கல்லூரியில் படித்த காலத்தில் சனிக்கிழமை விடுமுறையாக இருக்காது. மதியம் வரைக்கும் வகுப்புகள் நடக்கும். ஒரு மணிக்கு வகுப்புகள் முடிந்தவுடன் ஊருக்கு கிளம்பினால் வீடு போய்ச் சேரும் போது அன்றைய பொழுது முடிந்துவிடும். திரும்ப வந்தால் திங்கட்கிழமையன்று காலையில் கல்லூரி ஆரம்பித்தவுடன் யுனிட் டெஸ்ட் நடக்கும். அது வெறும் டெஸ்டாக மட்டும் இருந்தால் பிரச்சினை இல்லை. அந்த தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் இண்டெர்னல் மதிப்பெண் வழங்குவார்கள். அதையும் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மாதா மாதம் இந்த மதிப்பெண்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். பத்து, பதினைந்து என்று மதிப்பெண்கள் எடுத்திருப்பதற்கு வீட்டில் இருந்து வரும் கேள்விகளை சமாளிப்பதுதான் பெரும் அக்கப்போராக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் இடையில் இருக்கிறது. படித்திருக்கலாம்தான். ஆனால் டிவி பார்ப்பதற்கும், மதியத் தூக்கம் பழகுவதற்கும் இந்த ஞாயிறுகளை பயன்படுத்தியதால் ஞாயிறுகள் பறந்து கொண்டிருந்தன. திங்கட்கிழமை காலை ஐந்து மணிக்கு பேருந்தில் பயணிக்கும் போது படித்து முடித்துவிட வேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால் சிலு சிலு காற்றும் வெந்நீர் குளியலும் சேர்த்து அசத்தி தூங்கச் செய்துவிடும். பேருந்து சேலம் வந்து சேர்ந்த பிறகு நேரத்தைப் பார்த்தால் எட்டு தாண்டி கால் மணி நேரம் ஆகியிருக்கும். காப்பியடித்தாவது டெஸ்ட்டில் பாஸாகிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டினாலும் கஷ்டம்தான். எப்படியும் பெயிலாகிவிடுவதுதான் வாடிக்கை.
திங்கட்கிழமையில் இன்னொரு டார்ச்சர் காத்திருந்தது. விடுதியில் வெண்பொங்கல் போடுவார்கள். அடுத்த பல வருடங்களுக்கு வெண்பொங்கலை தொடவே கூடாது என்று முடிவெடுக்க அதுதான் அடிப்படை. அதில் மிளகு தவிர வேறெதுவும் இருக்காது. பட்டினியாக போய்த்தான் டெஸ்ட் எழுதுவேன். வயிறும் காலியாக இருக்கும். விடைத்தாளும் காலியாகவே கிடக்கும். நான்கு வருடங்களுக்கு இந்த சித்ரவதையை அனுபவித்ததனாலேயே என்னவோ திங்கள் என்றால் இன்னமும் வெறுப்பாகவே இருக்கிறது. Monday Blues.
இந்த Blues என்ற சொல்லை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஞாபகப்படுத்தியது. பாகிஸ்தான் அணியிடம் இந்தியா கிலோ கணக்கில் மண் அள்ளித் தின்பதை India Blues என்ற தலைப்பில் எழுதியிருந்தார்கள். கிரிக்கெட்டில் இந்தியா ‘பன்’ வாங்கும் போதெல்லாம் சந்தோஷமாகவே இருக்கிறது. லலித் மோடி ஊழலில் சிக்கி வழிந்த போதும் உற்சாகமாகவே இருந்தது. ஒரு விளையாட்டை பிரபலப்படுத்துவதற்காக நடந்த அரசியலில் பிற அத்தனை விளையாட்டுகளையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் துக்கம். சரி அதை விடுவோம். விளையாட்டின் அரசியலை எழுத ஆர்.அபிலாஷ் போன்ற ஜாம்பவான்கள் சமகாலத்தில் இருக்கிறார்கள்.
Monday Blues இன்னமும் தொடர்வதால், அதை மறப்பதற்காக ஞாயிற்றுக்கிழமையை மிக உற்சாகமானதாக மாற்றிக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது. அப்படி உற்சாகமாக்கிக் கொண்டால் அடுத்த நாளையும் அதே உற்சாகத்தின் நீட்சியாக கழித்துவிடலாம் என்பது நம்பிக்கை. நேற்றும் அப்படித்தான். கப்பன் பூங்காவில் சந்தித்தோம். இலக்கியச் சந்திப்பு, புத்தக் வெளியீடு என்று சொல்லியிருந்தோம். முப்பத்தைந்து நண்பர்கள் சேர்ந்தார்கள். பெரும்பாலும் யாரையும் யாருக்கும் அறிமுகம் இல்லை. முதன் முதலாக சந்தித்துக் கொண்டோம்.
இலக்கியம் பேசுகிறோம் என்று அழைத்து இருபது நண்பர்கள் பெங்களூரில் சேர்ந்தால் கூட அது வெற்றிதான் என்று நம்பிக் கொண்டிருந்தோம். அதனால் சந்தோஷமாகவே இருந்தது. இயற்கையான சூழலில் இதமான குளிரில் புல்வெளிக் கூட்டம் மிக நன்றாகவே நடந்தது. நிறைய பேசினோம். அது பற்றி தனியாக எழுதலாம்.
புத்தக வெளியீட்டிற்கு பிறகு கொண்டு போன பிரதிகள் அத்தனையையும் நண்பர்கள் விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்கள். எனது முந்தையை இரண்டு புத்தகங்களும் எத்தனை பிரதிகள் விற்றது என்ற கணக்கு கூட தெரியாது என்பதால் இது ஆச்சரியமானதாக இருந்தது. கண் முன்னாலேயே புத்தகத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பது ஆச்சரியமும் மகிழ்ச்சியுமானதுதானே. பணம் முக்கியம் இல்லை. எழுதுவதை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் இருக்கும் சந்தோஷம் அது. பிரதிகள் விற்பனையானதில் ஆயிரம் ரூபாய் கிடைத்தது. கொண்டு போய் பூஜையறையில் வைத்திருக்கிறேன். பணம் பெருக வேண்டும் என்பது நோக்கமில்லை. நிறைய எழுத வேண்டும். உருப்படியாக எழுத வேண்டும். நிறையப் பேர் வாசிக்க வேண்டும். அவ்வளவுதான்.
5 எதிர் சப்தங்கள்:
சமீபத்தில் தான் உங்கள் வலைத்தளத்திற்குள் நுழைந்தேன்.பத்து ஆண்டுகள் கழித்து இப்போது நான் மீண்டும் எழுத ஆரம்பித்துவிட்டேன்.சத்தியமாய் இது உங்கள் எழுத்திற்கு வெற்றி..!வேலூர் மாவட்டத்தில் உங்கள் புத்தகம் கிடைக்குமெனில் முகவரி சொல்லுங்களேன்.
நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது.
You are rocking in each words...Hats off
பிரதிகள் விற்பனையானதில் ஆயிரம் ரூபாய் கிடைத்தது. கொண்டு போய் பூஜையறையில் வைத்திருக்கிறேன். பணம் பெருக வேண்டும் என்பது நோக்கமில்லை. நிறைய எழுத வேண்டும். உருப்படியாக எழுத வேண்டும். நிறையப் பேர் வாசிக்க வேண்டும். //
வாழ்த்துகள்..!
வாழ்த்துக்கள் மணிகண்டன் . எழுத்துக்கும், இலக்கிய சோலைக்கும் !
Post a Comment