Dec 2, 2012

காடு - அற்புத உலகம்

குழந்தைக்கு சோறூட்ட பூச்சாண்டியைத்தான் காட்டுவார்கள். ஆனால் எங்கள் வீட்டில் ஒரு கவிதைத் தொகுப்பை காட்டுவார்கள். பயமுறுத்தவதற்காக இல்லை. ஒவ்வொரு கவிதைக்கு அருகிலும் இடம்பெற்றிருக்கும் நிழற்படத்தை காட்டுவதற்காக. அவைநாயகனின் ‘காடுறை உலகம்’ என்ற கவிதைப் புத்தகம்தான் அந்த பிரபலமான புத்தகம். சூழலியல் சார்ந்த கவிதைகளின்  தொகுப்பு இது. 

அவைநாயகனை இந்த புத்தகத்திற்கு முன்பாகவே அறிந்திருக்கிறேன். அப்பொழுது கோபியில் சினிமா ஷூட்டிங் அதிகம் நடக்கும் காலகட்டம். பவானி ஆறு தனது இரண்டு கரைகளையும் பசுமையாக வைத்துக் கொள்ளும் என்பதால் இருக்கும் இரண்டு லாட்ஜ்களில் எந்த லாட்ஜ் வாசலில் போய் நின்றாலும் சினிமா நடிகர்களை பார்க்கலாம்- ஷூட்டிங்குக்காக வந்திருப்பார்கள். அந்தச் சமயத்தில் நிகழ்ந்த சூழலியல் சார்ந்த நிகழ்ச்சியொன்றில் அவைநாயகன் அறிமுகமானார். ‘ஓசை’  என்ற அமைப்பில் முக்கியமானவர் என்று கோபியைச் சார்ந்த தமிழார்வலர் குமணன் இவரை அறிமுகப்படுத்தி வைத்தார். வினு சக்ரவர்த்தி மீசையை ஒட்ட வெட்டிக் கொண்டு வந்திருக்கிறார் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன். 

ஆனால் அவைநாயகன் யாருடைய ‘டூப்பும்’ இல்லாத அட்டகாசமான மனிதன் என்று பிறகு புரிந்து கொள்ள முடிந்தது. சூழலியல் சார்ந்து மிகத்தீவிரமாக இயங்கும் ‘ஓசை’ அமைப்பில் தொடர்ந்து செயலாற்றும் அவைநாயகனின் இயற்கை, காடு, சூழலியல் ஆகியன சார்ந்த ஆர்வம் மற்றும் செயல்பாடுகளின் குட்டி சாம்பிளாகத்தான் ‘காடுறை உலகம்’ என்ற இந்தப் புத்தகத்தை பார்க்கிறேன்.ஒரு நிழற்படம் -அதனருகில் ஒரு சூழல் சார்ந்த கவிதை என பக்கங்கள் விரிகின்றன. உயர் ரக தாள்களில் மிகத் தெளிவான படங்களால் நிரம்பியிருக்கிறது தொகுப்பு. இந்த நிழற்படங்கள் தேர்ந்த புகைப்படக் கலைஞர்களாகத் திகழும் சூழலியல் ஆர்வலர்களால் எடுக்கப்பட்டவை என்பதுதான் சிறப்பு. கடமான், சிங்கவாலி, மலை அணில், பஞ்சரட்டை என பலவித உயிரிகளின் படங்கள், அவை பற்றிய ஓரிரு வரிகளிலான கவிதை என காடு பற்றிய ஒரு குறுக்குவெட்டுப்பார்வையை தொகுப்பு உருவாக்குகிறது.

தொகுப்பில் ஒரு கவிதை-

தும்பி பிடித்து
முள்ளில் மாட்டி
ஓய்வாய் உண்ணும் 
கீச்சான்

கவிதைக்கு அருகில் கீச்சான் படம் இருக்கிறது. கீச்சான் என்ற பெயரை கேள்விப்படுவதும் அதன் படத்தை பார்ப்பதும் இதுதான் முதல் முறை என்பது மட்டுமில்லை, கீச்சான் தும்பிகளை முள்ளில் மாட்டி வைத்து ‘ரிலாக்ஸ்டாக’ உண்ணும் என்பது மிகுந்த ஆச்சரியப்படுத்துகிறது. உண்மையிலேயே பறவைகளின் உலகம் மிக ஆர்வமூட்டக் கூடியது. Ornithology எனப்படும் பறவையியல் துறையை நாம்தான் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம் கொஞ்சம் தெரிந்து கொண்டாலும் கூட ஆச்சரியமான உலகின் வாசலை அடைந்துவிட்டோம் என்றுதான் அர்த்தம்.Birds-of-Paradise Project Trailer என்ற இந்த சலனப்படத்தை பாருங்கள். இந்த பறவைகளில் ஒன்றைக் கூட நம்மில் யாருமே பார்த்திருக்க மாட்டோம் என நம்புகிறேன். அந்தப் பறவைகளின் அழகும் சேஷ்டைகளும் கட்டிப்போடுகின்றன. இயற்கையின் உன்னதமான படைப்புகளான இந்தப் பறவையினங்களைத்தான் அழித்துக் கொண்டிருக்கிறோம்.

மனிதன் தனக்கான தகவமைப்புகளை அமைத்துக் கொண்டு ஒவ்வொரு உயிரியாய் அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்கிறான். ஒரு காலத்தில் மனிதனும் அவன் தின்பதற்கான ப்ராய்லர் கோழிகளும் மட்டுமே உயிரிகளாய் உலவினாலும் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை.


சூழலியல் சார்ந்த கவனங்கள் சிதறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் அது சார்ந்த ஒரு கவிதைத் தொகுப்பு அதுவும் அட்டகாசமான நிழற்படங்கள், தரமான தாள், நேர்த்தியான வடிவமைப்பு என பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பை தினம் ஒரு முறையாவது பார்த்துவிடுகிறேன். ஓரிரு கவிதைகளையாவது வாசித்துவிடுகிறேன்.

என்னைவிடவும் அதிக முறை என் மகன் பார்த்திருப்பான். ஒவ்வொரு உயிரியைப் பற்றியும் வீட்டிலிருக்கும் யாராவது ஒரு கதையை அவனுக்கு சொல்லிவைக்கிறார்கள். ஆனாலும் அவனுக்கு சலிப்பதேயில்லை.  இப்பொழுதும் ஒவ்வொரு முறை உணவுத்தட்டத்தை எடுத்து வரும் போதும் “அவைநாயகன் மாமா புக் எங்கே?” என்று கேட்கிறான். அந்தக் கதைகளை வேறு வடிவத்தில் சொல்ல வீட்டிலும் யாரும் சலித்துக் கொள்வதேயில்லை. 

அடர்வனத்தின் ஈரப்பதத்தில் பச்சையங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் சூரிய வெளிச்சத்தில் ஒவ்வொரு நாளும் காடுகளுக்குள் சென்று வரும் அனுபவம் யாருக்குத்தான் சலிக்கும்?

தொடர்புக்கு: pasumaiosai@gmail.com