஆனால் இரண்டு நாட்கள் பந்த் நடத்துவதால் காய்கறி விற்பவனுக்கும், தினசரி ஆட்டோ ஓட்டி பிழைப்பவனுக்கும், கட்டடவேலை செய்பவனுக்கு, மண் வேலை செய்பவர்களுக்கும் என்ன பயன் வந்துவிடப் போகிறது என்றுதான் தெரியவில்லை. ஆனால் இந்த பந்த்களால் அதிகம் பாதிக்கப்படப் போவது அவர்கள்தான். 

பந்த நடத்துபவர்கள் தங்களது அலுவலகங்களுக்குள் தங்களது மேனேஜ்மெண்ட் பாதிக்கும்படியாக என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டால் பிரச்சினையே இல்லை. சம்பந்தமேயில்லாதவர்களின் கழுத்தை அறுப்பதற்கு எதற்கு தொழிற்சங்கம், பந்த் போன்ற வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் குழப்பமாக இருக்கிறது. கடந்த பதினைந்து அலல்து இருபது ஆண்டுகளில் இந்த நாட்டில் பந்த்கள் சாதித்தது என்ன என்ற பட்டியல் எதுவும் எடுத்தால் வெறும் பூச்சியம்தான் மிஞ்சும். அரசியலில் தங்களின் இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், பெட்டி வாங்குவதற்கும்தான் பந்த் நடத்துகிறார்கள் என்ற பிம்பத்தைத் தவிர வேறு ஏதேனும் பயன் உண்டா என்று தெரியவில்லை.

நேற்று கே.ஆர் மார்க்கெட்டிலிருந்து எலெக்ட்ரானிக் சிட்டி வரைக்கும் ஒரு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன். ஆட்டோக்காரர் என்னைவிடவும் சின்னப்பையன் தான். திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. மைசூர் ரோட்டில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். ஆட்டோ அவருடையது இல்லை. வேறொரு ஆட்டோ முதலாளியிடம் இருந்து ஆட்டோவை வாடகைக்கு எடுத்து வந்து ஓட்டுகிறார். மதியம் மூன்று மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை ஆட்டோவை ஓட்டிக் கொள்ளலாமாம். இதற்காக ஒரு நாளைக்கு இருநூறு ரூபாயை முதலாளிக்கு கொடுத்துவிடுகிறார். ஆட்டோவுக்கான பெட்ரோல் சராசரியாக இருநூற்றைம்பது வரை ஆகிறது. இது போக மிச்சம் பிடித்தால் அவருக்கு இலாபம். 

ஒரு நாளைக்கு எந்நூறு ரூபாய்க்காவது ஓட்டினால்தான் வீட்டு வாடகையிலிருந்து குழந்தைக்கான செலவு வரை அத்தனையும் சமாளிக்க முடியும் என்றார். ஆனால் அத்தனை வருமானம் வருவதில்லை என்றும் சராசரியாக அறுநூறு அல்லது எழுநூறு ரூபாய்தான் கிடைக்கிறது என்றார். இதோடு நிறுத்தி தொலைந்திருக்கலாம். குழந்தையைப் பற்றி விசாரித்தேன். குழந்தை நாராயண ஹிருதயாலயாவில் இருக்கிறதாம். இதயத்தில் ஏதோ ஒரு வால்வில் பழுது என்றார். எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு கடன் வாங்கிக் கொண்டிருப்பதாகவும் குழந்தை சரியான பிறகு கடனை அடைத்துவிட முடியும் என்று நம்புவதாகவும் பேசிக் கொண்டிருந்தார். இதன் பிறகு அவரிடம் பேசுவதற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இன்றைய பந்த்தினால் நேரடியாக பாதிக்கப்படப் போவது இந்த ஆட்டோக்காரரை போன்ற இலட்சக்கணக்கான அன்றாடங்காய்ச்சிகள்தான். பந்த்க்கு அழைப்பு விடுத்திருக்கும் பதினோரு தொழிற்சங்கத் தலைவர்களும் ஏ.சி.ரூமில் இருப்பவர்கள் என்று நம்புகிறேன். மாதச்சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியர்கள் இரண்டு நாள் விடுப்பு கிடைத்த சந்தோஷம். வங்கிப் பணியாளர்கள் வீட்டில் அமர்ந்து டி.வி பார்க்கலாம். மாலையில் குடும்பத்தோடு ஒரு ஜாலி ட்ரிப் அடிக்கலாம்.

சோற்றுக்கு லாட்டரி அடிப்பவர்கள் எப்படியோ தொலையட்டும். 

தொழிற்சங்கம் ஜிந்தாபாத்......சமத்துவம் ஜிந்தாபாத்!

Feb 19, 2013

அதிர்ச்சி


அலுவலகத்தில் மதியம் சாப்பிட போகும் போது முடிந்தவரை தனியாகப் போவதுதான் வழக்கம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் சாப்பிடும் போது பேச விரும்பாதது, இரண்டாவது காரணம் அந்த நேரத்தில் கேண்டீனில் டிவி ஓடிக் கொண்டிருக்கும். அன்றைய தினத்தின் அதிகாலையில் யாரையெல்லாம் தூக்கில் தொங்கவிட்டார்கள் போன்ற செய்திகளைத் தெரிந்துகொள்ள அதுதான் சரியான நேரம். இப்படியே போனால் ஜனாதிபதியைத் தவிர அத்தனை பேரையும் தொங்கவிட்டுவிடுவார்கள் போலிருக்கிறது. தேவைப்பட்டால் தானே சிறைச்சாலைக்கு வந்து தூக்கு கயிறை இழுக்கவும் தயங்காத ஜனாதிபதியை பெற்றிருக்கிறோம். ‘என்ன தவம் செய்தனை’ என்று தாராளமாக பாடலாம். 

கருணை மனுவை நிராகரிப்பது என்பது ஜனாதிபதியின் தனிப்பட்ட நடவடிக்கை இல்லையாம். அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி ரப்பர் ஸ்டாம்ப்பை குத்துவாராம். மத்திய அமைச்சரவைக்கும், ஜனாதிபதிக்கும் ‘கருணை மனு’க்களை ரத்து செய்வது மட்டும்தான் வேலையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. பாலியல் வன்முறைகள், ஊழல்கள், சரியும் பொருளாதார வளர்ச்சி, ஏறும் விலைவாசி என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்க அத்தனை செய்திகளையும் பின்னால் தள்ளிவிடும் வேலையை மட்டுமே செய்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

முப்பது வருடங்களுக்கு முன்னால் பீரங்கி வாங்கியதிலிருந்து இன்றைக்கு வாங்கிய ஹெலிகாப்டர் வரைக்கும் எல்லாவற்றிலும் ‘கை சுத்தமான’ அரசாங்கமாகவே அமைந்துவிடுவது நமது அதிர்ஷ்டம்தான். ஆனால் பாருங்கள், பல லட்சம் கோடியாக இருந்தாலும் சரி பல்லாயிரம் கோடியாக இருந்தாலும் சரி. மூன்று மாதங்களுக்குத்தான் மீடியாக்கள் குதிக்கின்றன. அதன்பிறகு என்ன மாய மந்திரம் நடக்கிறதோ தெரியவில்லை. ‘கப்சிப்’ ஆகிவிடுறார்கள்.

ஆதர்ஷ் வீட்டுவசதி திட்டத்தில் ஆட்டையை போட்டது, ஸ்பெக்டரத்தில் அமுக்கியது, காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், தாத்ரா வண்டிகள் வாங்கியதில் நடந்த பதுக்கல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் கசமுசா என லிஸ்ட் போட்டால் பெரும்பாலானவற்றை நாம் மறந்திருப்போம் அல்லது மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம். நமக்கும் சில நாட்களுக்குப் பிறகாக பின் தொடர்வதற்கு சின்மயி அல்லது குஷ்பூ சிக்கிவிடுகிறார்கள்.

இப்பொழுது நடந்த ஹெலிக்காப்டர் ஊழலில் என்ன நடந்தது என்றே தனக்கு தெரியாது என்று பிரதமர் சொல்கிறார். உண்மையில் இந்த திட்டத்தை மத்திய அமைச்சவரவையுடன் சேர்ந்து பிரதமரும் அனுமதித்திருக்கிறார். தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்வதை டகால்ட்டி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ராணுவ அமைச்சர் அந்தோணி பிரதமரை விட சின்னக்குழந்தை போலிருக்கிறது. வாயில் நிப்பிளுடன் சுற்றும் பாப்பா போல நடிக்க முயற்சிக்கிறார். இந்த திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டார். கற்பழித்தவனை கிராமப்பஞ்சாயத்தில் நிறுத்தி தண்டனையாக ஐந்து வெடக்கோழியை கொடுத்துவிடச் சொல்லும் உத்தரவு போலத்தான் இது. இத்தாலி அரசாங்கம் அந்த நிறுவன அதிபரை கைது செய்யும் வரை இவர்களுக்கெல்லாம் என்ன நடந்தது என்றே தெரியாதாம். சரி விடுங்கள்.

காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் முகநூலைத் திறப்பதில் பெரிய சிரமங்கள் வந்து சேர்ந்துவிடுகின்றன. எழுத்தாளர் இரா.முருகன் முகநூலில் எழுதியிருந்த குறிப்பை வாசித்துவிட்டு ஹிந்து நாளிதழின் தளத்தைத் திறந்தால் இன்றைய தினத்துக்கான அதிர்ச்சி காத்திருந்தது. இன்றைய தினத்திற்கு மட்டுமில்லை இன்னும் பல வருடங்களுக்கு நினைவில்   வந்து போகக் கூடிய படங்கள் இவை. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் இறப்பதற்கு சில வினாடிகளுக்கு முன் எடுக்கப்பட்ட படங்கள். இதைப்பற்றி எதுவும் எழுத வேண்டியத்தில்லை.  நிழற்படங்களே அத்தனை வலிகளையும் சொல்லிவிடுகிறது. 

இலங்கையை ஆளும் அரசு, நம்மை ஆளும் அரசு, தமிழகத்தை ஆண்ட அரசு, வேடிக்கை பார்த்த வல்லரசுகள், அமைதியாக இருந்த இந்திய ஊடகங்கள் அத்தனை பேருக்கும் இந்த பிஞ்சுச் சிறுவனின் கண்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆனால் யாருக்குமே பதில் சொல்லும் திராணியும் மனசாட்சியும்தான் இல்லை.

Feb 18, 2013

நீர்த்துளிகள் ஒட்டாத மின்னுகிற கருஞ்சரீரம்


கவிதைகள் பற்றி பேசும் போது “கவிதைக்கான வரையறை இருக்கிறதா?” என்ற கேள்வியும் கூடவே திரிந்து கொண்டிருக்கும். இது முக்கியமான கேள்வியும் கூட. கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பேசுவதும், எழுதுவதும் கவிதையை பற்றி புரிந்து கொள்வதற்கான முயற்சிதானேயொழிய “இதுதான் கவிதை” என்று யாராலும் வரையறை செய்துவிட முடியாது என்று நம்புகிறேன். அப்படி செய்யப்பட்ட வரையறைகள் கூடிய விரைவாக நெகிழ்ந்துவிடக் கூடும் அல்லது புதிய வாசகன் அனாயசமாக தாண்டிவிடக் கூடும். ஒரு கட்டுரையின் முதல் பத்தியை தொடங்குவதற்கான சம்பிரதாயமான வரிகளாக இதைச் சேர்க்கவில்லை. 

அபி மதியழகனின் “நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன்” தொகுப்பின் கவிதைகளை வாசிக்கும்போது தோன்றியதுதான் இது. நவீன கவிதைகளுக்கான வரையறைகள் என சிலவற்றை கற்பிதம் செய்து வைத்திருக்கிறேன். எனக்கு நானே உருவாக்கிக் கொண்ட அல்லது பிறரிடமிருந்து கற்றுக் கொண்ட பல கோட்பாடுகளாலான வரையறை இது. ஆனால் எனது கோட்பாடுகளுக்குள் அடக்கிவிட முடியாத கவிதைகளாக மதியின் கவிதைகள் இருக்கின்றன. பிறகு எப்படி இவற்றை நவீன கவிதைகள் என்று முன்வைத்து பேச முடியும் என்ற குழப்பம் வந்தது. 

இதே குழப்பம் முன்பொரு சமயம் வந்திருக்கிறது. அது மு.சுயம்புலிங்கத்தின் கவிதைகளை வாசிக்கும் போது. அப்படியானால் சுயம்புலிங்கத்தின் கவிதைகளுக்கும், அபி மதியழகனின் கவிதைகளுக்கும் இடையில் சம்பந்தம் இருக்கிறததுதானே? ஆமாம் இருக்கிறது. இரண்டும் மண்ணின் கவிதைகள். அதாவது மனிதர்கள் வாழும் கவிதைகள். ஆனால் இந்த இடத்தில் சுயம்புலிங்கம் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. எதற்காக இந்த சம்பந்தத்தை குறிப்பிடுகிறேன் என்றால், சுயம்புலிங்கத்தை எந்த விதத்தில் பிடித்த கவிஞராக ஏற்றுக் கொள்கிறேனோ அதே காரணத்திற்கான பல அம்சங்களை மதியின் கவிதைகளில் பார்க்கிறேன் என்பதை சொல்வதற்காக.

மதியின் கவிதைகள் மொத்தமும் மண்ணின் கவிதைகள் என்று சொல்ல முடியாது. ஆனால் என்னளவில் அவைதான் முக்கியமான கவிதைகளாக இருக்கின்றன. அம்மா என்னும் ஓர் ஊழியக்காரி (அ) குல தெய்வப்படையல் என்னும் ஒரு கவிதை ஒன்று போதும்- உதாரணமாகச் சொல்வதற்கு. நகரத்திற்கு குடியேறி வந்துவிட்ட மகனுக்கும், தனது ஊரை விட்டு வராமல் இருமலோடு போராடிக் கொண்டிருக்கும் தாய்க்குமான தொலைபேசி வழி உரையாடல்தான் கவிதை. பேச்சு வழக்கில் நகரும் இந்தக் கவிதை வெறும் ‘செண்டிமெண்ட்’ தெறிப்பாக தொக்கிவிடுவதற்கான அத்தனை வாய்ப்புகள் இருந்தும் தாண்டி வந்திருக்கிறார் மதியழகன். தாண்டி வருதலுக்குத் தேவையான Poetic essence ஐ துல்லியமாக கவிதையில் சேர்த்திருக்கிறார். 

