Dec 3, 2012

கொன்றுவிட்டு போனவன்ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் சாலை இப்பொழுதெல்லாம் எனக்கு மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது. அதற்காக இந்தச் சாலையில் வீடு எதுவும் வாங்கிப் போட்டிருக்கவில்லை.  அழகிய பெண்கள் நிறைந்த கல்லூரி எதுவும் இந்தச் சாலையில் இல்லை. அப்படியிருந்தும் இந்தச் சாலையில் பயணிக்கும் போது அதன் இரண்டு பக்க மரங்களும், குளிர்ச்சியும் பெங்களூரின் உயிர்மையை இன்னமும் இழுத்துப் பிடித்திருப்பதாகத் தோன்றும்.

வழக்கம் போல அலுவலகம் வந்து கொண்டிருந்த போதுதான் அந்த விபத்தை பார்க்க நேர்ந்தது. வாட்டசாட்டமான ஆள். தோளில் லேப் டாப் பை, ஹெல்மெட், மடிப்பு கலையாத பேண்ட் சர்ட் என இருந்தார். இந்தச் சாலை அகலமாக இருந்தாலும் ஓரங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் பெரும்பாலான வண்டிகள் குழிகள் இல்லாத இடத்தை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும். அந்த இடங்களில் வாகன நெருக்கமும் அதிகமாக இருக்கும். அப்படியான ஒரு குழியிலிருந்து ஒதுங்கியிருப்பார் போலிருக்கிறது. பின்னாலிருந்து வேகமாக வந்த ஒரு கால் டாக்ஸிக்காரன் உரசியிருக்கிறான். இவர் கீழே உருளவும் அவன் நிற்காமல் சென்றுவிட்டான். 

அத்தனை கூட்டம் இருந்த போதும் அந்த டாக்ஸிக்காரனை ஒருவரும் நிறுத்தவில்லை. நான் அந்த இடத்தை அடையும் போது விபத்து நடந்து மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் ஆகியிருக்கும். அங்கிருந்த சிலர் இவரை ஓரமாக நகர்த்திவிட்டு ஆம்புலன்ஸூக்கும், போலீஸூக்கும் தகவல் கொடுத்துவிட்டார்கள். ஆனால் யாரும் அந்த டாக்ஸியின் நெம்பரை குறித்து வைக்கவில்லை என்று கைவிரித்துவிட்டார்கள். போலீஸ்காரனுக்கு இன்னுமொரு விபத்து. ஆம்புலன்ஸ்காரனுக்கு இன்னும் ஒரு உயிர். அவர்களின் தினசரி வேலைகளில் இதுவும் ஒன்று. 

யாரும் அவரது ஹெல்மெட்டை கழட்டியிருக்கவில்லை. ஹெல்மெட்டின் கண்ணாடியை தூக்கிவிட்டு வாய்வழியாக நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். யார் வீட்டுத் தண்ணீரோ அவரது தொண்டைக்குழியை நனைத்தது போக வழிந்து சாலையில் ஓடிக் கொண்டிருந்தது. யாரோ ஒருவர் ஹெல்மெட்டை அசைத்த போது அவரது கால்கள் துள்ளின. வலிக்கக் கூடும் என்று அவர் கழட்டுவதை நிறுத்திவிட்டார். ஹெல்மெட் வழியாக விழிகளை பார்க்க முடிந்த போது உறையச் செய்தன. அந்த விழிகள் எதையோ சொல்ல முயல்கின்றன என்பதை  ஒவ்வொருவராலும் புரிந்து கொள்ள முடியும். அது அத்தனை பரிதாபமான பார்வையாக இருந்தது. தனது மனைவிக்கு தகவல் சொல்லிவிடச் சொல்லி கேட்டிருக்கலாம் அல்லது குழந்தையை ஒரு முறை பார்க்க விரும்புகிறேன் என்று கெஞ்சியிருக்கலாம். ஆனால் யாராலும் துல்லியமாக புரிந்து கொள்ள முடியாத பார்வை அது. அந்தப்பார்வையை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் வேறு பக்கம் பார்க்கத் துவங்கினேன்.

அதே சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வாகன ஓட்டியும் ஒரு கணம் ஆக்ஸிலேட்டரில் இருந்து காலை எடுத்து கீழே விழுந்து கிடப்பவரை பார்த்துவிட்டு மீண்டும் மிதிக்கத் துவங்கினார்கள். இவரை பார்க்க விரும்பாத அல்லது துணிவில்லாத வாகன ஓட்டிகள் தமக்கு முன்பாக இருக்கும் வாகனங்களை ஹார்ன் சத்தத்தால் விரட்டத்துவங்கினார்கள்.

ஆம்புலன்ஸ் சப்தம் தூரத்தில் கேட்டது. இவரை எடுத்துச் செல்லத்தான் வரக்கூடும் எனத் தோன்றியது. இனி இவர் பிழைத்துக் கொள்ளக் கூடும் என நினைத்துக் கொண்டு இருந்தபோது யாரோ ஒருவர் அவரின் செல்போனை பாக்கெட்களில் தேடிக் கொண்டிருந்தார். செல்போன் இருக்கிறது என அவர் சொன்ன போது கால்கள் மீண்டும் துள்ளின. அது ஆக்ரோஷமான துள்ளல். அதுதான் கடைசி துள்ளலும் கூட. அவசரமாக விழிகளைப் பார்த்த போது அவை குத்திட்டு நின்றன. திறந்த வாயில் எந்த அசைவும் இல்லை. செல்போனை எடுத்தவர் ‘ஆயித்து’ என்று சொல்லி ஒரு சோகமான பார்வையை உதிர்த்தார். சுற்றி நின்றவர்களின் ‘உச்சு’கள் அந்த இடத்தை நிரப்பின.

செல்போனை எடுத்தவரின் விரல்கள் நெம்பர்களை பிசையத் துவங்கின. இறந்தவரின் வீட்டில் இன்று அவர் குளித்துவிட்டு துடைத்த துண்டு ஈரம் காயாமல் கிடக்கக் கூடும். தலைவாரிய சீப்பில் ஓரிரண்டு முடிகள் ஒட்டியிருக்கலாம். கடைசியாக உண்ட உணவுத்தட்டு கழுவப்படாமல் இருக்கக் கூடும். மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் இந்தக் கணம் வரைக்கும் இது மற்றொரு வழக்கமான நாள்.  இந்தக் கடைசி அழைப்பு அவர்களை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போடவிருக்கிறது. இந்த கடைசி அழைப்புதான் அவர்களின் வீட்டிற்கு ஒரு பிரளையத்தை தூக்கிச் செல்லவிருக்கிறது. தலைவிரிகோலமாக மருத்துவமனைக்கு ஓடிவரவிருக்கிறார்கள். குழந்தைகளின் பிஞ்சு பாதங்கள் மார்ச்சுவரியின் வாசலை மிதிக்கப்போகின்றன. யோசிக்கவே பாரமாக இருந்தது.

தனது குடும்பத்திற்கான அத்தனை கனவுகளையும் இந்த ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் சாலையில் இறைத்துவிட்டு போயிருக்கிறான். அவை பொறுக்குவாரில்லாமல் தெறித்துக் கிடக்கின்றன. இப்பொழுது நூற்றுக்கணக்கான வாகனங்கள் விரையத்துவங்குகின்றன. வாகனங்களின் சக்கரங்கள் கனவுகளை நசுக்கும் சாலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவை எந்தக்காலத்திலும் திரும்பப் போகாத கனவுகள்.