இன்னொரு வருடம் பிறந்திருக்கிறது.
பெங்களூரிலும் சென்னையிலும் மட்டும்தான் பட்டாசு வெடிப்பார்கள் என்று இல்லை. கரட்டடிபாளையத்தில் கூட பட்டாசு வெடித்து அடித்தொண்டையில் “ஹேப்பி நியூ இயர்” என்று கத்துவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். விழித்துக் கொண்ட சேவல்கள் கூவத் துவங்கின. அதிர்ந்த நாய்கள் கத்திக் கொண்டே வீதிகளில் ஓடிக் கொண்டிருந்தன. ஆளாளுக்கு கை குலுக்கிக் கொண்டார்கள்.
ஒவ்வொரு சிறப்பு தினத்தையும் நமக்கு ஏற்றபடி Customize செய்து கொள்வதில் நம்மை அடித்துக் கொள்ளவே முடியாது. எங்கள் கிராமத்து பெண்கள் நேற்றிரவே தண்ணீர் தெளித்து கோலப்பொடியில் வாழ்த்துக்களை எழுதி வைத்திருந்தார்கள். கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. நள்ளிரவு பூஜையெல்லாம் கூட திட்டமிட்டிருந்தார்கள். இரவு நேரங்களில் கோவில்களை திறந்து வைத்திருக்கக் கூடாது என்ற ஆகம விதிகளை ‘அசால்ட்டாக’ அபேஸ் செய்துவிடுகிறார்கள்.
இந்த Customization எங்கள் ஆயா காலத்திலேயே எனக்கு அறிமுகம் ஆகியிருந்தது. ஆயா என்றால் அப்பாவின் அம்மா. காசியம்மாள் என்பது அவர் பெயர். காதில் தொங்கட்டான் மாட்டியிருந்ததில் பெரிய ஓட்டை விழுந்திருந்தது. தாத்தாவின் மறைவுக்கு பிறகு தொங்கட்டான்களை கழட்டிவிட்டார். தோல் சுருக்கங்கள் வறண்ட களிமண் நிலத்தில் இருக்கும் பிளவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும். வாய் நிறைய வெற்றிலையை குதப்பிக் கொண்டு தும்பைப் பூவின் வெண்மையான நிறத்தில்தான் புடைவை அணிந்திருப்பார். சித்தப்பாவிற்கு திருமணம் ஆக காலதாமதம் ஆகியதால் அவருடனேயேதான் இருந்தார்.
வெள்ளிக்கிழமை ஆனால் போதும்- விடிந்தும் விடியாமலும் வீட்டை பெருக்கி சாணம் போட்டு வழித்து தலைக்கு குளித்து நெற்றி நிறையத் திருநீறுடன் படுபக்தியாக இருப்பார். ஏழாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு வெள்ளிக்கிழமைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வாழை மரங்களை வீட்டில் கட்டி மாவிலைகளையெல்லாம் கோர்த்திருந்தார்.
தீபாவளியோ, பொங்கலோ வருகிறது போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு “இன்னைக்கு என்ன நோம்பிங்க ஆயா?” என்று கேட்டதற்கு “புனித வெள்ளி” என்று அதிர்ச்சியூட்டினார்.
“புனித வெள்ளி கிறிஸ்துவர்களுக்குத்தானுங்க” என்ற போது தனது தோல்வியை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
“எங்க அப்பத்தா காலத்திலிருந்தே புனித வெள்ளிக்கு பூசை செய்வோம்” என்று வாயை அடைத்துவிட்டார். இதை அப்பாவிடம் சொன்னபோது அவர் ஆச்சரியமடையவில்லை. ரம்ஜான், பக்ரீத் என சகல தினங்களுக்கும் வீட்டை சுத்தம் செய்து விரதம் இருந்து முருகனுக்கோ, சிவனுக்கோ பூசை செய்துவிடுவாராம் ஆயா. அதன் பிறகுதான் ஆயாவை கவனிக்கத் துவங்கியிருந்தேன். அப்பா சொன்னது சரியானதாகப் பட்டது. ஆயாவுக்கு வருடம் முழுவதும் ‘நோம்பி’தான்.
அப்படியான ஒரு ‘நோம்பி’யாகத்தான் இப்பொழுது புதுவருடப்பிறப்பும் இருக்கிறது. முகநூல், கூகிள் ப்ளஸ் ஆகியவற்றில் வாழ்த்துச் சொன்னவர்களில் எண்பது சதவீத மனிதர்கள் யாரென்றே தெரியாது. இதுவரை ஒரு ‘ஹாய்’ கூட சொன்னதில்லை. ஆனாலும் சந்தோஷமாகத்தான் இருந்தது. பேருந்தில், தொடரூர்தியில், பக்கத்துவீட்டில் என யாரிடமும் பேசாத நாம்தான் முகம் தெரியாத நண்பர்களுக்கு விர்ச்சுவல் உலகத்தில் வாழ்த்துகளை பரிமாறுகிறோம். ஆனால் இனி வாழ்நாள் முழுமைக்கும் கூட அவரோடு திரும்பவும் பேசுவோமா எனத் தெரியாது.
ஸ்ரீனிவாசன் என்ற நண்பர் இருக்கிறார். சில முறை சந்தித்திருக்கிறோம். போனில் பேசிக் கொள்வோம். ஒரு முறை போனில் பேசிக் கொண்டிருந்த போது “நேரில் சந்தித்துக் கொள்ளாமல் போனில் மட்டுமே பேசிக் கொள்வதில் ஒரு போலித்தன்மை இருப்பதாகப் படுகிறது என்றார்”. கருவேல முள்ளில் குத்தியது போலிருந்தது.
அந்த போலித்தனமான உரையாடலுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை- ஆன்லைன் வாழ்த்துகள். அதற்காக இந்த வாழ்த்துகளை மொத்தமாக போலித்தனம் என்று சொல்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணமிருந்தாலும் அது வாழ்த்துதலைப் போன்ற ஒரு பாவனை. அவ்வளவுதான்.
ஆனாலும் வாழ்த்துவது ஒரு சம்பிரதாயம். பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வோம்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
3 எதிர் சப்தங்கள்:
போலியான வாழ்த்துக்கள் அல்லாத , தனி மனிதர்கள்...யாரோ..எங்கோ வாழ்பவர் ஆயினும், தம் உணர்வுகளை பிரதிபலிக்கும் எழுத்துகளால் ஈர்க்கபட்டு ஒரு சகோதரதுவதுடன்.. பகிரும் வாழ்த்துகளாக எடுத்து கொள்ளலாமே
இதோ மற்றுமொரு சம்பிரதாயமான வாழ்த்து மணிகண்டன்:)))
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
Post a Comment