Jan 31, 2013

யசோதரையின் தகித்த இரவுகளை என்ன செய்தான் புத்தன்?


காலச்சுவடு பதிப்பகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக பேசினேன். சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? காரணமாகத்தான். முடிந்துவிட்ட சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’ எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்று விசாரிக்கத்தான் அழைத்திருந்தேன். முப்பத்தி சொச்சம் புண்ணியவான்கள் வாங்கியிருக்கிறார்கள். அத்தனை பேர் வீட்டிலும் ஆண்டவன் கூரையை பிய்த்து சுபிட்சத்தைக் கொட்டட்டும் என்று ஒரு கணம் நினைத்துக் கொண்டேன்.

இருந்தாலும் ஒரு சந்தேகம். “வெறும் முப்பத்தி சொச்சமா அல்லது முந்நூற்று முப்பது சொச்சமா” என்றேன். மறுமுனையில் கனத்த அமைதி நிலவியது. என் கேள்வியில் ஜெர்க் ஆகியிருக்கக் கூடும் என்பதால் “ஹலோ” என்றேன். 

சுதாரித்துக் கொண்டு “வெறும் முப்பத்து சொச்சம்தான்” என்றார். 

“உங்க ரேஞ்சுக்கு இதே பெரிய எண்ணிக்கை” என்று நினைத்தாரா என்று தெரியவில்லை.  

“ரொம்ப நன்றிங்க” என்று கட் செய்துவிட்டேன். 

இத்தினியூண்டு பேர்தான் வாங்கியிருக்கிறார்கள் என்று ஃபீலிங்க்ஸ் விடுவதைவிட ‘இத்தனை பேர் வாங்கியிருக்காங்க தெரியுமா’ என்று பீலா விடுவதுதான் ட்ரெண்ட் என்பதால் இதோடு முடித்துக் கொள்ளலாம். 

புத்தகத்தை பற்றி  சொல்வதற்கு இன்னொரு விஷயமும் இருக்கிறது.  ஆனால் என்னுடைய புத்தகத்தைப் பற்றி இல்லை. 

“ஒரு டீ சொல்லுங்கள்” என்ற புத்தகம் கூரியரில் வந்திருக்கிறது- கவிதைத் தொகுப்புதான். கவின் அனுப்பி வைத்திருக்கிறார். அவரைப் பற்றிய அறிமுகம் எதுவும் இதுவரை இல்லை. முகவரியில் கோடம்பாக்கம் என்றிருக்கிறது. அனேகமாக உதவி இயக்குனராக இருக்கக் கூடும் என்று சிற்றறிவுக்குப் படுகிறது. நல்ல Creativity உள்ள மனிதர் போலிருக்கிறது.


முதல் பக்கத்தில் பின்வருமாறு அச்சிட்டிருக்கிறார்கள்:

No Rights Reserved. All part of this publication may be reproduced, stored in a retreival system or transmitted, in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise without the prior written permissoon of the publisher.

இந்த பத்தியே தொகுப்பு எப்படி இருக்கும் என்பதை காட்டிவிடுகிறது. இதுதான் இப்படியென்றால் சமர்ப்பணம் கவுண்டமணிக்கு என்று ரவுண்டு கட்டியிருக்கிறார்.

தொகுப்பு கச்சிதமான வடிவமைப்புடன் கையடக்கமாக இருக்கிறது. தொகுப்பு முழுவதும் சென்ரியூ கவிதைகள். சென்ரியூ கவிதைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நான் கேள்விப்பட்டதில்லை. இப்பொழுதுதான் விக்கிப்பீடியாவை துணைக்கு அழைத்துக் கொண்டேன். ஹைக்கூவும் சென்ரியூவும் கிட்டத்தட்ட நங்கைxகொழுந்தியா உறவு போலிருக்கிறது. நங்கையாளை கொண்டாடிய அளவுக்கு கொழுந்தியாளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்.

ஹைக்கூ கொஞ்சம் சீரியஸ் டைப். தத்துவம், இயற்கை, பருவம் என்று வேறொரு தளத்தில் இயங்குகிறது. சென்ரியூ கவிதைகள் சத்யராஜ்-மணிவண்ணன் டைப். நக்கல், நையாண்டி நிறைந்தது. சென்ரியூ கவிதைகளும் மூன்று வரிகள்தான். தினமும் நேரடியாக பார்க்கும் மனிதர்களை கலாய்க்கிறது. அரசியல்வாதிகளை நக்கல் அடிக்கிறது. 

தொகுப்பில் இருக்கும் அத்தனை கவிதைகளிலும் கவித்துவம் இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.   சில தட்டையாக இருக்கின்றன. சில வெறும் குறிப்புகளாக இருக்கின்றன. ஆனால் பொதுவாகச் சொன்னால் வாசிப்பதற்கு ஜாலியான கவிதைகள்.

ட்ரெய்லர் பாருங்கள். பிடித்திருந்தால் கவினிடம் மெயின் பிக்சரை அனுப்பி வைக்கச் சொல்லுங்கள்.
                                       
(1)
உலகின் துன்பம் கிடக்கட்டும்
புத்தனே என்ன செய்தாய்
தகித்த யசோதரையின் இரவுகளை

(2)
பேச்சு மூச்சு
எல்லாம் தமிழ்நாடுதான்
சிகிச்சை மட்டும்தான் சிங்கப்பூரில்

(3)
சோனியாவும் மன்மோகனும்
சும்மா பேருக்குத்தான்
அம்பானிதான் ஆள்கிறான்

(4)
கம்ப்யூட்டர் வந்த பிறகு
எளிமையாய் போயிற்று
ஞானிகளின் ஒளிவட்டம்

(5)
மாதாமாதம் பத்துப் பக்கங்களுக்கு
ஆசிரியரின் கவிதைகளே அச்சேறுகின்றன
ரொம்பத்தீவிர இலக்கிய இதழ்.

Jan 30, 2013

விஸ்வரூபமூம் துப்பாக்கியும் மட்டும்தான் இசுலாமியர்களின் எதிரிகளா?
பெங்களூரில் கோரமங்களா சிக்னலுக்கு முன்பாக இடது புறமாக திரும்பும் சாலை ஒன்று இருக்கிறது. இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சம் போதுமானதாக இருக்காது.  ஆள் நடமாட்டமும் குறைவாகத்தான் இருக்கும். நேற்றிரவு பத்து மணிக்கு மேலாக பைக்கில் வந்து கொண்டிருந்த போது ஒருவர் லிஃப்ட் கேட்டார். ஊனமான தனது கால்களுக்கு உதவியாக தாங்குகோல்களை பிடித்துக் கொண்டு நின்றார். முஸ்லீம் குல்லாவும் தாடியுமாக இருந்த அவருக்காக வண்டியை நிறுத்த தயக்கமாக இருந்தது. சற்று தூரம் தள்ளிச் சென்று யாராவது அவருக்கு உதவுகிறார்களா என பார்த்துக் கொண்டிருந்தேன். சுமார் பத்துக்கும் மேற்பட்ட பைக்காரர்கள் நிற்காமல் சென்றார்கள். நான் உட்பட ஏன் யாருமே அவருக்கு உதவவில்லை என்ற யோசிக்கத் தோன்றியது. அறியாத மனிதருக்கு உதவச் சென்று வேறு ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளக் கூடும் என்ற பயமா அல்லது இசுலாமியர் என்பதால் எழும் தயக்கமா என்று வெகு நேரம் குழப்பமாக இருந்தது.

இதே போன்ற வேறொரு நிகழ்வை சில நாட்களுக்கு முன்பாக பொம்மனஹள்ளியில் பார்த்திருக்கிறேன். அதுவும் இரவு நேரம்தான். ஒரு இசுலாமியர் பேருந்து நிறுத்தத்தில் நின்று டாக்ஸிக்காரர்களிடம் லிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தார். யாருமே அவருக்கு அருகில் நிறுத்தவில்லை. ஆனால் அவரைத் தாண்டி நின்றவர்களை ஏற்றிச் சென்றார்கள். அந்த இசுலாமியர் மனதுக்குள் என்ன நினைத்துக் கொண்டார் எனத் தெரியவில்லை. ஆனால் கடைசியில் பேருந்துதான் அவருக்கு வாய்த்தது.

இப்படி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இசுலாமியர்களுக்கு மறுக்கப்படும் உதவிகளையும், உரிமைகளையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. ‘இதெல்லாம் பழகிப் போய்விட்டது’ என்று சிம்பிளாக முடித்துக் கொள்ளலாம்.

இசுலாமியர் என்பதற்காக வாடகைக்கு வீடு தர மறுக்கும் ஓனர்களால் நிரம்பியதுதான் இந்தச் சமூகம். ‘துலுக்கனை இந்த நாட்டைவிட்டு துரத்தணும்’ என்று பேசுபவர்கள் இந்த நாடு முழுவதுமே உண்டு. இசுலாமியர்கள் சுத்தமாக இருக்க மாட்டார்கள் என்ற பிம்பம் மிகச் சாதாரணமானது. அவர்கள் முரட்டுத் தனமானவர்கள் என்று பொதுப்புத்தியில் பதிந்து கிடக்கிறது. இசுலாமியர்கள் கடத்தல் தொழில் செய்பவர்கள் என்று ஆரம்பித்து தீவிரவாதிகள் என்பது வரைக்கும் அவர்களுக்கான முத்திரைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 

எங்கள் வீட்டில் கட்டட வேலைக்கு வந்திருந்தவர் சர்வ சாதாரணமாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.

  “என் ப்ரெண்ட் பன்னிக்கறி தின்பான் சார்” என்றார்.

  “எதனால தெரியுமா சார்?” இதுவும் அவரேதான்.

  “தெரியாது சொல்லுங்க” என்றான்.

  “நமக்கு ஆகுற பசுமாட்டை துலுக்கன் திங்குறான். பழிக்கு பழியாக அவனுக்கு ஆகாத பன்னியை நாம திங்கலாம்ன்னு சொல்லிட்டு தின்னுறான்” - சொல்லிவிட்டு கெக்கேபிக்கே என்று சிரித்தார்.

இசுலாமிய வெறுப்பை துல்லியமாக வெளிப்படுத்தும் டயலாக் இது. ஆனால் இத்தகைய டயலாக்குகள் யாருக்கும் எந்தச் சலனத்தையும் உருவாக்குவதில்லை. இங்கு இசுலாமிய வெறுப்பு என்பது சர்வசாதாரணமான விஷயம். இந்த வெறுப்பு ஆண்டாண்டு காலமாக புரையோடிக் கிடக்கிறது. வெறுப்பையும், ஒரு இனத்தின் மீதான தவறான பிம்பத்தையும் போலி மதச்சார்பின்மை கொள்கைகளும், வாக்கு அரசியலும் மேலும் சிக்கலாக்கி சீழ் பிடிக்க வைத்திருக்கின்றன. 

தேசியவாதம், ஒருமைப்பாடு என வறட்டு டயலாக் அடிக்கும் அத்தனை தேசபக்தர்களுக்கும் முன்னால் முக்கியமான பிரச்சினை ஒன்றிருக்கிறது. அது இசுலாம் மற்றும் இசுலாமியர் குறித்தான புரையோடிய பிம்பங்களையும், புரிதல்களையும் உடனடியாகக் களைவது. ஆனால் எந்த அரசியல் கட்சியும் சரி அல்லது எந்த சமூக அமைப்பும் சரி- இத்தகைய சிக்கல்களின் அடிப்படையைக் கூட கவனிப்பதில்லை.

கணிசமான ஓட்டு வங்கி உடைய சமூகம் என்பதைத் தவிர இசுலாமியர் மீதான துளியளவு அக்கறை கூட அரசியல் கட்சிகளுக்குக் கிடையாது. காங்கிரஸ், திமுக, அதிமுக என்ற எந்த ஓட்டுப்பொறுக்கி அமைப்புகளும் இதில் விதிவிலக்கல்ல. இப்தார் விருந்தில் முக்காடும் குல்லாவும் அணிந்து கொண்டு கஞ்சி குடித்து போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பதைத் தவிர்த்து எளிய இசுலாமியனுக்கான  சிக்கல்களை நீக்க இவர்கள் யாருமே துணியப்போவதில்லை.

மிகச் சாதாரணமான ஒரு சினிமாப் பட விவகாரத்திற்காக இரண்டு மதத்தைச் சார்ந்தவர்களும் முரட்டுத்தனமாக மோதத் தயாராவதை புன்முறுவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகளும், சமுதாயத் தலைவர்களும். முகநூல் போன்ற சமூகத் தளங்களில் இனத்துவேஷங்களும் வசவுகளும் எந்த கீழ் மட்டத்திற்கும் போய்க் கொண்டிருப்பதை கவனித்துப் பார்க்கலாம். இந்த வெறுப்புகளும், துவேஷங்களும் மனதுக்குள் புதைந்து கிடந்தவை. இப்பொழுது கிடைத்திருக்கும் சில்லரைத்தனமான காரணத்திற்காக வெளியே எட்டிப்பார்க்கின்றன.

அரசியல்வாதிகள்தான் இப்படியென்றால் இசுலாமியர்களின் தலைவர்கள் என தங்களை அறிவித்துக் கொள்பவர்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக சினிமாக்காரர்களை எதிர்த்து ஜிம்மிக் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகங்களால் சாமானிய இசுலாமியர்களுக்கு ஒரு பைசா பிரையோஜனம் இல்லை என்பது  நாடகக் காரர்களுக்கும் தெரியும். ஆனால் தேர்தல் நேரத்தில் ‘கல்லா’ கட்ட So Called தலைவர்களுக்கு இத்தகைய நாடகங்கள் உதவக் கூடும்.

இசுலாமியர்கள் போராட வேண்டியது விஸ்வரூபத்தையும், துப்பாக்கியையும் எதிர்த்து இல்லை என்பதை தைரியமாகச் சொல்லலாம். ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளையும், போலியான சமுதாயத் தலைவர்களையும், தங்களின் மீது குத்தப்படும் சமூகத்தின் முத்திரைகளையும் எதிர்த்துத்தான் போராட வேண்டும். ஆனால் அவர்கள் வலுவான எதிரிகளை விடுத்து வேலைக்காகாத பூச்சிகளை நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Jan 29, 2013

எப்படியெல்லாம் கிளம்புகிறார்கள்? ஸ்ஸ்ப்ப்பா...மிடில....


ஒரு மனிதனைக் கடுப்பேற்றுவதற்கு எத்தனை வரிகள் அல்லது எத்தனை சொற்கள் தேவைப்படும் என யோசித்திருக்கிறேன். It depends என்று ஸ்டைலாக சொல்லிவிடலாம். 

சில சமயம் ஒரு புத்தகம் அளவுக்குத் வரிகளும் சொற்களும் தேவைப் படலாம் அல்லது ஒரு கட்டுரை காரியத்தை முடித்துவிடக் கூடும். இவை எதுவுமே இல்லாமல் ஒற்றை வார்த்தையோ அல்லது சைகையோ கூட எதிராளியின் உச்சி முடியை நட்டுக் கொள்ள செய்யக்கூடும்.

என்னைக் கடுப்பேற்ற ஒரு மனிதருக்கு ஐந்தாறு வரிகள் போதுமானதாக இருந்திருக்கிறது. விவரமாகச் சொல்கிறேன் இருங்கள்.

சில மாதங்களுக்கு முன்பாக ஜிமெயில் Chat இல் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து Chat request வந்திருந்தது. தெரியாத்தனமாக ஏற்றுக் கொண்டேன்.

முதல் கேள்வியே  “நீங்கள் எந்த ஊர்?” என்றார்.

“கோபிச்செட்டிபாளையம்” 

“யார் அந்த கோபிச்செட்டி? அவருக்கு ஏன் ஒரு ஊர் சொந்தமாக இருக்கு?” என்றார். 

எத்தனையோ பேர் கிளம்பியிருக்கிறார்கள். அதில் இதுவும் ஒரு ஜீவன் போலிருக்கிறது. பதில் எதுவும் சொல்லவில்லை.

விடாமல் “எக்ஸ்கியூஸ் மீ...கேள்வி கேட்டேனே” என்றார்.

