Jul 24, 2012

திருடர்களின் க்ளாஸிக் காலம்.

3 comments:


முத்தானை கீழே தள்ளி அம்மினியம்மாள் அமுக்கியபோது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. இது நடந்தது ஆலாம்பாளையத்தில். இப்பொழுது யாராவது ஆலாம்பாளையம் எங்கிருக்கிறது என்று கேட்டால் பவானிசாகருக்கு பக்கத்தில் என்று சொல்லிவிடலாம். ஆனால் அம்மினியம்மாள் காலத்தில் பவானிசாகர் அணை கட்டப்பட்டிருக்கவில்லை. அதனால் ஆலாம்பாளையம் ஆலாம்பாளையத்தில்தான் இருந்தது.

முத்தானுக்கு களவாடுவதுவதுதான் குலத் தொழில். பந்தம்பாளையத்துக்காரன். பந்தம்பாளையத்தில் களவாணி வீடு எது என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு எந்த வீட்டை வேண்டுமானாலும் கைகாட்டலாம். வீட்டுக்கு வீடு ஒருத்தனாவது ராத்திரியானால் கிளம்பிவிடுவார்கள். அந்த ஊர்க்காரர்கள் கன்னம் போடும் அளவிற்கு கில்லாடிகள் இல்லை என்றாலும் முற்றத்தில் காயப்போட்டிருக்கும் தானியங்களை அள்ளி வருவது, ஈரத்துணியை போட்டு கோழி பிடிப்பது, வெள்ளாட்டுக்குட்டிகளை அலுங்காமல் தூக்குவது போன்ற சில்லரைத் திருட்டுக்களைச் செய்வார்கள். 

களவு கொடுத்தவர்கள் வெற்றிலையில் மை தடவிப் பார்த்தாலும் சரி கருப்பராயன் கோயிலில் காசுகளை இரண்டாக வெட்டிப்போட்டாலும் பந்தம்பாளையத்துக்காரங்களுக்கு எதுவும் ஆகாது என்பது ஐதீகம். அந்த தைரியத்தில்தான் பல தலைமுறைகளாக ராத்திரிப் பறவைகளாகத் திரிகிறார்கள். ஒரேயொரு முறை மாட்டிக் கொண்டாலும் அதன் பிறகு திருடப் போக மாட்டேன் என்று குலதெய்வம் ராக்காயி அம்மன் கோயிலில் சத்தியம் செய்துவிட்டுத்தான் முதல் திருட்டையே தொடங்குவார்களாம். மாட்டிக் கொள்வது என்றால் தண்டனை பெற்றிருக்க வேண்டும். ஒரு அடி வாங்கிவிட்டாலும் கூட அது தண்டனைதான் என்பது கணக்கு. அதே சமயம் அடியோ அல்லது தண்டனையோ பெறாமல் தப்பித்துவிட்டால் தடை அமலுக்கு வராது.

அம்மினியம்மாளைக் கட்டின மவராசன் மூணாம் வருஷமே வாயைப்பிளந்துவிட்டார். பிளக்கமாட்டாரா பின்ன? அவருக்கு அறுபதைக் கடந்த போதுதான் பதினேழு வயது அம்மிணியம்மாளை மூன்றாம்தாரமாகக் கட்டினார். முதல் இரண்டு தாரங்களுக்கு வாரிசும் இல்லை ஆயுசும் இல்லை. அம்மினியம்மாளை விட்டு அவர் போய்ச் சேர்ந்துவிட்டாலும் சேர்த்து வைத்திருந்த சொத்து நாலு தலைமுறைக்குத் தாட்டும். அத்தனையும் அம்மினியம்மாள் ராஜ்ஜியம்தான். 

அது சித்திரை மாசம். பதினேழு மொடா சோளத்தை களத்து மேட்டில் காயப்போட்டிருந்ததை மோப்பம் பிடித்த முத்தான் ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் ஏரி மேட்டில் ஒளிந்து கொண்டான். சாயங்காலம் வரைக்கும் அக்னி வெயிலில் பண்ணையத்து ஆட்களோடு களத்தில் திரிந்த அம்மினியம்மாள் கம்பஞ்சோற்றை குடித்துவிட்டு கயிற்றுக்கட்டிலில் கால் நீட்டிய போது அயற்சியில் அவளையுமறியாமல் தூங்கிவிட்டாள். அம்மினியம்மாள் தூங்கினால் குறட்டை சத்தத்தில் ஆலமரத்து கிளிகளே கூட பயந்து நடுங்கும் என்பார்கள். இது அவள் கல்யாணம் செய்து வந்த புதிதில்தான். பிறகு கிளிகளுக்கு பழகிவிட்டதாம். அம்மினியம்மாளின் குறட்டையை அவை சட்டை செய்வதில்லை.

அம்மினியம்மாளின் குறட்டைதான் முத்தானுக்கு சிக்னலாக இருந்திருக்கிறது. களத்தில் கிடந்த சோளத்தை கூட்டி வழித்துக் கொண்டிருக்கும் போது அம்மினியம்மாள் விழித்துவிட்டாள். எவனோ திருடுகிறான் என்பதை தெரிந்து கொண்டாள் ஆனால் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பதை நேசர் பார்ப்பதற்காக அசையாமல் படுத்துதிருந்தாள். முத்தானைத்தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவன் மொத்தமாக வழிக்கட்டும் என்று காத்திருந்தாள். முத்தான் மூட்டையைத் தூக்கி தோளில் வைக்கும் வரை காத்திருந்தவள் அடுத்த வினாடி மான் மீது பாயும் புலியைப் போல பாய்ந்து அமுக்கினாள். அம்மினியம்மாள் எழுபது கிலோவுக்கும் சற்றும் குறைவில்லாத ஆறடி உயரமுடையவள். அவளின் எடையும் மூட்டையோடு சேர்ந்து அமுக்க வேறு வழியில்லாமல் முத்தான் சரண்டர் ஆகிவிட்டான்.

அவனை நகரவிடாமல் அழுத்திய அம்மினியம்மாளின் சத்தம் கேட்டு பக்கத்துத்தோட்டத்துக்காரர்கள் கண்களில் தூக்கக் கலக்கமும் பீளையுமாக கூடிவிட்டார்கள். இன்னும் பொழுது விடிய வெகு நேரம் இருந்தது. முத்தானிடம் ஆளாளுக்கு கேள்வி கேட்டார்கள். அவன் வாய் பேசத்தெரியாததைப் போல சைகை காட்டினான். ஊமை போலிருக்கிறது என்று முடிவு செய்தவர்கள் விடியும் வரைக்கும் கிணற்று மேட்டு வேப்பமரத்தில் கட்டி வைத்து கூடவே அம்மினியம்மாளிடம் பண்ணையத்தில் இருக்கும் கடுவானை காவலுக்கு வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். விடிந்தவுடன் பஞ்சாயத்தில் நிறுத்தி தண்டனை தந்துவிடலாம் என்பது பேச்சு. 

ஆலாம்பாளையத்து பஞ்சாயத்தில் தண்டனை ஒன்றும் பெரிதாக இருக்காது. மீறிப்போனால் ஒன்ணேகால் ரூபாய் தண்டனைப்பணமாக கட்ட வேண்டும் அல்லது ஒரு நாள் அம்மினியம்மாளின் தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும். முத்தான் தண்டனைக்கு பயப்படவில்லை. ஆனால் தண்டனை பெற்றுவிட்டால் தனது பிழைப்பு கெட்டுவிடுமே என்றுதான் பயந்தான். பனைமரத்தில் கட்டிவைத்திருந்தால் தப்பிக்க வாய்ப்பு இருந்திருக்கும். நேக்காக கையை அசைத்தால் கட்டி வைத்திருக்கும் கயிற்றை மரத்தின் கூரிய பட்டைகள் அறுத்துவிடும். ஆனால் முத்தானைக் கட்டி வைத்திருந்த வேப்பமரத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை போலிருந்தது.

அப்படியும் இப்படியுமாக நெளிந்து கொண்டேயிருந்தான். ஒன்றும் ஆவதாக இல்லை. பொழுதுவிடிந்தால் தப்பிக்க முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் கடுவானை பக்கத்தில் வருமாறு சைகை காட்டினான். அவன் வந்தவுடன் முத்தான் ஏதோ பேச வாய் எடுக்க முத்தான் ஊமை இல்லை என்பதை அறிந்த கடுவான் அதிர்ச்சியாகிவிட்டான். தான் ஊமை இல்லையென்றும் தப்பிப்பதற்காக நடித்ததாகவும் சொன்ன முத்தான் தன்னை அவிழ்த்துவிட்டால் சுடுகாட்டுக்கு பக்கமாக வேறு ஒரு தோட்டத்தில் திருடி வைத்திருக்கும் ஒரு கூடை மிளகாயையும், ஒரு மொடா அரிசியையும் கடுவானுக்கு தந்துவிடுவதாகச் சொன்னான். 

