Sep 30, 2012

மயிலிறகுகள்

No comments:
அழியாத கோலங்கள்:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படும் இந்த வலைப்பதிவில் இதுவரை 'தீராக் காதல்' என்னும் நாவலின் அத்தியாயங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுவரை வெளிவராதது இந்த நாவல்.

ஒரு த்ரில்லர் கதையை நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்லும் மீசை முனுசாமியின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துவிடுகிறேன். உண்மையில் மீசை முனுசாமி என்பது புனைப்பெயர். அவர் ஒரு பத்திரிக்கையாளர் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பிற தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்ததில்லை.

விறுவிறுப்பாக ஒரு எழுத்தை கொண்டு செல்வது சாதாரணம். இதை எழுத்தில் தனக்கு இருக்கும் பயிற்சியின் மூலம் எழுத்தாளன் செய்துவிடலாம். ஆனால் கதைகளுக்குள் இருக்கும் தகவல்கள், அனுபவங்கள் போன்றவை அந்த எழுத்தை உயிர்ப்புடையதாக மாற்றுகின்றன. அதை மீசை முனுசாமி சாதாரணமாக செய்கிறார். 


நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என ரவுண்டு கட்டி அடிக்கும் அபிலாஷின் வலைத்தம். சமகால இளம் எழுத்தாளர்களில் இவரிடம் இருக்கும் தீவிரத்தன்மை பிரமிப்பூட்டக் கூடியது. அந்த அளவுக்கு தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் எழுதி வருகிறார். 

கிரிக்கெட் குறித்தான விரிவான கட்டுரைகள் தமிழில் அபூர்வம். அந்தக் குறையை அபிலாஷ் நிவர்த்தி செய்கிறார். கிரிக்கெட்டின் நுட்பங்கள், அதில் இருக்கும் அரசியல் என சகலத்தையும் அலசும் கட்டுரைகளை இந்த தளத்தில் வாசிக்கலாம். ஹைக்கூ மொழிபெயர்ப்பும் நிறைய செய்திருக்கிறார் அபிலாஷ்.

இலக்கிய விமர்சனமும் இவரது எழுத்துக்களில் கிடைக்கிறது. 

அபிலாஷின் ஜப்பானிய ஹைக்கூ மொழிபெயர்ப்பு, கிரிக்கெட் குறித்தான கட்டுரைகள், கால்கள் (நாவல்) ஆகியன நூல்களாக வெளிவந்திருக்கின்றன.


சந்தோஷ் முதன்மையாக ஓவியர். உயிர்மை, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களில் வெளியான பல புத்தகங்களின் அட்டைப்படங்கள் இவரது கைவண்ணத்தில் வெளியானவை. இப்பொழுது பதிப்பகத்துறையை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு விளம்பர உலகில் படம் காட்டிக் கொண்டிருக்கிறார். இவர் ஓவியம் மட்டும்தான் வரைவார் என நினைத்துக் கொண்டிருந்தால் இவரது வலைப்பதிவு பெரும் அதிர்ச்சி. இன்ப அதிர்ச்சிதான்.

அசால்ட்டான மொழியில் தன் அனுபவங்களை எழுதிவிடுவதில் சந்தோஷ் கில்லாடி. நுட்பமாக கவனித்தால் இந்த எழுத்துக்களுக்குள் சிறுகதைக்குரிய தன்மை ஒளிந்திருக்கும். நகைச்சுவையும் பிரமாதப்படுத்தும். அவ்வப்போது சிக்ஸர் அடித்துவிட்டு காணாமல் போய்விடுகிறார். நின்று அடித்தால் செஞ்சுரியே அடிப்பார். அப்படியொரு தில்லாலங்கடி இந்த சந்தோஷ்.

தந்துகி:

மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர், களப்போராளி ஆதவன் தீட்சண்யாவின் வலைத்தம் இது. தற்பொழுது ஓசூரில் வசிக்கிறார். இவரது கூர்மையான சமூக விமர்சனங்களுக்கும், அங்கத எழுத்திற்கும் நான் ரசிகன். இவர் ஓசூரைப் பற்றி என் விகடனில் எழுதிவரும் கட்டுரைகள் மிக அதிக அளவிலான வாசக ஈர்ப்பை பெற்றிருக்கின்றன.

இவரது எழுத்துக்கள் இந்தத் தளத்தில் வகைப்படுத்தப்படாமல் இருக்கின்றன என்பது குறை.

கவின்மலர்:

கவிஞர் கவின்மலரின் வலைத்தளம். இவரது கவிதைகளையும், சிறுகதைகளையும், சமூக உணர்வு சார்ந்த கட்டுரைகளையும் இந்தத் தளத்தில் வாசிக்க முடிகிறது. ஆனந்த விகடனில் பணியாற்றும் கவின்மலரின் எழுத்துக்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடிய வீச்சினைக் கொண்டவை.

சமீப காலமாக விகடனுக்காக எழுதிய கட்டுரைகளை தனது தளத்தில் பிரசுரிக்கிறார். வலைப்பதிவுக்கென பிரத்யேகமாக எழுதுகிறாரா எனத் தெரியவில்லை.

கண்ணாடிக் கிணறு:

கவிஞர் கடற்கரய்யின் வலைப்பூ. இவர் குமுதம் குழுமத்தில் பணியில் இருக்கிறார்.  இவரது கவிதைகள், இவர் செய்த நேர்காணல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், அனுபவங்கள் என பரவலான வாசிப்பு அனுபவத்தை தரும் தளம் இது.

கே.பாலமுருகன்:

மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன், சிறுகதை எழுத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்து வருபவர். அவரின் வலைத்தளம் இது. மலேசிய வாழ்க்கையை அசலாக பதிவு செய்யும் பாலமுருகனின் எழுத்துக்கள் வரலாறு, சமூகம், புத்தக விமர்சனங்கள், குறுநாவல், கவிதைகள் என பயணம் செய்கின்றன. மலேசிய தமிழ் இலக்கியத்தில் மிக ஆக்கப்பூர்வமான உரையாடலை முன்னெடுக்கும் சில இளைஞர்களில் பாலமுருகனுக்கு முக்கிய இடம் என்பதாலேயே அவர் மீது மரியாதை கூடுகிறது.

மாற்றுப்பிரதி:

ஈழத்துக்கவிஞர் றியாஸ் குரானாவின் வலைப்பதிவு. வலைப்பதிவின் பெயருக்கேற்றபடி கவிதையில் மாற்றுப்பிரதியை உருவாக்குவதில் முக்கியமான கவிஞர். இதுவரை கவிதை என முன்வைக்கப்பட்டதை கலைத்துப்போட்டு விளையாடுகிறார். நவீன கவிதையில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இந்தக் கவிதைகள் புரியாதது போன்ற பிம்பத்தை உருவாக்கக் கூடும். ஆனால் இந்த புரியாததன்மையே இவரது கவிதைகளின் காந்த சக்தி. திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்யும் வித்தையை நிகழ்த்துகிறது.

தீபச்செல்வன்:

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நேரடி சாட்சியம் தீபச்செல்வன். இரத்தமும் சதையுமாக மண்ணுக்குள் புதைந்து போன மக்களின் வலிகளையும், வேதனைகளையும் தன் கவிதைகளின் வழியாக கண் முன் நிறுத்தும் இந்த ஈழத்துக்கவிஞனின் வலைத்தளம் இது. தொடர்ச்சியான எழுத்துக்களின் மூலமாக ஈழத்து இலக்கியத்தின் தடத்தில் தனக்கான அடையாளத்தை அழுந்தப் பதிக்கிறார்.


கவிதைகளுக்குள் கதைகளைச் சொல்வதன் மூலமாகவும், விசித்திரமான கவிதைச் சித்திரங்களினாலும் கவனம் பெறக்கூடிய கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் கதிர்பாரதியின் தளம். இவரது கவிதைகளின் புதிய பாதை ஆச்சரியமூட்டுவதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கின்றன. "கி.மு. இரண்டாயிரத்தில் கேரட்கள் ஊதா நிறத்தில் இருந்தனவாம்" பிறகு ஏன் நிறம் மாறின என்பதை கதிர்பாரதியின் கவிதையின் மூலமாக அறிந்துகொள்ளலாம். 


ஒரு காலத்தில் காதல்கவிதைகளின் மூலமாக பல இதயங்களை கொள்ளையடித்தவர் நிலாரசிகன். ஏதோ தெய்வகுத்தம் போல இப்பொழுது நவீன கவிதைகளின் பக்கம் ஒதுங்கிவிட்டார். இவரது கவிதைகளில் இருக்கும் மென்மையும், ரொமாண்டிசமும் கட்டிப்போடுபவை. 361டிகிரி சிற்றிதழை நடத்திவருகிறார். புகைப்படைக்கலைஞனாகவும் படம் காட்டுகிறார்.


நேசமித்ரன் தனது மொழியில் செய்யும் வித்தைக்காக அவரது கவிதைகளின் நேசன் நான். இவரது கவிதைகள் புரியாதது போல முதல் பார்வைக்குத் தோன்றக் கூடும்.  அது உண்மையில்லை. கவிதையில் ஒரு புள்ளியிருக்கும். அந்தப்புள்ளியைத் தட்டினால் கவிதையின் கதவு திறந்துவிடும். கதவுக்கு பின்னால் வேறொரு உலகம் இருக்கும். தட்டிப்பாருங்கள்.


வேல்கண்ணன் எனக்குப்பிடித்த இன்னொரு கவிஞன். சென்னையில் வசிக்கிறார்.மிகச்சிறந்த கவிதை அனுபவத்திற்குள் அழைத்துச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் வைத்துக்கொண்டு மிகக் குறைவாக எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கவிஞனின் தளம் இது.


கவிதையை வாசித்துவிட்டு "உர்ர்" என்று இருக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை தூக்கிப்போட்டு உடைத்தவர் இசை. மிக எளிமையான கவிதையை அத்தனை அங்கதத்துடன் கொடுக்க இசையால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். வாய்விட்டு சிரிக்கவைத்தாலும் கவித்துவத்தில் எந்தவித காம்ப்ரமைஸ்ஸும் செய்துகொள்ளாத கோயமுத்தூர் கவிஞனின் வலைத்தளம் இது.


சமகாலக் கவிஞர்களில் கவிதை பற்றிய தொடர்ச்சியான உரையாடலை முன்னெடுக்கும் இளங்கோ கிருஷ்ணனின் வலைத்தளம். இவர் கோயமுத்தூரில் வசிக்கிறார். தனக்கென மொழியையும், கவிதை வெளிப்பாட்டுமுறையையும் விரைவாக கண்டடைந்த கவிஞர். இவரது சிந்தனையும், வாசிப்பனுபவமும் எப்பொழுதும் என்னை ஆச்சரியமூட்டுகிறது.கவிஞன், சிறுகதைக்காரன் தூரன் குணாவின் வலைத்தளம். கவிதை, கதை தவிர்த்து அனுபவங்கள், வாசிப்பு என எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் கொஞ்சமே கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறார். தூரன் குணாவை நினைக்கும் போதெல்லாம் ஓட்டிற்குள் அடங்கியிருக்கும் ஆமையின் சித்திரம் மனதில் தோன்றும். அது பொருத்தமான சித்திரம் என்று நினைத்துக் கொள்வேன்.


ஈழத்து காட்டாறு. சமூகம், இலக்கியம், அரசியல், கவிதை, கதை என அடித்து நொறுக்குகிறார். இந்தியாவிற்கும், கனடாவிற்கும், ஈழத்திற்குமாக றெக்கை கட்டிப் பறாக்கும் தமிழ்நதி, சமீபமாக வலைப்பதிவில் மிகக் குறைவாகவே எழுதுகிறார்.


கவிஞர் ச.முத்துவேலின் இணையதளம். பெரும்பாலும் கவிதைகளால் நிறைந்திருக்கிறது. இவரும் மிகக் குறைவாகவே எழுதுகிறார். அந்தப்பக்கம் போனால் நிறைய எழுதச் சொல்லிவிட்டு வாருங்கள்.


தீவிரமான வாசிப்பும், கூர்மையான பார்வையுமுடைய பாலசுப்ரமணியனின் வலைப்பூ.  இவர் அதிகம் எழுதுவதில்லை என்று குறைபடுபவர்களில் நானும் ஒருவன்.


சமீபத்தில் அதிக கவனத்தைக் கோரும் கவிதைகளை எழுதி வரும் ஆறுமுகம் முருகேசனின் கவிதைகளால் நிரம்பிய தளம் இது. ஈராக்கில் வசிக்கிறார். அன்பினாலும், பிரியங்களினாலும், துக்கங்களினாலும் சொல்ல முடியாத உணர்ச்சிகளாலும் நிரம்பிய கவிதைகள் இவை. கவிதைக்கான புதிய தளங்களை மிக இயல்பாக கண்டடைவது ஆறுமுகத்தின் பலமாக இருக்கிறது.

இன்னமும் இணையதளங்களிலேயே எழுதிக் கொண்டிருக்கிறார். சிற்றிதழ்களின் பக்கம் தனது பார்வையை திருப்ப வேண்டும் என விரும்புகிறேன்.


குட்டி குட்டியான கவிதைகளால் கட்டிப்போடும் நந்தாவின் வலைப்பூ. ஹைக்கூக்கள் நந்தாவுக்கு இயல்பாக கைவரப்பெற்றிருக்கிறது.


கவிஞர், பதிப்பாளர், சிறுபத்திரிக்கையாளர், வழக்கறிஞர் என்னும் பன்முக ஆளுமையான பொன்.வாசுதேவனின் வலைத்தளம். அதிகமாக எழுதுங்கள் வாசு. இதற்கு அவர் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.