நாம் உற்சாகமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக அடுத்தவனை சாகடிக்கும் Character என்று Block செய்துவிட்டேன்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகாக ஒரு கேள்விக்காக ஒருவரை Block செய்வதற்கு நாம் ஒன்றும் அப்பாடக்கர் இல்லை என்று  நினைத்துக் கொண்டு unblock செய்துவிட்டேன். இப்பொழுது எனக்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் வேலையைக் காட்டியிருக்கிறது. என்னை Unblock செய்ய வைத்திருக்கிறது.

இந்த வெள்ளிக்கிழமையும் அதே நபர் ஆன்லைனில் வந்தார். பாண்டிச்சேரி கிளம்புவதற்கு முன்பாக மெயில் பார்க்கலாம் என்று நினைத்த போது சிக்கிக் கொண்டேன்.

                                                               ********

Sankar: வணக்கம் மணிகண்டன்

Me: வணக்கம். எப்படி இருக்கீங்க?

Sankar: நலம். நீங்கள் நலமா? உங்கள் ப்லொக்கை படித்தேன். ஆனால் எல்லாம் ஒரே மாதிரி இருக்கே. ஏன் வெரைட்டி காட்ட வில்லை

Me: என்ன வெரைட்டி?

Sankar:  எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. வேறு மாதிரி வெரைட்டியா இருந்தால் லிங்க் குடுங்க படிச்சுட்டு வரேன்

Me: சொல்லி கொடுத்தீங்கன்னா பழகிக்கிறேன்

Sankar: இந்த நக்கல் தானே வேண்டாம்ங்கிறது

Me: எத்தனை போஸ்ட் படிச்சீங்க?

Sankar: 4 அல்லது 5

me: ப்லாக்கில் 550க்கும் அதிகமான போஸ்ட்ஸ் இருக்குங்க

Sankar: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

Me: நீங்க படிக்காமல் இருக்கிறதே சந்தோஷம். நன்றி

                                                                    ******

கவிதை, அரசியல், சமூகம், அனுபவம் என்று முடிந்தவரைக்கும் கலந்து கட்டிதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் எழுதுவது ஒரே ஆள்தானே. அதனால் ஒரே மாதிரியாக தெரிவதற்கு வாய்ப்பு இருக்கக் கூடும் என்பதால் “வெரைட்டி காட்டவில்லை” என்று சொன்னதைக் ஏற்றுக் கொண்டேன். 

அந்த மனிதர் அதோடு நில்லாமல் “வேறு மாதிரி எழுதி இருந்தால் லின்க் கொடுங்கள்” என்ற அவரது அடுத்த வரி ப்ரஷரை கொஞ்சம் ஏற்றிவிட்டது. ஒருவேளை அத்தனையும் வாசித்துவிட்டுத்தான் கேட்கிறாரோ என்ற சந்தேகம் இருந்தது. 

அதற்குத்தான் அடுத்த கேள்வியைக் கேட்டேன். மொத்தமாக 4 அல்லது 5 தான் வாசித்திருக்கிறார். இதுதான் லோலாயம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாம். சமீபகாலங்களில் நிசப்தம் நன்றாக இருப்பதாக யாராவது சொல்வதும் அதனால் நான் உசுப்பேறிக் கிடப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த உசுப்பேறிய உடம்பை ரணகளமாக்குவதற்கென சனிபகவானால் அனுப்பி வைக்கப்பட்ட காக்காதான் இந்த சங்கராக இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த மனிதரிடம் பேசி வெட்டியாக டென்ஷன் ஆக வேண்டியதில்லை என  டார்ச்சரை முடித்துக் கொள்ள விரும்பினேன். மீண்டும் Block செய்துவிட்டு பாண்டிச்சேரிக்கு பஸ் ஏறினேன்.

அடுத்த நாள் காலையில் பாண்டியில் இ-மெயிலைத் திறந்தபோது “உன்னை ப்லாக் செய்கிறேன்” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை. “போச்சு...பொங்கும் துக்கத்தில் நான் இனி தூக்கில்தான் தொங்க வேண்டும்” என்று பதில் அனுப்பினேன்.

இதையெல்லாம் எழுதுவது சாரு நிவேதிதாவின் அலம்பலை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. அது அபாயகரமானதும் கூட. இருந்தாலும் உங்களுக்கும் எனக்கும் டைம் பாஸ்தானே. என்றாலும் இந்த ரேஞ்சில் இதுதான் கடைசி போஸ்ட்டாக இருக்க வேண்டும் என பாடிகார்ட் முனீஸ்வரனை வேண்டிக் கொள்கிறேன்.

செத்துடுவேன்கடந்த சனிக்கிழமை பாண்டிச்சேரியில் சுற்றிக் கொண்டிருந்தேன். தனியாக இல்லை. கூடவே ஒரு டீம். புதிய தலைமுறை சார்பில் வெளிவரவிருக்கும் புதிய சேனலுக்காக ‘வீடியோ ப்லாகிங்’ செய்கிறார்கள். நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நிசப்தம் தளத்தை வாசிப்பவர். எங்களுக்காக கதை சொல்ல முடியுமா என்றார். முடியாது என்று ஏன் சொல்லப் போகிறேன்? கதை சொல்வதை பதிவு செய்து தங்களின் நிகழ்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.

“பாண்டிச்சேரியில் நல்ல லொகேஷன்கள் இருக்கின்றன. வந்துவிடுங்கள்” என்று சொல்லியிருந்தார். ஆறு கதைகளுடன் தயாராகியிருந்தேன்.

ரிசர்வ் செய்யாத பேருந்துகளில் பயணிப்பதுதான் பிடித்தமானதாக இருக்கிறது என்பதால் இந்த முறையும் ரிசர்வ் செய்யவில்லை. பதிவு செய்யப்பட்ட பிரையாணங்கள் கிட்டத்தட்ட நகரத்தின் ப்ளாட் வாழ்க்கைக்கு இணையானது. பக்கத்தில் இருப்பவர்களிடம் கூட பேசிக் கொள்ளாத அந்நியமான தருணங்களால் நிரம்பியிருக்கும். நசுங்கினாலும் பிழியப்பட்டாலும் பதிவு செய்யப்படாத சாதாரண பயணங்களில்தான் அனுபவங்கள் கிடைக்கின்றன. குறைந்தபட்சம் ஒரு சண்டையாவது நடக்கும். 

பெங்களூரில் பேருந்து கிடைக்காததால் ஓசூர் பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது இரவு பதினொன்றாகியிருந்தது. பாண்டிச்சேரிக்கான ஒற்றைப் பேருந்து நின்றிருந்தது. அதுதான் கடைசிப் பேருந்து என்றார்கள். அதையும் அடைத்துக் கொண்டு இருந்தார்கள். அருகிலிருந்த டீக்கடையில் தினத்தந்தி பேப்பரை வாங்கி பைக்குள் செருகிக் கொண்டு கடும் போராட்டத்திற்கு பிறகு பேருந்துக்குள் நுழைந்துவிட்டேன். பேருந்தின் நடுவில் கொஞ்சம் காலி இடம் இருந்தது. அந்த காலி இடத்திற்காகத்தான் தினத்தந்தி பேப்பரை வாங்கியிருதேன். விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளலாம். திருவண்ணாமலை வரைக்கும் இதுதான் என்னுடைய இடமாக இருக்கப் போகிறது. பக்கத்தில் இன்னொரு திருவண்ணாமலைக்காரர் அமர்ந்திருந்தார். மீதமிருந்த ஒரு பேப்பரை அவருக்கும் கொடுத்த போது சில விநாடிகளில் நண்பர்கள் ஆகிவிட்டோம். 

நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த கண்டக்டர் “ஏம்ப்பா இப்பவே உக்காரணுமா? எந்திரிங்க” என்றார். 

எழுந்திருக்க முயன்ற போது “நீ உக்காரு தம்பி” என்ற திருவண்ணாமலைக்காரர் கண்டக்டரிடம் எகிறினார். “வெள்ளிக்கெழம ஸ்பெஷல் பஸ் போட்டா என்னவாம்?” என்றார். அவர் எகிறுவதை கண்டக்டர் கண்டு கொள்ளவே இல்லை. நாங்களும் எழவே இல்லை. அவர் டிக்கெட் கொடுத்துச் சென்ற பிறகு ஆளாளுக்கு கதைகளை பேசத் துவங்கினார்கள். பேருந்தில் முன்புறமாக ஒரு சண்டை உருவாகியிருந்தது. தனது காலை மிதித்துவிட்டதாக நடுத்தரப் பெண்மணி ஒரு ஆணின் மீது குற்றச்சாட்டை சுமத்தினார். கேட்டு புளித்து போன டயலாக்தான் அந்த ஆணிடமிருந்து வந்தது. “மிதிபடாம போகணும்ன்னா கார்ல போ”. இதற்கு மேல் இந்தச் சண்டையின் போக்கு பற்றி ஓரளவு கணிக்க முடிந்ததால் அதன் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. இப்பொழுது கொஞ்சம் பேர் தூங்க ஆரம்பித்திருந்தார்கள்.

திருவண்ணாமலைக்காரர் தனது செல்போனில் சார்ஜ் இல்லையென்றும் ஒரு கால் செய்து கொள்ள வேண்டும் என்றார். வேண்டாவெறுப்பாக எனது அலைபேசியைக் கொடுத்தேன். “வந்துட்டு இருக்கேன். இன்னும் மூன்றரை மணி நேரத்தில் வந்துவிடுவேன்” என்று சொல்லிவிட்டு என்னிடம் கொடுத்துவிட்டார். இருபத்தைந்து ரூபாய்க்குத்தான் அந்த மொபைலில் பணம் இருந்தது. ரோமிங் வேறு. ஒரு ரூபாய் ஐம்பது காசு அளவுக்கு மட்டுமே பேசிவிட்டு ‘கட்’ செய்துவிட்டதால் அவர் மீது மரியாதை உருவாகியிருந்தது. அவரிடம் ஏதாவது பேச வேண்டும் என விரும்பினேன்.

நான் தான் பேச ஆரம்பித்தேன். அவர் பெயர் சுந்தர்ராஜன். நாற்பத்தைந்து வயது இருக்கும். பெங்களூரில் கட்டவேலை செய்கிறாராம். பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டியில் தான் வேலை செய்யும் அதே கட்டடத்திலேயே தங்கிக் கொள்கிறார். குடும்பம் திருவண்ணாமலையில் இருக்கிறது. இன்று இரவு ஊரிலிருந்து அவசரமாக அழைப்பு வந்ததால் கிளம்பிவிட்டேன் என்றார். “என்ன அவசர அழைப்பு” என்று கேட்கத் தோன்றினாலும் கேட்கவில்லை. 

ஊருக்கு அவசரமாகச் செல்ல வேண்டும் என்று ஓனரிடம் பணம் கேட்டிருக்கிறார். அவர் பணம் இல்லை என்று சொல்லிவிட்டதாக தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தார். அந்த ஓனரிடமிருந்து தனக்கு வரவேண்டிய பாக்கித் தொகை கிட்டத்தட்ட ஆறாயிரம் ரூபாய் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது என் கண்களைப் பார்த்தார். அவருக்கு ஆறுதலாக தலையாட்டினேன். அந்த ஆறுதல் அவருக்கு பிடித்திருக்க வேண்டும். அதன் பிறகு என் கண்களைப் பார்த்துதான் பேசினார். கிட்டத்தட்ட எல்லாமே புலம்பல்தான்.

அவருக்கு மூன்று குழந்தைகள். மூன்றுமே பெண்கள். முதல் பெண்ணை தனது அக்கா மகனுக்கு நிச்சயம் செய்து வைத்திருக்கிறார்.  தனது அக்கா மகன் வசதியாக இருக்கிறான் என்றார். ஒரு பொட்டு  நகை கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டானாம். திருமணச் செலவையும் அவனே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டான் என்பதால் தனக்கு பெரிய பாரம் குறைந்துவிட்டது போலிருந்தது என்றார். ஆனால் நிச்சயம் முடிந்த இரண்டாவது நாளில் தனக்கு அத்தை மகன் மீது விருப்பம் இல்லை என்று அந்தப் பெண் சொல்லிவிட்டாளாம். 

“வேறு யாரையாவது விரும்புகிறாரா?” என்றேன். 

“தெரியவில்லை” என்றார். இரண்டு நாட்களுக்கு முன்பாக அவளை ஃபோனில் அழைத்து தனது நிலைமையை விளக்கியதோடு நில்லாமல் அவளை திட்டியும் இருக்கிறார். 

“அந்த விஷயமாகத்தான் ஊருக்குப் போகிறீர்களா?” என்று கேட்டேன்.

“ஆமாம்” என்றார். 

“என்ன செய்யப் போறீங்க?” என்றேன்.

“அடக்கம் செய்யப் போகிறேன்” என்றார். அவர் கோபத்தில் சொல்கிறார் என நினைத்தேன். ஆனால் அந்த பேருந்து விளக்கின் வெளிச்சத்தில் அழுது கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

சற்று அமைதிக்குப் பிறகு “ஏங்க அழறீங்க?” என்றேன். இந்தக் கேள்வி அவரைக் கலவரப்படுத்திவிட்டது.

தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து வாயில் திணித்துக் கொண்டு அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றார். ஸீட்டில் அமர்ந்து கொண்டிருந்தவர் எங்களை திரும்பிப்பார்த்தார். நின்று கொண்டிருந்தவர்களும் எங்கள் பக்கமாக கவனிக்கத் துவங்கினார்கள்.  

அழுகையை ஓரளவுக்கு கட்டுப்படுத்திக் கொண்டவர்  “இன்னைக்கு சாயந்திரம் வீட்டில் யாரும் இல்லாதப்போ தூக்கில் தொங்கிட்டா” என்றார். தனது பாக்கெட்டில் வைத்திருந்த அந்தப் பெண்ணின் நிழற்படத்தைக் காட்டினார். அதை பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். தனது நெற்றியில் அறைந்து கொண்டார். அவருக்கு என்ன ஆறுதல் சொல்ல வேண்டும் என்று புரியவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு அவசர அவசரமாக முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவர் “நீங்க தூங்குங்க தம்பி” என்றார். 

“தூக்கம் வரவில்லை” என்றேன். மிகப்பெரிய துக்கத்தைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதனுடன் அடுத்த சில மணிநேரங்களை கடக்க வேண்டும் என்பது திகில் ஊட்டுவதாக இருந்தது. இந்த இடத்தில்  நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கணிக்க முடியவில்லை. நகர்ந்து போவதோ அல்லது தூங்குவதோ எனக்கு மிகுந்த குற்றவுணர்ச்சியைக் கொடுத்துவிடும் என பயந்தேன். அது ஒரு குழப்பமான மனநிலையாக இருந்தது. அவர் ஒரு ஸீட்டில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். நான் அவருக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தேன். பேருந்தில் மற்றவர்கள் தூங்கத் துவங்கியிருந்தார்கள். எங்கள் இருவருக்குமே தூக்கம் வரவில்லை. அவர் எங்கேயோ பார்த்தவாறு சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தார். எனக்கு அவர் முகத்தை பார்ப்பதைத் தவிர என்ன செய்வது என்று தெரியவில்லை. 

Jan 25, 2013

விஸ்வரூபம்: சில்லியான கேள்விகள் மற்றும் சில்லியான எலக்கியவாதிகள்


நேற்று யாரோ என் ஹெல்மெட்டை திருடிக் கொண்டு போய்விட்டார்கள். பழைய ஹெல்மெட்தான். அலுவலகத்தின் பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்தி அதன் மீது வைத்திருந்தேன். கடந்த நான்கு வருடங்களாக இதே  இடம். இதே பைக். இதே ஹெல்மெட். இதே மெத்தேட்தான். நேற்றுதான் ஏமாந்துவிட்டது. எழுநூறு ரூபாய்க்கு வாங்கிய ஹெல்மெட் அது. இப்பொழுது கீறலும் குதறலுமாய் நாறிக் கிடந்தது. சில மாதங்களாக அதன் நிலைமையை பார்க்க பரிதாபமாக இருந்தது. பொது இடங்களில் வைத்துவிட்டு போனாலும் கூட யாரும் எடுத்து போகமாட்டார்கள் என்ற சூழல் நிலவியது. அதனால் அதை இப்பொழுதெல்லாம் பூட்டுவதேயில்லை. 

