Jan 8, 2013

நடிகர்களின் உண்ணாவிரதமும் நடிகையுடனான நேர்காணலும்


வருடா வருடம் Proof of income tax ஐ காட்டச் சொல்லி விடுகிறார்கள். ஆண்டு தொடக்கத்திலேயே  “இந்த வருடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்யப் போகிறேன் அதனால் அந்த ஒரு லட்சத்திற்கு வரி விலக்கு கொடுத்துவிடுங்கள்” என்று கெஞ்சியிருந்தேன். ஆண்டு இறுதியாகிவிட்டதல்லவா? கணக்கு காட்டச் சொல்லி தோளில் துண்டை போட்டு இறுக்குகிறார்கள். வருடம் முழுவதும் லாட்டரியடித்ததால் இப்பொழுது மொத்தமாக முப்பத்தியேழாயிரத்திற்குத்தான் கணக்கு காட்ட முடிந்தது. மிச்சமிருக்கும் பணத்திற்கு பைசா குறைவில்லாமல் வரிபிடித்து என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வார்கள். வாழ்க நிதியமைச்சகம்.

இந்த ப.சிதம்பரம், ஓ.பன்னீர்செல்வம் எல்லாம் இப்படி ‘சின்சியராக’ கணக்கு காட்டுவார்களா என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களாவது நிதியமைச்சர்கள்தான். தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனானப்பட்ட நிதியரசர்களே அலறுகிறார்கள். ரஜினியும், விஜய்யும், சூர்யாவும் நேற்று சோறு தண்ணீர் இல்லாமல் விட்டத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். தர்மபுரி சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமர்ந்துவிட்டார்களோ என்று அதிர்ச்சியாகிவிட்டது. நல்லவேளை அப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவர்களுக்கு தெரியவில்லை போலிருக்கிறது. இவர்கள் மோட்டுவளையை வெறித்துக் கொண்டிருந்ததற்கு வேறு காரணம்.

பத்து லட்சத்திற்கு மேல் வருமானம் இருக்கும் சினிமாக்காரர்கள் 12.3 சதவீதத்தை சேவை வரியாக கட்ட வேண்டும் என்று இந்த அரசாங்கம் சொல்லிவிட்டது. இந்த அரசாங்கத்திற்கு எத்தனை தெனாவெட்டு பார்த்தீர்களா? நம்மை உய்விக்க வந்த கதாநாயகர்கள் மீதே கை வைத்திருக்கிறது. சிகரெட் வாங்குவதாக இருந்தால் கூட தியேட்டர் வாசலில் பிச்சையெடுக்கும் இந்த ஏழைகளிடம் வரி கட்டச் சொன்னால் எங்கே போவார்கள் என்று சற்றேனும் யோசித்திருக்க வேண்டும். பேய் ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும்.

உணவு விடுதிக்கு சேவை வரி விதித்தார்கள். பொறுத்துக் கொண்டோம். முப்பது ரூபாய் கொடுத்து சவரம் செய்யும் சலூன் கடைக்காரனுக்கு சேவை வரி விதித்தார்கள். அதையும் ஏற்றுக் கொண்டோம். இப்பொழுது கங்கை காவிரி இணைப்புக்கு ஒரு கோடி ரூபாயை வழங்கிய வள்ளலுக்கும், ஜட்டி விளம்பரத்திலிருந்து சமையல் பொடி விளம்பரம் வரைக்கும் நடித்து ஓடாய்த் தேயும் சமூகப் போராளிக்கும் வரிவிதிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கும் உங்களுக்கும் அழகாகவா இருக்கிறது? பொங்கி பொசுங்கினால்தான் மனம் சாந்தியடையும் போலிருக்கிறது.