கடுவானுக்கு முடிவு எடுப்பது சிரமமாகத்தான் இருந்தது. அம்மினியம்மாளுக்கு துரோகம் செய்வதா என்று மனசுக்குள் குத்தியது. ஆனால் நெல்லஞ்சோறு தின்று நான்கைந்து வருடங்கள் ஆகியிருந்தது. கம்பும் சோளமும் சலித்துப்போயிருந்த கடுவானின் நாக்கும் இதயம் சண்டை போட்டுக் கொண்டன. கடைசியில் அவனது நாக்கு வென்றுவிட்டது. அவிழ்த்துவிட்டவன் ஒரு மொடா அரிசியை வீட்டில் வைத்திருந்தால் ஊர்க்காரர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என ஒரு வல்லம் மட்டும் வாங்கிக் கொண்டான். முத்தான் தப்பித்த பிறகு அரிசியை தனது வீட்டில் பதுக்கி வைத்துவிட்டு அதே வேப்பமரத்திற்கடியில் வந்து அமர்ந்து கொண்டான். 

வெள்ளி முளைத்திருந்தது. யாரோ ஒருவர் செம்பை தூக்கிக் கொண்டு சலவாதிக்கு போவது தெரிந்தது. யாராவது கண்ணில் படமாட்டார்களா என காத்திருந்த கடுவான் “ஓடுறான் புடிங்க ஓடுறான் புடிங்க” என்று கத்தினான். செம்புக்காரருக்கு திருடனைப்பிடிப்பதை விடவும் தோதான இடத்தை தேடுவதுதான் அப்போதைய தேவையாக இருந்தது. அவர் புதருக்குள் மறைந்து கொண்டார். ஆனால் ஊர்க்காரர்கள் ஓடி வந்துவிட்டார்கள். ”தெக்கால இட்டாரி வழியா சர்ர்ர்ருன்னு ஓடுறானுங்க” என்றான். அம்மினியம்மாள் “எப்படி ஓடுறான்” என்றாள். “சர்ர்ர்ர்ன்னு ஓடுறானுங்க” என்றான்.

கடுப்பான அம்மினியம்மாள் கடுவான் மீதும் முத்தான் மீதும் சில வசவுச் சொற்களை உதிர்த்தாள். ”ஒண்ணும் களவு போகலைல வுடு புள்ள” என்று ஆளாளுக்கு அட்வைஸ் செய்தார்கள். அம்மினியம்மாள் அடங்குவதாக இல்லை. பார்க்கும்வரை பார்த்துவிட்டு ஆளாளுக்கு செம்பை எடுக்கக் கிளம்பினார்கள். எல்லோரும் போய்விட்ட பிறகு தனியாகக் கத்திக் கொண்டிருந்தவளையும் வெகு சீக்கிரமாக செம்பு அழைக்கத் துவங்கியது.

Jul 22, 2012

சீண்டல்

3 comments:

அலுவலகத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு எங்களுடன் வேலை செய்யும் இன்னொருவரைக் கண்டாலே வேப்பங்காய்தான். அவர் என்ன செய்தாலும் குறை கண்டுபிடிப்பதும் சீண்டுவதமாகவே இவருக்கு பொழப்பு ஓடிக் கொண்டிருக்கும். தன்னை நக்கல் அடித்தாலும் சரி, மேனேஜரிடம் போட்டுக் கொடுத்தாலும் சரி அவர் இவரைக் கண்டு கொண்டதில்லை. 

அவரைப் பற்றி மேனஜேரிடம் ஒரு முறை போட்டுக் ’கொடுத்த’போது மேனேஜர் டென்ஷனாகிவிட்டாராம். முன்னேறுவதற்காக கிட்டத்தட்ட எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் குனிகிறார்கள்; காம்ப்ரமைஸ் செய்து கொள்கிறார்கள். நீங்கள் வளையாதவராகவும் அடுத்தவர்களிடம் சமரசம் செய்துகொள்ளாதவராகவும் இருக்கும் வரை சந்தோஷம்தான். நீங்களும் அதே தில்லாலங்கடி வேலைகளைச் செய்துவிட்டு அடுத்தவன் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று ‘பன்’ கொடுத்திருக்கிறார். இருந்தாலும் வயிற்றெரிச்சலார் மாறியதாகத் தெரியவில்லை.

வயிற்றெரிச்சலார் உங்களை இப்படி சீண்டுகிறாரே ஏன் கண்டுகொள்வதில்லை என வாய் இருக்க மாட்டாமல் கேட்டுவிட்டேன். லெக்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இவர் செய்த வேலையை வயிற்றெரிச்சலார் ஒரு முறை திருடிக் கொண்டாராம். ஆனால் இவர் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அந்த குற்றவுணர்ச்சியிலோ அல்லது எங்கே இவன் நம்மைப்பற்றி டமாரம் அடித்துவிடுவானோ என்ற பயத்தினாலோ என்று தன்னை சீண்டிக் கொண்டிருப்பதாக அவர் பேசிக் கொண்டேயிருந்தார். இப்படி அடுத்தவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது வம்பு பேசுவதாக ஆகிவிடக் கூடும் என நழுவ வேண்டியதாகிப்போனது.

இவருக்கு ஒரு ப்ரோமோஷனும் கிடைத்துவிட்டது. வயிற்றெரிச்சலாரை பற்றி கேட்கவும் வேண்டுமா. வயிறு பற்றியெரியத் துவங்கியது. ஃபயர் சர்வீஸ் கூட தேவைப்படலாம் என்று அலுவலகத்தில் நக்கல் அடித்துக் கொண்டார்கள். இதன் பிறகாக அலுவலக மீட்டிங்களில் வெளிப்படையாக அவரைச் சீண்டத் துவங்கினார். அப்பொழுதும் இவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டிருந்தார். ஒரு சமயம் வயிற்றெரிச்சலார் மீட்டிங்கில் எல்லை மீறிப்போன போது இவர் யாருக்கோ ஃபோன் செய்து சிரித்துக் கொண்டிருந்தார். டென்ஷனான வயிற்றெரிச்சலார் வேறு வழியில்லாமல் அமைதியாகிப் போனார்.

அடுத்த நாள் நோட்டீஸ் போர்டில் “பொன்மொழிக் கார்னர்” என்ற பகுதியில் பின்வருமாறு எழுதியிருந்தது:

”ஒருவன் உங்களைப் பார்த்து வயிறு எரிந்து கொண்டிருக்கும் போது அதை சைலண்டாக அனுபவித்துப்பாருங்கள். அதைவிட வேறு பெரிய சந்தோஷம் இந்த உலகில் இல்லை என்று தோன்றும்”

Jul 21, 2012

குதிரை முட்டையும் வறண்ட நதிகளும்

3 comments:

ஜூன்,ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் தென்மேற்கு பருவமழைக்கான காலம். ஜூனில் ஒரு துளி கூட நிலத்தை தொடவில்லை. ஜுலை இறுதியில் மூன்று நாட்கள் வானம் தூவானம் போட்டது. ஆகஸ்ட் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. 

நீலகிரி மலையிலிருந்து இறங்கும் பவானி ஆற்றுக்கு மேட்டுப்பாளையம்தான் சமவெளியின் தொடக்கப்புள்ளி. இந்த முறை மேட்டுப்பாளையம் சென்றிருந்த போது சிற்றோடையை விடவும் குறைவான அளவில் நீர் ஆற்றில் ஓடிக்கொண்டிருந்தது.

முப்பது வருடத்தில் இவ்வளவு குறைவான தண்ணீரை பவானியில் பார்த்ததில்லை என நினைத்துக் கொண்டேன். அறுபத்தைந்து வருடத்தில் இவ்வளவு குறைவான தண்ணீரை நான் பார்த்ததில்லை என அப்பா சொன்னார். தாத்தா இருந்திருப்பின் அவரும் இதையே சொல்லியிருக்கக் கூடும் ஆனால் தொண்ணூறு வருடங்கள் என்று வருடத்தின் எண்ணிக்கை மட்டும் மாறியிருக்கும். 

வருணபகவானுக்கு ஸ்தோத்திரம். 

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு குடிநீர் தேவையை நிலத்தடி நீர்தான் பூர்த்தி செய்கிறதாம். உலக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம்.

பெங்களூரில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் கிடக்கிறது. பெங்களூரில் மட்டும் இல்லை ஒட்டுமொத்த இந்தியாவிலும் தான். மெட்ரோ சிட்டிகளில் ஆறு இஞ்ச் போர்வெல் போட்டு இருபத்தி நான்கு மணிநேரமும் நீரை உறிஞ்சி கோடிகளில் புரள்கிறார்கள் ‘வாட்டர் மாஃபியா’க்கள்.  இது ஒரு வெளிப்படையான அண்டர்வேல்ட் உலகம். 

