வாழ்க்கையில் மறக்கவே முடியாத தருணங்களை லிஸ்ட் எடுத்தால் அவற்றில் பல பள்ளிகளில் நடந்ததாகத்தான் இருக்கும். இந்த வாத்தியார்கள் இருக்கிறார்கள் பாருங்கள். அவர்களை ஞாபகப்படுத்தி எழுதினால் குறைந்தபட்சம் ஆளுக்கு ஒரு புத்தகம் எழுதிவிடலாம்.
பத்தாவது படிக்கும் போது பாண்டு என்று ஒரு வாத்தியார் வந்தார். அவரது உண்மையான பெயர் பாண்டு இல்லை. வேறு ஒரு பெயர். பள்ளி மாணவர்கள்தான் அவருக்கு ஜேம்ஸ்பாண்ட் என்று பட்டப்பெயர் வைத்து பிறகு அதைச் சுருக்கி பாண்டு என்றாக்கிவிட்டார்கள். அந்தப்பெயர்தான் அவருக்கு காலம் காலமாக இருந்து வந்தது. பாண்டு வாத்தியார் கிட்டத்தட்ட ரோபோ மாதிரி நடப்பார் என்பதால் அவருக்கு அப்படி பெயர் வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.
பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட். ஆனால் அவரைப்பார்த்தால் அப்படித் தெரியாது. விளக்குமாறுக் குச்சிக்கு கை,கால் செட்டப் செய்து அதற்கு ஒரு பேண்ட் சர்ட்டை போட்டுவிட்டால் போதும்-அப்படித்தான் பாண்டு இருப்பார். கையில் ஒரு பிரம்பை எடுத்து வருவார். ஒரு நாள் கூட யாரையும் அடித்ததில்லை. ‘அடித்துவிடுவேன்’ என்று அவர் சொல்லும் போதெல்லாம் எங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டுவது போல இருக்கும்.
பாண்டு சார் வகுப்பில் அட்டெண்டென்ஸ் எடுப்பது இன்னொரு காமெடி. ரோல் நெம்பர் படிதான் அட்டெண்டன்ஸ் எடுக்கப்படும். லீடர்தான் நெம்பரை சத்தமாக அழைக்க வேண்டும். நெம்பருக்குரியவன் “உள்ளேன் ஐயா” என்று சொல்வார்கள். பன்னிரெண்டு வந்தால் ‘பன்னெண்டு’ என்று சொல்லாமல் ‘பாண்டு’ ‘பாண்டு’ என்பேன். பன்னிரெண்டாம் நெம்பருக்குரிய குமார் வேண்டுமென்றே பதில் சொல்லமாட்டான். நானும் சளைக்காமல் “டேய் பாண்டு” என்று கத்துவேன் அல்லது “சார், இந்த பாண்டு அட்டெண்டன்ஸ் சொல்லுறதே இல்லை” என்பேன். எல்லாவற்றிற்கும் ஒரு புன்முறுவல் பூப்பார். அவ்வளவுதான்.
ஒரு நாள் வகுப்பறைக்கு வந்தவர் தனது நாற்காலியில் அமரவும் இல்லாமல் நகரவும் இல்லாமல் டேபிளையே பார்த்துக் கொண்டிருந்தார். எதற்காக அப்படியே நிற்கிறார் என்று புரியாமல் எங்களுக்கு குழப்பம். பத்து நிமிடங்களுக்குப் பிறகு ‘லீடர்’ என்றார். பத்தாம் வகுப்பில் கேடி ரங்காவாக வலம் வந்த என்னைத்தான் லீடராக போட்டிருந்தார்கள். எங்கள் பள்ளியில் எந்தப் பையன் அதிகம் குறும்பு செய்கிறானோ அவனை லீடர் ஆக்கிவிடுவார்கள். ரெளடியை அழைத்து ‘நீ போலீஸாக இருந்து இந்த ஊரைக் காப்பாத்து’ என்று சொல்வது போல. நான் வகுப்பை அடித்து உலையில் போட்டதுதான் நடந்தது. அந்தக் கதையை இன்னொரு முறை சொல்கிறேன்.
அவர் அழைத்தவுடன் பவ்யமாகச் சென்று பார்த்தால் டேபிள் மீது ஒரு எட்டுக்கால் பூச்சி ஊறியது. அது இறங்கும் வரைக்கும் பார்த்துக் கொண்டே நின்றிருக்கிறார். எங்களுக்கு அந்த பத்து நிமிடமும் மெளனப்படம் பார்ப்பது போன்று நல்ல டைம்பாஸ். அடுத்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளைக்கும் ஒருவித பூச்சியை பிடித்துவந்து டேபிள் மீது விட்டுவிடுவது வழக்கமாகிப் போனது. அதற்கென்றே வகுப்பில் ஒரு டீம் ஃபார்ம் செய்துவிட்டார்கள். பத்து நிமிடங்களாவது படம் பார்ப்போம். அந்த மனுஷன் ஒரு முறை கூட எங்களை சந்தேகப்படவில்லை.