நாம் பொங்குகிறோமோ இல்லையோ தினத்தந்தி பொங்கியிருக்கிறது. பெங்களூரில் விடிந்தும் விடியாமலும் வரும் பத்திரிக்கை தினத்தந்திதான். கொஞ்ச நாட்களுக்கு தினமணி வாங்கிக் கொண்டிருந்தோம். பக்கமும் குறைவு, சுவாரசியமும் குறைவு என்பதால் அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதனால் ஜாகையை தினத்தந்திக்கு மாற்றினோம். கற்பழிப்பாக இருந்தாலும் சரி, கொலையாக இருந்தாலும் சரி- அந்த இடத்தில் நிச்சயம் தினத்தந்தி நிருபர் இருந்திருப்பார். நிருபர் இருந்தாரோ இல்லையோ, நம்மை அப்படி நம்ப வைத்துவிடுவார்கள். அந்த அளவிற்கு பில்ட் அப் கொடுத்து செய்திகளை எழுதுவதால் அப்பாவுக்கு தந்தியை மிக பிடித்து போய்விட்டது. இந்த ஊரில் டி.ஏ.ஷரவணா போன்ற தொழிலதிபர்கள் ‘லம்ப்’பாக கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. தினமும் நிழற்படத்துடன் அவர்களைப் பற்றிய செய்திகளை பிரசுரித்துவிடுவார்கள். அவர்கள் முகத்தை பார்க்க வேண்டிய துர்பாக்கியம் என்ற ஒரு வரியைச் சேர்த்துவிடலாம்தான். ஆனால் பாருங்கள் அவர்தான் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மாநில பொதுச்செயலாளர். அதுவும் இல்லாமல் பெங்களூரிலேயே அமர்ந்து கொண்டு அரசியலில் பலம் வாய்ந்த ஒரு ஆளை கலாய்ப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லதில்லை. 

யாரையாவது நக்கலடிக்க வேண்டும் என்று கையும் வாயும் அரித்தால் புள்ளை பூச்சி மாதிரி இருக்கும் இலக்கியவாதிகளை இழுத்து கபடி விளையாடலாம். நல்ல டைம்பாஸாக இருக்கும். அவர்களும் ஏதாவது கத்திவிட்டு போய்விடுவார்கள். யாருக்கும் எந்தச் சேதாரமும் இருக்காது. ஆனால் அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் எல்லாம் ரிஸ்க். சினிமாக்காரர்கள் என்றவுடன் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என நினைத்தது ஞாபகம் வருகிறது. நடிகை பிரியாமணியுடன் ஒரு நேர்காணல் நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. சவுண்ட்கேமரா என்ற சினிமா தளத்திலிருந்து நேர்காணலுக்கான கேள்விகளை அனுப்பியிருந்தார்கள். ப்ரியாமணி பெங்களூரில்தான் இருக்கிறார். எங்கள் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம்தான். பதில் தர முடியுமா என்றவுடன் பந்தா இல்லாமல் பேசினார் முத்தழகு. அவரிடம் கேட்க எனக்கு வேறு கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அதை வேறொரு நேர்காணலுக்காக கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அடுத்து ஷெரின், பாவனா என்று பெங்களூர் வாழ் நடிகைகளின் லிஸ்ட்டை அனுப்பியிருக்கிறார்கள்.

இன்னொரு இணையத்தளத்திற்காக தியோடர் பாஸ்கரனை நேர்காணல் செய்யலாம் என்ற திட்டம் பல மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது.  அவரும் பெங்களூரில்தான் இருக்கிறார். ப்ரியாமணியை விட சினிமா குறித்து நிறைய பேசுவார். ஆனால் அவரை விட்டுவிட்டு ப்ரியாமணியை நேர்காணல் செய்தது கொஞ்சம் குற்றவுணர்ச்சியைத் தருகிறது. ஆனால் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற கீதாசாரம் காதில் அசீரீரி கணக்காக ஒலிக்கிறது.

 எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. தினத்தந்திக்கு வருவோம். நேற்றைய உண்ணாவிரதம்தான் தந்திக்கு தலைப்புச் செய்தி. வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார்கள். விஜய், விக்ரம், பாலச்சந்தர் என சகலரும் வண்டி வண்டியாக பேசியிருக்கிறார்கள். ஒரு முக்கியமான விஷயத்துக்காக நடிகர்களும், மீடியாவும் கலந்து கும்மியடிப்பதை நினைத்து மகிழலாம். இன்றைய நாளை இனிதே துவங்க நல்லதொரு காரணம் கிடைத்திருக்கிறது.