சுதந்திரமாகக் கிடந்த அந்த ஹெல்மெட்டைக் கூட  துணிந்து திருடிய நல்ல மனசுக்காரன் எங்கிருந்தாலும் வாழட்டும். கிழிந்த கோவணத்துணியைக் கூட உருவிக் கொண்டு ஓடும் நல்லவர்கள் வாழும் காலத்தில் ஹெல்மெட்டை பூட்டாமல் விட்டுப்போனது என் தவறுதான்.

கவனித்தீர்களா? வெறும் எழுநூறு ரூபாய்க்குக் கூட புலம்பல் வந்துவிடுகிறது. கமல்ஹாசனை நினைத்தால் பாவமாக இருக்கிறது. படம் விஸ்வரூபம் எடுக்கிறதோ இல்லையோ பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. விஸ்வரூபம் நூறு கோடி ரூபாய் பட்ஜெட் படம். மென்று தண்ணீர் குடிக்கிறது. கருத்துச் சுதந்திரத்தை மதிப்போம், படைப்பாளியின் உரிமை ஓங்குக என்று பேசும் அத்தனை சினிமா மற்றும் கமல் ரசிகர்களின் வாதங்களையும் இம்மிபிசகாமல் ஏற்றுக் கொள்ளலாம். 

சில கேள்விகள் மட்டும் நிற்கின்றன. 
  • விஜயகாந்த் ஆனாலும் சரி, கமலஹாசன் ஆனாலும் ஏன் இசுலாமிய தீவிரவாதிகளை மட்டும் ‘அட்டாக்’ செய்கிறார்கள்? ஒருவர் பின்னங்காலால் உதைத்தால் இன்னொருவர் ஏ.கே.47 ஆல் சுடுகிறார்.
  • கமல் போன்ற அறிவுஜீவி நடிகர்களுக்கு பாபர் மசூதி இடிப்போ, குஜராத் மதக் கலவரமோ ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை? 
  • சென்சார் போர்ட் சர்டிபிகேட் கொடுத்த பிறகு ஏன் இசுலாமிய அமைப்புகளுக்கு திரையிட்டுக் காட்டினார்? இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதாலா?
  • தியேட்டருக்கு முன்பே டி.டி.ஹெச்சில் வீட்டிற்கு வந்துவிடும் என்று சொல்லி வசூல் செய்த பணத்தை திருப்பி கொடுத்தாகிவிட்டதா?
  • சென்சார் செய்யப்பட்ட படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன? 

இதில் ஏதாவது Immature கேள்வி இருக்கிறதா? இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். சினிமாவுக்கும் இந்த எளியவனுக்கும் காத தூரம்.  

இலக்கியத்தில் கொஞ்சம் பரிச்சயம் உண்டு. அதனால் ஒரு நபர் எழுதிய விமர்சனத்தை படித்து தொலைத்துவிட்டேன். யார் அந்த நபர் என்றெல்லாம் சொல்லி அந்த திலுப்பாமாரிக்கு வெட்டி விளம்பரம் செய்ய வேண்டியதில்லை.

கவிதையோ, கட்டுரையோ, கதையோ- அதைப் பற்றி விமர்சனம் எழுதும் நபருக்கு குறைந்தபட்ச Credibility தேவை என்று நினைக்கிறேன்.  ஆனால் தனக்கு தேவையானவனை சொறிந்து விடுவதற்கும், பிடிக்காதவனை அடித்துப் பார்ப்பதற்கும் விமர்சனம் என்பதை கையில் எடுத்துக் கொண்டு தடித்தனம் செய்பவர்கள் சுற்றித் திரிகிறார்கள். 

தங்களின் கிறுக்கல்களை பிரசுரம் செய்வது மட்டுமே தமது இலக்கிய வாழ்வின் குறிக்கோள் என்று திரியும் இந்தப் போலிகள் ஊற்றிக் கொடுப்பதில் ஆரம்பித்து கூட்டிக் கொடுப்பது வரை எந்த Extreme க்கும் போகும் சூழல் தமிழ் இலக்கியத்தில்தான் இருக்கிறது. உங்களிடம் என்னைப் பற்றியும் என்னிடம் உங்களைப் பற்றியும் இல்லாததும் பொல்லாததுமாக சொல்லித் திரியும் நோய்க்கூறுகளும் இவர்கள்தான்.  “புழுத்த நாய் கூட இவர்கள் எழுதுவதன் குறுக்காக போகாவிட்டாலும்” கூட இந்தத் தடியர்கள் தம்மை அடுத்த இலக்கிய பிதாமகன்கள் என்று நினைத்துக் கொள்ளும் காமெடியை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த போலிகளுக்கு பின்னால் இருக்கும் குண்டாஸ் வேறொரு ரகம். கையில் இலக்கிய அதிகாரத்தை வைத்துக் கொண்டு சுள்ளான்களை தூண்டிவிட்டு ‘என்ஜாய்’ செய்து கொண்டிருக்கிறார்கள். தாம் இருப்பதால்தான் இந்த உலகமே சுழல்கிறது என்ற நம்பிக்கையுடைய காமெடி பீஸூகள். 

ஒரு விமர்சனத்தைக் கூட எதிர்கொள்ள முடியாமல் குதிக்கிறான் என்ற அஸ்திரத்தை கையில் எடுப்பார்கள். எடுத்துவிட்டு போகட்டும். இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை- இருந்தாலும் சொல்லிவிடலாம்.

எழுதுவதன் நுட்பத்தை மனப்பூர்வமாகத் தேடிக் கொண்டிருப்பவனுக்கு இந்த உட்டாலக்கடி வேலைகள் எல்லாம் ***ருக்குச் சமானம். அவன் தன் இடத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யப்போகிறான். அவனை காலி செய்ய வேண்டுமானால் அவனது மூச்சை அடக்கினால் மட்டும்தான் உண்டு. மற்றபடி வேறு எந்த பருப்பும் வேலைக்கு ஆகாது. 

No Tension...No Tension - இந்த ஒன்றரையணா பசங்களுக்காக நிசப்தம் வாசிக்கும் உங்களை கிசுகிசுவால் வதைத்துக் கொண்டிருக்கிறேன். யாரைக் காய்ச்சுகிறேன் என்று புரிந்திருந்தால் சந்தோஷம். இல்லையென்றால் பெரிதாக குழப்பிக் கொள்ள வேண்டாம். அது வேறு ஒரு டீலிங்.

கிடக்கட்டும் விடுங்கள். இந்த பத்தியை லைட்டாக முடித்துவிடலாம். பெரும்பாலான இலக்கியவாதிகளிடம் “என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றால் கூச்சநாச்சமே இல்லாமல் “நாவல்” என்று சொல்லிவிடுவார்கள். எழுதிக் கொண்டிருக்கிறார்களோ இல்லையோ, அப்படி சொல்வதில் ஒரு ‘கெத்து’ இருக்கிறது. ஏழெட்டு வருடங்களாக ஒரே நாவலை எழுதும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் சில வருடங்கள் ஆகும் என்பார்கள். நாவல் என்றால் சும்மாவா? முன்பின் ஆகத்தான் செய்யும் என்று அமைதியாகிவிட வேண்டும்.

நேற்று ஒரு நண்பர் என்னிடம் வந்து என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படம் காட்டி விடுவதுதான் உசிதம் என்பதால் “நாவல்” என்று சொல்லிவிட்டேன். “வாவ், சொல்லவே இல்லை?” என்றார். எனக்கே இப்பொழுதுதான் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அடுத்ததால டைட்டில் என்னவென்று கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக அவர் கேட்கவில்லை. ஆனால் மனதுக்குள் உதித்த தலைப்பு “பந்தயம்”.

Jan 24, 2013

இலியானா, இஸபெல் ஹூயுபெர்ட், எம்.ஜி.ஆர்


ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் அமீர்பேட் என்ற இடத்தில் உள்ள சாரதி ஸ்டுடியோவிற்கு வெளிநாட்டுத் திரைப்படங்களை பார்ப்பதற்காக செல்வது வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் திரையிடல் நடக்கும். எனக்கு பார்க்க வாய்த்த முதல் அயல் திரைப்படமே இஸபெல் ஹுயுபெர்ட் நடித்திருந்த ‘பியானோ டீச்சர்’. அது பிரெஞ்சு திரைப்படம். ஒரு மார்க்கமான திரைப்படமும் கூட. ஏகப்பட்ட பலான காட்சிகள் இருக்கும். அதுவரையிலும் பலான காட்சிகளை ஒளிந்து ஒளிந்து பார்த்திருந்த எனக்கு திரையரங்கில் மேல்தட்டு பெண்களுக்கும், ஆண்களுக்கும் மத்தியில் அமர்ந்து பார்ப்பது பெரிய சங்கோஜத்தைத் தந்தது. அற்புதமான கலைப்படைப்பை பலான காட்சிகள் என்று சொல்லி கொச்சைப்படுத்துகிறான் என்று யாராவது கொடி உயர்த்த்துவார்களே என்று “திறமைமிக்க பியானோ ஆசிரியையின் பாலுணர்வும், அதனைத் கட்டுப்படுத்த இயலாமல் மனநோயால் பீடிக்கப் படுவதும்தான் கதை. இஸபெல்லின் முகபாவனைகளும், பாலுணர்வின் கோரத்தை அதன் நுணுக்கங்கள் சிதைவுறாமல் காட்டியிருந்ததும் என்னைக் கவர்ந்த அம்சங்கள்” என்று பேசி நான் ஒரு அறிவுஜீவி என்று பில்ட் அப் செய்து கொண்டேன்.

‘பியானோ டீச்சர்’ படம் முடித்துவிட்டு அந்த திரையரங்கைச் சுற்றி எஸ்.வி.ராமகிருஷ்ணன், அவருடைய நண்பருடன் சேர்ந்து ஒரு நடை போய்க் கொண்டிருந்தோம். . இந்த மாதிரி நடை போகும் சமயங்களில் எஸ்.வி.ஆர் நிறைய ரகசியங்களைச் சொல்லியிருக்கிறார். அப்படியான சீக்ரெட்களில் ஒன்று எம்.ஜி.ஆர் பற்றியது. இதை சீக்ரெட் என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் எம்.ஜி.ஆரின் ஸ்டைல் என்று சொல்லலாம்.

அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் எஸ்.வி.ஆரின் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்திருக்கிறார். அவர் பெயரும் ராமச்சந்திரன்தான். ஏதோ ஒரு விவகாரத்தில் முதல்வருக்கும் ஐ.ஏ.எஸ்ஸூக்கும் முட்டிக் கொண்டது. டென்ஷனான அதிகாரி நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு போய்விட்டாராம். வீட்டிலேயே எத்தனை நாட்களுக்குத்தான் வெட்டியாக இருப்பது என்று தனக்கு இருக்கும் தொடர்புகள் மூலமாக மத்திய அரசுப்பணிக்கு நகர்ந்துவிடலாம் என்று காய் நகர்த்தியிருக்கிறார். இந்தத் தகவலை மோப்பம் பிடித்துக் கொண்ட எம்.ஜி.ஆர் அமைதியாக இருந்துவிட்டாராம். சில நாட்களுக்குப் பிறகாக ராமச்சந்திரனை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பி வைக்கக் கோரும் கடிதம் ஒன்று முதல்வர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறது. 

ராமச்சந்திரனை வரச்சொன்ன எம்.ஜி.ஆர் கடிதத்தைக் காட்டி “என்ன செய்யட்டும்?” என்றிருக்கிறார். “உங்கள் விருப்பம் போல செய்யுங்கள்” என்றாராம். உடனடியாக தனது பச்சை இங்க் பேனாவை எடுத்த எம்.ஜி.ஆர் அந்தக் கடிதத்தின் கீழாக “ராமச்சந்திரனின் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை” என்று எழுதி கடிதத்தை திருப்பி அனுப்பியிருக்கிறார். சோலி சுத்தம். இனி எதுவும் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்த அதிகாரி அடுத்த வாரம் விடுப்பை ரத்து செய்துவிட்டு வேலையில் சேர்ந்திருக்கிறார்.

இந்தக் கதையை பேசிக் கொண்டிருக்கும் போதுதான் பக்கத்தில் ஒரு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரை விடவும் ஷூட்டிங்தான் என்னை இழுத்துக் கொண்டிருந்தது. காரணம், அந்த செட்டில் இலியானா இருந்தார். தெலுங்குக்காரர்கள் எந்த அடிப்படையில் நடிகைகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பெரிய ஆச்சரியம். இலியானாவின் முதல்படமான ‘தேவதாஸூ’ பார்த்துவிட்டு இந்தப் பெண்ணுக்கு முகம் லட்சணமாகவே இல்லையே அப்புறம் எதற்காக நடிக்க வைத்தார்கள் என்று குழம்பியிருந்தேன்.

அனில்குமார் குரபாட்டி என்ற தெலுங்குவாலாவிடம் என் குழப்பத்தைச் சொன்னபோது “பாஸூ அ அம்மை நடுமு சூடண்டி” என்றார். முகத்தை எதற்கு பார்க்கிறாய்? இடுப்பை பார் என்று அர்த்தம். “அப்படியா?” என்று ஆச்சரியம் அடைந்த போது அவரே தொடர்ந்தார். “ஒருவேளை உன் கண்களை அந்த இடுப்பை விட்டு நகர்த்த முடியுமானால் தொடைகளைப் பார்” என்றார். இதற்கு மேல் இதை எழுதினால் பெண்ணை உடல் ரீதியாக பார்க்கும்  காமுகன் என்ற பட்டத்தை சுமக்க வேண்டிய அவச் சூழல் வாய்த்துவிடக் கூடும் என்பதால் அடுத்த பத்திக்கு தாவி விடுகிறேன். 

அப்பேர்ப்பட்ட இலியானாவை பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து எஸ்.வி.ஆரிடம் ஷூட்டிங் பார்க்க போக வேண்டும் என்றேன். தனக்கு விருப்பமில்லை என்று ஒதுங்கிக் கொண்டார். துள்ளிக் குதித்து ஓடினேன். நடனக்காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் நான் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு இலியானா வருவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவேயில்லை. ஒவ்வொரு முறையும் நாயகன் ரவிதேஜாவிற்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலிக்குத்தான் சென்றார். இலவு காத்த கிளியாகவே நின்று கொண்டிருந்தபோது மண்டையில் யாரோ கொட்டினார்கள். திரும்பிப்பார்த்தால் எஸ்.வி.ஆர் நின்றிருந்தார். தனது கடிகாரத்தைக் காட்டினார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ‘சைட்’ அடித்திருக்கிறேன். “போலாம் சார்” என்றேன். அந்த வார்த்தைகளில் இருந்த திருப்தியின்மையை புரிந்து கொண்டு நக்கலாக சிரித்தார்.

இந்தக் குறிப்பை எழுதிவிட்டு இலியானாவும் நானும் என்று தலைப்பு வைக்கலாம்தான். ஆனால் அது அத்தனை கவர்ச்சியானதாக இருக்காது  என்று யோசித்த போது பழைய சம்பவம் ஒன்று ஞாபகம் வந்தது. பழைய சம்பவம் என்றால் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முந்தையது. ஆரம்பத்தில் இந்த மாதிரியாக எனக்கு நிகழ்ந்த அனுபவங்களை உயிரோசை இணைய இதழில் எழுதிக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் “இதையெல்லாம் அ.முத்துலிங்கம், பாரதி மணி போன்று வயதான காலத்தில் எழுதலாம். இப்பொழுது கவிதை, கதை எல்லாம் எழுதலாம் இல்ல” என்றார். நல்ல அறிவுரையாகத் தோன்றியது. எழுதியவரைக்கும் போதும் என நிறுத்தியிருந்தேன். 

