Dec 12, 2012

பஸ் ஸ்டாண்டில் பார்க்கும் பழைய காதலி


தவிட்டுக்குருவியை முதன் முதலில் ஹைதரபாத்தில்தான் பார்த்தேன். அங்கு நான் தங்கியிருந்த ஒற்றை அறையை ஒட்டியிருந்த பலா மரத்தின் கிளைகளில் அவ்வப்போது தென்படும். அப்பொழுது அந்தக்குருவிக்கு பெயர் இல்லை என்பதால் எனக்குப் பிடித்த பெண் ஒருத்தியின் பெயரைச் சூட்டியிருந்தேன். அது ஒரு தெலுங்குப் பெண்ணின் பெயர். 

ஹைதராபாத்தில் வாங்கிய மிகக் குறைந்த ஊதியமும், சூழ்ந்திருந்த தனிமையும் அலைகழித்துக் கொண்டிருந்தன. வீட்டிற்கு அனுப்புமளவிற்கு ஊதியம் வாங்க வேண்டும் அல்லது வேறு ஊருக்குச் சென்றுவிட வேண்டும் என விரும்புவேன். ஆனால் இரண்டுமே நடக்கவில்லை. வெறுமை என்னை சாகடித்தது. 

நண்பர்களில்லாத ஊர் வருத்திய சமயங்களில் ஆத்மார்த்தமான ஒரு தலைக்காதலியாக இந்தக் குருவிதான் இருந்தது. அதன் கண்களும், மஞ்சள் அலகும் இனம்புரியாத சோகத்தைச் சுமந்து திரிவதாகவே தெரியும். அதன் சோகத்திற்காகவே அதை காதலிக்கத் தொடங்கியிருந்தேன். நானும் அதுவும் ஒரேவித மனநிலையில் இருக்கும் ஜீவன்கள் என்று நினைக்கும் போதெல்லாம் அந்தக் குருவி இன்னமும் நெருக்கமானது. 

வெகுநாட்களுக்குப் பிறகாக ஊருக்கு திரும்பியிருந்த சமயத்தில் இந்தக் குருவியை ஊரிலும் பார்த்தேன். அப்பொழுது மிகுந்த உற்சாகமடைந்து குருவியின் பெயரை அம்மாவிடம் கேட்டபோது அசுவராசியமாக “தவிட்டுக்குருவி” என்றார். அந்தக் குருவிதான் என் காதலி என்று அவருக்கு எப்படித் தெரியும்?

இதன் பிறகு எல்லாவற்றிலும் தவிட்டுக்குருவி என்று எழுதிப்பார்த்தேன். இப்பொழுது யோசித்துப்பார்த்தால் கிறுக்குத்தனமாகத் தெரிகிறது. ஆனால் அப்படித்தான் இருந்தேன்.

ஊரும் மாறி, வேலையும் மாறியபோது ஹைதராபாத்தில் விரும்பிய இரண்டுமே நடந்தது. மூன்றாவதாக திருமணமும் நடந்தது. ஆனால் தவிட்டுக்குருவியைத்தான் பார்க்க முடியவில்லை. பெங்களூரில் இதுவரை ஒரு தவிட்டுக்குருவியும் கண்ணில்பட்டதில்லை. 

எப்பவாவது ஊருக்கு போகும் போது ஏதாவது வேலிக்காத்தான் மரத்திலோ கருவேல மரத்திலோ இந்தக் குருவியை பார்க்கிறேன். அது எந்தப் பிரக்ஞையும் இல்லாமல்தான் இருக்கிறது. எனக்குத்தான் பழைய காதலியை பஸ் ஸ்டாண்டில் பார்ப்பது போல மிகுந்த சங்கடமாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு கணம் பார்த்துவிட்டுத்தான் தாண்டிச் செல்கிறேன்.

இந்தக் கவிதைத் தொகுப்பு என் பழைய காதலியின் பெயரைத் தாங்கி காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவருகிறது என்பது இரட்டைச் சந்தோஷம்.  

                                                           ************

கோவையில் நடந்த சூழலியல் சார்ந்த கண்காட்சிக்காக ஒரு கவிதையைக் கேட்டிருந்தார்கள். இந்தக் கவிதையைத்தான் அனுப்பி வைத்திருந்தேன். தவிட்டுக்குருவியின் அற்புதமான படத்துடன் கவிதையைச் சேர்த்து எனக்கும் ஒரு பிரதி அனுப்பி வைத்திருந்தார்கள். இதைத்தான் பிரிண்ட் எடுத்து கண்காட்சியில் வைத்திருந்தார்களாம். கேட்பதற்கே உற்சாகமாக இருந்தது. இப்பொழுது Desktop Background ஆக வைத்திருக்கிறேன். இன்னும் பல வருடங்களுக்கும் கூட இதையேதான் வைத்திருப்பேன்.




12 எதிர் சப்தங்கள்:

அகல்விளக்கு said...


தவிட்டுக்குருவி இன்னும் பல உயரங்கள் பறக்கட்டும்...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

kishan said...

Nice to hear Mani.

anujanya said...

மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துகள் மணி.

தவிட்டுக்குருவி கவிதையும் நல்ல இருக்கு

Vaa.Manikandan said...

நன்றி அகல்விளக்கு, கிஷன், அனுஜன்யா :)

Anonymous said...

Great

Anonymous said...

GreatB-)

சிவாஜி சங்கர் said...

கவிதையும் பதிவும் அருமை.. கவிதைகள் புத்தக வடிவில் வரவிருப்பதில் மகிழ்ச்சி..

நந்தாகுமாரன் said...

வாழ்த்துகள் ... As a wildlife enthusiast and specifically interested in bird photography ... I simply love your poem

Unknown said...

வாழ்த்துகள்.

Unknown said...

தவிட்டுக் குருவிக்கும் தங்களுக்குமான பிணைப்பே ஒரு அழகிய கவிதை.உங்கள் வலைத்தளத்திற்குள் முதன் முறையாய் நுழைகிறேன்.நிறைந்த மகிழ்ச்சி .வாழ்த்துக்கள்!

Guru said...

Manathai Thotta Pathivu
Nantrigal Nanpare

ராமலக்ஷ்மி said...

நாங்களும் நேசிக்கத் தொடங்கி விட்டோம் தவிட்டுக் குருவியை. கவிதை அருமை. வாழ்த்துகள்!