மும்பையில் வாழும் அனுஜன்யாவும் நினைத்தால் எழுதுபவர் இல்லாவிட்டால் துறவறம் பூண்டுவிடுவார். இவரது உரைநடை வித்தைகள் சுவாரசியமானது. ஒரு எட்டு இந்த தளத்திற்கு போய்வாருங்கள்.


எனக்கு பிடித்த கவிஞரும், முன்னோடியுமான சுகுமாரன் அவர்களின் வலைத்தளம் இது. திருவனந்தபுரத்தில் வாழும் கவிஞர் இந்தத்தளத்தில் பெரும்பாலும் தனது கவிதைகளை பதிக்கிறார். தற்பொழுது அவர் எழுதிவரும் வெலிங்டன் நாவலின் சில அத்தியாயங்களையும் இங்கு வாசிக்க முடியும். ஆனால் தொய்வில்லாமல் எழுதிவரும் சுகுமாரன் அவர்களின் எழுத்துவேகத்துக்கு வலைத்தளத்தில் வாசிக்க கிடைப்பது புல்லுக்கு பொசியும் நீர் அளவுக்குத்தான்.


மூத்த கவிஞரான கலாப்ரியாவின் தளம். கட்டுரைகள், அனுபவங்கள், கவிதைகள் என வாசிக்கக் கிடைக்கின்றன. அனுபவப்பதிவுகளில் இருக்கும் சுவாரசியத்திற்காகவே இந்தத் தளத்தை தொடர்ந்து வாசிக்கலாம்.


எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் வலைத்தளம். தற்பொழுது திருப்பூரில் வசிக்கிறார். கனவு என்னும் சிறுபத்திரிக்கையை நடத்திவரும் இவரின் சிறுகதைகள், சினிமா அனுபவங்கள், வாழ்வியல் அனுபவங்கள் என பல எல்லைகளைத் தொடும் எழுத்துக்களின் சங்கமம் இந்த வலைப்பதிவு.


சிறுகதை எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் வலைப்பதிவு. சில சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவ்வப்போது இவர் பதிவிடும் சிறுகதைகளுக்காக இந்தத் தளத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கலாம்.


விளம்பரத்துறையில் பணியாற்றும் ராஜா சந்திரசேகரின் கவிதைகளால் நிரம்பியிருக்கும் வலைப்பூ. பெரும்பாலும் சிறு கவிதைகள்தான். ஆனால் தனக்குள் முடிச்சினை வைத்திருக்கும் கவிதைகள். மேஜிக்கல் தன்மையுடைய கவிதைகளை  இப்பொழுது அதிகம் எழுதிக் கொண்டிருக்கிறார்.


நவீன கவிஞர்கள் வரிசையில் முக்கியமான கவிஞரான ராணிதிலக்கின் வலைத்தளம் இது. விக்கிரமாதித்யன் ராணி திலக் பற்றி எழுதிய கட்டுரை, ராணிதிலக்கின் நேர்காணல் போன்றவை முக்கியமான பதிவுகள். கவிதைகள் பற்றிய தனது விமர்சனங்களை சப்தரேகை என்ற தொகுப்பாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.


கவிஞர் மண்குதிரையின் வலைப்பூ. தற்சமயம் சென்னையில் வசிக்கிறார். அனுபவம், கவிதை, விமர்சனங்கள் என நிரம்பியிருக்கும் தளம். இவரது கவிதைத் தொகுப்பான புதிய அறையின் சரித்திரம் தொகுப்புக்கு இந்த ஆண்டிற்கான நெய்தல் விருது கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள் மண்குதிரை.

[வலைச்சரம் என்ற வலைப்பதிவில் எழுதிய பிடித்தமான வலைப்பதிவுகளைப் பற்றிய குறிப்புகளின் தொகுப்பு இது. இன்னமும் எனக்குப் பிடித்த நிறைய வலைப்பதிவுகள் இருக்கின்றன. அவை உடனடியாக நினைவில் வரவில்லை என்பதே உண்மை. இதை அவ்வப்போது தொடர்ச்சியாக செய்யலாம் என்று தோன்றுகிறது. நிசப்தத்தில் செய்யலாம்]

Sep 29, 2012

பேசலாம்

6 comments:

2004 ஆம் ஆண்டு படிப்பிற்காக சென்னை வந்திருந்த காலகட்டம். அப்பொழுது சினிமாவும், இலக்கியமும் மட்டுமே தேடலாக இருந்தது. சினிமா என்றால் பாடலாசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவு. அதுவரையிலும் எழுதி வைத்திருந்த கவிதைகள் அந்த கனவுத் தீக்கு பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தன.

 வைரமுத்துவும், மேத்தாவும் மட்டுமே இலக்கிய கர்த்தாக்கள் என்ற நினைப்பு ஆக்கிரமித்திருந்த அந்த நாட்களில் சினிமாக்கவிஞர்களை தேடிப்பிடிப்பதுதான் ஞாயிற்றுக்கிழமைகளின் பொழுதுபோக்காக இருந்தது. கங்காரு தன் குட்டியை சுமந்து செல்வது போல எழுதி வைத்திருக்கும் கவிதைகள் அனைத்தையும் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கம். பாடலாசிரியர்களிடம்  என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வாஞ்சையோடு அந்த கவிதைத் தாள்களை நீட்டுவேன். 

அப்படியான ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மாலை வேளையில் தமிழச்சி தங்கப்பாண்டியனின் புத்தக அறிமுக விழா ஒன்று மைலாப்பூரில் நடந்து கொண்டிருந்தது. யுகபாரதியை சந்திக்க செல்லவிருக்கும் திட்டத்தை திசை மாற்றி விழாவில் இரண்டாவது வரிசையில் அமர்ந்து கொண்டேன். முந்தைய வரிசையில் மனுஷ்ய புத்திரன் அமர்ந்திருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடனடியாக நிகழ்ச்சி தொடங்கிவிட்டதால் அவருடன் அதிகம் பேச முடியவில்லை. தன்னைச் சந்திக்க வருமாறு  உயிர்மை முகவரியைக் கொடுத்தார். 

அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் வழக்கம் போலவே நான் எழுதி வைத்திருந்த கவிதைகளை தூக்கிக் கொண்டு அவரை சந்திக்க சென்றிருந்தேன். ஆனால் அது வழக்கமான சினிமாக் கவிஞர்களுடனான சந்திப்பு போன்றில்லை. என் கவிதைகளை புரட்டி பார்த்தவர் எதுவும் சொல்லவில்லை. பசுவய்யாவின் 107 கவிதைகள், சுகுமாரன், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைத் தொகுப்புகளை கொடுத்து வாசித்துவிட்டு வரச் சொன்னார். முதலில் இந்தக் கவிதைகளில் எதுவுமே புரியவில்லை. ஆனால் அந்த புரியாததன்மைதான் வெறியூட்டியது. கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அது ஒரு பித்து நிலை. அந்தக் காலகட்டத்தில் என்னைச் சுற்றி நடந்தவைகளை கிஞ்சித்தும் இப்பொழுது ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நவீன கவிதையுலகின் கதவுகள் மெல்லத் திறக்கத் துவங்கின. என் பழைய கவிதைகள் என்னிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டன.  அதற்கு பிறகு அந்தத் கவிதைகள் எழுதப்பட்டிருந்த தாள்களை தேடவே இல்லை.

ஆனால் நவீன கவிதைகளில் நான் புரிந்து கொண்டவை சரிதானா என்ற குழப்பம் அரித்துக் கொண்டிருந்தது. மனுஷ்ய புத்திரனிடமே கேட்டேன். "கவிதை என்ன சொல்ல வருதுங்கிறது முக்கியம் இல்லை. கவிதையில் நீ என்ன புரிஞ்சுக்கிட்டேங்கிறதுதான் முக்கியம். அதனால நீ எப்படி புரிஞ்சுகிட்டாலும் சரிதான்" என்றார். இனி நவீன கவிதைகள் கைகூடிவிடும் என்ற நம்பிக்கை தொற்றிக் கொண்டது.

நவீன கவிதைகளை எனக்கான அடையாளமாக்கிக் கொள்ள விரும்பியதன் விளைவாகவே வலைப்பதிவு தொடங்க விரும்பினேன். 2005 ஆம் ஆண்டு பிப்ரவரியில் "பேசலாம்" என்ற பெயரில் வலைப்பதிவை தொடங்கி கணினித்திரையில் பெயரை பார்க்கும் போது உலகமே என் காலடியில் இருப்பதான ஒரு உற்சாக பிரமை தொற்றிக் கொண்டது. ஆனால் அது உண்மையாக இருக்கவில்லை. அந்தக்காலகட்டத்தில் வலைப்பதிவில் பிரபலமாக எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலரும் மிகுந்த சிரத்தையுடன் எழுதிக் கொண்டிருந்தார்கள். பத்திரிக்கையாளர் மாலன், பத்ரி, மதி கந்தசாமி, காசி, முத்து தமிழினி, பாலபாரதி, குழலி, தமிழ் சசி, ஐகாரஸ் பிரகாஷ் என்ற பெயர்கள் உடனடியாக நினைவில் வருகின்றன. அவர்களோடு போட்டி போட முடியாத அளவிற்குத்தான் என் எழுத்துக்கள் இருந்தன்.

எனது எழுத்துக்கள் பக்குவமற்ற, முதிர்ச்சியில்லாத வகையினதாக இருந்திருக்கின்றன என்பதை ஆரம்பகால பதிவுகளை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தை தொடர்ந்து சீர்படுத்திக் கொள்ள வலைப்பதிவு உதவியிருக்கிறது. தொடர்ந்து எழுதுவதால் மட்டுமே எழுத்து மேன்மையடைகிறது என்பதை நேரடியாக உணர முடிந்தது. எழுத்தில் இன்றுவரை கடந்திருக்கும் சிறு தொலைவை இந்த வலைப்பதிவுதான் சாத்தியப்படுத்தியிருக்கிறது  என நம்புகிறேன். 

'பேசலாம்' என்ற வலைப்பதிவு இப்பொழுது 'நிசப்தம்' என பெயர் மாறியிருக்கிறது.  பேசலாம் என்றிருந்த போது அதிகம் பேசவில்லை. நிசப்தம் என்றான பிறகு நிறைய எழுத முடிந்திருக்கிறது என்பது நகைமுரண்.

வலைப்பதிவை நான் ஆரம்பித்த காலகட்டத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்பொழுது எழுதுவதில்லை. இடையில் அவ்வப்போது பிரபலமடைந்தவர்கள் பிறகு எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள். சிலர் ஒரே சீராக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வலைப்பதிவு உலகம் ஒரு காட்டாறு. தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. தனக்குள் விழும் சருகுகள், பூக்கள், இலைகள் என சகலத்தையும் அடித்துச் செல்கிறது. தலையுயர்த்தும் பூக்களைப் போலவே சருகுகளும் தலையுயர்த்துகின்றன. ஆனால் பூக்கள் தனக்கான அடையாளத்தை விட்டுச் செல்கின்றன. சருகுகள் காணாமல் போகின்றன.

வலைப்பதிவை ஏழரை ஆண்டுகளாக வைத்திருப்பதில் கொஞ்சம் அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. கொஞ்சம் நட்புகள் கிடைத்திருக்கின்றன, கொஞ்சம் அடையாளமும் கிடைத்திருக்கிறது. 

[வலைச்சரம் என்ற தளத்தில் பிடித்தமான வலைப்பதிவுகள் பற்றிய குறிப்புகளை ஒரு வார காலத்திற்கு எழுதச் சொல்லியிருந்தார்கள். அதன் தொடக்கமாக எழுதிய அறிமுகக் குறிப்பு]

Sep 28, 2012

தனியார் பள்ளிகள் என்னும் கொள்ளிவாய் கூடாரங்கள்

8 comments:


மகனுக்கு அட்மிஷன் வாங்குவதற்கான பெரும் பொறுப்பு என் தலையில் இறங்கியிருக்கிறது. விசாரணைப்படலத்தில் இருக்கிறேன். நேற்றும் ஒரு விசாரணைப்படலம். 

பிரமாண்டமான வரவேற்பறையில் மெல்லிசை ஓடிக் கொண்டிருந்தது. 

"ஹலோ சார்" ஒரு கொஞ்சும்கிளி வரவேற்றாள்.

"பையனுக்கு அட்மிஷன்" வாக்கியத்தை நான் முழுமையாக முடிக்கவில்லை.

"ப்ளீஸ் உட்காருங்க சார்" ஒரு விண்ணப்பத்தை கொடுத்து நிரப்பச் சொன்னாள். விருப்பக் கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டு கர்ம சிரத்தையாக நிரப்பிக் கொடுத்தேன். 

விண்ணப்பத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு "நீங்க என்ன படிச்சிருக்கீங்க?" என்றாள்.

"எம்.டெக். அந்த ஃபார்ம்ல எழுதியிருக்கேன்"

"ஓ..நைஸ்...என்ன ஸ்பெஷலைஷேசன்?" 

"மெக்கட்ரானிக்ஸ்"

"உங்க மனைவி?"

"அவங்க பி.ஈ" என்னை விடுவதாகத் தெரியவில்லை.

"அவங்களும் மெக்கட்ரானிக்ஸா?" 

"ட்ரிப்பிள் ஈ...சாரி...இசிஇ"

கொஞ்சம் திருப்தியடைந்திருப்பாள் போலிருந்தது. 