ஆனால் நண்பர்களில், கூட வேலை செய்தவர்களில், சொந்தக்காரர்களில் என சகல இடங்களிலும் முப்பது நாற்பது வயதுக்காரர்கள் சிவலோக பிராப்தி அடைந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது சஷ்டியப்த பூர்த்தி காணும் வரை இருப்போம் என நினைப்பதெல்லாம் அதீத நம்பிக்கைதான். தோன்றியதை தோன்றும் போது எழுதிவிட வேண்டும். எழுதுவதற்கான மனநிலை அமைந்திருப்பதே பெரிய விஷயம். அதில் இதைத்தான் எழுத வேண்டும் அதைத்தான் எழுத வேண்டும் என எல்லைக் கோடுகள் வரைவது தேவையில்லாதது எனத் தோன்றுகிறது. 

அடித்து ஆடுவோம்!

Jan 23, 2013

முஸ்லீம்ஸ் ஏமாத்தமாட்டாங்க


கொஞ்ச நாட்களுக்கு முன்பாக முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க என்று திரும்பத் திரும்ப அட்வைஸ் செய்த ஆர்கிடெக்ட் பற்றி எழுதியிருந்தேன். அந்த ஆர்க்கிடெக்ட் பற்றி சொல்வதற்கு ஒரு செய்தி இருக்கிறது. அந்தச் சம்பவம் பற்றி ஞாபகமில்லாதவர்கள் அந்தக் கட்டுரையை ஒரு முறை வாசித்துவிடுங்கள்.  

இந்த ஆர்கிடெக்ட் ஒரு அப்பாடக்கர். படிக்காத மேதை. டிப்ளமோ கூட படிக்காமல் ஓரிரண்டு கட்டடங்களை எங்கள் லே-அவுட்டில் கட்டியிருக்கிறார். அவர்தான் நாங்கள் கட்டும் துக்கினியூண்டு வீட்டிற்கும் ஆஸ்தான அழகுக்கலை நிபுணர்.

பாதி முடிந்திருந்த நிலையில் கட்டடத்தை படம் எடுக்க வேண்டும் என்றார். தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். தனது கையகல மொபைல் ஃபோனில் ஒரு நடிகையை படம் எடுப்பது போல வளைத்து வளைத்து எடுத்துத் தள்ளினார்.  “இந்தக் கட்டடத்தை மிகப் பிரமாதமாகக் கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு” என கர்ஜித்தார். அவரது கடமையுணர்ச்சி கண்களில் நீர் கசியச் செய்துவிடும் அளவிற்கு இருந்தது. 

இதற்கு ஃபீஸாக மொத்தமாக இருபதாயிரம் கொடுத்துவிட வேண்டும் என்றார். சரி என்று சொன்னதுதான் மிச்சம். அடுத்த ஒரே நாளில் இருபது முறைக்கும் மேலாக ஃபோனில் அழைத்திருந்தார். கொடுக்கும் இருபதாயிரம் ரூபாய்க்கும் ஃபோன் பில் கட்டிவிடாதீர்கள் என்று கடுப்பாகச் சொல்ல வேண்டியதாக இருந்தது. சற்று சாந்தி அடைந்தார். அடுத்த நாள் பணத்தை தருவதாகச் சொல்லியிருந்தேன். அவ்வளவுதான். மறுநாள் காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் ஒரு மர்ம மனிதர் கதவைத்தட்டினார். அடையாளம் தெரியவில்லை. விசாரித்ததில் அந்த ஆர்க்கிடெக்டின் மேஸ்திரி என்று தெரிந்தது. படுக்கையில் இருந்து எழுந்து முகம் கூட கழுவாமல் வந்து நின்றிருந்தார். இனியும் இழுக்க முடியாது என்று இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்தனுப்பினேன். 

இரண்டு நாட்களுக்குப் பிறகாக ஒரு ஜிகுஜிகு படத்தை எடுத்து வந்தார். அது கட்டடத்தின் படம். நடிகையின் ஃப்ளோ-அப் படத்தை மிஞ்சியிருந்தது. “உங்க பில்டிங்கை இப்படி கொண்டு வர்றோம்” என்றார். இப்பொழுதும் அவரது கடமையுணர்ச்சி கண்களில் நீர் கசியச் செய்தது. கர்சீப்பில் துடைத்துக் கொண்டேன். 

ஓரிரு நாட்களுக்கு பிறகாக சில ஆட்களை அனுப்பியிருந்தார். அவர்களுக்கு இருபதாயிரம் கொடுத்துவிட வேண்டும். வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். “சார் நான் ஊருக்குப் போகிறேன். பணத்தை உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்” என்று சொல்லியிருந்தேன்.அவர் சரியென்றவுடன் முகம் கழுவாத மேஸ்திரி மீண்டும் வந்து இருபதாயிரத்தை வாங்கிக் கொண்டார்.

ஊரிலிருந்து திரும்ப வந்த பிறகு வேலை செய்பவர்களிடம் விசாரித்தேன். “ஆர்க்கிடெக்ட் பதினைந்தாயிரம்தானே கொடுத்தார்”என்றார்கள். அடித்துப் பிடித்து ஆர்க்கிடெக்டுக்கு ஃபோன் செய்தேன். “அவங்க ஏமாத்திடுவாங்க சார்.வேலையை முடித்த பிறகு கொடுத்துவிடலாம்” என்றார். இது வியாபார நுணுக்கம். இந்த நுணுக்கம் என்னிடம் இல்லையே என்று ஃபீலிங்க்ஸ் பொங்கி பிரவாகம் எடுத்தது. 

இரண்டு வாரங்களுக்குப் பிறகாக அவர்கள் வேலையை முடித்துவிட்டு மீதிப் பணம் ஐந்தாயிரம் கேட்டார்கள். ஆர்க்கிடெக்ட்டை அழைத்தேன். “சார், நான் இப்போ வெளியில் இருக்கிறேன். நீங்களே கொடுத்துவிடுங்கள். நான் வந்த பிறகு தருகிறேன்” என்றார். நியாயஸ்தனாக என் மனதுக்குள் சிம்மாசனம் போட்டுக்கொண்டார். ஐந்தாயிரம் ரூபாய்க்காக  அந்த பெரிய மனிதரைத் திரும்பத் திரும்ப தொந்தரவு செய்தால் நன்றாக இருக்காது என்று  அதன் பிறகு கேட்கவேயில்லை.

கட்டட வேலை முடிந்து பெயிண்ட் அடிக்கும் சமயத்தில் வீட்டிற்குள் அடிக்க வேண்டிய நிறம் பற்றிய விவரங்கள் தருவதாக சொல்லியிருந்தார். அதற்காக அழைத்த போது உடனடியாக பதிலை வாங்க முடியவில்லை. “இப்பொழுது தருகிறேன் அப்பொழுது தருகிறேன் என்று இழுத்தடித்தார்” இவரிடம் வாங்க முடியாது என்ற தோன்றியது. பெயிண்ட் நிறத்தை நாமே முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு “சார், ஐந்தாயிரம் ரூபாய் உங்களிடம் இருக்கிறது. எப்பொழுது வாங்கிக் கொள்ளட்டும்” என்றேன்.

“எந்த பணம் சார், அதை அப்பவே அவங்ககிட்ட கொடுத்துவிட்டேனே” என்றார். அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். “வேணும்ன்னா அவங்ககிட்ட ஃபோன் செய்து கேளுங்கள்” என்றார். அதை மிகக் கூலாகச் சொன்னார். அது கூலாகத் தெரியவில்லை. கடும் எகத்தாளமாகத் தெரிந்தது. என்னிடம் அவர்களின் எண் இல்லை என்பது அந்த மனுஷனுக்கு நன்றாகவே தெரியும்.  

என்ன சொல்வது என்று தெரியவில்லை. “நல்லா இருப்பீங்க சார்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தேன்.

நியாமத் நினைவில் வந்து போனார்.

பொம்பளைன்னா பூமாதேவி மாதிரி


நாங்கள் கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது ஜூனியராக ஒரு தேவதை வந்து சேர்ந்தாள். தேவதை என்றால் அவ்வளவு லட்சணம். கோபிச்செட்டிபாளையத்தை அடுத்த கொளப்பலூர் என்ற ஊரைச் சேர்ந்தவள். ஆளாளுக்கு சைட் அடிக்க ஆரம்பித்தோம். அவளுடன் பேசுவதற்காகவே பையன்கள் கடும் பிரயத்தனங்களை செய்து கொண்டிருந்தார்கள். அவளும் நானும் பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் என்பதால் ஊர்ப்பெயரை கொக்கியாக வைத்தே அவளுடன் பேசத் துவங்கிவிடலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன். 

ஆனால் அவள் எந்தப் பையனுடனும் பேசவில்லை. விடுதியில் தங்கியிருக்கும் மற்ற பெண்கள் மூலமாக அவளுக்கு நூல் விட்டாலும் வேலைக்கு ஆகவில்லை. நொட்டை, நொள்ளையெல்லாம் லைப்ரரியிலும், கேண்டீனிலும் மணிக்கணக்கில் கடலை வறுத்துக் கொண்டிருக்க இவள் ஹாஸ்டல் விட்டால் வகுப்பறை, வகுப்பு முடிந்தால் ஹாஸ்டல் ரூம் என்று பையன்களை காய்ச்சிக் கொண்டிருந்தாள். 

அப்பொழுது சேது படம் வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. ‘கெத்து’ காட்ட விரும்பும் மாணவர்கள் அவளை மிரட்டும் தொனியைக் கையில் எடுத்தார்கள். யார் மிரட்டினாலும் அவள் அழுது கொண்டே ஓடிவிடுகிறாள் என்று பேசிக் கொண்டார்கள். நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும் போது இந்த மிரட்டும் குரூப்பில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அவளை மிரட்டுவதோடு நில்லாமல் பையன்கள் தங்களுக்குள்ளும் மோதிக் கொண்டார்கள். மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டைச் சார்ந்த சீனியர் பையன் ஒருவன் மிக மூர்க்கமாக அவளை மிரட்டத் துவங்கியிருந்தான். வாட்டசாட்டமாக இருந்த அவனால் என்னைப் போன்ற பல பையன்களை ஒதுக்கித் தள்ளிவிட முடிந்தாலும் கொளப்பலூர் பெண்ணை வழிக்கு கொண்டு வர முடியவில்லை. அவன் தன்னோடு இரண்டு அல்லக் கைகளை சேர்த்துக் கொண்டு அந்தப் பெண்ணை கலாய்க்கத் துவங்கினான். அவள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவன் மீது பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அவள் நொந்து கொண்டிருப்பதாகத் தெரிந்த போது சந்தோஷமாக இருந்தது. 

இந்த ‘கேப்’பில் அவளுக்கு ஆறுதல் சொல்லும் சாக்கில் உள்ளே நுழைந்துவிடலாம் என்று குறுக்குப்புத்தி குறுகுறுத்தது. அவள் வகுப்பில் இருந்து விடுதிக்குச் சென்று கொண்டிருந்த போது அதிசயமாக எந்தக் கண்களும் அவளை தூரத்தில் இருந்து கவனிக்கவில்லை. மெதுவாகச் சென்று “நீங்கள் கொளப்பலூரா?” என்றேன். அவள் மேலும் கீழும் பார்த்துவிட்டு “ஆமாம்” என்றாள். “நான் கரட்டடிபாளையம்தாங்க” என்றேன்.  முறைத்தாளா அல்லது பார்த்தாளா என்று தெரியவில்லை. “எனக்கு தெரியாது” என்று பெரிய பன்னாக எடுத்து வாயில் செருகிவிட்டாள். அவள் சொன்ன தொனியில் “இனி மூஞ்சியிலேயே முழிக்காதே” என்று சொல்வதாகப் புரிந்து கொண்டேன். அவ்வளவுதான். பெட்ருமாஸ் லைட்டில் இருக்கும் குமிழாக மனம் நொறுங்கிப்போனது.

அடுத்தவனோடு மோதி பெண்ணை ‘பிக்கப்’ செய்யுமளவுக்கும், திரும்பத் திரும்ப ஒரு பெண்ணிடம் பேசி அவளது மனதைக் கரைக்கவும் திராணி இல்லாததால் வேறு பெண்ணை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அப்படி ஒரு பெண்ணை பார்த்தது தனி ட்ராக். அந்த ட்ராக்கை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம். 

மூன்றாவது வருடம் சென்ற பிறகும் இந்த கூத்து தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த மெக்கானிக்கல் பையன் அவளை பொதுவிடங்களில் நக்கலடிக்கத் துவங்கியிருந்தான். இந்தச் சமயத்தில் அவன் சேலம் லோக்கல் ரவுடிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கசிந்தது. அதனால் இப்பொழுது அவனுக்கு போட்டியே இல்லாத சூழல் உருவாகியிருந்தது. எப்படியும் அவள் அவனுக்கு அடங்கிவிடுவாள் என்று நம்பத் துவங்கியிருந்தேன். 

அந்த மாதத்தில்தான் கல்லூரியில் ஆண்டுவிழா நடந்தது. சினிமா நடிகர்களை அழைத்து வந்திருந்தார்கள். நடிகர்கள் வருவதால் வெளியாட்களின் கூட்டம் அதிகமாகிவிடக் கூடும் என செக்யூரிட்டியிடம் ‘ஐ.டி கார்ட்’ இருந்தால் மட்டும் உள்ளே அனுமதிக்கவும் என்று சொல்லி வைத்திருந்தார்கள். அப்படியிருந்தும் வெளியாட்களின் எண்ணிக்கை தாறுமாறாக இருந்தது. சுவர் ஏறிக் குதித்து வந்திருக்கக் கூடும். அந்த கொளப்பலூர் பெண் அமர்ந்திருந்த வரிசையிலிருந்து இரண்டு வரிசைகளுக்கு பின்னால் அமர்ந்திருந்தேன். மெக்கானிக்கல் பையனும் அதே பகுதியில்தான் நின்று கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்கு பிறகாக அவளிடம் நெருங்கி வந்தான். இன்னும் சில பையன்களும் அவனோடு இருந்தார்கள்.

அவளிடம் ஏதோ அவர்கள் சொன்னார்கள். சில நொடிகளில் அவள் அழத்துவங்கியிருந்தாள். ஆனால் அவர்கள் அமைதியானதாகத் தெரியவில்லை. சுற்றிலும் இருந்த சிலர் அவனது சேட்டைகளை ரசிக்கத் துவங்கியிருந்தார்கள். சிலர் சங்கடமாக உணர்ந்தார்கள். அடுத்த பத்து நிமிடங்களுக்கு இது தொடர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் தனக்கு முன்பாக இருக்கும் நாற்காலி மீது கையை வைத்து அதன் மீது முகம் பதித்துக் கொண்டாள். ஒருவன் அவளது முடியை பிடித்து இழுத்தான். அந்தக் கூட்டத்தில் யாரும் அவர்களைக் கேள்வி கேட்கவில்லை. எல்லை மீறிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பகுதியில் இருந்தவர்களின் கவனம் அவர்கள் மீது குவிந்திருந்தது. சில கணங்கள் கடந்திருக்கும். ஆவேசமாக எழுந்தாள். கண்ணை மூடி திறக்கும் கணத்தில் தனது கையில் இருந்த செருப்பால் மெக்கானிக்கல் பையனுக்கு முதல் அடியைக் கொடுத்தாள். திகிலடைந்த அவன் தன் கன்னங்களை தடவிக் கொண்டிருக்கும் போது அடுத்த அடி முடியை இழுத்தவனுக்கு. இந்த அதிரடித் தாக்குதலில் அல்லக்கைகளும் தப்பவில்லை. மெக்கானிக்கல் பையன் எதையோ சொல்ல முயன்றான். செருப்பு அவன் வாய்மீது இறங்கியது. அவனுக்கு மேலுதடு பிய்ந்து ரத்தம் பீறிட்டது. சுற்றியிருந்தவர்கள் கைதட்டத் துவங்கினோம். அவள் ஆவேசம் தீராதவளாக இருந்தாள். இப்பொழுது அரங்கம் முழுவதும் எங்கள் பகுதியை திரும்பிப்பார்த்தது.  இன்னொரு முறை அவள் செருப்பை ஓங்கிய போது அவர்கள் அந்த இடத்தை விட்டு காணாமல் போயிருந்தார்கள். 