இந்தியா முழுவதும் நிலத்தடி நீரை பொதுச்சொத்தாக அறிவித்துவிடலாம் என மத்திய அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறதாம்.  

எல்லோரு பாடிய பல்லவிதான் “மரங்களை வெட்டுகிறோம், ப்ளாஸ்டிக்கால பூமியை நிரப்புகிறோம், இயற்கையை சுரண்டுகிறோம்” 

ஆமென்!.  

                                                                              ***


குதிரை முட்டை என்ற ஒரு புத்தகம் வெளி வந்திருக்கிறது. வீரமாமுனிவரின் ’பரமார்த்த குரு கதை’களைத் தழுவிய ‘குதிரை முட்டை’ என்ற நாடகம் பற்றிய புத்தகம் இது. நாடகத்தின் பிரதி, நாடகத்தை பற்றிய இருபது கட்டுரைகள் மற்றும் நாடக இயக்குனர் சண்முகராஜாவுடன் ஒரு நேர்காணல் என ஒரு நாடகத்தை பற்றிய விரிவான பதிவு. ஆவண முயற்சி என்பதும் பொருந்தக் கூடும்.

’குதிரை முட்டை’ஐ பற்றிய ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொருவரால் எழுதப்பட்டிருக்கிறது. நாடகப்பிரதியை வாசித்துவிட்டு கட்டுரைகளை வாசிக்கும் போது ஒரே நாடகத்தை வெவ்வேறு கோணங்களில் வாசகனால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாடகத்தை எப்படி இருபது முறைகளில் புரிந்து கொள்ளலாம் என்பதற்கான முயற்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம். 

புரிதல் தவிர்த்து நாடகத்தின் தொழில்நுட்பம், காட்சியமைவுகள், குறைகள் என விரிவான தளத்திற்கு நாடக வாசகனை நகர்த்துகிறது. அவ்வகையில் ஒரு நாடகம் பற்றிய முழுமையான புத்தகம் இது. 

தமிழில் இத்தகைய முயற்சிக்கு முன் மாதிரிகள் எதுவும் இல்லை என நினைக்கிறேன். 

இந்த நூல் ஒரு புது முயற்சி. முக்கியமான முயற்சியும் கூட. 

தொகுப்பாசிரியர்கள் : நெய்தல் கிருஷ்ணன், சதீஸ்வரன்
வெளியீடு: நிகழ் நாடக மய்யம், மதுரை.

                                                                      ***


ஜூலை 29 ஆம் தேதி சேலத்தில் ’தக்கை’ சார்பில் புத்தக வெளியீடு நிகழ்கிறது. அகச்சேரன், தூரன் குணா மற்றும் வே.பாபு ஆகியோரினது கவிதை நூல்கள் வெளியிடப்படுகின்றன. மூவருமே வெளியுலக வெளிச்சத்தை தவிர்த்து ஒதுங்கியிருக்கும் கவிஞர்கள். 

குணா மற்றும் பாபு ஆகியோரது தொகுப்புகளின் அட்டைப்படங்களை மயூரா ரத்தினசாமி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

பார்த்தவுடன்‘க்ளாசிக்’ என்ற வார்த்தைதான் தோன்றியது.
                                                            
                                                                    ***

ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து கல்கி வார இதழில் ரோபோக்களைப் பற்றிய ஒரு தொடர் எழுதவிருக்கிறேன்.  ‘ரோபோ ஜாலம்’ என்ற தலைப்பில்.  இந்த வார கல்கியில் தொடர் பற்றிய அறிவிப்பு வெளி வந்திருக்கிறது. 

எம்.டெக்கில் படித்தது ரோபோட்டிக்ஸ் சார்ந்த படிப்புதான் என்றாலும் அது மட்டுமே ரோபோக்கள் பற்றிய கட்டுரைகள் எழுதுவதற்கு போதுமானதில்லை என்பதை முதல் கட்டுரை எழுதும் போதே உணர முடிந்தது. கல்கி இதழில் எழுதவிருப்பது மகிழ்ச்சியாக இருப்பினும் எதிர்கொள்ளவிருக்கும் பெரும் பொறுப்பும், கட்டுரைகளுக்கு தேவைப்படவிருக்கும் உழைப்பும் ஒரு வித பதட்டத்தை உண்டாக்குகின்றன. 

Jul 20, 2012

பெரியாரியத்தின் சரிவுக் காலம்.

5 comments:                                                                   (1)

அன்பின் மணி,

அருமையாக போகிறது கதையின் நடை. மிக நன்றாக இருக்கிறது.

சமீபத்திய கதைகளின் ஜாதிய, மத உரையாடல்கள் சற்றே மனதை என்னவோ செய்தது..அவை உண்மையாக நடக்கும் பட்சத்தில் கூட.எனது மனதில் பட்டது.சொல்லி விட்டேன்..தவறு இருந்தால் மன்னிக்கவும். 

தொடர்ந்து கதைகள் எழுதுவது தொடரட்டும்.தங்களின் திறன் மிக அற்புதமாக வெளிப்படுகிறது.

நன்றி,

அன்புடன், 
Swami
மலேசியா.
                
                                                                         (2)


அன்புள்ள மணிகண்டன்,

உங்கள் மின்னல் கதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வாசிக்க வைத்துவிடுகிறீர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அத்தனை சுவாரசியம். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளம். 

ஜாதீயம் கலந்த சில கதைகளை வாசித்த போது எனக்கு ஒரு கேள்வி தோன்றியது. பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

பெரியாரியம் என்ற கோட்பாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? தற்காலத்தில் அதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

தொடர்ந்து எழுதுங்கள். என் நண்பர்களும் உங்களுக்கு வாசகர்கள் ஆகியிருக்கிறார்கள்.

நட்புடன்,
ரவீந்திரன்
அகமதாபாத்.


                                                             ****** 

வணக்கம்.

1) சாதீயக் கதைகளை எழுதியே தீர வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. சுவாரசியம் என்பதனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுதான்  மின்னல்கதைகளை எழுத ஆரம்பித்தேன் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

கதைககளின் வழியாக கிடைக்கப்பெற்ற புதிய வாசகர்களும், கதைகளுக்கான எதிர்வினைகளும் மற்றும் விமர்சனங்களும் சுவாரசியம் என்ற ஒற்றை அம்சம் மட்டுமே கதைகளை நகர்த்த போதுமானதில்லை என்பதை உணர்த்தின. இந்த ஒற்றை அம்சத்தைத் தாண்டி வேறு எதையாவது பற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. பால்யத்தில் கேட்ட கதைகளும், அப்பொழுது எதிர்கொண்ட சம்பவங்களும் கை கொடுக்கத் துவங்கின. அப்படியாகத்தான் கொங்குப்பகுதியில் நிலவும் வெளித் தெரியாத ஜாதீய அடக்குமுறைகளை கதைகளாக்க முயற்சித்தேன்.

2) பெரியாரியம் என்ற கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கை உண்டு. தமிழகத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை முற்றிலுமாக நீக்கவில்லையென்றாலும், அந்தக் குறைபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஓரளவுக்கு மரியாதையான இடத்தை சமூகத்தில் பெறுவதற்கும் பெரியார் பெரும் காரணமாக இருந்திருக்கிறார் என நம்புகிறேன். 

பெரும் இயக்கமாக எழும்பிய பெரியாரியம் தொடர்ந்து காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை என்று சொல்வதைவிடவும், பெரியாரியம் தொடர்ந்து சமூக இயக்கமாக நிலைபெறுவதை பிற இயக்கங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன என்பது பொருத்தமாக இருக்கக் கூடும்.

1970களுக்கு பிறகாக சமூகத்தின் சீரமைப்பு என்பதனையும் விடவும் தங்களின் பிழைப்புவாதமே அரசியல்கட்சிகளுக்கு அவசியமானதாகிப்போனதன் பிறகாக பெரியாரிய கோட்பாடுகள் இயக்கமாக பரவுவது தடுத்து நிறுத்தப்பட்டது. கடவுள் மறுப்பை வெளிப்படுத்தவும், ஆதிக்கசாதியினரின் எதிர்ப்புணர்வை எதிர்கொள்ளவும் அரசியல் தலைவர்கள் தயங்கினார்கள். 

பகுத்தறிவு பேசிய அரசியல்வாதிகள் பெரியாரியத்தை மெல்லக் கைவிடத் துவங்கினார்கள். இந்தக் காலகட்டத்திலேயே பெரியாரியம் வழிபாட்டுக்குரியதாகவும் மாற்றப்பட்டது. பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுகிறார்களோ இல்லையோ தங்களின் போஸ்டர்களில் பெரியாரின் படத்தை பயன்படுத்தத் துவங்கினார்கள். இத்தகைய போலி ‘பெரியாரிஸ்ட்’கள் பெரியாரின் கோட்பாடுகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். 