8 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

They anyway pay 30 % tax. This one is on top of it. I am not sure if you are willing to pay another 13% on top of it. Anyway, it is said that there will be an increase of 5% for all. So They may end up paying 50%.

Vaa.Manikandan said...

அவனவனுக்கு அரிப்பு வந்தால்தான் பிரச்சினையின் வீரியம் புரியும் என்பது சரிதான். ஆனால் சினிமாக்காரர்கள் எத்தனை வெள்ளையாக வாங்குகிறார்கள் எவ்வளவு ப்ளாக்காக வாங்குகிறார்கள் என்ற கணக்கு இருக்கிறது அல்லவா? வெள்ளையாக வாங்கும் சொற்ப பணத்திற்கு சேவை வரி கட்டச் சொல்லுகிறார்கள். அவ்வளவுதானே? தப்பா பேசுகிறேனா?

ஜீவ கரிகாலன் said...

இப்படி நாசூக்கா குத்திறது தான் மிகவும் ரசிக்க வைக்கிறது.

*எச்சரிக்கை: மறுபடியும் உச்ச நடிகரை வம்புக்கு இழுத்துவிட்டீர்கள்

சேக்காளி said...

//இழுத்து கபடி விளையாடலாம்//
இப்பல்லாம் "பல்லாங்குழி" தான் பேமஸ்.

Robin said...

Super :)

Indian said...

//இந்த ஊரில் டி.ஏ.ஷரவணா போன்ற தொழிலதிபர்கள் ‘லம்ப்’பாக கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. தினமும் நிழற்படத்துடன் அவர்களைப் பற்றிய செய்திகளை பிரசுரித்துவிடுவார்கள். அவர்கள் முகத்தை பார்க்க வேண்டிய துர்பாக்கியம் என்ற ஒரு வரியைச் சேர்த்துவிடலாம்தான். //

அத்தி பூத்தாப்புல தந்தி வாங்கினாலும் அன்னிக்கு கட்டாயம் ஷரவணா அண்ணாச்சி பேப்பரில் சிரித்துக்கொண்டிருப்பார்.

//ஆனால் பாருங்கள் அவர்தான் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மாநில பொதுச்செயலாளர். அதுவும் இல்லாமல் பெங்களூரிலேயே அமர்ந்து கொண்டு அரசியலில் பலம் வாய்ந்த ஒரு ஆளை கலாய்ப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லதில்லை. //

பேசாம உங்க அடுத்த புத்தக வெளியீட அவரு தலைமைல நடத்திடுங்க. உங்களுக்கும் உள்ளூரில வெளம்பரம் கிடைக்கும். அவரு நகைக்கடைல ஆயிரம், ஐநூறு டிஸ்கவுண்ட் கொடுத்தாலும் கொடுக்கலாம்.

Anonymous said...

திரு மணிகண்டன் நீங்கள் எழுதுவதை விரும்பி படித்தவர் என்ற உரிமையில் இதை சொல்லுகிறேன். முதலில் ப்ரியாமணி பற்றி சில வரிகள். படித்தவர், இந்த சிறிய வயதில் பல மொழி படங்களில் நடித்தவர், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். பேட்டிக்கு நீங்கள் அழைத்து உடன் அணைத்து கேள்விகளுக்கும் பதில் கூறினார். You have spectacularly offended her by saying you should have interviewed Bhaskaran instead of her about cinema. உங்கள் தலைப்பும் (நடிகை) மற்றும் எழுதிய (tone) தொனியும் அவரை அவமானம் செய்வதாக உள்ளது. இலக்கியவாதி என்ற கர்வம் மற்றும் நடிகை என்பவரை ஏலனமாய் பார்ப்பது போன்றவை உங்கள் எழுத்தில் வெளி வருகிறது. சாதித்த பெண்களை புகழ வேண்டாம் ஆனால் அவமானம் செய்ய வேண்டாம்.
மோனா

Chellamuthu Kuppusamy said...

அட அப்பரண்டிசுகளா.. தியோடர் பாஸ்கரன் தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆவணப்படுத்தியவர், தமிழ் சினிமாவின் பின்னணி குறித்த ஆழமான அறிவு கொண்டவர்.