Jan 22, 2013

திமுக எம்.எல்.ஏ, அதிகாரம், கவுன்சிலர்


டீக்கடையில் அமர்ந்திருக்கும் முன்னாள் எம்.எல்.ஏவைத் தெரியும். அதே அளவுக்கு எளிமையான எம்.எல்.ஏ இந்தக்காலத்திலும் இருக்கிறாராம். அவரை நான் நேரில் பார்த்ததில்லை. யுவகிருஷ்ணா எழுதியிருந்ததாக நினைவு. அவர் எழுதும் மற்ற விஷயங்களை நம்பினாலும் திமுக பற்றிய விவகாரங்கள் மீது கொஞ்சூண்டு சந்தேகமாகத்தான் இருக்கும். அவர் பக்கா திமுகக்காரர் என்பதால் எழும் இயல்பான சந்தேகம் அது. யுவகிருஷ்ணா குறிப்பிட்டிருந்தது குன்னம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கரைப் பற்றி. ஏதோவொரு திரையரங்கில் மிக இயல்பாக சிவசங்கர் வந்திருந்ததாகத் எழுதியிருந்தார். அவர் குறிப்பிடும் அளவுக்கு எளிமையானவராக இல்லாவிட்டாலும் கவுன்சிலர்களை விட சிம்பிளானவராக இருப்பார் என நம்பினேன்.

கவுன்சிலர்கள் செய்யும் அழிச்சாட்டியம் இருக்கிறதே. டூ மச். சென்றவாரத்தில் ஒரு கடைக்குச் சென்றிருந்தோம். அந்தக் கடையும் அதோடு ஒட்டிய இன்னும் சில கடைகளும் ஒரு கவுன்சிலருடையது. வாடகைக்கு விட்டிருக்கிறார். இவர் பெங்களூர் கார்பொரேஷனில் கவுன்சிலர். அந்த கடைகளுக்கு பின்னால் ஒரு பிரமாண்டமான பங்களா. அந்த பங்களாவில்தான் கவுன்சிலர் வசிக்கிறார். பைக்கை ஓரமாக நிறுத்திக் கொண்டிருந்த போது ஒரு வெள்ளை நிற ஆடி கார் ‘ஹார்ன்’ எழுப்பியபடி இருந்தது. அந்த காருக்கு முன்பாக ஒரு டாக்ஸி நின்றிருந்தது . வழியை மறைத்தபடி டாக்ஸியை நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க போயிருந்தார். ஆடி காரிலிருந்து இறங்கிய கவுன்சிலர் “யாருடைய கார்” என்று சத்தம் போட்டார். பதறியபடி ஓடி வந்த டிரைவருக்கு கண் இமைக்கும் நேரத்தில் அறை விழுந்தது. எந்த மறுப்பும் சொல்லாமல் கதவைத் திறந்து டாக்ஸியை எடுக்க முயன்றார். அவர் ‘ஸ்டார்ட்’ செய்வதற்கு எத்தனித்துக் கொண்டிருந்தார். காரின் ஜன்னல் வழியாக கையை உள்ளேவிட்டு ஓரிரு குத்துக்களை டிரைவர் முகத்தில் இறக்கினார் கவுன்சிலர் பயில்வான். டாக்ஸிக்காரர் சில கணங்களில் அந்த இடத்திலிருந்து காணாமல் போய்விட்டார். கவுன்சிலர் அங்கிருந்த மொத்த பேருக்கும் ஆணையிட்டார் “இனி யாராவது வழியை மறித்தால் கொன்றுவிடுவேன்”. தலை வணங்கி ஏற்றுக் கொண்டார்கள். அந்த இடத்தில் Power தனது கொடியை நட்டுவிட்டு போனது.

அதிகாரங்கள் மனிதர்களை புரட்டி போட்டுவிடுகிறது. அப்படிப் புரட்டிப் போடப்பட்ட மனிதர்களை பார்த்து நமக்கு பழகிப்போயிருக்கிறது. கிடைக்கும் மிகச் சிறிய அதிகாரங்களைக் கூட எந்தவிதமான Extreme க்கும் பயன்படுத்தும் அதிகாரவர்க்கத்திற்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிகாரவர்க்கம் என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டும் இல்லை. ஒவ்வொரு சாமானிய மனிதனும் தனக்கு ஏதாவதொரு வகையில் அதிகாரம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்கிறான். கிடைக்கும் அதிகாரத்தை சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் செலுத்துகிறான். வீட்டில் தன் மனைவி மக்களில் ஆரம்பித்து கட்டடவேலை செய்பவனிடம் மேஸ்திரி செலுத்தும் அதிகாரம், ஐடி நிறுவனத்தில் ப்ராஜக்ட் மேனேஜர் செலுத்தும் அதிகாரம் வரைக்கும் அத்தனை இடங்களிலும் அதிகாரத்தின் ஊசிகள் கீழே இருப்பவர்களின் கண்களுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை அருளினியனியனை கப்பன் பார்க்கில் சந்திக்க முடிந்தது. இவர் சாத்தப்பன் என்ற நண்பர் மூலமாக அறிமுகமானவர். அருளினியனும் சூப்பரான கேரக்டர். ஈழத்துக்காரர். அருள் கிட்டத்தட்ட பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் ஈழத்தமிழ் நாக்கில் அப்படியே ஒட்டியிருக்கிறது. பல சமயங்களில் நீண்ட கூந்தலுடன் ஜெர்க் கொடுப்பார். இந்த முறை ஒட்ட வெட்டி இயல்பாக சிரித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரியில் படிக்கிறேன் என்று சொல்வது டகால்ட்டியாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். அதற்கு காரணமிருக்கிறது. எப்பொழுது அழைத்தாலும் “அண்ணா ஒரு இண்டர்வியூக்கு வந்திருக்கன்” என்பார். இண்டர்வியூ என்பது நேர்காணல். விகடனில் பத்திரிக்கையாளராக இருக்கிறார். எப்பொழுதும் விகடனுக்காக அலைந்து கொண்டு டைம்பாஸூக்காக கல்லூரிக்கு போகிறார் என நினைக்கிறேன். அருளினியன் பற்றிய தெளிவான அடையாளம் சொல்ல வேண்டுமானால் சமீபத்தில் விகடனில் வந்த “நான் பாலியல் தொழிலாளி” என்ற நேர்காணலை நடத்தியவர்.

அருளினியனை குறிப்பிடக் காரணம், அவரும் சிவசங்கர் பற்றி பேசினார். சிவசங்கர் பெங்களூர் வந்திருக்கிறார். அவரைச் சந்திக்க வேண்டும் என அருளினியன் கேட்டிருக்கிறார். நீங்கள் வர வேண்டாம் நானே வந்துவிடுகிறேன் என்று அருளினியன் தங்கியிருக்கும் அறைக்கே போய்விட்டாராம். சிவசங்கர் இணையத்திலும் எழுதுகிறார். இது அவரது தளம்

“எம்.எல்.ஏ எண்டு சொன்னால் நம்ப முடியாது” என்றார் அருளினியன்.

“உண்மையிலேயே வந்திருந்தது எம்.எல்.ஏ சிவசங்கர்தானா?” என்றேன். 

சிரித்துக் கொண்டு “ஓம் அண்ணா” என்றார்.

அதிகாரம் கிடைத்தும் அமைதியாக இருப்பவர்களை பார்ப்பது ஆறுதலான விஷயம். அடுத்தவர்களை வெல்வதற்காக நடத்தும் ‘கேம்’கள், எதிரிகளை பந்தாட கிடைக்கும் வாய்ப்புகளுக்காக காத்திருத்தல் என சகலமும் அதிகாரத்தின் மீதான தமது பசிக்கு உணவு தேடும் செயல்பாடுகள்தான். கடும் பிரயத்தனங்களினூடாக கிடைக்கும் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு  ‘சும்மா’ இருக்க பலராலும் முடிவதில்லை. கவுனசிலரில் ஆரம்பித்து ஜனாதிபதியின் மகன் வரை சகலரும் ஆடுகிறார்கள். தண்டல்காரனில் ஆரம்பித்து தலைமைச் செயலாளர் வரை ஒவ்வொருவரும் மிரட்டுகிறார்கள். இந்த அதிகார வலைக்குக் கீழாக அதிகாரம் கிடைத்தும் எளிமையானவர்களாக இருப்பவர்களை பற்றி அறிந்து கொள்ளும் போது ஆறுதலாக இருக்கிறது. 

Jan 21, 2013

வைரமுத்து, பணத்தாசை, கற்பிதம்


எல்லாவற்றையும் கற்பிதம் செய்து கொள்வது துக்கமானது. ஆனால் அதுதான் என் மனோபாவம். கற்பிதம் என்றால் ‘இது இப்படித்தான்’ என்று முடிவு செய்துகொள்வது. முன்முடிவுகளில் நம்மை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்ற குத்துமதிப்பான நம்பிக்கையில் எடுக்கும் முடிவு அது. ஆனால் இந்த நம்பிக்கைகள் பெரும்பாலான நேரங்களில் தவிடுபொடியாகிவிடும். சாதகமானவர்கள் என்று நினைத்தவர்கள் பல நேரங்களில் காலை வாரிவிடுவார்கள். வெற்றி கிடைக்கும் என நினைத்த நிகழ்வுகளில் குப்புற விழுந்து இரண்டு பற்கள் நொறுங்கிவிடும். ஆனாலும் கற்பிதம் செய்துகொள்வதை மட்டும் கைவிடுவதில்லை. 

இந்த கற்பிதங்கள் எனக்கான பிரச்சினை இல்லை. பெரும்பாலானவர்களின் பிரச்சினை. குழந்தைகளிடம் இருந்தே நம் தில்லாலங்கடி வேலைகளைத் தொடங்கிவிடுகிறோம். மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் உரிமை. ஆனால் அதை லாவகமாக பறித்துக் கொள்கிறோம். நீரில் விளையாடுவதும் அவர்களின் உரிமைதான். அதையும் தடுத்துவிடுகிறோம். இப்படி அவர்களின் உரிமையை பறிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் வைத்திருப்போம். வயிற்றில் பூச்சி வரும், சளி பிடித்துக் கொள்ளும் - இப்படி எதையாவது சொல்லி நம்மை நாமே Justify செய்து கொள்வதும் கற்பிதம்தான். கற்பிதம் என்ற சொல்லை திரும்பத் திரும்ப ஜல்லியடித்தால் போரடித்துவிடும் என்பதால் இந்த இடத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.

நேற்று ஈரோடுகதிர் பெங்களூர் வந்திருந்தார். ஃபேஸ்புக்கில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். ரசிகைகளும்தான். நமக்கு கிடைக்காதது அடுத்தவருக்கு கிடைத்தால் பொறாமைப்படுவதுதானே மனித இயல்பு. கதிர் மீது பொறாமை உண்டு. கப்பன் பார்க்கில் நடந்து கொண்டிருக்கும் போது கீழே ஓடும் பெரிய கால்வாயில் தள்ளிவிட்டுவிடலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். அருளினியன், ராமலக்‌ஷ்மி போன்றவர்கள் உடன் இருந்து திட்டத்தில் மண் அள்ளி போட்டுவிட்டார்கள். கதிர் நிறையப் பேசினார். ஈரோட்டில் சங்கமம் நடத்தியது, ஃபேஸ்புக் என சகட்டு மேனிக்கு அடித்துக் கொண்டிருந்தார். இப்படி யாராவது புது மனிதர்களை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நமக்குள் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் உருவாகும். அந்த பிம்பம் அத்தனை துல்லியமானதாக இருக்க வேண்டியதில்லை. நாம் உருவாக்கிக் கொள்ளும் பிம்பத்தோடு அந்த மனிதரின் செயல்பாடுகள் ஒத்துப்போகும் போது அந்த மனிதரைப் பிடித்துப் போகிறது. பிம்பத்திலிருந்து செயல்பாடுகள் முரண்படும்போது அந்த மனிதரையும் வெறுக்கத் துவங்குகிறோம். கதிரைப் பற்றிய பிம்பத்தையும் உருவாக்கிக் கொண்டேன். இதுவும் கற்பிதம்தான்.

இந்த இடத்தில் மீண்டும் ‘கற்பிதம்’ தலையை நீட்டிவிட்டது பாருங்கள். இந்த கற்பிதங்களை முன்னோர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறோம். அவர்கள் ஏற்கனவே  ‘பலவற்றை’ சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை இம்மிபிசகாமல் Follow செய்கிறோம். நாம் பின்பற்றும் கற்பிதங்களில் ஏகப்பட்ட கற்பிதங்களை உடைக்கலாம் என்று தோன்றுகிறது. சிவப்பாக இருப்பவனெல்லாம் நல்லவன் என்பதில் ஆரம்பித்து ஆனந்த விகடனில் கவிதை எழுதுபவனை கவிஞன் என்று சொல்வது வரை கண்டதையும் அடித்து தூள் கிளப்பிவிடலாம்.

கோபிச்செட்டிபாளையத்தில் தாய்த்தமிழ் பள்ளி நடந்து கொண்டிருக்கிறது. பள்ளியின் பெயரே தாய்த்தமிழ் பள்ளிதான். குமணன் என்பவர்தான் முன்னின்று நடத்துகிறார். பள்ளி நடத்துகிறவர் என்பதால் பி.எம்.டபிள்யூ காரில் வந்து போவார் என்று முடிவு செய்து கொள்ள வேண்டியதில்லை. ஹீரோ ஹோண்டா இருசக்கர வண்டிதான். குமணனுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. அவரது தம்பி நடத்தும் டீக்கடைக்கு பின்புறமாக ஒரு சிறு அலுவலகம் இருக்கிறது. குமணன் தனது எல்.ஐ.சி ஏஜெண்ட் பணியை செய்வதற்கான அலுவலகம் அது. ஊருக்கு போகும் போதெல்லாம் அங்கு அவருடன் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். குமணனின் தம்பி நடத்தும் டீக்கடையை தொடங்கியது அவரது அப்பா. வயதாகிவிட்டதால் தனது இளைய மகனுக்கு டீக்கடையை கொடுத்துவிட்டார். இப்பொழுதும் அவரது அப்பாவை டீக்கடையில் பார்க்க முடியும். ஒரு மனிதர் டீக்கடையில் இருப்பது பெரிய அதிசயம் இல்லை. ஆனால் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ டீக்கடையில் இருப்பதுதான் ஆச்சரியம்தான். குமணனின் அப்பா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

கொங்கு மண்டலத்தில் முக்கியமான அரசியல்வாதியான கே.ஏ.செங்கோட்டையன் தனது நாற்பதாண்டு கால தேர்தல் அரசியலில் ஒரே ஒரு முறைதான் தோல்வியடைந்திருக்கிறார். அது 1996 ஆம் ஆண்டு. அந்த முறை கே.ஏ.எஸ்ஸை தோற்கடித்தவர்தான் டீக்கடையில் இருக்கும் ஜி.பி.வெங்கிடு. பொருளாதார ரீதியாக எந்த பலத்தையும் சேர்த்துக் கொள்ளாத இந்த முன்னாள் எம்.எல்.ஏவின் மகனான குமணன் நடத்தும் தாய்மொழி வழியிலான பள்ளி சார்பில் பொங்கல் விழாவை இந்த மாதம் நடத்தியிருக்கிறார்கள். விழாவின் பகுதியாக வைரமுத்துவின் “மூன்றாம் உலகப்போர்” நூல் திறனாய்வு விழாவையும் நடத்தியிருக்கிறார்கள். கூட்டத்தில் வைரமுத்துவும் கலந்து கொண்டிருக்கிறார்.

முந்நூறு, ஆயிரம், பத்தாயிரம் ரூபாய் என்று டிக்கெட் விற்பனையும் நடந்தது. டிக்கெட் வாங்குபவர்களுக்கு புத்தகத்தின் ஒரு பிரதியை கொடுத்துவிட்டார்கள். ஆயிரக்கணக்கில் டிக்கெட்டும் அதன் வழியாக புத்தகமும் விற்றிருக்கிறது. விழாவில் கட்டுக்கடங்காத கூட்டம் என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்காக வந்து போவதற்கு வைரமுத்துவுக்கு பல ஆயிரங்களை கொடுத்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுவதில்லை. போக்குவரத்து செலவில் ஆரம்பித்து தங்கும் வசதி வரைக்கும் அத்தனையையும் சொந்த செலவில் செய்து கொண்டிருக்கிறார் வைரமுத்து. அதுமட்டுமில்லாமல் இந்த விழாவிற்காக நடத்தப்பட்ட புத்தக விற்பனையில் வந்த இலாபம் முழுவதையும் பள்ளி வளர்ச்சிக்கு என்று கொடுத்திருக்கிறார்.