அதே போல அதென்ன வாரி என்ற கவிதையை lighter poetry என்பதற்கான உதாரணமாக சுட்டிக்காட்டலாம். அவர்களது ஊரில் இருக்கும் ஒரு இடத்தை அம்பட்டன் வாரி என்கிறார்கள். “அம்பட்டன் வாரிகிட்ட நில்லு” “அம்பட்டன் வாரில போய் குளிச்சிக்கலாம்” என பெரும்பாலும் அம்பட்டன் வாரியைத்தான் அடையாளமாகச் சொல்கிறார்கள். அந்தக்காலத்தில் முதன்முதலாக ரோடு போட்டதில் ஆரம்பித்து கலியன் என்ற அம்பட்டனின் வாழ்க்கைவரை நிறைய செய்திகள் கவிதையில் இருக்கின்றன. இவையாவும் சுவாரசியமான செய்திகள். ஏதோ ஒரு நிலப்பிரச்சினைக்காக தென்னார்க்காடு ஜில்லாவின் பழைய மேப் ஒன்றை பார்க்கிறார் கவிதை சொல்லி. மேப்பில் அந்த இடம் ஹாமில்டன் வாரி என்றிருக்கிறது. அப்படியானால் அம்பட்டன் வாரி என்பது என்ன? இரண்டும் ஒன்றேதான். ஹாமில்ட்டன் வாரி என்பதுதான் மருவி அம்பட்டன் வாரி என்றாகியிருக்கிறது. கவனித்துப்பார்த்தால் கடைசி வரி மட்டும்தான் கவிதைக்கான அடிப்படை. ஆனால் இந்தக் கவிதையில் தான் ஆறாம் வகுப்பு படித்த போது இருந்த ஊரின் சித்திரத்தை கொண்டு வந்திருக்கிறார். மிக எளிமையாக இருக்கிறது. வாசிக்கும் போது ஆசுவாசமாகவும் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கவிதையை Lighter poetry என்று சொல்ல முடிகிறது.  

இரண்டு பத்திகளுக்கு முன்பாக மதி மண்ணின் கவிதைகள் தவிர்த்து வேறு வகைக் கவிதைகளையும் முயன்றிருக்கிறார் என்று சொன்னேன் அல்லவா? அது பற்றியும் ஓரிரு வரிகள் சொல்லிவிட விரும்புகிறேன். இத்தகைய கவிதைகள் நுட்பங்களால் ஆனவை. சொற்த்தேர்ச்சி, வரிகளின் அமைவு போன்ற கவிதையியல் பொறியியலால் ஆனவை. ஆனால் இவ்வகைக் கவிதைகளை பிரதிநிதித்துவப்படுத்தி இவரது மண்ணின் கவிதைகளை நிழலுக்கு நகர்த்திவிட விரும்பவில்லை. அவற்றை பிறிதொரு சமயத்தில் பேச விரும்புகிறேன். 

கவிதையின் நுட்பங்கள் என்று பேசினோம் அல்லவா? இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட மனம் விரும்புகிறது. கவிதையின் நுட்பங்களைப் பற்றி கவிஞன் கவலை கொள்ள வேண்டியதில்லை. கவிதையின் நுட்பங்கள் எனச் சொல்வது Poetic Engineering அல்லது Poetic Technology போன்றவற்றை. கவிதையின் நுட்பங்களை கவிஞன் தெரிந்து கொள்ளும் போது அவனது கவித்துவத்தையும் மீறி நுட்பங்கள்தான் வெளியில் பிதுங்கத் துவங்குகின்றன. கவிதையில் இருக்க வேண்டியது கவிஞனின் மனம்தானே தவிர அவனது அறிவு இல்லை. கவிஞன் ஒரு போதும் அறிவாளியாகவும் இருக்க வேண்டியதில்லை. என்னளவில் கவிஞனின் மடத்தனம்தான் படைப்பின் உச்சம். இந்தத் தொகுப்பிலிருந்து நான் புரிந்து கொள்வது மதி கவிதையின் நுட்பம் தெரியாதவராக இருந்திருக்கிறார். இது அவரது பலம். சில கவிதைகளில் 'கவிதையின் நுட்பங்கள்' என பலரால் முன்வைக்கப்பட்டிருப்பனவற்றை முயன்று பார்த்திருக்கிறார். அது அவரது பலவீனம்.  

மண்ணின் கவிதைகள் என்று சொல்லும் போது வெற்றிபெற்றவர்களின் பட்டியலில் சுயம்புலிங்கம் வருவதைப் போல தோல்வியுற்றவர்களின் பட்டியல் எடுத்தால் நிறைய கவிஞர்களை சேர்த்துவிட முடியும். ‘பறவீரன்’ என்ற ஆகச்சிறந்த கவிதையை எழுதிய பழமலய் கூட பிறகு கவிதைகளில் தடம் பதிக்க முடியவில்லை. அதற்கும் காரணம் அவர் எழுதிய மண்ணின் கவிதைகள்தான். இந்த வகைக்கவிதைகளில் பயணிப்பது மிக ஆபத்தானது. மிகச் சிறந்த கவிதையாக வந்திருக்க வேண்டியவையும் கூட சில தவறுகளால் மிக தட்டையானவையாக தெரியக் கூடும். அபியின் இந்தத் தொகுப்பில் சில கவிதைகளில் இத்தகைய தோல்வியைத் தழுவியிருக்கிறார். தாத்தா (சொன்ன) கதை ஒரு உதாரணம். முனியப்ப சாமியின் வேட்டையையும் அவர் வேட்டையாண்ட மனிதர்களையும் முன்வைத்து மிகுந்த உத்வேகத்தோடு தொடங்கும் கவிதை கடைசியில் சாதாரண ஒரு ‘தொடுப்பு’ உறவு பற்றிய உரையாடலாக முடிந்துவிடுகிறது. இந்தக் கவிதையை வாசிக்கும் வாசகன் தனக்கான இடம் என இந்தக் கவிதையில் எதைக் கருத முடியும் என்ற கேள்வியைக் கேட்டால் இந்தக் கவிதை தோல்வியடைந்துவிடும். கவிதை முடிந்த பிறகும் வாசகனின் சிந்தனையோட்டம் முடிந்துவிடாமல் தொடர்வதற்கான நீட்சியை கவிதை தர வேண்டும் என என் மனம் விரும்புகிறது.

இந்தக் கவிதையை சுட்டிக்காட்டியமைக்கு காரணம் மதியின் கவிதைகளில் இருக்கும் குறைபாடுகளை Expose செய்வதற்காக இல்லை. கவிதையில் வாசகனுக்கான இடம் என்பதை விளக்குவதற்காகத்தான். சிற்சில குறைகள் இல்லாத ஒரு தொகுப்பைக் கூட பார்க்க முடியாது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அந்த வகையில் இந்தத் தொகுப்பிலும் குறைகள் உண்டு. தனக்கான மொழியையும், கருவையும் கண்டடைந்துவிட்ட மதிக்கு தனது பாதை சரியானதாக இருக்கிறதா என்பதில் குழப்பம் இருந்திருக்க வேண்டும். அதனாலேயே வேறு சில வகைக் கவிதைகளையும் முயன்றிருக்கிறார். இந்தக் குழப்பங்கள் முதல் தொகுப்பில் இயற்கானவை என்றே நினைக்கிறேன். அடுத்து வரும் தொகுப்பில் இந்த குழப்பங்களை நீக்கிவிடுவார் என நம்பலாம். மற்றபடி என்னளவில் இந்தத் தொகுப்பை நல்லதொரு தொகுப்பாக முன் வைக்கிறேன்.

Feb 14, 2013

நோபல் பரிசு வாங்குவதற்கான ஒரு ஐடியா


கல்லூரியில் படிக்கும் போது அதீத ஆர்வக்கோளாறாக திரிந்தேன். முந்திரிக்கொட்டை என்றும் சொல்லலாம். எலெக்ட்ரிகல் துறையில் சேர்ந்தவுடன் நான்தான் அடுத்த தாமஸ் ஆல்வா எடிசன் என்ற நினைப்பு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எதையாவது கண்டுபிடித்து ஆஸ்கார் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ரொம்ப நாட்களுக்கு பிறகுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் ஆஸ்கார் தர மாட்டார்கள் என்று தெரிந்தது. இருந்தாலும் மனம் ஒடிந்துவிடவில்லை. ‘விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்’ என்ற பாலிசியின் படி எனது விருப்பத்தை ஆஸ்காரிலிருந்து நோபலுக்கு மாற்றிக் கொண்டேன்.

இந்த நோபல் வெறி வந்த பிறகு எதிரில் கிடைத்த வாத்தியார்களையெல்லாம் பிறாண்டியது ஞாபகத்தில் இருக்கிறது. முதல் வருடத்தில் இரண்டு வாத்தியார்கள் எனக்கு விருப்பமானவர்களாக இருந்தார்கள். அவர்களைத்தான் அதிகமாக பிறாண்டினேன். அரவிந்த் வைத்தியலிங்கம் அதில் ஒருவர். விவரமான மனிதர். கலாய்க்கிறாரா அல்லது உண்மையாக பேசுகிறாரா என்பதை கண்டுபிடிப்பது மிகச் சிரமம். சிரித்துக் கொண்டே பேசுவார். கோபம் வந்தாலும் பற்களைக் கடித்துக் கொண்டே சிரிப்பார். இப்பொழுது சிங்கப்பூரிலோ அல்லது மலேசியாவிலோ செட்டில் ஆகிவிட்டாராம். இன்னொருவர் ஜெகதீஸ்வரன். வெள்ளந்தியான மனிதர். நான் பேசுவதையெல்லாம் வைத்து என்னை அறிவாளி என்று நம்பிக்கொண்டிருந்தார் என்றால் பாருங்கள்.

இவர்களிடம் ‘கரண்ட் ஏன் கண்ணுக்கு தெரிவதில்லை’ போன்ற கேள்விகளைக் கேட்டு டார்ச்சர் செய்ததுண்டு என்றாலும் நோபல் வெறியை காட்டிக் கொண்டதில்லை. ஆனால் ஆசையை எத்தனை நாளைக்குத்தான் அடக்கி வைக்க முடியும். அந்த நாளும் வந்தது. நோபல் பரிசு வாங்குவதற்கு பிள்ளையார் சுழி போட்ட நாள்தான் அது.

அன்று காலையிலிருந்தே கண்டுபிடிப்பு ‘ஐடியா’மூளைக்குள் குண்டு பல்பை எரிய விட்டிருந்தது. அரவிந்த் அல்லது ஜெகதீஸ்வரனிடம் பேசி இந்த கண்டுபிடிப்புக்கு எப்படியும் நோபல் வாங்கிவிடுவது என்று கங்கணம் கட்டியிருந்தேன். குளித்து, சாமி கும்பிட்டு, திருநீறை நீரில் கலந்து பட்டையாக அடித்துக் கொண்டு எலெக்ட்ரிகல் ஆய்வகத்துக்குள் தேடினால் இரண்டு பேரையும் காணவில்லை. வகுப்பு தொடங்கும் நேரம் வந்தும் அவர்கள் வந்து சேர்வதாகத் தெரியவில்லை. நோபல் கனவை அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் போலிருக்கிறது என வகுப்பறைக்கு சென்றுவிட்டேன். யாரோ இரண்டு பேர் பாடம் நடத்தினார்கள். அதெல்லாம் மண்டையில் ஏறவில்லை. 

நோபல் பரிசை வாங்கிக் கொண்டு கரட்டடிபாளையம் வருவதாகவும் அங்கு ஊரே திரண்டு நின்று வரவேற்பு கொடுப்பதாகவும் முட்டி போட்டு அந்த மண்ணுக்கு முத்தமிடுவதாகவும் கலர் கலர் கனவுகளாக ஓடிக் கொண்டிருந்த போதுதான் அந்த துர்சம்பவம் நிகழ்ந்தது. நெற்றியில் ‘சட்’டென்று சாக்பீஸ் அடித்தது. ராஜேஸ்வரி மேடம்தான் அடித்திருக்கிறார். கணக்கு சொல்லித்தருவதற்கு மட்டுமில்லாமல் குறி பார்த்து அடிப்பதற்கும் பயிற்சி செய்திருப்பார் போலிருக்கிறது. ஏதோதோ கேள்வி கேட்டார். பதில் தெரியவில்லை. வெளியே துரத்திவிட்டார். விஞ்ஞானி ஆவதற்கான முதல் ஸ்டெப் இது. வெளியே வந்தவுடன் அத்தனை சந்தோஷம். இரண்டு மணி நேர தாமதத்தை ஒரு மணிநேரமாக குறைத்துக் கொண்ட சந்தோஷம் அது.

மீண்டும் ஆய்வகத்திற்கு ஓடினேன். அரவிந்த்தான் அமர்ந்திருந்தார். அந்த காலகட்டத்தில்தான் பேஜர், மொபைல் போன் எல்லாம் பரபரப்பாகிக் கொண்டிருந்தது. 

“சார், இந்தக்காலத்தில் எல்லாமே வயர்லெஸ் ஆகிட்டு இருக்குல்ல?”

“ஆமாம்ப்பா...இனிமேல் அதுக்குத்தான் ஃப்யூச்சர்”

“எனக்கு ஒரு ஐடியா இருக்கு சார்”

“அப்படியா என்ன ஐடியா?”

“அந்த ஐடியாவை ஒரு ப்ராஜக்டா செய்யணும்...நீங்க கைட் செய்யறீங்களா?”

“ஐடியாவை சொல்லுப்பா”

“வயர்லெஸ்ல சிக்னல் அனுப்புற மாதிரி வயர்லெஸ்ஸா பொருட்களை அனுப்பணும்”

இந்த இடத்தில் அவர் ஜெர்க் ஆனதை கண்கூடாக பார்த்தேன். ஆனால் சமாளிக்க முயன்றார். 

