Dec 10, 2012

நமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்பக்கத்து வீட்டில் புதுமனை புகுவிழா. கன்னடக்காரர்கள். இன்னமும் கட்டடம் முழுதாக முடியவில்லை. ஆனால் அவசர அவசரமாக விழாவை நடத்திவிட்டார்கள். அது முக்கியம் இல்லை. அந்த விழாவிற்கு வந்திருந்த பெண்தான் முக்கியம். பெண் என்றால் பதின்ம வயது. கல்லூரியின் ஆரம்ப வருடங்களில் இருக்கக் கூடும். 

எங்கள் வீட்டின் முற்றத்தில் நின்றால் அந்த புதிய வீட்டின் ஒரு அறை தெரிகிறது. அந்த அறையை ஒட்டித்தான் வரவேற்பறை. வரவேற்பறையில்தான் மொத்தக் கூட்டமும். வரவேற்பறையிலிருந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறையும் இந்த அறைக்குள் வந்து சென்றாள் அந்தப் பெண். முதலில் அத்தனை பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால் அவள் அறைக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் மிக இயல்பாக நடந்து கொள்வதும் அறைக்குள் பதட்டமடைந்தவளாக, உற்சாகமானவளாக, புன்னகைப்பவளாக, ஆச்சரியமடைபவளாக என பல உருவங்களை அவதரித்துக் கொண்டிருந்தாள். 

அவளது நடவடிக்கைக்கான பின்னணியை நீங்கள் இந்நேரம் அனுமானித்திருக்கலாம். ஒவ்வொரு முறை அறைக்குள் வரும்போதும் தனது ஃபேண்ட் பாக்கெட்டில் இருக்கும் மொபைல் போனை எடுத்து எஸ்.எம்.எஸ் படிப்பதும் அனுப்பவதுமாகத்தான் அத்தனை ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். அதுவும் வேறு யாருக்கும் தெரிந்துவிடாமல். செல்போனில் வாழ்ந்து எஸ் எம் எஸ்ஸை சுவாசித்துக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது. ஒரு கையடக்கக் கருவியில்தான் அவளது ஒட்டுமொத்த உலகமும் இருக்கிறது.

Technology addiction என்பது பொருத்தமானதாக இருக்கக் கூடும். 

அந்தப் பெண்ணை குறை கூற எனக்கு அந்த அருகதையும் இல்லை. ஏனென்றால் ஈமெயில் பார்க்காமல் அரை நாள் கூட என்னால் இருக்க முடிவதில்லை. Facebook ஐ திறக்காமல் ஒரு மணிநேரம் கூட இருப்பதில்லை. அழைப்பு வருகிறதோ இல்லையோ மொபைல் போனின் திரையை சில நிமிடங்களுக்கு ஒரு முறை கவனிக்கிறேன். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு சென்றவுடன் இணையத்தில் கணினியை இணைப்பதுதான் முதல் வேலையாகச் செய்கிறேன். காலை எழுந்தவுடன், சில சமயங்களில், பல் துலக்குவதற்கும் முன்பாகக் கூட கணினித்திரையை பார்த்து விடுகிறேன்.

நேற்று எத்தனை முக்கியமான அழைப்பாக இருந்தாலும் தொலையட்டும் என்று செல்போனை அணைத்து ஓரமாக வைத்திருந்தேன். பன்னிரெண்டு மணி நேரங்கள். ஆரம்பத்தில் பெரும் பதட்டமாக இருந்தது. எங்காவது ரிங் அடித்தாலும் கூட எனது ரிங் டோன் போலவே இருந்தது. நிழலை தொலைத்துவிட்டவனின் மனநிலை. கட்டைவிரலை இழந்துவிட்டவனின் பதட்டம் அது.

நான் மிகச் சிறந்த அடிமையாக மாறியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் சமயங்களில் ஃபோனை எடுத்து காதில் செருகுவது வாடிக்கையாகிவிட்டது. போரடிக்கும் போதெல்லாம் யாராவது ஒருவரின் எண்ணை விரல்கள் பிசையத்துவங்குகின்றன. நான் மட்டுமில்லை, இந்த நகரத்தின் சாலைகளில் நடந்து செல்பவர்களில் எண்பது சதவீதம் பேர் அலைபேசியை நோண்டுகிறார்கள். பேருந்தில், தொடரூர்தியில் பயணிப்பவர்கள் அருகில் இருப்பவரிடம் பேசுவது என்பது மலையேறிவிட்டது. செல்போனோ, லேப்டாப்போ வழித்துணையாகிவிட்ட பருவம் இது.

தினமும் எத்தனை அழைப்புகளை எதிர்கொள்கிறோம் என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு அழைப்பாவது நாம் விரும்பாத அழைப்பாக வந்து சேர்கிறது. ஒரு அழைப்பாவது நாம் சொல்ல விரும்பாத பதிலை எதிர்பார்க்கிறது. ஒரு அழைப்பாவது நாம் தப்பிக்க விரும்புவரிடமிருந்து வந்துவிடுகிறது. ஒரு அழைப்பாவது நம் வேலைக்கு குறுக்கீடாக வருகிறது. 

இனி பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு எனது அத்தனை பிரச்சினைகளையும் ஒத்தி வைப்பதாக ஒரு நிம்மதி வந்த போது ஆசுவாசமாக இருந்தது. கேள்விகள் இல்லாத பிரபஞ்சத்திற்குள் பிரவேசித்துவிட்ட ஆசுவாசம் அது. அத்தனை எதிரிகளும் என்னை விட்டு விலகிவிட்டதான பிரக்ஞை. இனி எந்த அழைப்புக்கும் வழிய வேண்டியதில்லை. எந்த அழைப்பிற்கும் நடிக்க வேண்டியதில்லை. எந்த எண்ணுக்கும் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் அத்தனையும் அடுத்த பன்னிரெண்டு மணி நேரங்களுக்குத்தான். 

அறிவியலின் ஒவ்வொரு கண்டுபிடிப்புமே சொகுசான வாழ்க்கையைத் தருகிறேன் என்றுதான் உள்ளே நுழைகிறது. ஆனால் அது மெதுவாக தனது ஆக்கிரமிப்பை  பரவச் செய்கிறது. தனது பிடியை இறுக்குகிறது. இறுதியில் நம்மை அடிமைப்படுத்திவிடுகிறது. எந்த அடிமைத்தனத்திலிருந்தும் ஒரு கட்டத்தில் வெளியேறிவிடும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் Technology addiction என்பதிலிருந்து எந்த காலத்திலும் நம்மால் வெளியேற முடியப்போவதில்லை மாறாக ‘அடிமையாக வாழ்வது எப்படி?’ என பழகிக் கொள்வோம்.

சக்கரம்தான் உலகின் அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பு, E=MC2 தான் அட்டகாசமான சூத்திரம் என்று சொல்லிக் கொண்டு வருபவர்களை எதுவும் செய்ய வேண்டியதில்லை. உருட்டுக்கட்டை கிடைத்தால் எடுத்து மண்டையை பிளந்து விடலாம்.