"அக்டோபர் மூன்றாம் தேதி இண்டர்வியூக்கு அப்பாயிண்ட்மெண்ட்" என்றவள் "நீங்களும் மனைவியும் வந்துடுங்க" என்றாள்.

கொஞ்சம் குழப்பமடைந்து "அட்மிஷன் பையனுக்குத்தானே?" என்றேன்.

தனது மூக்குக்கண்ணாடியின் மேல்விளிம்புக்கும் புருவத்துக்கும் இடையே இருக்கும் சந்து வழியாக பார்வையை செலுத்தியவள் "ஆமாம், அவனுடைய எல்.கே.ஜி அட்மிஷனுக்குத்தான்" என்று குரலைக் கட்டையாக்கினாள். டென்ஷனாகிவிட்டாள் போலிருக்கிறது.

சூழலை சாந்தமாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்திருந்தது. வழிந்துகொண்டே "ஃபீஸ் ஸ்ட்ரக்ச்சரை சொல்லுறீங்களா" என்றேன்.

அவளும் புன்னகைத்தப்படி பட்டியலை அடுக்கினாள். அட்மிஷன் பீஸ், வருடாந்திர கட்டணம், பேருந்துக்கு, ஸ்பெஷல் க்ளாஸூக்கு என வரிசையாகச் சொன்னவள் இடைவெளி விட்ட நேரத்தில் கூட்டிப்பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து இருபதாயிரம் வந்திருந்தது. மூச்சடைத்தது. இதற்கு மேல் இந்த இரும்படிக்கும் பட்டறையில் வேலையில்லை என ஈ ஐவிடவும் வேகமாக வெளியேறினேன்.

                                                                ***

அருகில் இருக்கும் வரத்தூர் ஏரியில் காற்று வாங்கலாம் எனத் தோன்றியது.  தண்ணீருக்குள் விநாயகர் சதுர்த்தி பிள்ளையார்கள் உடைந்தும் நொறுங்கியும் கிடந்தார்கள். அதே ஏரியில் சிலர் துவைத்துக் கொண்டிருக்க இன்னும் சிலர் தூரத்தில் துணியை முட்டி வரைக்கும் தூக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பிள்ளையாரும் பாவம்தான் என நினைத்துக் கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

***

இது இரண்டாவது அடி. சென்றவாரம் சனிக்கிழமை இப்படித்தான் வேறொரு பள்ளியில் அடி வாங்கினேன். எனது டைரக்டரின் மகன் ஒரு பள்ளியில் படிப்பதாகச் சொல்லியிருந்தார். அவரிடம் அதிகம் பேச முடியாது. நேரடியாக பள்ளியில் விசாரித்து பார்க்கலாம் எனச் சென்றிருந்தேன். விடுதியோடு சேர்த்து வருடக்கட்டணம் ஆறேகால் இலட்சம். எப்படியும் என்னால் இங்கு சேர்க்க முடியாது என்று தெரியும். குறைந்தபட்சம் ஏதாவது கேள்வியாவது கேட்க வேண்டும் என மீசை துடித்தது.

"எதனால இவ்வளவு ஃபீஸ்?" என்றேன்.

"ப்ராண்ட் வேல்யூ சார். அது போக நீச்சல் குளத்தில் ஆரம்பித்து சகலமும் இருக்கு" என்றாள். இவள் பஞ்சவர்ணக்கிளி.

"ம்ம்"

"நிறைய சொல்லித்தருவோம். வேற பள்ளியில் இதெல்லாம் எதிர்பார்க்கவே முடியாது"

"என்ன இருந்தாலும் எல்.கே.ஜி தானே மேடம்" என்றேன்.

"இருந்தாலும் நாங்க நிறைய சொல்லித்தருவோம்"

கடுப்பின் உச்சத்தில் இருந்தேன் " என்ன நிறைய சொல்லித்தருவீங்க? ஏரோப்ளேன் ஓட்ட சொல்லித்தருவீங்களா?" - சிரிக்காமல்தான் கேட்டேன். அவள் முறைத்தாள். பிறகு முறைப்பை சிரிப்பாக மாற்றினாள். 

"இல்லை கப்பல் கட்ட சொல்லித்தருவீங்களா?" தொடர்ந்த போது அவள் ஏதோ முணுமுணுத்தாள். அப்பொழுதும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

"என்ன சொன்னீங்க?" என்றேன். சிரித்தாள்.

என்ன திட்டு திட்டினாலும் சமாளிக்கச் சொல்லித்தந்திருக்கிறார்கள். எதுவும் சொல்லாமல் கிளம்பி வந்துவிட்டேன்.
                                
                                                               ***

வெளியே பிள்ளையார் கோயில் இருந்தது. அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் அதில் என் தந்தையார் பள்ளி நடத்துபவராக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அவர் தலையாட்டியது போலிருந்தது. பார்க்கலாம்.

Sep 26, 2012

நிர்வாணக் கடற்கரை

7 comments:


அது முதன்முறையாக பிரான்ஸ் சென்றிருந்த சமயம். பிரான்ஸின் தெற்குப்பகுதியில் இருக்கும் மாண்ட்பெல்லியே என்ற நகரத்தில்தான் எங்கள் அலுவலகம் இருந்தது. இரு வாரம் தங்கியிருக்க வேண்டும். இடையில் சனி,ஞாயிறு ஆகிய இருநாட்கள் விடுமுறை கிடைத்தது. அலுவலக நாட்களில் ஐந்து மணிக்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுவது வழக்கமாகியிருந்தது. ஹோட்டல் அறையில் பையை வீசிவிட்டு கால் போன போக்கில் நடப்பதுண்டு. ஸ்டீரீட் டான்ஸ், ஃபாலே நடன க்ளப், அருங்காட்சியகம், ஏதாவது ரெஸ்டாரண்ட் என நாட்கள் சர்வசாதாரணமாக கடந்தன. ஒரே பிரச்சினை நான் கஞ்சப்பயலாக இருந்ததுதான். டாக்ஸிக்கு அதிக செலவு ஆகிறது என நடந்தே சுற்றினேன். அந்த ஊரில் நடந்து கொண்டிருக்கும் ஒரே மனிதனாக நான் இருந்தேன்.

சனி,ஞாயிறு விடுமுறையை ‘உருப்படி’யாக கழித்துவிட வேண்டும் என கூகிளை டார்ச்சர் செய்தேன். அது கொண்டு வந்து கொட்டிய இடங்களில் ஒன்று Cap d'Agde. (கெப்ட் ஆக்ட்) எப்படித்தான் நாக்கை சுழற்றி சுழற்றிச் சொன்னாலும் இந்த ஊர்ப்பெயருக்கான சரியான உச்சரிப்பை என்னால் செய்ய முடிந்ததில்லை. உச்சரிப்பா முக்கியம்? அந்த ஊரில் இருக்கும் Naturist Beach பற்றி பேசலாம். பெயரிலேயே இருக்கிறது-‘இயற்கையான’ கடற்கரை. நம்மிடம் இருக்கும் செயற்கைகளான துணிமணிகளை நிராகரித்துவிட்டு உலவும் நிர்வாணக் கடற்கரை. இந்தக் கடற்கரையை பார்க்காமல் நாடு திரும்பினால் எனது கண்கள் அவிந்துவிடும் என்று கனவில் வந்த சில சாமிகள் சொன்னதை முழுமையாக நம்ப வேண்டியதாயிற்று.   சனிக்கிழமை கிளம்புவது என முடிவு செய்து வைத்திருந்தேன். வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் குண்டு போட்டார்கள். அடுத்த நாள் “நிம்ஸ்” செல்லலாம் என்று அறிவித்தார்கள். வாடி வதங்கிப்போனேன். “நிம்ஸ்” ஒரு காய்ந்த பூமி. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ரோமானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரம் அது. சில கட்டிடங்களை சுற்றிக் காட்டினார்கள். “இதுகாய்யா கூட்டிட்டு வந்தீங்க?” என்று நினைத்துக் கொண்டேன். 

எனது ’பெர்சனல்’திட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது. நிம்ஸிலிருந்து விடுதிக்கு கிளம்பும்போது ”நாளைக்கு எங்கே போகலாம்” என்றார்கள்? நான் ரெஸ்ட் எடுக்கப் போகிறேன் என்று கழண்டு கொண்டேன். அவர்கள் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை பார்க்கப் போகலாம் என்று பேசிக் கொண்டார்கள். சாய்ந்த கோபுரங்களை பார்ப்பதில் விருப்பமில்லை எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

மாண்ட்பெல்லியேவிலிருந்து கெப்ட்’ஆக்ட் செல்ல பெரிய சிரமம் இல்லை. மாண்ட்பெல்லியேவிலிருந்து நிறைய தொடரூர்திகள் இருக்கின்றன. நாற்பது நிமிடங்களில் அடைந்துவிடலாம். அங்கு இருந்து கடற்கரைக்கு ஒரு பேருந்து- ஒரு யூரோ கட்டணம். பீச் நுழைவுக்கட்டணம் ஐந்து யூரோ. போய்வர கிட்டத்தட்ட மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய் செலவு. 

பாஸ்போர்ட், ஒரு பேப்பர், பேனா, ஒரு செட் பேண்ட் சர்ட் எடுத்துக் கொண்டேன். நிர்வாணக் கடற்கரைக்கு ஒரு செட் துணிமணியைத் தூக்கிச் சென்ற முதல் ஆள் நானாகத்தான் இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. வெற்றிகரமாக பீச்சை அடைந்துவிட்டேன். “வெற்றிகரமாக” என்பது எழுதுவதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். உண்மையில் உதறிக் கொண்டிருந்தேன். டிக்கெட் வாங்கும் இடத்தில் இருந்தே தூரத்தில் சிலரை மொழு மொழுவெனெ பார்த்த போது ‘த்ரில்’ ஆகியிருந்தேன். என் பேச்சிலர் வாழ்க்கையின் ஆகச்சிறந்த தருணம் என்றும் இப்பொழுது ஒரு கவிதை எழுதிவிட வேண்டும் என்று மொக்கைத்தனமாக யோசித்துக் கொண்டிருதேன். 

பெயருக்குத்தான் பீச். ஆனால் அது ஒரு குட்டி நகரம். தங்குவதற்கான நட்சத்திர விடுதிகள், ரெஸ்டாரண்ட், சினிமா தியேட்டர் என சகலமும் உள்ளுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் எல்லா இடத்திலும் “மொழு மொழு”தான். நாகரீகம் கருதியும், சுத்தம் கருதியும் அமரும் இடங்களில் எல்லாம் கர்ச்சீஃபை விரித்து அமரச் சொல்கிறார்கள். அவ்வளவுதான். 

பல்லாயிரக்கணக்கானோரில் நான் உட்பட இன்னும் இரண்டு மூன்று பேர்கள் மட்டுமே துணியணிந்திருந்தோம். ஜெர்மானியர்கள்,பிரெஞ்சுக்காரர்கள்,ஆங்கிலேயர்கள், ஆப்பிரிக்கர் என சகல மொழு மொழு மனிதர்களையும் பார்த்த கொஞ்ச நேரத்தில் இயல்பு மனநிலைக்கு வந்துவிட முடிந்தது. என் வயதையொத்த ஒரு துருக்கியன் என்னிடம் பேசினான். தன் மனைவியோடு வந்திருந்தான். அவள் அவனுக்கு ஐந்தாவது மனைவியாம். முப்பது வயதுக்குள் ஐந்து மனைவியா என்று கேட்டபோது அவன் பெருமையடைந்தான். அவள் எங்கள் ஊர் சினிமா நடிகைகளை விட அழகாக இருப்பதாக கூறியபோது அவன் அவளிடம் மொழிபெயர்த்தான். துணியை துறந்தபோது கூட வெட்கமடையாதவள் இதைக் கேட்டு வெட்கப்பட்டாள். என்னிடம் ”துணியை கழட்டிவிடு” என்றான். நான் சிரித்துக்கொண்டே நடக்கத் துவங்கினேன்.

’நிர்வாணம் என்பது மட்டுமே முழு சுதந்திரம்’ என வாசித்ததுண்டு. அதை அங்கே ஒவ்வொருவரும் அனுபவிப்பதாகத் தோன்றியது. அங்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பண்பாடு, சமூக ஒழுக்கம் என்பதெல்லாம் கடலில் கரைக்கப்பட்டிருந்தது. வாழ்க்கையின் அந்தக் கணத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றியது. சில கிலோமீட்டர்களுக்கு கடற்கரையையொட்டி நடந்தபோது சிலர் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதையும், அடுத்தவர்களுக்கு தெரியாமல் அவர்களது அந்தரங்கங்களை எள்ளுவதையும், குடும்பத்தோடு நிர்வாணமாக சுற்றுபவர்களையும் சர்வசாதாரணமாக பார்க்க முடிந்தது.

கேமராக்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் அடுத்தவர்களை படம் எடுக்க அவர்களின் அனுமதி பெற வேண்டும். எந்தப் பயணத்திலும் கேமரா எனக்கு சுமை என்பதால் அது பற்றிய அக்கறை எனக்கு இருந்ததில்லை. ஒரு எகிப்தியன் சில ஜெர்மானிய பெண்களை படம் எடுத்தபோது அவனை ஜெர்மானியர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவன் ஆடை அணிந்திருந்தான். அவன் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் சூழ்ந்து கொண்ட ஜெர்மானியர்கள் குறித்து நக்கலடித்தான். ஜெர்மானியப் பெண்கள் அவன் நிர்வாணம் ஆகியே தீர வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினார்கள். அவன் முடியாது என்றான். சில ஆண்கள் வலுக்கட்டாயமாக அவனது கால்சட்டையை உருவினார்கள். அவனால் ரொம்ப நேரம் அவனது துணிகளைப் பிடித்துக் கொள்ள முடியவில்லை. அவனது உள்ளாடையை சில பெண்கள் உருவினார்கள். அவன் சுருங்கிக் கொண்டான். அப்பொழுது பெண்கள் அவனைப்பார்த்து கேலி பேசினார்கள். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அவனது அந்தரங்கம் பற்றிய கேலி என்பதை தெரிந்து கொண்டேன். அவன் எழுந்து ஓடினான். அவனது ஆடைகளை ஒருவன் வீசியெறிந்தான். பொறுக்கிக் கொண்டு ஓடினான். அங்கு இருந்தவர்கள் கைகொட்டினார்கள்.