இப்ராகிம் என்று ஒரு மாணவன் இருந்தான். ஃபயர் டான்ஸ் ஆடுவான். பாம்பை வைத்தும் நடனமாடுவான். பூச்சியை பிடித்து டேபிள் மேலாக விடுவதற்கு பதிலாக கிறுக்குத்தனமாக பாம்பை பிடித்துவந்து விட்டுவிட்டான். அது ஒரு குட்டிப்பாம்பு. அவன் கொண்டு வந்து டேபிள் மேல் விடுவதை நாங்கள் யாருமே கவனிக்கவில்லை. அசால்டாக அமர்ந்திருந்தோம். பாண்டு அந்தச்சமயத்தில் வகுப்புக்கு வந்திருக்கவில்லை. அது சுறுசுறுப்பான பாம்பு போலிருக்கிறது. டேபிளிலிருந்து மடமடவேன இறங்கி வந்து கூட்டத்துக்குள் நுழைந்துவிட்டது. ஒட்டுமொத்த வகுப்பும் சிதறி ஓடியபோது கண்ணன் வகுப்பறைச் சுவரிலிருந்து எட்டிக்குதித்து கையை முறித்துக் கொண்டதுதான் மிச்சம். அதன் பிறகு பூச்சி மேட்டரை கைவிட்டுவிட்டோம்.
பாண்டு சார் பாட நோட் திருத்துவதும் காமெடிதான். பாடத்தை எழுதிக் கொண்டு வந்தால் ஒவ்வொரு பக்கமாக ‘டிக்’ மார்க் அடிக்க மாட்டார். கடைசி பக்கத்தை லீடர் திறந்து காட்ட வேண்டும். கடைசிப்பக்கத்தில் மட்டும் ‘டிக்’அடித்து கையெழுத்து போடுவார். எனக்குத் தெரிந்து ஒருவன் கூட ஒழுக்கமாக பாடம் எழுதியதில்லை. கடைசிப்பக்கத்தில் மட்டும் ஒருபக்கம் அல்லது அரைப்பக்கம் எழுதி வந்து என்னிடம் கொடுத்துவிடுவார்கள். நான் கையெழுத்து வாங்கித்தருவேன். முந்தைய பக்கங்கள் எல்லாம் வெற்றுத்தாள்களாக மட்டுமே இருக்கும்.
இத்தனை சேட்டைகளைச் செய்தாலும் அந்தவருடம் எங்கள் வகுப்பு நூறு சதவீத தேர்ச்சி. சர்டிஃபிகேட் வாங்கும் போது அவரிடம் சென்று “சார் நான் சமூகவியலில் 97 மார்க்” என்றேன். “மார்க் யார் வேணும்னாலும் வாங்கிக்கலாம் மணி. வாத்தியாரை ‘டேய் பாண்டு’ன்னு கூப்பிடற தைரியம் ரொம்ப முக்கியம். அந்த தைரியத்தை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்து” என்றார். தூக்கிவாரி போட்டது. எனது அத்தனை லொள்ளையும் தெரிந்து வைத்துக்கொண்டும் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் தண்டித்திருக்கலாம். ஆனால் எதுவுமே சொன்னதில்லை. அந்தக் கணத்தில் அவர் கடவுளாக தெரிந்தார்.
ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். அதே மாதிரிதான் இருந்தார். நான் தான் மாறியிருந்தேன். அவருக்கு அடையாளம் தெரியவில்லை. சடாரென காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு அறிமுகப்படுத்திக் கொண்டேன். “இப்படி மாறிட்டியா” என்றார். “இல்ல சார், நடிச்சேன்” என்றேன். ஆனால் அதைச் சொல்லும் போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியிருந்தன.
7 எதிர் சப்தங்கள்:
நிறைய மாணவர்கள் நினைத்துக் கொள்வார்கள் நாம் செய்வது ஆசிரியருக்கு தெரியாது என்று.ஆனால் இது உண்மையல்ல என்பது உங்கள் அனுபவம் மூலம் தெரிகிறது. நல்ல பதிவு
very nice machaan... addicted to Nisaptham since we got in touch... very happy for u...:)
Same feelings :P. I was one among the student(+leader) studied under him(same social science)
நன்றி முரளிதரன்.
பழனிசாமி,
நீங்கள் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த பழனிசாமி என்று கொஞ்சம் சொல்லுங்கள்.
நன்றி சிவ சுப்பிரமணியம் :)
எல்லோர் நினைவிலும் நிச்சயம் இதுபோல் ஒருவர் இருப்பார்...
நல்ல பகிர்வு... :)
மிக நல்ல பதிவு ஆனால் தலைப்புதான் கொஞ்சம் சங்கடப்படவைக்கிறது.
Machaanu sonnaale puriyalaya..Sona College same batch ,ECE..Hostelmates.. nyabagam vandirucha:):)
Post a Comment