எந்த நோக்கத்தில் செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் எந்த நோக்கத்தில் செய்தாலும் தமிழ் வழிக்கல்வியை உற்சாகமாக முன்னெடுக்கும் ஒரு பள்ளிக்காகத்தான் செய்திருக்கிறார். கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. வைரமுத்து என்ற ஆளுமை குறித்தான என் கற்பிதத்தில் கல்லை வீசியிருக்கிறார்கள். தவறான கற்பிதங்கள் நொறுங்குவதில் தவறு எதுவும் இல்லை.

Jan 20, 2013

ஓடும் ரயிலில் கையசைத்துச் சென்றவள்


பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகள் ஒரே மாதிரி அமைந்துவிடுகின்றன. உணவும் மதியத் தூக்கமும் ஒரு தினத்தை ஒட்டுமொத்தமாக கொன்றுவிடுகின்றன. இந்த ஞாயிற்றுக்கிழமை அப்படி இல்லை. எழும் போதே மணி ஒன்பது. அதற்கு காரணம் நேற்று தூங்கும் போது அதிகாலை மூன்று மணி. அதுவரைக்கும் கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தில் இல்லை- இணையத்தில்தான். அவரது சிறுகதைகள் இப்பொழுது கைவசம் இல்லை.  அழியாச்சுடர்கள் தளம் ஆபத்பாந்தவனாக இருக்கிறது. தமிழின் அத்தனை முக்கியமான சிறுகதைகளையும், கதாசிரியர்களையும் இணையத்தில் சேகரிக்கும் மிக முக்கியமான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நன்றியை தெரிவித்துவிட்டு வாசிக்கத் துவங்கினேன். கோபிகிருஷ்ணன் தன் எழுத்துக்குள் இழுத்து போட்டுக் கொண்டார். 

இவ்வளவு எளிமையாக, எள்ளலுடன் கூடிய எழுத்தை வாசிப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. இத்தனை உற்சாகமான எழுத்துக்குச் சொந்தக்கார மனிதன்தான் வாழ்வின் வறுமைப்பிடி காரணமாகவும் மனச்சோர்வின் காரணமாகவும் மாத்திரைகளின் பிடிகளுக்குள் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்பது நம்ப முடியாத துக்கம். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அதுதான் நடந்தது. எழுத்து மட்டுமே எந்த மனிதனையும் காப்பாற்றாது என்பதற்கு கோபிகிருஷ்ணன் உதாரணம். நேரம் கிடைக்கும் போது கோபிகிருஷ்ணனின் எழுத்தை வாசித்துவிடுங்கள். 

மூன்று மணிக்கு எழுந்து வந்த அப்பா அதிர்ச்சியடைந்தவராய் தூங்கச் சொல்லி பற்களைக் கடித்தார். லேப்டாப்பை மூடிவைத்து தூங்கி எழுந்தால் மணி ஒன்பதாகியிருந்தது. தந்தியின் தலைப்புச் செய்தியில் ராகுல் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார். கட்சியின் துணைத்தலைவர் ஆகிவிட்டாராம்.  இது எதிர்பார்த்ததுதான். காங்கிரஸ் அடுத்த ஆட்சியையும் பிடித்துவிடலாம் என்று நம்புகிறது. அதன் நம்பிக்கைக்கு காரணம் - கட்சிக்குள் இருக்கும் மூளைக்காரர்கள். எந்த கோதாவில் வேண்டுமானாலும் இறங்குவார்கள். காங்கிரஸின் அரசியல் கணக்குகள் எதிரிகளை துவம்சம் செய்துவிடக் கூடியவை. கடைசி நேரம் வரைக்கும் ஆட்சியை பிடிப்பதற்கான அத்தனை முஸ்தீபுகளிலும் ஈடுபடும் அந்தக் கட்சிக்கு குழி தோண்ட கடப்பாரையை தூக்கிக் கொண்டு நிற்கிறார் மோடி. குழி தோண்டும் மனிதர் என்ற நம்பிக்கையாலேயே மோடி மீது எனக்கு மரியாதை உண்டு. பாருங்கள்! கோபிகிருஷ்ணனில் ஆரம்பித்து காங்கிரஸ் கட்சிக்கும் மோடிக்கும் வருவது மடத்தனமான செயல். 

பதினோரு மணிக்கு அபி மதியழகனும், கோபாலும் வந்திருந்தார்கள். ஓசூரில் வசிக்கிறார்கள். மதியின் “நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன்” என்ற தொகுப்பு அகநாழிகை வெளியீடாக வந்திருக்கிறது. அதன் பிரதியைக் கொண்டு வந்திருந்தார். வீட்டிற்கு அருகில் இருக்கும் ஏரிக்கரையில் அமர்வதற்கு இடம் தேடினோம். வெயிலில் இருந்து தப்பிக்க இடம் கிடைக்காமல் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். வெறும் தரை. குளிர்ந்த காற்று. நிறைய பேசினோம். ஆரம்பத்தில் எழுத்தைப் பற்றி பேசாமல் இலக்கியத்தில் அரசியல் செய்யும் மனிதர்களைப் பற்றி பேச நேர்ந்தது  அலுப்பைத் தந்தது. இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கும் நண்பர்களிடம் வேறு ஏதேனும் உருப்படியாக பேசலாம் என்று மனம் உறுத்தியது.

அப்படியும் தவிர்க்க முடியாமல் எனது முந்தைய கவிதைத் தொகுப்பும், கட்டுரைத் தொகுப்பும் எத்தனை பிரதிகள் விற்றன என்ற கணக்கைக் கூட பதிப்பாளர் தரவில்லை என்ற குற்றப்பத்திரிக்கையை வாசித்தேன். அதை தவிர்த்திருக்கலாம். ஆனால் என்னையுமறியாமல் வந்துவிட்டது. மூன்று முறை மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். எனக்கு ராயல்டியெல்லாம் வேண்டாம், குறைந்தபட்சம் எத்தனை பிரதிகள் விற்றன என்று மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் எந்த பதிலும் வந்ததில்லை. அதைவிடுங்கள்.

மதி, கோபாலிடம் கவிதைகள் பற்றி, விமர்சனங்கள் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். அவர்களை வழியனுப்ப பேருந்து நிறுத்தம் வரை வந்துவிட்டு திரும்பிய போது மதியின் தொகுப்பை புரட்டினேன். அப்பொழுது வாசித்த கவிதை ஒன்று-

ஓடும் ரயிலில் இருந்து 
புன்னகைத்து கையசைத்துச்
செல்லும் இளம்பெண்ணொருத்தி
சில மணித்துளிகளில்
மறந்துவிடலாம் இவனை
அன்றைய நாளுக்கான அலைகழிப்பைத் 
தந்துவிட்டு.

எனக்கு இன்றைய தினத்துக்கான அலைகழிப்பைத் தரும் இளம் பெண்ணொருத்தி ஏதேனும் பேருந்தில் அமர்ந்திருக்கக் கூடும் என்று போகிற பேருந்துகளை நோட்டம் விட்டேன். நல்லவேளையாக யாரும் கையசைக்கவில்லை. தப்பித்துக் கொண்டேன்.

Jan 19, 2013

அன்பளிப்பு


உங்களது வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் வலைப்பதிவை படிக்கும்போது உங்களால் மட்டும் எப்படி வாழ்க்கையில் வேறுபட்ட மனிதர்களை சந்திக்க முடிகிறது என்று தோன்றும்.

இந்த தவிட்டு குருவி நிழற்படம் உங்களுக்கு என்னால் முடிந்த அன்பளிப்பு :) 

பி.கு: இந்த படம் B.R Hills போகும்போது Malavalli அருகில் எடுக்கப்பட்டது.

Kumaresh Rajarajan.                                                                        ******

அன்புள்ள குமரேஷ்,

அடிப்படையில் தவிட்டுக்குருவி அழகற்ற குருவி. இப்படிச் சொன்னால் இன்னொரு கேள்வியை எழுப்பலாம். எது அழகு? அழகான பெண், அழகான மலர், அழகான குருவி. இப்படி நமக்கான சில வரையறைகள் இருக்கின்றன. இந்த அத்தனை அழகுகளும் நாமாக வரையறை செய்து கொண்ட எல்லைகள்தானே. ‘இதுதான் அழகு’ என்பதை காலம் காலமாக பழகிக் கொண்டிருக்கிறோம். இந்த பழக்கத்திற்குள் பொருந்துவனவற்றை அழகாக இருக்கிறது என்று சொல்லிவிடுகிறோம். பொருந்தாதவை எல்லாம் அழகற்றவை. தவிட்டுக்குருவி என் அழகின் வரையறைக்குள் வந்ததே இல்லை. சோம்பலான நிறம். சோகமான கண்கள் என இந்தக் குருவிகள் தீர்க்கவே முடியாத துக்கத்தை சுமந்து கொண்டிருப்பதாகவே புரிந்து வைத்திருக்கிறேன். ஒரு மனிதனோ அல்லது ஒரு உயிரோ தனது சோகத்தை நம்மிடம் வெளிப்படையாக காட்டும் போது அந்த ஜீவன் மீது பரிதாபம் உருவாகும் அல்லவா? அப்படித்தான் தவிட்டுக்குருவி மீது பரிதாபம் கொண்டிருந்தேன். உருவான பரிதாபத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவத்தை கொடுக்கும் போது காதலாக மாறிவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் உண்டு. தவிட்டுக்குருவி மீதான எனது காதலுக்கு இந்த பரிதாபம்தான் காரணம் என நம்புகிறேன்.


இப்பொழுது இந்தக் காதல் கதை முக்கியமில்லை. உங்களின் நிழற்படம் குருவியை வேறொரு கோணத்தில் காட்டுகிறது.தவிட்டுக்குருவியை பார்க்கும் போது உங்களுக்கு என்னைப்பற்றிய நினைவு வந்திருக்கிறது என்பது சந்தோஷம் தரக் கூடியதாக இருக்கிறது. அன்புக்கு நன்றி.

‘வேறுபட்ட மனிதர்களைச் சந்திப்பது’ என்று முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. நம்மால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எத்தனை மனிதர்களைச் சந்திக்க முடிகிறதோ அத்தனை வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கிறோம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பேருந்தில் நம் பக்கத்துச் சீட்டில் அமர்பவரில் ஆரம்பித்து பால்காரன், பூக்காரி, பக்கத்துவீட்டுக்காரன் என அத்தனை மனிதர்களுமே வேறுபட்ட மனிதர்கள்தான். ஒரு மனிதனைப் போலவே குணாம்சம் உடைய இன்னொரு மனிதனை பார்ப்பதற்கு துளியளவும் சாத்தியம் இல்லை என நம்பலாம். 

உங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு மாறுபாடு இருக்கிறது.  இந்த மாறுபாடு நம் இருவருக்குமே unique. இந்த uniquenessஐ எப்படி பிரித்து பார்க்கிறோம் என்பதில்தான் நம் வாழ்வின் சுவாரசியம் அடங்கியிருப்பதாக நினைக்கிறேன். இதைத்தான் பதிவு செய்ய முயற்சிக்கிறேன். 

தலைக்கனம் இல்லாமல், சுய பெருமையடையாமல், பீற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து என்னால் எழுத முடியுமானால் இன்னும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களை சுவாரசியமாக பதிவு செய்ய முடியும். பார்க்கலாம்.

நன்றி. 

அன்புடன்,
வா.மணிகண்டன்.

ஸ்டாலின் Vs அழகிரிஸ்டாலின் திமுகவின் அடுத்த தலைவர் ஆகிவிடுவார் போலிருக்கிறது. வாய்க்கு அவல் கிடைத்திருக்கிறது. ஆளாளுக்கு மெல்லத் துவங்கியிருக்கிறார்கள். மடம், வாரிசு அரசியல் என்று கேட்டு கேட்டு நைந்து போன சொற்களை கொட்டுவார்கள். இந்த எதிர்ப்புகளால் ஸ்டாலின் தலைவராவது தடைபடப் போவதில்லை என்பது எதிர்ப்பவர்களுக்கும் தெரியும். ஆனால் எதையாவது பேசியாக வேண்டுமே. திமுகவை மட்டும் தான் அதிமுக ஆட்சியிலும் விமர்சிக்க முடியும் திமுக ஆட்சியிலும் விமர்சிக்க முடியும். அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுகவையோ அதன் தலைமையையோ அல்லது ஆட்சி நிர்வாகத்தையோ ‘சைலண்டாக’ கூட விமர்சிக்காத நடுநிலையாளர்கள் தமிழகத்தில்தான் உண்டு. இந்த மெளனத்திற்கு கள்ள மெளனம் என்று பெயர். இந்த கள்ளத்தனத்தைப் பற்றி தனியாக பேசலாம். பேசுவதற்கு தைரியம் வேண்டும். போர்ன்விட்டா குடித்தோ, நேதாஜியின் வரலாற்றைக் படித்தோ தைரியம் வந்தால் பேசலாம். இல்லையென்றால் அமைதியாக இருந்து கொள்வதுதான் உசிதம்.

தலைவரின் மகன் என்பதற்காகவே ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு ஆயிரக்கணக்கான பதில்கள் உண்டு. தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் 1967லில் அரசியலுக்கு வந்தாலும் கூட அமைச்சர் பதவியை அடைவதற்குக் கூட 2006 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதாக இருந்தது. கருணாநிதியின் மகன் என்பதால்தான் மிசாவில் சிறைபட்டு சித்ரவதை அனுபவித்த பிறகும் கூட எம்.எல்.ஏ பதவியை அடைய பதினான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 

ஸ்டாலின் இன்றைக்கு நேற்று கட்சியில் முளைத்தவரில்லை என்றும் எடுத்த உடனே பொருளாளர் ஆக்கப்பட்டவரில்லை என்றும் ஏகப்பட்ட வியாக்கியானங்கள் சொல்லியாகிவிட்டது. கிட்டத்தட்ட நாற்பத்தைந்து காலமாக கட்சியில் இருக்கிறார். அதைவிட முக்கியம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கும் திமுகவின் முகமாக ஸ்டாலின் மட்டும்தான் இருக்கிறார். திமுகவினர் கைது செய்யப்பட்டால் சிறை சென்று பார்ப்பதிலும், போராட்டங்களை முன்னின்று நடத்துவதிலும், முடிந்தால் வழக்கு போட்டு பாருங்கள் என்று அரசுக்கு வெளிப்படையாக சவால்விடும் தைரியத்திலும் ஸ்டாலின் தன்னை ஒரு தலைவனாக வடிவமைத்துக் கொள்வதில் முழு வெற்றியடைந்து வருகிறார். 

சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக தேமுதிக இருந்தாலும் திமுகவைத்தான் மக்கள் எதிர்கட்சியாக கருதுகிறார்கள். இதற்கு விஜயகாந்தின் தோல்வி மட்டும் காரணமில்லை அது ஸ்டாலினின் வெற்றியும் கூட. 

கட்சியில் அடுத்த தலைவருக்கான இடத்திற்கு போட்டியிடும் அளவுக்கு வேறு யாரையும் வளர விடவில்லை, மாவட்ட அளவுகளில் தனக்கு ஜால்ரா தட்டுபவர்களை மட்டுமே பதவியில் வைத்திருக்கிறார் போன்ற விமர்சனங்கள் ஸ்டாலின் மீது உண்டு. அதையெல்லாம் ஸ்டாலின் எப்படி எடுத்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இவை இன்ற அரசியலின் அடிப்படை சித்தாந்தங்களாக மாறிப்போனதுதான் நம் சூழலின் துக்கம்.