எந்த ஒரு தத்துவக் கோட்பாடும் தொடர்ச்சியான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். எதிர்மறையான விமர்சனங்களுக்கான இடம் அனுமதிக்கப்பட்டு விவாதம் நிகழும் போதுதான் கோட்பாடுகள் தம் இருப்பை மேலும் நிலைப்படுத்திக்  கொள்ள முடியும். ஆனால் இங்கு பெரியாரியத்தை வழிபாட்டுக்குரியதாக மாற்றி அதனைச் சுற்றிலும் இரும்பு வேலியும் அமைத்துவிட்டார்கள். 

எப்பொழுது ஒரு கோட்பாடு வழிபாடுக்குரியதாக மாறிப்போகிறதோ அப்பொழுது ’நமக்கேன் வம்பு’ என அதனை விமர்சிப்பதும் குறைந்து போகிறது. விமர்சிக்கப்படாத கோட்பாடுகள் அதன் பிறகாக உருவாகும் தலைமுறையினரிடத்தில் பெரும் தாக்கம் எதையும் உருவாக்குவதில்லை. அந்தக் கணத்திலிருந்து கோட்பாடு தனக்கான சரிவான பாதையை எடுத்துக் கொள்கிறது. 

பெரியாரியத்தை முன்வைத்து சமூக அளவிலான எந்தப் பெரிய விவாதமும் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை என்பதும், மீறி பெரியாரை விவாதித்தாலும் கூட பின்னணியில் அரசியல் சுயநலம் பல்லிளிக்கிறது என்பதும்தான் நிதர்சனம்.

இன்னமும் மேட்டூரிலும், சத்தியமங்கலத்திலும், கோயமுத்தூரிலும்   இன்னும் பல ஊர்களிலும் பெரியாரியத்தைக் கைக்கொண்டிருக்கும் மரியாதைக்குரிய களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் கார்பொரேட் சாமியார்களையும் பார்ப்பனீய ஊடகத்தையும் எந்தவிதத்திலும் எதிர்க்க முடியாது. 

3) ’பெரியாரிஸ்ட்’ ஆக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியிருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரிக்காலங்களில் இறையுணர்வு இல்லாதவனாக இருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் சாதீய உணர்வுகள் மனதிற்குள் இருந்தன. பிறகு சாதீயம் பற்றிய தெளிவு பிறந்த போது கடவுள் நம்பிக்கை உள்ளவனாக மாறியிருந்தேன். பெண்ணிய சுதந்திரத்தில் மற்றவர்களுக்கு நான் காட்டிக் கொண்டிருக்கும் எனது முகம் நேர்மையானதுதானா என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே எந்தக் காலத்திலும் ’பெரியாரிஸ்ட்’ என்று என்னை நான் சொல்லிக் கொண்டதில்லை.

                                                                  ***
மின்னல்கதைகளை வாசிப்பதற்கும் சிரத்தையெடுத்து மின்னஞ்சல் அனுப்பியமைக்கும் எனது நன்றிகள். இத்தகைய கடிதங்கள் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தை அளிக்கின்றன.

Jul 18, 2012

என் பெயர் கான். ஆனால் நான் தீவிரவாதியல்ல

3 comments:


    மழை நசநசத்துக் கொண்டிருந்தது. பெங்களூரில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் வரைக்கும் தொடரும். மழைக்காலத்தில் சாலையோர மரங்களில் பாசி படிந்து கிடப்பதை பார்க்க முடியும். இந்த வருடம் ஜூன் மாதத்தில் மழை இல்லை. ஜூலையின் இறுதியில் இருந்துதான் பெய்து கொண்டிருக்கிறது. 

அருள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. தினமும் பைக்கில்தான் அலுவலகம் போய் வருகிறான்.  அலுவலகத்திலிருந்து வீடு போய்ச்சேர ஒரு மணி நேரம் பிடிக்கும். மழைக் காலத்தில் ஒன்றரை மணி நேரம் கூட ஆகிவிடுகிறது. வழக்கமாக டொம்ளூர், கோரமங்களா, ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் ஆகிய பகுதிகளை தாண்டும் வரை அருள் கண்டகண்ட சமாச்சாரங்களை யோசித்துக் கொண்டே வருவான். கண்டகண்ட சமாச்சாரங்கள் என்பதில் அலுவலகப் பிரச்சினை, வீட்டுச்சிக்கல்கள், சினிமாக்கதைகள், பழைய காதலிகள் என எது வேண்டுமானாலும் அடங்கியிருக்கும். எதைப் பற்றியும் யோசனை செய்ய விருப்பமில்லாத போது யாருடனாவது ஃபோனில் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவான். 

ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டைக் கடந்து மங்கமன்பாளையாவைச் சேரும் இடத்திலிருந்து அருளுக்கு பதட்டம் தொற்றிக் கொள்ளும். மங்கமன்பாளையாவில் முஸ்லீம்கள் அதிகம். சாலைகள்  குறுகலானவை. வீடுகள் குட்டி குட்டியாகவும் நெருக்கமாகவும் அமைந்திருக்கும். இந்தச் சாலைகளில் வேகமாக பைக் ஓட்டும் இளைஞர்களும், வாகனங்களைப் பற்றிய எந்த பயமும் இல்லாமல் சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களும் அருள் பதட்டம் அடைவதற்கு தேவையான சூழலை உருவாக்கி வைத்திருப்பார்கள். பெங்களூர் வந்த புதிதில் இந்தப்பகுதியைத் தாண்டுவதில் அருளுக்கு பெரிய சிரமமமோ அல்லது பயமோ இருக்கவில்லை. 

தீபாவளிக்கு முந்தின நாள் நிகழ்ந்த அந்த சம்பவத்தை பார்த்த பிறகு அருளால் பதட்டம் அடையாமல் இருக்க முடியவில்லை. அது ஒரு முன்னிரவு நேரம். அருள் அலுவலகம் முடிந்து வரும் போது மங்கமன்பாளையாவில் ஆண்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பார்க்கவேண்டும் என மூக்கு அரித்தது. இறங்கி கூட்டத்திற்குள் சென்றான். ஒரு ஆளை நிறுத்த வைத்து முகத்தில் இரத்தம் வரும் வரைக்கும் அடித்துக் கொண்டிருந்தார்கள். அவன் அனேகமாக வட இந்தியனாக இருக்கக் கூடும். பேசுவதற்கான தெம்பு அவன் உடலிலும் மனதிலும் இல்லை என்பது தெரிந்தது. இருப்பினும் அவனுக்கு அடி கொடுப்பதை சில இளைஞர்கள் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அவன் ஒரு முஸ்லீம் குழந்தையின் மீது பைக்கை இடித்துவிட்டானாம். அவனை அடித்தது போதும் என்று சொல்வதற்கு அருகில் ஒருவரும் இல்லை. அருளுக்கும் அத்தகைய துணிச்சல் துளியும் கிடையாது.

கூட்டத்தை கலைத்துக் கொண்டு வந்த ஒரு போலீஸ் கான்ஸடபிள் ”சலோ சலோ” என்றார். கூட்டம் களைவதற்கு முன்பாகவே அருள் கிளம்பி வந்துவிட்டான். இதன் பிறகுதான் மங்கமன்பாளையாவை கடக்கும் போதெல்லாம் அருள் பதட்டம் அடையத் துவங்கினான். அவனையும் அறியாமல் “மை நேம் இஸ் கான். ஆனால் நான் தீவிரவாதியல்ல” என்ற ஷாருக்கானின் வசனம் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தாலும் பதட்டத்தை தவிர்க்க முடிந்ததில்லை. ஆனால் இது ஐந்து நிமிட பதட்டம்தான். அதுவும் வெளிகாட்டத் தேவையில்லாத மென் பதட்டம். மங்கமன்பாளையாவைத் தாண்டி பொம்மனஹள்ளியை அடையும் போது தான் நார்மல் ஆகிவிடுவதை அருள் உணர்ந்திருக்கிறான்.

இன்றைக்கு மழையின் காரணமாக குடியிருப்புகள் இருக்கும் சாலைகளில் ஒருவரும் இல்லை. மங்கமன்பாளையாவை அடைந்த போது மின்சாரமும் இல்லை. கும்மிருட்டாக இருந்தது. சலவை செய்து வைத்திருக்கும் சட்டையை இரண்டு நாட்களுக்கு அணிந்து கொள்ளும் வழக்கமுடைய அருள் இன்று புதுச்சட்டை அணிந்திருந்தான். சட்டை ஈரமாகாமல் இருந்தால் இன்னொரு நாள் அணிந்திருக்க முடியும் என நினைத்தான் ஆனாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் வண்டி ஓட்டுவது அருளுக்கு ஆசுவாசமாக இருந்தது. தினமும் மழை வந்தாலும் கூட பரவாயில்லை என்று தோன்றியது.

