Dec 8, 2012

மாப்ளே! ஜெயிச்சுத்தான் பார்க்கலாமே



முந்தானை முடிச்சு மற்றும் இன்னும் சில பாக்யராஜ் படங்களில் நகைச்சுவையில் கொடிகட்டிய குள்ளமான நடிகரை ஞாபகம் இருக்கிறதா? தவக்களை. அவர் இப்பொழுது மூன்று வேளை சோற்றுக்காக வீதிகளில் வித்தை காட்டும் குழுவொன்றில் சிதைந்து கொண்டிருக்கிறாராம். தனது வசந்தகாலத்தில் அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்டு நீட்டப்பட்ட கைகள் அவரது ஞாபகத்தில் இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அவர் நீட்டும் தட்டுக்களில் விழும் ஒன்றிரண்டு ரூபாய்களை ஏழெட்டுப் பேர் பிரித்துக் கொள்கிறார்களாம்.

“என்னாச்சு” என்று கேட்டு அவரை வேதனைக்குள்ளாக்க வேண்டியதில்லை. வெற்றி பெறாத எந்த மனிதனையும் இந்த உலகம் திரும்பிப் பார்ப்பதில்லை.  ‘தோல்வியுற்ற ஒரு மனிதனாக நீ இருக்கிறாய்’ என்பதை ஞாபகமூட்டி அவரை அழ வைக்க வேண்டிய அவசியமில்லை.

நமக்கு வெற்றி தேவையானதாக இருக்கிறது. வெற்றி அவசியம் என்பதை குழந்தைப்பருவத்திலேயே அழுத்தமாக பதிப்பித்துவிடுகிறார்கள். பள்ளியில் படிக்கும் போது முதல் ரேங்க் எடுக்கும் மாணவனை வகுப்புக்கு ‘லீடர்’ ஆக்கிவிடுவார்கள். பிறகு உயர்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேர்தலில் வென்றால்தான் ‘லீடர்’. வெற்றி என்பதுதான் அதிகாரத்தின் குறியீடு என்பதை இதை விட எளிமையாக குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் புரிய வைக்க முடியாது. 

பிறகு வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் ஏதாவது போராட்டம் இருக்கிறது. ஒவ்வொரு வெற்றியும் புகழின் போதையை சுவைக்கத் தருகிறது. பிறகு இந்த போதைக்காகத்தான் வாழ்க்கை முழுவதுமாக அலைந்து கொண்டிருக்கிறோம்.

மிகச் சிறிய அளவில் அதிகாரம் கிடைப்பவர்கள் கூட அடுத்தவனை அதிர்ச்சியடையச் செய்கிறார்கள். கிராம நிர்வாக அலுவலரில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை தங்களின் அதிகாரத்தின் நாக்கைச் சுழற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த அதிகாரத்தை அடைவதற்கு அவரவரளவில் ஏதேனும் போட்டியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த வெற்றிக்காக எதிரியைக் கண்ணை மூடிக் கொண்டு வெட்டிச் சாய்க்கத் தயாராகிவிடுகிறார்கள். 

ஒரு ரயில்வே ஸ்டேஷனை உங்களாலும் என்னாலும் ஒரு கணம் கூட ஸ்தம்பிக்க வைக்க முடியாது. ஆனால் அதை சினிமாக்காரனால் சர்வசாதாரணமாகச் செய்ய முடியும். இந்த ஸ்தம்பிப்புதான் அவனை மிதக்கச் செய்கிறது. வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அவன் மீதான பிரமிப்பை உருவாக்குகிறது. இது வெற்றியின் அடையாளம். இந்த வெற்றியின் அடையாளத்துக்காகத்தான் நிழல் உலக தாதாக்களில் ஆரம்பித்து இலக்கியதாதாக்கள் வரைக்கும் ஒவ்வொருவரும் வெறித்தனமாக அலைகிறார்கள். 

வெற்றி பெற்றவனை இந்த உலகம் கொண்டாடத் துவங்கிவிடுகிறது. தோல்வி மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. அதனால்தான் எதிரிகளுக்கு தோல்வியை தண்டனையாக பரிசளிக்க விரும்புகிறோம். மாற்றி யோசிக்கலாம். தோல்வியை அனுபவிக்கப் பழகிவிட்ட ஒருவன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அனுபவித்தல் என்பது இங்கே Enjoying. அவனது எதிரியால் அவனை எந்தவிதத்தில் மன உளைச்சலுக்குள்ளாக்க முடியும்? ரொம்ப கஷ்டம்.

