Dec 29, 2012

விலையில்லா லேப்டாப் சல்லிசான விலையில்


அலுவலகத்தில் புது லேப்டாப் கொடுத்தார்கள். எதுவுமே புதியதாகக் கிடைக்கும் போது- அது புது மனைவியோ அல்லது புது லேப்டாப்போ- உற்சாகம் தொற்றிக் கொள்வதுதானே வாடிக்கை. அப்படித்தான்  தொற்றிக் கொண்டது. இந்த மடிக்கணினியில் வெப் கேமராவெல்லாம் இருக்கிறது. காணாத நாய் கருவாட்டைக் கண்ட மாதிரி அவசர அவசரமாக தேவையான மென்பொருட்களை நிறுவிக் கொண்டிருந்தேன். 

சித்தப்பா பையன் போனில் அழைத்தான். சொல்லி வைத்தாற் போல அவனும் லேப்டாப்பை பற்றியே பேசினான்.

“அண்ணா, ஒரு லேப்டாப் வந்திருக்கு. என்ன ரேட்ன்னா வாங்கலாம்?”

“புதுசா, பழசா?” என்றேன்.

“புத்தம் புதுசு. இன்னும் கவரே பிரிக்காம இருக்குது”

“குத்துமதிப்பா கேட்டா எப்படிச் சொல்லுறது? மெமரி, ப்ராண்ட்ன்னு நிறைய பார்த்துத்தான் சொல்ல முடியும்”

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.ஸ்டார்ட்டிங் விலை என்ன இருக்கும்?” என்றான்

“இருபதாயிரத்திலிருந்து இருக்கும்டா” 

“ம்க்கும்” என்றான். அந்த ‘ம்க்கும்’மில் லிட்டர் கணக்கில் நக்கலைச் சேர்த்திருந்தான். 

“ஏண்டா?”

“அவனே மூவாயிரத்தி ஐந்நூறுதான் சொல்லுறான். நீங்க ஒரு ஆளுன்னு உங்களை கேட்டேன் பாருங்க”

அவமானமாகப் போய்விட்டது. மூன்றாயிரத்து ஐநூறுக்கெல்லாம் லேப்டாப் கிடைக்குமளவுக்கு தமிழ்நாடு முன்னேறிவிட்டதாகத் தெரியவில்லை. யோசிக்கத் துவங்குகையில் அவனேதான் சொன்னான்.

“இலவச லேப்டாப்ண்ணா. கவர்ண்மெண்ட்ல கொடுக்கிறது. ஒரு பையன் வேண்டாம்ன்னு விக்குறான்”

இதற்கு அப்புறம் என்ன பேசுவது?  

பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் தொழில் மீதான ஈடுபாட்டை இழந்துவிட்ட தமிழகத்தில்தான் இலவச லேப்டாப்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த மாணவரையும் திட்டுவதற்கு உரிமையில்லாத ஆசிரியர்கள் இருக்கும் இந்த மாநிலத்தில்தான் மடிக்கணினிகள் மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு Resale ஆகிக் கொண்டிருக்கின்றன. பாடத்திட்டம், தேர்வுமுறை என சகலத்திலும் இருக்கும் பெரிய ஓட்டைகளை அடைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லேப்டாப்களை விலையில்லாமல் கொடுத்தால் நிலைமை இன்னமும் பாழாய்த்தான் போகும்.

அடுத்த பிரதமரைப் பற்றி கவலைப்படும் அரசாங்கம் இதை கண்டிப்பாக கவனிக்கப்போவதில்லை. ஆனால் அரசாங்கத்தை சந்தோஷப்படுத்தும் ஒரு செய்தியை என்னால் தர முடியும். 

சென்ற மாதத்தில் ஒரு நாள் வாய்க்கால் பக்கமாக வேலுச்சாமி வாத்தியார் வாக்கிங் சென்றிருக்கிறார். எங்கள் அப்பாவின் நண்பர்தான். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் நான்கைந்து பேர் அந்தப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ‘நமக்கெதுக்கு பொல்லாப்பு’ என்று கண்டும் காணாமல் நகர்ந்த வேலுச்சாமி வாத்தியாரை கைதட்டி அழைத்திருக்கிறார்கள். இனியும் கவனிக்காதது போல நடந்தால் பயந்து ஓடுவது போலாகிவிடும் என்று திரும்பிப்பார்த்திருக்கிறார். அந்த மாணவர்கள் வணக்கம் வைத்தார்களாம். அது ஒரு ‘மார்க்கமான’ வணக்கம். இவரும் பதில் வணக்கம் வைத்துவிட்டு நடையைக் கட்டியிருக்கிறார். ஆனால் அவர்கள் விடுவதாகத் தெரியவில்லை. 

நெருங்கி வந்து நெடியுடன் “சரக்கு சாப்பிடலாம்ன்னு வந்தோம் சார்” என்றிருக்கிறார்கள். 

பரிதாபமாக அவர்களைப்பார்த்த வாத்தியார் “மவராசனா சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு நகரத்துவங்கியபோது “ஒரு கை குறையுது வர்றீங்களா” என்று கேட்டிருக்கிறார்கள். காது கேட்காதது போல வேகமெடுத்திருக்கிறார். அது கிட்டத்தட்ட ஓட்டம். 

மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு லேப்டாப்பை விற்றுவிடுகிறார்கள் என்று அரசு கவலைப்பட வேண்டியதில்லை. எப்படியும் அரசாங்கத்திடமேதான் அந்தப்பணம் போய்ச் சேருகிறது. பள்ளிகளை மூடிவிட்டு பார்களைத் திறந்தால் நாடு நலம் பெறும். நல்லாட்சி மலர்ந்திடும்.