கொஞ்சம் வேகம் எடுத்தான். மழை நீர் ஹெல்மெட் கண்ணாடி மீதாக வழிந்து கொண்டிருந்தது. பாதை சரியாகத் தெரியவில்லை. நூறு மீட்டர்கள் கடந்திருப்பான். சடாரெனெ சத்தம் கேட்டது.  ஏதோ உருவத்தின் மீது இடித்துவிட்டான். மோதலுக்கு சில வினாடிகள் மட்டுமே தேவைப்பட்டது. இடிப்பதற்கு முந்தைய நொடி வரை அந்த உருவம் அருளின் கண்களுக்குத் தெரியவில்லை. இடிக்கும் கணத்தில் யார் மீதோ இடிக்கவிருப்பதாக உணர்ந்தான். ஆனால் வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. 

ஹெல்மெட் தனியாகக் கிடந்தது. அருளும் கீழே கிடந்தான். ஆனால் அவனால் எழுந்திருக்க முடிந்தது. எழுந்து பார்த்த போது எதிரில் வந்த அந்த உருவம் சாக்கடைக்குள் கிடந்தது. சப்தம் எதுவும் இல்லை. வெளிச்சம் இல்லாததால் யாரென்றும் பார்க்க முடியவில்லை. அவசர அவசரமாக செல்போனில் இருந்த டார்ச்சை அடித்து பார்த்தான்.

அருளுக்கு ஒரு கணம் மூச்சு நின்று திரும்ப வந்தது.நிறைமாத கர்ப்பிணிப்பெண். பர்தா அணிந்திருந்தாள். அசைவற்றுக் கிடந்த அவளது நெற்றி சாக்கடையின் விளிம்பில் அடித்திருந்தது.  பால் பாக்கெட் வாங்கி வந்திருப்பாள் போலிருக்கிறது. பாக்கெட் அவளுக்கு அருகில் உடைந்து கிடந்தது. இதற்கு மேலும் அருளால் அவளைப் பார்க்க முடியவில்லை. அவள் மீதான பரிதாபத்தைவிடவும் தான் தப்பிக்க வேண்டும் என்ற பயமே அவனை அவசரப்படுத்தியது. மிக அவசரமாக பைக்கை எடுத்தான். முதல் உதையில் ஸ்டார்ட் ஆகவில்லை. இன்னொரு உதைக்கு பிரச்சினை செய்யாமல் பைக் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அந்தப் பெண்ணை திரும்பிப்பார்த்தான். அப்பொழுதும் அசைவற்றுத்தான் கிடந்தாள். யாரோ ஒருவன் பின்னாலிருந்து ஓடி வருவது தெரிந்தது. பைக்கை முறுக்கினான். அது வேகமெடுத்த போது நெற்றியில் இருந்து வழிந்த இரத்தம் அவனது கண் இமைகளில் பிசுபிசுத்தது. மழை இன்னமும் நசநசத்துக் கொண்டிருந்தது. “மை நேம் இஸ் கான்” என்ற வசனம் ஏனோ திரும்பவும் நினைவுக்கு வந்தது.

Jul 17, 2012

ஓவியம்: என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி

4 comments:"என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி" கவிதைத் தொகுப்பில் இடம்பெறவிருக்கும் கவிதைகளைப் பற்றி ஓரிரு மாதங்களுக்கு முன்பாக ஓவியர் ஞானப்பிரகாசம் ஸ்தபதியுடன் பேசிக் கொண்டிருந்ததேன்.

“உங்கள் தொகுப்பிற்கான அட்டைப்பட ஓவியத்தை நான் வரைஞ்சு தரட்டுமா நண்பா” என்றார். 

உள்ளூர மிகுந்த சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவரின் வேலைகளுக்கு குறுக்கீடாக இருக்குமோ என்பதற்காக தயங்கினேன். அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை என்றார். 

கவிதைகளை மொத்தமாக அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தேன். அட்டைப்படத்திற்கான ஓவியத்தை ஞானப்பிரகாசம் தருவதாகச் சொல்லியிருக்கிறார் என காலச்சுவடு பதிப்பகத்திற்கு தகவல் தந்திருந்தேன். பதிப்பகத்திலிருந்து எந்த அவசரப்படுத்தலும் இல்லை. ஞானத்திற்கு நான் நினைவூட்டல் செய்ததாக கூட நினைவில் இல்லை. தனது பயணங்கள், ஏற்கனவே ஒத்துக் கொண்ட ஓவிய வேலைகளுக்கும் இடையில் தொகுப்பிற்காக அற்புதமான ஓவியத்தை அனுப்பி சந்தோஷம் கொள்ளச் செய்திருக்கிறார். 

கவிதைகளில் சொல்லாமல் விட்டுப்போன ஆயிரம் செய்திகளை இந்த ஓவியம் பேசுகிறது என்றுதான் தோன்றுகிறது. 

ஞானப்பிரகாசத்திற்கு நன்றி கலந்த அன்பு. (அவரது அலைபேசி எண்: 9944011944)

தொகுப்பிற்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் தொகுப்பு வெளியாகும். காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவிருக்கிறது.

எனது பெரும்பாலான எழுத்து நிசப்தம்.காம் தளத்தின் வழியாகத்தான் வெளிப்படுகிறது. இத்தளத்தினூடாக எதிர்கொள்ளும் உங்கள் விமர்சனங்களும் பாராட்டுகளுமே என்னை உற்சாகமாக இயங்கச் செய்து கொண்டிருக்கின்றன. உங்கள் அனைவருக்கும் எனது பிரியமான அன்பும் நெகிழ்வான நன்றிகளும்.

Jul 16, 2012

லதாவின் இரண்டாவது கணவன்

5 comments:


லதாவுக்கு பரந்தாமன் இரண்டாவது புருஷன். இப்படித்தான் இந்தக் கதையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது ஓரளவுக்குத்தான் உண்மை. லதாவுக்கு பதினேழு வயதாக இருக்கும் போதே கொண்டையம்பாளையத்து மிராசுதார் சுப்பிரமணியத்துக்கு  கட்டிக் கொடுத்துவிட்டார்கள். விவரம் பத்தாத வயது என்றெல்லாம் சொல்ல முடியாது. பக்குவம் இல்லாத பருவம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

லதாவுக்கு பதினெட்டு வயது முடிவதற்குள்ளாக மகனும் பிறந்துவிட்டான். மகனை கவனித்து, மாமியாரின் அழிச்சாட்டியத்துக்கெல்லாம் ஈடு கொடுத்து, சுப்பிரமணியத்துக்கு சோறாக்கி கொட்டி- இங்கு கொட்டி என்பதை அழுத்தம் திருத்தமாக வாசியுங்கள். சுப்பன் பெருஞ்சோற்றுக்காரன். உப்புச்சப்பு இல்லாமல் செய்து வைத்திருந்தாலும் கூட மூன்று ஆட்கள் தின்னும் அளவிலான சோற்றை ஒரே ஆள் தின்பான். கொஞ்சம் காரஞ்சாரமாக செய்திருந்தால் கேட்கவே வேண்டாம். இப்படியாக திருமணத்திற்கு பிறகான நான்கைந்து ஆண்டுகளை ஓட்டி முடித்த போது லதா இருபது வயதுக்கான வனப்பை பெற்றிருந்தாள்.

இந்த காலகட்டத்தில் மாமியார் மண்டையை போட்டிருந்தாள். மகன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான். சுப்ரமணியம் ஊருக்குள் பஞ்சாயத்து செய்யும் பெரிய புள்ளி ஆகியிருந்தான். பஞ்சாயத்து முடிந்து வரும் போது ஆக்கி அடுப்புக்கு அருகில் வைத்திருந்தால் அள்ளிப்போட்டுத் தின்றுவிட்டு தூங்கிவிடுவான். மாமியார் போன பிறகு மொத்த பன்னாட்டும் லதாவின் கைகளுக்கு வந்துவிட்டது. வேட்டி துணிமணிகளை வெள்ளாவி போட்டு வெளுப்பதற்கும், வீடெல்லாம் சுத்தப்படுத்தி பாத்திரம் கழுவுவதற்கும், தோட்டங்காட்டு வேலைகளை பார்ப்பதற்கும், சமையல் செய்வதற்கும் என ஏகபட்ட ஆட்களை நியமித்துவிட்டாள்.