“அது எப்படி முடியும்” என்று அவர் கேள்வி கேட்டிருக்க வேண்டியதில்லை. அவர் கேட்டுவிட்டார். அவர் விதியை யாரால் மாற்ற முடியும். ஒளிர்ந்த கண்களுடன் விவரிக்க ஆரம்பித்தேன்.

“கூரியர் ஆபிஸ் ஆரம்பிக்கணும் சார். டிவி, ஃப்ரிட்ஜ் என்று எதுவாக இருந்தாலும் சரி உருக்கி ஆவியாக மாற்றி கண்ணுக்கே தெரியாத மூலக்கூறுகளாகவும் அணுக்களாகவும் மாற்றிவிட வேண்டும். அவற்றை வயர்லெஸ் டெக்னாலஜியைப் பயன்படுத்தி அனுப்பி வைக்கிறோம். அதை அந்தப்பக்கத்தில் இருக்கும் ஆபிஸில் பிடித்து மீண்டும் அதே பழைய வடிவத்திற்கு மாற்றிவிடப் போகிறோம். அவ்வளவுதான். மேட்டர் சிம்பிள்”

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை நான் கலாய்ப்பதாக நினைத்திருக்கக் கூடும். அவர் பேசுவதாக இல்லை. அதனால் விட்டுவிட முடியுமா? நானே தொடர்ந்தேன். 

“இதில் ஒரு சிக்கல் இருக்கு சார்”

“ஒரு சிக்கல்தானா?” என்றார்.

“ஆமாம் சார்..நாம அனுப்புற டிவியை இடையில் யாராவது பிடித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் அதை என்கோடிங் செய்து அனுப்பணும் சார்” என்ற போது தலையில் கை வைத்துக் கொண்டார். 

“ப்ராஜக்டா செய்யலாமா சார்?” என்றேன்.

“இதைச் செய்ய நான் வொர்த் இல்லை. ஜக்குகிட்ட பேசிப்பார்க்கலாம்” என்றார். அந்த நேரத்தில் ஜெகதீஸ்வரனுக்கும் கெட்ட நேரம் போல. ஆய்வகத்துக்குள் வந்து கொண்டிருந்தார். 

“ஏம்ப்பா ஜக்கு, இந்தப் பையன் என்னமோ சொல்லுறான். நீ கைட் பண்ணுறியா?” என்று நக்கலாக சிரித்தபடியே நகர்ந்து கொண்டார்.

ஜெகதீஸ்வரன் வெள்ளந்தி மனிதர். என்னமோ ஏதோ என்று கேட்கத் துவங்கினார். 

“இதெல்லாம் ப்ராக்டிகலா முடியாதுப்பா...” என்று தொடங்கிய அவரை முடிக்கவிடவில்லை. 

“முடியாது என்பது முட்டாள்த்தனம்” என்று பிலாசிபகலாக பேசத் துவங்கினேன். அவரும் எத்தனையோ சிக்கல்களை சொல்ல முயன்றார். நான் விடுவதாக இல்லை. கிட்டத்தட்ட அவரது குரல் நடுங்கியது. அந்த ஆய்வகத்தில் வேறு யாருமே இல்லாதது அவரது பயத்தை அதிகமாக்கியிருக்கலாம். ஓவர் ஆர்வத்தில் நான் கடித்து வைத்துவிடக் கூடும் என்று கூட பயந்திருக்கலாம். 

அவரால் தப்பிக்க முடியாது என்ற நிலைமை வந்தபோது  “இதைப் பத்தி இன்னைக்கு ஃபுல்லா யோசனை செய்யறேன். இப்போதைக்கு அடுத்த வகுப்புக்காக கொஞ்சம் தயாரிப்பு செய்ய வேண்டும்” என்றார். 

“சரி சார். சாயந்திரம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன். 

அடுத்த சில மாதங்களுக்கு அரவிந்தையும், ஜெகதீஸ்வரனையும் பார்க்கவே முடியவில்லை. 

Feb 13, 2013

டைம்பாஸ்


வலைப்பதிவு எழுதுவது என்பது கிட்டத்தட்ட டைம்பாஸ்தான். அதற்காக ஆனந்தவிகடனின் ‘டைம்பாஸ்’ அளவிற்கு கீழிறங்க வேண்டியதில்லை. தராதரத்தோடு டைம்பாஸ் என்று வைத்துக் கொள்ளலாம். சொல்வதற்கும், எழுதுவதற்கும் வேண்டுமானால் எளிமையாக இருந்தாலும் நேரத்தை கொல்வது அத்தனை எளிதான காரியமில்லை. அதைப் போன்ற கொடுமையும் வேறு இல்லை. 

கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் புரட்சியை நிகழ்த்திய கண்டுபிடிப்புகளின் முக்கியமான பணியாக ‘நேரத்தை கொல்லுதல்’ இருந்திருக்கிறது. ரேடியோ, டிவி என பட்டியல் எடுத்தால் அவற்றின் தலையாய கடமை ‘டைம்பாஸ்’தானே?. இண்டர்நெட் வந்தபிறகு நேரத்தை கொல்வது இன்னமும் கடினமாகியிருக்கிறது. ஊர் சுற்றுவதில்லை, நண்பர்களோடு திரிவதில்லை என்ற ஏராளமான காரணங்களால் நேரம் நீண்டு விட்டது. கம்யூட்டர் முதல் மனைவியாகக் கட்டிக் கொண்டவர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்ட நிறுவனங்கள் கர்மசிரத்தையாக கண்விழித்து  டைம்பாஸூக்காக வழிகோலியிருக்கிறார்கள். ஆர்குட்,ட்விட்டர், ஃபேஸ்புக் என ஒவ்வொன்றின் அடிப்படையும் ‘டைம்பாஸ்’தான்.  ‘வெட்டி வேலைக்கான’தளங்கள் என்றால் நம் ஈகோ துள்ளி குதிக்கும் என்பதால் சமூக வலைத்தளங்கள் என்று டீசண்டாக பெயர் வைத்துவிட்டார்கள்.

ஓகே. 

இன்றைக்கு எழுத ஆரம்பிக்கும் போது “நோ ஃபீலிங், நோ அட்வைஸ், நோ கோபம்” என்றுதான் நினைத்தேன். விட்டால் பொங்கிவிடுவேன் போலிருக்கிறது. 

ஹைதராபாத்தில் இருந்தபோது தனிமைச்சிறையை அனுபவிக்க வேண்டும் என மனம் விரும்பியது. எதனால் அப்படியொரு ஆசை வந்தது என்று தெரியவில்லை. ஆனால் வந்துவிட்டது. அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு சிறையில் இருப்பது என திட்டமிட்டேன். ஃபோன், டிவி, செய்தித்தாள் என எந்த வசதியும் இருக்கக் கூடாது என்பது விதித்துக் கொண்ட முக்கியமான நிபந்தனை. வானத்தையும் வெளியுலகத்தையும் பார்க்கக் கூடாது என முடிவு செய்திருந்தேன். 

தமிழ்நாட்டில் இருந்த அம்மா அப்பாவிடம் ஒரு மீட்டிங்குக்காக வெளியூர் செல்வதாகவும் மூன்று நாட்களுக்கு ஃபோனில் கூட பேச முடியாது என்று சொல்லிவிட்டேன். உடன் தங்கியிருந்த அறைத்தோழர்களிடம் திட்டத்தைப் பற்றி சொன்னால் அவர்கள் என்னை மனநோயாளி என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் அவர்களிடமும் வெளியூர் செல்வதாகச் சொல்லியிருந்தேன்.

ஹைதராபாத்தில் அமீர்பேட் என்ற இடத்தில் சிறையிருப்பதற்கான விடுதி அறையைத் தேடினேன். அறைவாடகை முந்நூறு ரூபாயைத் தாண்டினால் அந்த அறையில் நிறைய வசதிகள் இருப்பதாகப் பட்டது. குறைந்தபட்சம் சாலையை பார்க்கும் படியாக ஜன்னல் வைத்திருந்தார்கள். அவற்றை நிராகரித்துவிட்டு அலைந்து திரிந்ததில் ஒரு விடுதியை கண்டுபிடிக்க முடிந்தது. இருநூறு ரூபாய்தான் வாடகை. நல்ல மெத்தை கிடையாது, டிவி கிடையாது. ஒரேயொரு ஜன்னல்- அதைத் திறந்தால் பக்கத்து கட்டடத்தின் சுவர்தான் தெரியும். 

லெட்ஜரில் முகவரியைக் குறித்துக் கொடுத்துவிட்டு ரூம்பாய்யை அழைத்து மூன்று நாட்களுக்கும் ஒவ்வொரு வேளைக்கும் மூன்று சப்பாத்திகளைத் தந்துவிடுமாறு சொன்ன போது அவன் என்னை ஒரு மார்க்கமாக பார்த்தான். தற்கொலை செய்ய வந்திருப்பவன் என்று கூட நினைத்திருக்கக் கூடும். அவன் சென்றவுடன் அறைக் கதவை தாழிட்டு லுங்கிக்கு மாறினேன். அப்பொழுது அந்த அறை மட்டும்தான் அடுத்த மூன்று நாட்களுக்கான எனது உலகம் என நினைத்தபோதும் ஒவ்வொரு சுவரும் மாபெரும் மலையாகத் தெரிந்தது. எப்படியும் தாண்டிவிட முடியாத மலைகள் அவை.

அந்த அறையில் இருந்த ஒற்றைக் கட்டிலில் அமர்ந்து கொள்வது அல்லது தூங்குவது தவிர வேறு எந்த வழியும் இல்லை. காகிதம் பேனா கூட எடுத்துவரவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதுவரைக்கும் என் வாழ்நாளில் சந்தித்த ஒவ்வொரு மனிதரின் முகத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றேன். சில மணி நேரத்தில் முகங்கள் தீர்ந்து போயின. அதன் பிறகு அதுவரையிலும் வாசித்திருந்த ஒவ்வொரு புத்தகத்தையும் நினைவூட்டிக் கொண்டிருந்தேன். புத்தகங்களின் உள்ளடகத்தை அசைபோடத் துவங்கினாலும் அதிகபட்சமாக மூன்று மணி நேரங்களை மட்டுமே கரைக்க முடிந்தது. 

இனி வரப்போகும் ஒவ்வொரு மணியும் ஒரு யுகம் என்பதை முதன்முதலாக உணரத்துவங்கிய தருணம் அது. வெறுமை என்பது இவ்வளவு கொடூரமானதாக இருக்கும் என்று நினைத்திருக்கவில்லை. யாரிடமாவது பேச வேண்டும் என இருந்தது. யாருடைய முகத்தையாவது பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அடுத்த மூன்று நாட்களுக்கு எனது எந்த ஆசையும் நிறைவேறாது என்று நினைத்தபோது பெரிய தவறொன்றை செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.

முதல் நாள் மட்டும் எதையோ சாதிக்கவிருப்பதாக ஒரு உணர்வு இருந்தது. அதுவும் இரண்டாவது நாள் காலியாகியிருந்தது. மூன்றாவது நாள் இன்னமும் கொடுமையாக இருந்தது. தூக்கமும் வரவில்லை. இன்னும் இருபத்திநான்கு மணிநேரத்தில் வெளியேறிவிடலாம் என்ற எண்ணம் இருந்தாலும் வரவிருக்கும் இருபத்திநான்கு மணி நேரத்தை எப்படி கடத்துவது என்று தெரியவில்லை. வேண்டுமானால் கதவைத்திறந்து கொள்ளலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. இந்த துயரத்தை முழுமையாக அனுபவித்துவிட விரும்பிய மனம் அழத் துவங்கியிருந்தது. கண்கள் குளம் ஆகியிருந்தன. 

என்னதான் கதறினாலும் யாருமே தோள் கொடுக்காத தனிமை அது. எனக்கென ஒருவரும் இல்லாத கையறு நிலை அது. அழுதபடியே அந்த நாள் கரைந்திருந்தது. கண்கள் வீங்கியிருந்தன. அழுது முடித்திருந்த போது இருபத்தி நான்கு மணி நேரம் முடிந்தவுடன் அலாரம் அடித்தது அல்லது அலாரம் அடித்தவுடன் அழுவதை நிறுத்திக் கொண்டேன் என நினைக்கிறேன். கழிவறைக்குள் சென்று முகத்தை கழுவிக் கொண்டேன். 

கதவைத்திறந்து வெளியேறியபோது இதுவரை இல்லாத வகையில் உலகம் அழகானதாகத் தெரிந்தது. நகரத்தின் இரைச்சல்கள் உற்சாகமூட்டின. மனித முகங்கள் மீது அளவில்லாத பாசம் பெருகிய அந்த நாள் இன்னமும் அப்படியே மனதுக்குள் பதிந்து கிடக்கிறது.

(இன்னமும் விரிவாக இன்னொரு நாள் எழுத வேண்டும்)

Feb 12, 2013

அப்சல் குரு“ஏன்ய்யா அவனை தூக்குல போட்டாங்க”

“அவன் செஞ்ச காரியம் அப்படி”

“என்ன செஞ்சான்?”

“பாராளுமன்றத்தை தாக்கியவர்கள் ஒளிஞ்சுக்க இடம் கொடுத்தான்”

“அவன் தான் கொடுத்தான்னு நிச்சயமா தெரியுமா?”

“அப்படித்தானே விசாரணையை முடிச்சுட்டு அறிவிச்சாங்க”

அது சரி. அப்சல் குருவுக்கும் பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளுக்கும் தொடர்பே இல்லையென்றெல்லாம் பேச வேண்டாம். தொடர்பு இருந்ததாகவே இருக்கட்டும். ஆனால் பூனை மூடுவது போல கமுக்கமாக நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனையால் அரசாங்கம் சாதித்தது என்ன என்பதுதான் குழப்பமாக இருக்கிறது. ஒரு குற்றவாளிக்கு அளிக்கப்படும் தண்டனையானது அவன் திருந்துவதற்கு வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும் அல்லது மற்றவர்களுக்கு பயமுண்டாக்குவதாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

தூக்குதண்டனை நிச்சயமாக குற்றவாளி திருந்துவதற்கு இடம் அளிக்கப்போவதில்லை. செத்த பிறகு எங்கே திருந்துவது? தொலையட்டும். தூக்கு தண்டனைகள் குறைந்தபட்சம் மற்றவர்களுக்கு பயம் உண்டாக்குகிறதா? 

