Jan 3, 2013

சூப்பர்ஸ்டாரின் ரசிகன்


சென்ற வாரத்தில் எங்கள் அலுவலகத்தில் டைரக்டராக இருந்தவர் வேறொரு நிறுவனத்தில் வேலை வாங்கி மாறுதலில் சென்றார். சிவகாசிக்காரர். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இதே நிறுவனத்தில் இருக்கிறார். அது முக்கியமில்லை. பத்து வருடங்களுக்கு முன்பாக சாப்ட்வேர் டெவலப்பராக வேலைக்குச் சேர்ந்தவர் கிட்டத்தட்ட நான்கைந்து ப்ரோமோஷன்களுக்கு பிறகு இன்று டைரக்டராக வெளியேறுகிறார். பத்து வருடத்தில் இந்த வளர்ச்சியை பெரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். தான் மட்டும் முன்னேறியதோடு இல்லாமல் தனக்கு கீழாக இருந்தவர்களுக்கும் ஏகப்பட்ட ப்ரோமோஷன்கள் வாங்கித் தந்து தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக வடிவமைத்துக் கொண்டவர்.

அவரை வழியனுப்புவதற்காக ஒரு வீடியோ தயாரித்திருந்தோம். இந்த வீடியோவிற்காக எனது மேனேஜர் வெறித்தனமாக வேலை செய்தார். அத்தனை நன்றியுணர்ச்சி அவருக்கு. டைரக்டரோடு வேலை செய்தவர்களை பேசச் செய்து அந்த ‘க்ளிப்’பிங்ஸ் வீடியோவில் இணைக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ தயாரிப்புக்காக சில இரவுகள் தூக்கம் கெட்டவர்கள் பேய் முழி முழித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் வீடியோ மிக அழகாக வந்திருந்தது. நிகழ்ச்சியில் இந்த வீடியோவை ஓடவிட்டபோது டைரக்டர் அழத் தொடங்கியிருந்தார். Emotional touches.

இந்த வீடியோவில் அங்கங்கு டைரக்டரை ரஜினிக்கு இணையாக காட்டியிருந்தார்கள். ரஜினி படத்தின் தொடக்கத்தில் S..U..P..E..R என்ற எழுத்துக்கள் ஒவ்வொன்றாக வரும் இல்லையா? அதே கான்செப்டை பயன்படுத்தி டைரக்டரை சூப்பர் ஸ்டார் ஆக்கியிருந்தார்கள். வீடியோவில் பேசிய ஓரிருவரும் இவரை ‘ரஜினி போன்றவர்’ என்றார்கள். இத்தகைய ஒப்பிடல்கள் நிச்சயம் டைரக்டரை பரவசத்தில் ஆழ்த்தியிருக்கும். அதுவும் எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் பள்ளிப்பருவத்தில் இருந்த ஒரு தலைமுறைக்கு தன்னை ரஜினியாக பாவித்துக் கொள்வதில் அதீத ஆர்வம் இருந்தது. இப்பொழுது எவ்வளவு பெரிய நிறுவனத்தில் டைரக்டராகவோ அல்லது வைஸ் பிரசிடெண்டாகவோ இருந்தாலும் இந்த ஆர்வம் அவர்களின் Subconscious Mind இல் பதிந்து கிடக்கும் என்பதால் நிச்சயம் அவரை சந்தோஷப்படுத்தியிருக்கும்.

இது வேறு ஒரு ட்ராக். 

ரஜினி மீதான Craze எனக்கும் ஒருகாலத்தில் இருந்தது. ஒரு காலத்தில் இல்லை- இப்பொழுதும் எனக்கு பிடித்த நாயகன் ரஜினிதான். அது ‘ஹீரோயிஸ’த்தை விரும்பும் மனநிலையால் உருவாகும் விருப்பம். இத்தனை வயதிலும் ஆக்சன் படத்தை பார்க்கும் போது எனக்கு இண்டர்வெல்லில் கை கால் முறுக்கேறிக் கொள்ளும். யாரையாவது ஒரு குத்துவிட்டால் தேவலாம் என்று இருக்கும். இந்த மனநிலையில் இருப்பவனுக்கு ரஜினியும், ஜாக்கிசானும்தான் பிடித்த நாயகர்களாக இருக்க முடியும்.