ஒரு ஜெர்மானியன் அறிவித்தான். “இங்கு யாரும் ஆடைகளோடு சுற்றக் கூடாது”. நான் சுற்றிலும் பார்த்தேன். அந்த அறிவிப்பு எனக்கானது என்று புரிந்துகொண்டேன். மீண்டும் அறிவித்தவனின் முகத்தை பார்த்தேன். அவன் என்னைப்பார்த்து சிரித்தான். அப்பொழுது எனக்கு பதில் சிரிப்பு வரவில்லை.

Sep 23, 2012

ரஜினி - பணம் காய்ச்சி மரம்

8 comments:


அலுவலகத்தில் பெங்காலி பையன் ஒருவன் இருக்கிறான். பெருங்குரலோன். அவன் பேசினால் அந்தத் தளத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். 'பேசினால்' என்பதை விட 'கத்தினால்' என்பதுதான் பொருத்தமாக இருக்கும். நேற்றும் கத்திக் கொண்டிருந்தான். அவன் கத்திக் கொண்டிருந்தது ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை. அரைகுறைத் தமிழில் டயலாக்குகளை கீழே போட்டு மிதித்துக் கொண்டிருந்தான். அவனது தமிழ் உச்சரிப்பை தொடர்ந்து கேட்டால் காதுகளில் இரத்தம் வந்துவிடக் கூடும் என்பதால் அவனை சாந்தப்படுத்துவது தலையாயக் கடமையாகிவிட்டது. குறுக்கே புகுந்துவிட்டேன்.

ஒரு சிறு புத்தகத்தை வைத்துக் கொண்டுதான் இத்தனை அலப்பறையும் செய்து கொண்டிருந்தான். புத்தகத்தின் பெயர் "Rajni's Punchtantra". ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த புத்தகம். அமெரிக்கா சென்றிருந்த நண்பன் இவனுக்கு அன்பளிப்பாக வாங்கி வந்தானாம். 

ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் முப்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் ரஜினியின் படம். அடுத்த பக்கத்தில் டயலாக்கை தங்கிலீஷில் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக "Sollraan...senjittan" அதன் கீழேயே அர்த்தத்தை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள் " I committed..I delivered". 

இத்தோடு நிறுத்தவில்லை. அதற்கு அடுத்த பக்கம் இந்த டயலாக்கை தொழிலில் எப்படி பயன்படுத்துவது, வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துவது என்று பாடம் நடத்துகிறார்கள். ரஜினி என்ற பெயரை எப்படி வேண்டுமானாலும் காசாக்கிவிடலாம். இந்த புத்தகமும் அப்படித்தான் போலிருக்கிறது என்று வாசித்தால் மயக்கம் வராத குறைதான். 

புத்தகத்தில் "இது எப்படி இருக்கு" என்ற டயலாக்கும் இருக்கிறது. இதை தொழிலில் எப்படி பயன்படுத்தலாம்? 

சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான்தான் ஞாபகத்திற்கு வருகிறார். அவர் பாணியிலேயே வாசியுங்கள்.  "குழுவாக செயல்படும் போது மேனேஜர் குழுவில் இருக்கும் உறுப்பினர்களிடமெல்லாம் "இது எப்படி இருக்கு" என்று கேட்க வேண்டும். உறுப்பினர்கள் சக உறுப்பினர்களிடம் கேட்க வேண்டும்" இதே வரியை முக்கால் பக்கத்திற்கு நீட்டி முழக்க முடியாதல்லவா? அதனால் ஐன்ஸ்டீனை எல்லாம் உள்ளே இழுத்து கும்மியிருக்கிறார்கள்.

இந்த டயலாக்கை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்தலாம்? சிம்பிள். டீம் மெம்பர்,மேனேஜர் என்ற சொற்களை தூக்கிவிட்டு உறவினர்கள், நண்பர்கள் என்ற வார்த்தைகளை நிரப்பிக் கொள்ளவும். இவர்களிடமெல்லாம் "இது எப்படி இருக்கு" என்று கருத்துக் கேளுங்கள். அப்பொழுதுதான் சந்தோஷமான குடும்பத்தையும், வாழ்க்கையையும் அமைக்க முடியுமாம்.

ஒவ்வொரு டயலாக்கும் இப்படித்தான் புல்லரிக்க வைக்கிறது. 

உங்களின் Lateral Thinking க்கு ஒரு கேள்வி. "பாபா கவுண்ட் ஸ்டார்ட்ஸ்" என்ற டயலாக் தரும் மெசேஜ் என்னவாக இருக்கும்? ஒரு நிமிடம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்.

இந்த அற்புதமான புத்தகத்தை பி.சி.பாலசுப்ரமணியன் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்று இரண்டு பேர் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். இதில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்திருக்கிறார். அருணாச்சலம் படத்தில் மூன்று வில்லன்களில் ஒருவராக வருவாரே அவரேதான். இரண்டு பேரில் இனிமேல் யாரை பார்த்தாலும் கையெடுத்துக் கும்பிட வேண்டும். புத்தகத்தில் இருக்கும் கருத்துக்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ரஜினி டயலாக்குகளை குதறியிருக்க வேண்டியதில்லை. 

இந்த புத்தகம் NHM இல் கிடைக்கிறது. முன்னேற விரும்புபவர்கள் வாங்கிப்படிக்கலாம்.

ம்ம்..."பாபா கவுண்ட் ஸ்டார்ட்ஸ்" டயலாக் தரும் மெசேஜ்  "Time is most precious thing- do not waste it"

மீண்டும் இமான் நினைவுக்கு வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. சொல்லுங்கண்ணே சொல்லுங்க.

Sep 22, 2012

காலச்சுவடு- நிதி ஆதாரம்

1 comment:
காலச்சுவடு கண்ணனின் நேர்காணல் எதுவரை இணைய இதழில் வெளிவருகிறது. நான் அனுப்பியிருந்த கேள்வியும் அதற்கான பதிலும் கீழே.  

                                                                   ***

காலச்சுவடு இதழும், பதிப்பகமும்,  அதன் சார்பு நிறுவனங்களும் இயங்குவதற்கான நிதி ஆதாரம் என்ன என்பதை அறிவிப்பீர்களா?

காலச்சுவடு இதழும் பதிப்பகமும் 2010வரை என்னுடைய நிறுவனங்களாக இருந்தன. என்னுடைய முதலீட்டில்தான் செயல்பட்டன. வங்கிக்கடன் இருந்தது. அறிந்தவர்களிடம் பணம் பெற்று வட்டி செலுத்துவதும் தேவைக்கு ஏற்ப நடந்ததுண்டு. வேறு எந்த இந்திய, உலகளாவிய நிறுவனமும் காலச்சுவடில் முதலீடு செய்ததில்லை. என்.ஜி.ஓக்கள், தனியார் அறக்கட்டளைகள், மத்திய அரசு யாரிடமிருந்தும் உதவி பெற்றதில்லை.

என்ன என்ன உதவிகளைப் பெற்றிருக்கிறோம் என்பதையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

1. விளம்பர உதவி

2. நிகழ்வுகளுக்கு ஸ்பான்சர்

3. காலச்சுவடு இதழில் பங்களிப்பவர்களுக்கு ஸ்ரீராம் சிட்ஸ் வழங்கும் சன்மானம்.

4. புதுமைப்பித்தன் படைப்புகள் தொகுப்புப் பணிக்கு ஸ்ரீராம் சிட்ஸ் வழங்கிய நிதி உதவி.

5. தமிழ் வளர்ச்சித் துறை அரிய நூல்களைப் பதிக்கும் திட்டத்தில் ‘தோட்டியின் மகன்’ முதல் பதிப்புக்கு வழங்கிய உதவித்தொகை.

இவை எல்லாமே வெளிப்படையானவை. உரிய இடங்களில் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கப்பட்டவை.

நான் வெளிப்படையாக அறிவிக்காத உதவி ஒன்று உண்டு. முதன் முதலில் நான் கேட்டுப் பெற்ற உதவி அது. புதுமைப்பித்தனின் ‘அன்னை இட்ட தீ’ பணியில் ஆய்வுக்காகப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. காலச்சுவடு அப்போது இரண்டு மூன்று நூல்களே வெளியிட்டிருந்த பதிப்பகம். ஆர்.எம்.கே.வி. விஸ்வநாதன் பண்பாட்டு அக்கறை உள்ளவர் என்று அறிந்து அவரைச் சந்திக்கச் சென்றேன். ரூ. 10,000 கொடுத்தார், நான் அதை வெளிப்படையாக அறிவிக்கக் கூடாது என்ற முன்நிபந்தனையுடன். இன்று அவர் இல்லை. நன்றிக் கடனை அறிவிக்கப் பொருத்தமான சந்தர்ப்பம் இது.

‘அன்னை இட்ட தீ’ நூல் வெளிவந்த பிறகு புதுமைப்பித்தன் குடும்பத்தினரிடமிருந்து அவரது முழுப்படைப்புகளையும் வெளியிட அனுமதி பெற்றோம். பல இடங்களில் சிதறிக்கிடக்கும் மூலத் தரவுகளைச் சரிபார்த்து பதிப்பாக்கும் செலவுகளை எவ்வாறு சரிக்கட்டுவது என்பது மலைப்பாகவே இருந்தது. இக்கட்டத்தில் India Foundation for Arts என்ற அமைப்பிலிருந்து காலச்சுவடுக்கு விளம்பரம் வந்தது. விளம்பரத்தை ஆங்கிலத்தில் அனுப்பித் தமிழ்ப்படுத்தி வெளியிட முடியுமா என்று கேட்டிருந்தார்கள். அந்தப் பணியை நானே செய்தேன். கலைகள் சார்ந்த பணிகளுக்குப் பண உதவி பெற விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பு அது. அவர்களுடைய அழுத்தம் அதிகமும் நுண்கலைகள் சார்ந்து இருந்தது. புதுமைப்பித்தனின் மூலப் பிரசுரங்களை – இதழ்கள், நூல்கள், கடிதங்கள் – ஆவணப்படுத்தும் திட்டத்திற்கும் நிதியுதவி கேட்டுப்பார்க்கலாமே என்று தோன்றியது. பங்களூர் செல்லும்போது நேரில் சென்று பார்த்தேன். அவர்களுக்கு ஆர்வமிருந்தது. இன்று யோசித்துப் பார்க்கும்போது சலபதியும் நானும் உதவி கிடைக்காமல் போவதற்கான அனைத்து வேலைகளையும் செய்தோம் என்று தெரிகிறது. பண உதவி கேட்டுச் சென்ற இடத்தில் பண உதவி பெறுவதில் இருக்கும் தயக்கங்களை வெளிப்படுத்தினோம். நிதி வழங்கும் நிறுவனங்களின் அரசியலை, மேட்டுக்குடித்தனங்களை விமர்சித்தோம். IFA, ஃபோர்ட் பவுண்டேஷனின் கிளை நிறுவனம் என்பது தெரிந்ததும் ஃபோர்ட் பவுண்டேஷன் நிதி வழங்கும் தேர்வுகளைக் கிண்டலடித்தோம். இந்த எல்லா அதிகப்பிரசங்கித்தனங்களையும் மீறி உதவி கிடைத்தது. எங்கள் திட்டத்தைக் கவனித்து, விவாதித்து, முன்வைத்து ஆலோசனைகள் வழங்கி எந்தச் சிறு பிசிறும் வராமல் நிர்வகித்த அஞ்சும் ஹெசனுக்கே – இன்று பிரபல ஆங்கில எழுத்தாளர் அவர் – நன்றி சொல்ல வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்ய முடியாது, அறக்கட்டளைக்கே உதவ முடியும் என்று அவர்கள் தெரிவித்ததாலும் ‘தமிழ் இனி 2000’த்தை நடத்தவேண்டியிருந்ததாலும் காலச்சுவடு அறக்கட்டளையைத் துவங்கினோம். பண உதவி கிடைப்பது உறுதிப்பட்டதும் முதல் வேலையாக அதைக் காலச்சுவடில் அறிவித்தேன்.

‘காலச்சுவடு’ ஜனவரி – மார்ச்  2000 இதழில் வெளிவந்த அறிவிப்பு இதோ,

இந்த அறிவிப்பையும் செய்தியையும் பார்த்துவிட்டு பலர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அனைவருக்கும் இயன்ற அளவு உதவினோம். சிலருக்கு நிதி உதவியும் கிடைத்தது.

இரண்டு ஆண்டுகளில் ‘புதுமைப்பித்தன் ஆவணத் திட்டம்’ பணி முடிக்கப்பட்ட கணக்கு தணிக்கை செய்யப்பட்டு திட்டம் நிறைவு பெற்றது. புதுமைப்பித்தன் மூல ஆவணங்கள் மைக்ரோ பிலிம் செய்யப்பட்டு அதன் பிரதிகள் முக்கியமான உலக நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மிச்சமிருந்த ரூ.15,000த்தை அவர்கள் எங்களுக்கே அன்பளித்துவிட்டார்கள். அந்தப் பணத்தில் 2008ஆம் ஆண்டு மதுரை பில்லர் ஹோமில் புதுமைப்பித்தன் ஆய்வரங்கை நடத்தினோம். இந்தப் பணியின் பின்புலத்திலிருந்தே புதுமைப்பித்தன் படைப்புகளின் செம்பதிப்பைக் காலச்சுவடு வெளியிட்டுவருகிறது.