பயம் உண்டாகாமல் இருக்குமா என்ன? 

இந்த தூக்கு தண்டனையால் எல்லைக்கு அப்பால் இருக்கும் தீவிரவாதிகள் பயந்து தங்களின் பேண்ட்டோடு சிறுநீர் கழிப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்திருக்கிறதாம். தெரியாத்தனமாக இந்தியாவிற்குள் நுழைந்துவிட்ட தீவிரவாதிகள் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை. தொடை நடுங்கிக் கிடக்கிறார்களாம். எல்லாவற்றிலும் உச்சமாக, இன்னும் பதினைந்து நாட்களில் இந்த தேசத்தில் குற்றச் செயல்கள் முற்றாக நின்றுவிடும் என்று அணு விஞ்ஞானி இன்று அறிவிக்கப் போகிறாராம். 

அட போங்க சார். ஒரே ஒரு உயிர்தான் போயிருக்கிறது. ஒற்றை உயிருக்காக அருந்ததிராயில் ஆரம்பித்து வினவு வரைக்கும் ஏன் இப்படி குதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் அடையாளம் தெரியாத வாகனங்களால் அடித்துக் கொல்லப்படும் மனிதர்களின் எண்ணிக்கை இந்த நாட்டில் பல நூறுகள் இருக்கக் கூடும். கொலை செய்யப்படுபவர்கள், நீருக்குள் மூழ்கி இறப்பவர்கள், ஷாக்கடித்து செத்தவர்கள், கீழே விழுந்து ஆயுளை விட்டவர்கள் என்றெல்லாம் கணக்கெடுத்தால் ஒரு நாளைக்கு பல ஆயிரம் இறப்புகள் பட்டியலில் வரும். ஆயிரக்கணக்கான உயிர்களில் அப்சல் குருவும் ஒரு உயிர்தானே என்று அசால்ட்டாக விட்டுவிடாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பாருங்கள் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டால் இந்தக் கொலையில் அரசாங்கம் கை நனைத்திருக்கிறது என்கிறார்கள். அதுவும் சரியாகத்தானே படுகிறது. அரசே கொலை செய்யலாமா? என்று அவர்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் அதற்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. அரசாங்கம் சும்மாவா கொன்றது? இந்திய தேசத்தின் மதிப்பு வாய்ந்த கட்டடமான பாராளுமன்றத்தையே தாக்கியிருக்கிறார்கள். தூக்குதண்டனை கொடுக்காமல் வாழை இலை போட்டு விருந்து வைக்கலாமா என்று நாம் கேள்வி எழுப்பலாம்.

அருந்ததி ராய் என்னவோ சொல்லிவிட்டு போகட்டும். என்னைக் கேட்டால் விருந்து வைக்க வேண்டாம். அதே சமயம் தூக்கிலும் போட வேண்டாம் என்று சொல்வேன். யாரும் கேட்காமலேயே கருத்துச் சொன்னால் கூடவே ஒரு Justification கொடுக்க வேண்டும் என்பது நியதி. அதையும் கொடுத்துவிடலாம்.

குற்றங்களில் பெரும்பாலும் Master Mind தப்பித்திருப்பார்கள். மற்றபடி ஒளிந்து கொள்ள இடம் கொடுத்தவன், பேட்டரி வாங்கிக் கொடுத்தவன், ஒண்ணுக்கு போகும் போது டார்ச் அடித்தவன் என்ற காரணங்களைக் காட்டி இபிகோ 120 இல் ஆரம்பித்து அத்தனை வகைகளிலும் வழக்கை போட்டு கோர்ட்டில் நிறுத்திவிடுகிறார்கள். குற்றவாளியே தனது குற்றங்களை ஒத்துக் கொண்டான், ஒத்துக் கொண்டதும் இல்லாமல் அவனே கையெழுத்தும் போட்டிருக்கிறான் என்று போலீஸ்காரர்கள் தங்கள் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்வார்கள்.

அவ்வளவுதான். ஜோலி முடிந்தது என்று நினைத்துக் கொள்ளலாம். பிறகு அந்த நான்கு சுவர்களுக்குள்ளும் குற்றவாளி என்ன கதறினாலும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளை கொடுப்பது உளவு அமைப்புகள்தான். அதிகார வர்க்கம் ஒருவனை குற்றவாளி ஆக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் தினத்தந்தி போன்ற செய்தித்தாள்கள் “அவன் குற்றவாளிதான்” என்பதை வெகுஜன மனதில் பதிப்பதற்கான அத்தனை ஒத்து ஊதுதலிலும் ஈடுபடுகின்றன.  

பொதுமக்களிடம் “கொல்லுங்க அவனை” என்ற மனநிலையை உருவாக்குவதற்கு டம்மி பீஸ் செய்திதாள்களையும், செய்தி நிறுவனங்களையும் அரசாங்கத்தின் கைப்புள்ளைகளான உளவு அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன. பெருவாரியான மக்கள் இந்தச் செய்திகளை எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த பெருவாரியான மக்கள்தான் ‘தேசத்தின் மனசாட்சி’. இந்த மனசாட்சி எதை விரும்பவேண்டும் என்பதையும் கூட அரசாங்கமும், உளவு அமைப்புகளுமே நிர்ணயம் செய்வதுதான் மாபெரும் ஜனநாயக நாடான நம் தேசத்தின் பெருந்துக்கம். இப்படி உருவாக்கப்படும் “தேசத்தின் மனசாட்சி” எதை விரும்புகிறதோ அதை இம்மிபிசகாமல் முடித்து வாக்குகளாக Polarize செய்துகொள்கின்றன அரசியல் கட்சிகள்.

“சின்மயிகிட்ட ரகளை பண்ணினா ஜெயிலில்தான் போடுவாங்க” என்பதில் ஆரம்பித்து “சாவட்டும் பாகிஸ்தானி” என்பதுவரை அத்தனையும் அரசாங்கத்தின் கண்ணசைவில் உருவாக்கப்படும் மனநிலைதான். 

அப்சல் குரு நிரபராதி என்று சொல்லவில்லை. ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சமூகத்திடம் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. குற்றவாளிகள் மீதான குற்றங்கள் Frame செய்யப்படும் போது Transparency இருப்பதில்லை. வழக்கு விவரங்களும், கோர்ட் நடவடிக்கைகளும் வெளிப்படையாக அலசப்படுவதில்லை என பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த குறைபாடுகள் அனைத்தையும் குற்றவாளிக்கு ஆதரவானதாக காட்டலாம். ஆனால் அப்படி காட்டினால் மட்டும் அடுத்த மாதம் இந்த நடைமுறைகளில் மாறுதல் வந்துவிடப்போகிறதா என்ன?

இந்துத்துவ வாக்குகளை ஒரு குவியத்தில் கொண்டு வரும் பிஜேபியின் முயற்சியை தகர்க்கும் காங்கிரஸின் தந்திரம்தான் வரிசையான தூக்கு தண்டனைகள் என்ற குறிப்பு ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அது உண்மையாக இருக்காது என நம்புகிறேன். நம்புவதுதான் எனக்கு பாதுகாப்பும் கூட. அப்படி நம்பாமல் அரசாங்கத்தை எதிர்த்து பேச எனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? 

இந்த அரசாங்கம் அம்மா போன்றது. தன் பிள்ளைகளுக்கு எது தேவையோ அதை மட்டும்தான் செய்யும். அப்படித்தான் இதையும்....

வாழ்க இந்தியா!

Feb 11, 2013

சுஜாதா, சினிமா, கூத்து


சில விஷயங்கள் “பிச்சுக்கும்” என்று நினைத்து செய்வோம். ஊற்றிக் கொள்ளும். சிலவற்றை ஏனோதானோ என்று செய்தால் ஹிட் அடித்துவிடும். அப்படித்தான் நேற்றும் நடந்தது. சனிக்கிழமை இரவு ஊருக்கு சென்றிருந்தேன். பெங்களூரிலிருந்து கோபிச்செட்டிபாளையத்திற்கு. கண்டதையும் யோசிப்பதற்கு பயணம் செய்வதை விடவும் நல்ல தருணம் எதுவும் இல்லை. பாலப்பாளையத்தில் வசிக்கும் சுந்தரம் பற்றி ஏதாவது யோசித்துக் கொண்டிருந்தால் காரணமே இல்லாமல் சீனாவில் பார்த்துப் பேசிய பெண் ஒருத்தியின் ஞாபகம் வந்து போகும். கீழ்பவானி கால்வாயில் குளித்ததை நினைத்துக் கொண்டிருந்தால் ப்ரான்ஸின் நிர்வாணக் கடற்கரைக்கு ஆளை இழுத்துச் செல்லும். இப்படியான ஒரு நினைப்புதான் சுஜாதா, ஜெயமோகன், எஸ்ரா பற்றி நேற்று நினைத்துக் கொண்டிருந்தது. 

அப்பொழுது யோசித்ததை அன்றிரவு எழுதி அடுத்த நாள் காலை போஸ்ட் செய்திருந்தேன். ஞாயிற்றுக்கிழமை பதிவுகளை ஆயிரம் பேர் வாசித்தாலே அதிசயம். நேற்று சில ஆயிரம் பேர்கள்  வாசித்திருக்கிறார்கள். அடுத்த சில மணிகளில் ஓரிருவர் அழைத்துப் பேசினார்கள். ஃபேஸ்புக்கிலும், பின்னூட்டங்களிலும் சிலர் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். எழுத்தாளர் இரா.முருகன் அது பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். இவை யாவுமே எதிர்பாராத நிகழ்வுகள். சந்தோஷமாக இருந்தது.

ஃபோனில் அழைத்தவர்களில் ஒருவர் உதவி இயக்குனர். “வாத்யார்தான் எப்பவுமே டாப்தான்” என்றார். அவர் வாத்யார் எனக் குறிப்பிட்டது சுஜாதாவை. சுஜாதாதான் மிகச் சிறந்த படைப்பாளி என்பதான கமெண்ட்களுக்கு  எனக்கு நேர் பேச்சில் பதில் சொல்லத் தெரியாது. தெரியாது என்பதைவிடவும் ஏதாவது எடக்குமடக்காக பேசி அவரை புண்படுத்திவிடக் கூடும் என அமைதியாகிவிடுவேன். நாளைக்கு இது பற்றி ஓரிரு வரியாவது எழுதுகிறேன் ஆனால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடித்துக் கொண்டேன். 

அவருக்கு சுஜாதா ‘டாப்’ ஆக இருக்கக் கூடும். ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. சுஜாதாவின் கட்டுரைகள் எனக்கு பிடிக்கும். அதற்காக அவர்தான் டாப் என்பதெல்லாம் டூமச். சுஜாதாவின் நாவல்கள் மட்டமானவை. உதாரணமாக “அனிதா இளம் மனைவி” போன்ற நாவல்கள் வெறும் Readability காக மட்டும் சிலாகிக்கப்பட்டவை எனத் தோன்றுகிறது. சுவாரசியம் என்பதைத் தவிர வேறு எந்த அம்சமும் இந்த நாவலில் இருக்காது. ஆனால் இது சுஜாதாவின் மிகச் சிறந்த நாவல் என்ற ஒரு குறிப்பை இணையத்தில் வாசிக்க நேர்ந்தது. அந்த குறிப்பை எழுதிய நபர் தமிழில் வெளிவந்த வேறு நாவல்களை வாசித்திருப்பாரா என்று தெரியவில்லை. அப்படித்தான் இந்த உதவி இயக்குனரும். வேறு எத்தனை படைப்பாளிகளை அறிந்திருக்கிறார் என்று தெரியவில்லை.

நேற்றைய குறிப்பு சினிமாவில் சுஜாதாவின் பங்களிப்பு என்பதைப் பற்றி மட்டும்தான். மற்றபடி சுஜாதா பற்றித் தேடினால் அவரை சிலாகித்தும், மட்டம் தட்டியும் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எடுத்துவிட முடியும். இவற்றைத் தாண்டி புதிதாக எதையும் பேசிவிட முடியாது என்று நம்புவதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
                                      
                                                                            ******

மு.ஹரிகிருஷ்ணனுக்கு பன்முகம் உண்டு. எழுத்தாளர், “மணல்வீடு” என்ற சிறு பத்திரிக்கையின் ஆசிரியர் என்று சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் அவர் தனது முகமாக காட்டிக் கொள்வது கூத்துக் கலைஞன் என்பதைத்தான். ஹரியின் அப்பாவும் ஒரு கூத்துக் கலைஞராக இருந்தவர். அவர் மிச்சம் வைத்துப் போனதை இவர் உடும்புப் பிடியாக பிடித்திருக்கிறார். “குடும்பத்தைக் கூட கவனிக்காமல் கூத்துக்காக இப்படி செலவு செய்யணுமா?” என்று கேட்டிருக்கிறேன். எல்லோரும்  “இப்படியே நினைத்துக் கொண்டால் அடுத்த தலைமுறையில் கூத்து இருக்காது” என்று டென்ஷனாகிவிட்டார். 

ஹரிக்கு பெரிய பொருளாதார வாய்ப்புகள் இல்லை. அவரது வீட்டிற்கு அருகில் ஜிண்டால் இரும்பு தொழிற்சாலையில் கடைநிலை தொழிலாளியாக இருக்கிறார். இருந்தாலும் தனது மொத்த உழைப்பையும் அழிந்து வரும் கூத்துக் கலைக்காக செலவிடுகிறார். 

களரி என்ற அறக்கட்டளையின் மூலம் கூத்துக்கலையை உயிர்ப்பிக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கும் ஹரி, இப்பொழுது கூத்துப்பள்ளி ஒன்றை துவங்கவிருக்கிறார். 