இதை எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. ரஜினியின் சுயவிளம்பரம் பற்றிய நேற்றைய இரண்டு வரி விமர்சனத்திற்கு  ‘மனச்சிதைவு’ என்று ஒரு நண்பர் பெயரிட்டிருந்தார். பைத்தியம் அல்லது மூடன் என்று என்னை விளிப்பதால் என்னுள் எந்தச் சலனமும்  உருவாகப்போவதில்லை. ஆனால் பிரச்சினை அதுவன்று- ரஜினியின் விளம்பர யுக்தி. ஒவ்வொருவருக்கும் ஒரு விளம்பர முறை இருக்கிறது. மணிரத்னம், ஷங்கர், கமலில் ஆரம்பித்து மன்சூரலிகான் வரைக்கும் ஒவ்வொருவரும் தனக்கான சுய விளம்பர முறையை வைத்திருக்கிறார்கள். ஆனால் ரஜினி அளவுக்கு யாரும்  ‘வேறொரு’ எதிர்பார்ப்பை உருவாக்கி அதன் மூலம் அறுவடை செய்வதில்லை. ரஜினியின் அரசியல் பூச்சாண்டிகள் ஒவ்வொன்றும் அவரது படத்துக்கான விளம்பரம் மட்டுமே என்பதை ரஜினியை கவனித்துவரும் ஒவ்வொருவராலும் புரிந்து கொள்ள முடியும்.

ரஜினி அரசியலுக்கு வருவதும் வராமலிருப்பதும் அவர் இஷ்டம். இதை கேட்க நீ யார் என்று கேட்டால் என்னிடம் பெரிய பதில் எல்லாம் இல்லை. அவரது ராஜாதி ராஜாவில் ஆரம்பித்து பாபா வரைக்கும் முதல் ஷோவுக்கு டிக்கெட் எடுத்ததைத் தவிர நான் வேறு எதுவும் செய்ததில்லை. 1996 இல் அரசியலுக்கு வந்துவிடுவதாக ஆட்டம் காட்டிய போது அடுத்த எம்.ஜி.ஆர் என்று எதிர்பார்த்து ஏமாந்ததைவிட வேறு எந்த உறவும் இல்லை. ஆனால் அதையெல்லாம் ரஜினியின் கேப்மாரித்தனம் என்று சொல்ல மாட்டேன். நான் முட்டாளாக இருந்திருக்கிறேன். ஆனால் இப்பொழுதும் அதே மாதிரியான ‘முட்டாள்’களை உருவாக்கிக் கொண்டிருக்கும் மனிதனை என்னளவிலும் கூட எதிர்க்கக் கூடாது என்று யாராவது சொன்னால் அவர்களை பார்த்து ‘ஈஈஈஈ’ காட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாத சாமானியன் நான். 

10 எதிர் சப்தங்கள்:

க ரா said...

Well said mani.

மாதவன் said...

truly good think

Anonymous said...

Dhooooolllll...

Raghuraman said...

அடிச்சு நொறுக்குறியேப்பா....

semmalai akash said...

அருமையான அலசல்.

WEWINSARAN said...

SUPER THALAIVA NEE SOONATHU OVVVARU RAJINI FANSKUM PORUNTHUM, ATHUMATUMALA EPPO VARA ELLA HERO VUKUM PURIYUM

Jayadev Das said...

கமலை திட்டி எழுதுபவர், நானும் கமல் ரசிகந்தேன்...... என்கிறார். ரஜினியை திட்டி எழுதுபவர் நானும் ரஜினி ரசிகந்தேன். அவர் எல்லா படத்தையும் முதல் ஷோ பாத்தவந்தேன். அது... இது....... என்று எல்லா பீலாவும் விடுகிறார்கள். யாரைத்தான் நம்புவதோ ..............

ஜீவ கரிகாலன் said...


அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே முந்தைய பதிவின் கோடிட்ட இடங்களை (கமெண்டுகளில்) நிரப்பிவிட்டீர். கண்டிப்பாக இப்பொழுது நீங்கள் ரஜினி ரசிகர் இல்லை அன்று சாதுரியமாக சொல்லிவிட்டீர்கள்

Uma said...

ரஜினி ஒரு அருமையான வியாபாரி. தன் தொழிலை விருத்திபண்ண தன்னாலான எல்லா உத்திகளையும் பயன்படுத்திகிறார், உழைக்கிறார்.இது நம்மைப்போன்ற சாமானியர்களுக்கு கொஞ்சம் லேட்டாக புரிய ஆரம்பித்ததுதான் சோகம்!

valluvan said...

hmmmmm