கொஞ்சம் பக்குவம் இருந்தால் நமக்கு உடல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ இழப்பு ஏற்படுத்தாத எந்த தோல்வியையும் அனுபவிக்க முடியும்.  நிறைய பக்குவம் இருந்தால் பொருளாதார ரீதியான இழப்பை ஏற்படுத்தும் தோல்வியைக் கூட அனுபவிக்க முடியும். 

No more Philosophy. ஒரு குட்டிக் கதை.

கிரிக்கெட் க்ரவுண்டில் ஒரு சிறுவன் பந்து பொறுக்கிக் போட்டுக் கொண்டிருக்கிறான். 

இன்னொருவன் வருகிறான். வந்தவன் கொஞ்சம் வயது மூத்தவன். முன்பொரு காலத்தில் விளையாடியவன். அந்தக் காலத்தில் நன்றாக விளையாடியிருந்தாலும் இப்பொழுது வெறும் மட்டையடிக்காரனாகிவிட்டான். கிரிக்கெட் சங்கத்துக்காரர்களுடன்  இருக்கும் தொடர்பினால் அவனை அவ்வப்போது விளையாட அனுமதிக்கிறார்கள். தான் வைத்திருக்கும் பைக்கில் விளையாட்டு வீரர்களுக்கு அவ்வப்போது லிஃப்ட் கொடுப்பதனால் ‘நீயும் விளையாட்டு வீரன்’ என்று விட்டுவிடுகிறார்கள். 

இது போன்ற செயல்பாடுகளால் தன்னால்தான் இந்த கிரிக்கெட் போட்டிகளே நடக்கிறது என்றும் தன்னைப்போல ஒரு மிகச் சிறந்த விளையாட்டு வீரன் இல்லை என்றும் நம்பிக் கொண்டிருக்கிறான். உண்மையான விளையாட்டு வீரர்கள் யாரும் அவனை விளையாட்டு வீரன் என்று ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும் ஏற்கனவே அங்கு பந்து பொறுக்கி போடும் சிறுவன் அவனை நல்ல விளையாட்டு வீரன் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறான்.

இந்தச் சிறுவன் பந்து பொறுக்கி போடுவது கூட அவனுக்கு எரிச்சலைத் தருகிறது. உன்னால் வெற்றி பெறவே முடியாது என்கிறான். நீ சுட்டிப்பையண்டா என்கிறான். சுட்டிப்பையனுக்கு மேட்டர் சிம்பிள். இதற்காகவெல்லாம் எந்த எரிச்சலும் அடையாமல் சொன்னானாம். 

“அண்ணே! நீங்க பந்து பொறுக்கி போட்டுக்குங்க, வீரன்னு காட்டிக்குங்க. எனக்கு இந்த எழவெல்லாம் அவசியமே இல்லை. பந்து பொறுக்கி போடாமலே கூட நான் ஒதுங்கி போய்டுவேன். ஆனா வேற கிரவுண்ட்ல எப்பவாச்சும் ஒருத்தன் சிக்ஸர் அடிச்சா வந்து பாருங்க அது நானாக் கூட இருக்கலாம்”.

பாருங்கள் கடைசியில் இந்தச் சுட்டிப்பையனும் வெற்றியை எதிர்பார்ப்பவனாகவே இருக்கிறான். bad boy!

தோற்பதை Revenge இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் கதை இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

5 எதிர் சப்தங்கள்:

Seeni said...

mmmmmm.....

மெய்ப்பொருள் said...

வாழ்க்கையில் தோல்வியை நேசிக்காமல் வெற்றிக்காக உழைக்கிறவன் தோல்வி அடைவதில்லை.

தனுஷ்

அகல்விளக்கு said...

தோல்வி வெற்றிக்கெல்லாம் வரையறையை நாம்தான் வகுத்துக்கொண்டிருக்கிறோமோ..???

நல்ல அலசல்... :)

Uma said...

கொஞ்சம் பக்குவம் இருந்தால் நமக்கு உடல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ இழப்பு ஏற்படுத்தாத எந்த தோல்வியையும் அனுபவிக்க முடியும். நிறைய பக்குவம் இருந்தால் பொருளாதார ரீதியான இழப்பை ஏற்படுத்தும் தோல்வியைக் கூட அனுபவிக்க முடியும்.
------பக்குவப்பட வேண்டும்!

butterfly Surya said...

நல்ல அலசல் ..

அருமை..