பள்ளி என்றவுடன் நகரத்தின் கான்வெண்ட் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. மிக எளிமையான பள்ளி. தருமபுரி மாவட்டம் எரப்பட்டி என்ற கிராமத்தில் துவங்குகிறார். இலாப நோக்கம் எதுவும் இல்லாத இந்த பள்ளியில் மூத்த கூத்து கலைஞர்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கு கலையை கொண்டு போகும் பணி இது. 

உயிரைக் கொடுத்து கூத்துப்பள்ளிக்கான நிலத்தை வாங்கிவிட்டார். ஒரு ஏக்கர் பரப்பு. இனிமேல்தான் பெரிய பளு காத்திருக்கிறது.  இரண்டாயிரத்து எண்ணூறு சதுரடி பரப்பில்  தோற்பாவை நிழற் கூத்து, பொம்மலாட்டம், கூத்து முதலான நிகழ்கலைகளை பயிற்றுவிக்க உள்ளரங்கு, ஓர் திறந்தவெளியரங்கு, ஆவணக்காப்பகம், அலுவலகம், வகுப்பறையுடன் கூடிய நூலகம், கழிவறை மற்றும் மின் இணைப்பு பெறுவதற்கான நிதி என ஏகப்பட்ட வேலைகளை செய்து முடிக்க ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும் போலிருக்கிறது. 

நிதியுதவி எதிர்பார்க்கிறார். கிள்ளிக் கொடுத்தாலும் சரி; அள்ளிக் கொடுத்தாலும் சரி.  இயன்ற அளவு உதவியை காலத்தினாற் செய்து உதவலாம். நமது சிறு உதவி, அழிந்து கொண்டிருக்கும் தமிழரின் கலை ஒன்றைக் காக்க உதவக் கூடும்.

நன்றி.

கூத்து பயிற்சி பள்ளியின் செயல்பாடுகள் குறித்து அறிய விரும்புவோர் 98946 05371 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

வங்கி விபரம்:

Kalari heritage and charitable trust
A\c.no.31467515260
SB-account
State Bank of India
Mecheri branch
Branch code-12786.
ifsc code-SBIN0012786
MICRCODE-636002023

Feb 10, 2013

சுஜாதா வென்ற சினிமாவில் தோற்கும் ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன்


கடல் படம் வெற்றியடையவில்லை போலிருக்கிறது. கொஞ்சம் வருத்தம்தான். மணிரத்னம் தோற்றுப் போனார், ராதாவின் மகள் துளசி மொக்கையாக இருக்கிறார் அல்லது கார்த்திக் மகனுக்கு நல்ல ஓபனிங் கிடைக்கவில்லை போன்ற டுபாக்கூர் காரணங்களினால் வருத்தம் இல்லை. சினிமாவில் ஜெயமோகன் இன்னொரு முறையும் தோற்றிருக்கிறார். அதுதான் கமறுகிறது. இலக்கியம் தெரிந்தவர்கள் இது போன்ற Common man சமாச்சாரங்களில் நின்று சிக்ஸர் அடிக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. ஆனால் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.

ஜெயமோகன் என்றில்லை, எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட இலக்கியவாதிகள் பணியாற்றிய பெரும்பாலான படங்கள் குப்புற விழுந்துவிடுகின்றன. ஜெயமோகனையோ அல்லது எஸ்.ராமகிருஷ்ணனையோ அவர்களின் நாவல் வழியாக தேடிப்பார்ப்பதில் ஒரு ‘த்ரில்’இருக்கிறது. ஆனால் அவர்கள் பணியாற்றிய படங்களில் அவர்களைத் தேடிப்பார்த்தால் துக்கம் அல்லது எள்ளல்தான் மிஞ்சுகிறது.

வருடத்திற்கு வெறும் ஐந்நூறு ரூபாய் செலவு செய்து நிசப்தம்.காம் என்ற ‘டொமைன்’ வாங்கிவிட்டால் சர்வசாதாரணமாக “அவர்கள் தோற்றுவிட்டார்கள்” என்று எழுதித் தொலைத்துவிடுகிறேன். அதே சமயம் சினிமாவில் தனது அடையாளத்தை பதிப்பது ஒன்றும் அத்தனை சுலபமான காரியமில்லை என்பதையும் கொஞ்சம் புரிந்து கொண்டால் தேவலாம். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனாகவோ அல்லது தேவயானியின் கணவர் ராஜகுமாரனாகவோ இருந்துவிட்டால் சினிமாவில் முத்திரை படைப்பது சாத்தியம் என்று தோன்றுகிறது. மற்றவர்கள் எல்லோரும் மென்று தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் மட்டும் எப்படி தப்பிக்க முடியும்?

நாவல் எழுதும் போதோ அல்லது சிறுகதை எழுதும் போதோ எழுத்தாளனுக்கு எந்த அழுத்தமும் இல்லை. லட்சக்கணக்கான பிரதிகள் விற்க வேண்டும் என்றோ கோடிக்கணக்கில் ராயல்டி வர வேண்டும் என்றோ அவன் எதிர்பார்ப்பது இல்லை. அதே போல கதாபாத்திரத்தைப் பற்றியோ, கதையின் போக்கு பற்றியோ அவனைத் தவிர வேறு யாரும் தலையிடுவதில்லை. தான் விரும்பியதை அவனால் எழுதிவிட முடிகிறது. ஆனால் சினிமாவில் அப்படியிருக்க முடிவதில்லை. கோடிக்கணக்கில் பணத்தை கொட்டும் தயாரிப்பாளரில் ஆரம்பித்து தனது வாழ்க்கையை அடமானம் வைத்திருக்கும் டைரக்டர், தன்னை சூப்பர் ஸ்டாராக்கிக் கொள்ள விரும்பும் நாயகன் வரை அத்தனை பேரும் அரித்து எடுப்பார்கள். இவர்களுக்காக வளைந்து போவதுதான் நடக்கிறதேயொழிய ஜெயமோகனும், எஸ்.ராவும் இந்த அழுத்தங்களை மீறி தங்களின் அடையாளத்தை சினிமாவில் பதிக்க முடியும் என்று தோன்றவில்லை. 

தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே சில Myth உண்டு. இலக்கியவாதிகள் என்பவர்கள் படு சீரியஸான முகத்துடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து அவர்கள் வெகுஜனப்பத்திரிக்கைகளை திரும்பிக் கூட பார்க்கக் கூடாது, சினிமாவில் பணியாற்றக் கூடாது என்பது வரை சகட்டுமேனிக்கு மூடநம்பிக்கைகளை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.என்னளவில் சினிமாவில் அல்லது வெகுஜன ஊடகங்களிலோ செயல்படுவது பாவச்செயலோ அல்லது தீண்டத்தகாத காரியமோ இல்லை.  விரும்பினால் வெளிப்படையாக முயற்சிக்கலாம். இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை.

ஆனால் தமிழில் பெரும்பாலான படைப்பாளிகள் இவை போன்ற எல்லைகளுக்குள் தங்களைத் தாங்களே சுருக்கிக் கொண்டு Confined Space களில் இயங்கும் சூழலை மீறித்தான் ஜெயமோகனும் அல்லது எஸ்.ராவும் சினிமாவுக்குள் புகுந்திருக்கிறார்கள். ஆனால் ஏன் ஜெயிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புதிராகத்தான் இருக்கிறது. இந்த இடத்தில்“சுஜாதா வென்றிருக்கிறார்” என்று யாராவது கையை உயர்த்தக் கூடும். அவரை இலக்கியவாதியாக ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம் என்பதால் அவரை விதிவிலக்காக(Exceptional case) வைத்துத்தான் விவாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சுஜாதாவின் எழுத்துக்கள் நேரடியானவை அதே சமயம் அப்பட்டமானவை. இந்த எளிய, நேரடியான, அப்பட்டமான எழுத்துமுறையைத்தான் தனது ஆயுள் முழுவதும் பயிற்சி செய்திருக்கிறார். ஆனால் ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும் இன்னொரு கரையில் நிற்பவர்கள். தாங்கள்  எழுதியது போக எழுதாமல் தவிர்த்தவைகளை வாசகர்கள் தங்களின் சுய அறிவு மூலம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ரீதியில் எழுதுபவர்கள். இதுதான் இவர்களுக்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசம் என புரிந்து கொள்ள முடிகிறது. 

தமிழ் சினிமா எப்பொழுதும் நேரடியானதாகவும் அப்பட்டமானதாகவுமே இருந்திருக்கிறது. தமிழ் சினிமா எதிர்பார்க்கும் அந்த நேரடித்தன்மையை சுஜாதாவால் கொடுக்க முடிந்த அளவில் சொற்ப சதவீதத்தையே ஜெ அல்லது எஸ்ராவால் கொடுக்க முடிகிறது. சினிமா கோருகிறதே என்பதற்காக தங்களை நேரடித்தன்மைக்காக மாற்றிக் கொள்ள முயலும் இடத்தில்தான் ஜெயமோகனும் எஸ்.ராவும் தங்களின் அடையாளத்தை இழப்பதாகத் தோன்றுகிறது. 

கீழே இருக்கும் சங்கதியும் இவர்களின் தோல்விக்கு பின்னால் இருக்கக் கூடும் என நம்புகிறேன்.

சுஜாதா தனது ரிடையெர்ட்மெண்ட் காலத்தில்தான் சினிமாவில் மிக அதிகமாக வசனம் எழுதினார். அந்தக் காலத்தில் அவர் இதனை ரிலாக்ஸ்டாகவும் அனுபவித்தும் செய்திருக்கக் கூடும். அப்பொழுது  பணமும் அவருக்கு அத்தனை பிரதானமானதாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் ஜெமோவுக்கும், எஸ்ராவுக்கும் இது வெற்றிக்களை எதிர்பார்க்கும் வயதாகவும், பணத்திற்கான தேவைகள் அடங்கிய பருவமாகவும் இருக்கிறது. இவற்றிற்கான  பதட்டங்களால் தங்களையும் அறியாமல் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

Feb 9, 2013

நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு


கவிதை எளிமையை(Simplicity) நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற வாக்கியத்தை முழுமையாக நம்பிக் கொண்டிருந்தேன். திருகலான கவிதைகளும், நேரடித்தன்மையில்லாத கவிதைகளும்  வழக்கொழிந்துவிடும் என்று வாதிடுவதற்கு உறுதியான ஆட்கள் இருக்கிறார்கள். வல்லார்கள் தங்களின் அழுத்தமான குரலால் தாங்கள் சொல்வதை நம்ப வைத்து வாய்க்காலும்  வகுத்தும்விடுகிறார்கள். அதே சமயம் எளிமையான கவிதைகளும் நேரடியான கவிதைகளும் மட்டுமே கவிதைகள் இல்லை என்பதை நிறுவவதற்கான ஆழமான எதிர்வினைகளை  அவ்வப்போது எதிர்கொள்கிறோம். புதிரின் சூட்சமங்களையும், புனைவின் உச்சங்களையும் கொண்டிருக்கும் நல்ல கவிதைகளை வாசிக்க நேரும்போதெல்லாம் கவிதை ’எப்படி  வேண்டுமானாலும்’ இருக்கலாம் என்று மனம் உற்சாகமடைகிறது. இந்தக் கட்டற்ற போக்குதான் கவிதையை எப்பொழுதும் உயிர்பித்துக் கொண்டிருக்கின்றன. 

சமீபமாக பல கவிஞர்கள் கவிதையின் கட்டுகளை உடைத்தெறிந்து கொண்டிருக்கிறார்கள். றியாஸ் குரானாவின் “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு” கவிதைத் தொகுப்பினை வாசிக்கும்  போது சமகாலக் கவிதைகளின் கட்டற்ற போக்கிற்கான ஒரு உதாரணமாக இந்தத் தொகுப்பை முன்வைக்க முடியும் எனத் தோன்றியது. தொகுப்பிலுள்ள கவிதைகளின் வழியாக தமிழ்க்  கவிதையின் வழமைகளை கவித்துவத்தின் கூறுகளோடு உடைத்தெறியும் முயற்சியில் பரவலான இடங்களில் றியாஸ் வெற்றி பெற்றிருக்கிறார். இத்தொகுப்பின் கவிதைகளில் றியாஸ்  மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் தமிழ்க்கவிதையின் போக்கில் நிகழ்த்தப்பட்டிருக்கும் முக்கியமான பரிசோதனை முயற்சி என்று அழுத்தம் கொடுக்கத் தோன்றுகிறது. முயற்சிகள் என  குறிப்பிடப்படுவது கவிதையின் மொழியமைப்பு சார்ந்த அம்சங்களையும், கவிதையின் வெளிப்பாட்டு முறையையும் தான். தமிழ்க்கவிதையில் பழகிப்போன படிமங்களையோ அல்லது  வரிகளின் அமைப்பையோ தனது கவிதைகளில் றியாஸ் பயன்படுத்தியிருக்கவில்லை காதல், அன்பு, பிரியம், பிரிவு போன்றதான ரொமாண்டிசக் கூறுகளை தொகுப்பில் தேடிக்  கொண்டிருக்கிறேன். இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை. மாறாக பின்வரும் கவிதைதான் கிடைத்தது 

“கொழுத்துக் குலுங்கும் சதைகள் என்னிடமில்லை
எலும்பையும் தோலையும்  உனக்குத்தர
நான் விரும்பவுமில்லை
உள்ளங்கையைத் தோண்டி உண்ணத் தரலாம்
அது உனக்கு போதுமானதோ என்னவோ
இப்படிப் பேசியதை நீ எப்படி
புரிந்து கொண்டாயென்று  தெரியவில்லை
இப்போதெல்லாம் நீ
என்னைக் கண்டால் வாலை ஆட்டுவதில்லை”

கவிதையின் போக்கை முடிவு செய்வதிலும், கவிதையை நகர்த்துவதிலும் றியாஸ் தேர்ந்தவராக இருக்கிறார் என்பது அனுமானம். சில வரிகளை உதாரணமாக்க வேண்டுமானால் பின்வரும்   வரிகளைக் குறிப்பிடலாம் “ஒன்றன் பின் ஒன்றாக சரசரவென நட்சத்திரங்கள்/கொட்டுகின்றன. காற்றின் ஒரு முடி உதிர்ந்து நானி/ருந்த ஜன்னல் வழியாக ரயில் வண்டியெங்கும்/ பரவுகிறது”  இந்த வரிகளோடு நிறுத்தியிருந்தாலும் கூட கவிதை வேறு இடத்திற்கு அல்லது தளத்திற்கு நகர்வதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கின்றன ஆனால் கவிதையின் அடுத்த வரிகள்   “இது இரவென்றும் ஒரு பயணமென்றும்/நீங்கள் விளங்கியிருப்பீர்கள்” என்று தொடர்கிறது. கடைசியாகக் குறிப்பிடப்பட்ட வரிக்கான அவசியம் இல்லை என்றாலும் இதனை றியாஸின்  மொழி விளையாட்டாகவே ரசிக்கிறேன். “மொழி விளையாட்டு” என்று குறிப்பிடுவதற்கான காரணம், இந்த வரி தனித்து சொல்லப்பட்டிருந்தால் “ஸ்டேட்மெண்டாக’ மட்டுமே தொக்கி  விடுவதற்கான அபாயங்களைக் கொண்டிருக்கிறது. கவிதையோடு வாசிக்கும் போது மேற்சொன்ன அபாயத்தை இந்த வரி தவிர்த்திருக்கிறது- தவிர்க்கும் வண்ணமாக சரியான இடத்தில்  றியாஸ் பயன்படுத்தியிருக்கிறார்.