ஊருக்குள் ஏதாவது நல்ல காரியம் என்றால் தனது வாலிபத்தின் நெளிவு சுளிவுகள் தெரிய பட்டுச்சேலை உடுத்தி அலுங்காமல் போய் வருவதும், எழவு வீடென்றால் பத்து நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டு வந்துவிடுவதும் லதாவின் வாடிக்கையாகியிருந்தது. நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் ஆண்களின் கண்களையும் பெண்களின் கண்களையும் தன்னை நோக்கி ஈர்ப்பதில் லதா கில்லாடி ஆகியிருந்தாள். மற்ற நேரங்களில் டிவி பார்ப்பதும் பொழுது போகாத நேரத்தில் யாருடனாவது தாயம் விளையாடுவதும் என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு இந்த சுக வாழ்க்கையும் சலிக்க ஆரம்பித்திருந்தது. அப்பொழுது அவள் இருபத்து நான்கு வயதை அடைந்திருந்தாள்.

இந்தச் சமயத்தில்தான் பக்கத்து தோட்டத்தை குத்தகைக்கு ஓட்ட பரந்தாமன் குடும்பம் குடி வந்திருந்தது. பரந்தாமன் பி.எஸ்.சி படித்துவிட்டு வேலைக்கு எதுவும் போகவில்லை. விவசாயம் பார்க்கிறேன் என்று சொன்னதற்கு அவனது அப்பாவும் மறுப்பு சொல்லவில்லை. அவர்கள் குடி வந்து பால் காய்ச்சும் போதே லதாவுடன் பரந்தாமனின் அம்மா ஒட்டிக் கொண்டாள். அதன் பிறகாக பரந்தாமன் லதாவுடன் ஒட்டிக் கொண்டான். ஆரம்பத்தில் அக்கா என்றுதான் லதாவை அழைத்தான். ஆனால் அது அவளுக்கும் அவனுக்கும் செளகரியமாக இல்லாததால் மற்றவர்கள் முன்பாக மட்டும் அக்கா என்று டீலிங்கை மாற்றிக் கொண்டார்கள்.

இருவரும் ‘ஒண்ணுமண்ணாக’ மாறிய ஒரு வருடம் வரைக்கும் வெளியில் யாருக்கும் தெரியவில்லை. பரந்தாமன் தன் வீட்டிற்கு வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைக்காரர்களை வெளியில் அனுப்புவது லதாவுக்கு பெரிய சிரமமாக இருந்தது. மற்றவர்களைக் கூட சமாளித்துவிடலாம் போலிருந்தது. சமையல்காரன் முருகனைத்தான் சமாளிக்க முடியாமல் திணறினாள். முருகனை வெளியேற்றுவது பீடித்திருக்கும் ஏழரைச் சனியை வெளியேற்றுவது போல என பரந்தாமனிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறாள். அதே முருகன் தான் இவர்களை முதன் முதலாக அலங்கோலமாக பார்த்தவனும்.

தகவல் வெளியே கசியாமல் இருக்க நூறு இருநூறு என டிப்ஸ் வாங்கியவன் பிறகு ஆயிரம் ஐநூறு என்று கறக்கத் துவங்கினான். ஆனாலும் அவனது ஓட்டை வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை. ஊருக்குள் இரண்டு மூன்று பேர்களிடம் சொல்லிவிட்டான். அந்தச் செய்திக்கு கைகளும் கால்களும் முளைத்து கூடவே றெக்கையும் முளைத்து ஊர் முழுவதுமாக சிறகடித்தது. சுப்பிரமணியம் அதிர்ச்சியடைந்தாலும் ’இருந்துவிட்டு’ போகட்டும் என்று விட்டிருந்தான். தெரியாதது போலவும் நடித்துக் கொண்டிருந்தான்.

இப்படி ஆறுமாதம் காலம் ஓடியது. லதாவும் பரந்தாமனும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. திடீரென்று அறுபது பவுன் நகையையும் ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு காணாமல் போய்விட்டார்கள். அவளது மகன் மட்டும் இரண்டு நாட்கள் அழுதான். சுப்பிரமணியன் அதிகம் கவலைப்படவில்லை. ஆனால் ஊர்தான் அதிகம் கவலைப்பட்டது. கடைசியில் யாரோ ஒரு புண்ணியவன் அவர்கள் இருவரும் சாவக்கட்டுபாளையத்தில் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அறிவித்தார். 

பணம் தீரும் வரைக்கும் கொஞ்சலும் குலாவலுமாக இருந்தவர்கள் அத்தனையும் கரைந்த பிறகு சண்டைப்போடத் துவங்கினார்கள். சண்டையில் அடிதடி சர்வசாதாரணம் ஆனது. சாவக்கட்டுப்பாளையத்திற்குள்ளும் இவர்களின் புகழ் கொடி கட்டினாலும் இருவரும் புருஷன் பொண்டாட்டி என்றுதான் மற்றவர்கள் நம்பினார்கள். பரந்தாமன் குடித்துவிட்டு வருவதும், கண்டவளோடு போய் வருவதும் சர்வ சாதாரணமாகிப்போனது. லதாவும் சளைத்தவள் இல்லை. ஊருக்குள் பல பேருக்கு ‘பழக்கம்’ ஆகத்துவங்கினாள். வருமானத்திற்கும் குறைவில்லாமல் இருந்தது.

இந்தக் கதையை கொண்டயம்பாளையத்தில் கிட்டத்தட்ட எல்லோரும் மறந்து போன போது பரந்தாமன் இறந்திருந்தான். எய்ட்ஸ் வந்து இறந்து போனான் என்றுதான் சாவக்கட்டுபாளையத்தில் பேசிக் கொண்டார்கள். லதாவே பரந்தாமனை அடித்துக் கொன்றுவிட்டதாகவும் இன்னொரு பேச்சு உண்டு.

லதா தனியாக இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்ட சுப்பிரமணியன் கொஞ்சம் வருத்தமுற்றான். அழைத்துவந்துவிடலாம் என்றும் கூட யோசித்தான். அடுத்த வாரம் அவளிடம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தான்

லதாவின் அழகு எதுவும் குறைந்திருக்கவில்லை என்றாலும் லதாவுக்கும் எய்ட்ஸ் இருக்கும் என்ற பயத்தில் ஏற்கனவே பழகியிருந்தவர்கள் அவளை ஒதுக்கத் துவங்கினார்கள். லதாவுக்கு வருமானமும் நின்றிருந்தது.

தன் வாழ்க்கையின் உச்சபட்ச தனிமை இதுவென்று அழத் துவங்கியிருந்தாள். திக்குத் தெரியாத காட்டில் தவிப்பதாகவும் கூட தனக்குள் புலம்பினாள். திடீரென்று  யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சாவக்கட்டுபாளையத்திலிருந்தும் காணாமல் போயிருந்தாள்.  அவள் எந்த ஊருக்கு போயிருக்கிறாள், தனியாக இருக்கிறாளா போன்ற விவரங்களை கண்டறிந்து அறிவிக்கும் பொறுப்பை இன்னொரு புண்ணியவான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

Jul 8, 2012

சண்டைக் கோழிகள்

5 comments:


கடந்த வியாழக்கிழமை பின்னிரவு 2.30 மணிக்கு அலைபேசி மணியடித்தது. பதறியடித்து எடுத்தால் உறவினர் ஒருவருக்கு விபத்து நிகழ்ந்ததை துக்கத்தோடு அறிவித்தார்கள். சீரியஸாக இருப்பதாகவும் சொன்னார்கள். மற்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

நானும் தம்பியும் காரில் கிளம்பினோம். வழியில் உறவுக்கார பையன் ஒருவனும் ஏறிக் கொண்டான். கிருஷ்ணகிரியைத் தாண்டிய போது வெளிச்சம் வந்திருந்தது. பின்புறமாக வந்த கார்க்கார புண்ணியவான் ஒருவர் தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தார். விலகி வழி விட வேண்டுமாம். அடுத்த ட்ராக்கில் பெரிய லாரி ஒன்று திணறிக் கொண்டிருந்தது. என்னை முந்திக்கொள்ளுங்கள் கார்க்காரரிடம் கை காட்டினேன். மிக வேகமாக முந்தியவன் எனது காருக்கு முன்பாக கிட்டத்தில் வந்து ப்ரேக் அடித்தான். ’திக்’ என்றாகியது. பிறகு ஜன்னலை திறந்துவிட்டு கையை மேலே உயர்த்தி பாம்புவிரலைக் காட்டினான். எனக்கு சொறிந்துவிட்டது போல் ஆனது. 

கர்நாடக ரெஜிஸ்ட்ரேஷன் வண்டி அது. அந்தக் காரில் குழந்தைகளும் பெண்களும் இருந்தார்கள். முடிந்தால் அவனை மிரட்டி பார்க்கலாம் என்று வேகமாக அழுத்தினேன். அடுத்த சுங்க கேட்டில் நின்று கொண்டிருந்தான். கூட்டம் அதிகமில்லை. மூவரும் வேகமாக இறங்கிச் சென்றோம். அப்பொழுது அவன் சற்று பதட்டமானதை உணர முடிந்தது. தம்பி மிகுந்த கோபம் அடைந்திருந்தான்.