பண உதவி செய்ய முன்வருபவர்களிடமிருந்து உதவிபெற எனக்குத் தயக்கம் இருந்ததில்லை. ஆனால் நானே வகுத்துக்கொண்ட நெறிமுறைகள் உண்டு.

1. பெறும் எல்லாப் பதிவு உதவியையும் வெளிப்படையாக அறிவித்தே பெற வேண்டும்.

2. நாம் செய்ய வேண்டிய பணிகளுக்காகப் பண உதவி பெறலாம். எந்தத் திட்டத்திற்குப் பண ஒதுக்கீடு உள்ளதோ அதை வலிந்து செய்யக் கூடாது.

3.நம்முடைய செயல்பாடு நிதி நிறுவனங்களால் வரையறுக்கப்படக்கூடாது, நம்முடைய ஆர்வங்களால் மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும்.

1999இல் உதவி பெற்ற பின்னர் இன்றுவரை எந்த நிதி நிறுவனத்தின் உதவியையும் காலச்சுவடு அறக்கட்டளை பெறவில்லை என்பது ருசி கண்ட பூனையாக நாங்கள் செயல்படவில்லை என்பதற்கான ஆதாரம்.

காலச்சுவடு பல இடங்களிலிருந்து – குறிப்பாக ஏகாதிபத்திய நிறுவனங்கள், தேச விரோத அமைப்புகள் (இந்துத்துவவாதிகளின் பார்வையில்) என்ஜிஓக்களிடமிருந்தெல்லாம் பண உதவி பெற்று செழித்திருப்பதாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜெயமோகன் குற்றஞ்சாட்டி வருவதாக அறிந்தேன். அவர் அனுப்பி வைக்கும் கணக்காளரிடம் காலச்சுவடின் ஆடிட் செய்யப்பட்ட கணக்கு விவரங்களைப் பரிசீலனைக்குக் கொடுக்கச் சம்மதிக்கிறேன். பண உதவி கிடைத்த விபரங்களைக் கண்டுபிடித்து ஃபோர்ட் பவுண்டேஷன் மற்றும் இன்னபிற என்.ஜி.ஓ. உதவிகளை அம்பலப்படுத்தட்டும்.

2010இலிருந்து காலச்சுவடு பிரைவட் லிமிடெட் கம்பனியாக மாற்றம் பெற்றுவிட்டது. சுமார் 15 நண்பர்கள் அதில் பண முதலீடு செய்து பங்குகளை வாங்கியுள்ளனர்.

[முழுமையான நேர்காணலை பின்வரும் சுட்டியில் வாசிக்கலாம்: http://eathuvarai.net/?p=1601 ]

Sep 21, 2012

வென்ற கதை

3 comments:கால்பந்து விளையாட்டு. கீழே கிடக்கும் பந்தை பார்க்க வேண்டும், எதிர் அணியினரிடம் இருந்து இலாவகமாக தட்டிச் செல்ல வேண்டும், பந்தை துரத்திச் சென்று கோல் அடிக்க வேண்டும். இவை அத்தனையும் கால்பந்து வீரருக்கு இயலக்கூடிய காரியம்தான். ஆனால் இவற்றை செய்ய வேண்டியது கால்பந்து வீரர் இல்லை. ஒரு இயந்திரம். 

தேசிய அளவில் கல்லூரிகளுக்கிடையேயான ரோபோ போட்டிக்கான அறிவிப்பு வந்திருந்தது. ஒவ்வொரு கல்லூரியும் கால்பந்து விளையாடக் கூடிய மூன்று அல்லது நான்கு ரோபோக்களை வடிவமைக்க வேண்டும். அந்த ரோபோக்கள் தங்களை வடிவமைத்த கல்லூரிக்காக கால்பந்து விளையாட வேண்டும். இதுதான் போட்டியின் விதி. இந்தப் போட்டியில் எங்கள் கல்லூரியும் கலந்து கொள்ள வேண்டும் என பேராசிரியர் விரும்பினார். கால்பந்து விளையாடக்கூடிய ரோபோவை வடிவமைக்க வேண்டும் என்ற அவரது உத்தரவை கேட்டவுடன் உச்சந்தலை கிறுகிறுத்தது.

இரண்டு கால்களில் நிற்கும் மனித உருவிலான ரோபோவை வடிவமைப்பதுதான் முதல் முக்கியமான வேலை. இரவு பகல் பாராது உழைத்ததில் ரோபோவை வடிவமைத்துவிட்டோம். ஆனால் ரோபோ இயங்குவதற்கு தேவையான பேட்டரியை  இணைக்க மறந்திருந்தோம். அடித்துப்பிடித்து கடைசி நேரத்தில் பேட்டரியை ரோபோவின் முதுகில் கட்டினால் பேட்டரியோடு சேர்ந்து ரோபோவும் குப்புற விழுந்தது. எடுத்து  நிறுத்தினால் மல்லாக்க விழுந்தது. புவியீர்ப்பு விசைக்கு எதிராக ரோபோவை நிற்க வைக்கவே பெரும்பாடு பட வேண்டியதாகிவிட்டது. இதன்பிறகுதான் அடிப்படை புரிதலே இல்லாமல் வானம் ஏறி வைகுண்டம் பிடிக்க முயற்சிக்கிறோம் என்பதை உணர்ந்தோம். போட்டிகளை ஒதுக்கி வைத்துவிட்டு ரோபோவின் உலகத்தை வேறொரு கோணத்தில் புரிந்து கொள்ளத் துவங்கினோம்.

மிக எளிமையாகச் சொன்னால் ரோபோ மூன்று அடிப்படையான பகுதிகளைக் கொண்டிருக்கும்:

1) உணரிகள்(Sensors)- ரோபோவைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து தெரியப்படுத்துவது இதன் பணி. மனிதனில் கண், காது ஆகிய உறுப்புகள் செய்யும் வேலையை ரோபோவில் உணரிகள் செய்கின்றன.

2) செயலாக்கி(Processor)- உணரி தரும் தகவல்களை கணித்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்து உத்தரவிடும் அமைப்பு. இது நமது மூளையைப் போன்றது.

3) இயந்திரப்பகுதி(Mechanical device) - செயலாக்கியால் இடப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப பணியைச் செய்து முடிக்கக்கூடிய வேலையாள். மூளை சொல்வதை செயல்படுத்தும் மனிதனின் கை, கால்கள் போன்றவை இவை.

இந்த மூன்று பகுதிகளையும் மனிதனோடு ஒப்பிட்டால் ரோபோவின் அடிப்படை இன்னும் தெளிவாக புரியும். 

ஒருவனை நாய் துரத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவனது கண்கள் நாய் துரத்துவதை பார்க்கின்றன, காதுகள் நாய் குரைப்பதை கேட்கின்றன. இங்கு கண்களும், காதுகளும் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிகின்ற உணரிகள். உணரிகள் அளித்த தகவலுக்கு ஏற்ப மூளை கணக்குப்போட ஆரம்பிக்கிறது. கீழே கிடக்கும் கல்லை எடுத்து நாயைத் அடிக்கச் சொல்லி உத்தரவிடலாம் அல்லது தப்பிப்பதுதான் உசிதம் என்றால் ஓட்டத்தை வேகப்படுத்து எனவும் உத்தரவிடலாம். இங்கு மூளை செயலாக்கியாக இருக்கிறது. கல்லை எடுத்து வீசு என்ற கட்டளை வந்தால் கைகள் கற்களைப் பொறுக்கி நாயை நோக்கி எறிகின்றன அல்லது ஓட்டம் எடு என்ற கட்டளை வந்தால் கால்கள் ஓடத் துவங்குகின்றன இங்கு கைகளும், கால்களும் இயந்திரப்பகுதியாகச் செயல்படுகின்றன.

இதே ’கான்செப்டை’ வைத்து இயந்திரம் ஒன்றை வடிவமைத்தால் அதுதான் ‘ரோபோ’. 

நீங்கள் பாம்பு பிடிக்கும் ரோபோ ஒன்றை வடிவமைக்க விரும்புகிறீர்கள். பாம்பு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டறிய உணரி ஒன்று தேவைப்படும். அதற்காக உணரியாகச் செயல்படத் தோதான மைக்ரோ கேமரா ஒன்றை தேர்ந்தெடுத்து ரோபோவில் பொருத்திக் கொள்ள வேண்டும். பாம்பு இருப்பின் அதனைப் பிடிப்பதற்கு இயந்திரப்பகுதியும் அவசியம். அதற்காக கை போன்ற அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். செயலாக்கியாக மைக்ரோ ப்ராஸசர் போன்ற சிறு கணிணிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். கேமரா தான் எடுக்கின்ற படங்களை செயலாக்கிக்கு அனுப்பி வைக்கும். தான் பெறுகின்ற படங்களை ஆய்வு செய்து, அருகில் பாம்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் வகையில் செயலாக்கியில் ப்ரொகிராம் செய்யப்பட்டிருக்கும். பாம்பு கண்டறியப்பட்டவுடன், கவ்விப்பிடிக்குமாறு உத்தரவு ஒன்று செயலாக்கியால் பிறப்பிக்கப்படும். இப்பொழுது கை போன்ற அமைப்பு பாம்பை பிடித்துவிடும்.

இதுதான் ரோபோ செயல்பாட்டின் அடிப்படை. சொல்வதற்கு எளிதாகத் தோன்றினாலும், கடலில் விழுந்துவிட்ட ஒரு ரூபாய் காசை அடையாளம் காட்டுவது போலத்தான். மனிதனின் உருவத்தில்தான் ரோபோ இருக்க வேண்டும் என்பதில்லை-  மினியேச்சர் பேருந்தை போலவோ நீந்தக் கூடிய மீன் போன்றோ அல்லது வேறு பலவித வடிவங்களிலோ தேவைகளுக்கு ஏற்ப ரோபோவை வடிவமைக்கிறார்கள்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரோபோவை வைத்து ஒரு பரிசோதனை நிகழ்ந்தது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக் துறையைச் சார்ந்த வல்லுனர்களும், சில மருத்துவர்களும்  சிமி பள்ளத்தாக்கிற்கு இரண்டு வேன்களில் சென்றார்கள். அவர்களுக்கு பின்னாலேயே இன்னொரு வேனில் ’ரோபோ டாக்டர்கள்’ சென்றன. ஆளில்லாத அந்த இடத்தில் மனிதர்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட பொம்மைகளுக்கு ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதுதான் திட்டம். அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்களை வெகுதூரத்தில் அமர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பார்கள். மருத்துவர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையில் வயர்லெஸ் தொடர்பு உருவாக்கப்பட்டன. போர்க்களங்களுக்கு ரோபோக்களை அனுப்பி வைத்தால் அங்கு அடிபட்டுக் கிடக்கும் போர்வீரர்களுக்கு ரோபோக்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்பதை பரிசோதிக்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ரோபோட்டிக் வல்லுனர்கள் மட்டுமில்லாது ராணுவ அதிகாரிகளும் பரிசோதனையின் முடிவுகளுக்காக படபடப்புடன் காத்திருந்தார்கள். பல மணி நேர சோதனைக்கு பிறகாக சோதனையை நிகழ்த்திய மருத்துவர்கள் ”வெற்றி” என்பதை உணர்த்தும் வகையில் கட்டை விரலை உயர்த்தினார்கள். ரோபோக்கள் ஜெயித்திருந்தன. 

[கல்கி வார இதழில் எழுதிக்கொண்டிருக்கும் 'ரோபோஜாலம்' தொடரின் இரண்டாவது அத்தியாயம்]

Sep 20, 2012

ராஜபக்‌ஷே, ப்ளீஸ் வெளியே போ

6 comments:


மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் புத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்ட ராஜபக்‌ஷேவை அழைத்திருக்கிறார்கள். புத்தனுக்கும் ராஜபக்‌ஷேவுக்கும் என்ன சம்பந்தம்? எந்தத் தகுதியின் அடிப்படையில் சிங்களத்து கோமகனை அழைத்திருக்கிறார்கள்? கோமகனாக இருந்தாலும் அந்த மனிதன் கொலைகாரன் தானே?.  

இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இனவெறி இராணுவத்திற்கு உத்தரவிட்ட அதிபர் ராஜபக்க்ஷே. ஒவ்வொரு சுண்டுவிரல் அசைவிலும் ஓராயிரம் பேரையாவது கருக்கிய அயோக்கியத் தனத்தை செய்தவர். தமிழ் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு குழந்தைகளின் உடல்கள் இலங்கையின் தெருக்களில் சிதறவிடப்பட்டுக் கொண்டிருந்த போது முகம் நிறைய பவுடரும் வாய் நிறைய புன்னகையுமாக நிழற்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவர்.

ஐரோப்பிய நாடுகளில் கால் வைத்த இடங்களில் எல்லாம் எதிர்ப்பின் உஷ்ணம் தாளாமல் தலையில் துண்டு போட்டுக் கொண்டு ஓடி வந்தவரை இந்த தேசம் மட்டும் ஏன் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறது? போர்க்குற்றவாளி என அறிவிக்க உலகத் தமிழர்களோடு சேர்ந்து சில நாடுகள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்க என்ன காரணத்திற்காக இந்த மனிதனை இந்தியா காப்பாற்றுகிறது?