றியாஸ் கைக்கொண்டிருக்கும் கவிதைக்கான மொழி புதிதென்றாலும் கூட கவிதைக்கான பாடுபொருள்களும், கவிதைகள் வழியாக புரிந்துகொள்ளக்கூடிய கவிஞனின் சிந்தனை வெளிப்பாட்டு  முறையும் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவைதான். பிரதி, சொற்கள், புனைவு, கவிதை போன்றதான சொற்களும் மற்றும் அவற்றிற்குரிய தளங்களும் றியாஸின் கவிதைகளில்  அளவுக்கதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாகப்படுகிறது. கவிதைத் தொகுப்பில் அதிகளவிலான பாடுபொருளோ அல்லது சொற்களோ சலிப்பூட்டுவதற்கான இருக்கும்  வாய்ப்புகளை இவை உருவாக்கிவிடுகின்றன.

தொகுப்பில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாக பரவலான வசனகவிதைகளைக் குறிப்பிடலாம். கவிதைகள் பெரும்பாலும் நிகழவல்லாதவனவற்றை(Impossible in reality) முன்  வைத்து அமைந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் கற்பிதமான நிலங்களைக் கொண்ட புனைவுகளாக இருக்கின்றன. றியாஸ் கவிதையின் புனைவுகள் என்பதை இன்னும் குறிப்பாகச்  சொல்ல முடியும் என்றால் கனவுகளுக்குள்ளும், கற்பனைகளுக்குள்ளும் அல்லது தனது உடலும் மனமும் இருக்கக்கூடிய ஒரு நிகழ் வெளியிலிருந்து இன்னொரு அரூப வெளிக்குள்ளாக  வாசகனை அழைத்துச் செல்லுதல்-“கனவுக்குள் மழையுள்ளவர்கள் மட்டும் அவளைச்/சந்திக்கலாம்” “மீதமிருந்த மூன்று பசுக்களும் பிரதிக்குள்/நுழைந்ததும் கன்று போட்டிருந்தன” “என்  கனவுகளுக்குப் பின்னே ஒரு பறவை/பறந்து கொண்டேயிருக்கிறது” இப்படியான வரிகளை தொகுப்பினூடாக எதிர்கொள்ள முடிகிறது. இந்த வரிகள் உருவாக்கக்கூடிய வாசகனுக்கான தளம்  அவனது சிந்தனை செயல்பாட்டிற்கான மிகச் சிறந்த தளம் என்று கருதுகிறேன். கனவுகளுக்குள் நுழைவதையும், இன்னொரு பிரதிக்குள் நுழைவதையும் கவிதைகளில் வாசிக்கும் போது  ஒருவித கொண்டாட்ட மனநிலை உருவாகிறது. ஆனால் இந்தக் கொண்டாட்ட மனநிலையை மிக எளிதில் அடைந்துவிட முடிவதில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

எளிமையான கவிதைகள் நேரடியான வாசிப்பனுபவத்தை தந்துவிடக்கூடும். ஆனால் றியாஸ் கவிதைகள் தரும் வாசிப்பனுபவத்தை பெறுவதற்காக அந்தக் கவிதைகளுக்குள் உழல  வேண்டியிருக்கிறது. மேம்போக்கான வாசிப்பு இக்கவிதைகள் மீதான எந்தவித ஈர்ப்பையும் உருவாக்குவதில்லை. கவிதைகள் தொடர்ச்சியாக உருவாக்கும் சலனங்களுக்காக எந்தவிதமான  தயக்கமும் இல்லாமல் கவிதைகளிடம் மனதினை ஒப்படைத்து வைத்திருக்க வேண்டியிருக்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் கவிதானுபவத்தை பெறுவதற்காக உச்சபட்ச  உழைப்பைக் கோரும் கவிதைகள் இவை. இத்தகைய கடும் உழைப்பைத் ஒரு கவிதைத் தொகுப்பிற்கு தர வேண்டுமா என்பது வாசகனைப் பொறுத்தது. ஒரு கவிதைப் பிரியனாக அதிகபட்ச  உழைப்பைக் கோரும் ஒரு தொகுப்பை நான் ஆரவாரத்தோடு வரவேற்கிறேன். 

கவிதையில் நிகழும் சம்பவங்கள் அல்லது கவிதையின் எதிர்பாராத காட்சித்தன்மை என்னளவில் றியாஸ் கவிதைகளின் முக்கியமான அம்சமாகத் தெரிகிறது. ஒரு கவிதை பின்வருமாறு  நகர்கிறது. தெருவில் வாழும் பூனைக்கு உணவளிக்கிறார், பூனை வீடு முழுவதும் சுற்ற ஆரம்பிக்கிறது. வீட்டில் பூனை இருப்பது பாதுகாப்பானது என்று நினைக்கும் போதுதான்  காலண்டரிலிருந்த எலி காணாமல் போய் இருப்பதை கவனிக்கிறார் கவிதைசொல்லி. இந்தக் கவிதையில் பூனையும் எலியும் உருவாக்கக்கூடிய சித்திரங்கள் பன்முகத் தன்மை கொண்டவை.  பூனை வெறும் பூனையை மட்டும் குறிப்பதில்லை. இந்த உணர்வை கவிதையின் போக்கில் இருக்கும் எதிர்பாராத்தன்மை உருவாக்குகிறது.

தனக்கான மொழியைக் கண்டறியும் பாதையில் கவிஞன் கவிதையின் வெவ்வேறு நுட்பங்களை (Technology of Poetry) தொடர்ச்சியாக அழித்தும் உருவாக்கியும் நகர வேண்டும்  என்பதையே வாசக மனம் விரும்புகிறது. தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு கவிதையில், விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கியோடு நுழையும் சிலர் விளையாட்டு வீரர்களை நோக்கி  சுடத்துவங்குகிறார்கள். வீரர்கள் ஒவ்வொருவராக செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண்மணி மட்டும் தமிழ் நாவல் ஒன்றிற்குள் குதித்து தப்பித்துவிடுகிறாள். அந்த நாவாலசிரியரின்  கதைத்திட்டப்படி நாவலுக்குள் அவள் குதிக்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கூட வேறு வழியற்ற அவள் தான் தப்பிப்பதற்கு அந்த உபாயத்தையே தேர்ந்தெடுக்கிறாள். இந்தக்  கவிதையை வாசித்தவுடன் கவிதை உருவாக்கும் தனித்த மனநிலையில் எழும் கதைகளும் காட்சிகளும் கவிதையின் வாசகனை உற்சாகமடையச் செய்கிறது. கவிதையைத் தவிர வேறு எந்த  ஒரு காட்சி ஊடகத்தாலும் இத்தகைய வாசிப்பனுபவத்தின் எழுச்சி மனநிலையைத் தர முடியும் என்று தோன்றவில்லை.

இதே நுட்பத்தை பல கவிதைகளில் றியாஸ் பயன்படுத்தியிருக்கிறார். நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு என்ற கவிதை “40 வருடங்களும்/அவளால் சிறுமியாக/சிறுமியாக இருக்க  முடியவில்லை என்பதால்/இந்த மூன்றாம் பதிப்பில்/ஆசிரியரால்/அவள் கொல்லப்பட்டாள்” என்று முடிகிறது. தன் மொழிக்கான தேடலில் வேகமாக நகரும் றியாஸ் சில குறிப்பிட்ட விதமான  கவிதையியல் நுட்பங்களையே பயன்படுத்தியிருக்கிறார் என்பதை குறிப்பிட விழைகிறேன்.  இந்தத் தொகுப்பு வேறுபட்ட நுட்பங்களைக் உள்ளடக்கிய கவிதைகளைக் கொண்டிருக்குமாயின்  இதன் தாக்கம் பன்மடங்கு அதிகமானதாகவும் வேறு பல பரிமாணங்களைக் கொண்டதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறேன்.

றியாஸ் “எனது எழுத்துக்கள்- இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம் மட்டுமே” என்று தொகுப்பின் பின்னட்டையில் அறிவிக்கிறார். இலக்கியத்தை கொல்பவனின் சாட்சியம் என்பதில்  அதீதமான பாவனை தெரிகிறது. இந்த வாக்கியத்தை றியாஸ் தனக்குத்தானே சொல்லிக் கொள்வதற்கு இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இலக்கியத்தை அழிக்க முடியும்  என்பதில் எனக்கு ஒரு சதவீதம் கூட நம்பிக்கையில்லை. ஆற்றல் அழிவின்மை விதியைப்போலவே இலக்கியத்தையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது; ஒரு வகை இலக்கியத்தை  இன்னொரு வகை இலக்கியமாக மாற்றலாம் என்பதை நம்பிக்கொண்டிருக்கும் என்னால் இப்படித்தான் இந்த கட்டுரையை முடிக்க முடிகிறது.

(இலங்கையில் வாழும் கவிஞர் றியாஸ் குரானாவின் கவிதைகள் குறித்தான கட்டுரை இது.  இந்தத் தொகுப்பு “புது எழுத்து” பதிப்பகத்தின் வெளியீடு. பிரதியை பெற்றுக்கொள்ள puduezuthu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்) 

Feb 8, 2013

எட்டுக்கு அப்புறம்...


நிசப்தம் தளம் இன்று முதல் தனது ஒன்பதாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தளத்தை வாசித்த அத்தனை பேருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.

                                                                 ********

அலுவலகத்தில் ஒரு மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. தனக்கு கீழான அத்தனை பணியாளர்களையும் அழைத்து வைத்து நிறுவனத்தில் தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைப் பற்றி மேனேஜர் பேசிக் கொண்டிருந்தார். மேல் மட்டத்திலிருந்து கடைநிலைப் பணியாளர்கள் வரைக்கும் அத்தனை பேருக்கும் இந்த மாற்றங்களினால் பாதிப்பு உண்டு. பாதிப்பு என்றால் ஒரு ப்ராஜக்டிலிருந்து இன்னொரு ப்ராஜக்ட்டுக்கு மாறுவது அல்லது வேறொரு டீமுக்கு நகர்வது என்ற அளவில் தொடங்கி பணியிலிருந்து கூட துரத்திவிடக் கூடும். மாற்றங்களைப் பற்றி கதை கதையாக பேசிவிட்டு “கேள்வி ஏதாச்சும் இருக்கா?” என்றார் மேனேஜர்.

ஒவ்வொருவரின் வயிற்றுக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. எல்லோருக்குள்ளும் அடிப்படையாக இருந்தது ஒரு கேள்விதான். ஆனால் அத்தனை பெரிய கூட்டத்திற்குள் கேட்பதற்குதான் துணிச்சல் இல்லை. மழுப்பலாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதாக என சகலவிதத்திலும் வழ வழா கொழ கொழா கேள்விகளாக விழுந்து கொண்டிருந்தன. அதற்கு மேனேஜரும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். யார் முகத்திலும் ஈயாடவில்லை. பெரும்பாலான கேள்விகளையும், பதில்களையும் யாரும் சட்டை செய்யவில்லை. 

மீட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. “ஒன்மோர் லாஸ்ட் கொஸ்டின்” என்றார் மேனேஜர். இந்தக் கேள்வியோடு மீட்டிங் முடிந்துவிடும். யார் அந்தக் கடைசி கேள்வியைக் கேட்பார்கள் என்று தெரியவில்லை. பாலக்காட்டு பையன் எழுந்தான்.  “நேரடியாகக் கேட்கிறேன், இந்த மாற்றங்களினால் என் வேலை போய்விடுமா?” என்றான். அவன் கேட்டது நிச்சயம் மேனேஜரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும். மேனேஜர் உட்பட அத்தனை பேரின் தாவாக்கொட்டையும் கீழே வந்துவிட்டது. வாயைப் பிளந்து கொண்டிருந்தோம். கேள்வி கேட்டவன் அமர்ந்து கொண்டான். ஆனால் அந்தக் கேள்வி அறைக்குள் சூறாவளியாகிக் கொண்டிருந்தது. அதுதான் அத்தனை பேர் மனதிலும் அதுவரையிலும் ஓடிக் கொண்டிருந்த கேள்வி. 

Firing ஐ நேரடியாக நிறைய பார்த்திருப்பவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் எவ்வளவு முக்கியமானது என்று புரிந்திருக்கும். சோற்றுக்குள் கிடக்கும் கல்லை சாவகாசமாக தூக்கி வீசுவதைப் போல ஒருவனை இந்த நிறுவனங்களால் வீசி விட முடிகிறது. பையன் படித்துக் கொண்டிருக்கிறான், வீட்டுக் கடன் இருக்கிறது போன்ற எந்த லெளகீக சிக்கல்களைப் பற்றியும் நிறுவனங்கள் சிந்திப்பதில்லை. இந்த நிலையில் அடுத்த சில மாதங்களுக்கான உறுதியை மேனேஜரிடம் இருந்து வாங்கித் தந்த அவன் மீது மரியாதை வந்திருந்தது.

