Dec 4, 2012

சன்னி லியோனை நினைக்கும் மனசுகவனச்சிதறலுக்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தெரியவில்லை. பத்து கிலோமீட்டரை தாண்டுவதற்குள் ஆயிரத்தெட்டு சிந்தனைகள். கன்னட சினிமாக்காரர்கள் பரவாயில்லை. கொஞ்சமாகத்தான் போஸ்டர் ஒட்டுகிறார்கள். அப்படியே ஒட்டியிருந்தாலும் கன்னட நாயகர்களின் முகங்களை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. மீறி பார்த்து விட்டால் ஆபிஸ் போகுமளவிற்கு தெம்பு இருக்காது. இந்த தெலுங்குப்படக்காரர்கள்தான் ஓவர் அட்டகாசம். வீதிக்கு வீதி போஸ்டர்களை ஒட்டி வைத்துவிடுகிறார்கள். ஃபோன் பேசுவதைப் போன்ற பாவ்லாவுடன் ஓரத்தில் வண்டி ஒதுக்கி சில கணங்கள் அந்த போஸ்டர்களை ரசிக்கலாம். அத்தனை கவர்ச்சி. கவர்ச்சி என்றால் க்யூட் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

தெலுங்கு நாயகன் ராணா ஏதோ ஒரு போஸ்டரில் சிக்ஸ்பேக் காட்டிக் கொண்டிருக்கிறார். முப்பது வயது. ராணா டக்குபட்டி என்பதுதான் அவரது முழுப் பெயராம். இன்னொரு போஸ்டரில் நாகர்ஜூனா. ஐம்பது வயதிலும் சிக்ஸ்பேக் காட்டுகிறார். முப்பது வயதுக்காரன் எப்படியிருக்கிறானோ அதே மாதிரிதான் ஐம்பதுக்காரனும் இருக்கிறான். அனுஷ்காவுடன் இணைத்து நாகர்ஜூனா பற்றியும் கிசுகிசு வருகிறது, நாகர்ஜூனா மகன் பற்றியும் கிசு கிசு வருகிறது. 

நமக்கு மட்டும் முப்பதைத் தாண்டும் போது கிழடு தட்டிவிடுகிறது என நினைத்துக் கொண்டே நகர்ந்தால் அடுத்த போஸ்டரில் குட்டைப் பாவாடையில் நெளிந்து குழைந்து  ராணாவின் தோளில் படர்ந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. முப்பதிலெல்லாம் கிழடு தட்டவில்லை என்பதை நமக்கு நாமே திட்டத்தில் நிரூபித்துக் கொள்வதற்காக இந்த போஸ்டரை ஒட்டியிருப்பார்கள் போலிருக்கிறது. இத்தனை நடிகர்களையும் பொறுத்துக் கொண்டு வண்டியை ஓட்டினால் கார்க்காரர்கள் வந்துவிடுகிறார்கள்.

பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ என்று சகட்டு மேனிக்கு ஓடிக் கொண்டிருக்கின்றன. இருப்பத்திநான்கு லட்சம், முப்பத்தியாறு லட்சங்களில் ஓடும் ரதங்கள். இந்த கார்களால் பெரிய தொந்தரவு இல்லை. காருக்குள் யார் இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். காருக்குள் இருக்கும் சில முகங்கள் வெறுப்பேற்றினால் காதில் புகையைவிட்டு தாண்டிவிட முடிகிறது. ஆனால் நிஸான் கம்பெனியிலிருந்து Sunny என்ற காரை தயாரித்திருக்கிறார்கள். அந்தக் கார் ஒன்றை பார்க்க நேரிட்டது. Sunny பேசாமல் ஓடியிருக்கலாம். ஆனால் சன்னி லியோனின் பெயரை மனதுக்குள் இழுத்துவிட்டுச் செல்கிறது. மனம் அதோடு நின்றால் கூட பிரச்சினையில்லை. சன்னி லியோனுக்கு எதற்காக அந்தப்பெயரை வைத்தார்கள் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது. இதைப் பொதுவெளியில் கேட்டால் 66 ஏ வில் உள்ளே தள்ளாமல் கொஞ்சுவார்களா?