இந்தக் கேள்விகள் இயல்பாக எழக் கூடிய கேள்விகள். காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அரசியல் காரணங்கள். காரணங்கள் இருக்கட்டும். அதிகார வர்க்கம் அப்படித்தான். ஆனால் சொந்த இனத்தை வெட்டிக் கொன்றவன் நம் வீட்டிற்குள் காலடி வைத்தால் அதை ஏற்றுக் கொண்டு சமாதானமாக போவோம் என்பது மடத்தனம் இல்லையா? குறைந்தபட்ச எதிர்ப்புணர்வையாவது காட்டுவதுதானே சரியாக இருக்கும்?

இத்தகைய ராஜபக்‌ஷேவை இந்தியாவிற்குள் அனுமதித்தால் என்ன தவறு என்ற ரீதியில் சில கருத்துக்களை பார்க்க வேண்டியிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

நம் சகோதரன்- அவன் எத்தகைய குற்றம் செய்தவனாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே- அவனை நேர்மையற்ற முறையில் ஒருவன் கொன்றிருந்தால் அந்தக்கொலைகாரனை எந்தக் காலத்திலாவது நம்மால் மன்னிக்க முடியுமா? அதே நிலைப்பாடுதானே ராஜபக்‌ஷே மீதும் இருக்க வேண்டும். 

இந்த நேரத்தில் ராஜபக்‌ஷேவிற்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு படையைத் திரட்டிக் கொண்டு மத்திய பிரதேசத்தில் முகாமிட்டிருக்கும் அர்பணிப்பு உணர்விற்காக  வைகோவை பாராட்ட வேண்டும். இந்த எதிர்ப்புணர்வும் இல்லையென்றால் நூறு கோடி மக்கள் வாழும் தேசத்தில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வந்து சென்றான் ஒரு கொலைகாரன் என்ற பெருமையோடு ராஜபக்‌ஷே திரும்பியிருக்கக் கூடும்.

அதிகார வர்க்கத்தின் ஊதுகுழல் ஊடகங்கள் வைகோவின் போராட்டத்தையும் எதிர்ப்பையும் புறக்கணிக்கின்றன. மத்தியப்பிரதேச அரசு வைகோவை சாஞ்சி நகரை நோக்கிச் செல்ல அனுமதிக்க மறுக்கிறது. நள்ளிரவில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து சாலையில் அமர்ந்து தர்ணா நடத்துகிறார்கள் வைகோவும் அவரது தொண்டர்களும். விடியும் வரை தொடர்ந்து கொண்டிருக்கும் தர்ணாவிற்கு பிறகும் அனுமதியில்லை என்று அறிவித்திருக்கிறார்கள். கைது செய்துவிடக் கூடும். அது பிரச்சினை இல்லை. எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். 

இந்த எதிர்ப்புணர்வு தமிழர்கள் அனைவரிடமும் எதிரொலித்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் துரத்தப்பட்டத்தைப் போல ராஜபக்‌ஷே துரத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழனின் விதி- நிலக்கரி ஊழலும், டீசல் விலையுயர்வும், விநாயகர் சதுர்த்தியும், பாரத் பந்த்தும், அரசியல் பாகுபாடுகளும் அவனை தொடர்ந்து அலைகழித்துக் கொண்டிருக்கின்றன. இடையில் சுந்தர பாண்டியன் படம் வேறு. இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி ஈழத்தை எங்கே நினைக்கப்போகிறோம்.

தமிழர்களின் பிரதிநிதியாக ராஜபக்‌ஷேவின் வருகையை எதிர்க்க மத்தியப்பிரதேசத்தில் போராடிக் கொண்டிருக்கும் வைகோவிற்கு அவரது தொண்டர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Sep 19, 2012

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக

8 comments:"ரோடு கண்ணாடி மாதிரி சார், சும்மா வழுக்கிட்டு போகுது". 

"பையன் பி.ஈ. ஃபைனல் இயர். ப்ளேஸ் ஆகிட்டான், நல்ல பேக்கேஜ்"

"இது 3G ஃபோன். ஃபேஸ்புக், ஜிமெயில் எல்லாம் இதுலதான் பார்க்கிறேன்"

இதில் எதுவுமே இதுவரை கேட்டிராத புது ஸ்டேட்மெண்ட் இல்லை.  "வளர்ச்சி(Development) என்ற பெயரில் முதலாளித்துவ அரசாங்கம் மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் ஒத்து ஊதுகிறேன்" என்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் வேறு வடிவங்கள், அத்தனையையும் ஏற்றுக் கொள்கிறேன் என்பதை சுய பெருமையுடன் சொல்லிக் கொள்வதன் வெளிப்பாடு.

நாம் கோரும் ஒவ்வொரு வசதி வாய்ப்பும் நேரடியாக சில ஆயிரம் பேர்களையும் மறைமுகமாக பல்லாயிரம் பேர்களை வதைத்திருக்கின்றன. ஆனால் யாரைப் பற்றியும் நாம் அலட்டிக் கொண்டதில்லை. ஐந்து இலக்க சம்பளம், திரும்பிய பக்கம் மால்களால் நிறைந்த வாழ்க்கை முறை, ஸ்மார்ட்போன் என்பவை வாழ்வின் கனவுத்திட்டங்களாகியிருக்கின்றன. கனவுகளை பூர்த்தி செய்ய எந்த 'காம்ரமைஸ்'க்கும் தயாராகியிருக்கிறோம். லட்சக்கணக்கான மக்கள் வசதியாக வாழ சில ஆயிரம் பேர்கள் பாதிக்கபட்டால் அதில் தவறொன்றும் இல்லை என்பது சித்தாந்தம் ஆகியிருக்கிறது.

வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளையும், தங்க நாற்கரச் சாலகளையும் கடக்கத் தெரியாமல் நசுங்கிக் கிடக்கும் அப்பாவி நாய்களின் எண்ணிக்கையை யாராவது கணக்கில் எடுத்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. வீதிக்கு வீதி செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு இழந்தவிட்ட சிட்டுக்குருவி முதலான உயிரினங்கள் நமக்கு துச்சமானதாகத்தான் இருந்திருக்கிறது. நாய்களையும், குருவிகளையும் விட்டுவிடலாம்- 

மனிதர்களையாவது கண்டு கொள்கிறோமா? கண்ணாடிச் சாலைகள் கிழித்துச் செல்லும் ஒவ்வொரு ஊருக்குள்ளும் வீடுகளை இழந்தவர்களையும், வாழ்வாதாரமாக வைத்திருந்த அரை ஏக்கர் நிலத்தை தாரை வார்த்தவர்களையும் நாம் கண்டு கொண்டதில்லை. நகரத்தின் வளர்ச்சிக்கும் செலவுக்கும் ஈடு கொடுக்க முடியாமல் சாலைகளுக்கும் ப்ளாட்பாரங்களுக்கும் விரட்டியடிபக்கப்பட்டவர்களை கவனப்படுத்தியதில்லை. சில வருடங்களுக்கு முன்பாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வாழ்வளித்த டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்கள் எங்கே போயின? சுவர்களில் படம் வரைந்து வாழ்வை நகர்த்தியவர்களை ஃப்ளக்ஸ் பேனர்கள் தின்று தண்ணீர் குடித்திருக்கின்றன. சட்டி பானை செய்தவர்கள், கை விசிறி செய்தவர்கள், பனங்கருப்பட்டி உற்பத்தியாளர்கள் எல்லாம் ஏன் கண்ணில் தென்படுவதில்லை?

"சார், அதுதான் டெவலப்மெண்ட்". 

இந்த டெவலப்மெண்ட்தான் மளிகைக் கடை நடத்தி வாழ்வை ஓட்டுபவர்களையும், மார்கெட்டில் காய்கறி விற்பவர்களையும் குறிபார்க்கிறது. அடுத்த தோட்டா அவர்களை நோக்கி சீறப் போகிறது. இந்த வளர்ச்சிதான் மனிதர்களை மெஷின்களாக மாற்றியிருக்கிறது. வாழ்வை இயந்திரத்தனமாக மாற்றியிருக்கிறது. பணத்தை பிரதானமானதாக மாறியிருக்கிறது. நகரங்கள் காந்தத்தைப் போல இழுக்கின்றன. ஒவ்வொரு மனித மெஷினும் இந்த காந்தத்தில் வேகமாக  ஒட்டிக் கொள்கிறது.

"இன்னும் பத்து வருஷம் சார். இந்த சிட்டியை விட்டுட்டு கிராமத்துல செட்டில் ஆகிடணும்". இந்த டயலாக்கை கேட்கும் போதெல்லாம் சிரிப்பு வந்துவிடும். நாம் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் இந்த வாழ்க்கையில் ரிவர்ஸ் கியர் என்பதே கிடையாது ஒருவேளை திரும்பிச்சென்றாலும் கூட நாம் விட்டுவந்த கிராமமும் வாழ்க்கை முறையும் அங்கு இருக்கப்போவதில்லை. 2040க்குள் ஜப்பானில் அணு உலைகளே இருக்காது என்று செய்தி வந்த இரண்டாவது நாளில் மூன்று புதிய அணு உலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் 'வாபஸ்' பெறுவதற்கு சாத்தியமே இல்லை என்று சமூக விஞ்ஞானிகள் விமர்சிக்கிறார்கள். 

தொண்ணூறுகளில் திறந்துவிடப்பட்ட "வளர்ச்சி" என்ற பூதம் தனக்குள் ஒட்டுமொத்த தேசத்தையும் சுருட்டிக் கொண்டு உருள்கிறது. வளர்ச்சி என்ற மாயவலையின் அடையாளங்கள் ஊர்தோறும் காட்டப்படுகின்றன. கிராமங்களில் தீபிகா படுகோனே 3ஜி போனை வைத்துக் கொண்டு பேனர்களில் விளம்பரம் செய்கிறார். விவசாய நிலங்கள் "கோல்டன்" நகர்களாகவும், "செளபர்ணிகா" சிட்டிகளாகவும் சைட் போடப்பட்டிருக்கின்றன.

தீபாவளியை புகைகளாலும், விண்ணதிரும் ஓசைகளினாலும் கொண்டாடுவது நமது தகுதியின் வெளிப்பாடாகியிருக்கிறது. கார்கள் வாங்குவது சாதாரணமாகியிருக்கிறது. விலை ஏற்றங்களை காபி குடிக்கும் நேரத்தில் மறந்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்பது இயல்பானதாகியிருக்கிறது. கொலைகளையும், கொள்ளைகளையும் வெறும் செய்திகளாக வாசிக்க பழகிக் கொண்டோம்.

வளர்ச்சியின் அடையாளங்கள் ஊர்தோறும் ஜொலிக்கின்றன. இன்று அப்படியொரு நாள். விநாயகர் சதுர்த்தி. வீதிக்கு வீதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பெரும் ஸ்பீக்கர் செட்களை அலறவிட்டு, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட விநாயகரை வளர்ச்சியின் அடையாளமாக்கியிருக்கிறார்கள். உள்ளூர் 'பெரிய'வர்களுக்கு இது ஒரு வாய்ப்பு. தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறை' படம் காத்திருக்கிறது. கொண்டாடுவோம்.

Sep 17, 2012

அணு விஞ்ஞானி நாராயணசாமியின் கதை

17 comments:


நாராயணசாமி பிறந்தவுடன் அழவே இல்லை. வெறுமனே நாராயணசாமி என்று சொல்வதைவிட அணுவிஞ்ஞானி நாராயணசாமி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.பிரசவம் பார்த்த வைத்தியர் தலை கீழாக தொங்கவிட்டு முதுகில் தட்டிப்பார்த்தார், கிள்ளியும் பார்த்தார். ம்ஹூம். அழுவதாகத் தெரியவில்லை. நர்சை அழைத்து முயற்சிக்கச் சொன்னார். அவரும் எதை எதையோ செய்துவிட்டு 'ஙே' என விழித்ததுதான் மிச்சம். மனுஷன் அத்தனை அழுத்தம்.

வீட்டில் குறும்பைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இரண்டரை வயதில் பள்ளிக்கூடத்தில் அமுக்கிவிட்டார்கள். பள்ளிக்கூடம் போகும் போது செய்த அட்டகாசங்கள் சொல்லி மாளாது. அடித்தாலும் சரி, உதைத்தாலும் சரி  நம் கதாநாயகன் அடங்கியதாக வரலாறு இல்லை. வாத்தியார்கள் நூடுல்ஸ் ஆனதுதான் மிச்சம். 

மின்சாரத்தை ஆராய்கிறேன் என்று ஹேர்பின்னை ப்ளக் பாயிண்டிற்குள் நுழைத்தார். நம் கெட்டநேரம் அவர் பிழைத்துக் கொண்டார். தன் வீட்டிற்கு வரும் சிறுவர்களை தொட்டித்தண்ணீருக்குள் அழுத்தி சாகடிக்கப்பார்த்தார். ஆராய்ச்சி செய்கிறேன் என்று துணிக்கு போடும் நீலம், மண்ணெணெய், சுண்ணாம்புத்தண்ணீர் என  வீட்டில் ஒன்றையும் விட்டு வைத்ததில்லை. கிடைப்பதையெல்லாம் கோக்குமாக்காக கலக்குவதுதான் ஆராய்ச்சி. அவரது ஆராய்ச்சி செட்டப் பார்க்க வேண்டுமே, நீயுட்டனின் ஆராய்ச்சிக் கூடமே தோற்றது போங்கள். இத்தனைக்கும் ஏழாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தார்.

அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் அடுத்தவரை திகிலூட்டக் கூடியதாக இருக்கும்.எழுத்துப்பிழைகளோடு அடுத்தவர்களுக்கு புரியாதபடிக்கு 'என்கோடிங்' செய்து எழுதி வைத்திருப்பார். வீட்டில் ஒரு சாமானை விட்டுவைப்பதில்லை என்று அவரது அம்மா மொத்துவார். ஆனால் விஞ்ஞானி வழிக்கு வருவதாகவே இல்லை. தனக்குதான் கையும் வாயும் வலிக்கிறது என்பதால்  'எப்படியோ தொலையட்டும்' என்று விட்டுவிட்டார். 

இத்தனை நடந்து கொண்டிருக்கும் போது அவருக்கே தெரியாமல் பேக்ரவுண்டில் 'ஒரு நாயகன் உதயமாகிறான்' போன்று ஏதோ ஒரு பில்ட்-அப் பாடல் இருபத்தி நான்கு மணி நேரமும் பாடிக் கொண்டிருந்தது.

தனது ஆராய்ச்சியின் முடிவுகளை சோதனை செய்கிறேன் பேர்வழி என்று ஊர்வன பறப்பன என எல்லாவற்றையும் டார்ச்சர் செய்யத் துவங்கினார். கரப்பான், எலி, பல்லி என கிடைப்பதன் மீதெல்லாம் அந்த 'ஆராய்ச்சி திரவத்தை' ஊற்றுவார். அவை அடுத்த சில நிமிடங்களில் செத்துவிடும். கெரசின் ஒன்று போதாதா ஒரு உயிரைக் கொல்ல? அந்த ஜீவன் சாகும் வரைக்கும் சுண்டு விரலில் ரத்தம் வரும் வரைக்கும் நகத்தை கடித்துக் கொண்டிருப்பார். ரிசல்ட்டுக்காக வெயிட்டிங் என்பதை வெளிப்படுத்தத்தான் இந்த 'நகக்கடி' எஃபெக்ட்.  அந்த உயிர் பிரிந்தவுடன் சக்ஸஸ், சக்ஸஸ் என அட்டகாசம் செய்வார். ஜந்துக்கள்  இவருக்கு வேண்டியே அவரது வீட்டிற்குள் வராமல் பயந்து தப்பித்துக் கொண்டிருந்தன. 

அவிநாசியில் இருக்கும் தனது சக விஞ்ஞானியான பெரியம்மா பையனுக்கு இன்லேண்ட் கவரில் ஆராய்ச்சி முடிவுகளை கடிதமாக எழுதுவதும் உண்டு. "அன்புள்ள ரவியண்ணனுக்கு, நலம் நலமறிய அவா. இங்கு ஆராய்ச்சி சக்ஸஸ். ஆனால் தயாரிப்பு முறை பரம ரகசியம். கடிதத்தில் எழுதினால் யாராவது திருடிக் கொள்வார்கள். உங்கள் ஆராய்ச்சி என்ன ஆனது? நேரில் சந்திக்கும் போது சொல்லித்தருகிறேன்" என்று தகவல் பரிமாற்றம் நடக்கும். இந்தக்கடிதங்களை சி.பி.எஸ்.ஈ பள்ளிகள் பாடத்திட்டமாக மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனவாம்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த வாழ்வில் பெரும் புயல் அடித்தது. அது மத்திய அணு ஆய்வுக்கழகம் நடத்திய தேர்வில் நம் விஞ்ஞானி வெற்றி பெற்றதுதான். தேர்வுக்கு முந்தின நாள் வரைக்கும் அவருக்கு தேர்வு நடப்பதே தெரியாமல்தான் இருந்தது. ஆனால் அணு ஆய்வுக்கழகத்தின் கெட்டநேரம்- கடைசி நேரத்தில் நாராயணசாமியின் அப்பா தேர்வுகுறித்து ஞாபகப்படுத்தி தொலைத்துவிட்டார். அழிக்கும் ரப்பரில் நான்கு பக்கத்திலும் (A)(B)(C)(D) என்ற எழுத்துக்களை எழுதி குலுக்கி குலுக்கி வீசினார். எந்த எழுத்து வருகிறதோ அந்த விடையை குறித்தார். அணு ஆய்வுக்கழகத்திற்கு சனி உச்சத்தில் ஆட்டம் போட்டிருக்கக் கூடும். நாராயணசாமிதான் முதல் மதிப்பெண். 

நேர்காணலுக்கு அழைத்தார்கள். முதன் முதலாக மும்பைக்கு ட்ரெயின் ஏறினார். அருகில் இருந்தவர்களிடம் எல்லாம் தன்னை 'நியூக்ளியர் சயின்டிஸ்ட்' என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டார். இண்டர்வியூ நடத்தியவர்கள்தான் பாவம். கதற வைத்துவிட்டார். எடுத்தவுடனே எனக்கு ஆங்கிலமும் தெரியாது ஹிந்தியும் தெரியாது என்று சொன்னார் நாராயணசாமி. வேறு யாராவதாக இருந்தால் துரத்திவிட்டிருப்பார்கள். இவர்தான் முதல் மதிப்பெண் ஆயிற்றே. ஒரு தமிழ் தெரிந்தவரை அழைத்து கேள்வி கேட்கச் சொன்னார்கள். வந்தவருக்கு நாக்கில் சனி டெண்ட் அடித்து குடியிருப்பார் போல. அணு என்றால் என்ன என்றுதான் ஆரம்பித்தார். நாராயணசாமிக்கு உச்சந்தலையில் முடி நட்டுக் கொண்டது. "அனு பக்கத்துவீட்டுப் பெண் சார். செம ஃபிகர்" என்று ஆரம்பித்து பல்ப் கொடுத்தார். அதற்கு பிறகு அரை மணிநேரத்திற்கு இதே கசமுசாதான். துரத்திவிடும் கட்டத்தில் எந்த ஊர்? என்றார். கடுக்குகாரன்பட்டி என்றார் நாராயணசாமி. அவ்வளவுதான். இன்னும் சில கேள்விகளில் நா.சாமியின் பெரியப்பாவின் பெண்ணுக்கு பேசி முடித்திருந்த மாப்பிள்ளைதான் இத்தனை கேள்விகளையும் கேட்டவர் என்று தெரிந்துவிட்டது. வருங்கால மச்சினனை துரத்த முடியுமா? தமிழ் தெரியாத மற்ற அதிகாரிகளிடம் இவரை பற்றி சூப்பர் டூப்பர் என்றெல்லாம் சொல்லி "அணு விஞ்ஞானி" ஆக்கிவிட்டார்.

அணு ஆராய்ச்சி கழகத்தில் இவர் செய்தது எல்லாமே நட்டாமுட்டி வேலைதான். அணுக்கரு பிளவு பற்றி படித்து வரச்சொன்னால் குமுதம் விகடனை மட்டும் படித்து வருவார். யுரேனியம் பற்றி குறிப்பு எழுதச் சொன்னால் செளகார் ஜானகி பற்றி கட்டுரையே எழுதினார். மேல்மட்டத்தில் கூடி விவாதித்து இனிமேல் நாராயணசாமி ஆணியே பிடுங்கத் தேவையில்லை என்று அறிவித்துவிட்டார்கள். ஆறுமாதம் விடுப்பு கொடுத்து ஊருக்கும் அனுப்பி வைத்தார்கள். அமெரிக்காக்காரனுக்கே நான்தான் ட்யூசன் எடுக்கிறேன் என்று கடுக்குக்காரன்பட்டி முழுவதும் அடித்துவிட்டார். மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையனிடம் ஹிந்தியிலும் ஆற்றுமேட்டில் துணி வெளுப்பவனிடம் ஆங்கிலத்திலும் பேசி மிரள வைத்தார். இவரது ஆங்கில, ஹிந்தி புகழ் சுத்துப்பட்டிலும் ஃபேமஸ் ஆக யாரும் இவர் முன்னால் எதிர்படவே தயங்கினார்கள்.

ஆறுமாதம் விடுப்பு முடிந்து போனபோது அணு கழகத்தில் இவரை ஜோக்கராக பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்திருந்தார்கள். அதாவது பத்திரிக்கையாளரை சந்திப்பதுதான் இவரது வேலை. அணு ஆற்றல் பற்றி சம்பந்தமே இல்லாமல் எதையாவது பேசி குழப்ப வேண்டும். குழப்ப வேண்டாம் என்று சொன்னாலே குழப்பக் கூடிய மனிதர். குழப்பு என்று சொன்னால்? பத்திரிக்கையாளர்கள் நொந்து போனார்கள். 

இதன்பிறகாக மீடியாக்காரர்கள் அவரது புகழை கொடிபறக்கச் செய்தார்கள். தலையங்கங்களில் நகைச்சுவை இடம் பெற்றன. அதாவது தலையங்கங்களை நா.சாமி ஆக்கிரமிக்கத்துவங்கினார். நாராயணசாமி என்ற பெயரை வாசித்தாலே மக்கள் குதூகலம் அடையத் துவங்கினார்கள். டிவி சேனல்களில் இவர் இடம்பெறும் செய்திக்காட்சிகள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் எகிறின. ஒவ்வொரு செய்தியிலும் குறைந்தபட்ச பத்து நிமிடம் இவர் பேசுவதை ஒளிபரப்புமாறு டிவி நிர்வாகிகள் உத்தரவிட்டார்கள். செய்தி பார்க்கும் போது மக்கள் குலுங்கி குலுங்கிச் சிரிக்கும் வரலாற்று நிகழ்வு நடந்தேறியது. ஆனால் நாராயணசாமி எதைப்பற்றியும் கவலைப்படாமல் கலக்கிக் கொண்டிருந்தார். மெகா சீரியல்காரர்கள் தலையில் துண்டு போடலாம் என்றுதான் நினைத்தார்கள் ஆனால் இவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போர்வையை போட்டுக் கொண்டார்கள். வானிலை அறிக்கை புகழ் ரமணன் தன் இழந்த புகழை மீட்பது குறித்து சீரியஸ் டிஸ்கஷன் நடத்துவதாகக் கேள்வி.

வெறும் பி.ஆர்.ஓ வேலையை மட்டும் செய்ய முடியாது என அணு ஆராய்ச்சிக்கழகத்துடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நார்ஸை இப்பொழுது அமைச்சரும் ஆக்கிவிட்டார்கள். இவரை விட வேறு யாராலும் பிரச்சினையை திசைதிருப்ப முடியாது என பிரதமர் முழுமையாக நம்புகிறாராம். சைரன் கார், கறுப்பு பூனைப்படை என்று பட்டையைக் கிளப்பும் நார்ஸ் அதே ஈக்குவேஷனில்தான் டாப்கியரில் போய்க்கொண்டிருக்கிறார். என்ன ஈக்குவேஷனா? அதாங்க யுரேனியம் vs செளகார் ஜானகி. யுரேனியம் அப்படியேதான் இருக்கிறது. செளகார் ஜானகிதான், லட்சுமி, அம்பிகா,ராதா என பயணித்து அமலாபாலில் வந்து நிற்கிறார். யுரேனியம் பற்றி யாராவது கேட்டால் அசராமல் அமலா பால் பற்றி சொற்பொழிவு ஆற்றுகிறார் நம் அணு விஞ்ஞானி. இப்பொழுது சில நாட்களாக அவரைக் காணவில்லை. விசாரித்ததில் லண்டனில் இவரது மெழுகுச் சிலை வைக்கவிருக்கிறார்களாம். போஸ் கொடுக்க போயிருக்கிறார் என்கிறார்கள்.

Sep 16, 2012

ஓபியம்- உலகம் கொண்டாடும் சரக்கு

4 comments:


பியத்துக்கும், ஒசாமா பின் லேடனுக்கு என்ன சம்பந்தம்? பெயர் "ஒ"வில் தொடங்குவதை தவிர வேறு ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பவர்கள், தலிபானும், ஒசாமாவும் எப்படி பணம் சேர்த்தார்கள் என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். ஒரே வரியில் சொல்வதானால் டன் கணக்கில் ஓபியம், ஹெராயின் பிஸினஸை உலகம் முழுவதும் செய்து கோடிகளை டாலர்களில் சுருட்டியெடுத்தார்கள்.

ஆப்கானிஸ்தான் தேசம்தான் ஓபியத்திலிருந்து ஹெராயினை எடுத்து உலகம் முழுவதும் அட்டகாசம் பண்ணுவதாக சில மேலை நாடுகள் புலம்புகின்றன. ஆனால் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏதான் உலகின் மிக முக்கியமான போதை பொருள் கடத்தும் நிறுவனம் என்ற பேச்சும் உண்டு. வெனிசுலா போன்ற சில அரசுகள் இதை அடிக்கடி சுட்டிக்காட்டுவதும், சில நேரங்களில் அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதும் உண்டு. ஆனால் போட்டுத்தள்ளத் தயங்காத தாதாக்களான  'பெரிய அண்ணன்' பற்றிய செய்திகள் அதுவும் சி.ஐ.ஏ பற்றிய எதிர்மறை செய்திகள் எல்லாம் வெளிப்படையாக பேசப்படுவது என்பது கொஞ்சம் அரிதான விஷயம்தான். 

மற்ற-கிட்டத்தட்ட எல்லா போதை செடிகளையும் போல ஓபியமும் வலி நிவாரணியாக பயன்படுகிறது என்பதால், சட்டப் பூர்வமாக ஓபியம் பயிரிடுவது பெரும்பாலான நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒருவன் எல்லோருக்குமே கெட்டவனாக "தியரி"ப்படி இருக்க முடியாது என்கிறார்கள். யாராவது ஒரு ஜீவனுக்காவது நல்லவனாக இருப்பானாம். அப்படித்தான் இந்தக் கட்டுரையின் கதாநாயகன்(கதாநாயகி?) ஓபியமும்.