கார்பொரேட் நிறுவனங்களில் இப்படி முகத்தில் அடித்தாற்போல கேள்வி கேட்பது ஆச்சரியம். அவன் கேட்டவுடன் ஆளாளுக்கு தங்களுக்குள் முணுமுணுத்தார்கள். சுதாரித்துக் கொண்ட மேனேஜர் “அதற்கு வாய்ப்பில்லை. என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார். இந்த பதில்தான் அந்தச் சமயத்தில் அத்தனை பேருக்கும் தேவையானதாக இருந்தது. இந்த பதில் ஒட்டுமொத்த மீட்டிங்கின் மனநிலையையும் மாற்றிவிட்டது. மிக ஆசுவாசமான மனநிலைக்கு வந்ததோடில்லாமல் ஆளாளுக்கு ‘ஜோக்’ அடிக்க ஆரம்பித்தார்கள். கேள்வி கேட்டவனும் சற்று ஆறுதலடைந்திருக்கக் கூடும். அவனுக்கு ஏதோ ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. எழுந்து போனான்.  அவனை நோக்கி “இவனது தைரியம் ரொம்பத் தேவையானது அதே சமயத்தில் ரொம்ப அபயாகரமானதும்” என்று கண்ணடித்தார் மேனேஜர். அவன் திரும்பிப் பார்த்தபடி சிரித்துக் கொண்டே வெளியேறினான்.

தைரியமானவர்களை அல்லது தைரியமானவர்களாக சித்தரிக்கப்படுபவர்களை பிடித்துப் போவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அப்படித்தான் நரேந்திர மோடியையும் கொஞ்ச நாட்களாக பிடிக்கிறது. காங்கிரஸை பல காரணங்களால் பிடிப்பதில்லை. ஆனால் நரேந்திர மோடியை ஒரே ஒரு காரணத்திற்காக மிகப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காத காங்கிரஸின் கண்களில் விரலை விடக் கூடிய ஒரே ஆளுமை மோடிதான் என்பதுதான் அந்தக் காரணம். இன்றைய சூழலில் காங்கிரஸின் நெட்வொர்க்கையும், அதன் சூழ்ச்சி மிக்க தலைவர்களையும் வெல்லக் கூடிய மனிதனாக மோடி மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார்.

மரணத்தின் வியாபாரி என்பதில் ஆரம்பித்து தனது மீதான அத்தனை குற்றச்சாட்டுக்களையும் தாண்டி பெரிய இயக்கத்தின் வேர்களை தனிமனிதனாக அசைத்துப் பார்க்கும் மோடியை அவரது தைரியத்திற்காக பிடிக்கிறது. பாலக்காட்டு பையனில் ஆரம்பித்து மோடிக்கு போய்க் கொண்டிருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் கதாநாயகன் கணக்காக மோடி மேடையேறியதை பார்த்ததன் எஃபெக்ட் இது போலிருக்கிறது.                          
         
                                                                  *******

நிசப்தம் எட்டு வருடங்களாக இருக்கிறது என்று முதல் பத்தியில் சொன்னேன் அல்லவா? ஆனால் சமீபகாலம் போல இத்தனை வசவுகளை எப்பொழுதும் எதிர் கொண்டதில்லை. இப்பொழுதெல்லாம்.....ம்ம்ம்ம்ம்...தூள் கிளப்புகிறார்கள். அனானிமஸாக வரும் கமெண்ட்கள் குரூரமானதாக இருக்கின்றன. பொறுக்கி, மனநோயாளி போன்ற டீசண்டான வசவுகளில் ஆரம்பித்து ____________ மற்றும் ___________ என்ற ரேஞ்சில் பலவிதங்களில் பட்டாசு கொளுத்துகிறார்கள். அவர்களிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது: “நன்றி. அடித்து ஆடுங்கள்!”

Feb 7, 2013

சாரு ஜெயமோகன் ஆட்டோக்காரன்


ஒவ்வொரு முறையும் பைக் மூலமாகத்தான் விபத்து நிகழ்ந்திருக்கிறது. ஆகவே இந்த முறை நடந்த ‘பைக் இல்லா’விபத்து ஆச்சரியமானதாக இருக்கிறது. விபத்து நடந்தது எனக்குத்தான். அதனால் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நிகழ்ந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. விபத்து என்றால் தலை நசுங்கவில்லை ஆனால் கையில் அடிபட்டிருக்கிறது. 

- இப்படி பிட் பிட்டாக பில்ட் அப் கொடுப்பதை நிறுத்திவிட்டு மொத்தக் கதையையும் சொல்லிவிடுகிறேன்.

ஒரு விழாவிற்காக திங்கட்கிழமை மாலை சிவகாசி கிளம்பியிருக்க வேண்டும். அலுவலகத்திலிருந்து நேராக பஸ் பிடித்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்ததால் பைக்கை வீட்டிலேயே நிறுத்திவிட்டேன். டவுன் பஸ் பிடித்து அலுவலகம் சென்றுவிட்டு அங்கிருந்து மாலையில் சிவகாசிக்கு பஸ் ஏறுவதாக ப்ளான். இப்பொழுதெல்லாம் சிவகாசி என்றால் பட்டாசு தொழிற்சாலை ஞாபகத்திற்கே வருவதில்லை. பேரரசுவும், விஜய்யும்தான் மனக்கண்ணில் தோன்றி படம் காட்டுகிறார்கள். விஜய்யை ஏற்றுக் கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை. பேரரசு இருக்கிறார் பாருங்கள். பயங்கரம்ம்ம்ம்ம். 

பெங்களூரில் டவுன்பஸ்ஸில் செல்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். சிவப்பு நிறங்களில் திரியும் ஏ.சி.பேருந்தில் அமருவதற்கு இடம் கிடைத்து விட்டால் போதும். அதன் மெல்லிய குலுங்கலும் அழகான அலட்டலும் இருக்கிறதே- சொர்க்கரதம் தோற்றுவிடும். எங்கள் ஊரில் இறந்து போனவர்களை இழுத்துச் செல்லும் சக்கர வண்டியில் சொர்க்க ரதம் என்று எழுதி வைத்திருப்பார்கள். அந்த சொர்க்கரதம் இல்லை. உண்மையிலேயே பெங்களூரில் டவுன் பஸ்களை அற்புதமாக பராமரிக்கிறார்கள். டிக்கெட் விலைதான் அதிகம்.

பொம்மனஹள்ளி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது ஒரு ஆட்டோக்காரர் அழைத்தார். என்னுடைய கெட்ட நேரம் ‘ஆட்டோ வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன். ஆட்டோவில் அலுவலகத்திற்குச் சென்றால் நூற்றைம்பது ரூபாய்க்கு குறைவில்லாமல் அழ வேண்டும். ஒரு நாள் அலுவலகம் போவதற்கு அவ்வளவு செலவு செய்வது டூ மச் என்று உள்ளுக்குள் அலாரம் அடித்தது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பார்க்கும் அவருக்கு நான் ஒரு ஜூஜூபி மேட்டர். முகக்குறிப்பை வைத்தே கூட ‘இவன் வர மாட்டான்’ என்று அவர் முடிவு செய்திருக்கக் கூடும். ஆட்டோவை ஓரமாக நிறுத்திக் கொண்டார். வேறு கிராக்கி வரும் வரையிலும் அல்லது ட்ராபிக் போலீஸ்காரர் துரத்தும் வரைக்கும் அந்த இடத்தில்தான் நின்று கொண்டிருப்பார். 

இரண்டு ஏ.சி. பேருந்துகள் வரிசையாக வந்தன. ஆனால் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி இத்தனை கூட்டத்தில் நசுங்க வேண்டியதில்லை என அடுத்த பேருந்துக்கு காத்திருந்தேன். ஐந்து நிமிடங்கள் வரை நிற்க வேண்டியதாக இருந்தது. இந்த இடைவெளியில் இன்னும் இரண்டு பேரை ஆட்டோக்காரர் அழைத்தார். அவருக்கும் கெட்ட நேரம் போலிருக்கிறது. யாரும் மசியவில்லை. 

ஏ.சி பேருந்துகளை விட்டுவிட்ட பிறகு மூன்றாவதாக ஒரு சாதாரண பேருந்து வந்தது. அதிலும் கூட்டம் அதிகம்தான். கூட்டம் கூட பிரச்சினையில்லை. ஆனால் எனது வெள்ளைச் சட்டையை நினைத்தால்தான் பாவமாக இருந்தது. ‘அழுக்கு நல்லது’ என்ற விளம்பரத்தை எடுத்தவன் கையில் சிக்கினால் கழுத்து அடியாக அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஏறுவதற்கு எத்தனிக்கத் துவங்கினேன். 

கூட்டமான பேருந்தில் ஏறுவதும் ஒரு கலைதான். ஆளாளுக்கு ஒரு Strategy வைத்திருப்பார்கள். நான் முதலில் ஆர்வ மிகுதி கேஸ்களை அனுமதித்துவிட்டேன். அதன் பிறகாக நமக்கு பின்புறமாக சிலர் இருக்கும் போதே ஏறிக் கொள்வதுதான் நல்லது என நம்பிக்கை உண்டு. நமக்கு பின்பாக ஏறும் அவர்கள் நமக்கு பாதுகாப்பு அரணாக நின்று கொள்வார்கள் என்ற நப்பாசைதான். இந்த Strategy களை எப்பொழுதுமே செயல்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால் திங்கட்கிழமை செயல்படுத்த முடிந்தது. வீர பிரதாபங்களுக்குப் பிறகு என்னை பேருந்துக்குள் நுழைத்து முதல்படியில் நின்று கொண்டிருந்தேன். பாதுகாப்பாக அரணாக நிற்பார்கள் என்று நான் நம்பியவர்களில் ஒருவர் சதிகாரராகிவிட்டார். முதல் படியில் நின்றிருந்த என் தோள் மீது கை வைத்து ஏற முயன்றார். அவர் கிட்டத்தட்ட தொண்ணூறு கிலோ எடை இருக்கக் கூடும். எனது அறுபத்தைந்து கிலோ உடம்பால் தாங்க முடியவில்லை. பிடிமானமும் எதுவும் இல்லை. விழுந்து கொண்டிருப்பதை தெளிவாக உணர முடிந்தது. ஆனால் தப்பிக்கத்தான் முடியவில்லை. 

கீழே விழுந்த சில வினாடிகளில் பேருந்து என்னைத் தாண்டியிருந்தது. டிரைவர் நான் கீழே விழுந்ததை பார்த்தாரா என்று தெரியவில்லை. எப்படியோ சக்கரத்தை மேலே ஏற்றாமல் ஓட்டிச் சென்று புண்ணியத்தை தேடிக் கொண்டார். பேருந்தைத்தான் காணவில்லை என்றால் தொண்ணூறுகிலோ வாலாவையும் காணவில்லை. என்னைக் கீழே தள்ளிவிட்டு அவர் பேருந்தில் இடம் பிடித்துக் கொண்டார் போலிருக்கிறது. Survival of the fittest.

கீழே இருந்து உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. சுற்றிலும் நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் என்னைத் தூக்கினார்கள். கையில் கடும் வலியாக இருந்தது.  யாரோ ஒருவர் கையைப் பிடித்தே தூக்கினார். தமிழில் ஏதோ கத்தினேன். புரியவில்லை போலிருக்கிறது. திங்கட்கிழமை அதுவும் தமது வேலைகளை விட்டுவிட்டு தூக்கிவிடுவதே பெரிய விஷயம்- அவர்களைப் பார்த்து கத்துவது புண்ணியத்திற்கு வந்த மாட்டை பல்லைப் பிடித்து பார்ப்பது போலத்தான். இருந்தாலும் வலி என் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கிக் கொண்டிருந்தது. ஆட்டோவில் ஏற்றினார்கள். அதே ஆட்டோதான். அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனைக்குள் இருந்தேன். அடுத்த சில நிமிடங்கள் மட்டுமில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்கும் அங்குதான் இருந்தேன். 

ஓரிரண்டு மணிகளுக்குப் பிறகு அம்மா வந்து அழுது கொண்டிருந்தார். இப்படி விபத்து நடக்கும் போதெல்லாம் அவருக்கு ஒரே ஒரு காரணம்தான் தெரியும் “எழுதுறேன் எழுதறேன்னு இருபத்தி நாலு மணி நேரமும் கண்டதையே நினைச்சுட்டு இரு” அப்பாவும் விதிவிலக்கு இல்லை “மனசை அலையவிடாம பார்த்துக்கன்னா கேட்கேவே கேட்காதா?” என்று புலம்பிக் கொண்டிருந்தார். இந்த புலம்பல்களும் அட்வைஸ்களும் ஒரு காதில் புகுந்து இன்னொரு காதில் வெளியேறிக் கொண்டிருந்தன. மலையாள நர்ஸ் ஊசிகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தார். அம்மாவையும் அப்பாவையும் வெளியே அனுப்பினால் காதுகளுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு கண்களுக்கு வேலை கொடுக்கலாம் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை. அவர்கள் இருக்கும் போதே ஊசிகளை சகட்டுமேனிக்கு ஏவிவிட்டார். கண்களை மூடிக் கொண்டு பற்களை நறநறத்தேன்.

அப்பொழுது சாருநிவேதிதாவும் ஜெயமோகனும் என் மண்டைக்குள் புகுந்திருந்ததுதான் துரதிர்ஷ்டம். ஏதோ ஒரு அறுவை சிகிச்சைக்காக சாரு நிவேதிதா மருத்துவமனையில் இருந்த போது வலி கொடூரமாக இருந்திருக்கிறது. அப்பொழுது ஜெயமோகனுக்கு தனது வலி குறித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாராம். அந்தக்காலத்தில் இரண்டு பேருக்கும் ஒத்து போயிருக்கும் போல.  வழக்கம் போல ஏகப்பட்டவற்றை எழுதி கடைசியாக “வலியும் ஒரு ஆன்மிகம்” என்று ஒரு பதிலை ஜெ.மோ அனுப்பியிருக்கிறார். சாரு என்ன நினைத்திருப்பார் என்று சொல்லித் தெரியவேண்டுமா? “உனக்கு வலியும் ஆன்மிகம்; எனக்கு ஆன்மிகமும் வலிதான்”. 