இன்றைய சூழலில் ஸ்டாலின் திமுகவின் தலைவராவதை எதிர்ப்பதற்கு ஒரே ஆள்தான் இருக்கிறார். அழகிரி. ஆனால் ஸ்டாலினை எதிர்ப்பதற்கு அழகிரிக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அழகிரி பெயரளவில் மட்டும்தான் அஞ்சாநெஞ்சன். மத்திய அமைச்சராக இருந்தாலும் கூட அதிமுக ஆட்சியில் முகம் காட்டாமல் பதுங்கிக் கொண்டிருக்கிறார். போராட்டங்களிலோ, பத்திரிக்கையாளர் சந்திப்பிலோ தெரியாத்தனமாகக் கூட கலந்து கொள்ளாமல் தவிர்க்கிறார். அறிக்கை விடக் கூட  தயங்கும் அழகிரி ஒருவேளை தலைவரானால் கட்சியை எப்படி நடத்துவார் என்ற கேள்வி எழுவதுதான் இயற்கை.

ஸ்டாலின் திமுகவின் தலைவராவதன் நோக்கம் அடுத்த முதலமைச்சர் ஆகுவதற்குத்தான் என்றால் அவர்தான் திமுகவின் கடைசி முதலைமைச்சராகவும் இருப்பார். பதவிகளைக் குறி வைத்து அரசியலுக்கு வருபவர்களால் நிரம்பி புரையோடிக் கிடக்கும் திமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய பெரும் பொறுப்பு அடுத்த தலைவருக்கு இருக்கிறது. திமுகவை காங்கிரஸின் கோரப்பிடியிலிருந்து விடுதலை செய்யுங்கள் அதற்கு முன்பாக குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுங்கள். தமிழர்களுக்காகவும், இனத்திற்காகவும் குரல் எழுப்பிய பழைய இயக்கமாக தட்டியெழுப்புங்கள். இதையெல்லாம் ஸ்டாலின்  இத்தனை வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக செய்திருக்க முடியும். ஆனால் அவரிடம் அதற்கான அதிகாரம் இல்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டு எதிர்பார்க்கலாம்.

திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வர வேண்டுமா அல்லது அழகிரி வர வேண்டுமா என்று கருத்துச் சொல்ல தினமலருக்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த உரிமையும் இல்லாதது போலவேதான் தார்மீகமாக எனக்கும் உரிமையில்லை. ஆனால் ஸ்டாலினிடம் இருக்கும் Charismaவுக்காக அவர் அடுத்த தலைவராக வர வேண்டும் என விரும்புகிறேன். 

Jan 18, 2013

இந்த நாள்...உன்னுடைய காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோஅவன் நண்பன் தான். சில வருடங்களுக்கு முன்பாக- குறிப்பாகச் சொன்னால் எட்டு வருடங்கள். அவனும் நானும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்தோம். அப்பொழுது எனது முதுநிலை படிப்பு இரண்டாம் வருடம். சென்னையில் தங்கி ப்ராஜக்ட் செய்து கொண்டிருந்தேன்.  அந்த சமயத்தில்தான் இந்த நிறுவனத்தில் பார்ட் டைம் வேலை செய்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட மூன்றாயிரம் சம்பளம். அவன்  ஆறாயிரத்து சொச்சம் வாங்கிக் கொண்டு என்னைவிடவும் பெட்டராக இருந்தான். வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து செலவு, சினிமா இத்யாதியெல்லாம் போக குறைந்தது ஆயிரத்தைந்நூறு மிச்சம் பிடிப்பான். வீட்டுக்கு தர மாட்டான். அந்த பணத்தில் பிஸினஸ் மேன் ஆகப்போகிறேன் என்பான். அவன் ரஜினி ரசிகன்.  ‘இந்த நாள்...உன்னுடைய காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ’ என்றெல்லாம் டயலாக் அடித்து கிச்சு கிச்சு மூட்டுவான். எனக்கு சிரிப்பு வந்துவிடும். இந்த பாழாய்ப்போன சிரிப்பின் காரணமாக பல நேரங்களில் எங்களுக்குள் சண்டையும் வந்திருக்கிறது.

அந்தச் சமயத்தில்தான் படிப்பு முடிந்தது. பிறகு நான் ஹைதரபாத்தில் சிக்கிக் கொண்டேன். அவன் பெரிய நிறுவனம் ஒன்றிற்கு ஜம்ப் அடித்தான். பல லகரங்களில் சம்பளம். அவன் கார் வாங்கும் வரைக்கும் தொடர்பில் இருந்தோம். ஹவுஸிங் லோனுக்கு விண்ணப்பிப்பதாக ஒரு நாள் சாட்டிங்கில் சொன்னான். அதன் பிறகாக தொடர்பு இல்லை. ஓரிரண்டு மின்னஞ்சல் பரிமாறிக் கொண்டோம். அப்புறம் அதுவும் இல்லை என்றாகிப் போனது. அவரவர் பிரச்சினை அவரவருக்கு. ஒவ்வொருவருக்கும் ஆயிரத்தெட்டு சிக்கல்கள், நூற்றியெட்டு குறிக்கோள்கள், புத்தம் புதிய நண்பர்கள் என்று வாழ்க்கையின் அன்றாடச் சுழல் வாரிப் போட்டுக் கொண்டு சுழன்று கொண்டிருந்தது.

ஒரு வருடத்திற்கு பிறகாக சாட்டிங்கில் அதிசயமாக பேசியவன் தொலைபேசி எண்ணைக் கேட்டான். கொடுத்த இரண்டாவது நிமிடத்தில் அழைத்தான். எந்த விசாரிப்புகளுக்குமில்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். இதுவரை இருந்த வேலையை பறித்துக் கொண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டுக்கடனில் ஆரம்பித்து இந்த மாத கிரெடிட் கார்ட் பில் வரை கழுத்தை நெரிக்கிறது என்றான். அந்தச் சமயத்தில் ஆறாயிரத்துக்கும் சற்று அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த என் பயம் எல்லாம் என்னிடம் ஏதாவது பணம் கேட்டுவிடுவானோ என்றே இருந்தது. அப்படி கேட்டுவிட்டால் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்ற குழப்பம் தனி ட்ராக்கில் ஓடிக் கொண்டிருந்தது. அவன் பணம் எதுவும் கேட்கவில்லை. வேலை ஏதாவது வேண்டும் என்றான். விசாரித்துச் சொல்வதாக இணைப்பை துண்டித்துக் கொண்டோம். அவ்வளவுதான். அடுத்த பல வருடங்களுக்கு தொடர்பு இல்லை.

அவனுக்கு அப்பொழுது திருமணம் ஆகியிருக்கவில்லை. பிஸினஸ் ஆரம்பிக்க விரும்பியவன் ஏன் இன்னொரு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறான் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்னொருவனுக்காக அரை மணி நேரம் துக்கப்படுவதே அதிகபட்சம் என்று என்னை சமாதானம் செய்து கொண்டேன். அதன் பிற்கு வேறொரு ஆயிரத்தெட்டுச் சிக்கல்கள், வேறொரு நூற்றியெட்டு குறிக்கோள்கள் எக்ஸெட்ரா...எக்ஸெட்ரா. அவனை மறந்துவிட்டேன்.

கடந்த வாரத்தில் அவனை மீண்டும் சந்தித்தேன். டீம் லன்ச் என்று அலுவலக நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். பன்னிரெண்டு பேர் சென்றிருந்தோம். மொத்த பில்லை பன்னிரெண்டாக பிரித்து ஆளுக்கு ஒரு பங்கைக் கட்ட வேண்டும். அதைத்தான் டீம் லன்ச் என்பார்கள். இந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கு வருவது எனக்கு இதுதான் முதல் முறை. அதீத கூட்டமாக இருந்தது. சர்வர்கள் படு வேகமாக பரிமாறிக் கொண்டிருந்தார்கள். டோக்கன் வாங்கிக் கொண்டு வெளியே காத்திருந்தோம். ஹோட்டலில்தான் பழைய நண்பன் நின்று கொண்டிருந்தான். ஆள் அப்படியேதான் இருக்கிறான். கன்னம் மட்டும் பெருத்து போயிருக்கிறது.  நான்தான் மாறியிருக்கிறேன். மொட்டை அடித்து, கொஞ்சம் பருமனாகி, கண்ணாடி போட்டிருந்த என்னை அவ்வளவு சீக்கிரமாக அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அருகில் சென்று பேசியவுடன் கண்டு கொண்டான். 

வேலையைப் பற்றி கேட்டான். சற்று குறைத்துச் சொன்னேன். ஒருவேளை அவன் நல்ல வேலை இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தால் என் வேலையின் பெருமையைக் கேட்டு வருத்தப்படக் கூடாதே என்ற எண்ணம்தான். குறைத்துச் சொன்னதைக் கேட்டு அவன் முகம் வாடிப்போனது. வேறு வேலை தேடிக் கொள் என்று அறிவுரை சொன்னான். அவனது வேலை குறித்து விசாரித்தேன். உற்சாகமானவன் இந்த ஹோட்டல் தன்னுடையதுதான் என்றான். ஆச்சரியமாக இருந்தது. அந்த நிறுவனம்   துரத்தியவுடன் கொஞ்ச நாள் வேலை தேடியவன் எதுவும் ஒத்து வராமல் ஹோட்டல் ஆரம்பித்திருக்கிறான். பெங்களூருக்கு இடம் மாறி கடை பிடித்து, சேர், டேபிள், சட்டிபானை எல்லாம் தயாரான பிறகு சொந்த ஊரிலிருந்து சமையல்காரர் ஒருவரை பிடித்து வந்து மாஸ்டராக்கிவிட்டான். 

ஆரம்பத்தில் மெஸ்ஸாகத்தான் தொடங்கியிருக்கிறான். ஓரளவு பிக்கப் ஆனவுடன் இங்கு இடம் மாற்றியிருக்கிறான். பக்கத்திலேயே ஏகப்பட்ட ஐ.டி நிறுவனங்கள் இருப்பதால் இப்பொழுது ட்ரிப்பிள் பிக்கப் என்றான். இப்பொழுது மெஸ் என்ற பெயர்ப்பலகை ரெஸ்டாரண்டாக உருமாறியிருக்கிறது. எழுபது ரூபாய்க்கு பிரியாணி, அறுபது ரூபாய்க்கு சிக்கன் வறுவல் என்று சீப்பான ரேட்டில் ஒரு பக்கம் அடித்து தூள் கிளப்ப, இன்னொரு பக்கம் கல்யாணம், காது குத்து, பூப்பு நன்னீராட்டு விழா என்று சகலத்துக்கும் அவுட்டோர் கேட்டரிங்கும் செய்கிறானாம். சில லட்சங்களுக்கும் குறைவில்லாமல் லாபம் வருவதாகச் சொன்னான். அண்ணாமலை சினிமா பார்ப்பது போலிருந்தது. அவன் சொல்லிக் கொண்டேயிருந்தான் நான் வாயைப் பிளந்து கொண்டேயிருந்தேன். அலுவலக நண்பர்கள் நாங்கள் பேசி முடிப்பதற்காக காத்திருந்தார்கள். சாப்பிடுங்கள் பிறகு பேசுவோம் என்றான். உணவு மேஜை அரட்டையில் அவனது கதையை நண்பர்களுக்கு சொன்னேன். அவனது ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் பிஸினஸ் மேன் கனவை நக்கலடித்ததையும் மறக்காமல் சேர்த்துக் கொண்டேன்.

உணவை முடித்தவுடன் சர்வர் பில் கொண்டு வந்தார். பணத்தைக் அவரிடம் கொடுத்து அனுப்பிய போது அவன் சர்வரை திருப்பி அனுப்பிவிட்டான். பணத்தை எடுத்துக் கொண்டு நானே அவனிடம் சென்றேன். வாங்கிக் கொள்ள முடியாது என்றான். வற்புறுத்தியும் பயனில்லை. நன்றி சொல்லிவிட்டு நண்பர்களோடு வெளியேறிய போது உடன் வந்திருந்த தெலுங்குப்பையன் 'பில் எத்தனை' என்றான். 

'ஆயிரத்து ஐநூறு' என்றேன்.

'பிஸினஸ் ஆரம்பிக்க போறியா' என்றான். எல்லோரும் சிரித்தார்கள். நான் சிரிப்பது போல நடித்தேன்.

Jan 17, 2013

ஜீப்பில் ஏறிக்கொள்ள நான்கு காரணங்கள்


அலுவலகம் முடிந்து வந்த பிறகு வழக்கம் போலத்தான் மின்னஞ்சலைத் திறந்தேன். ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம் மகிழ்ச்சியாகவும். காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள காரணம் கிடைப்பது சந்தோஷமாகத்தானே இருக்கும்...

நன்றி

 **************************************************************************
ஹாய்,

உண்மையாலுமே உங்களோட வலைப்பதிவில் அப்டேட் இல்லையென்றால் இன்று உங்களுக்கு மெயில் அனுப்பலாம் என்றுதான் இருந்தேன். மீண்டும் தொடங்கியதற்கு நன்றி.

இரண்டு விஷயங்களை (பலம்) நான் கவனிக்கிறேன்

1)தினசரி எழுதுவது சுருக்கமாகவும் (இது பெரும்பாலான                     வலைப்பதிவுகளில் இருப்பதில்லை) சுவாரசியமாகவும் இருக்கிறது

2) சுயபெருமை உங்கள் வலைப்பதிவில் மிகக் குறைவாக இருக்கிறது.

நன்றி!

தனுஷ்

***************************************************************************
Hi Manikandan,

How are you?  I am good here.  

I am regular reader of your blog everyday.  Today you wrote in your blog that you purposely stopped writing for eight days to test yourself that how much and how many people reading your blog if you write everyday.

Atleast last one year i am regularly read your blog.  Also you worried that nobody responding if you are not writing.  It is not like that so many people reads everyday like reading newspaper.  People may be dont have time to reply or write mails or comments.  But trust me like so many people love to read your blogs.  So dont stop writing keep writing and make happy people like me who expect everyday.

Take care and enjoy your like

Have a nice day Manikandan.

Sivaprakasam Gopalakrishnan

******************************************************************************

Dear Anna,

Dont hesitate to write in ur blog. Actually I am working in Hyderabad.I read ur blog daily without fail. When ever I feel moodout, I read ur old blog posts.so please continue to write in ur blog. ‘எப்படியோ நாசமா போ’ என சபித்திருப்பார்.

நான் எதுவுமே நினைக்கவில்லை. நான் நீங்கள் எழுதாதற்கு காரணம் நீங்கள் பாரியூர் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.

அன்புடன்,
தியாகு

****************************************************************************

மணிகண்டன்,

உங்களுக்கு கூட மனசு சரியில்லையா, ஆச்சரியமாக தான் இருக்கிறது.  நான் நீங்கள் ஊரில் இல்லை என்று நினைத்திருந்தேன்.  நிசப்தம் நிசப்தமாகவே இருந்தது ஏமாற்றமாக தான் இருந்தது.

//"கொஞ்ச நாளைக்கு ஃபேஸ்புக், ப்லாக் எதுவும் வேண்டாம் என்று இருந்தேன்"//.  இதை படித்த பின் தான் இது நீங்களாகவே ஏற்படுத்திகொண்ட break என்று தெரிந்தது.

இந்த break கூட அவ்வப்போது தேவை தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும்.  இதை வழமையாகவே செய்யலாம் மாதத்திற்க்கு சில நாட்கள் முழுமையாக குடும்பத்திற்க்கு என்று...

ஆனால் போகும் போது leave சொல்லிட்டு போகனும்....

//”எழுதினால் மட்டுமே கவனிக்கப்படுவேன் என்று உணர்ந்து கொண்ட பிறகு இன்னமும் வேகமாக எழுத வேண்டும் என்று விருப்பம் தலையெடுக்கிறது.”//

எப்படியோ எழுதினால் நல்லது தான்.

சாரு அவர்களின் கூடங்குளம் பேச்சு வெளியான அன்றே உங்கள் fb status, blog பார்த்தேன், ஏதேனும் updates இருக்கிறதா என்று, நீங்கள் அமைதியாக இருக்க வாய்ப்பேயில்லையே என்று யோசித்தேன்.  Anyway, good come back,  சாருவோடு மீண்டும் ஆரம்பித்து இருக்கிறீர்கள், இப்படி தான் இருக்கனும், தொடரட்டும் உங்கள் சீரிய பணி.  Continue with the same spirit as before.