"கர்நாடக ரெஜிஸ்ட்ரேஷன் காரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ரகளை பண்ணுறியா” என்ற கேள்வியை  தம்பி தவிர்த்திருக்கலாம் அல்லது அவன் வேறு ஏதேனும் பதில் சொல்லியிருக்கலாம். “தமிழ்நாட்டில் என்ன புடுங்குவீர்களா?“ என்று அரைகுறைத் தமிழில் கேட்டான். கண் மூடி விழிப்பதற்குள் என் உறவுக்கார பையன் ‘சப்’பென்று அறைந்திருந்தான். அதன் பிறகாக அவன் எதுவும் பேசவில்லை. அவனை காரை எடுக்கச் சொல்லி அருகிலிருந்த பெண்மணி அவசரப்படுத்தினாள்.

என்னோடு வந்திருந்த இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்குள் பெரிய சிரமமாகிவிட்டது. கார் எடுக்கும் கணத்தில் ”சேலம் வழியாகத்தானே வருவீர்கள் கவனித்துக் கொள்கிறேன்” என்றான். நாங்கள் சேலம் போக வேண்டியதிருக்கவில்லை. தொப்பூரிலிருந்து மேட்டூர் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

***

ஊருக்கு வந்து சேர்ந்த போது உறவுக்காரர் இறந்திருந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.துக்கமாக இருந்தது. மார்ச்சுவரிக்கு முன்பாக என்னையும் அறியாமல் அழுது கொண்டிருந்தேன். போஸ்ட்மார்ட்டம் முடிந்து உடலை வாங்கி வர மதியம் ஆகியிருந்தது. இறந்தவரின் குழந்தை அதுவரைக்கும் எதுவும் உண்ணாமல் பசியோடு மணலில் விளையாடிக் கொண்டிருந்தது. ஏதாவது சாப்பிடலாம் என்று அழைத்துச் சென்றேன். 

உணவை முடித்துக் கொண்டு திரும்பி வரும் போது காரை ரிவர்ஸ் எடுக்க வேண்டியிருந்தது. பின்புறமாக நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் அது கீழே விழுந்துவிட்டது. அந்த வண்டியிலிருந்த பெட்ரோல் கிட்டத்தட்ட முழுவதுமாக கொட்டிப் போனது.

வண்டிக்காரர் மிக வேகமாக நடந்துவந்தார். முழுத்தவறும் என்னுடையதுதான். மன்னிப்புக் கேட்கத் தயாராகினேன். அடிக்க வந்தால் தடுப்பதற்கும் தயாராகியிருந்தேன். வண்டியை எடுத்து நிறுத்தினார். நான் பேச்சை ஆரம்பித்தேன். “அட உடுங்க தம்பி, தெரிஞ்சா இடிப்பீங்க..எல்லாம் இருக்கிறதுதான்” என்றார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”பெட்ரோலுக்கு பணம்...” என்று இழுத்தேன். “போங்க போங்க சொத்தா அழிஞ்சு போச்சு நான் பாத்துக்கிறேன் போங்க” என்றார்.

துக்கத்தையும் மீறிய ஆறுதலாக இருந்ததன அந்த வார்த்தைகள். 

Jul 5, 2012

தீபம்- வண்டுகளின் காதல் தேவதை

3 comments:

இலங்கையில் வாழும் கவிஞர் அகமது பைசாலின் கவிதைத் தொகுப்பு “நிலத்தோடு பேசுகிறேன்” இந்த மாதம் புது எழுத்து வெளியீடாக வெளிவரவிருக்கிறது.

கவனப்படுத்த வேண்டிய படைப்பாளர்களை தனது அத்தனை சிரமங்களுக்கும் இடையில் கவனப்படுத்தும் புது எழுத்து மனோன்மணி வழக்கம்போலவே அகமது பைசாலையும் கவனப்படுத்துகிறார்.

புது எழுத்துக்கும், அகமது பைசாலுக்கு, புது எழுத்துக்கு பைசாலை அறிமுகப்படுத்திய கவிஞர் றியாஸ் குரானாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

’நிலத்தோடு பேசுகிறேன்’ தொகுப்புக்கு நான் எழுதிய சிறுகுறிப்பு இது. தொகுப்பில் முன்னுரையாக இணைக்கப்பட்டிருக்கிறது.  அதற்காக அகமது பைசாலுக்கும், மனோன்மணிக்கும் நன்றி.

இக்குறிப்பு தொகுப்பிற்கான நல்ல அறிமுகத்தை தருமெனில் மிகுந்த மகிழ்ச்சி.

  ***

தீபம்- வண்டுகளின் காதல் தேவதை       கவிதை உருமாறிகொண்டே இருக்கிறது. தனக்கான வடிவம், மொழி, பாடுபொருள், வெளிப்படுதன்மை எனத் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் கவிதையில், கவிதைக்கான வாசகன் ‘உண்மை’ என்ற அடிப்படையான அம்சத்தின் மூலமாகவே கவிதையோடு நெருக்கமாகிறான் என நம்பலாம். இருபது வருடங்களுக்கு முன்பாக அறிவியல் தொழில்நுட்பம் தன் கோரமுகத்தை காட்டத் துவங்கியிருக்காத சமயத்தில் மாற்றங்கள் மெதுவானதாகவும் ஓரளவு கணிக்கக் கூடியதாகவும் இருந்தன என்று யூகித்துக் கொள்கிறேன். சூழலிருந்து அந்நியமாதலும், சுய அடையாளமிழப்பின் அவஸ்தைகளும் கவிதைகளில் பெருமளவில் பதிவு செய்யப்பட்டதை இந்தக் காலகட்டத்தோடு சேர்ந்து புரிந்துகொள்ள முடிகிறது. 

தொழில்நுட்பம் தன் அகோரப்பசிக்காக வாயைத் திறக்கத்துவங்கியதற்கு பிறகாக இன்றைய தினம் வரையிலும் கவிதை எதிர்கொள்ளும் நெருக்கடிகளும், கவிஞனின் சிக்கல்களும் பன்மடங்கு அதிகரித்துத்தானிருக்கின்றன. இவை எளிய மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு துளியும் சளைக்காதவை அல்லது அதைவிடவும் கடுமையானவை. சமூக வலைத்தளங்கள், மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் தொடர்பியல் சாதனங்கள், வாழ்வியல் முறைகள் என ஒவ்வொன்றும் தம் கரங்களைக் கோர்த்துக்கொண்டு கவிதையை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. போலிகள், வெற்றுப்புலம்பல்கள் அல்லது தட்டையான சொல்முறைகள் ஆகியவற்றுக்குள் பகீரத பிரயத்தனங்களினூடாக கவிதைக்கான வாசகன் நகர்ந்து கொண்டிருக்கிறான்.

அகமது பைசால் அனுப்பியிருந்த கவிதைகளை மட்டுமே கடந்த இருபது நாட்களாக வாசித்து அவற்றோடு புழங்கிக் கொண்டிருக்கிறேன். ஒரே கவிஞனின் கவிதைகளில் புழங்குவதில் சுவாரசியம் இருக்கிறது. கவிதைகள் மனதோடு நெருக்கமானதாக இருப்பின் இன்னமும் சுவாரசியம் கூடி விடுகிறது. இந்த சுவாரசியம் கவிதைகளின் வழியாக கவிஞன் என்ற ஆளுமையை புரிந்துகொள்வதில் வாசகனுக்குள் முனைப்பை உருவாக்குதலை எளிதாகச் செய்துவிடுகிறது. 

தன் கவிதைகளில் புனைவை உருவாக்குகிறார் அகமது பைசால். புனைவுகள் குறுகுறுப்பை உருவாக்கக் கூடியனவாக இருக்கின்றன. அகமது பைசாலின் கவிதைகளில் இடம்பெறக்கூடிய புனைவுகள் நிகழவியலா புனைவுகள்(Non-Realistic). நிகழவியலா புனைவுகள் உருவாக்கக் கூடிய வெற்றிடம் வாசகனுக்கான இடம் (Reader's space) ஆக அமைந்துவிடுவது இந்தக் கவிதைகளின் பெரும் பலமாகத் தோன்றுகிறது. இந்த வாசகவெளியில் வாசகனுக்கான அத்தனை சுதந்திரத்தையும் பைசால் அளிக்கிறார்.