இதே நினைப்பில் இருந்ததால் எனக்கு யாராவது மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்த்தேன். ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ‘பெர்சனல் லோன்’ வேண்டுமா என்று கேட்டு அனுப்பியிருந்தார்கள். மொபைலை அணைத்துவிட்டு மூன்று நாட்களாக உறங்கிக் கொண்டிருந்தேன்.

Feb 2, 2013

வில்லன் பிரகாஷ் ராஜூம் கண்ணம்மா டீச்சரும்


மற்றவர்களைப் பற்றி நாமாக எதையாவது பில்ட் அப் செய்து கொள்கிறோம். கடைசியில் பார்த்தால் நாம் நினைத்ததற்கு முற்றிலும் வேறான ஒரு விஸ்வரூபத்தை எடுத்துவிடுகிறார்கள். அவஸ்தை என்னமோ நமக்குத்தான்.

இப்படித்தான் ஆறாவது படிக்கும் போது கண்ணம்மா டீச்சர் தமிழ் பாடம் எடுத்தார். அந்த வகுப்பிற்கு வந்த ஆசிரியர்களிலேயே அடிக்காத டீச்சர் என்றால் கண்ணம்மா டீச்சர்தான். கணக்கு வாத்தியார் ராமசாமியும் அடிக்க மாட்டார்தான். ஆனால் எப்பவாவது கோபம் வந்து கை வைத்தால் அடி வாங்குபவன் ‘செத்தான்’ என்று வைத்துக் கொள்ளலாம். எதிரில் இருப்பவன் கண்ணும் தெரியாது கீழே கிடக்கும் மண்ணும் தெரியாது. பின்னி எடுத்துவிடுவார்.  மற்றபடி சமூகவியல் டீச்சர் சிலம்புச்செல்வி, ஆங்கிலம் எடுத்த சுசீலா டீச்சர் , அறிவியல் வாத்தியார் வெங்கடாஜலபதி எல்லாம் ஒரே வகையறாவைச் சேர்ந்தவர்கள். ரெகுலர் அடி சர்வீஸ் டீச்சர்ஸ். குச்சியும் கையுமாகத்தான் வகுப்புக்கு வருவார்கள். நினைக்கும் போது அடித்து மேய்ந்துவிட்டு போவார்கள். 

கண்ணம்மா டீச்சர் சாந்தமாக பேசுவார். முக்கால்வாசி நரைத்த முடியுடன் இருக்கும் அவருக்கு கோபம் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று நம்பிவிடலாம். அப்படித்தான் அவரது உருவமும் பேச்சும் இருக்கும். அந்த டீச்சருக்கும் கடும் கோபத்தை வர வைத்தான் சுரேஷ். அவன் எங்கள் வகுப்பில்தான் படித்தான். கீச்சுக்குரலோன். அந்தக் குரலை மற்றவர்கள் கலாய்ப்பது உண்டு. மற்றவர்கள் என்றால் கிட்டத்தட்ட அத்தனை மாணவர்களும்.  என்னதான் கலாய்த்தாலும் டென்ஷன் ஆகமாட்டான். சிரித்துக் கொண்டே நிற்பான். அந்த சிரிப்புதான் மற்றவர்களுக்கு ‘பூஸ்ட்’. அடுத்த முறை இன்னமும் வீர்யமாக கலாய்ப்பார்கள்.

சுரேஷூக்கு உடன்பிறந்தவர்கள் யாருமில்லை. பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்ல மகனாகவும் இருந்தான். அவனது அப்பா பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். பள்ளியில் இருந்து நடக்கும் தூரத்தில்தான் வீடு இருந்தது. கண்ணம்மா டீச்சர் ட்யூஷனும் எடுத்தார். பள்ளி முடிந்தவுடன் ஒரு மணி நேரம் பள்ளியிலேயே ட்யூஷன் நடக்கும். ட்யூஷன் போகும் பையன்கள் எல்லோருமே ஃபீஸ் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களிடம் ஃபீஸ் வசூலிப்பதற்காக ஒவ்வொரு நாளும் டீச்சர் நொந்து கொண்டிருந்தார். ஆனாலும் முரட்டுத்தனமாக கேட்டதில்லை. 

கோழிக்கு புழுவை படைத்த ஆண்டவன் கோழியை பருந்துக்கு படைப்பான் என்று எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள்.அப்படித்தான் ஏகப்பட்ட பேர் சுரேஷை கலாய்த்தாலும் அவன் கலாய்ப்பதற்கு என்று ஜீவன் கிடைத்திருந்தது. கண்ணம்மா டீச்சர்தான அந்த ஜீவன்.

டீச்சர் வகுப்பிற்குள் வந்தால் போதும். சுரேஷ் குஷி ஆகிவிடுவான். டீச்சரை ஓட்ட ஆரம்பித்துவிடுவான். டீச்சருக்கும் அவனை பேச விட்டுப் பார்ப்பதில் சந்தோஷம் இருந்திருக்க வேண்டும். வகுப்பில் வருகைப்பதிவு எடுத்து முடித்தவுடன் “சுரேஷ், ட்யூஷன் ஃபீஸ் என்னாச்சுடா?” என்பார். டீச்சர், செவ்வாய் அபாயம்ன்னு எங்கம்மா சொல்லிடுச்சு..இன்னொரு நாளைக்கு தந்துடுறேன்” என்பான். வகுப்பு மொத்தத்திலிருந்தும் ‘ஜல்ல்ல்ல்ல்’ என்று சத்தம் வரும். டீச்சர் எங்களையெல்லாம் பார்த்து ‘உஷ்ஷ்ஷ்’ என்பார். டீச்சர் முறைத்தாலும் எங்களுக்கு பயமாக இருக்காது என்பதால்  ‘ஈஈஈஈஈ’ என்று பல்லைக் காட்டிக் கொண்டிருப்போம்.

ஒவ்வொரு முறையும் கண்ணம்மா டீச்சர் ட்யூஷன் ஃபீஸைக் கேட்கும் போதும் “இன்னொரு நாளைக்கு” என்று இழுத்தடிப்பான். டீச்சரும் விடாமல் “இன்னொரு நாளைக்குன்னா எப்போ?” என்றால் அவனும் சலிக்காமல் “எங்கம்மாகிட்ட கேட்டுட்டு வந்து சொல்லுறேன்” என்பான்.

“புதன் கொடுத்தால் பந்தம் நிக்காது டீச்சர்”,“வியாழன் வரவு வெச்சா விடிஞ்சா செலவு வெக்கும்”, “வெள்ளிக்கெழம கொடுத்தால் மகாலட்சுமி போயிடும்” என்ற டுபாக்கூர் பழமொழிகளை இடைவெளியில்லாமல் சுரேஷ் அடித்துவிட்டுக் கொண்டிருந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. 

ஒவ்வொரு நாளும் ஃபீஸ் பற்றிய கேள்வி, அதற்கு ஒரு பழமொழி, அதற்கப்புறம் நிறைய டயலாக் பரிமாற்றங்கள். எல்லாம் முடிந்த பிறகு “உங்க அம்மாவைக் கூட்டிட்டு வா” என்று டீச்சர் சொல்வார். அவர்  சொன்னவுடன் “சரிங்க டீச்சர்” என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிடுவான். இதற்கு பிறகு அவனிடம் ஃபீஸ் பற்றி டீச்சர் எதுவும் கேட்கமாட்டார் என்று அவனுக்குத் தெரியும். இந்த பல்லவிகள் இனி அடுத்த நாள்தான் தொடரும். 

டீச்சருக்கும் சுரேஷூக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் இருந்தது. அவன் சொன்னால் டீச்சர் முழுமையாக நம்பினார். இந்தச் சமயத்தில்தான் நானும் சுரேஷூம் நண்பர்கள் ஆகிக் கொண்டிருந்தோம். காலாண்டுத் தேர்வுகளுக்குப் பிறகாக சுரேஷ் என்னிடம் நெருக்கமாக பழகிவந்தான். அவர்கள் வீட்டு மரத்தில் காய்த்த நெல்லிக்காய், சீதாப்பழம் என சீஸனுக்கு தகுந்தாற் போல கொண்டு வருவான். அவற்றை எனக்கு மட்டும்தான் தருவான். பதிலுக்கு இண்டர்வெல்லில் அவனுக்கு சீடை அல்லது தேன்மிட்டாய் வாங்கித் தருவேன். இந்த பரிமாற்றத்தினாலோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ எங்கள் நட்பு இறுகிக் கொண்டிருந்தது. 

அரையாண்டுத்தேர்வு முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தது. கண்ணம்மா டீச்சர் வகுப்பு. பாடம் எழுதிய நோட்டை ஒவ்வொருவராகக் கொண்டு வரச் சொன்னார். ஒவ்வொரு மாணவராக வரிசையாகச் சென்றார்கள். எழுதாதவர்களை தலைமையாசிரியர் அறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். நான் பாடம் எழுதியிருக்கவில்லை. ஆனால் சுரேஷ் பாடம் எழுதியிருந்தான். தலைமையாசிரியர் அறைக்குச் செல்ல வேண்டுமே என பயமாக இருந்தது. 

வகுப்பு முடிவதற்கு கடைசி பத்து நிமிடங்கள்தான் இருந்தது. எங்கள் வரிசையை அழைக்க இன்னும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகக் கூடும். பின்னாலிருக்கும் வரிசையில் அமர்ந்து கொண்டால் தப்பித்துவிடலாம் என்று தோன்றியது. சுரேஷிடம் சொன்னேன். “நல்ல ஐடியா” என்றான். பென்ச்சுக்கு கீழாக நகர்ந்து பின் வரிசையில் அமர்ந்து கொண்டேன். இப்பொழுது இரண்டு மாணவர்களுக்கு அடுத்து சுரேஷின் முறை. டீச்சருக்கு அருகாமையில் வரிசையில் நின்று கொண்டிருந்தான். நான் அவனை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்காட்டி விரலைக் காட்டி “சிக்கிக் கொண்டாய்” என்ற பாவனையைக் காட்டினான். அதிர்ச்சியடைந்தேன். “ஏன்” என்று சைகை காட்டினேன். திரும்பவும் அதையே செய்தான். பயம் அதிகமானது. நடுங்கத் துவங்கினேன்.

நல்லவேளையாக பள்ளியின் பெல் அடித்தது. ஆசுவாசமாக இருந்தது. டீச்சர் எழுந்தார். இன்றைக்கு தப்பித்துவிடலாம் என்று தோன்றியது. எல்லோரும் எழுந்து நின்று கோரஸாக “நன்றி டீச்சர்” என்று கத்தவும் டீச்சர் வெளியேறவும் சரியாக இருந்தது. எனக்கு நிம்மதியாகவும் இருந்தது. ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை. “டீச்சர்” என்று சுரேஷ் குரல் கொடுத்தான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். “மணிகண்டன் எழுதவே இல்லை டீச்சர். உங்களை ஏமாத்த பின்னாடி பென்ச்சுக்கு போய்ட்டான்” என்றான். 

டீச்சர் அத்தனை கோபப்பட்டு பார்த்ததேயில்லை. வெளியே போன டீச்சர் உள்ளே படு வேகமாக வந்தார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். “ராஸ்கல் இந்த வயசுலேயே ஃபோர்ஜரி பண்ணுறியா?” என்று தாறுமாறாக மொத்திவிட்டார். அடுத்த வகுப்பு எடுப்பதற்காக வெளியே அறிவியல் வாத்தியார் வெங்கடாஜலபதி காத்துக் கொண்டிருந்தார். டீச்சர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அவரை உள்ளே ஆழைத்து “நீங்க அடிங்க சார்” என்றார். அவருக்கு மேட்டர் புரிந்ததோ இல்லையோ நொங்கிவிட்டார். 

அதன்பிறகுதான் புயல் கரையைக் கடந்தது. டீச்சர் வெளியேறினார். வெங்கடாஜலபதி வாத்தியார் பாடம் நடத்தினார். எனக்கு கண்கள் குளமாகிக் கிடந்தது. சுரேஷ் எதற்கு என்னை மாட்டிவிட்டான் என்று யோசித்துக் கொண்டேயிருந்தேன். ஒன்றுமே பிடிபடவில்லை. அவன் என்னை அவ்வப்போது திரும்பிப்பார்த்து கமுக்கமாக சிரித்துக் கொண்டிருந்தான். எனக்கு கோபம் உச்சிக்கு மேல் ஏறிக் கொண்டிருந்தது. எழுந்து கொட்டி வைக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை.

வகுப்பு முடிந்த பிறகு சுரேஷ் என்னிடம் வந்தான். “செமத்தியா மாட்டுனியா?” என்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவனேதான் சொன்னான் “முந்தாநாள் என்னோட கலர் சிலேட் பென்சிலை உடைச்சதுக்கு பழிக்கு பழி” என்றான். எனக்கு உயிர் ஒரு வினாடிக்கு போய் வந்தது. அதை நான் தெரியாத்தனமாகத்தான் முறித்தேன். அப்பொழுது அழுது கொண்டே ஓடிவிட்டான். அடுத்தநாள் வழக்கம் போல சிரித்தும் பேசினான். இந்த பென்சில் மேட்டருக்காக அவன் பிரகாஷ் ராஜை மிஞ்சிய வில்லன் ஆவான் என்று எதிர்பார்க்கவில்லை. பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனைத் தாண்டினேன். 

வீட்டிற்குச் செல்வதற்காக இரண்டாம் நெம்பர் டவுன்பஸ்ஸில் ஏறி இடம் பிடித்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் அழுது முடித்த போது கடுங்கோபம் உருவாகியிருந்தது. அப்பொழுது அத்தனை கோபத்தையும் திரட்டி ஒரு முடிவு எடுத்தேன் “உனக்கு இருக்குடா”

(எப்பொழுதும் பிரகாஷ் ராஜ்கள் ஜெயித்துக் கொண்டேயிருப்பதில்லை அல்லவா? அவனை ஜெயித்த கதை இன்னொரு நாள்)