குத்தாட்டம் போடும் சன்னி பகவானை...ஸாரி சனிபகவானை அடக்கிவிட்டு ஒரு திருப்பத்தில் திரும்பினால் ஐ.டி கம்பெனிகள் இருக்கும் சாலை வந்துவிடுகிறது. ஹெல்மெட் போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுவதில் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. கீழே விழுந்தால் மண்டை உடையாமல் காப்பாற்றுகிறது என்பது இரண்டாம்பட்சம். எதிரில் வருபவர்களுக்கு நம் கண்களை மட்டும் காட்டுகிறது என்பதுதான் முக்கியம். எத்தனை மொக்கையான ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி. கண்களை மட்டும் பார்த்தால் படு அழகாகத் தெரிவார்கள். நம்பிக்கையில்லை என்றால் கவனித்துப்பாருங்கள்.  இப்படி எதிரில் வரும் பெண்ணின் கண்களை மட்டும் பார்த்து அவள் அழகானவள் என்ற நம்பிக்கையில்  ஒன்றரை செகண்ட்களுக்கு சைட் அடிக்கலாம். அவளும் நம்மை அழகானவன் என்று நினைத்து ஒன்றரை செகண்ட் பார்த்துச் செல்வாள். ‘ஒன்றரை செகண்ட் காதல்’. இந்த ஒன்றரை செகண்ட்களுக்குப் பிறகு பேச்சிலர் வாழ்க்கை நினைவில் ஓடுகிறது.

இத்தனை அகழிகளையும் தாண்டி அலுவலகத்திற்குள் நுழைந்தால் ஏகப்பட்ட வேலைகள். ஃபேஸ்புக்கில் ஆரம்பித்து கூகிள் ப்ளஸ் வரை அத்தனையும் ஓட்ட வேண்டியிருக்கிறது. கொடுத்த வேலையை முடித்தாயிற்றா என்று மேனேஜர் வேறு கேட்கிறார். வேலையே வாங்காமல் சம்பளம் தரும் கம்பெனி இந்த நாட்டில் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறதாம். கவர்ண்மெண்ட் என்று அதற்கு பெயர். இதை கவர்மெண்ட் வேலைக்காரர்களிடம் சொல்லிப்பாருங்கள். அடிக்க வருவார்கள். சென்றவாரம் பார்த்த பழ.அதியமான் அந்த நிறுவனத்தில்தான் வேலை செய்கிறார். வேறு எதையோ பேசிக் கொண்டிருக்கும் போது “கவர்ண்மெண்டில் வேலை பார்க்காமல் சமாளிப்பது ஈஸி. ஆனால் அப்படி ஏமாற்றி தின்னும் சோறு செரிக்காது” என்றார். கேட்டதிலிருந்து குற்றவுணர்ச்சி அரிக்கிறது. இனிமேல் சின்சியராக வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்திருந்தேன். நினைப்பதையெல்லாம் செயல்படுத்த முடிவதில்லை. இன்றும் அப்படித்தான். சின்சியாரிட்டியை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்- லேப்டாப்பில் திறந்து வைத்திருக்கும் நயன் தாராவின் படத்தை முதலில் மூட வேண்டும்.

Disclaimer: 

ஒரு சம்பவத்தை துல்லியமாக எழுதியிருப்பதாக நம்பி “கொன்றுவிட்டு போனவன்” என்று டைட்டில் வைத்தால் வழக்கமாக வாசிப்பவர்களின் எண்ணிக்கையில் பாதிப்பேர்தான் வந்திருந்தார்கள். Title Matters! இன்று பார்க்கலாம்.