உங்கள் புத்தகம் எனக்கு கிடைக்கவில்லை.  உங்களிடம் stock இல்லை என்று நினைக்கிறேன், online ல் எப்படி வாங்குவது என்று சொல்லவும், கதிர்பாரதியின் புத்தகமும், இரண்டும் எப்படி வாங்குவது என்று தெரியப்படுத்தவும்.

கல்பனா

பவர்ஸ்டாரும், சாரு நிவேதிதாவும் பின்னே ஞானும்


“நீ இல்லன்னா குடியா முழுகிப் போயிடும்” இதைத்தான் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். நம்மை நாமே டூமீலாகவும், அப்பாடக்கராகவும் நினைத்துக் கொள்வதைவிடவும் பெரிய பரிதாபம் எதுவும் இருக்க முடியாது.  அப்படி நினைத்துக் கொள்வது எல்லோருக்கும் சாத்தியமும் இல்லை. ஆனால் சாரு நிவேதிதாவுக்கு அது சாத்தியம். நம்பிக்கை இல்லாதவர்கள் நேற்றைய தினமலரை வாசிக்கலாம். கூடங்குளம் போராட்டம் குறித்து குதித்து குதித்து விமர்சனம் செய்திருக்கிறார். உதயகுமார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று சொல்ல மாட்டேன். ஆனால் உதயகுமாரையும், அணு உலை எதிர்ப்பு போராட்டத்தையும் விமர்சனம் செய்ய சாருவுக்கு என்ன அருகதை இருக்கிறது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

சாரு எப்படியோ போகட்டும். என் பிரச்சினைக்கு வருகிறேன். நானும் என்னை ‘பெரியவனாக’ நினைத்துக் கொள்வேனோ என்று அவ்வப்பொழுது பயம் தொற்றிக் கொள்கிறது. அதுவும் நிசப்தத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் சில மாதங்களாக இந்த பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஆனால் இது வெறும் ‘பில்ட் அப்’தான் என்பதை சுயமாக நிரூபித்துக் கொள்ள வேண்டாமா? ஒரு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்ததிலிருந்து எட்டு நாட்களுக்கு திடீர் ப்ரேக். வெறும் எட்டு நாட்கள்தான். ஆனால் என்னையும் அறியாமல் உருவாகியிருந்த வெற்றுப் பெருமையை இந்த நாட்களில் சோதித்துக் கொள்ள முடிந்தது. எழுதவில்லையென்றால் சீந்த நாதி இல்லை என்பதுதான் உண்மை. ஒருவர் மட்டும் ‘ஏன் எழுதவில்லை’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கும் பதில் அனுப்பவில்லை. இந்நேரம் அந்த ஒரே ஒருவரும் ‘எப்படியோ நாசமா போ’ என சபித்திருப்பார்.

எதற்காக எழுதவில்லை? ஆயிரம் சாக்கு போக்குகளை சொல்ல முடியும். ஆனால் உண்மையான காரணம் மனசு சரியில்லை. மனசு சரியில்லாமல் போவதற்கு ‘லவ் ஃபெயிலியர்’ மட்டுமே காரணமாக இருக்க வேண்டியதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அலுவலகத்தின் அதிகப்படியான ஆணிகளிலிருந்து, எக்கச்சக்கமாக கொட்டு உதிரம் வரைக்கும் எது வேண்டுமானாலும் மனசை சரியில்லாமல் ஆக்கக் கூடும். ஒரு வாரமாக எழுதக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். வலிந்து எடுத்த முடிவு. சில நேரங்களில் கை அரித்தது. ஆனால் எழுதக் கூடாது என்ற வைராக்கியம் தொடர்ந்து கொண்டிருந்தது. எழுதுகிற நாட்களில் தூங்குவதற்கு இரவு இரண்டு மணி கூட ஆகும் அல்லது சீக்கிரமாகத் தூங்கினால் விடிந்தும் விடியாமலும் லேப்டாப்பை திறந்து வைத்துக் கொள்வேன். நாள் முழுவதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது யோசித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும். ஆனால் அதுவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆயிரம் பேராவது ஒவ்வொரு நாளும் வாசிக்கிறார்கள் என்பது உற்சாகமளிப்பதாக இருந்தது. அந்த உற்சாகம்தான் சென்ற வாரத்தில் ஒரு நாள் உடைந்து போயிருந்தது. ஆனாலும் இந்த ஒரு வாரமாக ஒன்பது மணிக்குத் தூங்கி காலையில் ஏழு மணிக்குத்தான் எழுந்தேன். ஒரு விதமான சுதந்திரம் அது. தூங்கிய பத்து மணி நேரங்களும் ஒரு கவிதையைப் போல எனது கைகளுக்குள் சுருண்டு மகன் தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு விதமான வரம் இது. இதற்கு இன்னொரு பெயரும் உண்டு- சோம்பேறித்தனம்.

சுய பரிசோதனை, மனசு சரியில்லை என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நான் ஒரு அன்றாட காய்ச்சி என்பதை சுய பரிசோதனை நிருபித்துவிட்டது. எழுதினால் மட்டுமே கவனிக்கப்படுவேன் என்று உணர்ந்து கொண்ட பிறகு இன்னமும் வேகமாக எழுத வேண்டும் என்று விருப்பம் தலையெடுக்கிறது.

இந்த அன்றாட காய்ச்சியின் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்காவிட்டாலும் 
ஏதோ ஒரு மூலையிலிருந்து யாரோ ஒருவர் வாசிக்கிறார் என்பதே கால்களுக்கு நடனத்தைச் சொல்லித் தந்துவிடுகிறது. அப்படித்தான் மின்னஞ்சலில் வந்த இந்த நிழற்படமும்.  Dial For Books இல் ஆர்டர் செய்து புத்தகத்தை வாங்கி அந்த படத்தை அனுப்பி வைத்திருக்கிறார். இதெல்லாம் அவ்வளவு பெரிய விஷயமா? என்று யாராவது கேட்கலாம்.  எனக்கு பெரிய விஷயம்தான். முகம் தெரியாத ஒரு மனிதருக்கு எனது புத்தகத்தை வாங்கி அதை நிழற்படம் எடுத்து அனுப்பி என்னை உற்சாகப்படுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஆனால் செய்திருக்கிறார்.  இந்த உற்சாகத்தில்தான் எழுதுவதன் கியரை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.  இந்த சுயகதை வண்டியை தற்சமயத்திற்கு ‘பார்க்கிங்கில்’ நிறுத்துகிறேன்.


முதல் பத்தியில் சாரு எப்படியோ போகட்டும் என்று சொல்லிவிட்டாலும் அவ்வளவு ஈஸியாக விட்டுவிட முடியவில்லை. சாரு உண்மையிலேயே பரிதாபகரமான ஜீவனாகத்தான் தெரிகிறார். அவரது எந்த அரசியலும் அவரை காமெடியனாக மாற்றிவிடுகிறது. சின்மயிக்கு ஆதரவு, உதயகுமாருக்கு எதிர்ப்பு, நித்யானந்தாவுக்கு ஜால்ரா என சாரு எதைக் கையில் எடுத்தாலும் அது கடைசியில் பல்லிளித்துவிடும். கவனித்து பார்த்தால் சாருவுக்கு சமூகம் சார்ந்த எந்த நிலைப்பாடும் கிடையாது. எந்த விவகாரம் தனக்கு அதிகபட்ச விளம்பரத்தை தேடித்தருமோ அந்த விவகாரத்தை கையில் எடுப்பார். அவ்வளவுதான். அந்த விவகாரத்தில் எப்படி பேசினால் பலரும் சாணியடிப்பார்களோ அப்படி பேசுவார். இதுதான் சாரு. சாரு எழுதத் தெரிந்த எழுத்தாளன். ஆனால் எழுத்தாளன் என்ற பிம்பத்தை கைவிட்டு தன்னை காமெடியனாக வடிவமைத்துக் கொள்கிறார். தமிழ் சினிமாவுக்கு பவர்ஸ்டார் போலத்தான் நவீன இலக்கியத்துக்கு சாரு நிவேதிதா. தன்னை காமெடியனாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள் என்பதை பவர் ஸ்டார் தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறார். அது அவரின் பலமாக இருக்கிறது. ஆனால் சாரு தன்னை ஒரு நாயகனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அதுதான் இவருடைய பலவீனமாக இருக்கிறது.

Jan 8, 2013

நடிகர்களின் உண்ணாவிரதமும் நடிகையுடனான நேர்காணலும்


வருடா வருடம் Proof of income tax ஐ காட்டச் சொல்லி விடுகிறார்கள். ஆண்டு தொடக்கத்திலேயே  “இந்த வருடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு முதலீடு செய்யப் போகிறேன் அதனால் அந்த ஒரு லட்சத்திற்கு வரி விலக்கு கொடுத்துவிடுங்கள்” என்று கெஞ்சியிருந்தேன். ஆண்டு இறுதியாகிவிட்டதல்லவா? கணக்கு காட்டச் சொல்லி தோளில் துண்டை போட்டு இறுக்குகிறார்கள். வருடம் முழுவதும் லாட்டரியடித்ததால் இப்பொழுது மொத்தமாக முப்பத்தியேழாயிரத்திற்குத்தான் கணக்கு காட்ட முடிந்தது. மிச்சமிருக்கும் பணத்திற்கு பைசா குறைவில்லாமல் வரிபிடித்து என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வார்கள். வாழ்க நிதியமைச்சகம்.

இந்த ப.சிதம்பரம், ஓ.பன்னீர்செல்வம் எல்லாம் இப்படி ‘சின்சியராக’ கணக்கு காட்டுவார்களா என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களாவது நிதியமைச்சர்கள்தான். தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனானப்பட்ட நிதியரசர்களே அலறுகிறார்கள். ரஜினியும், விஜய்யும், சூர்யாவும் நேற்று சோறு தண்ணீர் இல்லாமல் விட்டத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். தர்மபுரி சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமர்ந்துவிட்டார்களோ என்று அதிர்ச்சியாகிவிட்டது. நல்லவேளை அப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவர்களுக்கு தெரியவில்லை போலிருக்கிறது. இவர்கள் மோட்டுவளையை வெறித்துக் கொண்டிருந்ததற்கு வேறு காரணம்.

பத்து லட்சத்திற்கு மேல் வருமானம் இருக்கும் சினிமாக்காரர்கள் 12.3 சதவீதத்தை சேவை வரியாக கட்ட வேண்டும் என்று இந்த அரசாங்கம் சொல்லிவிட்டது. இந்த அரசாங்கத்திற்கு எத்தனை தெனாவெட்டு பார்த்தீர்களா? நம்மை உய்விக்க வந்த கதாநாயகர்கள் மீதே கை வைத்திருக்கிறது. சிகரெட் வாங்குவதாக இருந்தால் கூட தியேட்டர் வாசலில் பிச்சையெடுக்கும் இந்த ஏழைகளிடம் வரி கட்டச் சொன்னால் எங்கே போவார்கள் என்று சற்றேனும் யோசித்திருக்க வேண்டும். பேய் ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும்.

உணவு விடுதிக்கு சேவை வரி விதித்தார்கள். பொறுத்துக் கொண்டோம். முப்பது ரூபாய் கொடுத்து சவரம் செய்யும் சலூன் கடைக்காரனுக்கு சேவை வரி விதித்தார்கள். அதையும் ஏற்றுக் கொண்டோம். இப்பொழுது கங்கை காவிரி இணைப்புக்கு ஒரு கோடி ரூபாயை வழங்கிய வள்ளலுக்கும், ஜட்டி விளம்பரத்திலிருந்து சமையல் பொடி விளம்பரம் வரைக்கும் நடித்து ஓடாய்த் தேயும் சமூகப் போராளிக்கும் வரிவிதிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கும் உங்களுக்கும் அழகாகவா இருக்கிறது? பொங்கி பொசுங்கினால்தான் மனம் சாந்தியடையும் போலிருக்கிறது.

நாம் பொங்குகிறோமோ இல்லையோ தினத்தந்தி பொங்கியிருக்கிறது. பெங்களூரில் விடிந்தும் விடியாமலும் வரும் பத்திரிக்கை தினத்தந்திதான். கொஞ்ச நாட்களுக்கு தினமணி வாங்கிக் கொண்டிருந்தோம். பக்கமும் குறைவு, சுவாரசியமும் குறைவு என்பதால் அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதனால் ஜாகையை தினத்தந்திக்கு மாற்றினோம். கற்பழிப்பாக இருந்தாலும் சரி, கொலையாக இருந்தாலும் சரி- அந்த இடத்தில் நிச்சயம் தினத்தந்தி நிருபர் இருந்திருப்பார். நிருபர் இருந்தாரோ இல்லையோ, நம்மை அப்படி நம்ப வைத்துவிடுவார்கள். அந்த அளவிற்கு பில்ட் அப் கொடுத்து செய்திகளை எழுதுவதால் அப்பாவுக்கு தந்தியை மிக பிடித்து போய்விட்டது. இந்த ஊரில் டி.ஏ.ஷரவணா போன்ற தொழிலதிபர்கள் ‘லம்ப்’பாக கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது. தினமும் நிழற்படத்துடன் அவர்களைப் பற்றிய செய்திகளை பிரசுரித்துவிடுவார்கள். அவர்கள் முகத்தை பார்க்க வேண்டிய துர்பாக்கியம் என்ற ஒரு வரியைச் சேர்த்துவிடலாம்தான். ஆனால் பாருங்கள் அவர்தான் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மாநில பொதுச்செயலாளர். அதுவும் இல்லாமல் பெங்களூரிலேயே அமர்ந்து கொண்டு அரசியலில் பலம் வாய்ந்த ஒரு ஆளை கலாய்ப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லதில்லை. 

யாரையாவது நக்கலடிக்க வேண்டும் என்று கையும் வாயும் அரித்தால் புள்ளை பூச்சி மாதிரி இருக்கும் இலக்கியவாதிகளை இழுத்து கபடி விளையாடலாம். நல்ல டைம்பாஸாக இருக்கும். அவர்களும் ஏதாவது கத்திவிட்டு போய்விடுவார்கள். யாருக்கும் எந்தச் சேதாரமும் இருக்காது. ஆனால் அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் எல்லாம் ரிஸ்க். சினிமாக்காரர்கள் என்றவுடன் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என நினைத்தது ஞாபகம் வருகிறது. நடிகை பிரியாமணியுடன் ஒரு நேர்காணல் நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. சவுண்ட்கேமரா என்ற சினிமா தளத்திலிருந்து நேர்காணலுக்கான கேள்விகளை அனுப்பியிருந்தார்கள். ப்ரியாமணி பெங்களூரில்தான் இருக்கிறார். எங்கள் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம்தான். பதில் தர முடியுமா என்றவுடன் பந்தா இல்லாமல் பேசினார் முத்தழகு. அவரிடம் கேட்க எனக்கு வேறு கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அதை வேறொரு நேர்காணலுக்காக கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அடுத்து ஷெரின், பாவனா என்று பெங்களூர் வாழ் நடிகைகளின் லிஸ்ட்டை அனுப்பியிருக்கிறார்கள்.

இன்னொரு இணையத்தளத்திற்காக தியோடர் பாஸ்கரனை நேர்காணல் செய்யலாம் என்ற திட்டம் பல மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது.  அவரும் பெங்களூரில்தான் இருக்கிறார். ப்ரியாமணியை விட சினிமா குறித்து நிறைய பேசுவார். ஆனால் அவரை விட்டுவிட்டு ப்ரியாமணியை நேர்காணல் செய்தது கொஞ்சம் குற்றவுணர்ச்சியைத் தருகிறது. ஆனால் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற கீதாசாரம் காதில் அசீரீரி கணக்காக ஒலிக்கிறது.

 எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. தினத்தந்திக்கு வருவோம். நேற்றைய உண்ணாவிரதம்தான் தந்திக்கு தலைப்புச் செய்தி. வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார்கள். விஜய், விக்ரம், பாலச்சந்தர் என சகலரும் வண்டி வண்டியாக பேசியிருக்கிறார்கள். ஒரு முக்கியமான விஷயத்துக்காக நடிகர்களும், மீடியாவும் கலந்து கும்மியடிப்பதை நினைத்து மகிழலாம். இன்றைய நாளை இனிதே துவங்க நல்லதொரு காரணம் கிடைத்திருக்கிறது.