Dec 18, 2012

ஐ.டிகாரனுக்கு அரை லட்சம் சம்பளம்நாராயணன்  ஒரு பெங்களூர்வாசி. வேலை எதுவும் இல்லை. நான்கைந்து வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டிவிட்டு வெட்டியாகச் சுற்றுகிறார். அவரது மனைவி ஐ.டி துறையில் பெரிய பதவியில் இருக்கிறார். நிறைய சம்பளம் வாங்குவார் போலிருக்கிறது. நாராயணனுடன்  எப்பவோ பேசிக் கொண்டிருக்கும் போது “ஐ.டியில் வேலைக்கு இருந்தால் மாசம் ஒரு லட்சம் வராது?” என்றார். போட்டு வாங்குகிறாரா அல்லது உண்மையாகவே கேட்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் பதில் ஒன்றுதான் “வராது சார்” என்றேன்.

நாராயணனைப் போலத்தான்  நிறையப் பேர் முடிவு செய்து வைத்திருக்கிறார்கள்- ஐடிக்காரர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் தருகிறார்கள். டிப்டாப்பாக துணிமணி உடுத்திக் கொள்வார்கள் .நினைத்த நேரம் வேலைக்கு போகலாம். எக்ஸெட்ரா..எக்ஸெட்ரா..

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மைதான் பல்லிளிப்பதாக இருக்கிறது.

எங்கள் ஊர்க்காரர் ஒருவரின் பெண்ணுக்கு ஐ.டியில் பணிபுரியும் பையன் ஒருவனை நிச்சயம் செய்திருந்தார்கள். அவருக்கு தனது வருங்கால மருமகன் டெபிட் கார்ட் நிறைய சம்பளம் வாங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. விசாரிக்கவும் சொல்லியிருந்தார். விசாரித்ததில் பெரிய நிறுவனம்தான். ஆனால் பதினேழாயிரம்தான் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார்.

கணவன், மனைவி இரண்டு பேருக்கு பதினேழாயிரம் போதாதா என்று கேள்வி கேட்கலாம். போதும்தான்- இதுவே வேறு ஊராக இருந்தால். பெங்களூரில் இரண்டு பெட்ரூம்கள் இருக்கும் ப்ளாட்டுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் வாடகை தர வேண்டியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தெரியாத்தனமாக குழந்தை பிறந்துவிட்டால் கதை கந்தல்தான். மருத்துவருக்கு குறைந்தபட்சம் முந்நூறு ரூபாய். பள்ளிகளுக்கான ஃபீஸ் பற்றியெல்லாம் கேட்கவே தேவையில்லை. வருடம் ஒரு லட்சத்திற்கும் குறைவில்லாமல் கறந்துவிடுவார்கள்.

எட்டாயிரத்திற்கும் குறைவான ஊதியத்தில் ஐடி நிறுவனங்களில் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரம் பாடுபடும் ஜீவன்கள் இருக்கிறார்கள். மடிவாலா போன்ற பகுதிகளில் ‘பேயிங் கெஸ்டாக’வோ அல்லது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காலம் தள்ளும் அவர்களின் ஒரே நம்பிக்கை “அடுத்த வேலை நல்லதாகக் கிடைக்கும்”.

வேலை மார்கெட் ஒன்றும் அவ்வளவு எளிமையாக இல்லை. மீன் மார்க்கெட்டை விட மோசம். அதுவும் இந்திய நிறுவனங்களின் Human Resource ஆட்கள் இருக்கிறார்களே. வாழ்கையின் நுனி வரைக்கும் தள்ளிவிடுவார்கள். வருடத்திற்கு இரண்டு லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவனை வேலைக்கு வா என்று அழைப்பார்கள். ஆனால் அதிகபட்சம் இரண்டேகால் லட்சம்தான் தர முடியும் என்பார்கள். அதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களை அடுக்குவார்கள்.

“மார்கெட் சரியில்லை” (அப்படியானால் என்ன Dash க்கு வேலைக்கு எடுக்கிறீர்கள் என்று யாரும் கேட்கமாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்)

“இந்த டெக்னாலஜியில் ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள்” என்று ஏகப்பட்ட நொட்டை நொள்ளை சொல்லிக் கொண்டே போவார்கள். கிடைத்தவரைக்கும் இலாபம் என்று ஏற்றுக் கொள்பவர்கள்தான் அதிகம்.

அதற்காக ஐ.டியில் இருக்கும் அத்தனை பேரும் சிரமப்படுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை. ஒரு லட்சம் சம்பளம் வாங்கக் கூடிய ஆட்களும் இருக்கிறார்கள். ஆனால் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வேலைக்கு சேர்ந்திருக்க வேண்டும். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.டியில் சேர்ந்து நன்கு ‘செட்டில்’ ஆனவர்களைவிட சிரமப்படுபவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.

ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கக் கூடிய ஆட்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. எங்கள் பக்கத்துவீட்டுக்காரர் பெயர் ரமேஷ் ராவ். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் மாதச்சம்பளம். அவரது மகன் எட்டாவது படித்துக் கொண்டிருக்கிறான். பெரிய பள்ளி, நிறைய ஃபீஸ். கார், ஃப்ளாட்டுக்கான மாதாந்திர கடன் என்று வேறு ஒரு வாழ்க்கை முறை வாழ்ந்து வந்தார். சென்றவாரம் வியாழக்கிழமை அலுவலகம் சென்றவரின் தலையில் இடியை இறக்கி விட்டார்கள். ஃபயரிங். 

துக்கம் விசாரிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தோம். வாங்கிய கடன்களுக்கான வட்டியும், மாதாந்திர தவணையும் மட்டுமே ஒரு லட்சத்தை தொடுகிறதாம். மனிதர் இடிந்து போய் கிடக்கிறார். தனது அம்மா அப்பா கூலி வேலைக்காரர்கள் என்பதில் தொடங்கி தான் எப்படி படிப்படியாக மேலே வந்தேன் என்பது வரைக்கும் இரண்டு மணி நேரம் பேசினார். இடையிடையே தேம்பி அழுது தன்னைத்தானே தேற்றிக் கொண்டார். 

திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஃபயரிங் பற்றி பேசி மூட்-அவுட் ஆக வேண்டியதில்லை- இன்னொரு நாள் பேசலாம்.