என்னதான் கெட்ட பொருளாக சித்தரிக்கப்பட்டாலும் இதற்கென்று மருத்துவக் குணம் உண்டு. பழைய கிரேக்கர்கள் ஓபியன்(Opion) என்ற பெயரில் இதை மருந்தாக பயன்படுத்தினார்கள். இதற்கு இன்னொரு பெயர் Tincture of Opium(ஓபியம்+ஈத்தைல் ஆல்ஹகால் கலவை). வகை தொகை இல்லாமல் இருமல்,சளியிலிருந்து ஆல்கஹாலுக்கு அடிமையானவர்கள் வரை எல்லோருக்குமே இதுதான் மருந்து. "எங்கோ போற மாரியாத்தா என்னை புடிச்சு உலுக்கு ஆத்தா" என்ற கணக்காக நோயிலிருந்து விடுபட்டவர்கள் எல்லாம் ஓபியத்தை அடித்துவிட்டு மலையேற ஆரம்பித்தார்கள்.

சீட்டாட்டம், சாராயக் குடி மாதிரியாக ஒபீயமும் கலாச்சாரத்தோடு ஒன்றத் துவங்கியது. அரைக்காசுக்கு ஓபியம் வாங்கினால் ஒரு நாள் போதை கியாரண்டி என்பதால் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பு எதுவுமில்லை.(வேலைக்கு போகாமல் வீட்டிலோ ரோட்டிலோ படுத்துக் கிடப்பதை கணக்கில் வைக்கவில்லை).

ஓபியத்தை அதன் தாவரத்திலிருந்து பிரித்து எடுக்கிறார்கள். பப்பாளிப் பால் எடுப்பது போலத்தான் இதுவும். காய்வெட்டாக இருக்கும் ஓபியத்தின் காய்களில் கத்தியை வைத்து கீறிவிட வேண்டும். வெண்மை நிறத்தில்,பிசுபிசுப்பாக வடியும் இந்தத் திரவம் காயும் போது பழுப்பு நிற பிசினாக காய் மீது ஒட்டியிருக்கும். இந்தப் பிசினை பல விதங்களில் பயன்படுத்தி ஜகஜ்ஜாலங்கள் செய்யலாம்.

ஒபியத்தை புகையிலையோடு சேர்த்து புகைபிடிப்பது போல பயன்படுத்துபவர்களும் உண்டு. ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஓபியம் ஆவியாவதற்கு அதிக வெப்பம் தேவைப்படும். சிகரெட்டுக்குள் திணித்து பற்றவைத்து உறிஞ்சினால் வேலைக்கு ஆகாது. ஓபியம் மட்டும் தனியாக தங்கிவிடும். அப்புறம் "ஓபியம் ஓபியம்ன்னு உலகமே பேசுது..ஆனா நான் ஓபியம் அடிச்சா கூட மப்பு வராம ஸ்டெடியா நிப்பேன் தெரியுமா?" என்று தெனாவெட்டாக சொல்ல வேண்டியிருக்கும். ஓபியம் புகைப்பதற்கென்றே குழாய்கள் தனியாக கிடைக்கின்றன. அவை இதற்கென்றே தனியாக வடிவமைக்கப்பட்டவை. கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக வந்த இந்திப்படங்களில் ஒரு பெண்ணை நடுவில் ஆட விட்டு சுற்றிலும் அமர்ந்து புகைத்துக் கொண்டே கும்மாளமடிப்பார்களே அப்படி.

ஆப்கானிஸ்தான் ஓபியத்தின் மிக முக்கியமான உற்பத்தி தேசம். பல நாடுகளின் மருந்துத் தொழிற்சாலைகளுக்கு(மருந்து தயாரிப்புக்காக) ஓபியம் இங்கு இருந்தே ஏற்றுமதியாகிறது. ஆனால் அங்கு கொஞ்சம் (அல்லது நிறைய)பேர் திருட்டுத்தனமாகவும் ஓபியத்திலிருந்து ஹெராயினை எடுத்து பணம் கொழிக்கிறார்கள்.

இந்தியாவிலும் ஓபியம் அதிகம் பயிரிடப்படுகிறது. இங்குதான் பாரம்பரிய முறையில்(கத்தியில் கீறி பிசின் எடுப்பது)ஓபியம் எடுப்பதும் நடைமுறையில் இருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவை விட கொஞ்சம் குறைவாக ஆனால் உலக அளவில் இதன் உற்பத்தியில் முக்கிய இடம் வகிப்பவை. மற்ற நாடுகளில் கிரிகரி(Gregory) முறையில், அதாவது இலைகள், வேர் தவிர்த்து மொத்த தாவரத்தையும் கசக்கி, நீர்த்துப் போன அமிலத்தில் ஊற வைத்துவிடுவார்கள். பின்னர் சில அமிலம் அல்லது காரம் சேர்த்து சுத்தம் செய்வார்கள்.

வில்லன் பிரகாஷ்ராஜ் ஸ்மார்ட்டாக இருந்தாலும் அவரது அடியாட்கள் எல்லாரும் கடா மீசையும், முரட்டு ஆளாக இருப்பது போல, ஓபியத்தின் தாவர அமைப்பும் முட்களோடும், நாற்றம் வீசுவதாகவும் இருக்கும் என்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை. ஒபியத்தின் மலர்கள் பல வித வண்ணங்களிலும், அளவிலும் அழகில் தூள் கிளப்புபவையாக இருக்கும். சிறிய அளவிலான, காய்ந்த ஓபியம் விதைகள்(குறைந்த அளவு ஆல்கலாய்ட் கொண்டவை) ரொட்டி, கேக் போன்றவற்றில் அலங்காரப் பொருட்களாக கூட உபயோகப்படுத்தப்படுகின்றன.

கொசுறு: கொஞ்சமாக மட்டும் போதையேற்றிக் கொண்டு அளவாக மிதப்பதற்கு Responsible Drug use என்று பந்தாவான பெயர். அந்தக்காலத்தில் நம் மக்கள் வைத்திருந்த சோமபானம், சுராபானம் எல்லாம் அந்த மாதிரி பிரிவினையா என்று தெரியாது. ஆனால் இன்றைக்கு நாட்டிற்கு தகுந்த படி "சரக்கின்" விலையும், பயன்பாடும், உபயோகமும் மாறுகிறது. சவுதி அரேபியாவில் ஆல்கஹாலை கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பு. பிரான்ஸில் மினரல் வாட்டருக்கு செலவு செய்யும் தொகையை விட குறைவான செலவில் ஒயின் வாங்கிவிடலாம்.

Sep 15, 2012

மனோன்மணி

1 comment:


தமிழில் வரும் சிற்றிதழ்களின் பட்டியலை யாராவது கேட்டால் "புது எழுத்து" என்ற பெயர் முதலில் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதற்காக தமிழில் வேறு நல்ல சிற்றிதழ்களே இல்லை என்றெல்லாம் அர்த்தம் இல்லை. மனதுக்குள் 'புது எழுத்து'தான் பதிந்து இருக்கிறது.

சிற்றிதழ் என்பதற்கு எத்தனை நியதிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். என்னளவில் 'காம்ப்ரமைஸ்' செய்துகொள்ளாத தன்மைதான் சிற்றிதழுக்கு அவசியமான தகுதி. "புது எழுத்து" அப்படியான ஒரு இதழ். மனோன்மணி அப்படியான ஒரு ஆசிரியர். 

கடந்த பதின்மூன்று வருடங்களாக 'புது எழுத்து' ஒரு இயக்கமாகவே நடைபெறுகிறது. யாராவது விழா நடத்தி பணமுடிப்பு கொடுத்தால் கிடைத்த பணத்திற்கு சில புத்தகங்களை பதிப்பித்துவிடுகிறார். நல்ல படைப்பை அனுப்பி "புத்தகமாக கொண்டு வர முடியுமா" என்றால் "இந்த மாதச் சம்பளம் புது எழுத்து இதழ் வேலைகளுக்கு சரியாக போய்விட்டது அடுத்த இரண்டு மாதச் சம்பளத்தை சேர்த்து உங்கள் புத்தகத்தை கொண்டு வந்துவிடுகிறேன்" என்கிறாராம். 

மனோன்மணி கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் இருக்கும் தொல்லியல் சின்னங்களையும் குகை ஓவியங்களையும் தேடித் தேடி அலைகிறார். அவை பாலிஷ் போடப்பட்ட கிரானைட் பலகைகளாக லாரிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மனோன்மணி கவிதைகள் எழுதுவார்- எழுதியிருக்கிறார் என்பதுதான் சரியான பதம். இப்பொழுது எழுதுவதில்லை. அவருடைய கவிதைகள் 'கலவரம்' என்ற பெயரில் தொகுப்பாக வந்திருக்கிறது. அது 1998 ஆம் ஆண்டில். இதுதான் அவரின் முதல் தொகுதி. அதன் பிறகாக வேறு ஏதேனும் தொகுப்பு வந்திருக்கிறதா என்றும் இப்பொழுது இந்தத் தொகுப்பு கிடைக்குமா என்றும் தெரியவில்லை. 

நேற்றிரவும் இன்று பகல் முழுவதுமாக இந்தக் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்க முடிந்தது. தொகுப்பில் சில கவிதைகள் பிடித்திருக்கின்றன. சில கவிதைகள் பிடிக்கவில்லை. பிடிக்காத கவிதைகள் ஒவ்வொரு தொகுப்பிலும் இருக்கத்தான் செய்யும். அதுதான் இயல்பும் கூட. பிடித்த கவிதைகளில் இரண்டு.

                                                                      ***

                                                            1) வலி

தூக்கி வந்தேன் பெரிய பலாவொன்றை
தோள்பட்டை வலிக்க வில்லை
உரியவர் முன் கை வீச
இடம் சேர்த்து பெற்ற காசில்
ஒரு சுளை தேடி வாங்கி மென்றேன்
ராத்தூக்கத்தை புரட்டி அதே
பலாப்பழம் மணத்தது
தோளில் குத்துவதாய் உயிர்த்தது
சுமக்க போகவில்லை மறுநாள்


யாரோ ஒருவருக்காக பலாப்பழத்தை தூக்கி வருகிறார். பெரிய சிரமம் எதுவும் இல்லை. பழத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு அதற்கான காசை வாங்கிக் கொள்கிறார். கிடைத்த காசுக்கு ஒரு சுளையை வாங்கித் தின்கிறார். இரவில் அந்தப்பழத்தின் வாசனை தூக்கத்தை கெடுக்கிறது. அப்பொழுது தோளில் வலியெடுக்கிறது.

பழத்தை எடுத்துக் கொண்டு போகும் போது ஏன் வலிக்கவில்லை, காசு கொடுத்து ஒரு சுளை வாங்கித் தின்றுவிட்டு தூங்கும் போது ஏன் வலிக்க்கிறது? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதிலை கண்டுபிடிப்பதில்தான் கவிதையின் சூட்சுமம் ஒளிந்திருக்கிறது.

                                                                ***

                                               2) ஒரு கவிதை

பாதையில் நடந்து கொண்டிருந்தேன்
யாருமென்னை சட்டை 
செய்யவில்லை

இடித்துக் கொண்டவர்கள்
முணுமுணுக்கவில்லை
கோபிக்கவில்லை

எதையும் காட்டவில்லை
அந்த முகங்கள்

ஓரிருவரை
நானே தட்டியும் 
நிறுத்தியும் கேட்டேன்

தாமே
பேசிக் கொள்வதாய்
அபிப்பிராயப்பட்டு
நகர்ந்து போனார்கள்

நான் 
வேகமாய் இடித்து
நடந்து கொண்டிருக்கிறேன்


சாலையில் நடந்து கொண்டிருக்கிறார். யாருமே கண்டுகொள்ளவில்லை. யார் மீதாவது இடித்தாலும் கூட அவரை யாரும் அலட்சியம் செய்வதில்லை. "அட ஏன் யாருமே கண்டு கொள்ள மாட்டேங்குறீங்க?" எனக் கேட்கிறார். அப்பொழுதும் யாரும் பதில் அளிக்கவில்லை "தனியாக பேசிட்டு இருக்கான்" என அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். 

ஏன் இவரை யாருமே கண்டுகொள்வதில்லை? பரிதாபமான ஜீவனாகத் தெரியலாம், பைத்தியமாகத் தெரியலாம்.வேறு ஏதேனும் காரணமாகக் கூட இருக்கலாம். இந்த காரணத்தை யோசிக்க ஆரம்பிக்கிறோம் அல்லவா? அதுதான் கவிதையின் தொடக்கப்புள்ளி. இந்த இடத்திலிருந்துதான் கவிதை விரிவடைகிறது.
                     
                                                                   ***

கவிஞனை பற்றி எந்த நினைவும் இல்லாமல் இந்தக் கவிதைகளை வாசித்திருக்க வேண்டும். அப்பொழுது வேறொரு அனுபவம் கிடைத்திருக்கும். எனக்கு அது சாத்தியமாகவில்லை. உருகி ஓடும் கவிதையிலிருந்து மனோன்மணி என்ற எழுத்தாளன், கவிஞன், தனது அத்தனை சுகதுக்கங்களையும் இலக்கியத்துக்காக கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஆளுமை - பிம்பமாக எழுகிறான். அதை ரசிக்கவும் செய்கிறேன். எந்தச் சங்கடமும் இல்லாமல்.