ஒரு யானை/முதுகில் பெரும் பூமியைச் சுமந்து கொண்டு போகிறது” ”நான் திசைகளைப் பாதங்களில் அணிகிறேன்/ அது பராக்குக் காட்டி என்னை கூட்டிச் செல்கின்றன” என்பன போன்ற வரிகளை உதாரணமாக்க முடியும். மேற்சொன்ன கவிதை வரிகளில் இரண்டாவது வரி ”திசைகள்” என்னும் கவிதையில் இடம் பெறுகிறது. இந்தக் கவிதையின் நாயகன் தான் செல்லும் பாதையில் எதிர்ப்படுபவர்களிடமிருந்து அவரவரின் திசைகளைப் பெற்றுக் கொள்கிறான். அவற்றை மொத்தமாக சுமந்து சென்று கடலில் கரைத்துவிடுகிறான். கவிதையில் வரக்கூடிய இன்னொரு மனிதன் கடலில் தனது கால்களை நனைத்துவிட்டு வெளியேறும் போது புதிய திசைகளை தனது கால்களில் ஒட்டிக் கொள்கிறான் என்று கவிதை முடிகிறது. கவிதை முடிந்த பிறகும் கடலுக்குள் அடங்கியிருக்கும் கதைகளைப் பற்றிய எண்ணங்களை இந்தக் கவிதை தூண்டுகிறது. 

கடலைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் தங்களின் திசைகளை கடலினுள் கரைத்துவிடுகிறார்கள். கடல் அத்தனை திசைகளையும் தனக்குள் அமிழ்த்திக் கொண்டு திசையற்றதாகவும், திசைகள் குறித்த எந்தவிதமான பிரக்ஞையுமற்றதாகவும் தன் நீல அமைதியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. திசைகளின் மீதான கடலின் தீர்க்கவே முடியாத பசி பற்றிய சிந்தனையை இந்தக் கவிதை உருவாக்கியது. இனி எப்பொழழுது கடலை பார்த்தாலும் இந்தக் கவிதை நினைவுக்கு வரக்கூடும். நண்பனிடம் பெற்றுக் கொண்ட வைத்தியசாலைக்கான திசை, காதலியின் இல்லம் அமைந்திருக்கும் திசை, சீனத்தில் திசையைக் கரைக்கும் இன்னொருவன் போன்றவை இக்கவிதையில் கிளை புனைவுகள். கவிதை வாசித்த கணத்திலிருந்து கிளை புனைவுகள் வெவ்வேறு மனநிலையை உருவாக்கி அலைவுறச் செய்து கொண்டிருக்கின்றன. கவிதை என்ற உலகத்திலிருந்து எண்ணங்கள் என்ற இன்னொரு உலகத்திற்குள் வாசகனைத் தள்ளிவிடுவது ஒரு நுட்பம். இதைத்தான் ’வாசகவெளி’ எனக் குறிப்பிடுகிறேன்.  

அகமது பைசால் தனது கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்த போது அவரது பெயர் அறிமுகமாகியிருக்கவில்லை. கவிதையை வாசிப்பதற்கு கவிஞனின் பெயர் அவசியமில்லை என்பதை எனக்கு நானே நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இந்தக் கவிதைகளை எடுத்துக் கொள்ள முடிந்தது. இரு ஆத்மாக்களுக்கிடையில் அந்தரங்கமான மெளனித்த பரிபாஷனையை கவிதை நிகழ்த்துகிறது என நம்பிக்கொண்டிருப்பவாக இருக்கிறேன். இரு ஆத்மாக்கள் என்பதனை கவிஞன்xவாசகன் என்ற இருமைக்குள்ளாக மட்டுமே அடக்கிவிட வேண்டியதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுவிடலாம். மெளனித்த அந்தரங்கமான பரிபாஷனை நிகழ்த்தும் எந்தக் கவிதையும் வாசகனளவில் வெற்றியடைந்த கவிதைகள்தான். இதை அகமது பைசாலின் கவிதைகள் மிக இயல்பாக நிகழ்த்துகின்றன. சில குறைகள் தொகுப்பில் உண்டு. உதாரணத்திற்கு அகப்பை என்ற தலைப்பில் இருக்கும் சில தட்டையானவைகளை தொகுப்பாக்கும் போது நிராகரித்திருக்கலாம் என மனம் விரும்புகிறது. 

மற்றபடி கவிதைக்கான முன்னுரை என்பதன் அவசியம் குறித்து எனக்கு பெரும் சந்தேகம் இருக்கிறது. முன்னுரை, அணிந்துரை என்பனவற்றில் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளைப்பற்றி எழுதுவது “நான் இந்தக் கவிதைகளை புரிந்து கொண்ட விதத்திலேயே நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்வதாக அமைந்துவிடக் கூடுமோ என்ற தயக்கமும் இருக்கிறது. விரிவான அலசல்களுக்கான இடத்தை விமர்சனங்கள் அளிக்க வேண்டும் எனவும், தொகுப்பின் முன்னுரை சில கோடுகளைக் காட்டினால் போதும் எனவும் தோன்றுகிறது. அதை எனது இந்தக் குறிப்பு செய்திருந்தால் பெரும் மகிழ்ச்சி.

எந்தவிதமான முன்முடிவுகளும், எதிர்பார்ப்புகளுமில்லாமல் கவிதைகளை வாசிப்பதே அந்தக் கவிதைகளுக்கு வாசகனாகச் செய்யக்கூடிய முறைமை என்று நம்புகிறேன். இதன் காரணமாகவே அகமது பைசாலின் கவிதைகளில் இருக்கக் கூடிய சில குறைகளை தொகுப்பின் முன்னுரையில் எழுத வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். 

அதே சமயம் தமிழ்க் கவிதைச் சூழலில் கவனம் பெறத்தகுந்த தொகுப்பாக பைசாலின் கவிதைகளை முன் வைக்கிறேன்.


நன்றி.

பிரியங்களுடன்,
வா.மணிகண்டன்.
கோடைகாலம்-2012

Jul 4, 2012

புரியாத விளையாட்டு
"பெங்களுர்ல இருந்து நேரா வந்துட்டீங்களா?"

"ஆமாங்க"

"நேரத்திலேயேவா?"

"வந்து ஒரு மணி நேரம் இருக்கும்"

"ம்ம்ம்"

"ரவி அண்ணனோட ஆபிஸ் எங்க இருக்கு?"

"ஈரோடு கலெக்டர் ஆபிஸ்க்குள்ளங்க"

"பி.டபிள்யூ.டியில்தானே இருக்காரு"

"ம்ம்...ட்ராஃப்ட்ஸ்மேன்"

"கோயமுத்தூர்ல இருந்து தினமும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் போய்ட்டு வந்துடுவார்ன்னு சொன்னாங்க"

"ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து பைக்ல வீட்டுக்கு வந்துடுவாரு"

"அவிநாசியில் இருந்தாங்களே"

"ஆமாங்க...கோயமுத்தூரில் புது வீடு வாங்கி பதினஞ்சு நாள் ஆச்சு”

"நான் இன்னும் புது வீட்டை பார்க்கலை...குழந்தைகளை ஸ்கூல்ல சேர்த்தியாச்சா?"

"பையன் ஒண்ணாவது பொண்ணு எல்.கே.ஜி"

"வீட்டுக்கு பக்கத்துலேயே இருக்கிற ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க"

"இருங்க மாமாகிட்ட பேசிட்டு வர்றேன்"

"எத்தனை மணிக்கு கிளம்புனீங்க"

"மாமா...பெங்களூர்ல கார் எடுக்கும் போது மணி மூணு"

"அப்பா போன் பண்ணியிருந்தாரா"

"ஆமாங்க மாமா"

"ம்ம்ம்ம்"
                                       ****
"பிரியா...எந்திரி ஊருக்கு கிளம்பலாம்"

"எதுக்குங்க"

"அப்பா ஃபோன் பண்ணினாங்க"

'"என்னவாம்?"

"என்னால இப்போ சொல்ல முடியாது..எந்திரி ப்ளீஸ்"
                                         ****

"ஏம்ம்ப்பா ஃபோன்ல அழுகுறீங்க..என்னாச்சு”

"அதுவும் இந்த நேரத்துல"

"ரவி அண்ணனுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு"

"அண்ணன் கூட ஏழரை மணிக்குத்தானே போன்ல பேசினேன்”

“....எப்படியாச்சு?"

"நைட் பத்தரை மணிக்கு ஃஆபிஸ்ல இருந்து வரும்போது லாரிக்காரன் அடிச்சுட்டு போய்ட்டானாம்"

"எப்படி இருக்காரு"

"போய்ட்டான்"

"கடவுளே"

"எங்க இருக்கீங்க?"

"கோயமுத்தூர் ஜி.ஹெச் வந்துட்டோம்"

"டாக்டர் வந்த பின்னாடி போஸ்ட்மார்ட்டம் செஞ்சுட்டுத்தான் தருவாங்க"

"நேரா இங்க வந்துடுங்க"

"ம்ம்ம்ம்ம்"

[இந்தக் கதையின் வடிவம் ஒரு பரிசோதனை முயற்சி.  இறுதியிலிருந்து கதையை வாசித்தால் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது என நம்புகிறேன்]